என் தனிமை என்னை கொன்று விட பார்க்கிறது
நான் என் தனிமையை கொன்று விட பார்க்கிறேன்
ஆதி அந்தமற்ற ஒருவனாய்
நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன்
சுட்டெரிக்கும் வெயில்
குளிரடிக்கும் காற்று
முத்துகளாய் பொழியும் மேகம்-எதுவும்
என்னை கவர்ந்துவிடவுமில்லை
பறந்து விரிந்த இந்த வானம்
காற்றயைபோல் பயணிக்கும் வாகனங்கள் என எதுவும்
என்னை அசைத்துவிடவில்லை
ஆம் நான் ஒரு ஜடம்
உலகம் என்னை அப்படி தான் அழைக்கும்
என் கண்முன்னே எது நிகழ்ந்தாலும்
நான் பார்த்துக்கொண்டே இருப்பேன்
பார்த்துகொண்டு மட்டும்தான் இருப்பேன்-ஏனெனில்
நான் ஜடம்
அவர்கள் காதல் கவிதை பாடிய போது
நான் பார்த்துக்கொண்டிருந்தேன்
அவள் கற்பிழந்து கதறிய பொது
நான் பார்த்துக்கொண்டிருந்தேன்
பின் அந்த ஆலமரத்தில் பிணமாய் தொங்கியபோது
நான் பார்த்துக்கொண்டிருந்தேன்
அதோ அவன் இப்போது வேறோருத்தியிடம் கவி பாடுகிறான்
நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
என்னுள் எந்த சலனமும் ஏற்பட்டது இல்லை
ஏற்பட போவதும் இல்லை-ஏனெனில்
நான் ஜடம்
பல கோர மரணகளை கண்டிருக்கிறேன்
மழலை மொழியை கேட்டிருக்கிறேன்
பலமுறை நான் சிதைக்க பட்டிருக்கிறேன்
சிலமுறை செப்பனிட பட்டிருக்கிறேன்
இருந்தும் நான் ஆரவாரமற்றே இருக்கிறேன்.
பிச்சைகாரர்கள், சன்யாசிகள், விபச்சாரிகள், பத்தினிகள்
அரசியல்வாதிகள், அறிவிலிகள், அறிவுஜீவிகள் என
பலர் என்னை கடந்து சென்று விட்டனர்
அவர்களை பொறுத்த வரையில் நான் ஜடம்
எப்போதும் மாறாமல் இருப்பதனால்…
என்னை பொறுத்த வரை அவர்கள் தான் ஜடம்.
நாகரிகம் வளர்ச்சி அடைந்தும் அவர்களின் மிருக மனம் மட்டும்
மாறாமல் இருப்பதால்..
அவர்களிடம் இதை சொல்லிட, நானும் வெகு நாட்களாக
காத்துக்கொண்டிருக்கிறேன்
ஆனால் ஏனோ தெரியவில்லை..
இப்போது யாரும் என் வழி வருவதில்லை.
என்னை வெறும் ஜடாக எண்ணி கடந்து சென்ற அவர்கள்
திரும்பி வருவார்களா !
எனக்கு தெரியாது
அனால் நான் மட்டும் காத்திருக்கிறேன்
அவர்களின் நினைவுகளை சுமந்துகொண்டு .
-மூடப்பட்ட தேசிய நெடுஞ்சாலை ….