ஆஸ்கார் 2014

நன்றி ஆழம் ஏப்ரல் 2014

ஆஸ்கார் போட்டியின் மீது ஏராளமான விமர்சனங்கள் எழுந்தாலும், ஆஸ்கார் விருதுக்கு இருக்கும் மவுசுமட்டும் குறைவதில்லை. அந்த வகையில், இந்த ஆண்டு அதிக எதிர்பார்ப்புகளுக்கிடையே நடந்து முடிந்த ஆஸ்கார் போட்டியில் எந்தெந்த படங்கள் எந்தெந்த பிரிவுகளில் விருதுகளை வென்றன என்பதை இங்கே பார்ப்போம்.

கிராவிட்டி
இந்த ஆண்டு அதிக விருதுகளை வென்றுள்ள படம், கிராவிட்டி. சிறந்த இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த இசை உட்பட மொத்தம் ஏழு விருதுகளை இந்த படம் வென்றுள்ளது. விண்வெளியில் சிக்கிக் கொண்டு தவிக்கும் பெண்ணை பற்றிய சயின்ஸ் பிக்ஷன் படம் இது. இந்த படத்தின் கதாநாயகி சாண்ரா புல்லக் மிகவும் சிறப்பாக நடித்திருந்ததால் அவருக்கு ஆஸ்கார் விருது கிடைக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு விருது கிடைக்கவில்லை. எனினும் அனைவரும் எதிர்பார்த்ததை போல், படத்தின் இயக்குனர் அல்ஃபோன்சா கௌரான் சிறந்த இயக்குனருக்கான விருதை பெற்றுள்ளார். இந்த விருதை பெரும் முதல் மெக்சிகன் இவர் என்பது குறிப்பிடதக்கது. விண்வெளியை மிகவும் தத்ரூபமாக திரையில் காண்பித்ததற்காக நாசா விஞ்ஞானிகள் உட்பட பலரும் இவரை பாராட்டி வருகின்றனர்.

டல்லாஸ் பையர்ஸ் கிளப்

குறைந்த பொருட் செலவில் வெறும் 25 நாட்களில் எடுக்கபட்ட இந்த படம் சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர் உட்பட மூன்று விருதுகளை பெற்றுள்ளது. எம்பதுகளில் அமெரிக்காவில் வாழ்ந்த ரோன் வூட்ரூஃப் என்ற எய்ட்ஸ் நோயாளியை பற்றிய படம் இது. அவர் முப்பது நாட்களில் இறந்துவிடுவார் என்று அவரது டாக்டர்கள் அவருக்கு கெடு விதித்திருக்கின்றனர். ஆனால், அவரோ நாடு விட்டு நாடு சென்று பல தடை செய்யபட்ட மருந்துகளை வாங்கி உட்கொண்டு கிட்டதட்ட ஏழு வருடங்கள் உயிர்வாழ்ந்திருக்கிறார். மேலும் அந்த மருந்துகளை அமெரிக்கவிற்கு கடத்தி வந்து, பல எய்ட்ஸ் நோயாளிகளுக்கு விநியோகம் செய்திருக்கிறார். இந்த உண்மை கதையில், ரோன் கதாபாத்திரத்தில் நடித்த மாத்யூ மெக்கனாகே சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை பெற்றுள்ளார். அவரது நோயாளி நண்பராக, திருநங்கை கதாபாத்திரத்தில், நடித்த, ஜாராத் லீட்டோ சிறந்த துணை நடிகருக்கான விருதை பெற்றுள்ளார். எய்ட்ஸ் நோயாளி போல் தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக மாத்யூ இருபத்தியொரு கிலோ வரை தன் உடல் எடையை குறைத்திருக்கிறார். லீட்டோவோ பதினெட்டு கிலோ வரை தன் எடையை குறைத்திருக்கிறார்.

12 இயர்ஸ் எ ஸ்லேவ்

இதுவும் ஒரு வாழ்க்கை வரலாற்று படம்தான். பத்தொன்பதாம் நூற்றாண்டில், அமெரிக்காவை சேர்ந்த சாலமன் நார்தப் என்ற கறுப்பின மனிதரை கடத்தி வில்லியம் ஃபோர்ட் என்பவரிடம் அடிமையாக விற்றுவிடுகின்றனர். பின் அவர் பலரிடம் அடிமையாக விற்கபட்டு, பல இன்னல்களை சந்தித்து, பன்னிரண்டு ஆண்டுகளுக்கு பின் சுதந்திர காற்றை சுவாசிக்கிறார். பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் தயாரித்த இந்த படம், சிறந்த படம், சிறந்த துணை நடிகை, சிறந்த தழுவல் திரைக்கதை ஆகிய மூன்று விருதுகளை பெற்றுள்ளது. அமெரிக்க சரித்திரத்தில் கரும்புள்ளியாக இருக்கும் அடிமை வர்த்தகத்தை பற்றியும், பழைய அமெரிக்காவின் இருள் செறிந்த பக்கத்தை பற்றியும் பேசும் இந்த படத்திற்கு அமெரிக்கர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. வசூலிலும் படம் பெரும் சாதனை படைத்து வருகிறது. இந்த படத்தில் அடிமை பெண் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்த லுபித்தா நியோங்கோவிற்கு சிறந்த துணை நடிகைக்கான விருது கிட்டியுள்ளது. ஆஸ்கர் விருதை பெரும் முதல் ஆப்ரிக்க நடிகை இவர்.

ப்ளூ ஜாஸ்மின்

அமெரிக்க புது அலை சினிமாவின் பிதாமகன்களில் ஒருவரான வூடி ஆலன் எழுதி இயக்கிய படம், ப்ளூ ஜாஸ்மின். அமெரிக்க உயர்குடி வர்கத்தை சேர்ந்தவள் ஜாஸ்மின். பணத் திமிரால் யாரையும் மதிக்காமல், ஆடம்பர்மாக வாழும் அவள், ஒரு கட்டத்தில் சொத்துகளை இழந்து கணவனை இழந்து தன் தங்கையிடம் அடைக்கலம் புகுகிறாள். புது வாழ்க்கையை தொடங்க முயற்சிக்கும் போதெல்லாம், பழைய நினைவுகள் அவளை வாட்டி வதைக்கிறது. பின் அவளுக்கு என்னவாகிறது என்பதே படத்தின் கதை. இந்த படத்தில் ஜாஸ்மின் கதாபாத்திரத்தில் நடித்த கேட் பிளான்செட் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றுள்ளார். வூடி ஆலனுக்கு சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கபட்டது. ஆனால் அந்த விருதை ஹெர் படத்தின் திரைக்கதை ஆசிரியர் ஸ்பைக் ஜோன்ஸ் தட்டி சென்றுவிட்டார்.

ஹெர்

தனிமையில் வாழும் கதாநாயகன், ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழிநுட்பம் கொண்ட ஆபேரட்டிங் சிஸ்டம் ஒன்றை வாங்கி அதற்கு சமந்தா என்று பெயர் சூட்டுகிறான். அதனுடன் மனம் திறந்து பேசுகிறான். நாளடைவில் அவனும், சமந்தாவும் காதல் கொள்கிறார்கள். பின் என்னவாகிறது என்பதே இந்த சயின்ஸ் பிக்ஷன் படத்தின் கதை. கிலாடியேட்டர் பட புகழ் ஜாக்குவின் பீனிக்ஸ் தான் இந்த படத்தின் கதாநாயகன்.

தி கிரேட் ப்யூட்டி

சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான விருது இத்தாலி படமான க்ரேட் ப்யூட்டி படத்திற்கு கிட்டியுள்ளது. ஒரு எழுத்தாளரை பற்றியும், அவருடைய தேடலை பற்றியும் பேசும் இந்த படத்தை பாவ்லோ சொர்ரென்டினோ இயக்கியுள்ளார். வாழ்வின் வெறுமையை கடக்க முயலும் கதாநாயகன், தன் வாழ்க்கை பயணத்தின் மூலமும், தான் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களின் மூலமும் வாழ்க்கையின் அர்த்தத்தை புரிந்து கொள்வதே படத்தின் கதை. முழுக்க முழுக்க அழகான விசுவல்ஸ்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளனர்.

ஃப்ரோசன் (Frozen)

சிறந்த அனிமேஷன் திரைப்படம் விருதை ஃப்ரோசன் திரைப்படம் வென்றுள்ளது. இந்த படத்தை வால்ட் டிஸ்னி நிறுவனம் தயாரித்துள்ளது. அந்த நிறுவனம் இதுவரை ஏராளமான அனிமேஷன் படங்களை தயாரித்திருந்தாலும், அவர்கள் ஆஸ்கார் விருது  வாங்குவது இதுதான் முதல் முறை. ஆராந்தெல் தேசத்து இளவரசி சகோதரிகளான எல்சா மற்றும் அன்னா ஆகியோர் எப்படி தாங்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் பாசத்தை உணர்கிறார்கள் என்பதே படத்தின் சார்ம்சம். இந்த படத்தில் இடம்பெற்ற ‘லெட் இட் கோ’ என்ற பாடலுக்கு சிறந்த பாடலுக்கான விருது கிடைத்துள்ளது.

இது ஒருபுறமிருக்க, பத்து பிரிவுகளில் பரிந்துரைக்கபட்ட அமெரிக்கன் ஹசல் திரைப்படமும், ஐந்து பிரிவுகளில் பரிந்துரைக்கபட்ட உல்ஃப் ஆப் வால் ஸ்ட்ரீட் திரைப்படமும் ஒரு விருதை கூட வெல்லவில்லை என்பது குறிப்பிடதக்கது.

கிராவிட்டியும் ஆஸ்காரும்

கடந்த ஆண்டு வெளியான லைஃப் ஆப் பை படத்திற்கும் இந்த ஆண்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கிராவிட்டி படத்திற்கும் ஒரு ஒற்றுமை உண்டு. நடுக்கடலில் தன்னந்தனியாக தத்தளிக்கும் சிறுவனை பற்றிய படம் லைஃப் ஆஃப் பை. விண்வெளியில் உயிருக்கு போராடும் பெண்ணை பற்றிய சயின்ஸ் பிக்ஷன் படம், கிராவிட்டி. இரண்டு படங்களுமே, தன்னம்பிக்கை இருந்தால் எத்தகைய ஆபத்தான சூழலையும் எதிர்கொள்ளலாம் என்ற கருத்தையே முன்வைக்கின்றன. லைஃப் ஆப் பை பல ஆஸ்கார் விருதுகளை குவித்தது போல கிராவிட்டி படமும் வரவிருக்கும் ஆஸ்கார் விழாவில் ஏராளமான விருதுகளை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சயின்ஸ் பிக்ஷன் படம் என்றதும் புரியாத பல அறிவியல் கோட்பாடுகளை விவரித்து நம்மை குழப்புவார்கள் என எண்ணவேண்டாம். இது மிகவும் எளிமையான லீனியரான திரைப்படம். படத்தில் அறிவியல் கோட்பாடுகளை விட ஆன்மிக கருத்துக்களும், தத்துவங்களுமே அதிகம் இருக்கின்றன.

விண்வெளி வீரர் மாட் கௌலஸ்கி (ஜார்ஜ் க்லூனி) தன்னுடைய கடைசி விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட வேண்டும் என்று கனவுகண்டு கொண்டிருக்க, விண்வெளியில் ஏற்படும் விபத்தால் விண்கலம் பழுதாகிறது. அவரது குழுவில் இருக்கும் அனைவரும் இறந்து போக, அவரும் டாக்டர் ரியான் ஸ்டோன் (சாண்ரா புல்லக்) மட்டும் உயிர் பிழைக்கின்றனர். ரியான் ஸ்டோனிற்கு அது முதல் விண்வெளி பயணம்.  எப்படியாவது அங்கிருந்து தப்பித்துவிட வேண்டும் என இருவரும் முடிவுசெய்கின்றனர். ஒரு கட்டத்தில் யாராவது ஒருவர் தான் பிழைக்க முடியும் என்ற சூழ்நிலை ஏற்பட, மாட் தன் உயிரை தியாகம் செய்கிறார். இறுதியில் ரியான் ஸ்டோன் தனியாக போராடி பூமியை எப்படி அடைகிறார் என்பதே படத்தின் மீதிக் கதை. படத்தின் கதை முழுக்க விண்வெளியில், பூமிலிருந்து 600 கி.மீ உயரத்தில், நடக்கிறது. அங்கே எல்லாம் மிதந்துகொண்டே இருக்கின்றன. கதாபாத்திரங்களும் மிதக்கின்றனர். நேர்த்தியான, மிகவும் புதுமையான ஒளிப்பதிவின் மூலம் விண்வெளியில் மிதக்கும் உணர்வை பார்வையாளர்களுக்கும் ஏற்படுத்தி இருக்கின்றனர்.

முழு படத்தையும் தன் தோளில் சுமக்கிறார் படத்தின் கதாநாயகி சாண்ரா புல்லக். இரண்டு காட்சிகளில் மட்டுமே அவரின் முகத்தை தெளிவாக பார்க்க முடியும். மற்றபடி படம் முழுக்க ஸ்பேஸ் சூட் அணிந்தே நடித்திருக்கிறார். வெறும் வாய்ஸ் மாடுலேஷன் மூலமும், உடல் அசைவு மூலமும் விண்வெளியில் உயிருக்கு போராடும் பெண்ணின் மனநிலையை அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறார். முழு படத்தையும் ஒரு சிறிய கியூப் செட்டில் உருவாக்கியுள்ளனர். அதனால் ஒவ்வொரு நாளும் பத்து மணிநேரத்திற்கு மேல் அந்த கியூப் பெட்டிக்குள்ளேயே அடைந்து கிடக்க வேண்டுமாம். அவ்வளவு மெனக்கெட்டு அவர் சிறப்பாக நடித்திருப்பதனால் அடுத்த ஆண்டு சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதை அவர் வெல்வார் என பலரும் எதிர்பார்க்கின்றனர். படத்தின் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜார்ஜ் க்லூனி மீண்டும் தான் ஒரு தேர்ந்த நடிகர் என்று நிரூபித்திருக்கிறார். கேலியாக பேசுவது தொடங்கி, ரியான் ஸ்டோனிற்கு மனதைரியம் ஊட்டும் வகையில் பேசுவது வரைக்கும், முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

இந்த படத்தை தத்ரூபமாக உருவாக்க வேண்டும் என்பதற்காக கிட்டதட்ட நான்கரை வருடங்கள் போராடியிருக்கிறார் இந்த படத்தின் இயக்குனர் அல்ஃபோன்சா கௌரான். இவர் தன் மகன் ஜோனா கௌரானுடன் இணைந்து இப்படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளார். கிராவிட்டி தன்னுடைய கனவு திரைப்படம் என்று குறிப்பிடும் இவர், இந்த படத்திற்கென பிரத்தியேகமாக பல புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடித்ததாகவும் குறிப்பிடுகிறார். இந்தபடத்தின் மூலம் உலகின் தலை சிறந்த இயக்குனர்கள் பட்டியலில் இவர் இடம்பிடித்திருப்பதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லையே !

படத்தின் மிக பெரிய பலம் ஒலிவடிவமைப்பு. டால்பி அட்மோஸ் என்ற புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒலிப்பதிவு செய்துள்ளனர். உண்மையில் விண்வெளியில் ஒலி இருக்காது. ஒரு பொருளை தொடுவதன் மூலம் எழும் அதிர்வலைகளின் மூலம் தான் சப்தத்தை உணர்ந்து கொள்ள முடியும். இதை கருத்தில் கொண்டு மிகவும் வித்தியாசமான முறையில் ஒலிவடிவமைப்பு செய்திருக்கிறார்கள். இந்த படத்தை முப்பரிமாண ஒளி-ஒலி தொழில்நுட்ப வசதி கொண்ட திரை அரங்கில் பார்த்தால் இந்த வித்தியாசத்தை உணரலாம். மேலும் டால்பி நிறுவனமும் இந்த படத்தின் மூலம் அதிக லாபம் அடைந்திருக்கிறது. கிராவிட்டி படம் பெரும் வெற்றிபெற்றுவிட்டதால், பல ஹாலிவுட் படைப்பாளிகள் தங்களின் படங்களில் அட்மோஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்த ஆர்வம் காட்ட தொடங்கிவிட்டனர்.

இது ஒருபுறமிருக்க, வெறும் தொழில்நுட்பத்தை மட்டும் நம்பி படத்தை எடுக்காமல், பல தத்துவங்களையும் படத்தில் புகுத்தியிருக்கிறார் இயக்குனர். யாருக்காக ஒரு மனிதன் வாழ வேண்டும், மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று இருக்கிறதா, என்பன போன்ற பல கேள்விகளுக்கு ரியான் ஸ்டோன் கதாபாத்திரம் மூலம் பதில் சொல்லியிருக்கிறார் இயக்குனர். மற்ற சயின்ஸ் பிக்ஷன் படங்கள் போல் வெறும் பிரம்மாண்டத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல், தனிமை, நம்பிக்கை, அன்பு, பாசம் போன்ற விடயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பது படத்திற்கு பலம்.

ஹாலிவுடில் பிரம்மாண்டமான படங்கள் பல எடுக்கப்பட்டாலும், வெகுசில படங்கள் மட்டுமே உலக அளவில் பிரபலமாகின்றன. உலக அளவில் ஒரு படம் கொண்டாடப் படவேண்டுமெனில், அந்த படத்தின் கதை அனைத்து தரப்பு மக்களாலும் ரசிக்கும்படி இருக்க வேண்டும். மேக்கிங்கும் அசாத்திய தரத்தில் இருக்க வேண்டும். டைட்டானிக், ஜூராசிக் பார்க், அவதார் போன்ற படங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம். அந்தவகையில் இப்போது உலக சினிமாவில் இன்னொரு மைல்கல்லாக அமைந்துவிட்ட கிராவிட்டி ஆஸ்கார் பந்தயத்தில் வெற்றி பெறுகிறதோ இல்லையோ பலகோடி மக்களின் மனதை ஏற்கனவே வெற்றிக்கொண்டுவிட்டது.

தி குட் ரோடும் ஆஸ்காரும்

1956-ஆம் ஆண்டு தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க படங்கள் அல்லாத மற்ற படங்களை அங்கீகரிக்கும் வகையில் சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்றொரு விருதை ஆஸ்கார் குழுவினர் வழங்கி வருகின்றனர். அந்த விருதிற்காக ஒவ்வொரு நாடும் போட்டி போட்டுக் கொண்டு ஆஸ்காருக்கு படங்களை அனுப்புவது வழக்கம். இந்த ஆண்டு அதிக சர்ச்சைகளுக்கும் பாராட்டுகளுக்குமிடையே “தி குட் ரோட்” என்கிற குஜராத்தி திரைப்படத்தை ஆஸ்காருக்கு பரிந்துரை செய்திருக்கிறது இந்திய திரைப்பட கூட்டமைப்பு.

தொண்ணூறுகளின் தொடக்கத்திலேயே குஜராத் திரைத்துறை அழிவை சந்திக்க தொடங்கிவிட்டது. கடந்த இருபத்தைந்து வருடங்களில் குஜராத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எந்த ஒரு படமும் எடுக்கப்படவில்லை. ஆனால் குட் ரோட் படம் சிறந்த பிராந்திய மொழி திரைப்படத்திற்கான தேசிய விருதை அண்மையில் பெற்றது. இப்போது ஆஸ்காருக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது. அதனால் இந்த படம் பலரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இது ஒருபுறமிருக்க பலரின் வரவேற்பை பெற்ற லஞ்ச்பாக்ஸ் என்ற இந்தி திரைப்படத்தை விடுத்து, இந்த படத்தை ஆஸ்காருக்கு பரிந்துரை செய்துவிட்டதால் பலரும் இந்திய திரைப்பட கூட்டமைப்பின் முடிவை விமர்சிக்க தொடங்கிவிட்டனர். இப்படி பாராட்டுகளையும் விமர்சனங்களையும் ஒருங்கே பெற்றிருக்கும் இந்த படத்தின் கதை தான் என்ன?

டேவிட்-கிரண் தம்பதியர் மும்பையிலிருந்து சுற்றுலாவிற்காக கட்ச் வருகின்றனர். நெடுஞ்சாலை பயணத்தின் போது தங்களின் ஏழு வயது சிறுவன் ஆதித்யாவை தொலைத்துவிடுகின்றனர். தம்பதியர் இருவரும் சிறுவனை தேட, தொலைந்த அந்த சிறுவன் டிரக் ஓட்டுனர் பப்புவிடம் கிடைக்கிறான். பப்புவும் அவனது சகாக்களும் சேர்ந்து காப்பீட்டு பணத்திற்காக டிரக்கை மலையிலிருந்து தள்ளிவிட்டுவிட்டு, போலியானதொரு விபத்தை சித்தரித்து, காப்பீட்டு நிறுவனத்தை ஏமாற்றி பணம் சம்பாதிக்க திட்டமிடுகின்றனர். இடற்கிடையில் தன் பாட்டி வீட்டிற்கு பயணிக்கும் பூனம் என்கிற சிறுமியும் அந்த நெடுஞ்சாலையில் வழிதெரியாமல் ஒரு விபச்சார விடுதியில் சிக்கிக் கொள்கிறாள். இறுதியில் இந்த மூன்று கதைகளும் எப்படி இணைகின்றன என்பதே படத்தின் மீதிக் கதை.

சக மனிதர்கள் மீது அன்புசெலுத்துவதை பற்றி இந்த படம் பேசுகிறது. பப்பு சட்டவிரோதமாக சம்பாதிக்க முயன்றாலும், அவனிடம் இருக்கும் மனிததன்மை அவனை ஆதித்யாவிடம் அன்புகாட்ட வைக்கிறது. அதே போல் விபச்சார விடுதியில் இருப்பவர்கள் பூனத்தை அன்பாக பார்த்துகொள்கிறார்கள். இது போல், படமுழுக்க மனித நேயம் விரவி கிடக்கிறது. படத்தின் கதை முழுக்க கட்ச் பகுதியில், ஒரு நெடுஞ்சாலையில் நடக்கிறது.

மல்டிலேயர் நரேட்டிவ் எனப்படும் திரைக்கதை உத்தியை பயன்படுத்தி கதையை சொல்லியிருக்கிறார்கள். இந்த உத்தியில், வெவ்வேறு பின்னணி கொண்ட கதாப்பாத்திரங்கள் கதையின் ஒரு மையப்புள்ளியில் இணைவார்கள். இங்கே மூன்று கதைகளும் இணையும் அந்த புள்ளி ஆழமாக இல்லை என்பதே பெரிய குறை. மேலும் மூன்று கதைகளுக்கும் சமமான முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. சிறுமி பூனத்தின் கதை மிகவும் மேலோட்டமாக அமைந்திருப்பதால், அதில் வரும் கதைமாந்தார்கள் நம் மனதில் பதியாமால் போய்விடுகின்றனர்.

இந்த படத்தை எழுதி இயக்கியிருப்பவர் புதுமுக இயக்குனர் கியான் கொரீயா. முதல் படத்திலேயே சிறந்த இயக்குனர் என்ற அங்கீகாரத்தை பெற்றுவிட்டார். திரைக்கதையிலும் இன்னும் அதிக கவனம் செலுத்தியிருந்தால், திரைக்கதையில் இடையிடையே தொய்வு ஏற்படாமல் தவிர்த்து இருக்கலாம். படத்திற்கு மிக பெரிய பலம் ஒளிப்பதிவு. நெடுஞ்சாலையையும் கட்ச் பகுதியின் வறண்ட பூமியையும் எந்த செயற்கை தனமுமின்றி அப்படியே படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் அமிதாப் சிங். ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி படத்தின் ஒலி வடிவமைப்பாளராக பணியாற்றி இருப்பது படத்திற்கு இன்னொரு பலம்.

மேலும் படத்தில் தொழில்முறை நடிகர்கள் அதிகம் இல்லை. சாமானிய மனிதர்களை நடிக்க வைத்து படத்தை மிகவும் யதார்த்தமாக உருவாக்கி இருக்கின்றனர். ஆடம்பரமான பின்னணி இசையை தவிர்த்து, கிராமிய பாடல்களை பின்னனியில் பயன்படுத்தியிருப்பது படத்திற்கு புதியதொரு வடிவத்தை தருகிறது. அழிந்துவிட்ட குஜராத் திரைத்துறைக்கு மீண்டும் உயிர்கொடுக்கும் வகையில் இந்த படத்தை உருவாக்கி இருக்கும் இயக்குனரை பாராட்டிட வேண்டும்.

படம் என்னதான் சிறப்பாக இருந்தாலும் இதைவிட பன்மடங்கு சிறப்பாக இருக்கும் லஞ்ச்பாக்ஸ் படத்தை ஆஸ்காருக்கு பரிந்துரை செய்திருக்கலாம் என்று ஒருசாரார் ஆதங்கப்படுகின்றனர். லஞ்ச்பாக்ஸ் படத்தின் கதைகளம் குட் ரோடிலிருந்து மாறுபட்டிருந்தாலும், அந்த படமும் சக மனிதர்களை நேசிப்பதை பற்றிதான் பேசுகிறது. லஞ்ச்பாக்ஸ் படத்தில் இருந்த முழுமை குட்ரோடில் இல்லை என்பதே உண்மை. அதே சமயத்தில், இந்தி படங்கள் மட்டுமே இந்திய படங்களன்று, மற்ற மொழி படங்களையும் ஆதரிக்க வேண்டும். அதனால் குட் ரோட் படத்தை தேர்வு செய்திருப்பது சரியான முடிவே என்று இன்னொருசாரார் வாதிடுகின்றனர். எது எப்படியோ, ஒரு படம் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கபட்டுவிட்டதால் மட்டுமே அந்த படம் இறுதி சுற்றுக்கு தேர்வாகிவிடாது. படத்தை அமெரிக்க விநியோகஸ்தர்களுக்கு விற்கவேண்டும். அமெரிக்க விமர்சகர்களிடமும், பத்திரிக்கைகளிடமும் படத்தை எடுத்துச் செல்ல வேண்டும். படத்தை அமெரிக்காவில் பிரபல படுத்த வேண்டும். இதை ஆஸ்கர் லாபியிங்க் என்று அழைப்பார்கள். பின் அந்த படத்தை இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யலாமா வேண்டாமா என்ற முடிவை ஆஸ்கார் குழுவினர்தான் எடுப்பார்கள்.

1957-ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை ஆஸ்கார் விருதிற்கு இந்தியாவிலிருந்து 46 படங்கள் அனுப்பப் பட்டிருக்கின்றன. ஆனால் வெறும் மூன்று படங்கள் மட்டுமே இறுதி சுற்றுக்கு தேர்வாகி இருக்கிறது. அதனால் தி குட் ரோட் திரைப்படம் ஆஸ்கார் பந்தயத்தில் எவ்வளவு தூரம் செல்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.