அடி- சிறுகதை

‘டப் டப்’ என்ற சப்தம்தான் முதலில்  கேட்டது. பின் ‘பளார் பளார்’ என்ற சப்தம்.  சப்தம் வரும் திசையில் மனித தலைகள் மட்டுமே தெரிந்தது. எனக்கு நான்கு புறமுமே மனித தலைகள் தான். எள்ளுப் போட்டா எள்ளு எடுக்க முடியாது என்று எங்கள் ஊர் பக்கம் சொல்வார்கள்.  அந்த அளவிற்கு கூட்டம்.

தினமும் இந்த நிலை தான். ஒன்றரை நிமிடங்களில் கடந்துவிடக் கூடிய அந்த நடை மேம்பாலத்தை, ஊர்ந்து கடக்க பத்து நிமிடங்கள் ஆகின்றன. திருப்பதி பெருமாள் கோயிலில் இருக்கும் இரும்பு பாலம் போல் தான் இதுவும். கூட்டம் நம்மை நெரித்து எடுக்கும். என்ன ஒரே வித்தியாசம், திருப்பதியில் படி இறங்கினால் பெருமாள் காட்சித்தருவார். இங்கே பேருந்து நிலையம் காட்சித் தரும். தாமதமாக போனாலும் பெருமாள் அங்கேயே தான் இருப்பார். இங்கே 21g போய்விடும். அதனால் திருப்பதியை விட இங்கே தள்ளுமுள்ளு அதிகமாக இருக்கும்.

சட்டைப்பையில் ஒரு கையை வைத்துக் கொண்டு, இன்னொரு கையை பேண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டே நடக்க வேண்டும். யாராக இருந்தாலும் கிண்டி ரயில் நிலையத்திலிருந்து வெளியே செல்வதற்குள் இந்த ப்ரோட்டோகாலை பின்பற்றியே தீர வேண்டும். இல்லேயேல் மொபைலோ பர்சோ காணாமல் போய்விடும்.

‘பயணிகள் வரிசையாக செல்லுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். ரயில் நிலையத்தை விட்டு வெளியே செல்பவர்கள், சைதாபேட்டை நோக்கி இருக்கும் படிகட்டுகளை பயன்படுத்திக் கொள்ளவும். உள்ளே வருபவர்கள் சென்ட் தாமஸ் மவுன்ட் நோக்கி இருக்கும் படிகட்டுகளை பயன்படுத்திக் கொள்ளவும்.’

தினமும் ஒருவர் மைக்கில் சொல்லிக் கொண்டே இருக்கிறார். பெரிதாக யாரும் அவரை கவனித்ததாக தெரியவில்லை. மீண்டும் மீண்டும் எதிரும்புதிருமாக முட்டிக்கொண்டு செல்வதையே வழக்கமாக வைத்திருக்கின்றனர். அன்று வெகு நேரம் ரயில் இல்லாததால், சானடோரியத்தில் காத்திருந்த கூட்டம் அனைத்தும் ஏறிக்கொண்டுவிட்டது. பெட்டிக்குள் நிற்க முடியவில்லை. எப்போது கிண்டி வரும் என்றாகிவிட்டது. சென்னை ரயிலில் பல்லாவரம், கிண்டி, கோடம்பாக்கம் போன்ற இடங்களில் ஏறி-இறங்காதவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

ரயில் நிற்பதற்கு முன்பே இறங்கும் படி பின்னிருந்து தள்ளுவார்கள். கீழே இறங்கி விட்டால் போதும், பின்னே  தள்ளும் கூட்டமே நம்மை பிளாட் பாரத்திற்கு வெளியே கொண்டுபோய் விட்டுவிடும். அதுவும் கூட்ட நெரிசலில் மேம்பாலத்தின் படிக்கட்டு ஏறுவது என்பது பெரும் கலை. தரையைப் பார்த்தவாறு ஒவ்வொரு அடியாய் எடுத்து வைக்க வேண்டும். முதலில் வலது காலை எடுத்து முதல் படிகட்டில் வைக்க வேண்டும். பின் மீண்டும் இடது காலை எடுத்து அதே படிகட்டில் வைக்க வேண்டும்.  இரண்டு கால்களும் ஒரே படிகட்டின் மீது வந்தபின், வலது காலை எடுத்து அடுத்த படிகட்டில் வைக்க வேண்டும். இப்படி ஒரு பியானோ இசைக் கருவியில் ஸ்டக்காட்டோ இசையை வாசிக்கும் பொருட்டு அதன் விசைகளை அரை பலத்துடன் மீண்டும்மீண்டும் அழுத்துவதை போல லயத்தோடு படிகட்டுகளில் கால்களை எடுத்து வைக்க வேண்டும். படிகட்டின் உச்சியை அடையும் வரை தலையை நிமிர்த்த முடியாது. மீறினால் தடுமாறிவிட வாய்ப்பிருக்கிறது. அன்று படிகட்டில் ஏறி கொண்டிருக்கும்போது தான் அந்த சத்தம் கேட்டது.

‘டப் டப்’. ‘பளார் பளார்’. முதலில் சத்தம் எங்கிருந்து வருகிறது என்று புரிந்து கொள்ளவே சில நொடிகள் ஆயிற்று. சப்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தது. படிகட்டை முழுவதுமாக ஏறி பாலத்தின் சமதளத்தை அடைந்த போது தான் சப்தம் பாலத்திற்கு வெளியே இருந்து வருவதை உணர முடிந்தது. அதற்குள், என் பக்கத்தில் இருந்தவர் சப்தத்தின் காரணத்தை அறிந்து கொள்ளும் பொருட்டு எட்டிப் பார்த்தார். அவருக்கும் தலைகளின் தரிசனம் தான். அதை உறுதி செய்யும் பொருட்டு என்னை  எதுவும் புரியாதவர்போல் பார்த்தார். எனக்கும் எதுவும் புரியவில்லை என்பதை புரிந்து கொண்டவராய் தலையை திருப்பிக் கொண்டார்.

பாலத்தை விட்டு இறங்கியதும், இடது புறத்தில், வழக்கமாக ஆட்களே செல்லாத அந்த ஹோட்டலின் வாசலில் ஒரு பெரும் கூட்டம் நின்றுக் கொண்டிருந்தது.

‘டப் டப்’ . அந்த கூட்டம், கீழே பார்த்தவாறே கை ஓங்கியது.

கூட்டத்தின் நடுவே ஒருவன் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருப்பது தெரிந்தது. மீண்டும் ஒருவர் கையோங்க,

“யோவ், அடிச்சிக்கிட்டே இருப்பீங்களா…! போலிஸ்ட்ட போ” என்றார் ஒரு ஆட்டோ டிரைவர். கூட்டம் நிதானித்தது.  அதற்குள் அந்த ஆள் தலையை பிடித்தவாறே எழுந்து நின்று கொண்டான். ஆள் நாகரிகமாகத்தான் இருந்தான். வயது நாற்பத்தைந்துக்குள் தான் இருக்கும். டக்-இன் செய்யப்பட்ட சந்தன நிற பேண்ட். நீல நிற முழு கை சட்டை. வெள்ளை நிறத்தில், ஆபிஸ் உடைக்கு பொருந்தாத, ரன்னிங் ஷூஸ். விமான நிலைய டேக் கலட்டப்படாத ஒரு எக்சிகியூட்டிவ் பையை முதுகில் மாட்டியிருந்தான்.

மூச்சு வாங்கியது அவனுக்கு. ஒருவன் அவன் சட்டையைப் பிடித்து இழுத்தான்.

“போலிஸ்ட்ட போலாம்” என்றான் இன்னொருவனிடம்.

“எதற்காக அடிக்கிறார்கள்?” விடை உணர்வதற்கு முன்பே இன்னொருவன் மீண்டும் அவன் தலையில் அடித்தான். அடிவாங்கவே அவன் பிறந்திருப்பதை போல் அவன் எந்த எதிர்ப்பையும் காட்டாமல் அடி வாங்கிக் கொண்டான்.

“போலிஸ்ட போனா அந்த பொண்ணும் வந்து சொல்லுமா” மற்றொரு ஆட்டோ டிரைவர் கேட்டார்.

“என் தங்கச்சி சார். சொல்லும் சார்” சட்டையை பிடித்திருந்தவன் சொன்னான்.

முதலில் எதற்காக அடி வாங்குகிறான் என்று தெரியாதவர்களும் இப்போது கொஞ்சம் யூகிக்கத் தொடங்கி இருந்தார்கள்

“வயசாளிங்கதான் இப்டி அலையுறானுங்க. கொஞ்சம் கூட்டம் இருந்தா போதுமே!” ஒரு நடுத்தர வயது பெண் பக்கத்தில் இருந்தவளிடம் சொல்லிக்கொண்டே சுரங்கப் பாதை நோக்கி நடந்தாள்.

“கை வச்சிட்டாண்டா…” ஒரு பள்ளி பையன் தன் நண்பனிடம் சொன்னான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டார்கள்.

அதற்குள் கிருதா வைத்த வாலிபன் ஒருவன் அடிவாங்குபவனை போட்டோ எடுக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தான்.

“டேய் போடா” என்று அந்த  ஆட்டோ டிரைவர் அவனை விரட்டினார்.

“மரியாதை இல்லாம பேசாதீங்கனே. பேஸ்புக்ல போட்டா தான் இவனுங்க மாதிரி ஆளுங்க திருந்துவானுங்க” என்றான் கோபமாக.

அந்த ஆட்டோ டிரைவர் விட்டிருந்தால் அவனை அடித்திருப்பார். அங்கே மற்றுமொரு சண்டை தொடங்குவதற்கு முன்பு, மற்றொரு ஆட்டோ டிரைவர்,

“போங்க தம்பி…” என்று போட்டோக்காரனை பாந்துவமாக பேசி அனுப்பி வைத்தார். அவருக்கு ஏனோ அடி வாங்குபவன் மீது கொஞ்சம் இரக்கம் தொற்றிக் கொண்டுவிட்டது.

இந்த சம்பாசனையில் கிடைத்த மைக்ரோ நொடிகளை தன்னை ஆசுவாசப்படுத்த பயன்படுத்திக் கொண்டவனாக அந்த அடிவாங்கியவன் தன் வெள்ளை நிற கைக்குட்டையால் முகத்தை துடைத்துக் கொண்டான். அவனை பார்ப்பதற்கும் பாவமாக தான் இருந்தது. ஆனால் இதை வெளியே சொல்ல முடியாது. அவன் தவறு செய்தவன். தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும் என்று யாரோ சொல்வது காதில் விழுந்தது. அவன் மனைவியோ பிள்ளைகளோ இந்நேரம் அவன் அலுவலகம் சென்றுகொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கக் கூடும். ஒரு வேலை அவன் மனைவியோடு வாழாமல் இருக்கலாம். அல்லது திருமணம் ஆகாமல் இருந்திருக்கலாம். காய்ச்சலில் அவன் பிள்ளை இறந்து போயிருக்கலாம். அல்லது அவன் மனைவி யாரோ ஒருவனோடு….

“என்ன பாத்துகிட்டு! போங்க  சார்” அந்த இரக்க குணமுள்ள ஆட்டோ டிரைவர் என்னிடம் சொன்னான். மேற்கொண்டு அங்கே நிற்பது உசிதம் இல்லை.

சுரங்கப்பாதை அருகே ஒரு பெண் துப்பட்டாவால் முகத்தை மறைத்து நின்று கொண்டிருந்தாள். அவள் அழுகிறாள். முகத்தை பார்க்க முடியாவிட்டாலும் உணர்ந்து கொள்ள முடிந்தது. அவளை பார்க்கவும் பாவமாக தான் இருந்தது.

“இந்த அக்கா தான் போல இருக்குடா…” அந்த பள்ளிக்கூட பையன் தன் நண்பனிடம் சொல்லிக் கொண்டே சுரங்கப் பாதைக்குள் நுழைந்தான்.

“உன் பொண்ணா இருந்தா இப்டி பண்ணியிருப்பியா?”

அடி களத்திலிருந்து குரல் கேட்டது. கூடவே அடியும்.

“போலிஸ்ட்ட போங்கடா…” ஆட்டோ டிரைவர் பொறுமை இழந்தார்.

சாலையை கடந்தால் போலிஸ் ஸ்டேஷன்.

“இப்டியே க்ராஸ் பண்ணிடுவோம். சப்வேல போனா கூட்டத்துல தப்பிசிருவான்” ஒருவன் அடி வாங்கியவனின் சட்டையிலிருந்து கை எடுக்காமலேயே சொன்னான். நான் அதற்குள் சுரங்கப்பாதையில் இறங்கிவிட்டேன்.

அங்கேயும் நெரிசல் தான். சுரங்கப் பாதையின் இறுதியில், இடது புறம் திரும்பி படி ஏறினால் பேருந்து நிலையம்.  அந்த படிகளில் ஏறுவதும்  பியானோ இசைக் கருவி வாசிக்கும் வேலை தான்.

“இப்டி போலாம் இப்டி போலாம்” சுரங்கத்தின் மூலையில் நின்று கைக்குட்டை விற்பவர் வலது புறத்தில் போகும் படி சொல்லிக் கொண்டிருந்தார். அவர் கைக்குட்டை விற்கும் வேலையை விட, கூட்டத்தை கட்டுப் படுத்தும் வேலையை தான் தினமும் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒருவேளை அவர் ட்ராபிக் போலிஸ் வேலைக்கு முயற்சி செய்து உயரம் போதாமல் திருப்பி அனுப்பப் பட்டவராக இருக்கலாம்.

“என்ன தம்பி மேல ஏதோ பிரச்சனையா?”

என் முன்னே செல்பவனிடம் கேட்டார்.  காதில் இயர் போனை வைத்துக் கொண்டு கொஞ்சிக் கொண்டே போன அவன் எந்த பதிலையும் சொல்லாமல் அவரை சட்டைக் கூட செய்யாமல் வலது புறமிருந்த படிகெட்டில் ஏறினான்.  எனக்கு ஒரு கணம் கஷ்டமாக இருந்தது. அவர் முகத்தைப் பார்த்தேன். அவர் என்ன பிரச்சனை என்று என்னை கேட்கவில்லை. நானும் எதுவும் சொல்லவில்லை. அவர் எதுவும் நடக்காதது போல் கைக்குட்டை விற்கத் தொடங்கிவிட்டார்.

“பத்து இருக்கு, இருவது  இருக்கு… பத்து இருக்கு இருவது  இருக்கு”

நானும் அமைதியாக வலது புறம் திரும்பினேன். வலது புறம் உள்ள படிகட்டில் ஏறினால், சுரங்கப்பாதையின் மேல் பகுதியை சுற்றிக் கொண்டு வெளியே வந்தால் தான் பேருந்து நிலையத்தை அடைய முடியும். வழக்கமாக எல்லோரும் போகும் வழியை விட சற்று கூடுதலாக நடக்க வேண்டும். ஆனால் யாரும் அதிகம் பயன்படுத்தாத வழி என்பதால் மற்றவர்களை விட விரைவாக பேருந்து நிலையத்தை அடைந்து விடலாம். நான் சுரங்கப்பாதையை விட்டு வெளியே சாலையில் இறங்கியபோது, சுரங்கத்தை ஒட்டி நின்று கொண்டிருந்த ஷேர் ஆட்டோ டிரைவர்கள் சாலையை நோக்கி ஓடினார்கள். என்ன என்று புரியாமல் பார்த்தேன். சாலையிலும் கூட்டம். நானும் அங்கே ஓடினேன்.

சாலையின் நடுவே ஒரு கார் நின்று கொண்டிருந்தது. பின்னே வரிசையாக வண்டிகள் ஒவ்வொன்றாக நிற்க தொடங்கின. காரின் அருகே பதட்டமாக நின்று கொண்டிருந்த ஆள் வயதான ட்ராபிக் போலீசிடம் சொன்னான்,

“நான் கரெக்ட்டா தான் சார் வந்தேன், அவன் திடிர்னு டிவைடர் மேல இருந்து குதிச்சிட்டான்…”

வயதான ட்ராபிக் போலிஸ் அவருடன் நின்றுகொண்டிருந்த இளம் ட்ராபிக் போலீசிடம்,

“க்ரவுட கண்ட்ரோல் பண்ணு, 108- க்கு கால் பண்ணு” சொல்லிவிட்டு கார் டிரைவரைப் பார்த்தார். அவன் உடம்பு நடுங்கிக் கொண்டிருந்தது.

“யோவ் கார ஓரமா நிறுத்து. பேப்பர்ஸ எடுத்துட்டு வா…” சொல்லிவிட்டு கீழே குனிந்துப் பார்த்தார்.

“போயிருச்சு போல… காலைலயே சாவடிக்குறானுங்க….”

நானும் கீழே பார்த்தேன். அந்த, சந்தன கலர் பேண்ட், நீல நிற முழுக்கை சட்டை, ரன்னிங் ஷூஸ் அணிந்திருந்த ஆள் பிணமாக கிடந்தான். கார்காரனிடமிருந்த பதட்டம் என்னைத் தொற்றிக் கொண்டது. சுற்றிமுற்றும் பார்த்தேன். அவனை போலிஸ் ஸ்டேசனுக்கு அழைத்து வந்த யாரும் தென்படவில்லை. சாலையின் மறுபுறம் சுரங்கப்பாதை அருகே அந்த பெண் தென்படுகிறாளா என்று பார்த்தேன். எதுவும் சரியாக தெரியவில்லை.

மீண்டும் தரையைப் பார்த்தேன். அவனை பார்ப்பதற்கும் பாவமாக தான் இருந்தது. அவன் மனைவியோ பிள்ளைகளோ இந்நேரம் அவன் அலுவலகம் சென்றுகொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்க கூடும். ஒரு வேலை அவன் மனைவியோடு வாழாமல் இருக்கலாம். அல்லது திருமணம் ஆகாமல் இருந்திருக்கலாம். காய்ச்சலில் அவன் பிள்ளை இறந்து போயிருக்கலாம். அல்லது அவன் மனைவி யாரோ ஒருவனோடு….

“சார் கிளம்புங்க ப்ளீஸ்.” இளம் ட்ராபிக் போலிஸ் என்னிடம் சொன்னான். கூட்டம் தங்கள் பாதையில் செல்ல ஆரம்பித்தது. சாலையில் கிடந்தவனை பார்த்துக் கொண்டே வாகனங்கள் கடந்து சென்றன. என் அருகே, கீழே கிடந்தவனைப் பார்த்தவாறு நின்று கொண்டிருந்த வாலிபன் பேருந்து நிலையம் நோக்கி வேகமாக ஓடினான். திரும்பி பார்த்தேன். கிண்டி பேருந்து நிலையத்திலிருந்து 21g பேருந்து வெளியே திரும்பிக் கொண்டிருந்தது. ஓடியவன் பின் வழியே ஏறிக் கொண்டான். பேருந்து கொஞ்சம் நிதானிக்க, நானும் ஓடிச் சென்று அதே வழியில் ஏறிக்கொண்டேன்.

“எருமைங்க ரன்னிங்ல ஏறுது பாரு” டிரைவர் சம்ப்ரதாயமாக திட்டினான். என்னையில்லை என்பது போல் நான் அந்த வாலிபனை பார்த்தேன். தன்னை சொல்லவில்லை என்பது போல் அவன் என்னைப் பார்த்தான்.

“உள்ள ஏறு. ஏழுமலை டோர க்ளோஸ் பண்ணு” கண்டக்ட்டர் சம்ப்ரதாயமாக கத்தினார். பாதி கதவு மூடிக்கொண்டது. மீதி பாதி இல்லை. யார் உடைத்தார்கள் என்று தெரியவில்லை. நான் கூட்டத்தில் புகுந்து பின்னே  பெண்கள் இருக்கை அருகில் நின்று கொண்டேன்.

“காளியப்பா” அந்த வாலிபன் கண்டக்ட்டரிடம் நூறு ரூபாயை நீட்டினான்.

“பதினேழு. சில்லறையா கொடு. எல்லாரும் நூறு ரூபாய நீட்டுன எங்க போறது…?”

நான் பேருந்தின் பின் ஜன்னல் வழியே சாலையை கவனித்தேன். கார் டிரைவர் வயதான ட்ராபிக் போலீசிடம் ஏதோ பவ்யமாக பேசிக் கொண்டிருந்தான். அந்த, சந்தன கலர் பேண்ட், நீல நிற முழுக்கை சட்டை, ரன்னிங் ஷூஸ் அணிந்திருந்தவான் சாலையில் அதே இடத்தில் கிடந்தான்.  கிருதா வைத்த வாலிபன் கீழே பிணமாக கிடந்தவனை  போட்டோ எடுக்கத் தொடங்கிருந்தான்.

பூங்காவை ஒட்டியிருந்த வீடு- சிறுகதை

‘காந்தி பூங்கா’, அவன் வீட்டிலிருந்து மூன்று தெருக்கள் தள்ளி இருந்தது. ராஜாஜி  தெரு, பட்டேல் தெரு, நேதாஜி தெரு, இந்த மூன்றையும் கடந்தால் அந்தப் பூங்காவை அடைந்துவிடலாம். இதில் பட்டேல் தெரு மட்டும் மிக சிறியது. அதில், வலது புறம் மூன்று வீடுகள், இடது புறம் மூன்று வீடுகள் என்று மொத்தம் ஆறு வீடுகள் தான் இருந்தன. இப்போது ஒரு வீட்டை இடித்து அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று கட்டிக் கொண்டிருப்பதால் வீடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம். ஆனாலும் அதை தெரு என்று சொல்வதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எப்படி இருந்தாலும் அதை குறுக்குத் தெரு என்றோ, ஒரு தெருவின் பகுதி என்றோ சொல்வதுதானே சரியாக இருக்கும்! பெரிய தலைவர்களின் பெயரை எப்படி குறுக்குத் தெருவிற்கு வைப்பது என்று பெயர் வைத்தவர்கள் யோசித்திருக்கக் கூடும். அதனால் அதை ‘பட்டேல் தெரு’ என்றே விட்டுவிட்டனர் போல. ஆனால், ஏன் எங்கோ பிறந்த ஒரு தலைவரின் பெயரை இங்கே இந்த சிறு தெருவிற்கு வைத்திருக்கிறார்கள்? தமிழகத்திற்கு வெளியே தான் பயணப்பட்ட ஊரில் தமிழ் தலைவர்களின் பெயரில் எந்த தெருவும் இருந்ததாக கண்டதில்லையே! இப்படியெல்லாம் அந்த தெருவை கடக்கும் ஒவ்வொரு முறையும் அவன் எண்ணுவான். இதை வெளியே சொன்னால் தன்னை பிரிவினைவாதி என்று சொல்லிவிடுவார்களோ என்ற பயத்தில் வெளியே எதுவும் சொல்லமாட்டான்.

ஆனாலும் தனக்கு ஏன் இத்தகைய தேவையில்லாத கேள்விகளும் சிந்தனைகளும் அடிக்கடி வருகின்றன என்று யோசித்துக் கொண்டே இருப்பான். அந்த கேள்விக்கு மட்டும் அவனுக்கு பதில் கிடைத்தபாடில்லை. இதை அவனால் சகஜமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. சில நேரங்களில் பயம் வருகிறது. பயம் கொள்ளும் அளவிற்கு பெரிய பிரச்சனை இல்லை என்று யாரவது எண்ணக் கூடும். அவர்கள் அவன் பிரச்சனையின் வீரியத்தைப் புரிந்துகொண்டால் அப்படி எண்ணமாட்டார்கள். அவனால் தன் மனதை எவ்வளவு முயன்றும் ஒருநிலைப் படுத்த முடியவில்லை. ஒரு நேரத்தில் ஒரு இடத்தில் மனதளவில் நிலைத்து இருக்க முடியவில்லை. மனதில் தான் எவ்வளவு தேவையில்லாத சிந்தனைகள்! கவனச் சிதறல்கள்!

ரயிலில் செல்லும்போது, பல்லாவரம் என்ற பலகையை பார்த்தால் கூட, பல்லாவரம், பல்லவபுரம், பல்லவர்கள், நரசிம்மவர்ம பல்லவன், என்று தொடர்ச்சியாக சிந்தனை ரயிலை விட வேகமாக எங்கோ பயணிக்கிறது. நிறைய படிப்பது ஒரு காரணமாக இருக்கலாம் என்று நண்பன் ஒருவன் சொல்ல, புத்தகங்கள் படிப்பதையே நிறுத்திக் கொண்டான். ஆனால் சிந்தனை முன்னைவிட அடர்த்தியாக மனதை ஆக்கிரமித்துக் கொள்கிறது. இதை அப்படியே அதன் போக்கில் விட்டுவிடலாம். ஆனால் உடம்புதான் சோர்ந்து போகிறது.

அம்மா, ‘மீன் மாத்திரை’ சாப்பிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்பாள். சாப்பிட்டுப் பார்த்தும் ஒன்றும் சரியாகவில்லை.

“சொங்கிப் பயலே, உன் வயசுல நான் எப்டி இருந்தேன் தெரியுமா!” அப்பா முரட்டுத்தனமாக தான் பேசுவார். அவர் போலீசில் இருந்தவர்.

“முட்டைய உடச்சி குடி” என்பார்.

இது உடல் சார்ந்த பிரச்சனை அல்ல என்பதையும், அதிக சிந்தனை உடலை வருத்தி எடுத்துவிடும் என்பதையும் அவன் கூகிளில் படித்திருந்தான். அதற்காகவே மனதை சகஜமாக வைத்திருக்கப் பிரயத்தனப் பட்டான். ஒழுங்காக நடைப்பயிற்சி செய்வதுதான் இதற்கெல்லாம் தீர்வு என்று மருத்துவர் சொன்னார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு இடது கை வலிப்பதாக மருத்தவரிடம் சொன்ன போது, அவர் ஏதேதோ பெரிய ‘டெஸ்ட்கள்’ எடுத்து ஒரு பெரிய இருதய நிபுணரை சந்திக்கச் சொன்னார்.

“என்ன வேலை ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்கோ?” அந்த வயதான இருதய நிபுணர் செயற்கையாக புன்னகை செய்துகொண்டே கேட்டார்.

ஆம்! வேலை என்னவோ மனம் உடல் எல்லாவற்றையும் அழுத்துகிறது. வேலை இல்லாமல் வேலை தேடிக் கொண்டிருந்த காலத்திலும் அப்படிதான் மன அழுத்தம் இருந்தது. இப்போது வேலைக் கிடைத்து கையில் கொஞ்சம் காசு இருக்கும் போதும் மன அழுத்தம் இருக்கிறது. இந்த கணக்கு என்ன என்பதை அவனால் புரிந்துக் கொள்ளமுடியவில்லை.

“டாக்கி கார்டியா.” அவனுடைய ECG  ரிப்போர்ட்டை பார்த்த மருத்தவர் சொன்னார்.

“உங்க இதயம் கொஞ்சம் வேகமாக துடிக்குது. இந்த வயசுலேயே இப்படினா ப்யூச்சர்ல பிரச்சனைதான். சரியா தூங்குறீங்களா இல்லையா?”

“மனசும் ரொம்ப வேகமாக தான் சார் இருக்கு” என்று சொல்ல நினைத்தான். அப்படி சொன்னால் அவர் ஏதாவது மனநல நிபுணரை பார்க்கச் சொல்லிவிடுவாரோ என்று தயங்கி சொல்லாமல் விழுங்கிவிட்டான்.

“ரொம்ப யோசிக்காதிங்க. ரிலாக்ஸ். ஸ்ட்ரெஸ் இருந்தாலே உடம்பு வீக் ஆகிடும். மனசுல இருக்குற அழுத்தத்த உடம்பு சரி செய்ய பார்க்கும். முடியலனா சோர்வாகிடும். தொடர்ந்து வாக்கிங் போங்க. சரியாகிடும்” என்றார்.

மன அழுத்தத்தை குறைக்கும் நம்பிக்கையில் தான், அவன் தினமும் காலையில் அந்த பூங்காவை சுற்றி வந்தான். இல்லையேல் அந்த நேரத்தில் அலாரத்தை அணைத்து விட்டு தூங்கி ஏழரை மணி வாக்கில் எழுந்து வேகவேகமாக கிளம்பி ஓடிச்சென்று எட்டுமணி ரயிலை பிடிப்பதையே வழக்கமாக வைத்திருந்தான். அலுவலகம் மயிலாப்பூரில் இருந்தது. வீடோ தாம்பரத்தில். எட்டுமணிக்கு வண்டி ஏறினால் தான் ஒன்பது நார்ப்பத்தைந்து மணிக்குள் செல்ல முடியும். ஐந்து நிமிடம் தாமதமாக சென்றால், அவனுடைய பொதுமேலாளர் வீட்டுக்கு அனுப்பிவிடுவார். பள்ளிக்கூடமே தேவலாம் என்ற அளவில் தான் அலுவலகமும் அங்கே இருந்த மனிதர்களும் இருந்தார்கள். அவனுடைய உடனடி மேலாளார், பொது மேலாளர் சொன்னால் மாடியிலிருந்து கூட குதித்து விடுவார். அவர் ஒரு வடநாட்டவர். தமிழ் சுத்தமாக வராது. பொது மேலாளர் தஞ்சாவூர்காரர். ஆனால் இருவரும் தத்தம் இருத்தலை நிலைநிறுத்திக் கொள்ள நிர்வாகத்திற்கு விசுவாசம் என்ற போர்வையில் அடிமைகளாக இருந்தனர். அந்த அடிமைத்தனம்தான்  அவர்களை இணைத்துவைத்திருந்தது.

ஐந்து மணிக்கு அலுவலகம் முடிந்தாலும் ஏழு மணி வரை அலுவலகத்திலேயே அமர்ந்திருப்பார்கள். இவனும் வேறு வழியில்லாமல் அமர்ந்திருந்தான். அவனுடைய மேலாளர் ஐந்து மணிவரை எந்த வேலையும் செய்யாமல் காலம் கடத்திவிட்டு, ஐந்து மணிக்கு பின்பு கோப்புகளை எடுத்துப் புரட்டுவார். குறிப்பாக பொது மேலாளர் வீட்டுக்கு செல்லும் நேரத்தில் வேலை செய்வது போல் பாவனை செய்வார். அதற்கு முன்பே இவன் எல்லா வேலைகளையும் செய்து முடித்திருப்பான். ஆனால் பெயரை இவனுடைய மேலாளர் தட்டிச் சென்று விடுவார்.

மன உளைச்சலில் தன் இதயம் வெடித்தால் தன் மேலாளரும் பொது மேலாலரும்தான்  காரணம் என்று எழுதி வைத்திட நினைத்தான். ஆனால் மருத்துவர் எல்லாம் சாரியாகிவிடும் என்ற சொன்னதால், நம்பிக்கையோடு அவன் தினமும் காலையில் பூங்காவை சுற்றி வந்தான்.  அன்று அவன் பூங்காவை அடைந்த போது மணி சரியாக ஆறரை. ஆனாலும் சற்றே கூடுதலாக உடம்பை நடுங்க வைக்கும் குளிர். அந்த குளிரை பொருட்படுத்தாமல் நான்கு பேர் பூங்காவின் வாசலில் கேரம் போர்ட் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் யாரும் இவனை சட்டை செய்யவில்லை.

மாசி மாதம் முடியும் தருவாயிலும் இவ்வளவு குளிர் ஆச்சர்யம்தான். பள்ளியில் படித்த போது பருவம் தப்பாமல் எல்லாம் நடந்தது. இப்போது எப்போது மழை வருகிறது எப்போது வெயில் அடிக்கிறது என்று எதையும் உறுதியாக சொல்ல முடியவில்லை. எல்லாம் மாறிக்கொண்டே வருகிறது. தான் மட்டும் மாறுவதாக தெரியவில்லை. ஐயோ! மீண்டும் சிந்தனை. இதை சரி செய்ய வேண்டும். பூங்காவில் எழுதியிருக்கும் வாசகங்களை படிக்கத் தொடங்கினான்

‘சோற்றுக் கற்றாளைச்சாறு கால் வலியை நீக்கும்’ அதை நிதானமாக படித்தான். இதுவும் மருத்துவர் சொன்ன அறிவுரை தான். எப்போதெல்லாம் மனதை தேவையில்லா சிந்தனைகள் ஆக்கிரமிக்கிறதோ, எப்போதல்லாம் மனம் நிலையற்று ஓடுகிறதோ, அப்போதெல்லாம் நூறிலிருந்து ஒன்றுவரை தலைகீழாக எண்ணிடச் சொன்னார். இல்லை, ஏதாவது வார்த்தைகளிலோ பொருளிலோ மனதை நிறுத்தச் சொன்னார்.

“இல்லனா உங்க கண்ல படுற வார்த்தைய, வாக்கியத்த திரும்பி திரும்பி சொல்லுங்க. மனம் சாந்தாமகிடும்”

‘சோற்றுக் கற்றாளைச் சாறு கால் வலியை நீக்கும்’ தனக்குதானே இரண்டு மூன்று முறை மனதினுள் சொல்லிக் கொண்டே பூங்காவை சுற்றி வந்தான்.

“சோறுதான தின்ற?” இப்படி ஒரு குரல் நாராசமாக ஒலிக்க அவன் கவனம் சிதறியது. அங்கேயே நின்றான். சப்தம் இடது புறத்தில் பூங்காவை ஒட்டியிருந்த வீட்டிலிருந்து வந்தது.

பூங்காவை சுற்றி நான்கு புறமும் இரும்பு கம்பிகளாலான மதில். அது அவனை விட இரண்டு மடங்கு உயரத்தில் இருந்தது. பூங்காவின் இடது புறம் வரிசையாக வீடுகள். பின்புறம் புதர் மண்டி கிடக்க, மற்ற இரண்டு புறமும் சாலைகள். பூங்கா மேடாக அமைந்திருந்தது. அங்கே நின்று பார்த்தால் அந்த வீடுகள் பள்ளத்தாக்கில் இருப்பது போல் தெரிந்தன. வரிசையில் அமைந்த அந்த வீடுகளின் வாசல் பூங்காவின் இடது மதிலை பார்த்து அமைந்திருந்தது. பூங்காவை ஒட்டியிருந்த ஒத்தையடிப் பாதை அந்த வீடுகளுக்கான பொதுப்பாதையாக மாறியிருந்தது.

அந்த வீடுகள் எல்லாம் பெரும்பாலும் ஒற்றை அறைக் கொண்ட வீடுகளாகதான் இருந்தன. ஆனால் சிறு வீட்டிலேயே நிறைய பேர் வசித்தனர். அங்கே வசித்த அனைவரும் பூங்காவின் இரும்பு கம்பிகளின் மேல் துணிகளை உலர்த்துவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இரும்பு கம்பிகளுக்கும் அதில் காயப் போடப்பட்டிருந்த துணிகளுக்குமிடையே இருந்த இடைவெளியில் தான் வீடுகளை கவனிக்க முடியும்.

அங்கே  ஒரு பெரிய பச்சை புடவையும் அதன் மேல ஒரு சுடிதாரும் காய்ந்தது. புடவைக்கு பின்னால் ஒரு உருவம் தெரிந்தது. மெதுவாக அந்த புடவையை நகர்த்தி பார்த்தான். ஒரு தடியன் நின்றுகொண்டிருந்தான். அவன் வீட்டின் வாசலைப் பார்த்து நின்றுகொண்டிருந்ததால் அவனுடைய தலை மட்டும் தெரிந்தது. அவன் மஞ்சள் டி-ஷர்ட், கட்டம்போட்ட லுங்கி அணிந்திருந்தான். அவனுடைய டி-ஷர்ட் முதுகில் ஒரு அரசியல் தலைவர் சிரித்துக் கொண்டிருந்தார்.

“உன்னதாண்டி….” அவன் மீண்டும் கத்தினான். வீட்டின் நிலைவாசற்ப்படியில் ஒரு நடுத்தர வயது பெண் நின்றுகொண்டிருந்தாள். அவள் கண்கள் கலங்கியிருப்பதை கவனித்தான். மதில் முழுக்க வரிசையாக துணிகள் இருந்ததால், கீழே நிற்பவர்கள் உன்னிப்பாக கவனித்தாலொழிய பூங்காவில் ஒருவன் நின்று தங்களைப் பார்ப்பது தெரியாது.

அருகாமையில் காலடி ஓசை கேட்டது. திரும்பினான். பூங்காவில் நடைப்பயிற்ச்சியில் ஈடுபட்டிருந்த ஒரு நடுத்தர வயதுகாரரும் அவரின் மகளும் இவனை நோக்கி வருவதை கவனித்தான். இவன் புடவையிலிருந்து கையை எடுத்துவிட்டு, எதுவும் தெரியாதது போல் கிழக்கு பக்கம் திரும்பி சூரியனை பார்த்து வணக்கம் வைத்தான். யாரவது பார்த்தால் இவன் சூர்ய நமஸ்காரம் செய்கிறான் என்று நினைத்துக் கொள்ள வேண்டுமாம். அந்த தந்தை பேசிக்கொண்டே வந்தார். அந்த மகள் தன் செல்போனை அவ்வப்போது பார்த்துக்கொண்டு, தந்தை பேசுவதை வேறுவழியில்லாமல் கேட்பதைப் போன்ற முகபாவங்களை வெளிப்படுத்திக் கொண்டு நடந்து வந்தாள். அந்த தந்தையும் மகளும் சென்றபின் மீண்டும் வீட்டை நோக்கினான்.

தடியன் தொடர்ந்து உரக்க பேசினான். எல்லாம் காலையில் கேட்க அவசியமற்ற சற்றே ஆபாசமான வசை மொழிகள். அவன் வரிசையாக பேசினான். ஏதோ மனப்பாடம் செய்துவிட்டு ஒப்பிப்பதைப் போல் கெட்ட வார்த்தைகளை கொட்டினான். அவனுடையது கட்டையான குரல். கத்திகத்தி தேய்ந்து போனது போல் இடையிடையே அவன் பேசிய வார்த்தைகள் முழுவதுமாக புரியவில்லை.

“ரொம்ப பேசாதீங்க…” உள்ளிருந்து ஒரு பெண்ணின் குரல் மட்டும் வந்தது. அந்த குரலை வைத்து அந்த பெண்ணிற்கு தன் வயதோ, தன்னை விட குறைந்த வயதோ தான் இருக்குமென்று இவன் நினைத்துக் கொண்டான்.

“வெளிய வாடி. காச தர வக்கில்ல உள்ள ஒக்காந்துகிட்டு வாய்விடுற” தடியன் கத்தினான்.

“செவனேன்னு இரேன்” அந்த பெண்மணி உள்ளே பார்த்து சொல்லிவிட்டு, திரும்பி தடியனைப் பார்த்து, “அவ தெரியாம பேசிட்டானே” என்று பாந்துவமாக சொன்னாள்.

“அண்ணே நொண்ணேனு. பத்துதேதிக்கு வட்டிய கொடுக்குறேன்னு இளிச்ச. இப்ப தேதி என்ன?”

“கொடுத்துறன்னே. பெரியவ பிரசவத்துக்கு வந்துட்டா”

“அதான் சின்னவ வாய்விடுறாளே… “

அதன்பின் அவன் இன்னும் ஆபாசமாக கத்திவிட்டு சென்றான். இவன் மட்டும் அங்கேயே நின்றுகொண்டிருந்தான். பூங்காவில் இவனை கடந்து சென்ற யாரும் அங்கே அந்த வீடு இருந்ததைப் பற்றியோ அங்கிருந்து சப்தம் வந்ததைப் பற்றியோ அலட்டிக்கொண்ட மாதிரி தெரியவில்லை. சிறிது நேரத்தில் தடியன் அங்கிருந்து நகர்ந்தான். அந்த பெண்மணி கண்கலங்க வாசலிலேயே நின்றுக்கொண்டிருந்தாள். இவனுடைய மொபைலில் அலாரம் அடித்தது. அலுவலகத்திற்கான நேரம். அங்கிருந்து கிளம்பினான்.

அன்று முழுக்க மனம் லேசாக இல்லை. அவனுள் ஏதேதோ கேள்விகள். மிஞ்சிபோனால் அவர்கள் எவ்வளவு கடன் வாங்கி இருக்க முடியும்? அதற்காக எவ்வளவு பேச்சு வாங்க வேண்டி இருக்கிறது! இந்த கட்டமைப்பே தவறாக இருக்கிறதே? இதை எப்படி சரி செய்வது? இதே சிந்தனை தான் நாள் முழுதும். அதனால் அவனால் எந்த வேலையிலும் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை. ஆனாலும் சம்பரதாயமாக ஏழு மணி வரை அலுவலகத்தில் இருந்துவிட்டு திரும்பி வீட்டிற்கு வர ஒன்பது மணி ஆகிவிட்டது. கனவில் அந்த தடியனின் குரல் நாராசமாக ஒலித்ததால் இரவில் சரியாக தூக்கம் வரவில்லை. அதனால் காலையில் எழ சற்றுத் தாமதாகிவிட்டது. வேகவேகமாக ஸ்போர்ட்ஸ் ஷூவை எடுத்து மாட்டினான்.

“இப்ப போற? நேரமாச்சே!” அம்மா சொன்னாள்.

“இன்னைக்கு ஆபிஸ் லேட்டா போலாம்” அம்மாவிடம் பொய் சொல்லிவிட்டு பூங்கா நோக்கி நடந்தான். அந்த தடியன் மீண்டும் வந்து தொந்தரவு செய்துகொண்டிருப்பானோ என்று எண்ணிக் கொண்டே நடந்ததால் தெருக்களைப் பற்றிய எந்த சிந்தனையும் வரவில்லை.

பூங்காவை ஒட்டியிருந்த அந்த ஒத்தையடிப் பாதையின் முன்னே இருசக்கர வாகனமொன்று நின்றிருந்தது. அது தடியனின் வண்டியாக தான் இருக்கும் என்று அவனால் யூகிக்க முடிந்தது. அவன் நினைத்தது போலவே, அவன் பூங்காவில் நுழைந்து இடது மதில் சென்று நின்றதும், தடியனின் குரல் கேட்டது.

“எந்த போலிஸ்ட போவ. எல்லாம் போலீஸ்க்கும் பைசல் பண்ணிட்டுதான் தொழில் பண்றோம்”

இவன் இடைவெளியில் பார்த்தான். வாசலில் ஒரு பெண் நின்றுகொண்டிருந்தாள். அந்த பெண்ணுக்கு இருபத்தைந்து வயது இருக்கலாம். நேற்று உள்ளே இருந்து பேசிய பெண் இவளாகதான் இருக்கக்கூடும் என்று எண்ணினான். அவ்வளவு பிரச்சனையிலும் அவள் முகம் சாந்தமாக இருந்தது. இவர்களின் பிரச்சனையோடு ஒப்பிடுகையில் தன் பிரச்சனை எல்லாம் ஒன்றுமே இல்லையே! இவ்வளவு தைரியமாக பிரச்சனையை சமாளிக்க முயல்கிறாளே! அவன் அவளை ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டே இருந்தான். யாரோ தன்னைப் பார்ப்பதை உணர்ந்த அவள் பூங்காவை நிமிந்து பார்த்தாள். இவன் விருட்டென்று நகர்ந்து பூங்காவை சுற்றத் தொடங்கினான். பூங்காவின் வலது புறத்தில் ஒருவன் தலைகீழாக நின்று யோகா செய்துகொண்டிருந்தான். பூங்காவின் நடுவே இரண்டு வயதானவர்கள் அமர்ந்து இந்திய பொருளாதாரத்தின் போக்கைப் பற்றி சப்தமாக பேசிக் கொண்டிருந்தனர். எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டே இவன் அடுத்தச் சுற்று இடது மதிலை அடைந்தபோது அந்த பெண் வாசலில் இல்லை. வீட்டுக் கதவு உள்ளே தாளிடப்பட்டிருந்தது.

இப்போது தடியன் மாடியில் நின்றுகொண்டிருந்தான். மாடியிலும் வரிசையாக மூன்று வீடுகள் இருந்தன. நடுவீட்டின் வாசலில் நின்ற தடியன் அந்த வீட்டிலிருந்த பெண்ணிடம், “உன் புருஷன் ரொம்ப பேசுறான். என்னைக்காவது போட்டு பொலக்க போறேன்” என்று மிரட்டினான்.  மிகவும் மெலிந்திருந்த அந்த பெண் பேசமுடியாமல் பேசினாள்.

“அவரு நிதானம் இல்லாம இருக்காருங்க….”

“காலேலயே ஊத்திக்க தெரியுது இல்ல. வட்டிய கொடுக்க என்ன குறைச்சல்!”

இவன் மீண்டும் கீழ் வீட்டைப் பார்த்தான். திறந்திருந்த ஜன்னலின் வழியே அந்த பெண்ணின் குரல் மட்டும் கேட்டது.

“அசிங்கமா இருக்குமா… தினைக்கும் காலைல” அவளால் பேசமுடியவில்லை. விசும்பல் சப்தம் மட்டும் கேட்டது. அவனால் மேற்கொண்டு அங்கே நிற்க முடியவில்லை. அவன் பூங்கா வாசலின் வெளியே வந்து நின்றபோது, அந்த தடியன் தன் இருசக்கர வாகனம் அருகே வந்து நின்றான். திரும்பி இவனைப் பார்த்தான். அவனுக்கு நாற்பது வயதுக்கு மேல் இருக்கும். தொப்பை வீங்கி வெடிப்பது போல் இருந்தது. இவனும் ஒரு நொடி தடியனைப் பார்த்தான். ஓடி சென்று அவன் மேல் பாய்ந்து கீழே தள்ள வேண்டும்போல் இருந்தது. அவ்வளவு பலம் தனக்கு இல்லை. அந்த தடியனை ஏதாவது செய்ய வேண்டும். போலிசிடம் போகலாம். ஒருவேளை அந்த தடியன் சொன்னது போல் அவனுக்கு போலீசில் ஆட்கள் இருந்தால் ஒரு பிரயோஜனமும் இல்லை. அவர்கள் தன்னை காட்டிக் கொடுத்து விட்டால், தடியன் ஆள் வைத்து தன்னை அடித்துவிட்டால் என்ன செய்வது? இது போன்ற ஆட்கள் கொலை கூட செய்வார்கள். இன்னொருவருக்கு உதவி செய்ய போய் தனக்கு உபத்திரத்தை தேடிக் கொள்வது புத்திசாலித்தனமில்லை. ஆனால் இப்படி கோழையாக சுயநலவாதியாக இருப்பது வெட்கப்படவேண்டிய செயல். நாமும் மற்றவர்களைப் போல் சராசரி ஆளாக இருப்பது எவ்வளவு அபத்தம். ‘வேடிக்கை மனிதரைப் போலே வீழ்வேனென்று நினைத்தாயோ’ மனதில் ஒரு குரல் கேட்டது. அவன் கோபகமாக தடியனை பார்த்தான்.  தடியன் திரும்பி அந்த பெண்ணின் வீட்டை பார்த்து துப்பிவிட்டு, வண்டியை எடுத்துக் கொண்டு நகர்ந்தான். இவன் மனமெல்லாம் ஆக்ரோசம் ஆக்கிரமித்துக் கொண்டது.

சாப்பாடு இறங்கவில்லை. அருகில் அமர்ந்திருந்தவர்கள் சாப்பிட்டுவிட்டு வேலையை பார்க்க சென்றுவிட்டனர். மதியம் இரண்டிலிருந்து இரண்டரை வரை தான் சாப்பாட்டு நேரம். சாப்பாடு நேரம் முடிவதற்கு முன்பு இருக்கையில் இருக்க வேண்டும். இதுவும் பொதுமேலாளரின் உத்தரவு தான். கண்காணிப்பு கேமரா மூலம் எல்லாவற்றையும் அவர் கண்காணித்துக் கொண்டே இருப்பார். மனசாட்சிக்கு பயப்படாதவர்கள் கூட கண்காணிப்பு கேமாரவிற்கு பயந்தனர். மணி இரண்டரையை தொட்டுவிட்டது. இவன் மட்டும் சாப்பிடாமல் சாப்பாட்டு டப்பாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.

என்ன செய்யலாம்? தன்னை தானே மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டான். கையில் கொஞ்சம் காசு இருக்கிறது. நேரடியாக அவர்களின் வீட்டின் கதவைத்தட்டி அந்த  பெண்ணிடம் போய் கொடுத்துவிடலாமா! இல்லை. அவள் தவறாக நினைத்துவிடக் கூடும். அல்லது அப்பாவுக்கு தெரிந்த யாரவது பார்த்து அப்பாவிடம் சொல்லிவிட்டாலும் பிரச்சனை. ஆனாலும் அவளுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும். தடியனின் பிடியிலிருந்து அந்த குடும்பத்தை விடுவித்தால் கூட போதும்.

“சாப்பிடாம அப்படி என்ன யோசனை?” கோபிகிருஷ்ணன் சார் கேட்டுக்கொண்டே தன் டிபன் பாக்ஸில் இருந்த தண்ணீரை வடித்து, டப்பாவை மேஜை மீது வைத்தார்.

கோபிகிருஷ்ணன் அவனுடைய அலுவகத்தின் சீனியர் கிளார்க். பொது மேலாளர் உட்பட எல்லோரும் அவரை கோபிகிருஷ்ணன் சார் என்றே அழைத்தனர். வயதில் மூத்த அவர் தன்னுடைய மனக்குழப்பத்தை போக்கக் கூடும் என்று எண்ணினான். காலையில் நடந்ததை சொன்னான்.

“தம்பி, கடன் கொடுத்தவன், அவனுக்கு அவன் காசு வேணும். எப்படி பேசுனா காசு கிடைக்குமோ அப்படி பேசுறான்” என்றார்.

“அவன் பேசுறது தப்புசார்”

“நாம என்ன பண்ணமுடியும்டா கண்ணா. அவன பத்தி தெரிஞ்சுதான் கடன் வாங்கிருப்பாங்க. நம்மால முடிஞ்சா ஏதாவது உதவலாம். அவ்ளோதான். அதுவும் எவ்ளோ பேருக்கு பண்ணமுடியும்? எதுக்கு அடுத்தவங்க லைப் பத்தியெல்லாம் யோசிச்சு குழப்பிக்கிற? சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ. இந்த மாதிரி சிந்தனைலாம் வராது”, அவர் கண் சிமிட்டினார். இவனுக்கு கோபமாக வந்தது. மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.

“சீக்கிரம் சீட்டுக்கு போ. பெரியவர் கேமரால பாப்பாரு!” சொல்லிவிட்டு அவர் டிபன் டப்பாவை மூடி பைக்குள் போட்டுக்கொண்டு நகர்ந்தார்.

கேமரா என்றதும் இவனுக்கு பொறித் தட்டியது. அந்த தடியனை கேமராவில் பதிவு செய்தால்? சாலையில் வழிப்பறி செய்த ஒருவனை யாரோ ஒருவர் ரகசியமாக வீடியோ எடுத்து இணையத்தில் போட்டு, அது பரவி போலிஸ் அவனை கைது செய்தது நினைவு வந்தது. ஆம் நாமும் அதை செய்யலாம். அந்த புடவையின் பின் நின்று அந்த தடியன் அவர்களை மிரட்டுவதை மொபைல் கேமராவில் பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றிவிட்டால் போதும். யார் யாரோ அந்த தடியனுக்கு எதிராக குரல் கொடுத்தால் எந்த போலிசாக இருந்தாலும் அவனை கைது செய்துதான் ஆக வேண்டும். அந்த குடும்பத்திற்கும் நல்லது நடக்கும். ரயில் பயணம் முழுக்க இந்த திட்டமிடல் தான். வீட்டிற்குள் நுழைந்த போது அம்மா தன் பையில் அவனுடைய துணிகளை அடுக்கி வைத்துக்கொண்டிருப்பதை கவனித்த போதுதான் நினைவு வந்தது, இரவு திருச்சிக்கு செல்லவேண்டும்.

“உன் துணியையும் என்  பேக்லயே வச்சிக்குறேன்” அம்மா சொன்னாள்.

“கொஞ்சம் சீக்கிரம் கிளம்பி வர வேண்டிதானா…!” அப்பா சொல்லிவிட்டு அவன் பதிலை எதிர்ப்பார்க்காமல் அடுத்த அறைக்கு சென்றார்.

வெள்ளிக்கிழமை இரவு ரயில் என்பது கடந்த இரண்டு நாட்கள் முன்புவரை அரைகுறையாக நினைவிருந்தது. அடுத்த வெள்ளிக்கிழமையாக இருந்திருக்கக் கூடாதா! தனக்கு மறுநாள் காலை முக்கியமான வேலை இருக்கிறது என்பதை எப்படி அம்மாவிடம் சொல்வது?

“ஞாயிற்று கிழமை தான மேரேஜ்! நான் நாளைக்கு கிளம்பி வரவா?”

“நீலாம் வரணும்னு தான மாமா லீவ் நாள்ல வைக்குது…. மாமாக்கு ஆம்பள புள்ளையா இருக்குது? நீதான் முன்னாடி நின்னு செய்யனும்” அம்மா சந்தோசம் பொங்கச் சொன்னாள். அவள் நல்ல மனநிலையில் இருந்தாள். அதனால் அவன் மேற்கொண்டும் எதுவும் பேசி அவளை கஷ்டப் படுத்த விரும்பவில்லை.

இல்லையேல், “பொண்ண தான் கட்டிக்க மாட்டேன்னு சொல்லிட்ட…” என்றெல்லாம் சொல்லி கண்ணை கசக்க ஆரம்பித்துவிடுவாள். அவளை சமாளித்தாலும், “அப்படி என்ன வேலை சாருக்கு?” என்று கேட்டுக் கொண்டு அப்பா வந்துவிடுவார். அவரை தன்னால் சமாளிக்க முடியாது.  அமைதியாக அவர்களோடு சென்றான்.

சனி ஞாயிறு முழுக்க மண்டபத்திலேயே கழிந்தது. ஆனால் அம்மா சொன்னது போலெல்லாம் இவன் எதையும் முன்னின்று செய்யவில்லை. தன் போக்கில் ஒரு மூலையில் அமர்ந்திருந்தான். எதிலும் ஆர்வமில்லை. எப்போது இந்த இரண்டுநாட்கள் கடந்து போகும் என்பதே அவனுடைய பெரிய பிரச்சனையாக இருந்தது. சிறுவயது முதல், எப்போது வார விடுமுறை வரும் என்ற எதிர்பார்ப்போடும், அது வந்தால் சீக்கிரம் முடிந்துவிடக் கூடாது என்ற ஆசையோடும்தான் அவனுடைய பள்ளி கல்லூரி நாட்கள் கழிந்தன. அதுவும் இந்த அலுவலகத்தில் சேர்ந்ததிலிருந்து எப்போது சனிக்கிழமை வருமென்று எதிர்பார்த்துதான் அவன் ஐந்து நாட்களை கடத்துவான். முதல் முறையாக அவன் எப்போது இந்த சனி ஞாயிறு கடந்து போகும் என்று எதிர்பார்த்து காத்திருந்தான். இடையிடையே வீடியோவை எடுத்தப் பின் அதை யாரிடமெல்லாம், எப்படியெல்லாம் கொண்டு சேர்க்கவேண்டும் என்று யோசித்தான். மிகவும் மெதுவாக அந்த ஞாயிற்றுக் கிழமை முடிந்தது. திங்கள் காலை வீட்டிற்குள் நுழையும் போது மணி ஐந்தரை.

“கொஞ்ச நேரம் தூங்கு… ஒரு நாள் லேட்டா போன ஒன்னும் ஆகாது ” அம்மா சொன்னாள்.

இவன் எதுவும் பேசாமல், துரிதமாக ஆடையை மாற்றிக் கொண்டு பூங்காவிற்கு செல்ல தயாரானான். அந்த நாள் அவனுக்கு எவ்வளவு முக்கியம் என்பது அவன் அம்மாவிற்கு தெரியாததால், அவள் அவனை ஆச்சர்யமாக பார்த்ததை அவன் பொருட்படுத்தவில்லை. தன் கைபேசியில் சார்ஜ் இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொண்டான். இன்றோடு அந்த தடியனின் அட்டூழியம் அடங்கிவிடும், அதை தான் சாத்தியமாக்கப் போகிறோம் என்று எண்ணும்போது அவனுக்கு பெருமையாக இருந்தது. எல்லாம் சரியாக நடந்தபின்பு வேண்டுமானால் அந்த பெண்ணிடம் மட்டும் தான் செய்த இந்த காரியத்தை சொல்லிக் கொள்ளலாம். அது தற்பெருமை அடிப்பதைப் போல் ஆகாதா? ஆகாது. ஆகாது. அவளுக்கு மேற்கொண்டு உதவும் பொருட்டே உண்மையை சொன்னதாகவும், அவளுக்கு தான் எந்த உதவியும் செய்ய தயாராக இருப்பதாகவும் அவளிடம் சொல்லலாம். அவள் தன்னை நம்பக் கூடும்.

பூங்காவை அடைந்த அவன், அருகே நின்றிருந்த தடியனின் வண்டியை பார்த்ததும் தனக்குள் சிரித்துக் கொண்டான். ‘ஆம் நான் ஒரு ஆபத்பாந்தவன்.’

பூங்காவின் இடது மதிலை நெருங்கிய போது, எந்த சப்தமும் வராதது ஆச்சர்யம் அளித்தது. கம்பியில் துணிகளும் இல்லை. அந்த வீடு கம்பிகளின் வழியே தெளிவாக தெரிந்தது. கதவு திறந்திருந்தது. ஒரு வயதான பெண் வீட்டை கழுவி விட்டுக் கொண்டிருந்தாள். அந்த அறையில் ஆங்காங்கே புகை அண்டி சுவரெல்லாம் கருப்பாக இருந்தது. அவன் சிந்தனை வழக்கத்தை விட வேகமெடுத்தது. அவனால் அங்கு நடந்திருப்பதை யூகிக்க முடிந்தது. அவன்  அப்படியே ஸ்தம்பித்து நின்றதால், அந்த வயதான பெண்மணி அவனை நிமிர்ந்து பார்த்துக் கொண்டிருந்ததை அவன் கவனிக்கவில்லை.

“என்ன கண்ணு பாக்குற?” அந்த பெண் இவனைக் கேட்டாள்.

“இங்க இருந்தவங்க…. ஒரு அம்மா” அவனால் கேள்வியை முடிக்க முடியவில்லை.

“ஆத்தாளும் பொண்ணும் கொழுத்திகிச்சுங்க… ” அவள் செய்தி வாசிப்பது போல் எந்த உணர்வுமின்றி பதில் சொன்னாள்.

இவனால் பதில் பேசமுடியவில்லை. அப்படியே  நின்றான். அவள் தொடர்ந்து தன் வேலையை கவனித்தாள்

“எப்ப… ” அந்த வீட்டை பார்த்தவாறே கேட்டான்.

நிமிர்ந்து பார்த்த அவள். “வெள்ளிகிழமை. ஏன் உனக்கு தெரிஞ்சவங்களா?” என்றாள்.

இவன் அமைதியாக இருந்தான். இவனிடம் பேசுவது வீண் என்று அந்த பெண்மணி நினைத்திருக்கக் கூடும். அவள்  கதவை இழுத்து தாளிட்டு விட்டு, “அடுத்த குடி வரதுதான் கஷ்டம்” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு நகர்ந்தாள். அங்கே அதுவரை இருந்தவர்கள் இல்லாமல் போனதைப் பற்றி அந்த வயதான பெண் அலட்டிக் கொள்ளாதது அவன் மனதை உறுத்தியது. உண்மையில் அங்கே யாருக்கும் போனவர்களைப் பற்றி எந்த கவலையும் இருப்பதாக அவனுக்குத் தெரியவில்லை. வாசலில் நால்வரும் சளைக்காமல் கேரம் போர்ட் விளையாடிக் கொண்டிருந்தனர்.  பூங்காவின் வலது புறத்தில் சிரசாசன நிலையிலிருந்த அந்த ஆசாமி பக்கத்தில், இன்னொருவன் தலைகீழாக நிற்க முயற்சி செய்துகொண்டிருந்தான். வயதான நண்பர்கள் இருவரும் சப்தமாக பேசிக் கொண்டே இருந்தார்கள். அந்த அப்பாவும் பெண்ணும் பூங்காவை சுற்றி வர, மகளின் கவனம் முழுக்க மொபைலில் இருந்தது.  இவன் மீண்டும் அந்த வீட்டைப் பார்த்தான். பெரிய பூட்டு ஒன்று தொங்கியது.

அந்த தடியன் அந்த குடும்பத்திற்கு கொடுத்த அழுத்தத்தை கண்ணால் கண்டது தான் மட்டுமே. தான் முதல் நாளே ஏதாவது செய்திருக்க வேண்டும். தவறவிட்டு விட்டோம். அவன் குற்ற உணர்ச்சி அவனை அழுத்தியது. இனியாவது எழ வேண்டும். தடியனுக்கு தண்டனை வாங்கித் தரவேண்டும். அவனுக்கு தடியனின் மீது கோபம் அதிகமானபோது, தடியனின் குரல் மாடியில் இருந்து வந்தது. நிமிர்ந்து பார்த்தான்.

“காச கேட்டா எகத்தாளமா” தடியன் மிகவும் கோபமாக அந்த மாடிவீட்டுக் காரனின் சட்டையை கோர்த்து பிடித்து கன்னத்தில் அடித்தான். அவன் சுருண்டு விழுந்தான். மெலிந்த அந்த பெண் தடியனின் காலை பிடித்துக் கொண்டு கதறினாள். தடியன் அவளையும் அவள் கணவனையும் மிதித்தான். அதே கோபத்தில் திரும்பிய தடியன், பூங்காவிற்குள் நின்றுகொண்டிருந்த இவனை ஒருமுறை தற்செயலாக பார்த்தான். தடியனின் வெறிகொண்ட முகத்தைப் பார்க்கும் போது, இவனுக்கு உடம்பு நடுங்கியது. பார்வையை திருப்பிக்கொண்டு நகர்ந்தான்.

‘சொங்கிப் பயலே’ ‘எதுக்கு அடுத்தவங்க லைப் பத்தியெல்லாம் யோசிச்சு குழப்பிக்கிற’ ‘ரொம்ப யோசிக்காதிங்க. ரிலாக்ஸ்’ ‘வேடிக்கை மனிதரைப் போல் வீழ்வேனென்று நினைத்தாயோ’

‘சோற்றுக் கற்றாளைச் சாறு கால் வலியை நீக்கும்’ என்று தனக்குதானே இரண்டு மூன்று முறை மனதினுள் சொல்லிக் கொண்டே பூங்காவை சுற்றத் தொடங்கினான்.

பிறழ்ந்த இரவுகள்- நெடுங்கதை

கடந்த ஆறு மாதங்களாக இங்கே வந்துக் கொண்டிருக்கிறேன். என் மனைவி தான் என்னை முதன்முதலில் இங்கே அழைத்து வந்தாள். நான் செய்த பாவம் என் மனைவிக்கு தெரியும். அவள் என்னை மன்னித்துவிட்டதாக சொன்னாள். உண்மையில், இந்த விஷயத்தில் மன்னிக்கும் உரிமை அவளிடம் இல்லை. ஒருவேளை என்னை தண்டிப்பதனால் எந்தப் பயனும் இல்லை என்பதால் அவள் அப்படி சொல்லியிருக்கலாம்.

“நீங்க இதை மறந்துதான் ஆகனும்” டாக்டர் என்னிடம் சொன்னார். என்னால் மறக்கமுடியாது என்பது அவருக்குத் தெரியும். நான் எதுவும் பேசாமல் ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன். தோட்டத்தில், மரத்தடியில் அமர்ந்திருந்த ஒருவர் தன் கையில் ஒரு புத்தகத்தை வைத்து படித்துக் கொண்டிருந்தார். ஒரு லத்தின் அமெரிக்க சிறுகதை தொகுப்பு அது. அவரை நான் ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவர் திடிரென்று அந்த புத்தகத்தை தன் முழு பலத்தை திரட்டி கிழித்து தன் தலையை சுற்றித் தூக்கி எறிந்தார்.  பின்பு “குப்பை, எல்லாம் குப்பை” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து ஓடினார்.

நானும் என்னை மறந்து “குப்பை” என்றேன். டாக்டரின் குரல் என்னை மீண்டும் அறையினுள் அழைத்து வந்தது.

“சட்டத்துக்கு தான் குற்றவாளி நிரபராதி எல்லாம். எங்களுக்கு நீங்க ஒரு பேசன்ட்”

பேசன்ட். நோயாளி. என்னை மனநோயாளி என்கிறார் டாக்டர். ஆம். அப்படிதான். வாழ்க்கை சரியான பாதையில் தான் நகர்ந்துக் கொண்டிருந்தது, மூன்று வருடங்களுக்கு முன்பு வரை.

“தூ நைட் ஷிப்ட் மே ஆஜா” திடீரென்று ஒருநாள் என் மேலதிகாரி சொன்னார். பொதுவாக ‘நைட் ஷிப்ட்’ யாரும் வரமாட்டார்கள். எல்லாம் திருமணம் ஆனவர்கள். இத்தனைக்கும் என்னைவிட வயதில் சிறியவர்கள்.

அங்கெல்லாம் அப்படித்தான். மிக இளம் வயதிலேயே திருமணம் செய்துக் கொள்வார்கள். ராத்திரியில் மட்டும்தான் பெண்டாளா வேண்டுமென்று யாரோ சொல்லி வைத்துவிட்டு சென்ற எழுதப்படாத அந்தக் கவைக்குதவாத சட்டத்தைக் கண்மூடித்தனமாக பின்பற்றுகிற நாட்டில் அவர்கள் ‘நைட் ஷிப்ட்’ வர மாட்டேனென்று சொன்னது ஒன்றும் ஆச்சரியமான விடயமில்லை.

எனக்கு எந்த ஷிப்டாக இருந்தாலும் பிரச்சனையில்லை. இரவில் எந்த வேலையும் இருக்காது. கடமைக்கென்று ஒரு பொறியாளர் இருக்க வேண்டும். எங்காவது ஒன்றிரண்டு எந்திரங்கள் ஓடும். அதில் ஏதாவது பழுதுவந்தால் அதை பார்ப்பதற்கு ஒரு பொறியாளர் வேண்டும். அதாவது வேடிக்கை பார்ப்பதற்கு ஒரு பொறியாளர் வேண்டும்.

எனக்குப் பழுதெல்லாம் பார்க்கத் தெரியாது. ஆனால் இருபத்தினாலு மணி நேரமும் யாரோ ஒரு பலிகடா தொழிற்சாலையில் இருக்கவேண்டும். நான் ராத்திரி நேரத்து பலிகடா. “ராத் கா பலிபக்ரா”

கம்ப்ரசர் அறையிலிருந்து வழக்கம்போல நாராசமான  அந்தச் சத்தம் வந்து கொண்டிருந்தது. காது ஜவ்வில் குண்டூசி குத்துகிற மாதிரி இருக்கும் அந்த கம்ப்ரசர் ஓடுகிற சப்தம். வரிசையாக நிறைய கம்ப்ரசர் ஓடிக்கொண்டே இருக்கும். வளிமண்டலக் காற்றை உறிஞ்சி அழுத்தத்தை அதிகப்படுத்தி ஒட்டு மொத்த தொழிற்சாலைக்கும் அழுத்தம் நிறைந்த காற்று வினியோகிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கும்.

அந்தக் கம்ப்ரசர் அறையின் மூலையில் இருக்கும் ஒரு சிறு கண்ணாடி அறையில் தான் என் வேலை நேரம் முழுக்கக் கரையும். அங்கு கணினி இல்லை. கணினி உபயோகப் படுத்த வேண்டுமென்றால் அங்கிருந்து நடந்து அலுவலக அறைக்கு வர வேண்டும். பெரும்பாலும் நான்  அலுவலக அறையில் இருக்கமாட்டேன்.

தொடக்கத்தில் காலை நேர வேலை செய்யும் போது அலுவலகத்தில் நிறைய பேர் இருப்பார்கள். சந்தைக் கடை மாதிரி எந்நேரமும் சப்தம் வந்துக் கொண்டே இருக்கும். அதுவும் அவர்களின் மூன்றாம் தர ஆங்கிலத்தைக் காதுகொடுத்துக் கேட்க இயலாது. தேவையில்லாமல் என்னை ‘மதராசி’ என்று சொல்லிச் சொல்லி ஏளனம் செய்வார்கள். எனக்கு ஒரே ஒரு பிரச்சனை. எனக்குக் கோபம் வந்தால் நான் சரமாரியாக ஆங்கிலம் பேசுவேன். எல்லாமே அதிகம் உபயோகிக்கப்படாத ஆங்கில வார்த்தைகள். சிறுவயதில்  பொழுதைக் கழிப்பதற்கு நான் அதிகம் படித்த ‘ஆக்ஸ்பார்ட்’ அகராதியிலிருந்து கற்றுக்கொண்ட வார்த்தைகள். ஆங்கிலேயர்கள் பெரும்பாலும் தங்கள் ஜகாவை தென்னகத்தில் வைத்திருந்ததால் தென்னாட்டுக்காரர்களுக்கு ஆங்கிலம் நன்றாக வரும், பிற மாநிலத்தாரைக் காட்டிலும். ஆனால் குஜராத்திகளுக்கு ஆங்கிலம் குதிரைக்கொம்பு. அதனால், படித்தவர்களுக்கே அதிகம் புரியாத என் ஆங்கில அறிவை குறுகிய புத்தி கொண்டவர்களிடம் வெளிக்காட்ட  முடியாது. இப்பிரச்சனைகளைத் தவிர்க்கவே நான் அலுவலக அறையில் இருப்பதை விட சைட்டிலேயே அதிக நேரம் செலவழிப்பேன்.

அதுமட்டுமின்றி எனக்கு எப்போதும் கூட்டம் பிடிக்காது. முக்தி அடைவதற்கு ஒரே வழி தனிமையென்று நம்புகிறவன் நான். தாயுமானவர் சொல்லிய மாதிரி ‘சும்மா’ இருக்கவும் ஒரு மனிதன் கற்றுக்கொள்ள வேண்டுமென்று எண்ணுகிறவன் நான். இக்காரணங்களாலே நான் கம்ப்ரசர் அறையே கதியென்றிருக்கத் தொடங்கினேன் .

அன்று கண்ணாடி அறையினுள் நுழைந்ததும் ‘நமஸ்தே சாஹிப்’, வணக்கம் வைத்தவாறே ஆபரேட்டர் அங்கிருந்து நகர்ந்தான். நான் எப்போது உள்ளே நுழைந்தாலும் அவர் அங்கிருந்து நகர்ந்து விடுவார். அது ஒரு விசித்திரமான மரியாதை. அந்த அளவுக்கு நான் என் மரியாதையைக் காப்பாற்றி வைத்திருந்தேன்..

“சாஹிப். லடிகி நம்பர் சாயியே கியா?” ஒரு நாள் சிரித்துக் கொண்டே வினவினான்.

“ஐசா மத் பூச்சோ! நீ எப்ப ஆபரேட்டர் வேலைய விட்டுட்டு, பொம்பள சப்ளை  பண்ண ஆரமிச்ச!” கோபத்தோடு கத்துகிற மாதிரி நடித்தேன் என் ‘கெத்த’ காப்பற்றிக் கொள்வதற்காக.

அன்றிலிருந்தே அவர் எனக்கு மரியாதை கொடுக்க ஆரம்பித்துவிட்டார்.  எந்நேரமும் காலாட்டிக் கொண்டு அந்த அறையிலேயே அமர்ந்து மொபைலில்  வீடியோ பார்ப்பதுதான் அவர் வேலை. நான் வந்துவிட்டால் மரியாதையாக அங்கிருந்து எழுந்து வெளியே போய்விடுவார். விசித்திரமான மரியாதை.

“நமஸ்தே நமஸ்தே” என்றவாறே கண்ணாடி அறையில் அமர்ந்தேன். டிராயரைத் திறந்து உள்ளே இருந்த அந்த தடி புத்தகத்தை எடுத்தேன். என் வாழ்க்கையில் நான் பெரும்பாலான நேரம் படிப்பதற்காகதான் செலவளிக்கிறேன், சில நேரங்களில் புத்தகங்களை, சில நேரங்களில் மனிதர்களை. புத்தகத்தின் அட்டையில் சிரித்துக் கொண்டிருந்தார், மாபசான். டெல்லி சென்றிருந்தபோது வாங்கிய புத்தகம் அது.

“A complete Collection of Guy De Maupassant Short Stories” முதல் இரண்டு பக்கங்களைத் திருப்பி அட்டவணைக்கு சென்றேன். ‘இம்பொலைட் செக்ஸ்’-772 ஆம் பக்கம். ஏனோ தெரியவில்லை, மனம் எதையோ நினைத்துக்கொண்டு அந்தக் கதையை நோக்கிச்சென்றது. என் மனம் எதிர்பார்த்ததைப் போல் அந்தக் கதை இல்லை. படிக்கப் பிடிக்கவில்லை.  எதிர்பார்ப்புகள் ஏமாற்றமளிக்குமென்பது உண்மை தான் போல!  புத்தகத்தை அது இருக்க வேண்டிய இடத்திலேயே வைத்துவிட்டு, வேறு ஏதாவது புத்தகம் கிடைக்குமாவென்று என் பையைத் தேடினேன். ஒரு சிட்னி செல்டன் புத்தகம் கிட்டியது. எப்போதோ என் நண்பன் எனக்குக் கொடுத்த பழைய புத்தகம் அது.

நான் பொதுவாக மேற்கத்திய எழுத்தாளர்களை அதிகம் படிப்பதில்லை. விசித்திரமாக இருப்பதில் ஒரு ‘கெத்’ இருக்கு என்றே நினைக்கிறேன். குப்பை மாதிரி எழுதிக்குவிக்கும் ஆங்கில எழுத்தாளர்கள் மீதெனக்கு ஆர்வம் குறைவு. ஆனாலும் ஒருநாள் சிட்னிசெல்டன் படித்தால்  ஒன்றும் குடி மூழ்கிடாது. கிழிந்த அந்தப் பழைய புத்தகத்தில், மூன்றாவது பக்கத்திலேயே நாயகியின் ஆடை களையப்பட்டது. எனக்கு என்னென்னமோ எண்ணங்கள் தோன்றின. உடம்பெல்லாம் ஏதோ செய்தது. எனக்கு கவர்ச்சி பிடிக்கும், விரசம்பிடிக்காது.

மேலாடை  இல்லாமல் உக்ரைனில் போராட்டம் நடத்திய பெண்ணியவாதி ஒருத்தியைக்கண்டு இந்திய அரசு துடிக்கிறது. அவள் கூறும் காரணங்களைக் காதுகொடுத்துக் கேளாமல் அவளைக்கைது செய்ய எத்தனிக்கிறது. ஆனால் முகத்தைச் சுழிக்கவைக்குற அளவிற்குத் தன் செழிப்புகளைக் காட்டுகிற ஒரு நடிகைக்கு தேசியவிருது கொடுக்கிறது. ஒட்டுமொத்த இந்தியாவும் கைதட்டுகிறது. பாவம் இந்தியர்களுக்கு கவர்ச்சிக்கும் விரசத்திற்கும் வித்தியாசம் தெரியாது. அந்தப் புத்தகத்திலிருந்தது விரசம். அது எனக்குப் பிடிக்க வில்லை. அந்தப் புத்தகத்தை அங்கேயே போட்டுவிட்டு வெளியேவந்தேன்.

வெளியில் அமர்ந்து ஆபரேட்டர் மொபைலில் வீடியோ பார்த்துக் கொண்டிருந்தான். அவன் முகபாவனைகள் பார்க்கச் சகிக்கவில்லை. அப்படியே காறி உமிழலாமென்று இருந்தது. அந்த ஆளுக்கு ஐம்பது வயதிருக்கும். கல்யாணமாகி 30 வருடங்களுக்கு மேலாகிறது. ஒன்பது வயதில் ஒரு பேத்தி வேறு உண்டு. ஆனால் இன்னும் மொபைலில் ‘போர்னோ’ படம் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

‘போர்னோ’ படம் பார்ப்பதைப் பற்றி நான் குறை சொல்லவில்லை. ஆனால் வாழ்க்கைக்கு வடிகாலாக இருக்க வேண்டிய விடயங்கள் வாழ்க்கையாகிப் போவதைத்தான் நான் எதிர்க்கிறேன், நிஜ வாழ்க்கையை நிழல் உருவங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கத் தொடங்குவதை ஆதரிப்பதைதான் நான் வெறுக்கிறேன். மனிதனுடைய தேவைகளும் ஆசைகளும் இச்சைகளும் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் அதைக் கட்டுப்படுத்த மறந்துவிட்டு நிழல் உருவங்களுக்கு அடிமையாகிப் போவது மடத்தனம்.

என்னை நிமிர்ந்து பார்த்து, “சாஹிப், ஆப்கே பாஸ் குச் வீடியோ ஹே” என்று வினவினான், நிழல் உருவங்களால் ஆக்கிரமிக்கப் பட்ட அவன்.

கிழவன் பார்த்த வரை பத்தாதென்று என்னிடம் வேறு வீடியோ கேட்கிறான்.

“கியா சாஹிப்?”

“குச் நஹி, மே ஜாரா ஹூன்”

திரும்பிப் பார்க்காமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன். பொதுவாக பொழுது போகாத பல சமயங்களில் நான் தொழிற்சாலைக்குள்ளேயேதான் சுற்றித் திரிவேன். அன்று ஏதோ ஒரு சொல்ல முடியாத ஏக்கம். என் உடம்போ மனசோ, என் கட்டுப்பாட்டில் இல்லை.

அன்று ஹோலி பண்டிகை என்பதால் யாருமே தொழிற் சாலையில் இல்லை. ரெண்டு சொறி நாய்கள் புணர்ந்துகொண்டிருந்தன. அதை ரெண்டு செக்யூரிட்டி கார்டுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். எதன்மேலும் பற்றின்றி வீதியில் இறங்கி நடந்தேன்.

மணி ஒன்றரை இருக்கும். நிசப்தம் வழிந்தோடிய தெருக்கள். தவளை கத்துகிற சப்தம் மட்டும் கேட்டது. சாலையின் இரு புறமும் வெறும் மரங்கள். நான் வேலை செய்யும் தொழிற்சாலையில் இருந்து வலது புறம் போனால் ‘சுவாளி’ என்று ஒரு பீச் இருப்பதாக கேள்விபட்டிருக்கிறேன். அது வரைக்கும் பார்த்ததில்லை. ரொம்ப தூரம் போக வேண்டுமென்று தெரியும். எனக்கு ஒரு வேலையுமில்லை. காலையில் ஏழு மணிக்கு அவுட் பன்ச் அடிக்க வேண்டும். அதற்கு முன்பாக கிளம்பினால் லாஸ் ஆப் பே. எவ்வளவு நேரம் அதிகமாக வேலை செய்தாலும் நிர்வாகம் கண்டுக் கொள்ளாது. ஆனால் ஒரு நிமிடம் சீக்கிரம் கிளம்பினாலும் ஒரு நாள் சம்பளம் போய்விடும், இந்தியாவிலேயே பெரிய நிர்வாகம். கேட்க நாதியில்லை. ஏழு மணி வரை நேரத்தை ஓட்ட வேண்டும் என்பதற்காக நான் சுவாளி நோக்கி நடந்தேன்.

அப்போது தவளை சப்தத்தோடு சேர்ந்து வேறொரு சப்தமும் கேட்டது, நான் தொடர்ந்து நடக்க, சப்தம் அதிகமாகக் கேட்டது. அங்கு நிரம்பியிருந்த நிசப்ததைக் கலைத்தது அருகிலிருந்த புதரினுள்ளிலிருந்து வந்த அந்தப் பெண்ணின் பயங்கரமான அலறல். ஒரு நிமிடம் திகைத்து நின்று, அந்த அலறலை ரசித்தேன். அதில் ஏதோ ஒரு சுகம், சொர்க்கம் பொதிந்திருந்தது. பின் சுதாரித்துக் கொண்டு, புதரை நோக்கி ஓடினேன். முன்னே நின்றவன்  இரண்டு கைகளையும் விரித்து என்னை அப்படியே தடுக்க வந்தான். எனக்கு சண்டை போடத் தெரியாது, இருந்தாலும் தில்லாகக் கத்திக்கொண்டு அவனை நோக்கி ஓடினேன். உடம்பில் அடிப்பதைவிட ஒருவன்  மனதில் அடிக்க வேண்டும். நான் போட்ட சத்தத்திலேயே அவன் பயந்துவிட்டான். அவன் உடம்பு நடுங்க ஆரம்பித்து விட்டது.

அதைப் பார்த்ததும் நான் இன்னும் அதிகமாக கத்தினேன்.

“பஹேன் சோத்”

“க்யா கர்ரஹா ஹே து… கோனே அந்தர்… லXX” கெட்டவார்த்தைகள் சரமாரியாக என் வாயிலிருந்து உதிர்ந்து கொண்டிருந்தன. பொதுவாக நான், மூன்று மொழிகளில் பாரபட்சமின்றி கெட்ட வார்த்தை பேசுவேன். எல்லா மொழிகளிலும் வகை வகையான கெட்ட வார்த்தைகள் உண்டு. ஆனால் உடம்பின் உறுப்புகளைக் குறிக்கும் வார்த்தைகள் எப்படி கெட்ட வார்த்தையானதென்று  இன்னும் புரியவில்லை. பல நாட்கள் தூங்காமல் கெட்ட வார்த்தைகள் ஆராய்ச்சி செய்திருக்கிறேன்.  இந்திய மொழிகளில் பெரும்பாலான கெட்டவார்த்தைகள் உடல் சம்பந்தப் பட்டது. பெரும்பாலும் எல்லாக் கெட்டவார்த்தைகளும் அப்படிதான்…

தொடர்ந்து என் வார்த்தைகள் உச்ச மண்டிலத்தை அடைய அவன் அங்கிருந்து ஓடி விட்டான். புதரின் உள்ளிருந்து இருவர் வேகமாக என்னை நோக்கி ஓடி வரவும், நான் பாய்ந்து அருகில் இருந்த கூரியக் கல்லை எடுக்கவும் சரியாக இருந்தது. கல், மனிதனின் முதல் ஆயுதம். உலகிலேயே மிகக் கொடூரமான ஆயுதமும் கூட. கல்லை இறுக்கமாகப் பிடித்திருந்த என் கையைப் பார்த்ததும் இருவரும் ஓடத் தொடங்கினார்.

நான் அவர்களைத் துரத்திக் கொண்டே ஓடினேன். அதில் ஒருவன் கால் தடுக்கி கீழே விழுந்து, முட்டி சிராய்ந்து, மீண்டும் எழுந்து ரத்தம் சொட்டச் சொட்ட ஓடினான். ஒரு விடயம் தெளிவாகப் புரிந்தது. அவர்கள் அதற்கு முன் எந்தத் தவறும் செய்யாத விடலைகள். அவர்களுக்கு இருபது வயதுக்குள் தான் இருக்கும். எங்கேயோ திருட்டு சாராயம் வாங்கிக் குடித்து விட்டு, சூட்டைத் தணிக்க முடியாமல் தனியாகப் போனவளைச் சீண்டியிருக்கிறார்கள்.

நான் துரத்துவதை நிறுத்தி விட்டு, சிறிது நேரம் ஒரே இடத்தில் நின்று கெட்டவார்த்தையில் திட்டிக் கொண்டிருந்தேன். இடையிடையே சில ஆங்கில கெட்ட வார்த்தைகளையும் உதிர்த்தேன். அவர்களுக்குப் புரிந்ததா என்பதைப் பற்றிய கவலை எனக்கில்லை. கெட்ட வார்த்தை பேசுவதிலும் ஒரு சுகம் இருக்கதான் செய்கிறது….

சொல்ல முடியாத அந்தச் சுகத்தில் லயித்திருந்த என்னை அந்தப் பெண்ணின் அழுகுரல் தான் மீண்டும் பூமிக்குக் கொண்டு வந்தது. புதர் நோக்கி ஓடிய போது, புல்லிலிருந்த அந்தப் பை காலில் சிக்கியது. பை முழுதும் பெண்ணின் துணிகள். ஒருவாறு நிலைமையை யூகித்துக் கொண்டு பையைக் கையில் எடுத்துக் கொண்டு அந்தப் புதர்வரை சென்றேன். வெளியில் புதர் போன்று காட்சியளித்த அந்த இடத்தின் உட் புறத்தில் புல்தரை பரந்து விரிந்திருந்தது.

அந்தப் பெண் அழுது முடிக்கும் வரை அங்கேயே அமைதியாக நின்றிருந்தேன், கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள். பின் பொறுமையாகப் பேசத் தொடங்கினேன்.

“கோனே து? கஹான் சே ஆயா?”

“சொல்லுடி. யாருடி நீ…” தொடர்ந்து பல முறை வினவியதும் அவள் சற்றே தடுமாறி பதிலளித்தாள். அவள் பேச்சில் பெரும்பாலும் மராத்தி வார்த்தைகள் கலந்திருந்தன. ஹிந்தி பேசத் திணறும்போதே, ஏதோ கிராமத்திலிருந்து வருகிறாள் எனக் கண்டுகொண்டேன்.

“இதற் க்யு ஆயா?”

அவள் அழுதுகொண்டே சொன்னது, “அம்மா செத்துட்டா… வேலை தேடி இங்க வந்தேன்… அவங்க வேலை வாங்கித் தரேன்னு சூரத்துல இருந்து இங்க கூட்டி வந்தாங்க”

அப்போது மீண்டும் உரைத்தது. அந்த இளைஞர்கள் திட்டம் போட்டு தூக்கி வந்திருக்கிறார்கள். பாவம் எத்தனை நாள் காத்திருந்தார்களோ!

“ராத்திரி நேரத்துல எவன் வேலை கொடுப்பான். உனக்கெங்க அறிவு போச்சு…”

“தங்க இடம் தரேன்னு சொன்னான். தங்கச்சி தங்கச்சின்னு சொன்னான். ஊர் பாச பேசுனான்”

தங்கச்சியாவது, அக்காவாவது… எனக்குள்ளே முனகிக் கொண்டேன்.

“உன்ன யாரும் தேடமாட்டாங்களா?”

மீண்டும் கொஞ்ச நேரம் அழுகை. “எனக்குன்னு யாரும் இல்ல. ஊர்லதான் தப்பா நடந்துக்குறாங்கனு இங்க வந்தேன். இவங்களும்… ரொம்ப நன்றி சார். என்னக் கொன்னிருந்தாக் கூட கேட்க ஆளில்லை…”

நன்றாகவே உரைத்தது, ‘கொன்னிருந்தாக் கூட கேட்க ஆளில்லை’. அந்தப் பொண்ணுடைய கதறலை நான் பொருட்படுத்தவேயில்லை. அவள் வாயை இறுக்க மூடினேன். சிறிது நேரத்தில் அவளின் கதறல் காற்றில் கரைந்தது. வாய்ப்புகள் கிடைக்காத வரைக்கும் அனைவரும் நல்லவர்கள்தான். நானும் நல்லவன்தான், சில நிமிடங்களுக்கு முன்பு வரை…

அந்தப் பெண் அழுதுக்கொண்டே இருந்தாள். நான் திரும்பிப் பார்க்காமல் மீண்டும் தொழிற்சாலைக்கே வந்துவிட்டேன். அந்தப் பெண்ணுக்கு இருபது வயது இருக்கும். களையான முகம். நீல நிற சல்வாரில் ரொம்ப லட்சணமாகவே இருந்தாள். ஆனால் இதெல்லாம் அவள் ஆடையைக் கிழிக்கும் போது எனக்குத் தோன்றவில்லை.

என்னால் கம்ப்ரசர் அறையில் இருக்க முடியவில்லை. மாபசான் என்னைப் பார்த்து சிரிப்பது போல்  இருந்தது . ’ஏன்டா மெத்தப் படிச்ச மேதாவியே! கடைசியில் நீயும் ஒரு…’

அவர் என்னைப் பார்த்து கேட்பது மாதிரி இருந்தது. என் உடம்பெல்லாம் வேர்க்க ஆரம்பித்துவிட்டது.

“சாஹிப் கியா ஹுவா?” ஆபரேட்டர், தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தான். நான் எதுவும் பேசாமல் அலுவலகத்திற்கு வந்து அமர்ந்தேன். ஏ.சி அறையிலும் வேர்த்துக் கொண்டே இருந்தது,

‘நல்லா நினைவிருக்கு. அந்தப் பொண்ணு என்னத் தடுக்கல. நாலு பேரு தூக்கிப் போய் ஒரு பொண்ண பலாத்காரம் பண்ணலாமேயொழிய, ஒருத்தனால ஒரு பெண்ணோட உரிமையில்லாம கற்பெல்லாம் அழிக்க முடியாது’ இப்படி  நான் படித்த  மனோதத்துவத்தையெல்லாம் சொல்லி என் மனதை தேற்றிக் கொள்ள முயன்றேன். அனால் மனக் குரங்கு சாந்தி அடையவில்லை. முந்தைய நாள் வரை பெண்ணியவாதியென்று பெருமையாக சொல்லிக்கொண்ட என்னால் இனிமே பெருமைப்பட முடியாது என்று எண்ணினேன். ஒரு பெண்ணுடைய உரிமை இல்லாமல் அவளைத் தொடுவது மட்டும் தப்பில்லை. அவள் உரிமை இல்லாமல் அவள் உணர்ச்சியைத் தூண்டி விடுவதும் தப்புதான்.

நான் செய்தது மிகப் பெரிய தப்பு. துரோகம். அந்தப் பெண்ணைக் காப்பாற்றுவதாய்ச்  சொல்லிச் சீரழித்துவிட்டேன். நான் நினைத்திருந்தால் அந்தப் பெண்ணிற்கு ஒரு வேலை வாங்கிக் கொடுத்திருக்கலாம். அவள் முன்னே மரியாதைக்குரிய ஒரு மனிதனாய் நிமிர்ந்து நின்றிருக்கலாம். ஆனால், நான் என் இச்சைக்கு அடிமை ஆகிவிட்டேன். இப்போது நினைத்தாலும் என் முகத்தில் நானே காறி உமிழ வேண்டும் என்று தோன்றுகிறது.

எல்லோருள்ளும் ஒரு ஆதிக்கவாதி முதலாளித்துவவாதி ஒளிந்திருக்கிறான். அவளால் என்னை என்ன செய்ய முடியுமென்ற எண்ணம். நான் அறியாமையில் தப்பு செய்யவில்லை. மேதாவித் தனத்தில் தப்பு செய்துவிட்டேன். அதுதான் என்னை அதிகம் உறுத்துகிறது. நான் படித்த படிப்பெல்லாம் பொய். கீதாசாரம் பொய். தில்லைப்பதிகம் பொய். நான் படித்த எல்லாம் வீண்..

வாழ்க்கை அழகு நிறைந்த பூந்தோட்டம் கிடையாது. அது ஒரு குப்பை. மனித மனம் ஒரு சாக்கடை. அங்கு வெறும் இச்சைகளும் கீழ்த்தரமான எண்ணங்களும்தான் புதைந்து கிடக்கிறது. கடைசியில் பிராய்ட் தான் ஜெயிக்கிறான். எல்லாமே வெறும் ஹார்மோன்ஸ்தான். நாமெல்லாம் ஹார்மோன்ஸின் அடிமைகள். அதைக் கட்டுப் படுத்த யாரும் சொல்லித்தரவில்லை. யாராலும் கட்டுப் படுத்தவும் முடியாது. நன்னெறி பேசுகிற உன்னத இலக்கியங்களெல்லாம் சந்தர்ப்பங்களைத் தவிர்க்கவே சொல்லித் தருகின்றன. சந்தர்ப்பங்களை எதிர்கொள்ள யாரும் சொல்லித்தருவதில்லை.

நிர்வாணமாய் ஒரு பெண் உன் முன் வந்தால் கண்ணை மூடிக் கொண்டு சாமியாராகப் போ, என்று சொல்லிதரும் இலக்கியம் எதுவும் கண்ணைத் திறந்து வைத்துக் கொண்டு கட்டுபாடோடு இரு என்று சொன்னதில்லை. யாராலும் சொல்லவும் முடியாது.

அப்புறம் என்ன உன்னத இலக்கியம்! உலக இலக்கியம்.

எல்லாம் பொய். நன்னெறிகள் பொய். எல்லாம் செப்படி வித்தை. கீழ்த்தரமான மனித வாழ்க்கையில் எதுவும் உண்மையில்லை…

இல்லாத கடவுளை இருப்பதாக நினைத்து நானும் வேண்டியிருக்கிறேன், பாரதி போல

“சிந்தை தெளிவாக்கு அல்லாளிதை செத்த உடலாக்கு”

ஆனால் எதுவுமே எனக்குப் பயன்படவில்லை. சிந்தித்துப் பார்த்தால் நானும் ஓர் கபட வேசதாரியோவென்று தோன்றுகிறது. என்னைக்காட்டிலும் மொபைலில் ‘போர்னோ’ படம் பார்க்கும் அந்தக் கிழவன் எவ்வளவோ மேல்…

என் குற்ற உணர்ச்சி என்னை அணு அணுவாச் சிதைக்கத் தொடங்கியது.

‘அவ நிச்சயம் நல்ல பொண்ணா இருக்கமாட்டா. இந்த நேரத்துல தனியா வெளிய வரவ நல்லவளா இருக்க முடியாது’ நான் ஏதேதோ சொல்லி என் குற்ற உணர்ச்சியைக் குறைக்கப் பார்த்தேன். என் கண்ணிலிருந்து கண்ணீர் மட்டும் வந்துகொண்டிருந்தது…

மணி 4. காரை எடுத்துக்கொண்டு அந்தப் புதரை நோக்கிப் போனேன். அவள் அங்கு இல்லை. அந்தப் பையும் இல்லை. அந்த இடத்தில் அவளோட கிழிஞ்ச சல்வார் மட்டும் இருந்தது. அதெல்லாம் ரத்தம். அதைப் பார்த்ததும் விளங்கிற்று. நான் நினைத்த மாதிரி இல்லை. அவள் உண்மையாவே ஒரு அப்பாவி பெண். என் மனதை சாந்தப் படுத்த முடியவில்லை, கத்தினேன்.

சாடிஸ்ட்… சாடிஸ்ட். என்னை நானே திட்டிக் கொண்டேன். வேகமாக என் காரை எட்டி எட்டி உதைத்தேன், கால் வலி எடுக்கிற வரைக்கும். ஒரு பொண்ணோட வாழ்க்கையை சீரழித்த அந்தக் குற்ற உணர்ச்சியை தாங்கிக் கொள்ள இயலாமல், கொஞ்ச நேரம் அங்கேயே உக்கார்ந்து அழுதேன்.

விடியத் தொடங்கிற்று. சாலையில் தொழிற்சாலை பர்ஸ்ட் ஷிப்ட் வேலைக்காக பலரும் சென்றுக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் என்னை ஒருமாதிரி ஒரேமாதிரி பார்க்கத் தொடங்கியதும், நான் காரை எடுத்துக் கொண்டு வேகமாக சூரத் நோக்கிச் சென்றேன். மிக மோசமாகவே காரை ஓட்டிச் சென்றேன் என்று நினைக்கிறேன். சிக்னலில் நிற்கவில்லை. நான் எப்போதும் அப்படி ஒட்டியதில்லை. ஆனால் சூரத்தில் எல்லோருமே மோசமாகவே கார் ஓட்டுவார்கள் என்பதால் யாரும் கண்டு கொள்ளவில்லை. ஆனால் மஜுரா கேட் திருப்பத்தில் ஒரு ஆடி கார் மீது என் கார் உரசிவிட்டது. அவ்வளவு தான். பலரும் என்னை சூழ்ந்துக் கொண்டார்கள். குஜராத்தியில் வசை பாட தொடங்கிவிட்டனர்.  அதற்குள் ஒரு நல்ல போலீஸ்காரர் அங்கு வந்துவிட்டார். என்னை அந்தக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்து சென்றார். அருகாமையிலேயே ஒரு போலிஸ் பூத் இருந்தது. அங்கு சென்றதும்,

“மே கல்தி கியா பையா” என்றேன்.

நான் குடித்துவிட்டு வண்டி ஓட்டியிருப்பேன் என்று எண்ணினாரோ என்னவோ, மேற்கொண்டு எதுவும் பேசாதே என்று செய்கை செய்தார். பின் நான் குடித்திருக்கவில்லை என்பதை கண்டுக்கொண்டதும்,

“நான் கேஸ் பைல் பண்றேன். இன்சுரன்ஸ் போட்டு அவன் காச க்ளைம் பண்ணிப்பான்” என்றார். நான் விடவில்லை. மீண்டும் சொன்னேன், “சார். நான் பெரிய தப்பு பண்ணிட்டேன்”

அவர் என்ன என்பது போல் பார்த்தார். முன்னிரவு நடந்தததை சொன்னேன். அவர் முகத்தில் ஒரு கணம் அதிர்ச்சி தோன்றி மறைந்ததை கவனித்தேன். என்னை மேலும் கீழும் பார்த்தவர், அருகே இருந்த இன்னொரு போலிஸ்காரரை அழைத்து அவரிடம் ரகசியமாக ஏதோ சொன்னார். அவர் தன் பங்குக்கு என்னிடம் வந்து என்னைப் பற்றி முழுமையாக விசாரித்தார். நான் எல்லாவற்றையும் சொல்லிமுடித்ததும், சிறிது நேரம் விழுந்து விழுந்து சிரித்தார்.

“உன் ஸ்டீல் ப்ளான்ட் இருக்குற இடம் ஒருகாலத்துல சுடுகாடா இருந்துச்சு. அதான் நீ எதையோ பாத்து பயந்திருக்க” என்றார். அதற்கு மேல் அவர் அங்கு நிற்கவில்லை. சிரித்துக்கொண்டே நகர்ந்துவிட்டார். அவர்கள் ஏன் என்னை சந்தேகப் படவில்லை என்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை நான் பார்ப்பதற்கு மிகவும் நாகரிகமாக இருந்ததால், நான் மிகவும் நல்லவன் என்று முத்திரை குத்தி விட்டார்கள் போலும். இதுவே நான் ஒரு கூலி தொழிலாளி போல் இருந்திருந்தால் அவர்கள் அவ்வளவு நேரம் என்னிடம் பேசி இருக்க கூட மாட்டார்கள். மேலும் நான் செய்யாத குற்றத்தையெல்லாம் கூட என் மீது சுமத்தியிருக்கக் கூடும். ஆனால் நான் செய்த குற்றத்தை நானே ஒப்புக் கொண்டாலும் நம்ப மறுக்கிறார்கள்.

அந்த நல்ல போலிஸ்காரரிடம் மீண்டும் சென்று என்னை கைது செய்யும் படி சொன்னேன். அதுவரை சகஜமாக இருந்த அவரது முகம் அப்போது கடுமையாக மாறியதை கவனித்தேன்.

“அரே, ஜாதா மத் போல். எங்களுக்கு நிறைய வேல இருக்கு. நீ சொல்றது உண்மையாவே இருந்தாலும் அந்த பொண்ணு வந்து கம்ப்ளைன்ட் குடுத்தாதான் உன் மேல கேஸ் போட முடியும். இதேமாதிரி எங்கயும் போய் பேசிகிட்டு இருக்காதா…”

ஆடி கார்காரன் இன்சுரன்ஸ் க்ளைம் செய்வதற்காக என் வண்டி நம்பரை மட்டும் குறித்துக் கொண்டு சென்றுவிட்டான். போலிஸ் காரர்களும் அவர்கள் வேலையை பார்க்க சென்றுவிட்டனர். நான் மட்டும் அங்கேயே சிறிது நேரம் நின்றுக் கொண்டிருந்தேன். யாரும் என்னை சட்டை செய்யவில்லை என்று தெரிந்ததும், சூரத் ரயில் நிலையம் சென்று அந்த பெண்ணைத் தேடினேன். ஒரு ப்ரோயஜனமும் இல்லை. ஒருவாரம் கம்பெனிக்கு செல்லவில்லை. உடம்பு சரியில்லை என்று சொல்லிவிட்டேன். எங்கெங்கோ சென்று அவளைத் தேடினேன். சத்தியமாக அவளைக் கல்யாணம் செய்துக் கொள்ள வேண்டும்  என்ற எண்ணத்தோடு தான் தேடினேன். கடைசிவரை அவள் கிடைக்கவே இல்லை.

ஒருவாரம் கழித்து கம்பெனியிலிருந்து போன் வந்தது. ஸ்டீல் உற்பத்தி செய்ய வேண்டி இருந்ததால், என்னை பகல் நேர ஷிப்ட்டில் வர சொன்னார்கள். கம்பெனியில் யாருடனும் என்னால் சகஜமாக பழக முடியவில்லை. மீண்டும் கம்ப்ரசர் அரை. மிகவும் நாராசமான சப்தம். அது போதாதென்று வாக்கி டாக்கி வேறு அலறிக் கொண்டே இருந்தது. அலைப்பேசியில் சிக்னல் பிரச்சனை இருக்கும் என்பதால் ஸ்டீல் உற்பத்தி நடக்கும் நாட்களில் மட்டும் எல்லோர் கையிலும் வாக்கி டாக்கி கொடுத்துவிடுவார்கள். ஸ்டீல் உற்பத்திக்கு தேவையான காற்று, நீர், வாயு அனைத்தும் சரியான நிலையில் சரியான அளவில் செல்கிறதா என்பதை மேற்ப்பார்வை இட அந்தந்த இடத்தில் ஒரு பொறியாளர் இருப்பார். ஒவ்வொருவரும் சம்மந்தம் இல்லாமல் பதட்டமாக வாக்கி டாக்கியில் பேசிக் கொள்வார்கள். நிதானமாக செய்தாலே எல்லா வேலையும் சரியாக முடிந்துவிடும் என்று சொன்னால் கேட்கமாட்டார்கள். நான் என் வேலையை சரியாக செய்யக் கூடியவன் என்பதால் வாக்கிடாக்கி சம்பாசனையில் ஈடு படமாட்டேன். அதன் சப்தத்தை குறைத்து வைத்துவிட்டு என் வேலையை பார்ப்பேன். அன்று அதையும் செய்யவில்லை. வாக்கி டாக்கி அதன் போக்கில் இயங்கிக் கொண்டிருந்தது.

கம்ப்ரசரிலிருந்து வெளி வரும் காற்றில் இருக்கும் ஈரப் பதத்தை நீக்குவதற்காக அங்கே ஆறு ட்ரையர்கள் இருந்தன. காற்றில் ஈரப் பதம் இருந்தால் உற்பத்தி தடைப்பட்டுவிடும். அதனால் ஒரே நேரத்தில் மூன்று ட்ரையர்கள் இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும். திடிரென்று ஏதாவது ட்ரையர் பழுது பட்டு விட்டால், அதை நிறுத்தி விட்டு, வேறொரு ட்ரையரை  ஆன் செய்ய வேண்டும். அன்று ட்ரையர் பழுதானதை நான் கவனிக்க வில்லை. காற்றில் ஈரப்பதம் இருப்பதாக பலரும் வாக்கி டாக்கியில் கத்திக் கொண்டிருந்ததும் என் காதில் விழவில்லை. அந்த பெண்ணின் அழுகுரல் மட்டும் காதில் ஒலித்தது. என் உடம்பு நடுங்குவது போல் உணர்ந்தேன். நிமிர்ந்து பார்த்தால் ஒரு சர்தார்ஜி என் தோளைப் பிடித்துக் குழுக்கிக் கொண்டிருந்தார்.

சுதாரித்துக் கொண்டேன். அவர் என்னுடைய பெரிய பாஸ். என் டிபார்ட்மென்டின் தலைவர். பொதுவாக அவர் சைட்டுக்கு வர மாட்டார். அவரே வந்திருக்கிறார் என்றால் பிரச்சனை பெரியது தான்.

“க்யா ஹுவா தும்கோ ஆஜ்கல்?” அவர் என்னை திட்டவில்லை. அன்பாகதான் கேட்டார். எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அதற்குள் மற்ற பொறியாளர்கள் ஏர் ட்ரையர் கனெக்ஷனை மாற்றத் தொடங்கியிருந்தனர். எப்படியோ அன்று உற்பத்தி தடைப்படவில்லை. பெரிய பாஸ் என் மீது அதிக அன்பு வைத்திருந்ததால். இரண்டு மாதம் மெடிகல் லீவ் எடுத்துக் கொண்டு செல்லும் படி அறிவுரை சொன்னார். பல நாட்கள் நைட் ஷிப்டில் வேலை செய்ததால் நான் சோர்வுற்றுவிட்டதாக அவர்கள் கருதினர். சென்னை வந்தும் என்னால் நான் செய்த தவறை மறக்க முடியவில்லை. யாருடனும் அதிகம் பேசாமல் அறையினுள்ளேயே கிடப்பேன். திரும்பி குஜராத் செல்வதில் உடன்பாடில்லை. வேலையை ராஜினாமா செய்துவிடலாம் என்று முடிவு செய்து வீட்டிலிருந்தே ராஜினாமா கடிதம் அனுபினேன்.

ஆனால் நான் நான்கரை வருடங்கள் கம்பெனியை விட்டு விலக முடியாது என்றும், விலக வேண்டுமெனில் பல லட்சங்கள் கம்பெனிக்கு நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டுமென்றும் மனித வள மேலாளரிடமிருந்து மெயில் வந்தது. அப்போது தான் நினைவுக்கு வந்தது. நான் ஒரு முறை கம்பெனி செலவில் ரொமானியா சென்று வந்தேன். அங்கிருந்து இறக்குமதி ஆகவிருந்த ஒரு எந்திரத்தின் தரத்தை ஆய்வு செய்வதற்காக அங்கு சென்றிருந்தேன். இரண்டு நாள் வேலை தான். ஆனால் கம்பெனியில் என்னை இரண்டு வாரம் அங்கேயே தங்க சொன்னார்கள். பொறுமையாக ஊர் சுற்றி பார்த்துவிட்டு வர சொன்னார்கள். நானும் வந்தவரை லாபம் என்று சுற்றிவிட்டு வந்தேன். ஆனால் ஒரு வாரத்திற்கு மேல் கம்பெனி செலவில் வெளிநாட்டில் தங்கினால் குறைந்தது ஐந்து வருடம் கம்பெனியில் வேலை செய்தே ஆக வேண்டும் என்பது கம்பெனி பாலிசி என்று சொல்லி நான் ஊரிலிருந்து வந்ததும் பத்திரத்தில் கையெழுத்து வாங்கினர். நானும், எனக்கு வேறு எங்கு வேலைக் கிடைக்க போகிறது என்று எண்ணி கையெழுத்து போட்டு விட்டேன். அந்த பத்திரத்தை வைத்து என்னைக் கட்டிப்போட்டு விட்டனர். அவர்கள் கேட்டத் தொகை என்னிடம் இல்லை. வேறு வழியில்லாமல் சர்தார்ஜி காலில் போய் விழுந்தேன். அவர் முயன்று எனக்கு சென்னைக்கு மாற்றல் வாங்கிக் கொடுத்தார்.

சென்னையில் காஞ்சிபுரத்தில் கப்பல் டிசைன் செய்யும் வேலை. நான் வேலை செய்யும் நிறுவனம் ப்யூஸ் கேரியர்  முதல் கப்பல் வரை எல்லா தொழிலிலும் கொடி கட்டிப் பறக்கிறது. உண்மையில் கப்பலின் டிசைன் எல்லாம் ஜப்பானில் இருந்து வரும். அதை இறுதி செய்வது மட்டுமே என் வேலை. பகல் ஷிப்ட் மட்டும் தான். வேலை பளு குறைவு. நான் என் வேலையை மட்டும் செய்து விட்டு வந்துவிடுவேன். யாருடனும் தேவையில்லா நட்புமில்லை பகையுமில்லை.  முன்பைப்போல் புத்தகங்கள் படிப்பதில்லை. நான் நானே இல்லை என்பதை உணர்ந்தேன். இரவுகளில் தூக்கம் வரவில்லை. அப்படி முயன்று கண் அசந்தாலும், யாரோ ஒரு பெண் அலறுவது போல் சப்தம் கேட்கும். விழித்துக் கொள்வேன். தூக்கம் வரவில்லை என்று மருத்துவரிடம் சென்றேன்.  அவர் இன்சோம்னியா என்று மருந்து கொடுத்தார். ஒரு ப்ரோயஜனமும் இல்லை. இப்படியே இரண்டு வருடம் கழிந்ததும் என் வீட்டில் திருமணப் பேச்சை எடுத்தனர். அதற்கு முன் பல தருணங்களில் நான் திருமணத்தை தவிர்த்து வந்தேன். ஆனால் இந்த முறை முடியவில்லை. என் பெற்றோர்கள் ஒரேடியாக குதித்தனர். நான் திருமணம் செய்துக் கொள்ளவில்லையெனில், அவர்கள் சோகத்திலேயே மடிந்து விடுவார்கள் என்று கூறினர்.

அது போன்ற ஆக்ரோஷமான வசனங்களை நான் சினிமாவில் தான் பார்த்திருக்கிறேன். உண்மையில் நான் வேலையை எங்கே விட்டுவிடுவேனோ என்று என் பெற்றோர் பயந்தனர். திருமணம் செய்துவைத்து என் பொறுப்புக்களை அதிகப் படுத்திவிட்டால் என்னால் வேலையை விட முடியாது என்று அவர்கள் கருதினர். எனக்கு திருமணத்தில் விருப்பமில்லை தான். ஆனால் என் பெற்றோர்களோ வயதானவர்கள். என்னால் அவர்களுக்கு ஏதாவது ஆகிவிட்டால் அந்த குற்ற உணர்ச்சி என்னை ஒரேடியாக கொன்றுவிடும் என்று நான் பயந்ததால் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தேன்.

மிக எளிமையாக ஒரு முருகர் கோவிலில் திருமணம் நடந்தது. மனைவி மனோதத்துவம் படித்தவள். அதனால் என்னிடம் பிரச்சனை இருப்பதை கண்டுகொள்ள அவளுக்கு அதிக நாட்கள் ஆகவில்லை. ஒரு நாள் என் மனைவியிடம் எல்லா உண்மையையும் கொட்டிவிட்டேன். அவள் தன் முகத்தில் எந்த சலனத்தையும் காட்டவில்லை. நான் என் மனைவியின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டேன். நான் ஏன் அப்படி செய்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. யாரோ ஒரு பெண்ணின் வாழ்க்கையை சீரழித்துவிட்டு நான் எப்படி சம்மந்தமே இல்லாத இன்னொரு பெண்ணிடம் மன்னிப்பு கேட்க முடியும்? ஆனால் நான் கேட்டேன். என் மனைவியும் அவள் என்னை மன்னித்துவிட்டதாக சொன்னாள். உண்மையில் மன்னிக்கும் உரிமை அவளிடம் இல்லை. நான் இன்னொரு பெண்ணிற்கு செய்த துரோகத்திற்கு என் மனைவி எப்படி என்னை மன்னிக்க முடியும்? ஒருவேளை என்னை தண்டிப்பதனால் எந்தப் பயனும் இல்லை என்பதால் அவள் அப்படி சொல்லியிருக்கலாம். அவள் அதோடு நிற்கவில்லை. தனக்கு தெரிந்த ஒரு மனோதத்துவ மருத்துவரிடம் அழைத்து சென்றாள். கிட்டதட்ட ஆறு மாதங்களாக நாங்கள் இருவரும் அந்த மருத்துவரை சந்திக்க சென்றுக் கொண்டிருக்கிறோம். அவர் ஒவ்வொரு முறையும் நான் செய்த பாவத்தை என் வாயாலேயே முதலிலிருந்து சொல்லச் சொல்வார். அப்படி சொல்வதன் மூலம் என் குற்ற உணர்ச்சி குறையுமாம். அப்படிதான் என்னிடம் சொன்னார்.  உண்மையில் என் குற்ற உணர்ச்சி குறைந்ததா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் ஏதோ ஆத்திச்சூடி சொல்லும் குழந்தை போல் ஒவ்வொரு முறையும் அவரிடம் நான் செய்த செயலை ஒப்புவித்து வருகிறேன். இன்றும் அப்படி ஒப்புவிக்கும் போதுதான் ‘எல்லாம் குப்பை’ என்ற பெரியதொரு தத்துவத்தை அலட்டிக் கொள்ளாமல் சொல்லிவிட்டு சென்ற அந்த மனிதரை கண்டேன். சிறிது நேரம் வெளியே உலாவிவிட்டு வருவதாக என் மனைவியிடமும் மருத்துவரிடமும் சொல்லிவிட்டு அந்த தத்துவ மனிதரை தேடி வார்ட்டுக்கு சென்றேன். ஆனால் அவரை அறையில் வைத்து பூட்டி விட்டதாகவும் என்னை உள்ளே அனுமதிக்க முடியாது என்றும் அங்கே இருந்த ஊழியர் ஒருவர் சொன்னார். திரும்பி வரும் போது என் மனைவியும் மருத்துவரும் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டேன். ஒட்டுக் கேட்கவில்லை. ஆனாலும் அவர்களுக்கு தெரியாமல் அவர்கள் பேசுவதை கேட்டேன். அதிர்ச்சியாகவே இருந்தது. முதலில் என் மனைவி என்னை மன்னித்து எனக்கு உதவி செய்கிறாள் என்றே நினைத்திருந்தேன். ஆனால் என் மனைவி என்னை ஒரு மன நோயாளி என்று கருதுகிறாள். அந்த டாக்டரும் அதை ஆமோதிக்கிறார். அவர்கள் நான் மனநிலை பிறழ்வால் உளறுகிறேன் என்றே நினைக்கிறார்கள். குஜராத்தில் அந்த போலிஸ்காரர் நான் ஆவியை கண்டு பயந்து விட்டதாக சொன்னார். இவர்கள். நான் மனநலம் பாதிக்கப்பட்டு ஒரு கற்பனைக் கதையை சொல்வதாக எண்ணுகிறார்கள். அப்படி ஒரு பெண் இருக்க வாய்ப்பில்லை என்றும், அவள் நான் உருவாக்கிக் கொண்ட பிம்பம் என்றும், உலக இலக்கியத்தை தீவிரமாக வாசித்து எனக்கு நானே உருவாக்கிக்கொண்ட ஒரு ஐடியல் கற்பனை உலகம் நிஜ வாழ்வோடு ஒத்துப்போகததால் என்னை நானே தண்டித்துக் கொள்ள முயல்வதாக அவர்கள் பேசிக் கொண்டார்கள். கார்ல் ஜங் என்றார்கள், அன்கான்சியஸ் மைன்ட் என்றார்கள். நடந்த ஒரு செயலை அவர்கள் என்னுடைய கற்பனை என்கிறார்கள். என்னுடைய மிருகத்தனத்தால் நான் செய்த தவறை அவர்கள் மனநோய் என்கிறார்கள். எனக்கு கோபமாக வந்தது. ஆனாலும் அமைதியாக இருந்தேன். ஏனெனில் என் மனைவி மிகவும் நல்லவள். வேறோருத்தியாக இருந்திருந்தால் இந்நேரம் என்னை விட்டு சென்றிருப்பாள். என்னை சபையில் வைத்து அசிங்கப்படுத்தி இருக்கவும் கூடும். ஆனால் என் மனைவி என்னைப் பற்றிய ரகசியங்களை யாரிடமும் சொல்லாமல் காப்பாற்றி வருகிறாள். நான் எதுவும் பேசாமல் காரில் வந்து அமர்ந்தேன். ஆனாலும் இனிமேல் டாக்டர் தரும் மருந்துகளை உண்ணக் கூடாது என்று முடிவெடுத்தேன். ஏனெனில் அவர்கள் சொல்வது போல் எனக்கு மனப்பிறழ்வு இல்லை.

அன்று வீட்டிற்கு வர இரவாகிவிட்டது. வீட்டில் அம்மாவும் அப்பாவும் ஏதோ ஒரு ஆங்கில தொலைக்காட்சி சேனலில் செய்தி பார்த்துக் கொண்டிருந்தனர்.  ஒரு பலாத்கார வழக்கில் ஐந்து பேர் கைது செய்யப் பட்டுவிட்டதாக செய்தியில் சொன்னார்கள்.

“இவனுங்களலாம் தூக்குல போடணும்”

அம்மா கோபமாக சொன்னாள். ஒருவேளை என்னையும் தூக்கில் போட்டிருக்க வேண்டும். ஒருவேளை நானே என்னைப் போட்டுக் கொள்ள வேண்டுமா! நானும் இந்தக் குற்றத்தை செய்தவன் என்று தெரிந்தால் அம்மா என்னையும் தூக்கில் போட சொல்வாளா? நான் ஸ்தம்பித்து நின்றதை என் மனைவி கவனித்துவிட்டாள் போல. என் கையை பிடித்து அறைக்குள் அழைத்து சென்றாள். மருத்துவர் கொடுத்த மாத்திரைகளை உட்கொண்டால் எல்லா மனக் கவலையும் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கிவிடும் என்றாள். என் கையில் சில மாத்திரைகளை திணித்துவிட்டு அவள் குளிக்கச் சென்றாள். நான் மாத்திரைகளை ஜன்னல் வழியாக தெருவில் தூக்கி ஏறிந்துவிட்டு வந்து படுத்துக் கொண்டேன். உறக்கம் வரவில்லை.

குளித்துவிட்டு வந்த என் மனைவியிடம் “அந்த பொண்ண கண்டுபிடிச்சு கல்யாணம் பண்ணனும்” என்றேன். எதையோ சொல்ல வந்த என் மனைவி நிறுத்திக் கொண்டாள். பின் நிதானமாக, “சரி. அப்படி நடந்தா நானே ஒதுங்கிக்கிறேன். இப்ப தூங்குங்க” என்றாள். சிறிது நேரத்தில் அவள் உறங்கிப் போனாள். ஆனால் என்னால் உறங்க முடியவில்லை.

அந்த அப்பாவி மராத்திப் பெண் உயிரோடு இருக்கிறாளா என்று தெரியவில்லை. உயிரோடிருந்தால் நிச்சயம் அந்த வலியோடுதான் வாழ்ந்துக்கொண்டு இருப்பாள், நான் என் குற்ற உணர்ச்சியோடு வாழ்ந்து கொண்டிருப்பதைபோல என்று நினைத்தேன். லேப்டாப்பை ஆன் செய்தேன். அந்த தொலைகாட்சி சேனலின் இணையதளத்திற்கு சென்றேன். அன்று பலாத்கார வழக்கில் கைது செய்யப் பட்ட ஐவரைப் பற்றிய செய்தியை படித்தேன். பின்னூட்டத்தில், அவர்களை பலரும் மோசமாக திட்டி வைத்திருந்தனர். குறிப்பாக அந்த வசைகளை மட்டும் படித்தேன். அதெல்லாம் எனக்கு வர வேண்டிய வசைகளாகவே கருதினேன். ஒவ்வொரு வசையை படிக்கும் போதும் எனக்கு நானே சாட்டை அடிக் கொடுத்துக் கொள்வது போல் இருந்தது. அதில் ஒரு ஆறுதல் கிடைத்தது. அந்த தளத்தில் இருந்த ஒரு காணொளியை பார்த்தேன். அன்று சாயங்காலம் ஒளிபரப்பான விவாத மேடை நிகழ்ச்சி அது. அதில் பலரும் அந்த குற்றவாளிகளை தூக்கில் இட வேண்டும் என்று பேசினர். ஒரு அப்பாவி கிராமத்து பெண்ணை நம்ப வைத்து ஏமாற்றிய என்னையும் தூக்கில் தான் போடவேண்டும். அப்படி நினைக்கும் போதுதான் நிகழ்ச்சியில் பங்குப்பெற்ற அந்த பெண்ணை பார்த்தேன். அழகாக இருந்தாள். சுத்தமான ஹிந்தியில் பேசினாள். அவள் மும்பையை சேர்ந்த ஒரு சமுக ஆர்வலர் என்று போட்டிருந்தது. நிதானமாக பேசினாள். அவளை நான் எங்கோ பார்த்திருக்கிறேன் என்று தோன்றியது. சில வருடங்களுக்கு முன் தன்னை ஒருவன் பலாத்காரம் செய்துவிட்டதாக சொன்னாள். இப்போது பெண் நலத்திற்காக போராடி வருவதாக சொன்னாள். என் உடல் வேர்த்தது. அவள் தான் அவளே தான். நடந்ததை தான் மறந்துவிட்டதாகவும், தனக்கு நடந்தது ஒரு விபத்து என்றும், அதை எண்ணி தான் முடங்கி விடவில்லை என்றும் குறிப்பிட்டாள். எனக்கு மூச்சு அடைத்தது.

நீல நிற சல்வார், க்யா கர்ரஹா ஹே து, கோனே அந்தர், சாயிப் லடிக்கி நம்பர் சாயியே க்யா, ஏண்டா மெத்தப் படிச்ச மேதாவி, கார்ல் ஜங்க், எல்லாம் குப்பை, கண்டுபிடிச்சு கல்யாணம் பண்ணனும், தூக்குல போடணும், மனப்பிறழ்வு, உண்மை, மனநோய், அப்பாவி பெண். ஏதேதோ என் நினைவிற்கு வந்தன. மயக்கம் வருவது போல் இருந்தது. திரும்பி பார்த்தேன். என் மனைவி உறங்கிக் கொண்டிருந்தாள். வேகமாக  லேப்டாப்பை மூடி வைத்துவிட்டு, டாக்டர் மனநோய்க்காக கொடுத்த மாத்திரைகளை விழுங்கினேன்.

 “…மோகம்கொண்டு மாதரின் மூத்திரப்பை சிக்கிப்பின்

பேயது பிடித்தவர்போல் பேருலகில் சாவரே…. “

ஸ்கூல் சீசன்- சிறுகதை

எனக்கு முடியை வித்தியாசமாக, ஸ்டைலாக வெட்டிக் கொள்ள வேண்டுமென்றெல்லாம் ஆசை இல்லை. ஆனால்  இந்த முறை எப்பவும் போல், பள்ளி பிள்ளைப்போல் முடிவெட்டிக்கொள்ளக் கூடாது என்று அக்கா சொன்னாள்.

“எலி கரண்டுன மாதிரி கரண்டிட்டு வந்தா வீட்டுக்குள்ள விடமாட்டேன்” வாசலைவிட்டு  இறங்கும்போது அக்கா மீண்டும் சொன்னாள்.

சிறுவயதில் அம்மா வேறுமாதிரி சொல்வாள், “முன்னாடி முடியவிட்டுட்டு வராத. ஒட்ட வெட்டிட்டு வா”

நானும் தோரயமாக அம்மாவிற்குப் பிடித்த மாதிரியும், எனக்குப் பிடித்த மாதிரியும் வெட்டிக் கொண்டு வந்து நிற்பேன். கொல்லைப்பக்கம் வா என்பாள். பின் என் அருகில் வந்து முன் முடியை பிடித்து பார்த்துவிட்டு, “முன்னாடி முடி அப்படியே இருக்கு”  என்று கடிந்துகொண்டு, என்னை மீண்டும் கடைக்கு அழைத்துச் செல்வாள். கடைக்காரன் நான் திரும்பி வருவேன் என்பதை முன்கூட்டியே அறிந்தவனைப் போல் என்னைப் பார்த்து ஏளனமாக சிரிப்பான்.

மறுநாள் பள்ளியில் எல்லோரும், “என்னடா எலி கரண்டிருச்சா?” என்று கேலி செய்வார்கள். பதினோராம் வகுப்பு படிக்கும்போது ஒரு முறை கடைக்காரனே கேட்டான். “தம்பி நீ எத்தனாவது படிக்குற? பொம்பளை புள்ளைங்கலாம் கேலி பண்ணாத இப்டி வெட்டுனா?”

வளர வளர அம்மா மீது கோபமெல்லாம் குறைந்து விட்டது. கல்லூரி சேர்ந்த பின் அம்மா எப்படி முடிவெட்டிக் கொள்ள வேண்டுமென்றெல்லாம் சொன்னதில்லை. ஆனாலும் எனக்கு ஸ்டைலாக வெட்டிக்கொள்வதில் ஆர்வம் வரவில்லை.

கடைக்குள் சென்று அமர்ந்ததுமே, கடைக்காரர் கேட்பார். “ஷார்ட்டா?” நான் தலை அசைப்பேன். அவ்வளவுதான். சில நேரங்களில் மெசினைப் போட்டு ஆர்மிகாரன் தலை போல் ஆக்கிவிடுவார். வேலைக்கு சேர்ந்த பின்பும் அப்படி வெட்டிக் கொண்டு வந்திருக்கிறேன்.

“ஏண்டா ஸ்கூல் புள்ள மாதிரி வெட்டிருக்க?”

அக்காதான் மெனக்கெட்டு கோபித்து கொள்வாள். இப்பொது அக்காதான் அம்மாவாக இருக்கிறாள். அக்கா ஒரு தனியார் நிறுவனத்தில் மனிதவள மேலாளராக இருக்கிறாள்.

“என் ஆபிஸ்ல உன் வயசு பசங்கலாம் எப்டி ஸ்டைலா வராங்க தெரியுமா? அதுவும் இப்ப புதுசா சேர்ற பசங்கலாம் சோ கான்சியஸ் அபௌட் தேர் அப்பியரன்ஸ். நீ ஏன்டா இப்டி இருக்க?” என்பாள். நான் சிரித்துவிட்டு அமைதியாக நகர்ந்துவிடுவேன். மாமாவும் அக்காவைப் போல் அதே துறையில் இருந்தார்.

“ஏண்டா உன் ஆபிஸ்ல யாரும் கலாய்க்க மாட்டங்களா?” மாமா கூட ஒரு முறைக் கேட்டுவிட்டார். நான் மந்தைவெளியில் ஒரு வங்கியில் வேலை செய்தேன். என்னுடன் வேலை செய்பவர்கள் எல்லாம் ஏதோ ஒரு வகையில் ‘எக்ஸ்பைரி’ தேதியை நெருங்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் இதையெல்லாம் கண்டுகொள்ள போவதில்லை. கண்டுகொண்டாலும் எனக்கு இதைப் பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ள தோணுவதில்லை.

நான் குஜராத்தில் வசித்த போது ஒரு பஞ்சாபி பெண்ணை ஒரு தலையாக காதலித்தேன். நான் வெகுதூரம் அவளை விட்டு கடந்து வந்த பின்தான் தெரிந்தது அவளும் என்னை ஒருதலையாக காதலித்திருக்கிறாள் என்று. இரண்டு, ஒரு தலை காதலர்கள்.  மீண்டும் குஜாராத் செல்லலாமா என்றுகூட யோசித்தேன். ஆனால் அதற்குள் அவளும் வெகு தொலைவு சென்றுவிட்டிருந்தாள். வாழ்க்கையிலும் தூரத்திலும். இப்போது காஷ்மீரில் இருக்கிறாளாம். ஒரே பிரசவத்தில் அவளுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்துவிட்டிருந்தது. பேஸ்புக் சொன்னது. அந்த குழந்தைகளின் போட்டோவிற்கு ஏராளமான லைக் வந்திருந்தது. நானும் ஒரு லைக் போட்டேன். மறுநாள் என்னை ப்ளாக் செய்திருந்தாள்.

கொஞ்சம் கொஞ்சமாக எனக்கு யார் மீதும் பெரிய ஈடுபாடு இல்லாமல் போனது. இப்படியே வாழ்க்கையை ஓட்டிவிடுவது உத்தமம் என்றே தோன்றுகிறது. ஆனாலும் அக்கா விட்டபாடில்லை.

“பொண்ணு பெங்கலூர்லயே வளர்ந்தவ. என் கொலீக்கோட ரிலேட்டிவ். நல்ல பாமிலி. எனக்கு ஓகே. நீ அவள எதாவது ரெஸ்டாரன்ட், காபி ஷாப்ல மீட் பண்ணி பேசு…

“நல்ல வரன். present yourself good!…”

அக்கா ஒரு பெரிய லெக்ட்சர் கொடுத்தாள். க்ரைஸ்ட் கிங் பெண்கள் மேல்நிலை பள்ளியில் படித்த அக்கா இவ்வளவு நவநாகரிகமாக மாறிவிட்டிருந்தது ஆச்சர்யமாக இருந்தது. இதைப்பற்றி அக்காவிடம் கேட்கத் தோன்றும். ஆனாலும் அவள் மனம் வருந்தக் கூடும் என்பதால் அமைதியாக இருந்துவிடுவேன். வாழ்க்கை மாறும்போது நாமும் மாறிக் கொள்ள வேண்டும் போல! எனக்குதான் இதெல்லாம் பிடிப்பட மறுக்கிறது.

“நல்லா முடி வெட்டிக்கோ. fruit facial பண்ணிக்கோ. அவர கூட்டிட்டு  போ சொல்றேன்”

அக்கா ஏதோ பெரிய கடைப் பெயரை சொல்லி போகச் சொன்னாள். மாமா எப்போதும் அங்கு தான் முடி வெட்டிக் கொள்வார். முடிவெட்டிக் கொள்ள முன்னூறு ரூபாய் என்றார்கள்.

நான் அந்த காசில் முடிவெட்டி, சவரம் செய்து கொண்டு, வரதராஜா திரையரங்கில் ஒரு படம் பார்த்துவிடுவேன். இப்போது சினிமாக்காரர்கள் ஸ்ட்ரைக் செய்கிறார்கள். ஒரு படமும் ஓடவில்லை. அதனால் நான் நூற்றி இருபது ரூபாய் மட்டும் எடுத்துக் கொண்டு, வழக்கமாக செல்லும் கடைக்கே செல்வதாக அக்காவிடம் சொன்னேன்.

“நல்லா ஸ்டைலா வெட்டச் சொல்லு. பின்னாடி கத்தி போட வேணாம்னு சொல்லு. அப்பத்தான் லுக்கா இருக்கும்” அக்கா சொன்னாள்.  அக்காவிற்கு எப்படி இதெல்லாம் தெரிகிறது என்று புரியவில்லை.  நான் தலை ஆட்டிவிட்டு கடை நோக்கி சைக்கிளை மிதித்தேன். முடி வெட்டிக்கொண்டு படம் பார்க்கும் திட்டமிருந்தால் நடந்து தான் போவேன். இல்லையேல் சைக்கில் நிறுத்த திரையரங்குகாரனுக்கு இருபது ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கும். அந்த காசில் ஒரு மசாலா பால் குடிக்கலாம்.

வழி எங்கிலும் முந்நூறு ருபாய் சிந்தனைதான். இருந்தாலும், முடிவெட்டிக் கொள்ள முன்னூறு ருபாய் அதிகம் தான். குஜராத்தில் பதினைத்து ரூபாய் இருந்தால் போதும். முடிவெட்டி தலைக்கு மசாஜ் செய்து விட்டு அனுப்பிவிடுவான் அந்த கடைக்காரன். அந்த கடை ஒரு மரத்தடியில் அமைத்திருக்கும். அவ்வளவுதான் வித்தியாசம் மற்றபடி அதே ப்ளேட் தான். அதே கண்ணடித்தான். ஆனால் ஏசிக் கடையில் விலை அதிகமாம். முடி வெட்டிக் கொள்வதற்கு எதற்கு ஏசி?  இங்கே எல்லாவற்றிலும் ஏசியை பொருத்தி விடுகிறார்கள். ஏசி சவப்பெட்டி வந்தால் கூட ஆச்சர்யப் படுவதற்கில்லை. ஏதேதோ தேவையில்லாத ஆடம்பரங்களை பழக்கி கொண்டு, அவற்றை தக்கவைத்துக் கொள்ளும் போராட்டத்தில் மன அமைதியை கெடுத்துக் கொள்கிறோம்.

நான் கடைக்குள் நுழைந்த போது, கடைக்காரனும் ஒரு வாலிபனும் தீவிரமாக அந்த வாலிபனின் கையிலிருந்த போனை பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த கடைக்காரனுக்கும் என் வயசு தான் இருக்கும்.

அமர்ந்ததுமே கேட்டான்.

“ஷார்ட்டா வெட்டிடலாமா ஜி?”

“மீடியமா” என்றேன். அவன் ஆச்சர்யமாக பார்த்தான். எப்போதும் மெசின் கட் என்று சொல்லும் ஆள் நான்.

அவனிடம் உண்மையை சொல்லலாமா என்று பார்த்தேன். ஏனெனில் என் பின்மண்டையில் விழத் தொடங்கிய வழுக்கையை பார்த்து அவன்தான் பெரிதும் வருத்தப் பட்டான்.

“ஜி சீக்கிரம் கல்யாணம் பண்ணிகோங்க ஜி” என்பான்.

“வீட்ல பங்க்ஷன். மீடியமா வெட்டுங்க” என்றேன். நான் சொன்னதை காதில் வாங்கிக் கொள்ளவில்லை. வாலிபனையே பார்த்தான். வாலிபன் மொபைலையே பார்த்துக் கொண்டிருந்தான். அந்த வாலிபன் நிமிர்ந்து, “ஜி. நீங்க இந்த ஏரியா தானே?” என்றான். நான் ஆம் என்று தலையசைத்தேன்.

“A R N ஸ்கூல் CBSE -யா மெட்ரிக்கா?” அந்த வாலிபன் என்னிடம் வினவினான்.

நான் மெட்ரிக் என்றேன்.

“சொன்னேன்ல” என்று கடைகாரானைப் பார்த்தான்

“இல்ல ஜி. இப்ப CBSE-யும் ஆரமிச்சிட்டாங்க. போன் பண்ணி விசாரிச்சுட்டேன்” என்றான் இவன்.

“ஒ! எனக்கு தெரியாது” என்றேன்

“அப்பா பீஸ் நிறைய இருக்கும்” அந்த வாலிபன் சொன்னான்.

“பரவால. நீ பாரு” என்றவாறே என் தலையில் தண்ணீரை அடித்தான். மெசினை எடுக்கப் போனவன், ஒரு கணம் சுதாரித்துவிட்டு  கத்திரிக்கோலையும் சீப்பையும் எடுத்தான்.

“அண்ணே லோட் ஆகிடுச்சு” அந்த வாலிபன் கத்தினான். இவன் வேகமாக அவனை நோக்கி ஓடினான்.

“சீக்கிரம் குட்டி. போய்ட போது” இவன் பதறினான்.

“பாப்பா பேரு சொல்லுனே”

“மோனிஷ்கா” என்றவாறே என் தலையை படிய வாரினான்.

பின் என்னிடம் , “பாப்பாவுக்கு ஸ்கூல் அட்மிஸன்ஜி, இப்ப எல்லாம் நெட் ஆக்கிடாங்க ஜி. ஸ்கூல்ல லைன்ல நிக்க சொல்லிருந்தா இந்நேரம் என் வைப்ப நிக்க சொல்லிருப்பேன்”

நான் புன்னகை செய்தேன்.

“வயசுனே?” அவன் ஒவ்வொரு விவரமாக கேட்டான். இவன் சொல்லிக்கொண்டே முடியை வெட்டத் தொடங்கினான்.

“உன் மாச வருமானம்”

இவன் யோசித்தான். “நாப்பதாயிரம் போட்டுக்குறேன்”

“டேய் அவ்ளோலாம் இல்ல”

“அண்ணே கம்மியா போட்டா சீட் தரமாட்டாங்க. அவ்ளோ பீஸ் நீ கட்டுவியான்னு யோசிப்பாங்க”

இவன் தலையசைத்தான்.

“என்ன படிச்சிருக்க…”

“SSLC” என்றவாறே என் முன் முடியை சீப்பால் வாரிப் பிடித்து வெட்டினான்.

“B.A- னு போடறேன் “

“டேய் வேணாம்டா. பர்ஸ்ட் டைம் ஸ்கூல் சேக்குறேன். பொய் சொல்ல வேணாம்”

“உண்மைய சொன்னாலாம் வேலைக்காகது. நீ என்ன டாக்டர்னா சொல்லப்போற?  ஏதோ டிகிரி தான!”

“கண்டுபுடிச்சா பிரச்சனை ஆகிடும் குட்டி. “

“அதெல்லாம் கண்டுபுடிக்க முடியாது. செர்டிபிகேட் ரெடி பண்ணிடலாம்”

“அதுக்கு வேற செலவு பண்ணனுமா” இவன் அலுத்துக் கொண்டான். நான் அவர்கள் பேசுவதையே ஆர்வமாக பார்த்தேன்.  அவன் இப்போது பின் முடியை வெட்டி விட்டு, கையில் கத்தியை எடுத்தான்.

“ஜி பின்னாடி கத்தி போட வேணாம்” என்றேன். அவனுடைய கவனம் மொபைலின் மீது இருந்தது. கிருதாவை மட்டும் சரிசெய்துவிட்டு மீண்டும் கத்திரிகோலை எடுத்து,

“ஜி இந்த சைட் சரியா வெட்ல” என்று இடது புறம் முடியை சரி செய்தான்.

அதற்குள் அந்த வாலிபன் இவனைப் பார்த்து, “கம்… ஹ்ம். கம்யுனிட்டி” என்றான்

இவன் என்னைப் பார்த்தான்

“BC, OBC, அந்த மாதிரி”

பின் அவன் ஜாதியைக் கேட்டான். இவன் சொல்ல, அவன் ஆங்கிலத்தில் ஸ்பெல்லிங் கேட்டான். இவன் மீண்டும் என்னைப் பார்த்தான். மாறிமாறி கேள்விகள். பதில்கள். மீண்டும் வலது புறம் முடியை கத்தரித்தான்.

அந்த வாலிபன், “ஒரு நிமிஷம் இரு வரேன்” என்று வெளியே நகர எத்தனித்தான்.

“பாதியில விட்டு எங்கடா போற ?”

அவன் சுண்டு விரலை உயர்த்திக் காண்பித்தான்.

“டேய் முடிச்சு குடுத்துர்றா?”

“வந்துட்டேனே” அவன் கிளம்பினான்.

நான் மொபைலை வாங்கினேன். இன்னும் இரண்டு பக்கங்கள் கேள்விகள் மிச்சமிருந்தன. வேலைக்கான விண்ணப்ப படிவத்தில் கூட இவ்வளவு கேள்விகள் இருந்ததில்லை. நான் நான்கு கேள்விகள் பூர்த்தி செய்திருப்பேன். திரும்பி வந்த அந்த வாலிபன் மொபைலை வாங்கிக்கொண்டான்.

“உங்களுக்கு லேட் ஆகப் போது ஜி, அவன் பில் பண்ணுவான்” கடைக்காரன் சொன்னான். அந்த வாலிபன் தன் வேலையைத் தொடர்ந்தான். இவன் என் தலையில் கை வைத்தான்.

“Application submitted successfully.  your reference no is…” அந்த பையன் படித்தான்.

நான் கண்ணாடியில் தலையை பார்த்தேன். ஒரு பக்கம் மட்டும் முடி நிறைய வெட்டப்பட்டிருந்தது. தலை முக்கோண வடிவில் தெரிந்தது. நான் கடைக்காரனைப் பார்த்தேன். மொபைலைப் பார்த்துக் கொண்டிருந்த அவன் முகத்தில் எதையோ சாதித்த பரவசம் வெளிப்பட்டது. பின் அவன் என்னை பார்க்க, நான் என் தலையை சுட்டிக் காண்பித்தேன்.  அந்த பரவசம் மறைந்தது.

“ஜி சாரி ஜி. இந்த டென்ஷன்ல இருந்துட்டேன்…”

“பரவால, என்ன பண்றது”

“மறுபடி கத்திரி போட்டா திட்டுத்திட்டா தெரியும். மெசின் போட்டாதான் ஈவன் ஆகும் ஜி” அவன் தயங்கி தயங்கி சொன்னான்.

நான் தலை அசைத்தேன். இரண்டு நிமிடத்தில் என் தலை ஆர்மிக்காரன் தலை ஆனது. அக்கா பாஷையில் சொன்னால், ஸ்கூல் பையன் கட்டிங். நான் மீண்டும் கண்ணாடியை பார்த்த போது, கண்ணாடியினுள் அக்கா நின்றுகொண்டு தலையில் அடித்துக் கொள்வது போல் இருந்தது. வீட்டுக்கு போனால் அக்கா சாமியாடக் கூடும். பரவாயில்லை, ஒரு பிள்ளையின் படிப்பை விட, பெண் பார்க்கும் படலம் அவ்வளவு முக்கியமில்லை.

கும்பிடுசாமி- நகைச்சுவைக் கதை

‘கும்பிடுசாமி’ என்றதும் ஏதோ ஊர் பக்கம் இருக்கும் காவல் தெய்வம் என்றே பலரும் நினைத்துக் கொள்கின்றனர். கும்பிடுசாமி என்பவர் என்னுடைய சித்தப்பா. அவருடைய உண்மையான பெயர் என்ன என்பது யாருக்கும் நினைவிலில்லை. எனக்கு விபரம் தெரிந்ததிலிருந்து அவரை ‘கும்பிடுசாமி’ என்றே அனைவரும் அழைக்கின்றனர். அதற்கு முன்பிருந்தே அவர் கும்பிடுசாமிதானாம்.  நாங்களும் அப்படிதான் அழைப்போம்.

அவரை யாரும் உறவுமுறை சொல்லி, அப்பா என்றோ, மாமா என்றோ, சித்தப்பா என்றோ அழைக்கமாட்டார்கள். அவருடைய மகனே அவரை ‘கும்பிடுசாமி’ என்று தான் அழைப்பான். அவர் எப்போதும் கும்பிட்டுக்கொண்டே இருப்பது தான் அதற்கு காரணம்.

அவர் கை குழந்தையாக இருந்த போதே இரண்டு கைகளையும் கூப்பிக் கும்பிடுவாராம். எல்லோரும் அவர் பக்திமான் என்று சிலாகித்து போயிருக்கிறார்கள். அவரை பள்ளியில் சேர்த்த போதுதான் அவர் பக்திமானும்  இல்லை சக்திமானும் இல்லை என்று தெரிய வந்திருக்கிறது. முதலில் வகுப்பறையில் அவர் அவ்வப்போது கும்பிடுவதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையாம். இரண்டாம் வகுப்பு பள்ளித் தேர்வு எழுதிக் கொண்டிருந்தவர், திடிரென்று பென்சிலை கீழே போட்டுவிட்டு கும்பிடத் தொடங்கி இருக்கிறார். வகுப்பாசிரியர், கூட்டல் கணக்கிற்கு பதில் தெரியாமல் கடவுளை வேண்டுகிறார் என்று அமைதியாக இருந்திருக்கிறார். இவர் கிட்டத்தட்ட அரைமணி நேரம் கும்பிடுவதைப் பார்த்து அவருக்கு சந்தேகம் வந்திருக்கிறது. இப்படி கும்பிட்டால் கடவுள் பத்தாம் வகுப்பு கேள்விக்கே பதில் சொல்லியிருப்பாரே, இவன் ஏன் இன்னும் கும்பிடுகிறான் என்று யோசித்தவர் இவரை கும்பிடுவதை நிறுத்தச் சொல்லியிருக்கிறார்.  இவர் கேட்காததால், இரண்டு கைகளையும் விலக்கி விட்டிருக்கிறார். மீண்டும் இவர் கும்பிட்டிருக்கிறார். எத்தனை முறை விலக்கினாலும் இவர் மீண்டும் மீண்டும் கும்பிட்டிருக்கிறார். செய்ததை செய்யும் குரங்குப் பிள்ளை. அவ்வளவுதான் தாத்தாவிற்கு செய்தி  அனுப்பிவிட்டிருக்கிறார்கள்.  அதன்பின் தாத்தா அவரை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பவில்லை.

வீட்டில் வசதி இருந்ததால் அவர் கும்பிட்டு கும்பிட்டு தூங்கி இருக்கிறார்.  கும்பிடுசாமியாகவே இருந்தாலும் திருமணம் செய்துவைக்க வேண்டுமே, திருமணம் என்றால் வேலைக்கு போகவேண்டுமே என்று யோசித்த தாத்தா அவருக்கு ஏற்றார் போல் ஒரு வேலையை தேர்ந்தெடுத்திருக்கிறார்.  அது ஒரு துணிக்கடையில் வருபவர்களை வாசலில் நின்று வரவேற்க்கும் வேலை.

நாள் முழுக்க கும்பிட்டுக் கொண்டே இருந்தால் போதும். ஆனால் சில மாதங்கள் மட்டுமே அவரால் அந்த வேலையில் நீடிக்க முடிந்தது. அந்த கடை முதலாளியின் மகன் வெளிநாட்டிலிருந்து கும்பிடும் பொம்மைகளை  இறக்குமதி செய்து கடையின் முன் நிற்க வைத்துவிட்டான். அந்த பொம்மைகள் கும்பிட்டுக் கொண்டே தலையையும் ஆட்டி இருக்கின்றன. கும்பிடுசாமியால் கும்பிட மட்டுமே முடியும். வேறு வேலை பார்த்துக் கொள்ளலாம் என்று தாத்தா எண்ணியிருக்கிறார்.

கும்பிட்டுக் கொண்டே இருக்கும் அடுத்த வேலை எது? தாத்தா  யோசித்தக் கொண்டிருந்த நேரத்தில் அந்த ஊர் சட்டமன்ற உறுப்பினர் தலையில் தேங்காய் விழுந்து இறந்து போக, ஊருக்கு இடைத்தேர்தல் வந்திருக்கிறது. தாத்தாவிற்கு யோசனை பிறந்தது.

“வாக்காள பெருமக்களே…” அந்த சுயேட்ச்சை  வேட்பாளர் பேசிக்கொண்டே போகும் போது, அருகில் கும்பிடுசாமி கும்பிட்டுக் கொண்டே வருவாராம்.  ஒரு நாளைக்கு எவ்வளவு மணிநேரம் கும்பிடுகிறாரோ அதற்கு ஏற்றார்போல் தினப்படியும் உண்டாம். ஆனால் இவர் கும்பிடுவதை கவனித்த மக்கள் அனைவரும் இவரையே சுற்றி வரத் தொடங்கியிருக்கின்றனர். வேட்பாளருக்கு, எங்கே இவர் அரசியலில் குதித்துவிடுவாரோ என்ற பயம் வந்துவிட்டது. கும்பிடுக்கு அந்த வேலையும் போயிற்று.

தாத்தா மருத்துவரிடம் போயிருக்கிறார். ஏதேதோ புரியாத நோய் பெயர் சொல்லி மருத்துவர் நிறைய காசை பிடிங்கிக் கொண்டிருக்கிறார். கும்பிடு சாமியிடம் எந்த மாற்றமும் இல்லை. ஒருவேளை இதெல்லாம் காத்துகருப்பின் வேலையாக இருக்குமோ என்று பயந்த அப்பாயி மாசி பெரிய கருப்புசாமியிடம் போய் முறையிட்டிருக்கிறார். தன் மகனை அண்டிய காத்து ஓட வேண்டும் என்று வேண்டிக் கொண்டு கிடா வெட்டியிருக்கிறார். ஊரில் ஆடுகளுக்கு  பற்றாக்குறை வந்ததுதான் மிச்சம்.

கல்யாணம் பண்ணிவைத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று சேலத்தில் ஒரு ஜோசியர் சொல்ல, உத்தியோகம் இல்லாமலிருப்பதும் புருஷலட்சணம்தான் என்று அப்பாயி முடிவெடுத்திருக்கிறார்.

ஊரில் யாரும் கும்பிடுக்கு பெண் கொடுக்க முன்வரவில்லை. மேலும் அவரை பலரும் கேலி பேசியிருக்கிறார்கள். அதனால் தாத்தா, குடும்பத்தோடு மெட்ராசிற்கு குடி புகுந்திருக்கிறார். தாம்பரம் அருகே ஒரு கிராமத்தில் வசித்து வந்த போது, கும்பிடு சாமி கும்பிட்டுக் கொண்டே இருப்பது மரியாதைக்காக என்று தவறாக புரிந்துகொண்ட அந்த ஊர் பஞ்சயாத்து தலைவர், இவ்வளவு மரியாதையான மனிதனை தவறவிடக் கூடாது என்று முடிவுசெய்து  தன் கடைசி மகளை கும்பிடு சாமிக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்கப் போவதாக சொல்லியிருக்கிறார். தாத்தாவிற்கு உள்ளுக்குள் சந்தோசம் என்றாலும், எப்படி மகன் தாலிக் கட்டுவான், அவன் கும்பிட்டுக் கொண்டே இருப்பானே என்று பயந்திருக்கிறார். தன் பையனிடம் இருக்கும் பிரச்சனையை தன் (சம்மந்தி) சமப்பந்தியாகப் போறவரிடம் சொல்லிவிடலாம் என்று யோசித்திருக்கிறார். அப்போது தான் தெரிந்திருக்கிறது, பஞ்சாயத்து தலைவர் பகுத்தறிவு கட்சியை சேர்ந்தவர் என்பது. தாத்தாவிற்கு பெரும் மகிழ்ச்சி. தாலி கட்டவேண்டிய பிரச்சனை இல்லாமல் பகுத்தறிவு திருமணம் நடந்து முடிந்திருக்கிறது.

பஞ்சயாத்து தலைவரின் குடும்பம் மிகப் பெரியது. வசதி படைத்தது. திருமணத்திற்கு பின்பு கும்பிடுசாமி தன் மனைவியை கும்பிட்டுக் கொண்டே இருந்ததைப் பார்த்து அவர்கள் அலமந்து போயிருக்கிறார்கள்.  தாங்கள் அனைவரும் செல்லமாக வளர்த்த பெண்னை வழிப்படும் ஆண்மகன் கிடைத்துவிட்டதாக எண்ணிய பெண்ணின் சகோதரர்கள் தங்களின் பெயரிலிருந்த ஒரு பெரிய துணிக் கடையை கும்பிடு சாமியின் பெயரில் எழுதி வைத்திருக்கிறார்கள்.

“இது என்னையா பேரு. கும்பிடுசாமி. இந்த பேருக்கு எப்படி ரிஜிஸ்தர் பண்றது?” சொத்தை பதிவு சைய்யும் போது பதிவாளர் கேட்டிருக்கிறார். அவ்வளவுதான் கும்பிடுசாமியின் மச்சான்கள் அனைவரும் அந்த அரசு அதிகாரியை அடிக்கப் போயிருக்கிறார்கள். பயந்த அதிகாரி, கும்பிடுசாமி என்று பெயரிலேயே சொத்தை பதிவு செய்ய அது அன்று முதல் அவரின் சட்டப்பூர்வமான பெயர் ஆனது. மேலும் கும்பிடுசாமிக்கு ஒன்றென்றால் அவருடைய ஐந்து மச்சான்களும் வருவார்கள் என்ற செய்தி ஊரில் வேகமாக பரவியிருக்கிறது. எல்லோரும் கும்பிடுசாமியை ஒரு குட்டி டான் போல பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

“கோன் ஹே ஒ. எனக்கே பாக்கனும்போல இருக்கே…” என்று பம்பாயில் சோட்டாராஜன் சொல்லும் அளவிற்கு கும்பிடு அண்ட் கோ-வின் செல்வாக்கு பரவியிருக்கிறது.

அந்த அதிகாரத்தோடு அவர் வியாபாரம் செய்யத் தொடங்கியிருக்கிறார். ஆனால் அவருக்கு எந்த வியாபாரமும் செய்யத் தெரியாது என்ற உண்மை தாத்தாவிற்கும் அப்பாயிக்கும் மட்டுமே தெரியும். அதனால் தாத்தா புத்திசாலித்தனமாக கும்பிடுசாமியை கல்லாவிற்கு அருகில் அமரவைத்துவிட்டு, கல்லாவில் கும்பிடுசாமியின் மச்சான் ஒருவரை அமர வைத்துவிட்டார். கும்பிடு சாமி கும்பிடுவதை பார்ப்பதற்காக நிறைய ஜனங்கள் அங்கே வரத் தொடங்க, அவருடைய ஸ்தாபனம் விறுவிறுவென வளர்ந்திருக்கிறது. கும்பிடுசாமி அந்த இடத்தில் அமர்வதுதான் ராசி என்று தாத்தா எல்லோரையும் நம்பவைத்துவிட்டார். பஞ்சாயத்து தலைவர்தான் பகுத்தறிவுவாதி. அவருடைய மகன்கள் எல்லாம் ராசிபலன்(வியா)வாதிகள். டிவியில் ராசிபலன்  பார்த்துவிட்டு குரு இன்று எந்தக் கட்டத்தைப் பார்க்கிறார் என்றெல்லாம் ஆராய்ச்சி செய்து  வியாபார முதலீடுகள் செய்யக்கூடிய அளவிற்கு ஜோஷிய ஜாதகத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். அதனால் அவர்களும் கும்பிடுசாமி அங்கே அமர்வதால் தான் வியாபாரம் நடக்கிறது என்று நம்பி அவரை அங்கேயே விட்டுவிட்டனர். கல்லாவிற்கு பக்கத்திலிருக்கும் இருக்கை கும்பிடுசாமியின் நிரந்தர இருக்கையாகிப் போனது இப்படிதான்.

சூரியன் உதித்து மறைய, கும்பிடுசாமிக்குப் பிள்ளைகள் பிறக்க,  மெட்ராஸ் சென்னையாக, தாம்பரத்தை சுற்றியிருந்த கிராமங்கள் அபார்ட்மென்ட்களாக மாறிப்போக, அவரின் வியாபாரமும் பெருக கும்பிடுசாமி (மிகப்)பெரிய மனிதராக உருவெடுக்கத் தொடங்கியிருக்கிறார். கும்பிடுசாமியின் பிள்ளைகள் வளர்ந்து அமெரிக்காவில் வியாபாரம் செய்யத் தொடங்கிவிட்டார்கள். அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்ட கடையில் கும்பிடுசாமி கும்பிடுவதை படமாக்கி சுவற்றில்  மாட்டிவிட்டான் அவருடைய மகன். அந்த படத்தைப் பார்க்கவே பல அமெரிக்கர்கள் வருகிறார்களாம்.

இன்று கும்பிடுசாமிக்கு நிறைய வயசாகிவிட்டது. ‘கும்பிடுசாமி டெக்ஸ்டைல்ஸ்’ உலகம் முழுக்க பரவிவிட்டது. இன்னும் அவர் கும்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறார். அவர் மனைவி இன்று வரை தன் கணவன் தன்னை வழிபடுவதாக நினைத்து வருகிறார். அவர் குடும்பத்தார் அவர் கும்பிடுவதுதான் ராசி என்று நம்பி வருகின்றனர். மக்கள் அவரை தேடி வந்து பார்க்கின்றனர்.  அவரிடம் நிறைய பணம் சேர்ந்துவிட்டது. அவருக்கு திநகரில் பெரிய பங்களா இருக்கிறது. வீட்டில் பல வெளிநாட்டு கார்கள் நிற்கின்றன. எந்த கட்சி அடுத்து ஆட்சிக்கு வரவேண்டும் என்று முடிவுசெய்வதே அவர்தான் என்று பேசிக் கொள்கிறார்கள். தமிழக அரசியலில் அவருக்கு தெரியாத ரகசியம் எதுவுமில்லை என்பது கூடுதல் தகவல்.

மேலும், கும்பிடுசாமி என்ற பெயரில் ஆதார் அட்டை வைத்திருக்கிறார். அதை தன் மொபைல் நம்பரோடும் வங்கிக் கணக்கோடும் இணைத்துவிட்டார் (அதனால் அவர் சேவைத் துண்டிக்கப் படவில்லை).  அவர் இப்போது வெறும் கும்பிடுசாமி இல்லை. ‘கும்பிடுசாமி அண்ணாச்சி’. ஆனால் அவருடைய உண்மையான பெயர் என்ன என்பதுதான் யாருக்கும் நினைவிலில்லை.

ப்ளாக் பாரஸ்ட் கேக்- ஹாஸ்யக் கதை

ராமசாமிக்கு கோபம் அதிகமாகிக் கொண்டே போனது. யாராவது அவர்முன் தற்போது போய் நின்றால் அவர் என்ன செய்வார் என்று அவருக்கே தெரியாது. ஒருவேளை கடித்துக்கூட வைத்துவிடலாம். அப்படி என்ன பிரச்சனை!

புதிதாக வீட்டிற்குள் நுழைந்திருக்கும் சுமி தான் எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணம். ராமசாமிதான் அந்த வீட்டில் சீனியர். ராமசாமிக்கு ஒரு மனைவி சித்ரா. சித்ராவுக்கு தெரியாமல் அவர் பல பேருடன் கும்மியடிப்பது வழக்கம். அவர்களுடைய ஒரே மகன் ரெங்கா. இப்போது பெங்களூரில் இருக்கிறான்.

அமெரிக்காவிலிருந்து வந்த சுமி தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்துகிறாளோ என்ற எண்ணம் ராமசாமியை வாட்டி வதைக்கத் தொடங்கியது. வீட்டின் கடைக்குட்டி வர்ஷினி தான் சுமிக்கு இடம் கொடுத்து வைத்திருக்கிறாள்.

இந்த வீட்டிற்கு எந்த வகையிலும் சம்மந்தமில்லாத ‘சுமி’ திடிரென்று உள்ளே நுழைந்து (வர்ஷினியை கையில் போட்டுக்கொண்டு) அந்த வீட்டின் முக்கிய கர்த்தாவாக விளங்கிய தன்னுடன் மல்லுக்கட்டுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள அவர் தயாராக இல்லை.

அவருக்கு பதினொரு வயது இருக்கும்போது ஆறாம் வகுப்பு படித்த லட்சுமணனை கையில் கடித்து வைத்ததைப்போல் இப்போது சுமியை கடித்துவிடலமா என்று யோசிக்கத் தொடங்கிவிட்டார் ராமசாமி.

ராமசாமிக்கு வைட் பாரஸ்ட் கேக் என்றால் உயிர். அதை எந்த கூச்சமுமின்றி நக்கி நக்கித் தின்பார். கடந்த சில வருடங்களாக தான் கேக் எல்லாம். வர்ஷினி முதன்முதலில் கல்லூரி கல்சுரல்ஸில் முதல் பரிசு வாங்கியதை கொண்டாடும் விதமாக ராமசாமிக்கு வைட் பாரஸ்ட் கேக் வாங்கி கொடுத்தாள்.  அப்போதுதான் அவர் அதை முதன்முதலில் சுவைத்தார். (அவருக்கு சுமி வயது இருக்கும்போது அவர் சாப்பிட்ட ஒரே இனிப்பு வகை மைசூர்பாக்கு மட்டுமே.) இப்போது அந்த வர்ஷினியே தனக்கு வைட் பாரஸ்ட் கேக் தராமல் போவாள் என்று ராமசாமி எதிர்ப்பர்த்திருக்கவில்லை.

வர்ஷினி தன் குழந்தை சாரலின் முதல் பிறந்தநாளை கொண்டாடுவதற்காகதான்  அமெரிக்காவிலிருந்து வந்திருந்தாள். வரும்போது சுமியையும் அழைத்து வந்து விட்டாள். சாரலின் பிறந்தநாள் விழாவில் கேக் வெட்டப்படும் வரை, வைட் பாரஸ்ட் கேக் வெட்டுவார்கள் என்றே ராமசாமி நினைத்திருந்தார்.  ஆனால் அவர்கள் ப்ளாக் பாரஸ்ட் வாங்கி வந்துவிட்டார்கள்.

“சுமிக்கு ப்ளாக் பாரஸ்ட் தான் புடிக்கும்” வர்ஷினி சப்தமாக யாரிடமோ சொன்னது ராமசாமியின்  காதில் தீயாய் விழுந்தது.

‘சுமி சுமி சுமி. இந்த வர்ஷினிகூட இப்படி மாறிட்டாளே! ஆறாவது படிக்கும் போது டியூஷன் முடிச்சு வீட்டுக்கு தனியா வர பயப்படுவான்னு அரை கிலோமீட்டர் நடந்தே போய் கூட்டிட்டு வருவேனே. எல்லாத்தையும் மறந்துட்டாளே!’ ராமாசாமி நொந்துக் கொண்டார். ஆனால் இப்படி சுணங்கி நிற்பதை விட ஏதாவது செய்து சுமியை இந்த வீட்டிலிருந்து அனுப்பிவிட்டால் மீண்டும் தான் இழந்த பழைய அங்கிகாரத்தை பெற்றுவிடலாம் என்று நினைத்தார். தன் எதிர்ப்பை பதிவு செய்யும் பொருட்டு உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தார். பார்ட்டி அரங்கிலிருந்து கோபமாக வெளியேறினார். ஆனால் அவரை யாரும் சட்டை செய்யவில்லை. இரண்டு நாட்கள் தன் அறையிலேயே காலம் கழித்தார். வேலைக்காரி வந்து உணவை வைத்துவிட்டு சென்றாள். வேறுயாரும் அவரை காண வரவில்லை. ஏன், அவர் மனைவி சித்ராகூட சுமியை ஏற்றுக்கொண்டுவிட்டாள்.

அன்று அவர்கள் அனைவரும் சேர்ந்து தீம் பார்க் சென்றபோது சுமி ஓடிச்சென்று காரின் முன்னிருக்கையில் அமர்ந்துகொண்டது ராமசாமிக்கு பொறாமையை ஏற்படுத்தியது. அன்றிரவு சுமிக்கு பாடம் கற்பிக்க முடிவு செய்தார்.

இரவு தீம் பார்க்கிலிருந்து தாமதமாக வந்த அனைவரும் களைப்பில் உறங்கிப்போயினர். சுமி ஹாலிலேயே சோபாவில் படுத்துக்கொண்டாள்.

மணி இரவு பன்னிரெண்டு. தூக்கமில்லாமல் தோட்டத்தில் உலாத்திக்கொண்டிருந்த ராமசாமி ஹாலிற்கு வந்தார். சுமி அருகே வந்தவர், ஓங்கி சுமியின் கன்னத்தில் ஓர் அறை அறைந்துவிட்டு விறுட்டென்று சோபாவின் பக்கவாட்டில் மறைந்துக்கொண்டார்.

பதறியடித்து விழித்த சுமி பயத்துடன் அக்கம்பக்கம் பார்த்தாள். இருட்டில் எதுவும் தெரியவில்லை. கன்னத்தை தடவிக்கொண்டே மீண்டும் உறங்கிப்போனாள்.

ராமசாமிக்கு பெருமிதமாக இருந்தது. மறுநாளும் அதே நேரத்தில் அதேபோல் சுமியின் கன்னத்தில் அறைந்தார். பதறிய சுமி எழுந்து வர்ஷினியின் அறைநோக்கி ஓடினாள். அவள் அறை தாளிடப்பட்டிருந்ததால் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தாள்.

அவளுக்கு அங்கே தனியாக இருக்க பயமாக இருந்தது. வெளியே வராந்தாவிற்கு வந்தாள். இருட்டாக இருந்தது. கதவருகே ஒளிந்துகொண்டிருந்த ராமசாமி ‘உர்’ ‘உர்’ என்று உறுமினார். அந்த சப்தம் சுமியை மேலும் பயமுறுத்தியது. இரவெல்லாம் தூங்காமல் அறையில் உலாத்தினாள். ராமசாமி நிம்மதியாக படுத்துறங்கினார். மறுநாள் காலையில் ராமசாமி நடு அறைக்கு வந்தபோது அனைவரும் பரபரப்பாக இருப்பதைக் கண்டார்.

சுமிக்கு ஜூரம். அவள் சோபாவில் படுத்திருந்தாள். வர்ஷினி அழுதுக் கொண்டிருந்தாள். “அதெல்லாம் சரியாகிடும்” வர்ஷினியின் தந்தை அவளை தேற்றினார். ராமசாமிக்கு எதையோ சாதித்துவிட்ட சந்தோசம், வெளியே ஓடி வந்து ஆனந்தக் கூத்தாடினார்.

சுமிக்கு ஜூரம் அதிகமாகிக் கொண்டே போனது. டாக்டர் வந்து ஊசி போட்டு மருந்து கொடுத்துவிட்டு போனார். உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. பிடித்ததை வாங்கி தந்தால் உடல் நிலை தேறும் என்று யாரோ சொல்ல, சுமிக்கு பிடித்த ப்ளாக் பாரஸ்ட் கேக் வாங்கி வந்து அவள் முன்பு வைத்தார்கள். ஆனால் அவள் கண்களை திறக்கவில்லை. வர்ஷினி சுமி அருகேயே படுத்துக் கொண்டாள். ராமசாமி தன் அறையில் உறங்கிப் போனார்.

திடிரென்று வர்ஷினியின் அழுகுரல் கேட்டது. ராமசாமி வந்து பார்த்தபோது சுமி இறந்திருந்தாள். சில நாள் சோகமாக இருந்த வர்ஷினி திரும்பி ஊருக்கு சென்றுவிட்டாள். அன்றிரவு, இரவில் ராமசாமி தனியாக உறங்கிக் கொண்டிருக்க சுமியின் ஆவி வந்து அவர் கன்னத்தில் ஓங்கி அடித்தது. ராமசாமி திடுக்கிட்டு விழித்தார். வெளியே எட்டிப் பார்த்தார். சுமி சோபாவில் படுத்திருந்தாள். வர்ஷினி அவள் அருகே அமர்ந்திருந்தாள்.

ராமசாமி வர்ஷினி அருகே செல்ல, அவள் ராமசாமியை இறுக்கி அணைத்துக் கொண்டு அழுதாள். ராமசாமிக்கும் கண்கள் கலங்கின. தன் எண்ணம் இவ்வளவு மோசமாக போய்விட்டதை எண்ணி வருந்தினார். சுமியை பார்த்தார். அவள் உறங்கிக் கொண்டிருந்தாள். அவள் அருகே சென்று, முன்பு தான் அறைந்த அவளின் கன்னத்தை தடவினார். காலையிலிருந்து கண்களை திறக்காமல் இருந்த சுமி, நிதானமாக தன் கண்களை திறந்தாள். ராமசாமி அவளை பாசமாக பார்த்தாள். வர்ஷினிக்கு சந்தோசம். “அப்பா சுமி முழிச்சிட்டா” என்று கத்தினாள். ராமசாமி சுமியின் கன்னத்தை மீண்டும் தடவ, அவள் ராமசாமியை பார்த்து ‘மியாவ்’ என்று பாசமாக கத்தினாள். ராமாசாமியும் தன் சந்தோசத்தை வெளிப்படுத்தும் வகையில் ‘லொள்’ ‘லொள்’ என்று இரண்டு முறை குறைத்தார்.

முனைவர் முருகேசன்

1

பல அறிஞர்களையும் விஞ்ஞானிகளையும் உருவாக்கிவிட்ட பின்னும் அந்த கல்லூரி தலைக் கனமின்றி அமைதியாகவே இயங்கிக் கொண்டிருந்தது. அங்கு ஓர் வகுப்பறை மட்டும் சற்று சப்தமாகவே காணப்பட்டது. பல கூத்துகளும் கிண்டல்களும் அங்கு அரங்கேறிக்கொண்டிருந்தன. இவ்வளவு சலசலப்புகளுக்கு மத்தியிலும் மாணவர்கள் யாரையோ எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். திடீரென உள்ளே நுழைந்தார் வகுப்பாசிரியர்  முருகேசன். வகுப்பே நிசப்தமாயிற்று. அவர் மேலிருக்கும் மரியாதையினாலோ, பயத்தினாலோ அன்று. அவர் கூறும் வழக்கமான அந்த மூன்று சொற்களை எதிர்பார்த்து, “டுடே நோ கிளாஸ்”

அவர் பேசத்தொடங்கும் முன்பே மாணவர்கள் அவரை போல் பேசி கிண்டலடிப்பது அவர் காதுகளில் விழாமலில்லை. ஆனால் அவர் அதை கண்டுக் கொள்ளாது, அன்றும் வகுப்பை புறக்கணிப்பதையே தன் முழு நோக்காக கொண்டிருந்தார். மாணவர்கள் அமைதியான பின், முருகேசன் பேச தொடங்கினார், ” இன்னைக்கு கிளாஸ் இல்ல. வீ ஹாவ் ஏ மீட்டிங். எல்லாரும் ஆடிட்டோரியம் வந்துருங்க” என்றவாறே அறையை விட்டு வெளியேறினார்.

முருகேசன் அந்த கல்லூரியில் கணக்காசிரியராக பணியாற்ற தொடங்கி கிட்டதட்ட ஐந்து ஆண்டுகள் முடிந்திருக்கும்.அரசு கல்லூரி ஒன்றில் இளநிலை படிப்பை முடித்துவிட்டு, வேலை தேடும் படலத்தை தொடங்கினார். ஆனால் அது வெற்றி பெறவில்லை. மீண்டும் படிப்பை தொடர்ந்தார். முதுநிலை பட்டமும் கிடைத்தாகிவிட்டது. எந்த வேலையும் கிடைக்கவில்லை எந்த நிலையில்தான் அந்த விரிவுரையாளர் வேலை அவருக்கு கிட்டியது. தன் தந்தை இரைத்த பணத்திலும், ஓர் அரசியல்வாதியின் செல்வாக்கிலும் கிட்டிய வேலை அது.

முருகேசன் வசதி படைத்த குடும்பதில் பிறந்தவர். தன் சம்பாத்தியம்தான் தன் குடும்பத்தை காப்பாற்ற வேண்டுமென்ற நிலையில்லை. அவர் வேலைக்கு போக வேண்டுமென்று யாரும் அவரை வற்புறுத்தவுமில்லை. ஆயினும் உத்யோகம் புருஷ லக்சனமாயிற்றே ! அதனால்தான் அவர் அந்த வேலையில் சேர்ந்தார். பெயருக்கென்ற ஓர் வேலையென்றே அவர் அதை கருதினார். அவர் கல்லூரியில் சேர்ந்த புதிதில் தான் மிகவும் கண்டிப்பானவன் எனக் காட்டிக்கொள்ள பல முயற்சிகளை மேற்கொண்டார். மாணவர்களிடம் சற்று முரட்டு தனமாகவே நடந்துக் கொள்வார். ஆனால் அவர் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் வீண். மாணவர்களின் நகைபுக்குள்ளானதே மிச்சம்.

2

கணக்கு பாடங்களை மனப்பாடம் செய்துவந்து வகுப்பில் ஒப்பிப்பதையே அவர் வழக்கமாக கொண்டிருந்தார். அவை மாணவர்களுக்கு புரிகின்றனவா என்பது பற்றி அவர் கவலைப் பட்டதில்லை. அது தனக்கு அவசியமில்லை என்றே அவர் எண்ணினார்.

சிறு வயதிலிருந்து கணக்கு பாடமென்றால் அவர் வயிற்றில் புளியை கரைக்கும். கல்லூரியிலும் சில அரியர் வைத்த ஞாபகம். ஆனால் ஒரு வருடத்திற்க்கு முன்பு எப்படியோ கணக்கில் முனைவர் பட்டமும் பெற்றுவிட்டார். அது எப்படி என்பது அவருக்குதான் வெளிச்சம்…

முனைவர் பட்டம் பெற்ற பின் அவர் வகுப்பிற்க்கு அதிகமாக வருவதில்லை. அப்படியே வந்தாலும் எதையாவது ஒப்பித்துவிட்டு பாடம்
முடிந்துவிட்டது என்பார். அவர் வகுப்பிற்க்கு வராததையெண்ணி மகிழ்ச்சியடைந்த மாணவர்களும் உண்டு. அவர் வகுப்பில் யாரும் கேள்வி கேட்பதை விரும்பமாட்டார். சிலர் கேள்வி எழுப்பினாலும், அவர் கூறும் ஒரே பதில், “நோ! ப்ராப்ளம் ! ஐ வில் கிவ் நோட்ஸ்”

இக்காரணங்களால்தான் மாணவர்கள் அவரை வெறுத்தனர் என்பதை சொல்லவும் வேண்டுமா? குறிப்பாக நிரஞ்சன் அவனை மிகவும் வெறுத்தான். நிரஞ்சன் படிப்பில் கெட்டிக்காரன், கல்லூரியில் மிகவும் பிரபலமான மாணவன். ஆசிரியர்களை மதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன் தான். ஆனால் முருகேசனை கண்டாலே அவனுக்குள் வெறுப்புதான் மிஞ்சும்.

“தான் கற்ற கல்வியை பிறருக்கு போதிப்பதை வெறும் தொழிலாக கருதாமல் சேவையாக கருதும் ஆசிரியர்கள் மத்தியில் முருகேசன் போல் மெத்தனம் எண்ணம் கொண்ட சிலரும் இருக்கத்தானே செய்கிறார்கள்.
ஏன் நம்ம ஸ்கூல் கிருபா சார் இல்ல..நம் கல்லூரியிலும் ஜேம்ஸ் சார், இளங்கோ சார்லாம் எவ்வளவு சிறந்த ஆசிரியரா இருக்காங்க..இவர் மட்டும் ஏன் இப்படி இருக்கார்!” என்று நிரஞ்சன் தன் நண்பர்களிடம் புலம்பிக்கொண்டிருப்பான்.  ஒரு ஆசிரியரின் கடமையை முருகேசன் சரிவர செய்யவில்லை என்ற கருத்தை அவரிடமே பலமுறை கூறியிருக்கிறான். அதனால் முருகேசனும் நிரஞ்சனை கண்டாலே எரிந்து விழுவார்.

நிரஞ்சன் படிப்பில் கெட்டிக்காரனாதலால், அவனின் இண்டெர்னல்ஸ் மார்க்கை முருகேசனால் குறைக்க முடியவில்லை. இருந்தாலும் அவனை கடிந்துரைப்பதையே அவர் வழக்கமாக கொண்டிருந்தார்.நிரஞ்சனுக்கும் முருகேசனும் நடக்கும் பனிப்போர் அந்த கல்லூரியில் மிக பிரபலம்…

3

மணி காலை 10. அனைத்து மாணவர்களும் “ராஜம் ஹால்” ஆடிட்டோரியத்தில் அமர்ந்திருந்தனர். பலர் பேசிக் கொண்டும், பலர் பெண்களை கவர்வதற்க்கு வேலை செய்வது போல் பாவனை செய்துக் கொண்டுமிருந்தனர். மொத்தத்தில் அங்கு எழும்பிய இரைச்சலில் அந்த இடம் சந்தை கடைபோல் காட்சி தந்தது.

அங்கு கல்லூரி முதல்வரின் வருகையை கண்டதும் அனைவரும் அமைதியாயினர்.அவன் உடன் வந்திருப்பவரே சிறப்பு விருந்தினர் என்பது அவர் அணிந்திருந்த கோட்டு சூட்டிலிருந்து தெரிந்தது. மாணவர்கள் அமைதியான பின் கல்லூரி முதல்வர் பேச தொடங்கினார்.

“இன்னைக்கு ஏன் இந்த கூட்டம் வச்சாங்கணு நீங்க யோசிக்கிறது புரியுது.
நம்ம கல்லூரில ஆங்கில ஆசிரியரா பணியாற்றுன பேராசிரியர்.செந்தில், உங்கள்ல பல பேருக்கு தெரிஞ்சிருக்காது. அவருக்கு இன்னைக்கு 25ஆவது நினைவு தினம். அவருக்கு அஞ்சலி செலுத்தவே இந்த கூட்டம்.

இங்கு மேடையில் அமர்ந்திருக்கும் சிறப்பு விருந்தினர் வேற யாருமில்ல. இந்த கல்லூரியின் முன்னாள் மாணவர் பிரபாகர். இன்னைக்கு மிகப் பெரிய நிறுவனமான ‘டெச்னோ’வின் இயக்குனர்.அவர் செந்தில் சார் கிட்ட படிச்சவர்தான். செந்தில் சார் பற்றி நான் பேசுரதவிட, திரு.பிரபாகர் பேசுனா இன்னும் பொருத்தமா இருக்கும்.”

பலரின் கைத்தட்டல்களுக்கிடையே பிரபாகர் பேச தொடங்கினார்.

“ஹலோ ஜூன்ஸ். அக்சுயளி நான் இன்னைக்கு கனடா போறதா இருந்தது.செந்தில் சார்க்கு அஞ்சலி கூட்டம்னு சொன்னதும் உடனே கனடா டிரிப்ப கேன்ஸல் பண்ணிட்டேன்” என்று வழக்கமாக அனைத்து சிறப்பு விருந்தினரும் கூறும் அதே கதைகளை கூறத் தொடங்கினார் பிரபாகர். அவர் மட்டும் என்ன விதிவிலக்கா…!

“செந்தில் சார் ஒரு ஆசிரியராக பழகியதை விட,  ஒரு தகப்பன் மாதிரிதான் எங்ககிட்ட பழகினார். பஞ்சுயாலிட்டி என்றால் அது செந்தில் சார் தான்,

“அது மட்டுமில்ல, பாடம் நடத்துவதிலையும் அவர் எக்ஷ்பெர்ட்.அவர் வகுப்பு எங்களுக்கு போர் அடிச்சதேயில்ல, அவ்வளவு சுவாரஸ்யமா நடத்துவார். எவ்வளவு கஷ்டமான பாடத்தையும் எளிதா புரிய வைப்பார். வகுப்பில் இருக்கிற அத்தனை பேருக்கும் புரிஞ்சாதான் அடுத்த பாடத்தை ஆரமிப்பார்”

மாணவர்களும் வழக்கம் போல் எதற்க்கு கை தட்டுகிறோம் என்று தெரியாமல் கைதட்டிக் கொண்டிருந்தனர்.

இதையெல்லாம் வடக்கு மூலையில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் நிரஞ்சன். செந்தில் சாரை பற்றி கேட்க கேட்க அவன் மனதினுள் ஏதேதோ எண்ணங்கள், அலைமோத தொடங்கிற்று.

“அதெப்படி அவர் இவ்வளவு நல்லவரா இருக்க முடியும்.ஒரு வேலை இவர் சொல்றது பொய்யா இருக்குமோ ?

இல்ல இவ்வளவு பெரிய மனுஷன் பொய் சொல்ல மாட்டார். இவ்வளவு நல்லவங்க மத்தியில் இந்த முருகேசன் மட்டும் ஏன் இப்படி ?”

“இப்ப மட்டும் அந்த மைக் ஏன் கையில கிடைச்சா…அந்த முருகேசனோட வண்டவாளத்தெல்லாம்….

ச்சே. இப்படி ஒரு மனுசனா.,, அவன் சரியானா….” என்று முருகேசனை பற்றி ஆக்ரோஷமாக சிந்தித்தவாறே சிறப்பு விருந்தினரையே முறைத்துக் கொண்டிருந்தான் நிரஞ்சன்.

திடீரென மாணவர்கள் வெளியே வேகமாக ஓடிக் கொண்டிருந்தார்கள். ஸ்நாக்ஸ் தர தொடங்கிவிட்டார்கள் போலும். வழக்கமாக கல்லூரிகளில் மீட்டிங்கிற்க்கு முழு மனதுடன் வருவது இரண்டு பேர். ஒன்று முன்னின்று நடத்துபவர். இன்னொருவர் சிறப்பு விருந்தினர். மீதி அனைவரும் ஸ்நாக்ஸிற்காக வருபவர்களே…

4

அந்த கல்லூரி பல ஆசிரியர் தினங்களை கண்டுவிட்டது. பல நூறு அதிகாரிகளை உருவாக்கிவிட்டது. சில சமூக விரோதிகளையும்தான்…

இன்று, நிரஞ்சன்,மன்னிக்கவும் மிஸ்டர். நிரஞ்சன் மிகப் பெரிய நிறுவனமான ‘சண்ட்ஸ்’ என்டர்ப்ரைஸின் நிறுவனர். தன் அலுவலகத்தில் அமர்ந்து மடிக்கணினியில் வேலை செய்துக் கொண்டிருந்தார்.

“மே ஐ கம் இன் சார்” என்று கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தார் நிரஞ்சனின் காரியதரசி.

“யா!”

“சார் உங்கள பார்க்க ஒரு பெரியவர் வந்திருக்கார்.”

“நான் பிஸி…”

“இல்ல சார். உங்க கல்லூரி புரொஃபசர்னு சொன்னார் “..அதான்..”

“கல்லூரி புரொஃபசரா..!”

நிரஞ்சனின் முன் பழைய நினைவுகள் எஃப் ஒன் கார்களைவிட வேகமாக ஒடியது.

“பேர் என்ன சொன்னார் ?”

“புரொஃபசர் டாக்டர் ஜேம்ஸ்”

நிரஞ்சன் தன் இருக்கையிலிருந்து எழுந்து வாசலை நோக்கி வேகமாக நடந்தார்.

5

“வாங்க சார்.. எப்படி இருக்கீங்க.. உக்காருங்க..” என்றபடி அவரை வரவேற்பறையில் இருந்த சோபாவில் அமர்த்தினான்.

“.நல்ல இருக்கேன் நிரஞ்சன். நீ நல்ல நிலைமையில இருக்கிறத பார்க்கிறப்போ எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.

உன் கம்பெனி இன்னைக்கு மிக மிக பிரபலமாச்சே ! ஏன் மாணவன் நிரஞ்சன்னு சொல்றது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு.

ஆனா நீ தான் காலேஜ் பக்கமே வரதில்ல..”

“சார் கொஞ்சம் பிசி. அதான் ….”

“சும்மா கேட்டேன்பா..நீ கோச்சுக்காத “

“உங்க மேல எனக்கு என்ன சார் கோபம். நான்  இன்னைக்கு நல்லாயிருக்குறதற்க்கு நீங்க தான் சார் காரணம்”

“என் நிரஞ்சன் இன்னும் அப்படியே இருக்கான். இப்ப நான் தான் கல்லூரி முதல்வர்…”

“வாழ்த்துக்கள் சார். நான் வேற மறந்துட்டேன்.என்ன சாப்பிடுறீங்க ?” நிரஞ்சன் தன் காரியதரசியை நோக்கினான். அவர் குளிர் பானம் எடுத்து வர அங்கிருந்து நகரும் போது, அவர் கையை பற்றினார் டாக்டர் ஜேம்ஸ், “அதெல்லாம் வேணாம் தம்பி. நிரஞ்சன், வர 23ஆம் தேதி நம்ம கல்லூரியோட 100ஆம் ஆண்டு விழா. நீ கட்டாயம் வரணும். காலையில் 9 மணிக்கு தொடக்க விழா, உன் தலைமையில் நடக்கணும்னு ஆசைப் படறோம்”

நிரஞ்சன் நிமிர்ந்து தன் காரியதரசியை நோக்கினான்.

“சார் நீங்க அன்னைக்கு காலையில சிங்கப்பூர்ல இருக்கணும். கம்பெனி எக்ஸ்பான்சென் பற்றி ஃபாரீன் இன்வெஸ்ட்டெர்ஸ் கிட்ட பேசனும்” என்றார் காரியதரசி.

“நிரஞ்சன் நீ வருவேன்னு காலேஜ் ஸ்டாப்ஸ் எல்லாம் எதிர்பார்க்கிறோம்”

சிறிது நேரம் யோசித்த நிரஞ்சன் தன் காரியதரசியை நோக்கி, “சரி அந்த சிங்கப்பூர் மீட்டிங்க போஸ்ட்போன் பண்ணிருங்க .

“சார் கண்டிப்பா நான் அன்னைக்கு காலேஜ் வந்திடுறேன்”

6

23 ஆம் தேதி காலை 9 மணி. அதே ஆடிடோரியத்தில் நிரஞ்சன் அமர்ந்திருந்தான், ஆனால் இப்போது சிறப்பு விருந்தினராக..

வழக்கமான வரவேற்ப்புரைகளுக்கும் உபசரிப்புகளுக்கும் மத்தியில் சிணுங்கியது முதல்வர் ஜேம்ஸின் செல் ஃபோன். அதை பல முறை அவர் தவிர்த்தார். திடீரென தனக்கு பரிச்சயமான அந்த நம்பரிலிருந்து அழைப்பு வந்ததும் சற்று சந்தோசமாகவே மொபைலில் பேசத் தொடங்கினார்.ஆனால் அவர் முகம் சற்றென்று மாறியது. கண்கள் கலங்கிற்று.

கண்களை துடைத்துக்கொண்டே மைக்கை நோக்கி விரைந்தார், ”இந்த சந்தோஷமான நிகழ்வுகளுக்கு மத்தியில் ஒரு சோகமான செய்தி. நம்ம கல்லூரியில் பணியாற்றிய முருகேசன் சார், சில வருஷத்துக்கு முன்னாடிதான் அமெரிக்காவுல செட்டிலானார். அவர் நேற்று காலையில மாரடைப்பால் காலமாயிட்டார். இப்பதான் அவர் சன் ஃபோன் பண்ணினார். முனைவர் முருகேசனுக்காக 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தும்படி நான் உங்க எல்லாரையும் கேட்டுக் கொள்கிறேன்”

இரண்டு நிமிடதிற்க்கு பின் மீண்டும் பேச்சை தொடர்ந்தார் ஜேம்ஸ். “முருகேசன் சார் ரொம்ப நல்ல மனிதன். அவரை பற்றி நான் பேசுவதை விட. அவரிடம் படித்த மிஸ்டர். நிரஞ்சன் பேசினா இன்னும் பொருத்தமா இருக்கும்.

“திரு. நிரஞ்சன், சார பற்றி சில வரிகள் பேசணும்னு நான் கேட்டுக் கொள்கிறேன்”

நிரஞ்சன் இதை எதிர் பார்க்கவில்லை.  சற்றே திகைப்புடன் மைக் முன் வந்து நின்றார் நிரஞ்சன். முருகேசனை பற்றிய நினைவுகள் அவன் கண்களின் முன் ஓட தொடங்கிற்று

அவன் எதிர்பார்த்த சந்தர்ப்பம் எதிர்பாராத தருணத்தில்.

““இப்ப மட்டும் அந்த மைக் ஏன் கையில கிடைச்சா…அந்த முருகேசனோட வண்டவாளத்தெல்லாம்…….”இள வயது வசனங்கள் அவன் மூளையினுள் ஒத்திகை பார்த்தது.

நிரஞ்சன் பேச தொடங்கினான்.அரங்கமே நிசப்தமாயிற்று.

“முருகேசன் சார்…………………..”

சிறிது மௌனத்திற்க்கு பின், “முருகேசன் சார், ஒரு ஆசிரியராக பழகியதை விட,  ஒரு தகப்பன் மாதிரிதான் எங்ககிட்ட பழகினார். பஞ்சுயாலிட்டி என்றால் அது முருகேசன் சார் தான்…………………………”

கூட்டம் முடிந்தவுடன் அனைவரும் கலைந்து சென்றனர். நிரஞ்சனும் அரங்கை விட்டு வெளியேறினான். அங்கு வடக்கு மூலையில் அமர்ந்திருந்த மாணவன் சந்துருவையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்…..

பிப்ரவரி 2012