தைப்பூசம்- சிறுகதை

ராஜேந்திர பிரசாத் சாலையில் இருந்தே வாகன நெரிசல் ஆரம்பமாகிவிட்டது. கோவில் அமைந்திருந்த தெருவுக்குள் காரை திருப்புவது என்பது தேவையில்லாத ஜம்பம். காரை ரிவர்ஸ் எடுத்து அகநானூறு தெருவில், இங்கே வாகனங்கள் நிறுத்தாதீர் என்ற பலகை மாட்டப்பட்டிருந்த வீட்டின் முன்பு  காரை நிறுத்தினேன்.

“கொஞ்ச தூரம் நடக்கணும்…” என்றேன் தேப்தூத் ரேவிடம்.

“திக் ஆச்சே.. திக் ஆச்சே…” என்றவாறே உடன் நடந்தான். அவனுக்கு இரவு பன்னிரண்டு மணிக்கு தான் விமானம். கொல்கத்தாவிலிருந்து அலுவல் நிமித்தமாக வந்திருந்தான். எங்களின் அலுவலக அந்தஸ்துபடி விமானத்தில் பயணிக்க எங்களுக்கு எலிஜிபிலிட்டி போதாது. ஆனாலும் நாங்கள் விமானத்தில் சென்று வேலையை துரிதமாக முடித்து திரும்ப வேண்டும் என்று நிர்வாகம் எதிர்பார்க்கும். இதெல்லாம் வெளிப்படையாக சொல்லாமல் நிகழ்த்தப்படும் அநீதிகள்.  வேலை முக்கியம் என்பதால் வாயை மூடிக்கொள்வோம். பயணத்திற்கு இரண்டாம் வகுப்பு ஏ.சி ரயிலுக்கு ஆகும் செலவை தான் திருப்பி தருவார்கள்.  மீதம் உள்ள தொகையை சம்பளத்திலிருந்து தான் போட வேண்டும்.  நள்ளிரவு விமானங்களின் டிக்கெட்  விலை குறைவாக இருப்பதால், அலுவல் நிமித்தமாக எங்கு பயணிக்க நேர்ந்தாலும் நாங்கள் அதையே தேர்ந்தெடுப்போம். 

பத்தரை மணிக்கு விமான நிலையத்தை அடைந்தால் போதும். அதுவரை என் வீட்டிலேயே ஓய்வெடுப்பது தான் முதலில் போட்ட திட்டம். மதியத்திலிருந்தே நெட்ப்ளிக்ஸ்சில் சாக்ரெட் கேம்ஸ் ஓடிக்கொண்டிருந்தது. இடையிடையே ரே, கணேஷ் கைத்தொண்டே போல் பேசிக் காண்பித்தான். அம்மா அவனுக்கு ஏதோ ஆகிவிட்டது என்பது போல் பார்த்தாள்.  அவள் கையிலிருந்த காபியை வாங்கிக் கொண்டு புன்னகை செய்து சமாளித்தான் ரே. 

“டெம்பிள் கோ. டுடே பேமஸ் பங்க்சன்…” என்றாள்.

“ஒ!” ஏதோ அதிசயத்தை தெரிந்து கொண்டவனைப் போல் அவன் ஆர்வமாக கேட்டான்.

“இன்னைக்கு குமரகுன்றம் விஷேசமா இருக்கும். கூட்டிட்டு போக வேண்டித்தான!” என்றாள் அம்மா.

“யுவர் பிரெண்ட் நோ லைக் டெம்பிள்…” என்று என்னை சுட்டிக் காண்பித்து ரேவிடம் சொன்னாள். ரே அம்மாவிடம் நல்ல பேர் வாங்க வேண்டும் என்று நினைத்திருக்கக் கூடும். உடனே கோவிலுக்கு போகலாம் என்று நச்சரிக்கத் தொடங்கிவிட்டான். எனக்கு கோவிலுக்கு போவதில் விருப்பம் இல்லை என்றாலும் மற்றவர்களின் ஆன்மீக நம்பிக்கைகளுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுப்பேன். ஆனால் ரே அப்படி இல்லை. அவனுக்கு கோவில் என்பதன் மீது தனி மரியாதையோ அபிப்ராயமோ இருந்ததில்லை. அவன் காளிகட் காளி கோவில் வரை அடிக்கடி போய் வருவான். எதற்காக என்று அம்மாவுக்கு தெரிந்தால் அவனை வீட்டினுள்ளேயே சேர்க்க மாட்டாள். அம்மாவின் முன்பு நல்ல பிள்ளை போல் நடிக்கிறான். எனக்கும் வெளியே போனால் தேவலை என்று தோன்றியது.

கார் எங்கள் தெருவை தாண்டியதும் கேட்டேன், “வேற எங்காவது போலாமா? அம்மா கேட்டா கோவிலுக்குனு சொல்லிக்கலாம்…”.

“நோ…” என்றான் உறுதியாக. நான் காரை குரோம்பேட்டை நோக்கி நகர்த்தினேன்.

நாங்கள் நடந்து சென்ற வழியெங்கும் வாகனங்கள். ஏராளமான இருசக்கர வண்டிகள் கோணல் வாக்கில் நின்றுகொண்டிருந்தன. எங்கே தங்களின் வண்டியை நுழைக்கலாம் என்று எதிர்ப்பார்த்தவாரு சில இரு சக்கர வாகன ஓட்டிகள் காத்துக் கொண்டிருந்தனர். 

கோவிலில் கூட்டம் தான். ஆனால் இதை விட அதிக கூட்டத்தை சிறுவயதில் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு தைப்பூசத்தின் போதும் சானடோரியத்திலிருந்து அம்மா நடக்க வைத்தே அழைத்து செல்வாள். ஆட்டோ எல்லாம் அப்போது வாழ்க்கையில் ஆடம்பரமான விசயமாக தான் இருந்தது.  எங்களோடு சேர்ந்து பலரும் நடந்து வருவார்கள். அதனால் தூரம் ஒரு பிரச்சனையாக தெரிந்ததில்லை. இப்போதுதான் சில நூறு மீட்டர்களுக்குக் கூட வண்டி தேவைப் படுகிறது. வெகு தூரம் நடந்த களைப்பு கோவில் வாசலில் அண்டாவில் இருக்கும் புளியோதரையைப் பார்த்ததுமே பறந்து போய்விடும்.

அம்மா, “சாமி கும்பிட்டா தான் தருவாங்க…” என்பாள்.

அது உண்மையில்லை என்பது வளரவளர தான் தெரிய ஆரம்பித்தது. சில கைலி கட்டிய ஆசாமிகள் நேரடியாக புளியோதரை அண்டாவை நோக்கி செல்வார்கள்.  பக்கத்திலேயே தயிர் சாதத்தையும் வாங்கிக் கொண்டு விறுவிறுவென திரும்பி விடுவார்கள். ஒருநாளும் அவர்கள் கோவிலுக்குள் போய் பார்த்ததில்லை. எனக்கும் அவர்களை பின்பற்ற வேண்டும் என்றே தோன்றும். நாம் வந்தோமா இல்லையா என்று சாமிக்கு தெரியவா போகிறது என்று நினைத்துக் கொள்வேன். ஆனால் அம்மாவிடம் சொல்ல முடியாது. அம்மா ஆர்வமாக, ஒவ்வொரு சாமியையும் கும்பிடுவாள். கோவில் சுவற்றில் எழுதப்பட்டிருக்கும் அருணகிரிநாதர் பாடலை எழுத்துக் கூட்டி படிப்பாள்.  இப்போது அந்த ஆர்வமெல்லாம் எங்கு போனது என்று தெரியவில்லை. மூட்டு வலி வந்ததிலிருந்து வீட்டில் இருப்பதையே அதிகம் விரும்புகிறாள். நான் இப்போது போல அப்போதும் ஒப்புக்குசப்பாணியாக தான் கோவிலுக்கு போய் வந்திருக்கிறேன். 

மலை உச்சிக்கு வேகமாக ஓடி முருகரை கும்பிட்டுவிட்டு வந்துவிடலாம் என்று தோன்றும். ஆனால் அம்மா முதலில் மலை நடுவே இருக்கும் சுந்தரேஸ்வரரை தான் கும்பிட வேண்டும் என்பாள். அங்கே கால் மணி நேரமாவது ஆகும். பின் மீண்டும் மலை ஏற வேண்டும். எப்போது கீழே போவோம் என்று நான் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டிருப்பேன். புளியோதரை தீர்ந்துவிட்டால் என்ன ஆவது என்ற எண்ணமே பிரதானமாக இருக்கும். ஒரு வழியாக அம்மா கீழே இறங்குவாள். ஆனால் வழியில் இடும்பனை கும்பிட வேண்டும் என்று நின்றுக் கொள்வாள். இடும்பன் சன்னதியிலிருந்து புளியோதரை அண்டா தெளிவாக தெரியும்.  புளியோதரை தீர்ந்துவிடக் கூடாது இடும்பா என்று கூட வேண்டியிருக்கிறேன். அந்த புளியோதரை கைக்கு வரும் தருணம் கண்களில் நீரெல்லாம் வந்திருக்கிறது.

இப்போது அதே இடத்தைப் பார்த்தேன். தட்டை தேன்குழல் விலை ஐம்பது என்று போட்டிருந்தது. புளியோதரையை இருபது ரூபாய் கொடுத்து சிறு தொன்னையில் பலரும்  வாங்கிக் கொண்டிருந்தனர்.

“புளியோதரை சாப்பிடலாமா!” என்றேன்.

“முதல சாமிய கும்புடனும்… அப்பறம் தான் பிரசாத்” என்றான் ரே. அம்மாவின் காற்று அவனுக்கும் அடித்திருக்கக் கூடும். அம்மாக்களுடன் உரையாடுபவர்கள் அம்மாக்களாகவே மாறிவிடுகிறார்கள்.

நாங்கள் விநாயகர் சன்னதியை நோக்கி நடந்தோம். ‘கண்ட கோயில் தெய்வம் என்று கையெடுப்பது இல்லையே’ வகை தான் நானும். எனக்கு கடவுளிடம் வேண்டுவதற்கு எதுவுமே இருந்ததில்லை.  சம்பிரதாயமாக விநாயகருக்கு வணக்கம் சொல்லிவிட்டு நின்றேன். அர்ச்சகர் தன் கையை உயரத்தில் வைத்துக் கொண்டு விபூதியை வேண்டா வெறுப்பாக போடுவது போல் போட்டார்.  ஒரே வேலையை மீண்டும் மீண்டும் செய்வதனால் வரும் சலிப்பு அது. என் வங்கி க்ளார்க்குகள் இப்படி தான் வாடிக்கையாளர்களிடம் சலித்துக் கொள்வார்கள்.  சில நேரம் என்னிடமும். அந்த அனுபவம் இருந்தததால், நான் அர்ச்சகரின் செய்கையை பெரிதாக அலட்டிக் கொள்ள வில்லை. ரே அர்ச்சகர் தட்டில் பத்து ரூபாயை போட்டான். அவர் தன் வேட்டி மடிப்பிலிருந்து ஒரு விபூதி பொட்டணத்தை எடுத்துக் கொடுத்தார். எதையோ சாதித்துவிட்டவனாக ரே என்னை பார்த்து புன்னகை செய்தான்.

நான் நவகிரகத்தை நோக்கி நடந்தேன். அவன் வேகவேகமாக என் அருகே வந்து நின்றான். முகத்தில் பெருமிதம் இன்னும் குறையாமல் இருந்தது.

“ஒன்பது முறை சுத்தலாம்” என்றான். இருவரும் நவகிரகத்தை சுற்றத் தொடங்கினோம். சுக்கிரனிடம் வந்த போது படிக்கட்டின் பக்கவாட்டு சுவர் அருகே இரண்டு பெண்கள் நின்று கொண்டிருந்ததை கவனித்தேன். அதில் இளையவளாக இருந்தவள் தன் மஞ்சள் துப்பட்டாவை கையில் விரித்துப் பிடித்திருந்தாள். அதில் கொஞ்சம் காசு இருந்தது. அருகே நின்றுகொண்டிருந்த பெண்மணி என்னிடம் சொன்னாள், 

“சார் தங்கச்சிக்கு கல்யாணம். மடிப்பிச்சை கேட்கிறோம்” 

அவள் கழுத்திலும் தாலி இல்லை என்பதை என்னால் கவனிக்க முடிந்தது. நான் எதுவும் பேசாமல் நவக்கிரகத்தை சுற்றினேன்.

ரே “என்ன!” என்றான். மடிபிச்சை என்பதை உடனடியாக ஹிந்தியில் எப்படி சொல்வது என்று தெரியவில்லை. கல்யாணத்திற்கு பணம் கேட்கிறார்கள் என்று ஆங்கிலத்தில் சொன்னேன்.  அதற்குள் நாங்கள் மேலும் இரண்டு  முறை சுற்றி முடித்து விட்டோம். அந்த பெண்கள் அங்கேயே நின்றுக் கொண்டிருந்தனர். ஓரிருவர் காசு போட்டுவிட்டு சென்றார்கள். 

கடைசி முறை சுற்றும் போது, இளையவள் ரேவை பார்த்து கேட்டாள், “சார் என் கல்யாணத்துக்கு மடி பிச்சை கேட்கிறோம்” தனக்கு தமிழ் தெரியாது என்பதை அவன் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. 

நான் அவளைப் பார்த்தேன்.  முகம் களைத்திருந்தது. அவளுக்கு முப்பது வயதிற்கு குறையாமல் இருக்கும். நவகிரக பாதையை விட்டு வெளியேறி அவர்கள் அருகே சென்ற ரே, தன் பர்ஸிலிருந்து புது ஐநூறு ரூபாய் தாளை எடுத்து அவள் விரித்திருந்த துப்பட்டாவில் போட்டான்.  எனக்கு அதிர்ச்சியாகவே இருந்தது.

“பத்து ரூபாய் போட வேண்டிதான! ஐநூறு ரொம்ப அதிகம்” கோவில் படிகளில் ஏறும்போது சொன்னேன்.

“எவ்வளவோ மோசமான விஷயத்துக்குலாம் செலவு பண்ணிருக்கேன். கல்யாணத்துக்கு தான!” என்றான்.

“சொல்றாங்க. உண்மைன்னு எப்படி தெரியும்! அவங்க அக்கா தங்கச்சியானே எனக்கு டவுட்டு” என்றேன் நான்.  அவன் என்னையே கூர்ந்து கவனித்தான். பின் திரும்பி அந்த பெண்களைப் பார்த்தான்.

“ஜானே தோ.  உண்மைன்னு நினச்சு ஹெல்ப் பண்ணினேன். உண்மையானு டெஸ்ட் பண்ணியா பாக்க முடியும்!” என்றான்.

நான் கோவில் உச்சியை நோக்கினேன். மிக நீண்டதொரு வரிசை வளர்ந்து கொண்டே போனது. சன்னதியை அடைய முக்கால் மணி நேரமாவது ஆகிவிடும்.  

“எங்க நின்னு கும்பிட்டாலும் சாமி தான்!” என்றேன் நான். 

“என்ன!” ஏதோ பெரிய தத்துவத்தை புரிந்துக்கொள்ள முயல்பவன் போல் கேட்டான். 

“சாமிய இங்க நின்னு கூட கும்பிட்டுக்கலாம். இவ்ளோ பெரிய க்யூல எதுக்கு நின்னுகிட்டு!

“உண்மையானு டெஸ்ட் பண்ணியா பாக்க முடியும்னு கேட்டியே! டெஸ்ட் பண்ணிடுவோம்”

“ஹே! அதெல்லாம் வேணாம். வீட்டுக்கு போலாம். நான் உண்மைன்னு நினச்சு தான் ஹெல்ப் பண்ணேன். அது போதும்” 

“ஜஸ்ட் தெரிஞ்சிக்கலாம். அவங்க உண்மை சொல்லிருந்தா சந்தோசம்.  பொய் சொல்லிருந்தா இது ஒரு பாடம்” என்றேன். அவர்கள் பொய் சொல்லிருக்கக் கூடும் என்றே நான் நம்பினேன். அதை உறுதி செய்து கொள்வதற்காக தான் அவர்களை பின்தொடர விரும்பினேன்.

ரேவும் சரி என்றான். நாங்கள் மேலே ஏறாமல் அப்படியே திரும்பி இடும்பன் சன்னதி அருகே இருந்த படிகட்டில் அமர்ந்தோம். சிறு வயதில் புளியோதரையை பார்த்துக் கொண்டிருப்பது போல இப்போது அந்த பெண்கள் நின்றுகொண்டிருக்கும் இடத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்கள் கிளம்பும் வரை அங்கேயே அமர்ந்திருக்க முடிவு செய்தோம்.

ரே அவ்வப்போது திரும்பி மலைமேல் நின்றுகொண்டிருந்த கூட்டத்தை பார்த்தான். கூட்டம் குறையாமல் தான் இருந்தது. நாங்கள் செய்வது சரியா என்று உறுதி செய்து கொள்வதற்காக தான் அவன் அப்படி பார்கிறானோ என்று தோன்றியது. கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள் கடந்திருக்கும். இளையவள் தன் துப்பட்டாவில் இருந்த பணத்தை மற்றவளின்  கையிலிருந்த  துணிப்பைக்குள் கொட்டினாள். நாங்கள் அந்த தருணத்திற்காக காத்திருந்தவர்களாக எழுந்து நின்றோம். அந்த பெண்கள் கோவிலை விட்டு வெளியேறத் தொடங்கினார்கள்.

நான் செல்போனைப்  பார்த்தேன்.  மணி 7.43 P.M.

“நான் போய் கார எடுத்துட்டு வரேன். நீ அவங்க எப்படி போறாங்கனு பாரு” 

“ஏன் சார் நோ பார்க்கிங் போர்டு இருக்கு தெரில…” கேட்டின் அருகே நின்றுகொண்டு சொன்னார் அந்த வீட்டுக்காரர். 

“சாரி சார்”

“பண்டிகை நாளுனாலே இதே ரோதனையா போச்சு!” என்று தனக்குத் தானே முணுமுணுத்துக் கொள்வது போல் என் காதில் கேட்கும்படி சொன்னார். அவர் அருகே நின்றுகொண்டிருந்த நாய் என்னை பார்த்து இரண்டு முறை குறைத்துவிட்டு அமைதியானது. அவர் சங்கிலியை விட்டிருந்தால் அந்த நாய் என் மீது பாய்ந்திருக்கக் கூடும்.  

நான் அவசர அவசரமாக காரை எடுத்தேன். 

“அந்த ஆட்டோல தான் போறாங்க…” என்றான் ரே. 

ஒரு பெரிய நடிகரின் புகைப்படத்தையும், அவரின் வசனத்தையும்  தன் மேல் தாங்கிய ஆட்டோ, ஹஸ்தினாபுரம் சாலையில் திரும்பியது. அது  திரும்பிய பல குறுகிய தெருக்களில் காரை திருப்ப கொஞ்சம் சிரமப் பட வேண்டி இருந்தது. ரே அவ்வப்போது தன் கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டான். திடீரென்று எருமை மாடொன்று மிரண்டு சாலையில் குறுக்கே வந்துவிட்டது. நானும் மிரண்டு தான் போனேன். எங்களின் நல்ல நேரமா, மாடின் நல்ல நேரமா என்று தெரியவில்லை, கார் மாடை முட்டாமல் அதன் பக்கத்தில் போய் நின்றது. அதற்குள் முன் சென்ற ஆட்டோ எங்களின் பார்வையில் இருந்து மறைந்துவிட்டது. 

எங்களை ஒரு முறை திரும்பி பார்த்துவிட்டு மாடு தன் போக்கில் நடந்தது.  நான் ரேவைப் பார்த்தேன். எதுவும் ஆகியிருக்கவில்லை என்ற ஆசுவாசம் அவன் முகத்தில் தெரிந்தது. எங்களின் தோல்வியை, இல்லை என்னுடைய தோல்வியை ஒப்புக் கொள்ள முடிவு செய்தேன்.

“திரும்பிடலாம்” என்று சொல்ல வாயெடுக்கும் போதே, அந்த ஆட்டோ திரும்பி எங்களை நோக்கி வந்து கொண்டிருந்ததை கவனித்தேன். அதே மாடு இப்போது ஆட்டோவின் முன்னே ஓடியது. ஆட்டோ மாடின் உடலை உரசிக்கொண்டு வளைந்து சாலையை விட்டு இறங்கி, மீண்டும் அதே நேக்குடன் சாலையில் ஏறியது. சென்னையில் ஆட்டோ டிரைவர்கள் வழக்கமாக பிரயோகிக்கும் வார்த்தையிலேயே அந்த மாட்டை திட்டினான் ஆட்டோ வாலிபன். 

“ஹே எருமை” 

நான் புன்னகை செய்தேன். 

ரே, “கியா ஹுவா பாய்!” என்றான்..  

“எக்ஸ்ப்ளெய்ன் பண்ணுனா, புரியாது விடு” என்றேன். அந்த ஆட்டோ காலியாக இருந்ததை ரே தான் முதலில் கவனித்தான்.  

“அவங்க போன ஆட்டோ தான! அப்போ இங்க தான் எங்கயாவது இறங்கி இருப்பாங்க!.  

“ஆகே சலோ. அவங்க வீடு எங்க இருக்குனு பாத்திருவோம்” என்றான். எனக்கு இருந்த ஆர்வத்தைவிட இப்போது ஏனோ அவனுக்கு அதிக ஆர்வம் தொற்றிக்கொண்டது. 

தோல்வியை தவிர்த்துவிட்ட கர்வத்தோடு நான் ஆக்ஸிலரேட்டரை அழுத்தினேன். சாலை வளைந்த திசையில் காரை வளைத்தேன். அந்த தெரு நீண்டு கொண்டே போனது. ஆனாலும் ஆட்டோ திரும்பி வந்ததை வைத்துப் பார்த்தால் சில நூறு மீட்டருக்குள் தான் அந்த பெண்களின் வீடு இருக்க வேண்டும் என்று தோன்றியது. காரை ஓரமாக நிறுத்தினேன். 

ரே இறங்கி தெருவை நான்கு புறமும் நோட்டம்விட்டுவிட்டு, முன்னே நடந்தான். தெரு ஆங்காகே, குறுக்கு தெருக்களாக பிரிந்தது.  நான் அவனை பின் தொடர்ந்தேன். 

“சரி இவ்ளோ தூரம் வந்துட்டு, பெட் கட்டாம போனா எப்டி!” என்றேன்

“கியா?” 

“அவங்க உண்மைய சொல்றாங்கணு நீ சொன்ன. ஏமாத்துறாங்கணு நான் சொன்னேன்.  உண்மையா இருந்தா ரெண்டாயிரம் நான் தரேன். அவங்க ஏமாத்துக்காரங்களா இருந்தா ரெண்டாயிரம் நீ தரணும்” 

ரே ஒப்புக் கொண்டான். சிறிய வீடுகள் மிக நெருக்கமாக அமைந்திருந்த அந்த தெருவில் ஒரு வீட்டின் முன்பு வாழை மரங்கள் கட்டப்பட்டு, நல்வரவு என்று ஒளி விளக்கால் அலங்கரிக்கப் பட்டிருந்தது.  

“கல்யாண வீடு மாதிரி தான் இருக்கு” என்றேன் ரேவிடம். 

அந்த வீட்டில் வாசலில் நின்றதுமே, “வாங்க வாங்க” என்று வரவேற்றார் ஒரு பெரியவர். 

“மாப்பிள்ளையோட ஃபிரண்ட்ஸ் போல” என்று பின்னே நின்று கொண்டிருந்த ஒரு அம்மாவிடம் சொன்னார்.  நான் வீட்டின் வாசலில் மணமக்களை வாழ்த்தி வைக்கப்பட்டிருந்த பேனரை பார்த்தேன்.  வேறொரு பெண்ணின் புகைப்படம் இருந்தது. இரண்டாயிரம் மிச்சம். 

ரேவிடம் பேனரை பார்க்கும் படி ஜாடை காண்பித்தேன்.

“தோ அசார், தயார் கரோ” என்று ரேவின் காதுகளில் கிசுகிசுத்தேன். 

“வெயிட் பண்ணு. அந்த பொண்ணுக்கு கல்யாணம்னு தான் சொன்னா! இன்னைக்கே கல்யாணாம்னு சொன்னாளா! இங்க தான் எங்கயாவது இருப்பா!” என்றான் ரே. 

நாங்கள் ஹிந்தியில் உரையாடிக் கொண்டிருப்பதை அந்த பெரியவர் பார்த்துக் கொண்டே நின்றார். 

“இதோ வந்துர்றோம்” என்று பெரியவரிடம் சொல்லிவிட்டு நான் திரும்பி நடந்தேன். அந்த வீட்டை கடந்து போனால், திரும்பி வரும் போது அவரை  எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்பதால் தான் அப்படி செய்தேன். ரேவும் இணைந்து கொண்டான்.

எந்த வீட்டில் அந்த பெண் இருக்கக் கூடும் என்று யூகிக்க முடியவில்லை. ஒரமாக நின்று தெருவை கவனித்தோம். கல்யாண வீட்டு பெரியவர் எங்களையே நோக்குகிறார் என்பதை தெரு விளக்கின் ஒளியிலும் கண்டுகொள்ள முடிந்தது. 

“விடமாட்டார் போல” என்றான் ரே. 

திடீரென்று ஏதோ சப்தம் கேட்க, திரும்பினோம். ஒருவர் கீழே கிடந்தார். அவரது சைக்கில் அவரின் மேல் கிடந்தது. எருமை மாடு கீழே கிடந்தவரை பொருட்படுத்தாமல் கடந்து சென்றது. நாங்கள் இருவரும் ஒடிச்சென்று அவரை தூக்கினோம். மிகவும் மெலிந்திருந்த அந்த ஆளுக்கு  வயது அறுபதுக்கு மேல் இருக்கும். 

“நன்றிங்க” என்று சங்கோஜத்துடன் எழுந்து கொண்டார். ரே அவருடைய சைக்கிலை நிமிர்த்தி அவரிடம் கொடுத்தான். 

“சார், அடிலாம் ஒன்னும் படலல்ல?”

“அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க” 

“வாங்க வீட்ல விட்டுற்றோம்…”

“வேணாம்ங்க. வீடு, இங்க தான் பக்கத்துல.. நானே போய்க்குறேன்” என்று எங்களை நிமிர்ந்து பார்க்க விருப்பம் இல்லாதவர் போல் சைக்கிலை தள்ளிக் கொண்டு வலது புறமாக திரும்பிய குறுக்குத் தெருவிற்குள் நுழைந்தார். 

ரே மீண்டும் மணியைப் பார்த்தான். 

“இப்ப கிளம்புனா வீட்டுக்கு போயிட்டு ஏர்போர்ட் போக கரெக்டா இருக்கும். போலாம்” என்றான். 

“அவங்க ஏமாத்திருக்காங்க. நீ ரெண்டாயிரம் எடு!” என்றேன்.

“அதுக்கு அவங்க ஏமாத்துனது ப்ரூவ் ஆகணும். நீ இன்னொரு நாள் வந்து அவங்கள தேடு. அவங்க சொன்னது உண்மையா பொய்யானு தெரிஞ்சிக்கிட்டு அப்பறம் பெட்ல நீ ஜெயிச்சியா நான் ஜெயிச்சனானு பாப்போம்” என்றவன் குனிந்து கீழே இருந்து எதையோ எடுத்தான். 

“அந்த சைக்கில் ஆத்மிதுன்னு நினைக்கிறேன்” என்றவாரே என்னிடம் நீட்டினான். 

ஆதார் அட்டை. நான் குறுக்குத் தெருவைப் பார்த்தேன். அவர் சைக்கிளை ஒரு வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்ததை கவனித்தேன். 

“சார் சார்” அவர் பின்னே ஒடினேன். 

அது ஒரு ஸ்டோர் வீடு. கேட்டின் உள்ளே இருப்புறமும் வரிசையாக வீடுகள் அமைந்திருந்தன. முதல் வீட்டு வாசலில் அமர்ந்து ஒரு அம்மா அருவாமனையில் மீனை ஆய்ந்து கொண்டிருந்தாள். எங்களை நிமிர்ந்து பார்ப்பது நேர விரயம் என்று சொல்லும் பொருட்டு அவள் தன் வேலையில் மூழ்கியிருந்தாள். மூன்றாவது வீட்டு வாசலில் அந்த ஆள் நின்று கொண்டிருந்தார். 

எதிரே நின்ற உயரமான ஆசாமி, “நான் என்னய்யா பண்றது! இத வச்சு தான் நான் சாப்டனும்” என்றவாறே கையில் இருந்த காசை எண்ணினான்.  

பின்பு உள்ளே எட்டிப்பார்த்தவாறே, “சரி,  உன் புள்ளைங்ககிட்ட சொல்லிடு. என் பொண்டாட்டி பேசுனதெல்லாம் மனசுல வச்சிக்க வேணாம்னு. காலிலாம் பண்ண வேணாம். நான் பேசிக்குறேன். மாசமாச்சுனா வாடகைய கொடுத்துட்டா அவ ஏன் இங்க வந்து நிக்கப்போறா!”  என்றான். 

காசை சட்டைப் பையில் வைத்தவன், திரும்பி எங்களை நோக்கி நடக்க, நாங்கள் மூன்றாவது வீட்டை நோக்கி நடந்தோம்.

“சார்…” என்றதும் அவர் வெளியே எட்டிப்பார்த்தார். அந்த பார்வையில் ஆச்சர்யமும் தயக்கமும் ஒருங்கே வெளிப்பட்டது. 

“இத விட்டுட்டீங்க” என்று ஆதார் அட்டையை நீட்டினேன். 

“நன்றிங்க” என்று நிலையை தாண்டி வந்து வாங்கிக்கொண்டார். 

“காலைல இருந்து நிதானம் இல்ல…” என்றார்.

வீட்டின் உள்ளே கவனித்தேன். முன் எறிந்த ஒரு எல்‌.ஈ.டி பல்ப் அந்த வீட்டிற்கு போதிய வெளிச்சத்தை தந்திருந்தது. நுழைந்ததுமே ஒரு அடுப்படி, அதன் பின்னே இருந்த ஒரே ஒரு அறை என்ற அளவில் அந்த வீடு இருந்தது. ஒரு திரை துணியால் உள்ளறை மறைக்கப் பட்டிருக்க, உள்ளிருந்து யாரோ ஒரு பெண்மணி, ‘ம்மா, ம்மா’ என்று முனகுவது கேட்டது. அந்த குரல் தாங்கமுடியாத வலியை குறிக்கும் ஓலமாக ஒலித்தது. நான் உள்ளே கவனித்ததை அவரும் கவனித்தார்.

“என் மனைவிங்க…” அவர் அதை சொல்லியிருக்க வேண்டாம். சொல்லிவிட்டாரே என்பதற்காக நான் சம்ப்ரதாயமாக கேட்டேன், 

“ஏதாவது உடம்புக்கு…” 

“வயித்துல கேன்சர். டாக்டர் முடியாது கூட்டிட்டு போனுட்டார். மூணு நாளா உசுரு பிரிய மாட்டேங்குது…வலில துடிக்குறா”

மனதிலிருப்பதை யாரிடமாவது கொட்டி தீர்த்துவிட வேண்டும் என்று காத்திருந்தவரை போல் என்னிடம் சொல்லிவிட்டு அழத் தொடங்கிவிட்டார். அதுபோன்ற ஒரு சூழ்நிலையை எதிர்கொண்டு எங்களுக்கு பழக்கமில்லை. ரேவும் என்ன செய்வது என்று தெரியாமல் என்னையே பார்த்தான். 

“உஷ்கா பீவி…” என்று மட்டும் சொன்னேன். அவன் புரிந்து கொண்டான். மேற்கொண்டு அங்கே நிற்கவேண்டாம் என்று தோன்றியது.  

“ஒண்ணும் கவலப்படாதீங்க சார்…” என்றேன். உண்மையிலேயே வேறு என்ன சொல்வது என்று தெரியவில்லை. எவ்வளவோ படித்தும் துயரில் நிற்பவருக்கு ஆறுதல் எப்படி சொல்வது என்பதை கற்றுக் கொண்டிருக்கவில்லை. அவர் அப்படியே நிலையில் அமர்ந்து வாயைப் பொத்திக் கொண்டார். அவரின்  அழுகுரல் உள்ளேயும் கேட்டிருக்கக் கூடும்.  

திரையை விலக்கிக் கொண்டு வெளியே வந்த பெண்ணொருத்தி, “அப்பா அப்பா! அம்மா போது பா போது பா” என்று அந்த ஆளினுடைய முதுகை பிடித்து உலுக்கினாள். அந்த ஆள், “ஐயோ மீனாட்சி” என்று கதறியவாறே எழ, அந்த பெண் அவரை தாங்கி உள்ளே அழைத்துச் சென்றாள். அவள் இருந்த பதட்டத்தில் வாசலில் நின்று கொண்டிருந்த எங்களை பொருட்படுத்தவில்லை. ஆனால் நாங்கள் இருவருமே அவளை  கவனித்தோம். நாங்கள் தேடி வந்த இருவரில், இளையவள் அவள். இன்னொரு பெண்ணும் உள்ளே இருக்கக் கூடும். 

“நான் பெட்ல தோத்துட்டேன் பாய்” என் கண்களை பார்க்காமல் ரே, உறுதி இழந்த குரலில் சொன்னான். 

“நானும் தான்” என்றேன் நான். வீடு வரும்வரை நாங்கள் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. 

அவள்- சிறுகதை

அன்று கோவிந்தசாமி வரவில்லை. அவர் எங்கள் தெருவுக்கு வந்த இந்த ஒரு வருடத்தில் அன்றுதான் அவர் முதன்முதலில் வரவில்லை. அவருடன் வேலைக்கு வரும் காக்கையன் வராமல் போனாலும், கோவிந்தசாமி வந்துவிடுவார். காலை நான் வாசலில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருக்கும் போது “அம்மா குப்பை” என்று ஒரு குரல் கேட்கும்போதே சொல்லிவிடலாம் மணி சரியாக ஏழு என்று.

சிலநாட்கள் நான் வாசலில் இல்லாமல் உள்ளே வேலையாக இருந்தால், “சார்” என்று சன்னமாக ஒரே ஒரு குரல் மட்டும் வரும். நான் வாசலை விட்டு வெளியே வருவதற்கு முன்பே குப்பையை என் கையிலிருந்து, “குடு சார்” என்று பிடிங்கிக் கொண்டு தன் வண்டியில் கொட்டிக்கொள்வார்.

எல்லோர் வீட்டின்முன்னின்றும் சப்தமாக ‘குப்பை’ என்று கத்தும் கோவிந்தசாமி, என் வீட்டின் முன் மட்டும் சன்னமான குரலில் பேசுவதற்கு காரணம் தெரியவில்லை. ஒருவருடத்திற்கு முன்பு அவரை முதன் முதலில் சந்தித்ததிலிருந்து அப்படிதான் பேசுகிறார். அன்று, தாத்தாவின் பழைய பெட் ஒன்றை எடுத்துச் செல்வதற்காக காக்கையனை வரச் சொல்லியிருந்தேன். தாத்தா இறந்ததிலிருந்து அதை தூக்கி கொல்லையில் போட்டு வைத்திருந்தோம். அன்றுதான் காக்கையனுடன் முதன்முதலில் வேலைக்கு வந்திருந்தார் கோவிந்தசாமி.

காக்கையன் கொல்லையில் நின்றுகொண்டு தள்ளாடியபடியே “அம்பதுரூபா கொடுங்க வாத்தியார் சார்” என்றான்.

“குடுக்காமா எங்க போறாங்க? கணக்கு பாக்குற வீடா இது?”அம்மா அடுப்படி  உள்ளே இருந்து சிடுசிடுத்தாள். காக்கையனால் அந்த பெட்டை மடித்து தூக்க முடியவில்லை.

“அன்னையா” என்று கத்தினான். வாசலில் நின்றிருந்த கோவிந்தசாமி வேகமாக ஓடிவந்தார். பெட்டை சுருட்டி தோளில் வைத்துக் கொண்டு விறுவிறுவென வெளியே நடந்தார். காக்கையன் ஐம்பது ரூபாயில் மட்டும் குறியாக இருந்தான்.

“உடனே போய் குடிக்காத” என்று சொல்லிவிட்டு அம்மா அவன் கையில் ஐம்பது ரூபாயை கொடுத்தாள்.

“டீ தான் மா குடிக்கப் போறோம்” சொல்லிவிட்டு அவன் கோவிந்தசாமியை சுட்டிக் காட்டி, “இனிமே குமாரி வராது. இவருதான் என்கூட வருவாரு” என்று சொல்லிவிட்டு நகர்ந்தான். கோவிந்தசாமி வீட்டின் வாசலிலே அமைதியாக நின்றார். நான் அவரை அழைத்து, அவர் கையில் ஒரு அம்பது ரூபாயை கொடுத்தேன். சந்தோசமாக வாங்கிக் கொண்டு, “தாங்க்ஸ் சார்” என்றார். அன்றிலிருந்து தினமும் காலை என்னைப் பார்த்து, “குட்மார்னிங்” சொல்லிவிட்டு தான் நகர்வார்.

கோவிந்தசாமிக்கு வயது முப்பைந்தைந்திற்கு மேல் இருக்கும். எப்போதும் குடி போதையில் திரியும் காக்கையனிடமிருந்து மாறுபட்டு, தலையை படிய வாரி நெற்றியில் சந்தனப் பொட்டுடன் வலம் வருவார். பாக்கெட்டில் ஒரு சாய்பாபா படம் இருக்கும், கையில் க்ளவுஸ் போட்டுக் கொண்டு தான் குப்பைக்கூடையை வாங்குவார். அவர் சுத்தத்தில் கண்ணாக இருப்பதை பார்த்து, அம்மாவுக்கும் அவரைப் பிடித்து விட்டது. உணவு, பலகாரம் என்று எதையாவது அவருக்கு உண்ணக் கொடுப்பாள்.  முதன்முதலில் பலகாரம் கொடுத்த போது வாங்க தயங்கியவரிடம், “அட வாங்கிகோங்க தம்பி” என்று அம்மா அவர் கையில் உரிமையாக கவரை திணித்தாள்.

ஒருமுறை அம்மா முந்தையநாள் மீந்த உணவை நீட்ட, “இன்னைக்கு வியாழக் கிழமமா பாபாக்கு விரதம்”  என்று கோவிந்தசாமி சொன்னார். அம்மா சந்தோசமாக உள்ளே ஓடிச்சென்று ஆரஞ் பழங்களை எடுத்து வந்து கொடுத்தாள்.

“பாத்தியா, எவ்ளோ பக்தி அந்த தம்பிக்கு. வியாழக் கிழமை விரதம் இருக்கானாம். நீயும் இருக்கியே” அம்மா என்னை கோவிந்தசாமியின் முன்வைத்தே இதுபோல எதாவது சொல்வாள்.  அவர் திருதிருவென விழித்துவிட்டு, “சார திட்டாதீங்கமா. அவருக்கு எவ்ளவோ வேலை இருக்கும்” என்பார்.

காக்கையனுக்கு எது கொடுத்தாலும் காசாக கொடுக்க வேண்டும். சிறிது நேரத்தில் அதை சோமபானமாக மாற்றிவிடுவான். அதனால் அம்மா காக்கையனிடம் எந்த உரையாடலிலும் ஈடுபடவில்லை. ஆனால் கோவிந்தசாமியை பார்த்தால், அம்மாவிற்கு பாசம் கலந்த மரியாதை வந்துவிடும். அவரை பற்றியும் அவர் குடும்பத்தைப் பற்றியும் விசாரிப்பாள்.

“என்ன தம்பி எப்போ கல்யாணம்?”என்பாள்.

“ஆவும் மா. முதல சாருக்கு பொண்ண பாருங்க” என்று சொல்லிவிட்டு நகர்வார். தினமும் என்னிடமும் அம்மாவுடனும் சில வார்த்தைகள் பேசாமல் அவர் நகர்ந்ததில்லை. வாரம் ஏழு நாளும் வந்துவிடுவார். உழைப்பாளி.

“கல்யாணத்துக்கு சொல்லணும் சொல்லிபுட்டேன்” அம்மா சொல்வாள்.

“நீங்களும் சாரும் தான் நடத்திக் கொடுக்கணும்” அதே சன்னமான குரலில் சொல்வார் கோவிந்தசாமி.

ஒருநாள் காலையில் வீட்டின் அருகே இருந்த ராவுத்தர் மெஸ்ஸிற்கு டீ குடிக்கச் சென்றிருந்தேன். கர்பமாக இருந்த அண்ணியை பார்க்க அம்மா ஊருக்கு சென்றுவிட்டாள். அம்மா இல்லாத நாட்களில் ராவுத்தர் மெஸ்ஸில் தான் டீ டிபன் எல்லாம். வாசலில் போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்து டீ குடித்துக் கொண்டிருந்த கோவிந்தசாமி என்னைப் பார்த்ததும் எழ எத்தனித்தார். நான் வேண்டாம் என்று கை அசைத்துவிட்டு, டீயை வாங்கி பருகியவரே பேப்பரில் மூழ்கினேன். ஒரு குரல் என் கவனத்தைக் கலைக்க நிமிரிந்து பார்த்தேன். அங்கே ஒரு திருநங்கை நின்று கொண்டிருந்தாள். அவள் என்னிடம் காசு கேட்க நான் பாக்கெட்டை தடவினேன். சில்லரை இல்லை.

உள்ளே அமர்ந்து வெள்ளிமலர் படித்துக் கொண்டிருந்த பரமசிவன் “ஊருக்குள்ளயே வந்துட்டீங்களா?” என்று கேலியாக கேட்டான். வேலை வெட்டிக்கு போகாமல் அடிதடி செய்துக் கொண்டிருப்பதே பரமசிவனின் வேலை. அந்த திருநங்கை அவனை முறைத்தாள்.

என்னிடம், “விரட்டிவிடு வாத்தியாரே. சில்லறை தேடிகிட்டு இருக்க” என்றான். வெறுங்கையுடன் நகர்ந்த திருநங்கையை அழைத்து கோவிந்தசாமி ஐந்து ரூபாயை கொடுத்தார்.

“நான் காசு கொடுக்காதனு சொன்ன நீ என்னடா தர்ம பிரபு” பரமசிவன் கோவிந்த சாமியை பார்த்து கத்தினான். கோவிந்தசாமி எதுவும் பேசவில்லை.

“பேசிட்டே இருக்கேன்…” என்றவரே எழுந்த பரமசிவன், நாங்கள் சுதாரிப்பதற்குள்  கோவிந்தசாமியின் கன்னத்தில் அறைந்தான்.

“உழச்சு சாப்டாம ஆடுறாளுங்க” என்றவாறே பரமசிவன் நகர்ந்தான். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. பரமசிவன் மீது கோபம் வந்தது. அனால் அவனை எதிர்க்கும் அளவிற்கு எனக்கு தைரியமோ, பலமோ இல்லை. கோவிந்த சாமியின் கண்கள் கலங்கியிருந்தன, “அவங்களும் நம்பளமதிரி தான சார்?” என்று என்னைப் பார்த்துக் கேட்டார்.

“அந்த தடிப்பையன் கிடக்கான். யாரும் கிடைக்கலன்னு உன்ன ஏறுறான்” ராவுத்தர் கோவிந்தசாமியை ஆசுவாசப் படுத்துவதற்காக சொன்னார்.

அதன்பின் கோவிந்தசாமி பரமசிவன் இருக்கும் பக்கமே திரும்புவதில்லை. நான் மறுநாள் அவரை பார்த்து ‘சாரி’ கேட்டேன். “அவன் பொறுக்கி சார். அடிச்சான். அதெல்லாம் நான் மறந்துட்டேன். நீங்க என்ன பண்ணுவீங்க பாவம்” என்றார். எங்கள் நட்பிலோ பேச்சிலோ எந்த மாற்றமும் இல்லாமல் தான் நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன.

இன்று கோவிந்தசாமி ஏன் வரவில்லை என்று தெரியவில்லை? உடம்பு ஏதும் சரியில்லாமல் போய் விட்டதா? காக்கையனைக் கேட்டேன். காக்கையன் தனக்கு எதுவும் தெரியாது என்றான்.

மறுநாளும், அதற்கு அடுத்த நாளும் கோவிந்தசாமி வரவில்லை.

“சொல்லிக்காம கொள்ளாம வேலையை விட்டு போய்டான் சார்” காக்கையன் சொன்னான். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. எங்களிடம் ஏன் சொல்லவில்லை. அம்மா ரொம்ப வருத்தப்பட்டாள். அண்ணனுக்கு குழந்தை பிறந்ததால், நாங்கள் அந்த கொண்டாடத்தில் மூழ்கிவிட்டோம். கோவிந்தசாமிக்கு பதில் காக்கையனுடன் வேறொரு சிறுவன் வரத் தொடங்கிவிட்டான். அவனும் போக, இன்னும் இரண்டு பேர் மாறினார்கள். அவரவர் வேலையுண்டு என்று நாட்கள் நகர்ந்தன. காக்கையன் மட்டும் வழக்கம் போல போதையில் வந்து போனான்.

பாப்பாவின் முதல் பிறந்தநாளை எங்கள் வீட்டில் கொண்டாட வேண்டுமென்று அண்ணனும் அண்ணியும் வந்திருந்தார்கள். அண்ணிக்கு விரால் மீன்தான் பிடிக்கும், அதுவும் ஆற்று மீன் தான் பிடிக்கும். அம்மா தேடிப் பிடித்து வாங்கி வர சொன்னாள். நானும் வண்டியை எடுத்துக் கொண்டு இருபது கிலோமீட்டர் செல்ல வேண்டியதாக இருந்தது.

“அதெல்லாம் கட்டுபடியாகும் குடு சாமி” பேரம் பேசிக்கொண்டிருந்த அந்த குரலை நான் எங்கேயோ கேட்டிருக்கிறேன்.  திரும்பி பார்த்தால், கோவிந்தசாமி. என்னை பார்த்ததும் அவர் முகம் திகைத்தது.

“என்ன கோவிந்தசாமி சவுக்கியமா?” என்றேன்

“நல்ல இருக்கேன் சார்” என்றார்.

நான் “எங்க போனீங்க. அம்மாகிட்ட கூட சொல்லல?” என்றேன். அவர் தயங்கினார். அப்போது அங்கே வந்த அந்த திருநங்கை கோவிந்தசாமியிடம் ‘போலாமா மாமா?” என்றாள். நான் அன்று டீக்கடையில் பார்த்த அதே திருநங்கை. எனக்கு புரிந்து விட்டது.

“அன்னைக்கு அந்த தடியன் அடிச்சதும் கஷ்டமா இருந்துச்சு. சாயங்கலாம் இவர பாத்து பேசினேன். அப்டியே லவ் வந்திருச்சு” அந்த திருநங்கை சொன்னாள். கோவிந்தசாமி வெட்கப்பட்டார்.

“ராதா நான் சொன்னேன்ல சாரு, இவருதான்” என்று என்னை அறிமுகம் செய்துவைத்தார்.

“என்கிட்ட இருந்து உங்க லவ்வ மறச்சிருக்கீங்களா கோவிந்த சாமி!” என்று கேட்டு அவர் தோளை தட்டினேன். சிரித்தார்.

“திடிர்னு ஒரு நாள் கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணுனோம். அவங்க ஊர் பக்கம் கோவில்ல போய் பண்ணிக்கிட்டோம்” கோவிந்தசாமி சொன்னார். “கல்யாணத்துக்கு எங்கள ஏன் கூப்டல?” கோவமாக கேட்பது போல் பாசாங்கு செய்தேன்.

“அது அது” என்று இழுத்தார். நான் சிரித்துவிட்டு, “சொல்லிட்டாவது வந்திருக்கலாம்ல. அம்மா சந்தோசப் பட்டிருப்பாங்க” என்றேன்

“சொல்லிகிட்டே இருப்பார் சார்” ராதா பேசினாள். “வாத்தியார் சாரும் அவங்க அம்மாவும் பாசமா இருப்பாங்க. சொல்லிக்காம வந்துட்டேனு”.

“அந்த ஏரியா வந்தா உங்கள அம்மாவலாம் பாக்கணும்… எல்லாரும் கேலி பேசுவாங்க அதான் வேலையை விட்டுடேன் சார்” என்றார்

“உங்க மனசுக்கு புடிச்ச ஒரு விசயத்த பண்ணிருக்கீங்க? இதுல என்ன வெட்கம் அவமானம்! அன்னைக்கு உங்கள அடிச்சப்ப பாத்துகிட்டு இருந்த நான் தான் அவமானப் படனும்” என்றேன். அமைதியாக நின்றார்.

“இப்ப எங்க வேலை பண்றீங்க?”

“வாட்ச்மேன் வேலைக்கு போயிட்டு இருக்கார் சார்” என்றாள் ராதா.

“முன்னமாதிரி இவ யார்ட்டையும் கை ஏந்துறது இல்ல சார். வீட்டயும் என்னையும் நல்லா பாத்துக்குறா. நல்லா சமைப்பா சார்.” கோவிந்தசாமி பெருமையாக சொன்னார்.

“ஏன் நீங்களும் வேலைக்கு போலாமே?” நான் ராதாவை பார்த்துக் கேட்டேன்.

“யார் சார் வேலைக்கொடுப்பா?” ராதா வினவினாள்.

ராவுத்தரிடம் வேலை பார்த்த மாஸ்டர் தனியாக கடை போட போய்விட்டதாக ராவுத்தர் சொன்னது நினைவுக்கு வந்தது. அவரிடம் பேசினேன். அவர் சந்தோசமாக ராதாவை வேலைக்கு வைத்துக் கொண்டார். முதல் நாள் நான் கடைக்கு வந்து டிபன் சாப்பிட வேண்டுமென்று ராதா ஆசைப்பட்டாள். அவள் செய்த பொங்கலும் வடையும் சுவையாக இருந்தது. நான் உண்டுகொண்டிருக்கும்போது, பரமசிவன் வந்தான். நான் உள்ளே அமர்ந்திருப்பதைப் பார்த்தான். ராதா உள்ளே சட்னி அறைத்துக் கொண்டிருப்பதையும் பார்த்துவிட்டு என்னை முறைத்தான்.  மேஜையில் வைக்கப்பட்டிருந்த தட்டிலிருந்து ஒரு வடையை எடுத்து தின்றுகொண்டு என்னை முறைத்தவாறே நின்றான். நான் அவனை சட்டை செய்யாமல்,

“பொங்கல் அருமையா இருக்கு ராதா” என்றேன். அவள் சந்தோசப் பட்டாள். வழக்கமாக கடைக்கு சாப்பிட வரும் பேச்சுலர்கள் இரண்டு பேர் என் அருகில் வந்து அமர்ந்தனர்.

“பொங்கல்” என்றனர். பொங்கல் வருவதற்குள், உள்ளே ராதா சமைத்துக் கொண்டிருப்பதை பார்த்ததும் அவர்களின் முகம் எப்படியோ மாறியது. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அங்கிருந்து எழுந்து ராவுத்தரிடம்., “இனிமே வெளிய சப்ப்ட்டுக்குறோம்” என்றனர். ராவுத்தர் பேசுவதற்குள் அவர்கள் கடையை விட்டு வெளியேறினர்,

அவர்களின் வழியை மறைத்துக்கொண்டு நின்ற பரமசிவன்,. “ஏன் சாணிய பாத்தா மாதிரி போற. அவ உழைக்குறா. உங்களுக்கு எங்க எரியுது. இது அவ சுட்ட வட.. நல்லாத்தான் இருக்கு. நேத்து வரைக்கும் அந்த சீக்காளி மாஸ்டர் செஞ்ச வடையை ரசிச்சி தின்னீங்க! இவ சமையலுக்கு என்ன குறைச்சல்!” என்றான்.

அவர்கள் என்ன சொல்வது என்று விழித்தனர். இருவரின் தோளின் மீது தன் கைகளை வைத்து அழுத்தியாவாறே, “எப்பவும் இங்கதான சாப்பிடுவீங்க! போய் சாப்டு போ” என்று அவர்களை உள்ளே தள்ளினான். அவர்கள் என்னருகே வந்து அமர்ந்தனர். நான் பரமசிவனைப் பார்த்து புன்னகை செய்தேன். அவன் என்னைக் கண்டுகொள்ளாமல்,  எதுவும் நடக்காதது போல் அங்கிருந்து நகர்ந்தான். ராதா சூடாக வடையை சுட்டெடுத்துக் கொண்டிருந்தாள்.

சுழற்சி- சிறுகதை

இன்னும் ஆறுமாதங்கள் தான் வீட்டில் அவகாசம் கொடுத்திருக்கிறார்கள். அதற்குள் எதுவும் நடக்காமல் போனால், அவன் மீண்டும் ஏதாவது வேலைக்கு செல்ல வேண்டும். வருங்காலம் அப்போது தான் பிரகாசமாக இருக்கும் என்றுஅப்பா சொல்கிறார். அவர் சொல்வதும் உண்மைதான் என்று   எண்ணினான்.  அவன் வேலையைவிட்டு வந்து ஒன்றரை வருடங்கள் ஒடிவிட்டது. இன்னும் சினிமாவில் எதையும் சாதித்ததாக ஞாபகமில்லை. ஒரு படத்தில் ஒரே ஒரு நாள் மட்டும் உதவி இயக்குனராக வேலை செய்துவிட்டு திரும்பிவிட்டான். அதுவும் பீல்ட் க்ளியர் என்று கத்துவது மட்டுமே அவன் வேலை. இரண்டாவது நாள் படப்பிடிப்பு ரத்தாகி இருந்தது. ஏதோ பணப் பிரச்சனை. அந்த படத்தின் நாயகன் தான் தயாரிப்பாளர். வீட்டை அடகு வைத்து தயாரித்தார். அதன் பின் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியபோது போக தோன்றவில்லை. படம் இன்னும் முடிந்த பாடில்லை. நல்லவேளை போகவில்லை என்றே எண்ணினான். சுயநலம் என்று சொல்லலாம். சினிமாவில் எல்லோரும் அப்படிதான் இருக்கிறார்கள். எனக்கு இருக்கிற பிரச்சனையில் என் வருங்காலத்தை மட்டுமே யோசிக்க முடிகிறது. அந்த படம் என்னை எங்கேயும் கொண்டு செல்லாது எந்த வாய்ப்பையும் ஏற்ப்படுத்தி தராது என்பதால் அந்த படத்தில் பணிபுரியவில்லை என்று நண்பர்களிடம் சொல்லுவான்.

“அசிஸ்டன்டா வேலை பாத்தாதான் சினிமா கத்துக்க முடியும், அத விட்டுட்டு எழுதுறேனு வீட்டுக்குள்ளயே உக்காந்துகிட்டு இருந்தா…” அப்பா இப்படி பல முறை அலட்டிக் கொள்கிறார்.

ஒன்றரை வருடத்திற்கு முன்பு வேலையை விட்டுவிட்டு வீட்டுக்கு வரும்போது உண்மையில் உதவி இயக்குனராகலாம் என்ற எண்ணத்தில் தான்  வந்தான். தன்னுடைய ஆஸ்தான இயக்குனரை வலசரவாகத்திற்கு சென்று  சந்தித்தான்.

“சினிமாவ சங்கரநாரயணன்ட்டகூட கத்துக்கலாம், அவர்தான் அவ்ளோ படம் எடுக்குறார். என்கிட்ட ஏன் வர?”

“புடிக்கும் சார்”

“ஹான்?”

“உங்கள புடிக்கும் சார்”

அவனுடைய சிறுகதைகளை புரட்டிப்பார்த்துவிட்டு ஆங்கிலத்தில் சொன்னார், “திஸ் பீபிள் வில் exploit you. better you be a writer.

“இலக்கியம்தான் முக்கியம்.போ இன்னும் நிறைய எழுது”

எதுவும் பேசாமல் தலையசைத்துவிட்டு வந்து விட்டான். அதன் பின் சில காலம் குழப்பத்தில் காலத்தை கடத்திவிட்டு, ஒரு நாள் உதவி இயக்குனர் தந்த அனுபவத்தினால் யாரிடமும் உதவி இயக்குனராக கூடாது என்று முடிவெடுத்து, ஒரிரு குறும்படங்கள் எடுத்துவிட்டு கொஞ்ச காலம் எழுத்தாளராகவே இருந்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து எப்படியோ ஒன்றரை வருடங்களை கடத்தி விட்டான் ஏதேதோ கிறுக்கல்கள். ஒரு  புண்ணியவான் விருது கொடுத்தார். “அத வச்சு நாக்க வலிப்பியா?” இதுவும் அப்பா தான்.

எழுதிய படங்கள் எதுவும் தொடங்கப்படவேயில்லை. தயாரிப்பாளருக்கு கதை பிடித்திருந்தால், ஹீரோ கதையில் மாற்றம் சொல்கிறார். ப்ரயத்தனபப்ட்டு எழுதிய கதை ஒன்று,  ஹீரோவிற்கு பிடித்துப் போக, தயாரிப்பாளரும் ஒகே சொல்ல, தயாரிப்பாளரின் சகோதரி கதைக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.

“ஹீரோயின இன்னும் கவர்ச்சியா காட்டா வேணாமா?” அலட்டிக் கொள்ளாமல்  கேட்டார் அந்த பெண்மனி.

“இது அப்டி பட்ட கேரக்டர் இல்ல மேடம். மோர் ஸ்ரைட்பார்வேட் கேரக்டர். பாலசந்தர் சார் படங்க….”

“Show me the cleaves man. அத விட்டுட்டு. நான் டி.வில ப்ரோமோட் பண்ணனும்னா ஏதாவது இருக்கனுமே”, அவர்களின் முகபாவம் எப்படியோ போனது.

“ஹீரோயின் இண்ட்ரோ சாங் வைங்க…”

சிறிது மொளனம்.  அந்த வியாழக் கிழமை இரவு ஏமாற்றத்தோடு முடிந்தது. ஒரு நாள் அவகாசம் எடுத்துக் கொண்டு கதையை மாற்றிவிட்டு வர சொன்னார்கள். ஒரு நாளில் செய்ய முடிந்த மாற்றங்களை மட்டும் செய்துக் கொண்டு மீண்டும் சனிக்கிழமை எதிர்ப்பார்ப்புடன் சென்றான். அவர்கள் அவன் செய்த மாற்றங்களை கேட்கவேயில்லை.

“நேத்து ரிலீஸ் ஆன ‘கொள்ளையடிப்போம்’ பாத்தீங்களா?”

அவர்கள் என்ன சொல்லவருகிறார்கள் என்பதை புரிந்துகொண்டான்.  அதுமாதிரி ஒரு காமெடி மூவி இருந்தா சொல்லுங்க.

நெஞ்சு பொறுக்குதில்லையே என்று அவனுக்குள் இருந்த அவர் வெளியே எட்டி பார்க்க பார்த்தார். அவரை உள்ளே தள்ளிவிட்டு,

“ஸ்யூர் மேடம், இப்ப அதுதானே ட்ரெண்டு” என்று சொல்லிவிட்டு வந்தான்.

அம்மா சந்தோசமாக வரவேற்றாள். இவன் எரிந்து விழுந்தான் அவளுக்கு புரிந்துவிட்டதால், காபி எடுத்துவருவதாக சொல்ல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள். “முன்னாடியே தெரியுமே…” என்று அப்பா சொல்வார் என்று எதிர்பார்த்தான். அவர், “இது இல்லனா இன்னொரு படம்…” என்று சொல்லிவிட்டு வெளியே நகர்ந்தார். அப்பாவை புரிந்து கொள்ள முடிவில்லை. உண்மையில்  அவனையே அவனால் புரிந்துக் கொள்ள முடியவில்லை.  எதற்காக தான் அவ்வளவு வேகமாக வேலையை விட வேண்டும்.  வேலைக்கு சேர்ந்த அன்றே இரண்டு வருடங்களில் அந்த வேலையை விட்டுவிட வேண்டும் என்று முடிவுசெய்து மொபைலில் கவுண்ட் டவுன் வைத்துக் கொண்டு திரிந்ததை எண்ணினால் கொஞ்சம் சிரிப்பும் கொஞ்சம் கண்ணீரும் வருகிறது. எதற்காக இவ்வளவு இழக்க வேண்டும். எதற்காக நிரஞ்சனி  தன்னை காதலிப்பதாக சொல்லிய போது மறுக்க வேண்டும்!

ஆம். இவ்வளவு பிரச்சனைக்கு மத்தியில்தான் நிரஞ்சனி அவனை காதலிப்பதாக சொன்னாள். அவன் தான் இருந்த சூழலில் காதல் எல்லாம் ஆடம்பரம் என்று கருதினான். ஆனாலும் மனம் தடுமாறியது.  சும்மா இருந்தால் அப்படிதான் என்று நினைத்து ஒரு நாவல் எழுத முடிவு செய்தான்.

இலக்கியம் என்று சொன்னால் துரத்தி அடிப்பார்கள் என்பதால் ஒரு க்ரைம் நாவல் எழுதினான். வழக்கம் போல் அவன் மெயில் அனுப்பிய எந்த பதிப்பாளரும் மெயிலைக் கண்டுக் கொள்ளவில்லை.

‘எனக்கு எந்த பதிப்பாளரயும் தெரியாது. நான் ஒரு தனியன். யாரவது பதிப்பாளருக்கோ அல்லது பெரிய எழுத்தாளருக்கோ சொம்படிச்சாதான் புக் போட முடியும்னா அது தேவையேயில்ல” இப்படியும் சில வீர வசனங்கள் பேசி தன்னை ஆசுவாசப் படுத்திக் கொள்வான்.

நாவலும் வாழ்க்கையை எங்கும் நகர்த்தவில்லை. வெற்றிகரமாக வருமானமில்லமால் இரண்டு வருடங்கள் முடிந்தது.

“ஏதாவது வேலைக்கு போயிட்டே எழுது” அதுவரை அதிகம் பேசாத அம்மா சொன்னாள்.  அப்பா அம்மா மூலமாக பேசத் தொடங்கிவிட்டார் என்று புரிந்துக் கொண்டான்.

“உன்ன வச்சு தான் உன் ஆயும் அப்பனும் அடிச்சுகிதுங்க” தாத்தா சொன்னார். “ஏதாவது கவர்மெண்ட் வேலைக்கு போய்டே எழுதுடா. யாரையும் கையேந்தி நிக்குற நிலம வர கூடாதுடா தம்பி”

***

மாம்பலத்தில் ஒரு இன்ஸ்டிட்யுட்டில் சேர்ந்தான். வங்கி வேலைக்காக பயிற்சி கொடுக்குமிடம் அது. காலை ஒன்பது மணி முதல் ஆறரை மணி வரை படிக்க வேண்டியிருந்தது.காலை எட்டறை மணிக்கு ஒரு ஆனியன் ஊத்தாப்பம்.  பின் படிப்பு. மதியம் இருபது ரூபாய் கீரை சோறு, அல்லது பதினெட்டு ரூபாய்க்கு மூன்று சப்பாத்தி. மீண்டும் குவான்டிடேட்டிவ் ஆப்டிட்யுட், ரீசனிங். தாளித்த மோர், க்ளோஸ் டெஸ்ட், பேங்கிங் அவார்னெஸ், தலை வலி. இஞ்சி டீ. புதுமைப்பித்தன் நிகும்பலை.

“எந்த இயர் பாஸ்ட் அவுட் ப்ரோ” ஒருவன் கேட்டான். இவன் பதில் அவனுக்கு தேவையில்லை என்பதுபோல் அவனே தொடர்ந்து பேசினான்,

“ஆக்சுவலி நான் nano technology field bro. இந்தியால அதுக்கு சரியான ஸ்கோப் இல்லல. அதான். பேங்கிங் ட்ரை பண்றேன். நீங்க ப்ரோ?” கேட்டுவிட்டு நகர்ந்தான்.  ஏனெனில் இவனுடைய பதில் அவனுக்கு தேவையில்லை. இன்னொரு பெண்ணிடம் போய் பேசினான், “ஆக்சுவலி நான் nano technology…”

“நான் சிவில் செர்விஸ் ப்ரிப்பர் பண்றேன்,  பேங்கிங் இஸ் பார் பேக் அப்”  இப்படி அந்த பெண் பதிலளித்தாள்.

இவன் எல்லோரையும் பார்த்துக் கொண்டே இருந்தான். அங்கே எல்லோரிடமும் மற்றவர்களைப் பற்றிய முன்முடிவு இருந்தது. ஒரு வகையான சுயநலம் இருந்தது. இன்னொருவர் தன்னை எந்தவகையிலும் முந்திவிட கூடாது என்ற எண்ணம் இருந்தது. எல்லாவற்றிலும் போட்டி போடும் சமுகத்தில் போட்டி தேர்வுகள் எழுதாதவர்கள் பாக்கியவான்கள் என்று நினைத்துக் கொண்டான்.

“இதான் பர்ஸ்ட் ஜாப், காலேஜ் முடிச்சு மூனுவருசம் ஆச்சு” ஒருவன் தயங்கி தயங்கி சொன்னான். அதை சொல்ல அவன் ஏன் அப்படி தயங்க வேண்டும் என்று எண்ணினான்.

‘இங்கே ஒரு மனிதனால் தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்க முடிவதில்லை. ஒருவன் இன்னதுதான் படிக்கவேண்டும் இந்த வேலைக்குதான் போக வேண்டும் என்பதை சமுதாயமே முடிவு செய்கிறது. சமுதாயத்தின் பார்வையையும் மதிப்பீடையும் மனதில்கொண்டே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வளர்க்கிறார்கள். சமுதாயத்தின் அளவுகோளிலிருந்து மாறுபட்ட எந்த வேலையையும் ஒருவனால் செய்யமுடிவதில்லை. சமுதாயத்தின் அங்கிகாரத்தை பொறுட்படுத்தாமல் ஒருவன் இயங்க முயன்றால் அவனுக்கு பைத்தியக்காரன் முத்திரையை குத்த சமுதாயம் தயங்குவதில்லை. படித்த படிப்பிற்கு வேலை கிடைக்காமல் போனலும், தனக்கான வாய்ப்பை ஒருவனால் உருவாக்கிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை இந்த கல்விமுறை அளிப்பதில்லை. எல்லோரும் ஏன் வேகமாக ஒடவேண்டும்.  ஒருவன் தவழ்ந்து செல்வது ஏன் குற்றமாக பார்க்கப் படுகிறது. டார்வினின் கோட்பாடு ’Survival of fittest’ தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டுவிட்டது. சமுதாயம், மிகப் பெரிய சர்வாதிகாரி. ஹிட்லரின் வதை முகாம்களில், ஒவ்வொரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கைதிகள் ஒடிக்கொண்டே இருக்கவேண்டும். ஒட பலமில்லாதவர்கள் பனியில் உறைந்து செத்துவிடுவார்கள். சமுதாயம்தான் உண்மையான வதை முகாம்.’ இவ்வளவு எண்ணங்களும் வஞ்சனையில்லாமல் அவன் நேரத்தை திருடிக்கொண்டாலும், அவன் படிப்பில் கவனமாவே இருந்தான்.

கிட்டதட்ட ஒரு மாதம் அங்கே படித்தான். அங்கே படித்த மேதாவிகள் அளவிற்கு மதிப்பெண் வாங்காவிட்டாலும் அவனும் எழுத்து தேர்வில் தேர்ச்சிப் பெற்று நேர்முகதேர்விற்கு சென்றான். பேனலில் ஐந்து நபர்கள் அமர்ந்திருந்தார்கள். நாங்கு பேர் கேள்வி கேட்க, ஒரு பெண்மனி அமர்ந்து இவன் பதில் சொல்லும் தோரனையை மட்டும் கவணித்துக் கொண்டிருந்தார்.

“இன்ஜினீயர், ரைட்டர், பேங்கர். தி டாட்ஸ் ஆர் நாட் கனெக்டிங். ரைட்டிங்க விட்டுவிட்டு ஏன் வறீங்க?” இதுதான் அவன் தன்னை அறிமுகம் செய்துக்கொண்டபின் அவர்கள் கேட்ட முதல் கேள்வி.

“ரைட்டிங்ல வருமானம் வர்ல சார்”

“இன்ஜினீயர் வேலையே விடும் போதே தெரியாதா, ரைட்டிங்ல வருமானம் வராதுனு?”

“தெரியும். ஆன ஒரு முறையாவது ட்ரை பண்ணனும்னு ஆச பட்டேன். இல்லனா ரைட்டிங் ட்ரை பண்ணியிருக்கலாமேனு ஐம்பது வயசுல ரெக்ரட் பண்ணிருப்பேன்” தைரியாமாக பேசினான்.

“பேங்கிங்  இஸ் நாட் ஈசி. இந்த வேலையிலேயெ உனக்கு பாதி நேரம் போய்டும். உனக்கு எழுதலாம் டைம் இருக்காது, ரைட்டிங்க விட்றுவியா?”

“மாட்டேன். ஹாலிடேஸ்ல எழுதுவேன் சார்”

அவர் இவனையே உற்றுப் பார்த்தார். ஆல் தி பெஸ்ட் சொன்னார்.

“இனிமே எல்லாம் ஜெயம், உனக்கு வேலை கிடைக்கும்” தாத்தா சொன்னார்.

ஒருமாதத்திற்க்கு பின் தேர்வு முடிவு வெளியானது. ஒரு பதட்டத்துடன் முடிவு வெளியாகும் தளத்தில் தன் தேர்வு எண்ணை தட்டினான். “Congratulations, You have been Provisionally Selected” என்று வந்தது.

வீட்டில் எல்லோரும் சந்தோசப்பட்டார்கள். “வெக்காளி அம்மனுக்கு மணிவாங்கி கட்டனும்” அம்மா சொன்னாள். “அலையன்ஸ் பாக்க வேண்டியதுதான்” அப்பா சொன்னார்.

அப்பாவும் அம்மாவும் சந்தோசமக இருப்பதை பார்க்கும்போது அவனுக்கு சந்தோசமாக இருந்தது. ஆனாலும், அதிகபட்சம் மூன்று வருடங்களில் வேலையை விட்டுவிட்டு மீண்டும் முழு நேர எழுத்தாளராகிவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டான்.

ஆவி எழுத்தாளன் (எ) தமிழ் சினிமா கதாசிரியன்- சிறுகதை

‘ஆவி எழுத்தாளன்’ என்றதும் அமானுஷ்ய சக்திகளைப் பற்றி எழுதி மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிப்பவன் என்றுதான் பலரும் நினைக்கின்றனர். பிளாட்பாரக் கடைகளில் கிடைக்கும் ‘அமானுஷ்ய உலகம்’ புத்தகத்தை எழுதுபவன் சத்தியமாக நான் இல்லை. பதினைந்து ரூபாய் கொடுத்து அந்தப் புத்தகத்தை நானும் வாங்கிப் படித்திருக்கிறேன். ‘முப்பது நாட்களில் ஆங்கிலம் கற்பது எப்படி’ என்பது போல ‘முப்பது நாட்களில் சூனியம் வைப்பது எப்படி’ என்று அந்தப் புத்தகத்தில் நிறைய இருக்கும். வெள்ளைச்சட்டை போட்ட ஒரு கருப்பு உருவத்தின் படத்தைப் போட்டிருப்பார்கள். அவரின் மீசை பயமுறுத்தும். கீழே, ‘மசானக் காளி துணை’ என்று எழுதி,  பில்லி சூனியம் வைக்கக் கற்றுத் தருகிறார் திரு.கருப்புசாமி வெள்ளை வீரன், உடனே ரூபாய் 8500 மணியார்டர் எடுத்து அனுப்பவும். வீட்டிலிருந்தே கற்றுக் கொள்ளலாம்…

பில்லி சூனியம் சொல்லித்தரும் எல்லாரும் அது ஏன் பேசிவைத்தாற்போல் ரூபாய் 8500 வாங்குகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை அவர்கட்கென்று ஏதாவது சங்கம் இருக்கலாம்!

மன்னிக்கவும்,நான் சொல்ல வந்த விடயத்தை விட்டுவிட்டு ஏதேதோ பேசுகிறேன். இதுதான் என்னிடம் இருக்கும் பிரச்சனை. என்னிடம் மட்டுமில்லை, என்னைப் போன்ற பலருக்கும் இருக்கும் பிரச்சனை.

உதாரணத்திற்கு, என் நண்பன் என்னிடம் கடன் கேட்டால், நான் ‘மிசல் பூகோ’, ‘லார் பத்தார்’ என்று அந்நிய எழுத்தாளர்களின் பெயர்களை உதிர்ப்பேன். பின்நவீனத்துவம், எக்ஸ்டேன்ஸ்சியலிசம் என்று என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பிதற்றுவேன். என் நண்பனும் என்னவென்று புரியாமல் புரிந்தது போல் நடிப்பான். தெரிகிறதோ இல்லையோ தெரிந்தது போல் பேச வேண்டும். புரிகிறதோ இல்லையோ புரிந்தது போல் நடிக்க வேண்டும். அப்போது தான் இந்தச் சமுதாயம் மதிக்கும். நான் இயங்கும் துறையில் வாய் இருந்தால்தான் பிழைத்துக் கொள்ள முடியும். சொல்ல வந்ததை விடுத்து, சொல்லத் தேவையற்றதைப் பேசிக்கொண்டிருக்கவேண்டும். நீங்களும் இந்தத்துறைக்கு வந்தால் அப்படித்தான் பேசுவீர்கள். தேவையற்ற விடயங்களைப் பேசி உங்கள் இருப்பை நிலை நிறுத்திக் கொள்ள முயல்வீர்கள்.

கலைத்துறை உங்களை அன்புடன் வரவேற்கிறது…

இங்கு ஒவ்வொருவரிடமும் ஒரு கதையிருக்கும். வாழ்க்கைக் கதையைப் பற்றி சொல்லவில்லை. படம் இயக்குவதற்காக வைத்திருக்கும் கதையைப் பற்றிச் சொல்கிறேன். வடபழனி ஸ்டுடியோவில் சேனைக் கிழங்கு வறுவல் சமைக்கும் தவசிப்பிள்ளை சண்முகநாதனிடம்கூட  (அவர் பிள்ளை வகுப்பைச் சார்ந்தவரன்று) ஒரு ‘டபுள் ஆக்சன்’ கதை இருக்கிறது. இயக்கினால் நடிகர் சுஜித்தை வைத்துதான் இயக்குவேன் என்று அவர் கங்கணம் கட்டிக்கொண்டு திரிந்து கொண்டிருக்கிறார். (அந்தக் கதையை எனக்கு பாதிதான் சொன்னார். அடுப்பில் வைத்த சேனைக் கிழங்கு தீய்ந்துவிடுமென்று ஓடிவிட்டார். முழுக்கதையைச் சொன்னால், நான் திருடிவிடுவேன் என்ற பயத்தினால்தான் ஓடிவிட்டார் என்பது எனக்குத் தெரியும்).

இங்கு யாரைக் கேட்டாலும் நடிக்கப் போகிறேன்,  படம் இயக்கப் போகிறேன் என்பார்கள். சினிமாவில் முப்பத்திரெண்டு கலைகள் இருப்பதை யாரும் தெரிந்து கொள்ள விரும்புவதில்லை. இயக்குனராகப் போகிறேன் என்று சொல்லிக்கொண்டு திரியும் என் நண்பனிடம் வினவினேன்,

“இயக்குனரின் வேலை என்ன?”

“நல்ல கதை பண்றது.. “

“அது கதாசிரியனின் வேலை… உன் வேலை?”

“ம்ம்ம்… திரை… இல்ல… கேமரா ஆங்கில்!”

“அது கேமராமேன் வேலை… உன் வேலை?”

“போடா… பா(Beep)… எச்ச த் (Beep)…”

என் சட்டையைக் கசக்கின அவன் கைகள். அதன்பின் என் நண்பனை நான்  பார்க்கவில்லை. பழைய நண்பன். இப்போது ஏதோ படம் இயக்கிக் கொண்டிருப்பதாகக் கேள்வி.

இங்கு பலர் உண்டு. அவர்கள் யாருக்கும் இயக்குனரின் வேலை என்னவென்று சொல்லத் தெரியாது. எந்தப் பொறுப்பை ஒளிப்பதிவாளர் சுமப்பது, எந்தப் பொறுப்பை இயக்குனர் வகிப்பது என்றும் பகுத்து விவரிக்கத் தெரியாது. ஆனால் அவர்கள் எப்போதும் சொல்வது, “நான் இயக்குனர் ஆகப் போறேன்…”

“முதல கேமராமேன் ஆகிட்டு, அப்பறம் அப்படியே டைரக்டர் ஆகிடலாம்” இதுபோல் திரியும் கூட்டம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. சினிமாவினுள் நுழைந்தால் போதும் என்று ஏதேதோ வேலை செய்பவர்களுமுண்டு. (கொசுரு செய்தி: நடிகர் சுஜித்தின் கார் டிரைவர் அவரை வைத்து படம் இயக்கப் போகிறாராம். (இப்படித்தான் ஆவி இயக்குனர்கள் உருவாகிறார்கள்) ஒரு சாதாரண கார் டிரைவர் எப்படி சினிமாவில் பெரிய ‘தலை’யாகிறார் என்பதுதான் கதைக்கருவாம். வாழ்த்துக்கள்.)

தட்டுங்கள் திறக்கப்படும் எனும் கூற்று சினிமாவிற்குப் பொருந்தாது. சினிமாவின் கதவுகள் என்னதான் தட்டினாலும் சாமானியர்களுக்கு, அவர்கள் மிகுந்த திறமைசாலிகள் எனினும் திறக்காது. இந்த ஏதேதோ வேலை செய்யும் கூட்டம் சினிமாவின்  கதவுகளை இன்னும் துருப்பிடிக்க வைக்கிறது.

என்னுடைய இன்னொரு பழைய நண்பனும் அப்படித்தான். சினிமாவின் conventional விதிகளைப் பின்பற்றி உதவி இயக்குனரானவன்.conventional விதிகள்.

1.குறைந்தது ஐந்து முதல் பதினைந்து நாட்கள் வரை ஏதாவது ஒரு இயக்குனரின் வீட்டு வாசலில் காத்திருக்க வேண்டும். (பதினைந்து நாட்களில் அவர் பார்வை உங்கள் மீது படவில்லை எனில், வேறு இயக்குனர் வீடு நோக்கிச் செல்லவும். பதினைந்து நாட்களுக்கு மேல் காத்திருப்பது வீண். மீண்டும் ஆறு மாதம் கழித்து அதே இயக்குனர் வீட்டு வாசலில் வந்து நிற்கலாம்.)

2.இயக்குனர் வீட்டின் முன் நிற்கையில் வெயிலையும், மழையையும் பொருட்படுத்தக் கூடாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆது. (மழைக்காலத்தில் போவது புத்திசாலித்தனம். மழையில் நனைந்து கொண்டே காத்திருந்தால், அந்த இயக்குனரை மேலும் கவர முடியும்)

3.என்னதான் பசித்தாலும் டீயும், பட்டர் பிஸ்கெட்டும் தான் சாப்பிட வேண்டும். (கையில் இருக்கும் காசிற்கு அது மட்டும் தான் கிடைக்கும் )

இந்தக் conventional விதிகளை எண்ணினால் எனக்குக் குமட்டிக் கொண்டு வரும்.

“நீ ஏன்டா இப்படிப் போய் அசிங்கப் படுற. திறமைய மதிக்கிறவங்ககிட்ட போய்ப் பார்ப்போம்…” என்றேன் என் நண்பனிடம்.  திறமையை மதிப்பவர்களும் சினிமாவில் உண்டு என்ற நம்பிக்கையில்.

“நீ இப்படிப் பேசிக்கிட்டே இருந்தா யாருக்கிட்டயும் அசிஸ்டண்டா சேர முடியாது” அவன் சொன்னது சரிதான். நான் இது வரை யாரிடமும் உதவி இயக்குனராகச் சேரவில்லை.

(எங்கு போனாலும் சிபாரிசு. ‘நீ இவர் புள்ளையா?’, ‘அவர் புள்ளையா?’, ‘அந்த நடிகையோட தம்பியா?’. நான் மார்லன் பிராண்டோ பேரனாக இருந்தால், உங்களை ஏன் தேடி வரணுமென்று அவர்களைக் கேட்கத் தோன்றும். ஆனால் கேட்க இயலாது. கேட்க முடியாது.கேட்கக் கூடாது )

“அது இல்லடா, தன்மானத்தை அடகு வைத்துட்டு… இப்படிச் செய்யணுமா ?” இது நான்.

“இதுல என்னடா தன்மானம். நம்ம டைரக்டர் சாரதி பெட்ரோல் பங்குல வேலை பாத்திருக்கார். இப்படிப் போராடித்தான் பல பேர் மேல வந்திருக்காங்க”

“அவங்க வந்த காலம் வேற. இப்ப திறமைய மதிக்கணும், யாரா இருந்தாலும். மதிக்கலனா மதிக்க வைக்கணும். அதை விட்டுட்டு, இப்படி அவர் செஞ்சாரு இவரு செஞ்சாருனு நம்மளும் ஒருத்தன் வீட்டு வாசல்ல போய் அசிங்கமா நிக்கணுமா?” இதோடு நான் நிறுத்தி இருக்கலாம். ஆனால் என் வார்த்தை சற்று தடித்துவிட்டது. “ஒரு காலத்தில ஆடை இல்லாம அம்மணமா திரிஞ்சாங்களே! அது மாதிரி நீயும் திரிய வேண்டித்தானே…!” அது ஒரு டீ கடை. எல்லாரும் எங்களையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

இந்த நண்பன் ரொம்ப நாகரிகமானவன். அவன் திட்டியது எனக்குப் புரியவில்லை. ஊர் கெட்ட வார்த்தைகள். ஆனால் என்னை அடிக்க வரவில்லை. அதனால் தான் சொன்னேன் நாகரிகமானவனென்று. அவனும் பழைய நண்பன் ஆகிப்போனான்.

conventional விதிகளை என்னால் பின்பற்ற முடியாத சூழ்நிலையில், புதுத் திறமைகளை மதிக்கிறாரென்று கேள்வியுற்று தமிழில் ஆங்கிலம் பேசிப் படம் எடுக்கும்  ஒரு இயக்குனரைச் சென்று பார்த்தேன். என்னை ஒரு எழுத்தாளன் என்று அறிமுகப் படுத்திக் கொண்டேன். தமிழ் எழுத்தாளன் என்று தெரிந்ததும் அவர் தேவாங்கு போல் முகத்தை வைத்துக் கொண்டார். (என் தமிழ் நண்பர்களே என்னை மதிப்பதில்லை. அங்கீகரிப்பதில்லை. அவர் தமிழரன்று. அதனால் நான் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை )

என்னை மதியாததைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் தமிழ் எழுத்தாளன் என்றால் எதற்கும் லாயக்கற்றவன் என்று இவர்கள் எண்ணுவதைத்தான் நான் எதிர்க்கிறேன்.வெறுக்கிறேன்.

“அப்ப நீ டான் பிரவுன், சிட்னி ஷெல்டன் கதைகளெல்லாம் படிச்சதில்லை?” வினவினார், அந்த தேவாங்கு முகப் பாவனையை மாற்றிக் கொள்ளாமலே.

‘அப்ப இல்ல… எப்பவுமே நான் படித்ததில்லை.’ டான் பிரவுன், சிட்னி ஷெல்டன், ஜான் க்ரிஷம் மட்டுமே ஆங்கில எழுத்தாளர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் அவர். ஆங்கிலப் பெயர் உதிர்க்கும் பலரும் இந்த மூவரின் பெயரைத்தான் உதிர்ப்பார்கள். என்னைப் பொறுத்தவரை மேற்குறிப்பிட்ட அனைவரும் பல்ப் (pulp) எழுத்தாளர்கள். இலக்கியவாதிகளன்று. ஆங்கில இலக்கியவாதிகளான வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ், சார்லஸ் ரைட், தெட் ஹூஸ் போன்ற  பலரை மிகத் தீவரமாக நான் வாசித்திருக்கிறேன். மேலும் லத்தின் அமெரிக்கக் கவியான பாப்லோ நெருடா, ஜெர்மன் படைப்பாளியான பெர்டோல்ட் பிரெக்ட் போன்ற பலரைப் பின்பற்றியிருக்கிறேன். ஆனால் இதையெல்லாம் அவரிடம் சொல்வது வீண். ஏனெனில் அவரைப் பொறுத்த வரையில் நான் ஒரு தமிழ் எழுத்தாளன்.

“மார்டின் ஸ்கார்சிஸே படம் ஏதாவது பார்த்திருக்கியா?”

இந்தக் கேள்வியைக் கேட்டதும் அவரின் நடு நெத்தியில் சுத்தியலால் அடிக்கவேண்டுமென்றிருந்தது.  ஆனால் அடிக்க முடியவில்லை. அடிக்க இயலாது. அடிக்க முடியாது. அடிக்கக் கூடாது. அவருக்குத் தெரிந்ததெல்லாம் வெறும் மார்டின் ஸ்கார்சிஸேவும், குப்பாலாவும். எனக்கு இவர்களையும் சேர்த்து ப்ருஸ் ராபின்சன், வூடி ஆலன், டெரன்ஸ் மாலிக் போன்று இன்னும் பலருடைய சினிமாவைப் பற்றி ஆழ்ந்த புரிதல் இருக்கிறது.

நம்பினால் நம்புங்கள். நான் வாரம் முப்பத்தியாறு படங்கள் பார்த்த காலமெல்லாம் உண்டு. தமிழில் ஆங்கிலம் பேசிப் படம் எடுக்கும், ஒரே கதையைத் திரும்பத் திரும்ப வேறு நடிகர்களை வைத்துப் படம் எடுக்கும் இவரை விட நான் நிறைய ஆங்கிலப் படங்கள் பார்த்திருக்கிறேன், ஆங்கில இலக்கியங்களைப் படித்திருக்கிறேன். இருந்தாலும் நான் எதுவும் சொல்லாமல் ஒரு புன்னகையோடு அந்த இடத்தை விட்டு விலகிவிட்டேன், அந்த இயக்குனர் மீது நான் நிறைய மரியாதை வைத்திருப்பதால்…

மேற்கூறிய இயக்குனரைப் பின்பற்றி நிறையபேர் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களையாவது சகித்துக் கொள்ளலாம். ஆனால் இன்னொரு வகைக் கூட்டம் உண்டு, மாற்று சினிமா எடுக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு திரிபவர்கள்.

அவர் ஒரு பிரபல இயக்குனர். மன்னிக்கவும் மாற்று சினிமா இயக்குனர். வடபழனி பஸ் ஸ்டாண்டில் இறங்கி, பிரபல ஸ்டுடியோக்களைக் கடந்து, வலது புறத்தில் உள்ள பெரிய சாலையில் (சிக்னல் அருகில்) திரும்பி, மீண்டும் வெகுதூரம் சென்று மூன்றாவது குறுக்குத் தெருவில் திரும்பினால் அவர் வீட்டை அடைந்துவிடலாம்.

அவரின் முதல் கேள்வி, “ஈரான் படம் எத்தனை பார்த்திருக்க?”

அவரின் வீட்டின் பின்னாடி அமைந்திருக்கும் அலுவலகம் அது. (ஏ.சி இருந்தும் வேர்த்தது. பின்தான் தெரிந்தது ஏ.சியை அணைத்து வைத்திருக்கின்றனர்). சத்தியமாகச் சொல்கிறேன் அது மட்டும் நான்காவது மாடியாக இருந்திருந்தால் நான் ஜன்னல் வழியாக வெளியே குதித்திருப்பேன். (மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள விரும்புவோர், குறைந்தது நான்காவது மாடியிலிருந்தாவது குதிக்கவும். முதல் மூன்று மாடியிலிருந்து குதித்தால் மரணிக்க முடியாது. பெருத்த காயம் ஏற்படும். ஆறுமாதமாவது வலியைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். இன்றைய சூழ்நிலையில்  பல லட்சங்கள் செலவாகும். ஆனால் நான்காவது மாடியில் இருந்து குதிக்கும் போது, எலும்புகள் சுக்கு நூறாக உடைவதால் வலி தெரியாது. உடனே மரணம். அப்படி இல்லையெனினும் மருத்தவமனையில் நிச்சயமாக மரணம். ஒருநாளைக்கு மேல் உயிர் தங்காது. பி.கு. நான்காவது மாடியிலிருந்து குதிப்பவர்கள், ’நான் பிழைக்கமாட்டேன்… என்னை மருத்துவமனையில் சேர்க்காதீர்கள்’ என்று எழுதி வைத்து விட்டுக் குதிக்கவும். மருத்துவச் செலவு மிச்சம்.) ஆம் குதித்திருப்பேன். மாற்று சினிமா என்றால் ஈரான் படமென்று சொம்படிப்பவர்களைக் கண்டால் எனக்கு அருவருப்பாக இருக்கும். குறைந்த செலவில் எடுக்கப்படும் ஈரான் படங்கள் அருமையான படங்கள் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அப்படங்களைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடமுடியாது. காரணம்,  அது போன்ற யதார்த்தமான கதைகளை 1950களிலேயே இங்கு கரிச்சான் குஞ்சு எழுதிவிட்டார். 1930களில் மௌனி இயற்றிவிட்டார், 1960களில் தீ.ஜா விவாதித்துவிட்டார். (ஆனால் அந்தக் கதைகளை படமாக எடுக்க யாரும் தயாராகயில்லை) நவீன தமிழ் இலக்கியத்தைச் சிறிதும் படிக்காமல், ஈரானிய படங்களைக் கண்டு பிரமித்துக் கொண்டிருப்பது புத்திசாலித்தனமன்று.

அடுத்த கேள்வி, “பிடித்த இயக்குனர் ?”

“செர்ஜியோ லியோன்”

அவர் அருகிலிருந்த தன் உதவியாளர்களைப் பார்த்துக் கொண்டார். அவர்கள் தெரியாது என்பது போல் தலையாட்டினர்.

“என்னப்பா மாற்று சினிமாவெல்லாம் பார்க்க மாட்டியா?”

“நான் மாற்று சினிமாவும் பார்த்திருக்கேன். நீங்க தமிழ்ல பல படங்கள் எடுத்தீங்களே, அந்தப் படங்களோட ஒரிஜினல் வெர்ஷனையும் பார்த்திருக்கேன்” என்று சொல்லவேண்டும் போலிருந்தது. ஆனால் சொல்லவில்லை. சொல்ல இயலாது. சொல்ல முடியாது.சொல்லக் கூடாது…

எனக்கு நன்றாகத் தெரியும். நான் அங்கு சத்ய ஜித்ரே என்று சொல்லியிருந்தால் அவர் என்னை அரவணைத்திருப்பார். ஆனால் சத்ய ஜித்ரேவின் பெயரை உதிர்க்க எனக்கு விருப்பமில்லை. சத்ய ஜித்ரே ‘இந்திய புது அலை’ சினிமாவின் தந்தை, பல தரமான படங்களை இயக்கியவர் என்று நான் அறிவேன். எனக்கும் அவர் படங்கள் பிடிக்கும். அதனைக் கொண்டாடுவதில் தவறொன்றும் இல்லை. ஆனால் சத்ய ஜித்ரே படைப்புகளை ஆராய்ந்து அவரின் ஆளுமை இந்தக்காலத்திற்கு எப்படிப் பொருந்தும் என்று சிந்திப்பதை விடுத்து, சத்ய ஜித்ரே சத்ய ஜித்ரே என்று பெயர் உதிர்ப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ‘பதேர் பாஞ்சாலி’ மட்டுமே தலை சிறந்த படம் என அறைகூவல் விடுக்கும் கூட்டத்தில் நான் சேர விரும்பவில்லை. விளைவு இறுதி வரை என்னால் உதவி இயக்குனர் ஆகமுடியவில்லை.

என்னிடம் இருந்த கதைகளையெல்லாம் தூக்கிக் குப்பையில்  போட்டுவிட்டு, மீண்டும் ஏதாவது ஒரு கார்ப்பரேட் கம்பனியில் நவீன கொத்தடிமையாகி விடலாம் என்று எண்ணியபோது வந்து சேர்ந்தார் அந்தப் புது நண்பர். சினிமாவில் நண்பர்கள் எளிதாகக் கிட்டி விடுவார்கள். எதிரிகள் மிகவும் எளிதாகக் கிட்டிவிடுவார்கள்.

அந்த நண்பர் இயக்கப் போகும் குறும்படத்திற்குக் கதை வேண்டும் என்றார். வெகு நாட்களாக யாரும் பிரசுரிக்க முன்வராத ‘நிரஞ்சனின் நாய்’ என்ற என் சிறுகதையை அவரிடம் கொடுத்தேன். (என் கதைகளைப் பலரும் பாராட்டி இருந்தாலும் யாரும் பிரசுரிக்க முன்வரவில்லை). அதை வைத்து அவர் இயக்கிய குறும்படம் பலரால் பாராட்டப்பட்டது என்று கேள்வியுற்றேன். அந்தப் படத்தை அவர் என்னிடம் காட்டவில்லை. ஏனென்று பின் ஒருநாள் விளங்கியது, அந்தப் படத்தின் கதைக்கு அவன் (இனிமேல் அவனுக்கு என்ன மரியாதை!) தன் பெயரைப் போட்டுக் கொண்டான். அவனுடைய நண்பர் என்று சொல்லிக் கொண்டு இன்னொருவர் என்னைத் தொடர்பு கொண்டார். “அவன் பண்ணுனது தப்புதான் ப்ரோ…” இன்னும் ஆதரவாக நிறைய வார்த்தைகள் சொன்னார். “மீட் பண்ணலாமா ப்ரோ ?”

மின்விசிறியின் சப்தம் தலைவலியைத் தந்தது. மிகப் பழைய மின்விசிறி. “ப்ரோ… கொஞ்சம் ஃபேன ஆஃப் பண்றீங்களா… குளுருது” என்றேன். ஒருவழியாக மின்விசிறி நின்றது. டீ வந்தது. குடித்து முடிக்கும் வரை காத்திருந்தான். மேஜையில் இருந்த ஒரு நாவலைக் கையில் எடுத்து பின் அட்டையைப் பார்த்தேன்.

“எப்டியும் இதப் படிச்சிருப்பீங்க?”

இல்லை என்று தலை அசைத்தேன். “ஐயோ” பதறினான். “இப்ப இந்த நாவல் இண்டஸ்ட்ரில ரொம்பப் பிரபலம் ஆச்சே… நீங்க படிக்கலனு சொல்றது ஆச்சர்யமா இருக்கு.

“மேஜிகல் ரியலிசம் ப்ரோ… பின்னியிருக்காரு…”

மேஜிகல் ரியலிசம் என்றால் என்னவென்று கேட்டிருந்தால், நிச்சயம் அவனுக்கு விளக்கத் தெரிந்திருக்காது. பெயர் உதிர்க்கும் பட்சிகள். நான் எதுவும் பேசவில்லை.

“நான் இவரோட ரைட்டிங்ஸ தொடர்ந்து ஃபாலோ பண்றேன். இவர் மாதிரி யாரும் எழுத முடியாது… நீங்க இவரோட மத்த புக்ஸ்லாம் படிச்சி இருக்கீங்களா?”

“இல்ல”

மீண்டும் அவன், “ஐயோ”

எனக்குப் பழைய ஞாபகம் வந்துவிட்டது. வேலையை விட்டுவிட்டு வந்த புதிதில், ஒரு பிரபல பதிப்பாளரிடம் தொலைபேசியில் பேச நேர்ந்தது. என் கதையைப் பதிப்பிக்க முடியுமா என்று கேட்டேன்.

“என்னலாம் படிச்சிருக்கீங்க?”

“நவீன தமிழ் இலக்கியம் படிச்சிருக்கேன். படிச்சுக்கிட்டு இருக்கேன்…”

“அதான்… என்னலாம் படிச்சிருக்கீங்க?”

“பிரதாப முதலியார் சரித்திரத்துல இருந்து, அஞ்ஞாடி வரைக்கும் படிச்சிருக்கேன்… நகுலன், கரிச்சான் குஞ்சு…” இன்னும் நான் படித்த ஏகப்பட்ட எழுத்தாளர்களைப் பற்றிப் பேசினேன்.

ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரின் பெயரைக் குறிப்பிட்டு, அவரைப் படித்திருக்கிறீர்களா என்று கேட்டார். இல்லை என்றேன். சிறிது நேர மௌனம். உரையாடலை முடித்துக் கொள்ள வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டோம். குறிப்பிட்ட எழுத்தாளரைப் படித்தால் தான் ஒருவனால் எழுத்தாளனாக முடியும் என்று கருதுகிறார் அவர். சர்வாதிகார மனப்பாங்கு அவருடையது. இன்று மீண்டும் அதே பெயரை இந்தப் பட்சி சொல்கிறது.

“என்ன ப்ரோ யோசிக்கிறீங்க ?”

சுதாரித்துக்கொண்டேன். “ஒண்ணுமில்ல… இதுவரை படிச்சதுல்ல. படிக்கணும்”

மீண்டும் நான் புத்தகத்தைப் புரட்டிப் பார்க்கத் தொடங்கினேன்.

“அவன் உங்களுக்குக் கிரெடிட் கொடுத்திருக்கணும் ப்ரோ… இல்லனா ஒரு அமெளண்ட்டாவது கொடுத்திருக்கணும்” நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தேன். அவன் தலையைக் குனிந்து கொண்டான். தொடர்ந்து பேசினான், என் கண்களை நிமிர்ந்து பார்க்காமலேயே.

“இல்ல. கஷ்டப்பட்டுக் கதை எழுதுறீங்க… எதுவுமே கொடுக்கலனா எப்டி?”

நான் அமைதி காத்தேன். “ஆனா. நான் அப்டி இல்ல ப்ரோ” வேகமாக டிராயரைத் திறந்து ஒரு கவரை எடுத்து என் கையில் கொடுத்தான்.

“வாங்கிக்கோங்க… ப்ளீஸ்…”

வாங்கி, பிரித்துப் பார்த்தேன். உள்ளே காசோலை இருந்தது. ஒன்றிற்குப் பக்கத்தில் நான்கு பூஜ்ஜியங்கள் இருந்தன. அதுவரை யாரும் கொடுக்காத பணம்.

“இது அட்வான்ஸ் தான் ப்ரோ… என் கூட நீங்க தைரியமா வர்க் பண்ணலாம். நான் ப்ரொஃபஷனல்…”

நான் மீண்டும் நிமிர்ந்து பார்த்தேன்.

“ஓ! என்னனு சொல்லல இல்ல. ஒண்ணுமில்ல ப்ரோ. இன்னும் எத்தனை நாள் அசிஸ்டண்ட் டைரக்டராவே இருக்கிறது. ப்ரொடியூசர் கிடச்சிட்டாரு. ஸ்கிரிப்ட் தான்…

…உங்கக்கிட்ட ஏதாவது ஸ்கிரிப்ட் இருக்கா ப்ரோ?” என்னைப் பேசவிடாமல் அவனே பேசினான்.

“இல்லாம இருக்குமா… வேலையெல்லாம் விட்டுட்டு ரைட்டர் ஆகியிருக்கீங்க…”

‘விட்டா பேசிக்கிட்டே இருப்பான்’. நான் காசோலையை மீண்டும் அவன் கையில் கொடுத்தேன். அவன் முகத்தில் சோகம் குடிகொள்ள ஆரம்பித்துவிட்டது.

“இன்ட்ரஸ்ட் இல்லயா ப்ரோ ?”

நான் புன்னகை செய்தேன். “என் பேர்ல ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கு” ஸ்பெல்லிங்கைச் சொன்னேன். புதியதொரு காசோலையை எடுத்துப் பிழையின்றி என் பெயரை எழுதிக் கொடுத்தான்.

அவன் கொடுத்த காசுக்கு ஒரு கதையைச் சொல்லவேண்டும். என் கதையை ஏன் சொல்ல வேண்டும்? எப்படியும் அவன் கிரெடிட் தரப் போவதில்லை. முந்தைய நாள் இரவு ஒரு ஆங்கிலப்படம் பார்த்தேன். நான்கு நண்பர்கள் சேர்ந்து குடிப்பார்கள். போதை தலைக்கேறிடும். பின் ஒரு நாள் முழுக்க என்ன நடக்கிறது என்பதே அவர்களுக்குத் தெரியாது. இந்தக் கதையை அப்படியே தலைகீழாக மாற்றினேன். நான்கு வழிப்போக்கர்கள் சேர்ந்து குடிப்பார்கள். பின் நண்பர்களாவார்கள். கதையை மதுரைப் பின்னணியில் அமைத்தேன். அவனுக்குக் கதை பிடித்திருந்தது. ஆவி எழுத்தாளானாக அவதாரம் எடுத்தேன். ஒருவாரத்தில் திரைக்கதையை எழுதி முடித்தேன். படம் சூப்பர் ஹிட். 120 ரூபாய் டிக்கெட் கொடுத்து தாம்பரத்தில் ஒரு திரையரங்கில் படத்தைப் பார்த்தேன்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்- கதிர்க்குமரன்

அது என்னுடைய பெயர் இல்லை. அது அவனுடைய பெயருமில்லை. சினிமாவிற்காக பெயரை மாற்றிக்கொண்டிருக்கிறான். என் கதைதான். நான் சொன்ன இடத்தில் பாடல்கள் வந்திருந்தன. ஆனால் க்ளைமாக்ஸிற்கு முன் வரும் குத்துப் பாட்டிற்கு நான் பொறுப்பல்ல. அந்தப் பாடல், மூலத்திரைக்கதையில் இடம்பெற்றிருக்கவில்லை. படத்தோடு பொருந்தாமல் தனித்துத் தெரிந்தது. ஆனால் மக்கள் ஆரவாரம் செய்தனர். ஒரு ஹிந்தி நடிகை ஆடிக்கொண்டிருந்தாள். பாடலில் ‘செழிப்பம்’என்ற வார்த்தை மட்டும் ஐந்து முறை வந்தது. தேசிய விருது பெற்ற கவிஞர் எழுதிய பாடல். ஒரு வழியாகப் பாடல் முடிந்தது. அதற்கு பின் என்னால் படத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. அங்கே பாடல் வந்திருக்கக்கூடாது. அவன் ஒரு நல்ல இயக்குனர் அன்று. நல்ல இயக்குனராக இருந்திருந்தால், அங்கே அந்த பாடலை வைத்திருக்க மாட்டான். அவன் என்ன செய்வான் பாவம்? ஒருவேளை தயாரிப்பாளர் ஐட்டம் பாடல் வைக்கச் சொல்லி அவனை வற்புறுத்தியிருக்கலாம். ஒரு பெரிய அரசியல்வாதியின் மகன்தான் தயாரிப்பாளர். அவன் அவரைப் பகைத்துக்கொள்ள விரும்பியிருக்க மாட்டான். நானும் அவன் இடத்தில் இருந்திருந்தால் அப்படிதான் செய்திருப்பேன்.

அந்தப் ப்ரொஃபஷனல் அதன்பின் என்னை அழைக்கவில்லை. குற்ற உணர்ச்சியாய் இருக்கலாம். ஆனால் அவனுடைய உதவி இயக்குனர் ஒருவன் அழைத்தான். பிரசுரமாகாத என் நாவலைத் திரைக்கதையாக்கிக் கொடுத்தேன். படம் ஓடவில்லை. ஆனால் அவன் தமிழ் சினிமாவிற்குக் கிடைத்த வரம் என்று அனைவரும் பாராட்டினார்கள். இப்படிதான் நான் முழுநேர ‘ஆவி எழுத்தாளன்’ ஆகி  போனேன். அதாவது, கிரெடிட் கிடைக்காது என்று தெரிந்தும் பிறருக்காக, வெறும் பணத்திற்காக எழுதும் ‘நிழல் எழுத்தாளன்’ ஆகிப்போனேன்.  என் வங்கிக் கணக்கில் பணம் அதிகமாகத் தொடங்கிற்று. நிறைய பேர் என்னை அழைப்பார்கள். நிறைய எழுதிக் கொடுத்திருக்கிறேன். ஒரு உண்மையைச் சொல்ல வேண்டுமெனில், போன தீபாவளிக்கு, அந்தப் பிரபல மல்டிப்ளெக்ஸ் திரையரங்கில் ஆறு படங்கள் வெளியாயின. அதில் ஒன்று தெலுங்கு படம். அந்த ஆறு கதைகளும் என்னுடையதுதான். பெரிய தலைகளுக்கெல்லாம்கூட கதை எழுதி இருக்கிறேன். அந்தப் பிரபல நடிகன் பல வேடங்களில் நடித்த, அந்தப் படத்தின் கதையைத் தான் தான் எழுதியதாக ஒரு உதவி இயக்குனர் புகார் தெரிவித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். ஆனால் அது பொய். ஏனெனில் அந்தக் கதையை எழுதியவன் நான்தான்… அந்தப் பிரபல நடிகனுக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு வந்தார் அந்தப் பிரபல எழுத்தாளர். (அவர் இப்போது இல்லை. அவர் ஆத்மா சாந்தி அடையட்டும்). அவரைச் சொல்லிக் குற்றமில்லை. இறுதி வரை அவரை வசனகர்த்தா என்றே தமிழ் சினிமா அழைத்தது. ஆனால் அவர் வசனகர்த்தா அன்று. சிறந்த திரைக்கதை ஆசிரியர். அவர் ஏராளமான படங்களுக்கு கதை திரைக்கதை எழுதியிருந்தாலும், அவருக்கு வசனகர்த்தா என்ற கிரெடிட் மட்டுமே மிஞ்சியது. அந்த எழுத்தாளரே அதைப்பற்றி அலட்டிக் கொள்ளவில்லை. நான் ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும்.

ஆனால் அலட்டிக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. காரணம், தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளர்களாக நான் கருதும் இருவரில் இவரும் ஒருவர். இன்னொருவர் அசோகமித்திரன். ஆனால் இறுதி வரை தமிழ் இலக்கிய உலகம் அவருக்கு அங்கீகாரம் வழங்கவில்லை.

அவருக்கும் தெரிந்திருக்கவில்லை, அந்தப் பிரபல நடிகன் திரைப்படத்தின் உண்மையான கதாசிரியர் நான் தான் என்று. ஆனால் இதற்கெல்லாம் நான் அலட்டிக் கொள்ளக் கூடாது. என் கதையைத் திருடிவிட்டார்கள் என, யாரையும் எதிர்த்துக் கொடிபிடிக்க முடியாது. இருக்கும் ‘ஆவி எழுத்தாளன்’ வேலையும் போய்விடும். என் தந்தை ஒண்ணும் பிரபல தயாரிப்பாளர் அன்று. என் பாட்டன் மார்லன் பிராண்டோ அன்று.  என்னால் வேறு எப்படியும் திரைத்துறையில் நுழைய முடியாது. நீந்த முடியாது. யாராவது ஒருவருடைய உதவியோடு, என்றாவது ஒருநாள் படம் இயக்கிவிடலாம் என்ற நம்பிக்கையில்தான், நான் யாரையும் பகைத்துக்கொள்வதில்லை. குறைந்த விலைக்கு என் கதைகளை விற்றுக் கொண்டிருக்கிறேன். என்னை உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, என்னைப் போல் பலருண்டு. அவர்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பியதில்லை, விரும்பப்போவதுமில்லை.

புகைப்படக்கலைஞன்- சிறுகதை

மெஹதிபட்டனம் பேருந்து நிலையம் சற்று விசித்திரமாக தான் இருந்தது. ஒரு பேருந்து நிலையம் போலும் இல்லாமல் மைதானம் போலும் இல்லாமல், ஒரு நெடுஞ்சாலை தாபாக் கடை போல் இருந்த அந்த இடத்தில், அவனை கவரும் வண்ணம் எதுவும் இல்லாததால், கேமராவை பைக்குள் வைத்துவிட்டு, கோல்கொண்டா செல்லும் பேருந்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.

ஊர்ஊராக சென்று புகைப்படம் எடுக்க வேண்டும் என்று ஆசைதான். வாரம் ஆறுநாட்கள் வேலைக்குச் செல்ல வேண்டும். ஒரு பொதுத்துறை வங்கியில் துணை மேலாளர் வேலை. திறமையற்ற மேலாளர்களை மூன்று மொழி கெட்ட வார்த்தைகளில் திட்ட வேண்டும் என்று தோன்றினாலும், அதை செய்யாமல் வாயை மூடிக் கொண்டு வேலைப்பார்த்துவிட்டு வார விடுமுறையை எண்ணிக் காத்துக்கொண்டு வாழ்க்கையை கிடத்திக்கொண்டிருந்தான். வார கடைசியில் தூங்குவதற்கே நேரம் போதாது. இதில் எங்கிருந்து புகைப்படம் எடுப்பது!

எங்கேயோ ஒரு நல்லவேலையை விட்டுவிட்டு, மிகப் பெரிய புகைப்படக் கலைஞனாக உருவெடுக்கும் பொருட்டு ஊர் ஊராக சுற்றிப் புகைப்படங்கள் எடுத்தும் அவன் எதிர்பார்த்த கோட்டை தொட முடியாமல் போனதாலும், வங்கியில் இருந்த ஆறு இலக்க சேமிப்பு நான்கு இலக்க தொகையாக மாறிப் போனாதாலும், மீண்டும் ஒரு வேலையில் வந்து அமர்ந்துக் கொண்டான். ஒருகாலத்தில் லட்சியம் கனவு என்று பேசிக் கொண்டிருந்த தன்னை புதிய இந்த வங்கி வேலை கொஞ்சம் கொஞ்சமாக தின்றுக் கொண்டிருப்பதை அவன் உணராமல் இல்லை. இதுவரை அவனுடைய எந்தப் புகைப்படத்திற்கும் பெரிய அங்கீகாரம் எதுவும் கிடைத்ததில்லை. ஒரு பிரபல பத்திரிக்கை நடத்திய புகைப்பட போட்டிக்கு தான் எடுத்த புகைப்படத்தை அனுப்பியிருந்தான். ஆனால் வேறொரு சராசரி புகைப்படம் தேர்வாகியிருந்தது. அந்தப் புகைப்படத்தை எடுத்தவர் அந்த பத்திரிக்கை  எடிட்டரின் தூரத்து உறவினரின் நண்பரின் மகனாம். இப்படி லட்சியத்தை விட யதார்த்தம் பெரியது என்பதை புரிந்துக் கொண்டதால், அவன் வங்கி வேலையை இறுகப்பிடித்துக் கொண்டான். வேலையில் இருந்துக் கொண்டே புகைப்படத் துறையில் சாதிக்க முடியும் என்று அவன் தனக்குத்தானே சொல்லிக்கொண்டாலும், ஒரு புகைப்படம் கூட எடுக்காமல் வங்கி வேலையில் ஏழுமாத காலம் ஓடிவிட்டது என்பது மனதை உறுத்தியது.

அப்போதுதான் செகுந்திராபாத்தில் வசிக்கும் நண்பன் சக்ரியின் திருமண பத்திரிக்கை இமெயிலில் வந்து சேர்ந்தது. திருமணத்தில் கேண்டிட் புகைப்படங்கள் எடுக்க முடியுமா என்று நண்பன் கேட்டிருந்தான். தன் கேமராவை தூசிதட்ட நேரம் வந்துவிட்டதாக எண்ணியவன் உடனே சரி என்று சொல்லிவிட்டான்.

சக்ரியின் நண்பன் க்ரிஷ் செகுந்திராபாத் ரயில் நிலையத்திற்கு வந்து இவனை மண்டபத்திற்கு அழைத்து சென்றான். சக்ரியுடையது பெரிய குடும்பம். அதனால் நிறைய புகைப்படங்கள் எடுக்க வேண்டியிருந்தது.

“கப்புள்ஸ மட்டும்தான் போட்டோ எடுப்பேன். ஐ ஆம் ஆர்ட் ஃபோட்டோகிராபர். எல்லாரையும் எடுக்க சாதாரண ஃபோட்டோகிராபர் இல்ல” இப்படியெல்லாம் ஒருகாலத்தில் பேசியிருக்கிறான். இப்போது எந்த ஈகோவுமின்றி எல்லோரையும் படம் பிடித்தான். விடிந்து திருமணம் முடிந்ததும், கிரிஷ் இவனை பேருந்து நிலையம் வரை அழைத்து வந்தான். க்ரிஷ் பேசிக்கொண்டே வந்தான். தான் ஒரு தெலுங்கு சினிமா இயக்க முயற்சித்ததாகவும் அது கடைசி நேரத்தில் சாத்தியப் படாமல் போனதாகவும், இப்போது எழுத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகவும் அவன் சொன்னான். ஒரு கட்டத்தில் அவன் சொன்னது எதுவுமே இவன் மனதில் பதியவில்லை. க்ரிஷை பத்தி யோசிக்க தொடங்கிவிட்டான்.

‘க்ரிஷ் என்னைவிட ஐந்து வயது பெரியவன். வேலையை விட்டுவிட்டு, எழுத்தில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறான். பணத்திற்காக அவ்வப்போது ஒரு இன்ஸ்டிட்யூட்டில் ஆங்கில வகுப்பு எடுக்கிறான். ஆனால் பயணம் செய்வதும் எழுதுவதை மட்டுமே மூச்சாக கொண்டிருக்கிறான். ஆனால் நான் பாதியிலேயே பயந்து பின்வாங்கி விட்டேன்.’

அவனுக்கு அசிங்கமாக இருந்தது, தன்னைப்பற்றி நினைக்கவே. எல்லாம் காரணத்திற்காகதான் என்று சொல்லி தன் மனதை ஆசுவாசப் படுத்திக் கொள்ள முயன்றான். ஆனால் முடியவில்லை.

‘ஏன் பணம் மட்டுமே முக்கியமாக படுகிறது! அது வேண்டாமென்று முடிவு செய்துவிட்டு வாழ்ந்துவிட முடியாதா?

‘பணத்தை தேடிப் போகும்போது ஏன் கனவுகளை புதைத்துவிட வேண்டியிருக்கிறது. ஒருவேளை வாழ்தல் என்று ஒன்று கிடையவே கிடையாதா? கனவுகள் லட்சியங்கள் என்பதெல்லாம் யதார்த்தம் எனும் பூதத்திடமிருந்து தப்பிப்பதற்காக நமக்கு நாமே கற்பனை செய்துக் கொள்ளும் விஷயங்களோ? பிறத்தல் இருத்தல் இறத்தல் என்ற விபத்தில், தேடல் என்பது சாத்தியப்படாத அல்லது தேவையற்ற ஒன்றோ?

“சோ ருபையா தேதோ. ஃபோட்டோ லேலோ” ஒரு குரல் இவன் சிந்தனையை கலைத்தது. நிமிர்ந்து பார்த்தான். இரண்டு திருநங்கைகள் இவன் தோல் பையில் மாட்டியிருந்த கேமரா பையை பாத்தவாறே நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் திருநங்கைகள் அல்ல, வேஷதாரி ஆண்கள் என்று புரிந்து கொண்டான். பத்துரூபாயை எடுத்து நீட்டியதும், அவர்கள் வாங்கிக்கொண்டு நகர்ந்தனர். ஒருவன் மட்டும் திரும்பி, “நூறு ரூபாய் குடுத்துட்டு ஃபோட்டோ எடுத்துக்கோ, ஃபாரினர்னா ஆயிரம் ரூபாய் ஆவும்” என்றான்.

ஸ்ட்ரீட் போட்டோக்ராபி. தெருவில் இருக்கும் யாரை வேண்டுமானாலும் எடுக்கலாம். யார் கேட்ப்பார்கள். சில நேரங்களில் இப்படி விளிம்பு நிலை மனிதர்களிடம் காசை கொடுத்து, அவர்கள் சோகமாக இருப்பது போல் புகைப்படம் எடுப்பார்கள். இணையத்தில் பதிவேற்றம் செய்தால் வேகமாக பிரபலமாகிவிடலாம். அவனும் ஒரு ஸ்ட்ரீட் போட்டோக்ராபர் தான். ஆனால் அப்படிபட்ட நேர்மையற்ற சூடோ புகைப்படக்காரர்களை எண்ணினால் அவனுக்கு அருவருப்பாக இருக்கும். இவன் கேமரா பழுதாகிவிட்டதாக அந்த வேஷதாரிகளிடம் சொல்லிவிட்டு திரும்பிக்கொண்டான். அவர்கள் முகம் சுழித்துவிட்டு நகர்ந்தனர். கோல்கொண்டா பேருந்து காலியாக வந்தது. வந்த வேகத்தில் எங்கெங்கிருந்தோ வந்த பலரும் மிகவும் வேகமாக அதில் ஏறிக் கொண்டனர். இவனுக்கு அமர்வதற்கு இடம் கிடைக்கவில்லை. நின்றுகொண்டான். பாதையில் வளைவுகள் நிறைய இருந்ததால் பேருந்து மிக மெதுவாக நகர்ந்தது. சிந்தனை மட்டும் வேகமெடுத்தது.

‘வாழ்வில் தேடல் என்பது சாத்தியப்படாத அல்லது தேவையற்ற ஒன்றோ? மனிதன் தன்னை புத்திசாலியாக கருதிக்கொண்டு அதை நிரூபிக்கும் பொருட்டே  கலை, படைப்பு என்று குழப்பிக் கொள்ளுகிறோனோ! மனிதனின் மிகப் பெரிய தேவையே ஒரு கை சோறாக தான் இருந்துவிட முடியும். காமத்தைக் கூட எதையாவது செய்து அடக்கிக் கொண்டுவிட முடியும்? ஆனால் பசியை எப்படி அடக்குவது? அப்படியானால் அந்த சோற்றுக்காக தான் மனிதன் ஓடுகிறானா? அப்படி வேலை வேலை என்று ஒடுபவனால் அந்த சோற்றை சரியான நேரத்தில் உண்ண முடிகிறதா?’

வங்கியில் மதியம் ஒரு மணி முதல் ஒன்றரை மணிவரை உணவு இடைவேளை. ஆனால் ஒருநாளும் அவன் சரியான நேரத்தில் உணவு உண்டதில்லை. வெறும் ஐந்து நிமிடத்தில் வேகவேகமாக உணவை விழுங்கவேண்டும். இதை எண்ணும் போது கோபம் அதிகமாயிற்று, அவனுக்கு அவன்மேலேயே.

‘உண்மையில் மனிதனுக்கு பிரச்சனை வர இரண்டு காரணங்கள் தான் இருக்க முடியும். ஒன்று வேலையில் இருப்பது, இரண்டு, வேலையில்லாமல் இருப்பது. வேலையில்லாமல் இருந்தால் வேலைக்காக ஏங்குகிறோம். வேலையில் சேர்ந்தால் இயல்பை பறிக்கொடுத்து வேலையை வெறுக்கிறோம்.

‘பொதுவாக மனம் ஒருவகையான சொகுசுத்தனத்திற்கு பழகி விடுகிறது. சிலர் அதை இழக்க அஞ்சுகிறார்கள். அதனால் தனக்கு பிடித்ததை செய்யமுடியாமல் ஏங்குகிறார்கள். சிலர் அதை உடைத்துவிட்டு தனக்கு பிடித்ததை செய்ய தொடங்கிவிடுகிறார்கள். ஆனால் அவர்களும் அந்த தேடலில் ஒரு சொகுசுத்தனத்தை தான் எதிர்பார்க்கிறார்கள். அதை அடைய முடியாதபோது மனம் உடைந்துவிடுகிறார்கள். அதில் சிலர் பாதியிலேயே திரும்பி பழைய பாதைக்கு திரும்பி, மீண்டும் அந்த ஏக்கம் நிறைந்த கூட்டத்தோடு சேர்ந்துக் கொள்கிறார்கள். போராடி தன் லட்சியத்தை எட்டிப் பிடித்தாலும், வெற்றிக்கு பின் சூனியம் தானே இருக்க முடியும்?’

அவன் ஒரு முடிவை எட்டுவதற்கு முன் பேருந்து கோல்கொண்டாவை அடைந்தது. நுழைவு சீட்டு கொடுப்பவன் ஐந்துரூபாய் சில்லறையாக தரும்படி சொன்னான்.

“பாத் மே லேலுங்கா…” என்று நூறு ரூபாயை நீட்டினான்.

“பாஞ்ச் ருபையா  தேதோ….” என்றவாறே அவன் முகத்தை திருப்பிக் கொண்டான். நுழைவு சீட்டுக் கொடுப்பவனுக்கு இவனைப் பிடிக்கவில்லை போலும். இவன் வரும்போது மீதத் தொகையை வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லியும் அவன் ஒப்புக்கொள்ளவில்லை.

இவன் அருகாமையிலிருந்த ஒரு கடைக்குள் சில்லறை மாற்றும் பொருட்டு நுழைந்தான். வாசலுக்கு நேராக இருந்த கல்லாவில் அமர்ந்திருந்தவனுக்கு பதினைந்து வயது தான் இருக்கும். உள்ளே வியாபாரம் பார்த்தவனுக்கு பத்து வயது இருக்கும்.

“அஞ்சு ரூபாய் பிஸ்கட் இருக்கா?”

அவன் இல்லை என்றான்

“பதினஞ்சு ரூபாய்க்கு ஏதாவது பிஸ்கட் இருக்கா?”

அந்த சிறுவன் வேகமாக, “டிக்கெட் தரமாட்டேனு சொல்ட்டானா?” என்று வினவினான். ‘நுழைவு சீட்டுக் கொடுப்பவனுக்கு பலரையும் பிடிக்காது போல’

சிறுவன் ஒரு பிஸ்கெட் பாக்கெட்டை மேஜை மீது வைத்தான். நூறு ரூபாயை வாங்கிக் கொண்டு என்பதைந்து ரூபாயை திருப்பிக் கொடுத்தான்.  பிஸ்கெட் பாக்கெட்டில் பத்து ரூபாய் என்று தான் அச்சிடப்பட்டிருந்தது. ஏன் விலை அதிகம் என்று கேட்டவனிடம், சுற்றுலா தளத்தில் அப்படி தான் என்று அந்த சிறுவன் பதில் அளித்தான்.

“அரே. ஐசே கைசே ஹோகா பாய்… டூரிஸ்டு ப்ளேஸ்னா ஒருவா ரென்டுரூவா வச்சு விக்கலாம். அஞ்சு ரூவாயா!”

அது வரை கல்லாவில் அமைதியாக அமர்ந்திருந்தவன், சில்லறையில்லை என்றவாறே கல்லாவை திறந்து காட்டினான். அதில் சில்லறை குறைவாக தான் இருந்தது. வேண்டுமானால் இதை வைத்துக் கொள்ளுங்கள் என்று இரண்டு ரூபாய் குச்சிமிட்டாய் ஒன்றை நீட்டினான். இவன் அதை வாங்காமல் அந்த சிறுவர்களையே உற்றுப் பார்த்தான். இருவரும் தலையில் குல்லா போட்டிருந்தார்கள். முஸ்லிம் சிறுவர்கள். சுத்தமான வெள்ளை உடை அணிந்திருந்தார்கள். ஆனால் முகம் களைத்திருந்தது. வறுமையாக தான் இருக்க முடியும். இல்லையேல் படிக்க வேண்டிய வயதில் ஏன் வேலை செய்கிறார்கள் என்று எண்ணினான். வெளியே, கோல்கொண்டாவிற்கு சுற்றுலா வந்த பள்ளி சிறுவர் கூட்டம் ஒன்று கடந்து சென்றது.

“அந்த அஞ்சு ரூபாய் வேணாம். நீயே வச்சுக்கோ. உங்க ரெண்டு பேரையும் சேர்த்து ஒரு போட்டோ எடுத்துகிறேன்”

போட்டோ என்றதும் சிறுவர்கள் சந்தோஷமாக தலையாட்டினார்கள். இரண்டு சிறுவர்களையும் அருகருகே அமரச்சொல்லி, வாசலை பார்க்க சொன்னான். இவன் வெளியே வந்து தார் சாலையைக் கடந்து கடைக்கு எதிரே, அந்த சிறுவர்களை பார்த்தவாறு நின்றான். அந்த சிறுவர் குழு கடையை கடக்கும்போது இவன் புகைப்படம் எடுத்தான். சிறுவர் குழுவுக்கு பின்னால், கடையினுள் நிற்கும் அந்த இரண்டு சிறுவர்களின் சோகமான முகம் போட்டோவில் தெளிவாக தெரிந்தது. அந்த கடைச் சிறுவர்களிடம் புகைப்படத்தை காட்டினான். அவர்கள் சந்தோஷமாக பார்த்தார்கள். அதற்கு மேல் அவனால் அங்கு நிற்கமுடியவில்லை. குற்ற உணர்ச்சியாய் இருக்கலாம். வேகமாக அங்கிருந்து நகர்ந்தான். தோல்வி உணர்ச்சியை தவிர்க்க குற்ற உணர்ச்சியை கடந்துதான் ஆக வேண்டும் என்று யாரோ மனதிற்குள் சொல்வது போல் இருந்தது.

வேகமாக கோல்கொண்டா வாயிலில் நுழைந்தான். பயணச்சீட்டு வாங்கும் போது, சீட்டு கொடுப்பவன் இவனை பார்த்து கேலியாக சிரித்ததை இவன் கவனிக்கவில்லை. அவனால் எதையுமே கவனிக்க முடியவில்லை. மூச்சு இரைக்கும் வரை மலை மீது ஏறி, அதற்கு மேல் முடியாது என்று தோன்றியதால் பால ஹிசாரின் அடிவாரத்தில் அமர்ந்தான். பையிலிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து தண்ணீரை வேகமாக குடித்தான். தொண்டை அடைத்தது,

கேமராவை எடுத்து கடைசியாக எடுத்த அந்தப் புகைப்படத்தைப் பார்த்தான்.

‘வெறும் பதினைந்து நிமிட புகழுக்குதான் ஏங்கிக்கிடக்கிறோமா?

சூழ்நிலை கனவுகளை கொஞ்சம் கொஞ்சமாக தின்றுவிடுகிறது. கனவுகளை சாத்தியமாக்கும் முயற்சிகு நிறைய உழைப்பை தர வேண்டியிருக்கிறது.  அதற்கு நிறைய நேரத்தையும் செலவழிக்க வேண்டியிருக்கிறது. சூழ்நிலைகள் நேரத்தை பிடிங்கிக் கொள்வதால், போலி புகழ் தேடி அலையத் தொடங்கிறோம். வேலையிலிருந்துகொண்டே புகைப்படத் துறையிலும்  கவனம் செலுத்த வேண்டும்’

அந்த சிறுவர்களின் புகைப்படத்தை கேமராவிலிருந்து அழித்தான்.

“அன்னையா” என்று ஒரு குரல் வர, நிமிர்ந்தான். ஒரு சிறுவன் நின்றுகொண்டிருந்தான்.

“அப்பாக்கு கொஞ்சம் தண்ணீ குடுங்களேன்” என்று அவன் தெலுங்கில் கேட்டான். இவனிடமிருந்து தண்ணீர் பாட்டிலை வாங்கிக்கொண்டு அந்த சிறுவன் ஓடினான். அந்த அப்பாவிற்கு அறுபது வயது இருக்கும். தளர்ந்திருந்தார். இவனை பார்த்து புன்னகை செய்தார். இவனும் சம்ப்ரதாயமாக பதில் புன்னகை செய்தான். தண்ணீரை குடித்துவிட்டு, இவனிடம் வந்து பாட்டிலை கொடுத்து விட்டு நன்றி சொன்னார்.

“வெல்கம் சார்”

அவர் ஆங்கிலத்திலேயே தொடர்ந்தார்.

“ப்ரொஃபஷனல் போட்டோகிராபரா?”

“பேஷன் சார். பாங்க்ல வேலை செய்றேன்”

“நீங்க இங்க போட்டோ எடுத்துக்கலாயா? இந்த ஹைட்ல இருந்து எடுத்துகிட்டா நல்லா இருக்கும்”

இவன் என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தான், அவர் தன் மகனிடம் தெலுங்கில் சொன்னார், “டேய் சாரா போட்டோ எடு. அவர் எவ்ளோ பேர எடுத்துருப்பார். நீ அவர எடுக்கப்போற, நல்லா எடுக்கணும்”

இவனிடம் திரும்பி, “உங்க கேமராலயே எடுக்கலாமே” என்றார். இவன் கேமராவை அந்த சிறுவனிடம் கொடுத்து, எந்த பட்டனை அழுத்த வேண்டுமென்று சொன்னான். பின் அந்த அப்பா சொன்ன இடத்தை நோக்கி நகர்ந்தான்.

இடுப்பாளவு இருந்த சுவற்றில் ஏறி அமர்ந்து, அதன் ஓரத்தில் இருந்த தூணில் சாய்ந்துக் கொண்டான். கிளிக். அந்த சிறுவன் எடுத்தப் புகைப்படம் அவனுக்கு திருப்தி அளிக்கவில்லை. அதை புரிந்துக் கொண்ட அப்பா, “என்னடா போட்டோ? ஒரு ஆங்கில் இல்ல… எப்பதான் கத்துக்கப்போறியோ?” என்று அதட்டினார்.

“சார், நீங்க மறுபடியும் போங்க, நான் எடுக்குறேன்” என்றார். இவனுக்கு விருப்பமில்லாவிடினும், பெரியவர் சொல்கிறார் என்ற மரியாதைக்காக அதே இடத்தில் சென்று அமர்ந்தான்.

“வெளிய பாருங்க தம்பி” என்று சொல்லி இரண்டு மூன்று புகைப்படங்கள் எடுத்தார். டிஸ்ப்லே மோடிற்குள் எப்படி செல்வது என்று.தெரியாமல் விழித்துக் கொண்டிருந்த அவரிடமிருந்து, கேமராவை வாங்கினான். ஆச்சர்யமாக இருந்தது. புகைப்படம் அருமையாக வந்திருந்தது. அந்த புகைப்படத்தில் அந்த உயரத்தின் பின்னனியில், கீழே இருந்த தர்பார்களும், சிதிலமடைந்த அரண்மனைகளும் நன்றாக தெரிந்தன.

‘நல்ல டெப்த்’ எண்ணினான். அந்த அப்பாவின் கண்கள் சந்தோசத்தில் பிரகாசித்ததை கவனித்தான்.

“நல்லா வந்திருக்கு சார்” என்று இவன் நன்றி சொன்னான். அவர் புன்னகை செய்துவிட்டு பால ஹிசார் நோக்கி படி ஏறத்தொடங்கினார். நான்கு படிகள் ஏறியதுமே அவருக்கு மூச்சு வாங்கிற்று. சற்று நிதானித்தவர் தன் மகனிடம், “மாடர்ன் கேமரா… நான்லாம் ஃபிலிம்ல எடுக்கும்போது ஒருவாரம் வெயிட் பண்ணுவேன் போட்டோவ பாக்க.. அதெல்லாம்  ஃபிலிம் இன்ஸ்ட்டிட்யூட்ல படிச்சா காலம்…” என்று சொல்வதை கவனித்தவாறு இவன் கடைசி படியிலேயே நின்றான். உச்சி தெரிந்தது.

மேற்கொண்டு நடக்கத் தொடங்கிய அப்பா, “போட்டோ நல்லா வந்திருக்கு பாத்தியாடா…!” என்று சந்தோஷமாக சொன்னார். அவருடைய பையன் அவர் சொல்வதில் பெரிய ஆர்வம் இல்லாமல் படி ஏறிக்கொண்டிருந்தான். அவரை பார்க்கும் போது அவனுக்கு பயமாக இருந்தது. வேலையில் இருந்துக் கொண்டே புகைப்படத் துறையில் சாதிக்க முடியும் என்று மீண்டும் ஒருமுறை தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.

நிகழ்தகவுகள் – சிறுகதை

உடல் களைத்திருந்தது. எங்காவது சிறிது நேரம் அமர்ந்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. இன்னும் சிறிது தூரம் நடந்தால் பூங்காவையே அடைந்துவிடலாம் என்பதால் முயன்று நடந்தான். சாலை ஓரமாக ஒரு கிழவர் பல வெள்ளை சட்டைகளை அடுக்கி வைத்து வியாபாரம் செய்துக் கொண்டிருந்தார். அந்த பக்கம் வரும் போதெல்லாம் அவரை பார்த்திருக்கிறான். அவரிடம் யாரும் சட்டை வாங்கி அவன் பார்த்ததில்லை. அவருக்கு என்ன வருமானம் வரும் என்ற கேள்வி மட்டும் அவரை பார்க்கும்போதெல்லாம் மனதில் எழும். எப்படி இருந்தாலும் அவர் தன்னைவிட அதிகமாகதான் சம்பாதிப்பார் என்று எண்ணி தனக்குள் சிரித்துக் கொள்வான்.

இன்று சிரிப்பு வரவில்லை. எல்லாமே சூனியமாகி விட்டது போல் ஒரு தோற்றம். எதுவும் கண்ணுக்கு தெரியவில்லை. பூங்காவின் நுழைவு வாயிலில் பிரம்மாண்டமாக அமர்ந்திருந்த சிவன் மட்டும் கண்ணில் பட்டார். சிவன் சிலையை நிமிர்ந்து பார்த்து மனதிற்க்குள்ளேயே வேண்டிக் கொண்டான். உள்ளே இடது மூலையில் சற்று நிழல் இருந்தது. அங்கிருந்த மேடை மீது அமர்ந்தான். அப்படியே படுத்து உறங்கிவிடு என்று உடல் சொல்லிற்று. மனமும் வலுவிழந்திருந்தது. இரண்டு நாட்களாக அழைந்துக் கொண்டிருக்கிறான். எவ்வளவு முயன்றும் முப்பதாயிறம் தான் புரட்ட முடிந்தது. இன்னும் மூனரை லட்சம் தேவைப்படுகிறது. முழு பணத்தையும் செலுத்தியப் பின் தான் ஆபரேஷன் செய்ய முடியும் என்று மருத்துவமனையில் சொல்லிவிட்டார்கள். அப்பா ஆரோக்கியமாகதான் இருந்தார். இப்போது சிறுநீரகத்தில் புற்றுநோய் என்கிறார்கள். அது அருகாமையிலுள்ள திசுக்களுக்கு பரவிக் கொண்டிருப்பதால் ஒரு வாரத்திற்குள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். இதுவரை பரிசோதனை, ஸ்கேன் என ஐம்பதாயிரம் செலவாகி விட்டது. அப்பாவின் சேமிப்பையையும் தணிகாச்சலம் மாமா கொடுத்த காசையும் வைத்து சமாளித்துவிட்டான். அவனுடைய பர்சில் முன்னூற்றி சொச்சம் இருந்தது. இன்றைய நிலையில் அவ்வளவுதான் அவனுடைய மதிப்பு.

கடந்த சில வருடங்களாகவே அப்பாவிற்கும் அவனுக்குமான உறவு கரடுமுரடாக தான் இருந்து வந்தது. அவன் வேலையை ராஜினாமா செய்யப் போகிறேன் என்று சொன்னபோதே அப்பா எதிர்ப்பு கொடி பிடித்தார். அதுவும் அவன் சினிமாவில் உதவி இயக்குனராக சேர்ந்துவிட்டான் என்பதை அறிந்ததும் அப்பா நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டார். அப்பாவுடன் போர் வெடிக்கும் போதெல்லாம் அம்மாதான் சமாதானக் கொடிப் பிடிப்பாள்.

“எல்லாரும் ஒரு நாள் சாவதானமா போறோம். எனக்கு புடிச்ச வேலைய செய்யணும்னு நினைக்குறேன். தப்பா?”

“ஆமா பெரிய வேலை. டைரக்டருக்கு பொட்டி தூக்குற வேலை” அப்பாவும் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு பேசுவார்.

“அவருக்கு B.P இருக்குடா. நீதான்டா அடங்கிப் போனும்” அம்மா இவனைதான் எப்போதும் ஆசுவாசப் படுத்துவாள். ஆனால் பலன் இருக்காது. இவன் மீண்டும் குதிப்பான்.

“படம் எடுக்குற மூஞ்சப் பாரு. அன்ஃபிட் பெல்லோ. வடபழநில பிச்ச தான் எடுக்கப் போறான்”

பிரச்சனை உச்சத்தை அடையும் போதெல்லாம், தன் கணவனையும் மகனையும் எப்படி அடக்க வேண்டும் என்று அம்மாவுக்கு தெரியும்.

“தட்டுவாணி முண்ட. என்ன இந்த குடும்பதுல குடுத்துட்டா…” அம்மா தன் வாழ்க்கையையே நொந்துக் கொள்ள தொடங்கியதும் அப்பாவும் பிள்ளையும் தத்தம் வேலையை பார்க்கத் தொடங்கிவிடுவார்கள். மீண்டும் ஓரிருநாளில் போர் நடக்கும். இப்படியாக போர் செய்து இருமனதாக சமாதானம் ஆகி, மீண்டும் முட்டிக் கொண்டு காலம் கடந்துக் கொண்டிருந்த ஒரு காலை வேளையில் அவனும் வழக்கம் போல் ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்ல கிளம்பினான். இரண்டரை வருடங்களுக்கு முன்பு தன் முதல் திரைக்கதையை எழுதி எடுத்துக் கொண்டு கிளம்பிய அன்று இருந்த வேகம் இப்போதெல்லாம் இல்லை. ஒரு கதைச் சொல்லச் செல்லும் இடத்தில் வேறொரு கதையை சொல்ல சொல்வார்கள். இப்படியாக இரண்டு மூன்று திரைக்கதைகள் எழுதி முடித்துவிட்டான். ஆனால் எதுவும் அடுத்தக் கட்டத்திற்கு நகரவில்லை. வீட்டு வாசற்படியை கடக்கையில் கையில் பால், தினசரியுடன் அப்பா உள்ளே நுழைந்தார். தன் பாணியில் ஆசீர்வாதம் செய்யாமல் அவனை வெளியே எப்படி அனுப்புவது என்று நினைத்தாரோ என்னவோ,

“அடுத்த ப்ரொடியூசரா? விளங்கிடும்” என்று சொல்லிவிட்டு இவன் பதிலை எதிர்பார்க்காதவராய் அவனை கடந்து சென்றார். அப்பாவிற்கு உடலெல்லாம் வியர்த்திருந்ததை கவனித்தான். மேலும் அவர் உடலில் ஏதோ நடுக்கும் இருந்தது. அதனால் வழக்கத்திற்கு மாறாக அப்பாவிற்கு பாந்துவமாக பதிலளித்தான்.

“இது புது கதைப்பா. பெரிய ஹீரோ சப்ஜெக்ட். கன்பார்மா வொர்க் ஆகும்”

“ஆமா பெரிய….” சொல்லிமுடிப்பதற்கு முன் அவர் வாசலிலேயே சரிந்து விழுந்தார்.

“அம்மா”

சப்தம் கேட்டு அம்மா பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்தாள்.

யாரோ தன் தோளை உலுக்குவது போல் இருந்தது. விழித்துப் பார்த்தான். சிவனின் முதுகு தெரிந்தது. கண்களை துடைத்துக் கொண்டான். இப்போதுதான் தாம் எங்கு இருக்கிறோம் என்று விளங்கியது. “தம்பி இங்கலாம் தூங்கக் கூடாது.” என்று சொல்லிவிட்டு பூங்கா காவலாளி கடந்து சென்றான். சட்டைப் பையிலிருந்து மொபைல் போனை எடுத்து நேரத்தை பார்த்தான். 4.05. இந்நேரம் பாஸ்கர் சார் வந்திருக்க வேண்டும். பூங்காவில் இருந்த குழாயில் முகத்தை கழுவிக் கொண்டான். பாஸ்கர் சாருக்கு ஃபோன் செய்யலாமா என்று யோசிக்கும்போது பாஸ்கரின் இருச்சக்கர வாகனம் பூங்காவின் முன் வந்து நின்றது.

இருவரும் பூங்காவை வலம் வந்தவாறே பேசினர். பாஸ்கர் பேச இவன் அமைதியாகக் கேட்டிக்கொண்டிருந்தான்.

“அப்பா தான்பா முக்கியம். படம் எப்ப வேணாப் பண்ணலாம். உன் கதை ஒன்லைன் புடிச்சிருந்துனுதான் சார் கிட்ட வந்து சொல்ல சொன்னேன். ஆனா நீ வராத வரைக்கும் நல்லது. அவர் ப்ரொடியூஸ் பண்ண ரெண்டு படத்துலயும் டிஸ்ட்ரிபியூஷன் பிரச்சனை. இதுல ஃபைனான்ஷியரோட தகராறு வேற. நீ இப்ப சார்கிட்ட வந்து கதை சொன்னாலும் வேஸ்ட். அவருக்கு கூளுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை. கதைய வாங்கிவச்சுகிட்டு இழுத்தடிப்பாரு. வேற ஐடியா சொல்றேன் கேக்குறியா?”

அவன் என்ன என்பது போல் பார்த்தான்

“ஆப்ரேஷனுக்கு காசு வேணும்னு சொன்னே இல்ல…?”

அவன் அப்போது இருந்த சூழலில் தலை அசைப்பது  மட்டுமே எளிதாக இருந்தது.

“நமக்கு தெரிஞ்ச டைரக்டர் ஒருத்தர் இருக்கார். பெரிய பார்ட்டி. அடுத்த படத்துக்கு கதை தேடுறாறு. உன் சப்ஜெக்ட் நல்லா இருக்கும்னு தோணுது. இது பெரிய ஹீரோ சப்ஜெக்ட். உன்னாலலாம் ஹாண்டில் பண்ண முடியாது. ஸ்கிரிப்ட்ட குடுத்துரு. ரெண்டு நாள்ல நல்ல அமெளண்ட் வாங்கிக்குடுத்துறேன்”

“கிரெடிட் சார்!”

பாஸ்கர் இவன் அருகில் வந்து இவன் தோளில் கைப்போட்டான். “படம் ஆயிரம் பண்ணலாம். முதல அப்பாவ பாரு. அப்பறம் வேற கதை பண்ணிக்கலாம்.” சொல்லிவிட்டு பாஸ்கர். செருப்பை ஓரமாக கலட்டிவிட்டு சிவனை பார்த்து கன்னத்தில் போட்டுக்கொண்டான். இவன் பூங்காவின் வெளியே பார்த்தான். அந்த கிழவரிடம் ஒருவன் சட்டை வாங்கிக் கொண்டிருந்தான்.

***
அப்பாவுக்கு அறுவை சிகிச்சை முடிந்து சுயநினைவு திரும்பி இருந்தது. ஐ.சி.யூவுக்குள் ஒருவருக்கு மட்டுமே அனுமதி என்பதால் அம்மா உள்ளே இருந்தாள். தணிகாச்சலம் மாமா அப்பாவிற்கு சில மாத்திரைகள் வாங்க சென்றிருந்தார். ஐ.சி.யூ வாசலில் இருந்த பெரிய மீன்தொட்டிக்குள் பெரியதும் சிறியதுமாக நீந்திக் கொண்டிருந்த மீன்களையே பார்த்தவாரு இவன் நின்றுக் கொண்டிருந்தான். தொட்டிக்கு மேலே இருந்த குழாய் வழியாக மீன் உணவு கொஞ்சம் கொஞ்சமாக தொட்டிக்குள் விழுந்துக்கொண்டிருநது. ஒவ்வொரு மீனும் தனக்கான உணவை மட்டும் உண்பதை ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

தணிகாச்சலம் மாமா இவனை கடந்து அறைக்குள் சென்றதை அவன் கவனிக்கவில்லை. மாத்திரைகளை முன்னறையில் அமர்ந்திருந்த நர்ஸிடம் கொடுத்துவிட்டு, வெளியே இவன் அருகில் வந்து நின்றார். அவருக்கும் அப்பா வயசுதான். அவரும் அப்பாவும் ஒரே பள்ளிக்கூடத்தில் கணக்கு ஆசிரியர்களாக வேலை செய்தவர்கள். இவன் அவரை பார்த்து சிறு புன்னகை மட்டும் புரிந்தான். அவரே பேச்சைத் தொடங்கினார்.

“அம்மா சொன்னாங்க. கதைல்ல தான் காசு வந்துச்சாம்”

இவனுக்கு உள்ளுக்குள் ஒரு கணம் பெருமித உணர்வு தோன்றி மறைந்தது. அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் தலையை மட்டும் அசைத்தான்.

“எல்லாரும் ஒரு நாள் சாவப் போறோம்னு சொல்லுவியே? அப்பா போட்டும்னு விட வேண்டிதானா?”

“மாமா…..” என்று பதட்டமாக அவரை அடக்கினான்.

“முடியாது இல்ல.. ஏனா அப்பன். அதே மாதிரிதான அவனுக்கும். அவன் புள்ள நீ நல்லாருக்கணும்னு தான நினைப்பான்?”

இவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.

நிகழ்தகவுக் கோட்பாடு தெரியுமா?” மாமா கேட்டார். அவன் விழித்தான்.

“தெரியாது! இங்கிலீஷ் மீடியம் படிச்ச புள்ள இல்ல. நிகழ்தகவுனா ப்ராபபிலிட்டி. ஒரு காச சுண்டிவிட்டா பூவும் விழும் தலையும் விழும். அதான் ப்ராபபிலிட்டி. அதான்  வாழ்க்கையும். பூ மட்டும்தான்  விழப் போதுனு நினச்சு நீ வாழ்க்கைய வேஸ்ட் பண்ணுனீனா நீ முட்டாள். இப்ப உனக்கு வயசு இருக்கு. படம் எடுப்பேனு தைரியமா சொல்ற. நீ படம் எடுத்த சந்தோஸப் படுற முதல் ஆளு உங்க அப்பனாதான் இருப்பான். ஆனா ஒருவேளை எடுக்கலனா? இன்னும் பத்து வருஷம் இப்படியே ஓடிருச்சுனா? உன் கூட படிச்சவன்லாம் சம்மாதிச்சு செட்டில் ஆகிருப்பான்? நீ?”

“காசு மட்டும்தான் வாழ்க்கையா மாமா?”

“இல்ல. காசுமட்டுமே வாழ்க்கை இல்ல… ஆனா இன்னைக்கு காசு குடுத்ததுனாலதான உங்க அப்பனுக்கு ஆபரேஷன் பண்ணுனாங்க?”

மாமாவை ஆமோதிக்கும் வகையில் பேசாமல் இருந்தான்.

“காசுக்காக உன்ன வாழ சொல்லல. ஆனா வாழ்றதுக்கு காசு வேணும். அது தான் உங்க அப்பனோட கவலை. நீ அவனுக்கு அப்பறம் கஷ்டப்படக் கூடாதுனு தான் உன்ன மோசமாலாம் திட்டுவான். உன் மேல இருக்குற அக்கறைய அவனுக்கு கோவமா தான் வெளிப்படுத்த தெரியும். ஏனா அவன் கஷ்டத்துலயே வளந்தவன். அவனுக்கு கிடைக்காத சலுகைலாம் உனக்கு கொடுத்தும் நீ அத பயன்படுத்திக்கிலங்க்ற கோவம்தான் அது. ஆனா உன்ன ஒவ்வொரு முறை ஏதாவது பேசிட்டு என் கிட்ட வந்து தான் வருத்தப் படுவான். உன்கிட்ட எல்லா திறமையும் இருந்தும் சினிமா சினிமானு எல்லாத்தையும் வேஸ்ட் பண்றனு. உண்மைய சொல்லு. ஒருநாள் கூட நீ பீல் பண்ணுனது இல்ல? ஏன் வேலையா விட்டோம்னு?“

மாமாவிடம் பொய் சொல்ல முடியாது. ‘ஆம்’ என்று தலை அசைத்தான்.

“வேலையா விட்டா லைஃப்ல  பல பிரச்சனை வரும்னு தெரிஞ்சு தான வேலைய விட்டுருப்ப. ஆனா வேலைய விடும் போது இருக்குற கான்ஃபிடன்ஸ் ஒரு கட்டத்துக்கு மேல இருக்காது. அதான். யதார்த்தம். அந்த யதார்த்தம் எங்களுக்கு புரிஞ்சதுனாலதான் வேலைக்கு போ சொல்றோம்”

“அப்ப மனசுக்கு புடிச்ச வேலைய விட்டுட்டு புடிக்காத வேலைய எப்டி செய்றது?”

“இஞ்சீனியர் வேலை புடிக்காம போனதாலா சினிமா புடிக்க ஆரம்பிச்சிதா? இல்ல சினிமா புடிச்சதால இஞ்சீனியர் வேலை புடிக்காம போச்சா?”

இந்த கேள்விக்கு அவனிடம் பதில் இல்லை.

“மனசுக்கு புடுச்சது புடிக்காதது எல்லாம் காலம் தான் முடிவு பண்ணனும். உனக்கு சினிமா எடுக்கணும் ஆசை. சந்தோஷம். ஆனா அதுல வருமானம் வரல. வருமானதுக்கு இப்போதைக்கு ஒரு வேலை பாத்துக்கோனுதான் சொல்றோம். இருபத்தினாலு மணி நேரமா வேலை செய்ய போற? ப்ரீ டைம்ல சினிமால கவனம் செலுத்து. எல்லாமே அந்தஅந்த டைம் வந்தாதான் நடக்கும். அது நடக்கும் போது நீ இருக்கணும். ஆரோக்கியமா இருக்கணும். லட்சியம் வெறினு நீ வெளில பேசலாம். உன் அப்பன் கிட்ட சண்டை போடலாம். ஏனா அவன்கிடா மட்டும்தான் உனக்கு சண்டை போடுற உரிமை இருக்கு. ப்ரொடியூசர் சட்டைய புடிச்சு சண்டை போடமுடியாது.

“ரொம்ப வருஷம் கழிச்சு நம்மலால மத்தவங்க மாதிரி சம்பாதிக்க முடியாம போச்சேனு நீ ஒரு செகண்ட் நினச்சினா அதுதான் உன்னோட பெரிய தோல்வி. உடம்பும் வீணாகி மனசும் வீணாகி கடைசில உன் மேலையே உனக்கு கோவம் வந்துரும்.

“தண்ணிக்கு வெளிய இருக்கும் போது மூச்சு முட்டாது. இறங்கி நீந்தும் போதுதான் மூச்சு மூட்டும். அப்படி மூச்சு முட்டுனா ஏதாவது பாறைய புடிச்சுக்குறதுதான் புத்திசாலித்தனம். அதுக்கப்பறம் மறுபடியும் எப்ப வேணா நீந்தலாம். ஆனா நான் பின்வாங்க மாட்டேன், விடாம நீந்திக்கிட்டேதான் போவேன்னா மூச்சு முட்டி தான் சாகனும். எப்ப தண்ணிக்கு வெளிய தலைய தூக்கணும்னு தெரிஞ்சவந்தான் புத்திசாலி. நீ புத்திசாலினு நான் நம்புறேன்”

மாமா சொல்வதில் இருக்கும் நியாயம் அவனுக்கு புரிந்துவிட்டதாலோ என்னவோ மாமாவை எதிர்த்து பேசவில்லை. சிலை போல் நின்று மாமா சொல்வதை கவனித்தான்.

“உன் அப்பன் என்னைக்காவது சொல்லிருப்பானா? சம்பாதிக்காம வீட்டுக்குள்ள வராதனு? அவனுக்கு தேவை உன் காசு இல்ல. உன் தேவைய நீ பூர்த்தி செஞ்சிக்கணும். அவன் காலத்துக்கப்பறம் நீ யார் கையையும் எதிர்ப்பார்க்கக் கூடாதுனுதான் அவன் நினைக்குறான். உன் மனசுக்கு புடிச்ச வேலையை செய். ஆனா உன் மனசு எப்பவும் திடமா இருக்குறதுக்கு என்னலாம் செய்யனுமோ அதெல்லாம் செஞ்சிட்டு அந்த வேலைய செய். அதுக்கு இன்னொரு வேலைக்கு போனுனாலும் போ”

அவனுக்கு தனியாக சிந்திக்க நேரம் தர வேண்டும் என்று நினைத்த மாமா, சாப்பாடு வாங்கிவருவதாக சொல்லிவிட்டு வெளியே சென்றார். இவன் எதையோ யோசித்தவாறே மீண்டும் அந்த மீன் தொட்டியை பார்த்தான்.  முன்பு கவனிக்காத ஒன்றை இப்போது கவனித்தான். பெரிய மீன்கள் எல்லாம் தொட்டியின் மேல் பகுதியில் நீந்திக் கொண்டிருக்க, மிகச் சிறிய சில மீன்கள் தொட்டியின் அடிப்பகுதியில் உணவின்றி தவித்திக் கொண்டிருந்தன. புதிதாக பிறந்த மீன்களாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். எந்த மீனும் குட்டி மீன்களைப் பற்றி கவலைப் படுவதாக தெரியவில்லை. மீன்கள் தன் குட்டிகளைப் பற்றி அலட்டிக் கொள்ளாது என்பதாக எங்கேயோ படித்தது நினைவுக்கு வந்தது. திடீரென்று தொட்டியின் மேல் பகுதியில் நீந்திக் கொண்டிருந்த ஒரு பெரிய மீன், உணவை தன் வாயால் கவ்வி தொட்டியின் அடிப்பகுதியில் நீந்திக் கொண்டிருந்த சிறிய மீன்களை நோக்கி துப்பியது. சிறிய மீன்கள் அந்த உணவை உண்டன. மீண்டும் மேல் பகுதிக்கு சென்று உணவைக் கவ்வி மீண்டும் கீழ் நோக்கி நீந்தியது. அவனை அறியாமலேயே அவன் உதட்டில் புன்னகை பூத்து மறைந்தது.

“அப்பா கூப்பிடுறாரு” அம்மா வந்து சொன்னாள்.

இவன் உள்ளே நுழைந்தான். அம்மாவும் உடன் நுழைந்தாள்.

“ஒருத்தர் தான் அலௌட்னு டாக்டர் சொன்னாரு இல்ல” என்று முன்னறையில்  அமர்ந்திருந்த நர்ஸ் கத்தினாள். அம்மா, ‘சரி சரி’ என்றவாறே வெளியே வந்துவிட்டாள். இவன் மட்டும் உள்ளறைக்குள் சென்றான். படுத்திருந்த அப்பா, இவனை பார்த்ததும் உடலை அசைக்க முயன்றார். முடியவில்லை.

“வேணாம்ப்பா” என்றவாறே அவர் கையை பிடித்தான்.

அவரும் இவன் கையை பற்றிக் கொண்டு சிறிது நேரம் அவன் கண்களையே உற்றுப் பார்த்தார். அப்பாவுடன் ஏதாவது பேசவேண்டும் என்று தோன்றினாலும் என்ன பேசுவது என்று தெரியவில்லை. மௌனமாக இருந்தான். அப்பா மிகவும் வலுவற்றிருந்தார். இவனைப் பார்த்து புன்னகைச் செய்தார். இவன் பதில் புன்னகைப் புரிந்தான். ஒருவாரமாக சரியான தூக்கம் இல்லாதததால் இவன் உடலும் களைத்திருந்தது. ஆனால் இப்போது மனம் மட்டும் திடமாக ஆகி இருந்தது.

ஒரு நாய் சற்றே இடைவெளி விட்டு என்னைப் பின்தொடர்ந்து கொண்டே வருகிறது- சிறுகதை

ஒரு நாய் சற்றே இடைவெளி விட்டு என்னைப் பின்தொடர்ந்து கொண்டே வருகிறது. ஆம். அது ஏன் அப்படி செய்கிறது என்று நான் கேட்டதே இல்லை. முதலில் அந்த நாய் எப்படி என் பின்னே வந்தது என்று சொல்லிவிடுகிறேன். வழக்கம் போல் நான் அன்றும் நடைபயிற்சியில் ஈடுப்பட்டிருந்தேன். ஒவ்வொரு நாளும் குறைந்தது ஐந்து கிலோமீட்டர் நடக்காமல் போனால் உடல் உழைப்பே இல்லாத என் உடம்பு ஊதி நாளையே செத்துவிடுவேனோ என்ற எண்ணம் என்னுள் தலைத்தூக்கிடும். அதைத் தவிர்ப்பதற்காகவே நான் எந்த ஊரில் இருந்தாலும் வாக்கிங் செல்வது வழக்கம். Continue reading