பங்க்ஷன்-சிறுகதை


சாந்திக்கு கடந்த சில நாட்களாக புதியதொரு பிரச்சனை இருந்தது. அவள் கல்யாணம் ஆனதிலிருந்தே ஏதேதோ பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறாள். அவள் கணவன் குமார் தான் அவளின் பெரும்பான்மையான பிரச்சனைகளுக்கு காரணமாக இருப்பவன். குமாருக்கென்று நிரந்தர வேலை எதுவும் இல்லை. எப்போதாவது எலெக்ட்ரிஷியன் அல்லது பிளம்பர் வேலை, எப்போதும் குடி என்று அவன் வாழ்க்கை கழிந்தது. குமாரின் பெற்றோர்கள் தேடிவைத்த  ஒரு வீடு மட்டும் இருந்ததால் சாந்தியால் சமாளிக்க முடிந்தது. அவனை திருமணம் செய்த போது சாந்திக்கு பதினேழு வயது. அவனுக்கு வயது இருபத்தைந்திற்கு மேல்.

அவன் சாந்தியின் வீட்டின் முன்பு சைக்கிளை நிறுத்திவிட்டு, நெற்றி மீது விழும் முடியை கோதியவாறே அவளைப் பார்ப்பான். அவளும் பார்ப்பாள். பின்னொருநாள் அவனோடு வந்துவிட்டாள். இத்தனை வருடத்தில்  அவன் மேல் இருந்த காதல் அப்படியே இருக்கிறதா என்று அவளால் கூட உறுதியாக சொல்ல முடியாது. அவசரப்பட்டுவிட்டோமோ என்கிற எண்ணம்  நாற்பது வயதை தொட்டுவிட்ட இந்த காலத்தில் மனதில் எழதான் செய்கிறது.

“இப்பவே  இப்டி இருக்கியே, வயசுல நீலாம் எவ்ளோ அழகா இருந்திருப்ப!” என்று உடன் வேலை செய்யும் ராஜம் அக்கா சொல்லுவாள். சாந்தி புன்னகை செய்துகொள்வாள். அவளுக்கு  தாம்பரம் சானடோரியத்திலிருந்த மெப்ஸ் உள்ளே ஒரு தனியார் கம்பெனியில் வேலை. பெல்ட், பர்ஸ் போன்றவற்றை ஏற்றுமதி செய்யும் நிறுவனம் அது. ஓவர் டைம் பணம் எல்லாம் சேர்த்து மாதம் பதினைந்தாயிரம் ரூபாய்  வரை ஊதியம் வந்தது. வீட்டு வாசலிலேயே பகுதி நேரமாக  நடத்தி வந்த பெட்டிக்கடையிலிருந்தும் கொஞ்சம் வருமானம் வந்ததால் எப்படியோ குடும்பத்தை இழுத்து பிடித்து ஓட்ட முடிந்தது. மகள் இப்போது தான் பன்னிரெண்டாம் வகுப்பில் இருக்கிறாள். வக்கீலுக்கு படிக்க வேண்டுமென்கிறாள்.  எவ்வளவு சிரமப்பட்டேனும் மகளை படிக்க வைத்துவிட வேண்டும் என்று சாந்தி வைராக்கியம் பூண்டிருந்தாள். தான் சரியாக படித்திருந்தால் தன் வாழ்க்கை நிச்சயம் வேறுமாதிரி இருந்திருக்கும் என்பதை அவள் அவ்வப்போது எண்ணாமல் இல்லை.

மகளும் தாயின் கஷ்டம் தெரிந்து வளர்ந்தாள். ஆனால் சாந்தியின் மகன் அப்படி இல்லை. அவன் டிப்ளோமா படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு,  எப்போதாவது ஏதொவொரு வேலைக்கு சென்றுவிட்டு, எப்போதும் வீட்டில் போனும் கையுமாகவே இருந்தான். நெற்றி மீது விழும் முடியை கோதிக் கோதி  இன்ஸ்டாக்ராமில் வீடியோ போடுவதை பார்த்தால் சாந்திக்கு எரிச்சலாக வரும்.  அவனை படம் பிடிக்கவே இரண்டு நண்பர்கள் உடனிருந்தார்கள்.

“என்னதான்டா பண்றீங்க!” என்று சாந்தி அலுத்துக் கொள்வாள்.

“வீட்டுக்கு மூத்த புள்ள மாதிரியாடா இருக்க” என்று கடிந்துகொண்டாலும், அவன் எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாமல் தான் உண்டு தன் செல்போன் உண்டு என்று இருந்தான். ஏதோ இளம்பிள்ளை காலப்போக்கில் மாறிவிடுவான் என்று தான் சாந்தி நினைத்திருந்தாள். ஆனால் காலம் வேறொரு கணக்கை போட்டது.

ஒரு வெள்ளிக்கிழமை பகல் பொழுது. சாந்திக்கு மத்தியானம் ஷிஃப்ட். அடுப்பில் உலைக் கொதித்துக்கொண்டிருந்தது.  வாசலின் வலது புறத்தில்  அமைந்த பாத்ரூமில் அமர்ந்து  துணி துவைத்துக் கொண்டிருந்தாள். வீட்டின் முன்பு ஒரு ஆட்டோ வந்து நின்றது. சாந்தி துணியை துவைத்துக் கொண்டே எட்டிப் பார்த்தாள். மகன் தான் முதலில்  இறங்கினான். கூடவே ஒரு பெண்ணும் இறங்கினாள். கழுத்தில் மஞ்சம் கயிறு, கையில் ஒரே ஒரு பை.

ஏதோ புரிந்ததும் புரியாததுமாய் சாந்தி எழுந்து புடவையில் தன் கைகளை துடைத்துக் கொண்டே வேகமாக தெருவில் இறங்கினாள். அவள் அடுத்து என்ன செய்வது என்று சிந்திப்பதற்கு முன்பே,  மகனும் அந்த பெண்ணும் காலில் விழுந்தார்கள்.

“ஆசீர்வாதம் பண்ணுங்க அம்மா” என்றாள் அந்தப் பெண். சாந்திக்கு தலை சுற்றுவது போல் இருந்தது. மகன் போனும் கையுமாக இருந்ததன் அர்த்தம் புரிந்தது. ஆனால் அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்று அவளுக்கு புரியவில்லை. அவள் எதுவும் சொல்வதற்கு முன்னரே, மகன் வேகமாக அந்த பெண்னை உள்ளே அழைத்து சென்றான்.

“இந்தாண்ட வாடா!” என்று மகனைப் பிடித்து இழுத்தாள்.

“என்னடா பண்ணிட்டு வந்திருக்க” அவனுக்கு மட்டுமே கேட்கும்படி அதட்டினாள்.

“மீ அவ உன்ன நல்லா பாத்துப்பா மீ..”

“ச்சி! அவ யாருடா என்ன பாத்துக்குறதுக்கு! ஐயோ அந்த ஆளு வேற இங்க இல்லயே”

விஷயத்தை கேள்விப் பட்டு எங்கிருந்தோ வந்த குமார், “என்னாடா அர்ஜென்ட்டு உனக்கு!” என்று மகனை அடிக்கச் சென்றான். அக்கம்பக்கம் இருந்தவர்கள் தலையிட்டு சண்டையை தடுக்கவே, கோபித்துக் கொண்டு வெளியேறிவன் இரண்டு நாட்கள் வரவில்லை. பின் முழு போதையில் வந்தவன் மகனை மன்னித்திருந்தான் என்பது அவனுடைய அமைதியில் தெரிந்தது.

“ஊர்ல இல்லாதததயா என் புள்ள பண்ணிட்டான்” என்று தனக்குத்தானே, ஆனால் சாந்திக்கு கேட்பது போல் சொல்லி வந்தான். மருமகளோ, சாந்தியை அம்மா அம்மா என்று சுற்றிவந்தாள்.

“இந்தபாரு அவ ஏன் என்ன அம்மா அம்மானு கூப்புட்றா! ஒழுங்கா அத்தைனே கூப்ட சொல்லு. இல்ல அவ என்ன எதுமே கூப்ட வேணாம். ஏன் கூப்டனும்!” மகனிடம் சொன்னாள்.

“சரி சொல்றேன். நீ  பங்க்ஷன் வை மீ” என்றான் மகன்.

“அவன் கேட்குறதுல என்னா தப்பு! நம்ம கல்யாணம் தான் நாதியத்து போய் நடந்துச்சு. என் புள்ள ராசா. ஊர கூட்டி பிரியாணி போடணும்” என்று குமார் குடித்துவிட்டு வந்து சிபாரிசு செய்தான்.

“மீ ரிசப்ஷன் மீ”

கடந்த சிலநாட்களாக எது  பேசினாலும் மகன் இதையே கேட்டுக் கொண்டு இருக்கிறான். இது தான் சாந்திக்கு இப்போதிருக்கும் மிகப் பெரிய பிரச்சனை.

“சரிவிடு, வயசுப்புள்ள ஏதோ ஆசப்படுது” என்றாள் ராஜம். அவர்கள் இருவரும் மாலை வேலையில் அலுவலக கேன்டீனில் அமர்ந்திருந்தனர்.

“இவன் இழுத்துட்டு வந்துட்டான்கா. பங்க்சன் வைனா எங்க போறது! தெருலாம் நம்ம சொந்தம் தான். குறைஞ்சது அம்பதாயிரமாவது ஆவாதா?”

“குழுல கேட்டியா?”

“பழைய கடனே இன்னும் அடையல. ரெண்டு மாசம் கழிச்சு பாக்கலாம்னு சொல்றாங்க! இவன் உடனே வைங்குறான். இருந்த ரெண்டு நகையும் சேட்டாண்ட இருக்கு”

“நான் ஒரு யோசனை சொல்றேன்” என்ற ராஜம் அக்கா, தொடர்ந்தாள்.

“வீடு கட்ட முனிசிபாலிட்டில பணம் தராங்கலாம். நம்ம சுஜா கூட அப்டி தான் வீடு கட்றதா சொல்லி  பொண்ணு கல்யாணத்த முடிச்சா! யாரோ தெரிஞ்சவர் இருக்காராம். அவரே எல்லாமே பாத்துப்பாருனு சொன்னா”

“எதுக்குக்கா  அதெல்லாம்! தேவையில்லாத பிரச்சனை. நாம நேரா போகும் போதே ஒன்னும் ஒட்ட மாட்டேங்குது. வேற ஏதாவது வழி பொறக்காதா!”

“நானுமே பொண்ணு பிரசவத்துக்கு சீட்டு காச எடுத்துட்டேன்டி. இல்லனா ஏதாவது புரட்டிருக்கலாம்…”

“பரவாலக்கா… நீ எப்ப கிளம்புற! லீவ் சொல்ட்டியா”

“போனவாரமே சொல்லி வச்சிட்டேன். கொஞ்சம் சாமான்லாம் வாங்கிட்டு நைட்டு பஸ் ஏறணும்” என்றாள் ராஜம்.

“சரிக்கா, நான் தேதி குறிச்சதும் சொல்றேன். ஒழுங்கா வந்து சேரு!”

சரி என்று தலையாட்டிய ராஜம்,  “சூப்பர்வைசர் வராண்டி, தேவையில்லாம வாய புடுங்குவான். நான் கிளம்புறேன்” என்று நகர்ந்தாள்.

“என்னா சாந்தி!” என்றவாறே சூப்பர்வைசர் கோபி அவள் எதிர் இருக்கையில் அமர்ந்தான். சாந்தியை விட ஒரிரு வயது சிறியவன் தான்.

“ஒன்னும்ல சார்” என்றாள்.

“என்ன சார் சார்னு, கோபினு கூப்டு” என்றான். சாந்தி என்னசொல்வது என்று புரியாமல் பார்த்தாள்.

“ஏதோ கேள்விப்பட்டனே! மேனேஜர்கிட்ட அட்வான்ஸ் கேட்டிருந்தியாமே! அந்த பொண்ணுக்கு ஒன்னும் ஹெல்ப் பண்ண முடியலடானு பீல் பன்னாரு”

அவள் பிரச்சனை அனைத்தையும் தன்னால் தீர்த்துவிடமுடியும் என்கிற தொனியில் கேட்டான், “நான் ஒரு யோசனை சொல்லவா சாந்தி!”

பங்க்ஷன் நல்லபடியாக முடிந்தது. மருமகளுக்கு ரொம்ப சந்தோசம் என்பதை அவள் முகம் காட்டிக் கொடுத்தது. மகன் ஏன் பங்க்ஷன் வைக்கச்சொல்லி அவ்வளவு வற்புறுத்தினான் என்று அப்போதுதான் புரிந்தது. அவனுக்கு ஒரு வேலை வாங்கித் தருவதாக பங்க்ஷனிற்கு வந்த மேலாளர் சொன்னார். எல்லோரையும்விட குமார் தான் அதிக கொண்டாட்டமாக இருந்தான்.  பங்க்ஷனுக்கு நாள் குறித்ததிலிருந்தே அவன் குடிப்பதை விட்டிருந்தான். ஓடிஓடி வேலை செய்தது சாந்திக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவளுக்கும்கூட  பங்க்ஷன் சந்தோசத்தைத் தந்தது. அது, வெகுநாட்களாக இறுக்கமாக ஓடிய வாழ்க்கையில் நல்ல மாறுதலாக இருந்தது.

“ஏண்டி அவசரப்பட்டு வேலைய எழுதிக் கொடுத்த! எனக்கு ஒரு போன் பண்ணிருக்கலாம்ல” என்று ராஜம் அக்கா கடிந்து கொண்டாள்.

“இல்லக்கா  நாம கேட்டபணத்த செட்டில் பண்ணிடுறேன், நீ மூணு மாசம் கழிச்சு மறுபடியும் வந்து புதுசா சேர்ற மாதிரி சேர்ந்துக்கோனு சொன்னாரு. பேக்கிங்க் செக்சன்ல சேர்த்துக்குறாராம். மார்னிங்க் ஷிப்ட் வந்தா போதுமா. நல்லது தான பண்ணிருக்காரு!”

“அவன் உன் சொந்தக்காரன் பாரு! நலல்து பண்ண! உன்ன இன்னும் கொஞ்சநாள் வச்சிருந்தா அவன் கிராச்சுட்டிலாம் கொடுக்கணும். இப்டியே யாருக்கும் ஒரு சலுகையும் கொடுக்காம டெம்ப்ரவரியா வச்சிக்கணும்னு பாக்குறாங்க. அதுக்கு இந்த மேனேஜர் சூப்பர்வைசர்லாம் உடந்தை.  இதுவே நாமலும் நல்லா படிச்சு வேற பெரிய வேலைக்கு போயிருந்தா இப்டிலாம் ஏமாத்த முடியாதுல!” ராஜம் பொறிந்து தள்ளினாள்.

“பரவாலக்கா! இப்போதைக்கு பிரச்சனை தீர்ந்துச்சுல. மூணுமாசம் கடைய வச்சு ஓட்டிக்கலாம். இவருமே, இனிமே குடிச்சா மருமக எப்டி மதிப்பா! நான் வேலைக்கு போறேன்ங்குறார்” சாந்தியின் பேச்சில் வெளிப்பட்ட சந்தோசத்தை கெடுக்கும் விதமாக ராஜம் எதுவும் பேச விரும்பவில்லை.

“அக்கா சாப்ட்டு தான் போணும்!” என்று சாந்தி பேச்சை மாற்றினாள்.

வந்தவர்கள், “பொண்ணு கிளி மாதிரி இருக்கே” என்று சொல்லிவிட்டு போயினர். மருமகளை பார்ப்பதற்கு சாந்திக்கு ஏனோ பாவமாக இருந்தது.

தனக்கு வங்கி வேலைக்கு போகவேண்டும் என்று தான் ஆசை, ஆனால் அப்பா இறந்ததால் கல்லூரி படிப்பை தொடரமுடியவில்லை என்று மருமகள் தன் மகளிடம் ஒருமுறை சொன்னதை சாந்தி கவனிக்காமல் இல்லை.

பங்க்ஷன் முடிந்து வாழ்க்கை சகஜமானது. மருமகள் வீட்டு வேலைகளை இழுத்து போட்டு செய்தாள். அவ்வப்போது மகளுக்கு படிப்பில் ஏதாவது சந்தேகம் எழும் போது தீர்த்து வைத்தாள். சில நாட்கள் கடந்ததும், ஊரடங்கிய ஒர் இரவில், சாந்தி தன் மருமகளிடம் சுற்றிவளைக்காமல் கேட்டாள்.

“நான் ஃபீஸ் கட்டுறேன். மறுபடியும் காலேஜ் போறியா!”

“அவரு என்ன சொல்வாரு!”

“அவன் யார் சொல்றதுக்கு. நீ படிச்சதான் உனக்கு எதிர்காலம்”

மருமகள் முகம் மலர, “சரிங்க அத்தை” என்றாள்.

“நீ  அம்மானே கூப்டு” என்று சொல்லிவிட்டு சாந்தி உறங்கப் போய்விட்டாள். மருமகளுக்கு சந்தோசத்தில் உறக்கம் வரவில்லை.

***

அந்திமழை இளையோர் சிறுகதைப்போட்டியில் (2026) பரிசு பெற்றக் கதை



Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.