சில படங்கள் முதல் காட்சியிலிருந்தே மெதுவாக நகர்ந்து, இது நல்லப் படம்தானா என்பன போன்ற சந்தேங்களை ஏற்படுத்தி, இறுதியில் சிகரம் வைத்தாற்போல் அருமையாக நிறைவுபெற்று, படமென்றால் இதுதான் படமென்று நம்மை சொல்லச் செய்து, நம்மை எழுந்து நின்று கைத்தட்ட வைக்கும்.
சில படங்கள் தொடக்கம் முதலே நல்லப் படம் போல காட்சியளித்து, தனக்கே உரித்தான ஜிகுணா வேலைகளையெல்லாம் செய்துக் கொண்டு, இறுதியில் ‘இதெல்லாம் ஒரு படமா’ என்று எண்ண வைக்கும். ‘மாற்றான்’ இதில் இரண்டாவது வகை.
ஓட்டிப் பிறந்த இரட்டையர்களைப் பற்றி படம் எடுக்க முயற்ச்சித்தமைக்கும், (ஆனால் அந்த முயற்சி மன்னைகவ்வியுள்ளது.) அதற்காக இந்த ஹீரோ மெனக்கெட்டமைக்கும் பாராட்டுக்கள்…
ஆனால் ஓட்டிப் பிறந்த இரட்டையர்கள் என்ற கதை கருவிற்கும், இந்தக் கதை களத்திற்கும் சம்பந்தமேயில்லை. படத்தின் கதை என்னவோ typical தமிழ் டபுள் ஆக்சன் மசாலா படத்தின் கதைதான். ஆனால் டபுள் ஆக்சன் படமாக எடுத்தால் ‘கெத்’ இருக்காது என்பதற்காக, வித்தியாசமான முயற்சி செய்கிறேன் பேர்வழி என்று ஒரு கேலி சித்திரத்தை படைத்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் டபுள் ஆக்சன் கதைகள் பின்வரும் மாதிரிதான் இருக்கும். ஒரு ஹீரோ சாது, இன்னொருவர் முரடன். வில்லனை எதிர்த்து முதலில் ஒருவர் போராடுவார், பின் தவிர்க்கமுடியாத ஒரு தருணத்தில் அந்த கடமை இரண்டாமானவரை வந்து சேரும். அந்த இரண்டு ஹீரோக்களையும் ஒன்றாக ஒரே உடம்பில் இணைத்து, ‘conjoined twins’ என்ற போர்வையில் எடுக்கப்பட்ட படமே மாற்றான்.
அந்தக் காலத்தில் டபுள் ஆக்சன் படங்கள் எடுப்பதற்கென்றே ஒரு டெக்னிக் இருந்தது. கேமராவை நடுவில் வைத்து, வலது புறத்தில் ஹீரோவை நடிக்க வைத்து படம்பிடித்து , பின் அதே ஹீரோவை இடது புறத்தில் நடிக்க வைத்து படம்பிடித்து இறுதியில் இரண்டையும் இணைப்பார்கள். அதனால்தான் டபுள் ஆக்சன் கதாப்பாத்திரங்கள் தோன்றும் காட்சிகளில், இருவருக்கும் நடுவில் ஒரு தூணோ, இல்லை ஏதோ ஒரு symmetric பொருளோ இருக்கும். அந்த symmetric பொருளை axis-ஆக வைத்துக் கொண்டு, ஒரே ஹீரோ இரண்டு புறத்திலும் நடித்திருப்பார். என்ன ஆனாலும் கதாப்பாத்திரங்கள் அந்த axis-ஐ தாண்டக் கூடாது..
பின் இந்தக் கோட்பாடுகளையெல்லாம் தகர்த்து, பல டெக்னாலஜிகளை பயன்படுத்தி, மிகவும் திறமையாக எடுக்கப்பெற்ற டபுள் அக்சன் படமே ‘ஜீன்ஸ்’. இரட்டையர்களை படம் முழுக்க எந்த ஒரு பிசிரும் இல்லாமல் உலவ விட்டிருப்பார் ஷங்கர். அதன் பின் நிறைய டபுள் அக்சன், ட்ரிபிள் அக்சன் தொடங்கி பத்து அக்சன் வரை படங்கள் எடுத்தாகி விட்டது. இதை இன்னும் ஒரு படி மேலே போய் ‘conjoined twins’ படம் எடுக்கலாம் என்று சிந்தித்துள்ளனர். ஆனால் அதை ஒழுங்காக எடுக்கவில்லை…
பல பொய்களை திரும்ப சொல்லி உண்மையாக முயற்சிக்கும், தமிழ் சினிமாவில் ‘முதல் முயற்சி முதல் முயற்சி’ என்று அரைக் கூவல் விடுத்து படங்களை promote செய்வது ஒரு தந்திரம்.மும்பை எக்ஸ்பிரஸ் ‘முதல் high definition படம்’ என்று பிரகடனம் செய்தார்கள். ஆனால் அதற்க்கு முன்பே ‘வானம் வசப்படும்’ என்ற படம் high definition-யில் எடுக்கப்பட்டுவிட்டது.
அதுபோல் தான் இதுவும். இந்தியாவின் முதல் ‘conjoined twins’ படம் என்றார்கள். ஆனால் இரண்டு மாதத்திற்கு முன்பு ‘இருவன்’ என்ற ஒரு படம் வெளிவந்தது. அதுவும் ஓட்டிப் பிறந்த இரட்டையர்களைப் பற்றியக் கதை. பின், ‘performance capture’ டெக்னிக் பயன்படுத்தி எடுக்கப்படும் முதல் இந்தியப் படம் ‘மாற்றான்’ என்றார்கள். ஆனால் இதில் பரிதாபத்திற்குரிய விடயம் என்னவெனில், அந்த ‘Performance capture’ போன்ற எந்த டெக்னிக்கும் படத்திற்கு கைகொடுக்கவில்லை என்பதுதான். இரட்டையர்கள் வரும் காட்சிகளில் படத்தின் கிராபிக்ஸ் மிகவும் கேவலமாக உள்ளது. ஏதோ ஒரு ஹீரோ இன்னொரு பொம்மை ஹீரோவை தூக்கிக் கொண்டு நடப்பது போல் பல இடங்களில் தோன்றும் .இது ஒரு லோ பட்ஜெட் படமென்றால் அலட்டிக்கொள்ளவேண்டியதில்லை. ஆனால் பல கோடிகளை இறைத்து குப்பைகளை எடுக்கும் போது தான் யோசிக்க வேண்டியிருக்கிறது, இன்னும் எத்தனை நாள் தான் ஆடியன்ஸை மாக்கான் ஆக்குவார்கள் என்று…
ஒரு ஆறுதல், இவர்கள் எங்கேயும் science fiction படம், medical fiction படம் என்று பிரகடனப் படுத்தவில்லை. அப்படி செய்திருந்தால் கேலிக் கூத்தாகி இருக்கும்.
‘Conjoined twins’ எப்பவும் பலவீனமாகத்தான் இருப்பார்கள், அவர்கள் எப்படி பறந்து பறந்து சண்டைப் போடுகிறார்கள் என்பன போன்ற ஆராய்சிகள் செய்ய வேண்டிய அவசியமில்லை. அந்த அளவிற்கு இந்த படம் ஒன்றும் சிறந்த படமில்லை. ஆனால் இந்தப் படத்தின் பின்னணியை மட்டும் பார்ப்போம்…
தமிழ் படைப்புலகில் மட்டுமே இலக்கியத்திற்கும் சினிமாவிற்கும் இருக்கும் இடைவெளி குறைய மறுக்கிறது. இலக்கியவாதிகள் சினிமாவிற்கு வந்தால் இலக்கியத்தை மறந்துவிடுகிறார்கள். இதற்கிடையில் பாக்கெட் நாவலாசிரியர்கள் பாக்கெட் நாவல்களைப்போல் மூன்றாம் தரத்தில் சினிமாவிற்கு கதை எழுதுகிறார்கள்.
‘சுபா’ என்ற இந்த இரட்டை எழுத்தாளர்கள் திறமைசாலிகளே. இந்தப் படத்திலும் அவர்களின் வசனம் தான் முதல் பகுதிக்கு சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது. ஆனால் எந்தப் படைப்பாளியாக இருந்தாலும் தன் அறிவை update செய்துக் கொள்ள வேண்டும். “Learn, Unlearn, Update “ என்பது மிக முக்கியம்.
பாக்கெட் நாவல்கள் எழுதுபவர்களிலேயே தன் அறிவை அப்டேட் செய்து வைத்திருப்பவர் இந்திரா சௌந்தரராஜன் மட்டுமே. (அவர் வெறும் பாக்கெட் நாவலாசிரியர் அன்று. திறமையான எழுத்தாளர். அதற்கு அவரின் படைப்புகள் சான்று. எனினும் பாக்கெட் நாவல் உலகத்திலேயே நின்றுவிட்டார்) அந்நியனில் சொல்லப்பட schizophrenia-வை அவர் தொன்னூறுகளிலேயே ‘விடாது கருப்பு’ என்னும் கதையில் சொல்லிவிட்டார். அதில் கருப்பு சாமி தண்டனை கொடுக்கும், அந்நியனில் அந்நியன் தண்டனைக் கொடுப்பான் .அவ்வளவுதான் தான் வித்தியாசம்.
ஆனால் மற்ற பாக்கெட் நாவலாசிரியர்கள அனைவரும் புருடா விட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர். ‘மூடாத கல்லறை’, ‘சேராத நிலவு’ ‘மூன்றாவது குறுக்கு தெரு’ என்பன போன்ற பேர்களில் ஏதேதோ எழுதிக் குவிக்கிறார்கள். எனக்கு பிடித்த ராஜேஷ் குமார், எழுதிய ஒரு கதையில் , ஒரு கதாநாயகன் பாலைவனத்தில் தரை இறங்கிய ஒரு விமானத்தினுள் தனியாக சென்று டைம் பாம்பை deactivate செய்வார். அதுபோன்ற மூன்றாம் தரமான புருடாக்கள் ‘மாற்றான்’ படத்தில் விடப்பட்டுள்ளது. Genetic Research, Ionization agent இது,அது என்று கதைக்கு சம்பதமில்லாமல் ஏதேதோ வார்த்தைகளை நுழைத்து (எல்லாம் எட்டாம் கிளாஸ் பாட புத்தகத்திலிருந்து எடுத்த வார்த்தைகள்) படம் காட்டியுள்ளனர். பாக்கெட் நாவல்களில் வரும் மொக்கை ட்விஸ்ட்களை படத்தில் வைத்து மொக்கை வாங்கியுள்ளனர்.
சுவாரசியமாக பாக்கெட் நாவல் எழுதிடலாம். ஆனால் சினிமாவில் எழுதும்போது சினிமாவிற்க்கான தரத்தை மெயின்டையின் செய்ய வேண்டும்.திருப்பாச்சியும் சுவாரஸ்யமான ஆக்சன் படமே. கில்லியும் சுவாரஸ்யமான ஆக்சன் படமே. ஆனால் இவ்விரண்டிற்கும் உள்ள வித்தியாசம் உங்களுக்கு புரிந்திருக்கும். அந்த வித்தியாசம்தான் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று.
பதினைந்து ரூபாய் பாக்கெட் நாவல் எழுதும் ஒரு எழுத்தாளருக்கு சில ஆயிரம் ரூபாயே ராயல்ட்டியாக கிடைக்கும். அவர் குறைந்த தர படைப்புகளை படைப்பதை தாங்கிக் கொள்ளலாம். ஆனால் பல கோடி ருபாய் சம்பளம் வாங்கும் சினிமா இயக்குனர்கள் பாக்கெட் நாவலாசிரியர்கள் போல் மூன்றாம் தர படைப்பை படைப்பதுதான் ஆதங்கம் அளிக்கிறது…
இந்தப் பின்னணியில் தான் இந்தக் கதையை கவினிக்க வேண்டியிருக்கிறது. ஒட்டி பிறந்த கதாநாயகர்களின் தந்தை ஒரு விஞ்ஞானி. அவர் ‘எனெர்ஜியான்’ என்றொரு எனெர்ஜி டிரிங் பவுடரை கண்டுபிடிக்கிறார். அதை உண்ணும் குழந்தைகள் பெரும் திறமைசாலிகளாக வருவார்கள் என்று அவர் பிரகடனப் படுத்தி விற்று பெரும் தொழிலதிபராகிறார். அந்நிலையில் அப்பவுடர் பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரிந்துக் கொள்கின்றனர் கதாநாயகர்கள். பின் நடப்பதே படத்தின் கதை. முதல்வனின் வருவது போல் ஒரு சேற்று சண்டை, ஜீன்ஸில் இரட்டையர்கள் ஐஸ்வர்யாராயிடம் செய்யும் காமெடிகளை போல் சில காமெடிகள், அந்நியனில் வரும் கிருமி போஜனம் போல் ஒரு காட்சியில் எலி போஜனம், இந்தியனில் சொந்த மகனையே எதிர்க்கும் தந்தைப்போல் இதில் உல்டாக் காட்சி என பல ஷங்கர் படங்களை மிக்ஸ் செய்து ‘மாற்றான்’ என்ற பெயரில் கொணர்ந்துள்ளனர். இந்த மொக்கை மசாலா படத்திற்கு துணையாக பல மொக்கை scientific term-களை உபயோகப் படுத்தி மொக்கை வாங்கியுள்ளனர்.
கதாநாயகர்களின் தந்தை உக்ரைனில் Genetically modified மாடுகளை உருவாக்கி, ஆராய்ச்சி செய்து, அம்மாடுகளிடமிருந்து கறக்கப் படும் பாலைக் குடித்தால் ‘extraordinary power’ வருவதாக கண்டுக்கொள்கிறார். நிற்க.
அவரே தமிழகத்தில் தன் பண்ணையில் வளர்க்கப்படும் மாடுகளுக்கு உக்ரைனிலிருந்து வரவழைக்கப்பட்ட தீவனத்தைக் கொடுத்து, அம்மாடுகளிடமிருந்து கறக்கப் படும் பாலைக் கொண்டு ‘எனெர்ஜியான்’ பவுடரை உருவாகுகிறார்.
ஒரு காட்சியில் ‘Genetic Engineering’ பற்றி பேசுகிறார்கள், இன்னொரு காட்சியில் சம்மந்தமில்லாமல் ஏதோ மாட்டுத்தீவனம் பற்றி பேசுகிறார்கள். அடுத்தக் காட்சியில்
‘Advanced Genetic Engineering’ பேசுவதாக நினைத்துக் கொண்டு பத்து பேரின் மரபணுவை கொண்டு ஒரு உயிரை உருவாக்குவதைப் பற்றி விவரிக்கிறார்கள். படம் முழுக்க இப்படி பல அறிவியல் பெயர்களை அரை குறையாக உதிர்த்து தங்களைத் தாங்களே கேலி செய்துக் கொண்டதோடில்லாமல், இறுதியில் திரு.நரேந்திர மோடியை கிண்டல் செய்வதாக நினைத்துக் கொண்டு சுரேந்திர லோடி என்ற ஏதோ ஒரு பெயரில் குஜராத் முதல் அமைச்சர் என்ற கதாப்பாத்திரத்தை தேவையில்லாமல் காட்டுகிறார்கள். இதுபோன்று தேவை இல்லாக் காட்சிகள் படத்தில் நிறைய உண்டு.
மேலும் இதில் ஒரு காட்சியில் குஜராத் கிராமவாசிகள் ஹிந்தி பேசுகிறார்கள்.குஜராத் கிராமங்களில் வெறும் குஜராத்தி தான் பேசுவார்கள். ஹிந்தி அன்று. ஹிந்தியோ, குஜராத்தியோ Subtitles போட போவதில்லை என்று முன்கூட்டியே முடிவு செய்துவிட்டதால்தான் என்னவோ இதில் குஜராத்தியர்கள் ஹிந்தி பேசுவது போல் எடுத்துவிட்டார்கள் போலும்.இதையெல்லாம் தாங்கிக் கொள்ளலாம். குஜராத்தியர்களை சித்தரித்திருக்கும் விதம்தான் மிகவும் செயற்கையாக உள்ளது..
சிறு வயதில் கிராப்ட் நோட்டில் எல்லாரும் ஐம்பது பைசா கொடுத்து போஸ்டர் வாங்கி ஒட்டி இருப்போம். பழங்கள், விலங்குகள் என்று வகை வகையான போஸ்டர்கள். அதில் இந்திய மாநில மக்கள் என்று, இந்தியாவின் அனைத்து மாநில மக்களும் அவர்களின் traditional உடையில் இருப்பது போன்ற ஒரு போஸ்டரையும் ஒட்டியிருப்போம். அதில் ராஜஸ்தானியர்கள் என்றால் தலையில் தலைபாகை அணிந்திருப்பார்கள். அதை அப்படியே காப்பி அடித்து இதில் பயன் படுத்தி விட்டார்களா என்று எண்ணும் அளவிற்கு அந்த ராஜஸ்தானிய உடை அலங்காரத்தை இதில் குஜராத்தியர்களுக்கு செய்திருப்பார்கள். குஜராத்தில் எந்த கிராமத்திலும் அவ்வாறு உடை அணிந்திருக்க மாட்டார்கள்.
மொத்தத்தில் மசாலா படத்தை மசாலாவாக எடுப்பதை விடுத்து, பல புருடாக்களை விட்டு ஒரு கேலி சித்திரத்த்தை உருவாக்கிவிட்டார்கள்.
திறமைசாலிகள் பலர் வாய்ப்பிற்காக போரடிக் கொண்டிருக்க, பல கோடிகள் செலவு செய்து பில்லா 2 , மாற்றான் போன்று மொக்கை படங்களை மீண்டும் மீண்டும் எடுப்பதுதான் வருத்தமளிக்கிறது. இதற்கிடையில் அடுத்து வரப்போகும் அந்த படத்தின் ட்ரைலரே வயிற்றில் புலியை கரைக்கிறது….
சூரியா திறமையான நடிகர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அவர் இந்த மாதிரி படங்கள் நடிப்பதுதான் முகம் சுழிக்க வைக்கிறது. திறமையான ஹீரோக்கள் இயக்குனர்களால் வீணடிக்கப் படுகின்றனரா, இல்லை அவர்களே தங்களை வீணடித்துக் கொண்டு இயக்குனரையும் வீணடித்து விடுகின்றனரா என்பது தமிழ் சினிமாவை பொறுத்த வரையில், ‘சிதம்பர ரகசியம்’. இவரின் அடுத்தப் படமாவது முழுவேக்காடக வரும் என்று நம்புவோம்..