தூக்கமற்ற ஒரு நீண்ட இரவில், எதிர்பாராமல் தன் படைப்பைப் பற்றிய இப்படியொரு நேர்மறையான விமர்சனத்தை வாசிக்கும்போது ஒரு படைப்பாளிக்குக் கிடைக்கும் நம்பிக்கை அளப்பரியது.
ஒரு வைரம் ஒரு காரிகை மற்றும் சில கயவர்கள் நாவலுக்கு வந்திருக்கும் சமீபத்திய விமர்சனம் இது.

நான்காண்டுகளுக்கு முன்பு வெளியான இந்த நாவலை அதன் பிறகு நாங்கள் மறுபதிப்பு செய்யவில்லை. ஆனால், இந்தக் கதையின் மீதும், இதைத் திரைப்படமாக்குவதற்கான சாத்தியத்தின் மீதும் எனக்கு எப்போதுமே நம்பிக்கை இருக்கிறது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் ஒரு வாசகரிடம் இந்த நாவல் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் அந்த நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
என்னுடைய கதைகளிலேயே மிகவும் கொண்டாட்டமான மனநிலையில் நான் எழுதிய கதை இதுதான். விசித்திரமான கதைமாந்தர்கள், அவர்களால் உருவாகும் விசித்திரமான பிரச்சினைகள் என, எல்லாவற்றையும் நகைச்சுவையுடன் சொல்லும் ஓர் அபத்தப் புனைவு இது.
எனக்குப் பிடித்த P. G. Wodehouse, கிரேஸி மோகன், Guy Ritchie ஆகியோருக்குச் சமர்ப்பணமாக எழுதப்பட்ட நாவல்.
நான் எழுதும்போது அனுபவித்த அதே கொண்டாட்டத்தை வாசகரும் அனுபவித்திருக்கிறார் என்பதை இந்த விமர்சனத்தின் வழியாக அறியும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
நம் வேலையைச் அர்ப்பணிப்போடு செய்துகொண்டே இருப்போம். மற்றதைக் காலம் பார்த்துக்கொள்ளும்.
பி.கு.: இந்த நாவலின் சில பிரதிகள் சிங்கப்பூர் பொது நூலகத்தில் இருப்பதாக அறிகிறேன். அந்தப் புத்தகங்களை அங்கு கொண்டுசேர்த்த முகமறியா வாசகருக்கும், தற்போது Goodreads தளத்தில் இந்த விமர்சனத்தை எழுதியிருக்கும் திரு. ராம்குமார் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
***
விமர்சனம் கீழே:
“ஒரு வைரம் ஒரு காரிகை மற்றும் சில கயவர்கள்” இது அரவிந்த் சச்சிதானந்தம் எழுத்தில் நான் வாசிக்கும் இரண்டாவது நாவல்.
முதல் நாவலான “தட்பம் தவிர்” Google play books இலவசமாக வாசிக்க கிடைக்கிறது. மிக மிக அற்புதமான cinematic thriller நாவல் அது. அந்த வாசிப்பு அனுபவம் தான் 2025 சென்னை புத்தகக் கண்காட்சியில் இவரது இந்த புத்தகத்தை வாங்க தூண்டியது.
ஏறக்குறைய ஒன்றரை வருடம் எனது shelfஇல் தூங்கியப் புத்தகம் ஜூன் 12,2026 ஆம் தேதி ஒரு வழியாக இன்று வாசித்து முடித்து விட்டேன்.
இத்தனை சிறந்த திரில்லர் நாவலை இத்தனை நாள் வாசிக்காமல் விட்டு வைத்தேன் என்ற என்னை வருத்தப்பட வைத்த புத்தகம். சரி வாருங்கள் விமர்சனத்திற்குள் போவோம்.
ஐந்து விதமான குழுக்கள். அனைவருக்குமே தனித்தனி நோக்கங்கள். ஆசிரியர் கூறியது போல ஒரு சுபயோக சுப இரவில் ஒரு வீட்டிற்குள் நுழைகிறார்கள். பெண்ணை கடத்தி பேரம் பேச , காதலித்த பெண்ணை கரம் பிடிக்க, வைரத்தை திருடி விற்று பணக்காரனாக , பெண்ணே ருசித்து வித்து பின்னர் தீர்த்துக்கட்ட, அதிர்ஷ்ட வைரம் மூலம் பெரிய பணக்காரன் ஆக என ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கம் இருந்தது. யார் இவர்கள்? இவர்களது பின்னணி என்ன? இவர்களது நோக்கம் நிறைவேறியதா? அந்த இரவில் என்ன நடந்தது என்ன? அந்த இரவில் நடந்ததன் விளைவுகளாக இவர்கள் சந்திக்கும் நிகழ்வு என்ன? என நம்மை seat edgeஇல் உட்கார வைத்து வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைத்து சொல்கிறார் ஆசிரியர்.
இது ஒரு திரில்லர் நாவல் தான் ஆனால் ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு சூழ்நிலையும் வசனங்களும் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். தொடக்கத்தில் தோழர் பழம் அனைவரையும் தோழர் தோழர் என கூப்பிட்டு செய்யும் நகைச்சுவையாயிருக்கட்டும் இரட்டையர்கள் சுஜய் அஜய் செய்யும் அட்டூழியமாக இருக்கட்டும் தொடக்க முதல் இறுதி வரை சிறிதும் சலிக்காமல் நகர்கிறது கதைக்களம். ஒரு திரைப்படமாக எடுத்தால் கண்டிப்பாக சக்கை போடு போடும்.
வலம் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் unique. பயில்வான்-கருணைமலர் ஜோடி எல்லாம் மறக்க முடியாத கதாபாத்திரங்கள்.
முதல் பகுதியில் தமாசாக வரும் தோழர் மணிக்கு இரண்டாவது பகுதியில் அட்டகாசமான காட்சிகள் இருக்கிறது.
அந்த இரவிற்கு பின் வைரத்தையும் பெண்ணையும் தேடி நடக்கும் கதையமைப்பு அட்டகாசமாக எழுதப்பட்டது. நிறைய சம்பவங்கள் தற்செயலாக நடப்பதாக அமைக்கப்பட்டிருந்தாலும் அது வாசிப்பை உறுத்தவில்லை. வசனங்கள் நச்சென்று ஷார்ப்பாக இருக்கிறது. கதையின் முடிவும் திருப்திகரமாக இருக்கிறது.
நீங்கள் ஒரு கமர்சியல் திரில்லர் நாவல் வாசிக்க விரும்பினால் எந்த வித யோசனையுமின்றி இவரது புத்தகத்தை வாங்கலாம். எனக்குத் தெரிந்து இந்த வருடத்தின் நான் வாசித்த சிறந்த புத்தகத்தில் இதுவும் ஒன்றாக இருக்கும்.
அப்புறம் என்ன போய் ஆர்டர் போடுங்க.
***
நன்றி
அரவிந்த் சச்சிதானந்தம்
Leave a Reply