ஆஸ்கார் 2013

நன்றி, ஆழம். ஏப்ரல் 2013

இதுவரை இல்லாத அளவிற்கு ஆஸ்கார் விருதுகளுக்கு இந்தாண்டு எதிர்பார்ப்பு அதிகமாயிருந்தது. விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களில் பெரும்பாலனோர் இதற்க்கு முன் ஆஸ்கார் விருதுகளை வாங்கியவர்கள் என்பதே அதற்க்கு காரணம். தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து படங்களும் ஏதோ ஒருவகையில் சிறந்த படங்கள் எனினும், சில படங்கள் அதிக பாராட்டுகளைப் பெற்றது. அவை இங்கே..

ஆர்கோ (ARGO)

சிறந்த திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்கோவை இயக்கியர் பென் அஃப்லெக். இந்தப்படத்தின் கதாநாயகனும் இவரே. நடிகர், திரைக்கதையாசிரியர், இயக்குனர் என பன்முகம் கொண்ட இவர், இதற்க்கு முன் ‘குட் வில் ஹன்டிங்’ என்ற படத்திற்காக சிறந்த திரைக்கதையாசிரியர் விருதை வாங்கியுள்ளார். ஆர்கோ ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எழுதப்பட்டது. 1979-ஆம் ஆண்டு ஈரானில் புரட்சி வெடிக்கிறது. அங்கிருக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் கொல்லப்படுகிறார்கள்.  அவர்களிடமிருந்து தப்பிக்கும் ஆறு அமெரிக்கர்கள் ஈரானிலேயே பதுங்கிக்கொள்கிறார்கள். அவர்களை தன் புத்தி சாதுரியத்தால் அங்கிருந்து தப்பிக்க வைக்கிறார் கதாநாயகன். அமெரிக்க உளவுத்துறை அதிகாரியான கதாநாயகன், தான் ஒரு திரைப்பட இயக்குனர் என்று கூறிக்கொண்டு ஈரானுக்குள் நுழைகிறார். ஈரான் போராளிகளை நம்பவைத்து,  அந்த ஆறு அதிகாரிகளையும் மீண்டும் அமெரிக்காவிற்கு எவ்வாறு அழைத்து வருகிறார் என்பதே படத்தின் சுவாரஸ்யமான திரைக்கதை. ஆர்கோ படத்திற்காக தத்ருபமாக காட்சிகளை எழுதி சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருதை பெற்று விட்டார் திரைக்கதையாசிரியர் கிறிஸ் டெர்ரியோ. சிறந்த படத்தொகுப்புகான விருதும் ஆர்கோ படத்திற்கே கிட்டியது.

ஜாங்கோ அன்செயின்ட் (Django Unchained)

சமகால உலக சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமை க்வெண்டின் டரண்டினோ. ஹாலிவுட் திரைக்கதை உத்திகளை தன் படங்களின் மூலம் உடைத்து எறிவது இவர் வழக்கம். ஜாங்கோ படத்தை எழுதி இயக்கிய இவருக்கு  இப்படத்திற்காக சிறந்த திரைக்கதையாசிரியர் விருது கிட்டியுள்ளது. பத்தொம்பதாம் நூற்றாண்டில் அமெரிக்காவில் நிலவிய அடிமை வர்த்தகத்தை பற்றிய கதை இது. கருப்பின மக்கள் அமெரிக்கர்களால் அடிமைகளாக நடத்தப்படுகின்றனர். அதில் ஒரு அடிமையான ஜாங்கோவை விடுவிக்கிறார் ஜெர்மனிய பல்மருத்துவர் கிறிஸ்டோபர்.  சில வில்லன்களை பழிவாங்க ஜாங்கோ தனக்கு உதவினால், ஜாங்கோவின் காதலியை அமெரிக்கர்களிடமிருந்து மீட்டுதருவதாக வாக்களிக்கிறார் கிறிஸ்டோபர். இருவரும் வில்லன்களை தேடி புறப்படுகின்றனர். வழியெங்கும் உருவெடுக்கும் பிரச்சனைகளை சேர்ந்து சமாளிக்கின்றனர். இறுதியில் நிகழும் எதிர்பாராத திருப்பங்களே மீதிக்கதை. கிறிஸ்டோபர் கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருந்த கிறிஸ்டோப் வால்ட்ஸ் சிறந்த துணைநடிகருக்கான ஆஸ்கார் விருதை பெற்றதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. அமெரிக்கர்கள் மறைக்க முயலும் ஒரு கருப்பு சரித்திரத்தையே தான் கற்பனை கலந்து படமாக்கிருப்பதாகவும், இப்படம் விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று எனவும் டரண்டினோ கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

லைஃப் ஆஃப் பை  (Life of pi)

எதிர்பார்த்ததை போன்றே ‘லைஃப் ஆஃப் பை’ அதிக விருதுகளை குவித்துவிட்டது. சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இயக்குனர், சிறந்த visual effects, சிறந்த இசை என நான்கு விருதுகள் இத்திரைப்படத்திற்கு கிட்டியுள்ளது. ஒரு படகில் ஒரு புலியுடன் கடலின் மத்தியில் மாட்டிக்கொள்ளும் பை என்ற சிறுவனின் போராட்டமே இப்படத்தின் கதை. யான் மார்டல் எழுதிய நாவலை தழுவி இதனை படமாக இயக்கியிருப்பவர் ஆங்லீ. லைஃப் ஆஃப் பை நாவலை படமாக எடுக்க பலர் தயங்கினர். ஏனெனில், இக்கதை மிகவும் வித்தியாசமானது. வெறும் ஒரு சிறுவனையும் புலியையும் வைத்துக்கொண்டு எப்படி சுவாரஸ்யமான படம் எடுப்பது என்ற அச்சம் பல பெரிய இயக்குனர்களுக்கு இருந்தது உண்மை. ஆனால் ஆங் லீ  அந்நாவலை சிறந்த படமாக இயக்கி சிறந்த இயக்குனருக்கான விருதையும்  பெற்றுவிட்டார். இது இவருக்கு இரண்டாவது ஆஸ்கார். இதற்கு முன் ப்ரோக் பேக் மௌன்டைன் என்ற படத்திற்கு சிறந்த இயக்குனர் விருதை பெற்ற இவர், ஆசியாவிலேயே ஆஸ்கார் விருதை பெற்ற ஒரே இயக்குனர் என்பது குறிப்பிடத்ததக்கது.

சில்வர் லைனிங்ஸ் ப்லேபுக் (Silver Linings Playbook)

மனதில் எழும் எதிர்மறை எண்ணங்களை, எப்படி நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் ஜெயிப்பது என்பதை நகைச்சுவை கலந்து சொல்லிய படம் இது. ‘பைபோலார் டிஸார்டர்’ என்ற ஒருவகை மனநோயால் பாதிக்கப்பட்ட கதாநாயகன் பேட் மனநல காப்பகத்தில் சேர்க்கப்படுகிறார். எட்டு மாதத்திற்கு பின் மனநல காப்பகத்தில் இருந்து வெளியே வரும் பேட், மீண்டும் தன் மனைவி நிக்கியுடன் சேர்ந்து வாழ முயற்சி செய்கிறார். ஆனால் நிக்கியை கண்டுபிடிக்க முடியவில்லை. அடிக்கடி ஆக்ரோஷமான மனநிலைக்கு சென்றுவிடும் பேட்டுடன் சேர்ந்து வாழ நிக்கிக்கு உடன்பாடு இல்லை. அதனால் நிக்கியை பேட் சந்திக்கக்கூடாது என்று கோர்ட் தடை விதித்துவிட, நிக்கியிடம் பேச நிக்கியின் தோழி டிஃபானியின் உதவியை நாடுகிறார் பேட். இதற்க்கிடையே டிஃபானி பேட்டை  காதலிக்க தொடங்கிவிடுகிறார். இறுதியில் யார் யாரோடு இணைந்தார்கள் என்பதை மிகவும் சுவாரஸ்யமாக விவரித்திருக்கும் படம் இது. தலை சிறந்த நடிகர் ராபர்ட் டி நிரோ தொடங்கி இந்திய நடிகர் அனுபம் கேர் வரை பெரிய ஸ்டார் பட்டாளமே படத்தில் உண்டு. டிஃபானி கதாப்பாத்திரத்தில் நடித்த ஜெனிபர் லாரன்ஸ் சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதை தட்டிச் சென்றார்.

லிங்கன் (Lincoln)

அமெரிக்காவின் முன்னால் பிரதமர் ஆபிரகாம் லிங்கனின் கடைசி நான்கு மாத வாழ்க்கையை பற்றிய படம் ‘லிங்கன்’. கறுப்பின மக்களை அடிமைகளாக நடத்தும் முறையை முழுவதுமாக ஒழிக்கும் பொருட்டு  அமெரிக்க நாடாளுமன்றத்தில் பதிமூன்றாவது சட்டதிருத்தம் கொண்டு வர லிங்கன் போராடுகிறார். சட்டத்திருத்தம் கொண்டுவர எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிகின்றன. சிலர் உடனிருந்தே குழி பறிக்க முயல்கின்றனர். அனைவரின் எதிர்ப்புகளையும் எதிர்கொண்டு, இறுதியில் பெரும்பான்மையினரின் ஆதரவோடு சட்டத்திருத்தத்தை கொண்டுவருகிறார் லிங்கன். இப்படத்தை இயக்கியவர் பிரபல இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க். லிங்கனாக நடித்திருப்பவர் டேனியல் டே லெவிஸ். தன் ‘Method acting’ திறமை மூலம் இவர் லிங்கனாகவே வாழ்ந்து, சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை வென்று விட்டார். லிங்கன் ஒரு பீரியட் திரைப்படம். இப்படத்தின் கலை இயக்குனர்கள் தத்ரூபமாக கலை வடிவம் கொடுத்திருந்ததனால், சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு விருதும் லிங்கன் திரைப்படத்திற்க்கே கிடைத்துள்ளது.

தி மிசெரபில்ஸ் (Les Miserables)

இது ஒரு ம்யுசிகல் திரைப்படம். ம்யுசிகல் எனில், படத்தில் இசை ஒரு முக்கிய அங்கம் வகிக்கும். படத்தில் வரும் கதாபாத்திரங்கள் யாரும் வசனங்களை பேசமாட்டார்கள். பாடுவார்கள். விக்டர் ஹுகோவின் ‘Les Miserables’ என்ற பிரெஞ்சு நாவலை, தழுவி அதே பெயரில் இயற்றப்பட்ட இசைநாடகம் மிக பிரபலம். அந்த இசை நாடகத்தை தழுவி படமாக எடுத்திருக்கின்றனர். பத்தொன்பது வருடம் சிறையில் இருந்துவிட்டு பரோலில் வெளியே வருகிறார் கதாநாயகன். திருடன் என்றும் திருடனாகத்தான் இருப்பான் என்ற முன்முடிவோடு அவரையே துரத்திக்கொண்டிருக்கிறார் ஒரு போலீஸ் அதிகாரி. கதாநாயகன் செல்லும் இடமெல்லாம் பின்தொடர்கிறார் அதிகாரி. திருந்தி வாழும் கதாநாயகன் ஃபாண்டின்  என்ற பெண்ணுக்கு உதவுகிறார். அவளது மரணத்திற்கு பின் அவளின் பெண்ணை தத்தெடுத்துக்கொள்கிறார். பிறருக்கு உதவும் குணம் கொண்ட கதாநாயகனை அனைவரும் மதிக்கிறார்கள், அந்த போலீஸ் அதிகாரியை தவிர. கதாநாயகனுக்கும் போலீஸ் அதிகாரிக்கும் நடக்கும் போரட்டத்தில் யார் வெற்றிபெற்றார்கள் என்பதை பிரெஞ்சு புரட்சியின் பின்னனியில் சொல்லியிருகின்றனர். மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட இப்படம், எட்டு ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு மூன்று விருதுகளை வென்றது. சிறந்த துணை நடிகைக்கான விருதை ஃபாண்டின் கதாபாத்திரத்தில் நடித்த ஆனா ஹாத்வே பெற்றார். சிறந்த ஒப்பனை, சிறந்த சவுண்ட் மிக்ஸிங் விருதும் இப்படத்திற்க்கே கிட்டியது.

ஸ்கைஃபால் (Skyfall)

பாண்ட், ஜேம்ஸ் பாண்ட் மீண்டும் கலக்கிய படம். தொலைந்து போன ஹார்ட் டிஸ்க்கை பாண்ட் எவ்வாறு கண்டுபிடிக்கிறார் என்பதே இப்படத்தின் கதை. இதுவரை பாண்ட் கதாப்பாத்திரங்களில் நடித்த நடிகர்களை விட இப்படத்தில் டேனியல் கிரேக் சிறப்பாக நடித்திருந்தார். சிறந்த ஒளிப்பதிவிற்க்கான விருது இப்படத்திற்கு பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்டது. படத்தின் ஒளிப்பதிவாளர் ரோஜர் டீக்கின்ஸ் ரயில் பெட்டிகள், நீர் நிலைகள் என பல மூளை முடுக்குகளில் புகுந்து மிகவும் திறம்பட ஒளிப்பதிவு செய்திருந்தார். எனினும் ‘லைஃப் ஆஃப் பை’  படத்தின் ஒளிப்பதிவு சற்று அதிக சவால் நிறைந்தது என்பதால்  சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை ‘லைஃப் ஆஃப் பை’ படத்திற்காக ஒளிப்பதிவாளர் கிளாடியோ மிராண்டா தட்டி சென்றுவிட்டார்.  சிறந்த பாடலுக்கான விருது ஸ்கைஃபால் படத்தில் இடம்பெற்ற “ஸ்கைஃபால்” என்ற பாடலுக்கு கிட்டியது. ‘லைஃப் ஆஃப் பை’ படத்தில் தாலாட்டு பாடலை பாடிய இந்திய பாடகி பாம்பே ஜெயஸ்ரீயும் இந்தவிருந்திற்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தார்.ஆனால் பாண்ட் வென்றுவிட்டார். சிறந்த சவுண்ட் எடிட்டிங்க்கான விருதும் ஸ்கைஃபால் படத்திற்கே கிட்டியது.

அமூ (Amour)

சிறந்த அந்நிய மொழி திரைப்படத்திற்க்கான விருதை இந்தமுறை பெற்றது, அமூ என்ற பிரெஞ்சு திரைப்படம். ‘Amour’ என்ற பிரெஞ்சு சொல்லிற்கு காதல் என்று பொருள். காதலுக்கு வயதில்லை என்பதிற்கிணங்க, வயதான தம்பதியின் காதலை கவித்துவமாக சொல்கிறது இத்திரைப்டம். என்பது வயதை கடந்த ஜார்ஜ்-ஆனா தம்பதியரின் வாழ்க்கை அமைதியாக சென்றுகொண்டிருக்கிறது, திடிரென ஒரு நாள் ஆனாவின் உடல் நலம் குன்றிப் போய் வாழ்க்கை முழுவதும் படுக்கையிலேயே கழிக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக இறந்துக் கொண்டிருக்கும் மனைவியை ஜார்ஜ் எப்படி பராமரிக்கிறார் என்பதே மீதிக் கதை. முழுக்க முழுக்க ஒரு வீட்டினுள்ளேயே இக்கதை நகர்கிறது. மனைவியின் மீது அளவற்ற பாசம் வைத்திருக்கும் ஒரு கணவனின் காதலை இதைவிட உணர்ச்சிபூர்வமாக யாராலும் சொல்லிவிடமுடியாது.

மொத்தத்தில், இந்த முறை ஆஸ்கார் வென்ற ஒவ்வொரு படமும் ஒவ்வொரு வகையை சார்ந்தவை. அவற்றில் பல, மிக பிரம்மாண்டமான படங்கள்.விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பலரும் மிகவும் திறமைசாலிகள். ஆனால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிலருக்கு விருது கிடைக்காதது ஆச்சர்யத்தை அளித்தது. அடுத்த ஆஸ்கார் என்னென்ன ஆச்சர்யங்களை ஒளித்துவைத்திருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அரசு கொலைக் கல்லூரி-3

3

“இங்கெல்லாம் வரக் கூடதுமா…கிளம்பு” என்று மஞ்சள் புடவை அணிந்த அந்த வயதான பெண்மணியை விரட்டிக் கொண்டிருந்தார் சென்ட்ரி.

“ஏன் ! கவர்மென்ட் ஆபிஸ்தானே இது.. வெள்ள நிவாரண நிதிக்கு இங்கதான் மனு கொடுக்கணும்னு சொன்னங்க..நீ என்னனா இப்டி வெரட்டுறீயே தம்பி !”

“அதெல்லாம் தாசில்தார் ஆபீஸ்ல போய் கேளுமா….இது ஐ.ஜி ஆபிஸ்..”

சென்ட்ரி அந்த பெரியம்மாவை போராடி துரத்திக் கொண்டிருந்தார்.

வாசலில் பெரிய கேட். அருகில் உயர்ந்த ஒரு போலிஸ்காரர், உள்ளே வரும் கவர்மென்ட் கார்களுக்கு சல்யுட் அடித்துக்கொண்டிருந்தார்.

ஐ.ஜி அலுவலகம்

42, சாந்தோம் ஹை ரோடு

R.A. புரம்

சென்னை-600028

horror

வெளியே நிற்க்கும் காவலரைக் கடந்து உள்ளே நுழைந்தால், வரிசையாக கவர்மென்ட் கார்கள் நின்றுக் கொண்டிருக்கும். சற்று வலப்புறம் திரும்பி, மீண்டும் இடப்புறம் திரும்பி நேராகச் சென்றால் கடைசியில் வரும் அறையில்தான் மீட்டிங் தீவரமாக நடந்துக் கொண்டிருந்தது.

“personal motive ?” மிகவும் மெத்தனமாக இருந்தது அசிஸ்டென்ட் கமிஷனர் தேவின் கேள்வி. டீயை உறிஞ்சிக் கொண்டிருந்த கான்ஸ்டபிள் ஏழுமலை வேகமாக தேவை ஒரு பார்வை பார்த்தார். “இவனெல்லாம் எப்படி A.C ஆனான் !” என்பது போல் இருந்தது அப்பார்வை.

கார்த்திகேயன் வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு, “பெர்சனலா இருந்தா இவ்ளோ ரிஸ்க் எடுத்து காலேஜ் உள்ள போடா மாட்டாங்க,…சார் “

“I thought so” , மேலும் தொடர்ந்தார் தேவ். “காலேஜ் உள்ள தைரியமா வந்திருக்கான்…and he has escaped safely..அவனுக்கு அந்த காலேஜ் பத்தி நல்லாத் தெரிஞ்சிருக்கு”

“இவன் என்ன சொன்னதையே திரும்பி சொல்றான்” என்று முணுமுணுத்துக் கொண்டார் உதவி ஆய்வாளர் ஆண்டனி. அந்த அறையில் அவர்கள் நால்வர் மட்டுமே இருந்தனர். ஏழுமலை பெரிதாக எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளவில்லை. அவருக்கு எப்போதாவதுதான் இது போன்று மீட்டிங் அறையினுள் நுழைய வாய்ப்பு கிட்டும். கிட்டும் வாய்ப்பினை சரியாகப் பயன்படுத்திக் கொள்வார், நொறுக்கு தீனிகளை வாங்கி தின்பதன் மூலம்.

அசிஸ்டென்ட் கமிஷனர் தேவ் புதிதாக பதவி ஏற்றவர். ட்ரைனிங்க்குப் பின் சில பல ஊர்களில் பொறுப்பேற்று, தன் மெத்தனப் போக்கினால் பல ஊர்களுக்கு மாற்றல் பெற்றவர். இறுதியில் சில பல லட்சங்களை லஞ்சமாக இறைத்து மீண்டும் தான் வளர்ந்த ஊரான சென்னைக்கே வந்துவிட்டார். தான் ஒரு பெரிய திறமைசாலி இல்லை என்பது தேவிற்கு தெரியும். அது மற்றவர்களுக்கு தெரிந்துவிடாமல் பார்த்துக்கொள்ள அவர் பெரிதும் முயல்வார். இருந்தும் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தேவை தெளிவாக எடை போட்டு வைத்திருந்தார். 15 வருட அனுபவம் கொண்ட கார்த்திகேயனுக்கு, வயது நாற்பதை தொட்டு விட்டது. அவர் திறமைகேற்ற அங்கிகாரம் அவருக்கு கிடைக்கவில்லை என்பதை அவர் நன்கறிவார். இந்த முறை இந்த கேசில் உண்மைகளை கண்டறிந்து,  வேகமாக அடுத்த படிக்கு செல்லவேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார். அதனால்தான் கொலை நடந்து ஓர் இரவு முடிவதற்குள் பல விடயங்களை வேகமாக கண்டறிந்திருந்தார்.

தேவ் எதையோ வெகு நேரமாக சிந்தித்துக் கொண்டிருக்க, கார்த்திகேயன் இடைமறித்து பேச முயன்றார். தேவ் கார்த்திகேயனை உதாசீனப் படுத்திவிட்டு மீண்டும் சிந்திக்க தொடங்க, வேகமாக உள்ளே நுழைந்தார் கமிஷனர் வீரபத்திரன்,

அனைவரும் எழ எத்தனிக்க, வீரபத்திரன் அதெல்லாம் வேண்டாம் என்பது போல் வேகமாக கையசைத்தார். பின் தேவ் பேச தொடங்கினார், “ சார்..பெர்பெக்டா பிளான் பண்ணி இருக்காங்க..”

“யோவ்..அதான் போன்லயே சொல்லிட்டியே..” என்றவாறே கார்த்திகேயனை பார்க்க, கார்த்திகேயன் வாய்ப்பு கிட்டிவிட்டது என்பதை உணர்ந்து வேகமா பேச ஆரம்பித்தார்.

“சார்..இதுவரை மேஜர் clue ஏதும் இல்ல..”

வீரபத்திரன், “CCTV ?”

“புரொபசர்.பிரகாஷ் தான் ஹெட் வார்டன். செக்யூரிட்டி கண்ட்ரோலும் அவர்கிட்ட இருந்திருக்கு. UGC-ல 33 கேமரா பொருத்த fund ஒதுக்கி இருக்காங்க..ஆனா இவர் 12 கேமரா பொறுத்திட்டு பொய் கணக்கு எழுதி இருக்கார். அதுலயும்  அஞ்சு கேமரா ரிப்பேர்..”

வீரபத்திரனால் சிரிப்பை அடக்க முடியவில்லை. “தன் வினை தன்னைச் சுடும்…கொடும..அந்த கேமராலயாவது எதாச்சும் மாட்டுச்சா”

 “இல்ல சார்..அவனுக்கு எந்தெந்த கேமரா வர்கிங்க்னு தெரிஞ்சிருக்கணும்..அதான் கேமரால சிக்காமா உள்ள நுழைஞ்சி இருக்கான்..பிரகாஷ் வேல பாக்குற Production டிபார்ட்மென்ட்ல ஒரு கேமரா மட்டும் இருந்திருக்கு..அதுவும் போன வாரம்தான் ரிப்பேர் ஆகியிருக்கு..again பிரகாஷ் அத கண்டுக்கல..”

“ம்ம்ம்ம்.. நிறைய ஊழல் பண்ணி இருக்கார்..பர்சனல் லைப் ? ”

“பெர்சனலி வெரி கிளீன் சார்..late marriage.. பர்சனல் லைப்ல யாரும் எதிரிங்க இல்ல..Here we can conclude, அந்த காலேஜ் சம்மந்தப் பட்ட யாரோதான் போட்ருக்கான்”

ஆண்டனி இன்ஸ்பெக்டரையே உற்று நோக்கினார். அவருக்கு உடம்பெல்லாம் வேர்த்திருந்தது.

 “அது என்ன singular-ஆ சொல்றீங்க..ஏன் கேங்கா இருக்ககூடாது..”

“நோ சார்..forensic reports are clear…நிறைய பேர் வந்த தடயம் ஏதும் இல்ல..நேத்து சாயந்தரம் ஐஞ்சு மணிக்கு தான் அந்த எடத்த கழுவிவிட்டுருக்காங்க…நேத்து நைட் கொலை நடந்திருக்கு..இடைப்பட்ட நேரத்துல யாரும் வந்த மாதிரி தெரியல..”

“except one..”

“of course sir..அதுக்கப்பறம் இந்த் ரெண்டு பசங்க பார்த்திருக்காங்க..”

சிறிது நேரம் சிந்தித்த வீரபத்திரன், “autopsy ? ” வினவினார் ஆர்வமாக.

“நேத்து நைட் பதினோரு மணி போல கொலை நடந்திருக்கலாம்..பிரகாஷ் உடம்பெல்லாம் காயம்..injured with sharp weapon..but death is due to…” கார்த்திகேயன் சிறிது தயங்கினார். பின் ஒரு வழியாக சொல்லி முடித்தார். “death is due to severe head injury…அவர் skull ஓபன் ஆகி இருக்கு…” அனைவரின் கண்ணிலும் ஒரு வகையான பயம் தெரிந்தது.

 வீரபத்திரன், “he must be a sadist…so, அவர டார்ச்சர் பண்ணதான் ஆயிதத்தால தாக்கி இருக்கான்..அவர்  பயந்து போய் மாடில இருந்து விழுந்திருக்கார் ?”

“I think so ….sir “

அங்கு பெருத்த அமைதி நிலவியது. தாங்கள் மிக கொடூரமான கொலைக்காரனை தேடிக் கொண்டிருக்கிறோம் என்பதை அனைவரும் உணர்ந்திருந்தனர். அங்கே ஒருவருக்கு மட்டும் தெரியும், இந்தக் கொலைகள் இத்துடன் நிற்கப்போவதில்லை என்று..

அரசு கொலைக் கல்லூரி-2

2

மோப்ப நாய்களும் , பாரன்ஸிக் ஆட்களும் பிணத்தைச் சுற்றி வேலை செய்து கொண்டிருந்ததை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தனர் விக்னேஷனும் ராஜசேகரனும் .

“ யாருய்யா அந்தப் பசங்க “ என்று கான்ஸ்டபிள் ஏழுமலையைக் கேட்டபடி வந்தார் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன்.

“ இவனுங்கதான் சார் பர்ஸ்டு பாத்தது .. டேய் இங்க வாங்கடா “

பயந்துகொண்டே அங்கே வந்தான் விக்னேஷன். “ ஏய் .. உனக்கு மட்டும் தனியா சொல்லணுமா “ என்று இராஜசேகரை அதட்டினார் கான்ஸ்டபிள்.

“ சொல்லுங்கப்பா .. என்ன நடந்துச்சு “ என்றார் இன்ஸ்பெக்டர்.

“ காலைலயிருந்து எத்தனை பேர் சார் இதே கேள்வியக் கேப்பீங்க. ஒண்ணுக்கடிக்கலாம்னு போனோம் . அங்க அவரு செத்துக் கிடந்தாரு . அவ்வளவுதான் எங்களுக்குத் தெரியும் . அந்தாளு உயிரோட இருக்கும்போதும் பிரச்சனை . செத்ததுக்கு அப்புறமும் பிரச்சனை  “ என்று சீறினான் இராஜசேகர்.

“ ஏய் .. இன்னா திமிரா பேசுற ? மரியாத தெரியாது ? “

“ ஏழுமலை .. விடுங்க . இளவட்டம் அப்படித்தான் இருப்பாங்க . நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்கடா . ஏதாவது சொல்லணும்னு நினைச்சா எனக்குக் கால் பண்ணுங்க . யோவ் என் நம்பரைக் கொடுத்துருய்யா “

அதைச் சட்டைசெய்யாமல் இராஜசேகர் விக்னேஷனை இழுத்துக்கொண்டு நகர்ந்தான் .

“ ரொம்ப சூடா இருக்கானுங்க “

“ சொல்லுங்க சார் . உள்ள வச்சு விசாரிக்கலாம் . பையன் கொஞ்சம் திமிராதான் பேசுறான் “ என்றபடி முன்னே நகர்ந்தார் ஏழுமலை.

“ அதெல்லாம் வேணாம் . இது ரொம்ப சென்சிடிவ் மேட்டர் . பக்குவமா ஹேண்டில் பண்ணனும் . அதுவும் இல்லாம பிணத்தப் பாத்துப் பயந்து போயிருக்கானுங்க . அதான் என்னப் பேசுறோம்னு தெரியாம பேசுறான் . நீங்க அவனுங்களுக்குத் தெரியாம அவனுங்க நடவடிக்கைய நோட் பண்ணிக்கிட்டு இருங்க “

“ ஏன் சார் … இவனுங்க மேல ஏதாவது சந்தேகம்…”

“ அதெல்லாம் இல்ல. அவன் பேசுன தோரணையப் பாத்தா அவன் கொலை பண்ணீருப்பான்னு எனக்குத் தோணல.ஏதோ வெறுப்புல கத்துறான் . இவனுங்கதான முதல்ல டெட்பாடியப் பாத்தானுங்க .கொலைக்காரன் இவனுங்கள விட்னஸா நினைச்சானா , இவனுங்க உயிருக்கு ஆபத்து வரும் . அதான் அவனுங்க மேல ஒரு கண்ணு இருக்கட்டும் “

திடீரென இன்ஸ்பெக்டரின் செல்போன் ஒலித்தது .

“ சொல்லுங்க சார் “

மறுமுனையில் அசிஸ்டென்ட் கமிஷனர் தேவ்.

“ ம்ம் .. கார்த்திகேயன்.. இன்வெஸ்டிகேஷன் எப்படிப் போய்ட்டு இருக்கு “

“ எல்லா பிராஸசும் நடந்துக்கிட்டிருக்கு . மோடிவ் என்னனு தெரியல . கொலைய பர்ஸ்டு பாத்ததா சொன்ன ரெண்டு பசங்கள விசாரிச்சுகிட்டு இருக்கோம் . “

“பாத்து கேர்புல்லா ஹேண்டில் பண்ணுங்க . காலேஜ் உள்ள வச்சுப் போட்டுருக்கானா சாதாரண விஷயமில்ல . பிளான் பண்ணிதான் தூக்கியிருப்பான் “

“ ஆமா சார் . பெர்ஃபக்ட் பிளானிங்க் . பாடியப் பாத்தா அப்படித்தான் தெரியுது . ரொம்பக் கொடூரமாக் கொன்னுருக்கான் . அதான் சிசிடிவி கேமரால ஏதாவது பதிவாகியிருக்குமானு விசாரணை பண்ணிக்கிட்டு இருக்கோம் “

“ நான் ஸ்பாட்டுக்கு வர்றது நல்லதாப் படல . அதனால நீங்களே விசாரிச்சுட்டு , டேரக்டா ஐஜி ஆபீஸ் வந்துடுங்க . 3 மணிக்கு . ஆல்ஸோ கைண்ட்லி அப்டேட் மீ kindly update me “

 போனைச் சற்று வேகமாகத் துண்டித்தார் இன்ஸ்பெக்டர்.

“ யாரு சார் . ஐஜியா ? “

“ இல்ல . ஏ.சி பயந்தாங்கொள்ளிப்பய . ஸ்பாட்டுக்கு வரமுடியாதாம் . சென்ஸிட்டிவான இஷ்யூ . அவர் வந்தா சீரியஸ் ஆகிடுமாம் . நேத்து வந்த பய எனக்கு அட்வைஸ் பண்ணுறான் “

“ பின்ன .. அவரு இப்பதான் புதுசா டிரான்ஸ்பர் ஆகி வந்துருக்காரு . இப்பவே கொலை கொள்ளைனா பிரஸ்ஸு சும்மா இருக்குமா ? அதான் வெளில வர பயப்புடுறாரு. இருந்தாலும் ஏசி கொஞ்சம் தொடைநடுங்கி தான் சார் “

“ சரி சரி . வீடியோ ஏதாவது கிடச்சுதா ? “

“ நம்ம ஆளுங்கதான் செக்கியூரிட்டி ஆபீஸ்-ல விசாரிச்சுக்கிட்டு இருக்காங்க . நீங்க வந்தீங்கன்னா நம்மளும் போய் பாத்துட்டு வரலாம் “

“ வாய்யா .. இன்னமோ சினிமா பாக்கலாங்கிற மாதிரிக் கூப்புடுற “

“ என்ன சார் . பேர்ல மட்டும் வெற்றினு வச்சுருக்கீங்க ? கோட்ட விட்டுட்டீங்களே “ என்று செக்கியூரிட்டி ஹெட் வெற்றிச்செல்வத்தைப் பார்த்து ஏளனமாகக் கேட்டார் இன்ஸ்பெக்டர் .

“ சார் . அளந்து பேசுங்க .எக்ஸ் ஆர்மி “

“ நான் ஏதும் தப்பாக் கேக்கலயே சார் . உங்க கண்ட்ரோல்-ல காலேஜ் இருக்கும்போது உள்ள வந்து ஒருத்தன் வேலையக் காட்டீட்டுப் போயிருக்கான் . நீங்க என்னன்னா X – எக்ஸ் மிலிட்டரி Y – ஒய் மிலிட்டரி – னு புலிக்கதை சொல்லீட்டு இருக்கீங்க “

தான் தவறு செய்துவிட்டோம் என்பது தெரிந்தும் , வெற்றிச்செல்வம் தன் சுயகவுரவத்தை விட்டுத்தராமல் பேசினார்… “ என்னா சார் பண்ணுறது . ஏதாவது பிரச்சனைனா எங்க தலதான் உருளுது . நான் பத்து வருஷமா செக்கியூரிட்டி ஹெட்டா இருக்கேன் . இதுவரைக்கும் எந்தப் பிரச்சனையுமில்லாம ஸ்மூத்தாதான் போய்க்கிட்டுருந்தது . இந்தக் கல்ச்சுரல்ஸ் கிட்டத்தட்ட ஐம்பது வருஷத்துக்கு மேல நடக்குது . எந்தத் தப்பும் நடந்ததாகவும் நாங்க கேள்விப்படல “

“ சும்மா சப்பக்கட்டு கட்டாதீங்க சார் “ என்றார் மீசையை முறுக்கிக்கொண்டு.

“ இப்ப என்ன சார் பண்ண சொல்றீங்க . என்னப் பொறுப்பேத்துக்கச் சொல்றீங்களா ? “ வெற்றிச்செல்வத்திற்கு உடம்பெல்லாம் வேர்த்திருந்தது. அந்த ஆஜானுபாகுவான இராணுவ வீரனின் உடம்பு சற்றே நடுங்கிக்கொண்டிருந்தது .

“ நீங்க பொறுப்பேத்துக்கிட்டு எங்களுக்கு என்னா சார் பிரயோஜனம் . இனி எங்க தூக்கம் போச்சு . உள்ள வந்தவங்கள செக் பண்ணி அனுப்புனீங்களா ? “

“ சார் .. மற்ற நாள்னா செக் பண்ணிதான் அனுப்புவோம் . கல்ச்சுரல்ஸ் நடக்கும்போதெல்லாம் செக்கிங்க் நாட் பாசிபுள் சார் . உங்களுக்குத் தெரியாததா ? ஸ்டூடன்ட்ஸ் அது இதுனு குதிப்பாங்க . அதனால சந்தேகப்படுற மாதிரி இருந்தாதான் செக் பண்ணுவோம் . ஆனா இன்னைக்கு அப்படி யாரும் போகல “

“ சரி .வீடியோ ஏதாவது ரெக்கார்டு ஆகி இருக்கா ? “

“ எங்க சைட்ல இருந்து தரவா செக் பண்ணிட்டோம் . ஒரு க்ளூவும் இல்ல . உங்க ஆளுங்களும் வந்து பாத்தாங்க . வேணும்னா  நீங்களும் ஒருமுறை செக் பண்ணிருங்க “

“அந்தக் கொடுமைய வேற பாக்கச் சொல்றீங்களா ? ஏழுமலை ..போய் நீங்க வீடியோவப் பாத்துட்டு அப்படியே சி.டி ல ரைட் பண்ணீட்டு வந்துடுங்க . என்றார் இன்ஸ்பெக்டர் தன் செல்போனை இயக்கிக்கொண்டே …

அரசு கொலைக் கல்லூரி-1

1

ஆரவாரமாக நடந்து கொண்டிருந்தது கல்ட்ஃபெஸ்ட் ( cultfest )  எனப்பட்ட அந்தக் கல்லூரியின் கல்ச்சுரல்ஸ் (culturals). சுற்று வட்டாரத்தில் மிகப் பிரபலமான கல்லூரி என்பதால் வருடா வருடம் அந்தக் கல்சுரல்ஸுக்குத் தமிழகம் முழுவதிலுமிருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் அந்த M.A.I.T பொறியியல் கல்லூரியில் கூடுவது வழக்கம்.

தரமான கல்விக்கும் சரி (!) , கல்ச்சுரல்ஸிற்கும் சரி, M.A.I.T  பொறியியல் கல்லூரி மிகப் பிரசித்தி. ஆட்டம், பாட்டம் என அன்று அந்த ஒட்டுமொத்த இடமும் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது.

ஜோடியாகத் திரியும் தற்காலிகக் காதலர்கள் , பெண்களைக் கேலி செய்யும் காளையர்கள் , திண்பண்டங்களை இருமடங்கு விலையில் விற்கும் கடைகள் எனப் புதியதோர் கோலாகல உலகம் அங்கே உருவாகியிருந்தது.

பல கல்லூரி மாணவர்கள் கூடும் இடமென்பதால் அசம்பாவிதங்களைத் தடுக்க அங்கங்கு அந்தக் கல்லூரியின் ஊழியர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அவர்களோடு ஒருவராய் அமர்ந்திருந்தார் புரொபசர்.பிரகாஷ்.கடுமையான முகம்,கறுத்த உருவம்.தொப்பை வீங்கி வெடிக்கும் நிலையிலிருந்தும் வழக்கம்போல் கல்லூரி செலவில் கொடுக்கப்பட்ட தீனியை அசைபோட்டுக் கொண்டிருந்தார்.

“ என்னடா பஜ்ஜி இது ? உப்பு சப்பில்லாம .. போடா வேற ஏதாவது கொண்டுவா “ என்று கிளார்க்கை அதட்டியபடியே மாணவர்களின் நடனத்தை ரசித்துக்கொண்டிருந்தார். கிளார்க் தன் தலையில் அடித்துக்கொண்டே “ எவன் எவனோ சாகுறான் . இதுக்கு ஒரு அழிவு வரமாட்டேங்குதே “ என்றபடி நகர்ந்து சென்றான் .

முயன்று அமர்ந்தும் , ஒரு நிலைக்கு மேல் பிரகாஷால் இயற்கையின் அவசரத்தை அடக்க முடியவில்லை.

அங்கிருந்து எழுந்து வேகமாக அவர் கழிவறைக்குச் சென்றார்.தன்னை யாரோ பின்தொடர்வதை உணர்ந்துத் திரும்பியவர் திடுக்கிட்டார்.அங்கே நின்று கொண்டிருந்தது அந்த உயர்ந்த உருவம்.

அமேசான் காடு போல அடர்த்தியான முடி, நெஞ்சு வரை வளர்ந்த தாடி எனக் கிட்டத்தட்ட ஓர் அகோரியை நினைவூட்டியது அந்த முகம்.

சற்றே சுதாரித்துக் கொண்டார் பிரகாஷ்.

“ என்னைய்யா இப்படி மாறீட்ட ? “

“ மாத்தீட்டாங்க சார் “ என்றபடித் தன் சட்டைப்பையில் கையை விட்டான் அந்தப் புதியவன்.

நிலைதடுமாறி பிரகாஷ் ஓடிக்கொண்டிருந்தார்.

அந்த உயர்ந்த மனிதனின் கையில் இருந்தக் கத்தியில் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

பிரகாஷின் வெள்ளைச்சட்டை முழுக்கச் சிவப்பாக மாறிக்கொண்டிருந்தது.

Arasuk kolai kaloori

“ மச்சி என்னடா ! பீட்டராக்ஸா இருக்கானுங்க . தமிழ்ப்பாட்டுக்கு ஒரு குத்து குத்துவானுங்கனு பாத்தா , எல்லாம் இங்கிலீஷ் பாட்டுக்கு ஒப்பாரி வைக்குறாங்க ! “ சற்று வெறுப்புடனே கேட்டான் விக்னேஷன்.

“ இதான் மச்சி வெஸ்டர்ன் ஸ்டைல் “ என்றான் ராஜசேகர்.

“ என்ன கொடுமையோ .. நான் கிளம்புறேன் .. அவசரமா உச்சா வருது“

“சரி இரு .. நானும் வரேன் “

இருவரும் அங்கிருந்து நகர்ந்தனர்.

வெளிக்கதவு பூட்டியிருந்தது . பிரகாஷ் சாவியைத் தேடினார் . உயர்ந்த மனிதனின் கையில் சாவி குலுங்கிக்கொண்டிருந்தது.

“இது நான் எடுத்துட்டு வந்த பூட்டு சார் . சாவி என் கையில தான் இருக்கும்“. சிரிப்பு காற்றில் ஒலித்தது, பயித்தியக்காரத் தனமான சிரிப்பு.

“ பைத்தியக்காரா ! ஏண்டா உனக்கு என்ன வேணும் “

“ பைத்தியக்காரனா ? சாகும்போதும் அடுத்தவன் மேல கோபப்படுறியே .. நீதாண்டா பைத்தியக்காரன் . எனக்குத் தேவையானத நீ மட்டுமில்லடா . யாராலும் தர முடியாது . சாகும்போது சந்தோஷமா சாகணும் “

வேறு வழியின்றி அங்கிருந்து இடப்பக்கம் ஓடினார் பிரகாஷ் . மாடிப்படியில் வேகமாக ஏறினார். இரத்தம் சொட்டிக்கொண்டேயிருந்தது…..

“ டேய் மாமா .. என்னடா ஒரு பாத்ரூமுக்கு இவ்வளவு தூரம் நடக்குறோம் ? “

“ உனக்குதான் நம்ம காலேஜ் பத்தித் தெரியாதா ? எது தேவையோ அதக் கட்டுறத விட்டுட்டு , தேவையில்லாததுக்குக் கட்டி வச்சுருப்பானுங்க . லைப்ரரியெல்லாம் யாருக்கு வேணும் !””

“ எனக்கு வேணும் . நான் செஞ்சத் தப்புக்கு எனக்கு இன்னும் வேணும் . என்ன மன்னிச்சுடு . இனிமே எந்தத் தப்பும் செய்ய மாட்டேன் . என் உயிர மட்டும் விட்டுடு “

“உயிர மட்டும்தான் சார் விடப்போறேன் . தனியா காத்துல விடப்போறேன் “

அவன் கையில் இருந்த கத்தி அவர் கழுத்து நரம்பை அறுத்தது . துடித்துக்கொண்டே பின்னோக்கி நகர்ந்தவர் , கால் இடறி மாடியில் இருந்து கீழே விழுந்தார் . அவர் வழுக்கைத் தலை இரண்டாகப் பிளந்தது . வெளியே தொங்கியது அத்தனை பேரையும் ஆட்டி வைத்தச் சில நூறு கிராம் எடை கொண்ட அந்த மூளை. அவர் வலது கண் சற்று வேகமாகத் துடித்தது . மாடியில் இருட்டில் நின்றுகொண்டிருந்த அந்த உருவத்தின் பல் பளீரெனத் தெரிந்தது . எதையோ சாதித்தப் பரவசம் அவன் முகத்தில் தெரிந்தது .

“ தூமையும் திரண்டுருண்டு உன்னைப்போல் ஆனதே

ஆமைபோல் முழங்கிய ஜீவனின் உயிரும் போனதே “

என்று உரக்கக் கத்திய அவன் இப்போது சித்தனாகவே காட்சியுற்றான்.

அனைவரும் கல்ச்சுரல்ஸில் மூழ்கியிருக்க , விக்னேஷனும் ராஜசேகரும் கழிவறை நோக்கி நகர்ந்தனர் .

“ டேய் ! இங்கப் பாருடா இரத்தம் ! “ என்றான் விக்னேஷன் .

“..ஏதாவது மேக்கப் சாயமா இருக்கப் போது ! நல்லாப் பாரு “

“ டேய் ! இல்லடா ரத்தம் சொட்டியிருக்குப்பாரு .. டேய் ! இது மாடி பக்கம்  போகுதுடா “

“ சரி இரு . மாடி வரப் போயி என்னானு பாப்போம் “

“ இல்ல ! நான் வரல . ஒழுங்கா செக்கியூரிடியக் கூட்டீட்டு வருவோம் . என் பேச்சக் கேளு “

“ ஏண்டா இப்படி பயந்து சாகுற ? நாந்தான் இருக்கேன்ல . என்கூட வாய மூடிக்கிட்டு வா “

 இருவரும் இரத்தத்துளிகளைப் பின்தொடர்ந்து மாடி நோக்கிச் சென்றனர் . அது ஒரு முட்டுச்சுவரிடம் சென்று முடிந்தது .

அங்கு நின்று கீழே எட்டிப்பார்த்தார்கள் . இருள் சூழ்ந்திருந்ததால் எதுவும் தென்படவில்லை.

இராஜசேகர் லைட்டின் ஸ்விட்சைத் தேடினான். இறுதியில் அந்தக் காரிடாரின் லைட்டைப் போட்டவுடன் அதன் வெளிச்சம் வெளியே பரவியது . அந்த மங்கலான ஒளியில் கீழே ஒரு உருவம் கிடப்பதை யூகிக்கமுடிந்தது .

இப்போது விக்னேஷன் லைட் ஸ்விட்சைக் கண்டு அலறினான் .அதில் இரத்தக் கறை படிந்திருந்தது…

கடைசியாய் நடப்பதாயிருந்த Rock Show ரத்தாகியிருந்தது . பிரகாஷின் பிணத்தைச் சுற்றி ஒரு கூட்டம் நின்றுகொண்டிருந்தது. மாணவர்கள் தங்களுக்குள் மரணத்தைப் பற்றி புதுப்புது கற்பனைக் கதைகளைப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

இப்போது கூட்டம் வேகமாகக் கலைந்தது காக்கிச்சட்டைகள் வந்ததால்..

….தொடரும்…

கடல்

உதிரிப்பூக்கள், cape Fear, கடல்- இந்த மூன்று படத்த்திருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. கதையில் அல்ல….

உதிரிப்பூக்கள் ‘விஜயன்’,  Cape fear ‘Robert De Niro’ ,  கடல் ‘அர்ஜுன்’-இந்த மூன்று கதாப்பாதிரமும் ஒரே மாதிரியாக வடிக்கப்பட்டவை. இறுதி வரை தான் பிடித்த பிடியில் உறுதியாக இருக்கும் கதாப்பாத்திரங்கள் இவை மூன்றும். கெட்டவனாக இருப்பதே எளிது என எண்ணிக் கொண்டு மற்றவர்களை கேலியாக பார்க்கும் கதாபாத்திரங்கள் இவை…

உதிரிப்பூகளில் விஜயன் தனித்து தெரிந்ததை போல் இதில் அர்ஜுன் தனித்து நிற்கிறார். அவருடன் போட்டி போட்டுக்கொண்டு நடிக்கிறார் அரவிந்த்சாமி. வருங்கால தமிழ் சினிமாவிற்கு இரண்டு திறமையான நடிகர்கள் கிடைத்துவிட்டனர்…

kadal

நன்மையையும் தீமைக்கும் நடக்கும் போராட்டமே கடல். அதை ஒரு அழகான நாவல் வடிவத்தில் சொல்லி இருக்கிறார்கள். கதை நகரும் பாணி நாவல் வடிவத்தில் இருப்பதன் விளைவு, பலர் இதை Slow-Screenplay என்கிறார்கள்.

ஒரு கதை வேகமாக நகர்வது கதை மாந்தர்களை பொறுத்தே இருக்கிறது. இதில் வரும் கதை மாந்தர்கள் சாதரணமானவர்கள். அவர்களின் வாழ்க்கை சாதரனமானனவை. அவர்கள் வாழ்கையின் சாதரணமான நிகழ்வுகளே இப்படத்தின் திரைக்கதை. ஆனால் கதைக்கு தேவையுடைய காட்சிகள் மட்டுமே படத்தில் உண்டு, ஒவ்வொன்றும் Distinct-ஆன காட்சிகள். அதனால் இதை சோடை போன திரைக்கதை என்பது உசிதமன்று. திரைக்கதை கதைக்கானது, அதை இப்படத்தில் சரியாகவே செய்திருக்கின்றனர்.

ஒரே நெருடல், வழக்கமான தமிழ் படங்களை போல் கதாநாயகியை பாடலுக்காக மட்டும் பயன் படுத்திவிட்டனர். முக்கியமான கதாபாத்திரமாக உருவெடுத்திருக்கவேண்டிய கதாநாயகி கதாப்பாத்திரம், சற்று அழுத்தமற்று போய்விட்டது…

இது ஒரு வித்தியாசமான கதை இல்லைதான். ஆனால் இப்படத்தில் இழையோடும் உட்கருத்துக்களும், இதில் நடித்தவர்களின் திறமையான நடிப்பும் படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. அனைவரும் தங்கள் கதாப்பாத்திரத்தை உணர்ந்து செவ்வன நடித்திருக்கின்றனர்..

ஒருவன் நல்லவனாகே இருக்க முயன்று தோற்கிறான். ஒருவன் தீயவானாக் இருந்துக் கொண்டு தான் ஜெயித்து விட்டதாக எண்ணிக்கொள்கிறான். நல்லவனாக இருப்பதா, கெட்டவனாக இருப்பதா என குழம்பும் ஒருவன் காலம் ஏற்ப்படுத்திக் கொடுக்கும் வாய்ப்பை நம்பிக்கையுடன் இறுகப் பற்றிக்கொண்டு பக்குவமடைகிறான். இங்கு நம்பிக்கையே உண்மையான கதாநாயகன். இதுவே கடல் படத்தின் சாராம்சம்..

Director touch ஒரு புறம் இருக்க Writer’s touch இந்த படத்தில் நிறைய உண்டு. கதாப்பாத்திரங்களை சிறப்பாக வார்த்தெடுத்த பெருமை, கதாசிரியரையே சேரும். காட்சியை கவித்துவமாக படம்பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். ஒவ்வொரு கோணமும் ஒரு கலைப்படைப்பாக அமைந்துள்ளது. அதற்க்கு பலம் சேர்த்துள்ளது ஆரவாரமற்ற பின்னணி இசை. மணிரத்னத்தின் டச் இந்த படத்தில் இல்லை என்கிறார்கள். நாயகன், அக்னி நட்சத்திரம், பாம்பே போன்ற படங்களை எடுத்த மணிரத்னத்தை இதில் தேடினால் அவர் கிடைக்கமாட்டார். இந்த கதைக்கு அவர் தேவைப்படவில்லை. புதிய முயற்சிகளை செய்ய வேண்டியது ஒரு படைப்பாளியின் கடமை, அதை அவர் செய்திருக்கிறார். இதில் இலக்கியத்தை திரையில் இலக்கியமாகவே கொணர மணி முயன்றிருக்கிறார். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். மற்றப்படி மணிரத்னம் படங்களுக்கே உரித்தான வண்ணங்கள், துண்டு வசனங்கள் இந்த படத்திலும் உண்டு. தன் மற்றப் படங்களை போல் இதிலும் தான் சொல்ல வந்ததை சுருங்க-விளங்க சொல்லியிருக்கிறார்.

கடல் ஒரு தரமான பொழுதுபோக்கு படம். மணிரத்தினம் என்ற கலைஞனின் மீது மிரட்சியும்  எதிர்ப்பார்ப்பும் வைத்துக் கொண்டு ‘கடல்’ படத்திற்கு போனால் நிச்சயம் கடல் ஆழமற்று தோன்றலாம்.  எந்த எதிர்பார்ப்புமின்றி பார்ப்போர்க்கு, கடல் ஒரு அழகான நாவலாக தோன்றும்.வெறும் ‘Racy Entertainer’  எதிர்பார்போர்க்கு பிடிப்பதற்கு வாய்ப்பில்லை..

நானும் ஒரு உதவி இயக்குனர்

சினிமாவிற்கும் படைப்பிலக்கனமுண்டு,
அதை உலகிற்கு
உணர்த்திட

வணிக சினிமாவில்
இலக்கியத்தை
புகுத்திட

பொதுவாழ்வினுள்
பின்நவீனத்துவம்
பேசிட

உலகமே திரும்பி பார்த்திடும்
திரைப்படத்தை
இயக்கிட-முடிவு செய்து
சென்னை வந்திட்ட பலரில்
நானும்  ஒருவன்.

என்னை உங்களுக்கு
தெரிந்திருக்க வாய்ப்பில்லை
என்னை போல் பலருண்டு
அவர்களை தெரிந்து கொள்ள நீங்கள்
விரும்பியதுமில்லை

வலதுகையில்   உலக
இலக்கியம்-இடதுகையில்
சிகரெட்-என
விட்டத்தை பார்த்தவாறே
தொடங்கியது என் சராசரி
வாழ்க்கை..

காசின்றி சினிமா பார்க்க
உங்களால் முடியாது,
ஆனால் என்னால் முடிந்தது !

என்னுள் பொதிந்து கிடக்கும்
கதைகளை
என் சிந்தைக்கு தீனியாக்கி,
விட்டத்தை நோக்கி கனவு காண்பேன்;
பகல் கனவன்று,
லட்சிய கனவு !

என் எண்ண  அலைகள்
ஒலி ஒளி வடிவம் பெற்று
திரைப்படமாக விட்டதில் ஓடும்
அதில் கரைந்து போகும் என் மணித்துளிகள்

அது ஒரு வகையான தவம்
பசிமறந்து தூக்கமிழந்து
லட்சிய கனா கண்டுகொண்டிருந்த நாட்கள்.

கனுவுகளை நிஜமாக்கிட
வீதியில் இறங்கி உழைத்திட்டேன்
பல வருட முயற்சி பலன் தந்தது,
நான் இயக்கிய  முதல் படம் திரை கண்டது….

வீதி எங்கும் ஆரவாரம்
எங்கு சென்றாலும்
நச்சரிக்கும் ரசிகர் கூட்டம்

உலக நாயக
நாயகியரின்
தொலைபேசி வாழ்த்துக்கள்

தமிழ் சினிமாவின்
‘மிஸ்டர் நம்பிக்கை’ -
தொலைக்காட்சிகளின் உபயம்.

பத்திரிக்கைகளில் கிசுகிசு
வந்தவுடனயே தெரிந்துவிட்டது
நான் புகழின் உச்சியில் இருக்கிறேன் என்று.

நான் வெகு நாட்களாக நல்லவனாக
இருந்தேன்;
வாய்புகள் கிட்டாத வரைக்கும் அனைவரும்
நல்லவர்களே!

இப்போது நான் என்ன நினைத்தாலும்
நடத்தி வைக்க என்னை சுற்றி
ஒரு கூட்டம்.

‘யார் இந்த அழகான நாயகி’ என்று
தொலைக்காட்சியை பார்த்தவாறே என்
உதவியாளர்களை கேட்டேன்,அன்றொரு நாள்.

அன்றிரவே,  கருப்பு உடை அணிந்த
அந்த வெள்ளை நாயகி
என் படுக்கை அறையில் அமர்ந்திருந்தாள்

கையில் சிகரெட்டை ஊதி தள்ளியவாரே
அந்த காந்த கண்ணழகி
என்னை அழைத்தாள்
அவளை நெருங்கி-விரும்பி அணைக்கையில்
சிகரெட் சுட்டுவிட்டது;
என் இடது கையில் இருந்த சிகரெட்…

யார் அவன்

தப்பு தப்பாக ஆங்கிலம் பேசுபவன்

தப்பிப் போயும் தமிழ் பேசாதவன்

தாரம் வந்தால் தாயை மறக்கும் மகன்போல

ஆங்கில வேசியின் மடியில் சாய்ந்து தமிழ் தாயை மறப்பவன்

தமிழ் பேச மறுப்பவன்…

 

ஈழத்திலே தலை விழுந்தாலும்

தெருக்கோடியிலே கொலை நிகழ்ந்தாலும்

முதுகெலும்பற்ற ஜடமாய்

ஊர்ந்து செல்வான் முடமாய்…

 

எந்திரத்தை மனிதனாக்க ஆர்டிஃபிசியல் இன்டெலிஜென்ஸ் கண்டவன்

தான் எந்திரமாகி போனதை ஒப்புகொள்ள மறுப்பவன்…

 

பொறியில் மாட்டிக்கொண்ட எலி போல தவிப்பதால் தான்

அவன் பொறியாளன் !

 

க்வாரியில் கல் உடைக்கும் கொத்தடிமைகளை மீட்கும் சமுக இயக்கங்களே !

MNC க்கு கூலி வேலை செய்யும் இந்த நவீன கொத்தடிமைகளை மீட்க முயற்சிப்பீராக..