இது என்னுடைய மூன்று திரில்லர் கதைகளின் தொகுப்பு.
கிண்டிலில் வெளியாகி இருக்கிறது.
புத்தகத்தை வாங்க: இங்கே சொடுக்கவும்
நன்றி
அரவிந்த் சச்சிதானந்தம்
இது என்னுடைய மூன்று திரில்லர் கதைகளின் தொகுப்பு.
கிண்டிலில் வெளியாகி இருக்கிறது.
புத்தகத்தை வாங்க: இங்கே சொடுக்கவும்
நன்றி
அரவிந்த் சச்சிதானந்தம்
“As soon as you’re born they make you feel small
By giving you no time instead of it all”- John Lennon
தான் மூன்றுபேரை கொடூரமாக கொன்றுவிட்டதாக, இருபத்தி எட்டு வயது, அநிருத்தன் அண்ணா நகர் மேற்கு V5 காவல் நிலையத்தில் சரணடைந்த போது மணி இரவு 9.10. ஹெட் கான்ஸ்டபிள் கன்னியப்பன் ட்யூட்டி முடிந்து வீட்டுக்கு கிளம்பிக் கொண்டிருந்தார். திருமங்கலம் சிக்னலில் நடந்த திடீர் மாணவப் போராட்டத்தை கலைத்து கட்டுப்படுத்த போனதால், தன்னால் வழக்கம் போல் எட்டு மணிக்கு வீட்டுக்குக் கிளம்ப முடியவில்லை என்ற கடுப்பில், எப்படியாவது இந்தவருடம் இந்த வேலையை விட்டுப் போய் விட வேண்டும் என்ற சிந்தனையில் தன் போலிஸ் உடையை கலட்டி வைத்துவிட்டு காலையில் போட்டுவந்த மடிப்பு கலையாத சிகப்பு சட்டை நீல நிற பேண்ட்டை போட்டுக் கொண்டு அவர் ஓய்வறையில் இருந்து வெளியே வந்த போது அநிருத்தன் தலையை தொங்கப் போட்ட வாக்கில் போலிஸ் நிலையத்தின் நடு அறையில் நின்றுக் கொண்டிருந்தான்.
“யார் சார் நீங்க?” அவனுடைய நாகரிகமான உடை கன்னியப்பனின் தொனியை நிர்ணயித்தது.
பதில் சொல்லாமல் நின்றுக்கொண்டிருந்த அநிருத்தனிடம் அவர் மீண்டும் சப்தமாக கேட்டார்.
“ஏய் தம்பி! யார் நீ?”
“Till the pain is so big you feel nothing at all” அவன் பாடினான். அவருக்கு புரியவில்லை.
அவன் தன் இடது கையை உயர்த்தி மூன்று என்று காண்பித்தவாறே, தன் வலது பேண்ட் பாக்கெட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து மேஜை மீது வைக்கும் போதுதான் அவருக்குப் புரிந்தது. வேகமாக உள்ளே ஓடினார்.
***
ஆய்வாளர் அந்தோணிக்கு, அந்த இருபதுக்கு இருபது அறையில், மின்விசிறி வேகமாக சுற்றியும் வியர்த்து கொண்டே இருந்தது. வேலை செய்யாமல் சம்பளம் வாங்குவதே உத்தமம் என்று நினைக்கும் அவருக்கு இரவு ஒரு கொலைக்காரனை விசாரிப்பதெல்லாம் கனவில் கூட நடந்து விடக்கூடாத செயல்.
“அறிவுடையான். என் யூனியன் லீடர். ரொம்ப நாளா என்கிட்ட வம்பு பண்ணிக்கிட்டே இருந்தான். சுட்டுட்டேன். சவுக்கார்பேட்டை போய் வாங்கி வந்த துப்பாக்கில சுட்டேன். செத்துட்டான்” அநிருத்தன் சிரித்தான்.
“அப்பறம், அந்த மேனஜர் பாவேஷ் மிஸ்ராவ கொன்னேன். அப்பறம் அந்த எச்ச ஆடிட்டர்…. மூணு பேரும் மர்கயா….” அவன் மீண்டும் சிரித்தான்.
அவன் எதுவும் விபரீதமாக செய்துவிடக் கூடாது என்பதற்காக கன்னியப்பனும், உதவி ஆய்வாளர் சதீஷ் குமாரும் அவனை கண்காணித்தவாறே அவனுக்கு பின்னே நின்றுக் கொண்டிருந்தனர்.
“கவரைபேட்டைல இருக்கு சார் என் வீடு. அங்க இருந்து அண்ணா நகர் வர எவ்ளோ நேரம் ஆகும் தெரியுமா சார்! காலைல 8.45 க்கு ப்ரான்ச்ல இருக்கணும். எவ்ளோ வேலை செய்றேன்.. பாராட்டக் கூட வேணாம். எப்ப பாத்தாலும் மட்டம் தட்டிக்கிட்டே…”
“போயும் போயும் வேலைல பிரச்சனைனா கொலை பண்ணுணீங்க?”
“போயும் போயும் வேலையா! இங்க வேலை தான் சார் எல்லாருக்கும் வாழ்க்கையே. வீட்ல என் அம்மா அப்பா கூட இருக்குற நேரத்த விட ஆபிஸ்ல இருக்குற நேரம் தான் சார் அதிகம். எவ்ளோ வேலை செஞ்சாலும், இவனுங்க தலைக்கு மேல உக்காந்துகிட்டு டார்ச்சர் பண்ணிக்கிட்டே இருக்காங்க சார்”
கன்னியப்பன் அவனை ஆமோதிக்கும் வகையில் தலை அசைத்தவாறே அந்தோணியைப் பார்த்தார். அந்தப் பார்வை அந்தோணியையும் யாரவது சுட்டுவிட்டால் நன்றாக தான் இருக்கும் என்பது போல் இருந்தது. அந்தோணி அதை கவனிக்கவில்லை.
“ஒரு வேலையும் செய்ய மாட்டான் சார் என் மேனஜர். எங்கேயோ டெல்லில இருந்து வந்து இங்க சுரண்டி திங்குகுறான். சுரண்டி. அதுக்கு இந்த அறிவுடையான் சப்போர்ட். திருட்டு பசங்க சார் எல்லாரும். அதான் ஒண்ணா சேந்துட்டானுங்க. வேலை கொடுத்துகிட்டே இருப்பானுங்க. பண்ணாத தப்புக்கு திட்டுவாங்க. வேலையயும் செஞ்சுட்டு பேச்சும் வாங்கனும். உடம்புலாம் கூசும் சார்…
“ஒரு நாள் ஒரு RTGS தப்பா போட்டுட்டேன் சார். காசு வேறொருத்தனுக்கு தப்பா போயிருச்சு. அத நாங்க கண்டுபுடிக்கிறதுக்குள்ள அவன் அந்த காச எடுத்துட்டான். இவ்ளோ வேலை கொடுத்தா ஒருத்தன் சறுக்க தான் செய்வான், It’s a human error. அதுக்கு நானும் பொறுப்பு தான். ஆனா நான் மட்டும் பொறுப்புங்கற மாதிரி என்ன அசிங்கப்படுத்தி, என் சம்பளத்துல இருந்து அந்த காச ரெகவர் பண்ணுவேன்னு மிரட்டி எனக்கு மெமோலாம் கொடுத்தாங்க.
நான் யார் அக்கௌண்டுக்கு காசு போச்சோ அந்த ஆள தேடிப் புடிச்சு ரெண்டு மாசம் அவன் பின்னாடி அலைஞ்சி பாதி காச வாங்கினேன். அவன் மீதி காச ரெண்டு மாசம் கழிச்சு தான் தருவேன்னு சொல்லிட்டான். அதனால் என் கையில இருந்த காச போட்டேன். ஆனா அந்த பிரச்சனைய நான் சால்வ் பண்ணியும் அத வச்சே என்ன கேவலப் படுத்திக்கிட்டு இருக்காங்க.
“நேத்து அந்த ஆடிட்டர் முன்னாடி இத சொல்லியே என்ன அசிங்க படுத்திட்டாங்க சார். அதான் இன்னைக்கு துப்பாக்கியோட வந்தேன். என்ன அசிங்க படுத்துன அறிவுடையான், அந்த பாவேஷ் அத வேடிக்கை பாத்த ஆடிட்டர் மூணு பேரயும்…”
அவன் கையை சுடுவது போல் வைத்துக் காட்டினான்.
அந்தோணி கன்னியப்பனைப் பார்த்தார். கன்னியப்பனுக்கும் வியர்க்க தொடங்கியது.
“அந்த ஆடிட்டர் என் லிஸ்ட்லயே இல்ல… என்ன பத்தி பேசி ஏதோ சிரிச்சிக்கிட்டே இருந்தாங்க, டக்குனு எந்திருச்சு அந்த ஆடிட்டர சுட்டேன். அறிவுடையான் அப்படியே உறைஞ்சி போய் நின்னுட்டான். அந்த பாவேஷ் அலறிகிட்டே ஸ்டோர் ரூம்குள்ள ஓடுனான்…. அறிவுடையான் முகத்த பார்க்கணுமே… !” அநிருத்தன் கண்கள் ஒளிர சிரித்தான்.
“அறிவுடையான் சார். ஜிந்தாபாத்… யூனியன் ஜிந்தாபாத்” அநிருத்தன் துப்பாக்கியை அறிவுடையான் நோக்கி நீட்டிய போது மேலாளர் இருக்கைக்கு பின் மாட்டப் பட்டிருந்த சுவர் கடிகாரம் எட்டு முறை அடித்தது.
“வேணாம் அநிருத். உனக்கு என்ன வேணுமோ செய்றேன். யூனியன்ல ட்ரசரர் ஆக்குறேன். இன்னும் ரெண்டு வருசத்துல நான் ரிட்டையர் ஆகிடுவேன் அநிருத். அப்பறம் யூனியன்ல எல்லாம் நீ தான்”
அநிருத்தன் சப்தமாக சிரித்தான்.
“அப்படியே சுட்டா கிக்கு இல்ல சார். அதான் பாட்டு போட்டேன்…” அநிருத்தன் தன் தலையை திருப்பி கன்னியப்பனை பார்த்து சொல்லிவிட்டு, தன் மொபைலில் ப்ளே ம்யுசிக்கை இயக்கினான்.
கித்தார் இசையோடு சேர்ந்து ஜான் லெனனின் குரல் மேலெழும்பி அந்த போலிஸ் ஸ்டேஷனை நிறைத்தது.
“அது என்னமோ தெரில சார், இந்த பாட்ட கேட்டாலே கொலை பண்ணனும்னு தோணுது சார்”
“எதுக்கு தம்பி அந்த பாட்ட கேட்டுக்கிட்டு, கேட்காதீங்க….” கன்னியப்பன் அப்பாவியாக சொன்னார்.
“மூளைக்குள்ள கேட்டுக்கிட்டே இருக்கு சார்… “ அவன் சொல்லிவிட்டு பாடத் தொடங்கினான். கன்னியப்பனும் அந்தோனியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“They hate you if you’re clever and they despise a fool” பாடியவாறே அவன் அந்தோணியைப் பார்த்தான். அவர் கன்னியப்பனை நோக்கியதை கவனித்தான்.
“புரிலையா சார். பாரதியார் சொன்னாரே. நல்ல கித்தார் செஞ்சு சேத்துல தூக்கி போட்டியே… சொல்லடி சிவசக்தி என்னை சுடர்மிகு அறிவுடன் படைச்சுட்டியேனு… அந்த மாதிரி தான் இதுவும் ”
கன்னியப்பன் சற்றே சகஜமாகி அநிருத்தன் முன்னே வந்து நின்றார். அவருக்கு ஏனோ அநிருத்தன் மீது கோபம் வரவில்லை. இரக்கம் தான் வந்தது.
“இவ்ளோ அறிவா பேசுறீங்களே தம்பி. அப்பறம் ஏன் கொலை அது இதுன்னு…” அவர் பேசி முடிப்பதற்குள் அவன் சப்தமாக சிரித்தான்.
அநிருத்தனின் சிரிப்பொலி அந்த வங்கி அறையெங்கும் எதிரொலித்தது. கூடவே கித்தார் இசையும்.
“அறிவுடையான் சார். அறிவுடையான் சார். உங்க கிட்ட ஒன்னு சொல்றேன் சார். எனக்கு கித்தார் வாசிக்கனும்னு ரொம்ப ஆசை சார், ஆனா எங்க வீட்ல சேத்துவிடல. படிப்பு படிப்பு படிப்பு. படிச்சா மேல வந்திருலாம்னு எங்க அப்பாவும் அம்மாவும் நம்புனாங்க சார். அப்பாவி சார் அவங்க. என்ன படிச்சாலும் உன்ன மாதிரி சுரண்டல் நாய் கீழ, சாரி அறிவுடையான் சார், உங்கள மாதிரி நாய் கீழ தான் வேல செய்யனும், கடைசி வரைக்கும் நீங்கலாம் எங்கள கால்ல போட்டு மிதிப்பீங்கனு அவங்களுக்கு தெரில…”
‘When they’ve tortured and scared you for twenty-odd years
Then they expect you to pick a career
When you can’t really function you’re so full of fear’
ஜான் லெனன் பாடிக் கொண்டே இருந்தார்.
“வேணாம் அநிருத். ப்ளீஸ். ப்ளீஸ் என்ன விட்டிரு…”
தாமதிக்காமல் அநிருத்தன் அவருடைய இடது கையில் சுட்டான். குண்டு விரலை கிழித்து ரத்தம் பீய்ச்சிக் கொண்டு வர, அறிவுடையான் அலறினார். அநிருத்தன் வாசலுக்கு ஓடினான். வங்கியின் ஷட்டர் வெளியே மூடப் பட்டிருப்பதை உறுதி செய்து கொண்டான். வங்கி ஊழியர்கள் மட்டும் வந்து போக, பக்கத்தில் அமைந்திருந்த சிறிய வழியின் கதவை உள்ளிருந்து சாத்திவிட்டு, மீண்டும் மேலாளர் இருக்கைக்கு வந்தான்.
அறிவுடையான், கையைப் பிடித்தவாறே தரையில் அமர்ந்து வலியில் முனகிக் கொண்டிருந்தார். .
“ப்ளீஸ் என்ன விட்டிரு”
“ப்ளீஸ் என்ன சுட்டுருனு சுட்டுருனு கேட்குது சார்” அநிருத்தன் சொல்ல அறிவுடையான் வாயை மூடிக் கொண்டார்.
“நாட்ல பாதி பேருக்கு வேலை இல்லை. நீங்கலாம் இந்த மாதிரி சேப்ட்டியான வேலைல உக்காந்துகிட்டு, யூனியன் பேர சொல்லி வேல செய்யாம வெட்டி சம்பளம் வாங்கிட்டு இருக்கீங்க… அது சரி சார், யூனியன் தலைவர்னா பாரபட்சம் பாக்காம இருக்கணும். நீங்க ஏன் சார் அந்த டெல்லிகாரனுக்கு மட்டும் சப்போர்ட் பண்றீங்க!”
“நாமதான்…..” அவர் சொன்னது அவனுக்கு புரியவில்லை
“ஹான்…” என்றவாறே துப்பாக்கியை அவரை நோக்கி நீட்டினான்.
அவர் தெம்பை வரவழைத்து கொண்டு பேசினார்.
“நாமதான பாத்துக்கணும், வெளில இருந்து வரவங்கள…” அறிவுடையான் பேச முடியாமல் பேசி முடிப்பதற்குள் அவரது வலது கையில் சுட்டான் அநிருத்தன்.
அவர் அலறினார். அநிருத்தன் லெனானின் பாட்டிற்கு காற்றில் கித்தார் வாசித்தவாறே அவர் அருகில் வந்தான். அவர் தொடர்ந்து அலற, அவன் அவரை நெருங்கி, குனிந்து அவர் கண்களைப் பார்த்து பேசினான்.
“நல்லா பொய் பேசுறீங்க சார். அதான் சுட்டேன்”
“அநிருத். அந்த RTGS ட்ரான்ஸாக்சன் விசயத்த மனசுல வச்சுதான் இதெல்லாம் பண்றியா! அந்த காச நான் கொடுத்துறேன். ப்ளீஸ்…”
அநிருத்தன் சிரித்தான்.
“என் பிரச்சனைக்கு மட்டும் உங்கள சுடல சார். என்ன அப்டி சுயநலவாதினு நினச்சுடாதீங்க. அன்னைக்கு நான் என்ட்ரி மட்டும்தானே போட்டேன்! வெரிபை பண்ணினது உன் மேனஜர் தான! அப்ப அவனும்தான சார் பொறுப்பு. அவன ஏன் ஒன்னும் பண்ணல! இந்த பாரபட்சம் தான் எனக்கு உறுத்துது. இந்த ஊர்ல எங்க போனாலும் இதே பாரபட்சம். தப்பு பண்றது ஒருத்தன் தண்டனை அனுபவிக்கிறது இன்னொருத்தன்.
“சொல்லுங்க சார், ஏன் அவன காப்பத்திவிட்டீங்க, அவன் உங்க ஜாதி இல்லல…!”
அறிவுடையான் இல்லை என்று தலை அசைத்தார்.
“நீங்க புரட்சி பேசுற ஜாதி, அவன் புரட்சிய ஒடுக்குற ஜாதி. நீங்க ரெண்டு பேரும் எப்படி ஒன்னு சேந்தீங்க…! உங்க ரெண்டு பேரையும் எது ஒரு புள்ளில இனைக்குது?”
அறிவுடையான் அமைதியாக இருந்தார்.
அநிருத்தன் துப்பாக்கியை அறிவுடையான் நெத்தியில் வைத்தான்.
“கேள்விக்கு பதில் சொல். இல்லையேல் மாண்டு போ. அம்புட்டுதேன். ஜிந்தாபாத்”
“அவன் யூனியனுக்கு contribution கொடுக்குறான்…”
“உண்மைய சொல்லுங்க சார். யூனியனுக்கா இல்ல உங்களுக்கா…!” அநிருத்தன் சிரித்தான்.
“என்ன மன்னிச்சிடு…” அறிவுடையான் கெஞ்சினார்.
அநிருத்தன் மீண்டும் சிரித்தான்.
“so, பணம் தான் ஜாதி மதம் இனம் மொழி கடந்து உங்க எல்லாரையும் நேர் கோட்டுல இனைக்குது. உங்க ஜாதிகாரனப் பாத்தா, நாமலாம் ஒரே ஜாதி. வேற ஜாதியா இருந்தா நாமெல்லாம் ஒரே ஊரு. இல்ல வேற ஊரா இருந்தா நாமெல்லாம் ஒரே யூனியன், ஒரே நாடு இப்டி எதையாவது சொல்லி ஏமாத்திகிட்டே இருக்குறது. ஆனா பின்னாடி காசு காசுனு காச மட்டுமே குறிக்கோளா வச்சு நீங்க, உங்க புள்ளக்குட்டிங்க மட்டும் நல்லா இருக்க வேண்டியது.
“உண்மைலேயே இங்க ரெண்டே ஜாதி தான் சார் இருக்கு. ஒன்னு காசு இருக்க ஜாதி, இன்னொன்னு காசு இல்லாத ஜாதி. வாய்ப்பு இருக்க ஜாதி, வாய்ப்பு இல்லாத ஜாதி. வாய்ப்பு இருக்கவன் இல்லாதவன ஏச்சி பொழைக்குறான். நீங்கலாம் என்ன ஏச்சிங்களே அது மாதிரி….”
“தப்பு தான். நான் பண்ண எல்லாமே தப்பு தான். என்ன விட்டுரு ப்ளீஸ்…” அவருக்கு மூச்சு இறைத்தது.
“விட்டுர்றேன். நீங்க தப்ப ஒத்துகிட்ட மாதிரி அந்த மேனஜர் பயலையும் ஒத்துக்க வைங்க. மன்னிச்சு விட்டுர்றேன்”
அறிவுடையான் கண் கலங்க அவனையேப் பார்த்தார்.
“அப்பறம் யோசிச்சேன், எதுக்கு மன்னிச்சிகிட்டு! இவங்களலாம் திருத்தவே முடியாதுன்னு. அதான் அறிவுடையான நெத்தில சுட்டேன். அந்த மேனஜர வாய்லயே சுட்டேன்.
அந்த பயந்தாங்கோலிய பாக்கணுமே. உள்ள, அந்த யூஸ் பண்ணாத பழைய லேடிஸ் டாய்லெட்ல ஒளிஞ்சிகிட்டு இருந்தான். ஜுராசிக் பார்க் படத்துல டைனாசருக்கு பயந்து ஒருத்தன் பாத்ரூம்ல உக்காந்துப்பானே அவன மாதிரி. துப்பாக்கிய பாத்ததும் பண்ணுன தப்பு, பண்ணாத தப்பு எல்லாத்தையும் ஒத்துக்கிட்டான்…”
“மாப் கர்தீஜியே அநிருத்ஜி. மாப் கர்தீஜியே” பாவேஷ் மிஸ்ரா இரு கைகைளைக் கூப்பி கும்பிட்டான்.
“அறிவுடையான் சார். என்ன சார் இவரு. இப்டி கெஞ்சிறாரு! பாக்கவே பாவமா இருக்கு சார்”
சொன்னவாறே அநிருத்தன் அவர்கள் இருவரையும் மாறிமாறி பார்த்தான்.
“ஆனா ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர தான் உயிரோட விடப் போறேன். அபி ஹம் க்யா கரூன்…! போலோ சாப் “
“மாப் கர்தீஜியே அநிருத்ஜி. மாப் கர்தீஜியே. நான் பண்ணதுலாம் தப்புனு ஒத்துக்குறேன்”
“ரொம்ப லேட் மேனஜர் சாப்”
அறிவுடையானுக்கு பயம் வந்தது. அநிருத்தன் அந்த மேலாளரை மன்னித்து விட்டால் என்னாவது!
“அவன சுட்டுடு அநிருத். நான் உனக்கு செய்யவேண்டியத செய்வேன்” அறிவுடையான் பதட்டப்பட்டார்.
அநிருத்தன் ஒரு நொடி கண்களை மூடி யோசித்தான். அவன் மனதில் மீண்டும் கித்தார் இசை.
‘There’s room at the top they’re telling you still
But first, you must learn how to smile as you kill
If you want to be like the folks on the hill’
கண் விழித்தான்.
“சரி சார். இந்த மேனஜர் நமக்கு வேணாம். நீங்களாவது இவன்ட்ட வாங்குற காசுக்கு நியாயமா வேல பாக்குறீங்க. யாருகிட்டலாம் காசு வாங்குறீங்களோ அவங்களுக்குலாம் சொம்பு தூக்குறீங்க. ஆனா இந்த பாவேஷ் பய, பேங்க்ல சம்பளம் வாங்கிட்டு வேலையே செய்ய மாட்றான்…” என்று துப்பாக்கியை பாவேஷ் மிஸ்ரா முன்பு நீட்டினான்.
“அநிருத்ஜி ப்ளீஸ்.”
“அறிவுடையான் சார் நேத்து ஒரு இங்கிலீஷ் படம் பாத்தேன்… எப்டி சுடுறதுன்னு ப்ராக்டிஸ் பண்றதுக்கு நிறைய படம் பாத்தேன்ல, அப்ப அந்த சீன் வந்துது. அதுல ஒருத்தன் கொலை பண்றதுக்கு முன்னாடி என்ன சொல்வான் தெரியுமா…?
அறிவுடையான் இல்லை என்பது போல் சம்ப்ரதாயமாக தலை ஆட்டினார்.
“உங்களுக்கு புரியுற மாதிரி சொல்லவா?
“அந்த கேடுகெட்ட மனிதர்களை உக்கிரமான தண்டனைகளினால் கொடிதாய்ப் பழிவாங்குவேன்; நான் அவர்களைப் பழிவாங்கும்போது நானே கடவுள் என்று அவர்கள் அறிந்துகொள்வார்கள். பிதாசுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென்”
சொன்ன நொடியில் அவனுடைய துப்பாக்கி குண்டு மிஸ்ராவின் வாய்க்குள் சீற, அவன் அப்படியே பின்னே சாய்ந்த வாக்கில் சரிந்தான்.
அநிருத்தன் அறிவுடையானைப் பார்த்தான்
“உங்கள மன்னிச்சு விட்டுறால்ம்னு தான் சார் பாத்தேன். இங்க நீங்கலாம் பண்ணுன தப்புக்குதான் நான் தண்டனை கொடுக்குறேன். ஆனா உங்கள வெளில விட்டா என்னைய மாட்டி விட்டிருவீங்க. சட்டம் என்ன தண்டிக்க முடியாது. தண்டிக்க விட மாட்டேன்…” அநிருத்தன் மீண்டும் சிரித்தான்.
***
அந்தோணிக்கு சில நிமிட மாறுதல் தேவைப்பட்டது. எழுந்து பின்னே சென்று சிகரெட்டை பற்ற வைத்தார். கன்னியப்பன் வாசலில் நின்ற சென்ட்ரியை உள்ளே வர சொல்லிவிட்டு, அவரும் பின்புறம் சென்றார்.
“என்னய்யா கோக்கு மாக்கா இருக்கான்!” அந்தோணி ஒரு சிகரட்டை கன்னியப்பனிடம் நீட்டியவாறே பேசினார். .
“இவன ரிமாண்ட்ல வச்சுட்டு வீட்டுக்கு போனா கூட தூக்கம் வராதே. எங்க இருந்து தான் வரானுங்களோ. அப்படியே தலைமறைவாயிருக்கலாம்ல! ஏதாவது ஸ்பெஷல் ஸ்க்வாட் தலைல கேச கட்டிட்டு நாமா ஒதுங்கி இருக்கலாம். நேரா நம்ம ஸ்டேசனுக்கு வந்து நம்ம கழுத்த அறுக்குறான்”
“ரொம்ப பாதிக்கப்பட்டிருப்பான் போல சார். நம்மள கூட வெயில பந்தோபஸ்து இது அதுனு நிக்க வச்சா கோபம் வருமே. சுட்டுரலாம்னு கூட நானே நினைச்சிருக்கேன். இவன் பண்ணிட்டான்…” கண்ணியப்பன் புகையை கக்கும் சாக்கில் மனதிலிருப்பதையும் வெளியே கக்கினார்.
அந்தோணி கன்னியப்பனை ஏற இறங்கப் பார்த்தார்.
“அந்த எஸ்.ஐ பயல கூட்டிட்டு க்ரைம் சீன் போங்க…” கன்னியப்பன் எதிர்ப்பார்த்ததை போல் அந்தோணி சொன்னார்.
“சீட்ட விட்டு நகரவே மாட்டேங்குறான் நாய். அந்த பையன் செஞ்சது தான் சரி. இவனையும் அதே மாதிரி…”
“என்ன கன்னியப்பன். யோசிச்சுகிட்டே நிக்குறீங்க?” அந்தோணி சிடுசிடுத்தார். கன்னியப்பன் சிகரட்டை தரையில் போட்டு மிதித்தார்.
***
கன்னியப்பன் உதவி ஆய்வாளர் சதீஷின் இருசக்கர வாகனத்தின் பின்னே அமர்ந்திருந்தார். வண்டி அண்ணா நகர் பள்ளி சாலையில் திரும்பியது.
“அந்த பையன நினச்சா பாவமா இருக்கு தம்பி…”
சதீஷ் எந்த பதிலும் சொல்லாமல் சாலையில் மட்டும் கவனம் செலுத்தி வண்டியை ஓட்டினார்.
“கோவத்துல அடிச்சிருந்தா கூட கேஸ் கம்மி, இவன் ப்ளான் பண்ணி துப்பாக்கிலாம் வாங்கிட்டு வந்திருக்கான். அவன் வாழ்க்கையே போச்சு…“ கன்னியப்பன் சதீஷின் பதிலை எதிர்ப்பாரதவராய் தனக்குத் தானே பேசிக் கொண்டே வந்தார்.
“இவனலாம் வெளிய விடறது ரிஸ்க் தான் சார். அவனுக்குள்ள எவ்ளோ வெறி இருக்கு பாருங்க….” சதீஷ் தன் பங்கிற்கு தன் கருத்தைப் பதிவு செய்தார்.
“அவனுக்குள்ள அவ்ளோ வெறிய வர வச்சது யாரு! வெறும் போலீசா மட்டும் எல்லாத்தையும் பாக்கக் கூடாது தம்பி. அவங்க அப்பா அம்மாக்கு தெரிஞ்சா எப்டி பதறுவாங்க….”
“நம்ம என்ன சார் பண்ண முடியும். நம்ம ட்யூட்டிய தான் பாக்க முடியும்!”
கன்னியப்பன் பதில் எதுவும் பேசவில்லை. ஆனால் அவர் மனதில் ஆயிரம் எண்ணங்கள். ‘ஆமா பெரிய ட்யூடி. டைரக்டா எஸ்.ஐ எக்ஸாம் எழுதி வரவனுங்களுக்கு சொந்தமா யோசிக்கக் கூட தெரியாது. இன்ஸ்பெக்டர் சொல்றது தான் வேத வாக்கு. ட்யூடி பத்தி பேசுறான்”
அவர் சிந்தனையை கலைக்கும் விதத்தில் வண்டி திடிரென்று நின்றது. சுதாரித்தார். அந்த வங்கியின் டிஜிட்டல் பலகை அவர்களை வரவேற்றது. தன் மொபைலை பார்த்தார். மணி 10.35. மொபைல் பேட்டரியின் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்ததை கவனித்தார்.
“லோனவா கூனாவானு ஒரு மொபைல் என் பையன் வாங்கிக் கொடுத்தான். பேட்டரியே நிக்க மாட்டேங்குது…” சொல்லியவாறே வண்டியிலிருந்து இறங்கினார்.
வங்கியின் வளாகத்திற்குள் நுழைந்ததும் ATM வரவேற்றது. பக்கத்தில், அநிருத்தன் விவரித்ததுபோல் பெரிய ஷட்டரால் வாசல் மூடப் பட்டிருந்தது. பக்கத்தில் சிறிய வழி மட்டும் திறந்து இருந்தது. உள்ளே வெளிச்சம் தெரிந்தது. கன்னியப்பன் வாசலிலேயே நின்றார்.
“உள்ள போங்க சார். நான் வண்டிய நிறுத்திட்டு வரேன்” உதவி ஆய்வாளர் சொன்னார்.
“க்ரைம் சீன்னாலே இப்பலாம் அலர்ஜி. வயசாகுதுல்ல…” என்றவாறே வங்கியின் உள்ளே காலடி எடுத்து வைத்தார்.
மூன்று பிணங்களை எதிர்ப்பார்த்து உள்ளே சென்றவரை அசையாமல் நிற்கவைத்தது உள்ளே அவர் கண்ட காட்சி.
மூன்று பேர் சந்தோசமாக உரையாடிக் கொண்டிருந்தார்.
“கியா பாத் ஹே சார்” என்றவாறே வாசலை பார்த்து அமர்ந்திருந்த பாவேஷ் மிஸ்ரா கன்னியப்பனை கவனித்தார். அவரின் முன்னே இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்த இருவரும், பாவேஷ் வாசலை பார்ப்பதைக் கண்டு திரும்பி பார்த்தனர்.
“என்ன சார்!” குள்ளமாக கட்டை மீசை வைத்த அந்த ஆசாமி கன்னியப்பனை பார்த்து வினவினார்.
“நான் V5 ஸ்டேசன் ஹெட் கான்ஸ்டபிள்” பாவேஷின் மேஜையில் இருந்த ஏரளாமான காகிதங்களை கவனித்தவாறே கன்னியப்பன் சொன்னார். அந்த ஆசாமி இருக்கையில் இருந்து எழுந்து கன்னியப்பனை நோக்கி வந்தார்.
“வாங்க சார். ATM ரவுண்ட்ஸ் என்ட்ரி போட வந்தீங்களா? ஆடிட்டிங்னு லேட்டா வர்க் பண்றோம்…” அவராகவே படபடவென பேசிக் கொண்டே போனார்.
“இல்ல சார். இங்க அறிவுடையான்….?”
“நான் தான் சார். உக்காருங்க சார்! என்ன விஷயம்?”
கன்னியப்பன் சில நொடிகள் பேசாமல் நின்றார்.
***
கள நிலவரம் அந்தோணிக்கு வந்து சேர்ந்ததும் அவர் சகஜமாகி விட்டிருந்தார். தன் அறையில் தன் மேஜை மீது அமர்ந்தவாறே அநிருத்தன் கொண்டு வந்த துப்பாக்கியை முன்னும் பின்னுமாக திருப்பிப் பார்த்தார்.
“ஒரிஜினல் மாதிரியே இருக்கு பாருயா. நானே ஏமாந்துட்டேன்….” அந்தோணி சொல்ல, சென்ட்ரி துப்பாக்கியை கையில் எடுத்து பார்த்தார்.
“வெயிட்டு கூட ஒரிஜினல் அளவுக்கு இருக்கு பாருங்க….” என்றார்.
அந்தோணி தன் துப்பாக்கியை மேஜை டிராயரிலிருந்து எடுத்து அநிருத்தன் கொண்டு வந்த துப்பாக்கியோடு ஒப்பிட்டுப் பார்த்தார்.
“அப்படியே தத்ரூபமா செஞ்சு விக்குறானுங்க….
மாடல் கன்-னாம். ஆன்லைன்ல வாங்கிருக்கான். இல்லன இந்த பச்சாக்குலாம் துப்பாக்கி வாங்கத் தெரியுமா!” அந்தோணி சிரித்தார். சென்ட்ரியும் பதிலுக்கு சிரித்தார்.
“ஹ்ம்ம். அவன் எதாவது சாப்புட்றானா கேட்டியா?”
“வேணாம்னு சொல்லிட்டான் சார்”
“கொஞ்ச நேரத்துல ஆட்டி படச்சுட்டான்யா. கண்ட படங்கள பாக்க வேண்டியது… இப்டி எதாவது பண்ண வேண்டியது. படிச்சவன்தான்யா இப்பலாம் இப்டி ஆகிடுறானுங்க என்னையா ஸ்ட்ரெஸ் நம்ம வேலைல இல்லாத ஸ்ட்ரெஸ்ஸா!”
“இந்த காலத்து புள்ளைங்களால எதையும் ஹாண்டில் பண்ண முடில சார்…”
அந்தோனி அறையை நோட்டம் விட்டவாறே, “என்னையா பண்றான் அவன் இவ்ளோநேரம்!” என்றார்.
சென்ட்ரி அறையின் மூலையிலிருந்த பாத்ரூம் கதவை தட்டினார். உள்ளே தண்ணீர் வழியும் சப்தம் கேட்டது. அறையின் வெளியே சதீஷை கண்டதும் அந்தோணி வெளியே போனார்.
சென்ட்ரி, “ஹேய் தம்பி சீக்கிரம் வா…” என்று சொல்லியவாறே கதவை மீண்டும் தட்ட எத்தனிக்க, அநிருத்தன் கதவைத் திறந்தான். அவன் கண்கள் கலங்கியிருந்தன
“வா. உன் பேங்க்ல இருந்து வந்துட்டாங்க….” என்றவாறே சென்ட்ரி வெளியே சென்றார்.
***
“ஆடிட் ரிப்போர்ட் சைன் பண்ணிக்கிட்டு இருந்தோம். லாஸ்ட் நாள் ஆடிட் எப்பவும் லேட் ஆகும் சார். சாப்புட போறேனு கிளம்பி வந்தாரு சார்” அறிவுடையான் அலட்டிக் கொள்ளாமல் பேசினார். அந்தோணி அநிருத்தனை கூர்ந்து கவனித்தார். அவன் அமைதியாக நின்று கொண்டிருந்தான்.
“நல்ல பையன் தான் சார். எதாவது ஸ்ட்ரெஸ்ல பேசிருப்பாரு. நாங்க பாத்துக்குறோம்”
“கவுன்சிலிங் கொடுங்க… கூட்டிட்டு போங்க….” அந்தோணி சொல்லிவிட்டு பிரச்சனை தன்னை விட்டு போனால் போதும் என்று உள்ளுக்குள் ஆசுவாசப் பட்டுக்கொண்டார். அறிவுடையான் வாசல் நோக்கி நடந்தார். அநிருத்தனும் தலை குனிந்தவாறே வெளியேறினான்.
“சார்” என்றவாறே கன்னியப்பன் அந்தோணி அருகே வந்தார்
அந்தோணி என்ன என்பது போல் பார்த்தார்.
“போற வழி தான, நானே விட்டுட்டு வீட்டுக்கு போய்டுறேனே! பாவம் சார் அந்த பையன், இவரு கூட அனுப்ப வேணாம். நான் நல்ல வார்த்தை சொல்லி விட்டுட்டு போலாம்னு பாக்குறேன்”
“ஏன் அப்டியே வீட்லயே விட்டுடுங்களேன்!”
கன்னியப்பன் அமைதியாக நின்றார்.
“சரி கூட்டிட்டுப் போங்க…”
கன்னியப்பன் நகர்ந்தார்.
“லூசு பையன். எதுக்கு போலிஸ் ஸ்டேசன் வந்தான்!” அந்தோணி சதீஷிடம் சொல்லிக்கொண்டிருந்தது கண்ணியப்பனுக்கு என்னமோ போல் இருந்தது.
***
கன்னியப்பன் மெதுவாகதான் வண்டியை ஓட்டினார். அவருக்கு அநிருத்தனுடன் பேச வேண்டும் என்பது போல் இருந்தது.
“தம்பி மனச போட்டு குழப்பிக்காத, வீட்ல சொல்லி கல்யாணம் பண்ணிக்கோ. யாருக்கு தான் பிரச்சனை இல்ல. வேலைனா முன்ன பின்ன தான் இருக்கும்…”
அநிருத்தன் பதில் பேசாமல் வந்தான்.
“நல்ல கவுரவமான வேலைல இருக்க, இதுக்கு மேல லைப்ல என்ன வேணும். என் பையன் மாதிரியா. பத்தாங்க்ளாஸ் தாண்டல, கார் ஒட்டுது. நீயும் என் புள்ள மாதிரி தான். என்ஜாய் பண்ண வேண்டிய வயசுல இப்டிலாமா இருக்குறது! ஜாலியா இரு.
“பேங்க் வேலையே புடிக்கலனா, போலிஸ் காரன் எங்க நிலைமைய நினச்சுப் பாரு. எங்கேயோ ஹெலிகாப்டர்ல பிரதமர் பறக்குறாருனு எங்கள வெட்ட வெயில்ல நிக்க வைப்பான். உங்கள மாதிரி டைமிங்லாம் கிடையாது. பொட்டல சாப்பாடு தான். அதுவும் சரியா பத்தாது. அப்டியே ஒட்டிட்டேன். எனக்கும் தான் வேலை புடிக்கல, விட்டுறலாம்னு தோணும். எனக்கு பசிக்கலனாலும் என் பொண்டாட்டி புள்ளைக்கு பசிக்குமே. இதோ இன்னும் ரெண்டு வருசத்துல ரிட்டயர்மெண்ட்.
வண்டி பள்ளி சாலையில் திரும்பியது.
“சாபட்டியா. சாப்ட்டு போலாமா…!”
அநிருத்தன் தன் மௌன விரதத்தைக் கலைத்தான்.
“வேணாம் சார்.
“சாப்பாடு வாங்க ஆள் இல்ல, நீ போய் வாங்கிட்டுவானு சொன்னங்க சார். அதான் ஒரு மாதிரி இருந்துச்சு. பேங்க்ல ஒரு ஆபிசரா இருந்தா, க்ளெர்க் வேலை செஞ்சு, ஆபிசர் வேலை செஞ்சு, சப்-ஸ்டாப் வேலை செஞ்சு, அபப்றம் எடுபுடி வேலையும் செய்யனும். வெளில இருந்து பாக்குறவங்களுக்கு தான் சார் பெரிய பேங்க் வேலை. உள்ள அப்படி இல்ல. நரகம். ரொம்ப கன்னிங்கா இருக்கவங்க எல்லா இடத்துலையும் தப்பிச்சிடுறாங்க. என்ன மாதிரி ஆள்லாம் சர்வைவ் பண்றது ரொம்ப கஷ்டம் சார்…”
“உனக்கு என்ன தம்பி குறை. என் புள்ளையா நினச்சு சொல்றேன், நீ நல்லா இருப்ப….”
வண்டி வங்கியை நெருங்கியதும் கன்னியப்பன் சொன்னார்,
“அவங்க கிட்ட தேவை இல்லாத பேச்சு வச்சுக்காத. வீட்டுக்கு போய் நல்லா தூங்கு. எல்லாம் சரியாகிடும்….”
வண்டி வங்கியின் முன்பு நின்றது. அநிருத்தனை உள்ளே விட்டுவிட்டு, கன்னியப்பன் வாசலில் வந்து நின்றார். தெருவே அமைதியாக இருந்தது. பணக்காரர்கள் மட்டும் வசிக்கும் தெரு. வீடுகள் உறக்க நிலையில் இருந்தன. ஆள் நடமாட்டம் எதுவும் இல்லை. ஒதுக்கு புறமாக நின்றுக்கொண்டு, சிகரட்டை எடுத்து பற்ற வைத்தார்.
“மனுஷனுக்கு வேலை இருந்தாலும் பிரச்சனை, வேலை இல்லனாலும் பிரச்சனை. ச்சி… என்ன வாழ்க்கையோ” தனக்கு தானே சொல்லிக் கொண்டே புகையை இழுத்தார்.
கீச் என்ற சப்தத்துடன் வண்டி நின்றது. திரும்பிப் பார்த்தார். சதீஷ் வண்டியின் பின்னிருந்து அந்தோணி பதட்டமாக இறங்கினார்.
“யோவ் உன் போன் என்னையா ஆச்சு…!” என்று கன்னியப்பனை நோக்கி வர, சதீஷும் வண்டியை நிறுத்தி விட்டு பின்னே ஓடி வந்தார்.
அவர்களின் பதட்டம் கன்னியப்பனிடமும் தொற்றிக் கொண்டது. மொபைலை எடுத்து பார்த்தார்.
“Switch off ஆகிருச்சு சார்….”
அந்தோணி காதில் வாங்காமல் வங்கியின் வாசல் நோக்கி நடந்தார்.
சதீஷ் கன்னியப்பன் அருகே வந்து, “சாரோட கன்ன காணோம் சார்…”
என்று சொல்ல கன்னியப்பனின் முகமெல்லாம் அதிர்ச்சி ரேகை பரவியது. வங்கியைப் பார்த்தார். அந்தோணி அடுத்த அடி எடுத்து வைப்பதற்குள், உள்ளே இருந்து வரிசையாக குண்டுகள் வெடிக்கும் சப்தம் கேட்டது.
மூவரும் ஒரு கணம் அதிர்ந்து நின்றனர். அந்தோணி அப்படியே தலையை பிடித்துக் கொண்டே ATM- வாசலில் அமர்ந்தார்.
சில நொடிகள் மௌனம். அடுத்த குண்டும் வெடித்தது.
ஆடிட்டர் வேகமாக வெளியே ஓடிவந்தார். வாசலில் நிற்கும் மூவரை கண்டு கொள்ளாது பயத்தில், “கொன்னுட்டான். கொன்னுட்டான்…” என்று புலம்பியவாறே அவர் வெகு தூரம் ஓடினார்.
சதீஷ் தன் ஹோல்ஸ்டரில் கை வைத்தார். துப்பாக்கியின் துணையோடு அவர் அடி எடுத்து வைக்க, கன்னியப்பன் ஒரு முறை அந்தோணியைப் பாவமாக பார்த்துவிட்டு சதீஷுடன் இணைந்துக் கொண்டார்.
வங்கியின் உள்ளே மின் விளக்கு அணைந்து அணைந்து எரிந்துக் கொண்டிருந்தது.
“ஹே தம்பி, எதுவும் முட்டாள் தனமா பன்னாதா…” கன்னியப்பன் கத்தினார்.
இருவரும் வாசலில் நின்றவாறே வங்கியை ஆராய்ந்தனர். ஒருவரும் தென்படவில்லை. தயங்கி தயங்கி உள்ளே அடி எடுத்து வைத்தனர்.
மேனஜர், தன் இருக்கை அருகிலேயே சரிந்துக் கிடந்தார். அவர் வாயில் குண்டு பாய்ந்திருந்தது. அவர் அருகிலேயே அறிவுடையான் வாய் பிளந்துக் கிடந்தார். நெத்தியில் குண்டால் பொட்டு வைக்கப் பட்டிருந்தது.
உள்ளே ஸ்டோர் ரூம் கதவு ஆடிக் கொண்டே இருந்தது.
இருட்டு. உள்ளிருந்து ஜான் லெனனின் மெல்லிய குரல் காற்றில் மிதந்து வந்தது.
நிதானமாக அதனுள் இருவரும் நுழைந்தனர்.
சதீஷ் தன் மொபைல் டார்ச்சை ஆன் செய்து கன்னியப்பன் கையில் கொடுத்தார். அவர் ஒளியை அறையில் பாய்ச்சினார். இடது மூலையில் தரையில் அநிருத்தனின் மொபைல் கிடந்தது.
அருகில் அநிருத்தன் சுவற்றில் சாய்ந்தவாக்கில் தரையில் அமர்ந்திருந்தான். அவன் வலது கையில் அந்தோணியின் துப்பாக்கி இருந்ததை கன்னியப்பன் கவனித்தார்.
‘சட்டம் என்ன தண்டிக்க முடியாது. தண்டிக்க விட மாட்டேன்…’ அநிருத்தனின் குரல் கன்னியப்பனின் மனதில் ஒலித்தது. “உனக்கு என்ன தம்பி குறை. என் புள்ளையா நினச்சு சொல்றேன், நீ நல்லா இருப்ப….” அவருடைய வாழ்த்தும் காதுகளில் கேட்டது.
நிமிர்ந்துப் பார்த்தார், அவன் தலை இடது புறம் தூணில் சாய்ந்திருந்தது. தலையின் பக்கவாட்டிலிருந்து ரத்தம் வழிந்துக் கொண்டிருந்தது.
கன்னியப்பன் தன் கண்களில் தேங்கிய கண்ணீரை துடைத்துக் கொண்டார். அங்கே யாரும் பேசிக் கொள்ளவில்லை.
அநிருத்தனின் மொபைலுக்குள்ளிருந்து ஜான் லெனன் மட்டும் பாடிக் கொண்டே இருந்தார்.
‘A working class hero is something to be
A working class hero is something to be
If you want to be a hero well just follow me
If you want to be a hero well just follow me’
****
மழை. அடை மழை. ஹசிரா சாலை வழக்கம் போல் ஆள் அரவமற்று கிடந்தது. அங்கிருந்து சூரத் செல்லவேண்டுமெனில் அடாஜன் சாலை வழியாகவோ அல்லது டுமாஸ் சாலை வழியாகவோ செல்ல வேண்டும். டுமாஸ் வழியாக செல்வது கால விரையம் தான். ஆனாலும் பாதுகாப்பான சாலை அது.
அடாஜன் பாதுகாப்பற்ற சாலையா என்று உறுதியாக தெரியாது. ஆனால் அந்த சாலையை பற்றி நான் கேள்விப்பட்ட கதைகள் ஏராளம் என்பதால் அந்த சாலையில் பயணிப்பதை தவிர்த்து வந்தேன். அதற்கு என் நண்பர் சுனில் படேலும் ஒரு காரணம். அவர் ஹஜிரா டுமாஸ் சாலை சந்திப்பில் அமைந்திருந்த மக்தல்லா குடியிருப்பில் வசித்து வந்தார். அது என் கம்பெனியின் குடியிருப்பு. திருமணமானவர்களுக்கு மட்டும். அதனால் நான் சூரத்திலிருந்த பேச்சுலர் ஹாஸ்டலில் தங்கியிருந்தேன்.
எங்களுக்கு இரண்டாவது ஷிப்ட். நான் தினமும் ஷிப்ட் ரிபோர்டை எழுதிவிட்டு கிளம்ப பன்னிரண்டு மணியாகிவிடும். கம்பெனி பஸ் இரவு பதினொன்னே முக்கால் மணிக்கெலாம் கிளம்பிவிடும். சுனில் அதில்தான் போய் கொண்டிருந்தார்.
நான் கம்ப்ரசர் சிஸ்டம் இன்சார்ஜாக இருந்தேன். சுனில் பாய்லர் இன்சார்ஜாக இருந்தார். இரவு ஏழுமணிக்கு பின்பு இரண்டு பேருக்குமே வேலை இருக்காது. ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை வெறும் ரீடிங்க்ஸ் எடுப்பது மட்டுமே வேலை. பாய்லர் அறையும் கம்ப்ரசர் அறையும் அருகருகே இருந்ததால் நான் அவர் அறைக்கு சென்று அமர்ந்து கொள்வேன். இருவரும் ஏதாவது கதைப் பேசிக்கொண்டிருப்போம். அப்படியே நாங்கள் நண்பர்களாகிப் போனதால், சுனில் என்னுடன் என்னுடைய காரில் வரத் தொடங்கினார். அலுவலகம் வரும் போது மதியம் ஒன்றரை மணிக்கு அவரை பிக் செய்து கொள்வேன். இரவு, அவரை அவர் குடியிருப்பில் இறக்கிவிட்டுவிட்டு நான் சூரத் வந்தடைய மணி ஒன்றாகிவிடும்.
முதன் முதலில் நாங்கள் சேர்ந்து பயணிக்கும் போது, ஹசிரா அடாஜன் டுமாஸ் மூன்று சாலைகளும் சந்திக்கும் இடத்தை அடைந்த போது, அடாஜன் சாலையை சுட்டிக் காண்பித்து, “ராத் மே உஸ் தரப் மத் ஜாவ்” என்றார். நான் “ஏன் அங்க ஏதும் வழிப்பறி நடக்குமா?” என்று அப்பாவியாக கேட்டேன். சப்தமாக சிரித்த அவர், “பேய் இருக்கு” என்றார். எனக்கு அதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. அதனால் அவர் சொன்னதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் பலரும் இரவு நேரங்களில் அந்த சாலையை தவிர்க்கும் படி அறிவுரை கூறினர். ஒரு முறை மதிய வேலையில் நான் அந்த சாலை வழியாக வந்தேன். அன்று சுனில் விடுப்பில் இருந்தார்.
அடாஜன் சாலையில் பால் பாட்டியா அருகே வந்ததும், கார் பஞ்சர் ஆகிவிட்டது. காரை ஓரம் கட்டிவிட்டு ஸ்டெப்னியை எடுத்து மாட்டினேன். யாரோ காரின் முன்கதவை திறந்துகொண்டு உள்ளே ஏறியது போல் இருந்தது. வேகமாக முன் சென்று பார்த்தேன். யாருமில்லை. சுற்றும் முற்றும் பார்த்தேன். ஆள் நடமாட்டம் எதுவுமில்லை. மீண்டும் பின்னாடி வந்து ஸ்டெப்னியை டைட் செய்ய முற்பட்ட போது தான், ஸ்டெப்னியும் பஞ்சர் ஆகியிருந்ததை கவனித்தேன். நான் வெளியே எடுக்கும் போது ஸ்டெப்னி நன்றாகதான் இருந்தது. அருகே எதாவது பஞ்சர் கடை இருக்கிறதா என்று தேடிக் கொண்டு சென்றேன்.
அங்கே இருந்த சந்தோசி மாத கோவில் வாசலில் அமர்ந்திருந்த பூசாரி, “என்ன வேணும்?” என்றார். நடந்ததை சொன்னேன்.
“சந்தோசி மாதா உன் கூட இருக்கா. அதான். இனிமே இந்த பக்கம் வராத” என்றார். கோவிலில் இருந்த பையனிடம் சொல்லி அனுப்பினார். அவன் ஒரு மெக்கானிக்கை அழைத்து வந்தான்.
மெக்கானிக்கிடம், “இவங்க சொல்ற மாதிரி எதாவது பேய் ஆவிலாம் உண்டா?” என்றேன்.
“அதெல்லாம் தெரியாது பாய். இங்க நிறைய ஆக்சிடென்ட் நடக்கும். அதுக்கு ஆளாளுக்கு ஏதேதோ காரணம் சொல்றாங்க” என்று சொன்னான். அவன் என்னிடம் பேச விரும்பாதவன் போல் இருந்ததால், நான் மேற்கொண்டு அவனை எதுவும் கேட்கவில்லை.
இதை என் அம்மாவிடம் யதார்த்தமாக பகிர்ந்து கொண்டேன். இரண்டு நாட்களில் பார்சலில் மாசிபெரியண்ண சாமியின் விபூதியும், கருப்பு கயிறும் வந்தது. நான் எதற்கு தேவையில்லாத மனக்குழப்பமென்று அந்த சாலையில் பயணிப்பதை தவிர்த்து வந்தேன்.
அன்றும் சுனில் வரவில்லை. நான் ஒரு ட்ரைனிங் விஷயமாக மும்பை செல்ல வேண்டும். இரவு பன்னிரன்டரை மணிக்கு பஸ். அலுவலகத்திலிருந்து பத்து மணிக்கெல்லாம் கிளம்பிவிட வேண்டுமென்று எண்ணினேன். ஆனால் அன்று air-dryer பழுதடைந்து விட்டதால், வேலை அதிகமாகிவிட்டது.. நான் அலுவலகத்திலிருந்து கிளம்பும் போது மணி 11.30 ஆகிவிட்டிருந்தது. தூரலாக இருந்த மழை நான் ஹசிரா சந்திப்பை அடைந்த போது அடை மழையாக மாறியிருந்தது. ஹசிரா அடாஜன் டுமாஸ் சந்திப்பில் வழக்கம் போல் வலது புறம் திரும்பாமல், நேராக அடாஜன் சாலையை நோக்கி பயணித்தேன். டுமாஸ் சாலையில் சென்றால் நேரத்திற்கு சூரத்தை அடைய முடியாது. 40 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல வேண்டிய சாலையில் ஸ்பீடோமீட்டர் ’60’-ஐ தொட்டிருந்தது. சாலையில் விளக்குகள் இல்லை. என் முன்னோ பின்னோ எந்த வாகனமும் வரவில்லை. மணி இரவு பன்னிரண்டு இருக்கும். என்னுடைய கார் விளக்குகள் தந்த வெளிச்சத்தில் நான் வேகமாக சென்று கொண்டிருந்தேன். இடை இடையே என்னை அறியாமலேயே ஹாரன் அடித்தேன்.
திடிரென்று ஒரு பெண் சாலையின் குறுக்கே தோன்றினாள். என்னால் காரின் வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. ‘டங்’
அந்த பெண்ணின் மீது கார் வேகமாக ஏறியது.
‘கடக் கடக்’ என்றொரு சப்தம். நான் காரை ஸ்லோ செய்தவாறே கார் ரியர்வ்யூ கண்ணாடியில் பார்த்தேன் அந்த பெண்ணின் உடல் சாலையில் கிடந்தது. இளம்பெண் போல் தோன்றினாள். எனக்கு காரை நிறுத்த பயமாக இருந்தது. என் கால் கட்டைவிரல் ஆக்சிலரேட்டர் மீது வேகமாக பதிந்தது.
மழை நின்றிருந்தது. மனம் உறுத்தலாகவே இருந்தது. சிறிது தூரத்தில் சந்தோசி மாதா கோவில் வந்தது. காரை நிறுத்தி உள்ளே ஓடினேன். உள்ளே உறங்கிக் கொண்டிருந்த பூசாரி, என்னை ஆச்சர்யமாக பார்த்தார். எல்லாவற்றையும் வேகமாக விவரித்தேன். அவர் கோவில் சிறுவன் மூலம் ஊர் பெரியவருக்கு செய்தி அனுப்பினார். ஊரிலிருந்து சிலர் திரண்டு வந்தனர். அதற்குள் அங்கே ஒரு பேட்ரோல் வண்டியும் வந்திருந்தது. நான் காரை கோவிலிலேயே விட்டுவிட்டு போலிஸ் வண்டியில் ஏறி பின்னிருக்கையில் அமர்ந்துகொண்டேன். ஊர் பெரியவரும் இன்னொருவரும் என்னுடன் எறிக்கொண்டனர். முன்னிருக்கையில் ஒரு போலிஸ் அதிகாரி அமர்ந்திருந்தார். நாங்கள் எல்லோரும் சேர்ந்து நான் சொன்ன இடத்திற்கு சென்றோம்
“எந்த இடம்?” போலிஸ் ஓட்டுனர் வினவினார்
“புல்கா விஹார் ஸ்கூல் கிட்ட…” நான் சொன்னேன்.
“இங்க ரெண்டு பெரிய மரம் இருக்கும்…” நான் சொல்லிகொண்டிருக்கும் போதே வண்டி அந்த மரங்களின் முன்பு நின்றது. .நான் அந்த மரத்தாருகே சென்றேன். சாலை காலியாக இருந்தது. இன்னும் சில ஊர் காரர்கள் அங்கே இரு சக்கர வாகனத்தில் வந்து இறங்கினர். இரு புறமும் எல்லோரும் தேடினோம். அங்கே ஒரு விபத்து நடந்ததற்கான அறிகுறி எதுவுமில்லை. எல்லோரும் தங்களுக்குள் குஜராத்தியில் பேசிக் கொண்டனர் “லுக்ட் லைக் ஆன் யங் கேர்ள்….” நான் ஆங்கிலமும் ஹிந்தியும் கலந்து அந்த போலிஸ் அதிகாரியிடம் பேசினேன். அவளை அந்த சாலையில் பார்த்தேன் என்று உறுதியாக சொன்னேன். அவர் நான் சொன்னதை காதில் வாங்கிக் கொள்ளாமல், “கல்யாணம் ஆச்சா?” என்று வினவினார்.
நான் இல்லை என்று தலை அசைத்தேன். “சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ” என்று சப்தமாக சொன்னார். எல்லோரும் சிரித்தனர். நான் எதுவும் பேசாமல் போலிஸ் வண்டியில் ஏறிக்கொண்டேன். வரும் வழியில் யாரும் எதுவும் பேசவில்லை. எங்களை கோவிலில் இறக்கிவிட்டுவிட்டு போலிஸ் அதிகாரி நகர்ந்தார். பூசாரி என்னை உற்று பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் உள்ளே சென்றுவிட்டார்.
அனைவரும் தங்கள் வீடுகளுக்கு சென்றுவிட்டனர். நான் மும்பை செல்லும் மன நிலையில் இல்லை. எனக்கு ஒரே குழப்பாக இருந்தது. ‘டங்’. ‘கடக் கடக்’ ‘சந்தோசி மாதா உன் கூட இருக்கா.’ ‘இங்க நிறைய ஆக்சிடென்ட் நடக்கும்’ ”ராத் மே உஸ் தரப் மத் ஜாவ்’
விடுதிக்குச் சென்று உறங்கிவிடுவது நல்லது எனப் பட்டது. என் விடுதியின் பார்க்கிங்கில் காரை நிறுத்தினேன். லிப்ட்டில் ஏறச் செல்லும் போது எதர்ச்சையாக காரை நோக்கினேன். காரின் முன்புறம் கிரிலில் ஏதோ தொங்கிக்கொண்டிருந்ததை கவனித்தேன். அருகே சென்றுப பார்த்தேன். காரில் கொத்தாக தலைமுடி சிக்குண்டிருந்தது. நீளமான அந்த முடியிலிருந்து சொட்டிக்கொண்டிருந்த மழைத்துளி, சிகப்பாக இருந்தது.
கதவுகள் எல்லாம் அடைக்கப்பட்டிருந்தன, ஜன்னல்களும். அவர்கள் முடிவு செய்திருந்தனர், இன்று ஆவியுடன் உரையாடியே தீர வேண்டுமென்று. வீஜா போர்ட் (Ouija Board) பற்றி முதலில் படித்துவிட்டு சொன்னவன் மனிஷ் தான். அவனுக்கு எல்லாவற்றிலும் விளையாட்டு என்பதால் அவன் சொன்னதை முதலில் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
“எல்லாம் ஹம்பக். இவரு கூப்டதும் ஆவிங்கலாம் வந்து க்யூல நிக்குமாம்” சொல்லிவிட்டு சப்தமாகச் சிரித்தாள் ஜாஸ்மின்.
“உங்களுக்குலாம் பயமா இருக்குனு சொல்லிட்டு போ. டோன்ட் ஆக்ட் ஸ்மார்ட்”
மனிஷ் இப்படி சொன்னதும் தான் நகுலுக்கு கோபம் வந்தது. அவன் கோபப் பட்டதற்கு அவன் ஜாஸ்மினின் காதலன் என்பதை இரண்டாவது காரணமாகதான் சொல்ல முடியும். முதல் காரணம் அவனுடைய கர்வம். அவன் தன்னை மிகவும் தைரியசாலி என்று கருதுபவன்.
“ஹேய் யாருக்கு பயம். எனக்கா?” என்று அவன் மனிஷின் சட்டையை பிடிக்காத குறையாய் கேட்டான். அவர்கள் மூவரும் கல்லூரி ஹேங்கரில் நின்று கொண்டிருந்தனர்.
“பயம் இல்லனா வா. விளையாடுவோம்…”
நகுல் ஜாஸ்மினின் முகத்தை பார்த்தான். அவள், “எனிதிங் ஃபைன் பார் மீ” என்றவாறே தோள்களைக் குலுக்கினாள்.
“சரிடா. நாங்க ரெடி. இன்னைக்கு நைட் ஓ.கே?”
“உடனேலாம் ஒண்ணும் பண்ணமுடியாது. முதல போர்ட் ரெடி பண்ணனும். நிறைய ரூல்ஸ் இருக்கு. அதுக்கு முன்ன விளையாட ஒரு நல்ல இடம் வேணும்…”
“நல்ல இடம்னா?”
“பிரச்சனை இல்லாத இடம். ஸ்டார்ட் பண்ணுனா ஆவி எப்ப வரும்னு தெரியாது. அதுவரைக்கும் யாரும் தொந்தரவு பண்ணக் கூடாது. நிச்சயம் எங்க வீட்ல முடியாது”
“எங்க வீட்லயும் கஷ்டம் தான். எங்க அப்பாவோட போலிஸ் மூளைக்குத் தெரியாம எதுவும் பண்ணமுடியாது” நகுல் சொல்ல,
“அப்ப ஜாஸ்மின்…” என்று மனிஷ் இழுத்தான்.
“இம்பாஸிபிள். வீ ஆர் கேதோலிக்ஸ். யூ கய்ஸ் நோ தட்”
“என்ன தான்டி பண்றது?”
“என்னடா சீரியஸ் டிஸ்க்ஷன்? என்று கேட்டவாறே சுமித் உள்ளே நுழைய மூவரின் முகமும் மலர்ந்தது.
“நெட்வர்கிங் எக்ஸாம்க்கு குரூப் ஸ்டடீஸ் பண்ணலாம்னு இருக்கோம். யார் வீடும் கம்ஃபர்டபுளா இருக்காது. அதான்…” என்று நகுல் சொல்லும்போதே நகுலின் திட்டத்தை மற்ற இருவரும் புரிந்து கொண்டனர். அவர்கள் எதிர்பார்த்தது போலவே சுமித்தும் பதில் சொன்னான்.
“ஏண்டா. எங்க வீட்ல படிக்கலாமே”
“படிக்கலாமே” மூன்று பேரும் கோரஸாக சொல்லிவிட்டு தங்களுக்குள்ளேயே சிரித்துக்கொண்டனர்.
ஜாஸ்மின், நகுல், மனிஷ் சுமித் நால்வரும் பள்ளிக் காலத்திலிருந்தே நண்பர்கள். ஒரே பகுதியில் வசிப்பவர்கள். சுமித்தின் பெற்றோர்கள் வெளிநாட்டில் இருந்தனர். அவனும் அவன் பாட்டி மட்டுமே வீட்டில். வீடும் மிகப் பெரிய வீடு. ஆனால் சுமித்திற்கு ‘ஆவி’ என்ற வார்த்தையே பயம் தரக் கூடியதாக இருந்தது. அதனால் அவனிடம் உண்மையைச் சொன்னால் அவன் சம்மதிக்க மாட்டான் என்பதால் மூவரும் அவனிடம் பொய் சொல்லி சம்மதிக்க வைத்து விட்டனர். மறுநாள் இரவு அவன் வீட்டில் வைத்து வீஜா போர்ட் விளையாடுவது என்று முடிவு செய்யப் பட்டது.
மனிஷ் வீஜா போர்டை தயார் செய்தான். ஒரு பெரிய அட்டையில் A முதல் Z வரை எழுதினான். அதன் கீழே 1 முதல் ஒன்பது வரை எழுதி, பக்கத்தில் 0 என்று எழுதினான். ஆங்கில எழுத்துக்களுக்கு மேலே இடது புறத்தில் ‘ஆம்’ என்று எழுதினான், வலது புறத்தில் ‘இல்லை’ என்று எழுதினான். போர்டை முழுவதும் தயார் செய்து சுமித் வீட்டிற்கு எடுத்துச் சென்றான். அங்கே மேல் அறையில் ஜாஸ்மினும் நகுலும் காத்திருந்தனர்.
“எவ்ளோ நேரம் வெயிட் பண்றது?” நகுல் கடிந்து கொண்டான்
“போர்ட் ரெடி பண்றது ஈஸின்னு நினைச்சியா? தமிழ்ல எழுதுறதா இங்கிலீஷ்ல எழுதுறதானு வேற டவுட். தமிழ்ல ஒரு ரெஃபரன்சும் கிடைக்கல. அதான் இங்கிலீஷ்லயே எழுதிட்டேன்.”
“இங்கிலீஷ் தெரிஞ்ச ஆவிகிட்ட பேசுவோம்” சொல்லிவிட்டு ஜாஸ்மின் வழக்கம்போல் சிரித்தாள்.
“எனக்கு இன்னும் நம்பிக்கை இல்ல. ஏதோ இவன் சொன்னானேனுதான்… டேய் ஏதாவது காமெடி பண்ணுன!” நகுல் சொன்னதைக் காதில் போட்டுக் கொள்ளாமல் மனிஷ் போர்டை தன் லேப்டாப் பேகினுள்ளிருந்து எடுத்தான். மற்ற இருவரும் போர்டை ஆர்வமாகப் பார்த்தனர். போர்டில் கடைசி வரிசையில் ‘Goodbye’ என்று எழுதியிருந்தது. அதைக் காண்பித்து ஜாஸ்மின்.
“இதென்ன?” என்றாள்.
“குட்பை சொன்னாதான் ஆவிப் போகும்”
“இல்லனா இவர் கூட குடும்பம் நடத்தும்.” நகுல் சொல்ல ஜாஸ்மின் மீண்டும் சிரித்தாள்.
“எப்பப் பார்த்தாலும் சிரிச்சுக்கிட்டே இரு.
“சரி ஹீரோகிட்ட சொல்லிட்டீங்களா?”
ஜாஸ்மின், “இன்னும் தெரியாது. அவங்க பாட்டிக்கு டேப்ளட்ஸ் கொடுக்க போயிருக்கான். வந்ததும் நீயே சொல்லு”
அவர்கள் வீஜா போர்டை ஆராய்ந்து கொண்டிருக்க, சிறிது நேரத்தில் சுமித் அங்கே வந்தான். அவனுக்கு வீஜா போர்டை பார்த்ததும் விசித்திரமாக இருந்தது. அவனிடம் அவர்கள் தங்கள் திட்டத்தை விவரித்தனர். அவன் உறைந்து நின்றான்.
“நீ ஒத்துக்க மாட்டேன்னுதான் சொல்லல. ஒண்ணும் ஆகாது. உனக்கு அவ்ளோ பயமா இருந்தா நீ வெளிய வெயிட் பண்ணு. நாங்க மட்டும் விளையாடுறோம்” ஜாஸ்மின் சொன்னாள்.
அவனுக்கு வெளியே தனியாக பயந்து கிடப்பதைவிட, அவர்களுடன் இருப்பது மேல் என்று பட்டது.
“வேணாம். உங்க கூடவே இருக்கேன்”
***
அது மிகப் பெரிய அறை. அதற்கு இரண்டு வழிகள் இருந்தன. இரண்டின் கதவுகளையும் நகுல் முதலில் அடைத்தான். பின் ஜன்னல்களை சாத்தினான். வடக்கு திசையில் இருந்த கண்ணாடி ஜன்னலை திரையை இழுத்து மூடினான். போர்டை தரையில் வைத்து, மெழுகுவர்த்தியைக் கொளுத்தினான் மனிஷ். ஒரு பாட்டில் ஓபனரை எடுத்து போர்டின் மேலே வைத்தான். மூன்று பேர் மட்டும் வீஜா போர்டில் கை வைப்பது, சுமித் ஆவி கொடுக்கும் குறிப்புகளை எழுதிக் கொள்வது என்று முடிவுசெய்தனர். மனிஷ் பேசினான்.
“சரி நல்லா கவனிச்சுக்கோங்க. நான் சொன்னதும், எல்லாரும் இந்த ஓபனர் மேல ஆள்காட்டி விரல வைக்கணும். நாம ஆவிய கூப்புடணும். ஆவி வந்துட்டா நம்ம கை இந்த ஓபனர ஆட்டோமடிக்கா நகர்த்தும். உண்மைய சொல்லனும்னா வந்த ஆவிதான் நம்ம விரல நகர்த்தும். நம்ம கேக்குற கேள்விக்குலாம் இந்த ஓபனர் எங்கலாம் நகருதோ அதான் பதில்.
“டேய் ஹீரோ, ஓபனர் எந்த ஆல்பபெட் மேல நகருதோ அத வேகமா நோட் பண்ணிக்கோ.”
சுமித் சரி என்று தலை அசைத்தான். ஜாஸ்மின் எழுந்து சென்று லைட்டை அணைத்தாள். அங்கே அந்த மெழுகுவர்த்தி மட்டும் எரிந்து கொண்டிருந்தது. வீஜா போர்டிற்கென்று நிறைய விதிமுறைகள் இருந்தன. அதை மனிஷ் தன்னிடம் இருந்த பிரிண்ட் அவுட்டில் இருந்து படித்துக் காட்டினான். அவன் சொன்னது போல் அனைவரும் செல் போனை அணைத்து விட்டிருந்தனர்.
“ரொம்ப அமைதியா இருக்கணும். தேவை இல்லாம பேசக் கூடாது. ஒவ்வொருத்தராதான் கேள்வி கேக்கணும்” மனிஷ் சொல்ல,
“சரி ஸ்டார்ட் பண்ணலாம்…” என்று நகுல் சொன்னான்.
சிறிது நேரம் போர்டையே உற்றுப் பார்த்து யோசித்த மனிஷ், “ஹான், ஏதோ குறையுதேன்னு பாத்தேன்… அட் லாஸ்ட் ஐ பௌண்ட் இட்” என்றான்.
மற்றவர்கள் என்ன என்பது போல் ஆச்சரியமாகப் பார்த்தனர். அவன் போர்டின் இடது பக்கத்தில் ‘ஓம்’ என்று எழுதினான். அதன் பக்கத்தில் ஒரு சிலுவையை வரைந்தான். அதன் பக்கத்தில் ஒரு பிறையை வரைந்து 786 என்று எழுதினான். வலது பக்கத்தில் ஒரு எலும்புக்கூட்டின் தலையை வரைந்தான்.
“என்னடா இது?” சுமித் பதற்றத்துடன் வினவினான்.
“வர ஆவி நல்ல ஆவியா கெட்ட ஆவியானு தெரிஞ்சுக்க… சில நேரத்துல கெட்ட ஆவி வரலாம். நாம கூப்புடாத ஆவிலாம் கூட வரலாம். நல்ல ஆவியா இருந்தா ஓபனர் லெப்ட் சைட் போகும். கெட்ட ஆவியா இருந்தா ஸ்கல் சைடு போகும்”
“டேய் இதெல்லாம் நீ சொல்லவே இல்ல” ஜாஸ்மினுக்கு இப்போதுதான் பயம் வர ஆரம்பித்தது.
“ஹே. ஹி இஸ் ப்ளேயிங் பிரான்க். இதுக்குலாம் போய் பயப்படுற. கிட்டோ” நகுல் கேலியாகச் சொன்னான்.
“யாரு கிட். எல்லார் உள்ளையும் பயம் இருக்கு. நாங்க வெளிய காட்டிக்கிறோம். நீ பயப்படாத மாதிரி நடிக்கிற. அவ்ளோதான்” ஜாஸ்மின் கோபமாகச் சொன்னாள்.
“கூல் யார். அது கெட்ட ஆவியா இருந்தா குட்பை சொன்னா போய்டும். அவ்ளோதான்… புடிக்கலனா எப்ப வேணும்னாலும் நிறுத்தி குட்பை சொல்லிடலாம்”
அனைவரும் ஆசுவாசமானார்கள். யாரை அழைப்பது என்று யோசித்தனர்.
சுமித், “எங்க தாத்தா” என்றான். எல்லோரும் அவனை ஆச்சரியமாகப் பார்த்தனர்.
“அட ஹீரோக்கு பயம் போச்சு” மனிஷ் சொன்னான்.
“அப்டி இல்ல. எங்க தாத்தா ரொம்ப நல்லவர். அவர் வந்தாலும் பயம் இல்ல. அவரையே கூப்டுவோம்”
மனிஷ், “தாத்தா பேர்?”
“சபாபதி”
அனைவரும் தாத்தாவை வெகு நேரம் அழைத்தனர். தாத்தா வரவில்லை. மணி பதினொன்றரை ஆனது. மனிஷ் யோசித்தான். சுவற்றில் ஒரு விநாயகர் காலெண்டர் தொங்கிக் கொண்டிருந்ததை கவனித்தான்.
“அதான். சாமி படம் உள்ள இருந்தா ஆத்மா வராது” மனிஷ் சொல்லிமுடித்ததும், அந்த காலெண்டரை கழட்டி அறையின் வெளியே வைத்துவிட்டு வந்தான் நகுல். மீண்டும் தாத்தாவை அழைத்தனர். அவர் வரவில்லை.
“ஒருவேளை தாத்தா ஆத்மா சாந்தி அடஞ்சிருக்கலாம். அதான் அவர் பூமிக்கு வர விருப்பப் படல போல…” மனிஷை பேசி முடிக்க விடாமல் நகுல் கத்தினான்.
“டேய் ஏதோ தீசிஸ் பண்ண மாதிரி பேசாதா… இதெல்லாம் வெறும் டூப்னு எனக்குத் தெரியும். ஜாஸ், நான் கிளம்புறேன்” என்று நகுல் எழ எத்தனித்தான். ஜாஸ்மின் அவன் கையைப் பிடித்து அமரவைத்தாள்.
“வெயிட் பண்ணுடா. அவன் என்னதான் சொல்றான்னு கேப்போம்” ஜாஸ்மின் சொல்லிவிட்டு மனிஷைப் பார்த்தாள்.
“ஹே. ஜஸ்ட் ஒன் மோர் டைம்… ரீசன்ட்டா செத்துப் போன யாரையாவது கூப்புடுவோம். அதுவும் ஆக்சிடென்ட், சூசைட் கேசா இருந்தா அவங்க ஆத்மா பூமிலேயே சுத்திக்கிட்டு இருக்குமாம்.”
நகுல் தலையில் அடித்துக் கொண்டான். ஜாஸ்மின், “சுதா” என்றாள். நகுல் ‘யார் சுதா?’ என்பது போல் பார்த்தான்.
“CS பொண்ணுடா. ஹாஸ்டலர். நீ யூனிக்ஸ் லேப்ல பாத்திருப்ப. ரொம்ப நல்ல டைப்டா. லாஸ்ட் மந்த் ஹாஸ்டல்லயே சூசைட் பண்ணிக்கிட்டா. யாருக்கும் ரீசன் தெரில…”
சுதாவை அழைத்தனர். சுதா வரவில்லை. மீண்டும் அழைத்தனர். சுமித்தும் மனிஷும் எதிரெதிரே அமர்ந்திருந்தனர். சுமித் எழுத்துக்களைப் பார்த்தவாறு அமர்ந்திருக்க, மனிஷிற்கு இடது புறத்தில் ஜாஸ்மினும் வலது புறத்தில் நகுலும் அமர்ந்திருந்தனர். சுமித் ஆவி கொடுக்கும் குறிப்புகளை எழுத போர்டை கூர்ந்து கவனித்தவாறே தயாராக இருந்தான். மற்ற மூவரும் தங்களின் விரல்களை போர்டில், ஒபனர் மீது வைத்திருந்தனர்.
மெழுகுவர்த்தி மெதுவாக அசையத் தொடங்கிற்று. அங்கே நிலவிய அமைதியைக் கலைக்கும் விதமாக யாரோ விசும்பும் குரல் கேட்டது. மெதுவாக அங்கே ஒரு அமானுஷ்யம் பரவுவதை அனைவரும் உணரத் தொடங்கினர். சுமித்தை விட நகுல் தான் அதிகம் பயந்தான். ஆனால் அவன் தன் பயத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் தைரியமாக இருக்க முயற்சி செய்து கொண்டிருந்தான். விசும்பல் அதிகமாயிற்று. அங்கே அவர்களைத் தவிர யாரோ நடமாடும் உணர்வு அனைவருக்கும் ஏற்பட்டது.
ஜாஸ்மின், “நீங்க யாரு?”
ஓபனர் நிலையாக இருந்தது.
மனிஷ், “அப்டி கேட்காத” என்று சன்னமான குரலில் சொல்லிவிட்டு,
“நீங்க சுதாவா?” என்று கேட்டான்.
அவர்களின் விரல் அவர்களின் கட்டுப்பாட்டில் இல்லாதை போல் அசைந்து, அந்த ஓபனரை போர்டின் இடது பக்கமாக நகர்த்தியது. அங்கே எழுதப்பட்டிருந்த ‘ஆம்’ என்ற வார்த்தையின் மீது நின்றது. இப்போது விசும்பல் அதிகமாயிற்று. அது ஒரு பெண் குரல் போல் இல்லை என்பதை ஜாஸ்மின் உணர்ந்ததும்,
“நம்ம காலேஜ் சுதாவா?” வேகமாகக் கேட்டாள். ஓபனர் வலது புறமாக நகர்ந்து ‘இல்லை’ என்ற வார்த்தை மீது நின்றது. அவர்கள் பயத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். விசும்பல் அதிகமாக அதிகமாக அது ஒரு ஆண் குரல் என்பதைப் புரிந்து கொள்ள அவர்களுக்கு கடினமாக இல்லை.
“உங்க பேரு?” ஜாஸ்மின் வினவினாள்.
ஓபனர் சிறிது நேரம் அப்படியே இருந்தது.
“உங்க பேரு?” ஜாஸ்மின் மீண்டும் வினவினாள்.
ஓபனர் முதலில் ‘S’ என்ற வார்த்தையின் மீது நின்றது. பின் நகர்ந்து ‘U’ என்ற வார்த்தை மீது நின்றது. ஓபனரின் ஓட்டை வழியே ஒவ்வொரு வார்த்தையாகப் பார்த்து சுமித் ஒரு நோட்டில் குறித்துக் கொண்டே வந்தான்.
‘S-U-D-H-A’ என்று வந்ததும் ‘A’ மீது ஓபனர் நின்றது.
சுமித். “சுதா” என்று உச்சரித்தான். அனைவரும் ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருக்க, ஓபனர் வேகமாக நகர்ந்து ‘K’ மீது நின்றது. பின்பு ‘A’, ‘R’ என நகர்ந்தது.
சுமித் “சுதாகர்” என்று உச்சரித்தான். அவர்கள் சுதாரிப்பதற்குள் அங்கே அழு குரல் கேட்டது. அது ஒரு சிறுவனின் குரல் என்பதை அவர்கள் புரிந்து கொண்டனர்.
அதை ஊர்ஜிதம் செய்து கொள்ளும் பொருட்டு, “உங்க வயசு?” என்று மனிஷ் வினவினான். ஓபனர் நகர்வதை வைத்து 12 வயது என்று கண்டு கொண்டனர்.
“ரொம்ப சின்னப் பையன்” ஜாஸ்மின் சொல்ல,
“அப்ப பயப்பட வேணாம்” என்று நகுல் கேலியான தொனியில் சொன்னான்.
மனிஷ், “ஆத்மாவ கிண்டல் பண்ணக் கூடாது” என்று எரிச்சலாகச் சொன்னான்.
ஜாஸ்மின், “குட் ஸ்பிரிட்டா பேட் ஸ்பிரிட்டானு கேக்கணும்னு சொன்ன இல்ல?” என்று மனிஷுக்கு நினைவு படுத்தினாள்.
அவன், “யா யா” என்றவாறே போர்டை பார்த்து, “நீங்க நல்ல ஆத்மாவா? இல்ல…” மேற்கொண்டு கேட்கமுடியாமல் நிறுத்தினான். ஓபனர் இடது புறத்தில் கடவுளின் சின்னங்களின் மீது போய் நின்றது. மறு நொடியில் வேகமாக நகர்ந்து மண்டை ஓட்டின் மீது நின்றது. பின் நடுவில் வந்து நின்றது.
“இது ரிஸ்க். குட் பை சொல்லிடலாம்” சுமித் பதறினான். ஜாஸ்மின் அதை ஆமோதித்தாள். ஆனால் அவர்களால் விரலை குட் பை நோக்கி நகர்த்த முடியவில்லை. விரல்களும் ஓபனரும் அப்படியே போர்டின் நடுவில் ஒட்டிக்கொண்டதைப் போல் அசையாமல் நின்றன.
“ஐ கான்ட் மூவ் மை ஹாண்ட்ஸ்” ஜாஸ்மின் சொல்ல, மனிஷ், “ஆமா. என் கையும் நகரல” என்று ஆமோதித்தான்.
“திஸ் இஸ் வியர்ட்” என்று கத்திய நகுல், தன் முழு பலத்தையும் திரட்டி கையை எடுக்க முயற்சி செய்தான். அவன் என்ன செய்யப் போகிறான் என்பதைப் புரிந்துக் கொண்ட மனிஷ், “குட்பை சொல்ற வரைக்கும் கைய எடுக்கக் கூடாதுடா…” என்று கத்தினான். அவன் சொல்லி முடிப்பதற்குள் நகுல் கையை எடுத்துவிட, மெழுகுவர்த்தி அணைந்தது. இருண்ட அந்த அறையில், யாரோ சப்தமாகச் சிரிக்கும் சப்தம் கேட்டது.
“லைட் ஸ்விட்ச் எங்க இருக்கு” என்றவாறே நகுல் எழுந்திருக்க முயல, மனிஷ் அவன் கையைப் பிடித்துத் தடுத்தான்.
“டேய் கைய எடுக்கக் கூடாதுன்னு சொல்லியும் நீ எடுத்த இல்ல. அதான். குட்பை சொல்ற வரைக்கும் இங்க இருந்து எழுந்திருக்கக் கூடாது” மனிஷ் சொன்னான்.
“லிசன் டு ஹிம் நகுல். ப்ளீஸ்”
ஜாஸ்மின் சொன்னதும் நகுல் எதுவும் சொல்லாமல் அங்கேயே அமர்ந்தான். மனிஷ் பக்கத்தில் இருந்த தீப்பெட்டியை எடுத்து மெழுகுவர்த்தியை ஏற்ற முயற்சி செய்தான். ஆனால் குச்சி பற்றவில்லை. பயந்துப்போன ஜாஸ்மின், மனிஷ் அருகே நகர்ந்து அமர்ந்தாள். மீண்டும் பயங்கரமான சிரிப்பு சத்தம். பதற்றத்தில் அந்தக் குரலை அவர்களால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. மனிஷ் அடுத்த குச்சியை எடுத்து பெட்டியில் தேய்த்தான். பற்றவில்லை. மீண்டும் மீண்டும் தேய்த்தான். திடீரென்று தீக்குச்சி பற்றிக்கொள்ள, அந்த வெளிச்சத்தில் சப்தமாகச் சிரித்துக் கொண்டிருந்த சுமித்தின் முகம் பயங்கரமாகத் தெரிந்தது. பயத்தில் மனிஷ் குச்சியைக் கீழே போட, தரையில் இருந்த வீஜா போர்ட் பற்றிக் கொண்டது. அனைவரும் வேகமாக எழுந்தனர். நகுல் நெருப்பைக் காலால் மிதித்து அணைக்க முயன்றான். நெருப்பு படர்ந்து எரியாதபோதும், போர்டில் மெழுகு உருகி இருந்ததால் அவன் கால் சுட்டது. அவன் நெருப்பை மிதிப்பதை நிறுத்திவிட்டு, லைட் ஸ்விட்சை தேடினான். ஸ்விட்சை போட்டுவிட்டு, வேகமாக பாத்ரூம் நோக்கி ஓடினான். மனிஷும், ஜாஸ்மினும் செய்வதறியாது சுமித்தைப் பார்த்தவாறே திகைத்து நின்றனர். சுமித் சிரித்துக் கொண்டே இருந்தான். பக்கெட்டுடன் வந்த நகுல், தண்ணீரை எரியும் வீஜா போர்டின் மீது ஊற்றினான்.
***
சுமித்தின் அருகே பயந்து கொண்டே ஜாஸ்மின் சென்றாள். அவள் கண்கள் கலங்கி இருந்தன. சுமித் தலையை குனிந்து அமர்ந்திருந்தான்.
ஜாஸ்மின், “சுமித். சுமித்” என்றாள். அவன் நிமிர்ந்து பார்க்கவில்லை. மனிஷ் எதையோ புரிந்து கொண்டவனாய் அருகில் வந்து, “சுதாகர்” என்றான். சுமித் நிமிர்ந்து பார்த்து பேசினான்.
“சித்தி காசுக்காக என்ன சுருட்டு சாமிகிட்ட வித்திருச்சு. சுருட்டு சாமிய எனக்குப் புடிக்காது. வீடெல்லாம் சுருட்டு வாசனை அடிக்கும்…”
“என்னடா பேசுறான்?” ஜாஸ்மின் கலங்கினாள்.
“அவன் இப்ப சுமித் இல்ல. சும்மா இரு” மனிஷ் சொல்லிவிட்டு,
“தம்பி, தெரியாம உன்ன கூப்ட்டோம். ப்ளீஸ் போய்டு” என்று சுமித்துக்குள் இருக்கும் சுதாகரிடம் பேசினான். சுமித் அழுதான்.
“ப்ளீஸ் போய்டு”
“அப்பாவ தேடனும்”
“இவன் அப்பன நாம ஏன்டா தேடனும்?” நகுல் கோபமாக மனிஷிடம் கேட்டான்.
மனிஷ், “நீ மறுபடியும் ஆரம்பிக்காத, ப்ளீஸ்” என்று நகுலை அடக்கிவிட்டு.
“தம்பி. உன்ன தெரியாம கூப்டோம். உங்க அப்பாவ தேடுறதுலாம் கஷ்டம்,” என்றான்.
“சுருட்டு சாமி தலப் புள்ள தான் வேணும்னு கேட்டுச்சு. வீட்டுக்கு பெரிய புள்ளையா பொறந்தது என் தப்பா? என் கழுத்த வெட்டிக் கொன்னுச்சு. சித்திக்கு எல்லாம் தெரியும். சித்தி பணக்காரி ஆக பாத்துச்சு… அப்பாவ எனக்கு ரொம்ப புடிக்கும். அப்பா எங்கயோ…”
மேற்கொண்டு பேசாமல் சுமித் அழுதான்.
“அந்த சுருட்டு சாமிய போய் பழி வாங்க வேண்டியதுதான! எங்க உயிர ஏன்டா எடுக்குற?” நகுல் கோபமாகக் கத்தினான்.
சுமித் நகுலை முறைத்துப் பார்த்தான். “சுருட்டு சாமிய ஊரே அடிச்சு கொன்னுச்சு. சித்திய போலீஸ் புடிச்சிருச்சு. அப்பா எங்கேயோ போச்சு” என்றான். நகுலுக்கு அவன் அப்படி முறைப்பது என்னமோ போல் இருந்தது.
இப்போது ஜாஸ்மின் பேசினாள், “ப்ளீஸ் தம்பி போய்டு…” என்று சுமித்தைத் தொட்டாள்.
நகுல், “சுருட்டு சாமியார், குருட்டு சாமியார்னுட்டு. இது ஏதோ சைக்காலஜிகல் டிஸார்டர். டேய் சுமித்” என்றவாறே சுமித்தின் தோளைப் பிடித்துக் குலுக்கினான். அவனை சட்டை செய்யாது, அறையின் சுவரையே உற்றுப் பார்த்த சுமித்தின் உடம்பு நடுங்கிற்று. அவன் அப்படியே மயங்கி விழுந்தான்.
***
மணி விடியற்காலை இரண்டு. சுமித் அவன் பாட்டியின் அருகே உறங்கிக் கொண்டிருந்தான். அவன் உறங்கிவிட்டான் என்பதை ஊர்ஜிதப் படுத்திக் கொண்ட நகுல், பக்கத்து அறைக்கு படுக்கச் சென்றான். போன் அடித்தது. ‘ஜாஸ் காலிங்’ என்று வந்தது.
“எவரிதிங் பைன் ரைட்?” ஜாஸ்மின் வினவினாள்.
“யா. தூங்கிட்டான். மனிஷ்?”
“என்ன டிராப் பண்ணிட்டு, இப்பதான் வீட்டுக்குப் போனான். யூ டேக் கேர். உன் வீட்டுக்கு போ சொன்னா நீ கேக்கல…”
“ஹே சும்மா பயப்படாத. சுமித்துக்கு துணையா இங்க யாராவது இருக்கணும் இல்ல. அவன் பாட்டிக்கிட்ட வேற எதையும் சொல்லல”
“எனக்கு என்னமோ எல்லாம் தப்பாவே படுது. வீ ஷுடின்ட் ஹாவ் டன் திஸ்”
“ஹே சும்மா இருடி. எனக்கு இதுலலாம் இன்னும் நம்பிக்கை வரல. நாளைக்கு சுமித் எழுந்ததும் வீ டேக் ஹிம் டு சைக்கியாட்ரிஸ்ட். இப்ப நீ ரிலாக்ஸ்டா தூங்கு”
நகுல் போனை துண்டித்தான். கதவை சாத்திவிட்டு, AC-யை ஆன் செய்தான். போனை பெட்டில் எறிந்துவிட்டு, கழிவறை நோக்கிச் சென்றான். அவன் சிறுநீர் கழித்துக் கொண்டிருக்கையில், யாரோ அறைக் கதவைத் திறக்கும் சப்தம் கேட்டது.
“சுமித்” என்று குரல் கொடுத்தான்.
பதில் வரவில்லை. வேகமாக வெளியே வந்து பார்த்தான். கதவு மூடி இருந்தது. நகுல் தன் உடம்பு வேர்ப்பதை உணர்ந்தான். AC ஓடிக்கொண்டிருந்தும் அறை சூடாக இருந்தது. அவன் அறைக் கதவையே பார்த்துக் கொண்டு நிற்க, திடீரென்று அவனுக்குப் பின்னே இருந்த பாத்ரூம் கதவு வேகமாகச் சாத்திக்கொண்டது.
“எல்லார் உள்ளையும் பயம் இருக்கு. நாங்க வெளிய காட்டிக்கிறோம். நீ பயப்படாத மாதிரி நடிக்கிற. அவ்ளோதான்” ஜாஸ்மினின் வார்த்தைகள் காரணமின்றி நினைவுக்கு வந்தன. பாத்ரூம் கதவைத் திறந்தான். உள்ளே யாரும் இல்லை.
“பயமா எனக்கா!” தனக்குத்தானே சொல்லிக் கொண்டான். ஆனாலும் தான் தன் வீட்டின் தலைப்பிள்ளை என்ற எண்ணம் மட்டும் வந்து வந்து போனது.
அப்படியே படுக்கையில் சாய்ந்தான். சிறிது நேரத்தில், சாய்ந்து உறங்கிப் போனான். நகுலின் மேல் யாரோ அமர்ந்து அவனை அழுத்துவது போல் இருந்தது. அவன் எழ முயற்சித்தான். முடியவில்லை. அவன் தன் கழுத்து நெறிக்கப் படுவதை உணர்ந்தான். மூச்சு விடமுடியவில்லை. அந்த அறை முழுக்க சுருட்டு நெடி பரவிக் கொண்டிருந்தது.