‘செல்ஃப்-பப்ளிஷிங்’ (Self-Publishing) என்ற வார்த்தை அண்மை காலத்தில் பிரபலமான வார்த்தையாக இருக்கலாம். ஆனால் தமிழில் ஏதோ ஒரு வகையில் செல்ஃப்-பப்ளிஷிங் கான்செப்ட் வெகு காலமாகவே இருந்து கொண்டிருக்கிறது. பெரும்பான்மையான நேரங்களில் எழுத்தாளர்கள் தங்கள் ஆரம்ப நாட்களில் தங்களுடைய படைப்புகளை தாங்களே பிரசுரித்து வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு வேறு வழி இருந்திருக்கவில்லை. ஆனாலும் செல்ஃப்-பப்ளிஷிங் என்று அவர்கள் அதை அழைக்க வில்லை. ஒரு எழுத்தாளன் தன் படைப்புகளை தானே பிரசுரித்துக்கொள்ளும் முறை தான் செல்ஃப்-பப்ளிஷிங் எனப்படுகிறது. இப்போது உலகளவில் செல்ஃப் பப்ளிஷிங்கிற்கு ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. ஈ-புத்தகம், பிரிண்ட் புத்தகம் என அனைத்தும் சாத்தியம். பிரிண்ட் ஆன் டிமாண்ட் என்ற முறையில் பைசா செலவளிக்காமல் ஒரு புத்தகத்தை பிரிண்ட் செய்ய முடியும். இந்த முறை வளரும் எழுத்தாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். வெளிநாடுகளில் பல வளர்ந்த எழுத்தாளர்களும் இந்த முறையை பின்பற்ற தொடங்கிவிட்டனர்.
இந்தியாவிலும் இந்த முறை வேகமாக வளர்ந்து வருகிறது. செல்ஃப்-பப்ளிஷிங் நிறுவனங்கள் நிறைய உருவாகி வருகின்றன. பல ஆன்லைன் ரீடைல் நிறுவனங்களும் செல்ஃப் பப்ளிஷிங்கில் இறங்கியிருக்கின்றன. இங்கே நிறுவனங்கள் இடைத்தரகர்கள் போலவே செயல்படுவார்கள். ஒரு புத்தகத்தின் முழு உரிமை எழுத்தாளரிடமே இருக்கும். எழுத்தாளாரே பதிப்பாளர். புத்தகத்தை விநியோகம் செய்வதே இந்த நிறுவனங்களின் வேலை. அதற்கு அவர்கள் கமிஷன் மட்டுமே பெற்றுக்கொள்கிறார்கள். ஈ-புத்தகமெனில், பெரும்பாலும் 70-30 முறை பின்பற்ற படுகிறது. ஒரு புத்தகத்தின் விலையில் 30% செல்ஃப் பப்ளிஷிங் நிறுவனத்திற்கு சென்றுவிடும். மீதம் 70% எழுத்தாளருக்கு. பிரிண்ட் புத்தகமெனில் 50% வரை எழுத்தாளருக்கு கிட்டும். எழுத்தாளரிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை முன்பனமாக வாங்கிக்கொண்டு புத்தகத்தை பிரசுரிக்கும் செல்ஃப்-பப்ளிஷிங் நிறுவனங்களும் இருக்கின்றன. வரும் லாபத்தை இறுதியில் பிரித்துக்கொள்வார்கள். இந்தியாவில் ஆங்கில நூல்களுக்கு மார்க்கெட் நிறைய இருப்பதால் காசு செலவில்லாமல் செல்ஃப் பப்ளிஷ் செய்திட முடியும். பிராந்திய மொழி நூல்களுக்கு? அண்மையில் என்னுடைய ‘தட்பம் தவிர்’ நாவலை ஆன்லைனில் செல்ஃப் பப்ளிஷிங் செய்த போது தமிழ் செல்ஃப் பப்ளிஷிங்கில் இருக்கும் பிரச்சனைகளை புரிந்து கொள்ள முடிந்தது.
இந்தியாவில், ஆங்கிலத்தோடு ஒப்பிடுகையில் பிராந்திய மொழி புத்தகங்கள் மிகவும் குறைவாகவே செல்ஃப் பப்ளிஷ் செய்யப்படுகின்றன. எனினும் ஹிந்தி, வங்காளம் போன்ற மொழிகளில் நிறைய நிறுவனங்கள் புத்தகங்களை செல்ஃப் பப்ளிஷ் செய்கின்றன. தமிழில் அதற்கான வாய்ப்புகள் ஆரம்பநிலையிலேயே இருக்கின்றன. கடந்த நான்கு வருடங்களாக பல பிரபல ஆன்லைன் ரீடைல் நிறுவனங்கள் தமிழ் உட்பட பல பிராந்திய மொழி நூல்களை ஆன்லைனில் பிரசுரிக்கப்போவதாக சொல்லிவருகின்றன. ஆனால் உண்மையில், இவர்கள் யாரும் தமிழில் செல்ஃப் பப்ளிஷிங் செய்வதில்லை. என்ன பிரச்சனை?
Amazon kindle direct publishing
அனைத்து இந்திய மொழி புத்தகங்களையும் வரவேற்பதாக amazon சொல்கிறது. அதன் பப்ளிஷிங் தளத்தில் தமிழ் புத்தகங்களை பப்ளிஷ் செய்யும் ஆப்சனும் இருக்கிறது. ஆனால் ஈ-புத்தகத்தை பப்ளிஷ் செய்து பார்த்தால் தமிழ் ஃபாண்ட்கள் எடுப்பதில்லை. வெறும் பொட்டிகள் தான் மிஞ்சுகிறது. Amazon-ஐ தொடர்பு கொண்டால், அவர்கள் தமிழ் புத்தகங்களை பப்ளிஷ் செய்வதில்லை அவர்கள் தளம் தமிழ் ஃபாண்ட்களை சப்போர்ட் செய்வதில்லை என்பதே பதிலாக வந்தது. உண்மையில் தமிழ் font தான் பிரச்சனையா? எல்லா நிறுவனங்களும் தங்களுக்கென்று ஒரு e-book format-ஐ வைத்திருக்கிறது. ஆனால் அவை அவர்களாக உருவாக்கிக்கொண்ட ஃபார்மட்கள் அன்று. உலகின் பிரபலமான ஈ-புக் பார்மட்களை tweak செய்து அவர்களுக்கான ஃபார்மாட்டாக மாற்றிக்கொள்கிறார்கள். ஒரு word doc ஃபைலை amazon ஃபார்மாட்டில் மாற்றுவது அவ்வளவு கடினமான விசயமல்ல. அந்த வேலையை செய்ய நிறைய சாஃப்ட்வேர் இருக்கின்றன. அப்படி கன்வெர்ட் செய்யபட்ட ஃபைல்களை kindle சாதனங்கள் அனைத்திலும் டெஸ்ட் செய்து பார்த்ததில், ஃபாண்ட்கள் எந்த பிரச்சனையுமின்றி மேப் ஆகி இருந்தன. ஆனால் Amazon அதனுடைய converter-ஐ பயன்படுத்தி கன்வெர்ட் செய்யப்பட்ட ஃபைல்களை மட்டுமே ஏற்றுக்கொள்ளும். ஆனால் kindle converter-ஆல் தமிழ் ஃபாண்ட்கள் சரியாக உருவாக்க முடிவதில்லை. தற்போதைய சூழலில் எந்த ஃபார்மட்டிலும் ஒரு தமிழ் ஈ-புத்தகத்தை சிறப்பாக உருவாக்கிட முடியும். பிரச்சனை ஃபாண்ட்டிலோ பார்மட்டிலோ இல்லை. பெரிய வெளிநாட்டு செல்ஃப் பப்ளிஷ் நிறுவனங்கள் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுப்பத்தில்லை என்பதே உண்மை. அதற்கான மார்க்கெட் இங்கே இல்லை என்று அவர்கள் எண்ணுகிறார்கள்.
Flipkart Online Self publishing
Flipkart-டும் தாங்கள் செல்ஃப் பப்ளிஷிங்கில் கோலோச்சப் போவதாக சொல்கிறார்கள். ஆனால் flipkart-இல் நேரடியாக புத்தகத்தை ஒரு எழுத்தாளரால் பிரசுரிக்க முடியாது. வினியோகஸ்தர்கள் மூலமாகதான் flipkart-டிற்கு ஈ-புத்தககங்களை விநியோகம் செய்ய முடியும். அது போன்ற ஒரு விநியோக தளம் தான் Smashwords. இதுவும் வெளிநாட்டு தளம் என்பதால், தமிழுக்கான முக்கியத்துவம் குறைகிறது. smashwords 70-30% என்ற முறையில் இயங்கினாலும், அது ஒரு அமெரிக்க தளம் என்பதால் அமெரிக்காவிற்குவேறு தனியாக வரி செலுத்த வேண்டும் (அமேஜானிலும் இந்த பிரச்சனை இருக்கிறது). இறுதியில் 10-20% தான் எழுத்தாளருக்கு கிட்டும். எனினும் இந்ததளத்தில் ஃபாண்ட் பிரச்சனை இல்லை. வெறும் வோர்ட் ஃபைலை பதிவேற்றம் செய்துவிட்டால் போதும். conversion வேலைகளை smashwords தளம் பார்த்துக்கொள்ளும். இத்தளத்தில் பெரும்பாலான புத்தகங்கள் e-pub ஃபார்மட்டில் விற்க்கப்படுகின்றன. தமிழ் e-pub புத்தகங்களில் ஃபாண்ட் பிரச்சனை இருப்பதில்லை. இதில் பிரசுரித்திடலாம் என்று முடிவு செய்து போதிதர்மர் முதல் ஜேம்ஸ்பாண்ட் வரை என்ற இலவச ஈ-புத்தகத்தை சோதனை முயற்சியாக இங்கே பிரசுரித்துப்பார்த்தேன். smashword தளத்தில் பிரசுரிக்கப்படும் எல்லா புத்தகங்களுமே Flipkart-டிற்கு விநியோகமாகாது. Smashwords premium catalogue-யில் இடம்பெற்றுள்ள புத்தகங்களை மட்டுமே smashwords Flipkart-டிற்கு விநியோகம் செய்யும். ஒரு புத்தகம் Smashwords premium catalogue-யில் இடம்பெற வேண்டுமெனில், அந்த புத்தகம் சில ஃபார்மட்டிங் டெஸ்ட்களை பாஸ் செய்ய வேண்டும். இங்கேதான் layout பிரச்சனை வருகிறது. என்னதான் smashwords-யின் விதிமுறைகளை பின்பற்றி வோர்ட் டாக்குமென்டை ஃபார்மட் செய்தாலும், ஒரு தமிழ் டாக்குமென்ட்டின் layout ஆங்கில புத்தகத்திலிருந்து மாறுபட்டுதான் இருக்கும். smashwords-யின் Autovetter சாஃப்ட்வேரால் தமிழ் டாக்குமென்ட்களை சரியாக செக் செய்ய முடிவதில்லை. இங்கும் தமிழ் பப்ளிஷிங் சாத்தியப்படவில்லை.
Google Play Self Publishing.
பப்ளிஷிங் என்று வருகையில் கூகிள் Author friendly கிடையாது. கூகிள் ப்ளே ஸ்டோரில் ஒரு புத்தகத்தை பப்ளிஷ் செய்தால் அது பிராசஸ் ஆக கிட்டதட்ட ஒரு மாதம் ஆகிறது. இதிலும் என் புத்தகத்தை பிரசுரித்து பார்த்தேன். பப்ளிஷ் ஆக 20 நாட்கள் ஆனது. அதன் பப்ளிஷிங் போர்டல் வெளிப்படையாக இருக்கவில்லை. மேலும் அவர்கள் தங்கள் போக்கில் புத்தகத்தின் விலையை மாற்றுவார்கள் என்பது கூடுதல் தகவல். ஆனால் கூகிளில் ஃபாண்ட், ஃபார்மட், லேஅவுட் பிரச்சனைகள் கிடையாது. ஒரு வேலை வருங்காலத்தில் அவர்கள் பப்ளிஷிங்கில் அதிக கவனம் செலுத்த கூடும்.
ஒரு புத்தகத்தை ஒரு பொருளாக ஒரு e-commerce தளத்தில் விற்பதற்கும், செல்ஃப்-பப்ளிஷிங் நிறுவனங்கள் மூலம் விற்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. செல்ஃப்-பப்ளிஷிங் என்று வரும்போது அந்த நிறுவனங்களே புத்தகத்தை ப்ரோமோட் செய்யும். ஒவ்வொரு புத்தகத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து மார்க்கெட் செய்யும். வெறும் ஆன்லைன் வர்த்தகத்தில் மட்டும் கவனம் செலுத்தும் தளங்கள் புத்தகத்தில் தனி கவனம் செலுத்துவதில்லை. எனினும் ஆன்லைன் வர்த்தக தளங்களில் புத்தகத்தை நேரடியாக விற்றிடலாம் என்று அவர்களை தொடர்பு கொண்டதில், ஒரு எழுத்தாளர் நேரடியாக அந்த தளங்களில் ஈ-புத்தகங்களை விற்கும் வாய்ப்பு இல்லை என்று தெரிய வந்தது. டிஜிட்டல் கூட்ஸ் செல்லிங்க் என்று வரும் போது பலரும் indepenedent e-book வியாபாரத்தில் இறங்க விரும்பவில்லை.
இது ஒரு புறமிருக்க, செல்ஃப் பப்ளிஷிங் பாரம்பரிய பப்ளிஷிங் முறைகளை உடைத்துவிடும் என்று வெளிநாடுகளில் ஆருடம் சொல்கிறார்கள். மேலும் ஈ-புத்தக்ங்கள் பிரிண்ட் புத்தகங்களை டாமினேட் செய்ய தொடங்கிவிடும் என்றும் சொல்கிறார்கள். தமிழுக்கு அந்த நிலை வராது. இங்கே பிரிண்ட் புத்தகங்ளுக்கு இருக்கும் மார்க்கெட் இருந்து கொண்டுதான் இருக்கும். ஏனெனில் இங்கே புத்தகங்கள் குறைவான எண்ணிக்கையிலேயே விற்பனை ஆகின்றன. அதே சமயத்தில் செல்ஃப் பப்ளிஷிங் ஈ-புத்தங்களுக்கான புதிய மார்க்கெட்டை உருவாக்கும். அப்போது பெரிய பதிப்பகங்களே ஆன்லைன் செல்ஃப் பப்ளிஷிங்கில் இறங்கலாம். ஈ-புத்தகத்திற்கு தனி முதலீடு என்று எதுவும் தேவையில்லை. அதனால் எழுத்தாளர், பதிப்பாளர் இருவருமே பயனடைந்திட முடியும்.
இங்கே தமிழ் ஆன்லைன் பப்ளிஷிங் பற்றி மட்டுமே பேசுவதற்கு காரணம் இருக்கிறது. செல்ஃப் பப்ளிஷிங்கில் புத்தகத்தை பிரிண்ட் ஆன் டிமாண்ட் முறையில் பிரிண்ட் செய்யலாம், அல்லது பேட்ச் ப்ரொடக்ஷன் மூலம் பிரிண்ட் செய்யலாம். பிரிண்ட் ஆன் டிமாண்ட்டில் ஒரே ஒரு புத்தகத்தை கூட பிரிண்ட் செய்ய முடியும். பேட்ச் ப்ரொடக்ஷனில் குறைந்த அளவிலான புத்தகங்களை பிரிண்ட் செய்ய முடியும். (ஆனால் சம்ப்ரதாயமான ஆப்செட் பிரிண்டிங்கில் குறைந்த பட்சம் ஆயிரம் புத்தகங்களை பிரிண்ட் செய்தால்தான் லாபம்). இந்தியாவில் புத்தகங்களை பிரிண்ட் செய்து விற்கும் செல்ஃப் பப்ளிஷிங் நிறுவனங்கள் இருக்கின்றன. ஆனால் தமிழில் இது சாத்தியமில்லை. Print on demand- மூலம் 150 பக்கங்கள் உள்ள ஒரு தமிழ் புத்தகத்தை பிரிண்ட் செய்வதற்கு குறைந்தது 200 ரூபாய் ஆகிறது. அத்தகைய புத்தகங்களை ஆன்லைனில் விற்க்க வேண்டுமெனில் குறைந்தது 250 ரூபையாவது சார்ஜ் செய்ய வேண்டும். (ஒரு வளரும் எழுத்தாளரின் புத்தகத்தை) அவ்வளவு காசு கொடுத்து யாரும் வாங்க மாட்டார்கள் என்பது ஒரு புறமிருக்க, அப்படி அந்த புத்தகத்தை விற்றாலும் எழுத்தாருக்கு ஐந்து ரூபாய் தான் கிடைக்கும். இங்கே செல்ஃப் பப்ளிஷிங்கின் அடிப்படை அம்சமே அடிபட்டு போகிறது. எழுத்தாளர், விற்பனையாளர் இருவருமே பயனடைய வேண்டும் என்பதே செல்ஃப் பப்ளிஷிங்கின் நோக்கம். ஓரிரு செல்ஃப் பப்ளிஷிங் நிறுவனங்கள் தமிழ் புத்தகங்களை பேட்ச் ப்ரொடக்ஷன் செய்கின்றன. ஆனால் அவர்கள் அனைவரும் Paid Publishing முறையை பின்பற்றுகிறார்கள். எழுத்தாளர் சராசரியாக ஒரு புத்தகத்திற்கு 30000 ரூபாய் வரை அந்த நிறுவனங்களுக்கு முன்பணமாக செலுத்த வேண்டும். அவர்கள் அதை வைத்து புத்தகத்தை பிரசுரிப்பார்கள். முப்பதாயிறம் ரூபாய்க்கு மேல் புத்தகம் விற்றால் தான் எழுத்தாளர் சம்பாதிக்க முடியும். ஆங்கில புத்தகமெனில் எளிதில் சம்பாதித்துவிடலாம். தமிழில் அசாத்தியம். ஆனால் ஈ-பப்ளிஷிங்கில் இந்த பிரச்சனை இல்லை. அதற்கு எழுத்தாளர் எந்த முன்பணமும் செலுத்த வேண்டியது இல்லை.
அப்படிதான், ஒருவழியாக, Pothi தளத்தில் தட்பம் தவிர் நாவலை பிரசுரம் செய்தேன். Pothi ஒரு பெங்களூர் நிறுவனம். இந்தியாவில் உள்ள செல்ஃப் பப்ளிஷிங் நிறுவனங்கள் அனைத்தும் ஆங்கிலத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஆங்கில புத்தகங்கள் நிறைய விற்பதே அதற்கு காரணம். தமிழுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய ஒரு தமிழ் செல்ஃப்-பப்ளிஷிங் நிறுவனம் உருவாக வேண்டும். அப்படி உருவானால் பல வளரும் எழுத்தாளர்கள் பலன் அடைவார்கள். பிரபல எழுத்தாளர்களும் இந்த முறையை பின்பற்ற தொடங்கினால், ஆன்லைனில் பிளாக் வாசகர்களிடம் அவர்களின் புத்தகம் அதிக எண்ணிக்கையில் போய் சேரும். அடுத்த தலைமுறையை android சாதனங்களும், ரீடர்களும் ஆட்கொண்டுவிட்டன. சிறு சிறு ஈ-புத்தகங்களை குறைந்த விலையில் வெளியீடுவதன் மூலம் புத்தகம் வாசிப்பவர்களின் எண்ணிக்கையையும் அதிக படுத்திவிட முடியும். என்னை போல் முழு நேரம் எழுதுபவர்கள் பொருளாதார ரீதியாகவும் லாபம் அடைந்திட முடியும். இதை ஒரே நாளில் சாத்தியப்படுத்திவிட முடியாது. ஆனாலும் காலப்போக்கில் இதை செய்து முடிக்க முடியும். ஆன்லைன் செல்ஃப் பப்ளிஷிங் என்பது தொழிநுட்பத்தின் வளர்ச்சியே. பிரபல எழுத்தாளர்கள் இந்தமுறையை ஆதரித்தால், அது பல புது கதவுகளை திறந்து வைக்கும்.