கொரோனா நாட்கள்- நெடுங்கதை

அலுவலகத்தில் நான் வேலைக்கு வந்தே ஆகவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். குரோம்பேட்டையிலிருந்து செல்லும் நண்பர் எம்.வியின் வண்டியில் ஏறிக்கொள்ளலாம் என்று பார்த்தேன்.
“சோசியல் டிஸ்டன்சிங் ப்ரோ. சாரி ப்ரோ” என்று சொல்லிவிட்டார்.
“மாஸ்க் க்ளவுஸ்லாம் போட்டுகிட்டு தான் ப்ரோ வருவேன்”
அவர் சமாதானம் ஆகவில்லை.
“வீட்ல குழந்தைங்கலாம் இருக்கு ப்ரோ. எனக்கு வந்தா நான் தாங்குவேன். ஆனா என் மூலமா அவங்களுக்கு வந்திரக் கூடாது! நீங்க வேற உங்க எதிர்வீட்டுக்காரு வெளிநாட்ல இருந்து வந்திருக்காருன்னு சொல்றீங்க…” என்றார்.
“எதிர்வீட்டுகாரு வெளிநாட்ல இருந்து வரல ப்ரோ. அவர் வீட்டு காரு தான் வெளிநாட்ல இருந்து வந்திருக்கு. ஜெர்மன் கார்” என்றேன்.
கொஞ்சம் சுதாரித்துக்கொண்டு கேட்டார், “அதான். கார்ல் கொரோனா வரும்ல…!”
“இல்ல. நாலு மாசத்துக்கு முன்னாடியே அந்த காரு வந்திருச்சு ப்ரோ” என்றேன் நான்.
“கொரோனாவும் நாலு மாசத்துக்கு முன்னாடியே வெளிநாட்ல வந்திருச்சு ப்ரோ” அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னார்.
***
ஊரடங்கில் ஒரு சாமானியன் படும்பாட்டை நகைச்சுவையாக சொல்லும் நெடுங்கதை

கிண்டிலில் வாங்க – Click here to buy

ஏப்ரல் இரவில், ராக் மியூசிக் இசையில், அநிருத்தன் செய்த மூன்று கொலைகள்- சிறுகதை

“As soon as you’re born they make you feel small
By giving you no time instead of it all”- John Lennon

தான் மூன்றுபேரை கொடூரமாக கொன்றுவிட்டதாக, இருபத்தி எட்டு வயது, அநிருத்தன் அண்ணா நகர் மேற்கு V5 காவல் நிலையத்தில் சரணடைந்த போது மணி இரவு 9.10. ஹெட் கான்ஸ்டபிள் கன்னியப்பன் ட்யூட்டி முடிந்து வீட்டுக்கு கிளம்பிக் கொண்டிருந்தார்.  திருமங்கலம் சிக்னலில் நடந்த திடீர் மாணவப் போராட்டத்தை கலைத்து கட்டுப்படுத்த போனதால், தன்னால் வழக்கம் போல்  எட்டு மணிக்கு வீட்டுக்குக் கிளம்ப முடியவில்லை என்ற கடுப்பில், எப்படியாவது இந்தவருடம் இந்த வேலையை விட்டுப் போய் விட வேண்டும் என்ற சிந்தனையில் தன் போலிஸ் உடையை கலட்டி வைத்துவிட்டு காலையில் போட்டுவந்த மடிப்பு கலையாத சிகப்பு சட்டை நீல நிற பேண்ட்டை போட்டுக் கொண்டு அவர் ஓய்வறையில் இருந்து வெளியே வந்த போது அநிருத்தன் தலையை தொங்கப் போட்ட வாக்கில் போலிஸ் நிலையத்தின் நடு அறையில் நின்றுக் கொண்டிருந்தான்.

“யார் சார் நீங்க?” அவனுடைய நாகரிகமான உடை கன்னியப்பனின் தொனியை நிர்ணயித்தது.

பதில் சொல்லாமல் நின்றுக்கொண்டிருந்த அநிருத்தனிடம் அவர் மீண்டும் சப்தமாக கேட்டார்.

“ஏய் தம்பி! யார் நீ?”

“Till the pain is so big you feel nothing at all” அவன் பாடினான். அவருக்கு புரியவில்லை.

அவன் தன் இடது கையை உயர்த்தி மூன்று என்று காண்பித்தவாறே, தன் வலது பேண்ட் பாக்கெட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து மேஜை மீது வைக்கும் போதுதான் அவருக்குப் புரிந்தது. வேகமாக உள்ளே ஓடினார்.

***

ஆய்வாளர் அந்தோணிக்கு, அந்த இருபதுக்கு இருபது அறையில், மின்விசிறி வேகமாக சுற்றியும்  வியர்த்து கொண்டே இருந்தது. வேலை செய்யாமல் சம்பளம் வாங்குவதே உத்தமம் என்று நினைக்கும் அவருக்கு இரவு ஒரு கொலைக்காரனை விசாரிப்பதெல்லாம் கனவில் கூட நடந்து விடக்கூடாத செயல்.

“அறிவுடையான். என் யூனியன் லீடர். ரொம்ப நாளா என்கிட்ட வம்பு பண்ணிக்கிட்டே இருந்தான். சுட்டுட்டேன். சவுக்கார்பேட்டை போய் வாங்கி வந்த துப்பாக்கில சுட்டேன். செத்துட்டான்” அநிருத்தன் சிரித்தான்.

“அப்பறம், அந்த மேனஜர் பாவேஷ் மிஸ்ராவ கொன்னேன். அப்பறம் அந்த எச்ச ஆடிட்டர்…. மூணு பேரும் மர்கயா….” அவன் மீண்டும் சிரித்தான்.

அவன் எதுவும் விபரீதமாக செய்துவிடக் கூடாது என்பதற்காக கன்னியப்பனும், உதவி ஆய்வாளர் சதீஷ் குமாரும் அவனை கண்காணித்தவாறே அவனுக்கு பின்னே நின்றுக் கொண்டிருந்தனர்.

“கவரைபேட்டைல இருக்கு சார் என் வீடு. அங்க இருந்து அண்ணா நகர் வர எவ்ளோ நேரம் ஆகும் தெரியுமா சார்! காலைல 8.45 க்கு ப்ரான்ச்ல இருக்கணும்.  எவ்ளோ வேலை செய்றேன்.. பாராட்டக் கூட வேணாம். எப்ப பாத்தாலும் மட்டம் தட்டிக்கிட்டே…”

“போயும் போயும் வேலைல பிரச்சனைனா கொலை பண்ணுணீங்க?”

“போயும் போயும் வேலையா!  இங்க வேலை தான் சார் எல்லாருக்கும் வாழ்க்கையே. வீட்ல என் அம்மா அப்பா கூட இருக்குற நேரத்த விட ஆபிஸ்ல இருக்குற நேரம் தான் சார் அதிகம். எவ்ளோ வேலை செஞ்சாலும், இவனுங்க தலைக்கு மேல உக்காந்துகிட்டு டார்ச்சர் பண்ணிக்கிட்டே இருக்காங்க சார்”

கன்னியப்பன் அவனை ஆமோதிக்கும் வகையில் தலை அசைத்தவாறே அந்தோணியைப் பார்த்தார். அந்தப் பார்வை அந்தோணியையும் யாரவது சுட்டுவிட்டால் நன்றாக தான் இருக்கும் என்பது போல் இருந்தது. அந்தோணி அதை கவனிக்கவில்லை.

“ஒரு வேலையும் செய்ய மாட்டான் சார் என் மேனஜர். எங்கேயோ டெல்லில இருந்து வந்து இங்க சுரண்டி திங்குகுறான். சுரண்டி. அதுக்கு இந்த அறிவுடையான் சப்போர்ட். திருட்டு பசங்க சார் எல்லாரும். அதான் ஒண்ணா சேந்துட்டானுங்க. வேலை கொடுத்துகிட்டே இருப்பானுங்க. பண்ணாத தப்புக்கு திட்டுவாங்க. வேலையயும் செஞ்சுட்டு பேச்சும் வாங்கனும். உடம்புலாம் கூசும் சார்…

“ஒரு நாள் ஒரு RTGS  தப்பா போட்டுட்டேன் சார். காசு வேறொருத்தனுக்கு தப்பா போயிருச்சு. அத நாங்க கண்டுபுடிக்கிறதுக்குள்ள அவன் அந்த காச எடுத்துட்டான்.  இவ்ளோ வேலை கொடுத்தா ஒருத்தன் சறுக்க தான் செய்வான்,  It’s a human error. அதுக்கு நானும் பொறுப்பு தான். ஆனா நான் மட்டும் பொறுப்புங்கற மாதிரி என்ன அசிங்கப்படுத்தி, என் சம்பளத்துல இருந்து அந்த காச ரெகவர் பண்ணுவேன்னு மிரட்டி எனக்கு மெமோலாம் கொடுத்தாங்க.

நான் யார் அக்கௌண்டுக்கு காசு போச்சோ அந்த ஆள தேடிப் புடிச்சு ரெண்டு மாசம் அவன் பின்னாடி அலைஞ்சி பாதி காச வாங்கினேன். அவன் மீதி காச ரெண்டு மாசம் கழிச்சு தான் தருவேன்னு சொல்லிட்டான். அதனால் என் கையில இருந்த காச போட்டேன். ஆனா அந்த பிரச்சனைய நான் சால்வ் பண்ணியும் அத வச்சே என்ன கேவலப் படுத்திக்கிட்டு இருக்காங்க.

“நேத்து அந்த ஆடிட்டர் முன்னாடி  இத சொல்லியே என்ன அசிங்க படுத்திட்டாங்க சார். அதான் இன்னைக்கு துப்பாக்கியோட வந்தேன். என்ன அசிங்க படுத்துன அறிவுடையான், அந்த பாவேஷ் அத வேடிக்கை பாத்த ஆடிட்டர் மூணு பேரயும்…”

அவன் கையை சுடுவது போல் வைத்துக் காட்டினான்.

அந்தோணி கன்னியப்பனைப் பார்த்தார். கன்னியப்பனுக்கும் வியர்க்க தொடங்கியது.

“அந்த ஆடிட்டர் என் லிஸ்ட்லயே இல்ல…  என்ன பத்தி பேசி ஏதோ சிரிச்சிக்கிட்டே இருந்தாங்க, டக்குனு எந்திருச்சு அந்த ஆடிட்டர சுட்டேன். அறிவுடையான் அப்படியே உறைஞ்சி போய் நின்னுட்டான். அந்த பாவேஷ் அலறிகிட்டே ஸ்டோர் ரூம்குள்ள ஓடுனான்…. அறிவுடையான் முகத்த பார்க்கணுமே… !” அநிருத்தன் கண்கள் ஒளிர சிரித்தான்.

“அறிவுடையான் சார். ஜிந்தாபாத்… யூனியன் ஜிந்தாபாத்” அநிருத்தன் துப்பாக்கியை அறிவுடையான் நோக்கி நீட்டிய போது மேலாளர் இருக்கைக்கு பின் மாட்டப் பட்டிருந்த சுவர் கடிகாரம் எட்டு முறை அடித்தது.

“வேணாம் அநிருத். உனக்கு என்ன வேணுமோ செய்றேன். யூனியன்ல ட்ரசரர் ஆக்குறேன். இன்னும் ரெண்டு வருசத்துல நான் ரிட்டையர் ஆகிடுவேன் அநிருத். அப்பறம் யூனியன்ல எல்லாம் நீ தான்”

அநிருத்தன்  சப்தமாக சிரித்தான்.

“அப்படியே சுட்டா கிக்கு இல்ல சார். அதான் பாட்டு போட்டேன்…” அநிருத்தன் தன் தலையை திருப்பி கன்னியப்பனை பார்த்து சொல்லிவிட்டு, தன் மொபைலில் ப்ளே ம்யுசிக்கை இயக்கினான்.

கித்தார் இசையோடு சேர்ந்து ஜான் லெனனின் குரல் மேலெழும்பி அந்த போலிஸ் ஸ்டேஷனை நிறைத்தது.

“அது என்னமோ தெரில சார், இந்த பாட்ட கேட்டாலே கொலை பண்ணனும்னு தோணுது சார்”

“எதுக்கு தம்பி அந்த பாட்ட கேட்டுக்கிட்டு, கேட்காதீங்க….” கன்னியப்பன் அப்பாவியாக சொன்னார்.

“மூளைக்குள்ள கேட்டுக்கிட்டே இருக்கு சார்… “ அவன் சொல்லிவிட்டு பாடத் தொடங்கினான். கன்னியப்பனும் அந்தோனியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“They hate you if you’re clever and they despise a fool” பாடியவாறே அவன் அந்தோணியைப் பார்த்தான். அவர் கன்னியப்பனை நோக்கியதை கவனித்தான்.

“புரிலையா சார். பாரதியார் சொன்னாரே. நல்ல கித்தார் செஞ்சு சேத்துல தூக்கி போட்டியே… சொல்லடி சிவசக்தி என்னை சுடர்மிகு அறிவுடன் படைச்சுட்டியேனு… அந்த மாதிரி தான் இதுவும் ”

கன்னியப்பன் சற்றே சகஜமாகி அநிருத்தன் முன்னே வந்து நின்றார். அவருக்கு ஏனோ அநிருத்தன் மீது கோபம் வரவில்லை. இரக்கம் தான் வந்தது.

“இவ்ளோ அறிவா பேசுறீங்களே தம்பி. அப்பறம் ஏன் கொலை அது இதுன்னு…” அவர் பேசி முடிப்பதற்குள் அவன் சப்தமாக சிரித்தான்.

அநிருத்தனின் சிரிப்பொலி அந்த வங்கி அறையெங்கும் எதிரொலித்தது. கூடவே கித்தார் இசையும்.

“அறிவுடையான் சார். அறிவுடையான் சார். உங்க கிட்ட ஒன்னு சொல்றேன் சார். எனக்கு கித்தார் வாசிக்கனும்னு ரொம்ப ஆசை சார், ஆனா எங்க வீட்ல சேத்துவிடல. படிப்பு படிப்பு படிப்பு. படிச்சா மேல வந்திருலாம்னு எங்க அப்பாவும் அம்மாவும் நம்புனாங்க சார். அப்பாவி சார் அவங்க. என்ன படிச்சாலும் உன்ன மாதிரி சுரண்டல் நாய் கீழ, சாரி அறிவுடையான் சார், உங்கள மாதிரி நாய் கீழ தான்  வேல செய்யனும், கடைசி வரைக்கும் நீங்கலாம் எங்கள கால்ல போட்டு மிதிப்பீங்கனு அவங்களுக்கு தெரில…”

‘When they’ve tortured and scared you for twenty-odd years
Then they expect you to pick a career
When you can’t really function you’re so full of fear’

ஜான் லெனன் பாடிக் கொண்டே இருந்தார்.

“வேணாம் அநிருத். ப்ளீஸ். ப்ளீஸ் என்ன விட்டிரு…”

தாமதிக்காமல் அநிருத்தன் அவருடைய இடது கையில் சுட்டான். குண்டு விரலை கிழித்து ரத்தம் பீய்ச்சிக் கொண்டு வர, அறிவுடையான் அலறினார். அநிருத்தன் வாசலுக்கு ஓடினான். வங்கியின் ஷட்டர் வெளியே மூடப் பட்டிருப்பதை உறுதி செய்து கொண்டான். வங்கி ஊழியர்கள்  மட்டும் வந்து போக, பக்கத்தில் அமைந்திருந்த சிறிய வழியின் கதவை உள்ளிருந்து சாத்திவிட்டு, மீண்டும் மேலாளர் இருக்கைக்கு வந்தான்.

அறிவுடையான், கையைப் பிடித்தவாறே தரையில் அமர்ந்து வலியில் முனகிக் கொண்டிருந்தார். .

“ப்ளீஸ் என்ன விட்டிரு”

“ப்ளீஸ் என்ன சுட்டுருனு சுட்டுருனு கேட்குது சார்” அநிருத்தன் சொல்ல அறிவுடையான் வாயை மூடிக் கொண்டார்.

“நாட்ல பாதி பேருக்கு வேலை இல்லை. நீங்கலாம் இந்த மாதிரி சேப்ட்டியான வேலைல உக்காந்துகிட்டு, யூனியன் பேர சொல்லி வேல செய்யாம வெட்டி சம்பளம் வாங்கிட்டு இருக்கீங்க… அது சரி சார், யூனியன் தலைவர்னா பாரபட்சம் பாக்காம இருக்கணும். நீங்க ஏன் சார் அந்த டெல்லிகாரனுக்கு மட்டும் சப்போர்ட் பண்றீங்க!”

“நாமதான்…..” அவர் சொன்னது அவனுக்கு புரியவில்லை

“ஹான்…” என்றவாறே துப்பாக்கியை அவரை நோக்கி நீட்டினான்.

அவர் தெம்பை வரவழைத்து கொண்டு பேசினார்.

“நாமதான பாத்துக்கணும், வெளில இருந்து வரவங்கள…” அறிவுடையான் பேச முடியாமல் பேசி முடிப்பதற்குள் அவரது வலது கையில் சுட்டான் அநிருத்தன்.

அவர் அலறினார். அநிருத்தன் லெனானின் பாட்டிற்கு காற்றில் கித்தார் வாசித்தவாறே அவர் அருகில் வந்தான்.  அவர் தொடர்ந்து அலற, அவன் அவரை நெருங்கி, குனிந்து அவர் கண்களைப் பார்த்து பேசினான்.

“நல்லா பொய் பேசுறீங்க சார். அதான் சுட்டேன்”

“அநிருத். அந்த RTGS ட்ரான்ஸாக்சன் விசயத்த மனசுல வச்சுதான் இதெல்லாம் பண்றியா! அந்த காச நான் கொடுத்துறேன். ப்ளீஸ்…”

அநிருத்தன் சிரித்தான்.

“என் பிரச்சனைக்கு மட்டும் உங்கள சுடல சார். என்ன அப்டி சுயநலவாதினு நினச்சுடாதீங்க. அன்னைக்கு நான் என்ட்ரி மட்டும்தானே போட்டேன்! வெரிபை பண்ணினது உன் மேனஜர் தான! அப்ப அவனும்தான சார் பொறுப்பு. அவன ஏன் ஒன்னும் பண்ணல! இந்த பாரபட்சம் தான் எனக்கு உறுத்துது. இந்த ஊர்ல எங்க போனாலும் இதே பாரபட்சம். தப்பு பண்றது ஒருத்தன் தண்டனை அனுபவிக்கிறது இன்னொருத்தன்.

“சொல்லுங்க சார், ஏன் அவன காப்பத்திவிட்டீங்க, அவன் உங்க ஜாதி இல்லல…!”

அறிவுடையான் இல்லை என்று தலை அசைத்தார்.

“நீங்க புரட்சி பேசுற ஜாதி, அவன் புரட்சிய ஒடுக்குற ஜாதி. நீங்க ரெண்டு பேரும் எப்படி ஒன்னு சேந்தீங்க…! உங்க ரெண்டு பேரையும் எது ஒரு புள்ளில இனைக்குது?”

அறிவுடையான் அமைதியாக இருந்தார்.

அநிருத்தன் துப்பாக்கியை அறிவுடையான் நெத்தியில் வைத்தான்.

“கேள்விக்கு பதில் சொல். இல்லையேல் மாண்டு போ. அம்புட்டுதேன். ஜிந்தாபாத்”

“அவன் யூனியனுக்கு contribution கொடுக்குறான்…”

“உண்மைய சொல்லுங்க சார். யூனியனுக்கா இல்ல உங்களுக்கா…!” அநிருத்தன் சிரித்தான்.

“என்ன மன்னிச்சிடு…” அறிவுடையான் கெஞ்சினார்.

அநிருத்தன் மீண்டும்  சிரித்தான்.

“so, பணம் தான் ஜாதி மதம் இனம் மொழி கடந்து உங்க எல்லாரையும் நேர் கோட்டுல இனைக்குது. உங்க ஜாதிகாரனப் பாத்தா, நாமலாம் ஒரே ஜாதி. வேற ஜாதியா இருந்தா நாமெல்லாம் ஒரே ஊரு. இல்ல வேற ஊரா இருந்தா நாமெல்லாம் ஒரே யூனியன், ஒரே நாடு இப்டி எதையாவது சொல்லி ஏமாத்திகிட்டே இருக்குறது. ஆனா பின்னாடி காசு காசுனு காச மட்டுமே குறிக்கோளா வச்சு நீங்க, உங்க புள்ளக்குட்டிங்க மட்டும் நல்லா இருக்க வேண்டியது.

“உண்மைலேயே இங்க ரெண்டே ஜாதி தான் சார் இருக்கு. ஒன்னு காசு இருக்க ஜாதி, இன்னொன்னு காசு இல்லாத ஜாதி. வாய்ப்பு இருக்க ஜாதி, வாய்ப்பு இல்லாத ஜாதி. வாய்ப்பு இருக்கவன் இல்லாதவன ஏச்சி பொழைக்குறான். நீங்கலாம் என்ன ஏச்சிங்களே அது மாதிரி….”

“தப்பு தான். நான் பண்ண எல்லாமே தப்பு தான்.  என்ன விட்டுரு ப்ளீஸ்…” அவருக்கு மூச்சு இறைத்தது.

“விட்டுர்றேன். நீங்க தப்ப ஒத்துகிட்ட மாதிரி அந்த மேனஜர் பயலையும் ஒத்துக்க வைங்க. மன்னிச்சு விட்டுர்றேன்”

அறிவுடையான் கண் கலங்க அவனையேப் பார்த்தார்.

“அப்பறம் யோசிச்சேன், எதுக்கு மன்னிச்சிகிட்டு! இவங்களலாம் திருத்தவே முடியாதுன்னு. அதான் அறிவுடையான நெத்தில சுட்டேன். அந்த மேனஜர வாய்லயே சுட்டேன்.

அந்த பயந்தாங்கோலிய பாக்கணுமே. உள்ள, அந்த யூஸ் பண்ணாத பழைய லேடிஸ் டாய்லெட்ல ஒளிஞ்சிகிட்டு இருந்தான். ஜுராசிக் பார்க் படத்துல  டைனாசருக்கு பயந்து ஒருத்தன் பாத்ரூம்ல உக்காந்துப்பானே அவன மாதிரி. துப்பாக்கிய பாத்ததும் பண்ணுன  தப்பு, பண்ணாத தப்பு எல்லாத்தையும் ஒத்துக்கிட்டான்…”

“மாப் கர்தீஜியே அநிருத்ஜி. மாப் கர்தீஜியே” பாவேஷ் மிஸ்ரா இரு கைகைளைக் கூப்பி கும்பிட்டான்.

“அறிவுடையான் சார். என்ன சார் இவரு. இப்டி கெஞ்சிறாரு! பாக்கவே பாவமா இருக்கு சார்”

சொன்னவாறே அநிருத்தன் அவர்கள் இருவரையும் மாறிமாறி பார்த்தான்.

“ஆனா ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர தான் உயிரோட விடப் போறேன். அபி ஹம் க்யா கரூன்…! போலோ சாப் “

“மாப் கர்தீஜியே அநிருத்ஜி. மாப் கர்தீஜியே. நான் பண்ணதுலாம் தப்புனு ஒத்துக்குறேன்”

“ரொம்ப லேட் மேனஜர் சாப்”

அறிவுடையானுக்கு பயம் வந்தது. அநிருத்தன் அந்த மேலாளரை மன்னித்து விட்டால் என்னாவது!

“அவன சுட்டுடு அநிருத். நான் உனக்கு செய்யவேண்டியத செய்வேன்” அறிவுடையான் பதட்டப்பட்டார்.

அநிருத்தன் ஒரு நொடி கண்களை மூடி யோசித்தான். அவன் மனதில் மீண்டும் கித்தார் இசை.

‘There’s room at the top they’re telling you still
But first, you must learn how to smile as you kill
If you want to be like the folks on the hill’

கண் விழித்தான்.

“சரி சார். இந்த மேனஜர் நமக்கு வேணாம்.  நீங்களாவது இவன்ட்ட வாங்குற காசுக்கு நியாயமா வேல பாக்குறீங்க. யாருகிட்டலாம் காசு வாங்குறீங்களோ அவங்களுக்குலாம் சொம்பு தூக்குறீங்க. ஆனா இந்த பாவேஷ் பய, பேங்க்ல சம்பளம் வாங்கிட்டு வேலையே செய்ய மாட்றான்…” என்று துப்பாக்கியை பாவேஷ் மிஸ்ரா முன்பு நீட்டினான்.

“அநிருத்ஜி ப்ளீஸ்.”

“அறிவுடையான் சார் நேத்து ஒரு இங்கிலீஷ் படம் பாத்தேன்… எப்டி சுடுறதுன்னு ப்ராக்டிஸ் பண்றதுக்கு நிறைய படம் பாத்தேன்ல, அப்ப அந்த சீன் வந்துது. அதுல ஒருத்தன் கொலை பண்றதுக்கு முன்னாடி என்ன சொல்வான் தெரியுமா…?

அறிவுடையான் இல்லை என்பது போல் சம்ப்ரதாயமாக தலை ஆட்டினார்.

“உங்களுக்கு புரியுற மாதிரி சொல்லவா?

“அந்த கேடுகெட்ட மனிதர்களை உக்கிரமான தண்டனைகளினால் கொடிதாய்ப் பழிவாங்குவேன்; நான் அவர்களைப் பழிவாங்கும்போது நானே கடவுள் என்று அவர்கள் அறிந்துகொள்வார்கள். பிதாசுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென்”

சொன்ன நொடியில் அவனுடைய துப்பாக்கி குண்டு மிஸ்ராவின் வாய்க்குள் சீற, அவன் அப்படியே பின்னே சாய்ந்த வாக்கில் சரிந்தான்.

அநிருத்தன் அறிவுடையானைப் பார்த்தான்

“உங்கள மன்னிச்சு விட்டுறால்ம்னு தான் சார் பாத்தேன். இங்க நீங்கலாம் பண்ணுன தப்புக்குதான்  நான் தண்டனை கொடுக்குறேன். ஆனா உங்கள வெளில விட்டா என்னைய மாட்டி விட்டிருவீங்க. சட்டம் என்ன தண்டிக்க முடியாது. தண்டிக்க விட மாட்டேன்…” அநிருத்தன் மீண்டும் சிரித்தான்.

***

அந்தோணிக்கு சில நிமிட மாறுதல் தேவைப்பட்டது. எழுந்து பின்னே சென்று சிகரெட்டை பற்ற வைத்தார். கன்னியப்பன் வாசலில் நின்ற சென்ட்ரியை உள்ளே வர சொல்லிவிட்டு, அவரும் பின்புறம் சென்றார்.

“என்னய்யா  கோக்கு மாக்கா இருக்கான்!” அந்தோணி ஒரு சிகரட்டை கன்னியப்பனிடம் நீட்டியவாறே பேசினார். .

“இவன ரிமாண்ட்ல வச்சுட்டு வீட்டுக்கு போனா கூட தூக்கம் வராதே. எங்க இருந்து தான் வரானுங்களோ. அப்படியே தலைமறைவாயிருக்கலாம்ல! ஏதாவது ஸ்பெஷல் ஸ்க்வாட் தலைல கேச கட்டிட்டு நாமா ஒதுங்கி இருக்கலாம். நேரா நம்ம ஸ்டேசனுக்கு வந்து நம்ம கழுத்த அறுக்குறான்”

“ரொம்ப பாதிக்கப்பட்டிருப்பான் போல சார். நம்மள கூட வெயில பந்தோபஸ்து இது அதுனு நிக்க வச்சா கோபம் வருமே. சுட்டுரலாம்னு கூட நானே நினைச்சிருக்கேன். இவன் பண்ணிட்டான்…” கண்ணியப்பன் புகையை கக்கும் சாக்கில் மனதிலிருப்பதையும்   வெளியே கக்கினார்.

அந்தோணி கன்னியப்பனை ஏற இறங்கப் பார்த்தார்.

“அந்த எஸ்.ஐ பயல கூட்டிட்டு க்ரைம் சீன் போங்க…” கன்னியப்பன் எதிர்ப்பார்த்ததை போல் அந்தோணி சொன்னார்.

“சீட்ட விட்டு நகரவே மாட்டேங்குறான் நாய். அந்த பையன் செஞ்சது தான் சரி. இவனையும் அதே மாதிரி…”

“என்ன கன்னியப்பன். யோசிச்சுகிட்டே நிக்குறீங்க?” அந்தோணி சிடுசிடுத்தார். கன்னியப்பன் சிகரட்டை தரையில் போட்டு மிதித்தார்.

***

கன்னியப்பன் உதவி ஆய்வாளர் சதீஷின் இருசக்கர வாகனத்தின் பின்னே அமர்ந்திருந்தார். வண்டி அண்ணா நகர் பள்ளி சாலையில்  திரும்பியது.

“அந்த பையன நினச்சா பாவமா இருக்கு தம்பி…”

சதீஷ் எந்த பதிலும் சொல்லாமல் சாலையில் மட்டும் கவனம் செலுத்தி வண்டியை ஓட்டினார்.

“கோவத்துல அடிச்சிருந்தா கூட கேஸ் கம்மி, இவன் ப்ளான் பண்ணி துப்பாக்கிலாம் வாங்கிட்டு வந்திருக்கான். அவன் வாழ்க்கையே போச்சு…“ கன்னியப்பன் சதீஷின் பதிலை எதிர்ப்பாரதவராய் தனக்குத் தானே பேசிக் கொண்டே வந்தார்.

“இவனலாம் வெளிய விடறது ரிஸ்க் தான் சார். அவனுக்குள்ள எவ்ளோ வெறி இருக்கு பாருங்க….” சதீஷ் தன் பங்கிற்கு தன் கருத்தைப் பதிவு செய்தார்.

“அவனுக்குள்ள அவ்ளோ வெறிய வர வச்சது யாரு! வெறும் போலீசா மட்டும் எல்லாத்தையும் பாக்கக் கூடாது தம்பி. அவங்க அப்பா அம்மாக்கு தெரிஞ்சா எப்டி பதறுவாங்க….”

“நம்ம என்ன சார் பண்ண முடியும். நம்ம ட்யூட்டிய தான் பாக்க முடியும்!”

கன்னியப்பன் பதில் எதுவும் பேசவில்லை. ஆனால் அவர் மனதில் ஆயிரம் எண்ணங்கள். ‘ஆமா பெரிய  ட்யூடி. டைரக்டா எஸ்.ஐ எக்ஸாம் எழுதி வரவனுங்களுக்கு சொந்தமா யோசிக்கக் கூட தெரியாது. இன்ஸ்பெக்டர் சொல்றது தான் வேத வாக்கு.  ட்யூடி பத்தி பேசுறான்”

அவர் சிந்தனையை கலைக்கும் விதத்தில் வண்டி திடிரென்று நின்றது. சுதாரித்தார். அந்த வங்கியின் டிஜிட்டல் பலகை அவர்களை வரவேற்றது. தன் மொபைலை பார்த்தார். மணி 10.35. மொபைல் பேட்டரியின் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்ததை கவனித்தார்.

“லோனவா கூனாவானு ஒரு மொபைல் என் பையன் வாங்கிக் கொடுத்தான். பேட்டரியே நிக்க மாட்டேங்குது…” சொல்லியவாறே வண்டியிலிருந்து இறங்கினார்.

வங்கியின் வளாகத்திற்குள் நுழைந்ததும் ATM வரவேற்றது. பக்கத்தில், அநிருத்தன் விவரித்ததுபோல் பெரிய ஷட்டரால் வாசல் மூடப் பட்டிருந்தது. பக்கத்தில் சிறிய வழி மட்டும் திறந்து இருந்தது. உள்ளே வெளிச்சம் தெரிந்தது. கன்னியப்பன் வாசலிலேயே நின்றார்.

“உள்ள போங்க சார். நான் வண்டிய நிறுத்திட்டு வரேன்” உதவி ஆய்வாளர் சொன்னார்.

“க்ரைம் சீன்னாலே இப்பலாம் அலர்ஜி. வயசாகுதுல்ல…” என்றவாறே வங்கியின் உள்ளே காலடி எடுத்து வைத்தார்.

மூன்று பிணங்களை எதிர்ப்பார்த்து உள்ளே  சென்றவரை அசையாமல் நிற்கவைத்தது உள்ளே அவர் கண்ட காட்சி.

மூன்று பேர் சந்தோசமாக உரையாடிக் கொண்டிருந்தார்.

“கியா பாத் ஹே சார்” என்றவாறே வாசலை பார்த்து அமர்ந்திருந்த பாவேஷ் மிஸ்ரா கன்னியப்பனை கவனித்தார். அவரின் முன்னே இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்த இருவரும், பாவேஷ் வாசலை பார்ப்பதைக் கண்டு திரும்பி பார்த்தனர்.

“என்ன சார்!” குள்ளமாக கட்டை மீசை வைத்த அந்த ஆசாமி கன்னியப்பனை பார்த்து வினவினார்.

“நான் V5 ஸ்டேசன் ஹெட் கான்ஸ்டபிள்” பாவேஷின் மேஜையில் இருந்த ஏரளாமான காகிதங்களை கவனித்தவாறே கன்னியப்பன் சொன்னார். அந்த ஆசாமி இருக்கையில் இருந்து எழுந்து கன்னியப்பனை நோக்கி வந்தார்.

“வாங்க சார். ATM ரவுண்ட்ஸ் என்ட்ரி போட வந்தீங்களா? ஆடிட்டிங்னு லேட்டா வர்க் பண்றோம்…” அவராகவே படபடவென பேசிக் கொண்டே போனார்.

“இல்ல சார். இங்க அறிவுடையான்….?”

“நான் தான் சார். உக்காருங்க சார்! என்ன விஷயம்?”

கன்னியப்பன் சில நொடிகள் பேசாமல் நின்றார்.

***

கள நிலவரம் அந்தோணிக்கு வந்து சேர்ந்ததும் அவர் சகஜமாகி விட்டிருந்தார். தன் அறையில் தன் மேஜை மீது அமர்ந்தவாறே அநிருத்தன் கொண்டு வந்த துப்பாக்கியை முன்னும் பின்னுமாக திருப்பிப் பார்த்தார்.

“ஒரிஜினல் மாதிரியே இருக்கு பாருயா. நானே ஏமாந்துட்டேன்….” அந்தோணி சொல்ல, சென்ட்ரி துப்பாக்கியை கையில் எடுத்து பார்த்தார்.

“வெயிட்டு கூட ஒரிஜினல் அளவுக்கு இருக்கு பாருங்க….” என்றார்.

அந்தோணி தன் துப்பாக்கியை மேஜை டிராயரிலிருந்து எடுத்து அநிருத்தன் கொண்டு வந்த துப்பாக்கியோடு ஒப்பிட்டுப் பார்த்தார்.

“அப்படியே தத்ரூபமா செஞ்சு விக்குறானுங்க….

மாடல் கன்-னாம். ஆன்லைன்ல வாங்கிருக்கான். இல்லன இந்த பச்சாக்குலாம் துப்பாக்கி வாங்கத் தெரியுமா!” அந்தோணி சிரித்தார். சென்ட்ரியும் பதிலுக்கு சிரித்தார்.

“ஹ்ம்ம். அவன் எதாவது சாப்புட்றானா கேட்டியா?”

“வேணாம்னு சொல்லிட்டான் சார்”

“கொஞ்ச நேரத்துல ஆட்டி படச்சுட்டான்யா. கண்ட படங்கள பாக்க வேண்டியது… இப்டி எதாவது பண்ண வேண்டியது. படிச்சவன்தான்யா இப்பலாம் இப்டி ஆகிடுறானுங்க என்னையா ஸ்ட்ரெஸ் நம்ம வேலைல இல்லாத ஸ்ட்ரெஸ்ஸா!”

“இந்த காலத்து புள்ளைங்களால எதையும் ஹாண்டில் பண்ண முடில சார்…”

அந்தோனி அறையை நோட்டம் விட்டவாறே,  “என்னையா பண்றான் அவன் இவ்ளோநேரம்!” என்றார்.

சென்ட்ரி அறையின் மூலையிலிருந்த பாத்ரூம் கதவை தட்டினார். உள்ளே தண்ணீர் வழியும் சப்தம் கேட்டது. அறையின் வெளியே சதீஷை கண்டதும் அந்தோணி வெளியே போனார்.

சென்ட்ரி, “ஹேய் தம்பி சீக்கிரம் வா…” என்று சொல்லியவாறே கதவை மீண்டும் தட்ட எத்தனிக்க, அநிருத்தன் கதவைத் திறந்தான். அவன் கண்கள் கலங்கியிருந்தன

“வா. உன் பேங்க்ல இருந்து வந்துட்டாங்க….” என்றவாறே சென்ட்ரி வெளியே சென்றார்.

***

“ஆடிட் ரிப்போர்ட் சைன் பண்ணிக்கிட்டு இருந்தோம். லாஸ்ட் நாள் ஆடிட் எப்பவும் லேட் ஆகும் சார். சாப்புட போறேனு கிளம்பி வந்தாரு சார்” அறிவுடையான் அலட்டிக் கொள்ளாமல் பேசினார். அந்தோணி அநிருத்தனை கூர்ந்து கவனித்தார். அவன் அமைதியாக நின்று கொண்டிருந்தான்.

“நல்ல பையன் தான் சார். எதாவது ஸ்ட்ரெஸ்ல பேசிருப்பாரு. நாங்க பாத்துக்குறோம்”

“கவுன்சிலிங் கொடுங்க… கூட்டிட்டு போங்க….” அந்தோணி சொல்லிவிட்டு பிரச்சனை தன்னை விட்டு போனால் போதும் என்று உள்ளுக்குள் ஆசுவாசப் பட்டுக்கொண்டார். அறிவுடையான் வாசல் நோக்கி நடந்தார். அநிருத்தனும் தலை குனிந்தவாறே வெளியேறினான்.

“சார்” என்றவாறே கன்னியப்பன் அந்தோணி அருகே வந்தார்

அந்தோணி என்ன என்பது போல் பார்த்தார்.

“போற வழி தான, நானே விட்டுட்டு வீட்டுக்கு போய்டுறேனே! பாவம் சார் அந்த பையன், இவரு கூட அனுப்ப வேணாம். நான் நல்ல வார்த்தை சொல்லி விட்டுட்டு போலாம்னு பாக்குறேன்”

“ஏன் அப்டியே வீட்லயே விட்டுடுங்களேன்!”

கன்னியப்பன் அமைதியாக நின்றார்.

“சரி கூட்டிட்டுப் போங்க…”

கன்னியப்பன் நகர்ந்தார்.

“லூசு பையன். எதுக்கு  போலிஸ் ஸ்டேசன் வந்தான்!” அந்தோணி சதீஷிடம் சொல்லிக்கொண்டிருந்தது கண்ணியப்பனுக்கு என்னமோ போல் இருந்தது.

***

கன்னியப்பன் மெதுவாகதான் வண்டியை ஓட்டினார். அவருக்கு அநிருத்தனுடன் பேச வேண்டும் என்பது போல் இருந்தது.

“தம்பி மனச போட்டு குழப்பிக்காத, வீட்ல சொல்லி கல்யாணம் பண்ணிக்கோ. யாருக்கு தான் பிரச்சனை இல்ல. வேலைனா முன்ன பின்ன தான் இருக்கும்…”

அநிருத்தன் பதில் பேசாமல் வந்தான்.

“நல்ல கவுரவமான வேலைல இருக்க, இதுக்கு மேல லைப்ல என்ன வேணும். என் பையன் மாதிரியா. பத்தாங்க்ளாஸ் தாண்டல, கார் ஒட்டுது. நீயும் என் புள்ள மாதிரி தான். என்ஜாய் பண்ண வேண்டிய வயசுல இப்டிலாமா இருக்குறது! ஜாலியா இரு.

“பேங்க் வேலையே புடிக்கலனா, போலிஸ் காரன் எங்க நிலைமைய நினச்சுப் பாரு. எங்கேயோ ஹெலிகாப்டர்ல பிரதமர் பறக்குறாருனு எங்கள வெட்ட வெயில்ல நிக்க வைப்பான். உங்கள மாதிரி டைமிங்லாம் கிடையாது. பொட்டல சாப்பாடு தான். அதுவும் சரியா பத்தாது. அப்டியே ஒட்டிட்டேன். எனக்கும் தான் வேலை புடிக்கல, விட்டுறலாம்னு தோணும். எனக்கு பசிக்கலனாலும் என் பொண்டாட்டி புள்ளைக்கு பசிக்குமே. இதோ இன்னும் ரெண்டு வருசத்துல ரிட்டயர்மெண்ட்.

வண்டி பள்ளி சாலையில் திரும்பியது.

“சாபட்டியா. சாப்ட்டு போலாமா…!”

அநிருத்தன் தன் மௌன விரதத்தைக் கலைத்தான்.

“வேணாம் சார்.

“சாப்பாடு வாங்க ஆள் இல்ல, நீ போய் வாங்கிட்டுவானு சொன்னங்க சார். அதான் ஒரு மாதிரி இருந்துச்சு. பேங்க்ல ஒரு ஆபிசரா இருந்தா,  க்ளெர்க் வேலை செஞ்சு, ஆபிசர் வேலை செஞ்சு, சப்-ஸ்டாப் வேலை செஞ்சு, அபப்றம் எடுபுடி வேலையும் செய்யனும். வெளில இருந்து பாக்குறவங்களுக்கு தான் சார் பெரிய பேங்க் வேலை. உள்ள அப்படி இல்ல. நரகம். ரொம்ப கன்னிங்கா இருக்கவங்க எல்லா இடத்துலையும் தப்பிச்சிடுறாங்க. என்ன மாதிரி ஆள்லாம் சர்வைவ் பண்றது ரொம்ப கஷ்டம் சார்…”

“உனக்கு என்ன தம்பி குறை. என் புள்ளையா நினச்சு சொல்றேன், நீ நல்லா இருப்ப….”

வண்டி வங்கியை நெருங்கியதும் கன்னியப்பன் சொன்னார்,

“அவங்க கிட்ட தேவை இல்லாத பேச்சு வச்சுக்காத. வீட்டுக்கு போய் நல்லா தூங்கு. எல்லாம் சரியாகிடும்….”

வண்டி வங்கியின் முன்பு நின்றது. அநிருத்தனை உள்ளே விட்டுவிட்டு, கன்னியப்பன் வாசலில் வந்து நின்றார். தெருவே அமைதியாக இருந்தது. பணக்காரர்கள் மட்டும் வசிக்கும் தெரு. வீடுகள் உறக்க நிலையில் இருந்தன. ஆள் நடமாட்டம் எதுவும் இல்லை.  ஒதுக்கு புறமாக நின்றுக்கொண்டு, சிகரட்டை எடுத்து பற்ற வைத்தார்.

“மனுஷனுக்கு வேலை இருந்தாலும் பிரச்சனை, வேலை இல்லனாலும் பிரச்சனை. ச்சி… என்ன வாழ்க்கையோ” தனக்கு தானே சொல்லிக் கொண்டே புகையை இழுத்தார்.

கீச் என்ற சப்தத்துடன் வண்டி நின்றது. திரும்பிப் பார்த்தார். சதீஷ்  வண்டியின் பின்னிருந்து அந்தோணி பதட்டமாக  இறங்கினார்.

“யோவ் உன் போன் என்னையா ஆச்சு…!” என்று கன்னியப்பனை நோக்கி வர, சதீஷும் வண்டியை நிறுத்தி விட்டு பின்னே ஓடி வந்தார்.

அவர்களின் பதட்டம் கன்னியப்பனிடமும் தொற்றிக் கொண்டது.  மொபைலை எடுத்து பார்த்தார்.

“Switch off ஆகிருச்சு சார்….”

அந்தோணி காதில் வாங்காமல் வங்கியின் வாசல் நோக்கி நடந்தார்.

சதீஷ் கன்னியப்பன் அருகே வந்து, “சாரோட கன்ன காணோம் சார்…”

என்று சொல்ல கன்னியப்பனின் முகமெல்லாம் அதிர்ச்சி ரேகை பரவியது. வங்கியைப் பார்த்தார். அந்தோணி அடுத்த அடி எடுத்து வைப்பதற்குள், உள்ளே இருந்து வரிசையாக குண்டுகள் வெடிக்கும் சப்தம்  கேட்டது.

மூவரும் ஒரு கணம் அதிர்ந்து நின்றனர். அந்தோணி அப்படியே தலையை பிடித்துக் கொண்டே ATM- வாசலில் அமர்ந்தார்.

சில நொடிகள் மௌனம். அடுத்த குண்டும் வெடித்தது.

ஆடிட்டர் வேகமாக வெளியே ஓடிவந்தார். வாசலில் நிற்கும் மூவரை கண்டு கொள்ளாது பயத்தில், “கொன்னுட்டான். கொன்னுட்டான்…” என்று புலம்பியவாறே அவர் வெகு தூரம் ஓடினார்.

சதீஷ் தன் ஹோல்ஸ்டரில் கை வைத்தார். துப்பாக்கியின் துணையோடு அவர் அடி எடுத்து வைக்க, கன்னியப்பன் ஒரு முறை அந்தோணியைப் பாவமாக பார்த்துவிட்டு சதீஷுடன் இணைந்துக் கொண்டார்.

வங்கியின் உள்ளே மின் விளக்கு அணைந்து அணைந்து எரிந்துக் கொண்டிருந்தது.

“ஹே தம்பி, எதுவும் முட்டாள் தனமா பன்னாதா…” கன்னியப்பன் கத்தினார்.

இருவரும் வாசலில் நின்றவாறே வங்கியை ஆராய்ந்தனர். ஒருவரும் தென்படவில்லை. தயங்கி தயங்கி உள்ளே அடி எடுத்து வைத்தனர்.

மேனஜர், தன் இருக்கை அருகிலேயே சரிந்துக் கிடந்தார். அவர் வாயில் குண்டு பாய்ந்திருந்தது.  அவர் அருகிலேயே அறிவுடையான் வாய் பிளந்துக் கிடந்தார். நெத்தியில் குண்டால் பொட்டு வைக்கப் பட்டிருந்தது.

உள்ளே ஸ்டோர் ரூம் கதவு ஆடிக் கொண்டே இருந்தது.

இருட்டு. உள்ளிருந்து ஜான் லெனனின் மெல்லிய குரல் காற்றில் மிதந்து வந்தது.

நிதானமாக அதனுள் இருவரும் நுழைந்தனர்.

சதீஷ் தன் மொபைல் டார்ச்சை ஆன் செய்து கன்னியப்பன் கையில் கொடுத்தார். அவர் ஒளியை அறையில் பாய்ச்சினார். இடது மூலையில் தரையில் அநிருத்தனின் மொபைல் கிடந்தது.

அருகில் அநிருத்தன் சுவற்றில் சாய்ந்தவாக்கில் தரையில் அமர்ந்திருந்தான். அவன் வலது கையில் அந்தோணியின் துப்பாக்கி இருந்ததை கன்னியப்பன் கவனித்தார்.

‘சட்டம் என்ன தண்டிக்க முடியாது. தண்டிக்க விட மாட்டேன்…’ அநிருத்தனின் குரல் கன்னியப்பனின் மனதில் ஒலித்தது.  “உனக்கு என்ன தம்பி குறை. என் புள்ளையா நினச்சு சொல்றேன், நீ நல்லா இருப்ப….” அவருடைய வாழ்த்தும் காதுகளில் கேட்டது.

நிமிர்ந்துப் பார்த்தார், அவன் தலை இடது புறம் தூணில் சாய்ந்திருந்தது. தலையின் பக்கவாட்டிலிருந்து ரத்தம் வழிந்துக் கொண்டிருந்தது.

கன்னியப்பன் தன் கண்களில் தேங்கிய கண்ணீரை துடைத்துக் கொண்டார். அங்கே யாரும் பேசிக் கொள்ளவில்லை.

அநிருத்தனின் மொபைலுக்குள்ளிருந்து ஜான் லெனன் மட்டும் பாடிக் கொண்டே இருந்தார்.

A working class hero is something to be
A working class hero is something to be
If you want to be a hero well just follow me
If you want to be a hero well just follow me’

****

பூங்காவை ஒட்டியிருந்த வீடு- சிறுகதை

‘காந்தி பூங்கா’, அவன் வீட்டிலிருந்து மூன்று தெருக்கள் தள்ளி இருந்தது. ராஜாஜி  தெரு, பட்டேல் தெரு, நேதாஜி தெரு, இந்த மூன்றையும் கடந்தால் அந்தப் பூங்காவை அடைந்துவிடலாம். இதில் பட்டேல் தெரு மட்டும் மிக சிறியது. அதில், வலது புறம் மூன்று வீடுகள், இடது புறம் மூன்று வீடுகள் என்று மொத்தம் ஆறு வீடுகள் தான் இருந்தன. இப்போது ஒரு வீட்டை இடித்து அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று கட்டிக் கொண்டிருப்பதால் வீடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம். ஆனாலும் அதை தெரு என்று சொல்வதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எப்படி இருந்தாலும் அதை குறுக்குத் தெரு என்றோ, ஒரு தெருவின் பகுதி என்றோ சொல்வதுதானே சரியாக இருக்கும்! பெரிய தலைவர்களின் பெயரை எப்படி குறுக்குத் தெருவிற்கு வைப்பது என்று பெயர் வைத்தவர்கள் யோசித்திருக்கக் கூடும். அதனால் அதை ‘பட்டேல் தெரு’ என்றே விட்டுவிட்டனர் போல. ஆனால், ஏன் எங்கோ பிறந்த ஒரு தலைவரின் பெயரை இங்கே இந்த சிறு தெருவிற்கு வைத்திருக்கிறார்கள்? தமிழகத்திற்கு வெளியே தான் பயணப்பட்ட ஊரில் தமிழ் தலைவர்களின் பெயரில் எந்த தெருவும் இருந்ததாக கண்டதில்லையே! இப்படியெல்லாம் அந்த தெருவை கடக்கும் ஒவ்வொரு முறையும் அவன் எண்ணுவான். இதை வெளியே சொன்னால் தன்னை பிரிவினைவாதி என்று சொல்லிவிடுவார்களோ என்ற பயத்தில் வெளியே எதுவும் சொல்லமாட்டான்.

ஆனாலும் தனக்கு ஏன் இத்தகைய தேவையில்லாத கேள்விகளும் சிந்தனைகளும் அடிக்கடி வருகின்றன என்று யோசித்துக் கொண்டே இருப்பான். அந்த கேள்விக்கு மட்டும் அவனுக்கு பதில் கிடைத்தபாடில்லை. இதை அவனால் சகஜமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. சில நேரங்களில் பயம் வருகிறது. பயம் கொள்ளும் அளவிற்கு பெரிய பிரச்சனை இல்லை என்று யாரவது எண்ணக் கூடும். அவர்கள் அவன் பிரச்சனையின் வீரியத்தைப் புரிந்துகொண்டால் அப்படி எண்ணமாட்டார்கள். அவனால் தன் மனதை எவ்வளவு முயன்றும் ஒருநிலைப் படுத்த முடியவில்லை. ஒரு நேரத்தில் ஒரு இடத்தில் மனதளவில் நிலைத்து இருக்க முடியவில்லை. மனதில் தான் எவ்வளவு தேவையில்லாத சிந்தனைகள்! கவனச் சிதறல்கள்!

ரயிலில் செல்லும்போது, பல்லாவரம் என்ற பலகையை பார்த்தால் கூட, பல்லாவரம், பல்லவபுரம், பல்லவர்கள், நரசிம்மவர்ம பல்லவன், என்று தொடர்ச்சியாக சிந்தனை ரயிலை விட வேகமாக எங்கோ பயணிக்கிறது. நிறைய படிப்பது ஒரு காரணமாக இருக்கலாம் என்று நண்பன் ஒருவன் சொல்ல, புத்தகங்கள் படிப்பதையே நிறுத்திக் கொண்டான். ஆனால் சிந்தனை முன்னைவிட அடர்த்தியாக மனதை ஆக்கிரமித்துக் கொள்கிறது. இதை அப்படியே அதன் போக்கில் விட்டுவிடலாம். ஆனால் உடம்புதான் சோர்ந்து போகிறது.

அம்மா, ‘மீன் மாத்திரை’ சாப்பிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்பாள். சாப்பிட்டுப் பார்த்தும் ஒன்றும் சரியாகவில்லை.

“சொங்கிப் பயலே, உன் வயசுல நான் எப்டி இருந்தேன் தெரியுமா!” அப்பா முரட்டுத்தனமாக தான் பேசுவார். அவர் போலீசில் இருந்தவர்.

“முட்டைய உடச்சி குடி” என்பார்.

இது உடல் சார்ந்த பிரச்சனை அல்ல என்பதையும், அதிக சிந்தனை உடலை வருத்தி எடுத்துவிடும் என்பதையும் அவன் கூகிளில் படித்திருந்தான். அதற்காகவே மனதை சகஜமாக வைத்திருக்கப் பிரயத்தனப் பட்டான். ஒழுங்காக நடைப்பயிற்சி செய்வதுதான் இதற்கெல்லாம் தீர்வு என்று மருத்துவர் சொன்னார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு இடது கை வலிப்பதாக மருத்தவரிடம் சொன்ன போது, அவர் ஏதேதோ பெரிய ‘டெஸ்ட்கள்’ எடுத்து ஒரு பெரிய இருதய நிபுணரை சந்திக்கச் சொன்னார்.

“என்ன வேலை ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்கோ?” அந்த வயதான இருதய நிபுணர் செயற்கையாக புன்னகை செய்துகொண்டே கேட்டார்.

ஆம்! வேலை என்னவோ மனம் உடல் எல்லாவற்றையும் அழுத்துகிறது. வேலை இல்லாமல் வேலை தேடிக் கொண்டிருந்த காலத்திலும் அப்படிதான் மன அழுத்தம் இருந்தது. இப்போது வேலைக் கிடைத்து கையில் கொஞ்சம் காசு இருக்கும் போதும் மன அழுத்தம் இருக்கிறது. இந்த கணக்கு என்ன என்பதை அவனால் புரிந்துக் கொள்ளமுடியவில்லை.

“டாக்கி கார்டியா.” அவனுடைய ECG  ரிப்போர்ட்டை பார்த்த மருத்தவர் சொன்னார்.

“உங்க இதயம் கொஞ்சம் வேகமாக துடிக்குது. இந்த வயசுலேயே இப்படினா ப்யூச்சர்ல பிரச்சனைதான். சரியா தூங்குறீங்களா இல்லையா?”

“மனசும் ரொம்ப வேகமாக தான் சார் இருக்கு” என்று சொல்ல நினைத்தான். அப்படி சொன்னால் அவர் ஏதாவது மனநல நிபுணரை பார்க்கச் சொல்லிவிடுவாரோ என்று தயங்கி சொல்லாமல் விழுங்கிவிட்டான்.

“ரொம்ப யோசிக்காதிங்க. ரிலாக்ஸ். ஸ்ட்ரெஸ் இருந்தாலே உடம்பு வீக் ஆகிடும். மனசுல இருக்குற அழுத்தத்த உடம்பு சரி செய்ய பார்க்கும். முடியலனா சோர்வாகிடும். தொடர்ந்து வாக்கிங் போங்க. சரியாகிடும்” என்றார்.

மன அழுத்தத்தை குறைக்கும் நம்பிக்கையில் தான், அவன் தினமும் காலையில் அந்த பூங்காவை சுற்றி வந்தான். இல்லையேல் அந்த நேரத்தில் அலாரத்தை அணைத்து விட்டு தூங்கி ஏழரை மணி வாக்கில் எழுந்து வேகவேகமாக கிளம்பி ஓடிச்சென்று எட்டுமணி ரயிலை பிடிப்பதையே வழக்கமாக வைத்திருந்தான். அலுவலகம் மயிலாப்பூரில் இருந்தது. வீடோ தாம்பரத்தில். எட்டுமணிக்கு வண்டி ஏறினால் தான் ஒன்பது நார்ப்பத்தைந்து மணிக்குள் செல்ல முடியும். ஐந்து நிமிடம் தாமதமாக சென்றால், அவனுடைய பொதுமேலாளர் வீட்டுக்கு அனுப்பிவிடுவார். பள்ளிக்கூடமே தேவலாம் என்ற அளவில் தான் அலுவலகமும் அங்கே இருந்த மனிதர்களும் இருந்தார்கள். அவனுடைய உடனடி மேலாளார், பொது மேலாளர் சொன்னால் மாடியிலிருந்து கூட குதித்து விடுவார். அவர் ஒரு வடநாட்டவர். தமிழ் சுத்தமாக வராது. பொது மேலாளர் தஞ்சாவூர்காரர். ஆனால் இருவரும் தத்தம் இருத்தலை நிலைநிறுத்திக் கொள்ள நிர்வாகத்திற்கு விசுவாசம் என்ற போர்வையில் அடிமைகளாக இருந்தனர். அந்த அடிமைத்தனம்தான்  அவர்களை இணைத்துவைத்திருந்தது.

ஐந்து மணிக்கு அலுவலகம் முடிந்தாலும் ஏழு மணி வரை அலுவலகத்திலேயே அமர்ந்திருப்பார்கள். இவனும் வேறு வழியில்லாமல் அமர்ந்திருந்தான். அவனுடைய மேலாளர் ஐந்து மணிவரை எந்த வேலையும் செய்யாமல் காலம் கடத்திவிட்டு, ஐந்து மணிக்கு பின்பு கோப்புகளை எடுத்துப் புரட்டுவார். குறிப்பாக பொது மேலாளர் வீட்டுக்கு செல்லும் நேரத்தில் வேலை செய்வது போல் பாவனை செய்வார். அதற்கு முன்பே இவன் எல்லா வேலைகளையும் செய்து முடித்திருப்பான். ஆனால் பெயரை இவனுடைய மேலாளர் தட்டிச் சென்று விடுவார்.

மன உளைச்சலில் தன் இதயம் வெடித்தால் தன் மேலாளரும் பொது மேலாலரும்தான்  காரணம் என்று எழுதி வைத்திட நினைத்தான். ஆனால் மருத்துவர் எல்லாம் சாரியாகிவிடும் என்ற சொன்னதால், நம்பிக்கையோடு அவன் தினமும் காலையில் பூங்காவை சுற்றி வந்தான்.  அன்று அவன் பூங்காவை அடைந்த போது மணி சரியாக ஆறரை. ஆனாலும் சற்றே கூடுதலாக உடம்பை நடுங்க வைக்கும் குளிர். அந்த குளிரை பொருட்படுத்தாமல் நான்கு பேர் பூங்காவின் வாசலில் கேரம் போர்ட் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் யாரும் இவனை சட்டை செய்யவில்லை.

மாசி மாதம் முடியும் தருவாயிலும் இவ்வளவு குளிர் ஆச்சர்யம்தான். பள்ளியில் படித்த போது பருவம் தப்பாமல் எல்லாம் நடந்தது. இப்போது எப்போது மழை வருகிறது எப்போது வெயில் அடிக்கிறது என்று எதையும் உறுதியாக சொல்ல முடியவில்லை. எல்லாம் மாறிக்கொண்டே வருகிறது. தான் மட்டும் மாறுவதாக தெரியவில்லை. ஐயோ! மீண்டும் சிந்தனை. இதை சரி செய்ய வேண்டும். பூங்காவில் எழுதியிருக்கும் வாசகங்களை படிக்கத் தொடங்கினான்

‘சோற்றுக் கற்றாளைச்சாறு கால் வலியை நீக்கும்’ அதை நிதானமாக படித்தான். இதுவும் மருத்துவர் சொன்ன அறிவுரை தான். எப்போதெல்லாம் மனதை தேவையில்லா சிந்தனைகள் ஆக்கிரமிக்கிறதோ, எப்போதல்லாம் மனம் நிலையற்று ஓடுகிறதோ, அப்போதெல்லாம் நூறிலிருந்து ஒன்றுவரை தலைகீழாக எண்ணிடச் சொன்னார். இல்லை, ஏதாவது வார்த்தைகளிலோ பொருளிலோ மனதை நிறுத்தச் சொன்னார்.

“இல்லனா உங்க கண்ல படுற வார்த்தைய, வாக்கியத்த திரும்பி திரும்பி சொல்லுங்க. மனம் சாந்தாமகிடும்”

‘சோற்றுக் கற்றாளைச் சாறு கால் வலியை நீக்கும்’ தனக்குதானே இரண்டு மூன்று முறை மனதினுள் சொல்லிக் கொண்டே பூங்காவை சுற்றி வந்தான்.

“சோறுதான தின்ற?” இப்படி ஒரு குரல் நாராசமாக ஒலிக்க அவன் கவனம் சிதறியது. அங்கேயே நின்றான். சப்தம் இடது புறத்தில் பூங்காவை ஒட்டியிருந்த வீட்டிலிருந்து வந்தது.

பூங்காவை சுற்றி நான்கு புறமும் இரும்பு கம்பிகளாலான மதில். அது அவனை விட இரண்டு மடங்கு உயரத்தில் இருந்தது. பூங்காவின் இடது புறம் வரிசையாக வீடுகள். பின்புறம் புதர் மண்டி கிடக்க, மற்ற இரண்டு புறமும் சாலைகள். பூங்கா மேடாக அமைந்திருந்தது. அங்கே நின்று பார்த்தால் அந்த வீடுகள் பள்ளத்தாக்கில் இருப்பது போல் தெரிந்தன. வரிசையில் அமைந்த அந்த வீடுகளின் வாசல் பூங்காவின் இடது மதிலை பார்த்து அமைந்திருந்தது. பூங்காவை ஒட்டியிருந்த ஒத்தையடிப் பாதை அந்த வீடுகளுக்கான பொதுப்பாதையாக மாறியிருந்தது.

அந்த வீடுகள் எல்லாம் பெரும்பாலும் ஒற்றை அறைக் கொண்ட வீடுகளாகதான் இருந்தன. ஆனால் சிறு வீட்டிலேயே நிறைய பேர் வசித்தனர். அங்கே வசித்த அனைவரும் பூங்காவின் இரும்பு கம்பிகளின் மேல் துணிகளை உலர்த்துவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இரும்பு கம்பிகளுக்கும் அதில் காயப் போடப்பட்டிருந்த துணிகளுக்குமிடையே இருந்த இடைவெளியில் தான் வீடுகளை கவனிக்க முடியும்.

அங்கே  ஒரு பெரிய பச்சை புடவையும் அதன் மேல ஒரு சுடிதாரும் காய்ந்தது. புடவைக்கு பின்னால் ஒரு உருவம் தெரிந்தது. மெதுவாக அந்த புடவையை நகர்த்தி பார்த்தான். ஒரு தடியன் நின்றுகொண்டிருந்தான். அவன் வீட்டின் வாசலைப் பார்த்து நின்றுகொண்டிருந்ததால் அவனுடைய தலை மட்டும் தெரிந்தது. அவன் மஞ்சள் டி-ஷர்ட், கட்டம்போட்ட லுங்கி அணிந்திருந்தான். அவனுடைய டி-ஷர்ட் முதுகில் ஒரு அரசியல் தலைவர் சிரித்துக் கொண்டிருந்தார்.

“உன்னதாண்டி….” அவன் மீண்டும் கத்தினான். வீட்டின் நிலைவாசற்ப்படியில் ஒரு நடுத்தர வயது பெண் நின்றுகொண்டிருந்தாள். அவள் கண்கள் கலங்கியிருப்பதை கவனித்தான். மதில் முழுக்க வரிசையாக துணிகள் இருந்ததால், கீழே நிற்பவர்கள் உன்னிப்பாக கவனித்தாலொழிய பூங்காவில் ஒருவன் நின்று தங்களைப் பார்ப்பது தெரியாது.

அருகாமையில் காலடி ஓசை கேட்டது. திரும்பினான். பூங்காவில் நடைப்பயிற்ச்சியில் ஈடுபட்டிருந்த ஒரு நடுத்தர வயதுகாரரும் அவரின் மகளும் இவனை நோக்கி வருவதை கவனித்தான். இவன் புடவையிலிருந்து கையை எடுத்துவிட்டு, எதுவும் தெரியாதது போல் கிழக்கு பக்கம் திரும்பி சூரியனை பார்த்து வணக்கம் வைத்தான். யாரவது பார்த்தால் இவன் சூர்ய நமஸ்காரம் செய்கிறான் என்று நினைத்துக் கொள்ள வேண்டுமாம். அந்த தந்தை பேசிக்கொண்டே வந்தார். அந்த மகள் தன் செல்போனை அவ்வப்போது பார்த்துக்கொண்டு, தந்தை பேசுவதை வேறுவழியில்லாமல் கேட்பதைப் போன்ற முகபாவங்களை வெளிப்படுத்திக் கொண்டு நடந்து வந்தாள். அந்த தந்தையும் மகளும் சென்றபின் மீண்டும் வீட்டை நோக்கினான்.

தடியன் தொடர்ந்து உரக்க பேசினான். எல்லாம் காலையில் கேட்க அவசியமற்ற சற்றே ஆபாசமான வசை மொழிகள். அவன் வரிசையாக பேசினான். ஏதோ மனப்பாடம் செய்துவிட்டு ஒப்பிப்பதைப் போல் கெட்ட வார்த்தைகளை கொட்டினான். அவனுடையது கட்டையான குரல். கத்திகத்தி தேய்ந்து போனது போல் இடையிடையே அவன் பேசிய வார்த்தைகள் முழுவதுமாக புரியவில்லை.

“ரொம்ப பேசாதீங்க…” உள்ளிருந்து ஒரு பெண்ணின் குரல் மட்டும் வந்தது. அந்த குரலை வைத்து அந்த பெண்ணிற்கு தன் வயதோ, தன்னை விட குறைந்த வயதோ தான் இருக்குமென்று இவன் நினைத்துக் கொண்டான்.

“வெளிய வாடி. காச தர வக்கில்ல உள்ள ஒக்காந்துகிட்டு வாய்விடுற” தடியன் கத்தினான்.

“செவனேன்னு இரேன்” அந்த பெண்மணி உள்ளே பார்த்து சொல்லிவிட்டு, திரும்பி தடியனைப் பார்த்து, “அவ தெரியாம பேசிட்டானே” என்று பாந்துவமாக சொன்னாள்.

“அண்ணே நொண்ணேனு. பத்துதேதிக்கு வட்டிய கொடுக்குறேன்னு இளிச்ச. இப்ப தேதி என்ன?”

“கொடுத்துறன்னே. பெரியவ பிரசவத்துக்கு வந்துட்டா”

“அதான் சின்னவ வாய்விடுறாளே… “

அதன்பின் அவன் இன்னும் ஆபாசமாக கத்திவிட்டு சென்றான். இவன் மட்டும் அங்கேயே நின்றுகொண்டிருந்தான். பூங்காவில் இவனை கடந்து சென்ற யாரும் அங்கே அந்த வீடு இருந்ததைப் பற்றியோ அங்கிருந்து சப்தம் வந்ததைப் பற்றியோ அலட்டிக்கொண்ட மாதிரி தெரியவில்லை. சிறிது நேரத்தில் தடியன் அங்கிருந்து நகர்ந்தான். அந்த பெண்மணி கண்கலங்க வாசலிலேயே நின்றுக்கொண்டிருந்தாள். இவனுடைய மொபைலில் அலாரம் அடித்தது. அலுவலகத்திற்கான நேரம். அங்கிருந்து கிளம்பினான்.

அன்று முழுக்க மனம் லேசாக இல்லை. அவனுள் ஏதேதோ கேள்விகள். மிஞ்சிபோனால் அவர்கள் எவ்வளவு கடன் வாங்கி இருக்க முடியும்? அதற்காக எவ்வளவு பேச்சு வாங்க வேண்டி இருக்கிறது! இந்த கட்டமைப்பே தவறாக இருக்கிறதே? இதை எப்படி சரி செய்வது? இதே சிந்தனை தான் நாள் முழுதும். அதனால் அவனால் எந்த வேலையிலும் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை. ஆனாலும் சம்பரதாயமாக ஏழு மணி வரை அலுவலகத்தில் இருந்துவிட்டு திரும்பி வீட்டிற்கு வர ஒன்பது மணி ஆகிவிட்டது. கனவில் அந்த தடியனின் குரல் நாராசமாக ஒலித்ததால் இரவில் சரியாக தூக்கம் வரவில்லை. அதனால் காலையில் எழ சற்றுத் தாமதாகிவிட்டது. வேகவேகமாக ஸ்போர்ட்ஸ் ஷூவை எடுத்து மாட்டினான்.

“இப்ப போற? நேரமாச்சே!” அம்மா சொன்னாள்.

“இன்னைக்கு ஆபிஸ் லேட்டா போலாம்” அம்மாவிடம் பொய் சொல்லிவிட்டு பூங்கா நோக்கி நடந்தான். அந்த தடியன் மீண்டும் வந்து தொந்தரவு செய்துகொண்டிருப்பானோ என்று எண்ணிக் கொண்டே நடந்ததால் தெருக்களைப் பற்றிய எந்த சிந்தனையும் வரவில்லை.

பூங்காவை ஒட்டியிருந்த அந்த ஒத்தையடிப் பாதையின் முன்னே இருசக்கர வாகனமொன்று நின்றிருந்தது. அது தடியனின் வண்டியாக தான் இருக்கும் என்று அவனால் யூகிக்க முடிந்தது. அவன் நினைத்தது போலவே, அவன் பூங்காவில் நுழைந்து இடது மதில் சென்று நின்றதும், தடியனின் குரல் கேட்டது.

“எந்த போலிஸ்ட போவ. எல்லாம் போலீஸ்க்கும் பைசல் பண்ணிட்டுதான் தொழில் பண்றோம்”

இவன் இடைவெளியில் பார்த்தான். வாசலில் ஒரு பெண் நின்றுகொண்டிருந்தாள். அந்த பெண்ணுக்கு இருபத்தைந்து வயது இருக்கலாம். நேற்று உள்ளே இருந்து பேசிய பெண் இவளாகதான் இருக்கக்கூடும் என்று எண்ணினான். அவ்வளவு பிரச்சனையிலும் அவள் முகம் சாந்தமாக இருந்தது. இவர்களின் பிரச்சனையோடு ஒப்பிடுகையில் தன் பிரச்சனை எல்லாம் ஒன்றுமே இல்லையே! இவ்வளவு தைரியமாக பிரச்சனையை சமாளிக்க முயல்கிறாளே! அவன் அவளை ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டே இருந்தான். யாரோ தன்னைப் பார்ப்பதை உணர்ந்த அவள் பூங்காவை நிமிந்து பார்த்தாள். இவன் விருட்டென்று நகர்ந்து பூங்காவை சுற்றத் தொடங்கினான். பூங்காவின் வலது புறத்தில் ஒருவன் தலைகீழாக நின்று யோகா செய்துகொண்டிருந்தான். பூங்காவின் நடுவே இரண்டு வயதானவர்கள் அமர்ந்து இந்திய பொருளாதாரத்தின் போக்கைப் பற்றி சப்தமாக பேசிக் கொண்டிருந்தனர். எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டே இவன் அடுத்தச் சுற்று இடது மதிலை அடைந்தபோது அந்த பெண் வாசலில் இல்லை. வீட்டுக் கதவு உள்ளே தாளிடப்பட்டிருந்தது.

இப்போது தடியன் மாடியில் நின்றுகொண்டிருந்தான். மாடியிலும் வரிசையாக மூன்று வீடுகள் இருந்தன. நடுவீட்டின் வாசலில் நின்ற தடியன் அந்த வீட்டிலிருந்த பெண்ணிடம், “உன் புருஷன் ரொம்ப பேசுறான். என்னைக்காவது போட்டு பொலக்க போறேன்” என்று மிரட்டினான்.  மிகவும் மெலிந்திருந்த அந்த பெண் பேசமுடியாமல் பேசினாள்.

“அவரு நிதானம் இல்லாம இருக்காருங்க….”

“காலேலயே ஊத்திக்க தெரியுது இல்ல. வட்டிய கொடுக்க என்ன குறைச்சல்!”

இவன் மீண்டும் கீழ் வீட்டைப் பார்த்தான். திறந்திருந்த ஜன்னலின் வழியே அந்த பெண்ணின் குரல் மட்டும் கேட்டது.

“அசிங்கமா இருக்குமா… தினைக்கும் காலைல” அவளால் பேசமுடியவில்லை. விசும்பல் சப்தம் மட்டும் கேட்டது. அவனால் மேற்கொண்டு அங்கே நிற்க முடியவில்லை. அவன் பூங்கா வாசலின் வெளியே வந்து நின்றபோது, அந்த தடியன் தன் இருசக்கர வாகனம் அருகே வந்து நின்றான். திரும்பி இவனைப் பார்த்தான். அவனுக்கு நாற்பது வயதுக்கு மேல் இருக்கும். தொப்பை வீங்கி வெடிப்பது போல் இருந்தது. இவனும் ஒரு நொடி தடியனைப் பார்த்தான். ஓடி சென்று அவன் மேல் பாய்ந்து கீழே தள்ள வேண்டும்போல் இருந்தது. அவ்வளவு பலம் தனக்கு இல்லை. அந்த தடியனை ஏதாவது செய்ய வேண்டும். போலிசிடம் போகலாம். ஒருவேளை அந்த தடியன் சொன்னது போல் அவனுக்கு போலீசில் ஆட்கள் இருந்தால் ஒரு பிரயோஜனமும் இல்லை. அவர்கள் தன்னை காட்டிக் கொடுத்து விட்டால், தடியன் ஆள் வைத்து தன்னை அடித்துவிட்டால் என்ன செய்வது? இது போன்ற ஆட்கள் கொலை கூட செய்வார்கள். இன்னொருவருக்கு உதவி செய்ய போய் தனக்கு உபத்திரத்தை தேடிக் கொள்வது புத்திசாலித்தனமில்லை. ஆனால் இப்படி கோழையாக சுயநலவாதியாக இருப்பது வெட்கப்படவேண்டிய செயல். நாமும் மற்றவர்களைப் போல் சராசரி ஆளாக இருப்பது எவ்வளவு அபத்தம். ‘வேடிக்கை மனிதரைப் போலே வீழ்வேனென்று நினைத்தாயோ’ மனதில் ஒரு குரல் கேட்டது. அவன் கோபகமாக தடியனை பார்த்தான்.  தடியன் திரும்பி அந்த பெண்ணின் வீட்டை பார்த்து துப்பிவிட்டு, வண்டியை எடுத்துக் கொண்டு நகர்ந்தான். இவன் மனமெல்லாம் ஆக்ரோசம் ஆக்கிரமித்துக் கொண்டது.

சாப்பாடு இறங்கவில்லை. அருகில் அமர்ந்திருந்தவர்கள் சாப்பிட்டுவிட்டு வேலையை பார்க்க சென்றுவிட்டனர். மதியம் இரண்டிலிருந்து இரண்டரை வரை தான் சாப்பாட்டு நேரம். சாப்பாடு நேரம் முடிவதற்கு முன்பு இருக்கையில் இருக்க வேண்டும். இதுவும் பொதுமேலாளரின் உத்தரவு தான். கண்காணிப்பு கேமரா மூலம் எல்லாவற்றையும் அவர் கண்காணித்துக் கொண்டே இருப்பார். மனசாட்சிக்கு பயப்படாதவர்கள் கூட கண்காணிப்பு கேமாரவிற்கு பயந்தனர். மணி இரண்டரையை தொட்டுவிட்டது. இவன் மட்டும் சாப்பிடாமல் சாப்பாட்டு டப்பாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.

என்ன செய்யலாம்? தன்னை தானே மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டான். கையில் கொஞ்சம் காசு இருக்கிறது. நேரடியாக அவர்களின் வீட்டின் கதவைத்தட்டி அந்த  பெண்ணிடம் போய் கொடுத்துவிடலாமா! இல்லை. அவள் தவறாக நினைத்துவிடக் கூடும். அல்லது அப்பாவுக்கு தெரிந்த யாரவது பார்த்து அப்பாவிடம் சொல்லிவிட்டாலும் பிரச்சனை. ஆனாலும் அவளுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும். தடியனின் பிடியிலிருந்து அந்த குடும்பத்தை விடுவித்தால் கூட போதும்.

“சாப்பிடாம அப்படி என்ன யோசனை?” கோபிகிருஷ்ணன் சார் கேட்டுக்கொண்டே தன் டிபன் பாக்ஸில் இருந்த தண்ணீரை வடித்து, டப்பாவை மேஜை மீது வைத்தார்.

கோபிகிருஷ்ணன் அவனுடைய அலுவகத்தின் சீனியர் கிளார்க். பொது மேலாளர் உட்பட எல்லோரும் அவரை கோபிகிருஷ்ணன் சார் என்றே அழைத்தனர். வயதில் மூத்த அவர் தன்னுடைய மனக்குழப்பத்தை போக்கக் கூடும் என்று எண்ணினான். காலையில் நடந்ததை சொன்னான்.

“தம்பி, கடன் கொடுத்தவன், அவனுக்கு அவன் காசு வேணும். எப்படி பேசுனா காசு கிடைக்குமோ அப்படி பேசுறான்” என்றார்.

“அவன் பேசுறது தப்புசார்”

“நாம என்ன பண்ணமுடியும்டா கண்ணா. அவன பத்தி தெரிஞ்சுதான் கடன் வாங்கிருப்பாங்க. நம்மால முடிஞ்சா ஏதாவது உதவலாம். அவ்ளோதான். அதுவும் எவ்ளோ பேருக்கு பண்ணமுடியும்? எதுக்கு அடுத்தவங்க லைப் பத்தியெல்லாம் யோசிச்சு குழப்பிக்கிற? சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ. இந்த மாதிரி சிந்தனைலாம் வராது”, அவர் கண் சிமிட்டினார். இவனுக்கு கோபமாக வந்தது. மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.

“சீக்கிரம் சீட்டுக்கு போ. பெரியவர் கேமரால பாப்பாரு!” சொல்லிவிட்டு அவர் டிபன் டப்பாவை மூடி பைக்குள் போட்டுக்கொண்டு நகர்ந்தார்.

கேமரா என்றதும் இவனுக்கு பொறித் தட்டியது. அந்த தடியனை கேமராவில் பதிவு செய்தால்? சாலையில் வழிப்பறி செய்த ஒருவனை யாரோ ஒருவர் ரகசியமாக வீடியோ எடுத்து இணையத்தில் போட்டு, அது பரவி போலிஸ் அவனை கைது செய்தது நினைவு வந்தது. ஆம் நாமும் அதை செய்யலாம். அந்த புடவையின் பின் நின்று அந்த தடியன் அவர்களை மிரட்டுவதை மொபைல் கேமராவில் பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றிவிட்டால் போதும். யார் யாரோ அந்த தடியனுக்கு எதிராக குரல் கொடுத்தால் எந்த போலிசாக இருந்தாலும் அவனை கைது செய்துதான் ஆக வேண்டும். அந்த குடும்பத்திற்கும் நல்லது நடக்கும். ரயில் பயணம் முழுக்க இந்த திட்டமிடல் தான். வீட்டிற்குள் நுழைந்த போது அம்மா தன் பையில் அவனுடைய துணிகளை அடுக்கி வைத்துக்கொண்டிருப்பதை கவனித்த போதுதான் நினைவு வந்தது, இரவு திருச்சிக்கு செல்லவேண்டும்.

“உன் துணியையும் என்  பேக்லயே வச்சிக்குறேன்” அம்மா சொன்னாள்.

“கொஞ்சம் சீக்கிரம் கிளம்பி வர வேண்டிதானா…!” அப்பா சொல்லிவிட்டு அவன் பதிலை எதிர்ப்பார்க்காமல் அடுத்த அறைக்கு சென்றார்.

வெள்ளிக்கிழமை இரவு ரயில் என்பது கடந்த இரண்டு நாட்கள் முன்புவரை அரைகுறையாக நினைவிருந்தது. அடுத்த வெள்ளிக்கிழமையாக இருந்திருக்கக் கூடாதா! தனக்கு மறுநாள் காலை முக்கியமான வேலை இருக்கிறது என்பதை எப்படி அம்மாவிடம் சொல்வது?

“ஞாயிற்று கிழமை தான மேரேஜ்! நான் நாளைக்கு கிளம்பி வரவா?”

“நீலாம் வரணும்னு தான மாமா லீவ் நாள்ல வைக்குது…. மாமாக்கு ஆம்பள புள்ளையா இருக்குது? நீதான் முன்னாடி நின்னு செய்யனும்” அம்மா சந்தோசம் பொங்கச் சொன்னாள். அவள் நல்ல மனநிலையில் இருந்தாள். அதனால் அவன் மேற்கொண்டும் எதுவும் பேசி அவளை கஷ்டப் படுத்த விரும்பவில்லை.

இல்லையேல், “பொண்ண தான் கட்டிக்க மாட்டேன்னு சொல்லிட்ட…” என்றெல்லாம் சொல்லி கண்ணை கசக்க ஆரம்பித்துவிடுவாள். அவளை சமாளித்தாலும், “அப்படி என்ன வேலை சாருக்கு?” என்று கேட்டுக் கொண்டு அப்பா வந்துவிடுவார். அவரை தன்னால் சமாளிக்க முடியாது.  அமைதியாக அவர்களோடு சென்றான்.

சனி ஞாயிறு முழுக்க மண்டபத்திலேயே கழிந்தது. ஆனால் அம்மா சொன்னது போலெல்லாம் இவன் எதையும் முன்னின்று செய்யவில்லை. தன் போக்கில் ஒரு மூலையில் அமர்ந்திருந்தான். எதிலும் ஆர்வமில்லை. எப்போது இந்த இரண்டுநாட்கள் கடந்து போகும் என்பதே அவனுடைய பெரிய பிரச்சனையாக இருந்தது. சிறுவயது முதல், எப்போது வார விடுமுறை வரும் என்ற எதிர்பார்ப்போடும், அது வந்தால் சீக்கிரம் முடிந்துவிடக் கூடாது என்ற ஆசையோடும்தான் அவனுடைய பள்ளி கல்லூரி நாட்கள் கழிந்தன. அதுவும் இந்த அலுவலகத்தில் சேர்ந்ததிலிருந்து எப்போது சனிக்கிழமை வருமென்று எதிர்பார்த்துதான் அவன் ஐந்து நாட்களை கடத்துவான். முதல் முறையாக அவன் எப்போது இந்த சனி ஞாயிறு கடந்து போகும் என்று எதிர்பார்த்து காத்திருந்தான். இடையிடையே வீடியோவை எடுத்தப் பின் அதை யாரிடமெல்லாம், எப்படியெல்லாம் கொண்டு சேர்க்கவேண்டும் என்று யோசித்தான். மிகவும் மெதுவாக அந்த ஞாயிற்றுக் கிழமை முடிந்தது. திங்கள் காலை வீட்டிற்குள் நுழையும் போது மணி ஐந்தரை.

“கொஞ்ச நேரம் தூங்கு… ஒரு நாள் லேட்டா போன ஒன்னும் ஆகாது ” அம்மா சொன்னாள்.

இவன் எதுவும் பேசாமல், துரிதமாக ஆடையை மாற்றிக் கொண்டு பூங்காவிற்கு செல்ல தயாரானான். அந்த நாள் அவனுக்கு எவ்வளவு முக்கியம் என்பது அவன் அம்மாவிற்கு தெரியாததால், அவள் அவனை ஆச்சர்யமாக பார்த்ததை அவன் பொருட்படுத்தவில்லை. தன் கைபேசியில் சார்ஜ் இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொண்டான். இன்றோடு அந்த தடியனின் அட்டூழியம் அடங்கிவிடும், அதை தான் சாத்தியமாக்கப் போகிறோம் என்று எண்ணும்போது அவனுக்கு பெருமையாக இருந்தது. எல்லாம் சரியாக நடந்தபின்பு வேண்டுமானால் அந்த பெண்ணிடம் மட்டும் தான் செய்த இந்த காரியத்தை சொல்லிக் கொள்ளலாம். அது தற்பெருமை அடிப்பதைப் போல் ஆகாதா? ஆகாது. ஆகாது. அவளுக்கு மேற்கொண்டு உதவும் பொருட்டே உண்மையை சொன்னதாகவும், அவளுக்கு தான் எந்த உதவியும் செய்ய தயாராக இருப்பதாகவும் அவளிடம் சொல்லலாம். அவள் தன்னை நம்பக் கூடும்.

பூங்காவை அடைந்த அவன், அருகே நின்றிருந்த தடியனின் வண்டியை பார்த்ததும் தனக்குள் சிரித்துக் கொண்டான். ‘ஆம் நான் ஒரு ஆபத்பாந்தவன்.’

பூங்காவின் இடது மதிலை நெருங்கிய போது, எந்த சப்தமும் வராதது ஆச்சர்யம் அளித்தது. கம்பியில் துணிகளும் இல்லை. அந்த வீடு கம்பிகளின் வழியே தெளிவாக தெரிந்தது. கதவு திறந்திருந்தது. ஒரு வயதான பெண் வீட்டை கழுவி விட்டுக் கொண்டிருந்தாள். அந்த அறையில் ஆங்காங்கே புகை அண்டி சுவரெல்லாம் கருப்பாக இருந்தது. அவன் சிந்தனை வழக்கத்தை விட வேகமெடுத்தது. அவனால் அங்கு நடந்திருப்பதை யூகிக்க முடிந்தது. அவன்  அப்படியே ஸ்தம்பித்து நின்றதால், அந்த வயதான பெண்மணி அவனை நிமிர்ந்து பார்த்துக் கொண்டிருந்ததை அவன் கவனிக்கவில்லை.

“என்ன கண்ணு பாக்குற?” அந்த பெண் இவனைக் கேட்டாள்.

“இங்க இருந்தவங்க…. ஒரு அம்மா” அவனால் கேள்வியை முடிக்க முடியவில்லை.

“ஆத்தாளும் பொண்ணும் கொழுத்திகிச்சுங்க… ” அவள் செய்தி வாசிப்பது போல் எந்த உணர்வுமின்றி பதில் சொன்னாள்.

இவனால் பதில் பேசமுடியவில்லை. அப்படியே  நின்றான். அவள் தொடர்ந்து தன் வேலையை கவனித்தாள்

“எப்ப… ” அந்த வீட்டை பார்த்தவாறே கேட்டான்.

நிமிர்ந்து பார்த்த அவள். “வெள்ளிகிழமை. ஏன் உனக்கு தெரிஞ்சவங்களா?” என்றாள்.

இவன் அமைதியாக இருந்தான். இவனிடம் பேசுவது வீண் என்று அந்த பெண்மணி நினைத்திருக்கக் கூடும். அவள்  கதவை இழுத்து தாளிட்டு விட்டு, “அடுத்த குடி வரதுதான் கஷ்டம்” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு நகர்ந்தாள். அங்கே அதுவரை இருந்தவர்கள் இல்லாமல் போனதைப் பற்றி அந்த வயதான பெண் அலட்டிக் கொள்ளாதது அவன் மனதை உறுத்தியது. உண்மையில் அங்கே யாருக்கும் போனவர்களைப் பற்றி எந்த கவலையும் இருப்பதாக அவனுக்குத் தெரியவில்லை. வாசலில் நால்வரும் சளைக்காமல் கேரம் போர்ட் விளையாடிக் கொண்டிருந்தனர்.  பூங்காவின் வலது புறத்தில் சிரசாசன நிலையிலிருந்த அந்த ஆசாமி பக்கத்தில், இன்னொருவன் தலைகீழாக நிற்க முயற்சி செய்துகொண்டிருந்தான். வயதான நண்பர்கள் இருவரும் சப்தமாக பேசிக் கொண்டே இருந்தார்கள். அந்த அப்பாவும் பெண்ணும் பூங்காவை சுற்றி வர, மகளின் கவனம் முழுக்க மொபைலில் இருந்தது.  இவன் மீண்டும் அந்த வீட்டைப் பார்த்தான். பெரிய பூட்டு ஒன்று தொங்கியது.

அந்த தடியன் அந்த குடும்பத்திற்கு கொடுத்த அழுத்தத்தை கண்ணால் கண்டது தான் மட்டுமே. தான் முதல் நாளே ஏதாவது செய்திருக்க வேண்டும். தவறவிட்டு விட்டோம். அவன் குற்ற உணர்ச்சி அவனை அழுத்தியது. இனியாவது எழ வேண்டும். தடியனுக்கு தண்டனை வாங்கித் தரவேண்டும். அவனுக்கு தடியனின் மீது கோபம் அதிகமானபோது, தடியனின் குரல் மாடியில் இருந்து வந்தது. நிமிர்ந்து பார்த்தான்.

“காச கேட்டா எகத்தாளமா” தடியன் மிகவும் கோபமாக அந்த மாடிவீட்டுக் காரனின் சட்டையை கோர்த்து பிடித்து கன்னத்தில் அடித்தான். அவன் சுருண்டு விழுந்தான். மெலிந்த அந்த பெண் தடியனின் காலை பிடித்துக் கொண்டு கதறினாள். தடியன் அவளையும் அவள் கணவனையும் மிதித்தான். அதே கோபத்தில் திரும்பிய தடியன், பூங்காவிற்குள் நின்றுகொண்டிருந்த இவனை ஒருமுறை தற்செயலாக பார்த்தான். தடியனின் வெறிகொண்ட முகத்தைப் பார்க்கும் போது, இவனுக்கு உடம்பு நடுங்கியது. பார்வையை திருப்பிக்கொண்டு நகர்ந்தான்.

‘சொங்கிப் பயலே’ ‘எதுக்கு அடுத்தவங்க லைப் பத்தியெல்லாம் யோசிச்சு குழப்பிக்கிற’ ‘ரொம்ப யோசிக்காதிங்க. ரிலாக்ஸ்’ ‘வேடிக்கை மனிதரைப் போல் வீழ்வேனென்று நினைத்தாயோ’

‘சோற்றுக் கற்றாளைச் சாறு கால் வலியை நீக்கும்’ என்று தனக்குதானே இரண்டு மூன்று முறை மனதினுள் சொல்லிக் கொண்டே பூங்காவை சுற்றத் தொடங்கினான்.