மணி காலை ஒன்பது.வினோத்தை பொறுத்த வகையில் அது அதிகாலை. வீட்டிலிருந்து வெளியே வந்தவனுக்கு காத்திருந்தது ஆச்சர்யம். வாசலருகே நின்றுகொண்டிருந்தது அந்த விலையுயர்ந்த பைக்.
“யாருதா இருக்கும் ? இத இந்த தெருவுல பார்த்ததே இல்லையே. பூட்டாம வெச்சுருக்கான் !” என்றபடி சுற்றும் முற்றும் பார்த்தான். தெருவே நிசப்தமாக இருந்தது.
“யாருதா இருந்த என்ன, இன்னைக்கு இது என் பைக்.” பெரும் சப்தத்துடன் பைக் அங்கிருந்து கிளம்பியது.
வினோத்திற்கு சிறு வயதிலிருந்தே பைக் மீது ஆசை அதிகம். ஒவ்வொரு முறையும் தன் தந்தையிடம் பைக் பற்றி பேச்சு எடுக்கும்போதெல்லாம் “அதெல்லாம் நீ சம்பாதிச்சு வாங்கிக்கோ” என்பதே அவர் கூறும் ஒரே பதில். பைக்கின் மீதிருந்த ஆர்வம் வெறியாக மாறியதன் விளைவு, விலையுயர்ந்த பைக்குகளை திருடி வெகு தூரம் ஓட்டிச் செல்வதை பொழுதுபோக்காக்கிக் கொண்டான். பைக் திருடு போய்விட்டது என்பதை உரிமையாளர் கண்டுகொள்வதற்கு முன் அந்த பைக்கை பாகம் பாகமாக கழற்றி விற்றுவிடுவான்.
இது வரை தொண்ணூற்றொம்பது பைக்குகளை வெற்றிகரமாக திருடிவிட்டான். இது அவன் திருடும் நூறாவது பைக்.
தெருவே வெறுச்சோடி இருந்தது அவனுக்கு மேலும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
“இன்னா இன்னைக்கு யாரையும் காணோம் ரோட்ல..எல்லாம் எங்க போனானுங்க..தெருவே காலியா இருக்கு..”
திடிரென எங்கிருந்தோ எழுந்த சிரிப்பொலியைக் கேட்டு திடுக்கிட்டு வண்டியை நிறுத்தினான்.
“தம்பி..என்ன பயந்துட்டியா..”
“யாரு..யாரது சொல்லுங்க”
“நான் தான். பைக்”
“நான் நம்ப மாட்டேன். பைக் எப்படி பேசும் ! ”
“நம்பித்தான் ஆகணும். சரி இந்த பைக் யாருது ? ”
“ஏன்.. எந்து தான்”
“யார் வாங்கி கொடுத்தா? ”
“எங்க அப்பாதான்”
“உங்க அப்பாதான் வாங்கி தர மாட்டாரே”
“உனக்கு..உனக்கு எப்படி தெரியும்”
“எனக்கு எல்லாம் தெரியும்” என்றபடி பைக் மீண்டும் சிரித்தது.
“உண்மைய சொல்லுடா.யாரு பைக் இது ”
“அது வந்து..அது வந்து…என் பிரெண்டு கொடுத்தான்”
“இப்ப தான் உங்க அப்பா வாங்கி கொடுத்ததா சொன்ன..பொய் சொல்ற பாத்தியா… இந்த பைக்க திருடினவுடனே உனக்கு நான் தண்டனை கொடுத்துட்டேன்… ”
“நீயா! என்ன தண்டனை ?”
“வர வழியில பார்த்திருப்பியே..யாருமே இருந்துருக்க மாட்டாங்களே ..இனிமே நீ யார் கண்ணுக்கும் தெரியமாட்ட. உன் கண்ணுக்கும் யாரும் தெரிய மாட்டாங்க…அதான் நான் உனக்கு கொடுத்த தண்டனை.
“இல்ல நீ பொய் சொல்லுற”
“நான் திருடனா, இல்ல நீ திருடனா..உன்னால எத்தனைப் பேர் பைக்க தொலைச்சிட்டு அழுதிருப்பாங்க..இப்ப நீ அழுவு..பைக்குக்கு தான ஆசைப்பட்ட..இனிமே இந்த பைக் உனக்கு மட்டும் தான். உனக்கு இந்த பைக் மட்டும் தான்.போடா எங்க வேணா போடா. யாரும் இருக்க மாட்டாங்க”
பைக்கின் சிரிப்பொலி விண்ணை பிளந்தது.
வினோத்திற்கு இன்னும் பைக் ஆசை விடவில்லை. பைக்கை எடுத்துக் கொண்டு தெருவெங்கும் சுற்றினான்.தெருவே ஆள் அரவமற்று இருந்தது. நகைக் கடைகளும், ஜவுளிக் கடைகளும் திறந்தே கிடந்தன. ஆனால் ஒருவர் கூட வினோத்திற்கு தென்படவில்லை. தன் தவறை உணர்ந்த அவன் பைக்கை அப்படியே போட்டுவிட்டு ஓடினான். சிறு வயதிலிருந்து ஏதோ ஒன்றை திருடிக் கொண்டிருக்கும் அவனால், இப்போது திறந்து கிடக்கும் கடைகளிலும் எதையும் திருட இயலவில்லை. எதன் மீதும் பற்றற்று ஓடிக் கொண்டே இருந்தான். ஆனால் அவன் செல்லும் இடமெல்லாம் அந்த பைக் அவன் முன் நின்று கொண்டிருந்தது. வேறு வழி இல்லாமல் பைக்கிடம் சரணடைந்தான்.
“ப்ளீஸ் என்ன மன்னிச்சிரு. இனிமே நான் திருடமாட்டேன். அடுத்தவங்க பொருளுக்கு ஆசை படமாட்டேன்.பொய் சொல்ல மாட்டேன்.ப்ளீஸ்..”
“டேய் என்னடா ஆச்சு ?”
“ஏதோ கேட்ட கனவு அப்பா”
“ஒரு வேலையும் செய்யாம ஒன்பது மணி வரைக்கும் தூங்குனா கேட்ட கனவுதான் வரும். அந்த பால்காரன் இன்னும் வரல. நீ போய் பால் வாங்கிட்டுவா”
இப்போது நிஜமாகவே பூட்டப்படாத அந்த பைக் வீட்டின் வாசலில் நின்றுகொண்டிருந்தது.
“நமக்கெதுக்கு அடுத்தவன் பொருள். இனிமே திருட கூடாது. இந்த பைக் நமக்கு வேணாம்”, சலனமின்றி அந்த பைக்கை கடந்து சென்றான் வினோத்.
“பைக் எப்படி பேசும். வெறும் கனவுதானே ! இந்த பைக் எனக்குதான்”, பைக்கை நோக்கி வேகமாக ஓடினான்.
பைக்கின்மீது அவன் கை பட்டவுடனேயே கம்பீரமாக ஒலித்தது அந்த குரல், “தம்பி இன்னும் நீ திருந்தவே இல்லையா…!”
“இல்ல நீ எனக்கு வேணாம்” என்றவாறே ஓடத் தொடங்கினான் வினோத்.
பைக்கின் சிரிப்பொலி வெகு நேரம் காற்றில் ஒலித்துக் கொண்டிருந்தது…