ஒரு வீடு ஒரு உலகம் ஒரு குடும்பம்-The Last House 


அண்மையில் நெட்பிளிக்ஸில் வெளியாகி இருக்கும் திரைப்படம்.  அப்பா, அம்மா,  மகன் மற்றும் மகள் கொண்டதொரு  அழகான குடும்பம். ஒரு கிறிஸ்துமஸ் மாதத்தில், மழை நாளில் வெளியே கிளம்பலாம் என்று முடிவு செய்து வீட்டின் கதவை திறக்கிறார்கள். அது திறக்க மறுக்கிறது. பின்வாசல் கதவை திறக்க முயல்கிறார்கள். அதுவும் திறக்கவில்லை. மாடியில் இருக்கும் கதவும் திறக்க மாட்டேன் என்கிறது. யாரோ விளையாடுகிறார்கள் என்கிறாள் தாய்.  ஆனால் எதுவோ தவறாக இருப்பதாக தந்தை எண்ணுகிறான். கதவை உடைக்க முயல்கிறான்.  முடியவில்லை. ஜன்னல் கண்ணாடிகள் கூட உடைய மறுக்கின்றன. தாங்கள் வீட்டிற்குள் சிக்கிக்கொண்டதை அந்த குடும்பம் உணர்கிறது.  இதுதான் படத்தின்  ஆரம்பக்காட்சி. அடுத்த இரண்டு மணி நேரங்கள் அந்த வீட்டினுள் தான் கதை நகர்கிறது. 

இது ஒரு சர்வைவல் ட்ராமா வகை கதை. இறுதியாக அந்த குடும்பம் தப்பித்தார்களா, அவர்களை உள்ளே அடைத்து வைத்தது யார் என்று விரிகிறது படம். வெளியே தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருக்கிறது. வீட்டில் இருக்கும் உணவு சில நாட்களுக்கு போதுமானதாக இருக்கும் என்று தாயும் தந்தையும் முடிவு செய்கிறார்கள். கூடிய விரைவில் தப்பித்துவிடலாம் என்று நம்புகிறார்கள். ஆனால் நாட்கள் வருடங்களாக மாறினால் என்ன ஆகும்? இதை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்கள். 

ஒரு திரைக்கதையில் சுவாரஸ்யம் எப்படி உருவாகிறது! 

கதை ஒரே புள்ளியில் நிற்கும் போது அங்கே சுவாரஸ்யம் குறைந்து போகிறது. அதாவது காட்சிகள் கதையை முன்னோக்கி நகர்த்தாமல் இருப்பதைப் பற்றி சொல்கிறோம். ஆனால் ஒரே இடத்தில் ஒரே சூழலில் கதை நடந்தாலும், கதையில் முன்னோக்கிய நகர்வு இருக்கும் போது திரைக்கதை சுவரஸ்யமாக இருக்கும். இந்த படத்தில் அந்த சுவாரஸ்யம் உண்டு. அதை சிறுசிறு புத்திசாலித்தனமான காட்சிகளின் மூலம் சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள். உணவும் மருந்தும் இல்லாமல் போகும் போது அவற்றை கொணர அந்த குடுமபம் செய்யும் முயற்சிகளை உதாரணமாக சொல்லலாம்.

பொதுவாக ஆங்கில படங்களின் திரைக்கதைகளில் ஒரு உத்தி இருக்கும். Setup and payoff. பின்னே வரும் காட்சிகளுக்கான விதையை முன்னரே போட்டுவிடுவார்கள். ஒரு கதாப்பாத்திரம் திடிரென்று சாகசங்களில் ஈடுபடாது. அதற்கு அத்தகைய திறமைகள் உண்டு என்பதை கதையின் போக்கில் பொருட்படுத்தாத வகையில் சொல்லிவிட்டு போய்விடுவார்கள். பின்னர் ஏதாவது முக்கிய தருணத்தில் அந்த கதாப்பாத்திரம் தன் திறமைகளை பயன்படுத்தும் போது தான், முன்கூட்டியே கதையில் அவை விதைக்கப்பட்டிருப்பதை நாம் உணர்வோம். அத்தகைய உத்தி இந்த படத்தில் சிறப்பாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 

பார்க்க வேண்டிய திரைப்படம். 



One response to “ஒரு வீடு ஒரு உலகம் ஒரு குடும்பம்-The Last House ”

  1. உங்கள் அருமையான படைப்பிற்கும், சிறப்பான கதை சொல்லும் திறமைக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும், இனிய வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் எழுத்துப் பயணம் தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகிறேன்!

    Liked by 1 person

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.