இன்றோடு என் இணையதளம் தொடங்கி பதினைந்து ஆண்டுகள் நிறைவடைகின்றன என்பதைப் பகிர்வதில் மகிழ்கிறேன்.

கல்லூரிக் காலத்தில் தொடங்கிய பிளாக் எழுதும் அனுபவமும், தொடர் வாசிப்பும் ஒரு இணையதளத்தைத் தொடங்கி தொடர்ந்து எழுத முடியும் என்கிற நம்பிக்கையைக் கொடுத்தன. அதன் விளைவாக 2011-ல் இந்தத் தளத்தைத் தொடங்கினேன். பின்னர் சுஜாதா விருது பெற்றதில் இருந்து கூடுதல் பொறுப்போடு இந்தத் தளத்தில் எழுதி வருகிறேன்.
இதுவரை பல சிறுகதைகள், குறுங்கதைகள், நெடுங்கதைகள், குறுநாவல்கள் மற்றும் நாவல்கள் என இந்தத் தளம் தந்த உத்வேகத்தில் எழுதியிருக்கிறேன். அவற்றில் பல படைப்புகளை இந்தத் தளத்திலேயே நேரடியாக வாசிக்கலாம். அதோடு ஏராளமான திரைக்கதை கட்டுரைகள், சினிமா விவாதங்கள் என தொடர்ந்து எழுதும் வாய்ப்பையும் இந்தத் தளம் தந்திருக்கிறது.
எழுத்தின் மீதிருந்த ஈர்ப்பின் காரணமாகத்தான் நான் வேலையை விட்டுவிட்டு சில ஆண்டுகள் முழுநேரமாக எழுத முயற்சித்தேன். அதன் பின்பு வேறொரு வேலையில் சேரும் சூழலை வாழ்க்கை உருவாக்கினாலும், தொடர்ந்து எழுத வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருந்தேன். வேலை சார்ந்து சந்தித்த மனிதர்களின் வாழ்க்கைதான் இன்னும் பல நல்ல கதைகளை எழுதுவதற்கான உந்துதலைக் கொடுத்தது.
தமிழ்ச் சூழலில் எழுதுபவரைவிட, தன்னை எழுத்தாளராக நிறுவிக்கொள்பவரே அதிகம் கவனிக்கப்படுவார்.
எனக்கு எழுத மட்டுமே தெரியும். மற்றவற்றைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. எழுதுவது என்பது இருத்தலுக்கான அர்த்தத்தையும் அமைதியையும் கொடுக்கிறது. அதனால் எழுதுகிறேன்.
வாழ்நாளில் இதையெல்லாம் எழுதி விட வேண்டும் என்ற ஒரு நெடும்பட்டியல் என்னிடம் உண்டு. அதனால்தான் இலக்கியம், பல்ப் என்று எந்தவிதத் தயக்கமும் இல்லாமல், வாழ்க்கை, திகில், ஹாரர், நகைச்சுவை என எல்லாவற்றையும் எழுதி வருகிறேன். இப்போது என்னுடைய ஐந்தாவது நாவலாக ஒரு சரித்திரக் கதையை எழுதத் தொடங்கியிருக்கிறேன்.
எழுத வேண்டியவை இன்னும் நிறைய இருக்கின்றன.
ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
எழுத்து தொடரும்.

நன்றி
அரவிந்த் சச்சிதானந்தம்
Leave a comment