The Invisible Guardian- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை- Baztan Triology பகுதி 1


The Invisible Guardian- நாவல் திரையாக்கம் கொஞ்சம் திரைக்கதை- Baztan Triology பகுதி 1

Baztan Triology:  இது ஸ்பானிய எழுத்தாளர் டொலாரஸ் ருடாண்டோ (Dolores Redondo)  மூன்று பகுதிகளாக எழுதிய (அமானுஷ்ய) க்ரைம் நாவல் (ஆங்கில மொழிபெயர்ப்பு: Isabelle Kaufeler). The Invisible Guardian, The Legacy of the bones மற்றும் Offering of the storm  ஆகிய நாவல்களை அதே பெயரில் திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார்கள். 

The Invisible Guardian நாவலின் கதை சுருக்கம் இது தான். அமையா சலாசார், அமெரிக்காவின் FBI-யிடம் பயிற்சி பெற்ற ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர். குழந்தை இல்லை என்பதே அவளுடைய பெரிய பிரச்சனையாக இருக்கிறது. அந்த நேரத்தில் ஊரில் இளம் பெண்கள் கொலை செய்யப்பட்டு காடு, நதி என பல இடங்களில் பிணமாக கிடைக்கிறார்கள். இந்த ஒற்றைவரி, வழக்கமான ஒரு க்ரைம் கதையாக தெரிந்தாலும், நாவலின் வர்ணனை அதை சுவாரஸ்யமான கதையாக மாற்றி இருக்கிறது. ஸ்பெயினின் பகுதிகளை அதன் இயற்கை வளங்களை விவரிக்கும் வகையில் இதன் வர்ணனை அமைந்திருக்கிறது. இந்த வர்ணனைகளே நாவலுக்கு ஒரு தனித்துவமான பிராந்திய தன்மையை கொடுக்கிறது. நாவல் சுமார் ஐநூறு பக்கங்களில் நிதானமாக நகர்கிறது. இந்த நிதானம் தான் நாவலின் பலமாகவும்  இருக்கிறது. 

ஆனால் சினிமாவில் நாவலில் இருக்கும் நிதானம் சாத்தியமில்லை. இரண்டு மணி நேரத்தில் கதையை சொல்ல வேண்டும். அதே நேரத்தில் திரைக்கதையை  தேவை இல்லாமல் துரிதப்படுத்தவும் கூடாது. ஒரு நாவலை திரைக்கதையாக மாற்றும் போது, தேவைக்கு அதிகமான வேகத்தை திரைக்கதையில் கொடுத்துவிடக் கூடாது என்பதை தான் நாம் கவனிக்க வேண்டும். திரைக்கதை வேகமாக இருக்க வேண்டும், எல்லாவற்றையும் சொல்லிட வேண்டும் என்று அடுத்தடுத்து காட்சிகளை அடிக்கிக் கொண்டு போனால், பார்வையாளர்களுக்கு திருப்தி ஏற்படாது. ஆனால், Baztan Triology-யின் திரை வடிவத்தின் முதல் பகுதியில் (The Invisible Guardian) இந்த பிரச்சனை இருக்கிறது. நிறைய விஷயங்கள் துரித கதியில் நகர்கின்றன.  நாவலின் பல கிளைக்கதைகளை திரைக்கதையில் கொண்டு வர முயற்சித்ததே அதற்கு காரணம். 

எந்தவகையான துப்பறியும் கதையாக இருந்தாலும், நாயகன் ஏதோ ஒரு உண்மையை தான் தேடிக் கொண்டு இருக்கிறான். கொலை செய்தது யார், காணாமல் போனது யார் என அந்த உண்மை என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். நாயகன் அந்த உண்மையை கண்டடையும் பாதை எவ்வளவு சுவராஸ்யமானதாக இருக்கிறதோ அவ்வளவு சுவராஸ்யமாக (கதை) திரைக்கதை இருக்கும்.  இந்த படத்தில், அந்த பாதை பல இடங்களில் மிக பரிச்சியமான ஒன்றாக இருப்பதால் சுவராஸ்யம் குறைகிறது. அதே சமயத்தில் திரைக்கதைக்கான புத்திசாலித்தனமான மாற்றங்கள் இந்த கதையில் உண்டு.  நாவலில் நிறைய கதாபாத்திரங்கள் வருகிறார்கள். சில நேரங்களில் அவர்களை பற்றிய பகுதிகள் எதுவுமே நாவலை முன்னோக்கி நகர்த்துவதாக இல்லை. இதுபோன்ற ஒரு கதையை திரைக்கதையாக மாற்றும் போது முக்கியமற்ற பாத்திரங்களை நீக்கிவிட வேண்டும்.  நாவலில் நிறைய கதாப்பாத்திரங்களை சுற்றி கதை நடந்தாலும், இயன்றவரை (சினிமாவிற்கான) திரைக்கதையில் முக்கிய பாத்திரங்களின் எண்ணிக்கையை குறைத்துக் கொள்ளலாம். அதிகம் முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரம் சம்பந்தப்பட்ட முக்கியமான தருணம் ஏதாவது நாவலில் இருந்தால் அதை திரைக்கதையில் வேறு கதாபாத்திரங்களுக்கு பொருத்த முடியுமா என்று யோசிக்கலாம். 

உதாரணமாக ஒரு காட்சி. ஆனி என்ற பெண் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடைக்கிறாள்.  நாயகி அந்த வழக்கை விசாரிக்கிறாள். இறந்து போன ஆனியின் அரூப உருவம் நாயகியின் இரண்டாவது அக்காவின் முன்பு தோன்றி அவளை பயமுறுத்துகிறது. அதெல்லாம் கற்பனை என்று நாயகி தன் அக்காவிற்கு தைரியம் சொல்கிறாள். இது நாவல். 

படத்தில், இதை வேறுமாதிரி மாற்றி இருக்கிறார்கள். நாயகி வழக்கை விசாரித்து விட்டு வீட்டுக்கு வருகிறாள். அந்த வழக்கு அவளுக்கு பெரும் மன அழுத்தத்தைக் கொடுக்கிறது. மழை பெய்து கொண்டிருக்கும் அந்த இரவில், அவள் வீட்டில் தனியாக இருக்கிறாள். ஜன்னல் வெளியே எதர்ச்சையாக பார்க்கும் போது ஆனியின் அரூப உருவம் நாயகியை பார்த்துக் கொண்டே இருக்கிறது. நாயகி பதறியடித்துக் கொண்டு அவளை நோக்கி ஓடுகிறாள். 

அதாவது நாவலில் அக்காவிற்கு நிகழ்ந்த ஒரு முக்கிய சம்பவம் படத்தில் நாயகிக்கு நிகழ்கிறது. நம்முடைய பிரதான கதாபாத்திரத்திற்கு ஒரு பிரச்சனை வரும் போது அது பார்வையாளர்களை அதிகம் பாதிக்கிறது. படத்தில் நாயகி இரண்டாவது அக்காவிற்கு அதிக முக்கியத்துவம் இல்லை. முக்கியத்துவம் கொடுக்கும் அளவிற்கு திரைக்கதையில் அவகாசமும் இல்லை. எனவே தான் இது போன்ற மாற்றங்கள் செய்திருக்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். 

நாவலிலேயே கதை சொல்லலில் குறிபிட்டு சொல்லும்படி ஒரு பிரச்சனை இருக்கிறது. கதையின் முதல் காட்சியில் ஒரு தடயம் கிடைக்கிறது. கொலை செய்யப்பட்டவர்களின் உடலில் ஒரு பிஸ்கட் கிடைக்கிறது. இதற்கான விடையை நாவல் முடியும் தருவாயில் தான் நாயகி தேடுகிறாள். நாவலாகவே இருந்தாலும், க்ரைம் கதையில் இது  வாசகர்களுக்கு திருப்தி அளிக்காத ஒரு வடிவம் தான். ஒரு தடயம் கிடைக்கும் போது, அதை வைத்து தான் கதை அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும். அல்லது அந்த தடயத்தை மறக்கடிக்கச் செய்யும் அளவிற்கு வேறொரு நிகழ்வு ஏதாவது நிகழ வேண்டும். நாவலாசிரியர் மிக வசதியாக அந்த தடயத்தை மறைத்துவிட்டு வேறொரு திசையில் கதையை நகர்த்துகிறார். சினிமாவில், நாவலில் இருந்த பிரச்சனை இல்லை. அந்த பிஸ்கட் கிடைத்ததுமே அதை வைத்து நாயகி என்ன செய்கிறாள் என்று நேர்கோட்டில் கதையை நகர்த்தி இருக்கிறார்கள். 

நாவலில், நாயகி ஒரு வழக்கை விசாரிக்கிறாள். பின் யாரோ ஒருவர் வேறொரு வழக்கை பற்றி சொல்கிறார். அங்கிருந்து கதை முன்னோக்கி நகர்கிறது. திரைக்கதையில் இந்த உத்தி சுவாரஸ்யத்தை தராது.  இதற்கு முன்னரே சாக்ரட் கேம்ஸ் பற்றிய கட்டுரையில் இதை விவாதித்திருக்கிறோம். ஒரு க்ரைம் திரைக்கதையில் போலீஸ் நாயகனுக்கு ஒரு வழக்கு தான் பிரதானமாக இருக்க முடியும்.  வேறு வழக்கு வந்தாலும், அது மூல வழக்கிற்கு ஏதோ ஒரு வகையில் தொடர்பு பட்டிருப்பதாக இருக்க வேண்டும். 

ஒரு பெரிய க்ரைம் நாவல் எழுதும் போது, ஒரு கொலை வழக்கை ஹீரோ துப்பறிகிறார், வேறொரு ஊரில் வேறொரு கொலை நடக்க, அதை மற்றொரு இன்ஸ்பெக்டர் துப்பறிகிறார் என்று வைக்கலாம். இரண்டு வழக்குகளும் ஒரு கட்டத்தில் இணைகின்றன என்று நாவல் எழுதலாம். ஆனால் அதையே நாம் படமாக எழுதும் போது, படம் ஒரே ஒரு ஹீரோவைப் பற்றியது எனும் போது,  அந்த மற்றொரு வழக்கை துப்பு துலக்குவதிலும் ஹீரோவின் பங்கு அதிகம் இருப்பதாக திரைக்கதை அமைத்தல் வேண்டும். அப்போது தான் பார்வையாளர்களால் கதையை பின் தொடர முடியும். ஆனால்  ஹீரோவிற்கு முக்கியத்துவம் தருவது எவ்வளவு அவசியமோ அதே அளவிற்கு அந்த முக்கியத்துவத்தில் நம்பத்தன்மை இருக்க வேண்டும் என்பதும் அவசியமாகிறது.  

நாவலில், வெவ்வேறு முக்கிய கட்டங்களில், நாயகிக்கு சில நிகழ்வுகளைப் பற்றிய செய்தி மட்டும் போனில் வருகிறது. உடனே நாயகி புறப்பட்டு செல்கிறாள். ஆனால் சினிமாவில் எல்லாவற்றையும் நாயகனே (அல்லது நாயகியே) செய்ய வேண்டி இருக்கிறது. அதன்படி இந்த படத்தில் நாயகியே நேரடியாக எல்லோரையும் விசாரிக்கிறாள். ஆனால் அவளை மட்டுமே முன்னிறுத்தும் கட்டாயத்தில் சில லாஜிக் மீறல்களை செய்திருக்கிறார்கள். 

நாவலில், ஒருவன் தற்கொலைக்கு முயல்கிறான் என்று செய்தி நாயகிக்கு வருகிறது. அவனை மருத்துவமனையில் சென்று சந்திக்கிறாள். ஆனால் படத்தில், அந்த செய்தி வந்ததுமே அவளே போய் அவனை காப்பாற்றுகிறாள். 

இங்கே நம்பகத்தன்மை இல்லாமல் போகிறதல்லவா! இது போன்ற விஷயங்களை திரைக்கதையில் தவிர்த்தல் நலம். சில இடங்களில் நம் நாயகன் பின்தங்கி இருப்பது தவறில்லை. 

பல நேரங்களில் நாம் வாசிக்கும் நாவல்கள் நமக்கு முழுவதுமாக நினைவு இருப்பதை விட, நாவல்களில் இருக்கும் சிறப்பான தருணங்களே அதிகம் நினைவில் இருக்கும். நல்ல தருணங்களின் தொகுப்பே நாவல் எனலாம். இந்த நாவலில் சில நல்ல தருணங்கள் உண்டு.

உதாரணமாக ஒரு தருணம். நாயகி க்ரைம் சீனில் பிணமாக கிடக்கும் பெண்ணை பார்க்கிறாள். அப்போது அவளுக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது. 

உயிரற்ற உடல் என்றாலும் அதற்கும் ஒரு ‘privacy’ இருக்கிறது. இவ்வளவு போலிஸ்காரர்களும்  பாரன்சிக் ஆட்களும் சுற்றி நின்று கொள்வது இறந்தவர்களுக்கு செய்யும் அவ மரியாதை என்று எண்ணுகிறாள். அவள் ஒரு கேதலிக் என்பதால் அப்படி நினைக்கிறாள் என்று நாவலாசிரியை குறிப்பிடுகிறாள். நாயகியின் நம்பிக்கையை, அவளின் அக உலகை வெளிப்படுத்தும்  இடம் இது. ஆனால் இந்த தருணம் படத்தில் இல்லை. இது போன்று நம் கதை மாந்தர்களின் அக உணர்வுகளை சொல்ல நாம் வசனங்களை பயன்படுத்தலாம். (True Detective போன்ற சீரிஸின் வெற்றி அதன் வசனங்கள் தான் என்பதை நினைவு படுத்த விரும்புகிறேன். ஒரு துப்பறியும் கதையாக அது மிக எளிமையான கதை தான். ஆனால் அதன் நாயகன் Rust Cohle பாத்திரத்தின் அக உணர்வும், தத்துவங்களும் வசனங்களாக வெளிப்பட்டு தான் அதை ஒரு சிறப்பான தொடராக மாற்றி இருக்கும்) 

நாவலில் ஆலோசியஸ் என்றொரு FBI அதிகாரி பாத்திரம் வருகிறது. கதை இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும்போது நாயகி மேற்கொண்டு என்ன செய்வது என்று குழம்பி நிற்கும் போது, தன்னுடைய முன்னாள் அதிகாரியான ஆலோசியஸை போனில் தொடர்பு கொள்கிறாள். அவர் அவளுக்கு சில அறிவுரைகளை சொல்லி, வழக்கை வேறொரு கோணத்தில் இருந்து விசாரிக்க சொல்கிறார். (இந்த கட்டத்தை தான் The Writers Journey புத்தகத்தில் Christopher Vogler ‘Meeting the Mentor’ என்று குறிப்பிடுகிறார்)

ஆனால் இப்படி திடீரென்று திரைக்கதையின் இறுதியில் ஒரு பாத்திரத்தை அறிமுகப் படுத்தக் கூடாது. அது பார்வையாளர்களுக்கு நெருடலை ஏற்படுத்தும்.  இந்த படத்தில், ஆலோசியஸ் ஆரம்பத்திலிருந்தே வருகிறார். நாயகி அவருடன் அவ்வப்போது போனில் பேசுவதாக திரைக்கதை அமைத்திருப்பது சிறப்பு. திரைக்கதையின் இன்னொரு சிறப்பான மாற்றம், காட்சிகளை தொகுத்த விதம்.  நாவலில் இருக்கும் ஏராளமான சீக்வன்ஸை தவிர்த்துவிட்டு திரைக்கதையை நேர்கோட்டில் அமைத்திருக்கிறார்கள். மேலும், நாவலின் இறுதியில் குற்றவாளியை வேறு ஒரு கதாப்பத்திரம் கண்டுபிடிக்கிறது. அதுவும் திடீரென்று அதுவரை மூடி இருந்த மர்மத்திரை விலகுகிறது. படத்தில் அந்த சிக்கல் இல்லை. அதில் கொஞ்சம் கொஞ்சமாக நாயகியே குற்றவாளியை நெருங்குகிறாள். இதுவே திரைக்கதைக்கான உத்தி. ஆதவாது கதை அடுத்த கட்டத்திற்கு செல்வது என்பது யதேச்சையாக நிகழ்ந்ததாக இல்லாமல் ஹீரோவின் முயற்சியில் நிகழ்வதாக திரைக்கதை அமைத்தாலே நலம். 

ஒரு காட்சியில், கொலை நடந்த இடத்தை சுற்றி விலங்கின் முடிகள் கிடைக்கிறது. அது கரடியின் முடி போல் இருப்பதை கண்டுகொள்ளும் போலீசார், கரடிகள் வசிக்காத அந்த காட்டினுள் எப்படி கரடியின் முடி வந்தது என்று யோசிக்கின்றனர். அதற்கு அவர்களுக்கு கிட்டும் விடை ‘பாசகாவுன்’ (Basajuan).  பாசகாவுன் என்பது ஸ்பானிய காடுகளை காக்கும் கடவுள். பார்ப்பதற்கு பிரமாண்டமான தோற்றத்தோடு வலம் வரும் ஒரு நல்ல சக்தி. 

நாவல் முழுக்க இந்த பாசகாவுன் பற்றிய நம்பிக்கை வருகிறது. பலரும் அதை பற்றி பல கதைகள் சொல்கிறார்கள். பாசகாவுன் என்று ஒரு சக்தி இல்லை அது கரடி தான் என்று  நாயகி நம்புகிறாள். ஆனால் பாசகாவுன் அவ்வளவு எளிதாக யாருக்கும் காட்சி கொடுக்காது, அது நாயகிக்கு ‘நான் இருக்கிறேன்’ என்ற நம்பிக்கையை கொடுக்கவே காட்சி அளித்திருப்பதாக மற்றவர்கள் நம்புகிறார்கள். இறுதியில் இந்த நம்பிக்கை மிக அழகான ஆர்க்காக நாவலில் முடிகிறது. 

ஆனால் படத்தில்  பாசகாவுன்  பற்றிய குறிப்பு ஒரே ஒரு வசனமாக வந்துவிட்டு போகிறது. இந்த பாசகாவுனை பற்றிய குறிப்பை நீக்கி இருந்தாலும் படத்தில் எந்த இழப்பும் இருந்திருக்காது. நாம் முன் சொன்னது போல், நாவலில் இருக்கும் எல்லா முக்கிய கதைகளை படத்தில் வைத்துவிட வேண்டும் என்ற கட்டாயத்தில் இதை வைத்திருப்பதாக தோன்றுகிறது. The Invisble Guardian- ஒரு சீரியல் கில்லர் நாவலாக இருந்தாலும், இதன் கதை ஒருவகையில் நாயகியின் குடும்பத்தையே சுற்றியே நடக்கிறது என்பதே இந்த நாவலின் சிறப்பம்சம். நாவலை வாசிக்கும் போது, அதன் திரைப்பட வடிவம் இன்னும் சிறப்பாக வந்திருக்கலாம் என்று யோசிக்க வைக்கிறது. 

இதன் அடுத்தடுத்த பகுதிகளைப் பற்றி வரும் பகுதிகளில் பேசுவோம். 

தொடரும்…  

தொடர்புடைய கட்டுரைகள்

The Writer’s Journey- Christopher Vogler – சினிமா புத்தகங்கள்

சாக்ரட் கேம்ஸ்- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.