பனிமனிதன் – ஜெயமோகன்-சிறார் நாவல் வரிசை 1


கடந்த ஆண்டு வாசித்ததில் மிக நல்லதொரு அனுபவத்தை தந்த புத்தகம் இது.  பல ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரி காலத்தில் தி நகரில் ஒரு கடையில் பனிமனிதனின் அட்டைப் படம் ஈர்த்தது. பெரிய பனி குரங்கைப் போன்ற ஒரு உருவத்தை பார்த்ததுமே மனதினுள்ளிருந்த குழந்தை வெளியே வந்திருக்க வேண்டும். வாங்கி வந்த அன்றே முழுவதுமாக படித்து முடித்த நியாபகம். பின்னர் குஜராத்தில் ஒரு தமிழ் நண்பரிடம் அந்த புத்த்தகத்தின் சாராம்சத்தை சொன்னேன். குறிப்பாக அதில் வண்டுகள் எல்லாம் கூட்டு நனவிலி மனம் கொண்டவை என்று வரும் கருத்து மிக ஆழமாக பாதித்திருந்தது.  அவர் வாசிக்க ஆர்வம் கொண்டிருக்க, அந்த புத்தகத்தை அவரிடம் கொடுத்துவிட்டேன். அந்த கதைமட்டும் மனதோடே இருந்தது. பாண்டியனின் சாகச அனுபவங்கள் என்ற அளவில் நினைவில் நின்ற கதையை மீண்டும் வாசிக்க வாய்ப்பு கிட்டவில்லை.  

கடந்த ஆண்டு இளைய மகளின் முதல் பிறந்தநாளுக்கு பிள்ளைகளுக்கு பரிசளிப்பதற்காக சில பிரதிகள் வாங்கி இருந்தேன். பெரியவள் அந்த கதையை கேட்க ஆர்வம் கொண்டிருக்க, ஆண்டு இறுதியில் நானும் ஐந்து வயது மகளும் அந்த கதையை வாசிக்கத் தொடங்கினோம். இதில் இல்லாளும் இணைந்துகொள்ள, தினமும் இரவு ஒரு அத்தியாயமாக வாசித்தோம். மறுநாள் முந்தைய நாள் அத்தியாயத்தை மகள் நினைவு கூர்ந்து சொல்ல வேண்டும். இது அவளுக்கு நல்ல பயிற்சியாக இருந்தது. ஒரு கட்டத்தில் அவள் எல்லாவற்றையும் துல்லியமாக நினைவு வைத்து சொன்ன போது தான் இந்த கதை குழந்தைகளை எளிதாக உள்ளிழுத்த்துக் கொள்கிறது என்பதை உணர்ந்தேன். அந்த எளிமையே இதன் வெற்றி. 

ராணுவ வீரர் பாண்டியன், டாக்டர் திவாகர் மற்றும் சிறுவன் கிம் மூவரும் பனி மனிதனை தேடி புறப்படுகிறார்கள். அவர்களின் சாகச பயணத்தில் பலதடங்கல்கள் வருகின்றன. படிப்பினைகள் கிடைக்கின்றன. இறுதியில் அவர்கள் எதை கண்டடைத்தார்கள் என்பதே மீதி கதை. மிக எளிய மொழியில் பெரிய விஷயங்களை பற்றி அழகாக பேசியிருக்கும் கதை இது. குறிப்பாக நோக்கத்தில் இருந்து பிறழாமல், இடையே மனதை திசைதிருப்ப நிகழும் விஷயங்களில் மயங்காமல் இலக்கை நோக்கி பயணிக்க வேண்டியதன் அவசியத்தை சொல்லும் கதை. சிறியவர்களுக்கு மட்டுமில்லை, பெரியவர்களுக்கும் இந்த கதை சொல்லும் முக்கிய செய்தி அதுதான் என்று நினைக்கிறேன். 

சொல்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் ஒருங்கே சந்தோசம் தரக்கூடிய கதையாக பனிமனிதன் இருக்கிறது. சிறார் நாவல் என்று வகைப்படுத்தினாலும், இது சிறுவர்களுக்கான கதை மட்டும் அல்ல என்பதே உண்மை. 

டிராகன், உள்ளங்கை அளவு யானை, மாமதம் என பல சுவாரஸ்ய கற்பனை மிருகங்களை ஜெயமோகன் உலவ விட்டிருக்கிறார். இதையெல்லாம் கேட்ட மகள், ‘அப்பா இது படமா வருமா!’ என்றாள். அப்போது தான் இந்த கதை எந்தகாலத்திற்கும் பொருந்தும் கருவையும் காட்சிகளையும் கொண்டிருப்பதை உணர்ந்தேன். படமாக வந்தால் மிகச் சிறப்பாகவே இருக்கும். 



Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.