ஆஸ்கார் 2014

நன்றி ஆழம் ஏப்ரல் 2014

ஆஸ்கார் போட்டியின் மீது ஏராளமான விமர்சனங்கள் எழுந்தாலும், ஆஸ்கார் விருதுக்கு இருக்கும் மவுசுமட்டும் குறைவதில்லை. அந்த வகையில், இந்த ஆண்டு அதிக எதிர்பார்ப்புகளுக்கிடையே நடந்து முடிந்த ஆஸ்கார் போட்டியில் எந்தெந்த படங்கள் எந்தெந்த பிரிவுகளில் விருதுகளை வென்றன என்பதை இங்கே பார்ப்போம்.

கிராவிட்டி
இந்த ஆண்டு அதிக விருதுகளை வென்றுள்ள படம், கிராவிட்டி. சிறந்த இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த இசை உட்பட மொத்தம் ஏழு விருதுகளை இந்த படம் வென்றுள்ளது. விண்வெளியில் சிக்கிக் கொண்டு தவிக்கும் பெண்ணை பற்றிய சயின்ஸ் பிக்ஷன் படம் இது. இந்த படத்தின் கதாநாயகி சாண்ரா புல்லக் மிகவும் சிறப்பாக நடித்திருந்ததால் அவருக்கு ஆஸ்கார் விருது கிடைக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு விருது கிடைக்கவில்லை. எனினும் அனைவரும் எதிர்பார்த்ததை போல், படத்தின் இயக்குனர் அல்ஃபோன்சா கௌரான் சிறந்த இயக்குனருக்கான விருதை பெற்றுள்ளார். இந்த விருதை பெரும் முதல் மெக்சிகன் இவர் என்பது குறிப்பிடதக்கது. விண்வெளியை மிகவும் தத்ரூபமாக திரையில் காண்பித்ததற்காக நாசா விஞ்ஞானிகள் உட்பட பலரும் இவரை பாராட்டி வருகின்றனர்.

டல்லாஸ் பையர்ஸ் கிளப்

குறைந்த பொருட் செலவில் வெறும் 25 நாட்களில் எடுக்கபட்ட இந்த படம் சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர் உட்பட மூன்று விருதுகளை பெற்றுள்ளது. எம்பதுகளில் அமெரிக்காவில் வாழ்ந்த ரோன் வூட்ரூஃப் என்ற எய்ட்ஸ் நோயாளியை பற்றிய படம் இது. அவர் முப்பது நாட்களில் இறந்துவிடுவார் என்று அவரது டாக்டர்கள் அவருக்கு கெடு விதித்திருக்கின்றனர். ஆனால், அவரோ நாடு விட்டு நாடு சென்று பல தடை செய்யபட்ட மருந்துகளை வாங்கி உட்கொண்டு கிட்டதட்ட ஏழு வருடங்கள் உயிர்வாழ்ந்திருக்கிறார். மேலும் அந்த மருந்துகளை அமெரிக்கவிற்கு கடத்தி வந்து, பல எய்ட்ஸ் நோயாளிகளுக்கு விநியோகம் செய்திருக்கிறார். இந்த உண்மை கதையில், ரோன் கதாபாத்திரத்தில் நடித்த மாத்யூ மெக்கனாகே சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை பெற்றுள்ளார். அவரது நோயாளி நண்பராக, திருநங்கை கதாபாத்திரத்தில், நடித்த, ஜாராத் லீட்டோ சிறந்த துணை நடிகருக்கான விருதை பெற்றுள்ளார். எய்ட்ஸ் நோயாளி போல் தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக மாத்யூ இருபத்தியொரு கிலோ வரை தன் உடல் எடையை குறைத்திருக்கிறார். லீட்டோவோ பதினெட்டு கிலோ வரை தன் எடையை குறைத்திருக்கிறார்.

12 இயர்ஸ் எ ஸ்லேவ்

இதுவும் ஒரு வாழ்க்கை வரலாற்று படம்தான். பத்தொன்பதாம் நூற்றாண்டில், அமெரிக்காவை சேர்ந்த சாலமன் நார்தப் என்ற கறுப்பின மனிதரை கடத்தி வில்லியம் ஃபோர்ட் என்பவரிடம் அடிமையாக விற்றுவிடுகின்றனர். பின் அவர் பலரிடம் அடிமையாக விற்கபட்டு, பல இன்னல்களை சந்தித்து, பன்னிரண்டு ஆண்டுகளுக்கு பின் சுதந்திர காற்றை சுவாசிக்கிறார். பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் தயாரித்த இந்த படம், சிறந்த படம், சிறந்த துணை நடிகை, சிறந்த தழுவல் திரைக்கதை ஆகிய மூன்று விருதுகளை பெற்றுள்ளது. அமெரிக்க சரித்திரத்தில் கரும்புள்ளியாக இருக்கும் அடிமை வர்த்தகத்தை பற்றியும், பழைய அமெரிக்காவின் இருள் செறிந்த பக்கத்தை பற்றியும் பேசும் இந்த படத்திற்கு அமெரிக்கர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. வசூலிலும் படம் பெரும் சாதனை படைத்து வருகிறது. இந்த படத்தில் அடிமை பெண் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்த லுபித்தா நியோங்கோவிற்கு சிறந்த துணை நடிகைக்கான விருது கிட்டியுள்ளது. ஆஸ்கர் விருதை பெரும் முதல் ஆப்ரிக்க நடிகை இவர்.

ப்ளூ ஜாஸ்மின்

அமெரிக்க புது அலை சினிமாவின் பிதாமகன்களில் ஒருவரான வூடி ஆலன் எழுதி இயக்கிய படம், ப்ளூ ஜாஸ்மின். அமெரிக்க உயர்குடி வர்கத்தை சேர்ந்தவள் ஜாஸ்மின். பணத் திமிரால் யாரையும் மதிக்காமல், ஆடம்பர்மாக வாழும் அவள், ஒரு கட்டத்தில் சொத்துகளை இழந்து கணவனை இழந்து தன் தங்கையிடம் அடைக்கலம் புகுகிறாள். புது வாழ்க்கையை தொடங்க முயற்சிக்கும் போதெல்லாம், பழைய நினைவுகள் அவளை வாட்டி வதைக்கிறது. பின் அவளுக்கு என்னவாகிறது என்பதே படத்தின் கதை. இந்த படத்தில் ஜாஸ்மின் கதாபாத்திரத்தில் நடித்த கேட் பிளான்செட் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றுள்ளார். வூடி ஆலனுக்கு சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கபட்டது. ஆனால் அந்த விருதை ஹெர் படத்தின் திரைக்கதை ஆசிரியர் ஸ்பைக் ஜோன்ஸ் தட்டி சென்றுவிட்டார்.

ஹெர்

தனிமையில் வாழும் கதாநாயகன், ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழிநுட்பம் கொண்ட ஆபேரட்டிங் சிஸ்டம் ஒன்றை வாங்கி அதற்கு சமந்தா என்று பெயர் சூட்டுகிறான். அதனுடன் மனம் திறந்து பேசுகிறான். நாளடைவில் அவனும், சமந்தாவும் காதல் கொள்கிறார்கள். பின் என்னவாகிறது என்பதே இந்த சயின்ஸ் பிக்ஷன் படத்தின் கதை. கிலாடியேட்டர் பட புகழ் ஜாக்குவின் பீனிக்ஸ் தான் இந்த படத்தின் கதாநாயகன்.

தி கிரேட் ப்யூட்டி

சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான விருது இத்தாலி படமான க்ரேட் ப்யூட்டி படத்திற்கு கிட்டியுள்ளது. ஒரு எழுத்தாளரை பற்றியும், அவருடைய தேடலை பற்றியும் பேசும் இந்த படத்தை பாவ்லோ சொர்ரென்டினோ இயக்கியுள்ளார். வாழ்வின் வெறுமையை கடக்க முயலும் கதாநாயகன், தன் வாழ்க்கை பயணத்தின் மூலமும், தான் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களின் மூலமும் வாழ்க்கையின் அர்த்தத்தை புரிந்து கொள்வதே படத்தின் கதை. முழுக்க முழுக்க அழகான விசுவல்ஸ்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளனர்.

ஃப்ரோசன் (Frozen)

சிறந்த அனிமேஷன் திரைப்படம் விருதை ஃப்ரோசன் திரைப்படம் வென்றுள்ளது. இந்த படத்தை வால்ட் டிஸ்னி நிறுவனம் தயாரித்துள்ளது. அந்த நிறுவனம் இதுவரை ஏராளமான அனிமேஷன் படங்களை தயாரித்திருந்தாலும், அவர்கள் ஆஸ்கார் விருது  வாங்குவது இதுதான் முதல் முறை. ஆராந்தெல் தேசத்து இளவரசி சகோதரிகளான எல்சா மற்றும் அன்னா ஆகியோர் எப்படி தாங்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் பாசத்தை உணர்கிறார்கள் என்பதே படத்தின் சார்ம்சம். இந்த படத்தில் இடம்பெற்ற ‘லெட் இட் கோ’ என்ற பாடலுக்கு சிறந்த பாடலுக்கான விருது கிடைத்துள்ளது.

இது ஒருபுறமிருக்க, பத்து பிரிவுகளில் பரிந்துரைக்கபட்ட அமெரிக்கன் ஹசல் திரைப்படமும், ஐந்து பிரிவுகளில் பரிந்துரைக்கபட்ட உல்ஃப் ஆப் வால் ஸ்ட்ரீட் திரைப்படமும் ஒரு விருதை கூட வெல்லவில்லை என்பது குறிப்பிடதக்கது.

கிராவிட்டியும் ஆஸ்காரும்

கடந்த ஆண்டு வெளியான லைஃப் ஆப் பை படத்திற்கும் இந்த ஆண்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கிராவிட்டி படத்திற்கும் ஒரு ஒற்றுமை உண்டு. நடுக்கடலில் தன்னந்தனியாக தத்தளிக்கும் சிறுவனை பற்றிய படம் லைஃப் ஆஃப் பை. விண்வெளியில் உயிருக்கு போராடும் பெண்ணை பற்றிய சயின்ஸ் பிக்ஷன் படம், கிராவிட்டி. இரண்டு படங்களுமே, தன்னம்பிக்கை இருந்தால் எத்தகைய ஆபத்தான சூழலையும் எதிர்கொள்ளலாம் என்ற கருத்தையே முன்வைக்கின்றன. லைஃப் ஆப் பை பல ஆஸ்கார் விருதுகளை குவித்தது போல கிராவிட்டி படமும் வரவிருக்கும் ஆஸ்கார் விழாவில் ஏராளமான விருதுகளை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சயின்ஸ் பிக்ஷன் படம் என்றதும் புரியாத பல அறிவியல் கோட்பாடுகளை விவரித்து நம்மை குழப்புவார்கள் என எண்ணவேண்டாம். இது மிகவும் எளிமையான லீனியரான திரைப்படம். படத்தில் அறிவியல் கோட்பாடுகளை விட ஆன்மிக கருத்துக்களும், தத்துவங்களுமே அதிகம் இருக்கின்றன.

விண்வெளி வீரர் மாட் கௌலஸ்கி (ஜார்ஜ் க்லூனி) தன்னுடைய கடைசி விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட வேண்டும் என்று கனவுகண்டு கொண்டிருக்க, விண்வெளியில் ஏற்படும் விபத்தால் விண்கலம் பழுதாகிறது. அவரது குழுவில் இருக்கும் அனைவரும் இறந்து போக, அவரும் டாக்டர் ரியான் ஸ்டோன் (சாண்ரா புல்லக்) மட்டும் உயிர் பிழைக்கின்றனர். ரியான் ஸ்டோனிற்கு அது முதல் விண்வெளி பயணம்.  எப்படியாவது அங்கிருந்து தப்பித்துவிட வேண்டும் என இருவரும் முடிவுசெய்கின்றனர். ஒரு கட்டத்தில் யாராவது ஒருவர் தான் பிழைக்க முடியும் என்ற சூழ்நிலை ஏற்பட, மாட் தன் உயிரை தியாகம் செய்கிறார். இறுதியில் ரியான் ஸ்டோன் தனியாக போராடி பூமியை எப்படி அடைகிறார் என்பதே படத்தின் மீதிக் கதை. படத்தின் கதை முழுக்க விண்வெளியில், பூமிலிருந்து 600 கி.மீ உயரத்தில், நடக்கிறது. அங்கே எல்லாம் மிதந்துகொண்டே இருக்கின்றன. கதாபாத்திரங்களும் மிதக்கின்றனர். நேர்த்தியான, மிகவும் புதுமையான ஒளிப்பதிவின் மூலம் விண்வெளியில் மிதக்கும் உணர்வை பார்வையாளர்களுக்கும் ஏற்படுத்தி இருக்கின்றனர்.

முழு படத்தையும் தன் தோளில் சுமக்கிறார் படத்தின் கதாநாயகி சாண்ரா புல்லக். இரண்டு காட்சிகளில் மட்டுமே அவரின் முகத்தை தெளிவாக பார்க்க முடியும். மற்றபடி படம் முழுக்க ஸ்பேஸ் சூட் அணிந்தே நடித்திருக்கிறார். வெறும் வாய்ஸ் மாடுலேஷன் மூலமும், உடல் அசைவு மூலமும் விண்வெளியில் உயிருக்கு போராடும் பெண்ணின் மனநிலையை அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறார். முழு படத்தையும் ஒரு சிறிய கியூப் செட்டில் உருவாக்கியுள்ளனர். அதனால் ஒவ்வொரு நாளும் பத்து மணிநேரத்திற்கு மேல் அந்த கியூப் பெட்டிக்குள்ளேயே அடைந்து கிடக்க வேண்டுமாம். அவ்வளவு மெனக்கெட்டு அவர் சிறப்பாக நடித்திருப்பதனால் அடுத்த ஆண்டு சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதை அவர் வெல்வார் என பலரும் எதிர்பார்க்கின்றனர். படத்தின் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜார்ஜ் க்லூனி மீண்டும் தான் ஒரு தேர்ந்த நடிகர் என்று நிரூபித்திருக்கிறார். கேலியாக பேசுவது தொடங்கி, ரியான் ஸ்டோனிற்கு மனதைரியம் ஊட்டும் வகையில் பேசுவது வரைக்கும், முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

இந்த படத்தை தத்ரூபமாக உருவாக்க வேண்டும் என்பதற்காக கிட்டதட்ட நான்கரை வருடங்கள் போராடியிருக்கிறார் இந்த படத்தின் இயக்குனர் அல்ஃபோன்சா கௌரான். இவர் தன் மகன் ஜோனா கௌரானுடன் இணைந்து இப்படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளார். கிராவிட்டி தன்னுடைய கனவு திரைப்படம் என்று குறிப்பிடும் இவர், இந்த படத்திற்கென பிரத்தியேகமாக பல புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடித்ததாகவும் குறிப்பிடுகிறார். இந்தபடத்தின் மூலம் உலகின் தலை சிறந்த இயக்குனர்கள் பட்டியலில் இவர் இடம்பிடித்திருப்பதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லையே !

படத்தின் மிக பெரிய பலம் ஒலிவடிவமைப்பு. டால்பி அட்மோஸ் என்ற புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒலிப்பதிவு செய்துள்ளனர். உண்மையில் விண்வெளியில் ஒலி இருக்காது. ஒரு பொருளை தொடுவதன் மூலம் எழும் அதிர்வலைகளின் மூலம் தான் சப்தத்தை உணர்ந்து கொள்ள முடியும். இதை கருத்தில் கொண்டு மிகவும் வித்தியாசமான முறையில் ஒலிவடிவமைப்பு செய்திருக்கிறார்கள். இந்த படத்தை முப்பரிமாண ஒளி-ஒலி தொழில்நுட்ப வசதி கொண்ட திரை அரங்கில் பார்த்தால் இந்த வித்தியாசத்தை உணரலாம். மேலும் டால்பி நிறுவனமும் இந்த படத்தின் மூலம் அதிக லாபம் அடைந்திருக்கிறது. கிராவிட்டி படம் பெரும் வெற்றிபெற்றுவிட்டதால், பல ஹாலிவுட் படைப்பாளிகள் தங்களின் படங்களில் அட்மோஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்த ஆர்வம் காட்ட தொடங்கிவிட்டனர்.

இது ஒருபுறமிருக்க, வெறும் தொழில்நுட்பத்தை மட்டும் நம்பி படத்தை எடுக்காமல், பல தத்துவங்களையும் படத்தில் புகுத்தியிருக்கிறார் இயக்குனர். யாருக்காக ஒரு மனிதன் வாழ வேண்டும், மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று இருக்கிறதா, என்பன போன்ற பல கேள்விகளுக்கு ரியான் ஸ்டோன் கதாபாத்திரம் மூலம் பதில் சொல்லியிருக்கிறார் இயக்குனர். மற்ற சயின்ஸ் பிக்ஷன் படங்கள் போல் வெறும் பிரம்மாண்டத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல், தனிமை, நம்பிக்கை, அன்பு, பாசம் போன்ற விடயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பது படத்திற்கு பலம்.

ஹாலிவுடில் பிரம்மாண்டமான படங்கள் பல எடுக்கப்பட்டாலும், வெகுசில படங்கள் மட்டுமே உலக அளவில் பிரபலமாகின்றன. உலக அளவில் ஒரு படம் கொண்டாடப் படவேண்டுமெனில், அந்த படத்தின் கதை அனைத்து தரப்பு மக்களாலும் ரசிக்கும்படி இருக்க வேண்டும். மேக்கிங்கும் அசாத்திய தரத்தில் இருக்க வேண்டும். டைட்டானிக், ஜூராசிக் பார்க், அவதார் போன்ற படங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம். அந்தவகையில் இப்போது உலக சினிமாவில் இன்னொரு மைல்கல்லாக அமைந்துவிட்ட கிராவிட்டி ஆஸ்கார் பந்தயத்தில் வெற்றி பெறுகிறதோ இல்லையோ பலகோடி மக்களின் மனதை ஏற்கனவே வெற்றிக்கொண்டுவிட்டது.

தி காஞ்ஜூரிங்

நன்றி ஆழம் 

உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படும் பேய் படங்களுக்கு எப்பொழுதுமே மவுசு அதிகம். அந்த வகையில், அமெரிக்காவில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தின் திரை வடிவமே, அண்மையில் வெளியான, தி காஞ்ஜூரிங். உலகளவில் பெரும் வரவேற்ப்பை பெற்றுவரும் இந்த படத்தில் அப்படி என்ன தான் இருக்கிறது என்று பார்த்துவிடுவோம்.

பெரோன் தம்பதியர், தங்கள் ஐந்து மகள்களுடன் புது வீட்டிற்கு குடி புகுகிறார்கள். ஆனால் அவர்களின் செல்ல நாய் மட்டும் வீட்டிற்குள் காலடி எடுத்து வைக்க மறுக்கிறது. அவர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளமால், புது வீட்டில் முதல் நாள் பொழுதை சந்தோசமாக கழிக்கின்றனர். மறுநாள் அவர்களின் செல்ல நாய் வாசலில் இறந்து கிடக்கிறது. அன்றிலிருந்து, தினமும் அதே இடத்தில், புறாக்கள் செத்து விழுகின்றன.  வீட்டில் உள்ள அனைத்து கடிகாரங்களும், விடியற் காலை 3.07-க்கு நின்று விடுகின்றன. சுவற்றில் மாட்டப்பட்டிருக்கும் படங்கள் கீழே விழ தொடங்குகின்றன. வீட்டினுள் ஏதோ கெட்ட சக்தி இருக்கிறது என்பதை அவர்கள் மிகவும் தாமதமாக புரிந்து கொள்கின்றனர்.

என்ன செய்வது என்று தெரியாது விழிக்கும் பெரோன் தம்பதியர், இறுதியில் அமானுஷ்ய சக்திகளை பற்றி ஆராய்ச்சி செய்யும், வாரன் தம்பதியரின் உதவியை நாடுகிறார்கள். அவர்கள் வீட்டிற்கு வந்து ஆராய்ச்சி செய்த பின்னர் தான் தெரிகிறது, வீட்டில் ஒரு பேய் மட்டும் இல்லை, பேய்கள் இருக்கின்றன என்று. ஆறு வயது பேய் முதல், 60 வயது பேய் வரை வீட்டினுள் நிறைய பேய்கள் இருக்கின்றன. அதில் சில பேய்கள் நல்ல பேய்கள். அவர்களால் எந்த ஆபத்தும் இல்லை. அந்த வீட்டில் இருப்பதிலே கொடூரமான பேய் பாத்சேபா என்றொரு பெண் பேய். அந்த பேயை வெளியேற்றினால் அந்த வீட்டில் அமைதி திரும்பி விடும் என்று முடிவு செய்கின்றனர் பெரோன் தம்பதியர். பேய் ஓட்ட வேண்டுமெனில், அந்த ஊர் தேவாலயத்திடமிருந்து அனுமதி பெற வேண்டும். அந்த வீட்டினுள் பேய் இருக்கிறது என்பதற்கான ஆதாரங்களை சமர்பித்தால்தான் அனுமதி தருவோம் என்கிறது சர்ச் கமிட்டி. அவர்கள் ஆதாரங்களை தயார் செய்துக் கொண்டிருக்கும் வேலையில், அந்த வீட்டு பெண்மணியான கரோலின் பெரோனுக்கு பேய் பிடித்துவிடுகிறது. அவள் தன் மகள்களையே கொல்ல முயல்கிறாள். இறுதியில் பேய் வென்றதா, இல்லை, வாரன் தம்பதியர் வென்றார்களா என்பதே மீதி கதை.

படத்தின் கதை என்னமோ வழக்கமான பேய் பட கதை தான். ஆனால், அதை சொன்ன விதத்தில் நிறைய வித்தியாசம் காட்டியிருக்கிறார்கள். படத்தில் எதிர்பாராத திகில் தருணங்கள் நிறைய இருக்கிறது. உதரணாமாக, தாயும் மகளும் கண்ணாமூச்சி ஆடும் ஒரு காட்சியில், பேயும் ஆட்டத்தில் சேர்ந்து கொள்கிறது. அது பேய் என்று தெரியும் போது அந்த தாய் மட்டும் நடுங்கவில்லை, பார்ப்பவர்களும் நடுங்குகிறார்கள். இது போன்ற, விறுவிறுப்பான திரைக்கதையோடு, திகிலூட்டும் பின்னணி இசையும், சவுண்ட் எபெக்டஸ்சும் சேர்ந்து கொள்வதால், படம் சீட் எட்ஜ் த்ரில்லராக உருவெடுத்து, நம்மை மிரட்டுகிறது.

உலக சினிமாவில், பல வருடங்களாக பேய் படங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் காஞ்ஜூரிங் அளவிற்கு சிறந்த படம் வரவில்லை என பலரும் இந்த படத்தை பற்றி பாராட்ட தொடங்கிவிட்டனர். இந்த பாராட்டுக்கள், அனைத்தும் படத்தின் இயக்குனரையே சேரும். இந்த படத்தை மிகவும் சிறப்பாக இயக்கியிருப்பவர் ஜேம்ஸ் வான். இவர், உலகளவில் மிகவும் பிரபலமான ‘சா’ (Saw) படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இது வரை இவர் எடுத்த எல்லா படங்களும் திகில் படங்களே. அமெரிக்காவில் இந்த படம் அதிக வரவேற்பை பெற்றுள்ளதால் இவரை ஹாலிவுட்டின் ‘ஹாரர் கிங்’ என்று அழைக்க தொடங்கிவிட்டனர். இவருடைய எல்லா படங்களிலும், மரத்தால் செய்யப்பட்ட ஒரு பொம்மை இடம்பெற்றிருக்கும். இந்த படத்திலும் அப்படி ஒரு பொம்மை வருகிறது. அதுவும் தன் பங்கிற்கு நம்மை பயமுறுத்திவிட்டு செல்கிறது.

இந்த படம் மட்டும் சுவாரஸ்யமாக இருக்கவில்லை. படம் உருவான விதமும் சுவாரஸ்யமாகவே இருக்கிறது. 1971-யில் அமெரிக்காவின் ரோட் தீவில் உள்ள ஒரு வீட்டில் நடந்த சம்பவத்தை தான் இப்போது படமாக உருவாக்கி இருக்கின்றனர். அந்த வீட்டில் ஒரு காலத்தில் வசித்த சூனியக்காரி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறாள். அவள் தான் அந்த வீட்டில் பேயாக அலைந்து, அங்கே குடியிருந்த அனைவரையும் தொந்தரவு செய்திருக்கிறாள். வாரன் தம்பதியர் (எட் வாரன், லொரைன் வாரன்) தான் அதை கண்டுபிடித்திருக்கிறார்கள்.  அமெரிக்காவில், அமானுஷ்ய சக்திகளை பற்றி ஆராய்ச்சி செய்வதில் பேர்பெற்றவர்கள் இவர்கள். ஹாலிவுட்டில் வந்த சில முக்கிய பேய் படங்கள், இவர்களின் சொந்த அனுபவத்திலிருந்து உருவானவையே. கிட்டதட்ட இருபது ஆண்டுகளாக, பலரும் இந்த படத்தை உருவாக்க முயன்று தோற்றுள்ளனர். இறுதியில் வான் இதற்கு வெற்றிகரமாக திரைவடிவம் கொடுத்துவிட்டார்.

அமெரிக்காவில், ஒரு திரையரங்கில், இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் பயந்து நடுங்கியிருகிறார்கள். அதனால், அந்த திரையரங்க நிர்வாகம், ஒரு பாதிரியாரை வரவழைத்திருக்கிறது. ஒவ்வொரு காட்சி முடிந்ததும், அந்த பாதிரியார், மக்களுக்கு மன தைரியம் ஊட்டும் வகையில், கவுன்சிலிங் கொடுத்து விட்டு போகிறாராம். இது ஒரு மார்கெட்டிங் உத்தி என்கிறார்கள் விமர்சகர்கள்.   

இந்த படம் மிக சிறந்த ஹாரர் படமாக உருவானதற்கு முக்கிய காரணம், இயக்குனரின் தனித்திறமைதான். ஒரு சிறந்த பேய் படம் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு இந்த படம் சரியான உதாரணம். பேய் பிசாசு போன்றவற்றில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் இந்த படம் நிச்சயம் பிடிக்கும்.

 

சினிமா மேட் இன் சீனா

உலகிலேயே அதிக படங்கள் தயாரிக்கும் நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் நாடு சீனா. அமெரிக்காவும் இந்தியாவும் முறையே முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் இருக்கின்றன. சீனாவில் படைப்பு சுதந்திரம் குறைவு என்பதால், சீன ரசிகர்களின் எதிர்பார்ப்பை சீன படைப்பாளிகளால் பூர்த்திசெய்ய முடியவில்லை. அதனால் சீனர்கள் ஹாலிவுட்டை ஆதரிக்கத் தொடங்கிவிட்டனர். விளைவு, சீனாவில் ஆண்டுக்கு பல நூறு படங்கள் தயாரிக்கப்பட்டாலும், சீனா அதிகம் கல்லாக் கட்டுவது ஹாலிவுட் படங்களின் மூலமே..

1960-களில் சீனாவில் நடந்த கலாச்சார புரட்சியின் விளைவு, அங்கு பெரும்பாலான பழைய சீன படங்கள் தடை செய்யப்பட்டது. வெளிநாட்டுப் படங்களை சீனாவில் திரையிட முடியாத நிலை ஏற்பட்டது. புதிதாக எடுக்கப்படும் படங்களுக்கும் நிறைய கட்டுபாடுகள் விதிகப்பட்டது. 1980-களுக்கு பின் இந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறியது. திரைப்படத்துறையின் மீது இருந்த கட்டுபாடுகள் தளர்ந்தன.

1994-யில் ஹாலிவுட் படங்களுக்கு சீனாவின் கதவு மீண்டும் திறக்கப்பட, அன்று முதல் இன்று வரை டைட்டானிக், அவதார், அயன் மேன், லைப் ஆப் பை என பல பிரபலமான அமெரிக்கப் படங்கள் சீன மொழியில் வெளியாகி வருகிறது. இதன்மூலம் அமெரிக்கா சீனா இரண்டுமே பல ஆயிரம்கோடி வருமானம் ஈட்டுகிறது.

ஆண்டொன்றுக்கு சீனாவில் 34 அந்நியப் படங்கள் அனுமதிக்கப்படுகின்றன. அந்த 34 படங்களில் தங்கள் படமும் ஒன்றாக இருக்கவேண்டும் என்று பிரபல ஹாலிவுட் திரைப்பட நிறுவனங்கள் ஒவ்வொன்றும் போட்டி போடுகின்றன. ஆனால் எந்த வெளிநாட்டு படமாக இருந்தாலும், சீனத் திரைப்பட தணிக்கைக் குழுவால் தணிக்கை செய்யப் பட்ட பிறகுதான் சீனாவில் வெளியிட முடியும்.  அதில் அவர்கள் வன்முறை காட்சிகள், கோரக் காட்சிகள், சீனர்களுக்கு எதிரான காட்சிகள் என சீனாவிற்கு ஒவ்வாத காட்சிகள் எது இருந்தாலும் நீக்கி விடுவார்கள்.

அமெரிக்கத் தணிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் க்வெண்டின் டரண்டினோ போன்ற இயக்குனர்கள் கூட, சீனாவின் தணிக்கைக் குழுவிற்கு கட்டுப்பட்டு செல்கிறார்கள். டரண்டினோவின் சமீபத்திய படமான ஜாங்கோவின் சீன மொழிப்பெயர்ப்பில் பல வன்முறை காட்சிகள் நீக்கப்பட்டுவிட்டன.

இன்றளவும் சீனர்களை வில்லன்களாகவும், சீனாவை சாத்தான்களின் பூமியாகவும்  சித்தரிக்கும் ஹாலிவுட் படங்கள் வந்துக் கொண்டுதான் இருக்கின்றன. அவ்வாறான படங்களை சீனாவில் எப்படி வெளியிடுவது? அதற்கும் வழி வந்துவிட்டது. பல கோடிகளை இறைத்து, நவீன தொழில்னுட்பத்தின் உதவியுடன் படத்தில் இடம்பெறும் சீன வில்லன்களை கொரியன் வில்லன்கள் போல் மாற்றிவிடுகின்றனர். கடந்த ஆண்டு வெளியான ரெட் டான் (Red Dawn) திரைப்படத்தில் ஹாலிவுட் இதனை செய்தது. கிராபிக்ஸில் எல்லாமே சாத்தியமாகிவிடுகிறது. பின் சீனாவின் ஒப்புதலோடு அந்த படங்களை அங்கே வெளியிடுகின்றனர்.

உலகத்திலேயே அதிக படங்களை தயாரிக்கும் அமெரிக்கா, பாக்ஸ் ஆபிசில் முதல் இடம் வகிக்கும் அமெரிக்கா, ஏன் இவ்வளவு மெனக்கெட வேண்டும் என்ற கேள்வி எழலாம். அமெரிக்காவில் எடுக்கப்படும் படங்கள் வெறும் அமெரிக்க பாக்ஸ் ஆபிசை மட்டுமே நம்பினால், லாபம் பார்க்க முடியாது. ஒரு நாட்டில், திரைப்பட டிக்கெட்களை விற்பதன் மூலம் வரும் வருவாயே பாக்ஸ் ஆபிஸ் எனப்படுகிறது.

உலக பாக்ஸ் ஆபிசில் சீனா இரண்டாம் இடம் வகிக்கிறது. இதற்க்கு முன் இரண்டாம் இடம் வகித்த ஜப்பான், இப்போது மூன்றாம் இடத்திற்கு தள்ளப்ப்பட்டுவிட்டது. அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவின் பாக்ஸ் ஆபிசை குறிவைத்தே ஹாலிவுட் சீனாவிற்கு கட்டுப்பட்டு செல்கிறது. 2.7 பில்லியன் டாலர் மதிப்புள்ள சீன பாக்ஸ் ஆபிசை அமெரிக்கா இழக்கத் தயாராக இல்லை.

மேலும், பல ஹாலிவுட் படங்கள் அமெரிக்காவை விட சீனாவில் அதிக வருமானம் ஈட்டுகிறது. ஹாலிவுட் இயக்குனர் கேமரூனுக்கு சீனாவில் ரசிகர்கள் அதிகம். அவர் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிபெற்ற டைட்டானிக் முப்பரிமான வடிவம்பெற்று கடந்த ஆண்டு சீனாவில் வெளியிடப்பட்டது. உலகளவில், டைட்டானிக்-3D ஈட்டிய லாபத்தில் பெரும்பங்கு சீனாவில் இருந்துதான் வந்தது.

டைட்டானிக்கை விட அவதார் சீனர்களை சற்று அதிகமாகவே கவர்ந்துவிட்டது எனலாம். சீனாவின் ஜாங்க்ஜியாஜி (Zhangjiajie) தேசிய பூங்காவில் உள்ள மலை ஒன்றிற்ற்கு, ‘அவதார் மலை’ என பெயர் வைக்கும் அளவிற்கு அவதார் அங்கே சக்கை போடு போட்டது.

சீனர்களின் இந்த ஹாலிவுட் மோகத்தை அமெரிக்கா பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறது. அதனால்தான் சீனர்களுக்கு எதிரான காட்சிகளை நீக்குவது மட்டுமல்லாமல், சீனர்களை கவர்வதற்கென்றே பிரத்யேகமாக காட்சிகளை சேர்க்கவும் செய்கிறார்கள். சமீபத்தில் வெளியான அயன் மேன்-3 சீன வெளியீட்டில், பிரபல சீன நடிகை பான் பிங்பிங்கை சிறு வேடத்தில் நடிக்க வைத்துள்ளனர். மேலும் சீன நடிகர் வாங் நடித்த காட்சிகளையும் நீட்டித்துள்ளனர். இவை முழுக்க முழுக்க சீன ரசிகர்களை கவர்வதற்காக செய்யப்பட்ட ஒன்று.  அமெரிக்க வடிவத்தில் பான்பிங்பிங் நடித்த காட்சிகள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவை ஒரு புறம் இருக்க, சீன மொழியிலும் சில தரமான படங்கள் எடுக்கப்பட்டாலும் அவை உலக அளவில் பெரிதாக கவனிக்க படவில்லை. சீனாவில் நிறைந்திருக்கும் கட்டுப்பாடுகளே அதற்கு முக்கிய காரணம். இப்போது சீனாவில் அமெரிக்க படங்களை அனுமதிப்பதன் மூலம், சீனபடங்கள் உலக அளவில் கொண்டு செல்லப்படும் அமெரிக்க நிறுவனங்களின் மூலம். இது சீன சினிமாவையும் உலக அளவில் பேச வைக்கும்.

இந்தனை ஆண்டுகள் இல்லாத அளவுக்கு இப்போது மட்டும் ஏன் ஹாலிவுட் இவ்வளவு பிரயத்தனப்படுகிறது  ? நம்ம ஊர் பர்மாபஜார் போல் சீனாவிலும் டி.வி.டி மார்கெட் உண்டு. அங்கே எல்லா பிரபலமான ஹாலிவுட் படங்களும் சப்டைட்டில்களோடு கிடைக்கிறது. அதை பல கோடி மக்கள் விரும்பி வாங்குகின்றனர். எவ்வளவு முயன்றும் இதனை தடுக்கமுடியவில்லை. திருட்டு டி.வி.டிகளின் மூலம் யாரோ சிலர் லாபம் அடைவதைவிட , ஹாலிவுட்டே படத்தை நேரடியாக வெளியிட்டால் பல்லாயிரம் கோடி லாபம் பார்க்கலாம். அதனால் தான் ஹாலிவுட் இவ்வளவு தூரம் இறங்கி வந்திருக்கிறது. சீனாவின் தணிக்கை குழு என்ன சொன்னாலும் தலையாட்டுகிறது.

ஹாலிவுட் மட்டும் அல்ல, பாலிவுட் படங்களுக்கும் சீனாவில் மவுசு கூடியுள்ளது. 3 இடியட்ஸ் படம் அங்கே சூப்பர் ஹிட். ராக்ஸ்டார் திரைப்படம் தாய்வான் டி.வி.டி மார்கெட்டில் மிகப்பிரபலம். இந்திய சீன அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை தாண்டி பாலிவுட் சீனாவில் எவ்வாறு ஜொலிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சீனா இவ்வளவு வேகமாக பாக்ஸ் ஆபிசில் வளர்ந்தால், சீனவிற்க்கென்று படங்களின் காட்சிகள் மாற்றப்படும் காலம் மறைந்து, சீனவிற்க்கென்றே பிரத்யேகமாக படங்களை தயாரிக்கும் காலம் விரைவில் வந்திடும். உலகத் திரைப்படத்துறையை சீனாவே கட்டுப்படுத்தும் காலமும் வரலாம். ‘Made in china’ முத்திரையோடு படங்கள் வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை…