சினிமாவிற்கும் படைப்பிலக்கனமுண்டு,
அதை உலகிற்கு
உணர்த்திட
வணிக சினிமாவில்
இலக்கியத்தை
புகுத்திட
பொதுவாழ்வினுள்
பின்நவீனத்துவம்
பேசிட
உலகமே திரும்பி பார்த்திடும்
திரைப்படத்தை
இயக்கிட-முடிவு செய்து
சென்னை வந்திட்ட பலரில்
நானும் ஒருவன்.
என்னை உங்களுக்கு
தெரிந்திருக்க வாய்ப்பில்லை
என்னை போல் பலருண்டு
அவர்களை தெரிந்து கொள்ள நீங்கள்
விரும்பியதுமில்லை
வலதுகையில் உலக
இலக்கியம்-இடதுகையில்
சிகரெட்-என
விட்டத்தை பார்த்தவாறே
தொடங்கியது என் சராசரி
வாழ்க்கை..
காசின்றி சினிமா பார்க்க
உங்களால் முடியாது,
ஆனால் என்னால் முடிந்தது !
என்னுள் பொதிந்து கிடக்கும்
கதைகளை
என் சிந்தைக்கு தீனியாக்கி,
விட்டத்தை நோக்கி கனவு காண்பேன்;
பகல் கனவன்று,
லட்சிய கனவு !
என் எண்ண அலைகள்
ஒலி ஒளி வடிவம் பெற்று
திரைப்படமாக விட்டதில் ஓடும்
அதில் கரைந்து போகும் என் மணித்துளிகள்
அது ஒரு வகையான தவம்
பசிமறந்து தூக்கமிழந்து
லட்சிய கனா கண்டுகொண்டிருந்த நாட்கள்.
கனுவுகளை நிஜமாக்கிட
வீதியில் இறங்கி உழைத்திட்டேன்
பல வருட முயற்சி பலன் தந்தது,
நான் இயக்கிய முதல் படம் திரை கண்டது….
வீதி எங்கும் ஆரவாரம்
எங்கு சென்றாலும்
நச்சரிக்கும் ரசிகர் கூட்டம்
உலக நாயக
நாயகியரின்
தொலைபேசி வாழ்த்துக்கள்
தமிழ் சினிமாவின்
‘மிஸ்டர் நம்பிக்கை’ –
தொலைக்காட்சிகளின் உபயம்.
பத்திரிக்கைகளில் கிசுகிசு
வந்தவுடனயே தெரிந்துவிட்டது
நான் புகழின் உச்சியில் இருக்கிறேன் என்று.
நான் வெகு நாட்களாக நல்லவனாக
இருந்தேன்;
வாய்புகள் கிட்டாத வரைக்கும் அனைவரும்
நல்லவர்களே!
இப்போது நான் என்ன நினைத்தாலும்
நடத்தி வைக்க என்னை சுற்றி
ஒரு கூட்டம்.
‘யார் இந்த அழகான நாயகி’ என்று
தொலைக்காட்சியை பார்த்தவாறே என்
உதவியாளர்களை கேட்டேன்,அன்றொரு நாள்.
அன்றிரவே, கருப்பு உடை அணிந்த
அந்த வெள்ளை நாயகி
என் படுக்கை அறையில் அமர்ந்திருந்தாள்
கையில் சிகரெட்டை ஊதி தள்ளியவாரே
அந்த காந்த கண்ணழகி
என்னை அழைத்தாள்
அவளை நெருங்கி-விரும்பி அணைக்கையில்
சிகரெட் சுட்டுவிட்டது;
என் இடது கையில் இருந்த சிகரெட்…