அனகோண்டா 2025- மைக்ரோ பார்வை 


இது  ஒரு மெட்டா மூவி (Meta movie). படத்திற்குள்  படம் எடுப்பதாக கதை. 

சிறு வயதிலிருந்தே சினிமா எடுக்க ஆசைப்படும் நான்கு நண்பர்கள். ஆனால் காலம் அவர்களை வேறொரு வாழ்க்கையை வாழ வைக்கிறது. மூன்று பேர், மனதிற்கு பிடிக்காத வேலையை செய்துகொண்டு இருக்கின்றனர். ஒருவர் மட்டும் நடிக்கும் ஆசையை விடாது பற்றி கொண்டு அதே சமயத்தில் பெரிய அங்கீகாரம் கிடைக்காமல் போராடிக் கொண்டிருக்கிறார். 

இவர்கள் நால்வரும் மீண்டும் சந்திக்கும் போது, சிறுவயதில் எடுத்த குறும்படத்தை போட்டு பார்க்கிறார்கள். மீண்டும் சினிமா எடுக்கலாம் என்கிற ஆசை துளிர் விடுகிறது. என்ன எடுக்கலாம்! சிறுவர்களாக இருந்தபோது கண்டு ரசித்த அனகோண்டாவை மீள் உருவாக்கம் செய்யலாம் என்று முடிவு செய்கிறார்கள். அதற்காக அனகோண்டா வசிக்கும் காட்டிற்கே செல்கிறார்கள். அதன் பின் என்ன நடந்தது எனபதே கதை!

நகர வாழ்க்கையின் எமோஷனலான கதையிலிருந்து படம் காட்டினுள் நுழையும் போது திகில் காமெடியாக மாறுகிறது. இது ஒரு அழகான ஜானர் ஷிஃப்ட். இந்த படம் நமக்கு சொல்லி தரும் திரைக்கதை உத்தியும் அது தான். நிறைய விஷயங்களை சொல்லி குழப்பாமல், எளிமையாக திரைக்கதையை நகர்த்தி இருப்பது சிறப்பு. 

இரண்டாம் பகுதியில் பல திருப்பங்கள், போதிய இடைவெளியின்றி அடுத்தடுத்து நிகழ்வதால் திரைக்கதையின் சுவாரஸ்யம் குறைகிறது. மற்றபடி சிறுவயதில் பார்த்த திகில் கதையை வேறொரு வடிவத்தில்  பார்த்தது  நல்லதொரு அனுபவமாக இருந்தது.

அனகோண்டா (1997) படத்தை தந்தையோடு வரதராஜா திரையரங்கில் பார்த்த நினைவுகள், இந்த படத்தை மகளோடு நெட்பிளிக்சில் பார்த்த போது எட்டிப் பார்த்தது. இது காமெடி திகில் வகையை சார்ந்த கதை என்று வகைப்படுத்தினாலும், பெரிய திகில் அனுபத்தையெல்லாம் படம் தரவில்லை. படம் இன்னுமே சிறப்பாக இருந்திருக்கலாம். எனினும் குழந்தைகளோடு கண்டு ரசிக்கத்தக்க படம்.   



Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.