The Writer must believe in what he writes - Robert Mckee
***
பொதுவாக, திரைக்கதை எழுதுவது எப்படி என்று சொல்லும் புத்தகங்கள் இங்கே ஏராளம் இருக்கின்றன. ஆனால் குறிப்பிட்ட ஒரு genre-ஐ எப்படி எழுதுவது என்று பேசும் புத்தகங்கள் அதிகமில்லை. அந்த குறையை போக்கும் பொருட்டு William C Martell எழுதிய புத்தகம் தான் ‘The Secrets of Action Screenwriting‘. அந்த புத்தகத்தை மையப்படுத்தி ‘ஆக்சன் கதைகள் எழுதுவது எப்படி’ என்று விவாதிப்போம்.
முந்தைய பகுதிகள்:
ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-1
***
Onion plotting பற்றி அறிந்தோம். அடுத்து மார்ட்டல் சொல்வது Tennis Plotting என்றொரு உத்தி. டென்னிஸ் விளையாட்டு போல் தான் ஒரு கதையின் நிகழ்வுகளும் என்கிறார் மார்ட்டல்.
ஒரு டென்னிஸ் விளையாட்டில், முதலில் ஒரு வீரர் பந்தை அடித்தால் தான் அது எதிரில் இருக்கும் வீரரை சென்று அடைகிறது. பின் அந்த இரண்டாம் வீரர், பந்தை மீண்டும் முதலாம் வீரரை நோக்கி திருப்பி அடிக்கிறார். இது போல், கதையின் நிகழ்வுகளும் மாறிமாறி நாயகன் வில்லன் ஆகியோரால் நகர்த்தப்பட வேண்டும் என்பதே இந்த உத்தி.
அதாவது முதலில் வில்லன் செய்யும் செயல் ஹீரோவை பாதிக்கிறது. ஹீரோ ஒரு போலிஸ் அதிகாரி. வில்லன் சமூக விரோத செயல்களை செய்கிறான். அதனால் இருவரும் முட்டிக்கொள்கிறார்கள். ஹீரோ, வில்லனுக்கு நெருக்கமான ஒருவரை கைது செய்து சிறையில் அடைக்கிறான். அல்லது என்கவுண்டர் செய்துவிடுகிறான். இதனால் கோபப்படும் வில்லன் ஹீரோவின் மனைவியை கொன்றுவிடுகிறான். ஹீரோ, வில்லனை சட்டத்தின் பிடியில் ஒப்படைத்துவிட்டு போலிஸ் வேலையே வேண்டாமென்று போய் விடுகிறான்.
சிலவருடங்கள் கழித்து வில்லன் வெளியே வருகிறான். அடுத்து என்ன? உடனே நாயகன் கோபம் கொண்டு வில்லனை அழிக்க சென்றுவிடுவானா? அதை அவன் முன்பே செய்திருக்க வேண்டுமே? இங்கு தான் டென்னிஸ் பிளாட்டிங் உத்தி பயன்படுகிறது. வில்லன் நாயகனை தூண்டிவிட வேண்டும்.
அவன் மீண்டும் ஹீரோவின் வழியில் குறுக்கிடுகிறான். அவன் நாயகனின் பிள்ளைகளுக்கு ஆபத்து விளைவிக்கிறான். நாயகனால் பொறுத்து கொள்ள முடியவில்லை. அவன் வில்லனை மீண்டும் எதிர்க்கிறான்.
இங்கே எந்த நிகழுவும் அதுவாக நடந்துவிடவில்லை. யாரோ ஒருவர் மற்றவனை நேரடியாகவோ மறைமுகமாவோ தூண்டிவிடுகிறார்கள். ஆக்சன் கதைகளில், நிகழ்வுகள் அதுவாக நடப்பதாக கதை அமைக்க கூடாது என்கிறார் மார்ட்டல். எல்லா நிகழ்வுகளுக்கும் பின்பு இருக்கும் காரணத்தை சொல்லியே ஆக வேண்டும் என்றும் சொல்கிறார்.
மேல் சொன்ன உதாரணம் பரிச்சயமான ஒன்றாக தோன்றலாம். அதை விலாவரியாக எழுதியதற்கு காரணம் இருக்கிறது. பரிச்சயமான கதை ஓட்டத்தை புதியதாக எப்படி மாற்றுவது என்று சொல்ல விரும்பினேன். அதாவது, ஒரு கதையில் சிறு மாற்றங்களை செய்தால் வேறொரு கதை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அந்த வில்லன் ஜெயிலை விட்டு வந்து பெரிய அரசியல்வாதியாகிவிட்டான். அல்லது அவன் சாமான்யர்களால் நெருங்க முடியாத இடத்தை அடைந்துவிட்டான். அவனை அழிப்பது எளிதல்ல. இது தெரிந்தும் ஹீரோ போலீசில் மீண்டும் சேர்ந்து போராடி அவனை அழிக்கிறான். இது ஒரு கதை.
அதுவே காலத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட, பக்குவப்பட்ட நாயகன் சட்டத்தை விட தர்மமே பெரிது என்று முடிவெடுத்து, போலீசில் சேராமல், அதே சமயத்தில் தன் முன்னால் போலிஸ் மூளையை கொண்டு வில்லனை எதிர்க்கிறான் என்றால் இது ஒரு கதை. இங்கே நாம் செய்யும் சிறு மாற்றம் முற்றிலும் மாறுபட்ட இரண்டாம் பகுதியை படத்திற்கு கொடுத்துவிடும்.
இங்கே கூடுதலாக இன்னுமொரு மாற்றம் செய்வோம். வில்லன், அரசியல்வாதி இல்லை. நான்கு பணக்கார இளைஞர்கள். அவர்கள் பணத்திமிரில் செய்யும் காரியம் ஹீரோவை பாதிக்கிறது. போலிஸ் நாயகன் தட்டிக் கேட்க, அவன் குடும்பமே அழிகிறது. ஆனால் போலிஸ் நிர்வாகமும் வில்லன்கள் பக்கமே நிற்கிறது. நாயகன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, வில்லன்களை வேட்டை ஆடுகிறான். இப்படி, வில்லன்களை மாற்ற போக நம் கதையே வேறொரு கதையாக மாறிவிடுகிறது. நமக்கு முற்றிலும் மாறுபட்ட Vigilante Action (பழிவாங்கும் ஆக்சன்) படம் கிடைத்துவிடுகிறது.
போன அத்தியாயத்தில் சொன்னது போல் ஹீரோ யாராகவும் இருக்கலாம். ஹீரோ போலிஸ் இல்லை. அவன் ஒரு கல்லூரி பேராசிரியர் (நான் சிகப்பு மனிதன் (1985)) அல்லது அவன் ஒரு architect. (குரோதம்). இப்போது நமக்கு வேறொரு திரைக்கதை கிடைக்கிறது. நாம் எந்தக் கதை எழுதினாலும், முதலில் நாம் உருவக்கும் ஒன் லைனில் இப்படி ஏதாவது மாற்றம் செய்தால் அது முற்றிலும் புதிய சுவாரஸ்யமான கதையை தந்திடுமா என்று யோசிக்கவேண்டும். அது திரைக்கதைக்கு நிச்சயம் பலம் சேர்க்கும்.
மார்ட்டல் இந்த புத்தகத்தில், ஆக்சன் கதைகள் “Onion Plotting’ அல்லது ‘Tennis Plotting’ ஆகிய இரண்டு உத்திகளில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம் என்கிறார். ஆனால் நாம் இப்படி பிரித்துப்பார்க்க வேண்டிய அவசியமில்லை என்றே நினைக்கிறேன். ஒரு படத்தில் இந்த இரண்டு உத்திகளும் இருப்பது போல் நம்மால் கதை எழுத முடிந்தால் அந்த கதை நிச்சயம் இன்னும் விறுவிறுப்பாக இருக்கும்.
உத்தி 1: கதையில் மையத்தை தெரிந்து கொண்டு அதைச்சுற்றி நிகழ்வுகளை பின்னுவது. உத்தி 2: ஹீரோவை வில்லன் தூண்டிவிடுவது. வில்லனை ஹீரோ தூண்டிவிடுவது.
நம் ஹீரோவை கண்டுகொண்டோம். வில்லனையும் கண்டுகொண்டோம். விறுவிறுப்பாக இருவரையும் மோத விட முடியும் என்று நம்புகிறோம். ஆனால் இதை எப்படி சாத்தியப் படுத்தப் போகிறோம்?
அதாவது கேங்க்ஸ்டர் ஹீரோவும், அரசியல்வாதி வில்லனும் மோதப்போகிறார்கள். என்ன நிகழ்வுகள் அவர்களுக்குள் நடக்கப் போகிறது என்பதை தோராயமாக யோசித்துவிட்டோம். அரசியல்வாதியின் ஆளை ஹீரோ கொன்றுவிடுகிறான் அல்லது ஹீரோ தேர்தலில் நிற்க சீட் கேட்கிறான். வில்லன் கொடுக்கமுடியாது என்கிறான். இது போன்ற நிகழ்வுகளை யோசித்து நாம் ஒன்லைனில் குறித்துவைத்துக் கொள்கிறோம்.
இப்போது, இவை அனைத்தும் ஒரு வலுவான கட்டமைப்புக்குள் வந்து அமர வேண்டுமே! ஹீரோவிற்க்கும் வில்லனுக்குமான பிரச்சனை இரண்டாம் பாதியின் பெரும்பகுதி முடிந்த பின்தான் வலு பெறுகிறது என்று வைக்க முடியாது அல்லவா? அதற்கு தான் ‘Structure’ மிக முக்கியமாகிறது. திரைக்கதையில், மிக சரளமாக, பயன்படுத்தப்படும் வார்த்தையும் இதுதான். பலரும் குழப்பிக்கொள்ளும் வார்த்தையும் இதுதான். ஏனென்றால் திரைக்கதை பற்றி பேசினாலே ‘Three act Structure’ என்ற கோட்பாடே முன்னே வந்து நிற்கிறது.
பெரும்பாலும் ‘த்ரீ ஆக்ட் கோட்பாட்டை போதிக்கும் ஹாலிவுட் புத்தகங்கள் எல்லாம் முதல் ஆக்ட் இத்தனைப் பக்கங்கள் வர வேண்டும், இரண்டாம் ஆக்ட் இப்படி இருக்க வேண்டும், அதில் இதெல்லாம் நடக்கவேண்டும் என்று கையில் கோல் வைத்துக்கொண்டு கணக்கு சொல்லித்தரும் வாத்தியாரைப் போல் கடுமையாக நடந்துகொள்கின்றனவோ என்றே எண்ணத் தோன்றுகிறது. ஆனால் மார்ட்டல் அப்படி எதுவும் செய்யவில்லை. அவர் த்ரீ ஆக்ட் என்பது வெறும் கருவியே, அதற்கு அளவிற்கு அதிகமான முக்கியத்துவம் தர வேண்டிய அவசியம் இல்லை, அதை அடிப்படையாக மட்டுமே வைத்துக் கொண்டு ஒரு எழுத்தாளர் தன் போக்கில் கதையை உருவாக்க வேண்டும் என்கிறார். நாமும் அவரோடு உடன் பட வேண்டிய இடம் இது.
ஹாலிவுட்டை விட்டுவிடுவோம். நம்மூரில் உண்மையிலேயே இந்த Three act கட்டமைப்பில் தான் கதைகள் எழுதப்படுகின்றனவா? இதற்கு ‘ஆம்’, ‘இல்லை’ என்று இரண்டு பதில்களையும் சொல்லலாம். இங்கே Three act structure உள்ளுணர்வின் அடிப்படையில் மட்டுமே பின்பற்றப்படுகிறது, ஆனால் ஹாலிவுட் போதிக்கும் முறையில் அல்ல. த்ரீ ஆக்ட்டை பிரபலப் படுத்திய சிட் பீல்ட் எல்லாம் நமக்கு அறிமுகம் ஆகும் முன்பே இங்கே நல்லப் படங்கள் வந்திருக்கிறது என்பதே நினைவில் கொண்டோமேயானால் இதை புரிந்து கொள்வதில் நமக்கு எந்த குழப்பமும் இருக்காது.
Three act Structure, என்பது மொத்த திரைக்கதையையும் First act, Second act மற்றும் Third act என மூன்று அங்கங்களாக பிரித்து கட்டமைக்கும் முறை. .இதற்கு மிக எளிமையான விளக்கத்தை மார்ட்டல் தருகிறார்.
Act 1:Introduces the conflict. Act 2: Is the conflict & escalation of the conflict. Act 3: Resolves the conflict.
அதாவது முதல் ஆக்ட்டில், ஹீரோவிற்கு பிரச்சனை வருகிறது. இரண்டாவது ஆக்ட்டில் அது வலுபெறுகிறது. மூன்றாவது ஆக்ட்டில் அந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படுகிறது. நம் படங்கள் உட்பட, எல்லாப் படங்களிலும் இந்த கட்டமைப்பை கவனிக்கலாம். இதில் எந்த ஆக்ட் எத்தனை பக்கம் வரப்போகிறது என்பதை போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். முன்பு சொன்னது போல், நம்மூரில் பெரும்பாலும் திரைக்கதைகள் உள்ளுணர்விலேயே எழுதப்படுகின்றன. அப்போது மேலே குறிப்பிட்ட மூன்று விஷயங்களும் திரைக்கதையில் தானாகவே தங்கள் இடத்தை பிடித்துக்கொள்கின்றன. அது சரியாக, சுவாரஸ்யமாக வந்திருக்கிறதா என்று சரிபார்ப்பதே நம் வேலையாகிறது.
முதல் ஆக்ட்டில், நம் நாயகன் யார், அவன் நோக்கம் என்ன, அவன் சுற்றத்தார் யார் என்பதை நாம் அறிமுகம் செய்கிறோம். அப்படியே வில்லன் யார் என்பதையும் சொல்லிவிடுகிறோம். பின் ஹீரோவும் வில்லனும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மோதிக்கொள்ளும் இடத்தில் இரண்டாம் ஆக்ட் பிறக்கிறது.
(ஹீரோவும் வில்லனும் எடுத்த எடுப்பில் நேரடியாக மோதிக்கொள்ளாமல், ஹீரோவிற்கும் வில்லனின் விசுவாசி ஒருவனுக்கும் முதலில் பிரச்சனை வருகிறது என்பது போலும் கதையை அமைக்கலாம்). இறுதியாக பிரச்சனைக்கான தீர்வுக்குள் கதை நுழையும் இடமே மூன்றாம் ஆக்ட்.
முதல்வன் படத்தை எடுத்துக் கொள்வோம். முதலில் நாயகன் அறிமுகமாகிறான். அவன் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருக்கு ‘டிவி ரிபோர்ட்டர்’. அம்மா மடியில் தூக்கம், ஞாயிற்று கிழமையானால் புதினா சட்னி, அப்பாவோடு அளவளாவல்- இவ்வளவே அவன் வாழ்க்கை. திடிரென்று ஒரு கலவரத்தை படம் பிடிக்கும் சூழல் உருவாகுகிறது (Inciting Incident). அப்படியே முதலமைச்சரை பேட்டி எடுக்கும் வாய்ப்பு வருகிறது. அங்கு முதலமைச்சரோடு முரண் ஏற்படுகிறது.(Conflict). கதை வளர, முரண் வலுப்பெறுகிறது. இறுதியில் அவன் வில்லனைக் கொல்வதன் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்கிறான். (Resolution). இந்த அளவில் ‘த்ரீ ஆக்ட்’ பற்றி புரிந்து கொண்டாலே போதும் என்று நினைக்கிறேன். பத்தாவது பக்கத்தில் ஹீரோவிற்கு பிரச்சனை வர வேண்டும், முப்பதாவது பக்கத்தில் first act முடிய வேண்டும் என்றெல்லாம் சொல்லும் ஹாலிவுட் முறைமைகளை பின்பற்றி குழம்ப வேண்டாம்.
ஏனெனில், நாயகனின் அறிமுகம், அவனுடைய வாழ்க்கைப் பற்றிய காட்சிகள் என்று நாம் அமைக்கும் போதே கதையின் முதல் இருபது நிமிடங்கள் தானாகவே கடந்துவிடும். அதனால் எங்கேயும் ‘டைமிங்’ பற்றி நாம் அலட்டிக் கொள்ள வேண்டாம். முழு திரைக்கதையையும் அதன் போக்கில் எழுதிவிட்டு பின்பு அதன் டைமிங் பற்றி சிந்திக்கலாம். சில படங்களில் முதல் பாதியிலேயே, வில்லன் நாயகனின் வாழ்க்கையில் குறுக்கிடுவான். பாண்டியநாடு போன்ற படத்தில் இடைவேளையின் போது தான் வில்லனுக்கும் நாயகனுக்கும் நேரடி பிரச்சனை வரும்.
இரண்டாம் ஆக்ட்டில் பிரச்சனை வளர்ந்து கொண்டே போக வேண்டும் என்கிறார் மார்ட்டல். வில்லனுக்கு, நாயகன் யானை காதில் புகுந்த எறும்பு போல் குடைச்சல் கொடுக்கிறான். நாயகனை அழித்தே தீர வேண்டும் என்ற நிலை அவனுக்கு உருவாக வேண்டும். நாயகனுக்கும், வில்லனை அழித்தால் தான் அவனும் அவனைச் சார்ந்தோரும் நிம்மதியாக இருக்க முடியும் என்ற நிலை வர வேண்டும். இப்படி அமைத்தால் சிறந்த ஆக்சன் கதையாக நம் கதை உருவெடுக்கும் என்கிறார் மார்ட்டல். இங்கே ஹீரோவும் வில்லனும் மாறிமாறி சீண்டிக்கொள்கிறார்கள் (Tennis Plotting) எனும் போது படத்தின் வேகம் நிச்சயம் கூடும். (உதாரணம். தனி ஒருவன், இரும்புத்திரை)
எல்லா பிரச்சினைகளுக்குமான தீர்வை நோக்கி கதையை நகர்த்துவதே மூன்றாவது ஆக்ட். இங்கே முடிந்தவரை கதையில் புதிய ‘Sub-plot’ எதையும் புகுத்தாமல் கதையை க்ளைமாக்ஸ் நோக்கி நகர்த்திட வேண்டும் என்று சொல்லும் மார்ட்டல், ‘முதல் ஆக்ட்’ பற்றி பேசும் போது, முதல் காட்சி பார்வையாளர்களை கட்டிப்போடும் வகையில் இருக்க வேண்டும் என்கிறார். ஒரு பிரம்மிப்பான தருணத்திலிருந்து கதையை தொடங்க வேண்டும் என்கிறார். ஆனால் எப்போதும் அப்படி இருக்க வேண்டும் என்று அவசியமில்லையே! நாம் இங்கே அவரோடு நிச்சயம் முரண்பட்டே ஆக வேண்டும்.
தொடரும்…