Tag Archives: aravindh sachidanandam
இரண்டு கலர் கோடுகள்- குறுநாவல்
என்னுடைய தந்தையின் பிறந்தநாளான இன்று, என்னுடைய அடுத்த குறுநாவலை இங்கே வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இரண்டு கலர் கோடுகள்- குறுநாவல்
சோபியா. வயது இருபத்தியைந்து. மென்பொருள் நிறுவன வேலை, நட்பு, குடும்பம் என எல்லாம் அவளுக்கு அமைதியான வாழ்க்கையை தந்திருந்தது. ஒருநாள், அந்த அமைதியை குலைக்கும் விதமாக அவளுடைய pregnancy Test ரிப்போர்ட் வந்தது. அவர் கருவுற்றிருந்தாள். ஆனால் அவள் அதை விரும்பவில்லை. காரணம், அவளுக்கு திருமணம் ஆகியிருக்கவில்லை. சமூகம் தன் ஆயுதங்களை அவள்மேல் எறிய தயாராக இருந்தது. தன்னைக் காத்துக் கொள்வது அவளுக்கு அவ்வளவு எளிதாக இருக்கப் போவதில்லை.
இந்த கதை Pentopublish 2019 போட்டிக்காக சமர்பிக்க்கப்பட்டுள்ளது.
கிண்டில் பதிப்பு வாங்க இங்கே சொடுக்கவும்
நன்றி
அரவிந்த் சச்சிதானந்தம்
13/12/2019
ஒன்பதாவது ஆண்டில்…
இந்தத் தளம் இன்று தன் ஒன்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்தத் தளம் தான் எனக்கான சிற்றிதழ், வெகுஜன இதழ், திரைக்கதை இதழ் என எல்லாமுமாக இருக்கிறது.
Versatile-ஆகா, Consistent-ஆகா கதைகள் எழுதவே இந்தத் தளத்தை தொடங்கினேன். அதை விடாமல் செய்யமுடிகிறது என்பதில் மகிழ்ச்சி உண்டு.
என்ன எழுத வேண்டும், என்னவெல்லாம் எழுதிவிடக் கூடாது, எந்தத் தொனியில் எழுதிவிடக் கூடாது என்று சொல்லித்தந்தது இந்தத் தளம் தான்.
மணிரத்னம் படைப்புகள் புத்தகத்தை படித்து, “Translation is pathetic” என்றார் ஒருவர்.
ஒரு நடிகரின் அலுவலத்தில் என்னை விட வயதில் இரண்டுமடங்கு மூத்த Production Manager என் கைகளை இறுகப்பற்றிக் கொண்டு,
“யோவ் தம்பி, நான் எட்டாம் கிளாஸ் தான் படிச்சிருக்கேன். படிக்க ரொம்ப ஈசியா இருந்துச்சுயா இந்த புக். அருமையா தமிழ் பண்ணிருக்க…!” என்றார்.
கைக்குட்டைகளும் ட்ரான்ஸ்வெஸ்டிசமும் கதையை ஒரு பக்கத்திற்கு மேல் படிக்க முடியவில்லை என்று ஒருவர் மெயில் அனுப்பி இருந்தார்.
“சின்ன வயசுல எங்க ஆயா புடவையை போத்திகிட்டு தான் தூங்குவேன். எல்லாரும் தப்பா பேசுவாங்க. இந்த கதை படிக்கும் போது அவங்க நினைப்பு வந்திருச்சு… ரொம்ப புடிச்சிருக்குபா” என்று வேலூரில் இருந்து அறுபது வயதுக்காரர் ஒருவர் போன் செய்து கண் கலங்கினார்.
தட்பம் தவிர் டைம் பாஸ் கதை என்றார் ஒருவர். இது அறிவார்ந்த படைப்பு, எங்களது மாதிரி நீதிமன்றத்தில் வழக்குகளை கையாள மிகவும் துணையாக இருந்தது என்றார் ஒரு சட்டக் கல்லூரி மாணவி.
இதையெல்லாம் முன்கூட்டியே திட்டமிட்டு எழுதுகிறோம் என்று சொல்வதற்கில்லை. அப்படியெல்லாம் எழுதவும் முடியாது. நம் எழுத்து யாரை எங்கே எப்படி பாதிக்கிறது என்று நமக்குத் தெரியாது என்பதே சொல்ல விளைவது. மேலும் இங்கே எல்லோரையும் திருப்தி படுத்த முடியாது. அப்படி திருப்தி படுத்த முயற்சிப்பது எழுத்தாளனின் வேலை அல்ல.
எழுத்தாளனின் வேலை, எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாமல், எழுதுவது மட்டுமே. நம் எழுத்து எங்கே யாரை சென்று அடைய வேண்டும் என்பதை காலம் பார்த்துக் கொள்ளும்…
மற்றபடி எழுதுவது பிடித்திருக்கிறது என்பதுதான் தொடர்ந்து எழுதுவதற்கான ஒரே காரணமாக இருக்க முடியும். குடும்பமும் நட்பாய் துணையாய் நிற்பது கூடுதல் பலமாக இருக்கிறது.
இப்போது முறையாக மனோதத்துவம் பயின்று வருகிறேன். வரும் ஆண்டுகளில் எளிய தமிழில் மனோதத்துவம் பேச வேண்டுமென்று ஆசையும் திட்டமும் இருக்கிறது.
நன்றிகள், அன்பையும் ஊக்கத்தையும் கலந்து தரும் அத்தனைப் பேருக்கும்…
எப்போதும் நம்புவது ஒன்றைத்தான். எழுத்தாளன் என்ற அடையாளத்தை தக்க வைத்துக் கொள்வதை விட, தொடர்ந்து எழுதுவது முக்கியமாகிறது…
Once again thank you all for your love and support…
aravindhskumar.com is growing like never before…
ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-1
பொதுவாக, திரைக்கதை எழுதுவது எப்படி என்று சொல்லும் புத்தகங்கள் இங்கே ஏராளம் இருக்கின்றன. ஆனால் குறிப்பிட்ட ஒரு genre-ஐ எப்படி எழுதுவது என்று பேசும் புத்தகங்கள் அதிகமில்லை. அந்த குறையை போக்கும் பொருட்டு William C Martell எழுதிய புத்தகம் தான் ‘The Secrets of Action Screenwriting’.
புத்தகத்தின் தலைப்பு உணர்த்துவது போல இந்த புத்தகம், பிரத்தியேகமாக, ஆக்சன் கதைகள் எழுதுதலைப் பற்றி விலாவரியாக விவாதிக்கிறது. அதற்கு நாம் பின்பற்ற வேண்டிய சில உத்திகளையும் அடிகோடிட்டுக் காட்டுகிறது. ஆனால், திரைக்கதை சுவாரஸ்யமாக வந்தால் போதும், எந்த முறையைப் பின்பற்றி எழுதினோம் என்பதைப் பற்றி யாரும் அலட்டிக் கொள்ளப் போவதில்லை என்றும் முன்கூட்டியே பதிவு செய்கிறார் மார்ட்டல். அந்த புத்தகத்தை மையப்படுத்தி ‘ஆக்சன் கதைகள் எழுதுவது எப்படி’ என்று விவாதிப்போம்.
பொதுவாக, நாம் ஒரு ஆக்சன் கதை எழுதும் போது எதில் கவனம் செலுத்துவோம்? முதலில் ஹீரோ. பின்னர் வில்லன். நாம் வேகமாக ஹீரோவை டெவலப் செய்யத் தொடங்கிவிடுவோம். பின் ஹீரோவிற்கு பிரச்சனை தரும் வகையில் வில்லனை உருவாக்குவோம். மார்ட்டலை பொறுத்த வரை, இந்த முறை சரியான ஒன்றல்ல. அவர், ஒரு (ஆக்சன்) கதையில் முக்கிய அம்சம் ‘வில்லன்’ கதாப்பாத்திரமே ஒழிய ஹீரோ அல்ல என்கிறார். வில்லன் இல்லை என்றால் கதையே இல்லை என்கிறார். அதனால் வில்லனை தான் நாம் முதலில் உருவாக்க வேண்டும்! யார் நம்முடைய வில்லன் என்று சிந்தித்தாலே போதும், மற்ற எல்லா கேள்விகளுக்கும் திரைக்கதையில் பதில் கிடைத்துவிடும்.
(ஆக்சன் கதைகளுக்கு இந்த கூற்று பொருந்தலாம். ஆனால் மற்ற வகை கதைகளுக்கு எப்படி? வில்லனே இல்லாமல் கதைகள் எழுத முடியுமே! உண்மையில் இங்கே எல்லா கதைகளிலும் வில்லன் உண்டு. வில்லன் மனித ரூபத்தில் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு விலங்குகூட வில்லனாக இருக்கலாம். சில கதைகளில் சூழ்நிலைகள் வில்லனாக இருப்பதை கவனித்திருப்போம். (Situational conflict, உதாரணம். ஆண்டவன் கட்டளை (2016)). சில நேரங்களில், நாயகன் செய்யும் செயல்களே அவனுக்கு வில்லனாக வந்து நிற்கலாம்.)
இங்கே, நம் வில்லன் எவ்வளவு வலிமையானவனாக இருக்கிறானோ, அவ்வளவு வலிமையாக திரைக்கதை உருவாகும். அவன் எவ்வளவு புத்திசாலித்தனமாக இருக்கிறானோ, அவ்வளவு புத்திசாலித்தனம் நம் திரைக்கதையிலும் வெளிப்படும் என்கிறார் வில்லியம் மார்ட்டல்.
சரி, நாம் வில்லனை உருவாக்கிவிட்டோம். அடுத்து, அவன் எவ்வளவு கொடூரமானவன் என்பதை காண்பிக்க வேண்டுமாம். இதை கதையின் ஆரம்பத்திலேயே செய்துவிட்டால், அந்த வில்லன் நம்மை கதைக்குள் இழுத்துக்கொள்வான் என்றும் சொல்கிறார். மார்ட்டல் இதை Thunderball effect என்கிறார். ஒரு வில்லன் அணுகுண்டு வைத்து உலகை அழிக்க போகிறான் என்றால், அவன் முதலிலேயே ஏதோ ஒரு சிறு ஊரை அத்தகைய முறையில் அழிப்பதைப் போல் நாம் காண்பித்தால் அவனுடைய நோக்கமும், முறைகளும் எவ்வளவு கொடூரமானது என்பது நம் மனதில் பதிந்துவிடும். பின் அவன் ஒரு பெரிய திட்டத்தை தீட்டுகிறான். அப்போது அடுத்து என்ன என்ற எதிர்ப்பார்ப்பு நமக்கு வந்துவிடும். அந்த திட்டம் நிறைவேறிவிடுமா என்ற பயம் தொற்றிகொள்ளும். இது திரைக்கதைக்கு அதிக சுவாரஸ்யத்தை தரும்.
இதற்கு கேப்டன் பிரபாகரன் படத்தை உதாரணமாக சொல்லலாம். அதில் முதல் அரைமணி நேரம் வில்லன் எப்படிபட்டவன், அவனை தேடிச்செல்லும் போலிஸ்காரர்களை அவன் எப்படி கொடூரமாக கொலை செய்கிறான் என்பதை மட்டும்தான் காண்பிப்பார்கள். பின் தான் விஜயகாந்த் அறிமுகம் ஆவார். இங்கே அந்த வில்லனை அவர் எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்ற சுவாரஸ்யம் நம்மை சூழ்ந்து கொள்கிறது.
வில்லனை பயங்கரமானவனாக காணபித்துவிட்டோம். அப்போது ஹீரோ யாராக இருக்கலாம்? யாராக வேண்டுமாலும் இருக்கலாம், ஆனால் ஹீரோ முடிந்தவரை சாதரணமானவனாக இருப்பது ஆக்சன் கதைகளுக்கு ஒரு தனித்துவத்தை தரும் என்பது மார்ட்டலின் கூற்று. Breaking bad-யில் ஹீரோ ஒரு சாதாரணப் பள்ளி ஆசிரியர். Underdog. ஆனால் அவன் பெரும் சாம்ராஜ்யத்தை எதிர்க்கிறான். இப்படி ஹீரோ சாதரணமானவனாக, வித்தியாசமான வேலையில் இருப்பவனாக இருந்தால் அங்கே சுவாரஸ்யமான விஷயங்கள் பலவற்றை சேர்க்கமுடியும் என்பதற்காகவே மார்ட்டல் அப்படி சொல்கிறார்.
ஹீரோ ஒரு போலீஸ்காரன் என்றால், அவன் வலிமையானவன் என்று பதிவாகிவிடுகிறது. அவனால் பலரை அடிக்க முடியலாம். ஆனால் அதுவே அவன் ஒரு நலிந்து போன புலி வேசக்கலைஞனாக இருக்கிறான். அவனுக்கு உடலிலும் மனதிலும் பலமில்லை. எதிரிகளை எதிர்க்க அவன் அதிகம் மெனக்கெட வேண்டும். அந்த மெனக்கெடலே திரைக்கதைக்கு சுவாரஸ்யத்தை தந்துவிடும்.
எல்லா கதைகளிலும் ஹீரோவின் நோக்கம் ஒன்றே ஒன்று தான். அது வில்லனின் நோக்கத்தை நிறைவேற விடாமல் தடுப்பது. இங்கே ஹீரோ அதை தனிப்பட்ட நலனிற்காக செய்யலாம் (உதாரணம், பழிவாங்கும் கதைகள். வில்லனால் ஹீரோ பாதிக்கப்பட்டிருக்கலாம். அல்லது வில்லனை நிறுத்தவில்லை என்றால் அவன் தன் குடும்பத்தை இழந்துவிடுவான்). அல்லது பொதுநலத்தை கருத்தில் கொண்டும் செய்யலாம். (சமூதாயத்தை காக்கும் ஹீரோ. வில்லனை நிறுத்தவில்லை என்றால் அவன் உலகையே அழித்துவிட கூடும். அல்லது சமூகத்திற்கு கேடு விளைவிக்கக் கூடும். உதாரணம் தசாவதாரம்).
ஹீரோவிற்கு வில்லனை எதிர்ப்பதற்கு தனிப்பட்ட காரணங்களும் மற்றும் பொதுநலம் சார்ந்த காரணங்களும் ஒருங்கே இருக்குமாயின் அந்த படம் இன்னும் விறுவிறுப்பாக இருக்கும்.
மேலும் ஹீரோவை வலிமையானவனாக காட்டும் பொருட்டு, திரும்பிய பக்கங்களில் எல்லாம் அவன் வில்லன்களை அழித்துக்கொண்டிருக்கிறான் என்று கதை அமைப்பதை தவிர்க்க வேண்டும் என்கிறார் மார்ட்டல். அப்படி நிறைய வில்லன்கள் வைக்க வேண்டுமெனில், முடிந்த வரை அவர்கள் எல்லோரும் ஒரு பெரிய வில்லனின் கீழ் வேலை செய்கிறார்கள் என்று வைப்பதே சிறந்தது. (உதாரணம்: தனி ஒருவன்). அப்போது தான் கதையை பின்பற்ற முடியும். Equalizer, John Wick போன்ற படங்களையும் இதற்கு உதாரணமாக சொல்லலாம். இந்த படங்களில் ஹீரோ ஒவ்வொரு வில்லனாக அழித்து, இறுதியில் அந்த கூட்டத்தின் தலைவனான பிரதான வில்லனை அழிக்கிறான். இத்தகைய ஹீரோ வில்லன் கதையில் ஹீரோவும் வில்லனும் குறைந்தது மூன்று முறையாவது சந்தித்துக்கொள்ள வேண்டும் அல்லது மோதிக் கொள்ள வேண்டும் என்பது மார்ட்டல் சொல்லித்தரும் உத்தி. அது கதைக்கு விறுவிறுப்பை சேர்க்கும். அப்படி வில்லனோடு மோதவில்லை என்றாலும், வில்லனின் அடியாட்களோடாவது ஹீரோ மோத வேண்டும் என்பதும் மார்ட்டல் சொல்லும் உத்தி. தூள் படம் இந்த template-யில் கட்சிதமாக பொருந்துவதை கவனிக்க முடியும்.
ஹீரோ யார் வில்லன் யார் என்று நமக்கு தெரிந்து விட்டது. அடுத்து இவர்களை இணைக்கப்போகும் ‘High Concept’ என்ன என்பதை யோசிக்க வேண்டும். அந்த கான்சப்ட் விறுவிறுப்பான ஒன்றாக இருத்தல் வேண்டும். அதாவது ஒரு சாதரண கிராமத்து இளைஞன் தான் ஹீரோ. ஒரு பெரிய அரசியல்வாதிதான் வில்லன். இவர்களை இணைக்கப்போகும் Concept என்னவாக இருக்கலாம்!
ஊரில் இருக்கும் தண்ணீர் பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு அந்த நாயகன் அரசியல்வாதியை சந்திக்க வருகிறான். வந்த இடத்தில் பிரச்சனை. இது ஒரு கான்சப்ட். அல்லது தங்கள் ஊரில், அரசாங்கம் மேம்பாலம் கட்டப்போகிறது, அதற்கு தன் வீட்டை இடிக்கப்போவதாக சொல்கிறது, அதை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு நாயகன் அரசியல்வாதியை சந்திக்க வருகிறான். வந்த இடத்தில் பிரச்சனை வரலாம். இது ஒரு கான்சப்ட். இப்படி கான்சப்ட்டில் சிறு மாற்றங்களை செய்து முற்றிலும் மாறுபட்ட படங்களை கொடுக்க முடியும்.
ஆனால் இந்த கான்சப்ட் மட்டும் போதாதே! காட்சிகளை சுவாரஸ்யமாக உருவாக்க வேண்டுமே! அதை மார்ட்டல் ‘plotting’ என்கிறார். அதாவது காட்சிகளை சரியான சுவாரஸ்யமான சீக்வன்ஸில் தொகுப்பது. பலரும் தவறவிடும் இடம் இதுதான் என்றும் பதிவு செய்யும் மார்ட்டல், இரண்டு முக்கிய பிளாட்டிங் உத்திகளை சொல்கிறார். ஒன்று ஆனியன் பிளாட்டிங் (Onion Plotting). இன்னொன்று டென்னிஸ் பிளாட்டிங் (Tennis Plotting).
Onion plotting என்பது, வெங்காயத்தில் இருக்கும் பல அடுக்கு தோள்களைப் போல, ஒரு மையக் கதையை சுற்றி பல அடுக்கு கதைகளைப் பின்னுவது. எல்லாப்படங்களிலும் மையக் கதை என்பது என்று ஒன்று இருக்கும். அதை சுற்றி எராளமான நிகழ்வுகள் பின்னப்பட்டிருக்கும். ஒவ்வொரு முடிச்சாக அவிழ்த்து செல்லும் போது இறுதியில், மையக் கருவை பார்வையாளர்களால் உணர முடியும். முதலில் முக்கியத்துவமற்று தோன்றிய நிகழ்வுகள் கூட அந்த மையப் புள்ளியை அடைந்ததும் முக்கியமாக தோன்றும். உதரணமாக ‘கோ’ படத்தை சொல்லலாம்.
அதில் ஹீரோவின் நண்பன் பாத்திரம் கெட்டவன், துரோகி என்பதை நாம் க்ளைமாக்ஸ் காட்சியில் தான் கண்டுகொள்கிறோம். இதுதான் மையக் கதை. ஒருவன் நல்லவன் போல் நடித்து எல்லோரையும் ஏமாற்றி இருக்கிறான். இந்த மையக் கதையை சுற்றி ஏராளமான அடுக்குகள் பின்னப்பட்டிருக்கும். அரசியல் மேடையில் குண்டு வெடிக்கும்போதோ, அல்லது வங்கி கொள்ளையடிக்கப்படும் போதோ அதை வெறும் காட்சிகளாக தான் கடந்திருப்போம். இறுதியில் அந்த நண்பன் துரோகியாக காண்பிக்கப்படும் போது தான் முன்பு நிகழ்ந்த அத்தனை விசயங்களுக்கும் அர்த்தம் புரிகிறது. அவன் தான் எல்லாவற்றிற்கு பின்பும் இருக்கிறான் என்பதை அறிகிறோம். இங்கே இறுதியில் ஒரு ‘பிரம்மிப்பான தருணம்’ நிகழ்கிறது.
மையக்கதை என்ன, நாம் எந்த புள்ளியை சுற்றி கதையை பின்னப்போகிறோம் என்பதை முதலில் கண்டுகொள்ள வேண்டும் என்று மார்ட்டல் சொல்வதில் அர்த்தம் இருக்கிறது. மையக்கதை என்ன என்பதை அறிந்து அதை சுற்றி அடுக்குகளாக கதையை எழுதும் போது, நாம் எதாவது ஒரு அடுக்கை பின்னர் நீக்கினாலும் திரைக்கதையின் நோக்கம் மாறாது. அதை விடுத்து மையப்புள்ளியை அறியாமல், வெறும் காட்சிகளாக அடுக்கிக்கொண்டே போவதும் அல்லது வெறும் ட்விஸ்ட் வைக்கும் பொருட்டு காட்சிகளை உருவாக்கி க்ளைமாக்ஸ் நோக்கி பயணிப்பதும் திரைக்கதையை பலவீனப்படுத்திவிடும். அதனாலேயே ஓரளவிற்கேனும் தோராயமான ‘Outline’-ஐ எழுதி வைத்துக்கொண்டு, திரைக்கதையை எழுதுவது நலம்
தொடரும்…
9.45- சிறுகதை
காலை 9.45 மணிக்குள் போகவில்லை என்றால் ‘ஆப்சென்ட்’ போட்டுவிடுவார்கள். நியாமான காரணத்தால் தாமதம் என்றாலும் ஏற்றுக் கொள்ளப்படாது. நான் படித்த பள்ளிகூடத்தைப் பற்றி சொல்லவில்லை. நான் வேலை செய்யும் அலுவலகத்தில் அண்மைக்காலத்தில் தோன்றிய வி(யா)தி இது. ஒன்பது நாற்பத்தைந்து என்றால் ஒன்பது நாற்பத்தைந்து தான். ஒரு நொடியும் தாமதம் ஆகக் கூடாது. முன்பெல்லாம் வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்டால் மட்டும் போதும். இப்போது ‘ஃபினக்கில்’ மென்பொருளில் லாகின் செய்ய வேண்டும்.
அலுவலகம் மூன்றாவது மாடியில் இருந்தது. லிப்ட் எல்லாம் கிடையாது. லிப்ட் வாடகை கொடுக்காததால் அலுவலக வளாகத்தின் எஜமானனான தமிழ் பேசும் சேட்ஜி மூன்றாவது மாடியின் லிப்ட் கதவை மட்டும் கட்டைகள் கொண்டு மூடி வைத்துவிட்டார். எங்கள் அலுவலகத்தை சேர்ந்தவர்கள் எல்லாம் இரண்டாவது மாடி வரை லிப்டில் சென்று, பின் படி ஏறிச் செல்கிறோம் என்பதையும் எஜமான் கண்டுகொண்டுவிட்டார். அதனால் எங்களை கண்காணிப்பதை கூடுதல் பொறுப்பாக இரண்டாவது மாடியில் நிற்கும் செக்யூரிட்டியிடம் கொடுத்து, இருநூறு ரூபாய் பணமும் கொடுத்துவிட்டார்.
அதுவும் செக்யூரிட்டி என்னைக் கண்டால் மட்டும் ‘எண்கவுன்ட்டர் செய்து விடுவது போல் முறைக்கிறார். வேறுவழியில்லாமல், மூச்சிரைக்க மூன்று மாடி ஏறி உள்ளே ஓடிச் சென்று கணினியை ஆன் செய்வது வழக்கமாகி விட்டது. என்னுடையது கொஞ்சம் பழைய கணினி. அலுவலகத்தில் இருக்கும் மற்றதெல்லாம் ரொம்ப பழைய கணினி. நான் அலுவலகத்தில் சேர்ந்த இரண்டு வருடக் காலங்களில், கணினியே இல்லாமல், தெருவின் எல்லைத் தாண்டி வந்த நாய் குட்டிப் போல் இங்கும் அங்கும் அழைந்து, ஏச்சு பேச்செல்லாம் வாங்கி, கிடைக்கும் கணினியில் வேலை செய்து வந்தேன். சிறிய நிறுவனங்களில் வேலை செய்யும் போது இப்படி சகிப்புத் தன்மை வளர்ந்துவிடுகிறது. சகிப்புத் தன்மை = அடிமைத் தன்மை என்று என் கம்யுனிச நண்பன் சொல்வான்.
அவன் ஒரு பெரிய பொறியியல் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்கிறான். ஆனாலும் மற்றவர்கள் போல் எனக்கேன் வம்பு என்று வாழ்வை கழிக்காமல், பேஸ்புக்கில் தொடர்ந்து சர்வாதிகாரத்திற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறான். செவ்வாய்கிழமை இந்திய அரசியல், வெள்ளிக்கிழமை உலக அரசியல் என்று கிழமைக்கு ஒரு ஸ்பெஷல் பதிவு. அதற்கு லைக் போடவே ஒரு பெரிய கூட்டம். எங்கு போனாலும் சேகுவேரா டீ ஷர்ட் போட்டுக் கொள்வான். அடிமைத் தனம் கழைவோம் என்று வாட்ஸப்பில் ஸ்டேடஸ் கூட போடுவான். நெருங்கிய நண்பனின் திருமணத்திற்கு வராமல் போன அவனிடம் போன் செய்து கோபித்துக் கொண்டேன்.
“மச்சி, டீ.எல் லீவு தரமாட்டேன்னு சொல்லிடாண்டா. அவன் எங்க GM-க்கு பெட். அவன மீறி ஒன்னும் பண்ண முடியாது” விட்டிருந்தால் நண்பன் அழுதிருப்பான். ஒரு பேஸ்புக் போராளியை போனில் அழ வைத்த பாவம் எனக்கு வேண்டாம் என்று போனைத் துண்டித்துவிட்டேன்.
என் சகிப்புத் தன்மையோடு இரண்டாண்டு காலம் நான் கணினியின்றி ஓட்டிவிட, எப்படியோ என் வேலை நிரந்தரம் ஆனதும் எனக்காக ஒரு வாடகை கணினியை கொண்டு வந்து வைத்துவிட்டார்கள். நைட் ஷிப்டில் வேலைப் பார்த்துவிட்டு உறங்குபவர்களை எழுப்பினால் எப்படி விழித்துக் கொள்வார்களோ அதே வேகத்தில் தான் என் கணினியும் கண் திறக்கும். பெரும்பான்மையான நேரங்களில் நெட்வர்க் இருக்காது. மென்பொருளின் லாகின் திரைக்குள் செல்வதற்குள், ஏ.சி காற்றில் சட்டையின் வியர்வை காய்ந்து விடும். அதாவது சட்டை காலை 9.44 மணிக்குள் காய்ந்திருக்க வேண்டும். அதற்கு ஒன்பதரை மணிக்குள்ளாக அலுவலகத்தில் வலது காலை வைக்க வேண்டும்.
ஆனால் தாம்பரத்திலிருந்து மந்தைவெளி செல்வதற்குள் இரண்டு யுகங்கள் ஆகிவிடுகிறது. இரண்டாம் வகுப்பு பெட்டி நெரிசலாக இருக்கிறது என்று, ஆறுமடங்கு அதிக விலைக் கொடுத்து, முதல் வகுப்பில் பயணிக்க தொடங்கினேன். பாவம்! பலருக்கும் இரண்டாம் வகுப்பு பெட்டி நெரிசலாக இருந்துவருகிறது போலும். பர்ஸ்ட் கிளாஸ் சீசன் எடுக்காமலேயே முதல் வகுப்பில் ஏறிக்கொள்கிறார்கள். நான் வாயை மூடிக் கொண்டு ஒற்றைக்காலில் ஓரமாக நின்றுவிடுவேன். இப்போதெல்லாம் செங்கல்பட்டு-பீச் விரைவு ரயில் ஓடுவதில்லை. இரண்டு ரயில் கூட்டம் ஒரு ரயிலில். அதனால் ஒரு கால் வைக்க தான் பெட்டியில் இடமிருக்கிறது. ஆனால் யாராவது பெரியவர், “சார் இது பர்ஸ்ட் கிளாஸ். அடுத்த பெட்டில ஏறிகோங்க” என்று தேய்ந்த ரெகார்ட் போல் சொல்லி வருவார். யாரும் அவரை சட்டை செய்யமாட்டார்கள்.
“இதுக்கு செகண்ட் க்ளாஸ்லயே வந்துடலாம் போலவே!” பழவந்தாங்களில் ஏறும் ஒரு நடுத்தர வயது பெண் சலித்துக் கொள்வாள். நானும் அதையே நினைத்துக் கொள்வேன். ஆனால் இரண்டு வருடமாக அவள் முதல் வகுப்பு பெட்டியில் லேடிஸ் இருக்கையின் அருகே நின்றவாரு சலித்துக் கொண்டே வருகிறாள். நானும் “இதுக்கு செகண்ட் க்ளாஸ்லயே வந்துடலாம் போலவே!” என்று நினைத்துக் கொண்டே வருகிறேன்.
அதிலும் பறக்கும் ரயிலில் பூங்கா நகர் ரயில் நிலையத்தில் ஒரு பெரிய கூட்டம் ஏறும். பெரும்பான்மையானவர்கள் வடநாட்டிலிருந்து வந்து கூலி வேலை செய்யும் இளைஞர்கள்.
“பாய். ஹே தோ பர்ஸ்ட் கிளாஸ் ஹே” அரைகுறை ஹிந்தியில் யாராவது சொல்வார்கள். சிந்தாதரிப்பேட்டை வந்ததும் அந்த ஹிந்திக்கார இளைஞர்கள் இறங்கி இரண்டாம் வகுப்பு பெட்டிக்கு மாறிக் கொள்வார்கள். ஆனால் மீண்டும் மறுநாள் அதே இளைஞர்கள் குழுவாக முதல் வகுப்பு பெட்டியிலேயே ஏறிக் கொள்வார்கள். மறுபடியும், “பாய். ஹே தோ பர்ஸ்ட் கிளாஸ் ஹே”
அதுவும் திங்கட்கிழமை என்றால் ஊருக்கு சென்று திரும்பி வரும் திருவான்மையூர் ஊழியர்கள் பலரும் ஏறிக் கொள்வார்கள். தெலுங்கு இளைஞர் இளைஞிகள்.
“இஸ் திஸ் பர்ஸ்ட் கிளாஸ்? ஒ! ஐ டோன்ட் நோ”
அந்த ஆந்திரா தெலுங்கானா ஆசாமிகள் தாங்களாகவே கேள்வியும் கேட்டு பதிலும் சொல்லிவிட்டு ஓரமாக போய் நின்றுகொள்வார்கள். மீண்டும் அடுத்த திங்கட்கிழமை அவர்களை அதே பெட்டியில் பார்க்கலாம். எப்போதாவது டிக்கெட் பரிசோதகர் வந்தால், கரடுமுரடாக இருக்கும் இந்தி இளைஞர்களை மட்டும் பிடித்துக் கொண்டு போய் விடுகிறார். நன்றாக உடை உடுத்துபவன் எந்த தவறையும் செய்து தப்பித்துக் கொள்ள முடிகிறது. நான் நன்றாக தான் உடை உடுத்துகிறேன். அனால் டிக்கெட் எடுக்காமல் ரயிலிலோ, அல்லது முதல் வகுப்பு சீசன் இல்லாமல் முதல் வகுப்பு பெட்டியிலோ ஏற பயமாக இருக்கிறது. மாட்டினால் ஐநூறு ரூபாய் அபராதம். ஆனால் எப்போதாவது ஒரு முறை தான் மாட்ட வாய்ப்பிருக்கிறது. இது கணிதம். நிகழ்தகவுகள். அதனால் தொடர்ந்து டிக்கெட் இல்லாமல் அல்லது சரியான டிக்கெட் இல்லாமல் பயணிப்பவர், எப்போதாவது ஒரு முறை மாட்டி ஐநூறு அபராதம் கட்டுவது நஷ்டம் ஒன்றுமில்லை. ஆனால் இதையெல்லாம் தர்க்கம் செய்யும் அளவுக்கே தைரியம். செயல் படுத்தும் அளவிற்கு தைரியம் இருந்தால், நான் இரண்டாண்டு காலம் கணினி இல்லாமல் சகித்து கொண்டு வேலை செய்திருக்க மாட்டேன். என் பேச்செல்லாம் சரவணபவன் தலை வாழை இல்லை சாப்பாடு அளவிற்கு இருந்தாலும், செயல் எப்போதும் மைலாபூர் மாமி மெஸ்சின் அளவு சாப்பாடுதான்.
ஆனால் ரயில் பயணத்திற்கும் ஒரு சோதனை. இப்போதெல்லாம் எழும்பூரை தாண்டுவதற்குள் ரயிலின் ஓட்டுனர் குரங்கு பெடல் அடிக்கிறார். கொஞ்சம் தாமதமானால், கோட்டை நிலையத்தில் வேளச்சேரி ரயில் முந்திக் கொண்டு விடுகிறது. பின்னாடியே ஒரு லேடிஸ் ரயில் பல் இளித்துக் கொண்டே வரும். எல்லோரும் தலைவாரி ஜடைப் பிண்ணிக் கொண்டே போவதை பார்த்துக் கொண்டு நிற்க வேண்டும். அதுவும் அந்த லேடிஸ் பெட்டி காலியாக செல்வதைப் பார்த்து பலரும் வெளிப்படையாகவே வயிர் எரிவார்கள்.
“காலியா போது. பாதி ட்ரைன் மட்டும் லேடிஸ்கு போதாதா… ஜென்ட்ஸ் ஸ்பெஷல் உட வேண்டிதான!”
நானெல்லாம் எதுவும் சொல்ல மாட்டேன். நான் பெமினிஸ்ட். ‘Feminist’ என்ற பட்டம் கிடைக்காமல் போனாலும் பரவாயில்லை. Anti-feminist என்ற பட்டம் கிடைத்துவிட்டால் ஸ்க்ரீன்ஷாட் போட்டு சாகடித்துவிடுவர்கள். அதனால் என் நண்பன் கம்யுனிஸ்டாக இருக்கும் வரை நான் பெமினிஸ்ட்டாக இருந்துவிடலாம் என்று முடிவு செய்துவிட்டேன். லேடிஸ் ரயிலுக்கு பின்பு வரும் ரயிலில் ஏறி, 9.45 வாக்கில் மந்தைவெளி ரயில் நிலையத்தில் இறங்கி, பல தெருக்களுக்குள் ஓடி, 9.55 வாக்கில் அலுவலகத்தை அடைந்து, வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு, யாரவது பார்க்கிறார்களா என்று இருபுறமும் பார்த்துவிட்டு, கையெழுத்தின் கீழே வருகை நேரம் 9.30 என்று எழுதிவிட்டு, எதுவும் தெரியாதவன் போல், ‘வைஷ்ணவ ஜனதோ, தேனே கஹியே தே’ என்று பாடியவரே இருக்கையில் சென்று அமர்ந்துகொள்வேன். அதற்கு வேட்டு வைப்பது போல் தான் அந்த சுற்றறிக்கை வந்தது.
“….login after 9.45 will be treated as absence”
என் கடவுச் சொல்லை பக்கதிலிருக்கும் பெண்ணிடம் கொடுத்துவிட்டு போகலாம் என்றால், கைரேகை வைத்தால் தான் லாகின் ஸ்க்ரீன் திறக்கும் என்பது போல் மென்பொருளை மாற்றி விட்டார்கள். என் கட்டைவிரலை மட்டும் தனியாக அனுப்ப முடியாது என்பதால், நானே போக தான் வேண்டும்.
“டைம்க்கு வர தெரியாதா?” என்று என் உதவி நிர்வாக மேலாளர் இரண்டுமுறை திட்டினார்.
“டைம்க்கு வீட்டுக்கு விட்டா வரத் தெரியும்” என்று சொல்ல வேண்டும் என்று ஆசை தான். ஐந்து மணிக்கு அலுவலகம் முடிந்தாலும் ஏழு மணி வரை வேலை வாங்குகிறார்களே என்று கோபம் தான். ஆனால் இந்த கோபத்தையெல்லாம் சமுக வலைத் தளத்தோடு நிறுத்திக் கொள்ளும் ‘யதார்த்தவாதி’ நான். அதனால் நேரத்திற்கு அலுவலகம் செல்ல வேண்டும் என்றால், கிண்டியில் இறங்கி பேருந்தில் மாறிக் கொள்ளவேண்டும்.
ஆனால் பேருந்து கிடைப்பதிலும் பிரச்சனை. அப்படியே கிடைத்தாலும் அதில் அடித்து பிடித்து ஏறுவது பெரும் பிரச்சனை. அண்ணா பல்கலைக்கழகம் செல்லும் வருங்கால பொறியாளர் கூட்டம் தான் பேருந்து முழுக்க இருப்பார்கள். பெரும்பாலும் பல பேருந்துகள் அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தத்தில் நிற்கும். ஆனாலும் அந்த மாணவர்கள் சொல்லிவைத்தாற்போல் மந்தைவெளி பேருந்திலேயே ஏறுவார்கள். இவ்வளவு மெனக்கெட்டு படிக்கும் அந்த பொறியியல் அவர்களுக்கு எந்த வகையிலும் பயன்பட போவதில்லை என்று யார் சொல்வது! “Software engineer is not an engineer bro” ஒருமுறை சொன்னதற்கு அந்த பையன் என்னை முறைத்தான். கூட்டமாக இருக்கும் இளைஞர்கள் ஆபத்தானவர்கள். சேர்ந்து அடித்துவிடுவார்கள். வாயை மூடிக் கொண்டு இருந்துவிடுவது உத்தமம்.
எப்போதாவது, காளியப்பா மந்தவெளி, மைலாபூர் என்று கத்திக்கொண்டே ஷேர் ஆட்டோக்காரன் வருவான். போதிய ஆள் ஏறவில்லை என்றால்,
“ஜி கோட்டுர்புரம் வரைக்கும் தான் போகும், கொஞ்சம் இறங்கிக்கோங்க” என்பான். அவன் இறக்கிவிட்டதை விட, சுற்றி அமர்ந்திருந்த பெண்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற கேள்விதான் பிரதானமாக இருக்கும். இந்த அவமானத்தை எதிர்கொள்ள முடியாததால் தான், ஓலா உபெரை பழக்கப் படுத்திக் கொண்டேன். ஆனால் இந்த ஓலா உபெர் ஓட்டுனர்கள் பெரும்பாலும் வெளியூர் காரர்களாகவே இருக்கிறார்கள். நாம் எங்கு நிற்கிறோம் என்று அவர்களுக்கு தெரியப்படுத்துவது பெரும்பாடகிப் போகிறது. “நான் மேப்ப பாத்து வந்திருறேன் சார்” என்பார்கள். ஆனால் சாலையின் மறுபுறம் வந்து நின்றாலும், ‘Your ride is here’ என்று தான் காட்டும். அவர்களுக்கு வழி சொல்லி சக்தியை வீணடிப்பதற்கு பதில் நடந்தே போய் விடலாம் என்று தோன்றும்.
அன்று பேருந்து இல்லை, ஷேர் ஆட்டோ இல்லை. உபெர் காரனும் கத்திப்பாராவில் நின்றுகொண்டு வரவில்லை. ஆனால் நான் ஆட்டோவில் ஏறியதாக ரைடை ஆன் செய்துவிட்டான். மணி ஓடிக்கொண்டே போனது. ஒரு ஆட்டோவை பிடித்தேன். 200 ரூபாய் என்றான். வேறுவழியில்லை. ஆட்டோ கிளம்பியது. எங்கள் வளாகத்தின் முன்பு நின்ற போது மணி சரியாக 9.35. சட்டை வேர்த்தது. அலுவலகத்திற்குள் நுழைந்து வேகமாக சி.பி.யூவின் பொத்தானை அழுத்திவிட்டு நிமிர்ந்து பார்த்தால் அங்கே மானிட்டர் இல்லை. கடைசி மூலையிலிருந்த என் எச்.ஆர் நண்பனின் கேபினுக்கு ஓடினேன்.
“என் மானிட்டர பாத்தியா…!”
“அப்பறம் பேசலாம். சீக்கிரம் லாகின் பண்ணு…”
அவன் கணினியில் கைரேகை வைத்து லாகின் செய்தபோது மணி 9.44.
“ஐ.டி டிபார்ட்மென்ட்க்கு போன் பண்ணிக் கேலு” என்றான். கணினி பிரச்சனை எல்லாம் ஐ.டி துறையின் கீழ் வருகிறது. ‘ஐ.டி’ என்றதும் நிறுவனத்தில் சேர்ந்த புதிதில் ஏதோ பெரிய தொழிநுட்ப வல்லுனர்களை கொண்ட குழு என்றே நினைத்தேன். பின்தான் தெரிந்தது, பிரிண்டர் டோனார் மாற்றுவது, மவுஸ் கீபோர்ட் மாற்றுவது போன்ற மராமத்து வேலைகள் செய்யவே அவர்கள் இருக்கிறார்கள் என்று.
போன் மணி அடித்துக் கொண்டே இருந்தது. எதிர்ப்பார்த்தது போல் புதிதாக வந்த அந்த ஐ.டி மேலாளர் போனை எடுக்கவில்லை. அவன் ஒரு இளகிய மனம் கொண்ட பெங்காலி. இரண்டு வாரத்துக்கு முன்பு தான் மாற்றல் ஆகி வந்தான். அலுவலகத்தில் பெண்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அவன் கண்கள் கலங்கிவிடுவதாக பேசிக் கொள்கிறார்கள். எப்போதும் செல் போனை காதின் மேல் அலுத்திவைத்துக் கொண்டு போன் பேசிக்கொண்டே இருப்பான். அவன் தன் மனைவியாடு பேசுவதாக நான் நினைத்தேன். அவன் அறையை அடைந்த போதும் அதையே செய்துக் கொண்டிருந்தான்,
“பாலு ஆச்சே. துமே கூப்…”
என் நண்பன் மலையாளி என்றாலும் கொஞ்சம் பங்கலா தெரிந்தவன்.
“அவன் வைப் கிட்ட பேசல… வேற யார்ட்டையோ கடலை போடறான்… ” என் எச். ஆர் நண்பன் என் காதில் கடுப்புடன் கிசுகிசுத்தான். எச். ஆர் நண்பனுக்கு திருமணம் ஆகவில்லை. அவன் கவலை அவனுக்கு.
“ரொம்ப முக்கியம், மானிட்டர் எங்கனு கேப்போம்!” நான் சொன்னேன்.
ஆண்களில் குரல் அந்த மேலாளரை கொஞ்சம் கூட அசைக்கவில்லை. அவன் தொடர்ந்து போன் பேசிக் கொண்டே இருந்தான். நான் அருகே சென்று,
“சார்” என்றேன். கோபமாக என்னை நிமிர்ந்து பார்த்தான்.
“சாரி பார் டிஸ்டர்பன்ஸ்” என்றேன்,
அவன் பங்கலாவில் ஏதோ போனில் சொல்லி போனை கட் செய்துவிட்டு, மீண்டும் என்னை கோபமாக பார்த்தான்.
“மை மானிட்டர் யூ ஹாவ் டேக்கனா சார்!”
“ஒ! அதுவா. நம்ம காயத்ரி மேடம்க்கு கண்ல ஏதோ பிரச்சனை. டியர்ஸ் வந்துகிட்டே இருக்கு. அதான் பெரிய மானிட்டரா கேட்டாங்க….”
“அவ கண்ல தண்ணி வந்தா நீ ஏண்டா தொடச்சி விடுற…” என்று எனக்குள் இருந்து யாரோ கேட்க முயல, நான் அந்த யாரோவை உள்ளேயே போட்டு பூட்டிவிட்டேன். என்னதான் இருந்தாலும் அவன் ஒரு மேலாளர். நாங்கள் உதவி மேலாளர்கள் தான். ஆனால் என் நண்பன் விடுவதாக இல்லை.
“அதுக்கு ஏன் சார் அவன் மானிட்டர கொடுத்தீங்க….” கேட்டுவிட்டான். அவன் முறைத்தான்.
“இட்ஸ் ஓகே சார். நம்ம காயத்ரி மேடம் தான. பரவால…” என்று சொல்லிவிட்டு நான் வெளியே நண்பனை இழுத்துக் கொண்டு வந்தேன்.
“உன்ட்ட சொல்லிட்டாவது எடுத்திருக்கணும், எதிக்ஸ் இல்ல…” என் நண்பன் கோபித்துக் கொண்டான்.
“ரெண்டு வருஷம் கம்ப்யூட்டரே இல்லாம ஓட்டினேன். அட்ஜஸ்ட் பண்ணிக்க வேண்டிதான்… “
“நீ அட்ஜஸ்ட் பண்ண ஆரம்பிச்சா தலைல ஏறுவானுங்க…” என் நண்பன் மேற்கொண்டு இழுத்தான்,
“டேய் சும்மா இருடா. அவன் GM-க்கு பெட்டு. இவன பகைச்சிகிட்டு ஒன்னும் செய்ய முடியாது. இவன்ட்ட வம்பு பண்ணா உனக்கு இந்த ஜென்மத்துல கேரளா ட்ரான்ஸ்பர் கிடைக்காது. எப்படியாவது இவன் கிட்ட நல்ல பேர் வாங்கப் பாரு…”
என் நண்பன் நிர்வாக மேலாளரிடம் மாற்றல் விண்ணப்பம் கொடுத்து ஒரு வருடம் ஆகிறது. அவர் அவனை நிமிர்ந்து கூட பார்க்க மாட்டேன் என்கிறார். அவரும் ஒரு வங்காளி தான்.
என் நண்பன் சில நொடிகள் யோசித்தான். அவன் மனதில் புள்ளிகளை இணைத்துப் பார்த்திருப்பான்.
“இவன்ட்ட எப்படிடா நல்ல பேர் வாங்குறது…?” பாந்துவமாக என்னிடம் கேட்டான்.
“இவன் GM-ஓட பெட்டு. இவனுக்கு….” நான் நண்பனைப் பார்த்து கண் அடித்தேன்.
“அடிபொலி” நண்பன் என் முதுகில் தட்டினான். நாங்கள் இருவரும் காயத்ரி மேடமின் கேபின் நோக்கி நடந்தோம்.
Save the Cat- Blake Snyder- சினிமா புத்தகங்கள் 3
திரைக்கதை என்பது ஒழுங்கான ஒரு களம், ஒழுங்கற்று பின் மீண்டும் அந்த ஒழுங்கு நிலைக்கு திரும்புவது எனலாம். இதை தான் Beginning, Middle, end என்ற மூன்று நிலை கட்டமைப்பின் மூலம் சொல்கிறோம். ஆரம்பம், பின் கதையில் நிகழும் ஒரு திருப்பம் (கதாப்பாத்திரத்தின் வாழ்க்கையில் நிகழும் திருப்பம்). அதனால் நிகழும் போராட்டம். பின் அதற்கானதொரு தீர்வு. இதை பற்றியெல்லாம் பேசும் புத்தகங்கள் ஆங்கிலத்தில் ஏராளம் உண்டு. நல்ல திரைக்கதை புத்தகங்களை பின்பற்றினால் நல்ல திரைக்கதைகளை உருவாக்கிவிட முடியும் என்று சொல்வதைவிட நல்ல திரைக்கதையை உருவாக்க இதுபோன்ற புத்தகங்கள் வழிகாட்டலாம், வழிகாட்டும் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். ஏனெனில் திரைக்கதை முழுக்க முழுக்க உள்ளுணர்வின் மூலமாக எழுதப் படும் ஒன்று. அந்த பயணத்தில் துணை செய்யும் கருவிகள் தான் இத்தகைய புத்தகங்கள். அந்த வகையில் ப்ளேக் ஸ்னைடரின் ‘Save the Cat’ மிக எளிமையானதொரு புத்தகம்.
உலகில் வெறும் ஏழிலிருந்து பன்னிரண்டு வகையான பிளாட்ஸ் (plot) மட்டுமே இருப்பதாக ஒரு கோட்பாடு உண்டு. அவற்றை வைத்து தான் மீண்டும் மீண்டும் வெவ்வேறு வகையான கதைகளை புனைந்து கொண்டு இருக்கிறோமாம். அதை போல் ப்ளேக் ஸ்னைடர் எல்லாப் படங்களையும் பத்து வகைகளாக பிரிக்கிறார்.
உலகில் எடுக்கப்படும் எல்லாப் படங்களும் பெரும்பாலும் இந்த வகைக்குள் தான் வரும் என்கிறார். இந்த புத்தகத்தில் அவர் முதலில் விளக்குவது அந்த வகைகளைப் பற்றிதான்.
சுருக்காமாக, அவர் சொல்லும் பத்துவகைகள் இவைதான்.
Monster in. the House — வீட்டுக்குள் புகுந்த பூதம். இதை பின்வருமாறு சொல்லலாம். சீராக சென்றுகொண்டிருக்கும் பாத்திரங்களின் வாழ்வில் ஒரு வில்ல சக்தி புகுந்து விடுகிறது. நான்கு பேர் ஒரு இடத்தில் வந்து தங்குகிறார்கள். அங்கே பேய் இருக்கிறது அல்லது மிருகம் இருக்கிறது, என்று சொல்வதும் அமைதியாக சென்று கொண்டிருக்கும் கதாபாத்திரத்தின் வீட்டிற்குள் பேயோ, வில்லனோ, வேற்று கிரக வாசியோ வந்தால் அந்த பாத்திரத்தின் வாழ்க்கை எப்படி மாறிப் போகிறது என்பதை சொல்லும் வகை இது.
இது போல் அவர் Golden Fleece , Out of the Bottle , Dude with a Problem, Rites Of Passage , Buddy Love ,Whydunit, The Fool Triumphant, institutionalized, superhero என்று மொத்தம் பத்து வகையான திரைக்கதைகளைப் பற்றி சொல்லி, ஒவ்வொன்றிற்கும் ஒரு எடுத்துக்காட்டை சொல்லி விளக்குகிறார். (இதற்காக save the cat goes to movies என்ற தனி புத்தகத்தை எழுதி இருக்கிறார்).
நாம் தமிழில் பார்க்கும் பெரும்பாலான படங்கள் Dude with a Problem வகையை சேர்ந்தவை. ஒரு காதாபாத்திரம் அவனுக்கு வரும் பிரச்சனையை எப்படி தீர்க்கிறான் என்பதே இந்த வகை திரைக்கதை. இது கமர்சியல் கதைகளுக்கு ஏற்ற வடிவமும் கூட.
துப்பறியும் கதைகளில் யார் குற்றம் செய்தார்கள் என்பதை விட ஏன் குற்றம் செய்தார்கள் என்பதே முக்கியம். இதை தான் ப்ளேக் ஸ்னைடர் Whydunit என்ற வகையின் மூலம் சொல்கிறார். (துப்பறியும் நாவலோ அல்லது திரைக்கதையோ யார் செய்தார்கள் என்ற தேடலின் ஒரு கட்டத்தில் ஏன் செய்தார்கள் என்ற கேள்விக்கான விடையை நோக்கி கதையை நகர்த்திவிடுவதே கதைக்கு பலம் சேர்க்கும். என்னுடைய தட்பம் தவிர் நாவல் இந்த genre தான்.)
இது போல் The Fool Triumphant- வகையில் சாதரணனாக முட்டாளாக இருக்கும் நாயகன் எப்படி எடுத்த காரியத்தில் வெற்றி பெறுகிறான் என்பதை சொல்லும் படங்களை வரிசைப்படுத்துகிறார். இதுவும் நாம் அதிகம் காணும் கமர்சியலான வகை.
இத்தகைய வகைப்படுத்துதலை விட, Save the cat புத்தகத்தில் சிறந்த அம்சம் ஒன்று உண்டு. அது திரைக்கதையின் sequence-ஐ பதினைந்து பீட்களின் (Beat) மூலம் அமைப்பது. இதற்காக பிரத்யேகமாக beat sheet ஒன்றை உருவாக்கி தந்திருக்கிறார். நிற்க. இங்கே, முன் குறிப்பிட்டதை போல, பீட் சீட் மட்டும் திரைக்கதையை உருவாக்கிவிடும் என்று புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் நாம் நம்முடைய பாணியில் ஓன் லைன் அமைத்து திரைக்கதையை உருவாக்கும் போது இந்த பீட் சீட் உறுதுணையாக இருக்கக் கூடும்.
Image courtesy: http://www.savethecat.com
இந்த பீட் சீட்டின் மூலம் இந்தந்த பக்கங்களில் அல்லது இந்த நிமிடத்தில் இதெல்லாம் நடக்க வேண்டுமேண்டும் என்கிறார் ஸ்னைடர். இந்த டைமிங் பற்றி அலட்டிக் கொள்ள தேவையில்லை என்றே நினைக்கிறேன். நாம் எழுதும் போது அந்த டைமிங் எவால்வ் ஆகி விடும். பின் நம் திரைக்கதைக்கு ஏற்றார் போல் அதை ட்யூன் செய்துகொள்ளலாம்.
OPENING IMAGE- கதையின் தொடக்கம் படம் இதைப்பற்றியது என்று சொல்வது போல் அமைந்திருக்க வேண்டும் என்கிறார். பின் நாயகனின் சரசாரி வாழ்க்கையை பற்றி பேசி, அதில் பிரச்சனை வரும் இடத்தை CATALYST என்கிறார். பின் அவனுடைய முயற்சியில் உச்சிக்கு செல்வதோ அல்லது வீழ்வதோ MIDPOINT-ஆக இருக்க வேண்டும் என்கிறார். பின் மீண்டும் பிரச்சனை அதற்க்கான தீர்வு என்று படத்தை முடிக்க வேண்டுமென்கிறார்.
எல்லாப் படங்களும் இந்த பீட் சீட்டிற்குள் கச்சிதமாக பொருந்திவிடும் என்று சொல்வதற்கில்லை. ஆனால் Sequence-ஐ வடிவமைக்க அவர் சொல்லும் இந்த பீட்-கள் நல்லதொரு reference points-ஆக இருக்கும். உதாரணமாக, All is lost என்ற பீட் பற்றி பேசும் போது ‘Death moment’ பற்றி சொல்கிறார்.
அதாவது கதை நாயகன் எல்லாவற்றையும் இழந்து நிற்கும் தருணம் அது. மீண்டும் எழ முடியாது என்ற நிலை. அங்கே அவனுக்கு நெருக்கமான ஒருவர் இறப்பதன் மூலம் அந்த சோகத்தை உச்ச நிலைக்கு கொண்டு சென்றுவிட முடியும் என்கிறார் ஸ்னைடர். பின் அதிலிருந்து நாயகன் போராடி மீண்டு வருவது டிரமாட்டிக்காக இருக்கும் என்பதற்காக தான் இந்த உத்தி. இப்படி திரைக்கதையில் இருக்க வேண்டிய சில முக்கிய தருணங்களைபற்றி மிக எளிமையாக விளக்கியிருக்கிறார் ஸ்னைடர்.
இதற்கு பின்பு வெளியான “Save the Cat! Goes to the movies” என்ற புத்தகமும் குறிப்பிடப்பட்ட வேண்டிய ஒன்று. அதில் வெவ்வேறு படங்களை எடுத்து அவை எப்படி பத்து திரைக்கதை genre-களின் உள் வருகிறது என்றும் ஒவ்வொரு வகை கதையிலும் இருக்கும் 15 பீட்கள் பற்றியும் விளக்கி இருப்பார். save the cat புத்தகம் பிடித்தால் ‘Goes to the movies புத்தகம் நல்லதொரு பயிற்சி புத்தகமாக இருக்கும்.
திரைக்கதைப் பற்றி பேசும் இன்னும் சில புத்த்தகங்களைப் பற்றி வரும் நாட்களில் விவாதிக்கலாம்…
ப்ளாக் பாரஸ்ட் கேக்- ஹாஸ்யக் கதை
ராமசாமிக்கு கோபம் அதிகமாகிக் கொண்டே போனது. யாராவது அவர்முன் தற்போது போய் நின்றால் அவர் என்ன செய்வார் என்று அவருக்கே தெரியாது. ஒருவேளை கடித்துக்கூட வைத்துவிடலாம். அப்படி என்ன பிரச்சனை!
புதிதாக வீட்டிற்குள் நுழைந்திருக்கும் சுமி தான் எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணம். ராமசாமிதான் அந்த வீட்டில் சீனியர். ராமசாமிக்கு ஒரு மனைவி சித்ரா. சித்ராவுக்கு தெரியாமல் அவர் பல பேருடன் கும்மியடிப்பது வழக்கம். அவர்களுடைய ஒரே மகன் ரெங்கா. இப்போது பெங்களூரில் இருக்கிறான்.
அமெரிக்காவிலிருந்து வந்த சுமி தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்துகிறாளோ என்ற எண்ணம் ராமசாமியை வாட்டி வதைக்கத் தொடங்கியது. வீட்டின் கடைக்குட்டி வர்ஷினி தான் சுமிக்கு இடம் கொடுத்து வைத்திருக்கிறாள்.
இந்த வீட்டிற்கு எந்த வகையிலும் சம்மந்தமில்லாத ‘சுமி’ திடிரென்று உள்ளே நுழைந்து (வர்ஷினியை கையில் போட்டுக்கொண்டு) அந்த வீட்டின் முக்கிய கர்த்தாவாக விளங்கிய தன்னுடன் மல்லுக்கட்டுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள அவர் தயாராக இல்லை.
அவருக்கு பதினொரு வயது இருக்கும்போது ஆறாம் வகுப்பு படித்த லட்சுமணனை கையில் கடித்து வைத்ததைப்போல் இப்போது சுமியை கடித்துவிடலமா என்று யோசிக்கத் தொடங்கிவிட்டார் ராமசாமி.
ராமசாமிக்கு வைட் பாரஸ்ட் கேக் என்றால் உயிர். அதை எந்த கூச்சமுமின்றி நக்கி நக்கித் தின்பார். கடந்த சில வருடங்களாக தான் கேக் எல்லாம். வர்ஷினி முதன்முதலில் கல்லூரி கல்சுரல்ஸில் முதல் பரிசு வாங்கியதை கொண்டாடும் விதமாக ராமசாமிக்கு வைட் பாரஸ்ட் கேக் வாங்கி கொடுத்தாள். அப்போதுதான் அவர் அதை முதன்முதலில் சுவைத்தார். (அவருக்கு சுமி வயது இருக்கும்போது அவர் சாப்பிட்ட ஒரே இனிப்பு வகை மைசூர்பாக்கு மட்டுமே.) இப்போது அந்த வர்ஷினியே தனக்கு வைட் பாரஸ்ட் கேக் தராமல் போவாள் என்று ராமசாமி எதிர்ப்பர்த்திருக்கவில்லை.
வர்ஷினி தன் குழந்தை சாரலின் முதல் பிறந்தநாளை கொண்டாடுவதற்காகதான் அமெரிக்காவிலிருந்து வந்திருந்தாள். வரும்போது சுமியையும் அழைத்து வந்து விட்டாள். சாரலின் பிறந்தநாள் விழாவில் கேக் வெட்டப்படும் வரை, வைட் பாரஸ்ட் கேக் வெட்டுவார்கள் என்றே ராமசாமி நினைத்திருந்தார். ஆனால் அவர்கள் ப்ளாக் பாரஸ்ட் வாங்கி வந்துவிட்டார்கள்.
“சுமிக்கு ப்ளாக் பாரஸ்ட் தான் புடிக்கும்” வர்ஷினி சப்தமாக யாரிடமோ சொன்னது ராமசாமியின் காதில் தீயாய் விழுந்தது.
‘சுமி சுமி சுமி. இந்த வர்ஷினிகூட இப்படி மாறிட்டாளே! ஆறாவது படிக்கும் போது டியூஷன் முடிச்சு வீட்டுக்கு தனியா வர பயப்படுவான்னு அரை கிலோமீட்டர் நடந்தே போய் கூட்டிட்டு வருவேனே. எல்லாத்தையும் மறந்துட்டாளே!’ ராமாசாமி நொந்துக் கொண்டார். ஆனால் இப்படி சுணங்கி நிற்பதை விட ஏதாவது செய்து சுமியை இந்த வீட்டிலிருந்து அனுப்பிவிட்டால் மீண்டும் தான் இழந்த பழைய அங்கிகாரத்தை பெற்றுவிடலாம் என்று நினைத்தார். தன் எதிர்ப்பை பதிவு செய்யும் பொருட்டு உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தார். பார்ட்டி அரங்கிலிருந்து கோபமாக வெளியேறினார். ஆனால் அவரை யாரும் சட்டை செய்யவில்லை. இரண்டு நாட்கள் தன் அறையிலேயே காலம் கழித்தார். வேலைக்காரி வந்து உணவை வைத்துவிட்டு சென்றாள். வேறுயாரும் அவரை காண வரவில்லை. ஏன், அவர் மனைவி சித்ராகூட சுமியை ஏற்றுக்கொண்டுவிட்டாள்.
அன்று அவர்கள் அனைவரும் சேர்ந்து தீம் பார்க் சென்றபோது சுமி ஓடிச்சென்று காரின் முன்னிருக்கையில் அமர்ந்துகொண்டது ராமசாமிக்கு பொறாமையை ஏற்படுத்தியது. அன்றிரவு சுமிக்கு பாடம் கற்பிக்க முடிவு செய்தார்.
இரவு தீம் பார்க்கிலிருந்து தாமதமாக வந்த அனைவரும் களைப்பில் உறங்கிப்போயினர். சுமி ஹாலிலேயே சோபாவில் படுத்துக்கொண்டாள்.
மணி இரவு பன்னிரெண்டு. தூக்கமில்லாமல் தோட்டத்தில் உலாத்திக்கொண்டிருந்த ராமசாமி ஹாலிற்கு வந்தார். சுமி அருகே வந்தவர், ஓங்கி சுமியின் கன்னத்தில் ஓர் அறை அறைந்துவிட்டு விறுட்டென்று சோபாவின் பக்கவாட்டில் மறைந்துக்கொண்டார்.
பதறியடித்து விழித்த சுமி பயத்துடன் அக்கம்பக்கம் பார்த்தாள். இருட்டில் எதுவும் தெரியவில்லை. கன்னத்தை தடவிக்கொண்டே மீண்டும் உறங்கிப்போனாள்.
ராமசாமிக்கு பெருமிதமாக இருந்தது. மறுநாளும் அதே நேரத்தில் அதேபோல் சுமியின் கன்னத்தில் அறைந்தார். பதறிய சுமி எழுந்து வர்ஷினியின் அறைநோக்கி ஓடினாள். அவள் அறை தாளிடப்பட்டிருந்ததால் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தாள்.
அவளுக்கு அங்கே தனியாக இருக்க பயமாக இருந்தது. வெளியே வராந்தாவிற்கு வந்தாள். இருட்டாக இருந்தது. கதவருகே ஒளிந்துகொண்டிருந்த ராமசாமி ‘உர்’ ‘உர்’ என்று உறுமினார். அந்த சப்தம் சுமியை மேலும் பயமுறுத்தியது. இரவெல்லாம் தூங்காமல் அறையில் உலாத்தினாள். ராமசாமி நிம்மதியாக படுத்துறங்கினார். மறுநாள் காலையில் ராமசாமி நடு அறைக்கு வந்தபோது அனைவரும் பரபரப்பாக இருப்பதைக் கண்டார்.
சுமிக்கு ஜூரம். அவள் சோபாவில் படுத்திருந்தாள். வர்ஷினி அழுதுக் கொண்டிருந்தாள். “அதெல்லாம் சரியாகிடும்” வர்ஷினியின் தந்தை அவளை தேற்றினார். ராமசாமிக்கு எதையோ சாதித்துவிட்ட சந்தோசம், வெளியே ஓடி வந்து ஆனந்தக் கூத்தாடினார்.
சுமிக்கு ஜூரம் அதிகமாகிக் கொண்டே போனது. டாக்டர் வந்து ஊசி போட்டு மருந்து கொடுத்துவிட்டு போனார். உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. பிடித்ததை வாங்கி தந்தால் உடல் நிலை தேறும் என்று யாரோ சொல்ல, சுமிக்கு பிடித்த ப்ளாக் பாரஸ்ட் கேக் வாங்கி வந்து அவள் முன்பு வைத்தார்கள். ஆனால் அவள் கண்களை திறக்கவில்லை. வர்ஷினி சுமி அருகேயே படுத்துக் கொண்டாள். ராமசாமி தன் அறையில் உறங்கிப் போனார்.
திடிரென்று வர்ஷினியின் அழுகுரல் கேட்டது. ராமசாமி வந்து பார்த்தபோது சுமி இறந்திருந்தாள். சில நாள் சோகமாக இருந்த வர்ஷினி திரும்பி ஊருக்கு சென்றுவிட்டாள். அன்றிரவு, இரவில் ராமசாமி தனியாக உறங்கிக் கொண்டிருக்க சுமியின் ஆவி வந்து அவர் கன்னத்தில் ஓங்கி அடித்தது. ராமசாமி திடுக்கிட்டு விழித்தார். வெளியே எட்டிப் பார்த்தார். சுமி சோபாவில் படுத்திருந்தாள். வர்ஷினி அவள் அருகே அமர்ந்திருந்தாள்.
ராமசாமி வர்ஷினி அருகே செல்ல, அவள் ராமசாமியை இறுக்கி அணைத்துக் கொண்டு அழுதாள். ராமசாமிக்கும் கண்கள் கலங்கின. தன் எண்ணம் இவ்வளவு மோசமாக போய்விட்டதை எண்ணி வருந்தினார். சுமியை பார்த்தார். அவள் உறங்கிக் கொண்டிருந்தாள். அவள் அருகே சென்று, முன்பு தான் அறைந்த அவளின் கன்னத்தை தடவினார். காலையிலிருந்து கண்களை திறக்காமல் இருந்த சுமி, நிதானமாக தன் கண்களை திறந்தாள். ராமசாமி அவளை பாசமாக பார்த்தாள். வர்ஷினிக்கு சந்தோசம். “அப்பா சுமி முழிச்சிட்டா” என்று கத்தினாள். ராமசாமி சுமியின் கன்னத்தை மீண்டும் தடவ, அவள் ராமசாமியை பார்த்து ‘மியாவ்’ என்று பாசமாக கத்தினாள். ராமாசாமியும் தன் சந்தோசத்தை வெளிப்படுத்தும் வகையில் ‘லொள்’ ‘லொள்’ என்று இரண்டு முறை குறைத்தார்.
அடாஜன் சாலை- த்ரில்லர் கதை
மழை. அடை மழை. ஹசிரா சாலை வழக்கம் போல் ஆள் அரவமற்று கிடந்தது. அங்கிருந்து சூரத் செல்லவேண்டுமெனில் அடாஜன் சாலை வழியாகவோ அல்லது டுமாஸ் சாலை வழியாகவோ செல்ல வேண்டும். டுமாஸ் வழியாக செல்வது கால விரையம் தான். ஆனாலும் பாதுகாப்பான சாலை அது.
அடாஜன் பாதுகாப்பற்ற சாலையா என்று உறுதியாக தெரியாது. ஆனால் அந்த சாலையை பற்றி நான் கேள்விப்பட்ட கதைகள் ஏராளம் என்பதால் அந்த சாலையில் பயணிப்பதை தவிர்த்து வந்தேன். அதற்கு என் நண்பர் சுனில் படேலும் ஒரு காரணம். அவர் ஹஜிரா டுமாஸ் சாலை சந்திப்பில் அமைந்திருந்த மக்தல்லா குடியிருப்பில் வசித்து வந்தார். அது என் கம்பெனியின் குடியிருப்பு. திருமணமானவர்களுக்கு மட்டும். அதனால் நான் சூரத்திலிருந்த பேச்சுலர் ஹாஸ்டலில் தங்கியிருந்தேன்.
எங்களுக்கு இரண்டாவது ஷிப்ட். நான் தினமும் ஷிப்ட் ரிபோர்டை எழுதிவிட்டு கிளம்ப பன்னிரண்டு மணியாகிவிடும். கம்பெனி பஸ் இரவு பதினொன்னே முக்கால் மணிக்கெலாம் கிளம்பிவிடும். சுனில் அதில்தான் போய் கொண்டிருந்தார்.
நான் கம்ப்ரசர் சிஸ்டம் இன்சார்ஜாக இருந்தேன். சுனில் பாய்லர் இன்சார்ஜாக இருந்தார். இரவு ஏழுமணிக்கு பின்பு இரண்டு பேருக்குமே வேலை இருக்காது. ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை வெறும் ரீடிங்க்ஸ் எடுப்பது மட்டுமே வேலை. பாய்லர் அறையும் கம்ப்ரசர் அறையும் அருகருகே இருந்ததால் நான் அவர் அறைக்கு சென்று அமர்ந்து கொள்வேன். இருவரும் ஏதாவது கதைப் பேசிக்கொண்டிருப்போம். அப்படியே நாங்கள் நண்பர்களாகிப் போனதால், சுனில் என்னுடன் என்னுடைய காரில் வரத் தொடங்கினார். அலுவலகம் வரும் போது மதியம் ஒன்றரை மணிக்கு அவரை பிக் செய்து கொள்வேன். இரவு, அவரை அவர் குடியிருப்பில் இறக்கிவிட்டுவிட்டு நான் சூரத் வந்தடைய மணி ஒன்றாகிவிடும்.
முதன் முதலில் நாங்கள் சேர்ந்து பயணிக்கும் போது, ஹசிரா அடாஜன் டுமாஸ் மூன்று சாலைகளும் சந்திக்கும் இடத்தை அடைந்த போது, அடாஜன் சாலையை சுட்டிக் காண்பித்து, “ராத் மே உஸ் தரப் மத் ஜாவ்” என்றார். நான் “ஏன் அங்க ஏதும் வழிப்பறி நடக்குமா?” என்று அப்பாவியாக கேட்டேன். சப்தமாக சிரித்த அவர், “பேய் இருக்கு” என்றார். எனக்கு அதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. அதனால் அவர் சொன்னதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் பலரும் இரவு நேரங்களில் அந்த சாலையை தவிர்க்கும் படி அறிவுரை கூறினர். ஒரு முறை மதிய வேலையில் நான் அந்த சாலை வழியாக வந்தேன். அன்று சுனில் விடுப்பில் இருந்தார்.
அடாஜன் சாலையில் பால் பாட்டியா அருகே வந்ததும், கார் பஞ்சர் ஆகிவிட்டது. காரை ஓரம் கட்டிவிட்டு ஸ்டெப்னியை எடுத்து மாட்டினேன். யாரோ காரின் முன்கதவை திறந்துகொண்டு உள்ளே ஏறியது போல் இருந்தது. வேகமாக முன் சென்று பார்த்தேன். யாருமில்லை. சுற்றும் முற்றும் பார்த்தேன். ஆள் நடமாட்டம் எதுவுமில்லை. மீண்டும் பின்னாடி வந்து ஸ்டெப்னியை டைட் செய்ய முற்பட்ட போது தான், ஸ்டெப்னியும் பஞ்சர் ஆகியிருந்ததை கவனித்தேன். நான் வெளியே எடுக்கும் போது ஸ்டெப்னி நன்றாகதான் இருந்தது. அருகே எதாவது பஞ்சர் கடை இருக்கிறதா என்று தேடிக் கொண்டு சென்றேன்.
அங்கே இருந்த சந்தோசி மாத கோவில் வாசலில் அமர்ந்திருந்த பூசாரி, “என்ன வேணும்?” என்றார். நடந்ததை சொன்னேன்.
“சந்தோசி மாதா உன் கூட இருக்கா. அதான். இனிமே இந்த பக்கம் வராத” என்றார். கோவிலில் இருந்த பையனிடம் சொல்லி அனுப்பினார். அவன் ஒரு மெக்கானிக்கை அழைத்து வந்தான்.
மெக்கானிக்கிடம், “இவங்க சொல்ற மாதிரி எதாவது பேய் ஆவிலாம் உண்டா?” என்றேன்.
“அதெல்லாம் தெரியாது பாய். இங்க நிறைய ஆக்சிடென்ட் நடக்கும். அதுக்கு ஆளாளுக்கு ஏதேதோ காரணம் சொல்றாங்க” என்று சொன்னான். அவன் என்னிடம் பேச விரும்பாதவன் போல் இருந்ததால், நான் மேற்கொண்டு அவனை எதுவும் கேட்கவில்லை.
இதை என் அம்மாவிடம் யதார்த்தமாக பகிர்ந்து கொண்டேன். இரண்டு நாட்களில் பார்சலில் மாசிபெரியண்ண சாமியின் விபூதியும், கருப்பு கயிறும் வந்தது. நான் எதற்கு தேவையில்லாத மனக்குழப்பமென்று அந்த சாலையில் பயணிப்பதை தவிர்த்து வந்தேன்.
அன்றும் சுனில் வரவில்லை. நான் ஒரு ட்ரைனிங் விஷயமாக மும்பை செல்ல வேண்டும். இரவு பன்னிரன்டரை மணிக்கு பஸ். அலுவலகத்திலிருந்து பத்து மணிக்கெல்லாம் கிளம்பிவிட வேண்டுமென்று எண்ணினேன். ஆனால் அன்று air-dryer பழுதடைந்து விட்டதால், வேலை அதிகமாகிவிட்டது.. நான் அலுவலகத்திலிருந்து கிளம்பும் போது மணி 11.30 ஆகிவிட்டிருந்தது. தூரலாக இருந்த மழை நான் ஹசிரா சந்திப்பை அடைந்த போது அடை மழையாக மாறியிருந்தது. ஹசிரா அடாஜன் டுமாஸ் சந்திப்பில் வழக்கம் போல் வலது புறம் திரும்பாமல், நேராக அடாஜன் சாலையை நோக்கி பயணித்தேன். டுமாஸ் சாலையில் சென்றால் நேரத்திற்கு சூரத்தை அடைய முடியாது. 40 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல வேண்டிய சாலையில் ஸ்பீடோமீட்டர் ’60’-ஐ தொட்டிருந்தது. சாலையில் விளக்குகள் இல்லை. என் முன்னோ பின்னோ எந்த வாகனமும் வரவில்லை. மணி இரவு பன்னிரண்டு இருக்கும். என்னுடைய கார் விளக்குகள் தந்த வெளிச்சத்தில் நான் வேகமாக சென்று கொண்டிருந்தேன். இடை இடையே என்னை அறியாமலேயே ஹாரன் அடித்தேன்.
திடிரென்று ஒரு பெண் சாலையின் குறுக்கே தோன்றினாள். என்னால் காரின் வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. ‘டங்’
அந்த பெண்ணின் மீது கார் வேகமாக ஏறியது.
‘கடக் கடக்’ என்றொரு சப்தம். நான் காரை ஸ்லோ செய்தவாறே கார் ரியர்வ்யூ கண்ணாடியில் பார்த்தேன் அந்த பெண்ணின் உடல் சாலையில் கிடந்தது. இளம்பெண் போல் தோன்றினாள். எனக்கு காரை நிறுத்த பயமாக இருந்தது. என் கால் கட்டைவிரல் ஆக்சிலரேட்டர் மீது வேகமாக பதிந்தது.
மழை நின்றிருந்தது. மனம் உறுத்தலாகவே இருந்தது. சிறிது தூரத்தில் சந்தோசி மாதா கோவில் வந்தது. காரை நிறுத்தி உள்ளே ஓடினேன். உள்ளே உறங்கிக் கொண்டிருந்த பூசாரி, என்னை ஆச்சர்யமாக பார்த்தார். எல்லாவற்றையும் வேகமாக விவரித்தேன். அவர் கோவில் சிறுவன் மூலம் ஊர் பெரியவருக்கு செய்தி அனுப்பினார். ஊரிலிருந்து சிலர் திரண்டு வந்தனர். அதற்குள் அங்கே ஒரு பேட்ரோல் வண்டியும் வந்திருந்தது. நான் காரை கோவிலிலேயே விட்டுவிட்டு போலிஸ் வண்டியில் ஏறி பின்னிருக்கையில் அமர்ந்துகொண்டேன். ஊர் பெரியவரும் இன்னொருவரும் என்னுடன் எறிக்கொண்டனர். முன்னிருக்கையில் ஒரு போலிஸ் அதிகாரி அமர்ந்திருந்தார். நாங்கள் எல்லோரும் சேர்ந்து நான் சொன்ன இடத்திற்கு சென்றோம்
“எந்த இடம்?” போலிஸ் ஓட்டுனர் வினவினார்
“புல்கா விஹார் ஸ்கூல் கிட்ட…” நான் சொன்னேன்.
“இங்க ரெண்டு பெரிய மரம் இருக்கும்…” நான் சொல்லிகொண்டிருக்கும் போதே வண்டி அந்த மரங்களின் முன்பு நின்றது. .நான் அந்த மரத்தாருகே சென்றேன். சாலை காலியாக இருந்தது. இன்னும் சில ஊர் காரர்கள் அங்கே இரு சக்கர வாகனத்தில் வந்து இறங்கினர். இரு புறமும் எல்லோரும் தேடினோம். அங்கே ஒரு விபத்து நடந்ததற்கான அறிகுறி எதுவுமில்லை. எல்லோரும் தங்களுக்குள் குஜராத்தியில் பேசிக் கொண்டனர் “லுக்ட் லைக் ஆன் யங் கேர்ள்….” நான் ஆங்கிலமும் ஹிந்தியும் கலந்து அந்த போலிஸ் அதிகாரியிடம் பேசினேன். அவளை அந்த சாலையில் பார்த்தேன் என்று உறுதியாக சொன்னேன். அவர் நான் சொன்னதை காதில் வாங்கிக் கொள்ளாமல், “கல்யாணம் ஆச்சா?” என்று வினவினார்.
நான் இல்லை என்று தலை அசைத்தேன். “சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ” என்று சப்தமாக சொன்னார். எல்லோரும் சிரித்தனர். நான் எதுவும் பேசாமல் போலிஸ் வண்டியில் ஏறிக்கொண்டேன். வரும் வழியில் யாரும் எதுவும் பேசவில்லை. எங்களை கோவிலில் இறக்கிவிட்டுவிட்டு போலிஸ் அதிகாரி நகர்ந்தார். பூசாரி என்னை உற்று பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் உள்ளே சென்றுவிட்டார்.
அனைவரும் தங்கள் வீடுகளுக்கு சென்றுவிட்டனர். நான் மும்பை செல்லும் மன நிலையில் இல்லை. எனக்கு ஒரே குழப்பாக இருந்தது. ‘டங்’. ‘கடக் கடக்’ ‘சந்தோசி மாதா உன் கூட இருக்கா.’ ‘இங்க நிறைய ஆக்சிடென்ட் நடக்கும்’ ”ராத் மே உஸ் தரப் மத் ஜாவ்’
விடுதிக்குச் சென்று உறங்கிவிடுவது நல்லது எனப் பட்டது. என் விடுதியின் பார்க்கிங்கில் காரை நிறுத்தினேன். லிப்ட்டில் ஏறச் செல்லும் போது எதர்ச்சையாக காரை நோக்கினேன். காரின் முன்புறம் கிரிலில் ஏதோ தொங்கிக்கொண்டிருந்ததை கவனித்தேன். அருகே சென்றுப பார்த்தேன். காரில் கொத்தாக தலைமுடி சிக்குண்டிருந்தது. நீளமான அந்த முடியிலிருந்து சொட்டிக்கொண்டிருந்த மழைத்துளி, சிகப்பாக இருந்தது.
தட்பம் தவிர்- புத்தக வடிவில்
‘தட்பம் தவிர்’ புத்தக வடிவில் அந்தாதி பதிப்பக வெளியீடாக வந்துள்ளது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன்…
தட்பம் தவிர்- அரவிந்த் சச்சிதானந்தம் (Paperback)
பக்கங்கள்: 174
அந்தாதி பதிப்பகம்
விலை: Rs 75 (free shipping to India)
ஆவி எழுத்தாளன் (எ) தமிழ் சினிமா கதாசிரியன்- சிறுகதை
‘ஆவி எழுத்தாளன்’ என்றதும் அமானுஷ்ய சக்திகளைப் பற்றி எழுதி மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிப்பவன் என்றுதான் பலரும் நினைக்கின்றனர். பிளாட்பாரக் கடைகளில் கிடைக்கும் ‘அமானுஷ்ய உலகம்’ புத்தகத்தை எழுதுபவன் சத்தியமாக நான் இல்லை. பதினைந்து ரூபாய் கொடுத்து அந்தப் புத்தகத்தை நானும் வாங்கிப் படித்திருக்கிறேன். ‘முப்பது நாட்களில் ஆங்கிலம் கற்பது எப்படி’ என்பது போல ‘முப்பது நாட்களில் சூனியம் வைப்பது எப்படி’ என்று அந்தப் புத்தகத்தில் நிறைய இருக்கும். வெள்ளைச்சட்டை போட்ட ஒரு கருப்பு உருவத்தின் படத்தைப் போட்டிருப்பார்கள். அவரின் மீசை பயமுறுத்தும். கீழே, ‘மசானக் காளி துணை’ என்று எழுதி, பில்லி சூனியம் வைக்கக் கற்றுத் தருகிறார் திரு.கருப்புசாமி வெள்ளை வீரன், உடனே ரூபாய் 8500 மணியார்டர் எடுத்து அனுப்பவும். வீட்டிலிருந்தே கற்றுக் கொள்ளலாம்…
பில்லி சூனியம் சொல்லித்தரும் எல்லாரும் அது ஏன் பேசிவைத்தாற்போல் ரூபாய் 8500 வாங்குகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை அவர்கட்கென்று ஏதாவது சங்கம் இருக்கலாம்!
மன்னிக்கவும்,நான் சொல்ல வந்த விடயத்தை விட்டுவிட்டு ஏதேதோ பேசுகிறேன். இதுதான் என்னிடம் இருக்கும் பிரச்சனை. என்னிடம் மட்டுமில்லை, என்னைப் போன்ற பலருக்கும் இருக்கும் பிரச்சனை.
உதாரணத்திற்கு, என் நண்பன் என்னிடம் கடன் கேட்டால், நான் ‘மிசல் பூகோ’, ‘லார் பத்தார்’ என்று அந்நிய எழுத்தாளர்களின் பெயர்களை உதிர்ப்பேன். பின்நவீனத்துவம், எக்ஸ்டேன்ஸ்சியலிசம் என்று என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பிதற்றுவேன். என் நண்பனும் என்னவென்று புரியாமல் புரிந்தது போல் நடிப்பான். தெரிகிறதோ இல்லையோ தெரிந்தது போல் பேச வேண்டும். புரிகிறதோ இல்லையோ புரிந்தது போல் நடிக்க வேண்டும். அப்போது தான் இந்தச் சமுதாயம் மதிக்கும். நான் இயங்கும் துறையில் வாய் இருந்தால்தான் பிழைத்துக் கொள்ள முடியும். சொல்ல வந்ததை விடுத்து, சொல்லத் தேவையற்றதைப் பேசிக்கொண்டிருக்கவேண்டும். நீங்களும் இந்தத்துறைக்கு வந்தால் அப்படித்தான் பேசுவீர்கள். தேவையற்ற விடயங்களைப் பேசி உங்கள் இருப்பை நிலை நிறுத்திக் கொள்ள முயல்வீர்கள்.
கலைத்துறை உங்களை அன்புடன் வரவேற்கிறது…
இங்கு ஒவ்வொருவரிடமும் ஒரு கதையிருக்கும். வாழ்க்கைக் கதையைப் பற்றி சொல்லவில்லை. படம் இயக்குவதற்காக வைத்திருக்கும் கதையைப் பற்றிச் சொல்கிறேன். வடபழனி ஸ்டுடியோவில் சேனைக் கிழங்கு வறுவல் சமைக்கும் தவசிப்பிள்ளை சண்முகநாதனிடம்கூட (அவர் பிள்ளை வகுப்பைச் சார்ந்தவரன்று) ஒரு ‘டபுள் ஆக்சன்’ கதை இருக்கிறது. இயக்கினால் நடிகர் சுஜித்தை வைத்துதான் இயக்குவேன் என்று அவர் கங்கணம் கட்டிக்கொண்டு திரிந்து கொண்டிருக்கிறார். (அந்தக் கதையை எனக்கு பாதிதான் சொன்னார். அடுப்பில் வைத்த சேனைக் கிழங்கு தீய்ந்துவிடுமென்று ஓடிவிட்டார். முழுக்கதையைச் சொன்னால், நான் திருடிவிடுவேன் என்ற பயத்தினால்தான் ஓடிவிட்டார் என்பது எனக்குத் தெரியும்).
இங்கு யாரைக் கேட்டாலும் நடிக்கப் போகிறேன், படம் இயக்கப் போகிறேன் என்பார்கள். சினிமாவில் முப்பத்திரெண்டு கலைகள் இருப்பதை யாரும் தெரிந்து கொள்ள விரும்புவதில்லை. இயக்குனராகப் போகிறேன் என்று சொல்லிக்கொண்டு திரியும் என் நண்பனிடம் வினவினேன்,
“இயக்குனரின் வேலை என்ன?”
“நல்ல கதை பண்றது.. “
“அது கதாசிரியனின் வேலை… உன் வேலை?”
“ம்ம்ம்… திரை… இல்ல… கேமரா ஆங்கில்!”
“அது கேமராமேன் வேலை… உன் வேலை?”
“போடா… பா(Beep)… எச்ச த் (Beep)…”
என் சட்டையைக் கசக்கின அவன் கைகள். அதன்பின் என் நண்பனை நான் பார்க்கவில்லை. பழைய நண்பன். இப்போது ஏதோ படம் இயக்கிக் கொண்டிருப்பதாகக் கேள்வி.
இங்கு பலர் உண்டு. அவர்கள் யாருக்கும் இயக்குனரின் வேலை என்னவென்று சொல்லத் தெரியாது. எந்தப் பொறுப்பை ஒளிப்பதிவாளர் சுமப்பது, எந்தப் பொறுப்பை இயக்குனர் வகிப்பது என்றும் பகுத்து விவரிக்கத் தெரியாது. ஆனால் அவர்கள் எப்போதும் சொல்வது, “நான் இயக்குனர் ஆகப் போறேன்…”
“முதல கேமராமேன் ஆகிட்டு, அப்பறம் அப்படியே டைரக்டர் ஆகிடலாம்” இதுபோல் திரியும் கூட்டம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. சினிமாவினுள் நுழைந்தால் போதும் என்று ஏதேதோ வேலை செய்பவர்களுமுண்டு. (கொசுரு செய்தி: நடிகர் சுஜித்தின் கார் டிரைவர் அவரை வைத்து படம் இயக்கப் போகிறாராம். (இப்படித்தான் ஆவி இயக்குனர்கள் உருவாகிறார்கள்) ஒரு சாதாரண கார் டிரைவர் எப்படி சினிமாவில் பெரிய ‘தலை’யாகிறார் என்பதுதான் கதைக்கருவாம். வாழ்த்துக்கள்.)
தட்டுங்கள் திறக்கப்படும் எனும் கூற்று சினிமாவிற்குப் பொருந்தாது. சினிமாவின் கதவுகள் என்னதான் தட்டினாலும் சாமானியர்களுக்கு, அவர்கள் மிகுந்த திறமைசாலிகள் எனினும் திறக்காது. இந்த ஏதேதோ வேலை செய்யும் கூட்டம் சினிமாவின் கதவுகளை இன்னும் துருப்பிடிக்க வைக்கிறது.
என்னுடைய இன்னொரு பழைய நண்பனும் அப்படித்தான். சினிமாவின் conventional விதிகளைப் பின்பற்றி உதவி இயக்குனரானவன்.conventional விதிகள்.
1.குறைந்தது ஐந்து முதல் பதினைந்து நாட்கள் வரை ஏதாவது ஒரு இயக்குனரின் வீட்டு வாசலில் காத்திருக்க வேண்டும். (பதினைந்து நாட்களில் அவர் பார்வை உங்கள் மீது படவில்லை எனில், வேறு இயக்குனர் வீடு நோக்கிச் செல்லவும். பதினைந்து நாட்களுக்கு மேல் காத்திருப்பது வீண். மீண்டும் ஆறு மாதம் கழித்து அதே இயக்குனர் வீட்டு வாசலில் வந்து நிற்கலாம்.)
2.இயக்குனர் வீட்டின் முன் நிற்கையில் வெயிலையும், மழையையும் பொருட்படுத்தக் கூடாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆது. (மழைக்காலத்தில் போவது புத்திசாலித்தனம். மழையில் நனைந்து கொண்டே காத்திருந்தால், அந்த இயக்குனரை மேலும் கவர முடியும்)
3.என்னதான் பசித்தாலும் டீயும், பட்டர் பிஸ்கெட்டும் தான் சாப்பிட வேண்டும். (கையில் இருக்கும் காசிற்கு அது மட்டும் தான் கிடைக்கும் )
இந்தக் conventional விதிகளை எண்ணினால் எனக்குக் குமட்டிக் கொண்டு வரும்.
“நீ ஏன்டா இப்படிப் போய் அசிங்கப் படுற. திறமைய மதிக்கிறவங்ககிட்ட போய்ப் பார்ப்போம்…” என்றேன் என் நண்பனிடம். திறமையை மதிப்பவர்களும் சினிமாவில் உண்டு என்ற நம்பிக்கையில்.
“நீ இப்படிப் பேசிக்கிட்டே இருந்தா யாருக்கிட்டயும் அசிஸ்டண்டா சேர முடியாது” அவன் சொன்னது சரிதான். நான் இது வரை யாரிடமும் உதவி இயக்குனராகச் சேரவில்லை.
(எங்கு போனாலும் சிபாரிசு. ‘நீ இவர் புள்ளையா?’, ‘அவர் புள்ளையா?’, ‘அந்த நடிகையோட தம்பியா?’. நான் மார்லன் பிராண்டோ பேரனாக இருந்தால், உங்களை ஏன் தேடி வரணுமென்று அவர்களைக் கேட்கத் தோன்றும். ஆனால் கேட்க இயலாது. கேட்க முடியாது.கேட்கக் கூடாது )
“அது இல்லடா, தன்மானத்தை அடகு வைத்துட்டு… இப்படிச் செய்யணுமா ?” இது நான்.
“இதுல என்னடா தன்மானம். நம்ம டைரக்டர் சாரதி பெட்ரோல் பங்குல வேலை பாத்திருக்கார். இப்படிப் போராடித்தான் பல பேர் மேல வந்திருக்காங்க”
“அவங்க வந்த காலம் வேற. இப்ப திறமைய மதிக்கணும், யாரா இருந்தாலும். மதிக்கலனா மதிக்க வைக்கணும். அதை விட்டுட்டு, இப்படி அவர் செஞ்சாரு இவரு செஞ்சாருனு நம்மளும் ஒருத்தன் வீட்டு வாசல்ல போய் அசிங்கமா நிக்கணுமா?” இதோடு நான் நிறுத்தி இருக்கலாம். ஆனால் என் வார்த்தை சற்று தடித்துவிட்டது. “ஒரு காலத்தில ஆடை இல்லாம அம்மணமா திரிஞ்சாங்களே! அது மாதிரி நீயும் திரிய வேண்டித்தானே…!” அது ஒரு டீ கடை. எல்லாரும் எங்களையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
இந்த நண்பன் ரொம்ப நாகரிகமானவன். அவன் திட்டியது எனக்குப் புரியவில்லை. ஊர் கெட்ட வார்த்தைகள். ஆனால் என்னை அடிக்க வரவில்லை. அதனால் தான் சொன்னேன் நாகரிகமானவனென்று. அவனும் பழைய நண்பன் ஆகிப்போனான்.
conventional விதிகளை என்னால் பின்பற்ற முடியாத சூழ்நிலையில், புதுத் திறமைகளை மதிக்கிறாரென்று கேள்வியுற்று தமிழில் ஆங்கிலம் பேசிப் படம் எடுக்கும் ஒரு இயக்குனரைச் சென்று பார்த்தேன். என்னை ஒரு எழுத்தாளன் என்று அறிமுகப் படுத்திக் கொண்டேன். தமிழ் எழுத்தாளன் என்று தெரிந்ததும் அவர் தேவாங்கு போல் முகத்தை வைத்துக் கொண்டார். (என் தமிழ் நண்பர்களே என்னை மதிப்பதில்லை. அங்கீகரிப்பதில்லை. அவர் தமிழரன்று. அதனால் நான் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை )
என்னை மதியாததைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் தமிழ் எழுத்தாளன் என்றால் எதற்கும் லாயக்கற்றவன் என்று இவர்கள் எண்ணுவதைத்தான் நான் எதிர்க்கிறேன்.வெறுக்கிறேன்.
“அப்ப நீ டான் பிரவுன், சிட்னி ஷெல்டன் கதைகளெல்லாம் படிச்சதில்லை?” வினவினார், அந்த தேவாங்கு முகப் பாவனையை மாற்றிக் கொள்ளாமலே.
‘அப்ப இல்ல… எப்பவுமே நான் படித்ததில்லை.’ டான் பிரவுன், சிட்னி ஷெல்டன், ஜான் க்ரிஷம் மட்டுமே ஆங்கில எழுத்தாளர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் அவர். ஆங்கிலப் பெயர் உதிர்க்கும் பலரும் இந்த மூவரின் பெயரைத்தான் உதிர்ப்பார்கள். என்னைப் பொறுத்தவரை மேற்குறிப்பிட்ட அனைவரும் பல்ப் (pulp) எழுத்தாளர்கள். இலக்கியவாதிகளன்று. ஆங்கில இலக்கியவாதிகளான வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ், சார்லஸ் ரைட், தெட் ஹூஸ் போன்ற பலரை மிகத் தீவரமாக நான் வாசித்திருக்கிறேன். மேலும் லத்தின் அமெரிக்கக் கவியான பாப்லோ நெருடா, ஜெர்மன் படைப்பாளியான பெர்டோல்ட் பிரெக்ட் போன்ற பலரைப் பின்பற்றியிருக்கிறேன். ஆனால் இதையெல்லாம் அவரிடம் சொல்வது வீண். ஏனெனில் அவரைப் பொறுத்த வரையில் நான் ஒரு தமிழ் எழுத்தாளன்.
“மார்டின் ஸ்கார்சிஸே படம் ஏதாவது பார்த்திருக்கியா?”
இந்தக் கேள்வியைக் கேட்டதும் அவரின் நடு நெத்தியில் சுத்தியலால் அடிக்கவேண்டுமென்றிருந்தது. ஆனால் அடிக்க முடியவில்லை. அடிக்க இயலாது. அடிக்க முடியாது. அடிக்கக் கூடாது. அவருக்குத் தெரிந்ததெல்லாம் வெறும் மார்டின் ஸ்கார்சிஸேவும், குப்பாலாவும். எனக்கு இவர்களையும் சேர்த்து ப்ருஸ் ராபின்சன், வூடி ஆலன், டெரன்ஸ் மாலிக் போன்று இன்னும் பலருடைய சினிமாவைப் பற்றி ஆழ்ந்த புரிதல் இருக்கிறது.
நம்பினால் நம்புங்கள். நான் வாரம் முப்பத்தியாறு படங்கள் பார்த்த காலமெல்லாம் உண்டு. தமிழில் ஆங்கிலம் பேசிப் படம் எடுக்கும், ஒரே கதையைத் திரும்பத் திரும்ப வேறு நடிகர்களை வைத்துப் படம் எடுக்கும் இவரை விட நான் நிறைய ஆங்கிலப் படங்கள் பார்த்திருக்கிறேன், ஆங்கில இலக்கியங்களைப் படித்திருக்கிறேன். இருந்தாலும் நான் எதுவும் சொல்லாமல் ஒரு புன்னகையோடு அந்த இடத்தை விட்டு விலகிவிட்டேன், அந்த இயக்குனர் மீது நான் நிறைய மரியாதை வைத்திருப்பதால்…
மேற்கூறிய இயக்குனரைப் பின்பற்றி நிறையபேர் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களையாவது சகித்துக் கொள்ளலாம். ஆனால் இன்னொரு வகைக் கூட்டம் உண்டு, மாற்று சினிமா எடுக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு திரிபவர்கள்.
அவர் ஒரு பிரபல இயக்குனர். மன்னிக்கவும் மாற்று சினிமா இயக்குனர். வடபழனி பஸ் ஸ்டாண்டில் இறங்கி, பிரபல ஸ்டுடியோக்களைக் கடந்து, வலது புறத்தில் உள்ள பெரிய சாலையில் (சிக்னல் அருகில்) திரும்பி, மீண்டும் வெகுதூரம் சென்று மூன்றாவது குறுக்குத் தெருவில் திரும்பினால் அவர் வீட்டை அடைந்துவிடலாம்.
அவரின் முதல் கேள்வி, “ஈரான் படம் எத்தனை பார்த்திருக்க?”
அவரின் வீட்டின் பின்னாடி அமைந்திருக்கும் அலுவலகம் அது. (ஏ.சி இருந்தும் வேர்த்தது. பின்தான் தெரிந்தது ஏ.சியை அணைத்து வைத்திருக்கின்றனர்). சத்தியமாகச் சொல்கிறேன் அது மட்டும் நான்காவது மாடியாக இருந்திருந்தால் நான் ஜன்னல் வழியாக வெளியே குதித்திருப்பேன். (மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள விரும்புவோர், குறைந்தது நான்காவது மாடியிலிருந்தாவது குதிக்கவும். முதல் மூன்று மாடியிலிருந்து குதித்தால் மரணிக்க முடியாது. பெருத்த காயம் ஏற்படும். ஆறுமாதமாவது வலியைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். இன்றைய சூழ்நிலையில் பல லட்சங்கள் செலவாகும். ஆனால் நான்காவது மாடியில் இருந்து குதிக்கும் போது, எலும்புகள் சுக்கு நூறாக உடைவதால் வலி தெரியாது. உடனே மரணம். அப்படி இல்லையெனினும் மருத்தவமனையில் நிச்சயமாக மரணம். ஒருநாளைக்கு மேல் உயிர் தங்காது. பி.கு. நான்காவது மாடியிலிருந்து குதிப்பவர்கள், ’நான் பிழைக்கமாட்டேன்… என்னை மருத்துவமனையில் சேர்க்காதீர்கள்’ என்று எழுதி வைத்து விட்டுக் குதிக்கவும். மருத்துவச் செலவு மிச்சம்.) ஆம் குதித்திருப்பேன். மாற்று சினிமா என்றால் ஈரான் படமென்று சொம்படிப்பவர்களைக் கண்டால் எனக்கு அருவருப்பாக இருக்கும். குறைந்த செலவில் எடுக்கப்படும் ஈரான் படங்கள் அருமையான படங்கள் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அப்படங்களைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடமுடியாது. காரணம், அது போன்ற யதார்த்தமான கதைகளை 1950களிலேயே இங்கு கரிச்சான் குஞ்சு எழுதிவிட்டார். 1930களில் மௌனி இயற்றிவிட்டார், 1960களில் தீ.ஜா விவாதித்துவிட்டார். (ஆனால் அந்தக் கதைகளை படமாக எடுக்க யாரும் தயாராகயில்லை) நவீன தமிழ் இலக்கியத்தைச் சிறிதும் படிக்காமல், ஈரானிய படங்களைக் கண்டு பிரமித்துக் கொண்டிருப்பது புத்திசாலித்தனமன்று.
அடுத்த கேள்வி, “பிடித்த இயக்குனர் ?”
“செர்ஜியோ லியோன்”
அவர் அருகிலிருந்த தன் உதவியாளர்களைப் பார்த்துக் கொண்டார். அவர்கள் தெரியாது என்பது போல் தலையாட்டினர்.
“என்னப்பா மாற்று சினிமாவெல்லாம் பார்க்க மாட்டியா?”
“நான் மாற்று சினிமாவும் பார்த்திருக்கேன். நீங்க தமிழ்ல பல படங்கள் எடுத்தீங்களே, அந்தப் படங்களோட ஒரிஜினல் வெர்ஷனையும் பார்த்திருக்கேன்” என்று சொல்லவேண்டும் போலிருந்தது. ஆனால் சொல்லவில்லை. சொல்ல இயலாது. சொல்ல முடியாது.சொல்லக் கூடாது…
எனக்கு நன்றாகத் தெரியும். நான் அங்கு சத்ய ஜித்ரே என்று சொல்லியிருந்தால் அவர் என்னை அரவணைத்திருப்பார். ஆனால் சத்ய ஜித்ரேவின் பெயரை உதிர்க்க எனக்கு விருப்பமில்லை. சத்ய ஜித்ரே ‘இந்திய புது அலை’ சினிமாவின் தந்தை, பல தரமான படங்களை இயக்கியவர் என்று நான் அறிவேன். எனக்கும் அவர் படங்கள் பிடிக்கும். அதனைக் கொண்டாடுவதில் தவறொன்றும் இல்லை. ஆனால் சத்ய ஜித்ரே படைப்புகளை ஆராய்ந்து அவரின் ஆளுமை இந்தக்காலத்திற்கு எப்படிப் பொருந்தும் என்று சிந்திப்பதை விடுத்து, சத்ய ஜித்ரே சத்ய ஜித்ரே என்று பெயர் உதிர்ப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ‘பதேர் பாஞ்சாலி’ மட்டுமே தலை சிறந்த படம் என அறைகூவல் விடுக்கும் கூட்டத்தில் நான் சேர விரும்பவில்லை. விளைவு இறுதி வரை என்னால் உதவி இயக்குனர் ஆகமுடியவில்லை.
என்னிடம் இருந்த கதைகளையெல்லாம் தூக்கிக் குப்பையில் போட்டுவிட்டு, மீண்டும் ஏதாவது ஒரு கார்ப்பரேட் கம்பனியில் நவீன கொத்தடிமையாகி விடலாம் என்று எண்ணியபோது வந்து சேர்ந்தார் அந்தப் புது நண்பர். சினிமாவில் நண்பர்கள் எளிதாகக் கிட்டி விடுவார்கள். எதிரிகள் மிகவும் எளிதாகக் கிட்டிவிடுவார்கள்.
அந்த நண்பர் இயக்கப் போகும் குறும்படத்திற்குக் கதை வேண்டும் என்றார். வெகு நாட்களாக யாரும் பிரசுரிக்க முன்வராத ‘நிரஞ்சனின் நாய்’ என்ற என் சிறுகதையை அவரிடம் கொடுத்தேன். (என் கதைகளைப் பலரும் பாராட்டி இருந்தாலும் யாரும் பிரசுரிக்க முன்வரவில்லை). அதை வைத்து அவர் இயக்கிய குறும்படம் பலரால் பாராட்டப்பட்டது என்று கேள்வியுற்றேன். அந்தப் படத்தை அவர் என்னிடம் காட்டவில்லை. ஏனென்று பின் ஒருநாள் விளங்கியது, அந்தப் படத்தின் கதைக்கு அவன் (இனிமேல் அவனுக்கு என்ன மரியாதை!) தன் பெயரைப் போட்டுக் கொண்டான். அவனுடைய நண்பர் என்று சொல்லிக் கொண்டு இன்னொருவர் என்னைத் தொடர்பு கொண்டார். “அவன் பண்ணுனது தப்புதான் ப்ரோ…” இன்னும் ஆதரவாக நிறைய வார்த்தைகள் சொன்னார். “மீட் பண்ணலாமா ப்ரோ ?”
மின்விசிறியின் சப்தம் தலைவலியைத் தந்தது. மிகப் பழைய மின்விசிறி. “ப்ரோ… கொஞ்சம் ஃபேன ஆஃப் பண்றீங்களா… குளுருது” என்றேன். ஒருவழியாக மின்விசிறி நின்றது. டீ வந்தது. குடித்து முடிக்கும் வரை காத்திருந்தான். மேஜையில் இருந்த ஒரு நாவலைக் கையில் எடுத்து பின் அட்டையைப் பார்த்தேன்.
“எப்டியும் இதப் படிச்சிருப்பீங்க?”
இல்லை என்று தலை அசைத்தேன். “ஐயோ” பதறினான். “இப்ப இந்த நாவல் இண்டஸ்ட்ரில ரொம்பப் பிரபலம் ஆச்சே… நீங்க படிக்கலனு சொல்றது ஆச்சர்யமா இருக்கு.
“மேஜிகல் ரியலிசம் ப்ரோ… பின்னியிருக்காரு…”
மேஜிகல் ரியலிசம் என்றால் என்னவென்று கேட்டிருந்தால், நிச்சயம் அவனுக்கு விளக்கத் தெரிந்திருக்காது. பெயர் உதிர்க்கும் பட்சிகள். நான் எதுவும் பேசவில்லை.
“நான் இவரோட ரைட்டிங்ஸ தொடர்ந்து ஃபாலோ பண்றேன். இவர் மாதிரி யாரும் எழுத முடியாது… நீங்க இவரோட மத்த புக்ஸ்லாம் படிச்சி இருக்கீங்களா?”
“இல்ல”
மீண்டும் அவன், “ஐயோ”
எனக்குப் பழைய ஞாபகம் வந்துவிட்டது. வேலையை விட்டுவிட்டு வந்த புதிதில், ஒரு பிரபல பதிப்பாளரிடம் தொலைபேசியில் பேச நேர்ந்தது. என் கதையைப் பதிப்பிக்க முடியுமா என்று கேட்டேன்.
“என்னலாம் படிச்சிருக்கீங்க?”
“நவீன தமிழ் இலக்கியம் படிச்சிருக்கேன். படிச்சுக்கிட்டு இருக்கேன்…”
“அதான்… என்னலாம் படிச்சிருக்கீங்க?”
“பிரதாப முதலியார் சரித்திரத்துல இருந்து, அஞ்ஞாடி வரைக்கும் படிச்சிருக்கேன்… நகுலன், கரிச்சான் குஞ்சு…” இன்னும் நான் படித்த ஏகப்பட்ட எழுத்தாளர்களைப் பற்றிப் பேசினேன்.
ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரின் பெயரைக் குறிப்பிட்டு, அவரைப் படித்திருக்கிறீர்களா என்று கேட்டார். இல்லை என்றேன். சிறிது நேர மௌனம். உரையாடலை முடித்துக் கொள்ள வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டோம். குறிப்பிட்ட எழுத்தாளரைப் படித்தால் தான் ஒருவனால் எழுத்தாளனாக முடியும் என்று கருதுகிறார் அவர். சர்வாதிகார மனப்பாங்கு அவருடையது. இன்று மீண்டும் அதே பெயரை இந்தப் பட்சி சொல்கிறது.
“என்ன ப்ரோ யோசிக்கிறீங்க ?”
சுதாரித்துக்கொண்டேன். “ஒண்ணுமில்ல… இதுவரை படிச்சதுல்ல. படிக்கணும்”
மீண்டும் நான் புத்தகத்தைப் புரட்டிப் பார்க்கத் தொடங்கினேன்.
“அவன் உங்களுக்குக் கிரெடிட் கொடுத்திருக்கணும் ப்ரோ… இல்லனா ஒரு அமெளண்ட்டாவது கொடுத்திருக்கணும்” நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தேன். அவன் தலையைக் குனிந்து கொண்டான். தொடர்ந்து பேசினான், என் கண்களை நிமிர்ந்து பார்க்காமலேயே.
“இல்ல. கஷ்டப்பட்டுக் கதை எழுதுறீங்க… எதுவுமே கொடுக்கலனா எப்டி?”
நான் அமைதி காத்தேன். “ஆனா. நான் அப்டி இல்ல ப்ரோ” வேகமாக டிராயரைத் திறந்து ஒரு கவரை எடுத்து என் கையில் கொடுத்தான்.
“வாங்கிக்கோங்க… ப்ளீஸ்…”
வாங்கி, பிரித்துப் பார்த்தேன். உள்ளே காசோலை இருந்தது. ஒன்றிற்குப் பக்கத்தில் நான்கு பூஜ்ஜியங்கள் இருந்தன. அதுவரை யாரும் கொடுக்காத பணம்.
“இது அட்வான்ஸ் தான் ப்ரோ… என் கூட நீங்க தைரியமா வர்க் பண்ணலாம். நான் ப்ரொஃபஷனல்…”
நான் மீண்டும் நிமிர்ந்து பார்த்தேன்.
“ஓ! என்னனு சொல்லல இல்ல. ஒண்ணுமில்ல ப்ரோ. இன்னும் எத்தனை நாள் அசிஸ்டண்ட் டைரக்டராவே இருக்கிறது. ப்ரொடியூசர் கிடச்சிட்டாரு. ஸ்கிரிப்ட் தான்…
…உங்கக்கிட்ட ஏதாவது ஸ்கிரிப்ட் இருக்கா ப்ரோ?” என்னைப் பேசவிடாமல் அவனே பேசினான்.
“இல்லாம இருக்குமா… வேலையெல்லாம் விட்டுட்டு ரைட்டர் ஆகியிருக்கீங்க…”
‘விட்டா பேசிக்கிட்டே இருப்பான்’. நான் காசோலையை மீண்டும் அவன் கையில் கொடுத்தேன். அவன் முகத்தில் சோகம் குடிகொள்ள ஆரம்பித்துவிட்டது.
“இன்ட்ரஸ்ட் இல்லயா ப்ரோ ?”
நான் புன்னகை செய்தேன். “என் பேர்ல ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கு” ஸ்பெல்லிங்கைச் சொன்னேன். புதியதொரு காசோலையை எடுத்துப் பிழையின்றி என் பெயரை எழுதிக் கொடுத்தான்.
அவன் கொடுத்த காசுக்கு ஒரு கதையைச் சொல்லவேண்டும். என் கதையை ஏன் சொல்ல வேண்டும்? எப்படியும் அவன் கிரெடிட் தரப் போவதில்லை. முந்தைய நாள் இரவு ஒரு ஆங்கிலப்படம் பார்த்தேன். நான்கு நண்பர்கள் சேர்ந்து குடிப்பார்கள். போதை தலைக்கேறிடும். பின் ஒரு நாள் முழுக்க என்ன நடக்கிறது என்பதே அவர்களுக்குத் தெரியாது. இந்தக் கதையை அப்படியே தலைகீழாக மாற்றினேன். நான்கு வழிப்போக்கர்கள் சேர்ந்து குடிப்பார்கள். பின் நண்பர்களாவார்கள். கதையை மதுரைப் பின்னணியில் அமைத்தேன். அவனுக்குக் கதை பிடித்திருந்தது. ஆவி எழுத்தாளானாக அவதாரம் எடுத்தேன். ஒருவாரத்தில் திரைக்கதையை எழுதி முடித்தேன். படம் சூப்பர் ஹிட். 120 ரூபாய் டிக்கெட் கொடுத்து தாம்பரத்தில் ஒரு திரையரங்கில் படத்தைப் பார்த்தேன்.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்- கதிர்க்குமரன்
அது என்னுடைய பெயர் இல்லை. அது அவனுடைய பெயருமில்லை. சினிமாவிற்காக பெயரை மாற்றிக்கொண்டிருக்கிறான். என் கதைதான். நான் சொன்ன இடத்தில் பாடல்கள் வந்திருந்தன. ஆனால் க்ளைமாக்ஸிற்கு முன் வரும் குத்துப் பாட்டிற்கு நான் பொறுப்பல்ல. அந்தப் பாடல், மூலத்திரைக்கதையில் இடம்பெற்றிருக்கவில்லை. படத்தோடு பொருந்தாமல் தனித்துத் தெரிந்தது. ஆனால் மக்கள் ஆரவாரம் செய்தனர். ஒரு ஹிந்தி நடிகை ஆடிக்கொண்டிருந்தாள். பாடலில் ‘செழிப்பம்’என்ற வார்த்தை மட்டும் ஐந்து முறை வந்தது. தேசிய விருது பெற்ற கவிஞர் எழுதிய பாடல். ஒரு வழியாகப் பாடல் முடிந்தது. அதற்கு பின் என்னால் படத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. அங்கே பாடல் வந்திருக்கக்கூடாது. அவன் ஒரு நல்ல இயக்குனர் அன்று. நல்ல இயக்குனராக இருந்திருந்தால், அங்கே அந்த பாடலை வைத்திருக்க மாட்டான். அவன் என்ன செய்வான் பாவம்? ஒருவேளை தயாரிப்பாளர் ஐட்டம் பாடல் வைக்கச் சொல்லி அவனை வற்புறுத்தியிருக்கலாம். ஒரு பெரிய அரசியல்வாதியின் மகன்தான் தயாரிப்பாளர். அவன் அவரைப் பகைத்துக்கொள்ள விரும்பியிருக்க மாட்டான். நானும் அவன் இடத்தில் இருந்திருந்தால் அப்படிதான் செய்திருப்பேன்.
அந்தப் ப்ரொஃபஷனல் அதன்பின் என்னை அழைக்கவில்லை. குற்ற உணர்ச்சியாய் இருக்கலாம். ஆனால் அவனுடைய உதவி இயக்குனர் ஒருவன் அழைத்தான். பிரசுரமாகாத என் நாவலைத் திரைக்கதையாக்கிக் கொடுத்தேன். படம் ஓடவில்லை. ஆனால் அவன் தமிழ் சினிமாவிற்குக் கிடைத்த வரம் என்று அனைவரும் பாராட்டினார்கள். இப்படிதான் நான் முழுநேர ‘ஆவி எழுத்தாளன்’ ஆகி போனேன். அதாவது, கிரெடிட் கிடைக்காது என்று தெரிந்தும் பிறருக்காக, வெறும் பணத்திற்காக எழுதும் ‘நிழல் எழுத்தாளன்’ ஆகிப்போனேன். என் வங்கிக் கணக்கில் பணம் அதிகமாகத் தொடங்கிற்று. நிறைய பேர் என்னை அழைப்பார்கள். நிறைய எழுதிக் கொடுத்திருக்கிறேன். ஒரு உண்மையைச் சொல்ல வேண்டுமெனில், போன தீபாவளிக்கு, அந்தப் பிரபல மல்டிப்ளெக்ஸ் திரையரங்கில் ஆறு படங்கள் வெளியாயின. அதில் ஒன்று தெலுங்கு படம். அந்த ஆறு கதைகளும் என்னுடையதுதான். பெரிய தலைகளுக்கெல்லாம்கூட கதை எழுதி இருக்கிறேன். அந்தப் பிரபல நடிகன் பல வேடங்களில் நடித்த, அந்தப் படத்தின் கதையைத் தான் தான் எழுதியதாக ஒரு உதவி இயக்குனர் புகார் தெரிவித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். ஆனால் அது பொய். ஏனெனில் அந்தக் கதையை எழுதியவன் நான்தான்… அந்தப் பிரபல நடிகனுக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு வந்தார் அந்தப் பிரபல எழுத்தாளர். (அவர் இப்போது இல்லை. அவர் ஆத்மா சாந்தி அடையட்டும்). அவரைச் சொல்லிக் குற்றமில்லை. இறுதி வரை அவரை வசனகர்த்தா என்றே தமிழ் சினிமா அழைத்தது. ஆனால் அவர் வசனகர்த்தா அன்று. சிறந்த திரைக்கதை ஆசிரியர். அவர் ஏராளமான படங்களுக்கு கதை திரைக்கதை எழுதியிருந்தாலும், அவருக்கு வசனகர்த்தா என்ற கிரெடிட் மட்டுமே மிஞ்சியது. அந்த எழுத்தாளரே அதைப்பற்றி அலட்டிக் கொள்ளவில்லை. நான் ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும்.
ஆனால் அலட்டிக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. காரணம், தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளர்களாக நான் கருதும் இருவரில் இவரும் ஒருவர். இன்னொருவர் அசோகமித்திரன். ஆனால் இறுதி வரை தமிழ் இலக்கிய உலகம் அவருக்கு அங்கீகாரம் வழங்கவில்லை.
அவருக்கும் தெரிந்திருக்கவில்லை, அந்தப் பிரபல நடிகன் திரைப்படத்தின் உண்மையான கதாசிரியர் நான் தான் என்று. ஆனால் இதற்கெல்லாம் நான் அலட்டிக் கொள்ளக் கூடாது. என் கதையைத் திருடிவிட்டார்கள் என, யாரையும் எதிர்த்துக் கொடிபிடிக்க முடியாது. இருக்கும் ‘ஆவி எழுத்தாளன்’ வேலையும் போய்விடும். என் தந்தை ஒண்ணும் பிரபல தயாரிப்பாளர் அன்று. என் பாட்டன் மார்லன் பிராண்டோ அன்று. என்னால் வேறு எப்படியும் திரைத்துறையில் நுழைய முடியாது. நீந்த முடியாது. யாராவது ஒருவருடைய உதவியோடு, என்றாவது ஒருநாள் படம் இயக்கிவிடலாம் என்ற நம்பிக்கையில்தான், நான் யாரையும் பகைத்துக்கொள்வதில்லை. குறைந்த விலைக்கு என் கதைகளை விற்றுக் கொண்டிருக்கிறேன். என்னை உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, என்னைப் போல் பலருண்டு. அவர்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பியதில்லை, விரும்பப்போவதுமில்லை.