ஏப்ரல் இரவில், ராக் மியூசிக் இசையில், அநிருத்தன் செய்த மூன்று கொலைகள்- சிறுகதை

“As soon as you’re born they make you feel small
By giving you no time instead of it all”- John Lennon

தான் மூன்றுபேரை கொடூரமாக கொன்றுவிட்டதாக, இருபத்தி எட்டு வயது, அநிருத்தன் அண்ணா நகர் மேற்கு V5 காவல் நிலையத்தில் சரணடைந்த போது மணி இரவு 9.10. ஹெட் கான்ஸ்டபிள் கன்னியப்பன் ட்யூட்டி முடிந்து வீட்டுக்கு கிளம்பிக் கொண்டிருந்தார்.  திருமங்கலம் சிக்னலில் நடந்த திடீர் மாணவப் போராட்டத்தை கலைத்து கட்டுப்படுத்த போனதால், தன்னால் வழக்கம் போல்  எட்டு மணிக்கு வீட்டுக்குக் கிளம்ப முடியவில்லை என்ற கடுப்பில், எப்படியாவது இந்தவருடம் இந்த வேலையை விட்டுப் போய் விட வேண்டும் என்ற சிந்தனையில் தன் போலிஸ் உடையை கலட்டி வைத்துவிட்டு காலையில் போட்டுவந்த மடிப்பு கலையாத சிகப்பு சட்டை நீல நிற பேண்ட்டை போட்டுக் கொண்டு அவர் ஓய்வறையில் இருந்து வெளியே வந்த போது அநிருத்தன் தலையை தொங்கப் போட்ட வாக்கில் போலிஸ் நிலையத்தின் நடு அறையில் நின்றுக் கொண்டிருந்தான்.

“யார் சார் நீங்க?” அவனுடைய நாகரிகமான உடை கன்னியப்பனின் தொனியை நிர்ணயித்தது.

பதில் சொல்லாமல் நின்றுக்கொண்டிருந்த அநிருத்தனிடம் அவர் மீண்டும் சப்தமாக கேட்டார்.

“ஏய் தம்பி! யார் நீ?”

“Till the pain is so big you feel nothing at all” அவன் பாடினான். அவருக்கு புரியவில்லை.

அவன் தன் இடது கையை உயர்த்தி மூன்று என்று காண்பித்தவாறே, தன் வலது பேண்ட் பாக்கெட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து மேஜை மீது வைக்கும் போதுதான் அவருக்குப் புரிந்தது. வேகமாக உள்ளே ஓடினார்.

***

ஆய்வாளர் அந்தோணிக்கு, அந்த இருபதுக்கு இருபது அறையில், மின்விசிறி வேகமாக சுற்றியும்  வியர்த்து கொண்டே இருந்தது. வேலை செய்யாமல் சம்பளம் வாங்குவதே உத்தமம் என்று நினைக்கும் அவருக்கு இரவு ஒரு கொலைக்காரனை விசாரிப்பதெல்லாம் கனவில் கூட நடந்து விடக்கூடாத செயல்.

“அறிவுடையான். என் யூனியன் லீடர். ரொம்ப நாளா என்கிட்ட வம்பு பண்ணிக்கிட்டே இருந்தான். சுட்டுட்டேன். சவுக்கார்பேட்டை போய் வாங்கி வந்த துப்பாக்கில சுட்டேன். செத்துட்டான்” அநிருத்தன் சிரித்தான்.

“அப்பறம், அந்த மேனஜர் பாவேஷ் மிஸ்ராவ கொன்னேன். அப்பறம் அந்த எச்ச ஆடிட்டர்…. மூணு பேரும் மர்கயா….” அவன் மீண்டும் சிரித்தான்.

அவன் எதுவும் விபரீதமாக செய்துவிடக் கூடாது என்பதற்காக கன்னியப்பனும், உதவி ஆய்வாளர் சதீஷ் குமாரும் அவனை கண்காணித்தவாறே அவனுக்கு பின்னே நின்றுக் கொண்டிருந்தனர்.

“கவரைபேட்டைல இருக்கு சார் என் வீடு. அங்க இருந்து அண்ணா நகர் வர எவ்ளோ நேரம் ஆகும் தெரியுமா சார்! காலைல 8.45 க்கு ப்ரான்ச்ல இருக்கணும்.  எவ்ளோ வேலை செய்றேன்.. பாராட்டக் கூட வேணாம். எப்ப பாத்தாலும் மட்டம் தட்டிக்கிட்டே…”

“போயும் போயும் வேலைல பிரச்சனைனா கொலை பண்ணுணீங்க?”

“போயும் போயும் வேலையா!  இங்க வேலை தான் சார் எல்லாருக்கும் வாழ்க்கையே. வீட்ல என் அம்மா அப்பா கூட இருக்குற நேரத்த விட ஆபிஸ்ல இருக்குற நேரம் தான் சார் அதிகம். எவ்ளோ வேலை செஞ்சாலும், இவனுங்க தலைக்கு மேல உக்காந்துகிட்டு டார்ச்சர் பண்ணிக்கிட்டே இருக்காங்க சார்”

கன்னியப்பன் அவனை ஆமோதிக்கும் வகையில் தலை அசைத்தவாறே அந்தோணியைப் பார்த்தார். அந்தப் பார்வை அந்தோணியையும் யாரவது சுட்டுவிட்டால் நன்றாக தான் இருக்கும் என்பது போல் இருந்தது. அந்தோணி அதை கவனிக்கவில்லை.

“ஒரு வேலையும் செய்ய மாட்டான் சார் என் மேனஜர். எங்கேயோ டெல்லில இருந்து வந்து இங்க சுரண்டி திங்குகுறான். சுரண்டி. அதுக்கு இந்த அறிவுடையான் சப்போர்ட். திருட்டு பசங்க சார் எல்லாரும். அதான் ஒண்ணா சேந்துட்டானுங்க. வேலை கொடுத்துகிட்டே இருப்பானுங்க. பண்ணாத தப்புக்கு திட்டுவாங்க. வேலையயும் செஞ்சுட்டு பேச்சும் வாங்கனும். உடம்புலாம் கூசும் சார்…

“ஒரு நாள் ஒரு RTGS  தப்பா போட்டுட்டேன் சார். காசு வேறொருத்தனுக்கு தப்பா போயிருச்சு. அத நாங்க கண்டுபுடிக்கிறதுக்குள்ள அவன் அந்த காச எடுத்துட்டான்.  இவ்ளோ வேலை கொடுத்தா ஒருத்தன் சறுக்க தான் செய்வான்,  It’s a human error. அதுக்கு நானும் பொறுப்பு தான். ஆனா நான் மட்டும் பொறுப்புங்கற மாதிரி என்ன அசிங்கப்படுத்தி, என் சம்பளத்துல இருந்து அந்த காச ரெகவர் பண்ணுவேன்னு மிரட்டி எனக்கு மெமோலாம் கொடுத்தாங்க.

நான் யார் அக்கௌண்டுக்கு காசு போச்சோ அந்த ஆள தேடிப் புடிச்சு ரெண்டு மாசம் அவன் பின்னாடி அலைஞ்சி பாதி காச வாங்கினேன். அவன் மீதி காச ரெண்டு மாசம் கழிச்சு தான் தருவேன்னு சொல்லிட்டான். அதனால் என் கையில இருந்த காச போட்டேன். ஆனா அந்த பிரச்சனைய நான் சால்வ் பண்ணியும் அத வச்சே என்ன கேவலப் படுத்திக்கிட்டு இருக்காங்க.

“நேத்து அந்த ஆடிட்டர் முன்னாடி  இத சொல்லியே என்ன அசிங்க படுத்திட்டாங்க சார். அதான் இன்னைக்கு துப்பாக்கியோட வந்தேன். என்ன அசிங்க படுத்துன அறிவுடையான், அந்த பாவேஷ் அத வேடிக்கை பாத்த ஆடிட்டர் மூணு பேரயும்…”

அவன் கையை சுடுவது போல் வைத்துக் காட்டினான்.

அந்தோணி கன்னியப்பனைப் பார்த்தார். கன்னியப்பனுக்கும் வியர்க்க தொடங்கியது.

“அந்த ஆடிட்டர் என் லிஸ்ட்லயே இல்ல…  என்ன பத்தி பேசி ஏதோ சிரிச்சிக்கிட்டே இருந்தாங்க, டக்குனு எந்திருச்சு அந்த ஆடிட்டர சுட்டேன். அறிவுடையான் அப்படியே உறைஞ்சி போய் நின்னுட்டான். அந்த பாவேஷ் அலறிகிட்டே ஸ்டோர் ரூம்குள்ள ஓடுனான்…. அறிவுடையான் முகத்த பார்க்கணுமே… !” அநிருத்தன் கண்கள் ஒளிர சிரித்தான்.

“அறிவுடையான் சார். ஜிந்தாபாத்… யூனியன் ஜிந்தாபாத்” அநிருத்தன் துப்பாக்கியை அறிவுடையான் நோக்கி நீட்டிய போது மேலாளர் இருக்கைக்கு பின் மாட்டப் பட்டிருந்த சுவர் கடிகாரம் எட்டு முறை அடித்தது.

“வேணாம் அநிருத். உனக்கு என்ன வேணுமோ செய்றேன். யூனியன்ல ட்ரசரர் ஆக்குறேன். இன்னும் ரெண்டு வருசத்துல நான் ரிட்டையர் ஆகிடுவேன் அநிருத். அப்பறம் யூனியன்ல எல்லாம் நீ தான்”

அநிருத்தன்  சப்தமாக சிரித்தான்.

“அப்படியே சுட்டா கிக்கு இல்ல சார். அதான் பாட்டு போட்டேன்…” அநிருத்தன் தன் தலையை திருப்பி கன்னியப்பனை பார்த்து சொல்லிவிட்டு, தன் மொபைலில் ப்ளே ம்யுசிக்கை இயக்கினான்.

கித்தார் இசையோடு சேர்ந்து ஜான் லெனனின் குரல் மேலெழும்பி அந்த போலிஸ் ஸ்டேஷனை நிறைத்தது.

“அது என்னமோ தெரில சார், இந்த பாட்ட கேட்டாலே கொலை பண்ணனும்னு தோணுது சார்”

“எதுக்கு தம்பி அந்த பாட்ட கேட்டுக்கிட்டு, கேட்காதீங்க….” கன்னியப்பன் அப்பாவியாக சொன்னார்.

“மூளைக்குள்ள கேட்டுக்கிட்டே இருக்கு சார்… “ அவன் சொல்லிவிட்டு பாடத் தொடங்கினான். கன்னியப்பனும் அந்தோனியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“They hate you if you’re clever and they despise a fool” பாடியவாறே அவன் அந்தோணியைப் பார்த்தான். அவர் கன்னியப்பனை நோக்கியதை கவனித்தான்.

“புரிலையா சார். பாரதியார் சொன்னாரே. நல்ல கித்தார் செஞ்சு சேத்துல தூக்கி போட்டியே… சொல்லடி சிவசக்தி என்னை சுடர்மிகு அறிவுடன் படைச்சுட்டியேனு… அந்த மாதிரி தான் இதுவும் ”

கன்னியப்பன் சற்றே சகஜமாகி அநிருத்தன் முன்னே வந்து நின்றார். அவருக்கு ஏனோ அநிருத்தன் மீது கோபம் வரவில்லை. இரக்கம் தான் வந்தது.

“இவ்ளோ அறிவா பேசுறீங்களே தம்பி. அப்பறம் ஏன் கொலை அது இதுன்னு…” அவர் பேசி முடிப்பதற்குள் அவன் சப்தமாக சிரித்தான்.

அநிருத்தனின் சிரிப்பொலி அந்த வங்கி அறையெங்கும் எதிரொலித்தது. கூடவே கித்தார் இசையும்.

“அறிவுடையான் சார். அறிவுடையான் சார். உங்க கிட்ட ஒன்னு சொல்றேன் சார். எனக்கு கித்தார் வாசிக்கனும்னு ரொம்ப ஆசை சார், ஆனா எங்க வீட்ல சேத்துவிடல. படிப்பு படிப்பு படிப்பு. படிச்சா மேல வந்திருலாம்னு எங்க அப்பாவும் அம்மாவும் நம்புனாங்க சார். அப்பாவி சார் அவங்க. என்ன படிச்சாலும் உன்ன மாதிரி சுரண்டல் நாய் கீழ, சாரி அறிவுடையான் சார், உங்கள மாதிரி நாய் கீழ தான்  வேல செய்யனும், கடைசி வரைக்கும் நீங்கலாம் எங்கள கால்ல போட்டு மிதிப்பீங்கனு அவங்களுக்கு தெரில…”

‘When they’ve tortured and scared you for twenty-odd years
Then they expect you to pick a career
When you can’t really function you’re so full of fear’

ஜான் லெனன் பாடிக் கொண்டே இருந்தார்.

“வேணாம் அநிருத். ப்ளீஸ். ப்ளீஸ் என்ன விட்டிரு…”

தாமதிக்காமல் அநிருத்தன் அவருடைய இடது கையில் சுட்டான். குண்டு விரலை கிழித்து ரத்தம் பீய்ச்சிக் கொண்டு வர, அறிவுடையான் அலறினார். அநிருத்தன் வாசலுக்கு ஓடினான். வங்கியின் ஷட்டர் வெளியே மூடப் பட்டிருப்பதை உறுதி செய்து கொண்டான். வங்கி ஊழியர்கள்  மட்டும் வந்து போக, பக்கத்தில் அமைந்திருந்த சிறிய வழியின் கதவை உள்ளிருந்து சாத்திவிட்டு, மீண்டும் மேலாளர் இருக்கைக்கு வந்தான்.

அறிவுடையான், கையைப் பிடித்தவாறே தரையில் அமர்ந்து வலியில் முனகிக் கொண்டிருந்தார். .

“ப்ளீஸ் என்ன விட்டிரு”

“ப்ளீஸ் என்ன சுட்டுருனு சுட்டுருனு கேட்குது சார்” அநிருத்தன் சொல்ல அறிவுடையான் வாயை மூடிக் கொண்டார்.

“நாட்ல பாதி பேருக்கு வேலை இல்லை. நீங்கலாம் இந்த மாதிரி சேப்ட்டியான வேலைல உக்காந்துகிட்டு, யூனியன் பேர சொல்லி வேல செய்யாம வெட்டி சம்பளம் வாங்கிட்டு இருக்கீங்க… அது சரி சார், யூனியன் தலைவர்னா பாரபட்சம் பாக்காம இருக்கணும். நீங்க ஏன் சார் அந்த டெல்லிகாரனுக்கு மட்டும் சப்போர்ட் பண்றீங்க!”

“நாமதான்…..” அவர் சொன்னது அவனுக்கு புரியவில்லை

“ஹான்…” என்றவாறே துப்பாக்கியை அவரை நோக்கி நீட்டினான்.

அவர் தெம்பை வரவழைத்து கொண்டு பேசினார்.

“நாமதான பாத்துக்கணும், வெளில இருந்து வரவங்கள…” அறிவுடையான் பேச முடியாமல் பேசி முடிப்பதற்குள் அவரது வலது கையில் சுட்டான் அநிருத்தன்.

அவர் அலறினார். அநிருத்தன் லெனானின் பாட்டிற்கு காற்றில் கித்தார் வாசித்தவாறே அவர் அருகில் வந்தான்.  அவர் தொடர்ந்து அலற, அவன் அவரை நெருங்கி, குனிந்து அவர் கண்களைப் பார்த்து பேசினான்.

“நல்லா பொய் பேசுறீங்க சார். அதான் சுட்டேன்”

“அநிருத். அந்த RTGS ட்ரான்ஸாக்சன் விசயத்த மனசுல வச்சுதான் இதெல்லாம் பண்றியா! அந்த காச நான் கொடுத்துறேன். ப்ளீஸ்…”

அநிருத்தன் சிரித்தான்.

“என் பிரச்சனைக்கு மட்டும் உங்கள சுடல சார். என்ன அப்டி சுயநலவாதினு நினச்சுடாதீங்க. அன்னைக்கு நான் என்ட்ரி மட்டும்தானே போட்டேன்! வெரிபை பண்ணினது உன் மேனஜர் தான! அப்ப அவனும்தான சார் பொறுப்பு. அவன ஏன் ஒன்னும் பண்ணல! இந்த பாரபட்சம் தான் எனக்கு உறுத்துது. இந்த ஊர்ல எங்க போனாலும் இதே பாரபட்சம். தப்பு பண்றது ஒருத்தன் தண்டனை அனுபவிக்கிறது இன்னொருத்தன்.

“சொல்லுங்க சார், ஏன் அவன காப்பத்திவிட்டீங்க, அவன் உங்க ஜாதி இல்லல…!”

அறிவுடையான் இல்லை என்று தலை அசைத்தார்.

“நீங்க புரட்சி பேசுற ஜாதி, அவன் புரட்சிய ஒடுக்குற ஜாதி. நீங்க ரெண்டு பேரும் எப்படி ஒன்னு சேந்தீங்க…! உங்க ரெண்டு பேரையும் எது ஒரு புள்ளில இனைக்குது?”

அறிவுடையான் அமைதியாக இருந்தார்.

அநிருத்தன் துப்பாக்கியை அறிவுடையான் நெத்தியில் வைத்தான்.

“கேள்விக்கு பதில் சொல். இல்லையேல் மாண்டு போ. அம்புட்டுதேன். ஜிந்தாபாத்”

“அவன் யூனியனுக்கு contribution கொடுக்குறான்…”

“உண்மைய சொல்லுங்க சார். யூனியனுக்கா இல்ல உங்களுக்கா…!” அநிருத்தன் சிரித்தான்.

“என்ன மன்னிச்சிடு…” அறிவுடையான் கெஞ்சினார்.

அநிருத்தன் மீண்டும்  சிரித்தான்.

“so, பணம் தான் ஜாதி மதம் இனம் மொழி கடந்து உங்க எல்லாரையும் நேர் கோட்டுல இனைக்குது. உங்க ஜாதிகாரனப் பாத்தா, நாமலாம் ஒரே ஜாதி. வேற ஜாதியா இருந்தா நாமெல்லாம் ஒரே ஊரு. இல்ல வேற ஊரா இருந்தா நாமெல்லாம் ஒரே யூனியன், ஒரே நாடு இப்டி எதையாவது சொல்லி ஏமாத்திகிட்டே இருக்குறது. ஆனா பின்னாடி காசு காசுனு காச மட்டுமே குறிக்கோளா வச்சு நீங்க, உங்க புள்ளக்குட்டிங்க மட்டும் நல்லா இருக்க வேண்டியது.

“உண்மைலேயே இங்க ரெண்டே ஜாதி தான் சார் இருக்கு. ஒன்னு காசு இருக்க ஜாதி, இன்னொன்னு காசு இல்லாத ஜாதி. வாய்ப்பு இருக்க ஜாதி, வாய்ப்பு இல்லாத ஜாதி. வாய்ப்பு இருக்கவன் இல்லாதவன ஏச்சி பொழைக்குறான். நீங்கலாம் என்ன ஏச்சிங்களே அது மாதிரி….”

“தப்பு தான். நான் பண்ண எல்லாமே தப்பு தான்.  என்ன விட்டுரு ப்ளீஸ்…” அவருக்கு மூச்சு இறைத்தது.

“விட்டுர்றேன். நீங்க தப்ப ஒத்துகிட்ட மாதிரி அந்த மேனஜர் பயலையும் ஒத்துக்க வைங்க. மன்னிச்சு விட்டுர்றேன்”

அறிவுடையான் கண் கலங்க அவனையேப் பார்த்தார்.

“அப்பறம் யோசிச்சேன், எதுக்கு மன்னிச்சிகிட்டு! இவங்களலாம் திருத்தவே முடியாதுன்னு. அதான் அறிவுடையான நெத்தில சுட்டேன். அந்த மேனஜர வாய்லயே சுட்டேன்.

அந்த பயந்தாங்கோலிய பாக்கணுமே. உள்ள, அந்த யூஸ் பண்ணாத பழைய லேடிஸ் டாய்லெட்ல ஒளிஞ்சிகிட்டு இருந்தான். ஜுராசிக் பார்க் படத்துல  டைனாசருக்கு பயந்து ஒருத்தன் பாத்ரூம்ல உக்காந்துப்பானே அவன மாதிரி. துப்பாக்கிய பாத்ததும் பண்ணுன  தப்பு, பண்ணாத தப்பு எல்லாத்தையும் ஒத்துக்கிட்டான்…”

“மாப் கர்தீஜியே அநிருத்ஜி. மாப் கர்தீஜியே” பாவேஷ் மிஸ்ரா இரு கைகைளைக் கூப்பி கும்பிட்டான்.

“அறிவுடையான் சார். என்ன சார் இவரு. இப்டி கெஞ்சிறாரு! பாக்கவே பாவமா இருக்கு சார்”

சொன்னவாறே அநிருத்தன் அவர்கள் இருவரையும் மாறிமாறி பார்த்தான்.

“ஆனா ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர தான் உயிரோட விடப் போறேன். அபி ஹம் க்யா கரூன்…! போலோ சாப் “

“மாப் கர்தீஜியே அநிருத்ஜி. மாப் கர்தீஜியே. நான் பண்ணதுலாம் தப்புனு ஒத்துக்குறேன்”

“ரொம்ப லேட் மேனஜர் சாப்”

அறிவுடையானுக்கு பயம் வந்தது. அநிருத்தன் அந்த மேலாளரை மன்னித்து விட்டால் என்னாவது!

“அவன சுட்டுடு அநிருத். நான் உனக்கு செய்யவேண்டியத செய்வேன்” அறிவுடையான் பதட்டப்பட்டார்.

அநிருத்தன் ஒரு நொடி கண்களை மூடி யோசித்தான். அவன் மனதில் மீண்டும் கித்தார் இசை.

‘There’s room at the top they’re telling you still
But first, you must learn how to smile as you kill
If you want to be like the folks on the hill’

கண் விழித்தான்.

“சரி சார். இந்த மேனஜர் நமக்கு வேணாம்.  நீங்களாவது இவன்ட்ட வாங்குற காசுக்கு நியாயமா வேல பாக்குறீங்க. யாருகிட்டலாம் காசு வாங்குறீங்களோ அவங்களுக்குலாம் சொம்பு தூக்குறீங்க. ஆனா இந்த பாவேஷ் பய, பேங்க்ல சம்பளம் வாங்கிட்டு வேலையே செய்ய மாட்றான்…” என்று துப்பாக்கியை பாவேஷ் மிஸ்ரா முன்பு நீட்டினான்.

“அநிருத்ஜி ப்ளீஸ்.”

“அறிவுடையான் சார் நேத்து ஒரு இங்கிலீஷ் படம் பாத்தேன்… எப்டி சுடுறதுன்னு ப்ராக்டிஸ் பண்றதுக்கு நிறைய படம் பாத்தேன்ல, அப்ப அந்த சீன் வந்துது. அதுல ஒருத்தன் கொலை பண்றதுக்கு முன்னாடி என்ன சொல்வான் தெரியுமா…?

அறிவுடையான் இல்லை என்பது போல் சம்ப்ரதாயமாக தலை ஆட்டினார்.

“உங்களுக்கு புரியுற மாதிரி சொல்லவா?

“அந்த கேடுகெட்ட மனிதர்களை உக்கிரமான தண்டனைகளினால் கொடிதாய்ப் பழிவாங்குவேன்; நான் அவர்களைப் பழிவாங்கும்போது நானே கடவுள் என்று அவர்கள் அறிந்துகொள்வார்கள். பிதாசுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென்”

சொன்ன நொடியில் அவனுடைய துப்பாக்கி குண்டு மிஸ்ராவின் வாய்க்குள் சீற, அவன் அப்படியே பின்னே சாய்ந்த வாக்கில் சரிந்தான்.

அநிருத்தன் அறிவுடையானைப் பார்த்தான்

“உங்கள மன்னிச்சு விட்டுறால்ம்னு தான் சார் பாத்தேன். இங்க நீங்கலாம் பண்ணுன தப்புக்குதான்  நான் தண்டனை கொடுக்குறேன். ஆனா உங்கள வெளில விட்டா என்னைய மாட்டி விட்டிருவீங்க. சட்டம் என்ன தண்டிக்க முடியாது. தண்டிக்க விட மாட்டேன்…” அநிருத்தன் மீண்டும் சிரித்தான்.

***

அந்தோணிக்கு சில நிமிட மாறுதல் தேவைப்பட்டது. எழுந்து பின்னே சென்று சிகரெட்டை பற்ற வைத்தார். கன்னியப்பன் வாசலில் நின்ற சென்ட்ரியை உள்ளே வர சொல்லிவிட்டு, அவரும் பின்புறம் சென்றார்.

“என்னய்யா  கோக்கு மாக்கா இருக்கான்!” அந்தோணி ஒரு சிகரட்டை கன்னியப்பனிடம் நீட்டியவாறே பேசினார். .

“இவன ரிமாண்ட்ல வச்சுட்டு வீட்டுக்கு போனா கூட தூக்கம் வராதே. எங்க இருந்து தான் வரானுங்களோ. அப்படியே தலைமறைவாயிருக்கலாம்ல! ஏதாவது ஸ்பெஷல் ஸ்க்வாட் தலைல கேச கட்டிட்டு நாமா ஒதுங்கி இருக்கலாம். நேரா நம்ம ஸ்டேசனுக்கு வந்து நம்ம கழுத்த அறுக்குறான்”

“ரொம்ப பாதிக்கப்பட்டிருப்பான் போல சார். நம்மள கூட வெயில பந்தோபஸ்து இது அதுனு நிக்க வச்சா கோபம் வருமே. சுட்டுரலாம்னு கூட நானே நினைச்சிருக்கேன். இவன் பண்ணிட்டான்…” கண்ணியப்பன் புகையை கக்கும் சாக்கில் மனதிலிருப்பதையும்   வெளியே கக்கினார்.

அந்தோணி கன்னியப்பனை ஏற இறங்கப் பார்த்தார்.

“அந்த எஸ்.ஐ பயல கூட்டிட்டு க்ரைம் சீன் போங்க…” கன்னியப்பன் எதிர்ப்பார்த்ததை போல் அந்தோணி சொன்னார்.

“சீட்ட விட்டு நகரவே மாட்டேங்குறான் நாய். அந்த பையன் செஞ்சது தான் சரி. இவனையும் அதே மாதிரி…”

“என்ன கன்னியப்பன். யோசிச்சுகிட்டே நிக்குறீங்க?” அந்தோணி சிடுசிடுத்தார். கன்னியப்பன் சிகரட்டை தரையில் போட்டு மிதித்தார்.

***

கன்னியப்பன் உதவி ஆய்வாளர் சதீஷின் இருசக்கர வாகனத்தின் பின்னே அமர்ந்திருந்தார். வண்டி அண்ணா நகர் பள்ளி சாலையில்  திரும்பியது.

“அந்த பையன நினச்சா பாவமா இருக்கு தம்பி…”

சதீஷ் எந்த பதிலும் சொல்லாமல் சாலையில் மட்டும் கவனம் செலுத்தி வண்டியை ஓட்டினார்.

“கோவத்துல அடிச்சிருந்தா கூட கேஸ் கம்மி, இவன் ப்ளான் பண்ணி துப்பாக்கிலாம் வாங்கிட்டு வந்திருக்கான். அவன் வாழ்க்கையே போச்சு…“ கன்னியப்பன் சதீஷின் பதிலை எதிர்ப்பாரதவராய் தனக்குத் தானே பேசிக் கொண்டே வந்தார்.

“இவனலாம் வெளிய விடறது ரிஸ்க் தான் சார். அவனுக்குள்ள எவ்ளோ வெறி இருக்கு பாருங்க….” சதீஷ் தன் பங்கிற்கு தன் கருத்தைப் பதிவு செய்தார்.

“அவனுக்குள்ள அவ்ளோ வெறிய வர வச்சது யாரு! வெறும் போலீசா மட்டும் எல்லாத்தையும் பாக்கக் கூடாது தம்பி. அவங்க அப்பா அம்மாக்கு தெரிஞ்சா எப்டி பதறுவாங்க….”

“நம்ம என்ன சார் பண்ண முடியும். நம்ம ட்யூட்டிய தான் பாக்க முடியும்!”

கன்னியப்பன் பதில் எதுவும் பேசவில்லை. ஆனால் அவர் மனதில் ஆயிரம் எண்ணங்கள். ‘ஆமா பெரிய  ட்யூடி. டைரக்டா எஸ்.ஐ எக்ஸாம் எழுதி வரவனுங்களுக்கு சொந்தமா யோசிக்கக் கூட தெரியாது. இன்ஸ்பெக்டர் சொல்றது தான் வேத வாக்கு.  ட்யூடி பத்தி பேசுறான்”

அவர் சிந்தனையை கலைக்கும் விதத்தில் வண்டி திடிரென்று நின்றது. சுதாரித்தார். அந்த வங்கியின் டிஜிட்டல் பலகை அவர்களை வரவேற்றது. தன் மொபைலை பார்த்தார். மணி 10.35. மொபைல் பேட்டரியின் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்ததை கவனித்தார்.

“லோனவா கூனாவானு ஒரு மொபைல் என் பையன் வாங்கிக் கொடுத்தான். பேட்டரியே நிக்க மாட்டேங்குது…” சொல்லியவாறே வண்டியிலிருந்து இறங்கினார்.

வங்கியின் வளாகத்திற்குள் நுழைந்ததும் ATM வரவேற்றது. பக்கத்தில், அநிருத்தன் விவரித்ததுபோல் பெரிய ஷட்டரால் வாசல் மூடப் பட்டிருந்தது. பக்கத்தில் சிறிய வழி மட்டும் திறந்து இருந்தது. உள்ளே வெளிச்சம் தெரிந்தது. கன்னியப்பன் வாசலிலேயே நின்றார்.

“உள்ள போங்க சார். நான் வண்டிய நிறுத்திட்டு வரேன்” உதவி ஆய்வாளர் சொன்னார்.

“க்ரைம் சீன்னாலே இப்பலாம் அலர்ஜி. வயசாகுதுல்ல…” என்றவாறே வங்கியின் உள்ளே காலடி எடுத்து வைத்தார்.

மூன்று பிணங்களை எதிர்ப்பார்த்து உள்ளே  சென்றவரை அசையாமல் நிற்கவைத்தது உள்ளே அவர் கண்ட காட்சி.

மூன்று பேர் சந்தோசமாக உரையாடிக் கொண்டிருந்தார்.

“கியா பாத் ஹே சார்” என்றவாறே வாசலை பார்த்து அமர்ந்திருந்த பாவேஷ் மிஸ்ரா கன்னியப்பனை கவனித்தார். அவரின் முன்னே இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்த இருவரும், பாவேஷ் வாசலை பார்ப்பதைக் கண்டு திரும்பி பார்த்தனர்.

“என்ன சார்!” குள்ளமாக கட்டை மீசை வைத்த அந்த ஆசாமி கன்னியப்பனை பார்த்து வினவினார்.

“நான் V5 ஸ்டேசன் ஹெட் கான்ஸ்டபிள்” பாவேஷின் மேஜையில் இருந்த ஏரளாமான காகிதங்களை கவனித்தவாறே கன்னியப்பன் சொன்னார். அந்த ஆசாமி இருக்கையில் இருந்து எழுந்து கன்னியப்பனை நோக்கி வந்தார்.

“வாங்க சார். ATM ரவுண்ட்ஸ் என்ட்ரி போட வந்தீங்களா? ஆடிட்டிங்னு லேட்டா வர்க் பண்றோம்…” அவராகவே படபடவென பேசிக் கொண்டே போனார்.

“இல்ல சார். இங்க அறிவுடையான்….?”

“நான் தான் சார். உக்காருங்க சார்! என்ன விஷயம்?”

கன்னியப்பன் சில நொடிகள் பேசாமல் நின்றார்.

***

கள நிலவரம் அந்தோணிக்கு வந்து சேர்ந்ததும் அவர் சகஜமாகி விட்டிருந்தார். தன் அறையில் தன் மேஜை மீது அமர்ந்தவாறே அநிருத்தன் கொண்டு வந்த துப்பாக்கியை முன்னும் பின்னுமாக திருப்பிப் பார்த்தார்.

“ஒரிஜினல் மாதிரியே இருக்கு பாருயா. நானே ஏமாந்துட்டேன்….” அந்தோணி சொல்ல, சென்ட்ரி துப்பாக்கியை கையில் எடுத்து பார்த்தார்.

“வெயிட்டு கூட ஒரிஜினல் அளவுக்கு இருக்கு பாருங்க….” என்றார்.

அந்தோணி தன் துப்பாக்கியை மேஜை டிராயரிலிருந்து எடுத்து அநிருத்தன் கொண்டு வந்த துப்பாக்கியோடு ஒப்பிட்டுப் பார்த்தார்.

“அப்படியே தத்ரூபமா செஞ்சு விக்குறானுங்க….

மாடல் கன்-னாம். ஆன்லைன்ல வாங்கிருக்கான். இல்லன இந்த பச்சாக்குலாம் துப்பாக்கி வாங்கத் தெரியுமா!” அந்தோணி சிரித்தார். சென்ட்ரியும் பதிலுக்கு சிரித்தார்.

“ஹ்ம்ம். அவன் எதாவது சாப்புட்றானா கேட்டியா?”

“வேணாம்னு சொல்லிட்டான் சார்”

“கொஞ்ச நேரத்துல ஆட்டி படச்சுட்டான்யா. கண்ட படங்கள பாக்க வேண்டியது… இப்டி எதாவது பண்ண வேண்டியது. படிச்சவன்தான்யா இப்பலாம் இப்டி ஆகிடுறானுங்க என்னையா ஸ்ட்ரெஸ் நம்ம வேலைல இல்லாத ஸ்ட்ரெஸ்ஸா!”

“இந்த காலத்து புள்ளைங்களால எதையும் ஹாண்டில் பண்ண முடில சார்…”

அந்தோனி அறையை நோட்டம் விட்டவாறே,  “என்னையா பண்றான் அவன் இவ்ளோநேரம்!” என்றார்.

சென்ட்ரி அறையின் மூலையிலிருந்த பாத்ரூம் கதவை தட்டினார். உள்ளே தண்ணீர் வழியும் சப்தம் கேட்டது. அறையின் வெளியே சதீஷை கண்டதும் அந்தோணி வெளியே போனார்.

சென்ட்ரி, “ஹேய் தம்பி சீக்கிரம் வா…” என்று சொல்லியவாறே கதவை மீண்டும் தட்ட எத்தனிக்க, அநிருத்தன் கதவைத் திறந்தான். அவன் கண்கள் கலங்கியிருந்தன

“வா. உன் பேங்க்ல இருந்து வந்துட்டாங்க….” என்றவாறே சென்ட்ரி வெளியே சென்றார்.

***

“ஆடிட் ரிப்போர்ட் சைன் பண்ணிக்கிட்டு இருந்தோம். லாஸ்ட் நாள் ஆடிட் எப்பவும் லேட் ஆகும் சார். சாப்புட போறேனு கிளம்பி வந்தாரு சார்” அறிவுடையான் அலட்டிக் கொள்ளாமல் பேசினார். அந்தோணி அநிருத்தனை கூர்ந்து கவனித்தார். அவன் அமைதியாக நின்று கொண்டிருந்தான்.

“நல்ல பையன் தான் சார். எதாவது ஸ்ட்ரெஸ்ல பேசிருப்பாரு. நாங்க பாத்துக்குறோம்”

“கவுன்சிலிங் கொடுங்க… கூட்டிட்டு போங்க….” அந்தோணி சொல்லிவிட்டு பிரச்சனை தன்னை விட்டு போனால் போதும் என்று உள்ளுக்குள் ஆசுவாசப் பட்டுக்கொண்டார். அறிவுடையான் வாசல் நோக்கி நடந்தார். அநிருத்தனும் தலை குனிந்தவாறே வெளியேறினான்.

“சார்” என்றவாறே கன்னியப்பன் அந்தோணி அருகே வந்தார்

அந்தோணி என்ன என்பது போல் பார்த்தார்.

“போற வழி தான, நானே விட்டுட்டு வீட்டுக்கு போய்டுறேனே! பாவம் சார் அந்த பையன், இவரு கூட அனுப்ப வேணாம். நான் நல்ல வார்த்தை சொல்லி விட்டுட்டு போலாம்னு பாக்குறேன்”

“ஏன் அப்டியே வீட்லயே விட்டுடுங்களேன்!”

கன்னியப்பன் அமைதியாக நின்றார்.

“சரி கூட்டிட்டுப் போங்க…”

கன்னியப்பன் நகர்ந்தார்.

“லூசு பையன். எதுக்கு  போலிஸ் ஸ்டேசன் வந்தான்!” அந்தோணி சதீஷிடம் சொல்லிக்கொண்டிருந்தது கண்ணியப்பனுக்கு என்னமோ போல் இருந்தது.

***

கன்னியப்பன் மெதுவாகதான் வண்டியை ஓட்டினார். அவருக்கு அநிருத்தனுடன் பேச வேண்டும் என்பது போல் இருந்தது.

“தம்பி மனச போட்டு குழப்பிக்காத, வீட்ல சொல்லி கல்யாணம் பண்ணிக்கோ. யாருக்கு தான் பிரச்சனை இல்ல. வேலைனா முன்ன பின்ன தான் இருக்கும்…”

அநிருத்தன் பதில் பேசாமல் வந்தான்.

“நல்ல கவுரவமான வேலைல இருக்க, இதுக்கு மேல லைப்ல என்ன வேணும். என் பையன் மாதிரியா. பத்தாங்க்ளாஸ் தாண்டல, கார் ஒட்டுது. நீயும் என் புள்ள மாதிரி தான். என்ஜாய் பண்ண வேண்டிய வயசுல இப்டிலாமா இருக்குறது! ஜாலியா இரு.

“பேங்க் வேலையே புடிக்கலனா, போலிஸ் காரன் எங்க நிலைமைய நினச்சுப் பாரு. எங்கேயோ ஹெலிகாப்டர்ல பிரதமர் பறக்குறாருனு எங்கள வெட்ட வெயில்ல நிக்க வைப்பான். உங்கள மாதிரி டைமிங்லாம் கிடையாது. பொட்டல சாப்பாடு தான். அதுவும் சரியா பத்தாது. அப்டியே ஒட்டிட்டேன். எனக்கும் தான் வேலை புடிக்கல, விட்டுறலாம்னு தோணும். எனக்கு பசிக்கலனாலும் என் பொண்டாட்டி புள்ளைக்கு பசிக்குமே. இதோ இன்னும் ரெண்டு வருசத்துல ரிட்டயர்மெண்ட்.

வண்டி பள்ளி சாலையில் திரும்பியது.

“சாபட்டியா. சாப்ட்டு போலாமா…!”

அநிருத்தன் தன் மௌன விரதத்தைக் கலைத்தான்.

“வேணாம் சார்.

“சாப்பாடு வாங்க ஆள் இல்ல, நீ போய் வாங்கிட்டுவானு சொன்னங்க சார். அதான் ஒரு மாதிரி இருந்துச்சு. பேங்க்ல ஒரு ஆபிசரா இருந்தா,  க்ளெர்க் வேலை செஞ்சு, ஆபிசர் வேலை செஞ்சு, சப்-ஸ்டாப் வேலை செஞ்சு, அபப்றம் எடுபுடி வேலையும் செய்யனும். வெளில இருந்து பாக்குறவங்களுக்கு தான் சார் பெரிய பேங்க் வேலை. உள்ள அப்படி இல்ல. நரகம். ரொம்ப கன்னிங்கா இருக்கவங்க எல்லா இடத்துலையும் தப்பிச்சிடுறாங்க. என்ன மாதிரி ஆள்லாம் சர்வைவ் பண்றது ரொம்ப கஷ்டம் சார்…”

“உனக்கு என்ன தம்பி குறை. என் புள்ளையா நினச்சு சொல்றேன், நீ நல்லா இருப்ப….”

வண்டி வங்கியை நெருங்கியதும் கன்னியப்பன் சொன்னார்,

“அவங்க கிட்ட தேவை இல்லாத பேச்சு வச்சுக்காத. வீட்டுக்கு போய் நல்லா தூங்கு. எல்லாம் சரியாகிடும்….”

வண்டி வங்கியின் முன்பு நின்றது. அநிருத்தனை உள்ளே விட்டுவிட்டு, கன்னியப்பன் வாசலில் வந்து நின்றார். தெருவே அமைதியாக இருந்தது. பணக்காரர்கள் மட்டும் வசிக்கும் தெரு. வீடுகள் உறக்க நிலையில் இருந்தன. ஆள் நடமாட்டம் எதுவும் இல்லை.  ஒதுக்கு புறமாக நின்றுக்கொண்டு, சிகரட்டை எடுத்து பற்ற வைத்தார்.

“மனுஷனுக்கு வேலை இருந்தாலும் பிரச்சனை, வேலை இல்லனாலும் பிரச்சனை. ச்சி… என்ன வாழ்க்கையோ” தனக்கு தானே சொல்லிக் கொண்டே புகையை இழுத்தார்.

கீச் என்ற சப்தத்துடன் வண்டி நின்றது. திரும்பிப் பார்த்தார். சதீஷ்  வண்டியின் பின்னிருந்து அந்தோணி பதட்டமாக  இறங்கினார்.

“யோவ் உன் போன் என்னையா ஆச்சு…!” என்று கன்னியப்பனை நோக்கி வர, சதீஷும் வண்டியை நிறுத்தி விட்டு பின்னே ஓடி வந்தார்.

அவர்களின் பதட்டம் கன்னியப்பனிடமும் தொற்றிக் கொண்டது.  மொபைலை எடுத்து பார்த்தார்.

“Switch off ஆகிருச்சு சார்….”

அந்தோணி காதில் வாங்காமல் வங்கியின் வாசல் நோக்கி நடந்தார்.

சதீஷ் கன்னியப்பன் அருகே வந்து, “சாரோட கன்ன காணோம் சார்…”

என்று சொல்ல கன்னியப்பனின் முகமெல்லாம் அதிர்ச்சி ரேகை பரவியது. வங்கியைப் பார்த்தார். அந்தோணி அடுத்த அடி எடுத்து வைப்பதற்குள், உள்ளே இருந்து வரிசையாக குண்டுகள் வெடிக்கும் சப்தம்  கேட்டது.

மூவரும் ஒரு கணம் அதிர்ந்து நின்றனர். அந்தோணி அப்படியே தலையை பிடித்துக் கொண்டே ATM- வாசலில் அமர்ந்தார்.

சில நொடிகள் மௌனம். அடுத்த குண்டும் வெடித்தது.

ஆடிட்டர் வேகமாக வெளியே ஓடிவந்தார். வாசலில் நிற்கும் மூவரை கண்டு கொள்ளாது பயத்தில், “கொன்னுட்டான். கொன்னுட்டான்…” என்று புலம்பியவாறே அவர் வெகு தூரம் ஓடினார்.

சதீஷ் தன் ஹோல்ஸ்டரில் கை வைத்தார். துப்பாக்கியின் துணையோடு அவர் அடி எடுத்து வைக்க, கன்னியப்பன் ஒரு முறை அந்தோணியைப் பாவமாக பார்த்துவிட்டு சதீஷுடன் இணைந்துக் கொண்டார்.

வங்கியின் உள்ளே மின் விளக்கு அணைந்து அணைந்து எரிந்துக் கொண்டிருந்தது.

“ஹே தம்பி, எதுவும் முட்டாள் தனமா பன்னாதா…” கன்னியப்பன் கத்தினார்.

இருவரும் வாசலில் நின்றவாறே வங்கியை ஆராய்ந்தனர். ஒருவரும் தென்படவில்லை. தயங்கி தயங்கி உள்ளே அடி எடுத்து வைத்தனர்.

மேனஜர், தன் இருக்கை அருகிலேயே சரிந்துக் கிடந்தார். அவர் வாயில் குண்டு பாய்ந்திருந்தது.  அவர் அருகிலேயே அறிவுடையான் வாய் பிளந்துக் கிடந்தார். நெத்தியில் குண்டால் பொட்டு வைக்கப் பட்டிருந்தது.

உள்ளே ஸ்டோர் ரூம் கதவு ஆடிக் கொண்டே இருந்தது.

இருட்டு. உள்ளிருந்து ஜான் லெனனின் மெல்லிய குரல் காற்றில் மிதந்து வந்தது.

நிதானமாக அதனுள் இருவரும் நுழைந்தனர்.

சதீஷ் தன் மொபைல் டார்ச்சை ஆன் செய்து கன்னியப்பன் கையில் கொடுத்தார். அவர் ஒளியை அறையில் பாய்ச்சினார். இடது மூலையில் தரையில் அநிருத்தனின் மொபைல் கிடந்தது.

அருகில் அநிருத்தன் சுவற்றில் சாய்ந்தவாக்கில் தரையில் அமர்ந்திருந்தான். அவன் வலது கையில் அந்தோணியின் துப்பாக்கி இருந்ததை கன்னியப்பன் கவனித்தார்.

‘சட்டம் என்ன தண்டிக்க முடியாது. தண்டிக்க விட மாட்டேன்…’ அநிருத்தனின் குரல் கன்னியப்பனின் மனதில் ஒலித்தது.  “உனக்கு என்ன தம்பி குறை. என் புள்ளையா நினச்சு சொல்றேன், நீ நல்லா இருப்ப….” அவருடைய வாழ்த்தும் காதுகளில் கேட்டது.

நிமிர்ந்துப் பார்த்தார், அவன் தலை இடது புறம் தூணில் சாய்ந்திருந்தது. தலையின் பக்கவாட்டிலிருந்து ரத்தம் வழிந்துக் கொண்டிருந்தது.

கன்னியப்பன் தன் கண்களில் தேங்கிய கண்ணீரை துடைத்துக் கொண்டார். அங்கே யாரும் பேசிக் கொள்ளவில்லை.

அநிருத்தனின் மொபைலுக்குள்ளிருந்து ஜான் லெனன் மட்டும் பாடிக் கொண்டே இருந்தார்.

A working class hero is something to be
A working class hero is something to be
If you want to be a hero well just follow me
If you want to be a hero well just follow me’

****

அடி- சிறுகதை

‘டப் டப்’ என்ற சப்தம்தான் முதலில்  கேட்டது. பின் ‘பளார் பளார்’ என்ற சப்தம்.  சப்தம் வரும் திசையில் மனித தலைகள் மட்டுமே தெரிந்தது. எனக்கு நான்கு புறமுமே மனித தலைகள் தான். எள்ளுப் போட்டா எள்ளு எடுக்க முடியாது என்று எங்கள் ஊர் பக்கம் சொல்வார்கள்.  அந்த அளவிற்கு கூட்டம்.

தினமும் இந்த நிலை தான். ஒன்றரை நிமிடங்களில் கடந்துவிடக் கூடிய அந்த நடை மேம்பாலத்தை, ஊர்ந்து கடக்க பத்து நிமிடங்கள் ஆகின்றன. திருப்பதி பெருமாள் கோயிலில் இருக்கும் இரும்பு பாலம் போல் தான் இதுவும். கூட்டம் நம்மை நெரித்து எடுக்கும். என்ன ஒரே வித்தியாசம், திருப்பதியில் படி இறங்கினால் பெருமாள் காட்சித்தருவார். இங்கே பேருந்து நிலையம் காட்சித் தரும். தாமதமாக போனாலும் பெருமாள் அங்கேயே தான் இருப்பார். இங்கே 21g போய்விடும். அதனால் திருப்பதியை விட இங்கே தள்ளுமுள்ளு அதிகமாக இருக்கும்.

சட்டைப்பையில் ஒரு கையை வைத்துக் கொண்டு, இன்னொரு கையை பேண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டே நடக்க வேண்டும். யாராக இருந்தாலும் கிண்டி ரயில் நிலையத்திலிருந்து வெளியே செல்வதற்குள் இந்த ப்ரோட்டோகாலை பின்பற்றியே தீர வேண்டும். இல்லேயேல் மொபைலோ பர்சோ காணாமல் போய்விடும்.

‘பயணிகள் வரிசையாக செல்லுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். ரயில் நிலையத்தை விட்டு வெளியே செல்பவர்கள், சைதாபேட்டை நோக்கி இருக்கும் படிகட்டுகளை பயன்படுத்திக் கொள்ளவும். உள்ளே வருபவர்கள் சென்ட் தாமஸ் மவுன்ட் நோக்கி இருக்கும் படிகட்டுகளை பயன்படுத்திக் கொள்ளவும்.’

தினமும் ஒருவர் மைக்கில் சொல்லிக் கொண்டே இருக்கிறார். பெரிதாக யாரும் அவரை கவனித்ததாக தெரியவில்லை. மீண்டும் மீண்டும் எதிரும்புதிருமாக முட்டிக்கொண்டு செல்வதையே வழக்கமாக வைத்திருக்கின்றனர். அன்று வெகு நேரம் ரயில் இல்லாததால், சானடோரியத்தில் காத்திருந்த கூட்டம் அனைத்தும் ஏறிக்கொண்டுவிட்டது. பெட்டிக்குள் நிற்க முடியவில்லை. எப்போது கிண்டி வரும் என்றாகிவிட்டது. சென்னை ரயிலில் பல்லாவரம், கிண்டி, கோடம்பாக்கம் போன்ற இடங்களில் ஏறி-இறங்காதவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

ரயில் நிற்பதற்கு முன்பே இறங்கும் படி பின்னிருந்து தள்ளுவார்கள். கீழே இறங்கி விட்டால் போதும், பின்னே  தள்ளும் கூட்டமே நம்மை பிளாட் பாரத்திற்கு வெளியே கொண்டுபோய் விட்டுவிடும். அதுவும் கூட்ட நெரிசலில் மேம்பாலத்தின் படிக்கட்டு ஏறுவது என்பது பெரும் கலை. தரையைப் பார்த்தவாறு ஒவ்வொரு அடியாய் எடுத்து வைக்க வேண்டும். முதலில் வலது காலை எடுத்து முதல் படிகட்டில் வைக்க வேண்டும். பின் மீண்டும் இடது காலை எடுத்து அதே படிகட்டில் வைக்க வேண்டும்.  இரண்டு கால்களும் ஒரே படிகட்டின் மீது வந்தபின், வலது காலை எடுத்து அடுத்த படிகட்டில் வைக்க வேண்டும். இப்படி ஒரு பியானோ இசைக் கருவியில் ஸ்டக்காட்டோ இசையை வாசிக்கும் பொருட்டு அதன் விசைகளை அரை பலத்துடன் மீண்டும்மீண்டும் அழுத்துவதை போல லயத்தோடு படிகட்டுகளில் கால்களை எடுத்து வைக்க வேண்டும். படிகட்டின் உச்சியை அடையும் வரை தலையை நிமிர்த்த முடியாது. மீறினால் தடுமாறிவிட வாய்ப்பிருக்கிறது. அன்று படிகட்டில் ஏறி கொண்டிருக்கும்போது தான் அந்த சத்தம் கேட்டது.

‘டப் டப்’. ‘பளார் பளார்’. முதலில் சத்தம் எங்கிருந்து வருகிறது என்று புரிந்து கொள்ளவே சில நொடிகள் ஆயிற்று. சப்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தது. படிகட்டை முழுவதுமாக ஏறி பாலத்தின் சமதளத்தை அடைந்த போது தான் சப்தம் பாலத்திற்கு வெளியே இருந்து வருவதை உணர முடிந்தது. அதற்குள், என் பக்கத்தில் இருந்தவர் சப்தத்தின் காரணத்தை அறிந்து கொள்ளும் பொருட்டு எட்டிப் பார்த்தார். அவருக்கும் தலைகளின் தரிசனம் தான். அதை உறுதி செய்யும் பொருட்டு என்னை  எதுவும் புரியாதவர்போல் பார்த்தார். எனக்கும் எதுவும் புரியவில்லை என்பதை புரிந்து கொண்டவராய் தலையை திருப்பிக் கொண்டார்.

பாலத்தை விட்டு இறங்கியதும், இடது புறத்தில், வழக்கமாக ஆட்களே செல்லாத அந்த ஹோட்டலின் வாசலில் ஒரு பெரும் கூட்டம் நின்றுக் கொண்டிருந்தது.

‘டப் டப்’ . அந்த கூட்டம், கீழே பார்த்தவாறே கை ஓங்கியது.

கூட்டத்தின் நடுவே ஒருவன் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருப்பது தெரிந்தது. மீண்டும் ஒருவர் கையோங்க,

“யோவ், அடிச்சிக்கிட்டே இருப்பீங்களா…! போலிஸ்ட்ட போ” என்றார் ஒரு ஆட்டோ டிரைவர். கூட்டம் நிதானித்தது.  அதற்குள் அந்த ஆள் தலையை பிடித்தவாறே எழுந்து நின்று கொண்டான். ஆள் நாகரிகமாகத்தான் இருந்தான். வயது நாற்பத்தைந்துக்குள் தான் இருக்கும். டக்-இன் செய்யப்பட்ட சந்தன நிற பேண்ட். நீல நிற முழு கை சட்டை. வெள்ளை நிறத்தில், ஆபிஸ் உடைக்கு பொருந்தாத, ரன்னிங் ஷூஸ். விமான நிலைய டேக் கலட்டப்படாத ஒரு எக்சிகியூட்டிவ் பையை முதுகில் மாட்டியிருந்தான்.

மூச்சு வாங்கியது அவனுக்கு. ஒருவன் அவன் சட்டையைப் பிடித்து இழுத்தான்.

“போலிஸ்ட்ட போலாம்” என்றான் இன்னொருவனிடம்.

“எதற்காக அடிக்கிறார்கள்?” விடை உணர்வதற்கு முன்பே இன்னொருவன் மீண்டும் அவன் தலையில் அடித்தான். அடிவாங்கவே அவன் பிறந்திருப்பதை போல் அவன் எந்த எதிர்ப்பையும் காட்டாமல் அடி வாங்கிக் கொண்டான்.

“போலிஸ்ட போனா அந்த பொண்ணும் வந்து சொல்லுமா” மற்றொரு ஆட்டோ டிரைவர் கேட்டார்.

“என் தங்கச்சி சார். சொல்லும் சார்” சட்டையை பிடித்திருந்தவன் சொன்னான்.

முதலில் எதற்காக அடி வாங்குகிறான் என்று தெரியாதவர்களும் இப்போது கொஞ்சம் யூகிக்கத் தொடங்கி இருந்தார்கள்

“வயசாளிங்கதான் இப்டி அலையுறானுங்க. கொஞ்சம் கூட்டம் இருந்தா போதுமே!” ஒரு நடுத்தர வயது பெண் பக்கத்தில் இருந்தவளிடம் சொல்லிக்கொண்டே சுரங்கப் பாதை நோக்கி நடந்தாள்.

“கை வச்சிட்டாண்டா…” ஒரு பள்ளி பையன் தன் நண்பனிடம் சொன்னான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டார்கள்.

அதற்குள் கிருதா வைத்த வாலிபன் ஒருவன் அடிவாங்குபவனை போட்டோ எடுக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தான்.

“டேய் போடா” என்று அந்த  ஆட்டோ டிரைவர் அவனை விரட்டினார்.

“மரியாதை இல்லாம பேசாதீங்கனே. பேஸ்புக்ல போட்டா தான் இவனுங்க மாதிரி ஆளுங்க திருந்துவானுங்க” என்றான் கோபமாக.

அந்த ஆட்டோ டிரைவர் விட்டிருந்தால் அவனை அடித்திருப்பார். அங்கே மற்றுமொரு சண்டை தொடங்குவதற்கு முன்பு, மற்றொரு ஆட்டோ டிரைவர்,

“போங்க தம்பி…” என்று போட்டோக்காரனை பாந்துவமாக பேசி அனுப்பி வைத்தார். அவருக்கு ஏனோ அடி வாங்குபவன் மீது கொஞ்சம் இரக்கம் தொற்றிக் கொண்டுவிட்டது.

இந்த சம்பாசனையில் கிடைத்த மைக்ரோ நொடிகளை தன்னை ஆசுவாசப்படுத்த பயன்படுத்திக் கொண்டவனாக அந்த அடிவாங்கியவன் தன் வெள்ளை நிற கைக்குட்டையால் முகத்தை துடைத்துக் கொண்டான். அவனை பார்ப்பதற்கும் பாவமாக தான் இருந்தது. ஆனால் இதை வெளியே சொல்ல முடியாது. அவன் தவறு செய்தவன். தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும் என்று யாரோ சொல்வது காதில் விழுந்தது. அவன் மனைவியோ பிள்ளைகளோ இந்நேரம் அவன் அலுவலகம் சென்றுகொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கக் கூடும். ஒரு வேலை அவன் மனைவியோடு வாழாமல் இருக்கலாம். அல்லது திருமணம் ஆகாமல் இருந்திருக்கலாம். காய்ச்சலில் அவன் பிள்ளை இறந்து போயிருக்கலாம். அல்லது அவன் மனைவி யாரோ ஒருவனோடு….

“என்ன பாத்துகிட்டு! போங்க  சார்” அந்த இரக்க குணமுள்ள ஆட்டோ டிரைவர் என்னிடம் சொன்னான். மேற்கொண்டு அங்கே நிற்பது உசிதம் இல்லை.

சுரங்கப்பாதை அருகே ஒரு பெண் துப்பட்டாவால் முகத்தை மறைத்து நின்று கொண்டிருந்தாள். அவள் அழுகிறாள். முகத்தை பார்க்க முடியாவிட்டாலும் உணர்ந்து கொள்ள முடிந்தது. அவளை பார்க்கவும் பாவமாக தான் இருந்தது.

“இந்த அக்கா தான் போல இருக்குடா…” அந்த பள்ளிக்கூட பையன் தன் நண்பனிடம் சொல்லிக் கொண்டே சுரங்கப் பாதைக்குள் நுழைந்தான்.

“உன் பொண்ணா இருந்தா இப்டி பண்ணியிருப்பியா?”

அடி களத்திலிருந்து குரல் கேட்டது. கூடவே அடியும்.

“போலிஸ்ட்ட போங்கடா…” ஆட்டோ டிரைவர் பொறுமை இழந்தார்.

சாலையை கடந்தால் போலிஸ் ஸ்டேஷன்.

“இப்டியே க்ராஸ் பண்ணிடுவோம். சப்வேல போனா கூட்டத்துல தப்பிசிருவான்” ஒருவன் அடி வாங்கியவனின் சட்டையிலிருந்து கை எடுக்காமலேயே சொன்னான். நான் அதற்குள் சுரங்கப்பாதையில் இறங்கிவிட்டேன்.

அங்கேயும் நெரிசல் தான். சுரங்கப் பாதையின் இறுதியில், இடது புறம் திரும்பி படி ஏறினால் பேருந்து நிலையம்.  அந்த படிகளில் ஏறுவதும்  பியானோ இசைக் கருவி வாசிக்கும் வேலை தான்.

“இப்டி போலாம் இப்டி போலாம்” சுரங்கத்தின் மூலையில் நின்று கைக்குட்டை விற்பவர் வலது புறத்தில் போகும் படி சொல்லிக் கொண்டிருந்தார். அவர் கைக்குட்டை விற்கும் வேலையை விட, கூட்டத்தை கட்டுப் படுத்தும் வேலையை தான் தினமும் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒருவேளை அவர் ட்ராபிக் போலிஸ் வேலைக்கு முயற்சி செய்து உயரம் போதாமல் திருப்பி அனுப்பப் பட்டவராக இருக்கலாம்.

“என்ன தம்பி மேல ஏதோ பிரச்சனையா?”

என் முன்னே செல்பவனிடம் கேட்டார்.  காதில் இயர் போனை வைத்துக் கொண்டு கொஞ்சிக் கொண்டே போன அவன் எந்த பதிலையும் சொல்லாமல் அவரை சட்டைக் கூட செய்யாமல் வலது புறமிருந்த படிகெட்டில் ஏறினான்.  எனக்கு ஒரு கணம் கஷ்டமாக இருந்தது. அவர் முகத்தைப் பார்த்தேன். அவர் என்ன பிரச்சனை என்று என்னை கேட்கவில்லை. நானும் எதுவும் சொல்லவில்லை. அவர் எதுவும் நடக்காதது போல் கைக்குட்டை விற்கத் தொடங்கிவிட்டார்.

“பத்து இருக்கு, இருவது  இருக்கு… பத்து இருக்கு இருவது  இருக்கு”

நானும் அமைதியாக வலது புறம் திரும்பினேன். வலது புறம் உள்ள படிகட்டில் ஏறினால், சுரங்கப்பாதையின் மேல் பகுதியை சுற்றிக் கொண்டு வெளியே வந்தால் தான் பேருந்து நிலையத்தை அடைய முடியும். வழக்கமாக எல்லோரும் போகும் வழியை விட சற்று கூடுதலாக நடக்க வேண்டும். ஆனால் யாரும் அதிகம் பயன்படுத்தாத வழி என்பதால் மற்றவர்களை விட விரைவாக பேருந்து நிலையத்தை அடைந்து விடலாம். நான் சுரங்கப்பாதையை விட்டு வெளியே சாலையில் இறங்கியபோது, சுரங்கத்தை ஒட்டி நின்று கொண்டிருந்த ஷேர் ஆட்டோ டிரைவர்கள் சாலையை நோக்கி ஓடினார்கள். என்ன என்று புரியாமல் பார்த்தேன். சாலையிலும் கூட்டம். நானும் அங்கே ஓடினேன்.

சாலையின் நடுவே ஒரு கார் நின்று கொண்டிருந்தது. பின்னே வரிசையாக வண்டிகள் ஒவ்வொன்றாக நிற்க தொடங்கின. காரின் அருகே பதட்டமாக நின்று கொண்டிருந்த ஆள் வயதான ட்ராபிக் போலீசிடம் சொன்னான்,

“நான் கரெக்ட்டா தான் சார் வந்தேன், அவன் திடிர்னு டிவைடர் மேல இருந்து குதிச்சிட்டான்…”

வயதான ட்ராபிக் போலிஸ் அவருடன் நின்றுகொண்டிருந்த இளம் ட்ராபிக் போலீசிடம்,

“க்ரவுட கண்ட்ரோல் பண்ணு, 108- க்கு கால் பண்ணு” சொல்லிவிட்டு கார் டிரைவரைப் பார்த்தார். அவன் உடம்பு நடுங்கிக் கொண்டிருந்தது.

“யோவ் கார ஓரமா நிறுத்து. பேப்பர்ஸ எடுத்துட்டு வா…” சொல்லிவிட்டு கீழே குனிந்துப் பார்த்தார்.

“போயிருச்சு போல… காலைலயே சாவடிக்குறானுங்க….”

நானும் கீழே பார்த்தேன். அந்த, சந்தன கலர் பேண்ட், நீல நிற முழுக்கை சட்டை, ரன்னிங் ஷூஸ் அணிந்திருந்த ஆள் பிணமாக கிடந்தான். கார்காரனிடமிருந்த பதட்டம் என்னைத் தொற்றிக் கொண்டது. சுற்றிமுற்றும் பார்த்தேன். அவனை போலிஸ் ஸ்டேசனுக்கு அழைத்து வந்த யாரும் தென்படவில்லை. சாலையின் மறுபுறம் சுரங்கப்பாதை அருகே அந்த பெண் தென்படுகிறாளா என்று பார்த்தேன். எதுவும் சரியாக தெரியவில்லை.

மீண்டும் தரையைப் பார்த்தேன். அவனை பார்ப்பதற்கும் பாவமாக தான் இருந்தது. அவன் மனைவியோ பிள்ளைகளோ இந்நேரம் அவன் அலுவலகம் சென்றுகொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்க கூடும். ஒரு வேலை அவன் மனைவியோடு வாழாமல் இருக்கலாம். அல்லது திருமணம் ஆகாமல் இருந்திருக்கலாம். காய்ச்சலில் அவன் பிள்ளை இறந்து போயிருக்கலாம். அல்லது அவன் மனைவி யாரோ ஒருவனோடு….

“சார் கிளம்புங்க ப்ளீஸ்.” இளம் ட்ராபிக் போலிஸ் என்னிடம் சொன்னான். கூட்டம் தங்கள் பாதையில் செல்ல ஆரம்பித்தது. சாலையில் கிடந்தவனை பார்த்துக் கொண்டே வாகனங்கள் கடந்து சென்றன. என் அருகே, கீழே கிடந்தவனைப் பார்த்தவாறு நின்று கொண்டிருந்த வாலிபன் பேருந்து நிலையம் நோக்கி வேகமாக ஓடினான். திரும்பி பார்த்தேன். கிண்டி பேருந்து நிலையத்திலிருந்து 21g பேருந்து வெளியே திரும்பிக் கொண்டிருந்தது. ஓடியவன் பின் வழியே ஏறிக் கொண்டான். பேருந்து கொஞ்சம் நிதானிக்க, நானும் ஓடிச் சென்று அதே வழியில் ஏறிக்கொண்டேன்.

“எருமைங்க ரன்னிங்ல ஏறுது பாரு” டிரைவர் சம்ப்ரதாயமாக திட்டினான். என்னையில்லை என்பது போல் நான் அந்த வாலிபனை பார்த்தேன். தன்னை சொல்லவில்லை என்பது போல் அவன் என்னைப் பார்த்தான்.

“உள்ள ஏறு. ஏழுமலை டோர க்ளோஸ் பண்ணு” கண்டக்ட்டர் சம்ப்ரதாயமாக கத்தினார். பாதி கதவு மூடிக்கொண்டது. மீதி பாதி இல்லை. யார் உடைத்தார்கள் என்று தெரியவில்லை. நான் கூட்டத்தில் புகுந்து பின்னே  பெண்கள் இருக்கை அருகில் நின்று கொண்டேன்.

“காளியப்பா” அந்த வாலிபன் கண்டக்ட்டரிடம் நூறு ரூபாயை நீட்டினான்.

“பதினேழு. சில்லறையா கொடு. எல்லாரும் நூறு ரூபாய நீட்டுன எங்க போறது…?”

நான் பேருந்தின் பின் ஜன்னல் வழியே சாலையை கவனித்தேன். கார் டிரைவர் வயதான ட்ராபிக் போலீசிடம் ஏதோ பவ்யமாக பேசிக் கொண்டிருந்தான். அந்த, சந்தன கலர் பேண்ட், நீல நிற முழுக்கை சட்டை, ரன்னிங் ஷூஸ் அணிந்திருந்தவான் சாலையில் அதே இடத்தில் கிடந்தான்.  கிருதா வைத்த வாலிபன் கீழே பிணமாக கிடந்தவனை  போட்டோ எடுக்கத் தொடங்கிருந்தான்.

பூங்காவை ஒட்டியிருந்த வீடு- சிறுகதை

‘காந்தி பூங்கா’, அவன் வீட்டிலிருந்து மூன்று தெருக்கள் தள்ளி இருந்தது. ராஜாஜி  தெரு, பட்டேல் தெரு, நேதாஜி தெரு, இந்த மூன்றையும் கடந்தால் அந்தப் பூங்காவை அடைந்துவிடலாம். இதில் பட்டேல் தெரு மட்டும் மிக சிறியது. அதில், வலது புறம் மூன்று வீடுகள், இடது புறம் மூன்று வீடுகள் என்று மொத்தம் ஆறு வீடுகள் தான் இருந்தன. இப்போது ஒரு வீட்டை இடித்து அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று கட்டிக் கொண்டிருப்பதால் வீடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம். ஆனாலும் அதை தெரு என்று சொல்வதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எப்படி இருந்தாலும் அதை குறுக்குத் தெரு என்றோ, ஒரு தெருவின் பகுதி என்றோ சொல்வதுதானே சரியாக இருக்கும்! பெரிய தலைவர்களின் பெயரை எப்படி குறுக்குத் தெருவிற்கு வைப்பது என்று பெயர் வைத்தவர்கள் யோசித்திருக்கக் கூடும். அதனால் அதை ‘பட்டேல் தெரு’ என்றே விட்டுவிட்டனர் போல. ஆனால், ஏன் எங்கோ பிறந்த ஒரு தலைவரின் பெயரை இங்கே இந்த சிறு தெருவிற்கு வைத்திருக்கிறார்கள்? தமிழகத்திற்கு வெளியே தான் பயணப்பட்ட ஊரில் தமிழ் தலைவர்களின் பெயரில் எந்த தெருவும் இருந்ததாக கண்டதில்லையே! இப்படியெல்லாம் அந்த தெருவை கடக்கும் ஒவ்வொரு முறையும் அவன் எண்ணுவான். இதை வெளியே சொன்னால் தன்னை பிரிவினைவாதி என்று சொல்லிவிடுவார்களோ என்ற பயத்தில் வெளியே எதுவும் சொல்லமாட்டான்.

ஆனாலும் தனக்கு ஏன் இத்தகைய தேவையில்லாத கேள்விகளும் சிந்தனைகளும் அடிக்கடி வருகின்றன என்று யோசித்துக் கொண்டே இருப்பான். அந்த கேள்விக்கு மட்டும் அவனுக்கு பதில் கிடைத்தபாடில்லை. இதை அவனால் சகஜமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. சில நேரங்களில் பயம் வருகிறது. பயம் கொள்ளும் அளவிற்கு பெரிய பிரச்சனை இல்லை என்று யாரவது எண்ணக் கூடும். அவர்கள் அவன் பிரச்சனையின் வீரியத்தைப் புரிந்துகொண்டால் அப்படி எண்ணமாட்டார்கள். அவனால் தன் மனதை எவ்வளவு முயன்றும் ஒருநிலைப் படுத்த முடியவில்லை. ஒரு நேரத்தில் ஒரு இடத்தில் மனதளவில் நிலைத்து இருக்க முடியவில்லை. மனதில் தான் எவ்வளவு தேவையில்லாத சிந்தனைகள்! கவனச் சிதறல்கள்!

ரயிலில் செல்லும்போது, பல்லாவரம் என்ற பலகையை பார்த்தால் கூட, பல்லாவரம், பல்லவபுரம், பல்லவர்கள், நரசிம்மவர்ம பல்லவன், என்று தொடர்ச்சியாக சிந்தனை ரயிலை விட வேகமாக எங்கோ பயணிக்கிறது. நிறைய படிப்பது ஒரு காரணமாக இருக்கலாம் என்று நண்பன் ஒருவன் சொல்ல, புத்தகங்கள் படிப்பதையே நிறுத்திக் கொண்டான். ஆனால் சிந்தனை முன்னைவிட அடர்த்தியாக மனதை ஆக்கிரமித்துக் கொள்கிறது. இதை அப்படியே அதன் போக்கில் விட்டுவிடலாம். ஆனால் உடம்புதான் சோர்ந்து போகிறது.

அம்மா, ‘மீன் மாத்திரை’ சாப்பிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்பாள். சாப்பிட்டுப் பார்த்தும் ஒன்றும் சரியாகவில்லை.

“சொங்கிப் பயலே, உன் வயசுல நான் எப்டி இருந்தேன் தெரியுமா!” அப்பா முரட்டுத்தனமாக தான் பேசுவார். அவர் போலீசில் இருந்தவர்.

“முட்டைய உடச்சி குடி” என்பார்.

இது உடல் சார்ந்த பிரச்சனை அல்ல என்பதையும், அதிக சிந்தனை உடலை வருத்தி எடுத்துவிடும் என்பதையும் அவன் கூகிளில் படித்திருந்தான். அதற்காகவே மனதை சகஜமாக வைத்திருக்கப் பிரயத்தனப் பட்டான். ஒழுங்காக நடைப்பயிற்சி செய்வதுதான் இதற்கெல்லாம் தீர்வு என்று மருத்துவர் சொன்னார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு இடது கை வலிப்பதாக மருத்தவரிடம் சொன்ன போது, அவர் ஏதேதோ பெரிய ‘டெஸ்ட்கள்’ எடுத்து ஒரு பெரிய இருதய நிபுணரை சந்திக்கச் சொன்னார்.

“என்ன வேலை ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்கோ?” அந்த வயதான இருதய நிபுணர் செயற்கையாக புன்னகை செய்துகொண்டே கேட்டார்.

ஆம்! வேலை என்னவோ மனம் உடல் எல்லாவற்றையும் அழுத்துகிறது. வேலை இல்லாமல் வேலை தேடிக் கொண்டிருந்த காலத்திலும் அப்படிதான் மன அழுத்தம் இருந்தது. இப்போது வேலைக் கிடைத்து கையில் கொஞ்சம் காசு இருக்கும் போதும் மன அழுத்தம் இருக்கிறது. இந்த கணக்கு என்ன என்பதை அவனால் புரிந்துக் கொள்ளமுடியவில்லை.

“டாக்கி கார்டியா.” அவனுடைய ECG  ரிப்போர்ட்டை பார்த்த மருத்தவர் சொன்னார்.

“உங்க இதயம் கொஞ்சம் வேகமாக துடிக்குது. இந்த வயசுலேயே இப்படினா ப்யூச்சர்ல பிரச்சனைதான். சரியா தூங்குறீங்களா இல்லையா?”

“மனசும் ரொம்ப வேகமாக தான் சார் இருக்கு” என்று சொல்ல நினைத்தான். அப்படி சொன்னால் அவர் ஏதாவது மனநல நிபுணரை பார்க்கச் சொல்லிவிடுவாரோ என்று தயங்கி சொல்லாமல் விழுங்கிவிட்டான்.

“ரொம்ப யோசிக்காதிங்க. ரிலாக்ஸ். ஸ்ட்ரெஸ் இருந்தாலே உடம்பு வீக் ஆகிடும். மனசுல இருக்குற அழுத்தத்த உடம்பு சரி செய்ய பார்க்கும். முடியலனா சோர்வாகிடும். தொடர்ந்து வாக்கிங் போங்க. சரியாகிடும்” என்றார்.

மன அழுத்தத்தை குறைக்கும் நம்பிக்கையில் தான், அவன் தினமும் காலையில் அந்த பூங்காவை சுற்றி வந்தான். இல்லையேல் அந்த நேரத்தில் அலாரத்தை அணைத்து விட்டு தூங்கி ஏழரை மணி வாக்கில் எழுந்து வேகவேகமாக கிளம்பி ஓடிச்சென்று எட்டுமணி ரயிலை பிடிப்பதையே வழக்கமாக வைத்திருந்தான். அலுவலகம் மயிலாப்பூரில் இருந்தது. வீடோ தாம்பரத்தில். எட்டுமணிக்கு வண்டி ஏறினால் தான் ஒன்பது நார்ப்பத்தைந்து மணிக்குள் செல்ல முடியும். ஐந்து நிமிடம் தாமதமாக சென்றால், அவனுடைய பொதுமேலாளர் வீட்டுக்கு அனுப்பிவிடுவார். பள்ளிக்கூடமே தேவலாம் என்ற அளவில் தான் அலுவலகமும் அங்கே இருந்த மனிதர்களும் இருந்தார்கள். அவனுடைய உடனடி மேலாளார், பொது மேலாளர் சொன்னால் மாடியிலிருந்து கூட குதித்து விடுவார். அவர் ஒரு வடநாட்டவர். தமிழ் சுத்தமாக வராது. பொது மேலாளர் தஞ்சாவூர்காரர். ஆனால் இருவரும் தத்தம் இருத்தலை நிலைநிறுத்திக் கொள்ள நிர்வாகத்திற்கு விசுவாசம் என்ற போர்வையில் அடிமைகளாக இருந்தனர். அந்த அடிமைத்தனம்தான்  அவர்களை இணைத்துவைத்திருந்தது.

ஐந்து மணிக்கு அலுவலகம் முடிந்தாலும் ஏழு மணி வரை அலுவலகத்திலேயே அமர்ந்திருப்பார்கள். இவனும் வேறு வழியில்லாமல் அமர்ந்திருந்தான். அவனுடைய மேலாளர் ஐந்து மணிவரை எந்த வேலையும் செய்யாமல் காலம் கடத்திவிட்டு, ஐந்து மணிக்கு பின்பு கோப்புகளை எடுத்துப் புரட்டுவார். குறிப்பாக பொது மேலாளர் வீட்டுக்கு செல்லும் நேரத்தில் வேலை செய்வது போல் பாவனை செய்வார். அதற்கு முன்பே இவன் எல்லா வேலைகளையும் செய்து முடித்திருப்பான். ஆனால் பெயரை இவனுடைய மேலாளர் தட்டிச் சென்று விடுவார்.

மன உளைச்சலில் தன் இதயம் வெடித்தால் தன் மேலாளரும் பொது மேலாலரும்தான்  காரணம் என்று எழுதி வைத்திட நினைத்தான். ஆனால் மருத்துவர் எல்லாம் சாரியாகிவிடும் என்ற சொன்னதால், நம்பிக்கையோடு அவன் தினமும் காலையில் பூங்காவை சுற்றி வந்தான்.  அன்று அவன் பூங்காவை அடைந்த போது மணி சரியாக ஆறரை. ஆனாலும் சற்றே கூடுதலாக உடம்பை நடுங்க வைக்கும் குளிர். அந்த குளிரை பொருட்படுத்தாமல் நான்கு பேர் பூங்காவின் வாசலில் கேரம் போர்ட் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் யாரும் இவனை சட்டை செய்யவில்லை.

மாசி மாதம் முடியும் தருவாயிலும் இவ்வளவு குளிர் ஆச்சர்யம்தான். பள்ளியில் படித்த போது பருவம் தப்பாமல் எல்லாம் நடந்தது. இப்போது எப்போது மழை வருகிறது எப்போது வெயில் அடிக்கிறது என்று எதையும் உறுதியாக சொல்ல முடியவில்லை. எல்லாம் மாறிக்கொண்டே வருகிறது. தான் மட்டும் மாறுவதாக தெரியவில்லை. ஐயோ! மீண்டும் சிந்தனை. இதை சரி செய்ய வேண்டும். பூங்காவில் எழுதியிருக்கும் வாசகங்களை படிக்கத் தொடங்கினான்

‘சோற்றுக் கற்றாளைச்சாறு கால் வலியை நீக்கும்’ அதை நிதானமாக படித்தான். இதுவும் மருத்துவர் சொன்ன அறிவுரை தான். எப்போதெல்லாம் மனதை தேவையில்லா சிந்தனைகள் ஆக்கிரமிக்கிறதோ, எப்போதல்லாம் மனம் நிலையற்று ஓடுகிறதோ, அப்போதெல்லாம் நூறிலிருந்து ஒன்றுவரை தலைகீழாக எண்ணிடச் சொன்னார். இல்லை, ஏதாவது வார்த்தைகளிலோ பொருளிலோ மனதை நிறுத்தச் சொன்னார்.

“இல்லனா உங்க கண்ல படுற வார்த்தைய, வாக்கியத்த திரும்பி திரும்பி சொல்லுங்க. மனம் சாந்தாமகிடும்”

‘சோற்றுக் கற்றாளைச் சாறு கால் வலியை நீக்கும்’ தனக்குதானே இரண்டு மூன்று முறை மனதினுள் சொல்லிக் கொண்டே பூங்காவை சுற்றி வந்தான்.

“சோறுதான தின்ற?” இப்படி ஒரு குரல் நாராசமாக ஒலிக்க அவன் கவனம் சிதறியது. அங்கேயே நின்றான். சப்தம் இடது புறத்தில் பூங்காவை ஒட்டியிருந்த வீட்டிலிருந்து வந்தது.

பூங்காவை சுற்றி நான்கு புறமும் இரும்பு கம்பிகளாலான மதில். அது அவனை விட இரண்டு மடங்கு உயரத்தில் இருந்தது. பூங்காவின் இடது புறம் வரிசையாக வீடுகள். பின்புறம் புதர் மண்டி கிடக்க, மற்ற இரண்டு புறமும் சாலைகள். பூங்கா மேடாக அமைந்திருந்தது. அங்கே நின்று பார்த்தால் அந்த வீடுகள் பள்ளத்தாக்கில் இருப்பது போல் தெரிந்தன. வரிசையில் அமைந்த அந்த வீடுகளின் வாசல் பூங்காவின் இடது மதிலை பார்த்து அமைந்திருந்தது. பூங்காவை ஒட்டியிருந்த ஒத்தையடிப் பாதை அந்த வீடுகளுக்கான பொதுப்பாதையாக மாறியிருந்தது.

அந்த வீடுகள் எல்லாம் பெரும்பாலும் ஒற்றை அறைக் கொண்ட வீடுகளாகதான் இருந்தன. ஆனால் சிறு வீட்டிலேயே நிறைய பேர் வசித்தனர். அங்கே வசித்த அனைவரும் பூங்காவின் இரும்பு கம்பிகளின் மேல் துணிகளை உலர்த்துவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இரும்பு கம்பிகளுக்கும் அதில் காயப் போடப்பட்டிருந்த துணிகளுக்குமிடையே இருந்த இடைவெளியில் தான் வீடுகளை கவனிக்க முடியும்.

அங்கே  ஒரு பெரிய பச்சை புடவையும் அதன் மேல ஒரு சுடிதாரும் காய்ந்தது. புடவைக்கு பின்னால் ஒரு உருவம் தெரிந்தது. மெதுவாக அந்த புடவையை நகர்த்தி பார்த்தான். ஒரு தடியன் நின்றுகொண்டிருந்தான். அவன் வீட்டின் வாசலைப் பார்த்து நின்றுகொண்டிருந்ததால் அவனுடைய தலை மட்டும் தெரிந்தது. அவன் மஞ்சள் டி-ஷர்ட், கட்டம்போட்ட லுங்கி அணிந்திருந்தான். அவனுடைய டி-ஷர்ட் முதுகில் ஒரு அரசியல் தலைவர் சிரித்துக் கொண்டிருந்தார்.

“உன்னதாண்டி….” அவன் மீண்டும் கத்தினான். வீட்டின் நிலைவாசற்ப்படியில் ஒரு நடுத்தர வயது பெண் நின்றுகொண்டிருந்தாள். அவள் கண்கள் கலங்கியிருப்பதை கவனித்தான். மதில் முழுக்க வரிசையாக துணிகள் இருந்ததால், கீழே நிற்பவர்கள் உன்னிப்பாக கவனித்தாலொழிய பூங்காவில் ஒருவன் நின்று தங்களைப் பார்ப்பது தெரியாது.

அருகாமையில் காலடி ஓசை கேட்டது. திரும்பினான். பூங்காவில் நடைப்பயிற்ச்சியில் ஈடுபட்டிருந்த ஒரு நடுத்தர வயதுகாரரும் அவரின் மகளும் இவனை நோக்கி வருவதை கவனித்தான். இவன் புடவையிலிருந்து கையை எடுத்துவிட்டு, எதுவும் தெரியாதது போல் கிழக்கு பக்கம் திரும்பி சூரியனை பார்த்து வணக்கம் வைத்தான். யாரவது பார்த்தால் இவன் சூர்ய நமஸ்காரம் செய்கிறான் என்று நினைத்துக் கொள்ள வேண்டுமாம். அந்த தந்தை பேசிக்கொண்டே வந்தார். அந்த மகள் தன் செல்போனை அவ்வப்போது பார்த்துக்கொண்டு, தந்தை பேசுவதை வேறுவழியில்லாமல் கேட்பதைப் போன்ற முகபாவங்களை வெளிப்படுத்திக் கொண்டு நடந்து வந்தாள். அந்த தந்தையும் மகளும் சென்றபின் மீண்டும் வீட்டை நோக்கினான்.

தடியன் தொடர்ந்து உரக்க பேசினான். எல்லாம் காலையில் கேட்க அவசியமற்ற சற்றே ஆபாசமான வசை மொழிகள். அவன் வரிசையாக பேசினான். ஏதோ மனப்பாடம் செய்துவிட்டு ஒப்பிப்பதைப் போல் கெட்ட வார்த்தைகளை கொட்டினான். அவனுடையது கட்டையான குரல். கத்திகத்தி தேய்ந்து போனது போல் இடையிடையே அவன் பேசிய வார்த்தைகள் முழுவதுமாக புரியவில்லை.

“ரொம்ப பேசாதீங்க…” உள்ளிருந்து ஒரு பெண்ணின் குரல் மட்டும் வந்தது. அந்த குரலை வைத்து அந்த பெண்ணிற்கு தன் வயதோ, தன்னை விட குறைந்த வயதோ தான் இருக்குமென்று இவன் நினைத்துக் கொண்டான்.

“வெளிய வாடி. காச தர வக்கில்ல உள்ள ஒக்காந்துகிட்டு வாய்விடுற” தடியன் கத்தினான்.

“செவனேன்னு இரேன்” அந்த பெண்மணி உள்ளே பார்த்து சொல்லிவிட்டு, திரும்பி தடியனைப் பார்த்து, “அவ தெரியாம பேசிட்டானே” என்று பாந்துவமாக சொன்னாள்.

“அண்ணே நொண்ணேனு. பத்துதேதிக்கு வட்டிய கொடுக்குறேன்னு இளிச்ச. இப்ப தேதி என்ன?”

“கொடுத்துறன்னே. பெரியவ பிரசவத்துக்கு வந்துட்டா”

“அதான் சின்னவ வாய்விடுறாளே… “

அதன்பின் அவன் இன்னும் ஆபாசமாக கத்திவிட்டு சென்றான். இவன் மட்டும் அங்கேயே நின்றுகொண்டிருந்தான். பூங்காவில் இவனை கடந்து சென்ற யாரும் அங்கே அந்த வீடு இருந்ததைப் பற்றியோ அங்கிருந்து சப்தம் வந்ததைப் பற்றியோ அலட்டிக்கொண்ட மாதிரி தெரியவில்லை. சிறிது நேரத்தில் தடியன் அங்கிருந்து நகர்ந்தான். அந்த பெண்மணி கண்கலங்க வாசலிலேயே நின்றுக்கொண்டிருந்தாள். இவனுடைய மொபைலில் அலாரம் அடித்தது. அலுவலகத்திற்கான நேரம். அங்கிருந்து கிளம்பினான்.

அன்று முழுக்க மனம் லேசாக இல்லை. அவனுள் ஏதேதோ கேள்விகள். மிஞ்சிபோனால் அவர்கள் எவ்வளவு கடன் வாங்கி இருக்க முடியும்? அதற்காக எவ்வளவு பேச்சு வாங்க வேண்டி இருக்கிறது! இந்த கட்டமைப்பே தவறாக இருக்கிறதே? இதை எப்படி சரி செய்வது? இதே சிந்தனை தான் நாள் முழுதும். அதனால் அவனால் எந்த வேலையிலும் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை. ஆனாலும் சம்பரதாயமாக ஏழு மணி வரை அலுவலகத்தில் இருந்துவிட்டு திரும்பி வீட்டிற்கு வர ஒன்பது மணி ஆகிவிட்டது. கனவில் அந்த தடியனின் குரல் நாராசமாக ஒலித்ததால் இரவில் சரியாக தூக்கம் வரவில்லை. அதனால் காலையில் எழ சற்றுத் தாமதாகிவிட்டது. வேகவேகமாக ஸ்போர்ட்ஸ் ஷூவை எடுத்து மாட்டினான்.

“இப்ப போற? நேரமாச்சே!” அம்மா சொன்னாள்.

“இன்னைக்கு ஆபிஸ் லேட்டா போலாம்” அம்மாவிடம் பொய் சொல்லிவிட்டு பூங்கா நோக்கி நடந்தான். அந்த தடியன் மீண்டும் வந்து தொந்தரவு செய்துகொண்டிருப்பானோ என்று எண்ணிக் கொண்டே நடந்ததால் தெருக்களைப் பற்றிய எந்த சிந்தனையும் வரவில்லை.

பூங்காவை ஒட்டியிருந்த அந்த ஒத்தையடிப் பாதையின் முன்னே இருசக்கர வாகனமொன்று நின்றிருந்தது. அது தடியனின் வண்டியாக தான் இருக்கும் என்று அவனால் யூகிக்க முடிந்தது. அவன் நினைத்தது போலவே, அவன் பூங்காவில் நுழைந்து இடது மதில் சென்று நின்றதும், தடியனின் குரல் கேட்டது.

“எந்த போலிஸ்ட போவ. எல்லாம் போலீஸ்க்கும் பைசல் பண்ணிட்டுதான் தொழில் பண்றோம்”

இவன் இடைவெளியில் பார்த்தான். வாசலில் ஒரு பெண் நின்றுகொண்டிருந்தாள். அந்த பெண்ணுக்கு இருபத்தைந்து வயது இருக்கலாம். நேற்று உள்ளே இருந்து பேசிய பெண் இவளாகதான் இருக்கக்கூடும் என்று எண்ணினான். அவ்வளவு பிரச்சனையிலும் அவள் முகம் சாந்தமாக இருந்தது. இவர்களின் பிரச்சனையோடு ஒப்பிடுகையில் தன் பிரச்சனை எல்லாம் ஒன்றுமே இல்லையே! இவ்வளவு தைரியமாக பிரச்சனையை சமாளிக்க முயல்கிறாளே! அவன் அவளை ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டே இருந்தான். யாரோ தன்னைப் பார்ப்பதை உணர்ந்த அவள் பூங்காவை நிமிந்து பார்த்தாள். இவன் விருட்டென்று நகர்ந்து பூங்காவை சுற்றத் தொடங்கினான். பூங்காவின் வலது புறத்தில் ஒருவன் தலைகீழாக நின்று யோகா செய்துகொண்டிருந்தான். பூங்காவின் நடுவே இரண்டு வயதானவர்கள் அமர்ந்து இந்திய பொருளாதாரத்தின் போக்கைப் பற்றி சப்தமாக பேசிக் கொண்டிருந்தனர். எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டே இவன் அடுத்தச் சுற்று இடது மதிலை அடைந்தபோது அந்த பெண் வாசலில் இல்லை. வீட்டுக் கதவு உள்ளே தாளிடப்பட்டிருந்தது.

இப்போது தடியன் மாடியில் நின்றுகொண்டிருந்தான். மாடியிலும் வரிசையாக மூன்று வீடுகள் இருந்தன. நடுவீட்டின் வாசலில் நின்ற தடியன் அந்த வீட்டிலிருந்த பெண்ணிடம், “உன் புருஷன் ரொம்ப பேசுறான். என்னைக்காவது போட்டு பொலக்க போறேன்” என்று மிரட்டினான்.  மிகவும் மெலிந்திருந்த அந்த பெண் பேசமுடியாமல் பேசினாள்.

“அவரு நிதானம் இல்லாம இருக்காருங்க….”

“காலேலயே ஊத்திக்க தெரியுது இல்ல. வட்டிய கொடுக்க என்ன குறைச்சல்!”

இவன் மீண்டும் கீழ் வீட்டைப் பார்த்தான். திறந்திருந்த ஜன்னலின் வழியே அந்த பெண்ணின் குரல் மட்டும் கேட்டது.

“அசிங்கமா இருக்குமா… தினைக்கும் காலைல” அவளால் பேசமுடியவில்லை. விசும்பல் சப்தம் மட்டும் கேட்டது. அவனால் மேற்கொண்டு அங்கே நிற்க முடியவில்லை. அவன் பூங்கா வாசலின் வெளியே வந்து நின்றபோது, அந்த தடியன் தன் இருசக்கர வாகனம் அருகே வந்து நின்றான். திரும்பி இவனைப் பார்த்தான். அவனுக்கு நாற்பது வயதுக்கு மேல் இருக்கும். தொப்பை வீங்கி வெடிப்பது போல் இருந்தது. இவனும் ஒரு நொடி தடியனைப் பார்த்தான். ஓடி சென்று அவன் மேல் பாய்ந்து கீழே தள்ள வேண்டும்போல் இருந்தது. அவ்வளவு பலம் தனக்கு இல்லை. அந்த தடியனை ஏதாவது செய்ய வேண்டும். போலிசிடம் போகலாம். ஒருவேளை அந்த தடியன் சொன்னது போல் அவனுக்கு போலீசில் ஆட்கள் இருந்தால் ஒரு பிரயோஜனமும் இல்லை. அவர்கள் தன்னை காட்டிக் கொடுத்து விட்டால், தடியன் ஆள் வைத்து தன்னை அடித்துவிட்டால் என்ன செய்வது? இது போன்ற ஆட்கள் கொலை கூட செய்வார்கள். இன்னொருவருக்கு உதவி செய்ய போய் தனக்கு உபத்திரத்தை தேடிக் கொள்வது புத்திசாலித்தனமில்லை. ஆனால் இப்படி கோழையாக சுயநலவாதியாக இருப்பது வெட்கப்படவேண்டிய செயல். நாமும் மற்றவர்களைப் போல் சராசரி ஆளாக இருப்பது எவ்வளவு அபத்தம். ‘வேடிக்கை மனிதரைப் போலே வீழ்வேனென்று நினைத்தாயோ’ மனதில் ஒரு குரல் கேட்டது. அவன் கோபகமாக தடியனை பார்த்தான்.  தடியன் திரும்பி அந்த பெண்ணின் வீட்டை பார்த்து துப்பிவிட்டு, வண்டியை எடுத்துக் கொண்டு நகர்ந்தான். இவன் மனமெல்லாம் ஆக்ரோசம் ஆக்கிரமித்துக் கொண்டது.

சாப்பாடு இறங்கவில்லை. அருகில் அமர்ந்திருந்தவர்கள் சாப்பிட்டுவிட்டு வேலையை பார்க்க சென்றுவிட்டனர். மதியம் இரண்டிலிருந்து இரண்டரை வரை தான் சாப்பாட்டு நேரம். சாப்பாடு நேரம் முடிவதற்கு முன்பு இருக்கையில் இருக்க வேண்டும். இதுவும் பொதுமேலாளரின் உத்தரவு தான். கண்காணிப்பு கேமரா மூலம் எல்லாவற்றையும் அவர் கண்காணித்துக் கொண்டே இருப்பார். மனசாட்சிக்கு பயப்படாதவர்கள் கூட கண்காணிப்பு கேமாரவிற்கு பயந்தனர். மணி இரண்டரையை தொட்டுவிட்டது. இவன் மட்டும் சாப்பிடாமல் சாப்பாட்டு டப்பாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.

என்ன செய்யலாம்? தன்னை தானே மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டான். கையில் கொஞ்சம் காசு இருக்கிறது. நேரடியாக அவர்களின் வீட்டின் கதவைத்தட்டி அந்த  பெண்ணிடம் போய் கொடுத்துவிடலாமா! இல்லை. அவள் தவறாக நினைத்துவிடக் கூடும். அல்லது அப்பாவுக்கு தெரிந்த யாரவது பார்த்து அப்பாவிடம் சொல்லிவிட்டாலும் பிரச்சனை. ஆனாலும் அவளுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும். தடியனின் பிடியிலிருந்து அந்த குடும்பத்தை விடுவித்தால் கூட போதும்.

“சாப்பிடாம அப்படி என்ன யோசனை?” கோபிகிருஷ்ணன் சார் கேட்டுக்கொண்டே தன் டிபன் பாக்ஸில் இருந்த தண்ணீரை வடித்து, டப்பாவை மேஜை மீது வைத்தார்.

கோபிகிருஷ்ணன் அவனுடைய அலுவகத்தின் சீனியர் கிளார்க். பொது மேலாளர் உட்பட எல்லோரும் அவரை கோபிகிருஷ்ணன் சார் என்றே அழைத்தனர். வயதில் மூத்த அவர் தன்னுடைய மனக்குழப்பத்தை போக்கக் கூடும் என்று எண்ணினான். காலையில் நடந்ததை சொன்னான்.

“தம்பி, கடன் கொடுத்தவன், அவனுக்கு அவன் காசு வேணும். எப்படி பேசுனா காசு கிடைக்குமோ அப்படி பேசுறான்” என்றார்.

“அவன் பேசுறது தப்புசார்”

“நாம என்ன பண்ணமுடியும்டா கண்ணா. அவன பத்தி தெரிஞ்சுதான் கடன் வாங்கிருப்பாங்க. நம்மால முடிஞ்சா ஏதாவது உதவலாம். அவ்ளோதான். அதுவும் எவ்ளோ பேருக்கு பண்ணமுடியும்? எதுக்கு அடுத்தவங்க லைப் பத்தியெல்லாம் யோசிச்சு குழப்பிக்கிற? சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ. இந்த மாதிரி சிந்தனைலாம் வராது”, அவர் கண் சிமிட்டினார். இவனுக்கு கோபமாக வந்தது. மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.

“சீக்கிரம் சீட்டுக்கு போ. பெரியவர் கேமரால பாப்பாரு!” சொல்லிவிட்டு அவர் டிபன் டப்பாவை மூடி பைக்குள் போட்டுக்கொண்டு நகர்ந்தார்.

கேமரா என்றதும் இவனுக்கு பொறித் தட்டியது. அந்த தடியனை கேமராவில் பதிவு செய்தால்? சாலையில் வழிப்பறி செய்த ஒருவனை யாரோ ஒருவர் ரகசியமாக வீடியோ எடுத்து இணையத்தில் போட்டு, அது பரவி போலிஸ் அவனை கைது செய்தது நினைவு வந்தது. ஆம் நாமும் அதை செய்யலாம். அந்த புடவையின் பின் நின்று அந்த தடியன் அவர்களை மிரட்டுவதை மொபைல் கேமராவில் பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றிவிட்டால் போதும். யார் யாரோ அந்த தடியனுக்கு எதிராக குரல் கொடுத்தால் எந்த போலிசாக இருந்தாலும் அவனை கைது செய்துதான் ஆக வேண்டும். அந்த குடும்பத்திற்கும் நல்லது நடக்கும். ரயில் பயணம் முழுக்க இந்த திட்டமிடல் தான். வீட்டிற்குள் நுழைந்த போது அம்மா தன் பையில் அவனுடைய துணிகளை அடுக்கி வைத்துக்கொண்டிருப்பதை கவனித்த போதுதான் நினைவு வந்தது, இரவு திருச்சிக்கு செல்லவேண்டும்.

“உன் துணியையும் என்  பேக்லயே வச்சிக்குறேன்” அம்மா சொன்னாள்.

“கொஞ்சம் சீக்கிரம் கிளம்பி வர வேண்டிதானா…!” அப்பா சொல்லிவிட்டு அவன் பதிலை எதிர்ப்பார்க்காமல் அடுத்த அறைக்கு சென்றார்.

வெள்ளிக்கிழமை இரவு ரயில் என்பது கடந்த இரண்டு நாட்கள் முன்புவரை அரைகுறையாக நினைவிருந்தது. அடுத்த வெள்ளிக்கிழமையாக இருந்திருக்கக் கூடாதா! தனக்கு மறுநாள் காலை முக்கியமான வேலை இருக்கிறது என்பதை எப்படி அம்மாவிடம் சொல்வது?

“ஞாயிற்று கிழமை தான மேரேஜ்! நான் நாளைக்கு கிளம்பி வரவா?”

“நீலாம் வரணும்னு தான மாமா லீவ் நாள்ல வைக்குது…. மாமாக்கு ஆம்பள புள்ளையா இருக்குது? நீதான் முன்னாடி நின்னு செய்யனும்” அம்மா சந்தோசம் பொங்கச் சொன்னாள். அவள் நல்ல மனநிலையில் இருந்தாள். அதனால் அவன் மேற்கொண்டும் எதுவும் பேசி அவளை கஷ்டப் படுத்த விரும்பவில்லை.

இல்லையேல், “பொண்ண தான் கட்டிக்க மாட்டேன்னு சொல்லிட்ட…” என்றெல்லாம் சொல்லி கண்ணை கசக்க ஆரம்பித்துவிடுவாள். அவளை சமாளித்தாலும், “அப்படி என்ன வேலை சாருக்கு?” என்று கேட்டுக் கொண்டு அப்பா வந்துவிடுவார். அவரை தன்னால் சமாளிக்க முடியாது.  அமைதியாக அவர்களோடு சென்றான்.

சனி ஞாயிறு முழுக்க மண்டபத்திலேயே கழிந்தது. ஆனால் அம்மா சொன்னது போலெல்லாம் இவன் எதையும் முன்னின்று செய்யவில்லை. தன் போக்கில் ஒரு மூலையில் அமர்ந்திருந்தான். எதிலும் ஆர்வமில்லை. எப்போது இந்த இரண்டுநாட்கள் கடந்து போகும் என்பதே அவனுடைய பெரிய பிரச்சனையாக இருந்தது. சிறுவயது முதல், எப்போது வார விடுமுறை வரும் என்ற எதிர்பார்ப்போடும், அது வந்தால் சீக்கிரம் முடிந்துவிடக் கூடாது என்ற ஆசையோடும்தான் அவனுடைய பள்ளி கல்லூரி நாட்கள் கழிந்தன. அதுவும் இந்த அலுவலகத்தில் சேர்ந்ததிலிருந்து எப்போது சனிக்கிழமை வருமென்று எதிர்பார்த்துதான் அவன் ஐந்து நாட்களை கடத்துவான். முதல் முறையாக அவன் எப்போது இந்த சனி ஞாயிறு கடந்து போகும் என்று எதிர்பார்த்து காத்திருந்தான். இடையிடையே வீடியோவை எடுத்தப் பின் அதை யாரிடமெல்லாம், எப்படியெல்லாம் கொண்டு சேர்க்கவேண்டும் என்று யோசித்தான். மிகவும் மெதுவாக அந்த ஞாயிற்றுக் கிழமை முடிந்தது. திங்கள் காலை வீட்டிற்குள் நுழையும் போது மணி ஐந்தரை.

“கொஞ்ச நேரம் தூங்கு… ஒரு நாள் லேட்டா போன ஒன்னும் ஆகாது ” அம்மா சொன்னாள்.

இவன் எதுவும் பேசாமல், துரிதமாக ஆடையை மாற்றிக் கொண்டு பூங்காவிற்கு செல்ல தயாரானான். அந்த நாள் அவனுக்கு எவ்வளவு முக்கியம் என்பது அவன் அம்மாவிற்கு தெரியாததால், அவள் அவனை ஆச்சர்யமாக பார்த்ததை அவன் பொருட்படுத்தவில்லை. தன் கைபேசியில் சார்ஜ் இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொண்டான். இன்றோடு அந்த தடியனின் அட்டூழியம் அடங்கிவிடும், அதை தான் சாத்தியமாக்கப் போகிறோம் என்று எண்ணும்போது அவனுக்கு பெருமையாக இருந்தது. எல்லாம் சரியாக நடந்தபின்பு வேண்டுமானால் அந்த பெண்ணிடம் மட்டும் தான் செய்த இந்த காரியத்தை சொல்லிக் கொள்ளலாம். அது தற்பெருமை அடிப்பதைப் போல் ஆகாதா? ஆகாது. ஆகாது. அவளுக்கு மேற்கொண்டு உதவும் பொருட்டே உண்மையை சொன்னதாகவும், அவளுக்கு தான் எந்த உதவியும் செய்ய தயாராக இருப்பதாகவும் அவளிடம் சொல்லலாம். அவள் தன்னை நம்பக் கூடும்.

பூங்காவை அடைந்த அவன், அருகே நின்றிருந்த தடியனின் வண்டியை பார்த்ததும் தனக்குள் சிரித்துக் கொண்டான். ‘ஆம் நான் ஒரு ஆபத்பாந்தவன்.’

பூங்காவின் இடது மதிலை நெருங்கிய போது, எந்த சப்தமும் வராதது ஆச்சர்யம் அளித்தது. கம்பியில் துணிகளும் இல்லை. அந்த வீடு கம்பிகளின் வழியே தெளிவாக தெரிந்தது. கதவு திறந்திருந்தது. ஒரு வயதான பெண் வீட்டை கழுவி விட்டுக் கொண்டிருந்தாள். அந்த அறையில் ஆங்காங்கே புகை அண்டி சுவரெல்லாம் கருப்பாக இருந்தது. அவன் சிந்தனை வழக்கத்தை விட வேகமெடுத்தது. அவனால் அங்கு நடந்திருப்பதை யூகிக்க முடிந்தது. அவன்  அப்படியே ஸ்தம்பித்து நின்றதால், அந்த வயதான பெண்மணி அவனை நிமிர்ந்து பார்த்துக் கொண்டிருந்ததை அவன் கவனிக்கவில்லை.

“என்ன கண்ணு பாக்குற?” அந்த பெண் இவனைக் கேட்டாள்.

“இங்க இருந்தவங்க…. ஒரு அம்மா” அவனால் கேள்வியை முடிக்க முடியவில்லை.

“ஆத்தாளும் பொண்ணும் கொழுத்திகிச்சுங்க… ” அவள் செய்தி வாசிப்பது போல் எந்த உணர்வுமின்றி பதில் சொன்னாள்.

இவனால் பதில் பேசமுடியவில்லை. அப்படியே  நின்றான். அவள் தொடர்ந்து தன் வேலையை கவனித்தாள்

“எப்ப… ” அந்த வீட்டை பார்த்தவாறே கேட்டான்.

நிமிர்ந்து பார்த்த அவள். “வெள்ளிகிழமை. ஏன் உனக்கு தெரிஞ்சவங்களா?” என்றாள்.

இவன் அமைதியாக இருந்தான். இவனிடம் பேசுவது வீண் என்று அந்த பெண்மணி நினைத்திருக்கக் கூடும். அவள்  கதவை இழுத்து தாளிட்டு விட்டு, “அடுத்த குடி வரதுதான் கஷ்டம்” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு நகர்ந்தாள். அங்கே அதுவரை இருந்தவர்கள் இல்லாமல் போனதைப் பற்றி அந்த வயதான பெண் அலட்டிக் கொள்ளாதது அவன் மனதை உறுத்தியது. உண்மையில் அங்கே யாருக்கும் போனவர்களைப் பற்றி எந்த கவலையும் இருப்பதாக அவனுக்குத் தெரியவில்லை. வாசலில் நால்வரும் சளைக்காமல் கேரம் போர்ட் விளையாடிக் கொண்டிருந்தனர்.  பூங்காவின் வலது புறத்தில் சிரசாசன நிலையிலிருந்த அந்த ஆசாமி பக்கத்தில், இன்னொருவன் தலைகீழாக நிற்க முயற்சி செய்துகொண்டிருந்தான். வயதான நண்பர்கள் இருவரும் சப்தமாக பேசிக் கொண்டே இருந்தார்கள். அந்த அப்பாவும் பெண்ணும் பூங்காவை சுற்றி வர, மகளின் கவனம் முழுக்க மொபைலில் இருந்தது.  இவன் மீண்டும் அந்த வீட்டைப் பார்த்தான். பெரிய பூட்டு ஒன்று தொங்கியது.

அந்த தடியன் அந்த குடும்பத்திற்கு கொடுத்த அழுத்தத்தை கண்ணால் கண்டது தான் மட்டுமே. தான் முதல் நாளே ஏதாவது செய்திருக்க வேண்டும். தவறவிட்டு விட்டோம். அவன் குற்ற உணர்ச்சி அவனை அழுத்தியது. இனியாவது எழ வேண்டும். தடியனுக்கு தண்டனை வாங்கித் தரவேண்டும். அவனுக்கு தடியனின் மீது கோபம் அதிகமானபோது, தடியனின் குரல் மாடியில் இருந்து வந்தது. நிமிர்ந்து பார்த்தான்.

“காச கேட்டா எகத்தாளமா” தடியன் மிகவும் கோபமாக அந்த மாடிவீட்டுக் காரனின் சட்டையை கோர்த்து பிடித்து கன்னத்தில் அடித்தான். அவன் சுருண்டு விழுந்தான். மெலிந்த அந்த பெண் தடியனின் காலை பிடித்துக் கொண்டு கதறினாள். தடியன் அவளையும் அவள் கணவனையும் மிதித்தான். அதே கோபத்தில் திரும்பிய தடியன், பூங்காவிற்குள் நின்றுகொண்டிருந்த இவனை ஒருமுறை தற்செயலாக பார்த்தான். தடியனின் வெறிகொண்ட முகத்தைப் பார்க்கும் போது, இவனுக்கு உடம்பு நடுங்கியது. பார்வையை திருப்பிக்கொண்டு நகர்ந்தான்.

‘சொங்கிப் பயலே’ ‘எதுக்கு அடுத்தவங்க லைப் பத்தியெல்லாம் யோசிச்சு குழப்பிக்கிற’ ‘ரொம்ப யோசிக்காதிங்க. ரிலாக்ஸ்’ ‘வேடிக்கை மனிதரைப் போல் வீழ்வேனென்று நினைத்தாயோ’

‘சோற்றுக் கற்றாளைச் சாறு கால் வலியை நீக்கும்’ என்று தனக்குதானே இரண்டு மூன்று முறை மனதினுள் சொல்லிக் கொண்டே பூங்காவை சுற்றத் தொடங்கினான்.

நண்பனின் கடிதங்கள்- நெடுங்கதை

    அதே தாம்பரம் பீச் ரயில், கேண்டீன் அருகே வந்து நிற்கும் அதே பெட்டி, தம்பி அக்காக்கு காசு கொடு என்று கேட்கும் அதே திருநங்கைகள். ‘பாஸ் கொஞ்சம் நகுந்து உட்காருங்களேன்’. ‘இறங்கி ஏறு. இறங்கி ஏறுங்கப்பா’ ‘சார் மேஜிக் புக் சார் மேஜிக் புக். இருபது ரூவாய் தான்’ ‘நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்’ ‘தயவு செய்து பயணிகள் வண்டி நடை மேடையில் நின்ற பின்பு இறங்கவும்’ வழக்கமான இத்தியாதிகளுக்கு மத்தியில் அந்த நாளும் மற்ற நாட்களைப் போல் ஒரு சாதாரண நாளாக தான் கழியும் என்று எண்ணிக் கொண்டு வங்கியை அடைந்தேன்.

வாசலில் காத்திருந்த நேபாளிகள் வணக்கம் வைத்தார்கள். மாதம் பத்து தேதி முதல் இருபது தேதி வரை நேபாளிகளின் கூட்டம்தான் வங்கியில். இங்கே சம்பாதித்த பணத்தை தங்கள் ஊரில் உள்ள குடும்பத்திற்கு அனுப்புவதற்காக வங்கி திறப்பதற்கு முன்பே வந்து வரிசையில் நின்றுக் கொள்வார்கள். முதல் ஆளாக பணம் அனுப்பினாலும், கடைசி ஆளாக அனுப்பினாலும் அந்த நாளின் இறுதியில் தான் பணம் நேபாலை சென்றடையும் என்று சொன்னால் கேட்கமாட்டார்கள். விடிவதற்குமுன்பே வந்து வரிசையில் நின்றுவிடுவார்கள். பணம் அனுப்பி இரண்டு மணி நேரத்தில் வந்து “சாப் கல்தி ஹோகயா” என்று பதறுவார்கள். நான் பதட்டமில்லாமல் என்ன என்று கேட்பேன்.

“காசு இன்னும் போய் சேரல பாய்” இதே காரணத்தை சொல்லிக் கொண்டு புதிதாக ஒரு வரிசையில் கூட்டம் நிற்கும். ஒவ்வொரு முறையும் அவர்கள் எல்லோருக்கும் வங்கி எப்படி இயங்குகிறது, ஏன் அவர்கள் பணம் சென்றடைய தாமதம் ஆகிறது என்று வகுப்பெடுக்க வேண்டியிருக்கும். மீண்டும் அடுத்தமுறை அதே காரணத்தை சொல்லிக் கொண்டு வந்து நிற்பார்கள். சீனியர் கிளார்க் கோபாலகிருஷ்ணன் அவர்களை கவனித்துக் கொள்வார். எனக்கு எல்லாவற்றையும் மேற்பார்வையிடுவதை தவிற பெரிய வேலை எதுவும் இல்லை.

மும்முரமாக வேலை செய்வது போல பாவனை செய்துக் கொண்டிருந்த இரண்டு அதிகாரிகளை கடந்து  நான் என் கேபினுக்குள் நுழைந்தேன். என் மேஜை மீதிருந்த வருகைப் பதிவேட்டில் கையெழுத்து இட்டுக் கொண்டிருந்த கோபால கிருஷ்ணன் என்னைப் பார்த்து புன்னகை செய்தார். நான் சம்ப்ரதாயமாக சிரித்துவிட்டு இருக்கையில் அமர்ந்தேன்.

மேஜை மீது முந்தைய நாள் வந்த ஏராளமான கடிதங்கள் கிடந்தன. நான் முந்தைய நாள் ‘வேலை நிறுத்தம்’ காரணமாக வேலைக்கு வரவில்லை. எதற்காக வேலை நிறுத்தம் என்றெல்லாம் தெரியாது. நான் இருக்கும் யூனியன் வேலை நிறுத்தம் செய்ய வேண்டும் என்று தகவல் அனுப்பி இருந்தது. அப்படி தகவல் வரும் போதெல்லாம் வங்கிக்கு வராமல் வீட்டிலேயே இருந்து விட வேண்டும். எதிர் யூனியனை சேர்ந்தவர்கள் வேலை செய்வார்கள். அவர்கள் வேலை நிறுத்தம் செய்தால் நாங்கள் கலந்துக் கொள்ளாமல் வேலை செய்வோம். இந்த சங்கங்களை எல்லாம் கலைக்கும் அதிகாரம் என்னிடம் இருந்தால் அதை செய்துவிடுவேன். நாட்டில் வேலை இல்லாமல் பலர் இருக்க அரசாங்க வேலையில் அமர்ந்துக் கொண்டு சங்கம் கச்சேரி என்று காலம் கழிப்பவர்களை கண்டால் கோபம் வருகிறது. ஆனால் என்னால் எதுவும் செய்ய முடியாது என்பது எனக்கு நன்றாக தெரிந்ததால், சங்கத்தை எதிர்த்துக் கொடி பிடிக்கும் எண்ணங்களை மூளையின் மூலையில் ஒதுக்கி வைத்துவிட்டு, கடிதங்களை படிக்கத் தொடங்கினேன். பல சம்ப்ரதாயமான கடிதங்களுக்கு மத்தியில், புழல் சிறையிலிருந்து வந்திருந்த ஒரே ஒரு கடிதம் மட்டும் கவனத்தை ஈர்த்தது. பிரித்து படித்தால், குமாரனந்தம் எனக்கு நன்றி சொல்லியிருந்தார்.

குமாரனந்தம் ஒரு ஆயுள் தண்டனைக் கைதி. கடந்த வாரம் எங்கள் வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்கி இருந்தார். கைதிகள் சிறையில் சம்பாதிக்கும் பணத்தை சேமிப்பதற்காக, அவர்களுக்கென்றே பிரத்தியேகமாக சேமிப்பு திட்டம் ஒன்று வங்கியில் உள்ளது. அவர்கள் சேமிப்பு கணக்கு விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து சிறை கண்காணிப்பாளரின் பரிந்துரைக் கடிதத்தை இணைத்து அனுப்ப வேண்டும். இதை யார் செய்தாலும் அவர்களின் கணக்கைத் தொடங்க வேண்டியது எங்கள் கடமை. என் வேலையை நான் செய்ததற்கு அவர் ஏன் எனக்கு நன்றி சொல்ல வேண்டும்!

யார் கணக்கு தொடங்கினாலும் அவர்கள் விலாசத்திற்கு. ‘வங்கி கணக்கு தொடங்கியமைக்கு நன்றி’ என்று குறிப்பிட்டு நாங்கள்தான் நன்றிக் கடிதம் அனுப்புவோம். உண்மையில் நன்றி சொல்ல வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல. வாடிக்கையாளரின் விலாசம் சரியானதுதானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவே பதிவு தபாலில் கடிதம் அனுப்புவோம். கடிதம் திரும்பி வந்துவிட்டால், மீண்டும் இன்னொரு கடிதம் அனுப்புவோம். அதுவும் திரும்பி வந்தால் கணக்கை மூடி விடுவோம். குமாரனந்தம் சிறையில் இருப்பதாலும். சிறை கண்காணிப்பாளர் சிபாரிசு கடிதம் தந்ததாலும் இங்கே விலாசம் சரிப் பார்க்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அதனால் நாங்கள் அவருக்கு நன்றிக் கடிதம் அனுப்பவில்லை.

ஆனால் குமாரனந்தம் எங்களுக்கு நன்றிக் கடிதம் அனுப்பியது, அதுவும் என்னை நண்பனாக பாவித்து கடிதம் அனுப்பியிருந்ததுஎனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஏனெனில் வங்கிக்கு வரும் கடிதத்தில் ‘மேலாளருக்கு’ என்றே விளிக்கப் பட்டிருக்கும். இவர் நண்பர் என்று விளித்திருந்தார். முத்துமுத்தான கையெழுத்தில் அந்தக் கடிதம் இருந்தது.

“அன்புள்ள நண்பரே,

வணக்கம். நலமா. இரண்டு வங்கிகள்ல கணக்கு தொடங்க முயற்சி பண்ணினேன். அவங்க அனுமதி தரல. நீங்க கணக்குத் தொடங்கியதற்கு நன்றி.
அன்புடன்
குமாரனந்தம்.”

யார் இவர். எதற்காக எனக்கு நன்றி சொல்கிறார். என்னைவிட வயதில் சுமார் இரண்டு மடங்கு மூத்த மனிதர் என்னை நண்பர் என்று அழைக்கும் போது பல வருடம் பழகிய ஒரு உணர்வு ஏன் ஏற்படுகிறது? இந்த வயதில் அவருக்கு சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் வந்தது? இந்த மனிதன் என்ன செய்துவிட்டு ஆயுள் தண்டனைக் கைதி ஆகி இருப்பார்? கையெழுத்து அழகாக இருந்தால் தலையெழுத்து நன்றாக இருக்காது என்று சொல்வார்களே, அது உண்மையோ?

நான் என் உதவியாளரை அழைத்து, குமாரனந்தத்தின் விண்ணப்பப் படிவத்தை எடுத்து வரச் சொன்னேன். படிவத்தில் இருந்த புகைப்படத்தில் சாந்தமாக தோன்றினார் குமாரனந்தம். ஆயுள் தண்டனைப் பெறும் அளவிற்கு இவர் என்ன குற்றம் செய்திருக்க முடியும்! ஒருவேளை கொலை ஏதும் செய்திருப்பாரோ? இருக்காது. இவ்வளவு சாந்தமான மனிதர் எப்படி கொலை செய்திருக்க முடியும்? படிவத்தை புரட்டினேன்.

முன்பு நான் எதையும் விலாவாரியாக கவனிக்கவில்லை. எந்த படிவமானாலும் இரண்டு அதிகாரிகளின் கையெழுத்து வேண்டும். அவ்வளவுதான். அதனால் என்னிடம் வேலை செய்யும் அதிகாரிகளே படிவத்திற்கு ஒப்புதல் அளிக்கும் வேலையை பார்த்துக் கொள்வார்கள். கடன் கொடுக்கும் துறையிலேயே நான் அதிக கவனம் செலுத்தி வந்தேன்.

குமாரனந்தத்தின் வீட்டு முகவரியை பார்த்தேன். ஒனம்பாக்கம் என்ற கிராமம். படித்திருக்கிறார். இளங்கலை கணிதம். அடுத்த பக்கத்தை திருப்பும்முன், ‘சார்’ என்றொரு குரல். காவி உடையில் ஒருவர் நின்றுக் கொண்டிருந்தார். ஆட்டோ ஓட்டுனர். கடனை திருப்பிக் கொடுக்காத ஆட்டோ ஓட்டுனராகதான் இருக்க முடியும். ஏனெனில் பெரும்பாலானவர்கள் கடனை அடைப்பதில்லை. நாங்களாக போன் செய்து கெஞ்ச வேண்டும். அவர்களே தேடி வந்தால் ஏதாவது காரணமாகதான் இருக்கும்.

“சொல்லுங்க….”

“சார், சீனிவாசன், ஆட்டோ லோன் வாங்கிருந்தேன்”

“உக்காருங்க….”

“சார் இல்லையா?”

“நான் தான் இப்ப சார். சொல்லுங்க.” எனக்கு அவரிடம் பேச வேண்டும் என்பதை விட, குமாரனந்தத்திற்கு பதில் கடிதம் எழுத வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது.

“சார், ஆட்டோ சின்ன ஆக்ஸிடெண்ட். அண்ணாநகர் ஸ்டேஷன்ல புடிச்சி வச்சுக்கிட்டாங்க. ஒரிஜினல் ஆர்‌.சி புக் கொடுத்தாதான் ரிலீஸ் பண்ணுவேனு சொல்றார் எஸ்‌.ஐ”

நான் அவர் பெயரை கம்ப்யூட்டரில் தட்டினேன். Non Performing Assets என்று வந்தது. வாராக்கடன். அவர் ஒருவருடத்திற்கு மேல் வட்டிக் கட்டவில்லை. அவர் தொடர்ந்து வட்டிக் கட்டியிருந்தால் ஏதாவது உதவி செய்திருக்க முடியும்.

“நீங்க ரொம்ப நாளா வட்டியே கட்டலயே. ஒரிஜினல்லாம் தர முடியாது, வேணும்னா ஓரிஜனல் எங்ககிட்ட தான் இருக்குனு லெட்டர் எழுதி தரேன்”

“சார். ஒரிஜினல் தான் சார் வேணும். நீங்க வேணா எஸ்ஐ கிட்ட பேசுங்களேன்”

“அதெல்லாம் முடியாதுங்க. ஜெராக்ஸ் வேனா தர சொல்றேன். வேணாம்னா  கிளம்புங்க” சொல்லிவிட்டு நான் குமாரனந்தத்தின் விண்ணப்ப படிவத்தை பார்த்தேன். நாமினேஷனில் மாலினி என்று எழுதியிருந்தார். மாலினி,  அவரின் மகள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. எதையோ யோசித்தவாறே நிமிர்ந்தால், ஆட்டோ ஓட்டுனர் அங்கேயே நின்றுக் கொண்டிருந்தார்.

“இங்க இருக்குறது டைம் வேஸ்ட் சார். நீங்க ஒழுங்கா கடன கட்டியிருந்தா ஒரிஜினல் புக்க மீட்டுட்டே போயிருக்கலாம்”

“வச்சுக்கிட்டா சார் ஏமாத்துறோம். வர வருமானம் குடும்பத்துக்கே பத்தல சார்”

அவர் சொல்வது நியாயம் தான். வங்கியிடம் பல நூறு கோடி கடன் வாங்கிவிட்டு ஏமாற்றிவிடும் பெரும் முதலாளிகளை வங்கி நிர்வாகத்தாலோ அரசாங்கத்தாலோ ஒன்றும் செய்ய முடிவதில்லை. வாழ்வாதாரத்திற்காக கடன் வாங்கியவர்களைதான் வங்கி நிர்வாகம் துரத்தி அடிக்கும். ஆனால் நான் கேள்வி கேட்பதால் என்ன மாறிவிட போகிறது? ஆயிரமோ இரண்டாயிரோமோ அந்த ஓட்டுனருக்காக என்னால் கொடுத்து உதவ முடியுமே ஒழிய அவர் கேட்கும் அசல் புத்தகத்தை கொடுக்க முடியாது. அப்படியே உணர்ச்சி வசப்பட்டு கொடுத்தாலும் அவர் திருப்பி தருவார் என்று உத்தரவாதம் இல்லை. என் வேலைக்கு ஆபத்து வந்துவிடும். அவர் நல்லவராக புத்தகத்தை திருப்பி கொடுத்தாலும். ஒருவருக்கு உதவுகிறோம் என்று தெரிந்தால், கடன் வாங்கிய பலரும் ஏதாவது காரணத்தை சொல்லிக் கொண்டு தங்களுக்கும் உதவி செய்ய வேண்டும் என்று வரிசையில் நிற்பார்கள்.

அதனால் முகத்தை கோபமாக மாற்றிக் கொண்டு,

“கிளம்ப சொன்னா கிளம்புங்க சார். வேலை இருக்கு. உங்களுக்கு ஹெல்ப் பன்றது மட்டும்தான் வேலையா?”

என்று சொல்லிவிட்டு நான் அவரை நிமிர்ந்து பார்க்காமல், என் இருக்கைக்கு பின்னிருந்த பிரிண்டிங் இயந்திரத்தினுள்ளிருந்து ஒரு வெள்ளைத் தாளை எடுத்தேன். அந்த ஓட்டுனர் “சார் சார்” என்று விளித்ததை நான் சட்டை செய்யவில்லை. விருட்டென்று வெளியே சென்ற அவர், வெகு நேரம் வாசலில் நின்று சப்தம் போட்டார். “பேங்க் நடத்துறாங்க பேங்க்” இன்னும் ஏதேதோ சொன்னார். இதெல்லாம் பழகி விட்டது என்பதால் நான் கண்டுகொள்ளாது கடிதம் எழுதத் தொடங்கினேன்.

“அன்புள்ள குமாரனந்தம்

நான் நலம். நீங்கள் நலமா?

என் வேலையை மட்டுமே நான் செய்தேன். இதற்காக நன்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை.

நீங்கள் என்ன குற்றம் செய்தீர்கள்?” என்று கடிதத்தில் எழுதினேன். பின்பு அந்தக் கேள்வி மரியாதையாக இருக்காது என்று அந்தக் கடிதத்தை கசக்கி எறிந்து விட்டேன். அந்த கேள்வியை மட்டும் தவிர்த்து மீண்டும் அதே கடிதத்தை புதிதாக எழுதி கவரில் வைத்து ஒட்டி சிறை விலாசத்தை எழுதினேன். மேஜையில் இருந்த பெல்லை அடித்ததும் உதவியாளர் ஓடி வந்தார்.

“ஃப்ரம் சீல் போட்டு அனுப்பிடுங்க”

அவர் கடிதத்தை வாங்கிக் கொண்டு வெளியே சென்றார். வாசலை எட்டிப் பார்த்தேன். அந்த ஆட்டோ ஓட்டுனர் அங்கே இல்லை.

***

குமாரனந்தத்திடமிருந்து இரண்டாவது கடிதம் வர நான்கு நாட்களுக்கு மேல் காத்திருக்க வேண்டியிருந்தது. நான் அனுப்பும் கடிதங்கள் கொரியரில் செல்வதால் மறுநாளே சென்றுவிடும். ஆனால் அவருடைய கடிதங்கள் தபாலில் வருவதால் தாமதமாகவே வந்தன. மேலும் சிறையிலிருந்து வாரம் இருமுறை தான் கடிதங்களை அனுப்ப முடியும். இதை குமாரனந்தம் தான் ஒருமுறை என்னிடம் சொன்னார். சில நேரங்களில் வாரம் ஒரு முறை மட்டுமே கடிதம் அனுப்ப அனுமதி தருவார்களாம். அதனால், கடிதம் வர ஒருவாரத்திற்கு மேல் கூட ஆனதுண்டு.

நான் அவருக்கு முதல் கடிதத்தை அனுப்பும் போது நானும் அவரும் இவ்வளவு நெருங்கிய நண்பர்களாக ஆகிடுவோம் என்று நான் எதிர்ப்பார்த்திருக்கவில்லை. நான் அவரைப் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டதை போல் அவரும் என்னைப் பற்றி தெரிந்துக் கொள்ள விரும்பியிருக்கிறார் என்றே நினைக்கிறேன். அதனால் தான் இரண்டாவது கடிதத்தில், என்னைப் பற்றிய விவரங்களை நேரடியாயாகவே கேட்டிருந்தார்.

“அன்புள்ள நண்பா.

நானும் நலம். உங்க பேர் என்னனு சொல்லலையே? உங்கள் கையப்பத்திலிருந்து பெயரை கண்டுபுடிக்க முடியலயே!”

அதுவரை என் பெயரை நான் குறிப்பிட்டிருக்கவில்லை என்று அப்போதுதான் விளங்கியது. மேலும் என் வயதென்ன என்றும். என் குடுப்பத்தைப் பற்றியும் கேட்டிருந்தார். முதல் கடிதத்தை விட இந்த கடிதத்தில் வார்த்தைகள் அதிகமாக இருந்தது. உண்மையில் எங்களின் நட்பு வலுக்க வலுக்க கடிதத்தின் நீளமும் அதிகரித்துக் கொண்டே போயிற்று. பத்து பதினைந்து பக்கங்கள் கூட கடிதம் நீண்டிருக்கிறது.

ஆனால் இரண்டாவது கடிதத்திற்கு, “நான் முப்பத்தியிரண்டு வயது லோனர். தனிமை விரும்பி” என்று சுருக்கமாகவே பதில் அனுப்பினேன். இதை தவிர என்னைப் பற்றி சொல்வதற்கு உண்மையிலேயே ஒன்றும் இல்லை. அதற்கு, “Loneliness is godliness” என்று தலைப்பிட்டு குமாரனந்தம் பதில் அனுப்பி இருந்தார்.

“அன்பு நண்பா

நானும் உன்னைப் போலதான். நான் வேலையில்லாமல் சுத்தியிருக்கேன். எங்கெங்கோ பயனம் பண்ணியிருக்கேன்.  என் வாழ்க்கையில யார்யாரோ கடந்து போயிருக்காங்க. எல்லா நேரத்துலயும் என்கூட இருந்தது என் தனிமைதான்..”

அதுதான் அவர் என்னை முதல் முதலில் ஒருமையில் விளித்தது. அதை படிக்கும் போது, பதில் எழுதும் போது அவரை ‘அண்ணா’ என்று அழைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. மீண்டும் கடிதத்தை படிக்க யத்தனித்த போது அதிகாரி ஒருவர “சார்” என்றார். அது ஏன் குமாரனந்தத்தின் கடிதத்தை படிக்கும்போது மட்டும் எல்லோரும் என்னைத் தொந்தரவு செய்கிறார்கள்!

அப்போதுதான் மணி ஆறு ஆனதை கவனித்தேன். ஐந்து மணியோடு வங்கியின் பணிநேரம் முடிகிறது. எல்லா கணக்கையும் சரிப்பார்த்துவிட்டு கிளம்ப மணி ஆறாகிவிடும். ஐந்து மணிக்கே கிளார்க்குகள் சென்று விடுவார்கள். அதிகாரிகள் வங்கியை பூட்டும் வரை இருக்க வேண்டும். ஏன் என்றெல்லாம் கேட்க கூடாது. வங்கியை பொறுத்த வரை இதுபோன்று ஏராளமான விதிமுறைகள் உள்ளன.

நான் உதவி மேலாளராக இருந்த காலத்தில் என்னுடைய மேலாளர் ஏழரை வரை வங்கியிலேயே கிடப்பார். வங்கியில் வேலையே இல்லையென்றாலும் அவர் ஏழரை வரை இருக்கையிலிருந்து எழ மாட்டார். வங்கியின் தொலைபேசியில் சொந்த கதை பேசிக் கொண்டிருப்பார். எனக்கு வீட்டில் ஒருவேலையும் இல்லை என்பதால் நான் வங்கியிலேயே அமர்ந்து ஏதாவது புத்தகம் படித்துக் கொண்டிருப்பேன். ஆனால் நான் மேலாளர் ஆன பின்பு அப்படி யாரையும் தொந்தரவு செய்வதில்லை. ஆறுமணிக்கெல்லாம் கிளம்பிவிடுவேன். அப்படியே நான் தாமதமாக கிளம்ப நேரிட்டாலும், வங்கியைப் பூட்ட ஒரு உதவியாளரை மட்டும் வைத்துக் கொண்டு என் அதிகாரிகளை அனுப்பிவிடுவேன். ஆனால் கடிதத்தில் மூழ்கி இருந்ததால் நேரம் ஆனதை கவனிக்கவில்லை. கடிதம் என்னவோ மதியமே வந்துவிட்டது. அன்று வேலை நிறைய இருந்ததால் தாமதமாகதான் கடிதத்தை படிக்கத் தொடங்கினேன்.

“சார், காம் ஹே குச்?” என்று அந்த அதிகாரி வினவினான்.

“இல்ல. பூட்டிடலாம்” என்று சொல்லிவிட்டு கடிதத்தை எடுத்து பைக்குள் வைத்துக் கொண்டேன்.

டிரைனில் மின்விளக்கு அணைந்து அணைந்து எரிந்ததால் கடிதத்தை உடனே படிக்க முடியவில்லை. எக்மோர் ஸ்டேஷன் வந்ததும்தான் விளக்கு சரியாயிற்று. நான் முதல் பெட்டியில் கடைசி இருக்கையில் ஜன்னலை ஒட்டி அமர்ந்திருந்தேன். எப்போதும் அந்த இடம் தான். கடிதத்தை எடுத்து படிக்கத் தொடங்கினேன்.

“நாம எல்லாருமே உள்ளுக்க்குள்ள தனிமை விரும்பிங்கதான்….”

என் அருகில் அமர்ந்திருந்த வயதான மனிதர் ஒருவர் கடிதத்தை எட்டிப் பார்த்தார். அது எனக்குப் பிடிக்கவில்லை. நான் அவரை நிமிந்து பார்த்தேன். அவர் எதுவும் தெரியாதது போல் தலையை திருப்பிக் கொண்டார். நான் கடிதத்தை வீட்டில் படித்துக் கொள்ளலாம் என்று பைக்குள் வைத்தேன். அவர் தன் வலபுரத்தில் அமர்ந்திருந்த இளைஞனின் மொபைலை பார்க்கத் தொடங்கினார். அந்த இளைஞன் வயதானவரை சட்டை செய்யாமல் யாருக்கோ தீவிரமாக காதல் ஸ்மைலிகள் போட்டு செய்தி அனுப்பிக் கொண்டிருந்தான். நான் ஜன்னலில் சாய்ந்து உறங்கிப் போனேன்.

மணி ஏழரை. வீட்டின் அருகே இருந்த அண்ணாச்சி மெஸ்ஸில் தோசை வாங்கச் சென்றேன். எப்போதும் அந்த நேரத்தில் எனக்காக தோசை பொட்டணம் காத்திருக்கும். ஆனால் அன்று அண்ணாச்சியின் மனைவி மிகவும் பிரயத்தனப்பட்டு அப்போதுதான் தோசை ஊற்றிக் கொண்டிருந்தாள்.

“மாஸ்டர் திடீர்னு வேலைய விட்டுட்டு போய்ட்டான் தம்பி… அதான் இன்னைக்கு லேட். கோச்சுக்காதீங்க” என்றார் அண்ணாச்சி.

அண்ணாச்சிக்கு அறுபது வயது இருக்கும். உழைப்பை கண்டு அஞ்சாத உடம்பு. குமாரனந்தத்திற்கும் அந்த வயதுதானே! அப்படி எண்ணும்போதுதான் உரைத்தது. நான் இதுவரை அண்ணாச்சியின் பெயரைக் கேட்டதே இல்லை. உண்மையில் வங்கியில் என்னைப் பார்த்து புன்னகை செய்யும் வாடிக்கையாளர்கள் பலரின் பெயரும் எனக்குத் தெரியாது. பெயரில் என்ன இருக்கிறது என்று நான் நினைத்திருக்கிறேன். ஆனால் அவர்களின் பெயரை தெரிந்து வைத்துக்கொண்டு ஒவ்வொருவரிடமும் பெயர் சொல்லி உரையாடினால் அவர்கள் எவ்வளவு நெருக்கமாக உணர்வார்கள்! இவ்வளவு நாள் தோன்றாத இந்த எண்ணங்கள் இப்போது மட்டும் ஏன் தோன்றுகின்றன?

“தம்பி. தோசை ரெடி”

தோசை பொட்டணத்தை வாங்கிக் கொண்டு ஒரு அடி நகர்ந்த நான், நின்று மீண்டும் கடையை நோக்கி திரும்பினேன்.

“என்ன தம்பி?”

“உங்க பேர கேக்கவே இல்லயே அண்ணாச்சி இவ்ளோ நாளா. உங்க பேரு?”

முகத்தில் ஆச்சர்யத்தை வெளிப்படுத்திய அவர், “அண்ணா…” என்று சொல்ல வந்து நிறுத்திக் கொண்டார். “முருகேசன்” என்று சொல்லிவிட்டு புன்னகை புரிந்தார். திடீரென்று அவர் முகம் பிரகாசமாக மாறியது எனக்கு ஆச்சர்யத்தை தந்தது.

வீட்டில் டி‌வி மீது தோசை பொட்டணத்தை வைத்துவிட்டு, வேர்வை அடங்குவதற்காக நாற்காலியில் அமர்ந்தேன். அந்த டி‌வி வெகுநாட்களாக ஓடுவதில்லை. அந்த பெட்டி இயங்கிக் கொண்டிருந்தபோது நான் வனவிலங்குகளை பற்றிய நிகழ்ச்சிகளை மட்டும் சிறிது நேரம் பார்ப்பேன். செயற்க்கையான ஒரு வாழ்க்கை முறையின் மீது மோகத்தை ஏற்படுத்தி நம்மை ஏங்க வைக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நான் பார்ப்பதில்லை. ஒருகட்டத்தில், மனிதர்களையே புரிந்துக் கொள்ள முடியவில்லை வனவிலங்குகளை புரிந்துக் கொண்டு என்ன செய்யப் போகிறோம் என்று தோன்றியதால், நான் டி‌வி பார்ப்பதையே நிறுத்தி விட்டேன். அதனால் அந்த பெட்டியை சரி செய்ய முயற்சிக்கவில்லை. உடையை மாற்றிவிட்டு, அந்த தோசையை வேகவேகமாக விழுங்கிவிட்டு, குமாரனந்தத்தின் கடிதத்தை தொடர்ந்தேன்.

“நாம எல்லாருமே உள்ளுக்க்குள்ள தனிமை விரும்பிங்கதான். கூட்டமாக இருக்கும்போதும் ஒவ்வொருவரும் உள்ளுக்குள்ள அவங்கவங்க உலகத்தில பயணம் பண்ணிக்கிட்டு தான் இருக்கோம். Collective loneliness-னு சொல்லுவாங்களே! அதனால தனிமை விரும்பியா இருக்கிறது தவறில்லை. ஆனால் தனித்துவிடப் பட்டவனாக ஆகிடக் கூடாது. நானும் தனிமை விரும்பிதான். அது நானா தேர்ந்தெடுத்துக்கிட்ட தனிமை. இங்க சிறைல யாருகிட்டயும் அதிகம் உரையாடுறதுயில்லை. பெரும்பாலும் புத்தகங்களோடுதான் வாழ்க்கை எனக்கு…”

அந்தக் கடிதம் முழுக்க தனிமையைப் பற்றிதான். அவர் நிறைய வாசிக்க கூடியவர் என்று அந்த கடிதம் உணர்த்தியது. அவரின் எழுத்து மனதிற்கு மிகவும் நெருக்கமாக இருந்தாலும் அவர் பயன்படுத்தியிருந்த சில வார்த்தைகளின் அர்த்தத்தை தேர்ந்து கொள்ள அகராதியை எடுத்து பார்க்க வேண்டியிருந்தது. இறுதியாக, உன் வேலையெல்லாம் எப்படி போய்க் கொண்டிருக்கிறது என்றுக் கேட்டிருந்தார்.

நான் அதுபோன்ற ஒரு கேள்வியைதான் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தேன் போல. பத்தி பத்தியாக பதில் எழுதினேன். பல நேரங்களில் மனதிற்கு பிடிக்காத வேலையைதான் செய்ய வேண்டியிருக்கிறது என்று குறிப்பிட்டேன். ஆட்டோ சீனிவாசனைப் பற்றி சொன்னேன். ஒரு மனிதனாக அவருக்கு உதவ வேண்டும் என்று ஆசை இருந்தாலும், ஒரு வங்கி அதிகாரியாக அந்த ஆட்டோ ஓட்டுனருக்கு நான் எந்த உதவியும் செய்யக் கூடாது.  முழுவதுமாக என்ன எழுதினேன் என்று மறந்துவிட்டது. இறுதியாக, “அடிமையாகி விட்டதை போல் உணர்கிறேன். எந்திரம் போல் காலை முதல் மாலை வரை எந்த லட்சியமும் இன்றி வாழ்க்கையை கழிக்கிறேன். எதற்காக ஓடுகிறோம் என்று தெரியவில்லை” என்று எழுதி கடிதத்தை முடித்தேன். பின் அந்தக் கடிதத்தை இரண்டு மூன்று முறை படித்தேன். எப்போது உறங்கிப் போனேன் என்று தெரியவில்லை.

வழக்கம் போல் ஏழு மணிக்கு அலாரம் அலற, நானும் வழக்கம் போல் அதை அனைத்துவிட்டு உறங்கினேன். அருகிலிருந்த கங்கை அம்மன் கோவிலில் சப்தமாக ஒலித்த பாடல் என் தூக்கத்தை கலைக்க கண்விழித்தேன். மணி ஏழரை. எட்டரை மணி ரயிலை பிடிக்க வேண்டும்.

வாசலுக்கு சென்று கோவில் வாசலில் நின்றுக் கொண்டிருந்த குருக்களுக்கு வணக்கம் வைத்தேன். அவர் என்னைப் பார்த்து புன்னகை புரிந்து விட்டு, கோவிலுக்குள் சென்றார்.

கோவிலில் ஒலிக்கும் பாடல்தான் உண்மையில் எனக்கான அலாரம். ஒருமுறை  கோவிலில் ஸ்பீக்கர் பழுதடைந்து போனதால், பாடல் போடவில்லை. விழித்துப்பார்த்தால் மணி பத்தானது, மொபைலை சைலன்டில் போட்டுவிட்டு உறங்கியதால், வங்கியிலிருந்து வந்த ஏராளமான அழைப்புகளை கவனிக்கவில்லை.

நான் போனால் தான் கல்லாவை திறக்க முடியும். கல்லாவிற்கு இரண்டு சாவிகள். ஒரு சாவி ஹெட் காஷியரிடம் இருக்கும். இன்னொரு சாவி என்னிடம் இருந்தது. எப்படியோ காஷியர் வரவுகளை வைத்து சமாளித்துவிட்டார். நானும் அவசர அவசரமாக வங்கிக்குள் ஓடி எதுவும் நடக்காதது போல் என் அறையினுள் அமர்ந்துக் கொண்டேன். இதை யதார்த்தமாக அந்த குருக்களிடம் சொன்னேன். அன்றிலிருந்து அவர் ஏழரை மணிக்கு நான் எழுந்துவிடுகிறேனா என்று பார்ப்பார். நான் ஏழரை மணிக்கு வெளியே வரவில்லையெனில் என் வீட்டுக் கதவை இரண்டு முறை தட்டிவிட்டுச் செல்வார்.

குமாரனந்தத்திற்கு அனுப்ப வேண்டிய கடிதத்தை எடுத்து பைக்குள் வைத்துக் கொண்டேன். நடக்கும் வேகத்தில் வாசலில் நின்றே அம்மனை கும்பிட்டுவிட்டு  கோவிலை கடந்து சென்றேன். ரயில் நிலையத்தில் ஒரு வயதான பிச்சைக்காரர், “அண்ணே பசிக்குது. ஏதாவது கொடு” என்று சொன்னார்.  இவர்களுக்கு வேறு வேலையில்லை என்று எண்ணிய நான் அவர் சொல்லியதை  காதில் வாங்கிக்கொள்ளாமல் கேண்டீன் அருகே வந்து நின்றேன். அங்கே வந்த ஒருவர், கேண்டீனில் ஐந்து பொட்டலம் இட்லிகள் வாங்கிவிட்டு, சாம்பார் பொட்டலங்கள் போதாது என்று சண்டைப் போட்டார்.

கேண்டீனில்வேலை செய்யும் பையன், “அவ்ளோ தான் சார் தரமுடியும், அதிகமா கொடுத்த ஒனர் திட்டுவார்” என்றான்.

“இந்த சாம்பார் எப்படி பத்தும்!” என்று அவர் மீண்டும் கத்தினார். அந்த பையன் எந்த பதிலும் சொல்லவில்லை. அவர் ஏன் இப்டி அல்ப்பத்தனமாக  நடந்துக் கொள்கிறார் என்று எண்ணினேன். நான் அவரை பார்த்துக் கொண்டிருக்கும் போதே, ரயில் வந்தது. ஜன்னல் சீட்டில் அமர்ந்து வெளியே அந்த மனிதரை பார்த்தேன். ரயில் கிளம்பத் தொடங்கியது.

“என்னமோ போப்பா எல்லாம் வியாபாரம் ஆகிடுச்சு” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்த அந்த அல்ப மனிதர், ரயில் நிலையத்தில் இருந்த ஐந்து பிச்சைக்காரர்களுக்கும் ஆளுக்கொரு இட்லி பொட்டலத்தை கொடுத்துவிட்டு, மூச்சிறைக்க ஓடிவந்து டிரைனில் ஏறினார். நான் முகத்தை திருப்பிக் கொண்டேன்.

***

“நண்பா.
Survival of fittest – டார்வினின் கோட்பாட்ட எல்லாரும் தவறா புரிஞ்சு வச்சிருக்காங்க. டார்வினோட கோட்பாடின்படி நாம எல்லாரும் ‘பிட்டஸ்ட்’ தான். இல்லையா? ஆனால் நாமதான் அடுத்தவன் கால இடறிவிட்டு ஓடப் பார்க்கிறோம். ஒருவகையில நாம் பரிணாம வளர்ச்சியின் தோல்வி. ‘வேலை’ வாழ்கையில ஒரு அங்கமே ஒழிய அதுவே வாழ்க்கை இல்லை. ஆனால் நாம பிறந்ததே வேலைக்கு போகுரதுக்கதான்னு நம்மள நம்ப வச்சுட்டாங்க. நீ உன் வங்கி வேலையை விட்டுட்டா, உன் வங்கி நிர்வாகம் உன்ன கண்டுக்க போறதில்லை.  உனக்கும் உன்நிர்வாகத்திற்குமான உறவு நீ வேலையில் இருக்குற வரைக்கும்தான். அப்படினா  ஒருவன்  வேலைக்காக ஏன் வாழ்க்கையை தொலைக்கனும்? வாழ்க்கையே கொண்டடுவதற்குதான். அதை மறந்திட்டு,  ஒவ்வொரு நொடியையும் காசுக்காக விற்றுவிடும்போது நாம் அடிமையாகிடுறோம். அதற்காக வேலையை விட்டுவிட்டு சந்நியாசம் போக சொல்லல.  வேலை மட்டுமே வாழ்க்கை இல்லங்கறத உணர்ந்தாலே போதும்…

“நாம எல்லோரையும் பார்வையிலேயே எடை போடுறோம். எல்லோரைப் பற்றியும் நம்மகிட்ட ஒரு முன்முடிவு இருக்கு. பெரியோரை வியத்தல், சிரியோரை இகழ்த்தல் இலம்னுபடிக்குறதோட சரி..  அடுத்தவன் வாழ்க்கையை வாழ்ந்துப் பார்க்காமல் அவனை எடை போடுவது தவறு. நாம சக மனுஷனுக்கு துன்பம் தரமா வாழ்ந்துட்டு போய்டணும். அதான் உத்தமம்.

கடந்த ஆறுமாதங்களில் குமாரனந்தம் எனக்கு எழுதிய கடிதங்கள் ஒவ்வொன்றையும் புரட்டி, கண்ணில் பட்ட பத்திகளை மட்டும் படித்துக் கொண்டிருந்தேன். இத்தனை வருடம் சிறைச்சாலைக்குள்ளே கழிக்கும் ஒரு மனிதனால் எல்லாவற்றைப் பற்றியும் ஆழமாக எப்படி பேசமுடிகிறது? சிறையிலே ஒரு போதிசத்துவர்! குமாரனந்தத்தின் பார்வையில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை என்றே நினைக்கிறேன். இந்த ஆறு மாத நட்பில் அவருக்கு எதிராக நான் எதையும் சொல்லிடவில்லை.

அன்றாடம் என் வாழ்வில் நடக்கும் சம்பவங்களைத் தவிர என்னிடம் சொல்வதற்கு எதுவும் இருந்ததில்லை. நான் ரயிலில் சந்திக்கும் மனிதர்கள் தொடங்கி வங்கியில் சந்திக்கும் மனிதர்கள் வரை எல்லோரைப் பற்றியும் குமாரனந்தத்திற்கு எழுதி அனுப்புவேன். அவர் ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும், சூழ்நிலைகளைப் பற்றியும் தன்னுடைய தெளிவான பார்வையை கடிதமாக அனுப்புவார். மீண்டும் யார் இவர் என்ற கேள்வியே என்னுள் மேலோங்கி நிற்க்கும்.

ஒருமுறை அவர் குடும்பத்தைப் பற்றி அவர் மகள் மாலினியைப் பற்றி விசாரித்து எழுதி இருந்தேன். அவரிடம் இருந்து தாமதமாகவே பதில் வந்தது. கோபித்துக் கொண்டாரோ என்று எண்ணினேன். சிறைச்சாலையில் ஏதோ போராட்டம் நடந்ததால் கடிதங்கள் வெளியே செல்லவில்லை என்றார். இப்போதைக்கு நண்பனாகிய நான் மட்டுமே அவருடைய குடும்பம் என்றும் தயவு செய்து வேறெதுவும் கேட்க வேண்டாம் என்றும் எழுதி இருந்தார். அதன்பின் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி நான் எதுவும் கேட்கவில்லை.

எங்களுக்கிடையே கடிதப் போக்குவரத்து மட்டுமே இருந்து வந்தது. மற்றபடி குமாரனந்தத்திடம் தொலைபேசியில்கூட உரையாடியதில்லை. இதைக் கூட அவரிடம் ஒருமுறை சொன்னேன், செல் போன் காலத்தில் பழைய காலத்து மனிதர்கள் போல் கடிதத்தில் உரையாடிக் கொண்டிருகிக்கிறோமே என்று, தான் செல்போன் உபயோகப்படுத்தியதில்லை என்று சொன்னார். பல வருடங்களுக்கு முன் தன் சிறை அதிகாரி கையில் பெரிதாக ஒரு கருவியை பார்த்ததாகவும். முதலில் அதை வாக்கிடாக்கி என்று எண்ணியதாகவும், பின்புதான் அது செல் போன் என்று தெரிந்ததாகவும் சொன்னார். ஆனால் செல்போன் பல வடிவம் பெற்று இன்று டச் போன் புழக்கத்தில் இருப்பதுவரை எல்லாவற்றையும் கவனித்து வருவதாக சொன்னார். முதன்முதலில் செல்போனை பார்க்கும் போது இருந்த வியப்பு இப்போது இல்லை என்றும் சொன்னார்.

அவர் சொல்வது சரிதான். நான் கல்லூரி படிப்பை முடித்து ஒரு சிறு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்த பின்புதான் முதல் செல்போன் கிடைத்தது. அதுவும் அந்த கம்பெனி நிர்வாகம் கொடுத்த ஒரு பழைய ஃபோன். ஆனால் அந்த பழைய போன் எனக்கு கொடுத்த பிரம்மிப்பை இப்போது நான் பயன்படுத்தும் விலை உயர்ந்த போன் கொடுப்பதில்லை. இதற்கும் குமாரனந்தம் மிக அழகாக பதில் எழுதி இருந்தார்.

“இந்தத் தலைமுறைக்கு எல்லாமே சீக்கிரமாகவும் எளிதாகவும் கிடைச்சிடுது நண்பா. வளர்ந்த பருவத்தில் கிடைக்க வேண்டிய பல விஷயங்கள் இளம் பருவத்திலேயே கிடச்சிறதுனாலஅவங்ககிட்ட இயல்பா இருக்கவேண்டிய ‘க்யூரியாசிட்டி’ இல்லாமல் போய்டுது. அங்க இயல்பில்லாத, வயசுக்கு மீறின ஆர்வம் வந்திடுது, அதனால தான் எளிதா தவறான பாதையில போயிடுறாங்க”

மேற்கொண்டு அந்த கடிதத்தைப் படிக்கவிடாமல் கன்டக்டரின் குரல் என்னை தடுத்தது.

“தம்பி இதான் ஸ்டாபிங்க்”

குமாரனந்தம் எனக்கு எழுதிய கடிதங்களை எல்லாம் பைக்குள் வைத்தேன். பஸ் நின்றது. குமாரனந்தத்தைப் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மனதின் மூலையில் இருந்தது உண்மைதான். அதற்காக மட்டும் அந்த ஊருக்கு செல்லவில்லை. இவ்வளவு ஞானம் பெற்ற ஒரு மனிதன் சிறைச்சாலையில் தனிமையில் வாடிக்கொண்டிருக்கிறார், அவருக்கோ அவரை சார்ந்தவருக்கோ என்னால் ஏதாவது உதவ முடியுமா என்று தெரிந்துக் கொள்வதற்காகதான் ஒனம்பாக்கத்திற்குச் சென்றேன். குமாரனந்தம் இதற்கு அனுமதி தரமாட்டார் என்றுத் தெரியும். அதனால்தான் அவரிடம் சொல்லவில்லை.

மதுராந்தகத்திலிருந்து வெறும் இரண்டு மணி நேர பயண தூரத்தில்  அமைந்திருந்த அந்த ஒனம்பாக்கம் கிராமம் வெளி உலக தொடர்பற்று அமைந்திருந்தது ஆச்சர்யத்தைத் தந்தது. தார் ரோட்டின் இருபுறமும் இங்கொன்றும் அங்கொன்றுமாய் வீடுகள். பெரும்பாலும் கரும்புத்தோட்டமே கண்ணுக்கெட்டிய தூரம் வரைத் தெரிந்தது. அந்த ஊரின் பேர் எழுதப்பட்டிருந்த பலகை ஒரு ஆழமரத்தில் தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்தது. உச்சி வெயில் தலையை சுட்டதால், குளிர்ச்சியாக ஏதாவது குடிக்க வேண்டும் என்றுத் தோன்றியது. எதிரே இருந்த கடையில் ஒரு பன்னீர் சோடா வாங்கினேன். அந்த கடையில் பத்துவயது மதிக்கத்தக்க சிறுவன் அமர்ந்து  வியாபாரம் செய்துக் கொண்டிருந்தான். கடைக்கு பின்னே அவன் வீடு இருந்தது. பன்னீர் சோடா குடித்து பலவருடம் ஆகிவிட்டிருந்தபடியால் அதை நான் சற்றுக் கூடுதலாகவே ரசித்துக் குடித்தேன். நான் யார் என்று விசாரிக்க உள்ளேயிருந்து வந்த கடைக்கார அக்கா, நான் பன்னீர் சோடா குடித்த லட்சணத்தைப் பார்த்து நான் சோடா குடிக்கத்தான் அந்தஊருக்கு வந்திருக்கிறேன் என்று முடிவு செய்துவிட்டார் போல. ஏனெனில் அவர் என்னை எதுவும் கேட்கவில்லை. சோடா பாட்டிலை வைத்துவிட்டு,

“அக்கா, இங்க 17 ஆம் நம்பர் வீடு எங்க?” என்றுக் கேட்டேன்.

அவர் பத்து, பதினொன்று என்று தனக்குள் முணுமுணுத்தவாறே அந்த ஊரை தன் கண்முன் நிறுத்தி பார்த்துவிட்டு,

“அங்க யாரும் இல்லயேபா. அது நான் இங்க வாக்கப்பட்டு வறதுக்கு முன்னாடி இருந்தே பூட்டி கிடக்கே”

அவருக்கு குமாரனந்தத்தைப்பற்றி எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று புரிந்தது. அதனால் அவரை பற்றி எதுவும் கேட்காமல், அந்த இடத்தை மட்டும் தெரிந்துக்கொண்டு குமாரனந்தம் வீட்டை அடைந்தேன். சிறிய வீடு. கதவு பாதி உடைந்த நிலையில் இருந்தது. உள்ளே இருக்கும் இரண்டு அறைகளை வெளியே இருந்தே அந்த உடைந்தக் கதவின் வழியே பார்க்க முடிந்தது. இரண்டு திண்ணைகள் முழுக்க ஆடுகள் கட்டப் பட்டிருந்தன. அதில் ஒரு சிறிய ஆட்டிற்கு புல் ஊட்டிக் கொண்டிருந்தார் ஒரு வயோதிகர். அவருக்கு கிட்டத்தட்ட என்பது வயது இருக்கும். அதற்கு மேலும் இருக்கலாம். அவர் அருகில் சென்றதும் அவர் என்ன என்பது போல் பார்த்தார். நானே பேச்சைத் தொடங்கினேன்.

“இது குமாரனந்தம் வீடு தான?”

அவருக்கு முதலில் நான் யாரைக் கேட்கிறேன் என்று புரியவில்லை. பின்பு சுதாரித்துக் கொண்டவராய், “இவ்ளோ வருஷம் கழிச்சு அவன தேடிக்கிட்டு யாரு?”

வீட்டின் உள்ளே இருந்து ஒரு நாய் வெளியே வந்தது. கிழவர் தன் தோளில் இருந்த துண்டை எடுத்து நாயின் மேல் ஓங்கி அடித்தார். நாய் குறைத்துக் கொண்டே ஓடியது. அந்த நாயின் சப்தம் கேட்டு வீட்டினுள்ளிருந்து இன்னும் இரண்டு நாய்கள் ஓடி வந்தன.

“எந்த நாயாவது வந்து சீட்டாடும், இல்ல இந்த நாய்ங்க வந்து குடும்பம் நடத்தும்” கிழவர் தனக்குத்தானே புலம்பினார். பின்பு என்னைப் பார்த்து,

“நீங்க யாருனு சொல்லலயே?” என்றார்.

என்னை அறிமுகம் செய்து கொண்டேன். குமாரனந்தம் எங்கள் வங்கியில் ஒரு கணக்குத் தொடங்கி இருப்பதால், முகவரியை சரிபார்க்க நான் வந்திருப்பதாக சொன்னேன். அவர் அதை எந்த அளவிற்கு நம்பினார் என்றுத் தெரியவில்லை. நான் அவரைப் பற்றி கேட்டேன்.

“நான் இங்கதான் பக்கத்துல இருக்கேன். திண்ணை சும்மா கடக்கேனு ஆடு கட்டி வச்சுக்கிட்டேன்” சொல்லிவிட்டு அவர் என்னை சட்டை செய்யாமல் தன் வேலையைத் தொடர்ந்தார். நான் மீண்டும் குமாரனந்தத்தைப் பற்றி கேட்டேன்.

“அவன் ஊறவிட்டு போய் முப்பது வருசத்துக்கு மேல ஆகுது. அவன் என் பையன்லாம் கூட்டாளி. அவன பெத்தவங்க போனதும் இங்க கொஞ்சநாள் தான் இருந்தான். அப்பறம் ஏதோ வெளியூர் போறதா போனான். திரும்பி வரவே இல்ல.”

கிழவரின் நிலையை என்னால் யூகிக்க முடிந்ததால் “உங்க பையன்?” என்று தயங்கித்தயங்கி கேட்டேன். கிழவர் துண்டால் தன் முகத்தை மூடிக் கொண்டு அழுதார். அதற்கு மேல் நான் அங்கு நிற்கவில்லை. இன்னும் சிலரிடம் விசாரித்தேன். பலருக்கும் குமாரனந்தத்தைப் பற்றி தெரியவில்லை. இளம் வயதில் வேலை நிமித்தமாக குமாரனந்தம் பூனாவிற்கு சென்றவரை அவர்களில் ஓரிருவருக்கு தெரிந்திருக்கிறது. யாருக்கும் அந்த ஊரைச் சேர்ந்த குமாரனந்தம் சிறைச்சாலையில் இருப்பது தெரியவில்லை. சூனியம் வைத்துவிட்டதால் அந்த குடும்பமே அழிந்து விட்டதாக ஒரு பெண்மணி சொன்னார். நான் எனக்குள் சிரித்துக் கொண்டேன்.

‘விண்ணப்ப படிவத்தின்படி அவருக்கு மாலினி என்று ஒரு மகள் இருக்கிறாள். அப்படியெனில் குமாரனந்தத்திற்கு பூனாவில் திருமணம் ஆகி இருக்கவேண்டும். அவர் பூனாவிற்குதான் சென்றார் என்பதில் என்ன நிச்சயம்? நாமினேஷனில் அவர் தன் மனைவிப் பெயரை குறிப்பிடவில்லை. ஒருவேளை அவரின் மனைவி இறந்திருக்ககூடுமோ? அவர் ஏன் சிறைக்கு சென்றார்?’

நான் யோசித்துக்கொண்டே நிற்கையில், ‘மதுராந்தகம்’ என்று பலகை போட்டு ஒரு பேருந்து வந்தது. ஏறினேன். ‘பச்சமலை பக்கத்துல மேயுதுன்னு சொன்னாங்க’ பேருந்தில் இளையராஜா பாடல் ஓடிக் கொண்டிருந்தது. அந்த பெட்டிக் கடையில் இருந்த சிறுவன் எனக்கு டாட்டா காட்டினான். நான் அவனைப் பார்த்து சிரித்தேன். பேருந்துநகர்ந்தது.

***

இரண்டு வாரங்களாக குமாரனந்தத்திடமிருந்து கடிதம் வரவில்லை. நான் ஆடிட்டிங் வேலையாக கொல்கத்தா சென்றுவிட்டேன். தினமும் என் உதவியாளருக்கு போன் செய்து குமாரனந்தத்திடமிருந்து ஏதாவது கடிதம் வந்தததா என்று கேட்பேன். இல்லை என்பதே பதிலாக வரும். எனக்கு எதுவும் சரியாக படவில்லை. ஒருவேளை நான் ஓனம்பாக்கம் சென்று விசாரித்தது அவருக்கு தெரிந்துவிட்டதோ? அவரிடம் சொல்லாமல் அவரை பற்றி விசாரிப்பது நட்புக்கு நான் செய்த துரோகம் என்று அவர் கருதிவிட்டாரோ? வேலையில் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை. சென்னை வந்ததும் பணியில் சேராமல் நேராக புழல் சிறைக்கு சென்றேன்.

“அவர் போய் ரெண்டு வாரமாச்சே சார்” சொல்லிவிட்டு அந்தப் போலிஸ் கான்ஸ்டபிள் தொடர்ந்து லெட்ஜரில் எழுதிக் கொண்டிருந்தார்.

“எங்கப் போனாரு?” நான் கேட்க, அந்த போலீஸ்காரர் என்னை ஆச்சர்யமாக நிமிர்ந்துப் பார்த்தார்.

“லைஃப் கன்விக்ட் குமாரனந்தத்த தான சார் கேட்குறீங்க?”

நான் ஆம் என்று தலை அசைத்தேன்.

“அவர் இறந்துட்டாரே சார். ரெண்டு வாரம் ஆச்சு”

எனக்கு தலை சுற்றியது. எங்களின் நட்பு இப்படியா முடியவேண்டும்? அவரிடம் என்ன ஆனது என்று கேட்டேன்.

“அவரு ஹார்ட் பேசன்ட் சார்… நீங்க யாரு” என்றார். என்னால் பதில் பேச முடியவில்லை. அருகே இருந்த பெஞ்சில் அமர்ந்தேன். அது சிறையினுள் இருக்கும் கைதிகளை பார்க்க மனு கொடுக்கும் அலுவலகம்.

“சார் நீங்க பேங்க் மேனஜரா?

குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தேன். அங்கே நின்றவர் தன்னை சிறைக் கண்காணிப்பாளர் என்று அறிமுகம் செய்துக் கொண்டார். நான் ‘ஆம்’ என்றேன். இவர்களுக்கு எப்படி என்னைப் பற்றி தெரியும், குமாரனந்தம் சொல்லி இருப்பாரா என்று யோசிக்கும் போதே அந்த கண்காணிப்பாளரே தொடர்ந்தார்.

“லைஃப் கன்விக்ட்ட  ரெண்டு வாரத்துக்கு ஒரு முறை தான் பாக்க முடியும். அதுவும் வியாழக் கிழமை மட்டும் தான். குமாரனந்தம், லாஸ்ட் ரெண்டு வியாழக் கிழமை கேட்டாரு. என்ன பாக்க யாராவது மனு போட்டிருக்காங்களானு. இத்தன வருஷம் இல்லாம யாரு வருவானு கேட்டேன். என் ஃப்ரெண்ட் ஒருத்தர், பேங்க் மேனஜர்னு சொன்னாரு”

கான்ஸ்டபிள் அவர் அருகில் வந்து, “குமாரானந்தம் நிறைய லெட்டர் அனுப்புவாரே. அது இவருக்குதான் போல” என்றார்.

“ஓ!” என்றவாறே என்னை நோக்கிய கண்காணிப்பாளர், “கைதிங்க அனுப்புற லெட்டெர்ஸ்லாம் படிச்சிட்டுதான் அனுப்புவோம். அவரு நன்நடத்தைக் கைதிங்கிறதுனால படிக்காமயே போஸ்ட் பண்ணிட்டோம். ரொம்ப நல்ல மனுஷன்…”

அவர் பேசிய எதுவும் மேற்கொண்டு என் மனதில் பதியவில்லை. குமாரனந்தம் என்னைப் பார்க்க ஆசைப் பட்டிருக்கிறார். நான் அவரை வந்து பார்க்க வேண்டுமென்று ஆசைப் பட்டிருக்கிறார். எனக்கேன் இது புரியாமல் போனது? முதல் கடிதத்திலேயே அவரை நண்பராய் உணர்ந்த என்னால் அவர் மனதில் இருந்ததை ஏன் உணரமுடியவில்லை? அவருடன் தொலைபேசியில் உரையாட வேண்டும் என்றுக் கூட எனக்கு ஏன் தோன்றவில்லை? அவர் குரலைக் கூட கேட்கவில்லையே! தான் ஒரு ஹார்ட் பேசன்ட் என்று அவர் ஏன் சொல்லவில்லை?

விடுமுறை நாட்களில் நான் எப்படி நேரத்தை கழிப்பேன், வார நாட்களில் விடுப்பு எடுக்க முடியுமா? என்று குமாரனந்தம் என்னிடம் ஒருமுறை கேட்டது நினைவிருக்கிறது. அந்த கேள்வியின் உள்ளர்த்தத்தை என்னால் ஏன் புரிந்துக் கொள்ள முடியவில்லை? சிறைக்கு வந்து என்னைப் பார் என்று சொன்னால் நான் கோபித்துக் கொள்வேன் என்று எண்ணினாரோ என்னவோ, என்னைப் பார்க்க விரும்புவதை அப்படி சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.

எனக்கு அழுகை வந்தது. ஆனால் அங்கே அழ முடியாது.

“அவர் பொண்ணுக்கு இன்பார்ம் பண்ணீட்டீங்களா?” தளுதளுத்த குரலில் கேட்டேன்.

“இன்பார்ம் பண்றதா? அவரு ஏர்வாடா ஜெயில்ல இருந்தவரு சார். தான் ஒரு இதய நோயாளி, தமிழ்நாட்லதான் தன் உயிர் பிரியணும்னு மனு போட்டு ட்ரான்ஸ்பர் ஆகி வந்தவரு. பழைய ரெகார்ட்ஸ்ல இருக்குற அவரு புனே அட்ரஸ காண்டக்ட் பண்ணுனோம். அங்க அவரு பொண்ணு இல்ல. அதான் நாங்களே அடக்கம் பண்ணிட்டோம். அவரு இங்க வந்து அஞ்சு வருஷம் ஆச்சு. இதுவரை யாருமே வந்து பாத்ததில்லை. புனே ஜெயில்லயும் அவர யாரும் பாத்ததுக்கு ரெகார்ட்ஸ் இல்ல…”

அதன் பின் அவர்களிடம் என்ன பேசுவது என்று தெரியவில்லை. வீட்டிற்கு சென்று அழ வேண்டும். நான் அவர்களிடம் விடைப்பெற்றுக் கொள்ள யத்தனித்தேன்.  அந்தக் கண்காணிப்பாளர் பேசினார்.

“இங்க ப்ராபர்டி அக்கௌன்ட்ல தான் கைதிங்க சம்பாதிக்கிற காச சேத்து வைப்போம். அவர் பேங்க்ல சேக்கணும்னு ஆசைப்பட்டாரு, அவர் அக்கவுண்ட்ல இருக்குற அமௌன்ட்ட நாமினிக்கு கொடுத்துடுவீங்க இல்ல?”

நாமினி தேடி வந்தால் தான் அவருக்கு சேரவேண்டிய பணத்தை தருவோமே ஒழிய நாங்களாக தேடி சென்று பணத்தை தருவது வழக்கமில்லை. யாரும் தேடிவரவில்லையெனில் அந்த காசு வங்கியின் சஸ்பன்ஸ் கணக்கில் சேர்ந்துவிடும். அதாவது அந்த காசு யாருக்கும் இல்லை என்று அர்த்தம். குமாரனந்தம் கிட்டத்தட்ட இரண்டு லட்ச ரூபாய் சேமித்திருந்தார். அது மாலினிக்கு போய் சேர வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார். சிறையிலேயே சேமித்தால் அது சாத்தியமில்லை என்று அவர் கருதி இருக்கலாம். தாம்வெகுநாட்கள் இவ்வுலகில்  இருக்கமாட்டோம் என்றும் அவருக்குத் தெரிந்திருக்கிறது. அதனால் தான் வங்கியில் கணக்கைத் தொடங்கி நாமினேஷனில் மாலினியை சேர்த்திருக்கிறார். அவர் புத்திசாலிதான்.

சிறை அதிகாரியிடம் என்ன சொல்வது? “சரி சார்” என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன். அதற்குள் ‘கொஞ்சம் இருங்க’ என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றவர், கையில் ஒரு பிளாஸ்டிக் பையுடன் வந்தார். அதை என்னிடம் கொடுத்த அவர்,

“ஆக்ச்சுவலி இத எங்க கஸ்டடில தான் வச்சுக்கணும். பட் நீங்க அவர் டாட்டருக்கு  அமௌன்ட் செட்டில் பண்ணும்போது இதையும் குடுத்துருங்க. இதான் அவரோட மிச்ச சொத்து”

சொல்லிவிட்டு, இதற்கு மேல் எங்களுக்கும் குமாரனந்தத்திற்கும் சம்மந்தமில்லை என்பது போல அந்த அதிகாரி உள்ளே போய் விட்டார். எல்லோரும் அவரவர் வேலையை பார்க்கத் தொடங்கிவிட்டனர். அந்த கவரை பிரித்தேன். அதனுள் நான் எழுதிய கடிதங்கள் இருந்தன. திரும்பி என்னிடமே வந்துவிட்டதே என்று எண்ணும் போதுதான் இன்னும் பல கடிதங்கள் அதில் இருப்பதை கண்டேன். எல்லாம் குமாரனந்தம் தன் மகளுக்கு எழுதியது.

“மாலுமா

உனக்கு என் மேல் கோபம் இருக்கும்னு எனக்குத் தெரியும். அது குறையணும்னு நான் எதிர்ப்பார்க்கல. உன்னை தொந்தரவு செய்யவும் நான் விரும்பல. ஆனா…”

நிறைய கடிதங்கள் எழுதி இருந்தார். தேதிவாரியாக எல்லாம் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. கடைசியாக இருந்த கடிதத்தை பார்த்தேன்.

“மாலுமா, எனக்கு புதுசா ஒரு நண்பர் கிடைச்சிருக்கார். வங்கி மேலாளர். அவரை நான் பார்த்ததேயில்லை.  ஆனால் அவர் மீது ஒரு மரியாதை கலந்த பாசம் உருவாகி போச்சு. உன் அண்ணன் இருந்திருந்தால் அவர் வயசு தான் இருக்கும். உனக்கு அவரை அறிமுகம் செய்து வைக்கனும்னு  ஆசையா இருக்கிறது…”

எல்லாக் கடிதங்களும் மாலுமா என்றுத் தொடங்கி, ‘அன்புடன் அப்பா’ என்று முடிந்தது. போஸ்ட் செய்யப்படாத அந்த கடிதங்கள் எதிலும் முகவரி இல்லை. எனக்கு எழுதிய கடிதத்திலும் அவர் அன்புடன் அப்பா என்றே எழுதி இருக்கலாம். எனக்கு மட்டும் யார் இருக்கிறார்கள்? அதுவரை அவர் என்ன குற்றம் செய்திருப்பார் என்று நான் எண்ணியது உண்மைதான். ஆனால் அவருடைய கடந்த காலத்தை தெரிந்துக் கொள்ள கூடாது என்று முடிவு செய்தேன். அதை தெரிந்துக் கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. அவர் நிகழ்காலத்தில் எனக்கொரு நல்ல நண்பராய் இருந்திருக்கிறார். வாழ்க்கையை புதிதாக பார்க்க கற்று தந்திருக்கிறார். அதுவே போதும்.

ஆட்டோ பிடித்து வில்லிவாக்கம் ரயில் நிலையம் வந்தேன். ரயில் தொலைவில் வந்துக் கொண்டிருந்தது.

‘ரயில் உலகில் பயணிப்பதற்காக மட்டுமன்று. உலகை விட்டுப் பயணிப்பதற்காகவும்’

ஒரு பிரபலமடையாத கவிதை புத்தகத்தில் படித்த இந்த இரண்டு வரிகளும் காரணமின்றி நினைவுக்கு வந்தன. என்னை அறியாமல் பிளாட்பாரக் கோட்டினைத் தாண்டி தண்டவாளம் அருகே சென்றேன். ரயில் மிக அருகில் வந்துவிட்டது. குமாரனந்தத்தை சொர்க்கத்தில் சென்று பார்க்கலாம் என்று எண்ணிய அந்த தருணம் ஒரு கை என்னைப் பிடித்து பின்னே இழுத்தது.

“லூசாயா நீ. ட்ரைன் வரது தெர்ல” என்று கத்திவிட்டு அந்த மனிதர் வேகமாக நகர்ந்தார். அப்போதுதான் உரைத்தது. நான் போய்விட்டால், குமாரனந்தம் மாலினிக்காக சேர்த்து வைத்த பணத்தையும், அவளுக்காக எழுதிய கடிதங்களையும் அவளிடம் யார் கொடுப்பார்கள்? வேலையில் இருந்தால் மாலினியை தேடமுடியாது.வேலை இனி முக்கியமில்லை. என் நண்பனின் மகளை தேடவேண்டும்.

 

சுழற்சி- சிறுகதை

இன்னும் ஆறுமாதங்கள் தான் வீட்டில் அவகாசம் கொடுத்திருக்கிறார்கள். அதற்குள் எதுவும் நடக்காமல் போனால், அவன் மீண்டும் ஏதாவது வேலைக்கு செல்ல வேண்டும். வருங்காலம் அப்போது தான் பிரகாசமாக இருக்கும் என்றுஅப்பா சொல்கிறார். அவர் சொல்வதும் உண்மைதான் என்று   எண்ணினான்.  அவன் வேலையைவிட்டு வந்து ஒன்றரை வருடங்கள் ஒடிவிட்டது. இன்னும் சினிமாவில் எதையும் சாதித்ததாக ஞாபகமில்லை. ஒரு படத்தில் ஒரே ஒரு நாள் மட்டும் உதவி இயக்குனராக வேலை செய்துவிட்டு திரும்பிவிட்டான். அதுவும் பீல்ட் க்ளியர் என்று கத்துவது மட்டுமே அவன் வேலை. இரண்டாவது நாள் படப்பிடிப்பு ரத்தாகி இருந்தது. ஏதோ பணப் பிரச்சனை. அந்த படத்தின் நாயகன் தான் தயாரிப்பாளர். வீட்டை அடகு வைத்து தயாரித்தார். அதன் பின் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியபோது போக தோன்றவில்லை. படம் இன்னும் முடிந்த பாடில்லை. நல்லவேளை போகவில்லை என்றே எண்ணினான். சுயநலம் என்று சொல்லலாம். சினிமாவில் எல்லோரும் அப்படிதான் இருக்கிறார்கள். எனக்கு இருக்கிற பிரச்சனையில் என் வருங்காலத்தை மட்டுமே யோசிக்க முடிகிறது. அந்த படம் என்னை எங்கேயும் கொண்டு செல்லாது எந்த வாய்ப்பையும் ஏற்ப்படுத்தி தராது என்பதால் அந்த படத்தில் பணிபுரியவில்லை என்று நண்பர்களிடம் சொல்லுவான்.

“அசிஸ்டன்டா வேலை பாத்தாதான் சினிமா கத்துக்க முடியும், அத விட்டுட்டு எழுதுறேனு வீட்டுக்குள்ளயே உக்காந்துகிட்டு இருந்தா…” அப்பா இப்படி பல முறை அலட்டிக் கொள்கிறார்.

ஒன்றரை வருடத்திற்கு முன்பு வேலையை விட்டுவிட்டு வீட்டுக்கு வரும்போது உண்மையில் உதவி இயக்குனராகலாம் என்ற எண்ணத்தில் தான்  வந்தான். தன்னுடைய ஆஸ்தான இயக்குனரை வலசரவாகத்திற்கு சென்று  சந்தித்தான்.

“சினிமாவ சங்கரநாரயணன்ட்டகூட கத்துக்கலாம், அவர்தான் அவ்ளோ படம் எடுக்குறார். என்கிட்ட ஏன் வர?”

“புடிக்கும் சார்”

“ஹான்?”

“உங்கள புடிக்கும் சார்”

அவனுடைய சிறுகதைகளை புரட்டிப்பார்த்துவிட்டு ஆங்கிலத்தில் சொன்னார், “திஸ் பீபிள் வில் exploit you. better you be a writer.

“இலக்கியம்தான் முக்கியம்.போ இன்னும் நிறைய எழுது”

எதுவும் பேசாமல் தலையசைத்துவிட்டு வந்து விட்டான். அதன் பின் சில காலம் குழப்பத்தில் காலத்தை கடத்திவிட்டு, ஒரு நாள் உதவி இயக்குனர் தந்த அனுபவத்தினால் யாரிடமும் உதவி இயக்குனராக கூடாது என்று முடிவெடுத்து, ஒரிரு குறும்படங்கள் எடுத்துவிட்டு கொஞ்ச காலம் எழுத்தாளராகவே இருந்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து எப்படியோ ஒன்றரை வருடங்களை கடத்தி விட்டான் ஏதேதோ கிறுக்கல்கள். ஒரு  புண்ணியவான் விருது கொடுத்தார். “அத வச்சு நாக்க வலிப்பியா?” இதுவும் அப்பா தான்.

எழுதிய படங்கள் எதுவும் தொடங்கப்படவேயில்லை. தயாரிப்பாளருக்கு கதை பிடித்திருந்தால், ஹீரோ கதையில் மாற்றம் சொல்கிறார். ப்ரயத்தனபப்ட்டு எழுதிய கதை ஒன்று,  ஹீரோவிற்கு பிடித்துப் போக, தயாரிப்பாளரும் ஒகே சொல்ல, தயாரிப்பாளரின் சகோதரி கதைக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.

“ஹீரோயின இன்னும் கவர்ச்சியா காட்டா வேணாமா?” அலட்டிக் கொள்ளாமல்  கேட்டார் அந்த பெண்மனி.

“இது அப்டி பட்ட கேரக்டர் இல்ல மேடம். மோர் ஸ்ரைட்பார்வேட் கேரக்டர். பாலசந்தர் சார் படங்க….”

“Show me the cleaves man. அத விட்டுட்டு. நான் டி.வில ப்ரோமோட் பண்ணனும்னா ஏதாவது இருக்கனுமே”, அவர்களின் முகபாவம் எப்படியோ போனது.

“ஹீரோயின் இண்ட்ரோ சாங் வைங்க…”

சிறிது மொளனம்.  அந்த வியாழக் கிழமை இரவு ஏமாற்றத்தோடு முடிந்தது. ஒரு நாள் அவகாசம் எடுத்துக் கொண்டு கதையை மாற்றிவிட்டு வர சொன்னார்கள். ஒரு நாளில் செய்ய முடிந்த மாற்றங்களை மட்டும் செய்துக் கொண்டு மீண்டும் சனிக்கிழமை எதிர்ப்பார்ப்புடன் சென்றான். அவர்கள் அவன் செய்த மாற்றங்களை கேட்கவேயில்லை.

“நேத்து ரிலீஸ் ஆன ‘கொள்ளையடிப்போம்’ பாத்தீங்களா?”

அவர்கள் என்ன சொல்லவருகிறார்கள் என்பதை புரிந்துகொண்டான்.  அதுமாதிரி ஒரு காமெடி மூவி இருந்தா சொல்லுங்க.

நெஞ்சு பொறுக்குதில்லையே என்று அவனுக்குள் இருந்த அவர் வெளியே எட்டி பார்க்க பார்த்தார். அவரை உள்ளே தள்ளிவிட்டு,

“ஸ்யூர் மேடம், இப்ப அதுதானே ட்ரெண்டு” என்று சொல்லிவிட்டு வந்தான்.

அம்மா சந்தோசமாக வரவேற்றாள். இவன் எரிந்து விழுந்தான் அவளுக்கு புரிந்துவிட்டதால், காபி எடுத்துவருவதாக சொல்ல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள். “முன்னாடியே தெரியுமே…” என்று அப்பா சொல்வார் என்று எதிர்பார்த்தான். அவர், “இது இல்லனா இன்னொரு படம்…” என்று சொல்லிவிட்டு வெளியே நகர்ந்தார். அப்பாவை புரிந்து கொள்ள முடிவில்லை. உண்மையில்  அவனையே அவனால் புரிந்துக் கொள்ள முடியவில்லை.  எதற்காக தான் அவ்வளவு வேகமாக வேலையை விட வேண்டும்.  வேலைக்கு சேர்ந்த அன்றே இரண்டு வருடங்களில் அந்த வேலையை விட்டுவிட வேண்டும் என்று முடிவுசெய்து மொபைலில் கவுண்ட் டவுன் வைத்துக் கொண்டு திரிந்ததை எண்ணினால் கொஞ்சம் சிரிப்பும் கொஞ்சம் கண்ணீரும் வருகிறது. எதற்காக இவ்வளவு இழக்க வேண்டும். எதற்காக நிரஞ்சனி  தன்னை காதலிப்பதாக சொல்லிய போது மறுக்க வேண்டும்!

ஆம். இவ்வளவு பிரச்சனைக்கு மத்தியில்தான் நிரஞ்சனி அவனை காதலிப்பதாக சொன்னாள். அவன் தான் இருந்த சூழலில் காதல் எல்லாம் ஆடம்பரம் என்று கருதினான். ஆனாலும் மனம் தடுமாறியது.  சும்மா இருந்தால் அப்படிதான் என்று நினைத்து ஒரு நாவல் எழுத முடிவு செய்தான்.

இலக்கியம் என்று சொன்னால் துரத்தி அடிப்பார்கள் என்பதால் ஒரு க்ரைம் நாவல் எழுதினான். வழக்கம் போல் அவன் மெயில் அனுப்பிய எந்த பதிப்பாளரும் மெயிலைக் கண்டுக் கொள்ளவில்லை.

‘எனக்கு எந்த பதிப்பாளரயும் தெரியாது. நான் ஒரு தனியன். யாரவது பதிப்பாளருக்கோ அல்லது பெரிய எழுத்தாளருக்கோ சொம்படிச்சாதான் புக் போட முடியும்னா அது தேவையேயில்ல” இப்படியும் சில வீர வசனங்கள் பேசி தன்னை ஆசுவாசப் படுத்திக் கொள்வான்.

நாவலும் வாழ்க்கையை எங்கும் நகர்த்தவில்லை. வெற்றிகரமாக வருமானமில்லமால் இரண்டு வருடங்கள் முடிந்தது.

“ஏதாவது வேலைக்கு போயிட்டே எழுது” அதுவரை அதிகம் பேசாத அம்மா சொன்னாள்.  அப்பா அம்மா மூலமாக பேசத் தொடங்கிவிட்டார் என்று புரிந்துக் கொண்டான்.

“உன்ன வச்சு தான் உன் ஆயும் அப்பனும் அடிச்சுகிதுங்க” தாத்தா சொன்னார். “ஏதாவது கவர்மெண்ட் வேலைக்கு போய்டே எழுதுடா. யாரையும் கையேந்தி நிக்குற நிலம வர கூடாதுடா தம்பி”

***

மாம்பலத்தில் ஒரு இன்ஸ்டிட்யுட்டில் சேர்ந்தான். வங்கி வேலைக்காக பயிற்சி கொடுக்குமிடம் அது. காலை ஒன்பது மணி முதல் ஆறரை மணி வரை படிக்க வேண்டியிருந்தது.காலை எட்டறை மணிக்கு ஒரு ஆனியன் ஊத்தாப்பம்.  பின் படிப்பு. மதியம் இருபது ரூபாய் கீரை சோறு, அல்லது பதினெட்டு ரூபாய்க்கு மூன்று சப்பாத்தி. மீண்டும் குவான்டிடேட்டிவ் ஆப்டிட்யுட், ரீசனிங். தாளித்த மோர், க்ளோஸ் டெஸ்ட், பேங்கிங் அவார்னெஸ், தலை வலி. இஞ்சி டீ. புதுமைப்பித்தன் நிகும்பலை.

“எந்த இயர் பாஸ்ட் அவுட் ப்ரோ” ஒருவன் கேட்டான். இவன் பதில் அவனுக்கு தேவையில்லை என்பதுபோல் அவனே தொடர்ந்து பேசினான்,

“ஆக்சுவலி நான் nano technology field bro. இந்தியால அதுக்கு சரியான ஸ்கோப் இல்லல. அதான். பேங்கிங் ட்ரை பண்றேன். நீங்க ப்ரோ?” கேட்டுவிட்டு நகர்ந்தான்.  ஏனெனில் இவனுடைய பதில் அவனுக்கு தேவையில்லை. இன்னொரு பெண்ணிடம் போய் பேசினான், “ஆக்சுவலி நான் nano technology…”

“நான் சிவில் செர்விஸ் ப்ரிப்பர் பண்றேன்,  பேங்கிங் இஸ் பார் பேக் அப்”  இப்படி அந்த பெண் பதிலளித்தாள்.

இவன் எல்லோரையும் பார்த்துக் கொண்டே இருந்தான். அங்கே எல்லோரிடமும் மற்றவர்களைப் பற்றிய முன்முடிவு இருந்தது. ஒரு வகையான சுயநலம் இருந்தது. இன்னொருவர் தன்னை எந்தவகையிலும் முந்திவிட கூடாது என்ற எண்ணம் இருந்தது. எல்லாவற்றிலும் போட்டி போடும் சமுகத்தில் போட்டி தேர்வுகள் எழுதாதவர்கள் பாக்கியவான்கள் என்று நினைத்துக் கொண்டான்.

“இதான் பர்ஸ்ட் ஜாப், காலேஜ் முடிச்சு மூனுவருசம் ஆச்சு” ஒருவன் தயங்கி தயங்கி சொன்னான். அதை சொல்ல அவன் ஏன் அப்படி தயங்க வேண்டும் என்று எண்ணினான்.

‘இங்கே ஒரு மனிதனால் தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்க முடிவதில்லை. ஒருவன் இன்னதுதான் படிக்கவேண்டும் இந்த வேலைக்குதான் போக வேண்டும் என்பதை சமுதாயமே முடிவு செய்கிறது. சமுதாயத்தின் பார்வையையும் மதிப்பீடையும் மனதில்கொண்டே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வளர்க்கிறார்கள். சமுதாயத்தின் அளவுகோளிலிருந்து மாறுபட்ட எந்த வேலையையும் ஒருவனால் செய்யமுடிவதில்லை. சமுதாயத்தின் அங்கிகாரத்தை பொறுட்படுத்தாமல் ஒருவன் இயங்க முயன்றால் அவனுக்கு பைத்தியக்காரன் முத்திரையை குத்த சமுதாயம் தயங்குவதில்லை. படித்த படிப்பிற்கு வேலை கிடைக்காமல் போனலும், தனக்கான வாய்ப்பை ஒருவனால் உருவாக்கிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை இந்த கல்விமுறை அளிப்பதில்லை. எல்லோரும் ஏன் வேகமாக ஒடவேண்டும்.  ஒருவன் தவழ்ந்து செல்வது ஏன் குற்றமாக பார்க்கப் படுகிறது. டார்வினின் கோட்பாடு ’Survival of fittest’ தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டுவிட்டது. சமுதாயம், மிகப் பெரிய சர்வாதிகாரி. ஹிட்லரின் வதை முகாம்களில், ஒவ்வொரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கைதிகள் ஒடிக்கொண்டே இருக்கவேண்டும். ஒட பலமில்லாதவர்கள் பனியில் உறைந்து செத்துவிடுவார்கள். சமுதாயம்தான் உண்மையான வதை முகாம்.’ இவ்வளவு எண்ணங்களும் வஞ்சனையில்லாமல் அவன் நேரத்தை திருடிக்கொண்டாலும், அவன் படிப்பில் கவனமாவே இருந்தான்.

கிட்டதட்ட ஒரு மாதம் அங்கே படித்தான். அங்கே படித்த மேதாவிகள் அளவிற்கு மதிப்பெண் வாங்காவிட்டாலும் அவனும் எழுத்து தேர்வில் தேர்ச்சிப் பெற்று நேர்முகதேர்விற்கு சென்றான். பேனலில் ஐந்து நபர்கள் அமர்ந்திருந்தார்கள். நாங்கு பேர் கேள்வி கேட்க, ஒரு பெண்மனி அமர்ந்து இவன் பதில் சொல்லும் தோரனையை மட்டும் கவணித்துக் கொண்டிருந்தார்.

“இன்ஜினீயர், ரைட்டர், பேங்கர். தி டாட்ஸ் ஆர் நாட் கனெக்டிங். ரைட்டிங்க விட்டுவிட்டு ஏன் வறீங்க?” இதுதான் அவன் தன்னை அறிமுகம் செய்துக்கொண்டபின் அவர்கள் கேட்ட முதல் கேள்வி.

“ரைட்டிங்ல வருமானம் வர்ல சார்”

“இன்ஜினீயர் வேலையே விடும் போதே தெரியாதா, ரைட்டிங்ல வருமானம் வராதுனு?”

“தெரியும். ஆன ஒரு முறையாவது ட்ரை பண்ணனும்னு ஆச பட்டேன். இல்லனா ரைட்டிங் ட்ரை பண்ணியிருக்கலாமேனு ஐம்பது வயசுல ரெக்ரட் பண்ணிருப்பேன்” தைரியாமாக பேசினான்.

“பேங்கிங்  இஸ் நாட் ஈசி. இந்த வேலையிலேயெ உனக்கு பாதி நேரம் போய்டும். உனக்கு எழுதலாம் டைம் இருக்காது, ரைட்டிங்க விட்றுவியா?”

“மாட்டேன். ஹாலிடேஸ்ல எழுதுவேன் சார்”

அவர் இவனையே உற்றுப் பார்த்தார். ஆல் தி பெஸ்ட் சொன்னார்.

“இனிமே எல்லாம் ஜெயம், உனக்கு வேலை கிடைக்கும்” தாத்தா சொன்னார்.

ஒருமாதத்திற்க்கு பின் தேர்வு முடிவு வெளியானது. ஒரு பதட்டத்துடன் முடிவு வெளியாகும் தளத்தில் தன் தேர்வு எண்ணை தட்டினான். “Congratulations, You have been Provisionally Selected” என்று வந்தது.

வீட்டில் எல்லோரும் சந்தோசப்பட்டார்கள். “வெக்காளி அம்மனுக்கு மணிவாங்கி கட்டனும்” அம்மா சொன்னாள். “அலையன்ஸ் பாக்க வேண்டியதுதான்” அப்பா சொன்னார்.

அப்பாவும் அம்மாவும் சந்தோசமக இருப்பதை பார்க்கும்போது அவனுக்கு சந்தோசமாக இருந்தது. ஆனாலும், அதிகபட்சம் மூன்று வருடங்களில் வேலையை விட்டுவிட்டு மீண்டும் முழு நேர எழுத்தாளராகிவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டான்.

புகைப்படக்கலைஞன்- சிறுகதை

மெஹதிபட்டனம் பேருந்து நிலையம் சற்று விசித்திரமாக தான் இருந்தது. ஒரு பேருந்து நிலையம் போலும் இல்லாமல் மைதானம் போலும் இல்லாமல், ஒரு நெடுஞ்சாலை தாபாக் கடை போல் இருந்த அந்த இடத்தில், அவனை கவரும் வண்ணம் எதுவும் இல்லாததால், கேமராவை பைக்குள் வைத்துவிட்டு, கோல்கொண்டா செல்லும் பேருந்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.

ஊர்ஊராக சென்று புகைப்படம் எடுக்க வேண்டும் என்று ஆசைதான். வாரம் ஆறுநாட்கள் வேலைக்குச் செல்ல வேண்டும். ஒரு பொதுத்துறை வங்கியில் துணை மேலாளர் வேலை. திறமையற்ற மேலாளர்களை மூன்று மொழி கெட்ட வார்த்தைகளில் திட்ட வேண்டும் என்று தோன்றினாலும், அதை செய்யாமல் வாயை மூடிக் கொண்டு வேலைப்பார்த்துவிட்டு வார விடுமுறையை எண்ணிக் காத்துக்கொண்டு வாழ்க்கையை கிடத்திக்கொண்டிருந்தான். வார கடைசியில் தூங்குவதற்கே நேரம் போதாது. இதில் எங்கிருந்து புகைப்படம் எடுப்பது!

எங்கேயோ ஒரு நல்லவேலையை விட்டுவிட்டு, மிகப் பெரிய புகைப்படக் கலைஞனாக உருவெடுக்கும் பொருட்டு ஊர் ஊராக சுற்றிப் புகைப்படங்கள் எடுத்தும் அவன் எதிர்பார்த்த கோட்டை தொட முடியாமல் போனதாலும், வங்கியில் இருந்த ஆறு இலக்க சேமிப்பு நான்கு இலக்க தொகையாக மாறிப் போனாதாலும், மீண்டும் ஒரு வேலையில் வந்து அமர்ந்துக் கொண்டான். ஒருகாலத்தில் லட்சியம் கனவு என்று பேசிக் கொண்டிருந்த தன்னை புதிய இந்த வங்கி வேலை கொஞ்சம் கொஞ்சமாக தின்றுக் கொண்டிருப்பதை அவன் உணராமல் இல்லை. இதுவரை அவனுடைய எந்தப் புகைப்படத்திற்கும் பெரிய அங்கீகாரம் எதுவும் கிடைத்ததில்லை. ஒரு பிரபல பத்திரிக்கை நடத்திய புகைப்பட போட்டிக்கு தான் எடுத்த புகைப்படத்தை அனுப்பியிருந்தான். ஆனால் வேறொரு சராசரி புகைப்படம் தேர்வாகியிருந்தது. அந்தப் புகைப்படத்தை எடுத்தவர் அந்த பத்திரிக்கை  எடிட்டரின் தூரத்து உறவினரின் நண்பரின் மகனாம். இப்படி லட்சியத்தை விட யதார்த்தம் பெரியது என்பதை புரிந்துக் கொண்டதால், அவன் வங்கி வேலையை இறுகப்பிடித்துக் கொண்டான். வேலையில் இருந்துக் கொண்டே புகைப்படத் துறையில் சாதிக்க முடியும் என்று அவன் தனக்குத்தானே சொல்லிக்கொண்டாலும், ஒரு புகைப்படம் கூட எடுக்காமல் வங்கி வேலையில் ஏழுமாத காலம் ஓடிவிட்டது என்பது மனதை உறுத்தியது.

அப்போதுதான் செகுந்திராபாத்தில் வசிக்கும் நண்பன் சக்ரியின் திருமண பத்திரிக்கை இமெயிலில் வந்து சேர்ந்தது. திருமணத்தில் கேண்டிட் புகைப்படங்கள் எடுக்க முடியுமா என்று நண்பன் கேட்டிருந்தான். தன் கேமராவை தூசிதட்ட நேரம் வந்துவிட்டதாக எண்ணியவன் உடனே சரி என்று சொல்லிவிட்டான்.

சக்ரியின் நண்பன் க்ரிஷ் செகுந்திராபாத் ரயில் நிலையத்திற்கு வந்து இவனை மண்டபத்திற்கு அழைத்து சென்றான். சக்ரியுடையது பெரிய குடும்பம். அதனால் நிறைய புகைப்படங்கள் எடுக்க வேண்டியிருந்தது.

“கப்புள்ஸ மட்டும்தான் போட்டோ எடுப்பேன். ஐ ஆம் ஆர்ட் ஃபோட்டோகிராபர். எல்லாரையும் எடுக்க சாதாரண ஃபோட்டோகிராபர் இல்ல” இப்படியெல்லாம் ஒருகாலத்தில் பேசியிருக்கிறான். இப்போது எந்த ஈகோவுமின்றி எல்லோரையும் படம் பிடித்தான். விடிந்து திருமணம் முடிந்ததும், கிரிஷ் இவனை பேருந்து நிலையம் வரை அழைத்து வந்தான். க்ரிஷ் பேசிக்கொண்டே வந்தான். தான் ஒரு தெலுங்கு சினிமா இயக்க முயற்சித்ததாகவும் அது கடைசி நேரத்தில் சாத்தியப் படாமல் போனதாகவும், இப்போது எழுத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகவும் அவன் சொன்னான். ஒரு கட்டத்தில் அவன் சொன்னது எதுவுமே இவன் மனதில் பதியவில்லை. க்ரிஷை பத்தி யோசிக்க தொடங்கிவிட்டான்.

‘க்ரிஷ் என்னைவிட ஐந்து வயது பெரியவன். வேலையை விட்டுவிட்டு, எழுத்தில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறான். பணத்திற்காக அவ்வப்போது ஒரு இன்ஸ்டிட்யூட்டில் ஆங்கில வகுப்பு எடுக்கிறான். ஆனால் பயணம் செய்வதும் எழுதுவதை மட்டுமே மூச்சாக கொண்டிருக்கிறான். ஆனால் நான் பாதியிலேயே பயந்து பின்வாங்கி விட்டேன்.’

அவனுக்கு அசிங்கமாக இருந்தது, தன்னைப்பற்றி நினைக்கவே. எல்லாம் காரணத்திற்காகதான் என்று சொல்லி தன் மனதை ஆசுவாசப் படுத்திக் கொள்ள முயன்றான். ஆனால் முடியவில்லை.

‘ஏன் பணம் மட்டுமே முக்கியமாக படுகிறது! அது வேண்டாமென்று முடிவு செய்துவிட்டு வாழ்ந்துவிட முடியாதா?

‘பணத்தை தேடிப் போகும்போது ஏன் கனவுகளை புதைத்துவிட வேண்டியிருக்கிறது. ஒருவேளை வாழ்தல் என்று ஒன்று கிடையவே கிடையாதா? கனவுகள் லட்சியங்கள் என்பதெல்லாம் யதார்த்தம் எனும் பூதத்திடமிருந்து தப்பிப்பதற்காக நமக்கு நாமே கற்பனை செய்துக் கொள்ளும் விஷயங்களோ? பிறத்தல் இருத்தல் இறத்தல் என்ற விபத்தில், தேடல் என்பது சாத்தியப்படாத அல்லது தேவையற்ற ஒன்றோ?

“சோ ருபையா தேதோ. ஃபோட்டோ லேலோ” ஒரு குரல் இவன் சிந்தனையை கலைத்தது. நிமிர்ந்து பார்த்தான். இரண்டு திருநங்கைகள் இவன் தோல் பையில் மாட்டியிருந்த கேமரா பையை பாத்தவாறே நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் திருநங்கைகள் அல்ல, வேஷதாரி ஆண்கள் என்று புரிந்து கொண்டான். பத்துரூபாயை எடுத்து நீட்டியதும், அவர்கள் வாங்கிக்கொண்டு நகர்ந்தனர். ஒருவன் மட்டும் திரும்பி, “நூறு ரூபாய் குடுத்துட்டு ஃபோட்டோ எடுத்துக்கோ, ஃபாரினர்னா ஆயிரம் ரூபாய் ஆவும்” என்றான்.

ஸ்ட்ரீட் போட்டோக்ராபி. தெருவில் இருக்கும் யாரை வேண்டுமானாலும் எடுக்கலாம். யார் கேட்ப்பார்கள். சில நேரங்களில் இப்படி விளிம்பு நிலை மனிதர்களிடம் காசை கொடுத்து, அவர்கள் சோகமாக இருப்பது போல் புகைப்படம் எடுப்பார்கள். இணையத்தில் பதிவேற்றம் செய்தால் வேகமாக பிரபலமாகிவிடலாம். அவனும் ஒரு ஸ்ட்ரீட் போட்டோக்ராபர் தான். ஆனால் அப்படிபட்ட நேர்மையற்ற சூடோ புகைப்படக்காரர்களை எண்ணினால் அவனுக்கு அருவருப்பாக இருக்கும். இவன் கேமரா பழுதாகிவிட்டதாக அந்த வேஷதாரிகளிடம் சொல்லிவிட்டு திரும்பிக்கொண்டான். அவர்கள் முகம் சுழித்துவிட்டு நகர்ந்தனர். கோல்கொண்டா பேருந்து காலியாக வந்தது. வந்த வேகத்தில் எங்கெங்கிருந்தோ வந்த பலரும் மிகவும் வேகமாக அதில் ஏறிக் கொண்டனர். இவனுக்கு அமர்வதற்கு இடம் கிடைக்கவில்லை. நின்றுகொண்டான். பாதையில் வளைவுகள் நிறைய இருந்ததால் பேருந்து மிக மெதுவாக நகர்ந்தது. சிந்தனை மட்டும் வேகமெடுத்தது.

‘வாழ்வில் தேடல் என்பது சாத்தியப்படாத அல்லது தேவையற்ற ஒன்றோ? மனிதன் தன்னை புத்திசாலியாக கருதிக்கொண்டு அதை நிரூபிக்கும் பொருட்டே  கலை, படைப்பு என்று குழப்பிக் கொள்ளுகிறோனோ! மனிதனின் மிகப் பெரிய தேவையே ஒரு கை சோறாக தான் இருந்துவிட முடியும். காமத்தைக் கூட எதையாவது செய்து அடக்கிக் கொண்டுவிட முடியும்? ஆனால் பசியை எப்படி அடக்குவது? அப்படியானால் அந்த சோற்றுக்காக தான் மனிதன் ஓடுகிறானா? அப்படி வேலை வேலை என்று ஒடுபவனால் அந்த சோற்றை சரியான நேரத்தில் உண்ண முடிகிறதா?’

வங்கியில் மதியம் ஒரு மணி முதல் ஒன்றரை மணிவரை உணவு இடைவேளை. ஆனால் ஒருநாளும் அவன் சரியான நேரத்தில் உணவு உண்டதில்லை. வெறும் ஐந்து நிமிடத்தில் வேகவேகமாக உணவை விழுங்கவேண்டும். இதை எண்ணும் போது கோபம் அதிகமாயிற்று, அவனுக்கு அவன்மேலேயே.

‘உண்மையில் மனிதனுக்கு பிரச்சனை வர இரண்டு காரணங்கள் தான் இருக்க முடியும். ஒன்று வேலையில் இருப்பது, இரண்டு, வேலையில்லாமல் இருப்பது. வேலையில்லாமல் இருந்தால் வேலைக்காக ஏங்குகிறோம். வேலையில் சேர்ந்தால் இயல்பை பறிக்கொடுத்து வேலையை வெறுக்கிறோம்.

‘பொதுவாக மனம் ஒருவகையான சொகுசுத்தனத்திற்கு பழகி விடுகிறது. சிலர் அதை இழக்க அஞ்சுகிறார்கள். அதனால் தனக்கு பிடித்ததை செய்யமுடியாமல் ஏங்குகிறார்கள். சிலர் அதை உடைத்துவிட்டு தனக்கு பிடித்ததை செய்ய தொடங்கிவிடுகிறார்கள். ஆனால் அவர்களும் அந்த தேடலில் ஒரு சொகுசுத்தனத்தை தான் எதிர்பார்க்கிறார்கள். அதை அடைய முடியாதபோது மனம் உடைந்துவிடுகிறார்கள். அதில் சிலர் பாதியிலேயே திரும்பி பழைய பாதைக்கு திரும்பி, மீண்டும் அந்த ஏக்கம் நிறைந்த கூட்டத்தோடு சேர்ந்துக் கொள்கிறார்கள். போராடி தன் லட்சியத்தை எட்டிப் பிடித்தாலும், வெற்றிக்கு பின் சூனியம் தானே இருக்க முடியும்?’

அவன் ஒரு முடிவை எட்டுவதற்கு முன் பேருந்து கோல்கொண்டாவை அடைந்தது. நுழைவு சீட்டு கொடுப்பவன் ஐந்துரூபாய் சில்லறையாக தரும்படி சொன்னான்.

“பாத் மே லேலுங்கா…” என்று நூறு ரூபாயை நீட்டினான்.

“பாஞ்ச் ருபையா  தேதோ….” என்றவாறே அவன் முகத்தை திருப்பிக் கொண்டான். நுழைவு சீட்டுக் கொடுப்பவனுக்கு இவனைப் பிடிக்கவில்லை போலும். இவன் வரும்போது மீதத் தொகையை வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லியும் அவன் ஒப்புக்கொள்ளவில்லை.

இவன் அருகாமையிலிருந்த ஒரு கடைக்குள் சில்லறை மாற்றும் பொருட்டு நுழைந்தான். வாசலுக்கு நேராக இருந்த கல்லாவில் அமர்ந்திருந்தவனுக்கு பதினைந்து வயது தான் இருக்கும். உள்ளே வியாபாரம் பார்த்தவனுக்கு பத்து வயது இருக்கும்.

“அஞ்சு ரூபாய் பிஸ்கட் இருக்கா?”

அவன் இல்லை என்றான்

“பதினஞ்சு ரூபாய்க்கு ஏதாவது பிஸ்கட் இருக்கா?”

அந்த சிறுவன் வேகமாக, “டிக்கெட் தரமாட்டேனு சொல்ட்டானா?” என்று வினவினான். ‘நுழைவு சீட்டுக் கொடுப்பவனுக்கு பலரையும் பிடிக்காது போல’

சிறுவன் ஒரு பிஸ்கெட் பாக்கெட்டை மேஜை மீது வைத்தான். நூறு ரூபாயை வாங்கிக் கொண்டு என்பதைந்து ரூபாயை திருப்பிக் கொடுத்தான்.  பிஸ்கெட் பாக்கெட்டில் பத்து ரூபாய் என்று தான் அச்சிடப்பட்டிருந்தது. ஏன் விலை அதிகம் என்று கேட்டவனிடம், சுற்றுலா தளத்தில் அப்படி தான் என்று அந்த சிறுவன் பதில் அளித்தான்.

“அரே. ஐசே கைசே ஹோகா பாய்… டூரிஸ்டு ப்ளேஸ்னா ஒருவா ரென்டுரூவா வச்சு விக்கலாம். அஞ்சு ரூவாயா!”

அது வரை கல்லாவில் அமைதியாக அமர்ந்திருந்தவன், சில்லறையில்லை என்றவாறே கல்லாவை திறந்து காட்டினான். அதில் சில்லறை குறைவாக தான் இருந்தது. வேண்டுமானால் இதை வைத்துக் கொள்ளுங்கள் என்று இரண்டு ரூபாய் குச்சிமிட்டாய் ஒன்றை நீட்டினான். இவன் அதை வாங்காமல் அந்த சிறுவர்களையே உற்றுப் பார்த்தான். இருவரும் தலையில் குல்லா போட்டிருந்தார்கள். முஸ்லிம் சிறுவர்கள். சுத்தமான வெள்ளை உடை அணிந்திருந்தார்கள். ஆனால் முகம் களைத்திருந்தது. வறுமையாக தான் இருக்க முடியும். இல்லையேல் படிக்க வேண்டிய வயதில் ஏன் வேலை செய்கிறார்கள் என்று எண்ணினான். வெளியே, கோல்கொண்டாவிற்கு சுற்றுலா வந்த பள்ளி சிறுவர் கூட்டம் ஒன்று கடந்து சென்றது.

“அந்த அஞ்சு ரூபாய் வேணாம். நீயே வச்சுக்கோ. உங்க ரெண்டு பேரையும் சேர்த்து ஒரு போட்டோ எடுத்துகிறேன்”

போட்டோ என்றதும் சிறுவர்கள் சந்தோஷமாக தலையாட்டினார்கள். இரண்டு சிறுவர்களையும் அருகருகே அமரச்சொல்லி, வாசலை பார்க்க சொன்னான். இவன் வெளியே வந்து தார் சாலையைக் கடந்து கடைக்கு எதிரே, அந்த சிறுவர்களை பார்த்தவாறு நின்றான். அந்த சிறுவர் குழு கடையை கடக்கும்போது இவன் புகைப்படம் எடுத்தான். சிறுவர் குழுவுக்கு பின்னால், கடையினுள் நிற்கும் அந்த இரண்டு சிறுவர்களின் சோகமான முகம் போட்டோவில் தெளிவாக தெரிந்தது. அந்த கடைச் சிறுவர்களிடம் புகைப்படத்தை காட்டினான். அவர்கள் சந்தோஷமாக பார்த்தார்கள். அதற்கு மேல் அவனால் அங்கு நிற்கமுடியவில்லை. குற்ற உணர்ச்சியாய் இருக்கலாம். வேகமாக அங்கிருந்து நகர்ந்தான். தோல்வி உணர்ச்சியை தவிர்க்க குற்ற உணர்ச்சியை கடந்துதான் ஆக வேண்டும் என்று யாரோ மனதிற்குள் சொல்வது போல் இருந்தது.

வேகமாக கோல்கொண்டா வாயிலில் நுழைந்தான். பயணச்சீட்டு வாங்கும் போது, சீட்டு கொடுப்பவன் இவனை பார்த்து கேலியாக சிரித்ததை இவன் கவனிக்கவில்லை. அவனால் எதையுமே கவனிக்க முடியவில்லை. மூச்சு இரைக்கும் வரை மலை மீது ஏறி, அதற்கு மேல் முடியாது என்று தோன்றியதால் பால ஹிசாரின் அடிவாரத்தில் அமர்ந்தான். பையிலிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து தண்ணீரை வேகமாக குடித்தான். தொண்டை அடைத்தது,

கேமராவை எடுத்து கடைசியாக எடுத்த அந்தப் புகைப்படத்தைப் பார்த்தான்.

‘வெறும் பதினைந்து நிமிட புகழுக்குதான் ஏங்கிக்கிடக்கிறோமா?

சூழ்நிலை கனவுகளை கொஞ்சம் கொஞ்சமாக தின்றுவிடுகிறது. கனவுகளை சாத்தியமாக்கும் முயற்சிகு நிறைய உழைப்பை தர வேண்டியிருக்கிறது.  அதற்கு நிறைய நேரத்தையும் செலவழிக்க வேண்டியிருக்கிறது. சூழ்நிலைகள் நேரத்தை பிடிங்கிக் கொள்வதால், போலி புகழ் தேடி அலையத் தொடங்கிறோம். வேலையிலிருந்துகொண்டே புகைப்படத் துறையிலும்  கவனம் செலுத்த வேண்டும்’

அந்த சிறுவர்களின் புகைப்படத்தை கேமராவிலிருந்து அழித்தான்.

“அன்னையா” என்று ஒரு குரல் வர, நிமிர்ந்தான். ஒரு சிறுவன் நின்றுகொண்டிருந்தான்.

“அப்பாக்கு கொஞ்சம் தண்ணீ குடுங்களேன்” என்று அவன் தெலுங்கில் கேட்டான். இவனிடமிருந்து தண்ணீர் பாட்டிலை வாங்கிக்கொண்டு அந்த சிறுவன் ஓடினான். அந்த அப்பாவிற்கு அறுபது வயது இருக்கும். தளர்ந்திருந்தார். இவனை பார்த்து புன்னகை செய்தார். இவனும் சம்ப்ரதாயமாக பதில் புன்னகை செய்தான். தண்ணீரை குடித்துவிட்டு, இவனிடம் வந்து பாட்டிலை கொடுத்து விட்டு நன்றி சொன்னார்.

“வெல்கம் சார்”

அவர் ஆங்கிலத்திலேயே தொடர்ந்தார்.

“ப்ரொஃபஷனல் போட்டோகிராபரா?”

“பேஷன் சார். பாங்க்ல வேலை செய்றேன்”

“நீங்க இங்க போட்டோ எடுத்துக்கலாயா? இந்த ஹைட்ல இருந்து எடுத்துகிட்டா நல்லா இருக்கும்”

இவன் என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தான், அவர் தன் மகனிடம் தெலுங்கில் சொன்னார், “டேய் சாரா போட்டோ எடு. அவர் எவ்ளோ பேர எடுத்துருப்பார். நீ அவர எடுக்கப்போற, நல்லா எடுக்கணும்”

இவனிடம் திரும்பி, “உங்க கேமராலயே எடுக்கலாமே” என்றார். இவன் கேமராவை அந்த சிறுவனிடம் கொடுத்து, எந்த பட்டனை அழுத்த வேண்டுமென்று சொன்னான். பின் அந்த அப்பா சொன்ன இடத்தை நோக்கி நகர்ந்தான்.

இடுப்பாளவு இருந்த சுவற்றில் ஏறி அமர்ந்து, அதன் ஓரத்தில் இருந்த தூணில் சாய்ந்துக் கொண்டான். கிளிக். அந்த சிறுவன் எடுத்தப் புகைப்படம் அவனுக்கு திருப்தி அளிக்கவில்லை. அதை புரிந்துக் கொண்ட அப்பா, “என்னடா போட்டோ? ஒரு ஆங்கில் இல்ல… எப்பதான் கத்துக்கப்போறியோ?” என்று அதட்டினார்.

“சார், நீங்க மறுபடியும் போங்க, நான் எடுக்குறேன்” என்றார். இவனுக்கு விருப்பமில்லாவிடினும், பெரியவர் சொல்கிறார் என்ற மரியாதைக்காக அதே இடத்தில் சென்று அமர்ந்தான்.

“வெளிய பாருங்க தம்பி” என்று சொல்லி இரண்டு மூன்று புகைப்படங்கள் எடுத்தார். டிஸ்ப்லே மோடிற்குள் எப்படி செல்வது என்று.தெரியாமல் விழித்துக் கொண்டிருந்த அவரிடமிருந்து, கேமராவை வாங்கினான். ஆச்சர்யமாக இருந்தது. புகைப்படம் அருமையாக வந்திருந்தது. அந்த புகைப்படத்தில் அந்த உயரத்தின் பின்னனியில், கீழே இருந்த தர்பார்களும், சிதிலமடைந்த அரண்மனைகளும் நன்றாக தெரிந்தன.

‘நல்ல டெப்த்’ எண்ணினான். அந்த அப்பாவின் கண்கள் சந்தோசத்தில் பிரகாசித்ததை கவனித்தான்.

“நல்லா வந்திருக்கு சார்” என்று இவன் நன்றி சொன்னான். அவர் புன்னகை செய்துவிட்டு பால ஹிசார் நோக்கி படி ஏறத்தொடங்கினார். நான்கு படிகள் ஏறியதுமே அவருக்கு மூச்சு வாங்கிற்று. சற்று நிதானித்தவர் தன் மகனிடம், “மாடர்ன் கேமரா… நான்லாம் ஃபிலிம்ல எடுக்கும்போது ஒருவாரம் வெயிட் பண்ணுவேன் போட்டோவ பாக்க.. அதெல்லாம்  ஃபிலிம் இன்ஸ்ட்டிட்யூட்ல படிச்சா காலம்…” என்று சொல்வதை கவனித்தவாறு இவன் கடைசி படியிலேயே நின்றான். உச்சி தெரிந்தது.

மேற்கொண்டு நடக்கத் தொடங்கிய அப்பா, “போட்டோ நல்லா வந்திருக்கு பாத்தியாடா…!” என்று சந்தோஷமாக சொன்னார். அவருடைய பையன் அவர் சொல்வதில் பெரிய ஆர்வம் இல்லாமல் படி ஏறிக்கொண்டிருந்தான். அவரை பார்க்கும் போது அவனுக்கு பயமாக இருந்தது. வேலையில் இருந்துக் கொண்டே புகைப்படத் துறையில் சாதிக்க முடியும் என்று மீண்டும் ஒருமுறை தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.

கைகுட்டைகளும் ட்ரான்ஸ்வெஸ்டிசமும்-சிறுகதை

 “Transvestism (also called transvestitism) is the practice of cross-dressing, which is wearing clothing traditionally associated with the opposite sex.”-Wikipedia

கைக்குட்டை என்பது உங்களுக்கு வேண்டுமென்றால் ஒரு சாதாரண விடயமா இருக்கலாம். எனக்கு அதிமுக்கியமான ஓர் விடயம்.  கைகுட்டைக்கென்ன பெரிய முக்கியத்துவம் இருந்துவிடப்போகுதென்று  நீங்கள்  நினைக்கலாம். ஆனால்  கடந்த இரண்டு மாதங்களில்  நான் ஆயிரம் ரூபாய்க்குக் கைகுட்டை வாங்கிட்டேன்னு சொன்னால் , அதனுடைய முக்கியத்துவம் உங்களுக்குப் புரியும். ஒரு வருடத்திற்குச் சுமார்  ஆறாயிரம் ரூபாய் கைகுட்டைக்கே செலவளிக்கிறேன். நான் என்ன செய்வது ! வேறு வழி இல்லை…

ஏதோ நான் கைகுட்டையை வைத்துப் பாய்மரக்கப்பல் செய்வதாக  நீங்கள் நினைத்துவிடாதீர்கள். நீங்கள் எதற்காகக் கைக்குட்டை பயன் படுத்துகின்றீர்களோ அதே காரணங்களுக்காகக் கைக்குட்டையைப் பயன்படுத்தும்  ஒரு சாதாரண  மனிதன் நான்.. ஆனால் என் வாழ்க்கையில் கைக்குட்டைகள் ஏற்படுத்திய, ஏற்படுத்தும் விளைவுகள் சாதாரணமானவையல்ல.

“பத்திரம்டா! எங்கேயும் கீழ விட்டுறாத…” ஒவ்வொரு முறையும் அம்மா சொல்லுவாள், அந்தக் கைகுட்டையை என் யுனிபார்ம்  ட்ரௌசரோடு சேர்த்து ஊக்கைக் குத்தும் போது.

அழகான பூப் போட்ட வெள்ளை நிறக் கைக்குட்டை அது. என் வாழ்க்கையில் அதன் பின் ஏனோ பூப் போட்டக் கைக்குட்டை உபயோகப் படுத்தவில்லை. யாரும் உபயோகப் படுத்தவிடவில்லை. பூப் போட்டக் கைகுட்டைகளும் குடைகளும் பெண்களுக்கு மட்டுமே உரித்தானவையென்று இங்கு ஏனோ நம்பப் படுகிறது. பூக்கள்,ஜனனம் முதல் மரணம் வரை மனிதனின் வாழ்கையை ஏதோ ஒரு வகையில் அலங்கரிக்கின்றன.

ஆண் கடவுளுக்குப் பூச் சூட்டி அழகு பார்க்கும் இந்தச் சமுதாயம், பூவைப் பற்றி ஒரு சராசரி ஆண் பேசினாலே அவனை விசித்திரமாகப் பார்க்கிறது. பூக்கள் ஆண்மையின் பலவீனமாகவும் பெண்மையின் அடையாளமாகவும் பார்க்கப்படுவது ஆணாதிக்கத்தின் உச்சம்.

ஆறாம் வகுப்பு படிக்கும் போது பூ வரைந்த கைக்குட்டையை வைத்திருந்த ராமஜெயத்தை எல்லாரும் அழும் வரை கேலி செய்தது எனக்கு இன்னும் நினைவிலுள்ளது. எனக்கும் அந்தக் கைக்குட்டை ரொம்பப் பிடித்திருந்தது. ஆனால் அதை வெளியே சொல்ல இயலவில்லை. நண்பர்கள் என்னை ஒதுக்கி வைத்திடுவார்களோ என்ற பயம். வீட்டிலும் ஒரு நாள் பூப் போட்டப் புடவையை முகர்ந்து பார்த்ததற்கு அம்மா சூடு போட்ட அந்தத் தழும்பு இன்னும் என் வலது துடையை உறுத்திக்கிட்டிருக்கு. அதனால் எனக்குப் பிடித்த பல விடயங்களை வெளியே சொல்லாமல் ஆசையை மனதில் வைத்தே பூட்டிக் கொண்டேன்…

சிறு வயதிலிருந்தே எனக்கும் கைகுட்டைக்கும் முரண்பட்ட ராசி. ஒவ்வொரு முறையும் நான் கைக்குட்டையை தொலைத்துவிட்டு வந்து நிற்கும் போது  விளக்குமாற்றில்  அடி விழும். கீழே சிதறி விழும் குச்சிகளை மீண்டும் எடுத்துச்  சொருவி மறுபடியும் அம்மா அடிப்பாள். என்னை அடிக்கிறதுக்கு அவளுக்கு  ஏதாவதொரு காரணம் வேண்டும்.

“ஒரு கைக்குட்டையை தொலச்சதுக்கா இப்படி போட்டு அடிக்குற”, வினவிய பக்கத்து வீட்டு அத்தையை அம்மா பார்வையாலேயே வெட்டினாள்.

“எம் புள்ளைய தான அடிக்கிறேன் …நீ யாருடி சக்காளத்தி!” அம்மா எல்லாரையும் இப்படிதான் தரக்குறைவாக பேசுவாள். அதனாலேயே யாரும் மத்துசத்திற்கு வரமாட்டார்கள்.

ஒவ்வொரு முறையும் கைக்குட்டையைத் தொலைத்து விட்டு நான்  ‘தேமே’ என்று அம்மா முன்னாடி வந்து நிக்கும் போதெல்லாம், அம்மா சாமியாடத் தொடங்கிவிடுவாள்.

அம்மா அடிக்கும்போது அவள் கண்கள் சிவந்து, முகம் சிடு சிடுவென்று  இருக்கும். எதுவும் பேசமாட்டாள். என்றாவது கோபம் உச்சத்தை அடையும் போது, வெறிபிடித்தவள் போல் கத்துவாள். என்னை அடிக்கும் போது அவள் உடம்பு குளிர் ஜுரம் வந்தது போல் நடுங்கும். மூச்சு இரைக்கும். ஆனாலும் முயன்று என்னை அடிப்பாள்.

“ஏன்டா உன் புத்தி இப்படிப் போகுது…பொருளத் தொலைச்சதுக்குப் பேயாடுறேன்னு சொல்ற முண்டைகளுக்கு என்ன தெரியும், என் கவலை… !!!! “ ஒவ்வொரு முறையும் இதைச் சொல்லிடும் போது அவள் கண்கள் கலங்கிடும்.

“……..பொட்ட புத்தி உனக்கெதுக்குடா!” அப்போது தான் எனக்கு விளங்கிற்று. நேற்று மொட்டைமாடியில் உலர்ந்துக் கொண்டிருந்த என் அக்காவின் சிகப்புத் தாவணியை நான் நிரடிக்கொண்டிருந்ததை அம்மா பார்த்துவிட்டிருக்கிறாள்.

பெரும்பாலும் அம்மா எதற்காக அடிக்கிறாள் என்ற காரணம் மறந்து போய்விட்டிருக்கும். ஏதேதோ காரணங்களுக்காக அடிப்பதாலும், எந்தக்காரணத்துக்காக அடித்தாலும் அடியும் வலியும் ஒரே மாதிரிதான் இருக்கும் என்பதாலும், நானும் காரணங்களை நினைவில் வைத்துக் கொள்வதில்லை.

“ஆண் பிள்ளைடா நீ …”என்று கூறி விட்டு மீண்டும் கலங்குவாள். கலங்கும் அவள் கண்களைக் காணத் தாளாமல் நான் அவள் கால்களைக் கட்டிக் கொள்வேன்.

“இனிமே இப்படி செய்ய மாட்டேன்மா! நீ அழாத!”.

நான் என்ன தப்பு செய்தேனென்று  எனக்கு விளங்காது. ஆனால் எங்க அம்மாவை ஆசுவாசப் படுத்த அப்படிச் சொல்லிவிடுவது வழக்கம். ஓரிரு நாட்களுக்குப் பின் எல்லாம் மறந்துவிடும். அக்காவின் தாவணியை எடுத்து உடலில் சுற்றிக் கொள்வேன். மறுபடியும் விளக்குமாற்றுக் குச்சிகள் சிதறும்.

அப்போதெனக்குப் பத்து வயதுதான் இருக்கும். நான் செய்வது தப்பென்று எனக்குத் தோன்றியதே இல்லை. ஆண்கள் மாதிரி சட்டை போடுற பெண்களை நான் பார்த்திருக்கிறேன். எங்க பக்கத்துக்கு வீட்டு அக்கா எப்பவும் சட்டை பேன்ட் தான் போடும். ஆனால்  நான் புடவையை உற்றுப் பார்த்தாலே அம்மாவுக்குக் கோபம் வந்திடும்.

“திருட்டுப் புத்தி வேறயா?” மீண்டும் ஒருநாள் அம்மா சாமியாடினாள். இப்போது திருட்டுப் பட்டத்தையும் கொடுத்துவிட்டாள். அக்காவின் பூப் போட்டக் கைக்குட்டை என் பைக்குள் இருந்ததற்காக அம்மா சொல்லிச் சொல்லி அடித்தாள் “இது எப்படிடா உன் பையில வந்துது..குடியக் கெடுக்கனே பொறந்திருக்கியா ! கோடரிக் காம்பே…”

அந்தக் கைக்குட்டை எப்படி என் பைக்குள் வந்தது என்பது எனக்கும் விளங்கவில்லை. ஒரு வேளை நான் தான் பையினுள் வைத்திருப்பேன். அப்போதெல்லாம் ரயிலில் பத்து ரூபாய்க்கு மூன்று எனப் பல வகையான   கைக்குட்டைகள் விற்கப்படும். அம்மா பெரும்பாலும் அதைத்தான் வாங்கித் தருவாள், எனக்குக் கட்டம் போட்டக் கைக்குட்டைகள்,  அக்காவிற்குப் பூ வரைந்த கைக்குட்டைகள்.

இருதினங்களுக்குமுன் அக்காவிற்குக் கைக்குட்டை வாங்கிவந்தாள். அம்மாவிற்குத் தெரியாமல் நான் எடுத்து வைத்துக் கொண்டேன். எடுத்து வைத்திருக்கலாம்… புடவைகள், பூ வரைந்த கைக்குட்டைகள், தாவணிகள் போன்றவற்றைப் பார்த்தால் என் மனம் கட்டுப் பாட்டை இழந்து விடும். நடப்பது எதுவும் பெரும்பாலும் ஞாபகம் இராது. யாருக்கும் தெரியாமல் என் பையில் திருடி வைத்துக் கொள்வேன்,  ஓரிரு நாட்களுக்குப்பின் மீண்டும் அதே இடத்தில் வைத்துவிடுவேன்.

அன்று என் அம்மா அக்காவின் கைக்குட்டையைத் திருடியதற்காகச் சாடும் போது சிரிப்புதான் வந்தது. ஒரு நாள் அவள் மாங்காடு கோவிலுக்குச் சென்றிருந்த போது, வீட்டிலிருந்த நான் அவளின் பழைய புடவையை எடுத்துச் சுற்றிக் கொண்டேன். அது அவளுக்கு இன்னும் தெரியாது. தெரிந்திருந்தால் என்னை அடித்தே கொன்றிருப்பாள். ஆனால் இன்று வெறும் கைகுட்டைக்காக அடிக்கிறாள்.

அம்மா ரொம்ப நல்லவள், என்னை அடித்தாலும்…

பெரும்பாலும் பிச்சைக்காரிகளுக்குக் கொடுப்பதற்காகவே தன் பழைய புடவைகளை எடுத்து மூட்டை கட்டி வைத்திருப்பாள். அவள் இல்லாத போது அதிலிருந்து சில புடவைகளை எடுத்து ஒளித்து வைத்துக் கொள்வேன். நிறைய புடவைகள் இருப்பதால் அவளால் புடவை தொலைந்து போவதைக் கண்டு பிடிக்க இயலாது. யாரும் இல்லாத இடங்களில் அந்தப் புடவை என் தோளைத் தழுவும். பின் சாக்கடையில் நழுவும். பெரும்பாலும் யாரும் தென்படாத அந்தச்சுடுகாட்டு மண்டபத்தில்தான் நான் புடவையைப் பதுக்குவது, நெருடுவது, தோளில்சுற்றிக் கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடுவேன் .

என் தனிமையின் பின்னால் ஒளிந்திருக்கும் ரகசியங்களை  அம்மா எப்படியோ கண்டு கொண்டுவிட்டாள்.. அதன்பின் நான் பெரும்பாலும் தனியாக எங்கேயும் சென்றதில்லை. அம்மாவின் கழுகுப் பார்வையிலேயே என் வாழ்கை நகரத் தொடங்கியது. சாமி படத்திற்கு பூ நான் தான் வாங்கி வருவேன். அதற்கும் தடை வந்து விட்டது. அம்மா தன் தலையில் பூ வைப்பதைக் கூட நிறுத்திவிட்டாள்…

நான் செய்வது சரியா தவறா என்று தெரியாத குழப்பத்தில் தான் என் வாழ்க்கை நகரத் தொடங்கியது. சரி-தவறென்று  பகுத்துச் சொல்ல வேண்டிய அப்பாவும் என்னுடன் இல்லை. என் அப்பாவை இது வரை நான் இரண்டு முறை தான் பார்த்திருக்கிறேன். என் அம்மா அவரின் புகைப்படத்தை எடுத்து வைத்துக் கொண்டு பார்க்கும் போதெல்லாம் நானும் பார்ப்பதால் அவர் முகம் எனக்கு மறக்கவில்லை. அவர் துபாய் சென்று பல வருடங்களாகிறது. நான்கைந்து வருடத்திற்கு ஒரு முறைதான் வீடு வருவார். கடைசியாக மூன்றாம் வகுப்பு படிக்கும் போது பார்த்ததாக ஞாபகம். நான் வளர்ந்ததெல்லாம் என் தாய், தமக்கை அரவணைப்பில்தான்.

முழு ஆண்டு விடுமுறையில் என் சித்தி வீட்டில் கொண்டு விட்டுவிடுவாள் அம்மா. அங்கு சித்தியும், அவளின் பெண் மட்டும்தான் . என் சித்தப்பா நான் பிறப்பதற்கு முன்னே இறந்து விட்டார். என் சித்திப் பெண் என்னைவிட வயதில் மூத்தவள். அவளை எனக்கு ரொம்பப் பிடிக்கும், என் உடன் பிறந்த தமக்கையை விட. எப்போது நான் சித்தி வீட்டுக்குப் போனாலும் அவளோடும் அவள் தோழிகளுடனும் தான் விளையாடிக் கொண்டிருப்பேன். என்னை அவள் தன் அனைத்து  தோழிகளிடமும் அறிமுகப் படுத்தி வைப்பாள். எல்லாரும் என்னைத்‘தம்பி’ ‘தம்பி’ என்று செல்லமாக அழைப்பார்கள். அங்கேயே இருந்துவிடலாம் என எண்ணும் போது, அம்மா வந்துவிடுவாள், விடுமுறை முடிந்ததால் அழைத்துச் செல்வதற்காக.. வாழ்கையின் அழகான தருணங்கள் மிக வேகமாகக் கரைந்து விடுகின்றன… மீண்டும் விடுமுறையை எதிர்பார்த்து நான் வீட்டில் காத்துக் கொண்டிருப்பேன்…

“இந்த வருஷம் சித்தி வீட்டுக்குப் போகல!” அம்மா கூறியவுடனே தூக்கி வாரிப் போட்டது.

“அப்பா வர்றார்டா….!”

எனக்கு எந்த சந்தோசமும் ஏற்படவில்லை. ‘அடுத்த வருஷம் வர வேண்டியவர் ஏன் இப்பவே வராரு’ என்றே தோன்றியது.

அம்மா ஏதோ வத்தி வைத்திருக்கிறாள்.ஒரு வேளை என் நடவடிக்கைகளைப் பற்றிச் சொல்லி இருக்கலாம்.  பூமியே இருண்ட மாதிரி ஒரு மாயை. நான் செய்வதைப் பகுத்துப் பார்த்தறிய எனக்கு அந்தப் பத்து வயதில் விளங்கவில்லை. அம்மாவும் அக்காவும்தான் நான் செய்வது தப்பென்பார்கள். அப்பாவின் வருகையினால் சித்தி வீட்டுப் பயணம் தடைப் பட்டு விட்டது என்றதும் அப்பாவின் மீது வெறுப்பு தான் மிஞ்சியது.

அப்பா நிறைய பரிசுப் பொருட்கள் வாங்கி வந்திருந்தார். ‘உனக்குதான்டா’ என்றவாறே அவர் கொடுத்த அந்த பையைத் திறந்ததும், என்னால் என் சந்தோசத்தை அடக்கிக் கொள்ள இயலவில்லை. கலங்கிய கண்களுடன் அப்பாவைப் பார்த்தேன், அந்தப் பையினுள் இருந்த சுடிதாரை வெளியே எடுத்தவாறே.

“பை மாறிப் போச்சா! அக்காக்கிட்ட கொடு…உன் பை இங்கிருக்கு”
பின் அவர் கொடுத்த எந்தப் பொருட்களும் என்னைக் கவரவில்லை . என் கவனம் முழுக்க அக்காவிற்கு வாங்கிய அந்த நீல நிறச் சுடிதாரிலேயே இருந்தது….

அப்பா எதற்காக வந்திருக்கிறார் என்றெனக்கு விளங்கவில்லை. அடிக்கடி அம்மாவும் அப்பாவும் ஏதோ ரகசியம் பேசிக் கொண்டனர். நான் அறையினுள் நுழைந்தால், பேச்சை நிறுத்திவிடுவார்கள். ஆனால் அப்பா என்னிடம் சகஜமாகதான் பழகினார். பல இடங்களுக்கு அழைத்துச் சென்றார். நிறைய பொருட்கள் வாங்கித் தந்தார். எங்கள் வாழ்க்கைத்தரம் உயர்ந்துக் கொண்டிருப்பது கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிந்தது.

அம்மா மலிவு விலைக் கைக்குட்டைகளை வாங்குவதைக் கண்டு அப்பா கடிந்துரைத்தார். “உடம்பத் தொடுற எந்தப் பொருளும் நல்ல ரகமா இருக்கணும்” அப்பா சொல்லிக்கொண்டே இருப்பார். என்னை அறியாமலேயே என்மனதில் அவர் வார்த்தைகள் பதிந்து விட்டன. இன்று வரை எந்தப் பொருள் வாங்கினாலும் அப்பாவின் வார்த்தைகளைப் பின்பற்றுவதன் விளைவே பிராண்டட் கைகுட்டைகளுக்காக நான் பல ஆயிரங்கள் இறைக்கிறேன்….

“அக்கா கல்யாணம்டா….”

இதற்குத் தான் அப்பா வந்திருக்கிறார், கல்யாணம் முடிந்தவுடன் கிளம்பிவிடுவார் என்று நான் நினைத்துக் கொண்டேன். அதை உணர்ந்ததினாலோ என்னவோ ஏதோ சொல்ல வந்த என் தந்தை பேச்சை நிறுத்திக் கொண்டார்.

அடுத்த ஒரு மாதத்தில் எங்கள் வீடு திருவிழாக் கோலம் பூண்டது. வேக வேகமாகக் கல்யாண ஏற்பாடுகள் நடந்தன. தினம் தினம் விருந்தாளிகள் வீட்டை நிரப்பிக் கொண்டிருந்தனர். பக்கத்துத் தெருவில் ஒரு லாட்ஜில் விருந்தினர்களுக்கு ரூம் போடப் பட்டிருந்தது. வரும் விருந்தாளிகளை லாட்ஜிற்கு  அழைத்துச் செல்வதே என் வேலை. எத்தனை வகையான மனிதர்கள்! வகை வகையான ஆடை  அலங்காரங்கள்! எங்கள் குடும்பம் இவ்வளவு பெரியது என இது நாள் வரை தெரியாது. அம்மா யாருடனும் ஓட்டமாட்டாள் என்பது விருந்தாளிகளாக வந்த பல பாட்டிமார்கள் சொல்லியே எனக்குத் தெரிந்தது. என் வயதுப் பையன்கள் நிறையப் பேர் வந்திருந்தனர். நாங்கள் அனைவரும் தெருவில் கிரிக்கெட் விளையாடுவோம். இரவில் கூட தெரு விளக்கின் துணையோடு கிரிக்கெட் களைகட்டிக் கொண்டிருக்கும். இதுநாள் வரை இவர்களை அறிமுகம் கூட செய்து வைக்காத அம்மாவை எண்ணி நான் உள்ளுக்குள் குமுறிக் கொண்டிருந்தேன்.

ஊரிலிருந்து சித்தி தன் மகளுடன் வந்துவிட்டாள். நான் கிரிக்கெட்டில் நேரம் செலவழித்ததால் என் சித்திப் பெண்ணிடம் அதிகம் ஒட்டவில்லை.அவளிடம் நான் திடீரென ஒட்டாமல் போனதை அவள் ஒரு பெரிய அதிசயம் போல் தன் தோழிகளிடம் விவரித்துக் கொண்டிருந்தாள்.

“என் தம்பியப் பாத்தீங்களா…பெரிய மனுஷன்… நம்ம யாருகிட்டயும் பேசமாட்றான்”
தோழிகள், அவர்கள் காதுகளுக்குள் ஏதோ பேசிச் சிரித்துக் கொள்வார்கள். என்னைக் கேலி செய்கிறார்கள் எனத் தெரிந்ததும் நான் என் உடன்பிறந்த அக்காவிடம் போய் சொல்லுவேன்.அவளும் எனக்காக மத்துசம் வாங்கிட வந்திடுவாள்…

“ஏண்டி கல்யாண பொண்ணே! நீ உன் வேலையப் பார்த்துகிட்டுப் போ…உன் தம்பிக்குப் பத்து வயசுதான்…ஆனா..” நிறுத்திவிட்டு மீண்டும் என் தமக்கையின் காதில் ஏதோ சொல்லிட்டாள் என் சித்தி மகள். இப்போது எல்லாரும் என்னை நோக்கிச் சிரித்தார்கள், என் உடன் பிறந்தவள் உட்பட…

அக்காவின் கல்யாண வைபவத்தோடு சேர்த்து கேலிகளும் கூத்துகளும் முடிவுக்கு வந்துவிட்டன. அக்கா புகுந்த வீட்டிற்குச் சென்று விட்டாள். வீட்டிற்கு வந்த விருந்தாளிகளும் ஒவ்வாருவராகச் சென்றுவிட்டனர். இறுதியாகச் சென்றார்கள் என் சித்தியும் அவளின் மகளும்.

“அடுத்தது இவளுக்குதான்டி.இப்பவே பைய்யன் தேட ஆரம்பிச்சாதான் இன்னும் ரெண்டு வருசத்துல முடியும்…அவரு திரும்ப துபாய் போகல…ஏதோ வியாபாரம் செய்றதா சொன்னாரு. அதனால அவரே எல்லாம் முன்னாடி நின்னு செஞ்சு வைப்பார்…நீ நல்ல பைய்யனா பார்த்து சொல்லு…” வாசலில் நின்று கொண்டே அம்மா சித்தியிடம் மனப்பாடம் செய்தவள் போல் ஒப்புவித்தாள்.

வெட்கத்துடன் சித்தி மகள் “போயிட்டு வர்றேன் பெரியம்மா!” என்றவாறே என்னைப் பார்த்துக் குறும்பாகக் கண் சிமிட்டினாள்.

“மொட்டை பைய்யன் மாதிரி ஆடாத… வீட்ல அடக்கமா இரு. “அம்மா அக்காவின் தோளில் தட்டியவாறே  கூறினாள்.சித்தியும் அவள் மகளும் வாசலில் இறங்கி நடந்தார்கள். ஆட்டோ பிடித்துக் கொண்டு வந்த அப்பா அவர்களை  பஸ் ஏற்றி விடுவதற்காக உடன் சென்றார்.

ஆட்டோ மறையும் வரை கலங்கிய கண்களுடன் நான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன் அக்கா .மணமாகிப் போய்விட்டாள். நெருடுவதற்க்கு அவள் தாவணி இனி இருக்காது. சித்தியின் மகளும் விரைவில் மணமாகிப் போய்விடுவாள். அப்பா மீண்டும் வெளிநாடு போகப் போவதில்லை. ஏதோ மிகப் பெரிய சதி என்னைச் சுற்றி நடந்துக் கொண்டிருக்கிறது. வாழ்க்கை மீண்டும் மீண்டும் இருள்கிறது. மருள்கிறது,  ஆட்டோவின் சக்கரத்தோடு சேர்ந்து சுழன்றன எண்ணங்கள். கலங்கின கண்கள். ஆட்டோ மறையும் வரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். ஆட்டோவின்பின் எழுதி இருந்தது, ‘எதை நீ கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்க்கு’ நான் எதையோ இழந்துக் கொண்டிருக்கிறேன். எது என்றுதான் விளங்கவில்லை……

அப்பா முன்னொருநாள் சொல்லாமல் தவிர்த்ததை அன்று சொன்னார்,நிச்சயம் அம்மா உண்மைகளை ஓதி விட்டிருக்கிறாள். ”நான் துபாய்க்குப் போகல. அம்மாக்கும் உடம்பு சரிபடல. அதனால உன்னை ஹாஸ்டெல்ல சேர்ந்த்துவிடலாம்னு இருக்கேன். நல்ல ஸ்கூல்டா. நிச்சயம் நீ பெரிய டாக்டரா இஞ்சினீயரா வரலாம். “

டாக்டரும் இஞ்சினீயருமே வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் படிப்புகள் என நம்பும் இந்த மூட நாட்டில்,என் தந்தை ஒன்றும் விதிவிலக்கல்ல, அவரும் மற்றவர்களைப் போல என்னை இஞ்சினீயராக, டாக்டராக உருவாக்கிப்  பாக்க வேண்டும் என ஆசைப்பட்டார். என்னை முதல் நாள் அப்பா ஹாஸ்டலில் கொண்டு விடும் போது,வாங்கிய காசிற்க்கு அங்கிருந்தவர்கள் சொன்னார்கள், “நிச்சயம் இவன பன்னிரண்டாவது வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுக்க வைக்குறோம்”

எனக்கு கண்கள் மீண்டும் இருட்டியன. நான் அப்போதுதான் ஆறாம் வகுப்பு போக வேண்டும். அதற்க்குள் என் பன்னிரெண்டாம் வகுப்பும் பிற்கால வாழ்க்கையும் நிர்ணயிக்கப் படுகிறகின்றன.

“மாதம் ஒரு முறை நீங்க வந்து  பார்க்கலாம், வருடா வருடம் முழு ஆண்டு விடுமுறையில் 15 நாள் அவனைக் கூட்டி போய் வச்சுக்கலாம்” இன்னும் ஏதேதோ எழுதியிருந்தது அந்தத் தாளில். அப்பா உன்னிப்பாகப் படித்துக் கொண்டிருந்தார்.

“அப்பா எங்கயாவது போலாம்பா “ அப்பா எதுவும் பேசவில்லை. உடனே என்னை வெளியில் அழைத்துச் சென்றார். நான் அழுது கொண்டே இருந்தேன். அப்பா என்னை ஆசுவாசப் படுத்த முயற்சித்தும் பயனில்லை.  திடீரென்று அங்கு அமைதிக் குடிக்கொண்டது. நான் அழுகையை நிறுத்தியதற்கான காரணத்தை அப்பா கண்டுக்கொண்டார். அவருக்கு இந்நேரம் என்னைப் பற்றி எல்லாம் தெரிந்திருக்கும். உபயம்:அம்மா.நான் தெருவில் ஒருவன் விற்றுக் கொண்டிருந்த கைக்குட்டைகளை உற்று நோக்கிக் கொண்டிருந்தேன்.

“என் கூட வா”

அப்பா வேகமாக ஒரு பெரிய துணிக் கடையினுள் என்னை அழைத்துச்சென்றார். எதிர்பாராத விடயங்கள் எதிர்பாராத சமயத்தில் எதிர்பாராத மனிதர்களால் நிறைவேற்றிவைக்கப்பட்டு விடுகின்றன.பரந்த இவ்வுலகத்தில் சந்தோசங்கள் சிறுசிறு விடயங்களிலும் ஒளிந்திருகின்றன…கடையை விட்டு நான் மலர்ந்த முகத்துடன் இறங்கினேன். அப்பாவின் முகமும் மலர்ந்திருந்தது. அப்பாவின் மீது பாசம் கூடிவிட்டது எனவும் சொல்லலாம். அன்று முழுக்க பல இடங்களுக்கு அழைத்துச் சென்றார். எதிலும் எனக்கு நாட்டமில்லை. என் கவனம் முழுக்க அப்பா வாங்கித் தந்த அந்தப் பூ வரைந்த வெள்ளைக் கைக்குட்டையில் பதிந்திருந்தது.

ஹாஸ்டலில் கொண்டு விடும் போது கைக்குட்டையை அப்பா வாங்கி வைத்துக் கொண்டார்.என்னால் எதுவும் பேச இயலவில்லை. அப்பா என் தலையைக் கோதியவாறே சொன்னார், “நல்லா படிக்கணும், எது நல்லது எது கெட்டதுனு உனக்கே தெரியும்.”

அப்பா எதைக் கெட்டதென்கிறார்….! சமுதாயம் வரையறுத்த கவைக்குதவா சட்டங்களை கேள்விக் கேட்காமல் பின்பற்றுபவர்கள் நல்லவர்கள். அதில் சற்றே பிறழ்ந்தாலும் ஒட்டுமொத்த சமுதாயமும் ஏசிடும். ஊரோடு ஒத்துவாழ் என்பதே அப்பா சொல்ல வந்தது.

போவதற்கு முன் ஹாஸ்டல் வார்டனிடம் அப்பா வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தார். இந்தியாவை வல்லரசாக்குவதைப் பற்றியா பேசியிருக்கப் போகிறார்கள் ! என்னைப் பற்றிதான் பேசியிருப்பார்கள். ஹாஸ்டல் வார்டனும் என்னை இரண்டு முறை திரும்பிப் பார்த்தது எனக்கு என்னவோ போல் இருந்தது. இவர்கள் எல்லாரும் சேர்ந்து நான் செய்யாத தவறிற்கு என் மனதில் குற்ற உணர்ச்சியை ஏற்ப்படுத்தப் பார்க்கிறார்கள். அதில் அவர்கள் வெற்றியும் பெற்று விட்டார்கள்.

அதனால் தான் பள்ளியை முடிக்கும்வரை என் ஆசைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டேன், நான் தங்கியது ஆண் விடுதி என்பதால் நெருடுவதற்க்குப் புடவைகளும் கிட்டவில்லை. என் நண்பர்கள் புடை சூழ வலம் வந்ததால் எனக்கும் புடவைகள் இன்னபிற இத்யாதிகள் மீது ஆர்வம் போய்விட்டதாகவே எண்ணினேன்……

ஆனால் கல்லூரி வந்தபின் சக மாணவிகளின் ஆடைகளைப் பார்க்கும் போது என் உடலுக்குள்ளும் மூளைக்குள்ளும் மீண்டும் மணியடிக்கத் தொடங்கியது. பெண்களின் சகவாசமேயின்றி பள்ளிப் படிப்பு முடிந்ததால் எனக்குள் ஒரு  கூச்ச சுபாவம் குடிக்கொண்டுவிட்டது. அதனால் கல்லூரியில் நான் எந்தப் பெண்ணிடமும் பேச முயற்சித்ததில்லை.ஆனால் நீல நிறச் சுடிதார்கள் மீது எப்போதும் என் கண் படரும். அப்படி நின்று அந்தப் பெண்களின் ஆடைகளைப் பார்த்துக்கொண்டிருப்பேன் நான் அவ்வாறு வெறித்துப் பார்ப்பதைக்கண்டு, தங்கள் அழகில் மயங்கிதான் நான் சொக்கி நிற்கிறேன் என்றெண்ணி உள்ளுக்குள் குளிர்ந்த அதிரூபசுந்தரிகள் என் கல்லூரியில் நிறைய உண்டு…

கல்லூரியிலும் விடுதி வாழ்க்கைதான். எப்போதாவது வீட்டிற்குச் சென்றால், அம்மா சில நேரங்களில் சந்தேகத்துடன் பார்த்தது இன்னும் நினைவிருக்கிறது.

“நான் இப்பெல்லாம் அப்படி இல்லைமா ” என்னை அறியாமலேயே ஒரு நாள் என் தாயிடம் சொன்னேன்.

“இன்னும் உன்னால சுதார்ப்பா இருக்க முடியல இல்லை”,  சிடுசிடுத்தாள் அம்மா. ஆம். கல்லூரியிலும் என்னால் கைக்குட்டைகளைப் பத்திரமாக வைத்துக் கொள்ள இயலவில்லை. எல்லாம் விலையுயர்ந்த கைக்குட்டைகள்.எத்தனைக் கைக்குட்டைகள் வாங்கினாலும் இரண்டு நாட்களில் தொலைத்துவிடுவேன்.அம்மா காத்துக் கருப்பின் வேலையோ என எண்ணி கோவிலுக்கெல்லாம் அழைத்துச் சென்று மந்திரித்து விட்டிருக்கிறாள். எதுவும் பயன் தரவில்லை. இன்று வரை கைக்குட்டைகளைத் தொலைக்கும் பணியினை நான் செவ்வனே செய்துவருகிறேன்.இன்று என் சுய சம்பாத்தியத்தில் வாங்கும் கைகுட்டைகளும் என்னிடம் நிலைப்பதில்லை.

பிராண்டட்  கைக்குட்டைகள்  மீது ஒரு வகையான  மோகம் படர்ந்திருப்பதால் ஒவ்வொருவாரமும் பல நூறுகள் செலவு செய்து கைக்குட்டைகள்வாங்கிடுவேன். ஓரிரு நாளில் தொலைத்தும் விடுவேன்…. அம்மா ஒரு முறை சொன்னது நன்றாக நினைவில் உள்ளது,

“நீ வேணும்னே தான் தொலைச்சுட்டு வந்து நிக்கிற….”.

நானும் அன்று பல்லை இளித்துக்கொண்டு நின்றிருந்தேன். ஒரு வேளை அம்மா சொன்னது உண்மையாக இருக்கலாம். நான் என் பாக்கெட்டில் கைக்குட்டை வைப்பது வரை நினைவிருக்கும். பின் தேடும்போது கைக்குட்டை அங்கிருக்காது. கைக்குட்டை எங்காவது விழுந்திருக்கலாம். பறந்திருக்கலாம். இல்லையேல் நானே தூக்கி எறிந்திருக்கலாம்.பிடிக்காத பொருளை ஏன் வைத்திருக்கனுமென்று நான் எண்ணியிருக்கலாம். எதுவும் சரியாக நினைவிலிராது.

ஒரு பொருள் பிடிப்பதற்கும் பிடிக்காமல் போவதற்கும் காரணங்கள் தேவையில்லை. ஆனால் அடுத்தவருக்கு இன்னது தான் பிடிக்க வேண்டும் எனக் கட்டாயப் படுத்தும்போது காரணங்கள் நிச்சயம் தேவை . பூ வரைந்த கைக்குட்டைகள் எனக்குப் பிடிக்கும். அது எனக்குப் பிடிக்கும் என்பது என்னைச் சூழ்ந்தோருக்குப் பிடிக்கவில்லை. எனக்கு ஏன் பிடிக்கும் என்பதற்குக் காரணங்கள் தேவையில்லை. ஆனால் அதை நான் ஏன் வைத்துக் கொள்ளகூடாது என்பதற்கு இச்சமுகம் காரணம் சொல்ல முன்வரவில்லை. அவர்களைப் பொறுத்த வரையில் பூ பெண்மை சார்ந்தது. என்னைப் பொறுத்த வரை பெண்மை, பெண்ணை மட்டும் சார்ந்ததன்று. இதை என்னால் தர்க்கம் செய்திடமுடியும். ஆனால் செய்திடத் திராணியில்லை. உலகம் என்னை விசித்திரமாகப் பார்த்துவிடுமோ என்றொரு விசித்திரமான உணர்ச்சி, குற்ற உணர்ச்சி, என்னுள் விதைக்கப் பட்டுவிட்டது. விசித்திரமாகப் பார்த்தால் என்ன !

சம்பாதிக்கத் தொடங்கியபின் ஒரு முறை அந்த எண்ணத்தோடுதான் கடையில் சென்று பூ வரைந்த கைக்குட்டை வாங்கினேன்.
“சார்! இது உங்களுக்கா!” ஆச்சர்யத்துடன் வினவினான் கல்லாவில் அமர்ந்திருந்தவன். நான் எதுவும் பேசமால் நின்று கொண்டிருந்தேன்.
“இல்ல சார். பூ போட்டு இருக்கே அதான்!” மீண்டும் சற்று ஏளனமாக வினவினான் அவன்.
“ஓ! மாறிப் போச்சா…வேற எடுத்திட்டு வரேன்” என்று நான் வேகமாக உள்ளே சென்றேன். பின் வேறொரு கைக்குட்டையை, உலக மொழியில் சொல்லவேண்டுமெனில், ஆண்கள் பயன்படுத்தும் கைக்குட்டையை வாங்கிவந்தேன்.
நான் நினைத்திருந்தால்,அது எனக்குத் தான் என்று தைரியமாகச் சொல்லியிருக்கலாம். இல்லை என் தமக்கைக்கு என்று பொய் சொல்லிருக்கலாம். ஆனால் எதுவும் செய்யவில்லை. செய்ய முடியவில்லை. அவனும் ஏன் அப்படி வினவினான் என்று எனக்கு விளங்கவில்லை. என்னைப் பார்த்தவுடேனே ஏதாவது கண்டுகொண்டு விட்டானா? அவனின் ஏளனப் பார்வை நான் ஏதோ தவறு செய்துவிட்டதாக எண்ண வைத்தது. நான் என்ன தவறு செய்துவிட்டேன் !

பெண்மையைப் போற்றுவோம் எனக்கூறும் சமுதாயம் ஆண்களிடத்தில் பெண்மை இருந்தால் ஏன் ஏற்றுக் கொள்வதில்லை? நான் அவ்வாறு கேள்வி கேட்பதே தவறோ! ஆண்மை பெண்மை எனப் பாகுபாடுகள் எவ்வாறு வந்தது. ஆண்மையின் குணங்கள் இவை, பெண்மையின் குணங்கள் இவை என வரையறுத்தது யார்! வரையறுக்கும் உரிமையை அவர்களுக்கு யார் வழங்கியது. பெண்மையும் பெண்ணியமும் வெவ்வேறோ! ஆண் போல் வாழ்வதே பெண்ணியம் என ஏன் பெண்ணியம் பேசும் பெரும்பாலானோர் கருதுகின்றனர்! அப்படியெனில் பெண்மைக்கான அடையாளம் எது! ஆண்மைக்கான அடையாளம் எது! அடையாளங்களை அடையாளப் படுத்த யாரால் முடியும்!
தாய்மை பெண்மையின் அடையாளமெனில், தாய்மை ஒரு உணர்வெனில், ஆணாலும் தாய்மை உணர்வை வெளிப்படுத்த இயலுமெனில், ஆணினுள்ளும் பெண்மை இருக்கு என்றுதானே அர்த்தமாகிறது. அவ்வாறெனில் ஆணும் இங்கு பெண்ணாகிப் போகிறான். ஆனால் அதை ஏற்றுக் கொள்ள ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள். பெண்மையின் அடையாளங்களைத் துறப்பதே பெண்ணியம் என ஆண்கள் பெண்கள் உட்பட பலரும் ஏன் கருதுகிறார்கள்? பெண்ணியம் என்பது சமூக உரிமை சார்ந்த விடயமாயிற்றே ! அதை ஏன் பெண்மையோடு குழப்புகிறார்கள். பெண்மையைத் துறப்பதுதான் பெண்ணியமென்று ஏன் கூறுகிறார்கள். பெண்மையைத் துறப்பதெனில் ஆண்மையைத் தழுவவேண்டும் என்றுதானே அர்த்தப்படுகிறது. அவ்வாறெனில் இங்கு பேசப்படும் பெண்ணியம் ஆணாதிக்கத்தை மறைமுகமாக ஆதிரிக்கின்றதோ !

பெண்ணியம் பேசும் ஆண்களும், ஆண்களிடத்தில் இருக்கும் பெண்மையை ஏன் வெறுக்கிறார்கள். பெண்ணியம் பெண்மை சார்ந்ததெனில் அவர்கள்(ஆண்கள்) பெண்மையை, அது யார் இடம் இருந்தாலும் ஏற்றுக் கொண்டுதானே ஆகவேண்டும். பெண்ணியத்திற்கும் பெண்மைக்கும் சம்பந்தம் இல்லையெனில், பெண்ணியம் என்பது யாது! பெண்ணியம் பெண்களின் உரிமை சார்ந்தது என்றால், பெண்மைக்கும் பெண்ணியத்திற்கும் சம்பந்தம் இல்லையென்றால், பெண்மை பெண்களுடையது எனக் கருதும் பெண்ணியவாதிகள் பெண்ணியத்தைப் பெண்களோடு எவ்வாறு பொருத்துவார்கள்! அவவாறு பெண்மை என்னும் உணர்வு பொருத்தப்படமால் அகற்றப் படும்போது, எல்லாரும் உணர்வற்ற ஒரே ஜடநிலையைத் தானே அடைகிறோம்! ஜட நிலை உயிர் நிலை ஆகாதே!

அப்படியெனில் எல்லோரும் ஜடமா ! ஜடமில்லையெனில், உணர்வுகள் உண்டெனில், எல்லாவகையான உணர்வுகளும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமம்தானே! அப்போது பெண்மை எனவும் ஆண்மை எனவும் எப்படி பாகுபாடுவருகிறது! மெல்லிய குணம் பெண்மை, முரட்டுக் குணம் ஆண்மை என்கிறார்களா! எத்தனை மென்மையான ஆண்கள் இங்குண்டு. அவர்களெல்லாம் பெண்களா? ஆதிகாலத்தில்-தாய் மண் சமுதாயத்தில்  வேட்டையாடியது பெண்கள்தானே! அவ்வாறெனில் அவர்களெல்லாம்ஆண்களா! இப்படி அடிக்கடி மாறிவரும் வரையறைகள் எப்படி நியாயமாக இருக்க முடியும்? நியாயமற்ற வரையறைகளை ஒதுக்கிவிட்டால் ஆண்களும் பெண்களும் ஒன்றுதான் என்று தெளிவாக புரிந்துவிடுமே. ஆண்களும் பெண்களும் ஒன்றெனும் பட்சத்தில் இது ஆண்மைக்கான குணம், பெண்மைக்கான குணம் என்ற வாதம் உடைப்பட்டுப் போய்விடுகிறது. பாகுபாடுகள் தகர்ந்துவிடுகின்றன. ஒரு மனிதனின் குணங்கள் தனிப்பட்ட மனித வாழ்க்கை சார்ந்ததாக மாறிவிடுகிறன. அவ்வாறெனில் தனிப்பட்ட மனிதனின் விருப்பு வெறுப்புகளில் தலையிட சமுதாயத்திற்கு யார் உரிமை அளித்தது? சேலைகளைச் சுற்றிக்கொள்வதும், பூ வரைந்த கைக்குட்டைகளைப் பயன்படுத்துவதும் என் தனிப்பட்ட விடயமாயிற்றே! இதற்க்கு இந்த உலகம் என்ன பதில் வைத்திருக்கிறது!
இது போன்று என்னுள் ஆயிரம் கேள்விகள் ஓடும். குறிப்பாகப் பெண்கள் உடை விற்கும் கடைகளுக்குச் சென்றால் பல லட்சம் கேள்விகள் மனதில் எழும். அன்றும் இது போன்று சிந்தித்துக்கொண்டு நிற்கையில்தான் இனிமையான அந்தக் குரல் கேட்டுத் திரும்பினேன்.

“அங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க, இந்தப் புடவை எப்படி இருக்குனு பார்த்து சொல்லுங்க” இனிமையான அந்தக் குரலுக்குச் சொந்தக்காரி என் மனைவி. நான் ஏதோ அவளுக்குப் புடவை தேர்ந்தெடுக்கத்தான் ஆவலுடன் ஒவ்வொரு முறையும் கடைக்கு வருகிறேன் என இன்னும் நினைத்துக்கொண்டிருக்கிறாள் என் அப்பாவி மனைவி . ஒவ்வொரு முறையும் அவள் புடவை உற்றுப்பார்க்கும் போது, “உங்களுக்கு என் மேல ரொம்ப தான் ஆசை” என்பாள் வெகுளியாக. இப்போது புடவையை அவள் உடுத்தியிருக்கும்போதே நெருடலாம்.என் மனைவியாயிற்றே !

“உன் புடவை நல்லாயிருக்கு,எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு”ஒவ்வொரு முறையும் நான் சொல்லக் கேட்டு ரசிப்பாள். ஆனால் அதனுள் பொதிந்திருக்கும் உண்மையான உண்மைகளை, நான் சொல்லவந்த அர்த்தங்களை அவளால் புரிந்துக் கொள்ள முடியாது. புரிந்து கொண்டு விட்டால் நிச்சயம் அவளால் என்னோடு நிம்மதியாக வாழமுடியாது.

பல முறை யோசித்திருக்கிறேன், என்னைப் பற்றிய அவளின் கரங்களைப் பற்றி என்னைப் பற்றின உண்மைகளைச் சொல்லிவிடலாமென்று. ஏதோ சொல்லமுடியாத உணர்ச்சி, குற்ற உணர்ச்சி, என்னுள் விதைக்கப்பெற்ற அந்த உணர்ச்சிஎன்னைத் தடுத்திடும்.

பில் கவுண்ட்டரில் சொன்னேன், “அந்த நீலக் கலர் புடவை ரொம்ப நல்லாயிருக்கு. வாங்கிக்கோ “

“ஐ. மீன், உனக்கு ரொம்ப நல்லாயிருக்கும்”

“ஐம் மூவ்ட். எவ்வளவு பாசம் வச்சிருக்கீங்க என் மேல! லெம்மீ டேக் இட்” என்றவாறே அந்த நீல நிறப் புடவையையும் வாங்கிக் கொண்டாள்…

என்னைப் பற்றிய ரகசியங்கள் யாருக்கும் தெரியாது. என் பெற்றோர்கள் என் தமக்கையின் குடும்பத்தோடு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டனர். அவர்கள் என் ரகசியங்களை மறந்திருப்பார்கள். கால ஓட்டத்தில் நான் மாறிவிட்டதாகவே அவர்கள் எண்ணுகிறார்கள். நான் என்ன தவறு செய்துவிட்டேன்! மாற்றிக் கொள்வதற்க்கு…

என் மனைவியைப் பொறுத்த வரையில் நான் ஒரு உன்னதமான கணவன்.  ரகசியங்களை வெளிப்படுத்தி அந்த உறவினை நான் கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை. ரகசியங்கள் ரகசியமாகவே வைத்துக்கொள்ளப்பட வேண்டும். வெளியே சொல்லிவிட்டால் அது ரகசியமாகாது. என்றாவது ஒரு நாள் என் மனதில் குற்ற உணர்ச்சி எழும், சமுதாயத்தால் விதைக்கப்பட்ட குற்ற உணர்ச்சி. என் மனைவியின் புன்சிரிப்பில் அது மறைந்துவிடும். என்னுள் ரகசியங்களை நான் புதைத்து வைத்திருந்தாலும், நாங்கள் எந்தக் குறையுமின்றி சந்தோசமாகவே வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.நானும் எந்தத் தடங்கலுமின்றி- தடங்களுமின்றி என் மனைவி வீட்டில் இல்லாத சமயங்களில் அந்த நீல நிறப் புடவையை என் மீது சுற்றிக் கொண்டுதான் இருக்கிறேன். பூ வரைந்த கைக்குட்டைகளையும் யாருக்கும் தெரியாமல் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறேன். யாரையும் பாதிக்காத இந்த விடயங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். இது ஒரு சிதம்பர ரகசியம். உங்களுக்குள்ளும் ஆயிரம் ரகசியங்களுண்டென்று எனக்குத் தெரியும். அதையும் சிதம்பர ரகசியமாகவே வைத்துக் கொள்ளுங்கள். அடுத்தவர்களைப் பாதிக்காத எந்த விடயமும் தவறில்லை, தப்பில்லை.அதனால் தைரியமாக உங்கள் ரகசியங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் ரகசியங்கள் ரகசியமாகவே வைத்துக் கொள்ளப்பட வேண்டும்….

இன்னும் சொல்வதற்க்கு நிறைய உண்டு. இப்போது நான் செல்ல வேண்டும், என் மனைவிக்குப் புடவை வாங்குவதற்க்காக. அப்படியென்று அவள் நினைத்துக்கொண்டிருக்கிறாள். உங்களுக்குத் தெரியும், நான் யாருக்காகப் புடவை வாங்கப் போகிறேனென்று…

கைக்குட்டைகளும்டிரான்ஸ்வெஸ்டிசமும்

ஐக்கியா வல்லமை சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை