3 BHK வீடு சிறுகதைத் தொகுப்பின் கிண்டில் பதிப்பு வெளியாகி இருக்கிறது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன்.
நன்றி

சாலை நீண்டுகொண்டே போனது. இன்னும் கொஞ்ச தூரம் என்று சொல்லியே நந்தி அனைவரையும் ஐநூறு கிலோமீட்டர் அழைத்து வந்துவிட்டான். நான்கரை நாட்களாக நடந்தும் விஜயவாடாவை தான் அடைந்திருந்தார்கள். அதே வேகத்தில் நடந்தால் புவனேஸ்வர், ஒடிஷா வழியாக பீஹாரை அடைய இரண்டு வாரங்கள் கூட ஆகலாம். அது நீண்ட வழி தான். சம்பல்புர் வழியாக சென்றால் இன்னும் துரிதமாக ஊரை அடைந்து விடலாம். ஆனால் ஒடிஷா தான் பிரச்சனை இல்லாத வழி, போலீஸ் கெடுபிடி அதிகம் இல்லை, ஆங்காங்கே சிலர் வாகனங்களில் ஏற்றிக் கொள்கிறார்கள், என்று சுனில் காக்கா முன்பே போனில் சொல்லியிருந்தார
அவர்கள் ஒரு மாதமாகவே ஊரடங்கு தளர்த்தப்படும், பீஹாருக்கு ரயிலோ பஸ்ஸோ விடப்பட்டால் அதில் தொற்றிக் கொள்ளலாம் என்று காத்திருந்தனர். ஆனால் நிலைமை மாறிய பாடில்லை. சுனில் காக்கா நடந்தே போய்விடலாம் என்ற யோசனையை சொன்ன போது நந்தி அதை மறுத்தான். பெண்கள் குழந்தைகளை எல்லாம் நடக்க வைத்தே அழைத்துக்கொண்டு போவது சாத்தியமில்லை என்று உறுதியாக வாதாடினான். ஆனால் வருங்காலத்தைப் பற்றிய பயம் அவன் உறுதியை குலைத்திருந்தது.
ஐந்தாண்டுகளுக்கு முன்பு சுனில் காக்கா தான் லகான்பூர் கிராமத்திலிருந்து கட்டிட வேலை செய்ய முதன்முதலில் சென்னைக்கு கிளம்பி வந்தவர். பின்னாடியே அவர் ஊரிலிருந்து ஒவ்வொருவராக வந்து இப்போது பதினைந்து பேர் ஆகி விட்டனர். எல்லோருமே கயரம்பேடில் தங்கி மறைமலைநகரை சேர்ந்த ஒரு சிறு கான்டராக்டரிடம் வேலை செய்து வந்தனர். மூன்று வருடத்திற்கு முன்பு, நந்தியும் அவன் அண்ணன் முன்னாவும் பெயிண்டிங் வேலைக்காக வந்து இணைந்துக் கொண்டனர். மார்ச் மாதம் மட்டும் கான்டராக்டர் கொஞ்சம் பணம் கொடுத்தார்.
“வேலைலாம் நிக்குது. பிளாட் வாங்குறேனு சொன்ன மூணு நாலு கஸ்டமர்ஸ் வேணாம்னு சொல்லிட்டாங்க” என்றார். அதன்பின் ‘நீங்கள் தொடர்பு கொண்ட வாடிக்கையாளர் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது‘ என்ற பதில் மட்டுமே வந்தது. கையிலிருந்த பணத்தை வைத்து ஓரிரு மாதங்களை கூட ஓட்டலாம். ஆனால் எவ்வளவு நாள் இந்த ஊரடங்கு நீண்டு கொண்டே போகும் என்று தெரியவில்லை. கூடுவாஞ்சேரி காவல் நிலையத்திற்கு வெயிலில் நடையாய் நடந்தும் ஒரு பிரயோஜனமும் இல்லை. அதிக பட்சமாக கயரம்பேடுக்கு வேன் பிடித்து திருப்பி அனுப்பி வைத்தனர் போலீசார். அவர்கள் மீண்டும் மீண்டும் அங்கே போய் நின்றது உதவி ஆய்வாளரை கோபப்படுத்திருக்க வேண்டும்.
“நீங்க எதுக்குயா இங்க வரீங்க! நீங்கலாம் கூடுவாஞ்சேரிலதான் இருக்கீங்கங்குறதுக்கு என்ன ப்ரூப் இருக்கு! கேஸ் பில்லாவது இருக்கா!” என்று கத்தினார்.
“விறகு அடுப்புக்கு எதுக்குங்க கேஸ் பில்!” என்று கேட்பதற்கு தயாராக நின்றான் நந்தி. அவன்தான் கூட்டத்திலேயே இளையவன். இருபது வயதுதான். எதற்கெடுத்தாலும் துடுக்காக பேசிவிடக்கூடியவன். சுனில் காக்கா அவனை பேசவிடாமல் தடுத்து வெளியே இழுத்து வந்துவிட்டார். அவருக்கு வயது நிறைய பக்குவத்தை கொடுத்திருந்தது. அறுபது வயதை கடந்தும் உழைத்துக் கொண்டிருந்தார். நன்றாக தமிழ் பேசுவார். கான்ஸ்டபிளை தனியாக சந்தித்து வணக்கம் வைத்தார்.
“இங்கலாம் வராதயா. நியூசன்ஸ் கேஸ்ல உள்ள வச்சிருவான் அந்த ஆளு” என்று ஆறுதலாக சொன்னார் கான்ஸ்டபிள். அவர் உதவக்கூடும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு வந்தது.
“ஹெல்ப் பண்ணுங்க சாப்” என்றார் காக்கா. இருநூறு ரூபாய் அன்பளிப்பாக தர
வேண்டியிருந்தது. ஆனால் அவர் உதவுவதற்கு பதில் யோசனை சொன்னார்.
“இங்க இப்டி நடையா நடக்குறதுக்கு ஊருக்கே நடந்துரலாமே!
“உன் ஆளுங்கலாம் நிறைய பேர் அப்டி நடந்து போறாங்களாமே! அப்டியே போக வேண்டியதுதான!”
திரும்பி வீட்டிற்கு நடந்து வரும்போது நந்தி கோபமாக சொன்னான்,
“வஹ பக்வாஸ் பாத் கர் ரஹா ஹே காக்கா. அவ்ளோதூரம் எல்லாரையும் வச்சிக்கிட்டு எப்படி போறது!”
“வேற வழி இருக்கா சோட்டு….!” காக்கா நிதானமாக கேட்டார். நந்தியிடம் பதில் இல்லை.
“காசெல்லாம் தீந்து போனா என்ன பண்றது! நம்மல வச்சு இங்க யாராவது சோறு போடுவாங்களா! நாம இங்க எவ்ளோ உழச்சிருக்கொம். யாராவது ஒருத்தராவது நம்மகிட்ட அன்பா பேசிருக்காங்களா! ஏதாவது விசேஷத்துக்கு கூப்புட்டு இருக்காங்களா! நம்ம வேலை பாத்த வீட்ல கூட கூப்பிட மாட்டாங்க! இங்க இருக்கவங்களுக்கு நாமெல்லாம் எப்பவுமே வெளி ஆளா தான் தெரிவோம். அவங்களப் பொறுத்த வரைக்கும் நாம வேலை செய்ய வந்திருக்கோம். கம்மியான கூலிக்கு நிறைய வேலை செய்றோம்னு தான் நமக்கு கொஞ்சம் மரியாதை. வேலையே இல்லனா அந்த மரியாதையும் இருக்காது…”
காக்கா சொல்வது தான் எல்லோருக்கும் சரி என்று பட்டது. அவர்களிடம் மூன்று செட் துணிமணிகள், கொஞ்சம் சமையல் பாத்திரங்கள் தவிர அதிக உடமைகள் எதுவும் இல்லை. கான்ட்ராக்டர் சில தற்காலிகமான தகர வீடுகளை கட்டி கொடுத்து, நிரந்தரமாக அவர்களை அங்கேயே தங்க வைத்திருந்தார். அதிக வேலைகள் இருந்தால், வேலை செய்யும் இடங்களிலேயே தங்கிக் கொள்வார்கள். மற்ற நாட்களில் கயரம்பேடு தகர வீடுதான். அதனால் வீட்டை காலி செய்வது கடினமாக இருக்கவில்லை.
காக்காவின் தலைமையில் மூன்று பெண்கள், ஐந்து ஆண்கள், நான்கு குழந்தைகள் கொண்ட முதல் குழு புறப்பட்டது. நந்தியின் குடும்பமும் அவர்களோடு இணைந்து கொள்வது தான் திட்டம். ஆனால் கிளம்பும் நாளில் முன்னாவுக்கு காய்ச்சல் வந்து விட்டது. மூன்று நான்கு கிலோமீட்டர் தள்ளிதான் கிளினிக் இருந்தது. காக்காவை வீட்டில் இருக்கச் சொல்லிவிட்டு நந்தி தன் அண்ணனை கிளினிக்கிற்கு அழைத்துச் சென்றான்.
காய்ச்சல் என்றதுமே டாக்டர் பதறினார்.
“கவர்மெண்ட் ஹாஸ்பிடல் போ” என்றவர் அவர்களை உள்ளே விடவே மறுத்தார். உதவியாளரிடம், அவர்கள் நின்ற இடத்தில் கிருமி நாசினி தெளிக்கச் சொன்னார்.
நந்திக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஷேர் ஆட்டோ ட்ரைவர் சேவியர்க்கு போன் செய்தான். அந்த ஏரியாவில் நந்தியோடும் அவன் ஆட்களோடும் ஷேர் ஆட்டோ டிரைவர்கள் மட்டுமே நட்போடு பழகி வந்தனர். அது ஒருவகையான ஆதாய நட்புதான்.
கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்திற்கும் கயரம்பேடுக்கும் போய் வர ஷேர் ஆட்டோ தான் பிரதான போக்குவரத்தாக இருந்தது. நந்தியும் அவன் ஆட்களும் எப்போதுமே ஒரு குழுவாக வேலைக்கு சென்று வருபவர்கள் என்பதால் அவர்களை நிரந்தரமான வருமானமாக கருதினர் ஷேர் ஆட்டோ டிரைவர்கள். மேலும் அவர்கள் நம்மூர் ஆசாமிகள் போல் ஆட்டோ உள்ளிருக்கும் கூட்டத்தை ஏற இறங்கப் பார்த்துவிட்டு “வேணாம்” என்று சொல்லும் வழக்கத்தை கொண்டிருக்கவில்லை. மாறாக, ஒரு கால் வைக்கும் அளவிற்கு இடம் இருந்தால் கூட எந்த மறுப்பும் தெரிவிக்காமல் உள்ளே தொற்றிக்கொள்பவர்களாக இருந்தனர். அதனாலேயே ஷேர் ஆட்டோ டிரைவர்கள், அவர்களுக்காக காத்திருந்து அழைத்துச் சென்றனர்.
“எப்பனாலும் எனக்கு போன் பண்ணு பையா. மத்த ஆட்டோல ஏறாத” என்று சொல்லி சேவியர் எப்போதோ தன் நம்பரை நந்தியிடம் கொடுத்திருந்தான்.
“இன்ஸ்பெக்டர் எங்க ஊருக்காரர் தான் பையா. ஆனாலும் ஊரடங்குல ஏண்டா வெளிய வந்தீங்கன்னு கேட்டா நீ தான் கவனிக்கணும் சொல்லிட்டேன்” பின்னிருக்கையில் அமர்ந்திருந்த நந்தியை ரியர்வ்யூ கண்ணாடியில் பார்த்தவாறே சேவியர் சொன்னான்.
நந்தி, “ஓகே ஓகே” என்றான். காக்கா, நந்தி முதன்முதலில் சென்னைக்கு வந்திருந்த போதே சொல்லியிருந்தார்.
“சோட்டு, போலீஸ் தேவையில்லாம கூப்ட்டு ஏதாவது கேட்பாங்க. நம்ப பாஷையும் அவங்களுக்கு தெரியாது. நம்ம சொல்றது புரியாம நம்மக்கிட்டயே கோபமா கத்துவங்க. அவங்ககிட்ட பேசத்தான் நான் தமிழே கத்துக்கிட்டேன். போலீஸ பாத்தா அடக்கமா பேசு. காசு கேட்டா, கைல இவ்ளோ தான் இருக்குனு நூறு ரூபாய கொடுத்துட்டு கிளம்பிரு…”
அதனால் நந்தி, வழியில் எந்த போலீஸ் தடுத்தாலும் அவர்களை எதிர்கொள்ள தயாராக இருந்தான்.
டாக்டர் நந்தியையும் முன்னாவையும் பார்வையால் எடைப்போட்டார். முதலில் ஐயாயிரம் ரூபாய் கட்டச் சொன்னார்.
“அவ்ளோவா” என்று இழுத்தான் சேவியர்.
“யோவ் இந்த நேரத்துல ரிஸ்க் எடுத்து பார்க்குறோம் இல்ல! பிளட் டெஸ்ட்லாம் பண்ணனும். அவனுக்கு சாதா ஜுரமா வேற ஏதாவதானு யாருக்கு தெரியும்! வேணும்னா
ஜி. எச்சுக்கு போ” என்று கோபத்தை வெளிப்படுத்தினார் டாக்டர். கையிலிருக்கும் மொத்த பணமும் செலவானாலும் பரவாயில்லை, அண்ணனுக்கு கொரோனா ஜுரம் வந்திருக்கக் கூடாது என்று கபிலேஸ்வரரை வேண்டிக் கொண்டு பணத்தை கட்டினான் நந்தி.
டாக்டர் முன்னாவை ஆராய்ந்துவிட்டு, “நார்மல் பீவர் தான். ரெண்டு நாள் தொடர்ந்து ஜுரம் இருக்கா பாருங்க… இருந்தா, நீங்க மூணு பேருமே செங்கல்பட்டு ஜி.எச் போய் கொரோனா டெஸ்ட் பண்ணிக்கோங்க” என்று சொல்லி அனுப்பினார்.
வரும்வழியில் சேவியர் புலம்பிக் கொண்டே வந்தான்.
“பையா! டாக்டர் ஏமாத்திட்டான் பையா. நம்மலாம் உழைப்பாளிங்க. நமக்குலாம் கொரோனா வராது. அது பணக்காரங்க நோயுனு முதலமைச்சரே சொல்றாரு. ஆனா இந்த டாக்டர் டெஸ்ட் பண்ணாமயே காச புடுங்கிட்டான் பையா…”
நந்தி எதுவும் பேசவில்லை. தன் அண்ணன் குணமாக வேண்டும் என்று கபிலேஸ்வரரை வேண்டிக் கொண்டே வந்தான்.
முன்னா குணமானதும் கிளம்பலாம் என்று சுனில் காக்கா சொன்னதும், கிளம்புவதற்கு தயாராக இருந்த மற்றவர்களின் முகத்தில் ஏமாற்றம் வெளிப்பட்டதை நந்தி கவனிக்காமல் இல்லை. அதனாலேயே மற்றவர்களை அழைத்துக் கொண்டு செல்லும்படி காக்காவை வற்புறுத்தினான். அப்படிதான் சுனில் காக்கா தன்னோடு பன்னிரண்டு நபர்களை அழைத்துக் கொண்டு முதலில் புறப்பட்டார்.
முன்னாவிற்கு மறுநாளே காய்ச்சல் குறைந்துவிட்டது. ஆனால் உடம்பு தான் சோர்வாக இருப்பதாக சொன்னான். அவன் தேறி வருவதற்கு பத்து நாட்களுக்கு மேலாக ஆகிவிட்டது. அதற்குள் காக்கா ஒடிஷா முகாமை அடைந்திருந்தார். அங்கிருந்து தங்களை அழைத்துச் செல்ல பேருந்து வரும் என்று அங்கே இருந்தவர்கள் சொன்னதாக நந்தியிடம் தெரிவித்தார்.
“இன்னும் எழுநூறு கிலோமீட்டர் நடக்குறது மிச்சம்” என்றார். நந்திக்கும் அதைக் கேட்க சந்தோஷமாக இருந்தது. முதலில் இரண்டாயிரம் கிலோமீட்டருக்கு மேல் நடக்க வேண்டும் என்பது மலைப்பாக இருந்தது. இப்போது அதில் மூன்றில் ஒரு பங்கு குறைந்து விட்டது என்பது தான் அந்த சந்தோசத்திற்கு காரணம். சீரான வேகத்தில் நடந்தால் அதிகபட்சம் பன்னிரண்டு நாட்களில் ஒடிஷாவை அடைந்து விடலாம் என்று திட்டம் போட்டான். மறுநாள் காலையில், தன் அண்ணன், அண்ணி மற்றும் அவர்களின் இரு பிள்ளைகளோடு நந்தி நடக்க ஆரம்பித்தான். திருவள்ளூர் சாலை வழியாக விறுவிறுவென நடந்து அடுத்தநாள் மாலையிலேயே அவர்கள் நெல்லூரை அடைந்தனர். நடப்பது கடினமாக இருந்தாலும், வருங்காலம் தெளிவற்று இருந்தாலும், தன் கூட்டிற்கு திரும்பிப் போகிறோம் என்ற ஆழ்மன சந்தோசமே அவர்களை முன்னோக்கி நகர்த்தியது. அதுவும் நந்திக்கு ஒருவருடத்திற்கு பிறகு தன் அம்மாவைப் பார்க்கப் போகிறோம் என்ற எண்ணம் கூடுதல் சந்தோசத்தை தந்தது. ஆனால் சுனில் காக்காவிடமிருந்து வந்த போன் நந்தியின் உத்வேகத்தை குலைத்தது. இரண்டு நாட்களாகியும் ஊரிலிருந்து எந்த வண்டியும் வரவில்லை என்றார் அவர். மற்ற ஊர்களிலிருந்து பேருந்துகள் வந்ததாகவும், பீஹார் அரசு எந்த உதவியும் செய்யவில்லை என்று முகாம் அதிகாரிகள் சொன்னதாகவும் சொல்லி வருத்தப்பட்டார். அங்கேயே காத்திருப்பதற்கு பதிலாக தொடர்ந்து நடந்துவிட முடிவு செய்துவிட்டதாக சொன்னார்.
“அவ்ளோ தூரம் நடக்கிறோம், இன்னும் கொஞ்ச தூரம் போக வேண்டிதான்!” என்றான் முன்னா. நடப்பது பிரச்சனை இல்லை. ஆனால் அம்மாவைப் பார்க்க இன்னும் ஒரு வாரம் தாமதமாகும் என்ற எண்ணமே நந்தியை பெரிதும் வருத்தப்பட வைத்தது. அம்மாவைப் பற்றிய நினைப்போடு அவன் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தான்.
அம்மா எப்போதுமே அவனுடைய உந்து சக்தியாக இருந்துவந்தாள். நந்தி அந்த வீட்டின் கடைக்குட்டி. குடும்பத்தின் மூன்றாவது பிள்ளை. அவனுக்கு மூன்று வயது இருக்கும் போதே, விவசாயக் கூலியான அவன் அப்பா வயலில் பாம்பு தீண்டி இறந்துபோனார். அதன்பின் அம்மா தான் அந்த குடும்பத்திற்கு எல்லாமுமாக விளங்கினாள். மூத்தப் பிள்ளையான முன்னா தலை எடுத்தப் பிறகும் அவள் உழைத்துக் கொண்டே இருந்தாள். நந்தியின் அக்காவிற்கு திருமணம் செய்து வைக்கும் வரை உழைப்பேன் என்றாள். ஏன், நந்திக்கு திருமணம் ஆகும் வரைக்கூட தன்னால் வயலில் வேலை செய்ய முடியும் என்று சொல்லிவந்தாள். ஆனால் பீஹார் கிராமங்களின் பெரும் எதிரியாக இருக்கும் பாம்பு அவளையும் தீண்டியது. பிழைத்துக் கொண்டாள். எனினும் பக்கவாதம் அவளை படுத்த படுக்கையாக்கி இருந்தது.
எப்போதும் அம்மாவை கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அக்காவின் மீது விழுந்தது. அம்மாவின் மருத்துவதுவத்திற்கும் வீட்டு பெண் பிள்ளையின் திருமணத்திற்கும் பணம் சேர்க்க வேண்டிய பொறுப்பு இரண்டு ஆண் பிள்ளைகளுக்கும் வந்தது. முன்னா நந்தியைவிட கிட்டத்தட்ட பன்னிரண்டு வயது பெரியவன் என்றாலும் அம்மா நடமாடிய வரை அவன் குடும்பத்தைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொண்டதில்லை. அம்மா படுத்த பின்பு அவளைப் பார்க்க வந்த சுனில் காக்கா, முன்னாவிற்கு புத்திமதி சொல்லி சென்னைக்கு வேலைக்கு வரச் சொன்னார். அண்ணன் தம்பியுமாக சேர்ந்து உழைத்தால் இன்னும் நிறைய சம்பாதிக்கலாம் என்று நந்தியிடம் சொன்னார். அன்றிலிருந்து ஓய்வில்லாமல் உழைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஞாயிற்றுக் கிழமை, பண்டிகை நாட்கள் என்றெல்லாம் இல்லை. பெரும்பாலும் எல்லா நாட்களும் வேலை நாட்கள்தான்.
“இந்த படா ஊர்ல எங்க போனாலும் எல்லா நாளுமே நம்ம ஆளு ஒருத்தன் ராப்பகலா உழைச்சிகிட்டே இருப்பான்” என்று சொல்லிவிட்டு சுனில் காக்கா சிரிப்பது நந்திக்கு நினைவு வந்தது. அவன் சாலையை கவனித்தான். பீஹார் ஆசாமிகள் மட்டும் அல்ல, இன்னும் பலரும் கூட்டமாக மூட்டைமுடிச்சுகளோடு நடந்து போய் கொண்டே இருந்தனர். சிலர் ஹிந்தி பேசிக்கொண்டே போனார்கள். சிலர் குஜராத்தி பேசினார்கள். சிலர் பங்களா பேசினார்கள். அவர்களை பார்க்கும் போதெல்லாம் நந்திக்கு, எந்த மொழி பேசுபவர்களுக்கும் பசி ஒன்றாக தான் இருக்கிறது, எதிர்காலத்தைப் பற்றிய பயம் ஒன்றாக தான் இருக்கிறது என்று உரைத்தது.
எந்த ஊருக்கு போகவேண்டும் என்றாலும் பரந்த ஆந்திர பிரதேசத்தை கடந்து தான் போக வேண்டும். திருவிழாவிற்கு போகும் கூட்டம் போல் அவர்கள் நடந்து சென்றனர். ஆனால் ஒவ்வொருவரும் தங்களின் குழுவோடு மட்டுமே பேசிக் கொண்டனர். மற்றவர்களோடு எந்த பேச்சும் வைத்துக் கொள்ளாமல் நடந்தனர். சில இடங்களில் ரயில் தண்டவாளங்களில் இறங்கி நடக்க வேண்டியிருந்தது. சில இடங்கில் முட்டி அளவு நீரை கடக்க வேண்டியிருந்தது. மற்றபடி, பயந்த அளவிற்கு போலீஸ்கார்கள் எந்த குடைச்சலும் கொடுக்கவில்லை. எங்காவது சில தன்னார்வலர்கள் சாப்பாடு பொட்டலங்களை கொடுத்தார்கள். வீட்டிலிருந்து எடுத்து வந்த ரொட்டியும் மிச்சம் இருந்தது. ஆனாலும் நந்தி பெரும்பாலும் தன் பங்கை குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டு தண்ணீரைக் குடித்தே வயிற்றை நிரப்பிக் கொண்டான்.
விஜயவாடாவில் வெயில் சுட்டெரித்தது. அங்கிருந்து உத்தரபிரேதசம் செல்லும் கூட்டம் வடக்கே தெலுங்கானா நோக்கி பிரிந்து சென்றது. ஒடிஷா, மேற்கு வங்காளம் செல்பவர்கள் கோதாவரி நோக்கி நூல் பிடித்தாற் போல் நேர்கோட்டில் நடக்க வேண்டும். அரை நாள் அங்கேயே ஓய்வெடுத்துக் கொண்டு, மாலை நடக்கலாம் என்று தோன்றியது. நந்தி மரத்தடியில் மற்றவர்களை படுக்கச் சொல்லிவிட்டு, உடமைகளை பாதுகாப்பதற்காக விழித்திருந்தான். எங்கு உறங்க நேர்ந்தாலும், ஒவ்வொரு குழுவிலும் யாரோ ஒருவர் தூங்காமல் உடமைகளை காவல்காத்து வந்தனர். முன்னா, தான் விழித்திருப்பதாக கூறி நந்தியை தூங்க சொன்னாலும், நந்தி கேட்கமாட்டான்.
“உனக்குதான் உடம்பு வீக்கா இருக்கும் தூங்கு” என்பான்.
இல்லையேல், “நான் தூங்கிட்டேன். இப்பதான் எழுந்தேன்” என்பான். ஆனால் முன்னா விழித்துப் பார்த்த போதெல்லாம் நந்தி தூங்காமல் செல்போனில் பாட்டு கேட்டுக் கொண்டிருப்பான்.
அசதியில் குழந்தைகள் அதிக நேரம் தூங்கினர். மாலை மீண்டும் நடக்கத் தொடங்கிய போது மணி ஏழாகி விட்டது. இருபது கிலோமீட்டர் தான் நடந்திருப்பார்கள். கன்னவரத்தில் குழந்தைகளுடன் இவர்கள் நடப்பதை பார்த்த மினி வேன் டிரைவர் வண்டியை நிறுத்தினார்.
“ஆவோ பாய்!” என்றார். ஆள் தடியாக இருந்தார். மீசையும் முடியும் நரைத்திருந்தது. அவரது ஹிந்தியில் தெலுங்கு சாயல் வெளிப்பட்டது. நந்தி முன்னாவின் முகத்தைப் பார்த்தான்.
“ஹம் ராஜமுந்திரி மே சோடங்கே ஆவோ!” என்றான். அத்தகைய சூழலில், கிட்டத்தட்ட நூற்றி ஐம்பது கிலோமீட்டர் தூரம் வண்டியில் அழைத்துச் செல்வதாக சொல்லும் போது யாரால் மறுக்க முடியும்! நந்தி டிரைவர் இருக்கை அருகே அமர்ந்து கொண்டான். முன்னாவும், அவன் மனைவி மற்றும் பிள்ளைகளும் பின்னே அரிசி மூட்டைகளுக்கு நடுவே அமர்ந்து கொண்டனர்.
டிரைவர் பேசிக் கொண்டே வந்தார். அவர் உதவிக்கரம் நீட்டியதோடு அல்லாமல் அன்பாக பேசிக் கொண்டே இருந்தது முன்னாவுக்கு பிடித்திருந்தது. தன்னிடம் இருந்த ரொட்டியை அவருடன் பகிர்ந்து கொண்டான். ராஜமுந்திரியில் வண்டி நின்ற போது மணி இரவு பன்னிரண்டை நெருங்கி இருந்தது.
“நான் சொன்னது ஞாபகம் இருக்கட்டும் தோஸ்த்” என்று நந்தியைப் பார்த்து சொல்லிவிட்டு வண்டியை நகர்த்தினார் டிரைவர். தொடர்ந்து நடந்தார்கள். இடையிடையே சில வண்டிகளில் எறிக்கொண்டார்கள். ஒடிஷாவை அடைய ஒருவாரம் ஆனது. அதற்குள் சுனில் காக்கா லகான்பூரை அடைந்திருந்தார். அம்மா நன்றாக இருப்பதாகவும், பிள்ளைகளின் வருகையை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் நந்தியிடம் போனில் சொன்னார்.
அதிக பட்சம் நான்கைந்து நாட்கள், அம்மாவை பார்த்துவிடலாம் என்று எண்ணும் போதே நந்திக்கு உள்ளம் பூரித்தது. ஒடிஷா முகாமில் இரவைக் கழித்துவிட்டு மறுநாள் நடக்க முடிவு செய்தனர். ஆனால் அவர்கள் எதிர்பாராத ஆச்சர்யம் முகாமின் கதவைத் தட்டியது. காலையில் நிறைய பேருந்துகள் அவர்களை அழைத்துச் செல்ல வந்திருந்தன. யாரோ ஹிந்தி நடிகரின் செலவில் அந்தப் பேருந்துகள் வந்திருப்பதாக முகாம் அதிகாரிகள் சொல்லினர். நந்தி துள்ளி குதித்தான். மனதார அந்த நடிகரை வாழ்த்தினான்.
அவன் எதிர்பார்த்தது போலவே மறுநாள் அதிகாலையில் பேருந்து பாட்னாவை அடைந்தது. அங்கிருந்து வெறும் நூறு கிலோமீட்டர் பயணத்தில் நந்தியின் கிராமம் இருந்தது. இரண்டாயிரம் கிலோமீட்டரை கடந்தவனுக்கு அது மிக சிறிய தொலைவு தான். ஆனால் பாட்னாவில் நிறைய போலீஸ்காரர்களும் அதிகாரிகளும் பேருந்தை சூழ்ந்து கொண்டார்கள். யாரும் ஊருக்குள் செல்லக்கூடாது, எல்லோரும் கும்ரஹாரில் இருக்கும் பஞ்சசீல் வித்யாலயா பள்ளிக்கூடத்திற்கு சென்று கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றார்கள்.
“போனவாரம் தான் எங்க காக்கா வந்தாரு, அவருக்கு அப்டிலாம் செக் பண்ணலயே!’ என்று கோபமாக கேட்டான் நந்தி. சொந்த மாநிலம் அவனை தைரியமாக பேச வைத்தது.
“நீங்க வரிசையா வந்துகிட்டே இருப்பீங்க. எல்லாரையும் விட முடியுமா! எங்க இருந்து வர!’ அந்த அதிகாரி கேட்டார்.
“மதராஸ்” என்றான்.
“அப்ப உனக்கு தான் முதல டெஸ்ட் பண்ணனும்” என்றவர் போலீஸ்காரர்களிடம் அவனை அழைத்துச் செல்லும் படி சொன்னார். அதற்குள் முன்னா தலையிட்டு தாங்களாகவே போவதாக சொன்னான். நந்தியை அமைதியாக இருக்கும் படி ஜாடை செய்தான்.
பள்ளிக்கூடத்திலேயே பெண்கள் குழந்தைகளை ஓரிடத்திலும், ஆண்களை ஓரிடத்திலும் தங்க வைத்திருந்தார்கள். சோதனை முடிவு வர மூன்று நாட்கள் ஆகும், அதுவரை எல்லோரும் அங்கு தான் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் சொல்லினர். நந்திக்கு ஆத்திரமும் வருத்தமும் ஒருங்கே வந்தன.
“இவ்வளவு தூரம் பிரச்சனை இல்லாம வந்துட்டோம். மூணு நாள் பொறுத்துக்க மாட்டியா!” என்று முன்னா அதட்டினான். நந்தி அமைதியானான். சாப்பிட்டுவிட்டு தூங்குவது மட்டுமே அவர்களின் வேலையாக இருந்தது.
மூன்றாவது நாள் மாலை பரிசோதனை முடிவு வந்தது. நந்திக்கும் அவன் குடும்பத்தாருக்கும் கொரோனோ இல்லை, மறுநாள் காலை அவர்கள் ஊருக்கு கிளம்பலாம் என்றார்கள். நந்திக்கு சந்தோசத்தில் தூக்கம் வரவில்லை. இரவெல்லாம் பேசிக் கொண்டே இருந்தான். எதிர்காலம் பற்றிய கனவுகள் தான் அவனின் பேச்சாக இருந்தது.
“பாய், நீ மாயி கூடவே இரு. பேங்க்ல இருக்க காசா வச்சு டிரீட்மெண்ட் பாரு. நான் இந்த பிரச்சினைலாம் முடிஞ்சதும் மறுபடியும் வெளிய போறேன். மதராஸ் வரைக்கும் வேணாம். ஆந்திரால அந்த டிரைவர் பையா சொன்னாரு, அவருக்கு தெரிஞ்ச கான்ட்ராக்டர் கிட்ட சேத்து விடுறாராம். ஒரு வருசம் இருந்தா போதும், ரெண்டு மூணு லட்சம் சேத்துரலாம், பெஹென் கல்யாணத்த மூடிச்சிடலாம். அப்பறம் நானும் திரும்பி வந்திருவேன்”
“சோட்டு, மூணு நாளா இததான் சொல்ற. ஒழுங்கா தூங்கு. நாளைக்கு சீக்கிரம் கிளம்பனும்”
“நீ தூங்கு பாய். நான் பாட்டு கேட்கப் போறேன்” என்றவாறே நந்தி இயர் போனை காதில் சொருகிக்கொண்டான். முன்னா அப்படியே உறங்கிப் போனான்.
காலையில் முன்னா விழித்துப் பார்த்த போது மணி ஏழாகி இருந்தது. அதிக நேரம் உறங்கி விட்டோமே என்ற எண்ணத்தோடு அருகில் உறங்கிக் கொண்டிருந்த நந்தியை கவனித்தான். அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். ஆச்சரியமடைந்த முன்னா, ஒரு பக்கமாக திரும்பிப் படுத்திருந்த நந்தியின் முதுகில் தட்டினான். ஆனால் நந்தி அசையவில்லை. முன்னா பதற்றத்துடன் நந்தியை பிடித்து உழுக்கினான். நந்தி வெறும் உடலாகி இருந்தான். அவன் வாயில் நுரை படிந்திருந்தது. முன்னா கதறினான். எல்லோரும் அவர்களை நோக்கி ஓடி வந்தார்கள். நந்தியின் காலில் பாம்பின் பற்கள் ஆழமாக பதிந்திருந்தன.
ராஜேந்திர பிரசாத் சாலையில் இருந்தே வாகன நெரிசல் ஆரம்பமாகிவிட்டது. கோவில் அமைந்திருந்த தெருவுக்குள் காரை திருப்புவது என்பது தேவையில்லாத ஜம்பம். காரை ரிவர்ஸ் எடுத்து அகநானூறு தெருவில், இங்கே வாகனங்கள் நிறுத்தாதீர் என்ற பலகை மாட்டப்பட்டிருந்த வீட்டின் முன்பு காரை நிறுத்தினேன்.
“கொஞ்ச தூரம் நடக்கணும்…” என்றேன் தேப்தூத் ரேவிடம்.
“திக் ஆச்சே.. திக் ஆச்சே…” என்றவாறே உடன் நடந்தான். அவனுக்கு இரவு பன்னிரண்டு மணிக்கு தான் விமானம். கொல்கத்தாவிலிருந்து அலுவல் நிமித்தமாக வந்திருந்தான். எங்களின் அலுவலக அந்தஸ்துபடி விமானத்தில் பயணிக்க எங்களுக்கு எலிஜிபிலிட்டி போதாது. ஆனாலும் நாங்கள் விமானத்தில் சென்று வேலையை துரிதமாக முடித்து திரும்ப வேண்டும் என்று நிர்வாகம் எதிர்பார்க்கும். இதெல்லாம் வெளிப்படையாக சொல்லாமல் நிகழ்த்தப்படும் அநீதிகள். வேலை முக்கியம் என்பதால் வாயை மூடிக்கொள்வோம். பயணத்திற்கு இரண்டாம் வகுப்பு ஏ.சி ரயிலுக்கு ஆகும் செலவை தான் திருப்பி தருவார்கள். மீதம் உள்ள தொகையை சம்பளத்திலிருந்து தான் போட வேண்டும். நள்ளிரவு விமானங்களின் டிக்கெட் விலை குறைவாக இருப்பதால், அலுவல் நிமித்தமாக எங்கு பயணிக்க நேர்ந்தாலும் நாங்கள் அதையே தேர்ந்தெடுப்போம்.
பத்தரை மணிக்கு விமான நிலையத்தை அடைந்தால் போதும். அதுவரை என் வீட்டிலேயே ஓய்வெடுப்பது தான் முதலில் போட்ட திட்டம். மதியத்திலிருந்தே நெட்ப்ளிக்ஸ்சில் சாக்ரெட் கேம்ஸ் ஓடிக்கொண்டிருந்தது. இடையிடையே ரே, கணேஷ் கைத்தொண்டே போல் பேசிக் காண்பித்தான். அம்மா அவனுக்கு ஏதோ ஆகிவிட்டது என்பது போல் பார்த்தாள். அவள் கையிலிருந்த காபியை வாங்கிக் கொண்டு புன்னகை செய்து சமாளித்தான் ரே.
“டெம்பிள் கோ. டுடே பேமஸ் பங்க்சன்…” என்றாள்.
“ஒ!” ஏதோ அதிசயத்தை தெரிந்து கொண்டவனைப் போல் அவன் ஆர்வமாக கேட்டான்.
“இன்னைக்கு குமரகுன்றம் விஷேசமா இருக்கும். கூட்டிட்டு போக வேண்டித்தான!” என்றாள் அம்மா.
“யுவர் பிரெண்ட் நோ லைக் டெம்பிள்…” என்று என்னை சுட்டிக் காண்பித்து ரேவிடம் சொன்னாள். ரே அம்மாவிடம் நல்ல பேர் வாங்க வேண்டும் என்று நினைத்திருக்கக் கூடும். உடனே கோவிலுக்கு போகலாம் என்று நச்சரிக்கத் தொடங்கிவிட்டான். எனக்கு கோவிலுக்கு போவதில் விருப்பம் இல்லை என்றாலும் மற்றவர்களின் ஆன்மீக நம்பிக்கைகளுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுப்பேன். ஆனால் ரே அப்படி இல்லை. அவனுக்கு கோவில் என்பதன் மீது தனி மரியாதையோ அபிப்ராயமோ இருந்ததில்லை. அவன் காளிகட் காளி கோவில் வரை அடிக்கடி போய் வருவான். எதற்காக என்று அம்மாவுக்கு தெரிந்தால் அவனை வீட்டினுள்ளேயே சேர்க்க மாட்டாள். அம்மாவின் முன்பு நல்ல பிள்ளை போல் நடிக்கிறான். எனக்கும் வெளியே போனால் தேவலை என்று தோன்றியது.
கார் எங்கள் தெருவை தாண்டியதும் கேட்டேன், “வேற எங்காவது போலாமா? அம்மா கேட்டா கோவிலுக்குனு சொல்லிக்கலாம்…”.
“நோ…” என்றான் உறுதியாக. நான் காரை குரோம்பேட்டை நோக்கி நகர்த்தினேன்.
நாங்கள் நடந்து சென்ற வழியெங்கும் வாகனங்கள். ஏராளமான இருசக்கர வண்டிகள் கோணல் வாக்கில் நின்றுகொண்டிருந்தன. எங்கே தங்களின் வண்டியை நுழைக்கலாம் என்று எதிர்ப்பார்த்தவாரு சில இரு சக்கர வாகன ஓட்டிகள் காத்துக் கொண்டிருந்தனர்.
கோவிலில் கூட்டம் தான். ஆனால் இதை விட அதிக கூட்டத்தை சிறுவயதில் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு தைப்பூசத்தின் போதும் சானடோரியத்திலிருந்து அம்மா நடக்க வைத்தே அழைத்து செல்வாள். ஆட்டோ எல்லாம் அப்போது வாழ்க்கையில் ஆடம்பரமான விசயமாக தான் இருந்தது. எங்களோடு சேர்ந்து பலரும் நடந்து வருவார்கள். அதனால் தூரம் ஒரு பிரச்சனையாக தெரிந்ததில்லை. இப்போதுதான் சில நூறு மீட்டர்களுக்குக் கூட வண்டி தேவைப் படுகிறது. வெகு தூரம் நடந்த களைப்பு கோவில் வாசலில் அண்டாவில் இருக்கும் புளியோதரையைப் பார்த்ததுமே பறந்து போய்விடும்.
அம்மா, “சாமி கும்பிட்டா தான் தருவாங்க…” என்பாள்.
அது உண்மையில்லை என்பது வளரவளர தான் தெரிய ஆரம்பித்தது. சில கைலி கட்டிய ஆசாமிகள் நேரடியாக புளியோதரை அண்டாவை நோக்கி செல்வார்கள். பக்கத்திலேயே தயிர் சாதத்தையும் வாங்கிக் கொண்டு விறுவிறுவென திரும்பி விடுவார்கள். ஒருநாளும் அவர்கள் கோவிலுக்குள் போய் பார்த்ததில்லை. எனக்கும் அவர்களை பின்பற்ற வேண்டும் என்றே தோன்றும். நாம் வந்தோமா இல்லையா என்று சாமிக்கு தெரியவா போகிறது என்று நினைத்துக் கொள்வேன். ஆனால் அம்மாவிடம் சொல்ல முடியாது. அம்மா ஆர்வமாக, ஒவ்வொரு சாமியையும் கும்பிடுவாள். கோவில் சுவற்றில் எழுதப்பட்டிருக்கும் அருணகிரிநாதர் பாடலை எழுத்துக் கூட்டி படிப்பாள். இப்போது அந்த ஆர்வமெல்லாம் எங்கு போனது என்று தெரியவில்லை. மூட்டு வலி வந்ததிலிருந்து வீட்டில் இருப்பதையே அதிகம் விரும்புகிறாள். நான் இப்போது போல அப்போதும் ஒப்புக்குசப்பாணியாக தான் கோவிலுக்கு போய் வந்திருக்கிறேன்.
மலை உச்சிக்கு வேகமாக ஓடி முருகரை கும்பிட்டுவிட்டு வந்துவிடலாம் என்று தோன்றும். ஆனால் அம்மா முதலில் மலை நடுவே இருக்கும் சுந்தரேஸ்வரரை தான் கும்பிட வேண்டும் என்பாள். அங்கே கால் மணி நேரமாவது ஆகும். பின் மீண்டும் மலை ஏற வேண்டும். எப்போது கீழே போவோம் என்று நான் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டிருப்பேன். புளியோதரை தீர்ந்துவிட்டால் என்ன ஆவது என்ற எண்ணமே பிரதானமாக இருக்கும். ஒரு வழியாக அம்மா கீழே இறங்குவாள். ஆனால் வழியில் இடும்பனை கும்பிட வேண்டும் என்று நின்றுக் கொள்வாள். இடும்பன் சன்னதியிலிருந்து புளியோதரை அண்டா தெளிவாக தெரியும். புளியோதரை தீர்ந்துவிடக் கூடாது இடும்பா என்று கூட வேண்டியிருக்கிறேன். அந்த புளியோதரை கைக்கு வரும் தருணம் கண்களில் நீரெல்லாம் வந்திருக்கிறது.
இப்போது அதே இடத்தைப் பார்த்தேன். தட்டை தேன்குழல் விலை ஐம்பது என்று போட்டிருந்தது. புளியோதரையை இருபது ரூபாய் கொடுத்து சிறு தொன்னையில் பலரும் வாங்கிக் கொண்டிருந்தனர்.
“புளியோதரை சாப்பிடலாமா!” என்றேன்.
“முதல சாமிய கும்புடனும்… அப்பறம் தான் பிரசாத்” என்றான் ரே. அம்மாவின் காற்று அவனுக்கும் அடித்திருக்கக் கூடும். அம்மாக்களுடன் உரையாடுபவர்கள் அம்மாக்களாகவே மாறிவிடுகிறார்கள்.
நாங்கள் விநாயகர் சன்னதியை நோக்கி நடந்தோம். ‘கண்ட கோயில் தெய்வம் என்று கையெடுப்பது இல்லையே’ வகை தான் நானும். எனக்கு கடவுளிடம் வேண்டுவதற்கு எதுவுமே இருந்ததில்லை. சம்பிரதாயமாக விநாயகருக்கு வணக்கம் சொல்லிவிட்டு நின்றேன். அர்ச்சகர் தன் கையை உயரத்தில் வைத்துக் கொண்டு விபூதியை வேண்டா வெறுப்பாக போடுவது போல் போட்டார். ஒரே வேலையை மீண்டும் மீண்டும் செய்வதனால் வரும் சலிப்பு அது. என் வங்கி க்ளார்க்குகள் இப்படி தான் வாடிக்கையாளர்களிடம் சலித்துக் கொள்வார்கள். சில நேரம் என்னிடமும். அந்த அனுபவம் இருந்தததால், நான் அர்ச்சகரின் செய்கையை பெரிதாக அலட்டிக் கொள்ள வில்லை. ரே அர்ச்சகர் தட்டில் பத்து ரூபாயை போட்டான். அவர் தன் வேட்டி மடிப்பிலிருந்து ஒரு விபூதி பொட்டணத்தை எடுத்துக் கொடுத்தார். எதையோ சாதித்துவிட்டவனாக ரே என்னை பார்த்து புன்னகை செய்தான்.
நான் நவகிரகத்தை நோக்கி நடந்தேன். அவன் வேகவேகமாக என் அருகே வந்து நின்றான். முகத்தில் பெருமிதம் இன்னும் குறையாமல் இருந்தது.
“ஒன்பது முறை சுத்தலாம்” என்றான். இருவரும் நவகிரகத்தை சுற்றத் தொடங்கினோம். சுக்கிரனிடம் வந்த போது படிக்கட்டின் பக்கவாட்டு சுவர் அருகே இரண்டு பெண்கள் நின்று கொண்டிருந்ததை கவனித்தேன். அதில் இளையவளாக இருந்தவள் தன் மஞ்சள் துப்பட்டாவை கையில் விரித்துப் பிடித்திருந்தாள். அதில் கொஞ்சம் காசு இருந்தது. அருகே நின்றுகொண்டிருந்த பெண்மணி என்னிடம் சொன்னாள்,
“சார் தங்கச்சிக்கு கல்யாணம். மடிப்பிச்சை கேட்கிறோம்”
அவள் கழுத்திலும் தாலி இல்லை என்பதை என்னால் கவனிக்க முடிந்தது. நான் எதுவும் பேசாமல் நவக்கிரகத்தை சுற்றினேன்.
ரே “என்ன!” என்றான். மடிபிச்சை என்பதை உடனடியாக ஹிந்தியில் எப்படி சொல்வது என்று தெரியவில்லை. கல்யாணத்திற்கு பணம் கேட்கிறார்கள் என்று ஆங்கிலத்தில் சொன்னேன். அதற்குள் நாங்கள் மேலும் இரண்டு முறை சுற்றி முடித்து விட்டோம். அந்த பெண்கள் அங்கேயே நின்றுக் கொண்டிருந்தனர். ஓரிருவர் காசு போட்டுவிட்டு சென்றார்கள்.
கடைசி முறை சுற்றும் போது, இளையவள் ரேவை பார்த்து கேட்டாள், “சார் என் கல்யாணத்துக்கு மடி பிச்சை கேட்கிறோம்” தனக்கு தமிழ் தெரியாது என்பதை அவன் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
நான் அவளைப் பார்த்தேன். முகம் களைத்திருந்தது. அவளுக்கு முப்பது வயதிற்கு குறையாமல் இருக்கும். நவகிரக பாதையை விட்டு வெளியேறி அவர்கள் அருகே சென்ற ரே, தன் பர்ஸிலிருந்து புது ஐநூறு ரூபாய் தாளை எடுத்து அவள் விரித்திருந்த துப்பட்டாவில் போட்டான். எனக்கு அதிர்ச்சியாகவே இருந்தது.
“பத்து ரூபாய் போட வேண்டிதான! ஐநூறு ரொம்ப அதிகம்” கோவில் படிகளில் ஏறும்போது சொன்னேன்.
“எவ்வளவோ மோசமான விஷயத்துக்குலாம் செலவு பண்ணிருக்கேன். கல்யாணத்துக்கு தான!” என்றான்.
“சொல்றாங்க. உண்மைன்னு எப்படி தெரியும்! அவங்க அக்கா தங்கச்சியானே எனக்கு டவுட்டு” என்றேன் நான். அவன் என்னையே கூர்ந்து கவனித்தான். பின் திரும்பி அந்த பெண்களைப் பார்த்தான்.
“ஜானே தோ. உண்மைன்னு நினச்சு ஹெல்ப் பண்ணினேன். உண்மையானு டெஸ்ட் பண்ணியா பாக்க முடியும்!” என்றான்.
நான் கோவில் உச்சியை நோக்கினேன். மிக நீண்டதொரு வரிசை வளர்ந்து கொண்டே போனது. சன்னதியை அடைய முக்கால் மணி நேரமாவது ஆகிவிடும்.
“எங்க நின்னு கும்பிட்டாலும் சாமி தான்!” என்றேன் நான்.
“என்ன!” ஏதோ பெரிய தத்துவத்தை புரிந்துக்கொள்ள முயல்பவன் போல் கேட்டான்.
“சாமிய இங்க நின்னு கூட கும்பிட்டுக்கலாம். இவ்ளோ பெரிய க்யூல எதுக்கு நின்னுகிட்டு!
“உண்மையானு டெஸ்ட் பண்ணியா பாக்க முடியும்னு கேட்டியே! டெஸ்ட் பண்ணிடுவோம்”
“ஹே! அதெல்லாம் வேணாம். வீட்டுக்கு போலாம். நான் உண்மைன்னு நினச்சு தான் ஹெல்ப் பண்ணேன். அது போதும்”
“ஜஸ்ட் தெரிஞ்சிக்கலாம். அவங்க உண்மை சொல்லிருந்தா சந்தோசம். பொய் சொல்லிருந்தா இது ஒரு பாடம்” என்றேன். அவர்கள் பொய் சொல்லிருக்கக் கூடும் என்றே நான் நம்பினேன். அதை உறுதி செய்து கொள்வதற்காக தான் அவர்களை பின்தொடர விரும்பினேன்.
ரேவும் சரி என்றான். நாங்கள் மேலே ஏறாமல் அப்படியே திரும்பி இடும்பன் சன்னதி அருகே இருந்த படிகட்டில் அமர்ந்தோம். சிறு வயதில் புளியோதரையை பார்த்துக் கொண்டிருப்பது போல இப்போது அந்த பெண்கள் நின்றுகொண்டிருக்கும் இடத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்கள் கிளம்பும் வரை அங்கேயே அமர்ந்திருக்க முடிவு செய்தோம்.
ரே அவ்வப்போது திரும்பி மலைமேல் நின்றுகொண்டிருந்த கூட்டத்தை பார்த்தான். கூட்டம் குறையாமல் தான் இருந்தது. நாங்கள் செய்வது சரியா என்று உறுதி செய்து கொள்வதற்காக தான் அவன் அப்படி பார்கிறானோ என்று தோன்றியது. கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள் கடந்திருக்கும். இளையவள் தன் துப்பட்டாவில் இருந்த பணத்தை மற்றவளின் கையிலிருந்த துணிப்பைக்குள் கொட்டினாள். நாங்கள் அந்த தருணத்திற்காக காத்திருந்தவர்களாக எழுந்து நின்றோம். அந்த பெண்கள் கோவிலை விட்டு வெளியேறத் தொடங்கினார்கள்.
நான் செல்போனைப் பார்த்தேன். மணி 7.43 P.M.
“நான் போய் கார எடுத்துட்டு வரேன். நீ அவங்க எப்படி போறாங்கனு பாரு”
“ஏன் சார் நோ பார்க்கிங் போர்டு இருக்கு தெரில…” கேட்டின் அருகே நின்றுகொண்டு சொன்னார் அந்த வீட்டுக்காரர்.
“சாரி சார்”
“பண்டிகை நாளுனாலே இதே ரோதனையா போச்சு!” என்று தனக்குத் தானே முணுமுணுத்துக் கொள்வது போல் என் காதில் கேட்கும்படி சொன்னார். அவர் அருகே நின்றுகொண்டிருந்த நாய் என்னை பார்த்து இரண்டு முறை குறைத்துவிட்டு அமைதியானது. அவர் சங்கிலியை விட்டிருந்தால் அந்த நாய் என் மீது பாய்ந்திருக்கக் கூடும்.
நான் அவசர அவசரமாக காரை எடுத்தேன்.
“அந்த ஆட்டோல தான் போறாங்க…” என்றான் ரே.
ஒரு பெரிய நடிகரின் புகைப்படத்தையும், அவரின் வசனத்தையும் தன் மேல் தாங்கிய ஆட்டோ, ஹஸ்தினாபுரம் சாலையில் திரும்பியது. அது திரும்பிய பல குறுகிய தெருக்களில் காரை திருப்ப கொஞ்சம் சிரமப் பட வேண்டி இருந்தது. ரே அவ்வப்போது தன் கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டான். திடீரென்று எருமை மாடொன்று மிரண்டு சாலையில் குறுக்கே வந்துவிட்டது. நானும் மிரண்டு தான் போனேன். எங்களின் நல்ல நேரமா, மாடின் நல்ல நேரமா என்று தெரியவில்லை, கார் மாடை முட்டாமல் அதன் பக்கத்தில் போய் நின்றது. அதற்குள் முன் சென்ற ஆட்டோ எங்களின் பார்வையில் இருந்து மறைந்துவிட்டது.
எங்களை ஒரு முறை திரும்பி பார்த்துவிட்டு மாடு தன் போக்கில் நடந்தது. நான் ரேவைப் பார்த்தேன். எதுவும் ஆகியிருக்கவில்லை என்ற ஆசுவாசம் அவன் முகத்தில் தெரிந்தது. எங்களின் தோல்வியை, இல்லை என்னுடைய தோல்வியை ஒப்புக் கொள்ள முடிவு செய்தேன்.
“திரும்பிடலாம்” என்று சொல்ல வாயெடுக்கும் போதே, அந்த ஆட்டோ திரும்பி எங்களை நோக்கி வந்து கொண்டிருந்ததை கவனித்தேன். அதே மாடு இப்போது ஆட்டோவின் முன்னே ஓடியது. ஆட்டோ மாடின் உடலை உரசிக்கொண்டு வளைந்து சாலையை விட்டு இறங்கி, மீண்டும் அதே நேக்குடன் சாலையில் ஏறியது. சென்னையில் ஆட்டோ டிரைவர்கள் வழக்கமாக பிரயோகிக்கும் வார்த்தையிலேயே அந்த மாட்டை திட்டினான் ஆட்டோ வாலிபன்.
“ஹே எருமை”
நான் புன்னகை செய்தேன்.
ரே, “கியா ஹுவா பாய்!” என்றான்..
“எக்ஸ்ப்ளெய்ன் பண்ணுனா, புரியாது விடு” என்றேன். அந்த ஆட்டோ காலியாக இருந்ததை ரே தான் முதலில் கவனித்தான்.
“அவங்க போன ஆட்டோ தான! அப்போ இங்க தான் எங்கயாவது இறங்கி இருப்பாங்க!.
“ஆகே சலோ. அவங்க வீடு எங்க இருக்குனு பாத்திருவோம்” என்றான். எனக்கு இருந்த ஆர்வத்தைவிட இப்போது ஏனோ அவனுக்கு அதிக ஆர்வம் தொற்றிக்கொண்டது.
தோல்வியை தவிர்த்துவிட்ட கர்வத்தோடு நான் ஆக்ஸிலரேட்டரை அழுத்தினேன். சாலை வளைந்த திசையில் காரை வளைத்தேன். அந்த தெரு நீண்டு கொண்டே போனது. ஆனாலும் ஆட்டோ திரும்பி வந்ததை வைத்துப் பார்த்தால் சில நூறு மீட்டருக்குள் தான் அந்த பெண்களின் வீடு இருக்க வேண்டும் என்று தோன்றியது. காரை ஓரமாக நிறுத்தினேன்.
ரே இறங்கி தெருவை நான்கு புறமும் நோட்டம்விட்டுவிட்டு, முன்னே நடந்தான். தெரு ஆங்காகே, குறுக்கு தெருக்களாக பிரிந்தது. நான் அவனை பின் தொடர்ந்தேன்.
“சரி இவ்ளோ தூரம் வந்துட்டு, பெட் கட்டாம போனா எப்டி!” என்றேன்
“கியா?”
“அவங்க உண்மைய சொல்றாங்கணு நீ சொன்ன. ஏமாத்துறாங்கணு நான் சொன்னேன். உண்மையா இருந்தா ரெண்டாயிரம் நான் தரேன். அவங்க ஏமாத்துக்காரங்களா இருந்தா ரெண்டாயிரம் நீ தரணும்”
ரே ஒப்புக் கொண்டான். சிறிய வீடுகள் மிக நெருக்கமாக அமைந்திருந்த அந்த தெருவில் ஒரு வீட்டின் முன்பு வாழை மரங்கள் கட்டப்பட்டு, நல்வரவு என்று ஒளி விளக்கால் அலங்கரிக்கப் பட்டிருந்தது.
“கல்யாண வீடு மாதிரி தான் இருக்கு” என்றேன் ரேவிடம்.
அந்த வீட்டில் வாசலில் நின்றதுமே, “வாங்க வாங்க” என்று வரவேற்றார் ஒரு பெரியவர்.
“மாப்பிள்ளையோட ஃபிரண்ட்ஸ் போல” என்று பின்னே நின்று கொண்டிருந்த ஒரு அம்மாவிடம் சொன்னார். நான் வீட்டின் வாசலில் மணமக்களை வாழ்த்தி வைக்கப்பட்டிருந்த பேனரை பார்த்தேன். வேறொரு பெண்ணின் புகைப்படம் இருந்தது. இரண்டாயிரம் மிச்சம்.
ரேவிடம் பேனரை பார்க்கும் படி ஜாடை காண்பித்தேன்.
“தோ அசார், தயார் கரோ” என்று ரேவின் காதுகளில் கிசுகிசுத்தேன்.
“வெயிட் பண்ணு. அந்த பொண்ணுக்கு கல்யாணம்னு தான் சொன்னா! இன்னைக்கே கல்யாணாம்னு சொன்னாளா! இங்க தான் எங்கயாவது இருப்பா!” என்றான் ரே.
நாங்கள் ஹிந்தியில் உரையாடிக் கொண்டிருப்பதை அந்த பெரியவர் பார்த்துக் கொண்டே நின்றார்.
“இதோ வந்துர்றோம்” என்று பெரியவரிடம் சொல்லிவிட்டு நான் திரும்பி நடந்தேன். அந்த வீட்டை கடந்து போனால், திரும்பி வரும் போது அவரை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்பதால் தான் அப்படி செய்தேன். ரேவும் இணைந்து கொண்டான்.
எந்த வீட்டில் அந்த பெண் இருக்கக் கூடும் என்று யூகிக்க முடியவில்லை. ஒரமாக நின்று தெருவை கவனித்தோம். கல்யாண வீட்டு பெரியவர் எங்களையே நோக்குகிறார் என்பதை தெரு விளக்கின் ஒளியிலும் கண்டுகொள்ள முடிந்தது.
“விடமாட்டார் போல” என்றான் ரே.
திடீரென்று ஏதோ சப்தம் கேட்க, திரும்பினோம். ஒருவர் கீழே கிடந்தார். அவரது சைக்கில் அவரின் மேல் கிடந்தது. எருமை மாடு கீழே கிடந்தவரை பொருட்படுத்தாமல் கடந்து சென்றது. நாங்கள் இருவரும் ஒடிச்சென்று அவரை தூக்கினோம். மிகவும் மெலிந்திருந்த அந்த ஆளுக்கு வயது அறுபதுக்கு மேல் இருக்கும்.
“நன்றிங்க” என்று சங்கோஜத்துடன் எழுந்து கொண்டார். ரே அவருடைய சைக்கிலை நிமிர்த்தி அவரிடம் கொடுத்தான்.
“சார், அடிலாம் ஒன்னும் படலல்ல?”
“அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க”
“வாங்க வீட்ல விட்டுற்றோம்…”
“வேணாம்ங்க. வீடு, இங்க தான் பக்கத்துல.. நானே போய்க்குறேன்” என்று எங்களை நிமிர்ந்து பார்க்க விருப்பம் இல்லாதவர் போல் சைக்கிலை தள்ளிக் கொண்டு வலது புறமாக திரும்பிய குறுக்குத் தெருவிற்குள் நுழைந்தார்.
ரே மீண்டும் மணியைப் பார்த்தான்.
“இப்ப கிளம்புனா வீட்டுக்கு போயிட்டு ஏர்போர்ட் போக கரெக்டா இருக்கும். போலாம்” என்றான்.
“அவங்க ஏமாத்திருக்காங்க. நீ ரெண்டாயிரம் எடு!” என்றேன்.
“அதுக்கு அவங்க ஏமாத்துனது ப்ரூவ் ஆகணும். நீ இன்னொரு நாள் வந்து அவங்கள தேடு. அவங்க சொன்னது உண்மையா பொய்யானு தெரிஞ்சிக்கிட்டு அப்பறம் பெட்ல நீ ஜெயிச்சியா நான் ஜெயிச்சனானு பாப்போம்” என்றவன் குனிந்து கீழே இருந்து எதையோ எடுத்தான்.
“அந்த சைக்கில் ஆத்மிதுன்னு நினைக்கிறேன்” என்றவாரே என்னிடம் நீட்டினான்.
ஆதார் அட்டை. நான் குறுக்குத் தெருவைப் பார்த்தேன். அவர் சைக்கிளை ஒரு வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்ததை கவனித்தேன்.
“சார் சார்” அவர் பின்னே ஒடினேன்.
அது ஒரு ஸ்டோர் வீடு. கேட்டின் உள்ளே இருப்புறமும் வரிசையாக வீடுகள் அமைந்திருந்தன. முதல் வீட்டு வாசலில் அமர்ந்து ஒரு அம்மா அருவாமனையில் மீனை ஆய்ந்து கொண்டிருந்தாள். எங்களை நிமிர்ந்து பார்ப்பது நேர விரயம் என்று சொல்லும் பொருட்டு அவள் தன் வேலையில் மூழ்கியிருந்தாள். மூன்றாவது வீட்டு வாசலில் அந்த ஆள் நின்று கொண்டிருந்தார்.
எதிரே நின்ற உயரமான ஆசாமி, “நான் என்னய்யா பண்றது! இத வச்சு தான் நான் சாப்டனும்” என்றவாறே கையில் இருந்த காசை எண்ணினான்.
பின்பு உள்ளே எட்டிப்பார்த்தவாறே, “சரி, உன் புள்ளைங்ககிட்ட சொல்லிடு. என் பொண்டாட்டி பேசுனதெல்லாம் மனசுல வச்சிக்க வேணாம்னு. காலிலாம் பண்ண வேணாம். நான் பேசிக்குறேன். மாசமாச்சுனா வாடகைய கொடுத்துட்டா அவ ஏன் இங்க வந்து நிக்கப்போறா!” என்றான்.
காசை சட்டைப் பையில் வைத்தவன், திரும்பி எங்களை நோக்கி நடக்க, நாங்கள் மூன்றாவது வீட்டை நோக்கி நடந்தோம்.
“சார்…” என்றதும் அவர் வெளியே எட்டிப்பார்த்தார். அந்த பார்வையில் ஆச்சர்யமும் தயக்கமும் ஒருங்கே வெளிப்பட்டது.
“இத விட்டுட்டீங்க” என்று ஆதார் அட்டையை நீட்டினேன்.
“நன்றிங்க” என்று நிலையை தாண்டி வந்து வாங்கிக்கொண்டார்.
“காலைல இருந்து நிதானம் இல்ல…” என்றார்.
வீட்டின் உள்ளே கவனித்தேன். முன் எறிந்த ஒரு எல்.ஈ.டி பல்ப் அந்த வீட்டிற்கு போதிய வெளிச்சத்தை தந்திருந்தது. நுழைந்ததுமே ஒரு அடுப்படி, அதன் பின்னே இருந்த ஒரே ஒரு அறை என்ற அளவில் அந்த வீடு இருந்தது. ஒரு திரை துணியால் உள்ளறை மறைக்கப் பட்டிருக்க, உள்ளிருந்து யாரோ ஒரு பெண்மணி, ‘ம்மா, ம்மா’ என்று முனகுவது கேட்டது. அந்த குரல் தாங்கமுடியாத வலியை குறிக்கும் ஓலமாக ஒலித்தது. நான் உள்ளே கவனித்ததை அவரும் கவனித்தார்.
“என் மனைவிங்க…” அவர் அதை சொல்லியிருக்க வேண்டாம். சொல்லிவிட்டாரே என்பதற்காக நான் சம்ப்ரதாயமாக கேட்டேன்,
“ஏதாவது உடம்புக்கு…”
“வயித்துல கேன்சர். டாக்டர் முடியாது கூட்டிட்டு போனுட்டார். மூணு நாளா உசுரு பிரிய மாட்டேங்குது…வலில துடிக்குறா”
மனதிலிருப்பதை யாரிடமாவது கொட்டி தீர்த்துவிட வேண்டும் என்று காத்திருந்தவரை போல் என்னிடம் சொல்லிவிட்டு அழத் தொடங்கிவிட்டார். அதுபோன்ற ஒரு சூழ்நிலையை எதிர்கொண்டு எங்களுக்கு பழக்கமில்லை. ரேவும் என்ன செய்வது என்று தெரியாமல் என்னையே பார்த்தான்.
“உஷ்கா பீவி…” என்று மட்டும் சொன்னேன். அவன் புரிந்து கொண்டான். மேற்கொண்டு அங்கே நிற்கவேண்டாம் என்று தோன்றியது.
“ஒண்ணும் கவலப்படாதீங்க சார்…” என்றேன். உண்மையிலேயே வேறு என்ன சொல்வது என்று தெரியவில்லை. எவ்வளவோ படித்தும் துயரில் நிற்பவருக்கு ஆறுதல் எப்படி சொல்வது என்பதை கற்றுக் கொண்டிருக்கவில்லை. அவர் அப்படியே நிலையில் அமர்ந்து வாயைப் பொத்திக் கொண்டார். அவரின் அழுகுரல் உள்ளேயும் கேட்டிருக்கக் கூடும்.
திரையை விலக்கிக் கொண்டு வெளியே வந்த பெண்ணொருத்தி, “அப்பா அப்பா! அம்மா போது பா போது பா” என்று அந்த ஆளினுடைய முதுகை பிடித்து உலுக்கினாள். அந்த ஆள், “ஐயோ மீனாட்சி” என்று கதறியவாறே எழ, அந்த பெண் அவரை தாங்கி உள்ளே அழைத்துச் சென்றாள். அவள் இருந்த பதட்டத்தில் வாசலில் நின்று கொண்டிருந்த எங்களை பொருட்படுத்தவில்லை. ஆனால் நாங்கள் இருவருமே அவளை கவனித்தோம். நாங்கள் தேடி வந்த இருவரில், இளையவள் அவள். இன்னொரு பெண்ணும் உள்ளே இருக்கக் கூடும்.
“நான் பெட்ல தோத்துட்டேன் பாய்” என் கண்களை பார்க்காமல் ரே, உறுதி இழந்த குரலில் சொன்னான்.
“நானும் தான்” என்றேன் நான். வீடு வரும்வரை நாங்கள் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
இன்று இந்த தளம் தன்னுடைய பத்தாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.
ஊக்கமளிக்கும் அனைவருக்கும் நன்றி.
அரவிந்த் சச்சிதானந்தம்
கொரோனா நாட்கள்-நெடுங்கதை
ஒன்று
வண்டி ஓட்டுவது என்றாலே கப்பல் ஓட்டுவது போல் தான் எனக்கு. கப்பல் ஓட்டுவது கடினமான வேலையா என்று தெரியாது. அவ்வளவு பெரிய கடலில் மிதந்து போவதை நினைக்கும் போது
பயமாக தான் இருக்கிறது. அதனால் கப்பல் ஓட்டுவது கடினமான
வேலை என்று மனதில் நிலைத்துவிட்டது. நம்மை பயமுறுத்தும் விஷயங்கள் எல்லாமே நமக்கு கடினம் தான் போல! வண்டி ஓட்டும் போதெல்லாம் யாராவது வந்து இடித்து
விடுவார்களா, அல்லது நான் யார் மேலேயாவது இடித்து விடுவேனா என்ற பயம்
எப்போதும் இருக்கும். அதனாலேயே எனக்கு வண்டி ஓட்டுவது என்றாலே கப்பல் ஓட்டுவது போல் தான். கப்பல் ஓட்டுவது கடினமான வேலையா என்று தெரியாது. அவ்வளவு பெரிய கடலில்…
சரி, கப்பலுக்கு நங்கூரம் பாய்ச்சி நிறுத்திவிடுவோம்.
வண்டி தான் பயம்.
வண்டியே அதிகம் ஓட்டிடாத எனக்கு கொரோனா காலத்தில்
தினமும் வண்டி ஓட்ட வேண்டும் என்றதும் கூடுதல்
பயம் வந்துவிட்டது. அலுவலகத்தில் நான் வேலைக்கு வந்தே ஆகவேண்டும் என்று
சொல்லிவிட்டார்கள். என் வீடு கிழக்கு தாம்பரத்தில் இருந்தது. நான் வேலை செய்யும் வங்கியோ மந்தைவெளியில். இடைப்பட்ட இருபத்தைந்து கிலோ மீட்டரை கடக்க வண்டி
ஓட்டி ஆக வேண்டும்.
குரோம்பேட்டையிலிருந்து செல்லும் நண்பர் எம்.வியின் வண்டியில் ஏறிக்கொள்ளலாம் என்று பார்த்தேன்.
“சோசியல் டிஸ்டன்சிங் ப்ரோ. சாரி ப்ரோ” என்று சொல்லிவிட்டார்.
“மாஸ்க் க்ளவுஸ்லாம் போட்டுகிட்டு தான் ப்ரோ வருவேன்”
அவர் சமாதானம் ஆகவில்லை.
“வீட்ல குழந்தைங்கலாம் இருக்கு ப்ரோ. எனக்கு வந்தா நான் தாங்குவேன். ஆனா என் மூலமா அவங்களுக்கு வந்திரக் கூடாது! நீங்க வேற உங்க எதிர்வீட்டுக்காரு வெளிநாட்ல இருந்து
வந்திருக்காருன்னு சொல்றீங்க…” என்றார்.
“எதிர்வீட்டுகாரு வெளிநாட்ல இருந்து வரல ப்ரோ. அவர் வீட்டு காரு தான் வெளிநாட்ல இருந்து வந்திருக்கு. ஜெர்மன் கார்” என்றேன்.
கொஞ்சம் சுதாரித்துக்கொண்டு கேட்டார், “அதான். கார்ல் கொரோனா வரும்ல…!”
“இல்ல. நாலு மாசத்துக்கு முன்னாடியே அந்த காரு வந்திருச்சு ப்ரோ” என்றேன் நான்.
“கொரோனாவும் நாலு மாசத்துக்கு முன்னாடியே
வெளிநாட்ல வந்திருச்சு ப்ரோ” அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னார்.
அதன் பின் அவரை நான் வற்புறுத்தவில்லை. தன் வண்டியே தனக்கு உதவி.
ஆனால், அதே வாரத்தில் ஒரு நாள் அம்மா செய்து கொடுத்த
மசால் வடையை உணவு இடைவேளையில் நான் தட்டில் எடுத்து வைத்த போது,
“என்ன ப்ரோ! அம்மா ஸ்பெசலா!” என்றவாறே வடையை ஏக்கமாக பார்த்தார்.
அவர் எங்கள் அலுவலகம் எதிரே இருந்த ராகுல் டீ கடையில், பலமுறை சுட்ட எண்ணையில் பொறித்து எடுத்த மிகச் சுமாரான
வடையைக் கூட ரசித்து சாப்பிடுவார்.அவருக்கு அலுவலகத்தில் அதனால் தான் M.V என்ற பெயர் வந்தது. அதாவது மசால் வடை.
“சோசியல் டிஸ்டன்சிங் ப்ரோ!” என சொல்லலாம் என்று பார்த்தேன். ஆனால் அவர் நான் என்ன சொல்லப் போகிறேன் என்றெல்லாம்
சட்டை செய்யாமல், என் தட்டில் இருந்து ஒரு வடையை எடுத்துக் கடித்தார்.
“எண்ணெய்ல பொறிச்சு எடுத்தா கொரோனா செத்துரும் ப்ரோ…” என்றார்.
“நாளைல இருந்து உங்க வண்டில வந்துறவா ப்ரோ” என்று கேட்கத் தோன்றியது.
“எண்ணையில குளிச்சிட்டு வாங்க ப்ரோ” என்று சொல்லிவிடுவாரோ என்று பயம். தன் வண்டியே தனக்கு உதவி. மீண்டும் எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.
முதல் நாள் வண்டியை எடுத்த போது கொஞ்சம் கூடுதலாகவே பயம்இருந்தது. சில மாதங்களாகவே வண்டியை வெளியே எடுக்கவில்லை. சில வருடங்களாகவே வண்டியை தாம்பரத்தை தாண்டி எடுத்துச் சென்றதில்லை. மளிகைக்கடை போக, மாவுக் கடைக்கு போக மட்டுமே வண்டியை பயன்படுத்தி வந்தேன். அதிக பட்சம் போய் வர இரண்டு கிலோமீட்டர் தூரம் தான். நான்கைந்து மாதங்களுக்கு முன்பு என்.எஸ்.என் ஸ்கூல் அருகே
இருந்த தள்ளுவண்டி கடையில் மசால் பூரி சாப்பிட போன போது, குறுக்கே ஓடி வந்துவிட்ட நாயை இடித்துவிடாமல் வண்டியை ப்ரேக் அடித்து நிறுத்த, வண்டி சறுக்கி மசால் பூரி கடை வாசலில் நின்று காளான்
சாப்பிட்டுக் கொண்டிருந்த தடியான ஆசாமியின் மீது
மோதிவிட்டது. அவருக்கு ஒன்றும் ஆகவில்லை.
எனக்கு அவமானமாக போய்விட்டது. அவருக்கு காளான் போய்விட்டது. அவர் கையில் இருந்த காளான் தட்டு கீழே விழுந்து, காளான் சிதறி, குறுக்கால் ஓடிய நாய் அதை சாப்பிட தொடங்கி விட்டது. நான் அவமானத்தில் எதுவும் சாப்பிடாமல் திரும்பி வந்தேன். அதன் பின்பு நான் மசால் பூரி சாப்பிடவே இல்லை. வண்டியையும் எடுக்கவில்லை. ஆனால் மார்ச் முப்பத்தி ஒன்றாம் தேதி வரை ரயில்கள் இயங்காது
என்ற அறிவிப்பு வந்ததும் எனக்கு வண்டியை வெளியே எடுப்பதை
தவிர வேறு வழி இருக்கவில்லை. பேருந்தில் போய் வருவது சாத்தியமில்லை. ரயில் இல்லை எனில் எல்லோரும் 21G பேருந்துக்குள் நுழைந்து கொள்வார்கள். கூட்டத்தில் மொபைலையும் பர்ஸயும் பாதுகாக்கும் பொறுப்பு வேறு கூடிவிடும். இருசக்கர வாகனத்தில் போவது தான் சரியாகப் பட்டது. நான்கைந்து நாள் தானே சமாளித்துவிடலாம் என்று எண்ணினேன்.
“பெட்ரோல் போட்டுக்கோ, காத்து அடிச்சுக்கோ” என்றார் அப்பா.
வண்டி வெகு நேரம் கண்திறக்க மறுத்தது.
“சோக்க போடுடா…”
அப்பா வாசலில் நின்று கொண்டு ரன்னிங் கமெண்டரி கொடுப்பது எனக்கு என்னவோ போல் இருந்தது.
“அவனுக்கு தெரியும். நீங்க உள்ள வாங்க” எப்போதும் போல் அம்மா தான் காப்பற்றினாள்.
வண்டி கண் திறந்தது.
சோக்கை போட்டுக் கொண்டு வண்டியை ஓட்டியதால்
திருப்பங்களில் வண்டியின் வேகத்தை குறைத்த போதெல்லாம்
வண்டி உறுமியது. அது எனக்கு கூடுதல் பயத்தை கொடுத்தது. குரோம்பேட்டையை நெருங்கும் போது தான் வண்டி இயல்பானது. நானும் தான். சோக்கை அணைத்தேன். ஆக்சிலேட்டரை முறுக்கினேன். வண்டி வேகமெடுத்தது. அதே வேகத்தில் குரோம்பேட்டை பாலத்தில் ஏறினேன். அதிக பட்ச வேகம் இருபது கிலோமீட்டர் தான் என்று பாலத்தில்
எழுதி ஒட்டியிருந்தார்கள். நான் வேகத்தை குறைக்க முடிவெடுத்து ஸ்பீடோ மீட்டரை
பார்த்தேன். வண்டி ஏற்கனவே பதினைந்து கிலோமீட்டர் வேகத்தில் தான் போய் கொண்டிருந்தது.
“யோவ் ஸ்லோவா போறதா இருந்தா லெப்ட்ல போ…” என்று கத்தினான் புல்லட்டில் போனவன். எனக்கு கோபம் வந்தது. வண்டியை அதிகமாக முறுக்கினேன். அடுத்த அரை நிமிடத்தில் வண்டியின் வேகம் முப்பதை தொட்டது. எனக்கு பெருமையாக இருந்தது. அந்த புல்லட்காரனை துரத்திக் கொண்டு போக வேண்டும் என்ற
ஆசை வந்தது. மீண்டும் முறுக்கினேன். வண்டி ஆட்டம் காணுவது போல் இருந்ததால் ஆசையை அடக்கிக் கொண்டேன்.
பரங்கிமலை அருகே 21G பேருந்து என்னைக் கடந்து போவதை கவனித்தேன். பேருந்து நான் எதிர்ப்பார்த்தது போலவே கூட்டமாக இருந்தது. நான் எடுத்த முடிவு சரிதான் என்று என்னையே மெச்சிக்
கொண்டேன். அதே சந்தோசத்தில் முப்பது கிலோமீட்டர் வேகத்தில் அலுவலகத்தை அடைய மணி பத்தேகால் ஆகிவிட்டது. ஒன்பதே முக்காலுக்கெல்லாம் வங்கியில் இருக்க வேண்டும். இருந்தும் யாரும் எதுவும் சொல்லவில்லை. முதல் நாளை ஓட்டி ஆகிவிட்டது. மாலை வீட்டுக்கு வந்ததும் தான் அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.
“இருவத்தி ஒருநாள் ஊரடங்காம்” என்றார் அப்பா.
இரண்டு
ஊரடங்கில் சாலையில் அதிக வாகனங்கள் ஓடாதது தான் பெரிய
ஆறுதல். அத்தியாவசிய வேலைக்கு செல்பவர்கள் மட்டுமே வெளியே
வந்தனர். ஆங்காங்கே போலீஸ் நிறுத்தினாலும், வண்டியின் முன்பு ஒட்டியிருந்த என் வங்கியின் ஸ்டிக்கரைப்
பார்த்து அனுப்பிவிட்டார்கள். கெட்டதிலும் நல்லதாக எங்கேயும் சிக்னல் இயங்கவில்லை. எனக்கு எப்போதும் பச்சையும் சிகப்பும் ஒரே மாதிரி தான் தெரியும். தோரயமாக தான் சிக்னலை புரிந்து வைத்திருக்கிறேன். வெகு தூரத்தில் வண்டி ஓட்ட வேண்டிய அவசியம் ஏற்படாததால்
சிக்னல் ஒரு பிரச்சனையாக இருக்கவில்லை. ஊரடங்கால் சிக்னலும் அடங்கிவிட்டதால், சைக்கிள் ஓட்டும் நிதானத்தில் வண்டியை ஓட்டி அலுவலகத்தை அடைவது வழக்கமாகிவிட்டது. கொரோனாவும் நாளுக்கு நாள் எண்ணிக்கையில் கூடிக் கொண்டே போனதில் எனக்கு அப்சசிவ் கம்பல்சன் டிசார்டர் வந்துவிட்டது. நான் பதினைந்து நிமிடங்களுக்கு ஒருமுறை கைகளைக் கழுவிக் கொண்டே இருந்தேன். அன்றும் அப்படிதான். மேஜையில் பையை வைத்துவிட்டு கைக்கழுவும் இடம் நோக்கி
நடந்தேன்.
கைக்கழுவும் குழாய்க்கு மேலே கையை எப்படி கழுவ வேண்டும்
என்று படம் போட்ட மாநகராட்சி ஸ்டிக்கரை ஒட்டி இருந்தார்கள். முதலில் சோப்பு அல்லது ஹாண்ட் வாஷ் திரவத்தை கையில்
ஊற்றுங்கள். பின் முப்பது வினாடிகள் விரலின் இடுக்கில் எல்லாம் தேயுங்கள்.
நான் ஹாண்ட் வாஷ் பெட்டியை அழுத்தினேன். தண்ணீர் வந்தது. மறுபடியும் அழுத்தினேன். தண்ணீர் தான் வந்தது. எனக்கு குழப்பம். ஒருவேளை நாம் தான் ஹாண்ட் வாஷிற்கு பதில் தண்ணீரை அழுத்திவிட்டோமோ என்று எண்ணியவாறு மீண்டும் ஹாண்ட் வாஷ்
பெட்டியை அழுத்தினேன். நிறைய தண்ணீரோடு கொஞ்சம் திரவம் வந்தது.
“என்னங்க இது!” கோபமாக முகத்தை வைத்துக் கொண்டு அலுவலக
உதவியாளரைக் கேட்டேன்.
“சார் அட்மின்ல சிக்கனமா யூஸ் பண்ண சொல்றாங்க, அதான் கொஞ்சமா கலந்தேன்”
“இது கொஞ்சம் தண்ணியா!” மீண்டும் கோபமான முகத்தோடு ஹாண்ட் வாஷ் பெட்டியை
அழுத்தினேன். நிறைய தண்ணீர் தான் வந்தது.
“சார், நீங்க தப்பா புரிஞ்சிகிட்டீங்க. தண்ணீல தான் கொஞ்சமா கைகழுவுற லிக்யூட ஊத்தினேன்” என்றார்.
எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. நான் அவர் முகத்தையே பார்த்தேன்.
“இந்த காலத்துல போய் இப்டி இருக்கீங்களே!” என்று அவர் முணுமுணுத்துக் கொண்டே நகர்ந்தார்.
அட்மின் சீப் மேனஜர் தான் இதெற்கெல்லாம் பொறுப்பு.
“ஏமி!” என்றார் சீப் மேனஜர் சுங்கர சுப்பிரமணி. அவர் ஆந்திராகாரர். தங்கள் ஊர் ஆசாமிகள் என்றாலோ, பெண்கள் என்றாலோ அவருக்கு நிறைய பிரியம். மற்றவர்களை நிமிர்ந்து பார்க்கக் கூட விரும்பாதவாராக தான்
பேசுவார்.
“சார், ஹான்ட் வாஷ் லிக்யூட்ல தண்ணிதான் இருக்கு. இப்போ, இது தான முக்கியமான விஷயம்! இதுல போய் கலப்படம் பண்றீங்க!” என்று கோபமாக கேட்டேன். அவர் பதில் சொல்லாமல் தன் வேலையைப் பார்த்துக்
கொண்டிருந்தார். அப்போதுதான் நான் என் மனதிற்குள்ளேயே கேட்டிருக்கிறேன் என்று புரிந்தது. சப்தமாக பேச முடியாது. அவருக்கு பிடித்த இரண்டு பிரிவுகளிலும் நான் இல்லை. அமைதியாக, அவர் மேஜை மீதிருந்த வருகைப் பதிவேட்டில் கையெழுத்து
இட்டுவிட்டு நகர்ந்துவிடுவது நல்லது என்றுபட்டது. எப்போதும் ஒன்பதே முக்கால் மணிக்குள் கணினியில் லாகின்
செய்ய வேண்டும். ஆனால் சிலநாட்களுக்கு லாகின் அவசியமில்லை, வருகைப் பதிவேட்டில் கையெழுத்து இட்டால் போதும் என்ற சலுகையை கொரோனா பெற்றுத் தந்திருந்தது.
நான் கையெழுத்துப் போட்டுக்கொண்டிருக்கும் போதுதான் ஐ.டி
ஆபிசர் காயத்திரி வந்தாள்.
“நமஸ்கார் சார்” என்றாள் சுப்ரமணியிடம்.
“நமஸ்கார் மேடம்” சுப்ரமணியின் வாயெல்லாம் பற்கள். நான் அமைதியாக நகர்ந்தேன்.
“ஏன் கஷ்டப்பட்டு வறீங்க மேடம், வர்க் ப்ரம் ஹோம் ஆப்சன் எடுத்துக்குலாம்ல” என்று ஆங்கிலத்தில் சுப்பிரமணி கேட்டது காதில் விழுந்தது.
“பரவால சார். லீவ் எடுத்துக்கிட்டா ஆபிஸ் வேலைய யார் பார்க்குறது…!” என்று அவள் சொல்வதும் கேட்டது.
“ஏண்டா உங்களுக்குலாம் மனசாட்சியே இல்லையாடா!” என்று என் மனசாட்சி அவர்களின் மனசாட்சியைப் பார்த்து கேட்டது. அது அவர்களின் மனசாட்சிக்கு கேட்டதா என்று தெரியாது. என்னால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.
காயத்திரி, மன்னிக்கவும், காயத்திரி மேடத்தின் வீடு இரண்டு கட்டிடங்கள் தள்ளி தான்
இருந்தது. சாதாரண நாட்களிலேயே தாமதமாக வருபவள், கொரோனா நாட்களில் மிகவும் தாமதமாக வந்துக்
கொண்டிருந்தாள். மேலும் அவள் பெரிதாக எந்த வேலையும் செய்யும் பழக்கம்
இல்லாதவளாக இருந்தாள். வருகைப் பதிவேட்டில் கையெழுத்து இட்டுவிட்டு ஏசி அறையில்
போய் அமர்ந்துகொண்டு அன்றைய நாளின் ஷேர் மார்க்கட்
நிலவரங்களை கொஞ்ச நேரம் பார்ப்பாள். கொஞ்ச நேரம் என்றால் நான்கு மணி நேரங்கள். இடையிடையே சாஸ்திரத்திற்கு கொஞ்சம் வேலை செய்வாள்.
இரண்டு மணிக்கு மதிய உணவிற்காக அவள் வீட்டிற்கு கிளம்பிச்
செல்வாள். உணவு இடைவேளை அரைமணி நேரம் தான். ஆனால் காயத்திரி மூன்று மணிக்குதான் வருவாள். மீண்டும் ஏசி அறை. மீண்டும் பங்குச் சந்தை.
அலுவலகத்திற்கு பக்கத்திலேயே வீட்டை வைத்திருக்கும் அவளுக்கு, வேலையே செய்யாத அவளுக்கு வீட்டிலிருந்தே வேலை செய்யும்
வாய்ப்பை கொடுக்கிறார்கள். ஆனால் வெகுதொலைவில் இருந்து வரும் எனக்கு அந்த வாய்ப்பு
மறுக்கப்பட்டுவிட்டது. வாய்ப்புகள் மறுக்கப் படும் போது (வெளிநாட்டில்) அடிமையாகிறோம் என்று யாரோ சொன்னது உண்மைதான் போல.
ஒரு நாள் அலுவலகம் வந்தால், மறுநாள் வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் என்று மேலிடத்தில்
சொன்னதுமே, நான் சுப்புரமணியிடம் போய் கேட்டேன்.
“மேல் ஸ்டாப்லாம் வந்தே ஆகணும். லேடிஸ்க்கு மட்டும் தான் அந்த ஆப்சன். ” என்றார்.
“ஏன் சார்! ஆம்பளைங்களுக்கு கொரோனா வராதா!” என்று கேட்க வேண்டும் போல் இருந்தது. ஆனால் காயத்திரிக்கு மட்டும் தான் அப்படி எல்லாம் துடுக்காக
பேசும் உரிமை இருந்தது.
சுப்ரமணியைப் பார்த்தாலே, “லேடிஸ்க்கு மட்டும் தான் என்ன கேள்வி கேட்குற உரிமை இருக்கு” என்று அவர் நெற்றியில் எழுதி ஒட்டியிருப்பது போல் தோன்றும். அவரிடம் அதிகம் பேசி பிரச்சனை ஆகிவிட்டால் மேலிடம்
கோபித்துக் கொள்ளும். சுப்ரமணி எப்போதுமே மேலிடத்தின் ஆள். தலைமை மாறினால் அதற்கு ஏற்றால் போல் தன்னை எளிதாக
மாற்றிக் கொள்ளக் கூடியவர். அவர் ராஜா-கத்திரிக்காய் கதையில் வரும் மந்திரி போன்றவர். அது என்ன கதை!
ஒரு ஊரில் ஒரு ராஜாவாம். அவர் தன் மந்திரியோடு ஒரு விருந்திற்கு போனாராம். விருந்தில் கத்திரிக்காய் கூட்டை உண்டாராம். “ஆஹா! என்ன ருசி. உலகில் கத்திரிக்காய் போல் சுவையான ஒரு காயும் உண்டோ!” என்றாராம். அதற்கு மந்திரி, “ராஜா! உலகிலேயே தலை சிறந்த காய் கத்திரிக்காய் தான். அதனால் தான் அதன் தலையில் கிரீடம் வைத்திருக்கிறது இயற்கை” என்று கத்திரிக்காயின் காம்பை குறிப்பிட்டு சொன்னாராம். ராஜாவும் அகம் மகிழ்ந்து மந்திரிக்கு ஆயிரம் பொற்காசுகள்
கொடுத்தாராம்.
மீண்டும் ஒரு நாள் ராஜா மந்திரியை அழைத்துக் கொண்டு, வேறொரு விருந்திற்கு போனாராம். விருந்தில் கத்திரிக்காய் கூட்டை உண்டாராம். கத்திரிக்காய் கசந்ததாம். “ஐயோ! இது என்ன சுவையற்ற காய்!” என்று சலித்துக் கொண்டாராம். அதற்கு மந்திரி, “ராஜா! உலகிலேயே மிக மோசமான காய் கத்திரிக்காய் தான். அதனால் தான் அதன் தலையில் முள்ளை வைத்திருக்கிறது
இயற்கை” என்று கத்திரிக்காயின் காம்பை குறிப்பிட்டு சொன்னாராம். ராஜாவிற்கு குழப்பம்.
“மந்திரியாரே, போனமுறை நான் கத்திரிக்காயை புகழ்ந்த போது நீங்களும் புகழ்ந்தீர்கள். இப்போது நான் கத்திரிக்காயை இகழும் போது நீங்களும்
இகழ்கிறீர்கள்!” என்று ஆச்சர்யத்துடன் வினவினாராம் ராஜா.
அதற்கு மந்திரி சொன்னாராம், “பெருமைக்குரிய மகாராஜா அவர்களே. நான் உங்களுக்கு மட்டும் தான் மந்திரி, கத்திரிக்காய்க்கு அல்ல…”
இது போல மேலிடம் சொல்வதை எல்லாம் சரி என்று சொல்லியே
சுப்பிரமணி மேலிடத்தில் செல்வாக்கு பெற்றிருந்தார். அதனால் அவரை சீண்டாமல் என் வேலையை மட்டும் பார்த்துவிட்டு போவதுதான் எனக்கு நல்லது. ஆனால் வேலையை தவிர எல்லா விஷயத்திலும் கவனம் போனது. முக்கியமாக மாஸ்க். இந்த மாஸ்க்கை யாரும் சரியாக போடுவதாகவே தெரியவில்லை. நானும் சாலையில், அலுவலகத்தில் எல்லா இடங்களிலும் பார்க்கிறேன். எல்லோரும் வாயை மட்டுமே மாஸ்கால் மறைத்து வைத்தனர். மூக்கு மாஸ்க்கிற்கு வெளியே தான் எட்டிப் பார்த்தது.
என்னுடன் வேலைப் பார்த்த பலரிடமும் சொல்லிப் பார்த்தேன், “மூக்க மூடுங்க” என்று. ஆனால் யாரும் என் பேச்சைக் கேட்டபாடில்லை. அவர்கள் கூட பரவாயில்லை. உத்திர பிரதேசத்திலிருந்து வந்த சீனியர் மேலாளர் குப்தாவிற்கு
முகக் கவசம் அணியும் பழக்கமே இல்லை.
ஏன் என்று கேட்டால் சொல்வார், “எனக்குலாம் கொரோனா வராது மாலிக்!”
“அதெப்படி!”
“உ.பிலதான் கொரோனா அதிகம் வரவே இல்லையே” என்றார்.
“உங்க ஊர்ல டெஸ்டிங்கே பண்றது இல்ல குப்தாஜி. அதனால தான் யாருக்கும் கொரோனா இல்லனு சொல்றாங்க” என்றேன்.
“அதெல்லாம் காங்கிரஸ் அரசியல். உ.பிகாரங்களுக்கு கொரோனா வராது. எல்லாரும் கவர்மெண்ட் சொன்ன மாதிரி வீட்ல விளக்கேத்தி
வைக்கிறோம், மெட்ராஸ்காரங்களுக்கு தான் வரும்…” என்று உறுதியான குரலில் சொன்னார்.
“இது என்ன லாஜிக். நீங்களும் இப்ப சென்னைல தான இருக்கீங்க….!”
“ஆனாலும் நான் உ.பிகாரன் தான!” என்று கேட்டுவிட்டு ‘ஹச்’ என்று தும்மினார். அதன்பின்பு அவர் பக்கத்தில் நிற்க பயமாக இருந்தது.
அலுவலகத்தில் தான் இந்த பாடு என்றால், சாலையில் கதை வேறுமாதிரி இருந்தது. வண்டியை போலீஸ்காரர்கள் நிறுத்தும் இடங்களில் தான், என் அருகே வண்டியை வந்து நிறுத்தும் யாராவது ரோட்டில் எச்சில் துப்புவார்கள். அப்படிதான் அந்த தடியான ஆசாமியும் எச்சில் துப்பினார்.
“சார் கொரோனா நேரத்துல இப்டி கண்ட இடத்துல எச்சு துப்பக்
கூடாது” என்றேன்.
“கொரோனா வந்தா வரட்டும்… பயந்து பயந்து சாகுறதுக்கு ஒரேடியா சாகலாம்” என்றார்.
“அது உங்க விருப்பம் சார். மத்தவங்க ஏன் சார் சாகனும்…!” உயிர் பயம் எனக்கும் அதிக கோபத்தைத் தந்தது. ஆனால் அவரோ சிரித்தார்.
“தம்பி எந்த நோயும் வராது. ஒரு பேச்சுக்கு சொன்னா இப்டி பயப்படுற! இங்க பாரு!” என்றவாறே வண்டியின் முன்பு காட்டினார். அங்கே கொத்தாக வேப்பிலை சொருகப்பட்டிருந்தது.
“எங்க வேணா எச்சு துப்பலாம். இது இருந்தா எந்த நோயும் அண்டாது…” என்றவர் தன் வண்டியிலிருந்த வேப்பிலையில் ஒரு கொத்தை உருவி என்னிடம் கொடுத்து,
“வச்சுக்கோ…” என்றார். நான் என்ன சொல்வது என்று தெரியாமல் வேப்பிலையை வாங்கிக் கொண்டேன்.
மூன்று
ஊரடங்கு நீண்டுக் கொண்டே போனது. இரண்டு மணி நேரம் மளிகை கடையில், காய்கறி கடையில் நின்றால் தான் பொருட்கள் வாங்க முடியும் என்ற சூழலை காலம் உருவாக்கி விட்டது. அக்னி நட்சத்திரம் வேறு தன் வேலையைக் காட்டியது. தலையில் பெயருக்கென்று கைக்குட்டையை அணிந்து கொண்டு
கடையின் முன்பு நின்றேன். (தலைக்குட்டை என்று சொன்னால் தான் பொருத்தமாக இருக்கும்
என்றால் அப்படியே சொல்லிக் கொள்ளலாம்)
தலையெல்லாம் வியர்வை வலிந்து தலை முடி பிசுபிசுக்க
ஆரம்பித்துவிட்டது. கொஞ்ச நேரம் அப்படியே விட்டால் தலை வலி வந்து விடும். இதற்கு வெயிலே தேவலாம் என்று கைக்குட்டையை கழட்டி
விட்டேன்.
ஆனால் இந்த மூக்கை மறைக்கும் மாஸ்க் தான் தொந்தரவு செய்து கொண்டே இருந்தது. நானும் ஆரம்பத்தில் இருந்தே பார்க்கிறேன். மாஸ்க் அணிந்தால் தான் மூக்கு அறிக்கிறது. மூக்கில் விரல் வைத்து தேய்க்க வேண்டும் என்ற உணர்வு வருகிறது. ஆனால் டி.வியில் மூக்கில் கை வைக்காதீர்கள் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். அன்று, வியர்வையில் மூக்கு அதிகம் அரித்தது. ஆனாது ஆகட்டும் என்று முக கவசத்தை, இல்லை மூக்கு கவசத்தை, கழட்டிவிட்டு புறங்கையால் மூக்கைத் தேய்த்தேன்.
அவ்வப்போது திரும்பி என்னிடம் எதையாவது பேசி வந்த என் முன்னே நின்று கொண்டிருந்த பெரியவர் நான் செய்யக் கூடாத தவறை செய்துவிட்டதாக பார்த்தார். அவர், “லைப்ப தொலைச்சிட்டியேடா” என்று சொல்வது போல் இருந்தது. மேலும் அவர் என்னை விட்டு இன்னும் கொஞ்சம் விலகி சென்றது
என்னமோ போல் இருந்தது. எனக்கே பயம் வந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். மீண்டும் மாஸ்க்கை அணிந்துகொண்டேன். மாஸ்க் என்றதும் எதோ N-95 மாஸ்க் என்று நினைக்க வேண்டாம். எப்போதோ கிண்டி ரயில் நிலையத்தில் இருபது ரூபாய் கொடுத்து வாங்கிய கைக்குட்டைதான் மாஸ்க்காக பயன்பட்டது. (ஆம்! முகக்குட்டை தான்)
ஆரம்பகாலத்தில், ஏதோ அலுவலகத்தில் பெரிய மனசு செய்து பாதி விலையில் ஒரு
N-95 மாஸ்க் வாங்கி கொடுத்தார்கள். மீதி விலையை எங்களிடம் வாங்கிக் கொண்டார்கள்.
ஒரு வாரம் கழித்து, புதிய மாஸ்க் வேண்டும் என்று போய் சுங்கர சுப்பிரமணியத்திடம் கேட்டார் எம்.வி.
“அதெல்லாம் ஒரு முறை தான் வாங்கித் தரமுடியும். இனிமே வேணும்னா நீங்கதான் வாங்கிக்கணும்…” என்றார் அவர்.
“அல்ப்பய்ங்க. வேலைக்கு வர சொல்றானுங்க. ஒரு மாஸ்க் வாங்கித் தர மாட்றானுங்க… கணக்கு காட்றதுக்கு தான் பர்ஸ்ட் டைம் வாங்கி கொடுத்திருக்கானுங்க…” என்று சலித்துக் கொண்டார்.
“பேசமா கர்ச்சீப் கட்டிக்கலாம் ப்ரோ… டெட்டால்ல தோச்சுக்கலாம் ” என்றேன்
“ஏன் ப்ரோ! தெரிஞ்சுதான் பேசுறீங்களா! N 95 தான் போடணும். இதுலலாம் ரிஸ்க் எடுப்பீங்களா! அப்டி காச மிச்சம் பண்ணி என்னப் பண்ணப் போறீங்க! ” என்று கோபமாக அடுக்கிக் கொண்டே போனார்.
மறுநாள் புதிய மாஸ்க்கோடு வருவார் என்று பார்த்தேன். ஆனால் அதே
N-95 மாஸ்க்கை துவைத்து போட்டு வந்தார். கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக அதே N 95 மாஸ்க்கை தான் சலவை செய்து அணிந்து வருகிறார். சில நேரங்களில் இஸ்திரி செய்து அணிந்துவருவதாக சொன்னார். அந்த மாஸ்க்கை பார்க்கும் போதெல்லாம், ஒய்யார கொண்டையாம் தாழம் பூவாம் என்று அப்பாயீ சொல்லும் பழமொழி தான் ஞாபகம் வரும். எனக்கு கிண்டி முகக்குட்டையே போதும் என்று முடிவு
செய்துவிட்டேன்.
எனக்கும் பெரியவருக்கும் முன்னே சிகப்பாக உயரமாக மீசைவைக்காமல் நின்றிருந்த மனிதர் ஒருவர் கடையினுள் நுழைந்தார். நானும் பெரியவரும் கடை வாசலில் நின்றோம்.
கடை வாசலில் ஒரு கயிற்றை கட்டி வைத்திருந்தனர். உள்ளே சென்றவர் கையில் மிக நீண்ட தாள் இருந்தது. அவர் வெகு நேரம் என்னென்னமோ வாங்கினார். அந்த கடையில் வேலை செய்பவர்களை மட்டும் தான் அவர் வாங்கவில்லை என்ற அளவிற்கு அவர் எல்லாவற்றையும் வாங்கினார்.
நான் வாங்குவதற்கு ஏதாவது மிச்சமிருக்குமா என்ற அச்சம் வேறு
வந்துவிட்டது. பெரியவரும் நானும் ஒருவர் முகக்கவசத்தை ஒருவர் பார்ததுக்
கொண்டோம். (கடந்த இரண்டு மாதங்களாகவே முகக்கவசம் மட்டும் தான்
தெரிகிறது. முகங்கள் தெரிவதில்லை).
“இப்டி உலகமே அழிஞ்சிடப் போறமாதிரி எல்லாத்தையும்
வாங்குறாரே!” என்றார் பெரியவர்.
“அடுத்த மாசம் நிச்சயம் உலகம் அழியப் போகுது!” என்றான் எங்கள் பின்னே நின்றுக் கொண்டிருந்த வாலிபன்.
பெரியவர் விருட்டென்று அவன் பக்கம் திரும்பி, “ஆல்வேஸ் திங்க் பாசிட்டிவ். இப்டி தப்புத்தப்பா பேசக்கூடாது” என்று சொல்லிவிட்டு இன்னும் கொஞ்சம் முன்னே போய் நின்றுக் கொண்டார்.
வாலிபன் அலட்டிக் கொள்ளவில்லை. அவன் எதிர்பாராமல் கிடைத்த கல்லூரி விடுமுறையை
கொண்டாடிக் கொண்டிருப்பவனாக காட்சி அளித்தான்.
“ஜூன் 21 தான் டூம்ஸ் டேய்னு மாயன் காலெண்டர் சொல்லுது ட்யூட். இத பத்தி நான் கூட என் யூடியூப் சேனல்ல ஒரு வீடியோ
போட்ருக்கேன். நீங்க பாத்தது இல்லையா!” என்றான். நான் அவனையே அதற்கு முன்பு பார்த்தது இல்லை. நிறைய முடி தாடி சகிதமாக நின்றான். அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை. ஆனால் அவன் தன்னை ஒரு பெரிய செலிப்ரட்டியாக கருதிக்
கொண்டிருக்கிறான் என்பது மட்டும் புரிந்தது. சாதாரண மனிதர்கள் என்ற இனமே அழிந்து போய் எல்லோருமே
ஏதோ ஒரு சமூக வலைத்தளத்தின் பிரபலமாக மாறிக்
கொண்டிருப்பதற்கு சாட்சியாக விளங்கினான் அவன்.
“நான் இங்கதான் ட்யூட் எம்.ஐ.டில படிக்கிறேன். லெட்ஸ் லேர்ன் எவரிதிங் சிம்பிள்னு யூடியூப்ல ஒரு சேனல்
வச்சிருக்கேன். நீங்க போய் பாருங்க. நிறைய கத்துக்கலாம்” என்றான்.நான் சரி என்று தலையாட்டினேன்.
“மறக்காம பெல் பட்டன பிரெஸ் பண்ணுங்க ட்யூட்” என்றான். அவன் மூச்சுக்கு முன்னூறு முறை என்னை ‘ட்யூட்’ என்று அழைத்தது எனக்கு ஏனோ சங்கடத்தை தந்தது. நான் அப்படியே பெரியவர் பக்கத்தில் போய் நின்றுகொண்டேன்.
பெரியவர் என்னை பார்த்து, “சரியான அகராதி புடிச்சவங்களா இருக்கானுங்க இந்த காலத்து
பசங்க” என்றார். நான் அமைதியாக அவரை பார்த்தேன். அவர் பேசிக் கொண்டே போனார்.
“எல்லாம் கிடைக்க வேண்டிய வயசுல கிடைக்கணும், முன்னாடியே கிடைச்சா என்ன பண்றது! நம்ம தலைமுறை மாதிரி வருமா! நாமல்லாம் எப்படி வளர்ந்தோம்!” என்று என்னையும் அவரோடு சேர்த்துக் கொண்டார். அவருக்கு எழுபது வயது இருக்கும்.
“நான்லாம் உங்க தலைமுறை இல்ல சார்” என்று சொல்லலாம் என்று பார்த்தேன்.
அப்படி சொன்னால், “என்னபா, ஒரு நாற்பது வயசு தான வித்தியாசம்!” என்று கூட அவர் சொல்லிவிடுவார் என்பதால் அமைதியாக இருந்துவிட்டேன். ஏற்கனவே எனக்கு நான் ஒரு சிக்கலான தலைமுறையில்
பிறந்துவிட்ட வருத்தம் இருந்தது. முந்தைய தலைமுறையினர் நிறைய விஷயத்தில் என்
தலைமுறையில் ஒட்டாமல் தள்ளி இருந்தனர். பின்னே வந்த தலைமுறையினரோ தொழிநுட்ப மாயைகளில்
சிக்கிக்கொண்டு என் தலைமுறையையே தள்ளி வைத்தார்கள். என் போதாத நேரம் நான் அன்று இரண்டு தலைமுறைக்கும்
இடையே சிக்கிக் கொண்டேன். எல்லாவற்றிற்கும் கொரோனாவை தான் நொந்துக் கொள்ள
வேண்டும். நான் சிந்தனையை திசைத்திருப்பும் பொருட்டு அமைதியாக
கடையினுள் கவனித்ததேன்.
உள்ளே உயர்ந்த மனிதன் இன்னும் தன் கொள்முதலை
முடிக்கவில்லை. அவர் கேட்டதற்கெல்லாம் அந்த கடைக்கார பையன் சலிக்காமல்
பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.
“மேகி இருக்கா!”
“இல்ல சார்!”
“அப்ப பாஸ்தா இருக்கா!”
“இருக்கு சார்”
“ரெண்டு பாக்கெட், இல்ல…. அஞ்சு பாக்கெட் கொடுங்க…”
“நாலு பாக்கெட் தான் சார் இருக்கு…”
“சரி கொடுங்க…”
“டொமேட்டோ சாஸ் இருக்கா!”
“வரல சார்…”
“கிஷான் ஸ்க்வாஷ் இருக்கா!”
“இல்ல சார்!”
“எதுமே இல்லனா எதுக்கு கடைய துறந்து வச்சிருக்கீங்க!
ச்ச, இந்த நாடே இப்படித்தான். பிளானிங் இல்ல. ஒன்னும் இல்ல” அவர் கோபமாக கத்தினார்.
“மொத்த கடையையும் வாங்கிட்டு என்ன பேசுறான் பாரு” என்றார் பெரியவர். நானும் அவர் சொல்வதை ஆமோத்திக்கும் வண்ணம் தலை
ஆட்டினேன்.
“நமக்கு என்ன தேவையோ அத மட்டும் வாங்கணும் தம்பி. சும்மா எல்லாத்தையும் வீட்ல போய் அடுக்கிக்கக் கூடாது…” என்றார் பெரியார்.
“கரெக்ட் சார்” என்றேன் நான்.
“மத்தவங்களுக்கு வேணும்னு நினைக்கிறது தான் மனுஷத் தன்மை. இப்டி எல்லாரும் சுயநலமா இருந்தா கொரோனா வரமா என்ன
ஆகும்!” என்றார்.
“அஞ்சாயிரத்தி ஐநூற்றி நாற்பது ரூபா சார்” என்றான் பையன்.
தன் கார்டை நீட்டினார் உயர்ந்த மனிதர். கடைக்கார பையன் கார்டை ஸ்வைய்ப்பிங் எந்திரத்தில்
தேய்த்தான்.
“கார்ட் வர்க் ஆகல சார்” கடைக்கார பையன் சொன்னான்.
“ஆகுமே! நேத்து இந்த கார்ட்ல தான் காருக்கு பெட்ரோல் போட்டேன்”
மீண்டும் அவன் கார்டை தேய்த்தான்.
“வர்க் ஆகல சார். வேற கார்ட் இருக்கா சார்!”
“என் கிட்ட ஆயிரம் கார்ட் இருக்கும். அதெல்லாம் கொடுக்க முடியுமா!”
“இந்த கார்ட்ல ஏதோ பிரச்சனை சார்…” அவன் கார்டை திருப்பிக் கொடுத்தான்.
“உன் கடை மெஷின்ல தான் பிரச்சனை!”
“சார் காலையில இருந்து எல்லாமே கார்ட் பேமெண்ட் தான் சார். உங்களுக்கு முன்னாடி வந்தவர் கார்ட் கூட வர்க் ஆச்சு சார்!”
உயர்ந்த மனிதன் நெற்றியை துடைத்துக் கொண்டார்.
“வேணும்னா ஜி. பே பண்ணுங்க…” என்றான் அந்த பையன்.
“அத நீ சொல்லாத.. ” என்று கோபமாக கத்தினார். அவரிடம் ஜி.பே இல்லை என்று தெரிந்தது.
“சீக்கிரம் சார்” என் அருகே இருந்த பெரியவர் உள்ளே பார்த்து கத்தினார். உயர்ந்த மனிதருக்கு அவமானமாக இருந்திருக்க வேண்டும். கோபமாக, சப்தமாக பேசிக் கொண்டே வெளி ஏறினார்.
“இங்க வந்தேன் பாரு… கடைல ஐட்டமும் இல்ல, மெஷனும் வர்க் ஆகல. வேஸ்ட் ஆஃப் டைம்”
“சார். எடுத்து வைக்கவா! அப்பறம் வந்து வாங்கிக்கிறீங்களா!” கடைக்கார பையன் சோகம் கலந்த தொனியில் கேட்டான். அவனுக்கு அவ்வளவு நேரம் பொருட்களை எடுத்து வைக்க போட்ட
உழைப்பு வீணாகப் போகிறதே என்ற வருத்தம். உயர்ந்த மனிதர் அந்த பையன் சொன்னதை சட்டை செய்யாமல், கயிற்றிக்குள் குனிந்தார். நான் நகர்ந்து வழி விட்டேன்.
“ஷிட். பிக் பாஸ்கட்லயே வாங்கி இருக்கணும். இந்த நாடும் சிஸ்டமும்” என்றவாறே தன் காரை நோக்கி நடந்தார்.பெரியவரின் குரல் என்
கவனத்தை கடைக்குள் திருப்பியது. அவர் என் கவனம் சிதறிய நேரத்தில் கடைக்குள் நுழைந்து
இருக்கிறார்.
கடையினுள் கம்பீராக நின்றுகொண்டிருந்த அவர் அந்த பையனிடம் சப்தமாக சொல்லிக் கொண்டிருந்தார்,
“தம்பி அவருக்கு எடுத்த பொருளல்லாம் அப்டியே மூட்டைகட்டிடு. நான் வாங்கிக்கிறேன்… “
பையன் சந்தோசமாக தலை அசைத்தான்.
“எங்க ரொம்ப நேரம் ஆகுமோன்னு நினச்சேன். வேலை சீக்கிரம் முடிஞ்சிது…” என்றார் பெரியவர். நான் அவரையே பார்த்துக் கொண்டு நின்றேன். என் அருகே வந்து நின்ற வாலிபன் சொன்னான்,
“நான் தான் சொன்னானே ட்யூட், உலகம் அழியப்போகுதுனு”
“தம்பி அப்டியே அதோட சேர்த்து ஒரு பாக்கெட் வறுத்த பாதாம்” என்றார் பெரியவர்.
“வறுத்த பாதாம் இல்ல சார்…”
“என்ன கடை நடத்துறீங்களோ! எது கேட்டாலும் இல்லனு. சிஸ்டமே சரியில்ல. சாதா பாதாமாவது இருக்கா?”
“திஸ் வேர்ல்ட் டிசர்வ்ஸ் டூ டை ட்யூட்” என்றான் வாலிபன். நான் புன்னகை செய்தேன்.
நான்கு
ஊரடங்கை தளர்த்திவிட்டார்கள். சாலையில் நிறைய வண்டிகள் வரத் தொடங்கியிருந்தன. மேம்பாலங்கள் திறக்கப்பட்டன. சிக்னல் விளக்குகள் அனைத்தும் எரியத் தொடங்கின. எங்கு போகிறார்கள் என்று கண்டுகொள்ள முடியாத அளவிற்கு எல்லோரும் வாகனங்களில் எங்கேயோ சென்றனர். அதிலும் குறிப்பாக, இடது புறமாக வந்து ஓவர் டேக் செய்யும் ஆசாமிகள், ட்யூக் பைக் இளைஞர்கள், பக்கத்தில் வந்து சப்தமாக ஹாரன் அடிப்பவர்கள், வண்டியை வளைத்து வளைத்து ஓட்டுபவர்கள், தங்களுக்காக மட்டும் தான் சாலை இருக்கிறது என்ற எண்ணத்தில் வண்டி ஓட்டுபவர்கள், இண்டிகேட்டர் போடாமல் ஓவர்டேக் செய்யும் ஸ்கூட்டி பெண்கள்
என அனைவரும் வரத் தொடங்கினர். இவர்கள் மத்தியில் வண்டி ஓட்டுவது பெரும் போராட்டமாக
இருந்தது. ஆனாலும் நான் நிதானமாக ஓட்டினேன். இரண்டு மாதங்களாக தொடர்ந்து வண்டி ஒட்டியதால் அச்சம் குறைந்திருந்தது. சிக்னலில் இரண்டாவதாக இருக்கும் விளக்கு ஒளிரும் போதே அது
மஞ்சள் நிறம் என்பதை புரிந்து கொண்டு வண்டியை நிறுத்திவிடுவேன். அதனால் எந்த பிரச்சனையுமின்றி அலுவலகம் போய் வர முடிந்தது. சாலைகள் போல் கடைகளும் முழு வீச்சில் இயங்கத் தொடங்கின.
டீ கடைகளில் பார்சல் மட்டும் விற்கலாம் என்று அரசாங்கம்
தெரிவித்ததாக டீவியில் பார்த்தேன்.
“அது எப்படி எல்லாரும் பார்சல் வாங்குவாங்க…!” என்றார் எம்.வி
“பிளாஸ்டிக் கப்ல குடிப்பாங்க ப்ரோ!” என்றேன்.
“அப்ப கொரோனா பரவாதா! யாரோ ஒருத்தன்கிட்ட இருந்து டீ மாஸ்டருக்கு வந்தா போச்சு. ஆயிரம் பேருக்கு பரவும்! இது முட்டாள்தனமான முடிவு”
“வரணும்னா எங்க இருந்து வேணா வரும் ப்ரோ. காய்கறி கடை, மளிகைக் கடைனு எங்க எங்கேயோ போறோம். அங்க இருந்துலாம் வராதா!”
“அது அத்தியாவசியம். இது அனாவசியம்…”
எம். வி டீ குடிப்பதை விட்டுவிட்டு பச்சை டீக்கு (க்ரீன் டீ) மாறியதிலிருந்து இப்படி தான் டீ-யை எதிர்த்து கொடிப்பிடித்து கொண்டிருக்கிறார், ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதத்திற்கு மாறுபவர்கள் தங்களின் பழைய மதத்தை கழுவி ஊற்றுவது போல.
“க்ரீன் டீ தான் ப்ரோ பெஸ்ட்” என்று டீ பேகை சுட தண்ணீரில் முக்கி எடுத்தவாறே சொன்னார்.
“ப்ரோ, அளவுக்கு அதிகமா குடிச்சா எதுவுமே நல்லது இல்ல. அதுவும் இந்த டீ பேக்ல எபிக்ளோரோஹைட்ரின்னு ஒரு கெமிக்கல் இருக்கு. அது உடம்புக்கு ஆபத்து தெரியுமா!” என்று கேட்டேன்.
“அதெல்லாம் எனக்கு தெரியாது, நான் பயாலஜி ஸ்டூடன்ட்” என்றார்.
“நமக்கு தெரிலனாலும் அந்த கெமிக்கல் நம்மல பாதிக்கும் இல்ல!”
“அதான் பயாலஜி ஸ்டூடன்ட்னு சொல்லிட்டேனே. அப்பறம் ஏன் அதையே சொல்றீங்க. விடுங்க” என்றார் கோபமாக. எனக்கு அன்றொரு நாள் கடையில் அந்த பையனிடம் எரிந்து
விழுந்த உயர்ந்த மனிதர் நினைவுக்கு வந்தார். கிரீன் டீ யை முழுவதுமாக உறிஞ்சி முடித்துவிட்டு சொன்னார்,
“க்ரீன் டீ தான் ப்ரோ பெஸ்ட். ஒரு முறை க்ரீன் டீ குடிச்சுப் பாருங்க, அப்பறம் தெரியும் இதோட அருமை!” எனக்கு ஏனோ மதம் மாற்றும் கூட்டம் மீண்டும் நினைவிற்கு வந்தது. நான் சிரித்துக் கொண்டே தலை அசைத்து வைத்தேன்.
“ஜாக்கிரதையா இருங்க. டீ கடை பக்கத்துலலாம் போகாதீங்க ப்ரோ…” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் எம்.வி.
டீ கடை என்ன, உண்மையில் எந்தக் கடை பக்கமும் போகக் கூடாது தான். அவ்வளவு கூட்டம். முழுமையான ஊரடங்கின் போதே கடைகளில் நிரம்பி வழிந்த
நம் ஆட்கள், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப் பட்டப்பின்பு இன்னும்
நெருக்கமாக நிரம்பி வழிந்தனர். நமக்கோ நம் குடும்பத்திற்கோ வரும் வரை எதுவும் பெரிய
பிரச்சனை இல்லை என்ற மனநிலை தான் பலரிடமும் இருக்கிறது.
காய்கறி கடையில் கோவக்காயை கூடையிலிருந்து பொறுக்கிக் கொண்டிருந்த போது பக்கத்தில் வந்து ஒரு நடுத்தர வயதுக்காரர் வேகவேகமா அதே கூடையில் கை வைத்தார்.
“சார் கொஞ்சம் டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்ணுங்க” என்றேன்.
“பாத்தா படிச்சவர் மாதிரி இருக்கீங்க. இப்டி பேசுறீங்க!” என்றார். நான் புரியாமல் பார்த்தேன்.
“இதெல்லாம் நம்புறீங்களா! இந்த சோசியல் டிஸ்டன்சிங் அது இதுனு. எல்லாம் ஹம்பக்” வெகு நாள் பழகியவரிடம் பேசும் தொனி அவரிடம் இருந்தது.
“சார் கொரோனா பரவாம தடுக்க நாம அப்டி இருந்து தான்
ஆகணும்” என்றேன்.
“சார், கொரோனாவே பொய் சார். எல்லாம் கார்ப்பரேட் சதி” என்றார். அதுபோன்ற ஆசாமிகளிடம் தலையாட்டிவிடுவது நல்லது.
“இதுக்கு பின்னாடி ஒரு பொருளாதார சுரண்டலுக்கான திட்டமே இருக்கு. பெருசா பயமுறுத்துனா தான மருத்துவம் பார்க்குறேன், மருந்து கொடுக்குறேனு சொல்லி கறக்க முடியும்!”
அவர் இன்னும் நெருக்கமாக வந்து பேசினார், “நாம எல்லாரும் பொருளாதார ரீதியா அடிமைங்களா இருக்கனும். அதான் அவனுங்களோட திட்டம். நீங்க ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்
படிச்சிருக்கீங்களா!”
நான் இல்லை என்றேன்.
“அதான் இப்டி பேசுறீங்க. முதல அதைப் படிங்க!”
“ஏன் சார் அதுல கொரோனா பத்தி இருக்கா!”
“சார், கொரோனாவே பொய்ங்குறேன். நீங்க என்னனா!” அவர் இழுத்தார். அதற்குள் ஒரு பெண்மணி,
“சீக்கிரம் எடுத்துட்டு அடுத்தவாளுக்கு வழி விடுங்கோ” என்றார். நான் பில் கவுண்டர் நோக்கி நடந்தேன்.
“ஏண்டா தம்பி. இந்த உருளைக்கிழங்கு எவ்ளோ…” என்று கடைக்கார வாலிபனிடம் கேட்டார் அந்தப் பெண்மணி.
“கிலோ தொண்ணூறு ரூபா மாமி…” என்றான் அவன்.
“பகல் கொள்ளையா இருக்கே!” என்றார் பெண்மணி.
“நான் சொல்லல, பொருளாதார சுரண்டல். இதான்! கொரோனா பேர சொல்லி ஒரு கார்ப்பரேட் ஊழலே நடக்குது…” என்று கிசுகிசுத்தார் நடுத்தர வயதுக் காரர்.
“இது மேட்டுப்பாளையம் கிழங்கு மாமி…” கடைக்கார வாலிபன் சொன்னான்.
“எந்த ஊரா இருந்தா என்ன! உருளை கிழங்கு தான! தங்கம் விலை சொல்ற” என்றார் அந்தப் பெண்மணி.
“வாங்கிக்கோங்கோ மாமி. நன்னா இருக்கும்… பத்துரூபா கம்மி பண்ணிக்கலாம்” என்றான் கடைக்காரன். அந்த பெண்மணி கொஞ்சம் கிழங்கை எடுத்து கூடையில்
போட்டார்.
“ஏன்பா, அந்த அம்மாவே விட்டா மெட்ராஸ் பாஷை பேசுவாங்க போல. நீ திருநெல்வேலி காரன்தான! நீ எதுக்கு பிராமண பாஷை பேசுற!” என்று வாலிபனைப் பார்த்து கேட்டார் நடுத்தர வயதுக்காரர்.
அவன், “அவாகிட்ட…. ச்ச… அவங்ககிட்ட அப்படி பேசியே பழகிடுச்சு…” என்று தலையை சொறிந்தான்.
“எல்லாம் கார்ப்பரேட் அரசியல்” என்று நடுத்தர வயதுக்காரர் சொல்வார் என்று எதிர்ப்பார்த்தேன். சொல்லவில்லை.
அதற்கு பதில் “சரி, எனக்கும் பத்துரூபாய் கம்மி பண்ணிக்கோ” என்றார்.
கடைக்காரன் சரி என்று தலை அசைத்தான்.
ஐந்து
அலுவலகத்தில் மீண்டும் ‘டார்கட்’ ‘பிசினஸ்’ என்றெல்லாம் பேசத் தொடங்கினர். எப்போது ஊர் கொஞ்சம் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று
காத்திருந்தவர்களாக மேலிடத்தில் இருந்தவர்கள் டார்கட் நோக்கி
ஓடுவதற்கு அழுத்தம் கொடுத்தனர்.
“கொரோனா வந்து ஹாஸ்ப்பிட்டல்ல இருந்தா கூட லோன்
கொடுன்னு சொல்வானுங்க போல ப்ரோ” என்றார் எம்.வி.
அவர் சொன்னது போலவே தான் நிர்வாகமும் நடந்துக் கொண்டது.
“கொரோனா ஈஸ் நாட் ஆன் எக்ஸ்க்யூஸ். நிறைய லோன்ஸ் கொடுத்தா தான் நாம சர்வைவ் ஆக முடியும்” என்று நிர்வாக மேலாளர் தொடர்ந்து சொல்லி வந்தார். போதாத குறைக்கு அலுவலக வாட்ஸாப் குழுவில் இரவு பகல்
பாராமல் மெஸேஜ் அனுப்பிக் கொண்டே இருந்தார். இந்தியாவில் தான் வாட்ஸாப் முழுக்கமுழுக்க அலுவலக
செய்திகளின் அறிவிப்பு பலகையாக மாறிப் போய்விட்டது. நேரம்காலம் இல்லாமல், மேலிடத்தில் இருந்தவர்கள், வாட்ஸாப்பில் அலுவலக வேலைகளை பற்றி பேசிக் கொண்டே
இருந்தனர்.
“பேசாம ஸ்மார்ட் போன தூக்கிப் போட்டுட்டு பேசிக் போனுக்கு
மாறிடலாம்னு பாக்குறேன் ப்ரோ. டார்கெட் டார்கெட்ன்னு டார்ச்சர் பன்றானுங்க” என்றார் எம்.வி.
“அவனுங்களே ஒரு ஸ்மார்ட் போன் வாங்கி கொடுப்பானுங்க. அப்பறம் இப்ப இருக்குறத விட அதிக டார்ச்சர் பண்ணுவானுங்க. நீங்க இருபத்தி நாலுமணி நேரமும் ஆன்லைன்ல இருக்கணும்னு
எதிர்பார்ப்பானுங்க. பரவாலயா?” என்று கேட்டேன்.
“அதுவும் சரிதான். மத்த நேரத்துல கூட சகிச்சுக்குலாம். இப்டி கொரோனா காலத்துல கூட டார்ச்சர் பண்ணுனா எப்படி ப்ரோ! நாளுக்கு நாள் ஆயிரம் ரெண்டாயிரம்னு கேஸ் எறிகிட்டே போகுது. எப்ப கண்ட்ரோல் ஆகும்னே தெரியல”
“உடம்பு முடியலன்னு சொல்றவங்களுக்கு மட்டும் தான் டெஸ்ட்
பண்றங்க. அப்பறம் எப்படி கண்ட்ரோல் ஆகும்! ஆரோக்கியமா இருக்குறவங்களையும் டெஸ்ட் பண்ணனும். உங்கள என்ன மாதிரி வெளில வேலைக்கு வரவங்க, கடை வச்சிருக்கவங்க, கடைத் தெருவுக்கு அலையுறவங்கனு ரேண்டமா நிறைய பேர
டெஸ்ட் பண்ணனும், அப்ப நிச்சயம் இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும்”
“இவனுங்க எங்க ப்ரோ அதெல்லாம் பண்ண போறானுங்க! இந்த குப்தா மாதிரி ஆளுங்க கைத்தட்டினாலே எல்லாம் சரி ஆகிடும்னு சொல்லுவானுங்க. கொரோனா வந்துட்டா கூட க்வாரன்டைன்ல போய் படுத்துக்கலாம். கொஞ்ச நாள் இந்த லோன் டார்கெட்லாம் இருக்காது…” என்று வெறுப்புடன் சொன்னார் எம்.வி.
“அப்டிலாம் பேசாதீங்க ப்ரோ. கவர்ன்மென்ட் சொன்ன மினிமம் சார்ஜுக்கு பதினஞ்சு நாள்
ஆஸ்ப்பிட்டல்ல இருந்தாலே நம்மளோட ஒரு வருஷ சம்பளம் காலி ஆகிடும். இன்சூரன்ஸ்ல பாதி கூட கொடுக்க மாட்டான். அதுமட்டும் இல்லாம, நமக்கு ஒரு பிரச்சனைனா நம்ம பேமிலி என்ன ஆகுறது! எனக்கு சாதாரண ஜுரம் வந்தாலே எங்க அம்மா நைட்டெல்லாம்
தூங்க மாட்டாங்க. அதனால பாசிட்டிவா இருங்க. நல்லதே நடக்கும். என்ன ஆனாலும் தைரியமா இருந்தா எதையும் சமாளிக்கலாம்னு
அம்மா சொல்லுவாங்க. தைரியமா இருப்போம். வீ வில் சர்வைவ்” என்றேன்.
எம்.வி புன்னகையோடு தலையசைத்தார். என் கேபினிலிருந்து வெளியேறியவர், சட்டென்று திரும்பி, “ப்ரோ, மறுபடியும் முழு ஊரடங்கு போட்டானுங்க. சொல்ல முடியாது, இது இன்னும் நீண்டுகிட்டே போகும். பேசாம, நாளையில் இருந்து நீங்க என் கார்லயே வந்திருங்களேன்! எதுக்கு வெயில்ல அவ்ளோ தூரம் பைக் ஓட்டுறீங்க!” என்றார். நான் அவரைப் பார்த்து புன்னகைத்தேன்.
“இட்ஸ் ஓகே ப்ரோ. பைக்கே கம்பர்ட்டபிளா இருக்கு” என்றேன். நான் பொய் சொல்லவில்லை. நான் வண்டியை நன்றாக ஓட்ட ஆரம்பித்திருந்தேன். தொடர்ந்து ஆயிரம் கிலோமீட்டர் ஓட்டினால் போதும், அறை ஓட்டுநர் ஆகிவிடலாம் என்று யாரோ சொன்னார்கள். நான் கடந்த மூன்று மாதங்களில் இரண்டாயிரம் கிலோமீட்டருக்கு மேலே ஒட்டிவிட்டேன். எனக்கு வண்டி ஓட்டுவது இப்போதெல்லாம் கப்பல் ஓட்டுவது போல் கடினமாக இல்லை. ஒருவேளை கப்பலைக் கூட தைரியத்துடன் தொடர்ந்து ஓட்டினால்
எளிதாக ஓட்டிவிடலாம் போல.
மனதில் துணிவிருந்தால் எதுவும் சாத்தியம் தான். அந்த துணிவோடு இந்த கொரோனாவை கடந்து விடுவோம் என்ற
நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அந்த வாலிபன் சொன்னது போல் ஜூன் இருபத்தி ஒன்றாம் தேதி
உலகம் அழியவில்லை. உண்மையில் உலகம் என்றும் அழியப்போவதில்லை. அது இயங்கிக் கொண்டே தான் இருக்கும். இந்த கொரோனா எல்லாம் தற்காலிக பிரச்சனை தான். நிச்சயம் பழைய மாதிரி இந்த உலகம் மாறும். அலுவலகத்தில் டார்ச்சர் இருக்கும், டார்கட் இருக்கும். அழுத்தம் இருக்கும். அதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை. மனதில் துணிவு இருக்கும் போது, கவலை எதற்கு! இப்போதைக்கு இருக்கும் ஒரே ஆசை, மீண்டும் எல்லாமே பழைய நிலைக்கு வந்த பின், என்.எஸ். என் ஸ்கூல் அருகே இருக்கும் கடைக்குச் சென்று மசால் பூரி
சாப்பிட வேண்டும். அந்த தடியான ஆசாமியைப் பார்த்தால் அவருக்கு ஒரு பிளேட்
காளான் வாங்கித் தர வேண்டும்.
***
21G-யில் ஏறுவது என்பது இப்போதெல்லாம் பெரும் போராட்டமாக ஆகிவருகிறது. யார்யாரோ எங்கிருந்தோ வந்து இந்த நகரத்தில் குடியேறிக்கொண்டே இருக்கிறார்கள். இந்த நகரம் அத்தனைப் பேரையும் முகம் சுழிக்காமல் தாங்கிக்கொள்கிறது. அவ்வளவு பேருக்கும் இங்கு இடமிருக்கிறது என்பது ஆச்சர்யம் தான். ஆனால் பேருந்தில்தான் இடமிருப்பதில்லை. அதுவும் 21G-யில் இரண்டு கால்களையும் ஊன்றி நிற்க இடம் கிடைத்தாலே போதும். ஆனந்தம் தான். அமர இடம் கிடைத்தால் பேரானந்தம். ஆனால் ஆனந்தம் போதும். இந்த நகரத்தின் பேருந்துகள் ஆசையை அடக்கக் கற்றுத்தரும் போதிசத்த்துவர்கள்.
பேருந்து கிண்டி எஸ்டேட் ஸ்டாப்பில் நிற்பதற்கு முன்பே ஏறிவிட வேண்டும். கிண்டி எஸ்டேட் வளைவினுள் நுழையும் போது ஏதாவது ஷேர் ஆட்டோ பேருந்தின் முன் வந்து நின்று ஆள் ஏற்றும்.
“யோவ். TN 22 1587 ஆட்டோவ எடுயா…” நேரக்காப்பாளர் கத்துவது வழக்கமாக நடக்கும் ஒன்றுதான்.
அந்த ஒருநிமிடத்தில், ஆட்டோவை கடந்து சென்று பேருந்தில் ஏறிக்கொள்ள வேண்டும். பேருந்து ஸ்டாப்பில் நிற்கட்டும், ஏறிக்கொள்ளலாம் என்ற நினைப்பெல்லாம் நின்றுகொண்டே காணும் பகல் கனவு. நிறுத்தத்தில் ஒரு பெரும் கூட்டம் அடித்துப்பிடித்து ஏறுகிறது. சித்தாள் வேலைக்குச் செல்லும் பெண்கள், மேஸ்திரிகள், ஒல்லியான ஆசாமிகள், பள்ளிக்கூடப் பிள்ளைகள், இயர்போன் மைக்கை உதட்டில் கடித்து ரகசியம் பேசும் இளம்பெண்கள், கழுத்தில் தங்கச் சரடு இருக்கிறதா என்று தொட்டுப்பார்த்துக் கொள்ளும் நடுத்தர வயது பெண்கள், போனை சப்தமாக பேசிவரும் வயதானவர்கள், கையில் பைல் வைத்திருக்கும் வேலைத்தேடுபவர்கள், நிறம் வெளுத்துப்போன மஞ்சள் கயிறு மட்டும் அணிந்தவர்கள், முதுகில் பெரிய குழாய் ஒன்றாய் மாட்டியிருக்கும் பொறியியல் கல்லூரி மாணவர்கள், சப்பாத்தி-தால் கட்டிய டிப்பன் பையை இறுகப்பிடித்துக் கொள்ளும் வெளிமாநில தொழிலாளர்கள், இந்த பஸ் கோட்டூர்புரம் போகுமா என்று கேட்கும் புதியவர்கள், இன்னும் யாரோ யாரோ.
இவர்கள் அனைவரையும் கடந்து ஏறுவதற்கு தனி மனபலம்
வேண்டியிருக்கிறது. பெண்கள் முதலில் ஏறட்டும் என்று வழிவிட்டு நின்றால், அதே இடைவெளியில் பல ஆண்களும் ஏறிக்கொள்கிறார்கள். நாமும் பேருந்தை தொற்றிக்கொள்ளலாம் என்று நினைக்கும் போது தான் கட்டம்போட்ட சட்டையும் காதில் கடுக்கனும் போட்ட, ஆறேழு பள்ளிக்கூட மாணவர்கள் புட்போர்டில் ஏறி நிற்கிறார்கள்.
தொங்கும் சாகசம் அறியாதவர்கள், 21G என்ற பலகை கண்முன் மறைவதை பார்த்துக்கொண்டே நிற்கவேண்டும். அதனால் தான் பேருந்து, ஸ்டாப்புக்குள் நுழைவதற்கு முன்பே ஏறவேண்டியிருக்கிறது.
“இறங்குனோன ஏறுங்க… ” யாரவது ஆணோ பெண்ணோ சொல்லக்கூடும். அதை காதில் வாங்கிக்கொள்ளாமல், உடம்பை குறுக்கிக்கொண்டு உள்ளே நுழைந்துவிட்டால், கியர் பெட்டி அருகே போய் நின்றுகொள்ளலாம். கோட்டுர்புரம் வரை சமாளித்தால் போதும். அதன்பின் பிரச்சனையில்லை. கூட்டம் குறைந்துவிடும்.
ஆனால் உடம்பை குறுக்கிக்கொண்டு ஏறுவதும் எளிதல்ல. யாராவது விடாபிடியாக இடம்விடாமல் வழியை மறைத்துக்கொண்டு நிற்பார்கள். போதாக்குறைக்கு பக்கத்தில் இருப்பவன் பெரிய பையை முதுகில் சுமந்துகொண்டு நிற்பான். தள்ளும் திசைக்கு மனிதன் நகர்கிறான். பைகள் நகர்வதில்லை.
“பேக கழட்டுயா… நிக்கவே இடமில்ல…” யாராவது சண்டையை ஆரம்பிக்கும்வரை அவன் பையைக் கழட்டப்போவதில்லை. பை ஆசாமிகளை, அல்லது விடாபிடியான ஆசாமிகளை கடந்து உள்ளே நுழைவதற்குள் சட்டை கசங்கி விடுகிறது. இதுதான் இப்போதெல்லாம் பெரும் மன வருத்தத்தை தருகிறது.
இஸ்திரி கடை குட்டி சட்டைக்கு எட்டு ரூபாய் வாங்குகிறான். பேண்ட்டை கையிலேயே இஸ்திரி செய்துகொள்கிறேன். சட்டையை அப்படி செய்ய முடிவதில்லை. ஆறுநாளைக்கு நாற்பத்தெட்டு ரூபாய். ஐம்பது ரூபாயை நீட்டினால், சில்லறை இல்லை என்று இரண்டு ரூபாயையும் குட்டியே வைத்துக்கொள்கிறான். இல்லை, வைத்துக்கொள்கிறார் பெயர்தான் குட்டி. பள்ளிக்கூட வயதில் என் அப்பாவின் சட்டையை ஒரு ரூபாய்க்கு இஸ்திரி போடக் கொடுப்பேன். அப்போதே குட்டிக்கு காதுமுடி நரைக்கத் தொடங்கி இருந்தது. இப்போது தலையெல்லாம் கருப்பு சாயம் பூசி நிற்கிறார். வயது என்னைவிட இரண்டு மடங்காவது அதிகம் இருக்க வேண்டும். மளிகைக்கடையாக இருந்தால் மீதம் இரண்டுரூபாய்க்கு மிட்டாய் கொடுப்பார்கள். குட்டி கரித்துண்டுகள் தான் வைத்திருக்கிறார். அம்மாவை ஒரு பைசா ஏமாற்றமுடியாது. நான்தான் குட்டி தொடங்கி பேருந்து நடத்துனர் வரை எல்லோரிடமும் ஏமாந்துவிடுகிறான்.
“மந்தைவெளி பதினேழு ரூபாய், ரெண்டு ரூபாய் தா…” என்றவரே என் இருபதுரூபாய் நோட்டை வாங்கிக்கொள்கிறார்கள் நடத்துனர்கள்.
“இல்ல…”
“ஹான்…”
“சில்லறை இல்ல…” எவ்வளவு சில்லறை மாற்றி வைத்துகொள்வது. ஒருநாள் போல் ஒருநாள் இருப்பதில்லை.
“சரி சரி, இறங்கும்போது வாங்கிக்கோங்க…”
மந்தைவெளி சுபம் கணேசன் கடையிடம் வரும்போது, முன்னிருந்து, அசையும் பேருந்தில் அசைந்தவாறே நிதானமாக கம்பியைப் பிடித்து நடந்து, பின்னிருக்கும் நடத்துனரிடம்,
“மூன்றுவா சில்லறை பாக்கி” என்று சொல்ல வேண்டும். ஒரு நிமிடம் புரியாதவர் போல் பார்த்துவிட்டு, பஸ் நிறுத்தத்தை அடையும் போது, விசிலை ஊதியவாறே கையில் சில்லறையைத் திணிப்பார். கீழே இறங்கிப் பார்த்தால் இரண்டு ஒரு ரூபாய் நாணயங்கள் தான் இருக்கும். ஒரு ரூபாய்க்காக பேருந்து பின்னே ஓடமுடியாது. அடுத்தமுறை சுதாரிப்பாக இருக்க வேண்டும். ஆனால் நிறைய அடுத்தமுறைகள் வந்து போகின்றன, கூடவே ஒருரூபாய்களும்.
சில்லறை பிரச்சனையைக்கூட சமாளித்து விடமுடியும். சட்டை கசங்கும் பிரச்சனை நம் கையில் இல்லை. சுதாரிப்பாக கம்பியில் சாய்ந்தவாறே நின்றுகொள்ள வேண்டும். அப்படியே யாரவது இடித்தாலும், சட்டை கசங்கினாலும், பாலிஸ் செய்து அணிந்துகொண்ட ஷூ அழுக்கானாலும் அமைதியாக நிற்கவேண்டும். பேருந்து பயணம் ஆசையை அடக்க மட்டுமல்ல, பொறுமையையும் கற்றுத் தருகிறது. ஆனால் கம்பியின் அருகே. கியர் பெட்டியின் அருகே இடத்தைப் பிடித்துக்கொள்ள நமக்கிருக்கும் அவகாசம் சிலநிமிடங்கள் மட்டும்தான். சில நிமிடங்கள் தவறினால் உங்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய எதுவும் உங்களுக்கு கிடைக்காது என்று சொல்லி பயமுறுத்துவதே இந்த நகரத்தின் நோக்கமோ!
ரயில் வர சில நிமிடங்கள் தாமதாகும்போதும் இந்த பயம் தொற்றிக்கொள்கிறது. சானடோரியத்தில் 8.20-க்கு வந்திருக்க வேண்டிய ரயில், 8.25க்கு வந்தது. கிண்டி சுரங்கப்பாதையில் ஓட்டமும்நடையுமாக ஏறி, வெளியே வரும் போது, பேருந்து எஸ்டேட் நிலையத்திற்குள்ளிருந்து வெளியே திரும்பியது. உள்ளே கூட்டம் குறைவாக இருப்பதாக தெரிந்தது. சில நாட்கள் மட்டும் நிகழும் அதிசயம்.
யோசித்தேன். அடுத்த பேருந்து வர இன்னும் அதிக நேரமாகலாம். சரியாக 9.45-க்கு நிர்வாக மேலாளர் அறைக்குள் இருக்க வேண்டும். ஹெட்ஆபிஸ் ஆசாமிகளோடு பத்துமணிக்கு வீடியோ கான்பரன்ஸ் தொடங்குவதாக சொல்லியிருந்தார்கள். உள்ளே எல்லோரும் அமர்வதற்கு இருக்கைகள் இருக்காது. வெளி அறையிலிருந்து தான் இழுத்துக் கொண்டு செல்ல வேண்டும். எல்லோரும் அறையினுள் அமர்ந்தபின், நான்மட்டும் தாமதமாக என் இருக்கையை இழுத்துக் கொண்டே சென்றால், எல்லோரும் கேலியாக பார்க்கக் கூடும். அவமானத்தை தவிர்க்க வேண்டுமெனில் பேருந்தில் ஏறியாக வேண்டும். ஆனால், இப்போதும் எனக்கு இருக்கும் அவகாசம் சில நிமிடங்கள்தான். இல்லையேல் ஓட்டுனர் கதவை சாத்திவிடுவார். பேருந்து நோக்கி ஓட்டமெடுத்தேன்.
ஓட்டுனர், கதவை பூட்டுவதற்கான பொத்தானை அழுத்துகிறார். கதவின் இடுக்கிலிருந்து வரும் ‘உஷ்’ என்ற சப்தம் அதை உறுதி செய்கிறது. என் வலது காலை படிகட்டில் வைக்கும் போது கதவு அருகாமையில் வருகிறது. வேகமாக உள்ளே தாவிவிட்டேன். கதவு மூடிக்கொண்டது,
ஓட்டுனர் சொன்ன வார்த்தை அம்மா காதில் விழுந்திருந்தால், அவள் பேருந்தை வெட்டி ஊறுகாய் போட்டிருப்பாள். நான் அந்த வார்த்தை என் காதில் விழாதது போல் அமைதியாக நின்றேன். சகிப்புத்தன்மையையும் கற்றுத்தருகிறது இந்நகரின் பேருந்துகள்.
“அடுத்த பஸ்ல எறினாதான் என்ன?” அந்த நடுத்தரவயது பெண்மணி கேட்டாள்.
நான் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தேன். ஏனோ அவளிடம் அதிகம் பேச எனக்கு விருப்பமில்லை.
“இப்ப கஷ்டப்படுறது நீதான!” என்றவாறே கொதித்துக்கொண்டிருக்கும் மெழுகினுள்ளிருந்து துணியை எடுத்து என் முட்டி மீது வைத்து ஒத்தடம் கொடுத்தாள். அதிகம் சுட்டது. தாங்கிக்கொள்ள பல்லைக் கடித்துக் கொண்டேன்.
“கொஞ்சம் பொறுத்துக்கோ…! முட்டி ஸ்ட்ரைன் ஆகிருக்கு” அவள் சொன்னாள். நானும் பேச வேண்டுமென்பதற்காக பதில் சொன்னேன்.
“ஆமா மேடம். டாக்டர் சொன்னார்”
“நத்திங் மேன். இட்ஸ் ஜஸ்ட் ஏ ஸ்ட்ரைன்”
என்று சொல்லிவிட்டு சம்ப்ரதாயமாக சிரித்தார் அந்த குறுந்தாடிக்கார டாக்டர்.
அவரைப் பார்ப்பதற்காக இரண்டு மணிநேரம் காத்திருக்க வேண்டிருந்தது. மருத்துவமனையிலும் பேருந்து போல் அவசரகதி கூட்டங்கள். ஏதோ ரோபோ போல் இயங்கிய அந்த டாக்டர், முட்டியை தொட்டுப்பார்த்துவிட்டு,
“பைவ் டேய்ஸ் பிசியோ கொடுத்தா சரியாகிடும்” என்றார். டாக்டர் அறையின் உள்ளே நுழைந்ததற்கும் வெளியே வந்ததற்குமிடையே இரண்டேமுக்கால் நிமிடங்கள் மட்டும் தான். ஆர்த்தோ டாக்டர் என்பதால் ஐநூறு ரூபாய் பீஸ். இது இல்லாமல் பிசியோவிற்கு தனியாக கொடுக்க வேண்டும். ஒரு நாளைக்கு முந்நூறு ரூபாய் என்றால், ஐந்து நாட்களுக்கு ஆயிரத்தைநூறு ரூபாய் அழ வேண்டும். காலையில் நூற்றி ஐம்பது கொடுத்து ஆட்டோவில் போயிருக்கலாம். எதுவும் நம் கையிலில்லை. இயன்முறை மருத்துவம் என்ற பலகையை தாங்கிய அறையின் வாசலிலும் பெரும்கூட்டம்.
இப்போதெல்லாம் என்ன நோய் என்று போனாலும் பிசியோதெரப்பி கொடுக்க சொல்லிவிடுகிறார்கள். ஒவ்வொரு நோய்க்கும் ஒருவகையான பிசியோதெரப்பி கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள். மூக்கு வலி என்று போய் நின்றால் என்ன செய்வார்கள் என்று பார்க்க வேண்டும்.
“பைல கொடுங்க…” பின்னிருந்து ஒரு மெல்லிய குரல். திரும்பினேன். அவள் நின்றுகொண்டிருந்தாள்.
‘அப்படியே நம்ம போட்டு தாக்கனும்’ ஒருகணம் கல்லூரியில் பார்த்த படம் நினைவுக்கு வந்து மறைந்தது.
அவள் பைலை பார்த்தாள், நான் அவளைப் பார்த்தேன்.
அவளுக்கு என்னைவிட வயது குறைவாக தான் இருக்கும். அழகாக இருந்தாள். திருமணம் ஆகாதவளாக தான் இருக்க வேண்டும். அதை உறுதி செய்திகொள்ள அவளை பார்வையால் துலாவினேன்.
கழுத்தில் தாலி இல்லை. மெல்லிசான செயின் ஒன்று இருந்தது. செயினில் ஒரு ஆர்ட்டின் டாலர். அவள் வெள்ளை சீருடைக் கழுத்தில் நடுநாயகமாக அமர்ந்திருந்த சிகப்பு ஆர்ட்டின் எனக்கு ஏதோ செய்தி சொல்லியது. கையில் மோதிரம் அணிந்திருக்கவில்லை. இதெல்லாம் இல்லாமல் கூட அவளுக்கு… அதிகம் யோசிக்காதே என்றது மனம். அவள் வரிசையாக ஒவ்வொருவரிடமும் பைலை வாங்கினாள்.
நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். அதுவரை கடுக்கென்று வலித்துக்கொண்டிருந்த முட்டி சரியானது போல் ஓர் உணர்வு. அவளிடம் பிசியோதெரப்பி செய்துகொள்ளவே ஒரு பெரும் கூட்டம் நின்றாலும் ஆச்சர்யமில்லை.
“ஏண்டா உன் டேஸ்ட் இப்படி இருக்கு. இவளைவிட லட்சணமா உனக்கு ஒரு பொண்ண பாத்து வைக்குறேன்” என்று அம்மா சொல்லக் கூடும். இப்படி சொல்லியே எனக்கு வயதாகிவிட்டது. ஆனால் இதுதான் அழகு என்று யார் சொல்ல முடியும். என் பார்வைக்கு அழகாக இருந்தாள். எனக்கு பிடித்திருந்தது. அம்மாவிடம் இப்படி போய் சொல்லலாம். அதற்கு முன்பு இவளிடம் பேச வேண்டும்.
அவளோ கடைசி இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு சிறுவனை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தாள். அவனுக்கு ஏழெட்டு வயதுதான் இருக்கும். தன் இடது தோள் பட்டையை பிடித்து கொண்டு,
“வலிக்குதுமா” என்று அலறினான். கொஞ்ச நேரம் அவன் அலறல் மட்டுமே மருத்துவமனயை நிறைத்தது. அவன் தாய் அருகில் பதட்டமாக நின்றுகொண்டிருந்தாள்.
“கிரௌண்ட்ல விழுந்துட்டான்…” அவன் அம்மா சொன்னாள்.
“ஒன்னும் இல்ல தம்பி, சரியாகிடும்….” இவள் அந்த சிறுவனின் மோவாயை பிடித்து நிமிர்த்தி சொன்னாள். நான் அந்த சிறுவனாக இருந்திருக்கலாம். அதுவரை அலறிய அந்த சிறுவன் அமைதியாகி விட்டான். அவளிடம் ஏதோ மந்திரம் இருக்கிறது. பார்த்தால் வலி தீர்க்கும் மந்திரம்.
“ரிப்போர்ட்லாம் நார்மல் தான் மேடம். டாக்டர் அல்ட்ரா சவுண்ட் கொடுக்க சொல்லிருக்கார்….” அவள் பேசிக்கொண்டே இருந்தாள். சுற்றிலும் இருள் கவிந்து, அவள் மட்டும் ஒளிர்வது போல் இருந்தது. நான் பார்த்துக் கொண்டே இருந்தேன். காலம் பின்னோக்கி சுழல்கிறது. நினைவுகளுக்கு வயதாவதில்லை. மகிழ்ச்சியான தருணங்களை நினைக்கும் போது நமக்கும் வயது குறைந்து கொண்டே போகிறது. எல்லாத் தருணங்களும் கண்முன்னே காட்சிகளாக ஓடுகின்றன. கல்லூரியின் நிரஞ்சனி, டியூஷன் சென்டர் பார்கவி, பள்ளிகூடத்தின் கோதை…
“மச்சி உன் ஆளு போறாடா…” ஏழாம் வகுப்பில் கோதை கடந்து போன போது ராமு தான் கத்தினான். இப்போது ராமு இருந்தால் நன்றாக இருக்கும். இவள் பெயரை சொல்லி கத்துவான். ஆனால் இவள் பெயர் என்ன!
மீண்டும் அங்கே ஒளிவந்தது.
நான் அவள் அணிந்திருந்த ஐடி கார்டில் பேர் என்ன என்று பார்க்க முயன்றேன். அவள் என்னை கவனித்ததும் தலையை திருப்பிக் கொண்டேன். அருகில் வந்தவள்,
“உள்ள, லாஸ்ட் ரோக்கு போங்க… வரேன்…” என்றாள்.
உள்ளேச் சென்று, திரைக்கு பின் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டேன். பக்கத்தில் உலை போல் மெழுகு கொதித்துக் கொண்டிருந்தது.
சிறிது நேரம்தான். யாரோ வருவது போல் இருந்தது. அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள் என்று பாடவேண்டும் போல் இருந்தது. என் இதழில் ஒரு புன்னகை. வெட்கத்தின் வெளிப்பாடாக இருக்கலாம்.
திரையை விலக்கிக் கொண்டு நடுத்தரவயது பெண் வந்தாள். அவள் நிறைய பேசினாள். ஏனோ அவளிடம் அதிகம் பேச எனக்கு விருப்பமில்லை.
அவங்க வரலையா என்று கேட்கலாம். எவங்க என்று இந்த பெண் கேட்கக்கூடும். ஒருவேளை நான் கண்கொட்டாமல் கவனித்ததை அவள் கவனித்ததன் பேரில்தான் அவள் வரவில்லையோ என்றுத் தோன்றியது. எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தேன்.
பத்துநிமிடம் முட்டியில் துணியை சுற்றி சுற்றி எடுத்தாள். முட்டி அதிகம் வலித்ததா அல்லது எறிந்ததா என்று தெரியவில்லை. ஆனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதை உணர்த்தவள் மெழுகு கொதிக்கும் களத்தில் இருந்த பொத்தானை அழுத்தினாள். அதன் சூடு குறைவதை உணர முடிந்தது. தன் கை கிளவுசை சரி செய்து கொண்ட அவள், மீண்டும் துணியை மெழுகில் போட்டு எடுத்து என் முட்டி மீது வைத்தாள். இப்போது கால் வலியும் கொஞ்சம் குறைந்தது போல் இருந்தது.
“உங்களுக்கு கை சுடாதா!” என்று கேட்டேன்.
“பழகிருச்சு… உனக்கு என்ன வயசாகுது?”
“முப்பது…”
“பாத்து பஸ் ஏறி இறங்கு…” என்று சொல்லிவிட்டு துணியை ஓரமாக உலற வைத்தாள்.
எதற்கு என் வயதை கேட்டாள் என்று தெரியவில்லை, ஒருவேளை முப்பது வயதாகியும் பேருந்தில் சரியாக ஏறத் தெரியாமல் அவளிடம் சிகிச்சைக்கு வந்த முதல் ஆள் நானாக இருக்கலாம். இருபத்தைந்து வயது என்று சொல்லியிருக்கலாம். எனக்கு என்ன குறை. கொஞ்சம் முடிதான் கொட்டிவிட்டது. என் யோசனையை கலைக்கும் விதத்தில் அவள் பேசினாள்.
“என்ட்ரன்ஸ்ல ஜெனிப்பர் சிஸ்டர் இருப்பாங்க. அவங்க முட்டிக்கு வைப்ரேசன் வைப்பாங்க, போ” என்றாள்.
இருக்கையில், கண்ணாடி அணிந்த ஒரு வயதான பெண்மணி அமர்ந்து ரெஜிஸ்டரில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தாள். அவள் என் வயதை கேட்டால் இருபத்தைந்து என்று சொல்ல வேண்டும் என்று எண்ணியவாறே, “ஜெனிப்பர் சிஸ்டர்!” என்றேன்.
என்ன என்பது போல் பார்த்தாள்.
“வைப்ரேசன்…” என்று இழுத்தேன்
“உக்காருங்க வருவாங்க…” என்று என் பைலை மட்டும் வாங்கி மேஜையில் வைத்துக் கொண்டாள். நான் அருகாமையிலிருந்த மெத்தையில் அமர்ந்தேன். அவள் எழுந்து மெத்தையை சுத்தி இருந்த திரையை மூடிவிட்டு மீண்டும் தன் இருக்கையில் அமர்ந்துகொண்டாள். மெத்தையில் மேலேறி சாய்ந்த வாக்கில் அமர்ந்தவாறே காலை நீட்டிக் கொண்டேன். சிறிது நேரம் வெகு நேரம் போல் கடந்தது. என்ன செய்வது என்று தெரியாமல், போனை எடுத்து கிண்டிலுக்குள் நுழைந்தேன். மாசற்ற காதல் என்றொரு கதை கண்ணில் பட்டது. இப்போது காதல் கதை படிக்க வேண்டுமென்று போலிருந்தது. கதையை திறந்தேன்.
மனிதனை மிருகத்திடமிருந்து மாறுபடுத்திகாட்டுகிற ஒரே விடயம் காதல். மிருங்களுக்குள்ளும் காதலுண்டு. ஆனால் அதன் மையப்புள்ளி வேறு. அதற்கு பகுத்து உணர்கிற சக்தி கிடையாது. ஒரு நாய் ஒரே நேரத்துல நிறைய நாய்களோடு காதல் கொள்ளும். ஆனா மனிதன் அப்படி இல்லை. அப்படி இருந்தா அவன் மனிதனும் இல்லை, அது காதலும் இல்லை
காதலுக்கு மனோதத்துவரீதியான விளக்கத்தை ஆராய வேண்டியதில்லை. அப்படி ஆராய முற்பட்டால் காதல் என்கிற கேள்விக்கு காமம் என்பதே பதிலா கிட்டும். ஆனால் அதை தவிர்த்து, சமுக ரீதியா மனிதனுக்கு ஏற்பட்ட பந்தம், பற்று போன்ற உணர்வுகள அடிப்படையாக கொள்ளும்போது காதல் புது வடிவம் பெறுது. தனி மனித உணர்வுகளுக்கேற்ப தனி வடிவம் பெறுது….
“ஜெனிப்பர், வைப்ரேசனுக்கு ஒருத்தர் வெயிட்டிங்…” வயதான பெண்மணியின் குரல்.
எதிர்புறத்தில் பதில் ஒன்றும் இல்லை. திடிரென்று திரை விலகியது.
கொஞ்சம் சந்தோசமான அதிர்ச்சி. நான் நிமிர்ந்து அமர்ந்தேன்.
“ஜெனிப்பர்..” என் மனம் முணுமுணுத்தது.
அவள் வந்துவிட்டாள். அவள் வந்துவிட்டாள். ஐ என்றால்
அது அழகு என்றால் அந்த
ஐகளின் ஐ அவள்தானா !
நான் பாடவில்லை. யாரோ என் காதில் பாடுகிறார்கள்.
என் கண்கள் அந்த சிகப்பு ஆர்ட்டினை தேடியது.
“என்ன சார்…?”
“ஒண்ணுமில்ல…” நான் தயங்கினேன்.
“நீங்க ஏதோ சொல்ல வர மாதிரி இருக்கே…” அவள் உரிமையாக பேசினாள். அவள் பேசுவது கொஞ்சுவது போல் இருக்கிறது. பிரம்மையாகவும் இருக்கலாம். ஆனாலும் இது நன்றாக இருக்கிறது.
“கழுத்துல ஒரு ஆர்ட்டின் இருந்துச்சே…” நான் தயங்கி தயங்கி கேட்டேன். அவள் சப்தமாக சிரித்தாள்.
“பயங்கரமான ஆள் போல நீங்க…. பாக்க அமைதியா இருக்கீங்க. எவ்ளோ நோட் பண்றீங்க…!” அவள் மீண்டும் சிரித்தாள்.
“ஒரு சின்ன பையன். அழுதுகிட்டே இருந்தான்… அதான் ஹார்டின கொடுத்தேன்…” அவள் கொஞ்சுவது போல் தான் இருக்கிறது. நான் அந்த சிறுவனாக இருந்திருக்கலாம்.
“நானும் தான் உள்ளே அழுகுறேன். ஹார்ட் கிடைக்குமா…!” இப்படி பேசும் அளவிற்கு அதிக தைரியம் இல்லை. ஆனாலும் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, என் பெயரை சொல்லி கைகொடுத்தேன்.
கை காற்றில் நின்றது. அவள் ஆச்சர்யமாகப் பார்த்தாள்.
“என்ன?”
“இல்ல இப்படிலாம் எந்த பேசன்ட்டும் இன்ட்ரட்யூஸ் பண்ணிக்க மாட்டாங்க. அவங்க பாட்டுக்கும் வருவாங்க, போவாங்க.. நீங்க கொஞ்சம் டிபரன்ட்…” மீண்டும் அவளிடம் புன்னகை. என்னிடமும் தான்.
என் கை காற்றிலே நின்றதைப் பார்த்தவள்,
“ஒ! சாரி ஐ அம் ஜெனிபர்” என்று கை குழுக்கினாள்.
ஜெனிபர், ஜெனிபர், ஜெனிபர். என் மூளைக்குள் அவள் குரல் எதிரொலித்துக் கொண்டே இருந்தது. அம்மா ஒத்துக்கொள்ள மாட்டாள். எனக்கு ஜெனிப்பர் ஜானகி எல்லாம் ஒன்றுதான். அம்மா ஏதாவது சொன்னால், ஜெனிப்பராவது ஏனடி, ஜானகியாவது ஏனடி, இறைச்சி தோள் எழும்பிலும் இலக்கமிட்டிருக்குதோ என்று பாடலாம். அம்மா பயந்துவிடுவாள்.
“கால நல்லா நீட்டி படுத்துக்கோங்க….” அவள் என் காலில் சில நாடாக்களை சுற்றினாள். அருகே இருந்த எந்திரத்தில் ஒரு மூடியை திருகினாள். முட்டியில் ஏதோ மின்சாரம் பாய்வது போல் இருந்தது. மனதிலும் தான்.
அவளிடம் ஏதாவது பேசவேண்டும். என்ன பேசுவது!
“ஐ வில் பி பேக்” என்று நகர்ந்தாள். பத்து நிமிடங்கள் எந்திரம் ஓடிக்கொண்டே இருந்தது. எந்திரம் நின்றது கூட எனக்குத் தெரியவில்லை. என் மன எந்திரம் தான் ஓடிக்கொண்டே இருக்கிறதே!
பார்த்ததும் காதல் வருகிறது. அல்லது பழகி அறிவில் மயங்கி காதல் வருகிறது. இப்படி வரும் காதல்தான் சரி, இது தவறு என்றெல்லாம் யார் சொல்லக்கூடும். Beauty lies in the eyes of the beholder என்ற கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை. மனம் விரும்புகிறது. அவ்வளவுதான். ஜெனிபருடன் பேசுவதற்காகவே, இன்னும் நான்கு நாட்கள் இங்கே வரவேண்டும். அடுத்த காலும் வலிப்பதாக சொல்லலாம். குறுந்தாடிக்காரர் இன்னும் ஐந்து நாட்கள் வரச் சொல்லுவார். எனக்கு நல்லதுதான். ஆனால் அவளைப் பார்த்தும் பேச நினைக்கும் தைரியம் எப்படி எனக்கு வந்தது என்று தெரியவில்லை. இவ்வளவு தைரியம் பள்ளிக்கூடத்தில் இருந்திருக்கலாம். அல்லது டியூஷன் சென்டரில் இருந்திருக்கலாம். பார்கவி இந்நேரம் உடன் இருந்திருப்பாள். காதலை சொல்ல தைரியம் வரும் காலத்தில் வயதாகிவிட்டிருக்கிறது. ஆனால் வயதெல்லாம் காதலை நிறுத்திவிடுமா என்ன! வயதாகும் போது பேசாமலும் அன்பையும், காதலையும் பரிமாறிக் கொள்ள முடிகிறது. நான் எதுவும் பேசாமலேயே ஜெனிபர் என்னிடம் ஏதோ சொன்னதை போல இருக்கிறது. அவளுக்கும் என்னை பிடித்திருக்கிறதா! தெரியவில்லை. பிடிக்கவில்லை என்று உறுதியாக சொல்ல முடியாது. அப்போது பிடித்துப்போக வாய்ப்பிருக்கிறது. காதலிலும் நிகழ்தகவுகள் உண்டு.
ஜெனிப்பர் வந்தாள். நீல நிற சுடிதாரில் இருந்தாள். ட்யூட்டி டைம் முடிந்து விட்டது என்று புரிந்துகொண்டேன்.
“வலி இன்னும் இருக்கா…” எந்திரத்தையும் என் காலையும் இணைத்த நாடாக்களை கழற்றியவாறே கேட்டாள்.
இல்லை என்று சொன்னால், எங்கே வரவேண்டாமென்று சொல்லிவிடுவாளோ என்று பயம்.
“நிறைய இருக்கு…” என்றேன்.
என்னைப் பார்த்து புன்னகைத்தவாறே, “கதை… கொஞ்சமாவது குறஞ்சிருக்கும்…” சொல்லிவிட்டு சிரித்தாள்.
“இன்னும் நாலு நாள் வரணும்…. மார்னிங் 8 டூ ஈவனிங் 8. எப்ப வேணும்னாலும் வரலாம்”
நான் சரி என்று தலை அசைத்தேன்.
“டேக் கேர்” என்றவாறே அங்கிருந்து நகர்ந்தாள்.
“யூ டூ டேக் கேர்” என்றேன்.
அப்படியே நின்றாள். ஒரு நொடிதான். ஏதோ யோசித்தவள் மீண்டும் திரும்பி என் அருகே வந்தாள்.
“நாளைக்கு எனக்கு Weekly off. வெட்னஸ்டே தான் வருவேன்…” சொல்லிவிட்டு என் முகத்தை பார்க்காமல் நகர்ந்தாள்.
என்னை அறியாமாலேயே என் உதடுகள் புன்னகைப் பூத்தன. தவறவிட்ட தருணங்களை வாழ்ந்து பார்க்கும் வாய்ப்பை ஏசுநாதர் கொடுத்திருக்கிறார் போல.
“ஹே அவசரத்துக்குப் பொறந்தவனே. எவளப் பாக்க போற…” காலையில் 21G டிரைவர் கேட்டது நினைவுக்குவந்தது.
நாளைக்கு அவனிடம் கெத்தாக சொல்ல வேண்டும், “ஜெனிப்பர பாக்க போறேண்டா” என்று.
‘டப் டப்’ என்ற சப்தம்தான் முதலில் கேட்டது. பின் ‘பளார் பளார்’ என்ற சப்தம். சப்தம் வரும் திசையில் மனித தலைகள் மட்டுமே தெரிந்தது. எனக்கு நான்கு புறமுமே மனித தலைகள் தான். எள்ளுப் போட்டா எள்ளு எடுக்க முடியாது என்று எங்கள் ஊர் பக்கம் சொல்வார்கள். அந்த அளவிற்கு கூட்டம்.
தினமும் இந்த நிலை தான். ஒன்றரை நிமிடங்களில் கடந்துவிடக் கூடிய அந்த நடை மேம்பாலத்தை, ஊர்ந்து கடக்க பத்து நிமிடங்கள் ஆகின்றன. திருப்பதி பெருமாள் கோயிலில் இருக்கும் இரும்பு பாலம் போல் தான் இதுவும். கூட்டம் நம்மை நெரித்து எடுக்கும். என்ன ஒரே வித்தியாசம், திருப்பதியில் படி இறங்கினால் பெருமாள் காட்சித்தருவார். இங்கே பேருந்து நிலையம் காட்சித் தரும். தாமதமாக போனாலும் பெருமாள் அங்கேயே தான் இருப்பார். இங்கே 21g போய்விடும். அதனால் திருப்பதியை விட இங்கே தள்ளுமுள்ளு அதிகமாக இருக்கும்.
சட்டைப்பையில் ஒரு கையை வைத்துக் கொண்டு, இன்னொரு கையை பேண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டே நடக்க வேண்டும். யாராக இருந்தாலும் கிண்டி ரயில் நிலையத்திலிருந்து வெளியே செல்வதற்குள் இந்த ப்ரோட்டோகாலை பின்பற்றியே தீர வேண்டும். இல்லேயேல் மொபைலோ பர்சோ காணாமல் போய்விடும்.
‘பயணிகள் வரிசையாக செல்லுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். ரயில் நிலையத்தை விட்டு வெளியே செல்பவர்கள், சைதாபேட்டை நோக்கி இருக்கும் படிகட்டுகளை பயன்படுத்திக் கொள்ளவும். உள்ளே வருபவர்கள் சென்ட் தாமஸ் மவுன்ட் நோக்கி இருக்கும் படிகட்டுகளை பயன்படுத்திக் கொள்ளவும்.’
தினமும் ஒருவர் மைக்கில் சொல்லிக் கொண்டே இருக்கிறார். பெரிதாக யாரும் அவரை கவனித்ததாக தெரியவில்லை. மீண்டும் மீண்டும் எதிரும்புதிருமாக முட்டிக்கொண்டு செல்வதையே வழக்கமாக வைத்திருக்கின்றனர். அன்று வெகு நேரம் ரயில் இல்லாததால், சானடோரியத்தில் காத்திருந்த கூட்டம் அனைத்தும் ஏறிக்கொண்டுவிட்டது. பெட்டிக்குள் நிற்க முடியவில்லை. எப்போது கிண்டி வரும் என்றாகிவிட்டது. சென்னை ரயிலில் பல்லாவரம், கிண்டி, கோடம்பாக்கம் போன்ற இடங்களில் ஏறி-இறங்காதவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.
ரயில் நிற்பதற்கு முன்பே இறங்கும் படி பின்னிருந்து தள்ளுவார்கள். கீழே இறங்கி விட்டால் போதும், பின்னே தள்ளும் கூட்டமே நம்மை பிளாட் பாரத்திற்கு வெளியே கொண்டுபோய் விட்டுவிடும். அதுவும் கூட்ட நெரிசலில் மேம்பாலத்தின் படிக்கட்டு ஏறுவது என்பது பெரும் கலை. தரையைப் பார்த்தவாறு ஒவ்வொரு அடியாய் எடுத்து வைக்க வேண்டும். முதலில் வலது காலை எடுத்து முதல் படிகட்டில் வைக்க வேண்டும். பின் மீண்டும் இடது காலை எடுத்து அதே படிகட்டில் வைக்க வேண்டும். இரண்டு கால்களும் ஒரே படிகட்டின் மீது வந்தபின், வலது காலை எடுத்து அடுத்த படிகட்டில் வைக்க வேண்டும். இப்படி ஒரு பியானோ இசைக் கருவியில் ஸ்டக்காட்டோ இசையை வாசிக்கும் பொருட்டு அதன் விசைகளை அரை பலத்துடன் மீண்டும்மீண்டும் அழுத்துவதை போல லயத்தோடு படிகட்டுகளில் கால்களை எடுத்து வைக்க வேண்டும். படிகட்டின் உச்சியை அடையும் வரை தலையை நிமிர்த்த முடியாது. மீறினால் தடுமாறிவிட வாய்ப்பிருக்கிறது. அன்று படிகட்டில் ஏறி கொண்டிருக்கும்போது தான் அந்த சத்தம் கேட்டது.
‘டப் டப்’. ‘பளார் பளார்’. முதலில் சத்தம் எங்கிருந்து வருகிறது என்று புரிந்து கொள்ளவே சில நொடிகள் ஆயிற்று. சப்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தது. படிகட்டை முழுவதுமாக ஏறி பாலத்தின் சமதளத்தை அடைந்த போது தான் சப்தம் பாலத்திற்கு வெளியே இருந்து வருவதை உணர முடிந்தது. அதற்குள், என் பக்கத்தில் இருந்தவர் சப்தத்தின் காரணத்தை அறிந்து கொள்ளும் பொருட்டு எட்டிப் பார்த்தார். அவருக்கும் தலைகளின் தரிசனம் தான். அதை உறுதி செய்யும் பொருட்டு என்னை எதுவும் புரியாதவர்போல் பார்த்தார். எனக்கும் எதுவும் புரியவில்லை என்பதை புரிந்து கொண்டவராய் தலையை திருப்பிக் கொண்டார்.
பாலத்தை விட்டு இறங்கியதும், இடது புறத்தில், வழக்கமாக ஆட்களே செல்லாத அந்த ஹோட்டலின் வாசலில் ஒரு பெரும் கூட்டம் நின்றுக் கொண்டிருந்தது.
‘டப் டப்’ . அந்த கூட்டம், கீழே பார்த்தவாறே கை ஓங்கியது.
கூட்டத்தின் நடுவே ஒருவன் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருப்பது தெரிந்தது. மீண்டும் ஒருவர் கையோங்க,
“யோவ், அடிச்சிக்கிட்டே இருப்பீங்களா…! போலிஸ்ட்ட போ” என்றார் ஒரு ஆட்டோ டிரைவர். கூட்டம் நிதானித்தது. அதற்குள் அந்த ஆள் தலையை பிடித்தவாறே எழுந்து நின்று கொண்டான். ஆள் நாகரிகமாகத்தான் இருந்தான். வயது நாற்பத்தைந்துக்குள் தான் இருக்கும். டக்-இன் செய்யப்பட்ட சந்தன நிற பேண்ட். நீல நிற முழு கை சட்டை. வெள்ளை நிறத்தில், ஆபிஸ் உடைக்கு பொருந்தாத, ரன்னிங் ஷூஸ். விமான நிலைய டேக் கலட்டப்படாத ஒரு எக்சிகியூட்டிவ் பையை முதுகில் மாட்டியிருந்தான்.
மூச்சு வாங்கியது அவனுக்கு. ஒருவன் அவன் சட்டையைப் பிடித்து இழுத்தான்.
“போலிஸ்ட்ட போலாம்” என்றான் இன்னொருவனிடம்.
“எதற்காக அடிக்கிறார்கள்?” விடை உணர்வதற்கு முன்பே இன்னொருவன் மீண்டும் அவன் தலையில் அடித்தான். அடிவாங்கவே அவன் பிறந்திருப்பதை போல் அவன் எந்த எதிர்ப்பையும் காட்டாமல் அடி வாங்கிக் கொண்டான்.
“போலிஸ்ட போனா அந்த பொண்ணும் வந்து சொல்லுமா” மற்றொரு ஆட்டோ டிரைவர் கேட்டார்.
“என் தங்கச்சி சார். சொல்லும் சார்” சட்டையை பிடித்திருந்தவன் சொன்னான்.
முதலில் எதற்காக அடி வாங்குகிறான் என்று தெரியாதவர்களும் இப்போது கொஞ்சம் யூகிக்கத் தொடங்கி இருந்தார்கள்
“வயசாளிங்கதான் இப்டி அலையுறானுங்க. கொஞ்சம் கூட்டம் இருந்தா போதுமே!” ஒரு நடுத்தர வயது பெண் பக்கத்தில் இருந்தவளிடம் சொல்லிக்கொண்டே சுரங்கப் பாதை நோக்கி நடந்தாள்.
“கை வச்சிட்டாண்டா…” ஒரு பள்ளி பையன் தன் நண்பனிடம் சொன்னான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டார்கள்.
அதற்குள் கிருதா வைத்த வாலிபன் ஒருவன் அடிவாங்குபவனை போட்டோ எடுக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தான்.
“டேய் போடா” என்று அந்த ஆட்டோ டிரைவர் அவனை விரட்டினார்.
“மரியாதை இல்லாம பேசாதீங்கனே. பேஸ்புக்ல போட்டா தான் இவனுங்க மாதிரி ஆளுங்க திருந்துவானுங்க” என்றான் கோபமாக.
அந்த ஆட்டோ டிரைவர் விட்டிருந்தால் அவனை அடித்திருப்பார். அங்கே மற்றுமொரு சண்டை தொடங்குவதற்கு முன்பு, மற்றொரு ஆட்டோ டிரைவர்,
“போங்க தம்பி…” என்று போட்டோக்காரனை பாந்துவமாக பேசி அனுப்பி வைத்தார். அவருக்கு ஏனோ அடி வாங்குபவன் மீது கொஞ்சம் இரக்கம் தொற்றிக் கொண்டுவிட்டது.
இந்த சம்பாசனையில் கிடைத்த மைக்ரோ நொடிகளை தன்னை ஆசுவாசப்படுத்த பயன்படுத்திக் கொண்டவனாக அந்த அடிவாங்கியவன் தன் வெள்ளை நிற கைக்குட்டையால் முகத்தை துடைத்துக் கொண்டான். அவனை பார்ப்பதற்கும் பாவமாக தான் இருந்தது. ஆனால் இதை வெளியே சொல்ல முடியாது. அவன் தவறு செய்தவன். தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும் என்று யாரோ சொல்வது காதில் விழுந்தது. அவன் மனைவியோ பிள்ளைகளோ இந்நேரம் அவன் அலுவலகம் சென்றுகொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கக் கூடும். ஒரு வேலை அவன் மனைவியோடு வாழாமல் இருக்கலாம். அல்லது திருமணம் ஆகாமல் இருந்திருக்கலாம். காய்ச்சலில் அவன் பிள்ளை இறந்து போயிருக்கலாம். அல்லது அவன் மனைவி யாரோ ஒருவனோடு….
“என்ன பாத்துகிட்டு! போங்க சார்” அந்த இரக்க குணமுள்ள ஆட்டோ டிரைவர் என்னிடம் சொன்னான். மேற்கொண்டு அங்கே நிற்பது உசிதம் இல்லை.
சுரங்கப்பாதை அருகே ஒரு பெண் துப்பட்டாவால் முகத்தை மறைத்து நின்று கொண்டிருந்தாள். அவள் அழுகிறாள். முகத்தை பார்க்க முடியாவிட்டாலும் உணர்ந்து கொள்ள முடிந்தது. அவளை பார்க்கவும் பாவமாக தான் இருந்தது.
“இந்த அக்கா தான் போல இருக்குடா…” அந்த பள்ளிக்கூட பையன் தன் நண்பனிடம் சொல்லிக் கொண்டே சுரங்கப் பாதைக்குள் நுழைந்தான்.
“உன் பொண்ணா இருந்தா இப்டி பண்ணியிருப்பியா?”
அடி களத்திலிருந்து குரல் கேட்டது. கூடவே அடியும்.
“போலிஸ்ட்ட போங்கடா…” ஆட்டோ டிரைவர் பொறுமை இழந்தார்.
சாலையை கடந்தால் போலிஸ் ஸ்டேஷன்.
“இப்டியே க்ராஸ் பண்ணிடுவோம். சப்வேல போனா கூட்டத்துல தப்பிசிருவான்” ஒருவன் அடி வாங்கியவனின் சட்டையிலிருந்து கை எடுக்காமலேயே சொன்னான். நான் அதற்குள் சுரங்கப்பாதையில் இறங்கிவிட்டேன்.
அங்கேயும் நெரிசல் தான். சுரங்கப் பாதையின் இறுதியில், இடது புறம் திரும்பி படி ஏறினால் பேருந்து நிலையம். அந்த படிகளில் ஏறுவதும் பியானோ இசைக் கருவி வாசிக்கும் வேலை தான்.
“இப்டி போலாம் இப்டி போலாம்” சுரங்கத்தின் மூலையில் நின்று கைக்குட்டை விற்பவர் வலது புறத்தில் போகும் படி சொல்லிக் கொண்டிருந்தார். அவர் கைக்குட்டை விற்கும் வேலையை விட, கூட்டத்தை கட்டுப் படுத்தும் வேலையை தான் தினமும் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒருவேளை அவர் ட்ராபிக் போலிஸ் வேலைக்கு முயற்சி செய்து உயரம் போதாமல் திருப்பி அனுப்பப் பட்டவராக இருக்கலாம்.
“என்ன தம்பி மேல ஏதோ பிரச்சனையா?”
என் முன்னே செல்பவனிடம் கேட்டார். காதில் இயர் போனை வைத்துக் கொண்டு கொஞ்சிக் கொண்டே போன அவன் எந்த பதிலையும் சொல்லாமல் அவரை சட்டைக் கூட செய்யாமல் வலது புறமிருந்த படிகெட்டில் ஏறினான். எனக்கு ஒரு கணம் கஷ்டமாக இருந்தது. அவர் முகத்தைப் பார்த்தேன். அவர் என்ன பிரச்சனை என்று என்னை கேட்கவில்லை. நானும் எதுவும் சொல்லவில்லை. அவர் எதுவும் நடக்காதது போல் கைக்குட்டை விற்கத் தொடங்கிவிட்டார்.
“பத்து இருக்கு, இருவது இருக்கு… பத்து இருக்கு இருவது இருக்கு”
நானும் அமைதியாக வலது புறம் திரும்பினேன். வலது புறம் உள்ள படிகட்டில் ஏறினால், சுரங்கப்பாதையின் மேல் பகுதியை சுற்றிக் கொண்டு வெளியே வந்தால் தான் பேருந்து நிலையத்தை அடைய முடியும். வழக்கமாக எல்லோரும் போகும் வழியை விட சற்று கூடுதலாக நடக்க வேண்டும். ஆனால் யாரும் அதிகம் பயன்படுத்தாத வழி என்பதால் மற்றவர்களை விட விரைவாக பேருந்து நிலையத்தை அடைந்து விடலாம். நான் சுரங்கப்பாதையை விட்டு வெளியே சாலையில் இறங்கியபோது, சுரங்கத்தை ஒட்டி நின்று கொண்டிருந்த ஷேர் ஆட்டோ டிரைவர்கள் சாலையை நோக்கி ஓடினார்கள். என்ன என்று புரியாமல் பார்த்தேன். சாலையிலும் கூட்டம். நானும் அங்கே ஓடினேன்.
சாலையின் நடுவே ஒரு கார் நின்று கொண்டிருந்தது. பின்னே வரிசையாக வண்டிகள் ஒவ்வொன்றாக நிற்க தொடங்கின. காரின் அருகே பதட்டமாக நின்று கொண்டிருந்த ஆள் வயதான ட்ராபிக் போலீசிடம் சொன்னான்,
“நான் கரெக்ட்டா தான் சார் வந்தேன், அவன் திடிர்னு டிவைடர் மேல இருந்து குதிச்சிட்டான்…”
வயதான ட்ராபிக் போலிஸ் அவருடன் நின்றுகொண்டிருந்த இளம் ட்ராபிக் போலீசிடம்,
“க்ரவுட கண்ட்ரோல் பண்ணு, 108- க்கு கால் பண்ணு” சொல்லிவிட்டு கார் டிரைவரைப் பார்த்தார். அவன் உடம்பு நடுங்கிக் கொண்டிருந்தது.
“யோவ் கார ஓரமா நிறுத்து. பேப்பர்ஸ எடுத்துட்டு வா…” சொல்லிவிட்டு கீழே குனிந்துப் பார்த்தார்.
“போயிருச்சு போல… காலைலயே சாவடிக்குறானுங்க….”
நானும் கீழே பார்த்தேன். அந்த, சந்தன கலர் பேண்ட், நீல நிற முழுக்கை சட்டை, ரன்னிங் ஷூஸ் அணிந்திருந்த ஆள் பிணமாக கிடந்தான். கார்காரனிடமிருந்த பதட்டம் என்னைத் தொற்றிக் கொண்டது. சுற்றிமுற்றும் பார்த்தேன். அவனை போலிஸ் ஸ்டேசனுக்கு அழைத்து வந்த யாரும் தென்படவில்லை. சாலையின் மறுபுறம் சுரங்கப்பாதை அருகே அந்த பெண் தென்படுகிறாளா என்று பார்த்தேன். எதுவும் சரியாக தெரியவில்லை.
மீண்டும் தரையைப் பார்த்தேன். அவனை பார்ப்பதற்கும் பாவமாக தான் இருந்தது. அவன் மனைவியோ பிள்ளைகளோ இந்நேரம் அவன் அலுவலகம் சென்றுகொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்க கூடும். ஒரு வேலை அவன் மனைவியோடு வாழாமல் இருக்கலாம். அல்லது திருமணம் ஆகாமல் இருந்திருக்கலாம். காய்ச்சலில் அவன் பிள்ளை இறந்து போயிருக்கலாம். அல்லது அவன் மனைவி யாரோ ஒருவனோடு….
“சார் கிளம்புங்க ப்ளீஸ்.” இளம் ட்ராபிக் போலிஸ் என்னிடம் சொன்னான். கூட்டம் தங்கள் பாதையில் செல்ல ஆரம்பித்தது. சாலையில் கிடந்தவனை பார்த்துக் கொண்டே வாகனங்கள் கடந்து சென்றன. என் அருகே, கீழே கிடந்தவனைப் பார்த்தவாறு நின்று கொண்டிருந்த வாலிபன் பேருந்து நிலையம் நோக்கி வேகமாக ஓடினான். திரும்பி பார்த்தேன். கிண்டி பேருந்து நிலையத்திலிருந்து 21g பேருந்து வெளியே திரும்பிக் கொண்டிருந்தது. ஓடியவன் பின் வழியே ஏறிக் கொண்டான். பேருந்து கொஞ்சம் நிதானிக்க, நானும் ஓடிச் சென்று அதே வழியில் ஏறிக்கொண்டேன்.
“எருமைங்க ரன்னிங்ல ஏறுது பாரு” டிரைவர் சம்ப்ரதாயமாக திட்டினான். என்னையில்லை என்பது போல் நான் அந்த வாலிபனை பார்த்தேன். தன்னை சொல்லவில்லை என்பது போல் அவன் என்னைப் பார்த்தான்.
“உள்ள ஏறு. ஏழுமலை டோர க்ளோஸ் பண்ணு” கண்டக்ட்டர் சம்ப்ரதாயமாக கத்தினார். பாதி கதவு மூடிக்கொண்டது. மீதி பாதி இல்லை. யார் உடைத்தார்கள் என்று தெரியவில்லை. நான் கூட்டத்தில் புகுந்து பின்னே பெண்கள் இருக்கை அருகில் நின்று கொண்டேன்.
“காளியப்பா” அந்த வாலிபன் கண்டக்ட்டரிடம் நூறு ரூபாயை நீட்டினான்.
“பதினேழு. சில்லறையா கொடு. எல்லாரும் நூறு ரூபாய நீட்டுன எங்க போறது…?”
நான் பேருந்தின் பின் ஜன்னல் வழியே சாலையை கவனித்தேன். கார் டிரைவர் வயதான ட்ராபிக் போலீசிடம் ஏதோ பவ்யமாக பேசிக் கொண்டிருந்தான். அந்த, சந்தன கலர் பேண்ட், நீல நிற முழுக்கை சட்டை, ரன்னிங் ஷூஸ் அணிந்திருந்தவான் சாலையில் அதே இடத்தில் கிடந்தான். கிருதா வைத்த வாலிபன் கீழே பிணமாக கிடந்தவனை போட்டோ எடுக்கத் தொடங்கிருந்தான்.
அன்று கோவிந்தசாமி வரவில்லை. அவர் எங்கள் தெருவுக்கு வந்த இந்த ஒரு வருடத்தில் அன்றுதான் அவர் முதன்முதலில் வரவில்லை. அவருடன் வேலைக்கு வரும் காக்கையன் வராமல் போனாலும், கோவிந்தசாமி வந்துவிடுவார். காலை நான் வாசலில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருக்கும் போது “அம்மா குப்பை” என்று ஒரு குரல் கேட்கும்போதே சொல்லிவிடலாம் மணி சரியாக ஏழு என்று.
சிலநாட்கள் நான் வாசலில் இல்லாமல் உள்ளே வேலையாக இருந்தால், “சார்” என்று சன்னமாக ஒரே ஒரு குரல் மட்டும் வரும். நான் வாசலை விட்டு வெளியே வருவதற்கு முன்பே குப்பையை என் கையிலிருந்து, “குடு சார்” என்று பிடிங்கிக் கொண்டு தன் வண்டியில் கொட்டிக்கொள்வார்.
எல்லோர் வீட்டின்முன்னின்றும் சப்தமாக ‘குப்பை’ என்று கத்தும் கோவிந்தசாமி, என் வீட்டின் முன் மட்டும் சன்னமான குரலில் பேசுவதற்கு காரணம் தெரியவில்லை. ஒருவருடத்திற்கு முன்பு அவரை முதன் முதலில் சந்தித்ததிலிருந்து அப்படிதான் பேசுகிறார். அன்று, தாத்தாவின் பழைய பெட் ஒன்றை எடுத்துச் செல்வதற்காக காக்கையனை வரச் சொல்லியிருந்தேன். தாத்தா இறந்ததிலிருந்து அதை தூக்கி கொல்லையில் போட்டு வைத்திருந்தோம். அன்றுதான் காக்கையனுடன் முதன்முதலில் வேலைக்கு வந்திருந்தார் கோவிந்தசாமி.
காக்கையன் கொல்லையில் நின்றுகொண்டு தள்ளாடியபடியே “அம்பதுரூபா கொடுங்க வாத்தியார் சார்” என்றான்.
“குடுக்காமா எங்க போறாங்க? கணக்கு பாக்குற வீடா இது?”அம்மா அடுப்படி உள்ளே இருந்து சிடுசிடுத்தாள். காக்கையனால் அந்த பெட்டை மடித்து தூக்க முடியவில்லை.
“அன்னையா” என்று கத்தினான். வாசலில் நின்றிருந்த கோவிந்தசாமி வேகமாக ஓடிவந்தார். பெட்டை சுருட்டி தோளில் வைத்துக் கொண்டு விறுவிறுவென வெளியே நடந்தார். காக்கையன் ஐம்பது ரூபாயில் மட்டும் குறியாக இருந்தான்.
“உடனே போய் குடிக்காத” என்று சொல்லிவிட்டு அம்மா அவன் கையில் ஐம்பது ரூபாயை கொடுத்தாள்.
“டீ தான் மா குடிக்கப் போறோம்” சொல்லிவிட்டு அவன் கோவிந்தசாமியை சுட்டிக் காட்டி, “இனிமே குமாரி வராது. இவருதான் என்கூட வருவாரு” என்று சொல்லிவிட்டு நகர்ந்தான். கோவிந்தசாமி வீட்டின் வாசலிலே அமைதியாக நின்றார். நான் அவரை அழைத்து, அவர் கையில் ஒரு அம்பது ரூபாயை கொடுத்தேன். சந்தோசமாக வாங்கிக் கொண்டு, “தாங்க்ஸ் சார்” என்றார். அன்றிலிருந்து தினமும் காலை என்னைப் பார்த்து, “குட்மார்னிங்” சொல்லிவிட்டு தான் நகர்வார்.
கோவிந்தசாமிக்கு வயது முப்பைந்தைந்திற்கு மேல் இருக்கும். எப்போதும் குடி போதையில் திரியும் காக்கையனிடமிருந்து மாறுபட்டு, தலையை படிய வாரி நெற்றியில் சந்தனப் பொட்டுடன் வலம் வருவார். பாக்கெட்டில் ஒரு சாய்பாபா படம் இருக்கும், கையில் க்ளவுஸ் போட்டுக் கொண்டு தான் குப்பைக்கூடையை வாங்குவார். அவர் சுத்தத்தில் கண்ணாக இருப்பதை பார்த்து, அம்மாவுக்கும் அவரைப் பிடித்து விட்டது. உணவு, பலகாரம் என்று எதையாவது அவருக்கு உண்ணக் கொடுப்பாள். முதன்முதலில் பலகாரம் கொடுத்த போது வாங்க தயங்கியவரிடம், “அட வாங்கிகோங்க தம்பி” என்று அம்மா அவர் கையில் உரிமையாக கவரை திணித்தாள்.
ஒருமுறை அம்மா முந்தையநாள் மீந்த உணவை நீட்ட, “இன்னைக்கு வியாழக் கிழமமா பாபாக்கு விரதம்” என்று கோவிந்தசாமி சொன்னார். அம்மா சந்தோசமாக உள்ளே ஓடிச்சென்று ஆரஞ் பழங்களை எடுத்து வந்து கொடுத்தாள்.
“பாத்தியா, எவ்ளோ பக்தி அந்த தம்பிக்கு. வியாழக் கிழமை விரதம் இருக்கானாம். நீயும் இருக்கியே” அம்மா என்னை கோவிந்தசாமியின் முன்வைத்தே இதுபோல எதாவது சொல்வாள். அவர் திருதிருவென விழித்துவிட்டு, “சார திட்டாதீங்கமா. அவருக்கு எவ்ளவோ வேலை இருக்கும்” என்பார்.
காக்கையனுக்கு எது கொடுத்தாலும் காசாக கொடுக்க வேண்டும். சிறிது நேரத்தில் அதை சோமபானமாக மாற்றிவிடுவான். அதனால் அம்மா காக்கையனிடம் எந்த உரையாடலிலும் ஈடுபடவில்லை. ஆனால் கோவிந்தசாமியை பார்த்தால், அம்மாவிற்கு பாசம் கலந்த மரியாதை வந்துவிடும். அவரை பற்றியும் அவர் குடும்பத்தைப் பற்றியும் விசாரிப்பாள்.
“என்ன தம்பி எப்போ கல்யாணம்?”என்பாள்.
“ஆவும் மா. முதல சாருக்கு பொண்ண பாருங்க” என்று சொல்லிவிட்டு நகர்வார். தினமும் என்னிடமும் அம்மாவுடனும் சில வார்த்தைகள் பேசாமல் அவர் நகர்ந்ததில்லை. வாரம் ஏழு நாளும் வந்துவிடுவார். உழைப்பாளி.
“கல்யாணத்துக்கு சொல்லணும் சொல்லிபுட்டேன்” அம்மா சொல்வாள்.
“நீங்களும் சாரும் தான் நடத்திக் கொடுக்கணும்” அதே சன்னமான குரலில் சொல்வார் கோவிந்தசாமி.
ஒருநாள் காலையில் வீட்டின் அருகே இருந்த ராவுத்தர் மெஸ்ஸிற்கு டீ குடிக்கச் சென்றிருந்தேன். கர்பமாக இருந்த அண்ணியை பார்க்க அம்மா ஊருக்கு சென்றுவிட்டாள். அம்மா இல்லாத நாட்களில் ராவுத்தர் மெஸ்ஸில் தான் டீ டிபன் எல்லாம். வாசலில் போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்து டீ குடித்துக் கொண்டிருந்த கோவிந்தசாமி என்னைப் பார்த்ததும் எழ எத்தனித்தார். நான் வேண்டாம் என்று கை அசைத்துவிட்டு, டீயை வாங்கி பருகியவரே பேப்பரில் மூழ்கினேன். ஒரு குரல் என் கவனத்தைக் கலைக்க நிமிரிந்து பார்த்தேன். அங்கே ஒரு திருநங்கை நின்று கொண்டிருந்தாள். அவள் என்னிடம் காசு கேட்க நான் பாக்கெட்டை தடவினேன். சில்லரை இல்லை.
உள்ளே அமர்ந்து வெள்ளிமலர் படித்துக் கொண்டிருந்த பரமசிவன் “ஊருக்குள்ளயே வந்துட்டீங்களா?” என்று கேலியாக கேட்டான். வேலை வெட்டிக்கு போகாமல் அடிதடி செய்துக் கொண்டிருப்பதே பரமசிவனின் வேலை. அந்த திருநங்கை அவனை முறைத்தாள்.
என்னிடம், “விரட்டிவிடு வாத்தியாரே. சில்லறை தேடிகிட்டு இருக்க” என்றான். வெறுங்கையுடன் நகர்ந்த திருநங்கையை அழைத்து கோவிந்தசாமி ஐந்து ரூபாயை கொடுத்தார்.
“நான் காசு கொடுக்காதனு சொன்ன நீ என்னடா தர்ம பிரபு” பரமசிவன் கோவிந்த சாமியை பார்த்து கத்தினான். கோவிந்தசாமி எதுவும் பேசவில்லை.
“பேசிட்டே இருக்கேன்…” என்றவரே எழுந்த பரமசிவன், நாங்கள் சுதாரிப்பதற்குள் கோவிந்தசாமியின் கன்னத்தில் அறைந்தான்.
“உழச்சு சாப்டாம ஆடுறாளுங்க” என்றவாறே பரமசிவன் நகர்ந்தான். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. பரமசிவன் மீது கோபம் வந்தது. அனால் அவனை எதிர்க்கும் அளவிற்கு எனக்கு தைரியமோ, பலமோ இல்லை. கோவிந்த சாமியின் கண்கள் கலங்கியிருந்தன, “அவங்களும் நம்பளமதிரி தான சார்?” என்று என்னைப் பார்த்துக் கேட்டார்.
“அந்த தடிப்பையன் கிடக்கான். யாரும் கிடைக்கலன்னு உன்ன ஏறுறான்” ராவுத்தர் கோவிந்தசாமியை ஆசுவாசப் படுத்துவதற்காக சொன்னார்.
அதன்பின் கோவிந்தசாமி பரமசிவன் இருக்கும் பக்கமே திரும்புவதில்லை. நான் மறுநாள் அவரை பார்த்து ‘சாரி’ கேட்டேன். “அவன் பொறுக்கி சார். அடிச்சான். அதெல்லாம் நான் மறந்துட்டேன். நீங்க என்ன பண்ணுவீங்க பாவம்” என்றார். எங்கள் நட்பிலோ பேச்சிலோ எந்த மாற்றமும் இல்லாமல் தான் நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன.
இன்று கோவிந்தசாமி ஏன் வரவில்லை என்று தெரியவில்லை? உடம்பு ஏதும் சரியில்லாமல் போய் விட்டதா? காக்கையனைக் கேட்டேன். காக்கையன் தனக்கு எதுவும் தெரியாது என்றான்.
மறுநாளும், அதற்கு அடுத்த நாளும் கோவிந்தசாமி வரவில்லை.
“சொல்லிக்காம கொள்ளாம வேலையை விட்டு போய்டான் சார்” காக்கையன் சொன்னான். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. எங்களிடம் ஏன் சொல்லவில்லை. அம்மா ரொம்ப வருத்தப்பட்டாள். அண்ணனுக்கு குழந்தை பிறந்ததால், நாங்கள் அந்த கொண்டாடத்தில் மூழ்கிவிட்டோம். கோவிந்தசாமிக்கு பதில் காக்கையனுடன் வேறொரு சிறுவன் வரத் தொடங்கிவிட்டான். அவனும் போக, இன்னும் இரண்டு பேர் மாறினார்கள். அவரவர் வேலையுண்டு என்று நாட்கள் நகர்ந்தன. காக்கையன் மட்டும் வழக்கம் போல போதையில் வந்து போனான்.
பாப்பாவின் முதல் பிறந்தநாளை எங்கள் வீட்டில் கொண்டாட வேண்டுமென்று அண்ணனும் அண்ணியும் வந்திருந்தார்கள். அண்ணிக்கு விரால் மீன்தான் பிடிக்கும், அதுவும் ஆற்று மீன் தான் பிடிக்கும். அம்மா தேடிப் பிடித்து வாங்கி வர சொன்னாள். நானும் வண்டியை எடுத்துக் கொண்டு இருபது கிலோமீட்டர் செல்ல வேண்டியதாக இருந்தது.
“அதெல்லாம் கட்டுபடியாகும் குடு சாமி” பேரம் பேசிக்கொண்டிருந்த அந்த குரலை நான் எங்கேயோ கேட்டிருக்கிறேன். திரும்பி பார்த்தால், கோவிந்தசாமி. என்னை பார்த்ததும் அவர் முகம் திகைத்தது.
“என்ன கோவிந்தசாமி சவுக்கியமா?” என்றேன்
“நல்ல இருக்கேன் சார்” என்றார்.
நான் “எங்க போனீங்க. அம்மாகிட்ட கூட சொல்லல?” என்றேன். அவர் தயங்கினார். அப்போது அங்கே வந்த அந்த திருநங்கை கோவிந்தசாமியிடம் ‘போலாமா மாமா?” என்றாள். நான் அன்று டீக்கடையில் பார்த்த அதே திருநங்கை. எனக்கு புரிந்து விட்டது.
“அன்னைக்கு அந்த தடியன் அடிச்சதும் கஷ்டமா இருந்துச்சு. சாயங்கலாம் இவர பாத்து பேசினேன். அப்டியே லவ் வந்திருச்சு” அந்த திருநங்கை சொன்னாள். கோவிந்தசாமி வெட்கப்பட்டார்.
“ராதா நான் சொன்னேன்ல சாரு, இவருதான்” என்று என்னை அறிமுகம் செய்துவைத்தார்.
“என்கிட்ட இருந்து உங்க லவ்வ மறச்சிருக்கீங்களா கோவிந்த சாமி!” என்று கேட்டு அவர் தோளை தட்டினேன். சிரித்தார்.
“திடிர்னு ஒரு நாள் கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணுனோம். அவங்க ஊர் பக்கம் கோவில்ல போய் பண்ணிக்கிட்டோம்” கோவிந்தசாமி சொன்னார். “கல்யாணத்துக்கு எங்கள ஏன் கூப்டல?” கோவமாக கேட்பது போல் பாசாங்கு செய்தேன்.
“அது அது” என்று இழுத்தார். நான் சிரித்துவிட்டு, “சொல்லிட்டாவது வந்திருக்கலாம்ல. அம்மா சந்தோசப் பட்டிருப்பாங்க” என்றேன்
“சொல்லிகிட்டே இருப்பார் சார்” ராதா பேசினாள். “வாத்தியார் சாரும் அவங்க அம்மாவும் பாசமா இருப்பாங்க. சொல்லிக்காம வந்துட்டேனு”.
“அந்த ஏரியா வந்தா உங்கள அம்மாவலாம் பாக்கணும்… எல்லாரும் கேலி பேசுவாங்க அதான் வேலையை விட்டுடேன் சார்” என்றார்
“உங்க மனசுக்கு புடிச்ச ஒரு விசயத்த பண்ணிருக்கீங்க? இதுல என்ன வெட்கம் அவமானம்! அன்னைக்கு உங்கள அடிச்சப்ப பாத்துகிட்டு இருந்த நான் தான் அவமானப் படனும்” என்றேன். அமைதியாக நின்றார்.
“இப்ப எங்க வேலை பண்றீங்க?”
“வாட்ச்மேன் வேலைக்கு போயிட்டு இருக்கார் சார்” என்றாள் ராதா.
“முன்னமாதிரி இவ யார்ட்டையும் கை ஏந்துறது இல்ல சார். வீட்டயும் என்னையும் நல்லா பாத்துக்குறா. நல்லா சமைப்பா சார்.” கோவிந்தசாமி பெருமையாக சொன்னார்.
“ஏன் நீங்களும் வேலைக்கு போலாமே?” நான் ராதாவை பார்த்துக் கேட்டேன்.
“யார் சார் வேலைக்கொடுப்பா?” ராதா வினவினாள்.
ராவுத்தரிடம் வேலை பார்த்த மாஸ்டர் தனியாக கடை போட போய்விட்டதாக ராவுத்தர் சொன்னது நினைவுக்கு வந்தது. அவரிடம் பேசினேன். அவர் சந்தோசமாக ராதாவை வேலைக்கு வைத்துக் கொண்டார். முதல் நாள் நான் கடைக்கு வந்து டிபன் சாப்பிட வேண்டுமென்று ராதா ஆசைப்பட்டாள். அவள் செய்த பொங்கலும் வடையும் சுவையாக இருந்தது. நான் உண்டுகொண்டிருக்கும்போது, பரமசிவன் வந்தான். நான் உள்ளே அமர்ந்திருப்பதைப் பார்த்தான். ராதா உள்ளே சட்னி அறைத்துக் கொண்டிருப்பதையும் பார்த்துவிட்டு என்னை முறைத்தான். மேஜையில் வைக்கப்பட்டிருந்த தட்டிலிருந்து ஒரு வடையை எடுத்து தின்றுகொண்டு என்னை முறைத்தவாறே நின்றான். நான் அவனை சட்டை செய்யாமல்,
“பொங்கல் அருமையா இருக்கு ராதா” என்றேன். அவள் சந்தோசப் பட்டாள். வழக்கமாக கடைக்கு சாப்பிட வரும் பேச்சுலர்கள் இரண்டு பேர் என் அருகில் வந்து அமர்ந்தனர்.
“பொங்கல்” என்றனர். பொங்கல் வருவதற்குள், உள்ளே ராதா சமைத்துக் கொண்டிருப்பதை பார்த்ததும் அவர்களின் முகம் எப்படியோ மாறியது. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அங்கிருந்து எழுந்து ராவுத்தரிடம்., “இனிமே வெளிய சப்ப்ட்டுக்குறோம்” என்றனர். ராவுத்தர் பேசுவதற்குள் அவர்கள் கடையை விட்டு வெளியேறினர்,
அவர்களின் வழியை மறைத்துக்கொண்டு நின்ற பரமசிவன்,. “ஏன் சாணிய பாத்தா மாதிரி போற. அவ உழைக்குறா. உங்களுக்கு எங்க எரியுது. இது அவ சுட்ட வட.. நல்லாத்தான் இருக்கு. நேத்து வரைக்கும் அந்த சீக்காளி மாஸ்டர் செஞ்ச வடையை ரசிச்சி தின்னீங்க! இவ சமையலுக்கு என்ன குறைச்சல்!” என்றான்.
அவர்கள் என்ன சொல்வது என்று விழித்தனர். இருவரின் தோளின் மீது தன் கைகளை வைத்து அழுத்தியாவாறே, “எப்பவும் இங்கதான சாப்பிடுவீங்க! போய் சாப்டு போ” என்று அவர்களை உள்ளே தள்ளினான். அவர்கள் என்னருகே வந்து அமர்ந்தனர். நான் பரமசிவனைப் பார்த்து புன்னகை செய்தேன். அவன் என்னைக் கண்டுகொள்ளாமல், எதுவும் நடக்காதது போல் அங்கிருந்து நகர்ந்தான். ராதா சூடாக வடையை சுட்டெடுத்துக் கொண்டிருந்தாள்.
பாலாவிற்கு முழுவாண்டு தேர்வு முடிந்ததும் என்னுடைய கைபேசியை அன்பளிப்பாக தருவதாக சொல்லியிருந்தேன். ஆனால் என்னுடைய வாக்குறுதியை என்னால் நிறைவேற்ற முடியாமல் போகும் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை. உண்மையில் அவள் என்னிடம் மொபைல் ஃபோன் கேட்கவில்லை. நானேதான் தருவதாக கூறினேன். இன்று என்னால் அந்த சிறுமி ஏமாற்றம் அடைந்த்திருப்பாள் என்பதை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது.
தாம்பரம் பீச் ரயிலில்தான் நான் பாலாவை முதன்முதலில் சந்தித்தேன். நான் எழும்பூரில் ஏறுவேன். அவள் சேத்துப்பட்டில் ஏறுவாள். அங்கே ஒரு தொண்டு நிறுவனம் நடத்திய பள்ளியில் அவள் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். நான் அண்ணாசாலையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அலுவலகம் 5.45 மணிக்கு முடியும். 5.40 மணியிலிருந்தே பயோமெட்ரிக் சிஸ்டம் முன்பு அவுட்பஞ்ச் அடிப்பதற்காக ஒரு கூட்டம் காத்திருக்கும். சரியாக 5.45 மணிக்கு பஞ்ச் அடித்துவிட்டு வெளியே வந்து சாலையை கடந்து, 27 D பிடித்து எழும்பூர் வருவதற்குள் மணி மாலை ஆறரை ஆகிவிடும். அவளும் டியூஷன் முடித்துவிட்டு அதே நேரத்தில் வருவாள். நான் வழக்கமாக கடைசி பெட்டியில் ஏறுவேன். ஜன்னல் அருகே அமர்ந்து குரோம்பேட்டை வரும் வரை மொபைலில் படம்பார்த்துக் கொண்டே வருவேன்.
“அடுத்த ட்ரைன்ல வரக்கூடதா?” வாசலில் நின்றவரின் குரல் கேட்டு நிமிர்ந்தேன். ஒரு சிறுமி மூச்சு இறைக்க நின்றுக் கொண்டிருந்தாள். ‘ஓடி வந்து ஏறியிருக்கிறாள்’. நான் மீண்டும் மொபைலை பார்க்கத் தொடங்கினேன்.
என் அருகில் வந்து அமர்ந்து என் மொபைலை எட்டிப் பார்த்தாள். நான் அவளை நிமிர்ந்து பார்த்தேன்.
“ஐ பொம்ம படம்!” அவள் சப்தமாகவே ஆச்சர்யப் பட நான் புன்னகைப் புரிந்தேன்.
“வயசுதான் ஆச்சு. இன்னும் பொம்ம படம் பாக்குறான்” என்று என் வீட்டில் எல்லோரும் திட்டும் அளவிற்கு நான் பொம்மை படங்கள் பார்ப்பவன்.
“என்ன படம்னே?” அவள் கேட்டாள்
“இன்சைட் அவுட்” என்றேன். அவள் அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் படத்தையே பார்த்தாள்.
“ஐ யான!” என்றாள் மீண்டும் சப்தமாக.
அவள் ஆர்வமாக அந்தப் படத்தை பார்க்க, நான் படத்தை முதலிலிருந்து வைத்தேன். என் வலது காதில் சொறுகியிருந்த இயர் போனை அவளிடம் கொடுத்தேன். அவள் அதை வாங்கி தன் இடது காதில் சொறுகிக் கொண்டு, படத்தை ரசித்தாள். அந்த இயர் போன் அவள் காதில் பொருந்தவில்லை. கீழே விழுந்துக் கொண்டே இருந்தது. இரண்டு மூன்று முறை அதை எடுத்து காதில் வைத்துக் கொண்டவள், ஒரு கட்டத்தில், அது கீழே விழுந்ததை பொருட்படுத்தாமல் படத்தை ஆர்வமாக பார்த்தாள். நான் படம் பார்ப்பதை நிறுத்திவிட்டு அவள் குழந்தைத்தனத்தை ரசிக்கத் தொடங்கிவிட்டேன். சிறிது நேரத்தில் என்னை அறியாமல் என் மொபைல் ஃபோனை அவளிடம் கொடுத்துவிட்டேன். பல்லாவரம் வரும் வரை அவள் படத்தை பார்த்துக் கொண்டே வந்தாள். என்னிடம் அதிகம் பேசாமல், படத்தைப் பற்றி தனக்கு தானே பேசிக்கொண்டும் சிரித்துக் கொண்டும் வந்தாள்.
“எப்பவும் லேடிஸ்ல தான் வருவேன். இன்னைக்கு லேட் ஆச்சுனு இதுல ஏறிட்டேன்” என்றாள். ரயில் பல்லாவரத்தில் நின்றது. அவள் இறங்குவதற்கு முன்பு, “அண்ணே நாளைக்கு மிச்சப் படத்த பாக்குறேன். நாளைக்கும் வருவீங்களா?” என்று ஏக்கத்துடன் கேட்டாள். நான் ‘ம்’ என்றேன். இப்படிதான் நானும் பாலாவும் நண்பர்களானோம்.
பாலா பம்மலில் இருந்து வருவதாக சொன்னாள். தன் ஆயாவுடன் வசிப்பதாக சொன்னாள். மற்றப்படி நான் பாலாவைப் பற்றி அதிகம் விசாரித்ததில்லை.
“சனி ஞாயிறு எப்ப போகும்னு வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன்னே” வழக்கமாக எல்லா திங்கக்கிழமைகளிலும் இதையே சொல்வாள். நானும் பாலாவை சந்திப்பதற்காக காத்துக் கொண்டுதான் இருப்பேன். அதை அவளிடம் சொல்லாமல், வெறும் புன்னகை மட்டும் செய்வேன். உண்மையில் ஒவ்வொரு நாளும் மாலை எப்போது வரும் என்று நான் எதிர்பார்த்துக் கொண்டுதான் இருப்பேன்.
வளரவளர பெரியவர்கள் போல் நடந்துகொள்ள வேண்டும் என்று சொல்லியே என்னையெல்லாம் வீட்டில் வளர்த்தார்கள். அப்படி வளரும் போது என்னிடம் ஏதோ ஒன்று மடிந்துகொண்டே வந்தது. அந்த ஏதோவொன்று பாலாவிடம் உயிரோடிருந்தது.
அடுத்தவர்களிடம் அதுவும் வழிப்போக்கர்களிடம் உரையாடுவதை எல்லாம் தவிர்க்க வேண்டும், குறைவாக பேசுவதே மெச்சூரிட்டி என்று நான் பாலாவின் வயதில் இருக்கும்போது என்னிடம் பலரும் சொல்லியிருக்கிறார்கள்.
“loose talk பண்ணாத…” பள்ளி முதல் கல்லூரி வரை ஆசிரியர்கள் இதே வசனத்தை சொல்வார்கள். அதனால்தான் என்னவோ யதார்த்தமாக கூட நான் ட்ரெயினில் யாரிடமும் உரையாடியதில்லை. ரயிலில் சந்திப்பவர்களுடன் தேவையில்லாமல் உரையாடுவது ஏதோ கவுரவ குறைவான செயலாக என் ஈகோ கருதியது. அமைதியாக புத்தகம் படித்துக் கொண்டோ, மொபைலில் படம் பார்த்துக் கொண்டோ வருவேனே ஒழிய, பக்கத்தில் இருப்பவரை பார்த்து ஒரு புன்னகைக் கூட செய்ததில்லை. ஆனால் பாலா தூய்மையான கடல்காற்றை போல் இருந்தாள். அவளிடம் கட்டுப்பாடு இல்லை. பேசிக்கொண்டே இருந்தாள். அவள் அந்த பொம்மைப் படங்களைப் பற்றிதான் பேசுவாள். மீண்டும் படத்தில் மூழ்கிவிடுவாள்.
பாலாவிற்காகவே என் மொபைலில் நிறைய பொம்மைப் படங்களை ஏற்றி வைக்கத் தொடங்கினேன். ஆறுமாதங்கள் வேகமாக ஓடியது. சில நாள் நான் வர தாமதமானாலும், அவள் சேத்துப்பெட்டில் காத்திருப்பாள்.
ஒருமுறை அலுவலகத்தை விட்டு கிளம்ப தாமதமாகிவிட்டது. நான் ஏழரை மணிக்குதான் எக்மோர் வந்தேன். சேத்துப்பட்டில் பாலா ஏறினாள். நான் அவள் போயிருப்பாள் என்று எண்ணினேன். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அதை புரிந்து கொண்டவள்,
“ஒரு பொட்டி தானனே. நீ இருக்கியா இல்லையானு தேட முடியாதா?” என்றாள்.
“மொபைல் பித்து எடுத்து அலையுற நீ” நான் செல்லமாக கோபித்தேன். அவள் சப்தமாக சிரித்தாள்.
“லேடிஸ் பொட்டிலயே அந்த அக்காங்ககிட்ட மொபைல் பாத்துருக்கேன். எல்லாரும் மறச்சு மறச்சு ஏதோ மெசேஜ் அனுப்புவாங்க. நீ தான் அண்ணே சூப்பர்” சொல்லிவிட்டு மீண்டும் சிரித்தாள்.
“அண்ணன் முக்கியமா இல்ல பொம்மை படம் முக்கியமா?”
அவள் எந்த பதிலும் சொல்லவில்லை. என்னிடமிருந்து மொபைலை பிடிங்கிக்கொண்டு பொம்மை படத்தை பார்க்கத் தொடங்கிவிட்டாள். நான் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.
ஒருநாள் அவள் முகம் வாடியிருந்தது.
“ஆயா ஊருக்கே போய்டலாம்னு சொல்லுது, முழு ஆண்டு எக்ஸாம்க்கு அப்பறம்.” என்றாள்.
“எந்த ஊர்?”
“புளிச்சலா… இங்க யாரும் இல்லையாம். அங்க போனா மாமங்க கூட இருந்திறாலாம்னு சொல்லுது”
“ஏன் ஊருக்கு போக புடிக்கலைய?
“ஊருக்கு போய்ட்டா உன்ன பாக்க முடியாதே, பொம்மைப் படமும் பாக்க முடியாது’ என்றாள்
“இந்த ஃபோன எடுத்துக்கோ ஊருக்கு போகும்போது” நான் சொன்னேன்.
“நிஜமாவா?” கண்கள் விரிய கேட்டாள். நான் “ம்” என்றேன்.
“ஆனா இப்ப இல்ல எக்ஸாம்ஸ் முடிஞ்சதும் நானே தரேன்” என்றேன். அவளுக்கு சந்தோசம்.
நாட்கள் உருண்டோடின. சில நாட்கள் ட்ரெயினில் அமர இருக்கை கிடைக்காது. சில நேரம் செங்கல்பட்டு ட்ரெயினில் ஏறிவிடுவோம். நிற்பதற்கே இடம் இருக்காது. ஆனாலும் பொம்மைப் படம் பார்ப்போம். பாலாவிற்கு முழு ஆண்டு தேர்வு தொடங்கியது. ஒழுங்காக படிக்க வேண்டும் என்று அறிவுரை சொன்னேன். அத்தகைய அறிவுரையை சொல்வதில் எனக்கு விருப்பமில்லைதான். உண்மையில், “இப்டியே சந்தோசமா இரு பாலா, மனசுல எதையும் வச்சுக்காமா…” என்று சொல்லவே தோன்றியது. ஆனால் அப்படி சொன்னால் அவளுக்கு புரியுமா என்று தெரியவில்லை.
அவள் சரி என்று தலையாட்டிவிட்டு என் மொபைலிலேயே குறியாக இருந்தாள். மறுநாள் சேத்துப்பட்டில் ஓடிவந்து ஏறினாள். களைப்பாக இருந்தாள்.
“எக்ஸாம் மதியானமே முடிஞ்சிது, உனக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன்” என்றாள்.
“வீட்டுக்கு போய் படிக்கலாம்லா?”
“இவ்ளோ நேரம் படிச்சிக்கிட்டு தான் இருந்தேனே. ஒன்னோட்டு ஒரு நாள் தான் எக்ஸாம். மீதிய லீவ்ல படிச்சுக்கிறேன். நீ மொபைல குடு” என்றாள் நான் கொடுத்தேன்.
பல்லாவரம் வரும் போது கண்டிப்பாக சொன்னேன். “எனக்காக வெயிட் பண்ணதா. எக்ஸாம் முடியட்டும். நான் சொன்ன மாதிரி இந்த ஃபோன குடுத்துருவேன். அதுவரைக்கும் ஃபோன் கிடையாது” அவள் முகம் வாடியது. நான் ஏன் அப்படி சொன்னேன் என்று தெரியவில்லை. அமைதியாக எழுந்தாள்.
“எப்ப எக்ஸாம் முடியும்?”
“அடுத்த வெள்ளிக்கிழமை”
“அப்போ அன்னைக்கு சாயங்காலம் வெயிட் பண்ணு”
முகம் மலர்ந்தது. சரி என்று தலையசைத்தாள். வெள்ளிக்கிழமை நான் சற்று சீக்கிரமாகவே கிளம்பினேன். மேலாளரிடம் உடம்பு சரியில்லை என்று சொல்லிவிட்டேன். வழக்கமாக நான் கூட்டமான பேருந்துகளில் ஏறுவதை தவிர்ப்பேன். கூட்டம் குறைந்த பேருந்து வரும் வரை காத்திருந்தே ஏறுவேன். அன்று பாலா காத்திருப்பாள் என்பதால், அந்த 27D யின் மூச்சை இறுக்கும் கூட்டத்தையும் பொருட்படுத்தாமல் ஏறினேன். உள்ளே அடியெடுத்துவைக்க முடியவில்லை. ஒருவாறு உடலை நகர்த்திக் கொண்டு கம்பியில் போய் சாய்ந்தவாறு நின்றேன். எக்மோர் ரயில் நிலையம் வந்தது. கூட்டம் குறையவில்லை. கூட்டத்திலிருந்து உடலை பிதுக்கிக் கொண்டு வெளியேவந்தேன். அப்போது அந்த தடியான மனிதனின் பார்வை என் பார்வையை சந்தித்தது.
அவன் ஏன் அப்படி வித்தியாசமாக பார்க்கிறான் என்று எண்ணியவாறே இறங்கினேன். ஒரு கணம் ஒரு எண்ணம் தோன்ற பேண்ட் பாக்கெட்டில் கை வைத்து பார்த்தேன். மொபைல் அங்கு இல்லை. அந்த தடியனின் முகம் நினைவிற்கு வந்தது. பஸ் பின்னால் ஓடலாமா வேண்டாமா என்ற முடிவை எடுப்பதற்குள் பஸ் கிளம்பியிருந்தது. ‘வில்லிவாக்கம்’ என்ற பெயர்பலகை மங்கலாக தெரிந்தது.
எல்லோரும் தங்கள் மொபைலை கையில் வைத்துக் கொண்டு ரயில் நிலையம் நோக்கி நடந்தனர். என் நம்பருக்கு கால் செய்து பார்க்க வேண்டும். யாரை கேட்கலாம் என்று ஒவ்வொருவரையும் பார்த்தேன்.
நாகரிகமாக உடை அணிந்திருந்த அந்த இளைஞனிடம் ஆங்கிலத்தில் கேட்டேன்,
“சார் ஒரு போன் பண்ணிக்கலாமா? மொபைல் மிஸ் ஆகிடுச்சு” அவன் என்னை ஏற இறங்க பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல் போய்விட்டான்.
என்ன செய்வதென்று தெரியாமல் நடந்தேன். எக்மோர் ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்த ஒரு போர்ட்டரிடம் விஷயத்தை சொன்னேன்.
“தொலஞ்சிருக்காதுபா எவனாவது அடிச்சிருப்பான். இங்க ஒரு கூட்டமே அலையுது” என்றார். தன் போனை கொடுத்தார். என் நம்பருக்கு கால் செய்து பார்த்தேன். switch off என்று வந்தது. அவர் போனை அவரிடம் கொடுத்து, ‘தாங்க்ஸ்’ என்றேன்.
“இருக்கட்டும்பா.. வீட்டுக்கு பேசுனுனாலும் பேசிக்கோ…” என்றார்
“பரவால்லனே. இங்க போலிஸ் ஸ்டேஷன் எங்க இருக்கு?”
“என்ன கம்ப்ளைன்ட் கொடுக்க போறியா…? அவங்க கண்டு புடிச்சு கொடுக்குறது டவுட்டு தான். போனா, ஏண்டா வந்தோம்னு நினைக்குற அளவுக்கு எதையவது பேசி அசிங்கப் படுத்துவாங்க…”
நான் என்ன சொல்வது என்று தெரியாமல், தலை அசைத்துவிட்டு, அங்கிருந்து நகர்ந்தேன். அவர், “தம்பி” என்று அழைத்தார்.
“எதுக்கும் கம்ப்ளைன்ட் கொடுத்துவை. நாளைக்கு உன் போனால எதாவது பிரச்சனை வந்தா ஏன் கம்ப்ளைன்ட் பண்லன்னு கேப்பான்…” என்று காவல் நிலையத்திற்கு வழி சொன்னார்.
நான் எக்மோர் காவல் நிலையம் நோக்கி நடந்தேன். இவ்வளவு பிரச்சனையில் பாலா எனக்காக காத்திருப்பாள் என்பது மறந்து போனது.
“அப்ப நீங்க மவுன்ட் ரோட்ல தான் கம்ப்ளைன்ட் கொடுக்கணும் …” அந்த வயதான கான்ஸ்டபில் சொன்னார்.
“இல்ல சார், நடுவுல மொபைல் இருந்துச்சு. இறங்கும் போது இல்ல… பஸ்ல தான் எங்கேயோ தொலஞ்சிருக்கனும்”
அவர் பதில் பேசவில்லை. ஒரு வெள்ளை தாளை கொடுத்தார். கைபேசி களவாடப்பட்டுவிட்டது என்று ஒரு புகார் கடிதம் எழுதிக் கொடுத்தேன். புகார் கடிதத்தை வாங்கி படித்துவிட்டு,
“உன் பக்கத்துல லேடிஸ் நின்னாங்களா?”
நான் யோசித்தேன். “தெர்ல சார். ஸ்கூல் பசங்கலாம் இருந்தாங்க…”
“கல்யாணம் ஆச்சா?” அவர் வினவினார்.
“இல்ல சார்”
“அதான் பிரச்சனையே. லேடிஸ பாத்துட்டு ஃபோன விட்டுற வேண்டியது. இதே வேலையா போச்சு உங்களுக்கு….” அவர் மேற்கொண்டு பேசிய எதுவும் என் மனதில் பதியியவில்லை. அந்த போர்ட்டர் சொன்னது சரிதான். அங்கு ஏன் சென்றோம் என்று எண்ணம் தோன்றியது.
“இன்பார்ம் பண்றோம், போங்க” என்றார். எப்போது பேச்சை முடிப்பார் என்று காத்திருந்த நான் வேகமாக வெளியே வந்தேன். ஆட்டோ ஒன்றை பிடித்து ரயில் நிலையம் வந்து இறங்கினேன். மணி ஏழேமுக்கால். சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் பாலா நின்றுக் கொண்டிருந்தாள். என்னை பார்த்ததும் சந்தோசமாக பெட்டியில் ஓடி வந்து ஏறினாள்.
“என்னனே இவ்ளோ நேரம்?”
நான் எதுவும் சொல்லவில்லை. அவள் என்னிடம் எதையோ பார்வையால் தேடினாள். பின் பொறுமையிழந்து அவளாகவே கேட்டாள்.
“மொபைல் எங்கனே?”
“மிஸ் ஆகிருச்சுடா… பஸ்ல யாரோ எடுத்துட்டாங்க…”
“நிஜமாவா?”. நான் ‘ஆம்’ என்று தலை அசைத்தேன். நான் பொய் சொல்லிருப்பதாக அவள் நினைத்திருக்கக் கூடும். பல்லாவரம் வரும் வரை அவள் என்னிடம் எதுவும் பேசவில்லை. பல்லாவரம் வந்ததும் என்னை திரும்பிப் பார்த்தாள். எதையோ சொல்ல வந்தவள் எதுவும் சொல்லாமல் இறங்கிச் சென்றுவிட்டாள். அதன் பின் அவளை நான் பார்க்கவில்லை. இன்றுவரை, சேத்துப்பெட்டு ரயில் நிலையத்தை கடந்து செல்லும் போதெல்லாம் வெளியே ஒரு கணம் பார்க்கமால் இருக்க முடியவில்லை.
கிழக்கு பதிப்பகம் ‘சென்னை தின’ சிறுகதைப் போட்டி 2017-யில் பரிசு பெற்றக் கதை
எனக்கு நண்பர்கள் இல்லை என்று சொன்னால் நீங்கள் நம்ப மறுக்கலாம். அப்படியே நம்பினாலும் நண்பர்களின்றி வாழ்பவனின் வாழ்க்கையை தெரிந்துக் கொள்வதில் என்ன சுவாரஸ்யம் இருந்துவிடப் போகிறது என்று எண்ணலாம். உண்மையில், உலக வாழ்கையே சுவரஸ்யமற்றது தான். சுவரஸ்யமென்பது வாழ்கையினுள் நாம் வழிய திணித்துக் கொள்ளும் பொய். அதனால் என் வாழ்க்கை சுவாரஸ்யமற்று போனதைப் பற்றி நான் அலட்டிக் கொள்வதில்லை. ஆனால் சிலபல நண்பர்களோடு திரிந்த நான் இப்படி நண்பர்களற்றுப் போனதை எண்ணும் போது ஆச்சர்யமாக இருக்கிறது.
பத்து வருடங்களுக்கு முன்பு, பிப்ரவரி மாதத்தில், அதிக எதிர்பார்ப்புடன் வெளியாகி ஓடாமல் போன அந்த திரைப்படத்தின் முதல்நாள்- முதல்காட்சி- முதல்டிக்கெட்டை குரோம்பேட்டையில் உள்ள ஒரு திரையரங்கில் நான் வாங்கிய போது என் பின்னே வரிசையில் நின்றுகொண்டிருந்த எழுபது பேரும் என் நண்பர்கள்தான். அன்று திரையரங்கில் முழுக்கமுழுக்க எங்களுடைய கல்லூரி மாணவர்களே இருந்தனர். அதில் பெரும்பாலானோர் எனக்கு நன்கு பரிச்சயமானவர்கள். மிகவும் நெருங்கிய நண்பர்களென்று என்னுடன் எப்போதும் வலம் வந்த ஐந்தாறு பேரும் இப்போது இல்லை. இன்று யாருமற்ற ஒருவனாய் இங்கே இரண்டு குதிரைகளுக்கு மத்தியில் அமர்ந்திருக்கிறேன். பார்க் ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்ததுமே சுவற்றை ஓட்டியிருந்த கம்பத்தில் கட்டப்பட்டிருந்த இரண்டு குதிரைகளும் என்னை பாந்துவமாக பார்ப்பது போல் இருந்ததால் அதன் நடுவே போய் அமர்ந்துகொண்டேன். அந்த குதிரைகள் ஒன்றை ஒன்று சட்டை செய்யாமல் நின்றுக் கொண்டிருந்தன. நண்பர்களற்ற குதிரைகள்..
எவ்வளவு நேரம் ஓடியது என்று தெரியவில்லை. “ஆம்பள குதிரைய பாக்க வருவானுங்க” அங்கே இருந்த குண்டு பெண்மணி சொன்னாள். எனக்கு அவமானமாக இருந்தது. எழுந்து நடந்தேன்.
கல்லூரியில் என்னுடைய கேங் பெரியது. எப்போதும் பதினைந்து இருபது பேர்களாக சேர்ந்து கல்லூரி ஹாங்கரில் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருப்போம். என்ன பேசினோம் என்று நினைவில்லை. ஆனால் இப்போது அப்படி பேசியதை எண்ணும் போது தொலைந்து போன மகிழ்ச்சி ஒரு நிமிடம் மீண்டும் மனதை தொட்டுவிட்டு போகிறது. மூன்று வருடங்கள் நண்பர்கள் புடை சூழ வாழ்க்கை நகர்ந்தது. இறுதி ஆண்டில், சேர்மேன் தேர்தலின்போது நடந்த பிரச்சனையில் நிறைய பேர் பிரிந்து சென்றுவிட்டனர். இரண்டு மூன்று நண்பர்கள் மட்டுமே மிஞ்சினர்.
பின் திரைகடல் ஓடி திரவியம் தேடும் முயற்சியில் ஈடுபட்டதால் அந்த நண்பர்களும் தொடர்பற்று போனார்கள். தன்னுடைய ஒரு தலைக்காதல் கதைகளை பற்றி இரவு பன்னிரண்டு மணிக்கு போன் செய்து கிட்டதட்ட ஆறுவருடங்களுக்கு மேல் புலம்பிக் கொண்டிருந்த ஒரே ஒரு நண்பனும், தான் காதலித்த பெண்ணையே இறுதியாக இரண்டு மாதங்களுக்கு முன்பு கை பிடித்துவிட்டதால், என் தொடர்பை துண்டித்துக் கொண்டான்.
எல்லா நண்பர்களும் கடைசி வரை உடன் வர மாட்டார்கள் என்று என் பழைய நண்பன் பாபா அடிக்கடி சொல்வான். ஆனால் உன்னுடனே உனக்காகவே சாவேன் என்றெல்லாம் பேசியவர்களும் பிரிந்து சென்றுவிட்டார்கள் என்பதைதான் ஜீரணிக்க முடியவில்லை. வாழ்க்கை இரக்கமற்றது. அது நம்மை பயன்படுத்திக் கொண்டு, மாங்கொட்டை போல் சப்பி போட்டுவிடுகிறது. அல்லது நாம் மற்றவர்களை பயன்படுத்திக் கொண்டு விலகி வந்து விடுகிறோம்.
சிறிது தூரம் நடந்ததும் அந்த ஹோட்டல் போர்டு பெரிதாக இருந்தது. அதை பார்த்ததும் தான் அங்கே நான் ஏன் வந்தேன் என்று உரைத்தது. வங்கியில் ஒரு ட்ரைனிங்கிற்காக அனுப்பி இருந்தார்கள். ஒருவாரம் அமரவைத்தது credit monitoring, credit appraisal, NPA management என்று ஏதேதோ பேசுவார்கள். எல்லாம் ஆட்டிற்கு மாலை போடும் கதை தான்.
வங்கியிலும் எனக்கு பெரிதாக நண்பர்கள் என்று யாருமில்லை. பெரும்பாலும் என்னுடன் வேலை செய்பவர்கள் என்னைவிட வயதில் மூத்தவர்கள். மேலும் ஏதோ அடிமை போல் அவர்கள் வேலை செய்வது எனக்கு எரிச்சலை தரும். கொஞ்சம் உரையாடினால் என்னையும் அடிமையாக மாற்றிவிட முயற்சி செய்வார்கள் அதனால் அவர்களிடமிருந்து விலகியே இருந்தேன். எப்போதும் நான் உண்டு என் வேலை உண்டு என்று இருப்பேன்.
வங்கி ஐந்து மணிக்கு முடியும். ஏழு மணி வரை சும்மா உக்காந்திருக்க வேண்டும். “ஆபிசர் 24 மணி நேரமும் வேலை செய்யனும்” என்று வங்கி மகான்களும் மாக்கன்களும் சொல்வார்கள். எனக்கு கடுப்பாக தான் இருக்கும். வேறு வழியின்றி அமைதியாக அமர்ந்திருப்பேன். பைத்தியம் பிடிப்பது போல் இருந்தாலும் நான் என்னெதிரே இருக்கும் கணினியின் திரையை பார்த்தவாறே மனதில் சூரத்தின் சுத்தமான அழகான சாலையில் விளக்கொளி நிறைந்த மாலை வேலையில் அந்த பஞ்சாபி தோழியின் கை கோர்த்து நடந்து செல்வேனே தவிர பக்கத்து இருக்கையில் அமர்ந்திருக்கும் சக ஊழியருடன் தப்பித்தவறி கூட உரையாடிவிட மாட்டேன்.
நான் எங்கெங்கோ வேலை பார்த்திருக்கிறேன். பொதுவாக எல்லா அலுவலகங்களிலிலும் இரண்டு வகையான மனிதர்கள் இருக்கிறார்கள். முதலாம் வகையினர், தங்கள் வேலையை நேர்மையாக செய்பவர்கள். அவர்கள், மற்றவர்களோ நிர்வாகமோ தங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று அலட்டிக் கொள்ளமாட்டார்கள். இன்னொரு வகையினர் உண்டு. அவர்களின் முதல் குறிக்கோள் நிர்வாகத்திடம், நிர்வாகத்தின் பிரதிநிதிகளிடம் நல்ல பேர் வாங்குவது. வேலை செய்வதெல்லாம் அவர்களுக்கு இரண்டாம் பட்சம். நான் முதல் ராகம். அதனாலேயே எனக்கு நிறைய பிரச்சனைகள் வந்தது. நல்ல பெயர் வாங்குவதை பற்றி அலட்டிக் கொள்ளாததால் கெட்டப் பெயர் தேடி வந்தது. நல்ல பேர் வாங்குபவர்களை மட்டும்தான் ட்ரைனிங் வொர்க்ஷாப் எல்லாம் அனுப்புவார்கள். இந்த முறை, அரங்கில் இரண்டு இருக்கைகள் காலியாக இருந்ததால் என்னையும் அனுப்பினார்கள்.
நான் அமைதியாக கடைசி இருக்கையில் அமர்ந்துகொண்டேன். அறையில் நிறைய பேர் இருந்தும் நான் தனித்துவிடபட்டவனாகவே இருந்தேன். எனக்கு வொர்க்ஷாப்பில் ஆர்வம் வரவில்லை. ரகசியமாக என்னுடைய கிண்டிலில் தஸ்தயெவ்ஸ்கி படிக்கத் தொடங்கினேன். .
‘இறுதியாக அவன் அவள் அருகே சென்றான். அவனுடைய கண்கள் மின்னின. அவன் தன் இரண்டு கைகளையும் அவள் தோல் மேல் வைத்து, அவளுடைய கலங்கிய கண்களை பார்த்தான். காய்ச்சலால் சோர்வுற்றிருந்த அவனது கண்கள் அவளை ஊடுருவியது. அவன் உதடுகள் துடித்தன. திடிரென்று அவன் சாஸ்டாங்கமாக தரையில் விழுந்து, அவள் கால்களை முத்தமிட்டான். ஒரு பைத்தியக்காரனிடமிருந்து விலகிச் செல்பவளை போல அவள் விலகினாள். ஆம், அவன் பார்ப்பதற்கு பைத்தியக்காரன் போலவே தோன்றினான்’
“அவ்ளோ பிசியா?” குரல் கேட்டு நிமிர்ந்தேன்.
“ப்ரேக்ல கூட அவ்ளோ இன்ட்ரஸ்ட்டா சார் என்ன படிக்குறீங்க?” அவள் ஆங்கிலத்தில் கேட்டாள். நான் அவளை அங்கே எதிர்பார்த்திருக்கவில்லை. அவள் என்னோடு சேர்ந்து இந்தியா முழுவதும் சுற்ற வேண்டும் என்று கொல்கத்தாவில் வைத்து சொன்ன கன்னடப் பெண். எனக்கு திருமணம் என்று தெரிந்ததும் என்னை வாட்ஸாப்பில் ப்ளாக் செய்துவிட்டு காணாமல் போய் விட்டாள். அவள் ட்ரைனிங்கிற்காக ஹுப்ளியிலிருந்து வந்திருந்தாள்.
“ஹுக்கா பார் கூட்டிட்டு போறியா?” என்று இரண்டு வருடங்களுக்கு முன்பு அலிபூரில் தங்கியிருந்த போது கேட்டவள் அவள்தான்.
நான் புன்னகை செய்தேன். எனக்கு ஆசையிருந்தாலும் பெரிதாக ஆர்வம் இல்லை. “நான்….” என்று இழுத்தேன்.
“நீ ரொம்ப நல்லவன். உன்னை நம்பி எங்கேயும் வரலாம்” என்றாள்.
அஞ்சுனா கடற்கரையில் படுத்துக் கொண்டு நட்சத்திரங்களை பார்ப்பதை போல் இருந்தது. நாங்கள் நெருங்கிய நண்பர்களாகிப் போனோம்.
நான் கொல்கத்தாவில் ஒரு பெரிய முகலாய ரெஸ்டாரண்டில் மேஜை புக் செய்து வைத்துவிட்டு அவளை அழைத்த போது,
“எல்லாம் தப்பா பேசுவாங்கடா. சாரிடா… திஸ் பீபில் ஆர் சோ சிக்” என்றாள்
நான் சரி என்று சொல்லிவிட்டு போனை துண்டிக்கலாம் என்று நினைத்த போது,
“உன் கூட சேர்ந்து ஒரு நாள் புல்லா சுத்தணும்” என்றாள். அன்றே முடிவு செய்துவிட்டேன், அவளை புரிந்துகொள்ள முயற்சி செய்யக் கூடாதென்று.
“பேசுறதே இல்ல. வாட்ஸாப்ல ஒரு ஹாய் கூட அனுப்பல… ஆல்மோஸ்ட் ஒன் இயர் ஹோகயானா!” கண் சிமிட்டி வினவினாள்.
“I couldn’t ping you. some problem in your whatsapp…” என்று சொன்னேன். வேகமாக தன் மொபைலை எடுத்து வாட்ஸாப்பை பார்த்தாள். எதுவும் சொல்லவில்லை. ட்ரைனிங் ஒரு வாரம் நடந்தது. என்னை unblock செய்வாள் என்று எதிர்பார்த்தேன். செய்யவில்லை. கடைசி நாளன்று, “உன் வைப்ப இன்ட்ரோ பண்ணவே இல்ல….” என்று கேட்டாள். நான் புன்னகை செய்தேன்.
“வாழ்க்கையில் ஒரு முடிவை எதற்காக எடுக்கிறோமென்று தெரியவில்லை. ஒன்றிலிருந்து ஓடி தப்பித்து கொள்வதாக நினைத்து இன்னொன்றில் சிக்கிக் கொள்கிறோம்” என்று அவளிடம் சொன்னேன். அந்த சந்தர்ப்பத்தில் அத்தகைய வசனம் தேவை இல்லைதான்.
“நீ இஞ்சினியரிங் விட்டு வந்திருக்க கூடாது….” என்றாள். பின் ஏதேதோ பேசினாள். பேசிகொண்டிருக்கும்போதே bye என்று சொல்லிவிட்டு ஓடிவிடுவது அவளது வழக்கம். அன்றும் அதை செய்தாள். அவளை புரிந்துகொள்ள முயற்சிப்பதோ நிரந்தரமான தோழி என்று நினைப்பதோ மனப்பிறழ்வில் கொண்டு விட்டுவிடும்.
கடைசியாக அறையைவிட்டு வெளியே வரும்போது “எங்க ஊருக்கு வா. சுத்திக் காட்டுறேன். உன்னமாதிரி இப்டி கண்டுக்காம ஓடிட மாட்டேன்” என்றாள். நான் திரும்பி பார்க்காமல் வெளியே வந்தேன்.
மீண்டும் அதே வழி. அங்கே அந்த குதிரைகள் இல்லை. ஒருவேளை குதிரைகளுக்கு நண்பர்கள் கிடைத்துவிட்டார்கள் போலும்!
ட்ரெயினில் எதையோ நினைத்துக் கொண்டே வந்தேன். அது செங்கல்பட்டு ட்ரைன் என்பதால் முதல் வகுப்பிலும் கூட்டம் அதிகமாகவே இருந்தது. நான் கதவருகே நின்றவாறே சாய்ந்துகொண்டு, சிறுகதை படித்துக் கொண்டு வந்தேன். யதார்த்திலிருந்து தப்பித்து செல்ல புனைவுகள் தேவைப்படுகின்றன. தினமும் காலையும் மாலையும் பயணம் சிறுகதைகளுடன் தான் கழிகிறது. மனதிற்கு பிடித்தவர்களின் மடியில் முகம் புதைத்துக்கொண்டு அழும் நிறைவை நல்ல சிறுகதை தந்துவிடும்.
ட்ரைன் நின்றது. பலர் இறங்கினர். எந்த நிலையம் என்று பார்க்க தலையை தூக்கிய போது, எதிரே நின்றவரை கவனித்தேன். அவர் பேண்ட்டில் ஜிப் போட மறந்திருந்தார். அதை அவரிடம் சொன்னால் என்னை தவறாக நினைத்துவிடுவாரோ என்று தோன்றியது.
சுற்றிமுற்றும் பார்த்தேன். எல்லோரும் அவர்கள் வேலை பார்த்தார்கள். என்ன நினைத்தாலும் பாராவயில்லை சொல்லிவிடலாம் என்று முடிவெடுத்து, ‘சார் ஜிப்’ என்று சன்னமான குரலில் சொன்னேன். அவர் ‘oops’ என்றவாறே ஜிப்பை போட்டுக்கொண்டு என்னை பார்த்து நன்றியுணர்வோடு புன்னகைத்தார். நான் தலையை திருப்பிக்கொண்டேன். அவர் என்னிடம் உரையாட முயற்சி செய்பவரை போல் என்னை பார்த்து கொண்டு வந்ததை என்னால் உணர முடிந்தது. நான் அவரை நிமிர்ந்து பார்க்க கூச்சப் பட்டு புத்தகத்தை கவனித்தேன்.
‘அப்போதுதான் பூத்த ஒரு பூ மாதிரி, மழையில் நனைந்த சாலை ஓரத்து மரம் மாதிரி, ஓடைக் கூழாங்கல் மாதிரி வெளிப்பட்டாள் மரி’
ட்ரைன் பல்லாவரத்தில் நின்றது. இறங்கிய அவர் என்னை திரும்பி பார்த்து,
“தம்பி இத சொல்ல ஏன் கூச்ச படுற. என் பையன் வயசுதான் இருக்கும் உனக்கும்…”
நான் சங்கடமாக புன்னகைக்க, அவர்,
“ஹாப்பி பிரெண்ட்ஷிப் டே” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.
பிரெண்ட்ஷிப் டே என்று அவர் சொன்னதும் உரைத்தது, எதற்காக நண்பனை வெளியே தேடிக் கொண்டிருக்கிறேன்? வீட்டிற்கு போக வேண்டும். ஒருவேளை என் மனைவி எனக்கொரு நல்ல தோழியாக இருக்க கூடும்.