ஸ்பார்ட்டகஸ் சொல்லித்தரும் திரைக்கதை


ஒரே திரைக்கதையில் ஏராளமான கிளைக்கதைகள் சொல்ல முற்படும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை ஸ்பார்ட்டகஸ் தொடரிலிருந்து புரிந்துக் கொள்ளலாம்.

Spartacus; Episode

ஸ்பார்ட்டகஸ் ஒரு அடிமை க்ளாடியேட்டர். ஒரு கட்டத்தில் ரோம் அரசாங்கத்திற்கு எதிராக அடிமைகளை திரட்டி போர் புரிகிறான். இது வரலாறு. இதன் பின்னணியில் ஏராளமான நிஜ மற்றும் கற்பனைக் கிளைக் கதைகளை வைத்து தொடரை நகர்த்தி இருப்பார்கள். ஒரு திரைக்கதையில் எத்தனை கிளைக்கதைகள் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அந்த எல்லாக் கதைகளுக்கும் ஒரு இணைப்புப்புள்ளி இருக்கவேண்டும். அந்த இணைப்புப்புள்ளி வெளிப்படையாகவும் இருக்கலாம். கதையின் அடி நாதமாகவும் இருக்கலாம்.

நிறைய கிளைக்கதைகள் வைக்கும் போது narration, multi layered narration-ஆக உருவெடுக்கும். மல்டி லேயர்ட் நர்ரேசனில், வெவ்வேறு பின்னணியை சேர்ந்த மனிதர்களை பற்றிய கதைகள் ஒரு புள்ளியில் இணைவது ஒரு வகை. ஆயுத எழுத்து, டேவிட் போன்ற படங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம். கதையின் ஆரம்பத்திலிருந்தே பல கதைகள் ஒன்றோடு ஒன்று நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புபட்டு இறுதியில் ஒரு புள்ளியில் நிறைவை அடையும் கதைகள் இன்னொரு வகை. Magnolia, Shortcuts போன்ற படங்கள் இதற்கு உதராணம்.  ஆனால் இந்தவகை திரைக்கதையை நம் சினிமாவில் பார்ப்பது அரிது. சுவாரஸ்யமான கிளைக்கதைகள் எழுத இந்த இரண்டாம் வகை narration technique பெரிதும் உதவும்.  (உடையார் போன்ற நாவல்கள் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.)

இங்கே கிளைக்கதை என்பதை வெறும் பேக் ஸ்டோரி என்று அர்த்தம் கொள்ள வேண்டாம். பேக் ஸ்டோரி எல்லா வகையான கதைகளிலும் வரும். பிளாஷ் பேக்கில் என்ன நடந்தது என்பதை பேக் ஸ்டோரி மூலம் சொல்லிடலாம். அனால் கிளை கதைகள் என்பது மூலக் கதையிடமிருந்து விரிந்து, மூலக் கதைக்கு வலு சேர்க்கும் விதத்தில் பயணிக்க வேண்டும். மூலக் கதையிலிருந்து கிளைக் கதையை எவ்வளவு விலக்கி எடுத்துச் சென்றாலும், அதற்கு ஒரு காரணம் இருக்கவேண்டும். இறுதியில் அந்த கிளைக்கதை மூலக் கதையோடு இணைய வேண்டும். அரவான் படத்தில் ஏரளாமான கிளைக் கதைகளை பார்க்கலாம். ஆனால் அந்த கதைகள் வெறும் நேரத்தை நிரப்ப மட்டுமே பயன்பட்டிருக்கும். மூலக் கதைக்கு வலு சேர்க்காது. கிளைக்கதைகள் இல்லாமலேயே ஒரு கருவை எடுத்துச் செல்ல முடியுமெனில் அங்கே கிளைக்கதைகள் வைப்பது அபத்தம்.

இங்கே ஸ்பார்ட்டகஸ் தொடரிலும் நிறைய கிளைக்கதைகள் உண்டு. ஸ்பார்ட்டகசின் நண்பர்களான கேனிக்கஸ் பற்றி, கிரிக்ஸஸ் பற்றி இன்னும் பலரைப் பற்றி கதைகள் உண்டு. ஆனால் எல்லாக் கதைகளும் மிகக் கட்டுக்கோப்பாக சொல்லப் பட்டிருக்கும். அதுவே திரைக்கதையின் பலம். ஒரே கதையில் நாம் மூன்று கிளைக்கதைகள் சொல்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். மூன்றும் சம நேரம் அமைந்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு கிளைக்கதையை முப்பது நிமிடம் சொல்லலாம். இன்னொரு கிளைக்கதை வெறும் மூன்று நிமிடங்கள் மட்டும் சொல்லலாம். கதையின் தேவையே இவற்றை நிர்ணயிக்க வேண்டும்.

 மேலும் தொலைக்காட்சி தொடர்களின் திரைக்கதையை எபிசொட் எபிசோடாக பிரித்து எழுதுவதால், அதன் உள்ளடக்கத்தை சில external factors நிர்ணயம் செய்கின்றன. அங்கே ஒரு நடிகர் பத்து எபிசோட் மட்டும் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் எனில் திடிரென்று பதினோராவது எபிசோட் உருவானால் அதில் நடிக்க மாட்டார். நம்மூர் போல இவருக்கு பதில்  இவர் என்று போடமுடியாது. அப்போது அவர் இல்லாமல் வேறு எப்படி திரைக்கதையை நகர்த்துவது என்று யோசிக்க வேண்டும். பெரும்பாலும் பல தொடர்களில் இப்படி நடந்திருக்கிறது. அதனால் இதுபோன்ற தொலைக்காட்சி தொடர்களை பார்த்து அது உருவான பின்னணியை படிக்கும்போது திரைக்கதை உத்திகளை எளிதாக புரிந்துக்கொள்ளலாம்.

 ஸ்பார்ட்டகஸில் வரும் கதாபாத்திரங்கள் மிக ஆழமாக எழுதப்பட்டவை. ஒவ்வொருவருக்கும் ஆழமான  பேக் ஸ்டோரி இருக்கின்றன. இதில், அசூர் என்றொரு ஸ்ட்ராங்கான கதாபாத்திரம் வருகிறது.

Ashur

அசூர், ப்ரிசன் ப்ரேக் தொடரில் வரும் டீ-பேக் கதாபாத்திரதிற்கு இணையான பாத்திரம். எவ்வளவு அடிபட்டாலும் மீண்டும் மீண்டும் குள்ள நரி வேலை செய்யும் பாத்திரம். வித்தியாசமான, ஸ்ட்ராங்கான கதாப்பத்திரங்களை உருவாக்குவது திரைக்கதைக்கு பெரிய பலம். உண்மையில் ஸ்ட்ராங்கான கதாப்பாத்திரம் இருப்பின், கதையே இல்லாமல் திரைக்கதையை நகர்த்த முடியும். அந்த கதாபாத்திரத்தின் செய்கைகள், அதனால் நிகழும் மாற்றங்கள் ஆகியவற்றைக் கொண்டு கதையை நகர்த்தலாம். Taxi driver கதையை எடுத்துக் கொண்டால், அது முழுக்க முழுக்க character driven கதை. ஒரு விசித்திரமான மனிதனுக்கு நிகழும் மனமாற்றமே அந்த கதை. இது போல் இன்னொரு முக்கிய விஷயம் character Transformation. இந்த character Transformation என்ற ஒற்றை உத்தியை வைத்துக் கொண்டு ஏராளமான திரைக்கதைகளை எழுதலாம். ஸ்பார்ட்டகஸ் முதலில் வெறும் அடிமையாக மட்டும் இருக்கிறான். பின் புரட்சி வீரனாக மாறுகிறான். கேனிக்கஸ் எதை பற்றியும் அலட்டிக் கொள்ளாமல் திரிகிறான். கிரிக்ஸஸ் சுயனலமாக வாழ்கிறான். இவர்களுக்கு சண்டை பயிற்சி அளிக்கும் இன்னொரு அடிமையான ஒனேமஸ் தன்னுடைய எஜமானுக்கு கட்டுப்பட்டு வாழ்கிறான். ஒரு கட்டத்தில் இவர்கள் எல்லாமே தங்களுடைய எஜமானுக்கு எதிராக, ரோம் அரசிற்கு எதிராக மாறுகிறார்கள். அவர்கள் ஏன் மாறுகிறார்கள் என்பதே திரைக்கதை. இதுவே இங்கே கவனிக்கப்பட வேண்டிய விஷயம். மேக்கிங்கும் ஸ்பார்ட்டகஷில் மிக நிறைவாக அமைந்திருக்கும். திரையில் சண்டைகளுக்கோ ரத்தத்திற்கோ பஞ்சமே இருக்காது. திரைக்கதை தாண்டி camera angles பற்றியும் இந்த தொடரிலிருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம்.



Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.