தட்பம் தவிர் அத்தியாயம் 8 பகுதி 2


***

சானடோரியம் ப்ரிட்ஜை ஒட்டி அமைந்திருந்த தனியார் வங்கி ஏடிஎம்-யில் பணம் எடுத்துவிட்டு வெளியே வந்தார் ரங்கதுரை. வெளியே அரைப்போதையில் அமர்ந்திருந்த ஏடிஎம் காவலாளி காக்கையன் ரங்கதுரையைப் பார்த்து வணக்கம் வைத்தான். ரங்கதுரை சிறு புன்னகை புரிந்து விட்டு நகர, அவன், “சார்” என்றான்.

துரை அவனிடம் ஒரு பத்துரூபாயை நீட்ட அவன் சந்தோஷமாகப் பெற்றுக்கொண்டு, “சாரு மனைவி மக்களோட ரொம்ப நாள் வாழணும்” என்று வாழ்த்தினான்.

“என் பொண்டாட்டி செத்து பலவருஷம் ஆகுதுயா” என்று சொல்லி விட்டு செர்விஸ் ரோடில் இறங்கி நடந்தார் துரை. வேகமாக வந்த போலீஸ் பேட்ரோல் கார் ஒன்று அவரை உரசிக் கொண்டு போக, அவர் ஸ்தம்பித்து நின்றார்.

“எப்டி போறானுங்க… எதிர்த்துக் கேட்டா உள்ள வச்சு குத்துவானுங்க…” என்று அரைப்போதையில் தன் கருத்தைப் பதிவு செய்துவிட்டு, தன்னிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்று எண்ணிக் கொண்டிருந்தான் காக்கையன். அடுத்த ரவுண்டிற்கு தயாராகிக் கொண்டிருந்தான் அவன்.

திடீரென்று அங்கே ஒரு மாருதி ஸ்விஃப்ட் வந்து நின்றது. ஜன்னல் கண்ணாடி இறங்கியது.

“ஹலோ சார்” காரினுள்ளிருந்து கேட்டது ஒரு ஆண் குரல்.

சிறிது நேரம் உற்று நோக்கிய ரங்கதுரை, “என்ன… ஆளே மாறிட்ட…?” என்று ஆச்சர்யமாகக் கேட்டார்.

“உள்ள ஏறுங்க சார்… பேசிக்கிட்டே போவோம்”

கார் பச்சைமலை அடிவாரத்தில் வந்து நின்றது. மணி காலை 11.30.

“நந்தன பார்த்து எவ்ளோ நாளாச்சு! ஆஸ்ட்ரேலியால இருந்து எப்ப வந்தான்…?” ரங்கதுரை ஆர்வமாக வினவினார்.

“லாஸ்ட் வீக்” அவன் அதிகம் பேச விரும்பாதவன். எனினும் இவருக்குப் பதிலளித்தாக வேண்டுமே என்பதற்காகவே பேசினான்.

“இங்க என்ன பண்றான்…?”

“அமைதியான இடமாச்சே! ரிலாக்சா பேசலாம்னு வரச் சொன்னார். வழியில அன்எக்ஸ்பெக்டடா உங்களப் பாத்தேன். உங்களப் பாத்தா சந்தோஷப்படுவார்” என்று சொல்லிவிட்டு தன் செல்ஃபோனை எடுத்து யாருக்கோ கால் செய்வது போல் பாசாங்கு செய்தான். பின்,

“நீங்க இங்கயே இருங்க… அவர் மொபைல் நாட் ரீச்சபிள்னு வருது. நான் போய் அவரக் கூட்டிட்டு வந்துறேன்…”

“ஏன் நான் மலை மேல வரக்கூடாதா?“

“சார் முன்னூறு படிக்கு மேல் ஏறணும்… வயசாயிருச்சு இல்ல…”

ரங்கதுரைக்குக் கோபம் வந்தது. “ஓய். எனக்கு என்ன அப்டி வயசாயிருச்சு… அவனவன் இந்த வயசுல கல்யாணமே பண்ணிக்கிறான்…”

இருவரும் மலையின் உச்சியை அடைந்தனர். மணி பன்னிரண்டு. அங்கே ஒரு மகாயுகக்காளி கோவில் இருந்தது. காளி உக்கிரமாகக் காட்சி அளித்தாள். இடம் வெறிச்சோடி இருந்தது.

“நந்தன் எங்க?”

“இங்கதான் சார் எங்கயாவது ஒதுங்கியிருப்பாரு… கொஞ்சம் இருங்க…” அவன் மேல் இன்னும் துரைக்கு சந்தேகம் வரவில்லை.

“சார்.. பிரகாஷ் சாரப் பத்தி கேள்விப்பட்டதும் ரொம்ப கஷ்டமாக ஆகிருச்சு…” அவன் சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு இதைச் சொன்னான்.

“ஆமா ஆமா… முன்னாடிநாள் தான்யா அவரப் பார்த்தேன். ரொம்ப நல்ல மனுஷன்”

“யாரு கொன்னுருப்பா…?”

துரை தெரியாது என்பது போல் தலையசைத்தார்.

“கணேஷும் செத்துட்டாராம்.. கொன்னுட்டாங்க…”

துரை யார் கணேஷ் என்பது போல் ஆச்சர்யமாகப் பார்த்தார்.

“அதான் சார்… மெட்டல் ஃபார்மிங்க் எக்ஸ்பெர்ட் கணேஷ். கோயம்புத்தூர்காரு. யாரோ அநியாயமா கொன்னுட்டாங்க”

துரைக்கு உண்மை புலப்பட ஆரம்பித்தது. உடல் வேர்த்தது.

“நந்தன் எங்க…?” அவனிடமிருந்து பதில் வரவில்லை.

“நந்தன் எங்கடா…?” மீண்டும் கத்தினார்.

“செஞ்ச தப்புக்கு யாரா இருந்தாலும் தண்டனை அனுபவிக்கணும் சார்…“ என்றவாறே அவன் சட்டைப்பைக்குள் இருந்து கூர்மையான கத்தியை எடுத்தான். ரங்கதுரைக்கு வயதாகி இருந்தாலும், உடம்பில் பலம் இருந்தது. அவனிடம் முடிந்தவரை போராடினார். அவன் முடியை பிடித்து இழுத்தார். அவனைப் பிடித்துத் தள்ள முயன்றார். இறுதியில் அவன் தான் வெற்றிபெற்றான். அவன், அவரது நெஞ்சில் மூன்று என்று எழுதிவிட்டு நகர்ந்தான். அவர் உடம்பில் இன்னும் உயிர் ஒட்டிக் கொண்டிருந்தது.

“பேதை பெண்ணை வடிவுகண்டு காமுகனவன் நத்தினால்

விடுவனோ அவனை முன்னை வெட்ட வேண்டும் என்பனே…”

அவர் முன் நின்று அவன் உரக்கப் பாடினான். அவர் தரையில் துடித்துக் கொண்டிருந்தார். அவர் கையில் கொத்தாக முடி சிக்கியிருந்தது. அவன் மீண்டும் மீண்டும் அதே வரிகளைப் பாடிக் கொண்டே அங்கிருந்து கீழே இறங்கினான். இப்போது காளியின் முகத்தில் அமைதி படர்ந்திருந்தது.

***

நாவலை வாங்க இங்கே கிளிக் செய்யவும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.