குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தவறான வழியில் பணம் ஈட்ட நினைக்கும் ஒரு சாதாரணன், பேராசையால் ஆட்கொள்ளப்பட்டு ஒருகட்டத்தில் பணம் ஈட்டுவதை மட்டுமே தன் நோக்கமாக மாற்றிக் கொள்கிறான். இது பிரேக்கிங் பேட்டின் ஒன்லைன். லக்கி பாஸ்கர் படத்தின் ஒன் லைன்னும் இதுவே.
பிரேக்கிங் பேட்டின் வால்ட்டர் வைட், தன் திறமைக்கான அங்கீகாரம் தனக்கு கிட்டவில்லை என்கிற ஆதங்ககத்திலேயே வாழ்பவன். ஒரு தருணத்தில் அந்த ஆதங்கம் கோபமாக மாற, தன் திறமையை தவறான வழியில் செலுத்தி பணம் ஈட்டுவதன் மூலம் தன்னை தானே ஆறுதல் படுத்திக் கொள்கிறான். பெரும் விஞ்ஞானியாக வந்திருக்க வேண்டிய வால்ட்டர் வைட் காலத்தின் கட்டாயத்தால் ஒரு சாதாரண பள்ளி ஆசிரியராக இருக்கிறான். பின் தன் கல்வி அறிவைக் கொண்டு போதைப் பொருள் உற்பத்தி செய்கிறான். பணம் வருகிறது. நிறைய பணம். அந்த பணம் அவனை மூழ்கடிக்கிறது. நிலை தடுமாற செய்கிறது. இறுதியில் என்ன ஆனான் என்பதே திரைக்கதை.

இதே போன்றதொரு கதை ஓட்டத்தை, பொருளாதர குற்றப் பின்னணியில் சொல்கிறது லக்கி பாஸ்கர். ஆனால் அதன் ‘திரைக்கதை’ அறமற்றதாக இருக்கிறது. ஒரு படத்தின் வெற்றி தோல்விக்கு அப்பாற்பட்டு இதை பேச வேண்டிய அவசியமிருக்கிறது.
பொதுவாக நாயகன், பொருள் ஈட்டுவதற்காக சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடும் கதைகளில் இறுதியில் திருந்திவிடுவான் அல்லது தண்டிக்கப்பட்டுவிடுவான். வேறு சில கதைகளில், நாயகனுக்கு அத்தகைய செயல்களை செய்வதற்கு ஏதோ ஒரு நியாயமான காரணம் இருக்கும். அதாவது பிறருக்கு உதவி செய்வதற்காக அவன் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவான். இன்னும் சில கதைகளிலோ அவன் நல்லவன் ஆனால் தீயவர்களிடமிருக்கும் செல்வத்தை அபகரிப்பான். அல்லது கெட்டவனாக இருப்பான். ஆனால் அவனை விட மிக கொடியவர்களிடமிருந்து கொள்ளை அடிப்பான். ஆனால் லக்கி பாஸ்கர் மேற்சொன்ன எல்லா டெம்ப்ளேட்களையும் (அவசியமின்றி) உடைத்துவிடுகிறது. லக்கி பாஸ்கரில் ஒரு நல்லவன், தன் குடும்பத்திற்காக கெட்டதை செய்ய தொடங்கி இறுதியில் மொத்த குடும்பத்தையும் சுற்றத்தையும் குற்றத்திற்கு உடந்தை ஆக்கிக் கொள்கிறான். இது ஒரு ஆபத்தான தீம். ஆனால் இதன் பாண்டஸி எலிமெண்ட் பார்வையாளர்களை கவரக் கூடியது.
தன்னால் செய்ய இயலாததை திரையில் நாயகன் செய்யும் போது பார்வையாளர்கள் அந்த கதையோடு எளிதில் தங்களை தொடர்பு படுத்திக் கொள்கிறார்கள். நாயகன் அசாத்திய சாகசங்கள் செய்வது, எதிரிகளை அடித்து வீழ்த்துவது, பெரும் குற்றங்களை தட்டிக் கேட்பது போன்ற விஷயங்களுக்கு எப்போதுமே வரவேற்பு இருப்பதற்கான காரணம் அதுதான். லக்கி பாஸ்கரில் நாயகன் பார்வையாளர்களால் எளிதில் செய்ய முடியாத குற்றத்தை செய்துவிட்டு தப்பித்துக் கொள்கிறான். இதுவே பாண்டஸியான கரு. இதை திரைக்கதையாக சொன்ன விதத்தில் என்னென்னெ பலம் பலவீனம் உண்டு என்று பேசுவோம்.
ஒரு திரைக்கதையில் பார்வையாளர்கள் எதிர்ப்பார்ப்பதை சொல்லிக் கொண்டே வந்து திடீரென எதிர்ப்பார்க்காத ஒன்றை திருப்பமாக வைக்கும் போது அதில் சுவாரஸ்யம் கூடிடும். லக்கி பாஸ்கரில் இந்த உத்தி ஆரம்பத்திலிருந்தே சிறப்பாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கதையில் பின் நடக்கப்போகும் விஷயங்களுக்கான குறிப்புகளை மட்டும் முன்கூட்டியே சொல்லிவந்து பின்னர் தேவையான இடத்தில் அவற்றை விலாவரியாக வெளிப்படுத்துவதை foreshadowing என்பார்கள். இதுவும் கதையில் திருப்புமுனைகளை அல்லது ஆச்சர்ய தருணங்களை உருவாக்க பயன்படும் உத்தி. இந்த உத்தியும் இந்த படத்தில் அழகாக வெளிப்பட்டிருப்பது இதன் பலம்.
ஒருவன் பல கோடிகளை ஒரே நாளில் இன்றைய காலகட்டத்தில் நினைத்தாலும் வங்கியிலிருந்து எடுக்க முடியாது. தொண்ணூறுகளிலேயே ஒருவன் பல கோடிகளை பணமாக தன் வங்கி கணக்கிலிருந்து எடுத்து செல்கிறான் என்பன போன்ற பல லாஜிக் மீறல்களை இந்த படத்தின் மேற்சொன்ன பாண்டஸி தன்மை மறக்க செய்கிறது.
ஒரு நாயகனை அதுவும் சாதரண குடும்பஸ்த்தனான ஒருவனை தவறான செயல்களில் ஈடுபடுவதாக காட்டிவிட்டு படத்தை அப்படியே முடித்தால் ஏற்றுக்கொள்ளப்படுமா என்கிற குழப்பம் திரைக்கதையாசிரியருக்கு இருந்திருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது. படத்தின் ப்ரீக்ளைமாக்சில் அவன் எல்லாவற்றையும் விட்டுவிட்டு பழைய வாழ்க்கையை நினைத்துப் பார்க்கிறான் என்றும் தன் சுற்றத்தாருக்கு உதவுகிறான் என்பதும் அந்த குழப்பத்தின் வெளிப்பாடாக உருவாக்கப்பட்ட நாயக இமேஜ். மீண்டும் அவன் இறுதியில் மொத்த குடும்பத்தையும் சாட்சியாக வைத்துக் கொண்டு தவறாக ஈட்டிய பணத்தில் செட்டில் ஆகிறான் எனும்போது வலிய திணித்த முந்தைய நாயக இமேஜ் தேவையில்லாமல் போகிறது. அவன் நல்லவனா அல்லது கெட்டவனா அல்லது இரண்டிற்கும் இடைப்பட்ட க்ரே கதாப்பாத்திரமா என்கிற தெளிவு ஆரம்பத்திலிருந்தே திரைக்கதையாசிரியருக்கு இல்லை. நாயகனுக்கு நிகழும் கேரக்டர் டிரான்ஸபார்மேஷனிலும் நம்பகத்தன்மை இல்லை.
இந்த கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்ட பிரேக்கிங் பேடை எடுத்துக்கொள்வோம். கதாப்பாத்திர வடிவமைப்பிற்கு மிக சிறந்த உதாரணம் அந்த கதை. அதில் நல்லவனாக மட்டுமே வாழும் ஒருவனை விதியும் சமூகமும் கீழே தள்ளி அழுத்துகிறது. இன்னும் கொஞ்சநாளில் இறந்துவிடுவோம் என்கிற ஒரு சூழலில் அவன் தீய பாதையை தேர்ந்தெடுக்கிறான். பின்னர் அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் அவன், இறுதியில் தன் குடும்பத்திற்காக தீர்க்கமாக ஒரு முடிவை எடுக்கிறான். இங்கே அவன் தீய வழியை தேர்ந்தேடுப்பதற்கான காரணத்தில் ஒரு நம்பகத்தன்மை இருப்பதை கவனிக்க முடியும். இது போன்றதொரு தெளிவான கேரக்டர் ட்ரான்ஸபார்மேசன் தான் லக்கி பாஸ்கரில் இல்லை என்கிறோம். அதில் வெறும் ‘மிடில் க்ளாஸ்’ கனவு, போராட்டம், மனநிலை என்றெல்லாம் சொல்லி பார்வையாளர்களையும் மூளை சலவை செய்கின்றனர். இது ஒருவகையான செயற்கையான தொடர்பை பார்வையாளர்களோடு ஏற்படுத்தலாம்.
அவன் திறமைசாலி ஆனால் அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கவில்லை. இது ஒரு முகம். ஆனால் அதே அலுவலகத்தின் வெளியே அவன் உபரி வருமானத்திற்காக அலுவலக விதிகளுக்கு புறம்பாக வேலை செய்கிறான். இது ஒரு முகம். குடும்பத்திற்காக வாங்கிய கடனை அடைக்க முடியவில்லை என்று சொல்லும் திரைக்கதையாசிரியர், அதே சமயத்தில், மகனுக்கு பிரம்மாண்டமாக பிறந்த நாள் விழா கொண்டாட இயலவில்லை என்பதையும் ஒரு போராட்டமாக வைக்கிறார். இங்கே நாயகனுடைய தன்மையும் போராட்டமும் வலிந்து திணித்ததாக இருக்கிறது. ஆனால் இதெல்லாம் இந்திய நடுத்தர வர்கத்தின் போராட்டங்கள் என்கிற (போலி) சித்தரிப்பும், நாயகன் பெரும் (மாய)வெற்றி பாரவையாளர்களுக்கு தரும் உடனடி மனநிறைவும் இது போன்ற கதைகள் வெற்றி பெற காரணமாக இருக்கலாம். ஆனாலும் இந்த திரைக்கதை இன்னும் கொஞ்சம் அறமோடு இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
Leave a comment