1956-ஆம் ஆண்டு தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க படங்கள் அல்லாத மற்ற படங்களை அங்கீகரிக்கும் வகையில் சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்றொரு விருதை ஆஸ்கார் குழுவினர் வழங்கி வருகின்றனர். அந்த விருதிற்காக ஒவ்வொரு நாடும் போட்டி போட்டுக் கொண்டு ஆஸ்காருக்கு படங்களை அனுப்புவது வழக்கம். இந்த ஆண்டு அதிக சர்ச்சைகளுக்கும் பாராட்டுகளுக்குமிடையே “தி குட் ரோட்” என்கிற குஜராத்தி திரைப்படத்தை ஆஸ்காருக்கு பரிந்துரை செய்திருக்கிறது இந்திய திரைப்பட கூட்டமைப்பு.
தொண்ணூறுகளின் தொடக்கத்திலேயே குஜராத் திரைத்துறை அழிவை சந்திக்க தொடங்கிவிட்டது. கடந்த இருபத்தைந்து வருடங்களில் குஜராத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எந்த ஒரு படமும் எடுக்கப்படவில்லை. ஆனால் குட் ரோட் படம் சிறந்த பிராந்திய மொழி திரைப்படத்திற்கான தேசிய விருதை அண்மையில் பெற்றது. இப்போது ஆஸ்காருக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது. அதனால் இந்த படம் பலரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இது ஒருபுறமிருக்க பலரின் வரவேற்பை பெற்ற லஞ்ச்பாக்ஸ் என்ற இந்தி திரைப்படத்தை விடுத்து, இந்த படத்தை ஆஸ்காருக்கு பரிந்துரை செய்துவிட்டதால் பலரும் இந்திய திரைப்பட கூட்டமைப்பின் முடிவை விமர்சிக்க தொடங்கிவிட்டனர். இப்படி பாராட்டுகளையும் விமர்சனங்களையும் ஒருங்கே பெற்றிருக்கும் இந்த படத்தின் கதை தான் என்ன?
டேவிட்-கிரண் தம்பதியர் மும்பையிலிருந்து சுற்றுலாவிற்காக கட்ச் வருகின்றனர். நெடுஞ்சாலை பயணத்தின் போது தங்களின் ஏழு வயது சிறுவன் ஆதித்யாவை தொலைத்துவிடுகின்றனர். தம்பதியர் இருவரும் சிறுவனை தேட, தொலைந்த அந்த சிறுவன் டிரக் ஓட்டுனர் பப்புவிடம் கிடைக்கிறான். பப்புவும் அவனது சகாக்களும் சேர்ந்து காப்பீட்டு பணத்திற்காக டிரக்கை மலையிலிருந்து தள்ளிவிட்டுவிட்டு, போலியானதொரு விபத்தை சித்தரித்து, காப்பீட்டு நிறுவனத்தை ஏமாற்றி பணம் சம்பாதிக்க திட்டமிடுகின்றனர். இடற்கிடையில் தன் பாட்டி வீட்டிற்கு பயணிக்கும் பூனம் என்கிற சிறுமியும் அந்த நெடுஞ்சாலையில் வழிதெரியாமல் ஒரு விபச்சார விடுதியில் சிக்கிக் கொள்கிறாள். இறுதியில் இந்த மூன்று கதைகளும் எப்படி இணைகின்றன என்பதே படத்தின் மீதிக் கதை.
சக மனிதர்கள் மீது அன்புசெலுத்துவதை பற்றி இந்த படம் பேசுகிறது. பப்பு சட்டவிரோதமாக சம்பாதிக்க முயன்றாலும், அவனிடம் இருக்கும் மனிததன்மை அவனை ஆதித்யாவிடம் அன்புகாட்ட வைக்கிறது. அதே போல் விபச்சார விடுதியில் இருப்பவர்கள் பூனத்தை அன்பாக பார்த்துகொள்கிறார்கள். இது போல், படமுழுக்க மனித நேயம் விரவி கிடக்கிறது. படத்தின் கதை முழுக்க கட்ச் பகுதியில், ஒரு நெடுஞ்சாலையில் நடக்கிறது.
மல்டிலேயர் நரேட்டிவ் எனப்படும் திரைக்கதை உத்தியை பயன்படுத்தி கதையை சொல்லியிருக்கிறார்கள். இந்த உத்தியில், வெவ்வேறு பின்னணி கொண்ட கதாப்பாத்திரங்கள் கதையின் ஒரு மையப்புள்ளியில் இணைவார்கள். இங்கே மூன்று கதைகளும் இணையும் அந்த புள்ளி ஆழமாக இல்லை என்பதே பெரிய குறை. மேலும் மூன்று கதைகளுக்கும் சமமான முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. சிறுமி பூனத்தின் கதை மிகவும் மேலோட்டமாக அமைந்திருப்பதால், அதில் வரும் கதைமாந்தார்கள் நம் மனதில் பதியாமால் போய்விடுகின்றனர்.
இந்த படத்தை எழுதி இயக்கியிருப்பவர் புதுமுக இயக்குனர் கியான் கொரீயா. முதல் படத்திலேயே சிறந்த இயக்குனர் என்ற அங்கீகாரத்தை பெற்றுவிட்டார். திரைக்கதையிலும் இன்னும் அதிக கவனம் செலுத்தியிருந்தால், திரைக்கதையில் இடையிடையே தொய்வு ஏற்படாமல் தவிர்த்து இருக்கலாம். படத்திற்கு மிக பெரிய பலம் ஒளிப்பதிவு. நெடுஞ்சாலையையும் கட்ச் பகுதியின் வறண்ட பூமியையும் எந்த செயற்கை தனமுமின்றி அப்படியே படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் அமிதாப் சிங். ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி படத்தின் ஒலி வடிவமைப்பாளராக பணியாற்றி இருப்பது படத்திற்கு இன்னொரு பலம்.
மேலும் படத்தில் தொழில்முறை நடிகர்கள் அதிகம் இல்லை. சாமானிய மனிதர்களை நடிக்க வைத்து படத்தை மிகவும் யதார்த்தமாக உருவாக்கி இருக்கின்றனர். ஆடம்பரமான பின்னணி இசையை தவிர்த்து, கிராமிய பாடல்களை பின்னனியில் பயன்படுத்தியிருப்பது படத்திற்கு புதியதொரு வடிவத்தை தருகிறது. அழிந்துவிட்ட குஜராத் திரைத்துறைக்கு மீண்டும் உயிர்கொடுக்கும் வகையில் இந்த படத்தை உருவாக்கி இருக்கும் இயக்குனரை பாராட்டிட வேண்டும்.
படம் என்னதான் சிறப்பாக இருந்தாலும் இதைவிட பன்மடங்கு சிறப்பாக இருக்கும் லஞ்ச்பாக்ஸ் படத்தை ஆஸ்காருக்கு பரிந்துரை செய்திருக்கலாம் என்று ஒருசாரார் ஆதங்கப்படுகின்றனர். லஞ்ச்பாக்ஸ் படத்தின் கதைகளம் குட் ரோடிலிருந்து மாறுபட்டிருந்தாலும், அந்த படமும் சக மனிதர்களை நேசிப்பதை பற்றிதான் பேசுகிறது. லஞ்ச்பாக்ஸ் படத்தில் இருந்த முழுமை குட்ரோடில் இல்லை என்பதே உண்மை. அதே சமயத்தில், இந்தி படங்கள் மட்டுமே இந்திய படங்களன்று, மற்ற மொழி படங்களையும் ஆதரிக்க வேண்டும். அதனால் குட் ரோட் படத்தை தேர்வு செய்திருப்பது சரியான முடிவே என்று இன்னொருசாரார் வாதிடுகின்றனர். எது எப்படியோ, ஒரு படம் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கபட்டுவிட்டதால் மட்டுமே அந்த படம் இறுதி சுற்றுக்கு தேர்வாகிவிடாது. படத்தை அமெரிக்க விநியோகஸ்தர்களுக்கு விற்கவேண்டும். அமெரிக்க விமர்சகர்களிடமும், பத்திரிக்கைகளிடமும் படத்தை எடுத்துச் செல்ல வேண்டும். படத்தை அமெரிக்காவில் பிரபல படுத்த வேண்டும். இதை ஆஸ்கர் லாபியிங்க் என்று அழைப்பார்கள். பின் அந்த படத்தை இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யலாமா வேண்டாமா என்ற முடிவை ஆஸ்கார் குழுவினர்தான் எடுப்பார்கள்.
1957-ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை ஆஸ்கார் விருதிற்கு இந்தியாவிலிருந்து 46 படங்கள் அனுப்பப் பட்டிருக்கின்றன. ஆனால் வெறும் மூன்று படங்கள் மட்டுமே இறுதி சுற்றுக்கு தேர்வாகி இருக்கிறது. அதனால் தி குட் ரோட் திரைப்படம் ஆஸ்கார் பந்தயத்தில் எவ்வளவு தூரம் செல்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.