46 ஆவது சென்னை புத்தகத் திருவிழாவில் என்னுடைய புத்தகங்களை ‘பனுவல் புத்தக நிலையத்தில் வாங்கலாம். அரங்கு எண் 199 & 200.
நன்றி
அரவிந்த் சச்சிதானந்தம்

Amazon Kindle Pen to publish போட்டியின் மார்கெட்டிங் அல்லது லாபியிங் பிரச்சனைகளாக முன்வைக்கப்படும் விஷயங்கள் வெறும் கிண்டிலுக்கு மட்டுமே உரித்தானவை அல்ல என்பதை உறுதியாக சொல்ல முடியும். பொதுவாகவே தமிழ் எழுத்துலகில் கொஞ்சம் ‘காண்டக்ட்ஸ்’ உள்ள அல்லது தொடர்புகளை வளர்த்துக்கொள்ளக் கூடிய ஒரு எழுத்தாளரால் சுமாரான ஒரு படைப்பை தமிழின் ஆகச்சிறந்த படைப்பு என்ற தோற்றத்தை உருவாக்கிவிட முடியும். அதுவும் சமூக வலைத்தளங்களின் வருகைக்குப்பின் இது இன்னும் எளிதாகி விட்டது.
போதாகுறைக்கு ஏரளாமான சிறுசிறு குழுக்கள் பல விருதுகளை தங்களுக்குள்ளே அறிவித்துக்கொண்டு, இறந்த எழுத்தாளர்களின் எழுத்துலக வாரிசு என்று தங்களுக்கு பிடித்தவர்களை மட்டும் அறிமுகப்படுத்தி சந்தோசப் பட்டுக் கொண்டும் இருக்கின்றன.
இத்தகைய பாரபட்சமானகாலகட்டத்தில் ‘Kindle Self-Publishing’ நமக்குகிடைத்த மிகப் பெரிய வரம். யாரும் யாருடைய ஆதரவுமின்றி புத்தகத்தை பதிப்பித்திடமுடியும் என்ற ஒரே காரணம் போதும் அதை நாம் வரவேற்க.
ஆனால் யாரும் பதிப்பிக்கலாம் என்ற இந்த சுதந்திரமே பல சிக்கல்களையும் கொண்டு வந்திருக்கிறது என்பதும் உண்மைதான். ‘எழுத்தாளன்’ என்ற அடையாளத்தை பெற்றுக் கொள்வதற்காகவே துரிதகதியில் பதிப்பிக்கப்படும் மேலோட்டமான எழுத்துக்கள் கிண்டிலில் ஏராளம் உண்டு. எனினும் இதையெல்லாம் மீறி பல நல்லப் படைப்புகள், முன்பைவிட அதிக அளவில் கிண்டிலில் பதிப்பிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. நல்லப் படைப்புகள் அதற்கான காலத்தில்தானாகவே தன் வாசகர்களைக் கண்டுகொண்டுவிடும், நல்லதல்லாதவை காலப் போக்கில் ஒதுங்கிக் கொள்ளும் என்பதால் இதைப் பற்றி நாம் அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.
Pentopublish போட்டி என்று வரும் போது, அதிக வாசக வரவேற்பு பெரும் புத்தகங்களே அடுத்த சுற்றிற்குதேர்வாகும் என்பதை நம் எழுத்தாளர்கள் literal-ஆக புரிந்து கொண்டுவிட்டதன் விளைவு தான் தற்போது நடக்கும் ‘ரேட்டிங் அரசியல்’. இப்படி செய்வது தவறு என்றுசொன்னால் இரண்டு விதமான எதிர்வினைகள் வரும்.
ஒன்று, மார்கெட்டிங் செய்யத்தெரிந்தோர் செய்கிறார் அதில் என்ன தவறு என்பார்கள். சிறுவட்டத்தினுள்ளிருந்து தன் எழுத்து திறமையை மட்டுமே நம்பி போட்டியில் கலந்து கொள்பவருக்கோ அல்லது ஒரு முழுநேர எழுத்தாளருக்கோ இருக்கும் தொடர்புகளைவிட ஒரு MNC ஊழியருக்கு அல்லது கல்லூரி மாணவருக்கு அதிக நேரடி தொடர்புகள் இருக்கும். நண்பன், நண்பனின் நண்பன் என்று பெரும் வட்டத்தை உருவாக்கி வைத்திருப்போரால் மிக எளிதாகநிறைய ரேட்டிங்கை பெற்றுக் கொள்ளமுடியும், அந்த படைப்பிற்கு அத்தகைய தகுதி இல்லை என்றாலும். இது மார்கெட்டிங் அல்ல லாபியிங் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும் என்றே நினைக்கிறேன்.
கடந்த வருடம் இதே போட்டியில், சில ஹிந்திப் பெயர்கள் கொண்ட ஆசாமிகள் ஒரு தமிழ் புத்தகத்திற்கு ரேட்டிங் செய்திருந்ததை கவனித்தேன். ஒருவேளை தமிழ் படிக்க தெரிந்த ஹிந்திக்காரர்களாக இருப்பர்களோ என்னமோ! யாரோ ரேட்டிங் வாங்கிக் கொண்டு போகட்டும் நமக்கு என்ன பிரச்சனை என்று இருந்துவிட முடியாது. அற்பணிப்போடு ஒரு படைப்பை எழுதுவதைவிட, அதை ப்ரமோட் செய்வது மட்டுமே முக்கியம் என்ற நம்பிக்கையை இத்தகைய செயல்கள்விதைத்துவிடும், அது நம் எழுத்துலகிற்கு தான் நஷ்டம்.
இன்னொரு எதிர்வினை, நன்றாக இருப்பதால் தான் நிறைய பேர் வாசிக்கிறார்கள் என்பார்கள். நிறைய பேர் வாசிக்கிறார்கள் அதனால் அவர் நல்ல எழுத்தாளர் என்பார்கள். இந்தப் புரிதலை இன்றைய இணைய சூழலில் மாற்றுவதுகடினம். பிள்ளையார் பால் குடிக்கிறார், ஆம் குடிக்கிறார் நானும் பார்த்தேன் என்ற வகையில் தான் இன்று நிறைய படைப்புகள் மற்றும் படங்கள் கொண்டாடப்படுகின்றன.இது இணையம் ஏற்படுத்தும் பாதிப்பு. Virtual Collective Consciousness.
இத்தகைய பிரச்சனைகளை எல்லாம் மீறி நாம் இது போன்ற போட்டிகளை வரவேற்க வேண்டிய காரணம் முன்பு சொன்னதுபோல், யாரும்யாருடைய ஆதரவுமின்றி புத்தகத்தை பதிப்பித்திட முடியும் என்பதே. தன் முதல் படைப்பை எழுதும் எழுத்தாளருக்கும், பல படைப்புகளை எழுதியவருக்கும் சரிசமமான மேடையை இத்தகைய போட்டிகள் உருவாக்கித் தருகின்றன. மற்றபடி இதில் இருக்கும் லாபியிங் சிக்கலை தனி மனித அறத்தால் மட்டுமே களைய முடியும்.
இதில் கலந்து கொண்ட, கலந்து கொள்ளப் போகும் அத்தனைப்பேருக்கும் வாழ்த்துக்கள். வெற்றிபெறுபவர் தன்னைத் தானே கேட்டுக் கொள்ள வேண்டியது,பரிசு தன் எழுத்துத் திறமைக்கா அல்லது மார்க்கெட்டிங் திறமைக்கா என்பதையே. எழுத்துத் திறமையை விட மார்க்கெட்டிங் திறமை மேலோங்கிவிட்டதாக அவர் உணர்வாராயின்,இன்னும் அதிக பொறுப்புடன், அற்பணிப்புடன்அடுத்த படைப்பை எழுத வேண்டிய கடமை அவருக்கு இருக்கிறது. எழுதுவார் என்று நம்புவோம்.
திறம்பட எழுதியும், மார்கெட்டிங் சாத்தியப்படவில்லை என்றோ பரிசைப் பெறமுடியவில்லை என்றோ யாரும் வருத்தப்பட தேவையில்லை. எப்போதும் சொல்வது போல், எழுத்தாளன் என்ற அடையாளத்தை தக்கவைத்துக் கொள்வதைவிட, பரிசுகள் விருதுகளை பெறுவதைவிட, தொடர்ந்து அற்பணிப்புடன் எழுதுவது மட்டுமே முக்கியமாகிறது.
எழுதுவோம்…
தமிழில் ஆன்லைன் செல்ஃப்-பப்ளிஷிங் ஏன் அவசியம்?
என்னுடைய இரண்டாவது நாவல் ‘ஊச்சு (The Fear)’ அமேசான் தளத்தில் ஈ-புத்தகமாக வெளியாகி இருக்கிறது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன்.
கதைச் சுருக்கம்
ஜாஸ்மின், நகுல், சுமித் மற்றும் மனிஷ், நால்வரும் நெருங்கிய நண்பர்கள். ஆவணப் படம் எடுப்பதற்காக மர்மங்கள் நிறைந்த மேல்பாறை நோக்கி பயணப்படுகிறார்கள். அந்த காட்டின் அமானுஸ்யத்தை அவர்கள் முழுவதுமாக உணர்ந்துகொள்வதற்குள், ஒவ்வொருவராக காணாமல் போகிறார்கள். இன்ஸ்பெக்டர் அர்ஜுன் அவர்களைத் தேடி சென்னையிலிருந்து புறப்படுகிறார். ஒருபுறம், நண்பர்கள் தொலைந்து போனதைப் பற்றி ஊரில் ஒவ்வொருவரும் ஒரு கதை சொல்கிறார்கள். மறுபுறம், மேல்பாறை போலீசாரோ ஒத்துழைக்க மறுக்கிறார்கள். எல்லா தடைகளையும் மீறி அர்ஜுன் மர்ம முடிச்சுகளை அவிழ்க்கிறார். ஆனால் வழக்கு மேலும் சிக்கலாகிக் கொண்டே போகிறது. மேல்பாறையின் மர்மங்களை தேடிச் சென்ற யாரும் உயிருடன் திரும்பியதில்லை என்பதை அறிந்தும் அர்ஜுன் தொடர்ந்து துப்பறிகிறார். அறிவியலுக்கும் அமானுஸ்யத்திற்கும் இடையே நடக்கும் மிகப்பெரிய போராட்டத்தில் சிக்கிக்கொண்ட அர்ஜுன் பிழைப்பாரா? நண்பர்கள் உயிருடன் திரும்புவார்களா? மேல்பாறையின் மர்மத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப்படுமா?
ஊச்சு – நாவல்
அரவிந்த் சச்சிதானந்தம்
அந்தாதி பதிப்பகம்
அமேசானில் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்
Synopsis:
A gang of friends on a weekend trip, due to unforeseen events are forced to spend a night in an eerie palace in a dense jungle. Though they refuse to accept the bare truth on grounds of logic and reality, they very soon realize that the place is haunted. But, they are late. They start losing their friends one by one. They are never to be seen outside the jungle again. Soon, cops start investigating about the lost friends but in vain. Arjun, a young smart cop take up the responsibility and enter the jungle to probe. Not only do he uncover the gore realities of the jungle one after the other, he find himself trapped in the maze. But, the unrelenting cop solve the case finally, only to find that there are lot more to reveal.
Oochchu (The Fear)- Horror Investigation novel
Aravindh Sachidanandam
Andhadhi Pathippagam
Click to buy
2012 ஆம் ஆண்டு இதே நாளில் என்னுடைய முதல் புத்தகமான ‘போதிதர்மர் முதல் ஜேம்ஸ் பாண்ட் வரை’ வெளியானது. இன்று, அப்பாவின் பிறந்தநாளில், என்னுடைய எட்டாவது புத்தகமான ‘நகைச்சுவைக் கதைகள்’ தொகுப்பை ஈ புத்தகமாக அமேசானில் வெளியிடுவதில் மகிழ்கிறேன்.
அடுத்த சிலநாட்களுக்கு அமேசானில் இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம் . நன்றி
கூகிள் ப்ளே ஸ்டோரில் பல புத்தகங்கள் இலவசமாக கிடைக்கின்றன. முதன்முதலில் புத்தகத்தை டவுன்லோட் செய்ய முற்படும் போது, கிரெடிட் அல்லது டெபிட் கார்ட் விவரங்களை தர வேண்டும். முதல் முறை மட்டும் நம் வங்கிக்கணக்கில் இருந்து ஐம்பது ரூபாய் பிடித்துக்கொள்வார்கள். ஓரிரு நாட்களில் அந்த பணம் திருப்பி தரப்பட்டுவிடும். இது நாம் அளித்த விவரங்கள் உண்மையானதா என்று சரி பார்க்க.
கூகிள், பேபால் உட்பட பல தளங்களும் இப்படிதான் இயங்குகின்றன. இது அவர்களுடைய பாலிசி. மேலும் நாம் எப்போது வேண்டுமானாலும் நம்முடைய கார்ட் விவரங்களை அழித்துவிடலாம். இதுவரை நான் நூற்றுக்கனக்கான இலவச புத்தகங்களை கூகிள் ப்ளேவில் டவுன்லோட் செய்திருக்கிறேன். என் அனுமதியின்றி என் வங்கிக் கணக்கில் இருந்து பணம் டெபிட் செய்யப்பட்டதில்லை.
கூகிள் ப்ளே ஸ்டோரில், என்னுடைய இலவச புத்தகங்களை முதன்முதலாக டவுண்லோட் செய்யும் போது ஐம்பது ரூபாய் டெபிட் செய்யப்படுவதாக சிலர் என்னை தொடர்புகொள்கின்றனர். என் புத்தகம் என்றில்லை, முதன்முதலில் கூகிள் ப்ளேவில் எந்த இலவச புத்தகத்தை டவுன்லோட் செய்தாலும், ஐம்பது ரூபாய் டெபிட் செய்யப்படும் சற்றுப் பொறுத்திருந்தால் அந்த பணம் திரும்பி வந்துவிடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி
அரவிந்த் சச்சிதானந்தம்
தட்பம் தவிர் க்ரைம் நாவலை இலவச ஈ-புத்தகமாக இங்கே பகிர்வதில் மகிழ்கிறேன். இந்த நாவல் முதன்முதலில் ஆன்லைனில் Self Publish செய்யப்பட்டபோது அதை வாங்கிய அனைவருக்கும் நன்றி…
கதைச் சுருக்கம்:
சென்னையில், ஒரு பிரபலமான அரசு பொறியியல் கல்லூரியில் பேராசிரியர் ஒருவர் கொடூரமான முறையில் கொல்லப்படுகிறார். இன்ஸ்பெக்டரான கதாநாயகன் விசாரணையில் ஈடுபடுகிறான். போலீசின் கவனம் முழுக்க கல்லூரியின் மீதிருக்க, கோயம்புத்தூரில் இன்னொரு கொலை நடக்கிறது. கொலைகாரன் வேண்டுமென்றே இன்ஸ்பெக்டருக்கு துப்பு கொடுத்துவிட்டு செல்ல, முதல் கொலை நடந்த கல்லூரியில், மாணவனொருவன் தற்கொலைக்கு முயல்கிறான். அவன்தான் முதல் கொலையின் விட்னெஸ். கல்லூரி நிர்வாகத்தால், தான் மனரீதியான சித்ரவதைக்கு ஆளானதால் தற்கொலைக்கு முயன்றதாக மாணவன் சொல்ல, இன்ஸ்பெக்டருக்கு உண்மைகள் புரியத் தொடங்குகின்றன. கல்லூரியில் ரகசிய விசாரணை மேற்கொள்கிறார். பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் எந்த அளவிற்கு கொடுமைபடுத்தப்படுகிறார்கள் என்பதை அறிந்து திடுக்கிடுகிறார். விசாரணையில், கல்லூரியின் முன்னாள் மாணவன்தான் கொலைகாரன் என்று தெரியவருகிறது. மனநிலை பாதிக்கப்பட்ட அவனை கைது செய்கிறார் இன்ஸ்பெக்டர். ஆனால் கொலைகள் தொடர்கின்றன. பின் ஏராளமான திருப்பங்கள் நிகழ்கின்றன. உண்மையான கொலைகாரன் யார்? தப்பு செய்தவர்கள் தண்டிக்கப் படுவார்களா? மிகப்பெரிய மனோதத்துவ விளையாட்டில் சிக்கிக்கொண்ட இன்ஸ்பெக்டர் பிழைப்பாரா?
To download in Google Play Store click here
To buy PDF Click here
நாவலை பற்றிய கருத்துக்களை இங்கே படிக்கலாம்
‘செல்ஃப்-பப்ளிஷிங்’ (Self-Publishing) என்ற வார்த்தை அண்மை காலத்தில் பிரபலமான வார்த்தையாக இருக்கலாம். ஆனால் தமிழில் ஏதோ ஒரு வகையில் செல்ஃப்-பப்ளிஷிங் கான்செப்ட் வெகு காலமாகவே இருந்து கொண்டிருக்கிறது. பெரும்பான்மையான நேரங்களில் எழுத்தாளர்கள் தங்கள் ஆரம்ப நாட்களில் தங்களுடைய படைப்புகளை தாங்களே பிரசுரித்து வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு வேறு வழி இருந்திருக்கவில்லை. ஆனாலும் செல்ஃப்-பப்ளிஷிங் என்று அவர்கள் அதை அழைக்க வில்லை. ஒரு எழுத்தாளன் தன் படைப்புகளை தானே பிரசுரித்துக்கொள்ளும் முறை தான் செல்ஃப்-பப்ளிஷிங் எனப்படுகிறது. இப்போது உலகளவில் செல்ஃப் பப்ளிஷிங்கிற்கு ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. ஈ-புத்தகம், பிரிண்ட் புத்தகம் என அனைத்தும் சாத்தியம். பிரிண்ட் ஆன் டிமாண்ட் என்ற முறையில் பைசா செலவளிக்காமல் ஒரு புத்தகத்தை பிரிண்ட் செய்ய முடியும். இந்த முறை வளரும் எழுத்தாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். வெளிநாடுகளில் பல வளர்ந்த எழுத்தாளர்களும் இந்த முறையை பின்பற்ற தொடங்கிவிட்டனர்.
இந்தியாவிலும் இந்த முறை வேகமாக வளர்ந்து வருகிறது. செல்ஃப்-பப்ளிஷிங் நிறுவனங்கள் நிறைய உருவாகி வருகின்றன. பல ஆன்லைன் ரீடைல் நிறுவனங்களும் செல்ஃப் பப்ளிஷிங்கில் இறங்கியிருக்கின்றன. இங்கே நிறுவனங்கள் இடைத்தரகர்கள் போலவே செயல்படுவார்கள். ஒரு புத்தகத்தின் முழு உரிமை எழுத்தாளரிடமே இருக்கும். எழுத்தாளாரே பதிப்பாளர். புத்தகத்தை விநியோகம் செய்வதே இந்த நிறுவனங்களின் வேலை. அதற்கு அவர்கள் கமிஷன் மட்டுமே பெற்றுக்கொள்கிறார்கள். ஈ-புத்தகமெனில், பெரும்பாலும் 70-30 முறை பின்பற்ற படுகிறது. ஒரு புத்தகத்தின் விலையில் 30% செல்ஃப் பப்ளிஷிங் நிறுவனத்திற்கு சென்றுவிடும். மீதம் 70% எழுத்தாளருக்கு. பிரிண்ட் புத்தகமெனில் 50% வரை எழுத்தாளருக்கு கிட்டும். எழுத்தாளரிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை முன்பனமாக வாங்கிக்கொண்டு புத்தகத்தை பிரசுரிக்கும் செல்ஃப்-பப்ளிஷிங் நிறுவனங்களும் இருக்கின்றன. வரும் லாபத்தை இறுதியில் பிரித்துக்கொள்வார்கள். இந்தியாவில் ஆங்கில நூல்களுக்கு மார்க்கெட் நிறைய இருப்பதால் காசு செலவில்லாமல் செல்ஃப் பப்ளிஷ் செய்திட முடியும். பிராந்திய மொழி நூல்களுக்கு? அண்மையில் என்னுடைய ‘தட்பம் தவிர்’ நாவலை ஆன்லைனில் செல்ஃப் பப்ளிஷிங் செய்த போது தமிழ் செல்ஃப் பப்ளிஷிங்கில் இருக்கும் பிரச்சனைகளை புரிந்து கொள்ள முடிந்தது.
இந்தியாவில், ஆங்கிலத்தோடு ஒப்பிடுகையில் பிராந்திய மொழி புத்தகங்கள் மிகவும் குறைவாகவே செல்ஃப் பப்ளிஷ் செய்யப்படுகின்றன. எனினும் ஹிந்தி, வங்காளம் போன்ற மொழிகளில் நிறைய நிறுவனங்கள் புத்தகங்களை செல்ஃப் பப்ளிஷ் செய்கின்றன. தமிழில் அதற்கான வாய்ப்புகள் ஆரம்பநிலையிலேயே இருக்கின்றன. கடந்த நான்கு வருடங்களாக பல பிரபல ஆன்லைன் ரீடைல் நிறுவனங்கள் தமிழ் உட்பட பல பிராந்திய மொழி நூல்களை ஆன்லைனில் பிரசுரிக்கப்போவதாக சொல்லிவருகின்றன. ஆனால் உண்மையில், இவர்கள் யாரும் தமிழில் செல்ஃப் பப்ளிஷிங் செய்வதில்லை. என்ன பிரச்சனை?
Amazon kindle direct publishing
அனைத்து இந்திய மொழி புத்தகங்களையும் வரவேற்பதாக amazon சொல்கிறது. அதன் பப்ளிஷிங் தளத்தில் தமிழ் புத்தகங்களை பப்ளிஷ் செய்யும் ஆப்சனும் இருக்கிறது. ஆனால் ஈ-புத்தகத்தை பப்ளிஷ் செய்து பார்த்தால் தமிழ் ஃபாண்ட்கள் எடுப்பதில்லை. வெறும் பொட்டிகள் தான் மிஞ்சுகிறது. Amazon-ஐ தொடர்பு கொண்டால், அவர்கள் தமிழ் புத்தகங்களை பப்ளிஷ் செய்வதில்லை அவர்கள் தளம் தமிழ் ஃபாண்ட்களை சப்போர்ட் செய்வதில்லை என்பதே பதிலாக வந்தது. உண்மையில் தமிழ் font தான் பிரச்சனையா? எல்லா நிறுவனங்களும் தங்களுக்கென்று ஒரு e-book format-ஐ வைத்திருக்கிறது. ஆனால் அவை அவர்களாக உருவாக்கிக்கொண்ட ஃபார்மட்கள் அன்று. உலகின் பிரபலமான ஈ-புக் பார்மட்களை tweak செய்து அவர்களுக்கான ஃபார்மாட்டாக மாற்றிக்கொள்கிறார்கள். ஒரு word doc ஃபைலை amazon ஃபார்மாட்டில் மாற்றுவது அவ்வளவு கடினமான விசயமல்ல. அந்த வேலையை செய்ய நிறைய சாஃப்ட்வேர் இருக்கின்றன. அப்படி கன்வெர்ட் செய்யபட்ட ஃபைல்களை kindle சாதனங்கள் அனைத்திலும் டெஸ்ட் செய்து பார்த்ததில், ஃபாண்ட்கள் எந்த பிரச்சனையுமின்றி மேப் ஆகி இருந்தன. ஆனால் Amazon அதனுடைய converter-ஐ பயன்படுத்தி கன்வெர்ட் செய்யப்பட்ட ஃபைல்களை மட்டுமே ஏற்றுக்கொள்ளும். ஆனால் kindle converter-ஆல் தமிழ் ஃபாண்ட்கள் சரியாக உருவாக்க முடிவதில்லை. தற்போதைய சூழலில் எந்த ஃபார்மட்டிலும் ஒரு தமிழ் ஈ-புத்தகத்தை சிறப்பாக உருவாக்கிட முடியும். பிரச்சனை ஃபாண்ட்டிலோ பார்மட்டிலோ இல்லை. பெரிய வெளிநாட்டு செல்ஃப் பப்ளிஷ் நிறுவனங்கள் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுப்பத்தில்லை என்பதே உண்மை. அதற்கான மார்க்கெட் இங்கே இல்லை என்று அவர்கள் எண்ணுகிறார்கள்.
Flipkart Online Self publishing
Flipkart-டும் தாங்கள் செல்ஃப் பப்ளிஷிங்கில் கோலோச்சப் போவதாக சொல்கிறார்கள். ஆனால் flipkart-இல் நேரடியாக புத்தகத்தை ஒரு எழுத்தாளரால் பிரசுரிக்க முடியாது. வினியோகஸ்தர்கள் மூலமாகதான் flipkart-டிற்கு ஈ-புத்தககங்களை விநியோகம் செய்ய முடியும். அது போன்ற ஒரு விநியோக தளம் தான் Smashwords. இதுவும் வெளிநாட்டு தளம் என்பதால், தமிழுக்கான முக்கியத்துவம் குறைகிறது. smashwords 70-30% என்ற முறையில் இயங்கினாலும், அது ஒரு அமெரிக்க தளம் என்பதால் அமெரிக்காவிற்குவேறு தனியாக வரி செலுத்த வேண்டும் (அமேஜானிலும் இந்த பிரச்சனை இருக்கிறது). இறுதியில் 10-20% தான் எழுத்தாளருக்கு கிட்டும். எனினும் இந்ததளத்தில் ஃபாண்ட் பிரச்சனை இல்லை. வெறும் வோர்ட் ஃபைலை பதிவேற்றம் செய்துவிட்டால் போதும். conversion வேலைகளை smashwords தளம் பார்த்துக்கொள்ளும். இத்தளத்தில் பெரும்பாலான புத்தகங்கள் e-pub ஃபார்மட்டில் விற்க்கப்படுகின்றன. தமிழ் e-pub புத்தகங்களில் ஃபாண்ட் பிரச்சனை இருப்பதில்லை. இதில் பிரசுரித்திடலாம் என்று முடிவு செய்து போதிதர்மர் முதல் ஜேம்ஸ்பாண்ட் வரை என்ற இலவச ஈ-புத்தகத்தை சோதனை முயற்சியாக இங்கே பிரசுரித்துப்பார்த்தேன். smashword தளத்தில் பிரசுரிக்கப்படும் எல்லா புத்தகங்களுமே Flipkart-டிற்கு விநியோகமாகாது. Smashwords premium catalogue-யில் இடம்பெற்றுள்ள புத்தகங்களை மட்டுமே smashwords Flipkart-டிற்கு விநியோகம் செய்யும். ஒரு புத்தகம் Smashwords premium catalogue-யில் இடம்பெற வேண்டுமெனில், அந்த புத்தகம் சில ஃபார்மட்டிங் டெஸ்ட்களை பாஸ் செய்ய வேண்டும். இங்கேதான் layout பிரச்சனை வருகிறது. என்னதான் smashwords-யின் விதிமுறைகளை பின்பற்றி வோர்ட் டாக்குமென்டை ஃபார்மட் செய்தாலும், ஒரு தமிழ் டாக்குமென்ட்டின் layout ஆங்கில புத்தகத்திலிருந்து மாறுபட்டுதான் இருக்கும். smashwords-யின் Autovetter சாஃப்ட்வேரால் தமிழ் டாக்குமென்ட்களை சரியாக செக் செய்ய முடிவதில்லை. இங்கும் தமிழ் பப்ளிஷிங் சாத்தியப்படவில்லை.
Google Play Self Publishing.
பப்ளிஷிங் என்று வருகையில் கூகிள் Author friendly கிடையாது. கூகிள் ப்ளே ஸ்டோரில் ஒரு புத்தகத்தை பப்ளிஷ் செய்தால் அது பிராசஸ் ஆக கிட்டதட்ட ஒரு மாதம் ஆகிறது. இதிலும் என் புத்தகத்தை பிரசுரித்து பார்த்தேன். பப்ளிஷ் ஆக 20 நாட்கள் ஆனது. அதன் பப்ளிஷிங் போர்டல் வெளிப்படையாக இருக்கவில்லை. மேலும் அவர்கள் தங்கள் போக்கில் புத்தகத்தின் விலையை மாற்றுவார்கள் என்பது கூடுதல் தகவல். ஆனால் கூகிளில் ஃபாண்ட், ஃபார்மட், லேஅவுட் பிரச்சனைகள் கிடையாது. ஒரு வேலை வருங்காலத்தில் அவர்கள் பப்ளிஷிங்கில் அதிக கவனம் செலுத்த கூடும்.
ஒரு புத்தகத்தை ஒரு பொருளாக ஒரு e-commerce தளத்தில் விற்பதற்கும், செல்ஃப்-பப்ளிஷிங் நிறுவனங்கள் மூலம் விற்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. செல்ஃப்-பப்ளிஷிங் என்று வரும்போது அந்த நிறுவனங்களே புத்தகத்தை ப்ரோமோட் செய்யும். ஒவ்வொரு புத்தகத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து மார்க்கெட் செய்யும். வெறும் ஆன்லைன் வர்த்தகத்தில் மட்டும் கவனம் செலுத்தும் தளங்கள் புத்தகத்தில் தனி கவனம் செலுத்துவதில்லை. எனினும் ஆன்லைன் வர்த்தக தளங்களில் புத்தகத்தை நேரடியாக விற்றிடலாம் என்று அவர்களை தொடர்பு கொண்டதில், ஒரு எழுத்தாளர் நேரடியாக அந்த தளங்களில் ஈ-புத்தகங்களை விற்கும் வாய்ப்பு இல்லை என்று தெரிய வந்தது. டிஜிட்டல் கூட்ஸ் செல்லிங்க் என்று வரும் போது பலரும் indepenedent e-book வியாபாரத்தில் இறங்க விரும்பவில்லை.
இது ஒரு புறமிருக்க, செல்ஃப் பப்ளிஷிங் பாரம்பரிய பப்ளிஷிங் முறைகளை உடைத்துவிடும் என்று வெளிநாடுகளில் ஆருடம் சொல்கிறார்கள். மேலும் ஈ-புத்தக்ங்கள் பிரிண்ட் புத்தகங்களை டாமினேட் செய்ய தொடங்கிவிடும் என்றும் சொல்கிறார்கள். தமிழுக்கு அந்த நிலை வராது. இங்கே பிரிண்ட் புத்தகங்ளுக்கு இருக்கும் மார்க்கெட் இருந்து கொண்டுதான் இருக்கும். ஏனெனில் இங்கே புத்தகங்கள் குறைவான எண்ணிக்கையிலேயே விற்பனை ஆகின்றன. அதே சமயத்தில் செல்ஃப் பப்ளிஷிங் ஈ-புத்தங்களுக்கான புதிய மார்க்கெட்டை உருவாக்கும். அப்போது பெரிய பதிப்பகங்களே ஆன்லைன் செல்ஃப் பப்ளிஷிங்கில் இறங்கலாம். ஈ-புத்தகத்திற்கு தனி முதலீடு என்று எதுவும் தேவையில்லை. அதனால் எழுத்தாளர், பதிப்பாளர் இருவருமே பயனடைந்திட முடியும்.
இங்கே தமிழ் ஆன்லைன் பப்ளிஷிங் பற்றி மட்டுமே பேசுவதற்கு காரணம் இருக்கிறது. செல்ஃப் பப்ளிஷிங்கில் புத்தகத்தை பிரிண்ட் ஆன் டிமாண்ட் முறையில் பிரிண்ட் செய்யலாம், அல்லது பேட்ச் ப்ரொடக்ஷன் மூலம் பிரிண்ட் செய்யலாம். பிரிண்ட் ஆன் டிமாண்ட்டில் ஒரே ஒரு புத்தகத்தை கூட பிரிண்ட் செய்ய முடியும். பேட்ச் ப்ரொடக்ஷனில் குறைந்த அளவிலான புத்தகங்களை பிரிண்ட் செய்ய முடியும். (ஆனால் சம்ப்ரதாயமான ஆப்செட் பிரிண்டிங்கில் குறைந்த பட்சம் ஆயிரம் புத்தகங்களை பிரிண்ட் செய்தால்தான் லாபம்). இந்தியாவில் புத்தகங்களை பிரிண்ட் செய்து விற்கும் செல்ஃப் பப்ளிஷிங் நிறுவனங்கள் இருக்கின்றன. ஆனால் தமிழில் இது சாத்தியமில்லை. Print on demand- மூலம் 150 பக்கங்கள் உள்ள ஒரு தமிழ் புத்தகத்தை பிரிண்ட் செய்வதற்கு குறைந்தது 200 ரூபாய் ஆகிறது. அத்தகைய புத்தகங்களை ஆன்லைனில் விற்க்க வேண்டுமெனில் குறைந்தது 250 ரூபையாவது சார்ஜ் செய்ய வேண்டும். (ஒரு வளரும் எழுத்தாளரின் புத்தகத்தை) அவ்வளவு காசு கொடுத்து யாரும் வாங்க மாட்டார்கள் என்பது ஒரு புறமிருக்க, அப்படி அந்த புத்தகத்தை விற்றாலும் எழுத்தாருக்கு ஐந்து ரூபாய் தான் கிடைக்கும். இங்கே செல்ஃப் பப்ளிஷிங்கின் அடிப்படை அம்சமே அடிபட்டு போகிறது. எழுத்தாளர், விற்பனையாளர் இருவருமே பயனடைய வேண்டும் என்பதே செல்ஃப் பப்ளிஷிங்கின் நோக்கம். ஓரிரு செல்ஃப் பப்ளிஷிங் நிறுவனங்கள் தமிழ் புத்தகங்களை பேட்ச் ப்ரொடக்ஷன் செய்கின்றன. ஆனால் அவர்கள் அனைவரும் Paid Publishing முறையை பின்பற்றுகிறார்கள். எழுத்தாளர் சராசரியாக ஒரு புத்தகத்திற்கு 30000 ரூபாய் வரை அந்த நிறுவனங்களுக்கு முன்பணமாக செலுத்த வேண்டும். அவர்கள் அதை வைத்து புத்தகத்தை பிரசுரிப்பார்கள். முப்பதாயிறம் ரூபாய்க்கு மேல் புத்தகம் விற்றால் தான் எழுத்தாளர் சம்பாதிக்க முடியும். ஆங்கில புத்தகமெனில் எளிதில் சம்பாதித்துவிடலாம். தமிழில் அசாத்தியம். ஆனால் ஈ-பப்ளிஷிங்கில் இந்த பிரச்சனை இல்லை. அதற்கு எழுத்தாளர் எந்த முன்பணமும் செலுத்த வேண்டியது இல்லை.
அப்படிதான், ஒருவழியாக, Pothi தளத்தில் தட்பம் தவிர் நாவலை பிரசுரம் செய்தேன். Pothi ஒரு பெங்களூர் நிறுவனம். இந்தியாவில் உள்ள செல்ஃப் பப்ளிஷிங் நிறுவனங்கள் அனைத்தும் ஆங்கிலத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஆங்கில புத்தகங்கள் நிறைய விற்பதே அதற்கு காரணம். தமிழுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய ஒரு தமிழ் செல்ஃப்-பப்ளிஷிங் நிறுவனம் உருவாக வேண்டும். அப்படி உருவானால் பல வளரும் எழுத்தாளர்கள் பலன் அடைவார்கள். பிரபல எழுத்தாளர்களும் இந்த முறையை பின்பற்ற தொடங்கினால், ஆன்லைனில் பிளாக் வாசகர்களிடம் அவர்களின் புத்தகம் அதிக எண்ணிக்கையில் போய் சேரும். அடுத்த தலைமுறையை android சாதனங்களும், ரீடர்களும் ஆட்கொண்டுவிட்டன. சிறு சிறு ஈ-புத்தகங்களை குறைந்த விலையில் வெளியீடுவதன் மூலம் புத்தகம் வாசிப்பவர்களின் எண்ணிக்கையையும் அதிக படுத்திவிட முடியும். என்னை போல் முழு நேரம் எழுதுபவர்கள் பொருளாதார ரீதியாகவும் லாபம் அடைந்திட முடியும். இதை ஒரே நாளில் சாத்தியப்படுத்திவிட முடியாது. ஆனாலும் காலப்போக்கில் இதை செய்து முடிக்க முடியும். ஆன்லைன் செல்ஃப் பப்ளிஷிங் என்பது தொழிநுட்பத்தின் வளர்ச்சியே. பிரபல எழுத்தாளர்கள் இந்தமுறையை ஆதரித்தால், அது பல புது கதவுகளை திறந்து வைக்கும்.
***
சானடோரியம் ப்ரிட்ஜை ஒட்டி அமைந்திருந்த தனியார் வங்கி ஏடிஎம்-யில் பணம் எடுத்துவிட்டு வெளியே வந்தார் ரங்கதுரை. வெளியே அரைப்போதையில் அமர்ந்திருந்த ஏடிஎம் காவலாளி காக்கையன் ரங்கதுரையைப் பார்த்து வணக்கம் வைத்தான். ரங்கதுரை சிறு புன்னகை புரிந்து விட்டு நகர, அவன், “சார்” என்றான்.
துரை அவனிடம் ஒரு பத்துரூபாயை நீட்ட அவன் சந்தோஷமாகப் பெற்றுக்கொண்டு, “சாரு மனைவி மக்களோட ரொம்ப நாள் வாழணும்” என்று வாழ்த்தினான்.
“என் பொண்டாட்டி செத்து பலவருஷம் ஆகுதுயா” என்று சொல்லி விட்டு செர்விஸ் ரோடில் இறங்கி நடந்தார் துரை. வேகமாக வந்த போலீஸ் பேட்ரோல் கார் ஒன்று அவரை உரசிக் கொண்டு போக, அவர் ஸ்தம்பித்து நின்றார்.
“எப்டி போறானுங்க… எதிர்த்துக் கேட்டா உள்ள வச்சு குத்துவானுங்க…” என்று அரைப்போதையில் தன் கருத்தைப் பதிவு செய்துவிட்டு, தன்னிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்று எண்ணிக் கொண்டிருந்தான் காக்கையன். அடுத்த ரவுண்டிற்கு தயாராகிக் கொண்டிருந்தான் அவன்.
திடீரென்று அங்கே ஒரு மாருதி ஸ்விஃப்ட் வந்து நின்றது. ஜன்னல் கண்ணாடி இறங்கியது.
“ஹலோ சார்” காரினுள்ளிருந்து கேட்டது ஒரு ஆண் குரல்.
சிறிது நேரம் உற்று நோக்கிய ரங்கதுரை, “என்ன… ஆளே மாறிட்ட…?” என்று ஆச்சர்யமாகக் கேட்டார்.
“உள்ள ஏறுங்க சார்… பேசிக்கிட்டே போவோம்”
கார் பச்சைமலை அடிவாரத்தில் வந்து நின்றது. மணி காலை 11.30.
“நந்தன பார்த்து எவ்ளோ நாளாச்சு! ஆஸ்ட்ரேலியால இருந்து எப்ப வந்தான்…?” ரங்கதுரை ஆர்வமாக வினவினார்.
“லாஸ்ட் வீக்” அவன் அதிகம் பேச விரும்பாதவன். எனினும் இவருக்குப் பதிலளித்தாக வேண்டுமே என்பதற்காகவே பேசினான்.
“இங்க என்ன பண்றான்…?”
“அமைதியான இடமாச்சே! ரிலாக்சா பேசலாம்னு வரச் சொன்னார். வழியில அன்எக்ஸ்பெக்டடா உங்களப் பாத்தேன். உங்களப் பாத்தா சந்தோஷப்படுவார்” என்று சொல்லிவிட்டு தன் செல்ஃபோனை எடுத்து யாருக்கோ கால் செய்வது போல் பாசாங்கு செய்தான். பின்,
“நீங்க இங்கயே இருங்க… அவர் மொபைல் நாட் ரீச்சபிள்னு வருது. நான் போய் அவரக் கூட்டிட்டு வந்துறேன்…”
“ஏன் நான் மலை மேல வரக்கூடாதா?“
“சார் முன்னூறு படிக்கு மேல் ஏறணும்… வயசாயிருச்சு இல்ல…”
ரங்கதுரைக்குக் கோபம் வந்தது. “ஓய். எனக்கு என்ன அப்டி வயசாயிருச்சு… அவனவன் இந்த வயசுல கல்யாணமே பண்ணிக்கிறான்…”
இருவரும் மலையின் உச்சியை அடைந்தனர். மணி பன்னிரண்டு. அங்கே ஒரு மகாயுகக்காளி கோவில் இருந்தது. காளி உக்கிரமாகக் காட்சி அளித்தாள். இடம் வெறிச்சோடி இருந்தது.
“நந்தன் எங்க?”
“இங்கதான் சார் எங்கயாவது ஒதுங்கியிருப்பாரு… கொஞ்சம் இருங்க…” அவன் மேல் இன்னும் துரைக்கு சந்தேகம் வரவில்லை.
“சார்.. பிரகாஷ் சாரப் பத்தி கேள்விப்பட்டதும் ரொம்ப கஷ்டமாக ஆகிருச்சு…” அவன் சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு இதைச் சொன்னான்.
“ஆமா ஆமா… முன்னாடிநாள் தான்யா அவரப் பார்த்தேன். ரொம்ப நல்ல மனுஷன்”
“யாரு கொன்னுருப்பா…?”
துரை தெரியாது என்பது போல் தலையசைத்தார்.
“கணேஷும் செத்துட்டாராம்.. கொன்னுட்டாங்க…”
துரை யார் கணேஷ் என்பது போல் ஆச்சர்யமாகப் பார்த்தார்.
“அதான் சார்… மெட்டல் ஃபார்மிங்க் எக்ஸ்பெர்ட் கணேஷ். கோயம்புத்தூர்காரு. யாரோ அநியாயமா கொன்னுட்டாங்க”
துரைக்கு உண்மை புலப்பட ஆரம்பித்தது. உடல் வேர்த்தது.
“நந்தன் எங்க…?” அவனிடமிருந்து பதில் வரவில்லை.
“நந்தன் எங்கடா…?” மீண்டும் கத்தினார்.
“செஞ்ச தப்புக்கு யாரா இருந்தாலும் தண்டனை அனுபவிக்கணும் சார்…“ என்றவாறே அவன் சட்டைப்பைக்குள் இருந்து கூர்மையான கத்தியை எடுத்தான். ரங்கதுரைக்கு வயதாகி இருந்தாலும், உடம்பில் பலம் இருந்தது. அவனிடம் முடிந்தவரை போராடினார். அவன் முடியை பிடித்து இழுத்தார். அவனைப் பிடித்துத் தள்ள முயன்றார். இறுதியில் அவன் தான் வெற்றிபெற்றான். அவன், அவரது நெஞ்சில் மூன்று என்று எழுதிவிட்டு நகர்ந்தான். அவர் உடம்பில் இன்னும் உயிர் ஒட்டிக் கொண்டிருந்தது.
“பேதை பெண்ணை வடிவுகண்டு காமுகனவன் நத்தினால்
விடுவனோ அவனை முன்னை வெட்ட வேண்டும் என்பனே…”
அவர் முன் நின்று அவன் உரக்கப் பாடினான். அவர் தரையில் துடித்துக் கொண்டிருந்தார். அவர் கையில் கொத்தாக முடி சிக்கியிருந்தது. அவன் மீண்டும் மீண்டும் அதே வரிகளைப் பாடிக் கொண்டே அங்கிருந்து கீழே இறங்கினான். இப்போது காளியின் முகத்தில் அமைதி படர்ந்திருந்தது.
***
நாவலை வாங்க இங்கே கிளிக் செய்யவும்.
என்னுடைய முதல் க்ரைம் நாவல் ‘தட்பம் தவிர்’ ஈ-புத்தகமாக வெளியாகி இருக்கிறது. எங்களுடைய ஸ்பார்க் க்ரூஸ் பப்ளிக்கேஷன்ஸ் செல்ஃப்-பப்ளிஷ் செய்யும் முதல் நாவல் இது. Pothi தளத்தில் கிடைக்கிறது. பிரிண்ட் புத்த்கம் விரைவில் வெளிவரும்.
கதைச் சுருக்கம்:
சென்னையில், ஒரு பிரபலமான அரசு பொறியியல் கல்லூரியில் பேராசிரியர் ஒருவர் கொடூரமான முறையில் கொல்லப்படுகிறார். இன்ஸ்பெக்டரான கதாநாயகன் விசாரணையில் ஈடுபடுகிறான். போலீசின் கவனம் முழுக்க கல்லூரியின் மீதிருக்க, கோயம்புத்தூரில் இன்னொரு கொலை நடக்கிறது. கொலைகாரன் வேண்டுமென்றே இன்ஸ்பெக்டருக்கு துப்பு கொடுத்துவிட்டு செல்ல, முதல் கொலை நடந்த கல்லூரியில், மாணவனொருவன் தற்கொலைக்கு முயல்கிறான். அவன்தான் முதல் கொலையின் விட்னெஸ். கல்லூரி நிர்வாகத்தால், தான் மனரீதியான சித்ரவதைக்கு ஆளானதால் தற்கொலைக்கு முயன்றதாக மாணவன் சொல்ல, இன்ஸ்பெக்டருக்கு உண்மைகள் புரியத் தொடங்குகின்றன. கல்லூரியில் ரகசிய விசாரணை மேற்கொள்கிறார். பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் எந்த அளவிற்கு கொடுமை படுத்தப்படுகிறார்கள் என்பதை அறிந்து திடுக்கிடுகிறார். விசாரணையில், கல்லூரியின் முன்னாள் மாணவன்தான் கொலைகாரன் என்று தெரியவருகிறது. மனநிலை பாதிக்கப்பட்ட அவனை கைது செய்கிறார் இன்ஸ்பெக்டர். ஆனால் கொலைகள் தொடர்கின்றன. பின் ஏராளமான திருப்பங்கள் நிகழ்கின்றன. உண்மையான கொலைகாரன் யார்? தப்பு செய்தவர்கள் தண்டிக்கப் படுவார்களா? மிகப்பெரிய மனோதத்துவ விளையாட்டில் சிக்கிக்கொண்ட இன்ஸ்பெக்டர் பிழைப்பாரா?
தட்பம் தவிர்-e book
அரவிந்த் சச்சிதானந்தம்
ஸ்பார்க் க்ரூஸ் பப்ளிக்கேஷன்ஸ்
விலை- Rs 60
Pothi தளத்தில் வாங்க இங்கே கிளிக் செய்யவும்.
Thatpam Thavir Free e-book To download PDF click here