பேருந்திற்காக அந்த நான்கு பெண்களும் காத்துக்கொண்டிருந்த வேலையில் அங்கே வந்து சேர்ந்தான் அந்தக் குறுந்தாடிக்காரன்.
“கடவுளே! என்ன ஏன் இந்த மாதிரி அட்டு பீசுங்கள பார்க்க வைக்கிற!” என்று அவர்களை கேலி செய்ய தொடங்கினான்.சகித்துக்கொண்டிருப்பதை தவிர அந்த பெண்களால் வேறொன்றும் செய்ய இயலவில்லை.அந்த நேரம் பார்த்து அவர்களை காப்பாற்றுவதற்க்காகவே ஆபத்பாண்டவன்போல் அங்கு வந்து சேர்ந்தான் இன்னொருவன்.
“என்னமா! கலாய்க்கிறானா? டேய்! இதுவே உன் கூடப் பிறந்தவங்களா இருந்தா இப்படி கிண்டல் பண்ணுவியா? “
“அதான் கூடப் பொறக்கலையே”
“என்னடா தெனாவட்டா பேசுற……”
“இன்னும் கேவலமா பேசுவேன். என்னடா பண்ணுவ”என்றபடி கெட்ட வார்த்தையில் திட்ட தொடங்கினான் அந்தக் குறுந்தாடிக்காரன்.
மிகக் கேவலமான வார்த்தைகளை இருவரும் பரிமாறிக் கொண்டனர்.காது கொடுத்து கேள இயலா வார்த்தைகள்.
“இவன யாரு மத்துசத்துக்கு கூப்பிட்டா?” என்று எண்ணிய அந்தப் பெண்கள், புதியவனை நோக்கி “சார், வேணாம். விட்டுடுங்க” என்றனர்.
திடீரென ஆபத்பாண்டவனை கீழே தள்ளிவிட்டு ஓடினான் குறுந்தாடிக்காரன்.அவனை துரத்திக் கொண்டே இந்த புதியவனும் ஓடினான். வெகுதூரம் ஓடிக் கலைத்தப்பின் தெருமுனையில் இருவரும் மூச்சிரைக்க நின்றனர்.
” டேய் உண்மையாவே அடிக்க வர?” என்றான் குறுந்தாடி.
“நீ மட்டும் கீழ தள்ளிவிட்டு ஓடல?”
“ஹீரோ ரோல்னா அப்படிதான். அனுபவி…. சரி சரி. அங்க கூட்டமா சில பொண்ணுங்க நிக்கிறாங்க பாரு. இப்ப நீ வில்லன். போய் கிண்டல் பண்ணு. நான் பின்னாடியே ஹீரோ மாதிரி வந்து காப்பாத்துறேன்….”