அவள்- சிறுகதை

அன்று கோவிந்தசாமி வரவில்லை. அவர் எங்கள் தெருவுக்கு வந்த இந்த ஒரு வருடத்தில் அன்றுதான் அவர் முதன்முதலில் வரவில்லை. அவருடன் வேலைக்கு வரும் காக்கையன் வராமல் போனாலும், கோவிந்தசாமி வந்துவிடுவார். காலை நான் வாசலில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருக்கும் போது “அம்மா குப்பை” என்று ஒரு குரல் கேட்கும்போதே சொல்லிவிடலாம் மணி சரியாக ஏழு என்று.

சிலநாட்கள் நான் வாசலில் இல்லாமல் உள்ளே வேலையாக இருந்தால், “சார்” என்று சன்னமாக ஒரே ஒரு குரல் மட்டும் வரும். நான் வாசலை விட்டு வெளியே வருவதற்கு முன்பே குப்பையை என் கையிலிருந்து, “குடு சார்” என்று பிடிங்கிக் கொண்டு தன் வண்டியில் கொட்டிக்கொள்வார்.

எல்லோர் வீட்டின்முன்னின்றும் சப்தமாக ‘குப்பை’ என்று கத்தும் கோவிந்தசாமி, என் வீட்டின் முன் மட்டும் சன்னமான குரலில் பேசுவதற்கு காரணம் தெரியவில்லை. ஒருவருடத்திற்கு முன்பு அவரை முதன் முதலில் சந்தித்ததிலிருந்து அப்படிதான் பேசுகிறார். அன்று, தாத்தாவின் பழைய பெட் ஒன்றை எடுத்துச் செல்வதற்காக காக்கையனை வரச் சொல்லியிருந்தேன். தாத்தா இறந்ததிலிருந்து அதை தூக்கி கொல்லையில் போட்டு வைத்திருந்தோம். அன்றுதான் காக்கையனுடன் முதன்முதலில் வேலைக்கு வந்திருந்தார் கோவிந்தசாமி.

காக்கையன் கொல்லையில் நின்றுகொண்டு தள்ளாடியபடியே “அம்பதுரூபா கொடுங்க வாத்தியார் சார்” என்றான்.

“குடுக்காமா எங்க போறாங்க? கணக்கு பாக்குற வீடா இது?”அம்மா அடுப்படி  உள்ளே இருந்து சிடுசிடுத்தாள். காக்கையனால் அந்த பெட்டை மடித்து தூக்க முடியவில்லை.

“அன்னையா” என்று கத்தினான். வாசலில் நின்றிருந்த கோவிந்தசாமி வேகமாக ஓடிவந்தார். பெட்டை சுருட்டி தோளில் வைத்துக் கொண்டு விறுவிறுவென வெளியே நடந்தார். காக்கையன் ஐம்பது ரூபாயில் மட்டும் குறியாக இருந்தான்.

“உடனே போய் குடிக்காத” என்று சொல்லிவிட்டு அம்மா அவன் கையில் ஐம்பது ரூபாயை கொடுத்தாள்.

“டீ தான் மா குடிக்கப் போறோம்” சொல்லிவிட்டு அவன் கோவிந்தசாமியை சுட்டிக் காட்டி, “இனிமே குமாரி வராது. இவருதான் என்கூட வருவாரு” என்று சொல்லிவிட்டு நகர்ந்தான். கோவிந்தசாமி வீட்டின் வாசலிலே அமைதியாக நின்றார். நான் அவரை அழைத்து, அவர் கையில் ஒரு அம்பது ரூபாயை கொடுத்தேன். சந்தோசமாக வாங்கிக் கொண்டு, “தாங்க்ஸ் சார்” என்றார். அன்றிலிருந்து தினமும் காலை என்னைப் பார்த்து, “குட்மார்னிங்” சொல்லிவிட்டு தான் நகர்வார்.

கோவிந்தசாமிக்கு வயது முப்பைந்தைந்திற்கு மேல் இருக்கும். எப்போதும் குடி போதையில் திரியும் காக்கையனிடமிருந்து மாறுபட்டு, தலையை படிய வாரி நெற்றியில் சந்தனப் பொட்டுடன் வலம் வருவார். பாக்கெட்டில் ஒரு சாய்பாபா படம் இருக்கும், கையில் க்ளவுஸ் போட்டுக் கொண்டு தான் குப்பைக்கூடையை வாங்குவார். அவர் சுத்தத்தில் கண்ணாக இருப்பதை பார்த்து, அம்மாவுக்கும் அவரைப் பிடித்து விட்டது. உணவு, பலகாரம் என்று எதையாவது அவருக்கு உண்ணக் கொடுப்பாள்.  முதன்முதலில் பலகாரம் கொடுத்த போது வாங்க தயங்கியவரிடம், “அட வாங்கிகோங்க தம்பி” என்று அம்மா அவர் கையில் உரிமையாக கவரை திணித்தாள்.

ஒருமுறை அம்மா முந்தையநாள் மீந்த உணவை நீட்ட, “இன்னைக்கு வியாழக் கிழமமா பாபாக்கு விரதம்”  என்று கோவிந்தசாமி சொன்னார். அம்மா சந்தோசமாக உள்ளே ஓடிச்சென்று ஆரஞ் பழங்களை எடுத்து வந்து கொடுத்தாள்.

“பாத்தியா, எவ்ளோ பக்தி அந்த தம்பிக்கு. வியாழக் கிழமை விரதம் இருக்கானாம். நீயும் இருக்கியே” அம்மா என்னை கோவிந்தசாமியின் முன்வைத்தே இதுபோல எதாவது சொல்வாள்.  அவர் திருதிருவென விழித்துவிட்டு, “சார திட்டாதீங்கமா. அவருக்கு எவ்ளவோ வேலை இருக்கும்” என்பார்.

காக்கையனுக்கு எது கொடுத்தாலும் காசாக கொடுக்க வேண்டும். சிறிது நேரத்தில் அதை சோமபானமாக மாற்றிவிடுவான். அதனால் அம்மா காக்கையனிடம் எந்த உரையாடலிலும் ஈடுபடவில்லை. ஆனால் கோவிந்தசாமியை பார்த்தால், அம்மாவிற்கு பாசம் கலந்த மரியாதை வந்துவிடும். அவரை பற்றியும் அவர் குடும்பத்தைப் பற்றியும் விசாரிப்பாள்.

“என்ன தம்பி எப்போ கல்யாணம்?”என்பாள்.

“ஆவும் மா. முதல சாருக்கு பொண்ண பாருங்க” என்று சொல்லிவிட்டு நகர்வார். தினமும் என்னிடமும் அம்மாவுடனும் சில வார்த்தைகள் பேசாமல் அவர் நகர்ந்ததில்லை. வாரம் ஏழு நாளும் வந்துவிடுவார். உழைப்பாளி.

“கல்யாணத்துக்கு சொல்லணும் சொல்லிபுட்டேன்” அம்மா சொல்வாள்.

“நீங்களும் சாரும் தான் நடத்திக் கொடுக்கணும்” அதே சன்னமான குரலில் சொல்வார் கோவிந்தசாமி.

ஒருநாள் காலையில் வீட்டின் அருகே இருந்த ராவுத்தர் மெஸ்ஸிற்கு டீ குடிக்கச் சென்றிருந்தேன். கர்பமாக இருந்த அண்ணியை பார்க்க அம்மா ஊருக்கு சென்றுவிட்டாள். அம்மா இல்லாத நாட்களில் ராவுத்தர் மெஸ்ஸில் தான் டீ டிபன் எல்லாம். வாசலில் போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்து டீ குடித்துக் கொண்டிருந்த கோவிந்தசாமி என்னைப் பார்த்ததும் எழ எத்தனித்தார். நான் வேண்டாம் என்று கை அசைத்துவிட்டு, டீயை வாங்கி பருகியவரே பேப்பரில் மூழ்கினேன். ஒரு குரல் என் கவனத்தைக் கலைக்க நிமிரிந்து பார்த்தேன். அங்கே ஒரு திருநங்கை நின்று கொண்டிருந்தாள். அவள் என்னிடம் காசு கேட்க நான் பாக்கெட்டை தடவினேன். சில்லரை இல்லை.

உள்ளே அமர்ந்து வெள்ளிமலர் படித்துக் கொண்டிருந்த பரமசிவன் “ஊருக்குள்ளயே வந்துட்டீங்களா?” என்று கேலியாக கேட்டான். வேலை வெட்டிக்கு போகாமல் அடிதடி செய்துக் கொண்டிருப்பதே பரமசிவனின் வேலை. அந்த திருநங்கை அவனை முறைத்தாள்.

என்னிடம், “விரட்டிவிடு வாத்தியாரே. சில்லறை தேடிகிட்டு இருக்க” என்றான். வெறுங்கையுடன் நகர்ந்த திருநங்கையை அழைத்து கோவிந்தசாமி ஐந்து ரூபாயை கொடுத்தார்.

“நான் காசு கொடுக்காதனு சொன்ன நீ என்னடா தர்ம பிரபு” பரமசிவன் கோவிந்த சாமியை பார்த்து கத்தினான். கோவிந்தசாமி எதுவும் பேசவில்லை.

“பேசிட்டே இருக்கேன்…” என்றவரே எழுந்த பரமசிவன், நாங்கள் சுதாரிப்பதற்குள்  கோவிந்தசாமியின் கன்னத்தில் அறைந்தான்.

“உழச்சு சாப்டாம ஆடுறாளுங்க” என்றவாறே பரமசிவன் நகர்ந்தான். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. பரமசிவன் மீது கோபம் வந்தது. அனால் அவனை எதிர்க்கும் அளவிற்கு எனக்கு தைரியமோ, பலமோ இல்லை. கோவிந்த சாமியின் கண்கள் கலங்கியிருந்தன, “அவங்களும் நம்பளமதிரி தான சார்?” என்று என்னைப் பார்த்துக் கேட்டார்.

“அந்த தடிப்பையன் கிடக்கான். யாரும் கிடைக்கலன்னு உன்ன ஏறுறான்” ராவுத்தர் கோவிந்தசாமியை ஆசுவாசப் படுத்துவதற்காக சொன்னார்.

அதன்பின் கோவிந்தசாமி பரமசிவன் இருக்கும் பக்கமே திரும்புவதில்லை. நான் மறுநாள் அவரை பார்த்து ‘சாரி’ கேட்டேன். “அவன் பொறுக்கி சார். அடிச்சான். அதெல்லாம் நான் மறந்துட்டேன். நீங்க என்ன பண்ணுவீங்க பாவம்” என்றார். எங்கள் நட்பிலோ பேச்சிலோ எந்த மாற்றமும் இல்லாமல் தான் நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன.

இன்று கோவிந்தசாமி ஏன் வரவில்லை என்று தெரியவில்லை? உடம்பு ஏதும் சரியில்லாமல் போய் விட்டதா? காக்கையனைக் கேட்டேன். காக்கையன் தனக்கு எதுவும் தெரியாது என்றான்.

மறுநாளும், அதற்கு அடுத்த நாளும் கோவிந்தசாமி வரவில்லை.

“சொல்லிக்காம கொள்ளாம வேலையை விட்டு போய்டான் சார்” காக்கையன் சொன்னான். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. எங்களிடம் ஏன் சொல்லவில்லை. அம்மா ரொம்ப வருத்தப்பட்டாள். அண்ணனுக்கு குழந்தை பிறந்ததால், நாங்கள் அந்த கொண்டாடத்தில் மூழ்கிவிட்டோம். கோவிந்தசாமிக்கு பதில் காக்கையனுடன் வேறொரு சிறுவன் வரத் தொடங்கிவிட்டான். அவனும் போக, இன்னும் இரண்டு பேர் மாறினார்கள். அவரவர் வேலையுண்டு என்று நாட்கள் நகர்ந்தன. காக்கையன் மட்டும் வழக்கம் போல போதையில் வந்து போனான்.

பாப்பாவின் முதல் பிறந்தநாளை எங்கள் வீட்டில் கொண்டாட வேண்டுமென்று அண்ணனும் அண்ணியும் வந்திருந்தார்கள். அண்ணிக்கு விரால் மீன்தான் பிடிக்கும், அதுவும் ஆற்று மீன் தான் பிடிக்கும். அம்மா தேடிப் பிடித்து வாங்கி வர சொன்னாள். நானும் வண்டியை எடுத்துக் கொண்டு இருபது கிலோமீட்டர் செல்ல வேண்டியதாக இருந்தது.

“அதெல்லாம் கட்டுபடியாகும் குடு சாமி” பேரம் பேசிக்கொண்டிருந்த அந்த குரலை நான் எங்கேயோ கேட்டிருக்கிறேன்.  திரும்பி பார்த்தால், கோவிந்தசாமி. என்னை பார்த்ததும் அவர் முகம் திகைத்தது.

“என்ன கோவிந்தசாமி சவுக்கியமா?” என்றேன்

“நல்ல இருக்கேன் சார்” என்றார்.

நான் “எங்க போனீங்க. அம்மாகிட்ட கூட சொல்லல?” என்றேன். அவர் தயங்கினார். அப்போது அங்கே வந்த அந்த திருநங்கை கோவிந்தசாமியிடம் ‘போலாமா மாமா?” என்றாள். நான் அன்று டீக்கடையில் பார்த்த அதே திருநங்கை. எனக்கு புரிந்து விட்டது.

“அன்னைக்கு அந்த தடியன் அடிச்சதும் கஷ்டமா இருந்துச்சு. சாயங்கலாம் இவர பாத்து பேசினேன். அப்டியே லவ் வந்திருச்சு” அந்த திருநங்கை சொன்னாள். கோவிந்தசாமி வெட்கப்பட்டார்.

“ராதா நான் சொன்னேன்ல சாரு, இவருதான்” என்று என்னை அறிமுகம் செய்துவைத்தார்.

“என்கிட்ட இருந்து உங்க லவ்வ மறச்சிருக்கீங்களா கோவிந்த சாமி!” என்று கேட்டு அவர் தோளை தட்டினேன். சிரித்தார்.

“திடிர்னு ஒரு நாள் கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணுனோம். அவங்க ஊர் பக்கம் கோவில்ல போய் பண்ணிக்கிட்டோம்” கோவிந்தசாமி சொன்னார். “கல்யாணத்துக்கு எங்கள ஏன் கூப்டல?” கோவமாக கேட்பது போல் பாசாங்கு செய்தேன்.

“அது அது” என்று இழுத்தார். நான் சிரித்துவிட்டு, “சொல்லிட்டாவது வந்திருக்கலாம்ல. அம்மா சந்தோசப் பட்டிருப்பாங்க” என்றேன்

“சொல்லிகிட்டே இருப்பார் சார்” ராதா பேசினாள். “வாத்தியார் சாரும் அவங்க அம்மாவும் பாசமா இருப்பாங்க. சொல்லிக்காம வந்துட்டேனு”.

“அந்த ஏரியா வந்தா உங்கள அம்மாவலாம் பாக்கணும்… எல்லாரும் கேலி பேசுவாங்க அதான் வேலையை விட்டுடேன் சார்” என்றார்

“உங்க மனசுக்கு புடிச்ச ஒரு விசயத்த பண்ணிருக்கீங்க? இதுல என்ன வெட்கம் அவமானம்! அன்னைக்கு உங்கள அடிச்சப்ப பாத்துகிட்டு இருந்த நான் தான் அவமானப் படனும்” என்றேன். அமைதியாக நின்றார்.

“இப்ப எங்க வேலை பண்றீங்க?”

“வாட்ச்மேன் வேலைக்கு போயிட்டு இருக்கார் சார்” என்றாள் ராதா.

“முன்னமாதிரி இவ யார்ட்டையும் கை ஏந்துறது இல்ல சார். வீட்டயும் என்னையும் நல்லா பாத்துக்குறா. நல்லா சமைப்பா சார்.” கோவிந்தசாமி பெருமையாக சொன்னார்.

“ஏன் நீங்களும் வேலைக்கு போலாமே?” நான் ராதாவை பார்த்துக் கேட்டேன்.

“யார் சார் வேலைக்கொடுப்பா?” ராதா வினவினாள்.

ராவுத்தரிடம் வேலை பார்த்த மாஸ்டர் தனியாக கடை போட போய்விட்டதாக ராவுத்தர் சொன்னது நினைவுக்கு வந்தது. அவரிடம் பேசினேன். அவர் சந்தோசமாக ராதாவை வேலைக்கு வைத்துக் கொண்டார். முதல் நாள் நான் கடைக்கு வந்து டிபன் சாப்பிட வேண்டுமென்று ராதா ஆசைப்பட்டாள். அவள் செய்த பொங்கலும் வடையும் சுவையாக இருந்தது. நான் உண்டுகொண்டிருக்கும்போது, பரமசிவன் வந்தான். நான் உள்ளே அமர்ந்திருப்பதைப் பார்த்தான். ராதா உள்ளே சட்னி அறைத்துக் கொண்டிருப்பதையும் பார்த்துவிட்டு என்னை முறைத்தான்.  மேஜையில் வைக்கப்பட்டிருந்த தட்டிலிருந்து ஒரு வடையை எடுத்து தின்றுகொண்டு என்னை முறைத்தவாறே நின்றான். நான் அவனை சட்டை செய்யாமல்,

“பொங்கல் அருமையா இருக்கு ராதா” என்றேன். அவள் சந்தோசப் பட்டாள். வழக்கமாக கடைக்கு சாப்பிட வரும் பேச்சுலர்கள் இரண்டு பேர் என் அருகில் வந்து அமர்ந்தனர்.

“பொங்கல்” என்றனர். பொங்கல் வருவதற்குள், உள்ளே ராதா சமைத்துக் கொண்டிருப்பதை பார்த்ததும் அவர்களின் முகம் எப்படியோ மாறியது. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அங்கிருந்து எழுந்து ராவுத்தரிடம்., “இனிமே வெளிய சப்ப்ட்டுக்குறோம்” என்றனர். ராவுத்தர் பேசுவதற்குள் அவர்கள் கடையை விட்டு வெளியேறினர்,

அவர்களின் வழியை மறைத்துக்கொண்டு நின்ற பரமசிவன்,. “ஏன் சாணிய பாத்தா மாதிரி போற. அவ உழைக்குறா. உங்களுக்கு எங்க எரியுது. இது அவ சுட்ட வட.. நல்லாத்தான் இருக்கு. நேத்து வரைக்கும் அந்த சீக்காளி மாஸ்டர் செஞ்ச வடையை ரசிச்சி தின்னீங்க! இவ சமையலுக்கு என்ன குறைச்சல்!” என்றான்.

அவர்கள் என்ன சொல்வது என்று விழித்தனர். இருவரின் தோளின் மீது தன் கைகளை வைத்து அழுத்தியாவாறே, “எப்பவும் இங்கதான சாப்பிடுவீங்க! போய் சாப்டு போ” என்று அவர்களை உள்ளே தள்ளினான். அவர்கள் என்னருகே வந்து அமர்ந்தனர். நான் பரமசிவனைப் பார்த்து புன்னகை செய்தேன். அவன் என்னைக் கண்டுகொள்ளாமல்,  எதுவும் நடக்காதது போல் அங்கிருந்து நகர்ந்தான். ராதா சூடாக வடையை சுட்டெடுத்துக் கொண்டிருந்தாள்.

சிகண்டினி- சிறுகதை

நான் அவளுடன் உரையாடியதில்லை. நான் இந்த வீட்டிற்கு குடிவந்த இரண்டு வருடத்தில், என் ஹவுஸ் ஓனர் தவிர அக்கம்பக்கத்தில் இருக்கும் யாரிடமும் உரையாடியதில்லை. மாடியில்தான் என்னுடைய அறை. தினமும் காலையில் மொட்டை மாடியில் எட்டு நடைப்பயிற்சி செய்வேன். பின் சிறிதுநேரம் தெருவை வேடிக்கைப் பார்ப்பேன். அமைதியான குறுகலான தெரு.

தெருவின் ஒரு மூலையில் பெரிய சுப்ரமணிய சாமி கோவிலும், இன்னொரு மூலையில் சூலக்கரை மாரியம்மன் கோவிலும் இருக்கிறது. அங்கே மட்டும் அவ்வப்போது கூட்டத்தை காணலாம். மற்றப்படி சலனமற்ற தெருவில் என்னை அதிமாக எதுவும் கவர்ந்ததில்லை, பத்து மணிக்குத்தான் எனக்கு வங்கி. வீட்டிலிருந்து ஒன்பதரை மணிக்கு கிளம்பினால் போதும். நான் காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்துவிடுவேன்.

காலை ஆறரை மணி வாக்கில் அவள் அழகாக கோலம் போடுவாள். தினமும் கலர் கோலம்தான். முதலில் அவள் என்னை சட்டை செய்யவில்லை. ஒருநாள் எதார்த்தமாக மேலே நிமிர்நது பார்த்தவள் விருட்டென்று தலையை குனிந்து கொண்டாள். மறுநாளிலிருந்து ஓரக் கண்ணில் என்னை தேடுவதை நான் கவனித்திருக்கிறேன். இருவரும் பார்த்துக் கொள்வதோடு சரி. எதுவும் பேசியதில்லை. கோலம் போடும் சில நிமிடங்கள் மட்டுமே அவளை வெளியில் காண முடியும். நான் விடுமுறை நாட்களில் வீட்டில் இருக்கும் போது அவள் வெளியே வருவாளா என்று பார்த்திருக்கிறேன். அலுவலகத்திலிருந்து சீக்கிரம் வீட்டுக்கு வர நேர்ந்தாலும் அவளை தேடி இருக்கிறேன். ஆனால் அவள் வெளியே வந்ததில்லை. சில நேரங்களில் அவள் வீட்டு வாசலை பார்த்தவாரே கடந்து சென்றிருக்கிறேன். எப்போதும் அவள் வீட்டில் பெரிய சலசலப்பு இருந்ததில்லை. வயதான பெரியவரொருவர் திண்ணையில் படுத்திருப்பார். அவள் அருகில் ஒரு பாட்டி அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருப்பாள்.

அன்றும் இந்த காட்சியை கடந்து முதன்முதலில் அந்த மாரியம்மன் கோவிலுக்கு சென்றேன். அன்று எனக்கு பிறந்தநாள்.  பூசாரி கேட்டார், “தம்பி புதுசா?”  நான் புன்னகை செய்தேன்.

“பூஜா வீட்டுக்கு எதிர் வீட்லதான இருக்கீங்க?” என்றார்.

அவள் பெயர் பூஜாவின் இருக்கலாம். நிச்சயம் அவள் பாட்டியின் பெயர் பூஜாவாக இருக்க வாய்ப்பில்லை. அந்த வீட்டில் அவளையும் அவர் பாட்டியையும் தவிர வேறு பெண்கள் யாருமில்லை.

நான் அவள் பெயர் எனக்கு தெரியாது என்பது போல் அமைதியாக நின்றேன்.

“அதான் நம்ம ஆல்பர்ட் வீடு”

நான் ‘ஆம்’ என்று தலையசைத்தேன். “நீங்க நாம்மாளுனு தெரியாம போச்ச்சே” என்றாவாறே அவர் அம்மனுக்கு அர்ச்சனை செய்ய தொடங்கினார். பூசாரி என்னுடைய அவுஸ் ஓனர் ஒரு கிருஸ்துவர் என்பதால் நானும் ஒரு கிருஸ்துவன் என்று நினைத்துக் கொண்டிருந்திருக்கிறார். எனக்கு மதங்களில் நம்பிக்கை இல்லை என்பதை நான் அவரிடம் சொல்லிக்கொள்ள விரும்பவில்லை.

என்னிடம் தீபாராதனை தட்டை நீட்டினர். நான் தீபத்தை ஒத்திக் கொண்டு, பத்து ரூபாயை எடுத்து தட்டில் போட்டேன். அவர் அதை எடுத்து தன் இடுப்பில் முடிந்து கொண்டார்.

“எப்டி இருந்த கோவில் தெரியுமா தம்பி, ஆளுங்க வரதே குறைஞ்சு போச்சு….

“தெக்கால இருக்கே அது பேரே பாப்பாரத் தெரு. இப்பவும் பாருங்க. தெருவுக்கு நடுவல பெருமாள் கோவிலிருக்கு, ஆனா கும்புட தான் ஆள் இல்ல. யார் யாரோ எங்கிருந்தோ வந்து வீடுங்கள வாங்கி சிலுவையை நட்டுவச்சுட்டு போய்டாங்க. என்னத்த சொல்ல, அவங்க சாமி அவங்களுக்கு” என்றார்.

பூசாரியிடம் அவளைப் பற்றி கேட்கலாமா என்று யோசித்தேன். ஊர்விட்டு ஊர் வந்து வேலை செய்கிறோம். எதற்கு தேவை இல்லாத பிரச்சனை என்று விட்டுவிட்டேன். எப்போதாவது அந்த கோவிலுக்கு போனால், பூசாரி எதையாவது பேசுவார். ஆனால் நான் ஒருபோதும் பூஜாவைப் பற்றி கேட்டதில்லை. பல மாதங்கள் வேகமாக ஓடியது. நானும் பூஜாவும் பார்வையை பரிமாறிக் கொள்வதோடு சரி. எப்போவதாவது புன்னகை செய்யலாமென்று யோசிப்பேன். தைரியத்தை வரவழைத்துக் கொள்வதற்குள் அவள் உள்ளே சென்றுவிடுவாள்.

அன்று இரவு பத்துமணி இருக்கும். யாரோ கத்தும் சப்தம் கேட்டது. நான் ஜன்னல் வழியே பார்த்தேன். அவள் வீட்டின் வாசலில் ஒரு கார் நின்றுகொண்டிருந்தது. ஒருவர் திண்ணை அருகே நின்றுகொண்டு சப்தமாக கத்திக் கொண்டிருந்தார், “அசிங்கத்த விடலையா நீ. குடும்பத்துல யாருக்குமில்லாத பழக்கம் ஏண்டி உனக்கு?. பொம்பள பொம்பளையா தான் நடந்துக்கணும். திருந்துவனுதான இங்கே கொண்டாந்து விட்டேன்…”

பூஜா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். எனக்கு ஏதோ புரிந்தது போல் இருந்தது. எதுவும் புரியாதது போலும் இருந்தது. என்னை அறியாமலேயே என் முகம் ஏதோவொரு அருவருப்பை வெளிப்படுத்தியது. நான் தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருந்தேன்.

என் அறை இருட்டாக இருந்தது. இருட்டிற்கு நடுவில் நின்று தான் அவள் வீட்டைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரம் கழித்து தான் கவனித்தேன், அந்த இரண்டு கண்கள் என் ஜன்னலை நோக்கி இருந்ததை. அந்த மனிதன் சப்தமாக கத்திக் கொண்டிருந்தார். பூஜா அதை சட்டை செய்யாமல், என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். இருட்டில் நான் நிற்ப்பது யாருக்கும் தெரியாது என்று எண்ணினேன். அந்த கண்கள் என்னைவிட்டு அகலவே இல்லை. அவள் முகம் சாந்தமாக இருந்தது. அவள் என்னைப் பார்த்து புன்னகை செய்தது போல் இருந்தது. என் உடல் நடுங்கியது. நான் வேகமாக ஜன்னலை அடைத்துவிட்டேன்.

மறுநாள் காலை கோலம் போட அவள் வரவில்லை. நான் வழக்கம் போல் வேலைக்கு சென்றேன். அவள் வீட்டின் வாசலில் தாத்தாவும் பாட்டியும் இருந்தார்கள். மாரியம்மன் கோவில் பூசாரி புன்னகை செய்தார்.

வங்கியில் வேலை அதிகமாக இருந்தது. அரசாங்கம் ஐநூறு ருபாய் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று சொல்லிவிட்டதால் வழக்கத்திற்கு அதிகமாக வேலை பளு இருந்தது. அதனால் சாயங்காலம் கிளம்ப தாமதமாகிவிட்டது. தெருமுனையில் மாரியம்மன் கோவில் அடைக்கப் பட்டிருந்தது. ஒரு போலிஸ் கான்ஸ்டபிள் என்னை கடந்து சென்றார். வீட்டின் அருகே வரும்போது தான் பார்த்தேன், பூஜாவின் வீட்டின் வாசலில் ஓரிருவர் நின்றுகொண்டிருந்தனர். வாசலில் பூஜாவின் கோலம் இருக்குமிடத்தில் நீர் கோலம் கண்ணில் பட்டது. சில பூக்கள் சிதறிக் கிடந்தன. ‘தத்தாவா பாட்டியா என்று தெரியவில்லை.’ வாசலில் இருந்தவாறே வீட்டை பார்த்தேன். தாத்தா அதே இடத்தில் படுத்து இருமிக் கொண்டிருந்தார். அவர் தலைமாட்டில் அமர்ந்தவரே பாட்டி அழுதுகொண்டிருந்தாள். வீடெல்லாம் கழுவிவிடப் பட்டிருந்தது.

நான் விருடென்று அங்கிருந்து நகர்ந்து மாடி ஏறினேன். என் வீட்டின் ஜன்னல் அடைக்கப்பட்டிருந்தது. அதை திறக்க தைரியம் வரவில்லை. இன்றுவரை அந்த ஜன்னல் திறக்கப்படவில்லை.