ஒரே திரைக்கதையில் ஏராளமான கிளைக்கதைகள் சொல்ல முற்படும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை ஸ்பார்ட்டகஸ் தொடரிலிருந்து புரிந்துக் கொள்ளலாம். Continue reading
Tag Archives: american television series
‘பிரேக்கிங் பேட்’ (Breaking Bad) சொல்லித்தரும் திரைக்கதை
“I am an extremely overqualified high school chemistry teacher. I have watched all of my colleagues and friends surpass me in every way imaginable. My wife is seven months pregnant with a baby we didn’t intend. My fifteen-year old son has cerebral palsy. And within eighteen months, I will be dead…”
பிரேக்கிங் பேட்டில் வரும் இந்த வசனம் தான் அந்த சீரியலின் சாராம்சம். வால்டர் ஒயிட் ஒரு வேதியியல் ஆசிரியர். காலையில் பள்ளியில் வேலை, மாலையில் ஒரு கார் வாஷ் கம்பெனியில் வேலை என அவர் வாழ்க்கை கழிகிறது. திடீரென்று ஒருநாள் அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரியவருகிறது. சில மாதங்களில் இறந்துவிடுவாய் என்று டாக்டர் சொல்ல, இறப்பதற்க்கு முன் குடும்பத்திற்க்கு சொத்து சேர்த்து வைக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார். தன் முன்னாள் மாணவன் ஜெஸ்சி பிங்க்மென் போதை பொருள் வியாபாரத்தில் நிறைய பணம் ஈட்டுவதை கண்டுகொள்கிறார். அவனுடன் இணைந்து, தன் வேதியியல் அறிவை பயன்படுத்தி மிகத் தூய்மையான ‘மெத்தம்பெட்டமைன்’ என்ற போதை பொருளை உருவாக்குகிறார். மார்க்கெட்டில் மவுசு கூடுகிறது. ஆனால் யாருக்குமே அதை யார் உருவாக்குகிறார்கள் என்று தெரியாது. அதனால் அவர்களாகவே வால்டருக்கு ‘ஐசென்பெர்க்’ என்று பெயர் சூட்டுகிறார்கள். அவன் ஆபத்தானவன், பயங்கரமானவன் என்று பேசிக்கொள்கிறார்கள். ஆனால் ஒயிட் தனக்கு எதுவும் தெரியாது என்பதுபோல் பகலில் பள்ளியில் பாடம் நடத்துகிறார். விடுமுறை நாட்களில் யாருக்கும் தெரியாமல் ஐசென்பெர்க் அவதாரம் எடுக்கிறார்.
ஒருபுறம் மற்ற போதை மருந்து வியாபாரிகள் ஐசென்பெர்க்கை கொலை செய்ய தேடுகிறார்கள். இன்னொரு புறம் யார் இந்த புதியவன் என்று போலீஸ் தேடுகிறது. போலீஸ் குழுவின் தலைவனான ஹாங் ஒயிட்டின் மைத்துனன். ஆனால் யாருக்குமே வால்டர் ஒயிட் என்ற சாதாரண ஆசிரியர் மீது சந்தேகம் வரவில்லை. இந்த ஈகோ ஒயிட்டை மேலும் மேலும் தப்பு செய்ய வைக்கிறது. எல்லோரும் தன்னை குறைவாக மதிப்பிடுகிறார்கள் என்று கருதும் ஒயிட், தன் கர்வத்தை நிலைநாட்ட மென்மேலும் தவறு செய்கிறார். ஏராளமான பணம், ஏராளமான எதிரிகள் என அவர் வாழ்க்கையே மாறுகிறது.
அறிவாளியான நல்லவானொருவன் காலத்தின் கட்டாயத்தால் தீய பாதையை தேர்ந்தெடுப்பதுதான் கதையின் ஒன்லைன். மிக ஸ்வாரஸ்யமான கமர்ஷியல் ஒன்லைன் இது. மிக ஆபத்தான ஒன்லைனும் கூட. ஏனெனில், ஒரு ஆசிரியர் போதை மருந்து தயார் செய்கிறார், கொலை செய்கிறார் என்று காண்பிப்பது நியாயமா என்ற கேள்வி எழலாம். ஆனால் கதாநாயகனின் அகப்போராட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த கேள்வியை உடைத்து கதையை நகர்த்தி செல்கிறார்கள் திரைக்கதை ஆசிரியர்கள். முதலில், தனக்கான அங்கீகாரம் கிடைக்காததால் கதாநாயகன் தவறு செய்கிறான். போதிய அளவு பணம் சம்பாத்தித்துவிட்டு போதைப் பொருள் தொழிலிலிருந்து ஒதுங்கிவிட வேண்டுமென்று முடிவு செய்கிறான். நிழல் உலகில் அவனுக்கு வரவேற்பு கிடைக்காததால் அவன் ஈகோ அதிகமாகிறது. அதனால் ஆக்ரோஷமாக தொழில் செய்கிறான். பின் தன்னை உதாசீன படுத்தும் சமூகத்திடம், தன்னாலும் நிறைய சம்பாத்திக்க முடியும் என்று நிரூபிக்க மென்மேலும் தவறு செய்கிறான். ஒரு கட்டத்தில் அவன் ஈகோ அவன் அறிவை ஆக்கிரமித்துக்கொள்கிறது. புலி வால் பிடித்த கதையாக நிழல் உலகில் வெகு தூரம் பயணிக்கிறான். எதிரிகள் அதிகமாகிவிடுகிறார்கள். தொடர்ந்து மெத்தம்பெட்டமைன்’ காய்ச்சினால்தால் உயிர்வாழ முடியும் என்ற நிலை உருவாகிறது. அதனால் ஒயிட் கதாபாத்திரத்தின் மீது பரிதாபம் தான் ஏற்ப்படுகிறதே ஒழிய, அவன் செய்வது சரியா தவறா என்ற கேள்வி எழவில்லை.
மொத்தம் ஐந்து சீஸன் 62 எபிசோட்கள் கொண்ட இந்த தொடரில் பல இயக்குனர்கள் பல திரைக்கதை ஆசிரியர்கள் பணியாற்றி இருக்கிறார்கள். ப்ரிசன் பிரேக் கட்டுரையில் குறிப்பிட்டது போல், ஆங்கில தொலைக்காட்சி தொடர்கள் திரைக்கதை எழுதும் கலையை புரிந்து கொள்ள பெரிதும் உதவுகின்றன. இது பெரும்பாலும் character driven ஸ்டோரி. கதை முழுக்க வால்டர் ஒயிட் மற்றும் அவரது கூட்டாளி ஜெஸ்ஸி ஆகியோரின் பார்வையிலேயே நகரும். அவர்களுக்குள் நிகழும் அகப்போராட்டத்தை மையப் படுத்தி, அவர்களை சுற்றி உள்ள உலகம் எப்படி மாறிக் கொண்டே வருகிறது என்று கதையை நகர்த்தியிருப்பார்கள். (புளிய மரத்தின் கதையில் ஒரு புளிய மரத்தை வைத்துகிக்கொண்டு அந்த காலகட்டத்தின் மாற்றங்களை சொல்லியிருப்பதைப் போல). அந்த பார்வை எங்கேயும் உடைபடாது. மேலும் இரண்டு கதாபாத்திரங்களுக்கும், தேவையான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். எனினும் கதை வால்ட்டர் ஒயிட்டை பற்றியதுதான். ஜெஸ்சியின் வாழ்க்கையில் அவர் நுழைந்ததும் அவரது வாழ்க்கையும் ஜெஸ்ஸியின் வாழ்க்கையும் எப்படி மாறுகிறது என்பதே திரைக்கதை. இங்கே இந்த பார்வை (Point of view) தான் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். சில இரண்டு நண்பர்களை பற்றிய தமிழ் படங்களில், கதை யாரை பற்றியது என்ற தெளிவு இல்லாமல் படம் நகர்வதை கண்டிருப்போம். ஏனெனில் இரண்டு வெவ்வேறு நபர்களின் உலகங்களையும் காட்சிகளில் திணித்திருப்பார்கள். அப்படி செய்யும் போது Point of view அடிபட்டு போய்விடும். ஒரு கதாபாத்திரம் இன்னொரு கதாபாத்திரத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கமும் பதியாமல் போய்விடும். அதை எப்படி சரியாக சொல்வது என்பதை இக்கதையில் இருந்து கற்றுக்கொள்ளலாம்.
Fly என்ற ஒரு எபிசோடை, ஒரு லேபிற்க்குள் வெறும் இரண்டு நபர்கள், ஒரு பறக்கும் பூச்சியை மட்டும் வைத்தே நகர்த்தியிருப்பார்கள்., பட்ஜெட் அதிகாமாகிவிட்டதால், பட்ஜட்டை குறைக்க ஒரு லேப்பிற்குள்ளேயே முழு எபிசொடையும் உருவாக்கினார்களாம். எப்படி ஸ்வாரஸ்யமாக, மூலக் கதையிலிருந்து பிறழாமல் சிங்கிள் செட்டிங் சப்ஜெக்ட் எழுதுவது என்பதற்கு இந்த எபிசோட் ஒரு சிறந்த உதாரணம்.
ஒயிட்டின் அகப்போராட்டம் ஒருபுறம் இருக்க, புற உலகிலும் அவர் போராட வேண்டி இருக்கிறது. ஐசென்பெர்க் காய்ச்சும் மெத்தம்பெட்டமைன் மார்க்கெட்டில் அதிகம் விற்ப்பதால், மற்ற போதை பொருள் வியாபாரிகள் அவரை கொல்ல துரத்துகிறார்கள். இங்கே கதை plot driven-ஆக மாறுகிறது. மாஃபியாகளிடமிருந்து தானும் தப்பிக்க வேண்டும், தன் குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும். இங்கேயும் அவர் அறிவுதான் அவருக்கு கைகொடுக்கிறது. இது போன்ற external conflicts திரைக்கதையின் வேகத்தை கூட்ட உதவும்.
பிரேக்கிங் பேட்டில் கவனிக்கப் படவேண்டிய இன்னொரு விஷயம் Character Transformation. ஆரம்பத்தில் தன் மனைவியிடம், சூழ்நிலை காரணமாக தவறான பாதையில் பயணித்துவிட்டதாக சொல்லும் கதாநாயகன், இறுதியில் தான் விரும்பியே அந்த பாதையை தேர்ந்தெடுத்ததாக கர்வத்தோடு சொல்கிறான். ஒரு கதாபாத்திரம் ஒரு விஷயத்தை செய்யாமல் தவிர்க்கிறதென்றால், அதற்கான காரணம் என்ன என்று சொல்ல வேண்டும். ஒரு செயலை செய்கிறதென்றால் அதற்கான காரணத்தையும் சொல்ல வேண்டும். முன் செய்ய மறுத்த விஷயத்தை இப்போது செய்கிறது என்றால் அதையும் விளக்க வேண்டும். இங்கே ஒயிட் கதாபாத்திரத்தின் மாற்றத்திற்க்கான காரணத்தை விளக்கி இருப்பதுதான் திரைக்கதையின் பலம்.
மேக்கிங்கிலும் தனித்துவமான சீரியல் இது. காட்சிகள் முழுக்க ஏராளமான குறியீடுகள் உண்டு. கதாபாத்திரங்களின் குணங்களையும் transformation-ஐயும் குறிக்கும் வகையில் வண்ணங்களை பயன்படுத்தி இருப்பார்கள். தஸ்தாவெஸ்கி, காஃப்கா என பலரின் தத்துவங்களை தொட்டுவிட்டு வரும் இந்த சீரியல், தூக்கத்தைப் பிடிங்கிக்கொண்டு அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஆங்கில சீரியல்களில் மிகவும் முக்கியமானது.