மாற்றான்

சில படங்கள் முதல் காட்சியிலிருந்தே மெதுவாக நகர்ந்து, இது நல்லப் படம்தானா என்பன போன்ற சந்தேங்களை ஏற்படுத்தி, இறுதியில் சிகரம் வைத்தாற்போல் அருமையாக நிறைவுபெற்று, படமென்றால் இதுதான் படமென்று நம்மை சொல்லச் செய்து, நம்மை எழுந்து நின்று கைத்தட்ட வைக்கும்.

சில படங்கள் தொடக்கம் முதலே நல்லப் படம் போல காட்சியளித்து, தனக்கே உரித்தான ஜிகுணா வேலைகளையெல்லாம் செய்துக் கொண்டு, இறுதியில் ‘இதெல்லாம் ஒரு படமா’ என்று எண்ண வைக்கும். ‘மாற்றான்’ இதில் இரண்டாவது வகை.

ஓட்டிப் பிறந்த இரட்டையர்களைப் பற்றி படம் எடுக்க முயற்ச்சித்தமைக்கும், (ஆனால் அந்த முயற்சி மன்னைகவ்வியுள்ளது.) அதற்காக இந்த ஹீரோ மெனக்கெட்டமைக்கும் பாராட்டுக்கள்…

ஆனால் ஓட்டிப் பிறந்த இரட்டையர்கள் என்ற கதை கருவிற்கும், இந்தக் கதை களத்திற்கும் சம்பந்தமேயில்லை. படத்தின் கதை என்னவோ typical தமிழ் டபுள் ஆக்சன் மசாலா படத்தின் கதைதான். ஆனால் டபுள் ஆக்சன் படமாக எடுத்தால் ‘கெத்’ இருக்காது என்பதற்காக, வித்தியாசமான முயற்சி செய்கிறேன் பேர்வழி என்று ஒரு கேலி சித்திரத்தை படைத்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் டபுள் ஆக்சன் கதைகள் பின்வரும் மாதிரிதான் இருக்கும். ஒரு ஹீரோ சாது, இன்னொருவர்  முரடன். வில்லனை எதிர்த்து முதலில் ஒருவர் போராடுவார், பின் தவிர்க்கமுடியாத ஒரு தருணத்தில் அந்த கடமை இரண்டாமானவரை வந்து சேரும். அந்த இரண்டு ஹீரோக்களையும் ஒன்றாக ஒரே உடம்பில் இணைத்து, ‘conjoined twins’ என்ற போர்வையில்  எடுக்கப்பட்ட படமே மாற்றான்.

அந்தக் காலத்தில் டபுள் ஆக்சன் படங்கள் எடுப்பதற்கென்றே ஒரு டெக்னிக் இருந்தது. கேமராவை நடுவில் வைத்து, வலது புறத்தில் ஹீரோவை நடிக்க வைத்து படம்பிடித்து , பின் அதே ஹீரோவை இடது புறத்தில் நடிக்க வைத்து படம்பிடித்து இறுதியில் இரண்டையும் இணைப்பார்கள். அதனால்தான் டபுள் ஆக்சன் கதாப்பாத்திரங்கள் தோன்றும் காட்சிகளில், இருவருக்கும் நடுவில் ஒரு தூணோ, இல்லை ஏதோ ஒரு symmetric பொருளோ இருக்கும். அந்த symmetric பொருளை axis-ஆக வைத்துக் கொண்டு, ஒரே ஹீரோ இரண்டு புறத்திலும் நடித்திருப்பார். என்ன ஆனாலும் கதாப்பாத்திரங்கள் அந்த axis-ஐ தாண்டக் கூடாது..

பின் இந்தக் கோட்பாடுகளையெல்லாம் தகர்த்து, பல டெக்னாலஜிகளை பயன்படுத்தி, மிகவும் திறமையாக எடுக்கப்பெற்ற டபுள் அக்சன் படமே ‘ஜீன்ஸ்’. இரட்டையர்களை படம் முழுக்க எந்த ஒரு பிசிரும் இல்லாமல் உலவ விட்டிருப்பார் ஷங்கர். அதன் பின் நிறைய டபுள் அக்சன், ட்ரிபிள் அக்சன் தொடங்கி பத்து அக்சன் வரை படங்கள் எடுத்தாகி விட்டது. இதை இன்னும் ஒரு படி மேலே போய் ‘conjoined twins’ படம் எடுக்கலாம் என்று சிந்தித்துள்ளனர். ஆனால் அதை ஒழுங்காக எடுக்கவில்லை…

பல பொய்களை திரும்ப சொல்லி உண்மையாக முயற்சிக்கும், தமிழ் சினிமாவில் ‘முதல் முயற்சி முதல் முயற்சி’ என்று அரைக் கூவல் விடுத்து படங்களை promote செய்வது ஒரு தந்திரம்.மும்பை எக்ஸ்பிரஸ் ‘முதல் high definition படம்’ என்று பிரகடனம் செய்தார்கள். ஆனால் அதற்க்கு முன்பே ‘வானம் வசப்படும்’ என்ற படம் high definition-யில் எடுக்கப்பட்டுவிட்டது.

அதுபோல் தான் இதுவும். இந்தியாவின் முதல் ‘conjoined twins’ படம் என்றார்கள். ஆனால் இரண்டு மாதத்திற்கு முன்பு ‘இருவன்’ என்ற ஒரு படம் வெளிவந்தது. அதுவும் ஓட்டிப் பிறந்த இரட்டையர்களைப் பற்றியக் கதை. பின், ‘performance capture’  டெக்னிக் பயன்படுத்தி எடுக்கப்படும் முதல் இந்தியப் படம் ‘மாற்றான்’ என்றார்கள். ஆனால் இதில் பரிதாபத்திற்குரிய விடயம் என்னவெனில், அந்த  ‘Performance capture’  போன்ற எந்த டெக்னிக்கும் படத்திற்கு  கைகொடுக்கவில்லை என்பதுதான். இரட்டையர்கள் வரும் காட்சிகளில் படத்தின் கிராபிக்ஸ் மிகவும் கேவலமாக உள்ளது. ஏதோ ஒரு ஹீரோ இன்னொரு பொம்மை ஹீரோவை தூக்கிக் கொண்டு நடப்பது போல் பல இடங்களில் தோன்றும் .இது ஒரு லோ பட்ஜெட் படமென்றால் அலட்டிக்கொள்ளவேண்டியதில்லை. ஆனால் பல கோடிகளை இறைத்து குப்பைகளை எடுக்கும் போது தான் யோசிக்க வேண்டியிருக்கிறது, இன்னும் எத்தனை நாள் தான் ஆடியன்ஸை மாக்கான் ஆக்குவார்கள் என்று…

ஒரு ஆறுதல், இவர்கள் எங்கேயும் science fiction படம், medical fiction படம் என்று பிரகடனப் படுத்தவில்லை. அப்படி செய்திருந்தால் கேலிக் கூத்தாகி இருக்கும்.

‘Conjoined twins’  எப்பவும் பலவீனமாகத்தான் இருப்பார்கள், அவர்கள் எப்படி பறந்து பறந்து சண்டைப் போடுகிறார்கள் என்பன போன்ற ஆராய்சிகள் செய்ய வேண்டிய அவசியமில்லை. அந்த அளவிற்கு இந்த படம் ஒன்றும் சிறந்த படமில்லை. ஆனால் இந்தப் படத்தின் பின்னணியை மட்டும் பார்ப்போம்…

தமிழ் படைப்புலகில் மட்டுமே இலக்கியத்திற்கும் சினிமாவிற்கும் இருக்கும் இடைவெளி குறைய மறுக்கிறது. இலக்கியவாதிகள் சினிமாவிற்கு வந்தால் இலக்கியத்தை மறந்துவிடுகிறார்கள். இதற்கிடையில் பாக்கெட் நாவலாசிரியர்கள் பாக்கெட் நாவல்களைப்போல் மூன்றாம் தரத்தில் சினிமாவிற்கு கதை எழுதுகிறார்கள்.
‘சுபா’ என்ற இந்த இரட்டை எழுத்தாளர்கள் திறமைசாலிகளே. இந்தப் படத்திலும் அவர்களின் வசனம் தான் முதல் பகுதிக்கு சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது. ஆனால் எந்தப் படைப்பாளியாக இருந்தாலும் தன் அறிவை update செய்துக் கொள்ள வேண்டும். “Learn, Unlearn, Update “  என்பது மிக முக்கியம்.

பாக்கெட் நாவல்கள் எழுதுபவர்களிலேயே தன் அறிவை அப்டேட் செய்து வைத்திருப்பவர் இந்திரா சௌந்தரராஜன் மட்டுமே. (அவர் வெறும் பாக்கெட் நாவலாசிரியர் அன்று. திறமையான எழுத்தாளர். அதற்கு அவரின்  படைப்புகள் சான்று. எனினும் பாக்கெட் நாவல் உலகத்திலேயே நின்றுவிட்டார்) அந்நியனில் சொல்லப்பட schizophrenia-வை அவர் தொன்னூறுகளிலேயே ‘விடாது கருப்பு’ என்னும் கதையில் சொல்லிவிட்டார். அதில் கருப்பு சாமி தண்டனை கொடுக்கும், அந்நியனில் அந்நியன் தண்டனைக் கொடுப்பான் .அவ்வளவுதான் தான் வித்தியாசம்.

ஆனால் மற்ற பாக்கெட் நாவலாசிரியர்கள அனைவரும் புருடா விட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர். ‘மூடாத கல்லறை’, ‘சேராத நிலவு’ ‘மூன்றாவது குறுக்கு தெரு’ என்பன போன்ற பேர்களில் ஏதேதோ எழுதிக் குவிக்கிறார்கள். எனக்கு பிடித்த ராஜேஷ் குமார், எழுதிய ஒரு கதையில் , ஒரு கதாநாயகன் பாலைவனத்தில் தரை இறங்கிய ஒரு விமானத்தினுள் தனியாக சென்று டைம் பாம்பை deactivate செய்வார். அதுபோன்ற மூன்றாம் தரமான புருடாக்கள் ‘மாற்றான்’ படத்தில் விடப்பட்டுள்ளது. Genetic Research, Ionization agent இது,அது என்று கதைக்கு சம்பதமில்லாமல் ஏதேதோ வார்த்தைகளை நுழைத்து (எல்லாம் எட்டாம் கிளாஸ் பாட புத்தகத்திலிருந்து எடுத்த வார்த்தைகள்) படம் காட்டியுள்ளனர். பாக்கெட் நாவல்களில் வரும் மொக்கை ட்விஸ்ட்களை படத்தில் வைத்து மொக்கை வாங்கியுள்ளனர்.

சுவாரசியமாக பாக்கெட் நாவல் எழுதிடலாம். ஆனால் சினிமாவில் எழுதும்போது சினிமாவிற்க்கான தரத்தை மெயின்டையின் செய்ய வேண்டும்.திருப்பாச்சியும் சுவாரஸ்யமான ஆக்சன் படமே. கில்லியும் சுவாரஸ்யமான ஆக்சன் படமே. ஆனால் இவ்விரண்டிற்கும் உள்ள வித்தியாசம் உங்களுக்கு புரிந்திருக்கும். அந்த வித்தியாசம்தான் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று.

பதினைந்து ரூபாய் பாக்கெட் நாவல் எழுதும் ஒரு எழுத்தாளருக்கு சில ஆயிரம் ரூபாயே ராயல்ட்டியாக கிடைக்கும். அவர் குறைந்த தர படைப்புகளை படைப்பதை தாங்கிக் கொள்ளலாம். ஆனால் பல கோடி ருபாய் சம்பளம் வாங்கும் சினிமா இயக்குனர்கள் பாக்கெட் நாவலாசிரியர்கள் போல் மூன்றாம் தர படைப்பை படைப்பதுதான் ஆதங்கம் அளிக்கிறது…

இந்தப் பின்னணியில் தான் இந்தக் கதையை கவினிக்க வேண்டியிருக்கிறது. ஒட்டி பிறந்த கதாநாயகர்களின் தந்தை ஒரு விஞ்ஞானி. அவர் ‘எனெர்ஜியான்’ என்றொரு எனெர்ஜி டிரிங் பவுடரை கண்டுபிடிக்கிறார். அதை உண்ணும் குழந்தைகள் பெரும் திறமைசாலிகளாக வருவார்கள் என்று அவர் பிரகடனப் படுத்தி விற்று பெரும் தொழிலதிபராகிறார். அந்நிலையில் அப்பவுடர் பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரிந்துக் கொள்கின்றனர் கதாநாயகர்கள். பின் நடப்பதே படத்தின் கதை. முதல்வனின் வருவது போல் ஒரு சேற்று சண்டை, ஜீன்ஸில் இரட்டையர்கள் ஐஸ்வர்யாராயிடம் செய்யும் காமெடிகளை போல் சில காமெடிகள், அந்நியனில் வரும் கிருமி போஜனம் போல் ஒரு காட்சியில் எலி போஜனம், இந்தியனில் சொந்த மகனையே எதிர்க்கும் தந்தைப்போல் இதில் உல்டாக் காட்சி என பல ஷங்கர் படங்களை மிக்ஸ் செய்து ‘மாற்றான்’ என்ற பெயரில் கொணர்ந்துள்ளனர். இந்த மொக்கை மசாலா படத்திற்கு துணையாக பல மொக்கை scientific term-களை உபயோகப் படுத்தி மொக்கை வாங்கியுள்ளனர்.

கதாநாயகர்களின் தந்தை  உக்ரைனில் Genetically modified மாடுகளை உருவாக்கி, ஆராய்ச்சி செய்து, அம்மாடுகளிடமிருந்து கறக்கப் படும் பாலைக் குடித்தால் ‘extraordinary power’ வருவதாக கண்டுக்கொள்கிறார். நிற்க.

அவரே தமிழகத்தில் தன் பண்ணையில் வளர்க்கப்படும் மாடுகளுக்கு உக்ரைனிலிருந்து வரவழைக்கப்பட்ட தீவனத்தைக் கொடுத்து, அம்மாடுகளிடமிருந்து கறக்கப் படும் பாலைக் கொண்டு ‘எனெர்ஜியான்’ பவுடரை உருவாகுகிறார்.

ஒரு காட்சியில் ‘Genetic Engineering’  பற்றி பேசுகிறார்கள், இன்னொரு காட்சியில் சம்மந்தமில்லாமல் ஏதோ மாட்டுத்தீவனம் பற்றி பேசுகிறார்கள். அடுத்தக் காட்சியில்
‘Advanced Genetic Engineering’  பேசுவதாக நினைத்துக் கொண்டு பத்து பேரின் மரபணுவை கொண்டு ஒரு உயிரை உருவாக்குவதைப் பற்றி விவரிக்கிறார்கள். படம் முழுக்க இப்படி பல அறிவியல் பெயர்களை அரை குறையாக உதிர்த்து தங்களைத் தாங்களே கேலி செய்துக் கொண்டதோடில்லாமல், இறுதியில் திரு.நரேந்திர மோடியை கிண்டல் செய்வதாக நினைத்துக் கொண்டு சுரேந்திர லோடி என்ற ஏதோ ஒரு பெயரில் குஜராத் முதல் அமைச்சர் என்ற கதாப்பாத்திரத்தை தேவையில்லாமல் காட்டுகிறார்கள். இதுபோன்று தேவை இல்லாக் காட்சிகள் படத்தில் நிறைய உண்டு.

மேலும் இதில் ஒரு காட்சியில் குஜராத் கிராமவாசிகள் ஹிந்தி பேசுகிறார்கள்.குஜராத் கிராமங்களில் வெறும் குஜராத்தி தான் பேசுவார்கள். ஹிந்தி அன்று. ஹிந்தியோ, குஜராத்தியோ Subtitles போட போவதில்லை என்று முன்கூட்டியே முடிவு செய்துவிட்டதால்தான் என்னவோ இதில் குஜராத்தியர்கள் ஹிந்தி பேசுவது போல் எடுத்துவிட்டார்கள் போலும்.இதையெல்லாம் தாங்கிக் கொள்ளலாம். குஜராத்தியர்களை சித்தரித்திருக்கும் விதம்தான் மிகவும் செயற்கையாக உள்ளது..

சிறு வயதில் கிராப்ட் நோட்டில் எல்லாரும் ஐம்பது பைசா கொடுத்து போஸ்டர் வாங்கி ஒட்டி இருப்போம். பழங்கள், விலங்குகள் என்று வகை வகையான போஸ்டர்கள். அதில் இந்திய மாநில மக்கள் என்று, இந்தியாவின் அனைத்து மாநில மக்களும் அவர்களின் traditional உடையில் இருப்பது போன்ற ஒரு போஸ்டரையும் ஒட்டியிருப்போம். அதில் ராஜஸ்தானியர்கள் என்றால் தலையில் தலைபாகை அணிந்திருப்பார்கள். அதை அப்படியே காப்பி அடித்து இதில் பயன் படுத்தி விட்டார்களா என்று எண்ணும் அளவிற்கு அந்த ராஜஸ்தானிய உடை அலங்காரத்தை இதில் குஜராத்தியர்களுக்கு செய்திருப்பார்கள். குஜராத்தில் எந்த கிராமத்திலும் அவ்வாறு உடை அணிந்திருக்க மாட்டார்கள்.

மொத்தத்தில் மசாலா படத்தை மசாலாவாக எடுப்பதை விடுத்து, பல புருடாக்களை விட்டு ஒரு கேலி சித்திரத்த்தை உருவாக்கிவிட்டார்கள்.

திறமைசாலிகள் பலர் வாய்ப்பிற்காக போரடிக் கொண்டிருக்க, பல கோடிகள் செலவு செய்து பில்லா 2 , மாற்றான் போன்று மொக்கை படங்களை மீண்டும் மீண்டும் எடுப்பதுதான் வருத்தமளிக்கிறது. இதற்கிடையில் அடுத்து வரப்போகும் அந்த படத்தின் ட்ரைலரே வயிற்றில் புலியை கரைக்கிறது….

சூரியா திறமையான நடிகர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அவர் இந்த மாதிரி படங்கள் நடிப்பதுதான் முகம் சுழிக்க வைக்கிறது. திறமையான ஹீரோக்கள் இயக்குனர்களால் வீணடிக்கப் படுகின்றனரா, இல்லை அவர்களே தங்களை வீணடித்துக் கொண்டு இயக்குனரையும் வீணடித்து விடுகின்றனரா என்பது  தமிழ் சினிமாவை பொறுத்த வரையில், ‘சிதம்பர ரகசியம்’. இவரின் அடுத்தப் படமாவது முழுவேக்காடக வரும் என்று நம்புவோம்..

முகமூடி

உலகில் எத்தனையோ சூப்பர் ஹீரோ படங்கள் எடுக்கப் பட்டுவிட்டன. எல்லா சூப்பர் ஹீரோக்களும் ஏதோ ஒரு வகையில் extraordinary power கொண்டிருப்பார்கள். அவர்கள் extraordinary league-ஐ சார்ந்தவர்களாகவோ, வேற்று கிரகத்தை சார்ந்தவர்களாகவோ, நிழல் உலகத்தை சார்ந்தவர்களாகவோ, மியூட்டண்ட்களாகவோ (mutants) இருப்பார்கள்.Iron Man மட்டும் சற்று வித்யாசமானவர்.

ஆனால் மிக சாதாரண மனிதன் ஒருவன் எந்த ஒரு அமானுஷ்ய சக்தியின் உதவியின்றி , தன் சொந்த உந்துதலின்  அடிப்படையில் மிகவும் விளையாட்டாக சூப்பர் ஹீரோவாக உருவெடுப்பதுபோன்ற கதையை இதுவரை யாரும் சரிவர எடுத்துவிடவில்லை. அதுவும் தமிழில் யாரும் முயற்சித்ததுக்கூட இல்லை.  ‘கந்தசாமி’ படம் ஒருவகையில் அதுபோன்ற கதையே எனினும் அது சூப்பர் ஹீரோ படமாக பிரகடனப்படுத்தப் படவில்லை. ‘முகமூடி’ திரைப்படம் தொடக்கம் முதலே சூப்பர் ஹீரோ படமாக பிரகடனப்படுத்தப்பட்டவொன்று என்பதை நினைவில் கொள்வோம்…

பூதக் கண்ணாடி வைத்துக் கொண்டு ‘முகமூடி’ படத்தை  ஆராய்ந்தால் ஆயிரம் குறை கண்டுபிடித்து விட முடியும். ஆனால் அது புது முயற்சியை எடுத்திருக்கக் கூடிய ஒரு படைப்பாளியை அவமதிக்கும் செயல். எது எவ்வாறெனினும்  இந்த படத்தை பாராட்டிட சில முக்கிய காரணங்கள் உண்டு.

உலகிலேயே முதல் ‘non-white skinned’ சூப்பர் ஹீரோ  முகமூடி தான். முகமூடி மிக சாதாரணமானவன். ஒரு சராசரி மனிதன். எந்த ஒரு அமானுஷ்ய சக்தியும் பெறாதவன். சண்டை காட்சிகளில் போராடி சண்டை போடுவது தொடங்கி, மாடிவிட்டு மாடி தாண்டும் போது மிகவும் கடினப் பட்டு தாண்டுவது வரை அனைத்து காட்சிகளும் அவன் ஒரு சாதாரணமானவன் என்பதை நினைவு படுத்துகிறது.

இது மிகவும் சாதாரணமான ஒரு கதை. ட்விஸ்ட் இல்லாத ஒரு திரைக்கதை. இதில் இரண்டாம் பாதி சற்று ஸ்லோவாக நகர்ந்தாலும், இது மிகவும் நாகரிகமான திரைக்கதை. காரணம் இந்த கதையை வேறு எவ்வாறும் நகர்த்த முடியாது. ஒரு லோக்கல் நாயகன் ‘சூப்பர் ஹீரோ’ ஆகிறார். அவர் மக்களுக்கு நல்லது செய்கிறார். இது ஒரு typical தமிழ் படத்தின் திரைக்கதையே. (அந்த காலத்தில் வந்த S.A Chandrasekar அவர்களின் படக் கதைகளை விட சாதாரணமான கதையே ‘முகமூடி’ ) ஆனால் ‘larger than life hero’ ‘robin hood’ போன்ற கதாபாத்திரங்களை அமைத்து இந்த படத்தை இயக்கி இருந்தால், இது ஒரு மிகமிக சராசரி படம் என்று கூறி ஒதுக்கி விடலாம். ஆனால் மிகவும் தைரியமாக ஒரு ‘super hero’  கதப்பாத்திரத்தை தமிழ் திரையுலகில் முதன்முதலாக உலவவிட்டதற்க்கு முகமூடி குழுவினை நாம் பாராட்டிட வேண்டும். இது வரை தமிழில் உள்ள எந்த ஜாம்பவானும் சூப்பர் ஹீரோ கதையை எடுத்திடவில்லை. சரித்திரக் கதைகளும், சூப்பர் ஹீரோ கதைகளும், Pirates கதைகளும் சமகால தமிழ் சினிமாவில்  எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது. பொன்னியின் செல்வனை படமாக எடுக்க கடந்த ஐம்பது வருடமாக முயன்று தோற்றுக்கொண்டிருக்கிறார்கள். மேலும் சாண்டில்யன் அவர்கள் கதைகளையே திரைக்கதை போன்றுதான் எழுதியிருப்பார். அதையும் நாம் படமாக எடுக்க முயற்சித்ததில்லை. நிற்க.

இந்த சூழ்நிலையில்தான் ஒரு படைப்பாளி ஒரு புது முயற்சியை செய்கிறான். அந்த முயற்சியை பாராட்டுவதும் விமர்சிப்பதும் பார்வையாளர்களின் தனிப்பட்ட உரிமை. ஆனால் ஒரு படைப்பை புறங்கையால் ஒதுக்கித் தள்ளுவதற்க்குமுன் அதற்க்கான நியாயமான காரணங்களை முன்வைக்க வேண்டும். அவ்வாறு வைக்க இயலாத பட்சத்தில் நாம்  ஓரவஞ்சனை செய்கிறோம்…

இந்தியாவில் உள்ள வெகு சில finest ஸ்கிரிப்ட் ரைட்டர்களில் மிஷ்கினும் ஒருவர். அஞ்சாதே, நந்தலாலா போன்ற படங்கள் அதற்க்கு சான்று. (நந்தலாலா சுட்ட படமே எனினும் அதன் மூலத்தை விட ஸ்கிரிப்ட் அருமையாகவே எழுதப் பட்டிருக்கும் ). அந்த படங்களையே நாம் சரி வர ஆதரிக்கவில்லை. அவ்வாறான சூழ்நிலையில் இந்த படத்தின் ஸ்கிரிப்டை, ஒரு படைப்பாளியின் புது முயற்சியை  ஓரவஞ்சனையோடு ஆராய்ச்சி  செய்திடக் கூடாது.

இந்த படத்தை எடுத்தற்காக, இந்த படக்குழுவை  நிறைய பேர் தூற்றுகிறார்கள். ஒருவன் திருவிழாக்கூட்டத்தில் புது சட்டையை அணிந்துக் கொண்டு வந்து அனைவரிடமும் காட்டுகிறான். அது பிடித்திருக்கிறது பிடிக்கவில்லை என்று சொல்கிற உரிமை மட்டுமே அனைவருக்கும் உண்டு. அதனை கிழித்தெரியும் உரிமை யாருக்குமில்லை.அதுபோன்று இந்த படத்தினை தகுதியற்று எடுத்துவிட்டார்கள் என்று குற்றம்சாட்டும் உரிமை யாருக்குமில்லை.

’முகமூடி’ ‘சூப்பர் ஹீரோ’ மாதிரியே இல்லை என்று நாம் எவ்வாறு கூற முடியும்! ‘சூப்பர் ஹீரோவிற்க்கென்ற குணாதிசியங்களை வரையறுத்தது யார்? நம் புராணங்களில் வரும் ‘அனுமான்’ கதாப்பாத்திராமே ஒரு வகையான சூப்பர் ஹீரோ தானே. சிறு வயதில் நாம் அனைவரும் ‘பண்டிட் கங்காதர் வித்யாதர் மாயதர் ஓம் கர்ணா சாஸ்த்ரி’ என்கிற ‘சக்திமான்’ என்ற ஒரு கதாபாத்திரத்தை கண்டு கைத்தடி இருக்கிறோம். அந்த கதைகள் எல்லாம் சராசரியாக தானே இருக்கும்.அவர்கள் ‘அசாதாரணமான மனிதர்கள். ‘முகமூடி’ சாதாரணமானவன். அவ்வளவுதான்.

‘சூப்பர் ஹீரோ’ என்றால் இப்படிதான் இருப்பார் என்ற ஒரு நிழல் அந்நியப்படங்களின் மூலம் நம் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. அதனால் நியாயமாக இருந்தாலும் லோக்கலாக இருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக  ‘முகமூடி’ கதாபாத்திரத்தை ஏற்றுக் கொள்ள பெரும்பாலானோர் மறுகின்றனர். ‘சூப்பர் ஹீரோ’ கனவு ஒவ்வாருத்தருக்குள்ளும் இருக்கும். ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கும் ஃபேண்ட்டசியின் விளைவே சூப்பர் ஹீரோக்கள். ஒவ்வொருவரும் சிறு வயதில்  அலாவுதின் அற்புத விளக்கைப் பற்றி கனவு கண்டிருப்பார்கள். தான் ஸ்பைடர் மேனாக உருவெடுத்தால் எப்படி இருக்கும் என்றும் எண்ணிப் பார்த்திருப்பார்கள். அவ்வாறான கதாப்பாத்திரங்கள் தமிழ் பேசினால் எப்படி இருக்கும் என்று கனவு கண்டு  ஒரு படைப்பாளி இங்குபடமாக எடுத்திருக்கிறார். இதில் அவர் எந்த ஒரு அமானுஷ்ய சக்தியின் உதவியையும் நாடவில்லை, அதற்கான அவசியமும் ஏற்படவில்லை. ஏனெனில் முகமூடி மிகவும் சாதாரணமானவன், உங்களையும் என்னையும் போன்று..

ஒரு லோக்கல் சூப்பர் ஹீரோ லோக்கலாக தான் உருவாகமுடியும். அதனால்தான்  சூப்பர் ஹீரோவிற்க்கு ஆடை தைக்கும் காட்சிகள் முதல், அவர் செய்யும் சாகசங்கள் வரை அனைத்தும் சாதாரணமாக அமைந்துள்ளது. தமிழ் சூழலில், மக்களுக்கு ஒரு கதாப்பாத்திரம் நல்லது செய்கிறான் எனில், குழந்தைகளை காப்பாற்றுகிறான், கொள்ளையில் இருந்து வங்கியை காப்பாற்றுகிறான் என்றுதான் திரைக்கதை அமைக்க முடியும்.மிகவும் advanced படமாக எடுக்கவேண்டும் என்றால் ‘Bio-war’ ‘nuclear weapon’ போன்ற விஷயங்களிலிருந்து ‘சூப்பர் ஹீரோ’ மக்களை காப்பற்றுகிறான் என்று கதை எழுதலாம். ஆனால் அவ்வாறான படங்களை இங்கு எத்தனை பேர் ஏற்றுக் கொள்வார்கள். திரு.ஜனநாதன் இயக்கிய ‘ஈ’ திரைப்படம் ‘Bio-war’ பற்றி பேசிய முதல் தமிழ் படம். அந்த படத்தினை  ஏன் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை!

அதனால் முகமூடியின் காட்சிகள் ஆங்கில படத்தில் வரும் சராசரி காட்சிகள் என்று விமர்சிப்பவர்கள் ஒரு விடயத்தை நினைவில் கொள்ளவேண்டும். ‘முகமூடி’ என்பது சிறு முயற்சியே. பெரிய சாதனைகள் அனைத்தும் சிறு முயற்சியில் இருந்தே தோன்றுகிறது என்பதால் ‘முகமூடி’ என்ற சாதாரணமான ‘சூப்பர் ஹீரோவை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் அவன் வருங்காலத்தில் இன்னும் பல சாதனைகள் செய்திடுவான். (Mugamoodi is an ordinary guy with extraordinary potential.) இந்த படத்திற்க்கு செய்ய வேண்டிய நியாயத்தை செய்தால் அடுத்தடுத்து பிரமாண்டமான, இன்னும் சிறந்த பாகங்களை எதிர்பார்க்கலாம். அதை யார் வேண்டுமானாலும் எடுக்கலாம். தமிழின் முதல் சூப்பர் ஹீரோவாகிய முகமூடியை ஒதுக்கித் தள்ளினால், வேறு யாரும் சூப்பர் ஹீரோ படம் எடுக்க முயற்ச்சிக்க மாட்டார்கள்…

ஒட்டுமொத்த படக் குழுவும் கடினமாக உழைத்துள்ளதை திரையில் உணரலாம்.இந்த படத்தின் கதாநாயகன் ஜீவா,தன் கதாப்பாத்திரத்திற்க்கு மிகவும் நியாயம் செய்துள்ளார். பெரும்பாலான காட்சிகள் இரவிலேயே நகர்கிறது. அதனை அருமையாக ஒளிப்பதிவு செய்துள்ள ஒளிப்பதிவாளரை பாராட்டிட வேண்டும். காட்சிகளுக்கு மேலும் மெருகேற்றியுள்ளார் இசையமைப்பாளர், தன் அருமையான பின்னணி இசையின் மூலம். ஆனால் இசை சில இடங்களில் Hans zimmer-ஐ ஞாபகப்படுத்துகிறது. (எப்படி sci-fi கதைகளில் Issac Asimov-வின் தாக்கத்தை தவிர்க்க முடியாதோ, அதே போன்று சமகாலத்தில் பிரமாண்டமான இசையில் Hans zimmer-யின் தாக்கத்தை தவிர்க்க இயலாது)

உலகில் தலை சிறந்த இயக்குனர்கள் பலர் இருந்தாலும், “creative Directors” என்று சொல்லக் கூடியவர்கள் வெகுசிலரே. Kurosawa, Coppola போன்று. இந்தியாவில் அனுராக் கஷ்யப், தியாகராஜ குமாரராஜா, மிஷ்கின் போன்றவர்கள் குறிப்பிடத்தகுந்த creative Directors. அவர்கள் தனக்கென்று ஒரு ‘classic style’ வைத்துள்ளனர். மிஷ்கின் வெறும் காலை மட்டும் காட்டுகிறார் என்கிறார்கள். ஆனால் அவர் படங்களில் கால் ஆயிரம் கதை சொல்கிறது. நந்தலாலாவில் எங்கும் பயணிக்கும் கால்களை அதிகம் காட்டியிருப்பார், அது பயணம் சம்பத்தப் பட்ட படம் என்பதால்.

அஞ்சாதே, யுத்தம் செய் போன்ற படங்களின் முதல் காட்சிகள் நினைவில் இருக்கலாம். ஒரு இயக்குனர்  ஒரு காட்சியை எப்படி வேண்டுமானாலும் எடுத்திட முடியும். ஆனால் அதில் அவர் காட்டும் creativity தான் அவரை தனித்து நிற்கச்செய்கிறது. அதற்க்கு அஞ்சாதே படத்தின் முதல் காட்சி ஒரு தலைசிறந்த உதாரணம். அது போல இந்த படத்திலும் அந்த ‘டைரக்டர் டச்’ இருக்கிறது. குறிப்பாக கதாநாயகன் முகமூடியாக உருவெடுக்கும் (transition) அந்த ஒரு காட்சி, a perfect director touch. மேலும் சில காட்சிகள் Kurosawa way of making-ஐ நினைவுப்படுத்தும். ஒரு சூப்பர் ஹீரோ கதையை Akira kurosawa ஸ்டைலில் பார்க்க விரும்புபவர்கள் முகமூடியை பார்க்கலாம். (திரு. மிஷ்கின் அவர்களின் படங்களில்  குரோசாவாவின் தாக்கம் நிறைய  உண்டு. நந்தலாலாவில் அவரது நடிப்பு குரோசாவாவின் ஆஸ்தான நடிகரான ஜப்பானின் Toshiro Mifune அவர்களின் நடிப்பை பல இடங்களில் நினைவுப்படுத்தும் )

இந்தபடத்தின் ஸ்கிரிப்டை ஒரு புறம் குறைக் கூறுகிறார்கள். தமிழ் படைப்புலகில் கதைகளுக்கு பஞ்சமில்லை. இங்கு ஆயிரக் கணக்கான கதைகள் கொட்டிக்கிடக்கின்றன. ஆனால் இலக்கியத்திற்க்கும் திரைப்படத்திற்க்கும் உள்ள இடைவெளி இன்னும் குறைந்தபாடில்லை. ‘யவன ராணி’ கதையில் சாண்டில்யன் நிறைய வித்தைகள் காட்டியிருப்பார். ஒரே நாவலில், கடல் கொள்ளையர்கள், கடற் போர். நிலப் போர், தத்துவங்கள் என நிறைய விவரித்திருப்பார். ஆனால் அதனை இதுவரை யாரும் படமாக எடுத்திடவில்லை. காரணம் அதனை அவ்வளவு எளிதாக ‘execute’ செய்திட இயலாது. அருமையான கதைகளை பக்கம் பக்கமாக எழுதிடலாம். ஆனால் அதனை ‘execute’ செய்வது தான் மிக பெரிய பணி. ‘execution’ வெறும் திறமை சார்ந்ததன்று.  சூழலை சார்ந்ததுமாகும். ‘ஸ்பீட்’ போன்று ஒரு ஸ்கிரிப்டை இங்கு எழுதிடமுடியும், ஆனால் எந்த ரோட்டில் பேருந்தை ஓட விடுவது?

ஸ்பைடர் மேன் டிரைனை ‘web’ விட்டு தடுப்பது போன்ற காட்சியை இங்கு எப்படி அமைத்திட முடியும்?

சூப்பர் மேன் மாடி விட்டு மாடி தாண்டுகிறார் என்றால், மவுண்ட் ரோட்டில் தானே எடுக்க முடியும்? அப்போதும்,கேலி செய்பவர்கள் கேலி செய்வார்களே?

பேட் மேன் வைத்துருப்பது போன்ற வாகனங்களின் ‘prototype’ செய்வது கூட இங்கு கடினமாயிற்றே ?

இவை அனைத்திற்க்கும் ‘செட் போட்டால் எவ்வளவு கோடிகள் இறைக்க வேண்டும். கிராபிக்ஸ் காட்சிகளிலும் நிறைய தமிழ் படங்கள் மொக்கை வாங்கியுள்ளதே. அவ்வாறெனில் உலக தரத்திற்க்கான கிராபிக்ஸ் எவ்வாறு சாத்தியம்?

எல்லா ஸ்க்ரிப்ட்களையும் execute செய்திட முடியாது.. இந்த சூழ்நிலையில் execute பன்னக்கூடிய அளவிற்க்கு ஒரு சிம்பிலான சூப்பர் ஹீரோ ஸ்கிரிப்டை எழுதி, அதை மிகவும் நாகரிகமான முறையில் படமாக்கிய ஒரு குழுவை, பல புது முயற்சிகளுக்கு விதை விதைத்துள்ள ஒரு குழுவை  தவறாக விமர்சிப்பதோ, அவர்களின் படைப்பை புறக்கணிப்பதோ எற்ப்புடைய செயலாகாது.

படத்தோட கிளைமாக்ஸ் பற்றி நிறைய விமர்சனம் உண்டு. சமீபத்தில் வந்த ‘மதுபானக்கடை’ படமும் திடீர்னு முடிந்திடும். ஆனால்  அந்தப் படத்தை குறை சொல்ல முடியாது. ஏனென்றால் அது ஒரு தலை சிறந்த முயற்சி. அது ஒரு off-beat படம். ஆங்கிலத்தில்  சிறைச்சாலையினுள் நடக்கும் கதைகள், சூப்பர் மார்க்கெட்டில் நடக்கும் கதைகள் என நிறைய படங்கள் வந்திருக்கு. தமிழ்ல TASMAC-உள்ள நடக்கும் நிகழ்வுகளை அடிப்படையாக் கொண்டு எடுக்கப்பட அந்த படத்தை எத்தனைப் பேர் ஆதரித்தோம் ? விமர்சிப்பவர்கள் எந்த முயற்சி செய்தாலும் விமர்சித்துக் கொண்டுதான் இருப்பார்கள்….

அன்பேசிவம் சுட்டபடமே எனினும் ஒரு தலை சிறந்த தமிழ் படம். ஆனால் அது  ஓடவில்லை . ஆரண்ய காண்டம், தென் மேற்கு பருவக் காற்று, வாகை சூடவா போன்ற நிறைய நல்லப் படங்கள் இங்கு ஓடவில்லை. ஆனால் அந்த அளவுக்கு முகமூடி தலை சிறந்த படமென்று  சொல்லவில்லை. ‘முகமூடி’ ஒரு சாதாரணமான படம்.ஆனால்      அசாதாரணமான முயற்சி. அந்த முயற்சியைதான் நாம் பாராட்டிட வேண்டும்.

ஆங்கிலப் படங்கள் அளவிற்க்கு technology இந்த படத்தில்  உபயோக படுத்தப் படவில்லை என்று விமர்சிக்கிறார்கள். அதற்கான அவசியம் இக்கதைக்கு இல்லை. ‘டார்க் நைட் ரைசஸ்’ போன்ற படங்களோடு ‘முகமூடி’ படத்தினை ஒப்பிட்டு பார்ப்பது  மிகவும் தவறு. நோலான் படங்கள் மாதிரி இந்தப் படங்கள் இருக்காது. சமகால உலக சினிமாவில் நோலான் சிம்மசொப்பனம், பல சுயாதீனப் படைப்பாளிகளுக்கு மனதளவில் மானசீக குருவாக  அவர் விளங்குறார் என்பதில் எந்த ஐய்யப்பாடுமில்லை. கடந்த பதினைந்து வருடத்தில் அவர் அடைந்திருக்கும் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. ஆனால் நோலான் போன்ற படைப்பாளிகள் இயங்கும் சூழல் வேறு. நம் படைப்பாளிகள் இயங்கும் சூழல் வேறு. நம்முடைய சூழலை சார்ந்துதான் இந்தப் படத்தை விவாதிக்கணும். தமிழ் சூழலில் முகமூடி ஒரு மிகப்பெரிய முயற்சி..

இப்போது இருக்கும் தமிழ் சூழலில் ‘முகமூடி’ மாதிரிதான் ஒரு தமிழ் சூப்பர் ஹீரோ படம் எடுக்க முடியும். முகமூடி ஒரு நாகரிகமான படம். பாராட்டுதளுக்குரிய முயற்சி. அதனால் எந்த ஒரு பெரிய எதிர்பார்புமின்றி, மூளையில் எந்த ஒரு நிழல் உருவத்தின் தாக்கமுமின்றி, தமிழ் சூப்பர் ஹீரோ எப்படி இருப்பான் என்ற  ஆசையோடு , பாட்டி மடியில் படுத்து கதை கேட்கும் குழந்தைப் போல ‘முகமூடி’ படத்தை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் இப்படம் பிடிக்கும். இதில் இருக்கும் உழைப்பு புரியும்..

அதை விடுத்து, நாங்க Dark Knight Rises மாதிரி இருந்தாதான் சூப்பர் ஹீரோ படமென்று ஏற்றுக் கொள்வோம் என்று சொல்ற எல்லாரும் கொஞ்சம் காத்திருந்தால், foreign technology implement பண்ணி இங்கு யாராவது டார்க் நைட் ரைசஸ விட நல்ல படமே எடுப்பாங்க. முன்னாடி சொன்ன மாதிரி அதுக்கு நம்ம கொஞ்சம் காத்திருக்கணும். காத்திருப்போம் ஒரு நாற்பது வருடம்…..

வழக்கு எண் 18/9

சினிமா என்பது 24 lies per second (24 பொய்கள்) என்று ஒரு பெரிய இயக்குனர் குறிப்பிட்டார்.அவ்வாறிருக்கவேண்டிய அவசியமில்லை, சினிமாவில் சினிமாத்தனம் கலக்காத எதார்த்தமும் சாத்தியம் என்பது உலக சினிமா அறிந்தவர்களின் கருத்து. அந்த கருத்து மீண்டும் ஒரு முறை தமிழ் சினிமாவில் நிரூபிக்கப் பட்டிருக்கிறது, வழக்கு எண் 18/9 என்ற ஒரு உன்னத படைப்பின் மூலம்….

திரைக்குப் பின் பணிப்புரிந்திருக்கும் தேர்ந்த படைப்பாளிகள், திரையில் வெறும் புது முகங்களை உலாவவிட்டு ஒவ்வொரு காட்சிகளையும் செதுக்கி இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு 

முதல் சில காட்சிகளுக்கு பின் சில unusual கேமரா மூவ்மெண்டுகளுடன் படம் நகரத் தொடங்குகிறது.அதுவே படத்தின் மீது ஒரு புது வகையான பிரமிப்பை ஏற்ப்படுத்துகின்றது. அந்த பிரமிப்புகளையும் எதிர்ப்பார்புகளையும் இறுதிவரை தக்க வைத்துக் கொள்ள பெரிதும் மெனக்கெட்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர், அதில் வெற்றி பெற்றும் இருக்கிறார்.

சிறந்த கதை அம்சம் கொண்ட படங்களில், தொழில்நுட்ப அம்சங்கள் வியக்கத்தக்க வைக்கும் அளவிற்க்கு இருக்க வேண்டியதில்லை என ஏனோ இங்கு நம்பப் படுகிறது. பல நல்ல கதை கொண்ட திரைப்படங்கள் வெறும் நாடக பாணியில் அமைந்திருப்பது நினைவிருக்கலாம். அந்த குறுகிய நம்பிக்கைகளை அவ்வப்போது சில படைப்பாளிகள் உடைத்துக் கொண்டிருக்கின்றனர். ‘கற்றது தமிழ்’ போன்ற திரைப்படங்கள் கதையம்சம், மேக்கிங் என அனைத்திலும் உலகத்தரம் வாய்ந்த ஒன்று. அந்த வரிசையில் நாம் வழக்கு எண் 18/9 படத்தை இணைத்திடலாம்.

புதிய தொழில்நுட்பங்கள் அவ்வப்போது பலரால் தமிழ் திரையுலகில் அறிமுகப் படுத்தப் படுகிறது. பல புதிய முயற்சிகள் மேற்க்கொள்ள படுகின்றன. ஆனால் அந்த முயற்சிகள் நிச்சயம் தமிழ் சினிமாவை அடுத்த தளத்திற்கு  எடுத்துச் செல்ல வேண்டும்.அவ்வாறு இல்லாத பட்சத்தில் அந்த முயற்சிகள் வீணாகிப் போவதை தடுக்கவோ தவிர்க்கவோ இயலாது. ஒரு முக்கிய அந்நிய தொழிற்நுட்பத்தை ஒரு இயக்குனர் பல கோடி செலவு செய்து இங்கு அறிமுகப் படுத்துகிறாரென்றால்,அவர் பெருமை பட்டுக் கொள்ளலாமேவொழிய அம்முயற்சியால் யாதொரு பயனும் விழையாது. காரணம், பல கோடி மூலதனம் எனும் பட்சத்தில் எல்லாராலும் அம்முயர்ச்சியை பின்பற்ற இயலாது.

“புதிய முயற்சி என்ற பெயரில், வெறும் அறியாமையினால் 30 வருடதிர்க்கு முன் எங்கோ-எவரோ செய்த ‘புதிய’ முயற்சியை செய்திடாதீர்கள்” என்கிறார் ஜோசப் வீ மாசலி என்ற ஒளிப்பதிவாளர். புதிய முயற்சி என்ற பெயரில் ஏதோ ஒன்றை செய்திடக் கூடாது என்பதே அவரின் கருத்து.

அதே சமயத்தில் எளிதாக அனைவராலும் பின்பற்றக் கூடிய முயற்சிகள் ஒழுங்காக-சரியானவர்களை சென்றடையாத பட்சத்தில் அந்த முயற்சிகளும் வீண்.

டிஜிட்டல் ஒளிப்பதிவு, ரெட் ஒன் காமிரா உபயோகம் என பல முயற்சிகள் இங்கு மேர்க்கொள்ளப் படுகின்றன. மும்பை எக்ஸ்பிரஸ், தவமாய் தவமிருந்து, அச்சமுண்டு அச்சமுண்டு என பல படங்களை  ஒளிப்பதிவில் புதுமை செய்ததற்க்கு எடுத்துக்காட்டாக கூறலாம்.ஆனால் ‘வழக்கு எண் 18/9’ என்ற படத்தில் மிகவும் பாராட்டுதலுக்குறிய ஓர் முயற்சி செய்யப்பட்டுள்ளது. Canon EOS 7D என்ற விலை அதிகமில்லா ஒரு DSLR கேமராவினை உபயோகப் படுத்தியுள்ளனர். இது எல்லோராலும்  எளிதாக பின்பற்ற முடிந்த ஒன்று.

DSLR கேமராவில் எடுக்கப் பட்ட இரண்டாவது தமிழ் படம் இது. முதல் படம், சனிக்கிழமை சாயங்காலம் ஐந்து மணி….

 ‘வழக்கு எண் 18/9’ படத்தில் ஒளிப்பதிவில் செய்யப்பட்ட இம்முயற்சி வெற்றிப் பெற்றுருக்கிறது. இது நிச்சயம் பல திறமைசாலிகளுக்கு சொர்க்க வாசலை திறந்து விட்டுருக்கிறது. இனி நிறைய சுயாதீன திரைப் படைப்பாளிகள் குறைந்த செலவில் நிறைய தரமான படங்களை தரப் போகிறார்கள் என்பது உறுதி…அதற்க்கு காரணமாய் அமைந்த இப்படக் குழுவினை பாராட்ட வேண்டியது ஒவ்வொரு ரசிகனின் கடமை.

திரைக்கதை 

ஒரு எளிமையான கதை கருவிற்கு, ஆழமான திரைக்கதை எழுதிடுவது சாதரணமான விடயமன்று. மிகவும் தேர்ந்த திரைக்கதையாசியரால்தான் அது சாத்தியப்படும். இப்படத்தின் திரைக்கதையாசியர் தன் திறமையை மீண்டும் நிருபித்திருக்கிறார். அவர்  தனது  முந்தைய படங்களில் எழுதிய அருமையான திரைக் கதைகளைவிட, இத்திரைக்கதை இன்னும் ஆழமாக-அழகாக அமைந்துள்ளது.

பல வருடங்களாக இயங்கிக் கொண்டிருக்கும் ‘ஹாலிவுட்’ திரையுலகிலேயே யாரும் ‘ஒரிஜினல் திரைக்கதைகள்’ எழுதிடுவதில்லை.அங்கு எழுதப்படுவது பெரும்பாலும் தழுவல் திரைக்கதைகளே. ஆனால் தமிழ் படைப்பாளிகளால் மிகவும் எளிதாக ‘ஒரிஜினல் திரைக்கதைகள்’ எழுதிட முடியும்.திரு.பாக்கியராஜ் போன்றோர்கள் அதற்க்கு உதாரணம்.அதை நினைத்து நாம் நிச்சயம் பெருமைபட்டுக் கொள்ளலாம்…

இரண்டாவது பாதியில் திரைக்கதை, காட்சிகளை விளக்குவதற்கு சற்று நேரம் பிடிக்கிறது. அதை வைத்து இது ‘மெதுவாக நகரும் திரைக்கதை’ என யாராலும் குற்றம் சாட்டமுடியாது. இப்படமே இரண்டு மணிநேரம் தான் என்பது நினைவிருக்கட்டும். கதையின் ஓட்டத்தை பொறுத்து காட்சிகளை ஆழமாக விளக்கும் பொறுப்பும் உரிமையும் படைப்பாளிக்குண்டு.(உலகின் தலை சிறந்த படமாக கருதப்படும் ‘செவன் சாமுராய்’ படம் கிட்டதட்ட நான்கு மணி நேரம் ஓடும்.) இந்த படத்தில் அதிக நேரம் எடுத்துக் கொள்ளப் படவில்லை,சுருங்க-விளங்க சொல்லியிருப்பது சிறப்பம்சம்.

 ஹிந்தியில் வெளிவந்த ‘சலாம் பாம்பே’ திரைப்படத்திற்கு பின் தெருவோர-சேரி மனிதர்களை பற்றிய சினிமாத்தனமில்லா சினிமா இதுவே. கற்பனை செய்துகொள்ளுங்கள். இயக்குனர் நினைத்திருந்தால் மசாலா காட்சிகளை புகுத்தி இருக்கலாம். இரண்டு சேரி நண்பர்கள். அவர்கள் ‘காபரே நடனம்’ பார்க்கிறார்கள் என்று காட்சி அமைத்து ஒரு ‘ஐட்டம் நம்பர்’ பாடலை சொருகி கல்லாவை நிரப்ப முயற்சித்திருக்கலாம். ஆனால் அந்த போலித்தனங்களை செய்யாததே அவர் ஒரு உன்னத படைப்பாளி என்பதற்கு சான்று. ஒரு படைப்பாளியின் முயற்சிகளும்-சிந்தனைகளும் தூய்மையாக இருக்கும் பட்சத்தில் படைப்புலகில் அவனுக்கொரு நிரந்தர-உயர்ந்த இடம் வந்து சேர்வத்தை யாராலும் தடுக்க இயலாது .

இசை

‘லைவ் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ்’ என டைட்டிலில் பிரத்யேகமாக குறிப்பிட்டிருக்கிறார்கள், அதற்க்கு நியாமும் செய்திருக்கிறார்கள். கதையின் தேவையை மட்டும் உணர்ந்த இசை. ஆடம்பரமற்ற அந்த இசை ஒரு தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது.

இசையில் பல உலகத் திறமைகள் கை கோர்த்திருக்கிறது என்பது தெளிவு. இசை சற்று வித்தியாசமாக அமைந்திருப்பது படத்தின் பெரிய பலம்.

சமகால தமிழ் திரை உலகில் நம்பிக்கைக்குரிய ஓர் பாடலாசிரியர், நா.முத்துக்குமார்..வைரமுத்து, வாலி வரிசையில் அடுத்த இடம் பிடிக்க எல்லாத் தகுதிகளையும் பெற்றவர்.காதலியை தேவதை, உலகழகி  என வர்ணித்து வந்துக் கொண்டிருந்த பாடல்களுக்கு மத்தியில் ‘அவள் அப்படி ஒன்றும் அழகில்லை, அவளுக்கு யாரும் இணையில்லை’ என்று முத்தாய்ப்பாக அவர் எழுதிய சரணம் நினைவிருக்கலாம்.அவரே இந்த படத்திற்க்கும் பாடல்களை எழுதியுள்ளார், மீண்டும் முத்தாய்பான வரிகள்.

“வானத்தையே எட்டி பிடிப்பேன் ” என்ற எளிமையான வரிகளால் வலிகளின் ஆழங்களை விளக்குகிறார் பாடலாசிரியர்.

நடிகர்கள்

சினிமா என்பது ஒரு கூட்டு முயற்சி. திரைக்கு பின் இருப்பவர்கள் எவ்வளவு திறமைசாலிகளாக இருந்தும், திரையில் உலாவும் நடிகர்கள் தங்கள் பணியை ஒழுங்காக செய்யாத பட்சத்தில் வெற்றியை சுவைத்திட முடியாது. எல்லோரும் திறம்பட வேலை செய்தும் எல்லோருக்கும் அங்கிகாரத்தை பகிர்ந்தாளிக்காமல் விடுவது கலைஞர்களுக்கு சமுதாயம் செய்கிற துரோகம்.

பருத்தி வீரன் படத்தில் நடிகர்களை கண்டுகொண்டவர்கள், இயக்குனரை அங்கீகரிக்க மறுத்துவிட்டனர். நான் கடவுள் படத்தில் இயக்குனரை கண்டுகொண்டவர்கள், அதில் சிறு வேடமேனினும் பெரிதாய் நடித்த நடிகர்களை பாராட்ட மறந்துவிட்டனர்.

இப்படத்தில் திரைக்கு பின்னால் சிறப்பாக உழைத்தவர்களை போன்று, திரையில் நடித்த அனைவரும் தங்கள் வேலையை உணர்ந்து செவ்வன செய்துள்ளனர். மனித வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பலவகையான மனிதர்களை நாம் இங்கு கதாப்பாத்திரங்களாக சந்திக்கலாம்.

எத்தனை வகையான மனிதர்கள்! “கொஞ்ச வருஷம் வேலை செஞ்சா கடனை அடச்சிடலாம்” என்று கூறி சிறுவனை வடநாட்டிற்கு அழைத்து செல்லும் புரோக்கர்.

“கொஞ்சம் வருஷம் ஜெயில இருந்த போதும்” என்று கூறி இளைஞனை ஜெயிலுக்கு அழைத்துசெல்லும் போலீஸ்காரர், என நிறைந்திருக்கும் குரூரமான மனிதர்கள்.

தெருவில் விழுந்துகிடக்கும் ஒருவனுக்கு உணவு வாங்கித்தரும் விலைமாது, பின் ஒரு காட்சியில் அவன் தரும் பணத்தினை தயக்கத்துடன் பெற்று கொள்ளும் அதே பெண், ‘நீயும் கல்யாணம் காட்சி பண்ணி நல்லா வாழ வேணாமா’ என்று சொல்லும் தள்ளு வண்டிக்காரர், ‘நான் கடைசி வரைக்கும் உன் கூடவே இருக்கணும் நண்பா’ எனக் கூறும் கலைக் கூத்தாடி நண்பன், தன் பெண்ணை காப்பாற்ற எந்நேரமும் கத்திக் கொண்டே இருக்கும் தாய் என படம் முழுக்க நிறைந்திருக்கிறார்கள்  விளிம்பு நிலை மனிதர்கள். அக்கதாப்பாதிரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள் அத்தனை நடிகர்களும்.

இது ஒரு புறம் இருக்க, செல்போனிற்க்காக அலையும் பள்ளி மாணவி, தடம் மாறி திரியும் பணக்கார மாணவன் என உயர்குடி மனிதர்கள் இன்னொரு புறம். இரண்டு வாழ்க்கைத்தரங்களுக்குள்ள முரண்பாடு இங்கு காட்டப் படுகிறது. இங்கு இவர்கள் இப்படி, அவர்கள் அப்படி என்ற கம்யுனிச உபதேசம் செய்யப்படவில்லை.இரண்டு வகையான மனித வாழ்கையை அப்பட்டமாக படம் பிடித்திருக்கிறார்கள். அதில் இருக்கும் முரண்கள் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் உரைக்கும்… (Gods must be crazy என்றொரு ஆங்கிலபடத்தில் காட்டுவாசிகளுக்கும் நகர மனிதர்களுக்கும் இருக்கும் முரண் அருமையாக படம்பிடிக்கப் பட்டிருக்கும். அதை பார்க்கும் போதும் மனிதக் குளத்திலுள்ள வேறுபாடுகள் உரைக்கும்..)

படத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக இரண்டு கதாநாயகிகள், தெருவோர இளைஞனாக நடித்திருக்கும் ஓர் கதாநாயகன், அவனின் நண்பனாக நடித்திருக்கும் ஒருவர்- இந்த நால்வரும் கதையை முன்னெடுத்து செல்வதில் பெரும் பங்காற்றியிருக்கிறார்கள்.

வேலைக்கார பெண்ணாக வருகிறார் ஒரு கதாநாயகி. பார்வையாலேயே நாயகனை வெட்டுவதே இவர் வேலை. வசனங்கள் இவருக்கு மிகக் குறைவு. ஆனால் இவரின் பார்வைகளும் முக அசைவுகளும் ஆயிரம் வசனம் பேசுகிறது.

பள்ளிகூட மாணவியாக வரும் இன்னொரு கதாநாயகியும் போட்டி போட்டுக் கொண்டு நடித்துள்ளார். ஆசையும் பயமும் ஒருங்கே நிறைந்த ஒரு கதாப்பாத்திரம். வீட்டில் நிலவும் கட்டுபாடுகள், அதை உடைக்க தூண்டும் ஆசைகள், அதன் பின் எழும்பும் பயத்தினை வெளிப்படுத்தும் விதம் என தனி முத்திரைப்பதிக்கிறார்.

வேலு என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கும் கதாநாயகன் உணர்வுபூர்வமான நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார். தாயை நினைத்து அழும் காட்சி தொடங்கி, இறுதியில் காதலிக்காக அழும் காட்சி  வரை இவர் நடிப்பு நெஞ்சைத் தொடுகிறது. கண்களை பணிக்க வைக்கும் அருமையான நடிப்பு. ஆர்பாட்டமில்லா நடிப்பு. சும்மா ஒருவர் அழுதுக் கொண்டிருந்தால் அது அளுகாச்சி படமாக ஆகியிருக்கும். ஆனால் அவ்வாறு அவர் செய்யவில்லை. தன் கதாப்பாதிரத்தை முழுவதுமாக உணர்ந்து தெளிவாக செயற்பட்டிருக்கிறார்.பல இடங்களில் வேலு கதாபாத்திரம் கதையை தன் தோளில் சுமக்கிறது என்றால் அது மிகையல்ல. வருங்காலத்தில், ஒழுங்காக பயன்படுத்திக் கொள்ளப்படும் பட்சத்தில் இவர் சிறந்த நடிகராக உருவெடுத்திடுவார் என நம்பலாம்….

படத்தில் இழையோடும் ஒரு வகையான ‘ப்ளாக் ஹுமருக்கு’ வழிவகுத்திருப்பது கதாநாயகனின் நண்பன் கதாபாத்திரம். படத்திற்கு மிக முக்கியமான துணைக் கதாப்பாத்திரம் அவர்…

காட்சிகளின் பின்னியில் சிலஇடங்களில் ஒலிக்கும் பழைய பாடல்கள் காட்சிகளுக்கு மேலும் மெருகேற்றுகின்றது. இத்திரைப்படம் ஒவ்வொரு காட்சியாக செதுக்கப்பட்டுள்ளது என்பதற்கு இதுவே உதாரணம்…

தமிழ் திரையுலகில் திடிரென ஒரு இயக்குனர் நல்ல படம் கொடுப்பார். அதில் நடிகரும் நன்றாக நடித்திருந்தால் படம் சிறந்த படமாக வந்திடும். பின் காலப் போக்கில் நடிகர் ஆக்சன் ஹீரோவாக
உருவெடுக்க  வேண்டும் என்பதற்காக, தடமாறி தடுமாறி சென்றிடுவார்.அந்த இயக்குனரோ புத்திசாலியாக இருக்கும் பட்சத்தில்
தன் இடத்தை தக்க வைத்துக்கொள்வார். இல்லாவிடில் அவரும் காணமல் போய்விடுவார்.
பல ஜாம்பவான்களை வைத்துபடம் இயக்கிய பல இயக்குனர்கள் தமிழ் சினிமாவின் வெள்ளத்தில்
அடித்துசெல்லப்பட்டிருக்கிறார்கள்.

இந்த படத்தின் இயக்குனரை பற்றி அந்தக் கவலை வேண்டாம். சிட்டிசன் என்ற ஒரு படம் வெளிவரயில்லையெனில் சாமுராய் நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும். ஆனால் அதன்பின் இவர் துவளாது ‘காதல்’ போன்ற அருமையான படைப்புகளை கொடுத்திருக்கிறார். வருங்காலத்திலும் அதுபோன்ற நல்ல படைப்புகளை அவர் கொணர்வார் என நம்புவோம்..

இயக்குனரும், நடிகரும் தடுமாறும்பட்சத்தில் அவர்கள் தந்த சிறந்த படைப்பும் காற்றில் கரைந்து போகும்….ஆனால் சில படங்கள் மட்டுமே யார் எப்படி சென்றாலும் காலம் எப்படி சூழன்றாலும் தனக்கென ஒரு நிரந்தர இடத்தைப் பிடித்துக் கொள்ளும், உதிரிப்பூக்கள், பருத்திவீரன், கற்றதுதமிழ் போன்று..அவ்வாறான படங்களில் பணிபுரிபவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் அந்த படத்தின் பெயரோடு சேர்ந்து அவர்களின் பெயரும் நிலைத்திருக்கும். இத்திரைப்படமும் அவ்வாறான படமே.. இந்த படைப்பாளிகளும் கலைஞர்களும் இந்த உன்னதமான படைப்போடு சேர்ந்து வாழ்ந்துக்கொண்டிருக்கப்போகிறார்கள்…

சிறந்த நடிகர்கள், சிறந்த ஒளிப்பதிவு படத்தொகுப்பு, சிறந்த தொழில்நுட்பம், சிறந்த திரைக்கதை-இயக்கம் என பல விஷயங்கள் சிறப்பாக அமையப்பெற்ற இப்படம் தமிழ் திரைபடவுலகில் மிக முக்கியமான படம் என்பதில் யாதொரு ஐயமுமில்லை.

நாற்பது வருடங்களாக உதிராமல் குலுங்கிக் கொண்டிருக்கும் உதிரிப்பூக்கள் போல
இத்திரைப்படமும் இன்னும் பல ஆண்டுகள் நிலைத்து நிற்கப் போகிறது. இனிமேல் வரப்போகும் பல சுயாதீனப் படைப்புகளுக்கு ‘வழக்கு எண் 18/9’ என்ற இப்படமே முன்னோடி என்பதால், இப்படகுழுவினர் அனைத்து திசைகளிலிருந்தும் பாராட்டுகளுக்கு தகுதியானவாராகிறார்கள். இக்குழுவினரை மனவிட்டு பாராட்டிடுவோம்…

உலகத் திரைப்படவிழாவிற்க்கு செல்லும் தமிழ் படங்கள் அனைத்தும் இந்திய துணைக்கண்டத்தை ஒரேயடியாக தாண்டி விடுவதாலோயென்னவோ, தென்னாடிற்க்கு வெளியே தமிழ் படங்களை பற்றி யாருக்கும் தெரிவதில்லை.அந்த நிலையினை தமிழ் படைப்பாலிகள் மாற்ற வேண்டும். முதலில் இந்தியா முழுக்க இது போன்ற சிறந்த தமிழ் படங்கள் எடுத்துச் செல்லப் பட வேண்டும்.

ஒரு படைப்பின் வெற்றி மக்களின் ரசனையையே வெளிப்படுதுகிறது. தரமான படங்கள் தோற்பதும், மசாலா படங்கள் வெற்றி பெறுவதும் தாழ்ந்த ரசனையையே காட்டுகிறது. அவ்வாறான மசாலா தமிழ் படங்கள் சில இந்திய அளவில் முன்னமே உலவத் தொடங்கிவிட்டதால், தமிழ் திரையுலகின் மீது ஒரு வகையான கீழ்தர்மான பார்வையே படர்ந்துள்ளது.

‘வழக்கு எண் 18/9’ போன்ற ஒரு உன்னத படைப்பு இந்திய அளவில் எடுத்துச் செல்லப்படும் பட்சத்தில், இது இன்னொரு ‘பதேர் பாஞ்சாலி’ என கருதப்படும். தமிழ் படங்கள் மீதான மதிப்பு உயரும். இங்கு நிறைய தகுதியான படைப்பாளிகள் இருப்பதால், அவர்கள் சிறந்த தமிழ் படங்களை இந்தியா முழுக்க இனியாவது எடுத்து சென்று தமிழ் திரையுலகின் மதிப்பினை உயர்த்துவார்கள் என நம்புவோம்…

 

அரவான்

விமர்சனம் என்ற பெயரில் ஒரு திரைப்படத்தின் முழு கதையையும் விவரிப்பது, உலக சினிமாவின் உன்னத ரசிகனாகிய நான், என்னைப் போன்ற ரசிகர்களுக்கு செய்கிற துரோகம். அதே சமயத்தில் சில முக்கிய காட்சிகளை விவரிக்காமல் விமர்சனம் எழுதிவிடமுடியாது…

அருமையான ஒளிப்பதிவு ,படத்தொகுப்பு, கலைஇயக்கம், அருமையான நடிகர்கள்  என்று பல அனுகூலமான விடயங்களிருந்தும் பல காரணங்களால் ‘ அரவான்’ ஒரு சராசரி படமாகவே விளங்குகிறது.

Image

உங்கள் நேரத்தை நான் வீணடிக்க விரும்பாததால், இதை சராசரி படம் என முன்னமே சொல்லிவிடுகிறேன். வலுவற்ற திரைக்கதையால், பல புது முயற்சிகள் இருந்தும் இதை தலைச் சிறந்த பட வரிசையில் வைக்க முடியாததற்கான கட்டாயத்திற்கு நாம் ஏன் தள்ளப் படுகிறோம் என்பதை மட்டும் இங்கு கவனிப்போம்.

 பீரியட் திரைப்படம் என்பது காலத்தோடு பின்னோக்கி சுழன்று பிற்கால மனிதர்களை திரையில் விளையாடவிடுவது. அம்மாதிரியான திரைப்படங்களில் இசையும் சேர்ந்து பின்னோக்கி சுழல வேண்டும். இத்திரைப்படத்தின் இசை சிறந்த இசையே எனினும் அது பல இடங்களில் முன்னோக்கி சுழன்று விட்டது. படம் ஆரம்பித்த சில நிமிடங்களில், கள்வர்கள் கூட்டமாக ஆடும் அந்த காட்சியில் பின்னனியில் ஒலிக்கும் இசை கார்ஸ் இன்ஸ்ட்ருமெண்டலின் (Corrs instrumental) இன்னொரு வகை.

பீரியட் படங்களை இரு வகையில் எடுத்திட முடியும். ஏதோ ஓர் காலத்தை தேர்ந்தெடுத்து அக்கால விடயங்களை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைப்பது ஒரு வகை. உதாரணம், வாகை சூடவா.

இன்னொரு வகை,ஒரு ஜனரஞ்சகமான கதையை எடுத்துக் கொண்டு அதை ஏதோ ஓர் காலத்தில் கொண்டு பொருத்துவது, உதாரணம் சுப்ரமணியபுரம்.

அரவான் திரைப்படத்தின் கதை கள்வர்களின் வரலாறு எனக் கூறப்பட்டாலும்.அவர்களின் வரலாறு ஆழமாக காட்டப்படவில்லை.வசனங்களை பேசும் விதம் ஓர் சமகால படத்தைப் போலவே தொனிக்கிறது. ஒரு சமகால மதுரை ஸ்கிரிப்டை பீரியட் படமாக செய்துவிட்டனர் என்றே சொல்லலாம்.

கதை பயணிக்கும் காலம் கி.பி 18ஆம் நூற்றாண்டு என்று மட்டும் சொல்லப்படுகிறது. இது இயக்குனரின் புத்திசாலிதனத்தையே காட்டுகிறது. காரணம், குறிப்பிட்ட வருடத்தைக் கொண்டு கதை எழுதும்போது, நிறைய மெனக்கெட வேண்டியிருக்கும். காட்சிகள் சரியாக அமையாத பட்சத்தில், வரலாற்றில் பிழையும் வரலாற்றுப் பிழையும் நிகழ்ந்திடும். வரலாற்றைக் குறிபிடாததால் ஏதோ ஒரு காலத்தில் இம்மாதிரியான கூட்டம் வாழ்ந்திருக்கலாம் என்று எடுத்துக் கொள்ளலாமெனினும் காட்சிகளை மிகவும் மேலோட்டமாக காட்டியதை தவிர்த்து சற்றே ஆழமாக காட்டியிருக்கலாம்.

மற்றபடி காட்சியமைப்பில் பீரியட் திரைப்படத்திற்கான நியாயம் செய்திருக்கின்றனர்.பீரியட் திரைப்படமென்பதற்கிணங்க அனைத்து காட்சிகளும் அருமையாக அமைந்திருக்கிறது. ஒட்டுமொத்த படக் குழுவும் கடினமாக உழைத்திருக்கிறது என்பது தெளிவு. அதனால் அவர்களை பாராட்டிவிடுவோம்.

சில இடங்களில் கதாநாயகியின் உடையமைப்பு நவீனமாக தோன்றினாலும், அவர்களின் நடிப்பு அருமையாக அமைந்திருப்பதால் சிறு சிறு குறைகளை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் இங்கு படம் பெரிதளவில் சொதப்புவது திரைக்கதையிலேயே. மூலக்கதையெனும் முடிச்சு திரைக்கதையில் ஒழுங்காக அவிழ்க்கப் படவில்லை.

படம் முழுக்க நிரம்பிக் கிடக்கின்றன கிளைக் கதைகள்,
காவல் கோட்டம் நாவலைப் போல.நாவலின் முக்கிய பலம்
கிளைக் கதைகள்,படத்தின் முக்கிய பலகீனம்  கிளைக்
கதைகள்.

ஒரு நாவலை எப்படி வேண்டுமானாலும் எழுதலாம்.
அது படைப்பாளிகளுக்கும் படிப்பாளிகளுக்கும் மட்டும்
சொந்தமானது. ஆனால் சினிமா சற்றே வித்தியாசமானது,
பல தரப்பு மக்களும் பார்ப்பது. ஒரு நாவலில் பத்து பக்கம் எழுதிவிட்டு திடிரென்று கதையை 2௦௦ வருடத்திற்கு பின்
எடுத்து செல்ல இயலும். ஆனால் சினிமாவில் அது சாத்தியமன்று.

எவ்வளவு பெரிய திரைக் கதையாசிரியராக இருந்தாலும்
திரைக்கதைக்கென வரையறுக்கப்பட்டசில அடிப்படை
விதிகளை பின்பற்றியே தீர வேண்டும். அதில் மிகவும்
அடிப்படையாக கருதப் படுவது “Inciting incident”.

இந்தப் படத்தில்“Inciting incident”
நிறைய வருவதே படத்தின் பலகீனம்.
“Inciting incident”எனப்படுவது ஒரு கதையின்கருவை
தூண்டிவிடுவது. காதல் கதை என வைத்துக் கொண்டால்,
கதாநாயகன் கதாநாயகியை முதன் முதலில் பார்ப்பது, “Inciting incident”.

அங்கிருந்து கதை தன் நிஜப் பாதையில் பயணிக்க வேண்டும்.

இத்திரைக் கதையில் மிக பிரம்மாண்டமாக திட்டம்
போட்டு கள்வர்கள் கொள்ளையடிக்கும் காட்சியில் படம்
தொடங்குகிறது. கொத்தாக திரியும் கள்வர்கள், தங்கள் ஊர்
பேரை சொல்லி வேறொருவன் திருடிகிறான் என்று
தெரிந்ததும் கொதிக்கிறார்கள். அவன் யார்
என்று கண்டுபிடித்து தருவதாக அவர்கள்
பாளையக்காரர்களிடம் வாக்களிக்கும் போது கதை தூண்டப்படுகிறது.

இங்கு ஒரு Racy Entertainer தொடங்கிவிட்டது என்றெண்ணும் போது,
அடுத்த கட்சியிலேயே கள்வன் கண்டுபிடிக்கப் பட்டு எதிர்பார்பு சோடை
போய்விடுகிறது.

பின்னொரு காட்சியில் களவாணி கூட்டத்திடம் ஒரு பெரியவர் வந்து, “முடிஞ்சா ஆறு தலைமுறையா யாரும் களவாட முடியாத அந்த கோட்டையில களவாடிகாட்டுங்க” என்று சவால் விடுகிறார். ஏதோ ஒரு மிகப் பெரிய ஆச்சர்யம் காத்திருக்கிறது என்றெண்ணும் போது,அந்த காட்சியும் சப்பையாக முடிந்துவிடுகிறது.

இவ்வாறு ஒவ்வொரு காட்சியிலும் எதிர்பார்பைக் கூட்டி அடுத்து வரும் காட்சிகளில் அதை தக்க வைத்துக் கொள்ள இயலாமல், திரைக்கதை திணறுகிறது. இப்பாணி இறுதி வரை தொடர்வதால், பிரம்மாண்ட திரைக்கதைக்கு இருக்க வேண்டிய ‘கெத்’ மடிந்துவிடுகிறது.

படத்தின் டைட்டிலில் கூடுதல் கதை (Additional Story) வசந்தபாலன் என்று போடுவதை காணும் போதே நெருடல் ஏற்படுகின்றது.

கதை,வசனம்- சு.வெங்கடேசன்

கூடுதல் கதை, திரைக்கதை, இயக்கம்-வசந்தபாலன்

கூடுதல் கதை என்பது வழக்கத்திற்க்கு மாறான ஒரு சொல். ஒரு கதையை நாவலிலிருந்தோ, வேறு யாரிடோமோ இருந்து பெற்றபின். திரைக்காக சில கதைகளை மூலக் கதையோடு பிரத்யேகமாக இணைக்கும் போது ‘Screen Story’ என்பார்கள். அதனை திரைக்கான கதையென்று குறிப்பிடலாமேயொழிய ‘கூடுதல் கதை’என்று குறிப்பிட இயலாது.

தமிழ் சினிமாவில் கிரெடிட் சிஸ்டம் (Credit System)  ஒழுங்காக பின்பற்ற படுவதில்லையென்பதற்க்கு இதுவே சான்று. காவல் கோட்டம் நாவலே திரைக்கதை போன்றுதான் எழுதப்பட்டிருக்கும். ஆனால் இங்கு தனியாக திரைக்கதை எழுதப்பட்டிருக்கும் பட்சத்தில், மூலக்கதை-சு. வெங்கடேசன். திரைக்கான கதை, திரைக்கதை- வசந்தபாலன் என்று குறிப்பிட்டுருக்க வேண்டும். அதைவிடுத்து ‘கூடுதல் கதை’ என குறிப்பிட்டது ஒரு எழுத்தாளனை அவமதிக்கும் செயல்.

மிகப்பெரிய திரைக்கதையாசிரியரான திரு.சுஜாதா அவர்களின் திறமையை உறிந்துக்கொண்டு வெறும் ‘வசனகர்த்தா’ என்றழைத்த தமிழ் சினிமா, சு.வெங்கடேசனுக்கு கிரெடிட் வழங்காததை எண்ணி ஆச்சர்யப்படுவதற்கில்லை.

இது ஒரு புறமிருக்க, இன்னொரு புறம் எதிர்பார்புகளை தக்க வைத்துக் கொள்ள இயலாமல் திணறும் திரைக்கதை இரண்டாவது பகுதியில் ஒரு சராசரி தமிழ் அழுகாச்சிப் படமாக உருமாறி எப்போது முடியுமென என்னும் அளவுக்கு நீண்டுக்கொண்டே போகிறது.

படத்தின் பலக்காட்சிகளில் மெல் கிப்சனின் (Mel Gibson) தாக்கத்தை தவிர்திருக்கலாம். அபகாலிப்ட்டோவின் (Apacalypto) மறுபதிவோ என என்னும் அளவுக்கு பல இடங்களில் அரவான் கதாபாத்திரம் அபகாலிப்ட்டோவின் ஜாகுவார் பாவ் (Jaguar paw) கதாபாத்திரதை நினைவு படுத்துகிறது. சில இடங்களில், குறிப்பாக படத்தின் இறுதி காட்சி ‘Brave Heart’ வில்லியம் வாலாசை (William wallace) ஞாபகப் படுத்துகிறது. அரவானிடம் குதிரையில்லை என்பதே பெரிய வித்தியாசம்.

கோட்டைக் கலவின் இறுதிக்காட்சியை பார்க்கும் போது, புதுபேட்டை படத்தில் கொக்கி குமாரை அவனின் நண்பர்கள் வில்லனிடமிருந்து மீட்டுக் கொண்டுவரும் காட்சி நினைவில் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

படத்தில் தேவையற்ற ஸஸ்பென்ஸ் நிறைய வைக்கப்பட்டிருக்கிறது. திரைக்கதையில் மூன்று விதமான ஸஸ்பென்ஸ் வைக்க முடியும்

  1. திரையினுலுள்ள கதாபாத்திரங்களுக்குள் வைக்கப்படும் ஸஸ்பென்ஸ்
  2. திரைக்கு வெளியிலிருக்கும் பார்வையாளர்களுக்கு வைக்கப்படும் ஸஸ்பென்ஸ்
  3. இருவருக்கும் வைக்கப்படும் ஸஸ்பென்ஸ்

எந்த வகை ஸஸ்பென்ஸ் வைத்தாலும் பார்வையாளர்களுக்கு ஆர்வம் ஏற்பட வேண்டும். இங்கு அது ஏற்பட மறுக்கிறது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.

இப்போதெல்லாம் low cost compositing, கிராபிக்ஸ் போன்றவை மிகவும் சாதாரணமாகிப் போய்விட்டது. அபப்டி இருந்தும் ஏன் தமிழ் சினிமா இன்னும் கேவலமான கிராபிக்ஸ் காட்சிகளை வைத்துக் கொண்டிருக்கிறது என்று இன்னும் விளங்கவில்லை. நல்ல கிராபிக்ஸ் அமைக்க முடியாத பட்சத்தில் கிராபிக்ஸ் காட்சிகளை தவிர்பதே புத்திசாலிதனம். அரவான் திரை படத்தில் கோட்டை களவின் போது உபயோகப் படுத்தப் பட்டுள்ள கிராபிக்ஸ் காண சகிக்க வில்லை. ஆயிரத்தில் ஒருவன் படம் கிராஃபிக்ஸில் சறுக்கியதை கண்டும் இன்னும் தமிழ் சினிமா பாடம் கற்கவில்லை.

அரவான் என்ற மகாபாரதக் கதாபாத்திரத்தால் கவரப்பட்டு,பின் அந்த கதாபாத்திரம் போலவே  திரைப்படத்தின் நாயகன் பாத்திரமும் அமைய வேண்டும் என்ற கட்டாயத்தில் திரைக்கதை எழுதியுள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது. அதனால்தான் இப்படி ஒரு கிளைமாக்ஸ் வைக்கப் பட்டிருக்கிறது…

இறுதியில் ‘மரண தண்டனையை ஒழிப்போம்’ என்று ஒரு கருத்துசொல்லப்படுகிறது. இது வந்த வரை லாபம் என்ற நோக்கில் சொல்லப் பட்ட கருத்தே ஒழிய உன்னத நோக்கில் சொல்லப் பட்ட கருத்தன்று. ஏதோ ஒன்றை காட்டிவிட்டு இறுதியில் ஏதோ ஒரு கருத்தினை சொல்வதை மேடை நாடகத்தில் வேண்டுமேனில் ஏற்றுக் கொள்ளலாமேயொழிய திரைப்படத்தில் ஏற்றுக் கொள்ளயியலாது.

மேலும் பிரிட்டிஷ் காலத்தில் நரபலி தடை செய்யப் பட்டது என படத்தில் குறிப்பிட்டுள்ளனர். அதே பிரிட்டிஷ் காலத்தில்தான் யானையை வைத்து மனிதன் கழுத்தை மிதித்து கொள்ளும் வழக்கம் பின்பற்றப் பட்டது என்பதை நினைவில் கொள்வோம்.

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் வந்துக் கொண்டிருந்த பெரும்பாலான படங்கள் பீரியட் படங்களே. காலப் போக்கில் அவ்வாறான படங்கள் மறைந்து விட்டது. பீரியட் படங்களுக்கு நிறைய உழைக்க வேண்டியிருக்கும். போட்ட காசுக்கு உத்திரவாதமில்லை. அனைத்தையும் கடந்து, தைரியமாக இப்படத்தை எடுத்த ‘அரவான்’ குழுவிர்க்கு பாராட்டுக்கள். பெரும் உழைப்பிருந்தும் படம் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்ப்படுத்தவில்லை.

இதை ஒரு நல்ல படம் என்பதோடு மட்டும்  நிறுத்திக் கொள்வோம். ‘தலைசிறந்த படம்’ என்னும் வரிசையில் இப்படத்திற்க்கு இடமளிக்கயியலாது.

100 வருடங்களுக்கு பின் தமிழ் சினிமாவின் தலைசிறந்த படங்களை வரிசைப்படுத்த முயன்றால், அதில் உதிரிப்பூக்கள், வீடு, ஹேராம், விருமாண்டி, பருத்திவீரன், வாகைசூடவா, ஆரண்ய காண்டம் போன்ற படங்கள் நிச்சயம் இடம்பெறும்.அதனோடு சேர்த்து ‘அரவான்’ படத்தையும் வைத்திடயியலாது. தலைசிறந்த படங்களை அடுக்கும் மேடை மிகவும் குறிகியது,. அங்கே நிறைய படங்களை திணித்திட இயலாது.

தமிழ் சினிமாவை உன்னிப்பாக கவனிப்போமேயானால் பெரும்பாலான இயக்குனர்கள் தங்களின் மூன்றாவது-நாலாவது படத்தில் தன்னை தானே கடவுள் என்று கருதிக்கொண்டு, தான் படைப்பதே வேதம் என்ற எண்ணத்தோடு சறுக்கியது விளங்கும். அந்த எண்ணங்களை அடக்கியாளும் இயக்குனரே பலவருடம் ஆட்சிப் புரிகிறான்.

இங்கு இன்னும் நல்லபடம் எது, மாற்று சினிமா எது,  கலைப்படைப்பு எது, என்று வகைப்படுத்த இயலா குழப்பம் நிலவுகிறது.. மாயை நிறைந்த இச்சூழ்நிலையில் நல்லக்கதைக்களமிருந்தும், திறமைசாலிகள் பலரிருந்தும், திரைக்கதையில் சோடைப் போன அரவான் திரைப்படத்தை வெறும் சராசரி படமாக கருதமுடியுமேயன்றி தலைசிறந்த படமாக கருதயியலாது.

இல்லை, இது தலை சிறந்த படம்தான் என கூக்குரலிடுபவர்கள் கூக்குரலிட்டுக்கொள்ளட்டும்.

IMDB தமிழ் பட தர வரிசையில், தமிழ் ரசிகர்களின் உபயத்தால் ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ போன்ற படங்கள் முதல் பத்து இடத்திற்க்குள் இருக்கிறது. அதைப் பார்க்கும் உலக-உன்னத சினிமா ரசிகன் எவனும் தன்னையறியாமலேயே சிரித்துவிடுவான்.

‘அரவான்’ மிக மிக அருமையான-தலைசிறந்த படமென்று சொல்லுபவர்கள் சொல்லிக் கொள்ளட்டும். அதனை கண்டு, உலக சினிமாவின் தீவிர ரசிகர்கள் எங்கோவொரு மூலையில் சிரித்துக் கொண்டிருப்பார்கள்……

மயக்கம் என்ன

மயக்கம் என்ன

தமிழ் சினிமாவில் தனிமனித உணர்வுகளை மையப்படுத்தி
எடுக்கப்பட்ட படங்கள் மிகக் குறைவு. ஒரு மனிதனின்
வாழ்கையை நேர்கோட்டு சித்திரமாக காட்ட யாரும் அதிகம்
முயற்சித்ததில்லை. தமிழ் சினிமாவுக்கென எழுதப்பட்ட
இலக்கணம் அவ்வாறான படங்களை ஆதரித்ததில்லை.

இங்கு காதலை, காதலியை துரத்திப் பிடிக்கும் மனிதர்களைப்
பற்றிய படங்களே அதிகம். தன் லட்சியத்தை துரத்திப்
பிடிக்கும் மனிதர்களைப் பற்றி  யாரும் படப் பிடிக்க
விரும்பியதில்லை.  ஒவ்வொருவரும் வாழ்கையில்  ஏதோ
ஓர் லட்சியத்தை அடைய போராடிக் கொண்டிருக்கிறோம்,
அவ்வாறான போராட்ட களங்களை படம் பிடிக்க தமிழ்
சினிமா ஏதோ ஒரு வகையில் அஞ்சிக்கொண்டிருக்கிறது.

“ஆறில் இருந்து அறுபது வரை” படத்திற்கு பின் எந்த ஓர்
படமும் தனி மனித உணர்வினை பேசிடவில்லை.
இங்கு குறிப்பிடப்படுவது மெல்லிய உணர்வுகளை.

போலீஸ் ஆவதை லட்சியாமாக கொண்டு ஆக்ரோசமாக
பயணிக்கும்        கதாநாயகனைப் பற்றிய படங்கள் நிறைய
வந்துள்ளது. அந்த படங்களில் மசாலாத்தன்மையே அதிகம்
இருந்ததேயன்றி உணர்வுகளின் காட்சியமைப்பு மிகக் குறைவு.

அப்படி மசாலா காட்சிகளை அதிகம் தவிர்த்து, எதார்த்தத்தோடு
பயணிக்கும் படமே ‘ மயக்கம் என்ன’

வனவிலங்கு புகைப்படக்காராரக வர விரும்பும் ஓர் சராசரி
இளைஞன் தன் வாழ்வில் சந்திக்கும் போராட்டங்களே இப்படம்.
பல போராட்டங்களுக்கு பின் அவன் இறுதியில் தன் லட்சியத்தை
அடைகிறான். ஆங்கிலத்தில் வந்த Pursuit of happiness, Cinderalla man,
Beautiful Mind போன்று இதுவும் உங்களை எந்த வகையிலும்
ஏமாற்றாத ஓர் அருமையான படம்.
‘வறுமையின் நிறம் சிவப்பு’  படத்திலும் கதாநாயகன்
இலட்சியத்திற்காக போராடுவார். ஆனால் அதில் வரும் கதாநாயகன்
சித்தாந்தம்  பேசும் ஓர் மனிதனாக காட்டபட்டிருப்பார். ஆனால்
மயக்கம் என்ன படத்தின் கதாநாயகன் ஓர் சாதரணமானவன்.
உங்களையும் என்னையும் போன்று. அதுவே இந்த படத்தின்
மிகப்பெரிய பலம். ஒரு காட்சில் கதாநாயகன் கண்ணீர் வடிப்பார் ,
“எனக்கு வேற எதுவுமே தெரியாது யாமினி  “.
இங்குதான் கதாபத்திரம் தன் இயலாமையை ஒத்துக்கொள்கிறது.
இதுவே தனி மனித யதார்த்தம் …

சில படங்கள் மட்டுமே , கதையை பல முறை கேட்டாலும்.
திரைக்கதையையே படித்தாலும், பார்க்கும் போது சலிப்பு தட்டாது.
மேற்கூறிய அணைத்து ஆங்கில படங்களும் அந்த
வகையை சார்ந்தவையே.அதற்க்கு காரணம்
அந்த படங்களில் நடித்த நடிகர்களின் திறமை.
மயக்கம் என்ன படத்திலும் நடிகர்கள் பிளந்து கட்டுகிறார்கள்.
குறிப்பாக தனுஷ், ரிச்சா, சுந்தர்..

இது அருமையான படம் என சிலரும், மிகவும் மெதுவான
திரைக்கதைஎன சிலரும், இதற்குமுன் தன்
படத்தில் வைத்த காட்சிகளையே செல்வா
மீண்டும் வைத்துள்ளார் என சிலரும் குறிப்பிடுகின்றனர். ஆனால்
இவை அனைத்தையும் தவிர்த்து மயக்கம் என்ன திரைப்படம்
நிறைய ஆக்கப் பூர்வமான விமர்சனங்களுக்கு வழிவிட்டு
செல்கிறது .

தமிழ் திரைப்படங்களில் ஒரு பெண்ணின் கதாபாத்திரத்திற்கு
முக்கியத்துவம் கொடுத்து வந்த படங்களை விரல் விட்டு
எண்ணிவிடலாம். மொழி, தென்மேற்கு பருவகாற்று போன்ற
படங்கள் பெண்ணின் கதாபாத்திரத்தை முன்னிறுத்தியே
எடுக்கப்பட்டன . ஆனால் ஓர் கதாநாயகனின் வெற்றிக்கு
நாயகிதான் காரணம்  என குறிப்பிடும் படங்கள் தப்பி தவறியும்
தமிழில் வந்ததில்லை. நம் சமுதாயம் ஆண் ஆதிக்கம் நிறைந்தது.
நாம் ஒத்துக் கொள்ள மறுத்தாலும் அதுவே உண்மை.
இதற்க்கு முன் பெண்களை முன்னிலைப் படுத்தி வந்த படங்கள்
சற்றே வேறு வகையை சார்ந்தவை . முதல் பாதியில் நிறைய
ஆட்டம் போடும் கதாநாயகன் இரண்டாம் பாதியில்
திடிரென நோயில் படுத்திடுவார்.
கதாநாயகி மஞ்சள் அல்லது சிகப்பு புடவை உடுத்தி ‘அம்மா அம்மா ‘
என கதறிடுவார்.  ஏதோ ஓர் பிரபல நடிகை அம்மனாக வந்து
கதாநாயகனை காத்திடுவார். இது போன்ற படங்களை பற்றி
இங்கு பேசவில்லை. அது பெண்களை மூடர்களாக காட்டி
பணம் சம்பாதித்த ஆணாதிக்க படங்கள்

மயக்கம் என்ன படத்தில் காட்டப்பட்டிருக்கும் மனைவி ,
படத்திலேயே குறிப்பிட்டது போன்று ஓர் “இரும்பு பெண்” .
Cinderalla Man படத்தில் வரும் மனைவியை போல. கணவனின்
எல்லா தோல்விகளிலும் உடனிருந்து அவனை முன்னிற்கு
கொண்டு வரும்  ஓர் அருமையான மனைவி….
”மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்”
-கண்ணதாசன்…

படத்தில் இன்னொரு முக்கிய விஷயம் இயக்குனர் தன்
நடிகர்களிடம் வைத்திருக்கும் நம்பிக்கை.காரணம் நிறைய
அழுவை காட்சியில் தைரியமா க்ளோஸ் அப் வச்சிருக்கார்.
“உதிரிப்பூக்கள்” படத்திற்கு
பிறகு அணைத்து கதாப்பாத்திரங்கள் மீதும் நம்பிக்கை வைத்து
காட்சிகள் அமைக்கப்பெற்ற  படம் இதுவாதான் இருக்கமுடியும்

செல்வா இந்த படத்துல எங்கேயும் சறுக்கல.. ஆயிரத்தில் ஒருவன்
இரண்டாம் பாகத்துல இருந்த அந்த தலைகனம் இதுல இல்ல.
ரொம்ப எளிமையா, ஆனா அதே சமையம் அருமையாகவே
இந்த படத்தை கொடுத்திருக்கிறார்.

இந்த படம் A beautiful mind படத்தின் தழுவல்னு சொல்றதெல்லாம்
பொய். A beautiful mind படத்தில் இறுதிகாட்சியில் விருது வாங்கிட்டு
ஹீரோ தன் மனைவிக்கு நன்றி சொல்லுவார். அதே மாதிரி ஒரு
காட்சி இப்படத்தில் இருப்பதனால் இந்த படத்த தழுவல்
படமென்றேல்லாம் சொல்ல முடியாது.

தமிழ் சினிமாவ பொறுத்த வரையில் கெளதம் மேனனும்,
செல்வராகவனும் திரைக்கதை எழுதுற வேகம்
ரொம்ப பிரமிக்கவைக்கிறது.
திடீர் திடிர்னு படம் எடுத்து மிரட்றாங்க
(எங்க இருந்து கதைய  உருவுறாங்க
என்பது தற்போது தேவைற்ற விடயம் )
செல்வா படங்களில் வழக்கமா கதாநாயகிய
ஒரு போகப் பொருளாதான்
சித்தரித்திருப்பார்.
(அவ்வாறெனினும் அதில் விரசம் இருக்காது.)ஆனால்
இந்த படத்தில் வழக்கத்திற்கு மாறாக
கதாநாயகிய ரொம்ப அருமையா சித்தரித்திருக்கார்.

தனுஷ் தேர்ந்த நடிகர் என மீண்டும் நிருபித்துள்ளார். புதுப்பேட்டை
படத்திலேயே அப்பாவி இளைஞனாகவும், மிக பெரிய தாதாவாகவும் .
முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அதே போன்று
இப்படத்திலும் ஓர் மெத்தன புகைப்பட கலைஞனாக
இருந்து பின் ஓர் தலை சிறந்த
கலைஞாக மாறும் அந்த மாறுதல்,நடிப்பின் உச்சம்.

கதாநாயகியும் தன் பங்கிற்கு அருமையான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார்.
வெறும் முக பாவத்திலேயே பல இடங்களில் மனதை கொள்ளைகொள்கிறார்.

படம் புகைப்படக் கலைஞன் சம்பத்தப்பட்ட படம் என்பதால்,
ஒளிப்பதிவாளரும் வித்தை காட்டியுள்ளார். அனைவரும் தங்கள்
வேலையை செவ்வன செய்துள்ளனர்…

இசை நன்றாக இருந்தது என்பதோடு நிறுத்திக்கொள்வோம். பல இடங்களில்
ஜி.வி.பிரகாஷின் இசை அவரது பழைய படங்களை ஞாபகபடுத்துகிறது.
(அந்த பழைய படங்களின் இசையும் பிரெஞ்சு இசையை ஞாபகப்படுத்தும்.
அது வேறு விடயம். ) இயக்குனர் தன் பழைய இசையமைப்பாளரோடு
கூட்டணி வைத்திருந்தால் நிச்சயம் பத்து தீம் மியூசிக்யாவது
கிடைத்திருக்கும்.ஆனால் இப்படத்தில் ஒரே தீம் மியூசிக் தான்
சுற்றி சுற்றி வந்துக் கொண்டிருக்கிறது.
அதுவும் எரிக் சேரா வின்  (Eric Serra) இசையை நினைவு படுத்துகிறது

தமிழ் சினிமாவில் இப்போதெல்லாம் கொரிய ஜப்பானிய
திரைப்படங்களின் தாக்கம் அதிகாமாக தெரிகிறது.
சேரன்,மிஸ்கின் தொடங்கி இப்போது இந்த படத்திலும்
அந்த தாக்கம் தென்படுகிறது.

முன்பெல்லாம் கதை, திரைகதைகளே தழுவப்படும்.
இப்போது படத்தை எடுக்கும் முறை (Way of Making) தழுவப்படுகிறது.
ஒரு காட்சியை முடிக்கும் போது கதாபாத்திரங்களின் உணர்வுகளை,
முக பாவங்களை சில நொடிகள் பதிவு செய்து பின் அடுத்த காட்சிக்கு
நகரும் முறையை நீங்கள்  கொரிய ஜப்பானிய திரைப்படங்களில்
காணலாம். அது போன்ற காட்சிகள் இப்போது தமிழிலும்
தொற்றிக்கொண்டுவிட்டது. இந்த படத்திலும் அதை நீங்கள் உணரலாம்.

அருமையான வசனங்களை  இந்த படத்தில் செல்வா எழுதியுள்ளார்.
இதுவரை ஆங்கிலத்தில் லட்சியவதிகளைப் பற்றி எடுக்கப்பட்ட
அணைத்து படங்களிலும் வசனங்கள் முக்கிய பங்கு வகித்தன.
Rocky, Pursuit of happiness  போன்ற படங்களில் வருவது போல
இந்த படத்திலும் ஊக்கம் அளிக்ககூடிய வசனங்கள் சில உண்டு.

“மனசுக்கு புடுச்ச வேலைய செய்யனுங்க. இல்லனா செத்துரனும்”
என தனுஷ் பேசும் வசனம் பாலோ கோயேலோ (Paulo coelho)
நாவல் படிச்ச ஒரு உணர்வ ஏற்படுத்துது.

மொத்ததுல படம் நிச்சயம் பார்ப்பவர்களை மயக்கிடும் …
சில பேர் படம் ரொம்ப  ஸ்லோவா  நகர்றதா குறை சொல்றாங்க…

ஆனா நம்ம வாழ்க்கையே ஸ்லொவ் தாங்க..

கில்லி மாதிரி பாஸ்டா படம் வேனும்ன,
அடுத்த வாரம் ஒஸ்தி ரிலீஸ் ஆகுது..அத போய் பாருங்க…

7 ஆம் அறிவு

7 ஆம்அறிவு

முன்குறிப்பு 

இந்த படத்திற்கு விமர்சனம் எழுத வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை..ஆனால் ஓர் தவறான முன் உதாரணமாக இத்திரைப்படம் அமைந்து விடக்கூடிய வாய்புகள் அதிகமுள்ளதால் இதை எழுதுகிறேன்.. கல்லாவை நிரப்ப கோயபெல்ஸ் (Goebbels) வேலையை நன்றாகவே செய்துள்ளனர்.. மரியான  அசுயேல  (Mariana Azuela ) எழுதிய ஓர் நாவலில் (Underdogs), எதுக்கு போராடுகிறோம் என்று தெரியாமலேயே ஓர் கூட்டம்  போராடும்.(அண்ணா ஹசாரே கூட்டம்  போல்! )

 அதுபோல் இந்த படம் பார்த்த சிலர் திடிரென தமிழ் உணர்வு பெற்று ஆனந்த  கூத்தாடுகிறார்கள்…தமிழ் உணர்வு என்பது இலக்கியத்தில் இருக்கவேண்டும்…சக தமிழனின் மீது கொண்ட அக்கரையில் இருக்க வேண்டும்…சங்க தமிழை பேணி காப்பதில் இருக்கவேண்டும்..சமகாலத்தில் தமிழுக்கு செய்யும் தொண்டில் இருக்க வேண்டும்..அதை விடுத்து பழைய பெருமைகளை பேசிக்கொண்டிருப்பதில் எந்த பயனுமில்லை… …

7 ஆம்அறிவு

மனிதனின் ஆறாம் அறிவே அதிகம் பயன்படுத்தப்படாத ஓர் உலகத்தில், தன் ஏழாம் அறிவை உபயோகப் படுத்தி ஓர் கலை காவியத்தை படைத்துள்ள இயக்குனருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். இப்படி சொல்லலைனா என்ன தமிழனே இல்லன்னு சொல்லிருவாங்க. ஏனா இந்த படத்துல தமிழனுக்கு ஆதரவா நாலு வசனம் வருது. அதுக்காக ஊர்ல இருக்குற பச்சை தமிழனுங்க பல பேரு என்னவோ இந்த படத்துக்கு அப்புறம்தான் தான் தமிழன்னு உணர்ந்த மாதிரி  துடிக்கிரானுங்க. நாமும் துடிப்போம். உணர்வு இருக்கிற மாதிரியாவது நடிப்போம்.

தூள் படத்தில் வில்லன் ஒரு அறிக்கை விடுவார்,:” உடம்புல தமிழ் ரத்தம் ஓடுற ஒவ்வருத்தனும் இந்த உண்ணாவிரதத்துக்கு வரணும் “.

உடனே எல்லாம் உண்ணாவிரதத்துக்குஓடுவானுங்க. அது மாதிரி தான் இந்த படமும்.

தமிழ் மீது பற்றுள்ள, தமிழ் இலக்கியத்தின் மீது தீராத ஆர்வமுள்ள பலரும், பல வருடமா சொல்லிகிட்டிருக்குற ஒரு விடயத்தின் சிறு பகுதியைதான் திரு.முருகதாஸ் இந்தபடத்தில் சொல்ல முயற்சித்திருக்கிறார். ஆனா ரொம்ப உணர்ச்சிவச பட்டதனாலோ என்னவோஅத அவர் ஒழுங்கா சொல்லல.

தமிழனின் பெருமைய பத்தி நிறைய சொல்லலாம்.அதை பத்தி எந்த ஐயப்பாடுமில்லை.மிதக்கும் தன்மையை (buoyancy) ஆர்கிமேடிசுக்கு (Archimedes) முன்பே சொன்னது தமிழன். அணுவை கூராக்கும் (divisibility of atom) தன்மையை கண்டவன் தமிழன்.ஆனா ஏழாம் அறிவ பொறுத்த வரையில் கருத்துக்கள் எந்த வகையில் சொல்லப்பட்டதுன்னு இன்னும் தெரியுல.

 அறுபது வருடமா திராவிட கட்சிகள் தமிழ் என்ற ஆயுதத்த வைத்து தமிழன ஏமாத்துற மாதிரியே இந்த படத்துலயும் கல்லா கட்டுறதுக்காக தமிழன கேனையன் ஆக்கிடாங்களோ   !

 முதல் இருபது நிமிடம் 

 முதல் இருபது நிமிடம்  ஆவணப் படம் பாணியில் அமைந்துள்ளது.ஆவணப்படமென்றால் உண்மை இருக்கணும். ஆனா இதுல போதிதர்மன ரொம்ப நல்லவரா வல்லவரா  காட்டனும்  என்பதற்காக ரொம்ப சரடு திருசுட்டாங்க, ஏதோ ஏசுநாதர் ‘கருணாமூர்த்தி’ சீரியல் பார்த்தமாதிரி இருந்துச்சு. இவரு போவாராம், நோய குணப்படுதுவாரம், அப்பறம் சண்ட போடுவாராம், அப்பறம் விஷம் குடிச்சு செத்துருவாராம்,நான் தெரியாமதான் கேக்குறேன் அவரு என்ன அவ்வளவு பெரிய அப்பட்டக்கரா !

 சினிமால சினிமாத்தனம் இருக்கலாம். ஆனால் அது ஒரு வரையறைக்கு உட்பட்டிருக்கணும், இங்க இயக்குனர் பர்மா பஜார் டி.வீ.டி நிறைய பார்த்து இருப்பாரு போல. போதிதர்மனுக்கு மருதநாயகம் கமல் மாதிரி ஒரு கெட்டப். “மொங்கோல்” என்கிற ஓர் ரஷ்ய படத்துல இருந்து உருவுன சண்டைகாட்சினு கதை நகர்கிறது.

 ஆனா அந்த சினிமாத்தனமான புருடாக்கள் ஆவணப்படம் மாதிரி காட்டப்பட்டதனால் அதை ஆராய வேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளப்படுகிறோம்.

 போதிதர்மன் தமிழரா !

 பல்லவர்கள் தமிழர்களா?, என்ற கேள்விக்கே இன்னும் தெளிவான விடை கண்டுபிடிக்கப்படல..பல்லவகுல தோற்றம் பற்றி நிறைய வாதங்கள் நிலவினாலும்  பெரிதாக நம்பப்படுகிற, பலராலும் முன் வைக்கப்படுகிற வாதங்கள் மூன்று

சோழ மன்னன் கிள்ளிவளவனுக்கும், தமிழ் பேசும் நாக வம்சத்தை (இலங்கை ) சேர்ந்த பில்லி வலைஎன்ற இளவரசிக்கும் பிறந்த தொண்டை இளந்திரையன் மூலமாக உருவானதே பல்லவ குலம் என்பதுமுதல் கூற்று. கொஞ்சம் பகுத்துணர்ந்து  பார்போமேயானால், பல்லவர்கள தமிழர்களஅடையாளப் படுத்தனும் என்ற ஒரே காரணத்திற்க்காக இந்த கூற்று சித்தரிக்கப்பட்டிருப்பதைஉணரலாம்.

அடுத்த கூற்று, பல்லவ குலம் த்ரோனாசாரியரின் பேரன் மூலமா தோன்றியது என்பது. இது தமிழனுக்கு எதிரா இருந்த ஏதோ ஒர் கூட்டம் கிளப்பிவிட்ட கதையா இருக்கலாம்.

அடுத்தது, பல்லவர்கள் கடல் கடந்து வந்தவர்கள், இந்திய துணை கண்டத்தையே சாராதவர்கள்…

ஆனால் இதுநாள் வரை தெளிவான ஆதாரம் எதுவும்கிட்டவில்லை.. (தமிழில் சமணர்கள் பௌத்தர்களால் இயற்றப்பட்ட பல அருமையான இலக்கியங்கள் சைவர்களால் அழிக்கப்பட்டது. அந்த இலக்கியங்களோடுசேர்ந்து பண்டைய தமிழ் சமுதாயத்தப்பற்றிய பல குறிப்புகளும் அழிஞ்சுபோச்சு.தமிழ் அழிந்ததற்கு அழிவதற்கு தமிழனே காரணம்.)

 இந்நிலையில் போதிதர்மனை பற்றியும் நிறைய புருடாக்கள் படத்தில் விடப்பட்டிருக்கு.. இது வரை கண்டெடுக்கப்பட்ட வரலாற்றில், போதிதர்மன் என்ற பல்லவ குல இளவரசன் தன் தந்தையின் மரணத்திற்கு பிறகு தன் குருநாதார் பிரஜ்னாதார அவர்களின் கட்டளைக்கு இணங்கி   பௌத்தத்தை பரப்புவதற்காக தமிழகத்திலிருந்து வெளியேறினார் என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது .

பல இடங்களுக்கு பயணம் செய்து, சில இடங்களில் நற் பெயர் கொண்டு, பல இடங்களில் அவமானப்படுத்தப்பட்டு பின் ஒருநாள்தான் ஷாலின்  கோவிலை (shaolin temple ) அடைந்தார்.

 முற்காலத்தில் பௌத்தத்தில் உடலை வருத்தி கடும் தவம் புரியும்  ஓர் முறை பின்பற்றப்பட்டது. போதிசத்துவரே (Gouthama  Buddha) முதன்முதலில் அந்த முறையைதான் கடைப்பிடித்தார் .அப்படி ஒர் முறையை மாணவர்களுக்கு  பயிற்றுவிக்கும் போது அவர்களது உடல் அதற்கு ஒவ்வாததால் அவர்களின் உடலினை சரிவர கட்டமைக்கும்பொருட்டே அவர்களுக்கு தற்காப்பு கலையினை போதிதர்மன் பயிற்றுவிக்கக் தொடங்கினார்.

 போதிதர்மன் திறமைசாலி என்பதில் எந்த ஐயப்பாடுமில்லை . அதற்காக அவரை ஓர் தெய்வப்பிறவியாக, ஆக்ஷன் ஹீரோவாக  படத்தில் காட்டியிருப்பது, இயக்குனர் மிகவும் உணர்சிவசப்பட்டுள்ளார்  என்பதையே காட்டுகிறது. இதை வெறும் சினிமா என்று ஒதுக்கமுடியாததர்க்கு  காரணம், இறுதியில் “போதிதர்மன் ஓர் தமிழர். உங்களில் எத்தனைபேருக்கு அவரை தெரியம் ?” என்பன போன்ற சில கேள்விகளை உணர்ச்சி மிகுதியில் பார்வையாளர்களை   நோக்கி இயக்குனர் முன்வைப்பதனால்.

(அட போங்க பாஸ். நீங்க ஓர் காமெடி பீஸ். பல தமிழனுக்கு ஜெயகாந்தன்யாரு நகுலன்யாருனே தெரியாது. யாப்பெருங்காலகாரிகை என்றால் என்னான்னு தெரியாது….)

முதல் இருபது நிமிடம் உணர்ச்சிய கொஞ்சம் கட்டுபடுத்தி இருந்திருக்கலாம்…

இரண்டாம் பகுதி 

படத்தை இரண்டு பகுதிகளா பிரிக்கலாம். முதல் பகுதி-போதி தர்மன் காட்சிகள். போதிதர்மன் இல்லாத பகுதி இரண்டாம் பகுதி.

 இரண்டாம் பகுதின்னு குறிப்பிட காரணம், இருபத்தைந்தாவது நிமிடம் தொடங்கி படம் எங்க பயனிக்கிரதுன்னு தெரியாமலயே போவதனால்..

இந்த படமுழுக்க அப்படிதான் காட்சியமைக்கப்பட்டிருகிறது. சம்பந்தமற்ற தொடர்பற்ற காட்சிகள். அதற்காக இத ஓர் நான் சீக்யுன்சியல் (non-sequencial/ non linear narrative ) படம்   என்று நினைத்துவிட வேண்டாம். திரைக்கதை ஆசிரியர் ரொம்ப திணறி இருக்கிறார்.

 93 நாட்களுக்கு முன்பு என்று இரண்டாம் பகுதி ஆரமிக்கிறது. அது எதுக்குன்னு இன்னும் புரியல…

எந்த படமாக இருந்தாலும் காட்சிகள் சரமாரியாக நகரக் கூடாது. ஆனா இந்த படத்துல சம்பந்தமே இல்லாம  காதல் காட்சிகள் ரொம்ப வேகமா நகர்கிறது. எந்த காட்சியும் மனசுல பதிய  மாட்டேங்குது. ஏதோ  படத்த  இரண்டரை மணி நேரம் ஓட்டனும் என்பதற்காகவே காட்சி வைக்கப்பட்டதா தோணுது…

 திரைக்கதை

உலகத்துல எல்லாத் திரைக்கதைக்கும்  ஒர் பொதுவான வடிவம் இருக்கு. அதிகம் பயன்படுத்தப்படுவது மூன்று அங்க சட்டமைப்பு (Three act strcucture) என்பது.

அதாவது முதல், நடு, முடிவு

1.அறிமுகம் (Intro)

2.முரண்பாடு (Confrontation)

3.தீர்வு (Resolution)

 இந்த எந்த வடிவமே கதைமாந்தர்களுக்கு பொருந்திவரல. இதில் ஆச்சர்யம் ,இதற்குமுன் மூன்று அருமையான திரைகதைகள எழுதிய இயக்குனர் இதுல எப்படி சறுக்கினார் என்பதுதான் (யானைக்கும் அடி சறுக்கும் !)

 மேற்கூறிய வடிவம் பொருந்துற ஒரே கதாபாத்திரம் அந்த விஞ்ஞானி கதாபாத்திரம்தான். ஷோபா என்ற ஓர் விஞ்ஞானி ஓர் ஆராய்ச்சியில் ஈடுபடும் போது அந்நிய சக்திகளால் ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து எப்படி மீண்டு வராங்க என்பதே கதை ஓட்டம் (இதிலிருந்து தெளிவாகிற விஷயம், நிச்சயம் விஞ்ஞானி கதாபாத்திரம்தான் போதிதர்மனுக்குபின் முக்கிய கதாபாத்திரமா இருந்திருக்கணும்.அதாவது சூரியா நடிசிருக்கணும்.  ஏதோ கவர்ச்சி வேணும் என்பதர்க்ககவே அந்த கதாபத்திரத்த ஓர் பெண்ணை நடிக்கக் வச்சுடாங்க. (பெண் என்கிற காரணத்தால் அந்த கதாபாத்திரத்தின் ஆழத்தை குறைத்திருக்கலாம். தமிழ் சினிமா ஆண் ஆதிக்கம் நிறைந்தது !)

 பாத்திரப்படைப்பு   

மேற்கூறிய மாதிரி பாத்திரபடைப்பில் நிறைய சமரசம் செய்யப்படிருகிறது. அந்த சர்கஸ்காரன் கதாபாத்திரம் ரொம்ப ரொம்ப அலங்கோலமா வந்திருக்கு. அவன் நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுறத கூட மன்னித்துவிடலாம். ஆனால் ஆடி மாசம் சாமி வந்து ஆடுறது மாதிரி, இறுதிக் காட்சியில் போதிதர்மன் உடம்புல வந்தவுடன் கொடுக்குற ஓர் ரீயாக்சன் தான் கொஞ்சமில்ல ரொம்பவே ஓவர்…

முக்கிய கதாபத்திரம் அனைத்தும் அந்நியமாவே படுது. மனதில் நிற்க மறுக்கிறது. வில்லன் வாங்குன காசுக்கு சண்ட போட்டிருக்கிறார் (இவங்க கூட்டுற அலப்பறை அளவுக்கெல்லாம் அவர் ஒன்னும் பெருசா நடிக்கல)

கதாநாயகிதான் ரொம்ப பாவம். என்ன நடிக்கிரோம்னு தெரியாமலேயே நடிச்சிருக்காங்க.

 வசனம்

படத்தின் முக்கிய பலம் சில வசனங்கள். தமிழனோட பெருமைய குறிக்கிற வசனங்களில் கவனம் செலுத்திய வசனகர்த்தா  , மற்ற   இடங்களில் கோட்டைவிட்டுட்டார்  .. நிறைய இடத்துல ரொம்ப மொக்க வசனம்,

யானை மேலே உட்கார்ந்துக்கொண்டு கதாநாயகி சொல்லுவாங்க “அய்யோ  குத்துது. ” நாயகன் சொல்லுவார் “அதுக்காக டைல்சா போடமுடியும் “

இப்படி மொக்க வசனங்கள   பேசி அவங்க ரெண்டு பேரும் சிரிப்பாங்க. சத்தியமா அவங்க ரெண்டு பேர் மட்டும்தான் சிரிப்பாங்க. படம் பார்க்குறவங்க அழுவாங்க. ஏனா  உடனே தேவைற்ற ஓர் பாட்டு வரும். தமிழ்  படங்களில் தேவையில்லாம பாட்டு வைக்கிறதா கொஞ்ச நாள் தவிர்த்திருந்தாங்க. இப்போ மீண்டு ஆரமிச்சிடாங்கபா

திரு.சூரியாவை தவிர்த்து மற்ற எல்லாரும் பல இடங்களில் வசங்கள  பேசும் போது ஏதோ உணர்ச்சியே இல்லாத மாதிரிதான் பேசுறாங்க . உதாரணம் ,

“முடியும் இதெல்லாம் ஒருத்தராலதான் முடியும்…போதிதர்மன் ” (ஏதோ போக்கிரி படத்துல விஜய் intro பார்த்த மாதிரி இருந்துச்சு . .அதவிட கேவலமா இருந்துச்சு)

“லேப் கீய எடுத்துகிட்டு  புது சிம் கார்ட் வாங்கிட்டு நாளைக்கு காலைல வந்திருவான் “இப்படி எல்லாரும் வசனத்தை மனபாட செய்யுள் மாதிரி ஒப்பிகிறாங்க..

இசை

படத்தோட முக்கிய பலம் இசை. ஏனென்றால் இந்த படத்தின் இசை

உங்களுக்கு மலரும் நினைவுகள கொடுக்கும்,பழைய காலத்தை

ஞாபகப்  படுத்தும்.

அதாவது மொத்த இசையும் எங்கேயோ கேட்டமாதிரி

இருக்கும்! குறிப்பா போதிதர்மனின் அறிமுகப் பாடல் (Rise of damo) ..

அதை கேட்டா  நீங்க குழந்தைப் பருவத்திற்கே போயிருவீங்க

“Jhonny Jhonny yes papa….

Twinkle twinkle little star… “

(அத்தனையும் ஒரிஜினல் ட்யூன். ரூம் போட்டு யோசிப்பாங்களோ !)

படத்தின்பலம்

உண்மையாக படத்துல ஒழுங்கா நடிச்சிருக்குறது போதிதர்மன் சூரியா.. தன் கதாபாத்திரத்திற்கு  நியாயம் செய்திருக்கிறார். போதிதர்மானாக  அவர் கண்ணுல ஒரு தேஜஸ் தெரியுது. அவர் கண் அசைவுகள் அருமை..

நிச்சயம் சில நல்ல வசனங்கள் வைத்ததற்கு இயக்குனர பாராட்டியே ஆகணும்..இந்த படத்தோட மூலக்கதை என்னமோ நல்லாத்தான் இருக்கு . போதிதர்மன் திரும்பி வந்த எப்படி இருக்கும் என்பதே அது..ஆனா  எடுத்த விதம்தான் சகிக்கல..

என்னதான் ஆனியன் தோசையாகவே இருந்தாலும் ஆனியன மட்டும் சாப்பிட முடியாது. இங்க ஆனியன் மட்டும் வெந்திருக்கு..தோசை சுத்தமா வேகல…அரைவேக்காடு முட்டைய சாப்பிடலாம் ..அரை வேக்காடு தோசைய சாப்பிட முடியுமா !

இயக்குனர் ரொம்ப பீல் பண்ணியிருக்கார்.. ஆனா 83 கோடி போட்டு பீல் பண்ணினது ரொம்ப ஓவர் …

“அதுக்காக நீ ஏன் பீல் பண்ணுற ?” என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுது..

அவர் ஓர் கமர்சியல் படம் பண்ணிருந்தார் என்றால் நானும் கை தட்டிட்டு வந்திருப்பேன்…ஆனா ஏதோ இவருக்குதான் இன உணர்வு இருக்கிறது மாதிரி பீல் பண்ணி இன உணர்வ தூண்டுறதா நினைத்து கொண்டு இன உணர்வ சீண்டிவிட்டுட்டார் ..

KFC சிக்கன் சாப்பிட்டு , வெளிய வந்து கம்யுனிசம் பேசுற மாதிரி, இவரும் ஒரு மொக்க மசாலா படத்துல ஓவரா தமிழ் உணர்வ திணித்திருக்கிறார்..கல்லா கட்டுறதுக்கு செய்யப்படும் சந்தர்பவாத அரசியலே இது…

நாற்பது லட்சத்துல மாற்று சினிமா எடுக்கமுடியும்..Children of heaven, tri colors,மாதிரி படங்கள்  எடுக்க அதிக பட்சம் ஒரு கோடி தேவைப்படும்..மூணு கோடி இருந்தா கலை காவியமே படைக்க முடியும்..அத விடுத்து, காசு இருக்குனு ஒரே காரணுத்துக்காக சரடு திரிக்கிறத தான் தாங்கிக்க முடியல…

இயக்குனரோட இன உணர்வ கேள்வி கேக்குற உரிமை யாருக்குமில்லை…நிச்சயம் அவர் தமிழ் இனத்துமேல  பற்று  கொண்டதால்தான்  இந்த  கதைய ஆரமிச்சிருக்கார்..ஆனா இறுதியில் சீரளிச்சிட்டார்…

போதிதர்மான பத்தி இன்னும் நிறைய ஆராய்ச்சி பண்ணி இருக்கலாம்…ஒரு கமர்சியல் படத்தில் இத்தனை கோடிய வீணடித்ததற்கு பதிலாக போதிதர்மனை பற்றியோ அல்லது தமிழ் சமுதாயத்தை பற்றியோ ஓர் நல்ல ஆவணப் படம் எடுத்திருக்கலாம் (ஆவணப் படம் எடுப்பது கேவலம் என்பது போன்ற ஓர் சூழல் இங்கு நிலவுவது நம் சாபக்கேடு )

அதை சப்டைட்டில்ஸ் (Subtitles) போட்டு இணையத்திலும் பிரபல தொலைகாட்சிகளிலும் வெளியிட்டிருந்தால், தமிழனின் பெருமை உலகெங்கும் பரவி இருக்கும்.

திரு.முருகதாஸ் மாதிரி இந்திய அளவில் பிரபலமான இயக்குனர் அதை செய்யும் போது அந்த ஆவணப்படம் எளிதில் உலகெங்கும் பரவியிருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

வருங்காலத்திலாவது இதுபோல் அரை வேக்காடு படங்களுக்கு காசை வீணடிக்காமல் , நல்ல முயற்சிகளுக்கு செலவழிப்பார்கள் என நம்புவோம்..நல்ல முயற்சிகளுக்கு தமிழனின் ஆதரவு என்றுமே இருக்கும்…