எங்கள் வீட்டின் பின்னாடி தான் ஹெப்சிபா அத்தையின் வீடிருந்தது. அவர்கள் வீட்டின் கொல்லைப்புறத்தில் இருந்து பார்த்தால் பரந்து விரிந்த சிட்லபாக்கம் ஏரி தெரியும். சாந்தமும் அழகும் நிறைந்த விஷயங்கள் எல்லாமும் பயமுறுத்தக் கூடிய தன்மையையும் தனக்குள் கொண்டிருப்பதை போல், அந்த ஏரி மௌனமானதொரு பயத்தை பார்ப்பவர்களுக்கு கொடுத்து கொண்டிருந்தது என்றே நினைக்கிறேன். அதனால்தான் என்னவோ எவ்வளவோ பேர் வந்து பார்த்தும் யாரும் அந்த வீட்டிற்கு குடிவரவில்லை.
ஹெப்சிபா அத்தை தன் மகள் ஜெனிபர் அக்காவோடு நாகர்கோயிலில் தங்கி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த இரண்டு ஆண்டுகளில் மூன்று குடிகள் அந்த வீட்டிற்கு வந்து போயினர். கடைசியாக இருந்த பேச்சிலர் ஆட்கள் சொல்லிக்கொள்ளாமல் காலி செய்து போய் ஆறு மாதங்கள் ஆகிவிட்டிருந்தது. மூன்று வாலிபர்களும் தங்கள் துணிமணிகளை கூட எடுக்காமல் வீட்டை விட்டு போய்விட்டனர். ஹெப்சிபா அத்தை தான் ஊரிலிருந்து வந்து அவர்கள் துணிமணிகளை ஆள் வைத்து எடுத்து போட்டார்.
“அட்வான்ஸ் கழிஞ்சு போய், ரெண்டு மாசம் வாடகை வேற பாக்கி” என்று புலம்பிக்கொண்டே சென்றார் அத்தை.
“இவங்கல்லாம் ஏதாவது பேங்க்ல லோன் வாங்குவானுங்க. கட்டமுடிலனா இப்படித்தான் திடீர்திடீர்னு வீட மாத்திட்டு போய்டுவானுங்க” என்று சொல்லி அப்பா தான் முன்னாள் வங்கி மேலாளர் என்பதை நிரூபித்தார். அந்த வாலிபர்கள் போனதற்கு பின்பு வீட்டை வந்து பார்த்த ஐம்பத்திசொச்ச பேர்களில் ஒருவர் கூட அந்த வீட்டை குடியிருக்க இறுதி செய்யவில்லை.
எங்கள் வீட்டின் பக்கவாட்டில் மூன்றாவது குறுக்குத் தெரு இருந்தது. குறுக்கு தெருவின் கடைசியில் வடக்கை பார்த்தவாரு ஹெப்சிபா அத்தையின் வீடு அமைந்திருந்தது. பிரதான சாலையில் செல்வோருக்கு அங்கே அப்படி ஒரு வீடு இருப்பது கவனத்திற்கு வராது என்பதால், ரோட்டின் மேல் இருந்த எங்கள் வீட்டில் ‘டூலட்’ பலகை மாட்டியிருந்தோம். அத்தை வீட்டின் சாவியும் எங்களிடம் தான் இருந்தது. யாராவது அந்த பலகையை பார்த்துவிட்டு எங்கள் வீடு தான் காலியாக இருக்கிறது என்று எண்ணிக் கொண்டு வந்து கேட்பார்கள்.
“இந்த வீடில்லை, பின்வீடு” என்று சொல்லி ஒவ்வொருவருக்கும் சாவி கொடுப்பதே எங்கள் வேலையாக இருந்தது. இதில் எனக்கு உடன்பாடில்லை.
இதெல்லாம் தேவையில்லாத வேலை என்று நான் அலுத்துக் கொண்டாலும், “ஏதோ சின்ன உதவி, என்ன குறைஞ்சிட போறோம்” என்று அம்மா சொல்லுவாள். ஆனாலும் யாருமே குடி வரமாட்டேன் என்கிறார்கள் எனும் போது அம்மாவுக்கும் அவ்வப்போது சலிப்பு வந்து போகும்.
“இந்த ஜெனிபர் அம்மாக்கு புரியவே மாட்டேங்குது. அட்டாச்ட் பாத்ரூம் இல்ல ஒன்னும் இல்ல, ஏழு ரூவா வாடகை சொன்னா யார் வருவா. ஆறாயிரம் சொல்லலாம்!” என்பாள்.
“நமக்கேன் அதெல்லாம்! வந்து பாக்குறவங்களுக்கு சாவி கொடுக்கப்போறோம்! அவ்ளோதான் நம்ம வேலை” என்பார் அப்பா.
யார் கேட்டாலும் சாவியை கொடுத்துவிட்டு, “போர்டுலயே போன் நம்பர் இருக்கு பாருங்க, வாடகை மத்த விஷயங்கலாம் நீங்களே பேசிக்கோங்க” என்று சொல்லிவிட்டு உள்ளே வந்துவிடுவோம்.
வீட்டை பார்த்துவிட்டு வருபவர்கள் சொல்லும் காரணங்கள் எங்களுக்கு மனப்பாடம் ஆகிவிட்டிருந்தது.
“வீடு நல்லா தான் இருக்கு. ஆனா பாத்ரூம் தான் வெளில வரணும் போல இருக்கே!” என்பார்கள்.
“பாத்ரூம்லாம் பிரச்சனை இல்லங்க. இந்த ஏரி இருக்கே! பொம்பள புள்ளைங்க இருக்காங்க. சேஃப்டி பத்தாது இல்ல!”
“ஏரிய ஒட்டி புதர் மண்டி கிடக்கு! பாம்புலாம் ஊர்ந்து வந்திருச்சுனா?”
“ஏதாவது திருட்டு பயம் இருக்குமா!”
ஆளாளுக்கு ஏதோ சொல்லி சாவியை திருப்பித் தருவார்கள். இப்படியாக சாவி கொடுத்து வாங்கும் படலம் தொடர்ந்து கொண்டே இருந்தது.
பத்து நாட்களுக்கு முன்பு இரண்டு பேர் வீடு பார்க்க வந்தார்கள். சாவியை நான் தான் கொடுத்தேன். அம்மாவும் அப்பாவும் அக்காவை பார்க்க திருச்சிக்கு சென்றிருந்தார்கள்.
“வாடகை எவ்ளோங்க!” என்றார் ஒருவர். அது ஒரு ஞாயிறு என்பதால் நானும் ஓய்வாக இருந்தேன். அதனாலேயே அவர்களுக்கு நிதானமாக பதில் சொன்னேன்.
“ஏழாயிரம்”
“ஐநூறு ரூபாய் குறைச்சிக்கக் கூடாதா!” வீட்டை பார்ப்பதற்கு முன்பே இந்த சம்பாஷணை நடந்தது.
“வீட முதல பாருங்க. ஓனர் நாங்க இல்ல! அவங்க நம்பர் தரோம் பேசிக்கோங்க” என்றேன். சாவியை வாங்கி கொண்டு சென்றார்கள். இருவருக்குமே நாற்பத்தி சொச்சம் வயது இருக்கலாம். ஒருவரின் நடையில் கொஞ்சம் தள்ளாட்டம் இருந்தது.
“யார்கிட்ட சாவி கொடுத்தாலும் ஒரு பார்வை பாத்துக்கோ. யார் என்னனு தெரியாதுல!” என்று அம்மா சொன்னது நினைவிற்கு வந்தது. நான் எங்கள் வீட்டின் கொல்லைபுறத்தில் வந்து நின்றேன். எங்கள் வீட்டிற்கும் ஹெப்சிபா அத்தையின் வீட்டிற்கும் இடையே ஒரு மதில் சுவர் இருந்தது. ஆனால் அது ஒன்றும் அவ்வளவு உயரமில்லை. எங்கள் வீட்டுப் பக்கம் நின்றுகொண்டால், அவர்கள் வீடு முழுக்க நன்றாகவே தெரியும் உயரத்தில் தான் அந்த சுவர் இருந்தது.
சிறுவயதில் அங்கே சுவர் எதுவும் இல்லை. எங்கள் அக்காவிற்கு கட்டிக் கொடுத்த ஸ்நாக்ஸை ஜெனிபர் அக்கா பிடிங்கி தின்றுவிட்டதாக என் அக்கா வீட்டில் வந்த அழ, இதை எங்கள் அம்மா ஹெப்சிபா அத்தையிடம் கேட்க அப்படியே பேச்சு வளர்ந்து ஹெப்சிபா அத்தையின் மாமனாருக்கும் எங்கள் தாத்தாவிற்கும் சண்டையாகி போனது. விளைவு, மறுவாரமே எங்கள் தாத்தா சுவரை எழுப்பி விட்டார். காலப்போக்கில் தாத்தாக்கள் மறைய சண்டையும் மனஸ்தாபமும் மறைந்து போய்விட்டது. திருச்சியில் இருக்கும் என் அக்காவும் நாகர்கோயிலில் இருக்கும் ஜெனிபர் அக்காவும் பேஸ்புக்கில் சகஜமாக உரையாடி கொண்டு தான் இருக்கிறார்கள். பூட்டு திறக்கப்படும் சப்தம் கேட்டது.
நான் மதில் சுவரை பிடித்தவாறே அத்தை வீட்டின் கதவைப் பார்த்தேன். கதவின் மேல் பகுதியில் ‘வாதை உன் கூடாரத்தை அணுகாது’ என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது.
இருவருமே உள்ளே செல்லலாமா என்று யோசிப்பது போல் வாசலில் நின்றனர்.
“என்னடா!” என்றார் ஒருவர்.
“கதவு அதுவா தொறந்துக்குது தல!” எனறார் தள்ளாட்டம் நிறைந்தவர்.
“டேய், நீ பூட்ட தொறந்த வேகத்துல ஓபன் ஆகியிருக்கும்!”
“இல்ல தல! எனக்கு பயமா இருக்கு! போய்டலாம் தல!”
“டேய், இன்னும் வீடயே பாக்கல! அதுக்குள்ள ஏதேதோ உளறுற! கம்மியா குடிடானா கேட்குறீயா…”
“வேணாம் வேணாம்! இந்த வீடே வேணாம். இங்க நிக்கவே முடில. உடம்புலாம் எரியுது!” அந்த ஆசாமி விட்டால் போதும் என்று வெளியேறினார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அதுவரை அப்படி யாரும் சொன்னதாக தெரியவில்லை. நான் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தேன்.
இன்னொருவர் வீட்டை பூட்டிவிட்டு சாவியை மதில் சுவரின் மேலாக என்னிடம் கொடுத்தார்.
“நீங்க ஒன்னும் நினைச்சுக்காதீங்க. வாடகை அதிகம்னு யோசிக்கிறான் போல! ஆளு நிதானமா வேற இல்ல” அப்பறம் ஏன் வீடு பார்க்க வந்தீர்கள் என்று மனதில் நினைத்துக் கொண்டேன். வந்தவர் போதை ஆசாமி என்று தெரிந்ததால் நான் இந்த விஷயத்தை பொருட்படுத்தவில்லை. ஓரிரு நாட்கள் கழித்து இரண்டு பெண்மணிகள் வீடு பார்க்க வந்திருந்தார்கள். ஒருவருக்கு முப்பது வயதிற்குள் இருக்கும். இன்னொருவர் அறுபதை கடந்தவராக இருந்தார்.
“கிறிஸ்டின் வீடுன்னு சொன்னாங்களேபா, வீடு எல்லாருக்கும் கொடுப்பாங்களா இல்ல இயேசு சாமி கும்பிடறவங்களுக்கு மட்டும் தானா!” என்று வினவினார் வயதான பெண்மணி. மஞ்சள் குளித்த முகம். கழுத்தில் துளசி மாலை.
“அப்டிலாம் இல்லங்க. எல்லாருக்கும் விடுவாங்க! இதுக்கு முன்னாடி இருந்த யாருமே கிரிஸ்டின்ஸ் இல்ல” இதை சொன்னதும் அந்த பெண்மணியின் முகத்தில் வீடே கிடைத்துவிட்ட சந்தோஷத்தைப் பார்த்தேன்.
“நாங்க இப்ப இருக்க வீட்ல ஹவுஸ் ஓனர் பையனுக்கு கல்யாணம்னு காலி பண்ண சொல்லிட்டாங்க. என் பையன் மெப்ஸ்க்குள்ள சூப்பர்வைசரா இருக்கான். இந்த ஏரியால இருந்தா தான் போயிட்டு வர கரெக்ட்டா இருக்கும். வாடகையும் இந்த ஏரியால தான் கொடுக்குற அளவுக்கு இருக்கு!” என்று சொன்னவாறே சாவியை வாங்கிக் கொண்டார்.
“நீங்க வீட பாத்துருங்க. பிடிச்சிருந்தா வாடகை கம்மி பண்ண சொன்னாலும் கம்மி பண்ணுவாங்க..” எனக்கு அந்த பெண்மணியை பார்க்கும் போது என் அப்பாயியின் நினைவு வந்துவிட்டதாலும், அவர்களுக்கு வீடு பிடித்துவிட்டால் சாவி கொடுக்கும் வேலையிலிருந்து நாங்கள் விடுபடலாம் என்பதாலும் அந்த வீடு அவர்களுக்கு பிடித்து போக வேண்டும் என்று மனதில் வேண்டிக் கொண்டேன்.
சில நிமிடங்களில் எங்கள் வீட்டின் கேட் வேகமாக தட்டப்பட்டது. நான் வெளியே வந்தேன். அந்த இரண்டு பெண்களும் நின்றுகொண்டிருந்தனர். வயதானவர் முகத்தில் வியர்வையும் பதட்டமும் வெளிப்பட்டது.
“இந்த வீடு வேணாண்டா தங்கம்… செத்தவங்க உக்காந்திருக்காங்க உள்ள! அல்பாயுசுல போனவங்க, அழுதுகிட்டு கிடக்குத்துங்க. காவு வாங்காம போகாதுங்க!”
சாவியை என்னிடம் கொடுத்த அந்த வயதான பெண்மணி தன் துளசி மாலையை தொட்டு, “மகமாயி! கூட இரு” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டார்.
அவர் சொல்வதை கிரகித்து கொள்ளவே எனக்கு சில நொடிகள் தேவைப்பட்டன. உடனிருந்த பெண்ணும், அவள் வயதானவரின் மருமகளாக இருக்கக்கூடும், என்னைப் போல என்ன சொல்வது என்று தெரியாதவளாய் வயதான பெண்மணியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“நான் சாமியாடிடா தங்கம். அருவம்லாம் என் கண்ணுக்கு தெரியும். உள்ள ரெண்டு இருக்கு. ஆம்பள, பொம்பள ஜோடியா… ஜம்பமா வந்து உக்காந்திருக்குங்க. யாரையும் அங்க வாழ விடாதுங்க… பத்திரமா இருந்துக்கோடா சாமி!”
சிறிது நேரம் அவர்கள் போகும் திசையையே பார்த்துக் கொண்டு நின்றேன்.
பயமாக இருக்கிறது வீட்டிற்குள் போகமாட்டேன் என்று சொன்ன குடிகாரர் நினைவிற்கு வந்தார். ஆறுமாதங்களுக்கு முன்னர் இரவோடு இரவாக வீட்டை காலி செய்துகொண்டு ஓடிய வாலிபர்களும் நினைவிற்கு வந்தனர். என் மனதில் என்னென்னமோ எண்ணங்கள் ஓட ஆரம்பித்துவிட்டன.
ஏனெனில் எங்கள் தெருவை சேர்ந்த அசோகன் மாமா வித்யா அத்தை இருவரும் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சில நாட்களில் தான் அந்த வாலிபர்கள் வீட்டை விட்டு ஓடினர். அவர்கள் தற்கொலை செய்துகொண்டதற்கு தெருவில் நிறைய காரணங்கள் சொல்லினர். கடன், நோய், குழந்தை இல்லாமல் போனது என பட்டியல் நீளும். ஆனால் யாருக்கும் உண்மை தெரியவில்லை. ஆம்புலன்ஸ் வரும் வரை கங்கை அம்மன் கோவில் எதிரே தான் அவர்களின் உடலை வைத்திருந்தார்கள். நான் கூட போய் பார்க்கலாமா என்று நினைத்தேன்.
“வயசு புள்ளடா நீ! அங்கலாம் போய் நிக்காத” அம்மா சொன்னாள்.
“உசுர் இருக்க வரை தான்மா எல்லாம். அப்பறம் ஒன்னும் இல்ல” என்று நான் சைன்ஸ் வசனம் எல்லாம் பேசினேன். அம்மா கண்டிப்பாக போகக்கூடாது என்று சொல்லியதால் நான் வெளியே செல்லவில்லை. அந்த துர்மரணத்திற்கு பிறகு ஓரிரு மாதங்களில் ஏரியில் வீட்டிற்கு தெரியாமல் குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்கள் இறந்துபோனார்கள். இருவருக்கு பன்னிரண்டு வயது. ஒருவனுக்கு பத்து வயது. அசோகன் வித்யா தம்பதியர் தான் காவு வாங்கி இருப்பார்கள் என்று காற்றில் செய்திகள் வந்து போயின. இப்போது இந்த பெண்மணி உள்ளே ஒரு ஜோடியை பார்த்தேன் என்று சொன்னதும் எல்லா புள்ளிகளும் என் மனதிற்குள் இணைந்து என்னை ஆட்டி வைக்கத் தொடங்கின.
அன்று இரவு என்னால் உறங்க முடியவில்லை. என் அறை வீட்டின் கடைசியில் அடுப்படியை ஒட்டியவாறு இருந்தது. என் அறையின் பின்னே நான்கு கதவுகள் கொண்ட பெரிய ஜன்னல் இருந்தது. அதை திறந்தால் ஹெப்சிபா அத்தையின் வீடு தெரியும். எனவே அவ்வளவு அருகாமையில் உறங்க நான் விரும்பவில்லை. முன்னே பட்டாசாலையில் வந்து படுத்துக் கொண்டேன். தூக்கம் வரவில்லை.
அசோகனும் வித்யாவும் நினைவில் வந்து போயினர். அவர்கள் இறக்கும் போது ஐம்பது வயதிற்கு மேலே இருக்கும். அவர்களின் வீடு எங்கள் வீட்டிலிருந்து பத்து வீடு தள்ளி இருந்தது. நான் சிறுவயதில் கிரிக்கெட் விளையாடும் போது அவர்கள் வீட்டினுள் விழுந்த பந்தை எடுக்க பல முறை சென்றிருக்கிறேன். வித்யா அத்தை எப்போதுமே கோபமாகவே இருப்பார். அசோகன் மாமா மட்டும் எப்போதாவது என்னை பார்த்து புன்னகை செய்வார். ஓரிரு முறை தேன் மிட்டாய் வாங்கி கொடுத்திருக்கிறார். அவர்கள் தெருவில் யாரோடும் இணக்கமாக இருந்ததில்லை. அக்கம் பக்கத்தினரோடு ஏதாவது ஒரு காரணத்திற்காக சண்டை போட்டுக் கொண்டே இருந்தார்கள். அண்டை வீட்டின் பூனை தொந்தரவு செய்கிறது என்று, ஒருமுறை பாலில் எலி மருந்து கலந்து அந்த பூனைக்கு கொடுத்துவிட்ட பிரச்சனை காவல் நிலையம் வரை சென்றது. அதன் பின் அவர்கள் யாரோடும் உரையாடவில்லை. எனக்கு கண்களை மூடினால் அசோகன் மாமாவின் புன்னகையும் வித்யா அத்தையின் கோபமான முகமும் சிந்தனையில் படமாக விரிந்தது. வீட்டின் அடுப்படியை பார்த்தேன். யாரோ நடமாடுவது போல் இருந்தது. பிரம்மை என்று மனம் சொன்னது.
வெளியே நாய்களும் வழக்கத்தை விட அதிகமாக ஊளையிடுவது கேட்டது. நான் மீண்டும் கண்களை மூடினேன். சில நொடிகளில் அறையில் ஊதுவத்தி வாசனை பரவியது. நான் கண்களை திறக்கவில்லை. யாரோ என் தலைமாட்டில் வந்து அமர்வது போல் இருந்தது. “தேன் முட்டாய் வேணுமாடா குட்டி” ஒரு ஆணின் குரல் கேட்டது.
அந்த சாமியாடி பெண்மணியை நினைத்துக் கொண்டேன். “மகமாயி! கூட இரு” என்று அவர் சொன்ன வார்த்தைகள் என் காதுகளில் ஒலித்தன. நான் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கண்களை திறந்தேன். அந்த இரவின் அமைதியில் பேன் ஓடும் சப்தம் மட்டுமே கேட்டது. எந்த வாசனையும் இல்லை. அம்மா அப்பா வருவதற்கு இன்னும் ஒருவாரம் ஆகும். வந்தாலும் அம்மாவிடம் இதையெல்லாம் வெளிப்படையாக சொல்லவும் முடியாது. ஓரிரவை கழித்து விட்டால் மறுநாள் நண்பர்களோடு தங்கிக் கொள்ளலாம் என்று தோன்றியது. நான் மொபைலில் ஐயப்பன் பாடல்களை போட்டு பக்கத்தில் வைத்துக் கொண்டேன்.
‘இருமுடி தாங்கி ஒருமனதாகி…’
பாடல் சப்தமாக ஓடியது, துணைக்கு யாரோ இருப்பது போல இருந்தது. திடிரென்று அசோகன் வித்யா தம்பதியர் கிறிஸ்தவர்களாக மதம் மாறிவிட்டது நினைவிற்கு வந்த போது, தேவைப்பட்டால் இயேசு பாடல்களையும் போட்டுக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டேன்.
எப்போது உறங்கினேன் என்று தெரியவில்லை. விடிந்திருந்தது. நான் தயங்கி தயங்கி அடுப்படி பக்கம் சென்றேன். வீடு எப்போதும் போல அமைதியாக இருந்தது. என் அறையினுள் நுழைந்து பின் ஜன்னல் கதவை கொஞ்சமாக திறந்து இடுக்கின் வழியே ஹெப்சிபா அத்தையின் வீட்டைப் பார்த்தேன். அவர் வீட்டின் கதவின் மேலே ‘அணுகாது’ என்ற வார்த்தை மட்டும் பார்வைக்கு தெரிந்தது. வீட்டினுள் எந்த சலனமும் இல்லை.
அந்த வயதான பெண்மணி ஏதோ உளறி இருக்கிறார் நான்தான் அதை மனதில் போட்டு தேவை இல்லாமல் குழப்பிக் கொண்டு இருக்கிறேன் என்ற எண்ணம் தோன்றியதும் எனக்கு கொஞ்சம் தைரியம் பிறந்தது. குளித்துவிட்டு பாலாஜி மெஸ்ஸிற்கு சென்று சாப்பிட்டு விட்டு வந்தேன். கொரோனா காலத்திற்கு பிறகு வீட்டிலிருந்தே தான் வேலை. வர்க் ப்ரம் ஹோமின் சாதகங்களை கண்டுகொண்ட என் நிறுவனம் மாத கடைசியில் ஒருவாரம் அலுவலகம் வந்தால் போதும் என்று சொல்லிவிட்டது. நான் என் வேலையில் மூழ்கினேன். மாலையில் தான் மீட்டிங் எல்லாம். பகலில் மெயிலுக்கு பதில் அளிப்பதை தவிர பெரிய வேலை இருக்காது.
“சார்” என்ற குரல் கேட்டது. வெளியே யாரோ நிற்பது தெரிந்தது. மணியை பார்த்தேன். 11.15 AM என்றது லேப்டாப் திரை.
லேப்டாப்பை ஓரமாக வைத்துவிட்டு வாசலுக்கு வந்தேன். அங்கே நின்ற பையனுக்கு இருபத்தைந்து வயது இருக்கலாம். ஒல்லியாக உயரமாக இருந்தான். கருப்பு நிற சட்டை அணிந்திருந்தான்.
என்னைப்பார்த்ததும் “ப்ரோ இந்த டூலட் போர்டுல இருந்த நம்பருக்கு பேசினேன். உங்க கிட்ட கீ வாங்கிக்க சொன்னாங்க ” என்றான்.
நாங்கள் ஹெப்சிபா அத்தையின் வீட்டை நோக்கி நடந்தோம். நான் போயிருக்க வேண்டாம் தான். ஆனால் அந்த வீட்டை தவிர்த்துக் கொண்டே போனால், என் வாழ்நாள் பூராவும் பயம் போகாது என்று என் அறிவு சொல்லியது. பயத்தை போக்க ஒரே வழி நம்மை பயமுறுத்தும் விஷயத்தை எதிர்கொள்வது என்ற முடிவோடு நான் ஹெப்சிபா அத்தையின் வீட்டை அடைந்தேன்.
‘வாதை உன் கூடாரத்தை அணுகாது’
பூட்டை திறந்தும், கதவு திறந்து கொள்ள மறுத்தது.
“பழைய கதவு ஜாம் ஆகியிருக்கு” என்றான் அவன்.
இருவரும் சேர்ந்து கதவை தள்ளினோம். திறந்துகொண்டது. பகல்வேளையிலும் வீட்டில் வழக்கத்திற்கு மாறான இருட்டு இருந்தது. அந்த பையன் லைட்டின் ஸ்விட்சை தேடினான். நான் மொபைல் டார்ச்சை இயக்கினேன்.
முதலில் பட்டாசாலை, இடது புறம் ஒரு அறை. பட்டாசாலையை கடந்தால் ஒரு அடுப்படி, அடுப்படிக்கு இடது புறம் இன்னொரு அறை. இதுதான் அத்தையின் வீடு. நான் பட்டாசாலையில் நின்றுகொண்டு மொபைல் வெளிச்சத்திலேயே இதையெல்லாம் கவனித்தேன். சிறுவயதில் பார்த்த வீடு. உள்ளே வந்து பலவருடங்கள் ஆகிவிட்டது. அவன் லைட் ஸ்விட்சை கண்டுகொண்டான். ட்யூப்லைட் மங்கலான ஒளியை வெளிப்படுத்தியது.
அவன் இடது அறையை பார்த்துவிட்டு அடுப்படி நோக்கி நடந்தான். அவனோடு போகலாமா வேண்டாமா என்கிற தயக்கம் இருந்தது. யாரோ ஒரு பிள்ளையை அப்படி தனியாக விடுவதும் தவறு என்று தோன்றியதால் நான் அவன் பின்னே சென்றேன். அடுப்படிக்கு இடது புறத்தில் இருந்த அறைக்கதவும் திறக்கமாட்டேன் என்றது. ஒருவேளை அங்குதான் அசோகன் வித்யா தம்பதியர் இருக்கிறார்களா என்ற எண்ணம் ஒரு நொடி வந்துபோனது.
“தேக பலம்தா என்றால் அவனோ தேகத்தை தந்திடுவான்…” என்று என்னை அறியாமல் முணுமுணுத்தேன். அந்த பையன் என்னை ஆச்சரியமாக பார்த்ததை நான் சட்டை செய்யவில்லை. உள்ளறை கதவும் திறந்து கொண்டது. அது சிறிய அறை.
“இந்த ரூம் நல்லா ப்ரைவேட்டா இருக்கு. நான் எடுத்துப்பேன்” என்றான் அவன்.
அடுப்படியின் வலது மூலையில் கொல்லைவாசல். பின்கதவை திறந்து ஏரியை பார்த்தோம். “ஒ! லேக் வியூவா! சூப்பர்” என்றான்.
“வீடு நல்லா இருக்கு ப்ரோ” அவன் சந்தோசமாக சொன்னான். நாங்கள் குறுக்குத் தெருவில் நின்று பேசினோம். மீடியாவில் வேலை செய்வதாக சொன்னான். திரைப்படம் இயக்குவதே வாழ்வின் லட்சியம் என்றான். வெளியில் அதிகம் பிரபலமாகாத, வளர்ந்து வரும், ஒரு இயக்குனரின் பெயரை சொல்லி அவரிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்ததாக சொன்னான். ஆனால் எனக்கு நிறைய படங்கள் பார்க்கும் பழக்கம் இருந்ததால், அந்த இயக்குனர் இயக்கிய படத்தை உடனடியாக நினைவு கூர்ந்தேன். அவனுக்கு அதிக சந்தோசம் வந்துவிட்டது.
“நான், என் ரெண்டு பிரெண்ட்ஸ் தான் ப்ரோ. எனக்கு வீடு புடிச்சா போதும். அவங்க ஓகே சொல்லிடுவாங்க! இன்னைக்கு அமாவாசை, நல்ல வீடு கிடைச்சா இன்னைக்கே டோக்கன் அட்வான்ஸ் கொடுத்துருன்னு எங்க அம்மா காலேல இருந்து ஒரே போன். எனக்கு இதுலலாம் பெருசா நம்பிக்கை இல்ல. விட்டா எங்க அம்மா இன்னைக்கே குடி வர சொல்லிடுவாங்க போல…” அவன் புன்னகைத்தான். நாணும் சம்பிரதாயமாக புன்னகை செய்தேன்.
“சரி ப்ரோ. நாங்க நெக்ஸ்ட் வீக்கே வந்திடுவோம், புது இடம்னு நினைச்சேன், பரவால்ல நீங்க நல்லா பேசுறீங்க.. நாம நிறைய பேசுவோம் ப்ரோ” என்றான்.
“இங்க யாராவது சமைச்சு தரவங்க இருக்காங்களா ப்ரோ!” என்று வினவினான். நான் என் அம்மா ஊரிலில்லை, என் அம்மாவிற்கு யாரையாவது தெரிந்திருக்கலாம் வந்ததும் கேட்டுச் சொல்கிறேன் என்று சொன்னேன்.
“ஹெப்சிபா ஆண்டி நல்ல டைப் தான். பேசுனீங்கனா வாடகையை குறைப்பாங்க!” என்றேன். “இப்பவே பேசுறேன். உடனே டோக்கன் அட்வான்ஸ gpay பண்ணிடுறேன். நல்ல வீடு. இல்லனா மிஸ் ஆகிடும்” என்று அவன் போனை கையில் எடுத்தான். நான் அங்கிருந்து நகர்ந்தேன். அந்த வீட்டிற்கு வர ஆள் உறுதி ஆகிவிட்டது எனக்கு சந்தோசத்தை தந்தது. இனிமேல் பயம் இல்லை. சாவி கொடுக்கும் அலைச்சலும் இல்லை.
“கிழவி, மருமகள் மேல இருக்க காண்டுல கதை உட்ருக்கு” என்று மனதிற்குள் சாமியாடியை பற்றி நினைத்துக் கொண்டே நான் என் வீட்டிற்குள் வந்து என் வேலையை பார்க்கத் தொடங்கினேன். மணி சரியாக பன்னிரண்டு ஆனது.
மனம் லேசாக இருந்தது. அடுப்படிக்கு சென்று ஒரு க்ரீன் டீயை போட்டு எடுத்து வந்து லேப்டாப் முன்னே அமர்ந்தேன். என் வேலை தொடர்ந்தது. ஒரு மணி நேரம் போயிருக்கும். ஒரே இடத்தில் அமர்ந்திருக்கிறாய் கொஞ்சம் உடலை அசைந்து கொடு என்று ஸ்மார்ட் வாட்ச் சொல்லியது. நான் எழுந்து வாசல் வரை வந்தேன்.
தெருவில் சப்தமாக குரல்கள் கேட்டன. வெளியே வந்து பார்த்தேன். கங்கை அம்மன் கோவில் எதிரே ஏதோ சலசலப்பு. கேட்டை சாத்திவிட்டு அங்கே சென்றேன். கோவில் எதிரே நான்காவது குறுக்கு தெரு இருந்தது. குறுக்கு தெரு முடியும் இடத்தில் ஏரியின் கரை இருந்தது. அங்கே கோவிலின் வேப்பமரம் ஒன்றும் இருந்தது. வேப்பமரத்தை சுற்றி நிறைய கூட்டம்.
“போற நாய் எங்கேயோ போக வேண்டிதான! நம்ம ஏரியாவுல வந்தா விழும்” என்று எங்கள் தெருவின் பிரபல குடிகாரன் காக்கையன் தன்பாட்டிற்கு எதையோ பேசிக்கொண்டே என்னை கடந்து போனான். நான் வேப்ப மரத்தை நோக்கி நடந்தேன். இரண்டு போலீஸ்காரர்கள் நின்று கொண்டிருப்பது தெரிந்தது. எதிரே வெளிப்பட்ட ஜெயா அக்கா, “யாரோ ஒரு பையன் தற்கொலை பண்ணிகிட்டானாம்பா” என்று சொன்னார். நான் வேகமாக மரத்தை அடைந்தேன். உடலில் நீர் சொட்ட நின்ற இரண்டு பேர் துண்டால் தங்கள் தலையை துவட்டிக் கொண்டிருந்தனர்.
வேப்பமரத்து அடியில் ஒல்லியான உயரமான, கருப்பு நிற சட்டை அணிந்த அந்த பையனின் உடல் கிடந்தது. கொஞ்ச நேரத்திற்கு முன்பு நட்பாக உரையாடியவன் பிணமாக கிடப்பதை என்னால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. நான் அவன் முகத்தையே பார்த்தேன். அவன் என்னை பார்த்து சிரிப்பது போலவும், “நாம நிறைய பேசுவோம் ப்ரோ” என்று சொல்வது போலவும் இருந்தது. வேப்பமரத்தின் அருகே நின்று பார்த்தாலே ஹெப்சிபா அத்தையின் வீட்டின் கொல்லைபுறம் தெரியும். நான் பெரும் தயக்கத்தோடும் குழப்பத்தோடும் அந்த வீட்டை பார்த்தேன். வெள்ளை புகையைப்போல இரண்டு பெரிய உருவங்களும் மூன்று சிறிய உருவங்களும் வீட்டின் உள்ளே நின்றுகொண்டு என்னையே பார்த்துக் கொண்டிருந்தன.
***
Leave a reply to Aravindh Sachidanandam Cancel reply