Amazon Kindle Pen to publish போட்டியின் மார்கெட்டிங் அல்லது லாபியிங் பிரச்சனைகளாக முன்வைக்கப்படும் விஷயங்கள் வெறும் கிண்டிலுக்கு மட்டுமே உரித்தானவை அல்ல என்பதை உறுதியாக சொல்ல முடியும். பொதுவாகவே தமிழ் எழுத்துலகில் கொஞ்சம் ‘காண்டக்ட்ஸ்’ உள்ள அல்லது தொடர்புகளை வளர்த்துக்கொள்ளக் கூடிய ஒரு எழுத்தாளரால் சுமாரான ஒரு படைப்பை தமிழின் ஆகச்சிறந்த படைப்பு என்ற தோற்றத்தை உருவாக்கிவிட முடியும். அதுவும் சமூக வலைத்தளங்களின் வருகைக்குப்பின் இது இன்னும் எளிதாகி விட்டது.
போதாகுறைக்கு ஏரளாமான சிறுசிறு குழுக்கள் பல விருதுகளை தங்களுக்குள்ளே அறிவித்துக்கொண்டு, இறந்த எழுத்தாளர்களின் எழுத்துலக வாரிசு என்று தங்களுக்கு பிடித்தவர்களை மட்டும் அறிமுகப்படுத்தி சந்தோசப் பட்டுக் கொண்டும் இருக்கின்றன.
இத்தகைய பாரபட்சமானகாலகட்டத்தில் ‘Kindle Self-Publishing’ நமக்குகிடைத்த மிகப் பெரிய வரம். யாரும் யாருடைய ஆதரவுமின்றி புத்தகத்தை பதிப்பித்திடமுடியும் என்ற ஒரே காரணம் போதும் அதை நாம் வரவேற்க.
ஆனால் யாரும் பதிப்பிக்கலாம் என்ற இந்த சுதந்திரமே பல சிக்கல்களையும் கொண்டு வந்திருக்கிறது என்பதும் உண்மைதான். ‘எழுத்தாளன்’ என்ற அடையாளத்தை பெற்றுக் கொள்வதற்காகவே துரிதகதியில் பதிப்பிக்கப்படும் மேலோட்டமான எழுத்துக்கள் கிண்டிலில் ஏராளம் உண்டு. எனினும் இதையெல்லாம் மீறி பல நல்லப் படைப்புகள், முன்பைவிட அதிக அளவில் கிண்டிலில் பதிப்பிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. நல்லப் படைப்புகள் அதற்கான காலத்தில்தானாகவே தன் வாசகர்களைக் கண்டுகொண்டுவிடும், நல்லதல்லாதவை காலப் போக்கில் ஒதுங்கிக் கொள்ளும் என்பதால் இதைப் பற்றி நாம் அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.
Pentopublish போட்டி என்று வரும் போது, அதிக வாசக வரவேற்பு பெரும் புத்தகங்களே அடுத்த சுற்றிற்குதேர்வாகும் என்பதை நம் எழுத்தாளர்கள் literal-ஆக புரிந்து கொண்டுவிட்டதன் விளைவு தான் தற்போது நடக்கும் ‘ரேட்டிங் அரசியல்’. இப்படி செய்வது தவறு என்றுசொன்னால் இரண்டு விதமான எதிர்வினைகள் வரும்.
ஒன்று, மார்கெட்டிங் செய்யத்தெரிந்தோர் செய்கிறார் அதில் என்ன தவறு என்பார்கள். சிறுவட்டத்தினுள்ளிருந்து தன் எழுத்து திறமையை மட்டுமே நம்பி போட்டியில் கலந்து கொள்பவருக்கோ அல்லது ஒரு முழுநேர எழுத்தாளருக்கோ இருக்கும் தொடர்புகளைவிட ஒரு MNC ஊழியருக்கு அல்லது கல்லூரி மாணவருக்கு அதிக நேரடி தொடர்புகள் இருக்கும். நண்பன், நண்பனின் நண்பன் என்று பெரும் வட்டத்தை உருவாக்கி வைத்திருப்போரால் மிக எளிதாகநிறைய ரேட்டிங்கை பெற்றுக் கொள்ளமுடியும், அந்த படைப்பிற்கு அத்தகைய தகுதி இல்லை என்றாலும். இது மார்கெட்டிங் அல்ல லாபியிங் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும் என்றே நினைக்கிறேன்.
கடந்த வருடம் இதே போட்டியில், சில ஹிந்திப் பெயர்கள் கொண்ட ஆசாமிகள் ஒரு தமிழ் புத்தகத்திற்கு ரேட்டிங் செய்திருந்ததை கவனித்தேன். ஒருவேளை தமிழ் படிக்க தெரிந்த ஹிந்திக்காரர்களாக இருப்பர்களோ என்னமோ! யாரோ ரேட்டிங் வாங்கிக் கொண்டு போகட்டும் நமக்கு என்ன பிரச்சனை என்று இருந்துவிட முடியாது. அற்பணிப்போடு ஒரு படைப்பை எழுதுவதைவிட, அதை ப்ரமோட் செய்வது மட்டுமே முக்கியம் என்ற நம்பிக்கையை இத்தகைய செயல்கள்விதைத்துவிடும், அது நம் எழுத்துலகிற்கு தான் நஷ்டம்.
இன்னொரு எதிர்வினை, நன்றாக இருப்பதால் தான் நிறைய பேர் வாசிக்கிறார்கள் என்பார்கள். நிறைய பேர் வாசிக்கிறார்கள் அதனால் அவர் நல்ல எழுத்தாளர் என்பார்கள். இந்தப் புரிதலை இன்றைய இணைய சூழலில் மாற்றுவதுகடினம். பிள்ளையார் பால் குடிக்கிறார், ஆம் குடிக்கிறார் நானும் பார்த்தேன் என்ற வகையில் தான் இன்று நிறைய படைப்புகள் மற்றும் படங்கள் கொண்டாடப்படுகின்றன.இது இணையம் ஏற்படுத்தும் பாதிப்பு. Virtual Collective Consciousness.
இத்தகைய பிரச்சனைகளை எல்லாம் மீறி நாம் இது போன்ற போட்டிகளை வரவேற்க வேண்டிய காரணம் முன்பு சொன்னதுபோல், யாரும்யாருடைய ஆதரவுமின்றி புத்தகத்தை பதிப்பித்திட முடியும் என்பதே. தன் முதல் படைப்பை எழுதும் எழுத்தாளருக்கும், பல படைப்புகளை எழுதியவருக்கும் சரிசமமான மேடையை இத்தகைய போட்டிகள் உருவாக்கித் தருகின்றன. மற்றபடி இதில் இருக்கும் லாபியிங் சிக்கலை தனி மனித அறத்தால் மட்டுமே களைய முடியும்.
இதில் கலந்து கொண்ட, கலந்து கொள்ளப் போகும் அத்தனைப்பேருக்கும் வாழ்த்துக்கள். வெற்றிபெறுபவர் தன்னைத் தானே கேட்டுக் கொள்ள வேண்டியது,பரிசு தன் எழுத்துத் திறமைக்கா அல்லது மார்க்கெட்டிங் திறமைக்கா என்பதையே. எழுத்துத் திறமையை விட மார்க்கெட்டிங் திறமை மேலோங்கிவிட்டதாக அவர் உணர்வாராயின்,இன்னும் அதிக பொறுப்புடன், அற்பணிப்புடன்அடுத்த படைப்பை எழுத வேண்டிய கடமை அவருக்கு இருக்கிறது. எழுதுவார் என்று நம்புவோம்.
திறம்பட எழுதியும், மார்கெட்டிங் சாத்தியப்படவில்லை என்றோ பரிசைப் பெறமுடியவில்லை என்றோ யாரும் வருத்தப்பட தேவையில்லை. எப்போதும் சொல்வது போல், எழுத்தாளன் என்ற அடையாளத்தை தக்கவைத்துக் கொள்வதைவிட, பரிசுகள் விருதுகளை பெறுவதைவிட, தொடர்ந்து அற்பணிப்புடன் எழுதுவது மட்டுமே முக்கியமாகிறது.
எழுதுவோம்…
தொடர்புடைய பதிவுகள்
தமிழில் ஆன்லைன் செல்ஃப்-பப்ளிஷிங் ஏன் அவசியம்?