அன்று அலுவலகத்தில் யாரிடமும் சரியாக பேசவில்லை. வீடு வந்து கூட அமைதியாகவே அமர்ந்திருந்தான். அவனைப் பற்றி தெரிந்திருந்ததால் மனைவி, அவனை தொந்தரவு செய்யாமல் தட்டில் சப்பாத்தியை வைத்துக் கொடுத்துவிட்டு, தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் சாப்பிடாமல் தட்டை உற்றுப் பார்த்தவாறே தன்னுடைய இயலாமையை எண்ணி வருந்திக் கொண்டிருந்தான். ஏதோ ஒருவகையில் இங்கே ஒவ்வொருவரும் பிறரை சுரண்டிப் பிழைக்கிறார்கள் என்ற எண்ணம் மனதில் தோன்றிய போது பெரியதொரு உண்மையை கண்டுபிடித்துவிட்டவனாக அகம் மகிழ்ந்தான். அதே கணத்தில், அந்த சாமியார்களின் நினைப்பு வந்து மகிழ்ச்சியைக் குலைத்தது.
காலை வழக்கமாக டீ அருந்தும் கடைக்கு செல்லும் வேலையில் தான் நடைப்பாதையில் அந்த இரண்டு சாமியார்களும் எதிர்பட்டார்கள். அவனுடைய வங்கிக் கிளையிலிருந்து சில நூறு மீட்டரில் அந்த டீக்கடை அமைந்திருந்தது. தினமும் பதினொரு மணிக்கு அங்கே சென்று ஒரு லெமன் டீ-யை குடிப்பது கொஞ்சமேனும் அலுவல் அழுத்தங்களிலிருந்து விடுபட வைத்தது.
அவனுடைய கிளையின் வியாபாரம் நிர்வாகம் எதிர்ப்பார்த்த அளவிற்கு இல்லையென்றும், ஒருவாரத்திற்குள் அதன் காரணத்தை தெரிவிக்காவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிர்வாக மேலாளரிடமிருந்து வந்த கடிதம் அவனை அன்று கூடுதல் மனக்குழப்பத்தில் ஆழ்த்தியது. அவருக்கு என்ன பதில் சொல்வது என்ற சிந்தனையோடே அவன் கடைக்கு நடந்து சென்றான். எதிரே வருபவர்களை கூட கவனிக்க முடியாத அளவிற்கு அவன் மனதில் எண்ணங்கள் சண்டையிட்டு கொண்டிருந்தன.
“ஜெய் போலோநாத்” என்று குரல் கேட்ட போதுதான் அவர்களை கவனித்தான். இவன் சிமெண்ட் நடைப்பதையில் நின்றிருக்க, அவர்கள் கீழே சாலையில் நின்றிருந்தார்கள். இரண்டு பேர். ஒருவன் ஐம்பது வயதை கடந்தவனாக இருந்தான். இன்னொருவனுக்கு இருபது வயது கூட இருக்காது. வடநாட்டவர்கள் என்று தோற்றமே சொல்லியது. காவி அணிந்திருந்தார்கள்.
“சாமி ஏதாவது கொடு” ஒருவன் ஹிந்தியில் பேசினான். ஹிந்தி தெரியாது என்று கூட சொல்லி நகர்ந்திருக்கலாம். ஆனால் வங்கி மேலதிகாரிகளிடம் பேசிபேசியே இவனையும் ஹிந்தி தொற்றிக்கொண்டு விட்டது.
“சுட்டா நஹி பாய்” என்றான்.
இவன் ஹிந்தியில் பேசியதாலோ என்னவோ நெருங்கி வந்த பெரிய சாமியார், “இல்லனு சொல்லாத. அபசகுனம்” என்றான். கொஞ்சநாட்களாக எல்லாமே அபசகுனமாக தான் நடக்கிறது. இவன் வேறு அதையே சொல்கிறான் என்று எண்ணியவன், பாக்கெட்டில் துளாவினான். சில்லறை எதுவும் அகப்படவில்லை. அவர்கள் முன்னே பர்ஸை எடுக்க வேண்டாம் என்ற எண்ணத்தோடு கடந்து செல்ல முற்பட்டான்.
“பெரிய கண்டம் இருக்கு! ஒருவாரத்துல. பகவான் ஆசீர்வாதம் செஞ்சா உன்னுடைய குழப்பமெல்லாம் தீரும். நல்ல சேதி வரும்” என்றான் பெரிய சாமியார். அவ்வளவு தான். அதை கேட்டதுமே அவன் மனம் சலனமுற்றது. ஒரு வாரத்தில் கண்டம் என்றதும் நிர்வாக மேலாளர் நினைவிற்கு வந்தார். சாமியார்களுக்கு ஏதாவது தட்சனைக் கொடுத்து வரப்போகும் சிக்கலை தவிர்க்கலாம் என்று நினைத்தவாறே பர்ஸை வெளியே எடுத்தான். பத்து, இருபதை தேடினான். இல்லை. ஐம்பது ரூபாய் நோட்டுக்கள் தான் இருந்தன. பரவாயில்லை என்று ஒரு ஐம்பது ரூபாய் தாளை எடுத்துக் கொடுத்தான்.
“ஜெய் போலோநாத்” என்று உறக்கச் சொல்லியவாறே அந்த சின்ன சாமியார் அதை பெற்றுக்கொண்டான். அவர்களை கடந்து சென்ற யாரும் சாலை ஓரமாக நின்று பேசிக்கொண்டிருந்த இவர்கள் மூவரையும் பொருட்படுத்தவில்லை.
“சாமி சத்தியமா சொல்றேன். இன்னும் மூணு மாசத்துல நீ எங்கேயோ போ போற. இது பகவான் சொல்றான். நான் சொல்லல” பெரிய சாமியார் சொன்னான். இவன் தலையசைத்துவிட்டு அங்கிருந்து நகர தயாரானான்.
“ரூக்கோ பாய்…” என்று இவன் முன்னே வந்து நின்று இடைமறித்தான் சின்ன சாமியார். இவன் என்ன வேண்டும் என்பது போல் பார்த்தான். பெரிய சாமியாரும் பக்கத்தில் வந்தான். இவன் கொடுத்திருந்த ஐம்பது ரூபாயை கையில் எடுத்துக்கொண்டு, கண்களை மூடி ஏதோ மந்திரங்களை ஓதினான்.
“லட்சுமி பூஜை பண்ணிருக்கேன்! வீட்ல போய் வை! நல்லதே நடக்கும்” என்றவாறே காசை இவனிடம் நீட்டினான். கொடுத்த காசு வருகிறது, இலவசமாக ஆசிர்வாதமும் வருகிறது என்கிற ஆசையில் இவன் காசை வாங்க கையை நீட்ட, “கை படாம பர்ஸ்ல வைக்கணும்” என்றான் பெரியவன். இரண்டு பேரும் இவனை முன்னோக்கி நகரவிடாமல் நெருங்கி நிற்க, சத்தியத்திற்கு கட்டுப்பட்டவனாய் இவன் அவர்கள் சொன்னதுபோல் பர்ஸை எடுத்தான்.
“பர்ஸ காமி! நான் லக்ஷ்மிய வைக்கிறேன்” என்று சாமியார் சொல்ல இவன் பர்ஸை அவன் முன்னே நீட்டினான். ஒரு நொடிதான் பர்ஸில் ஐம்பதை வைப்பது போல் சென்றவன், பணத்தை வைக்காமல், உள்ளே இருந்த ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்துவிட்டான்.
இவன் “என்ன பண்ற!” என்று கத்தியவாறே மேற்கொண்டு பணம் போய்விடப் போகிறது என்கிற பதட்டத்தில் தன் பர்ஸை பின் பாக்கெட்டில் வைத்தான்.
“தே தேங்கே தே தேங்கே. பொறு” என்ற சொன்ன சாமியார், “கைய விரிச்சு புடி” என்று ஜாடை செய்தான்.
இவனும் இரண்டு கைகளையும் ஏந்தினான். பெரிய சாமியார் வலது கையை மேலே அசைத்து, காற்றிலிருந்து எதையோ எடுப்பது போல் பாவனை செய்து, தன் கையை மூடி இவன் கைமீது வைத்தான். இவன் அமைதியாக சாமியாரையே பார்த்தான். இப்போது பெரிய சாமியார் தன் கையை வெளியே எடுத்தான். இவனுடைய கையில் ஐநூறு ரூபாய் இருந்தது.
இவன் சுதாரிப்பதற்குள் பெரிய சாமியார், ஐநூறை மீண்டும் தன் கையில் எடுத்தான். இவனின் உள்ளங்கையில் ருபாய் நோட்டு இருந்த இடத்தில் ஒரு ருத்திராட்சம் வெளிப்பட்டது. இவனுக்கு ஆச்சர்யமாக இருந்த அதே வேளையில், அவர்கள் செய்வது ஏதோ ஒரு ஜேப்படி வித்தை என்றும் தோன்றியது. உடனே அங்கிருந்து விலகிக்கொள்ள யத்தனித்தான். ஆனால் ஐநூறை விட முடியாது.
“காச கொடுக்குறியா இல்ல போலீஸ்ட்ட போகவா?” என்று இவன் அதட்டலாக கேட்க, சாமியார் எதுவும் பேசாமல் காசை இவன் உள்ளங்கையில் வைத்தான். இவன் அடுத்த அடிவைப்பதற்குள்,
“பகவான கொடு!” என்றான் சாமியார். அவன் ருத்ராட்சத்தை கேட்கிறான் என்று புரிந்து கொண்டவன், ரூபாயை இடது கையில் மாற்றிக் கொண்டு, வலது கையால் ருத்ராட்சத்தை திருப்பிக் கொடுத்தான்.
“தோஷம் வந்திரும் பாய்! உன் பரம்பரையே இல்லாம போய்டும்… பகவானை லக்ஷ்மிலா வச்சு கொடுத்துட்டு லக்ஷ்மிய வாங்கிக்கோ” என்றான்.
கொஞ்ச நேரத்திற்கு முன்பு நல்ல வார்த்தை சொன்ன சாமியார் இப்போது சாபம் விடுவது போல் பேசியதும் இவனுக்கு உடலெல்லாம் நடுங்கத் தொடங்கியது. எதுவும் பேசாமல் லட்சுமிக்குள் பகவானை வைத்துக் கொடுத்தான். அதை வாங்கிக்கொண்ட சாமியார் மீண்டும் இரண்டு கைகளையும் மூடி இவன் முகம் முன்னே திருஷ்டி கழிப்பது போல் மூன்று முறை சுற்றிவிட்டு, கையை திறந்தான். அதில் இப்போது பணமும் இல்லை, ருத்ராட்சமும் இல்லை. இவன் முகம் சிவக்க, அதே நேரத்தில் எதுவும் பேச இயலாதவனை சாமியாரையே பார்த்தான். அவன் மீண்டும் தன் வலது கையை மூடி தன் இடது தோள் பட்டையில் ஒரு தட்டு தட்டிவிட்டு, இவன் முன்னே கையை திறந்தான். இப்போது சாமியாரின் உள்ளங்கையில் ஒரு சிறு சாய்பாபா சிலை இருந்தது. சிலையை இவனிடம் நீட்டினான்.
“வாங்கிக்கோ பாய், வீட்ல வச்சு பூஜை பண்ணு” என்று சின்னவன் சொன்னான். இவனால் எதுவுமே சிந்திக்க முடியாத அந்த ஒரு நொடியில், இரண்டு சாமியார்களுமே, “ஜெய் போலோநாத்” என்று ஒரு சேர கத்திவிட்டு அங்கிருந்து விருட்டென்று நகர்ந்தனர். ஐந்து நிமிடத்தில் இவ்வளவு ஆள் நடமாட்டம் உள்ள தாம்பரம் சாலையில் யாரோ இரண்டுபேர், அதுவும் மிகவும் சாதாரணமாக தோன்றிய இரண்டு பேர், படித்த தன்னை ஏமாற்றி சென்றுவிட்டார்கள் என்பதை ஜீரணித்துக் கொள்வது கடினமாக இருந்தது. ஒருபுறம் நிர்வாகம் ‘டார்கெட்’ என்கிற போர்வையில் தன்னை முழுவதுமாக உறிஞ்சுகிறது. இன்னொருபுறம் யார்யாரோ தன்னை ஏமாற்றுகிறார்கள். ஒருவேளை தான் இப்படி சுரண்டப்படுவதற்கு தன் இயலாமை தான் காரணமோ!
காலிங் பெல் சப்தம் சிந்தனையை கலைத்தது. வாஷிங் மெஷினை இயக்கிக் கொண்டிருந்த மனைவி கதவை திறந்தாள். வெளியே ஒரு டெலிவரி பாய் நிற்பதை உண்டுகொண்டே கவனித்தான். மனைவி ஏதோ ஒரு பெரிய பார்சலை வாங்கிக் கொண்டு உள்ளே வந்து பிரித்தாள். பார்சலுக்குள் வீடு துடைக்கும் மாப் ஒன்று இருந்தது. அதைக் கொண்டு தரையை துடைத்து சோதனை செய்தவாறே,
“ஸ்பின்னிங் மாப் பா! நல்ல இருக்குல்ல!” என்றாள். அவன் எதுவும் பேசாமல் இருந்தான். அவள் சற்றே அழுத்தி துடைக்க அந்த மாப்பின் கைப்பிடி இரண்டாக உடைந்தது. அவள் அதிர்ச்சியோடு இவனைப் பார்த்தாள்.
“எவ்ளோ வாட்டி சொல்லிருக்கேன்,. கண்ட வெப்சைட்ல எதையாவது வாங்கி ஏமாறாதனு! ரெண்டு நிமிஷம் கூட தாங்கல!”
அவள் தலை குனிந்து நின்றாள்.
“என்ன நிக்குற! உடனே ரிட்டர்ன் போடு” என்று கத்தினான்.
“இது ஆப்பர்ல வாங்குனதுபா! நோ ரிட்டர்ன் பாலிசி. ஆயிரம் ரூபாய், நேத்து ஒரு நாள் மட்டும் ஐநூறுக்கு போட்டுருந்தான்…”
“ஐயோ! ஐநூறா? இதுவா? நூறு ரூபாய் கூட தேறாது. எல்லாம் ஏமாத்து வேலை, நல்லா பிளான் பண்ணி ஏமாத்தி இருக்கானுங்க…”
“ரேட்டிங் நல்லா தான் இருந்துச்சு…”
“வெளில போய் சொல்லிடாத! இத்தனை வயசுக்கு அப்பறமும் இப்டி அபத்தமா ஏமாறுறியேனு துப்புவாங்க!”
அவள் கண்கள் கலங்கிற்று. எதுவும் பேசாமல் அந்தப் பொருளை ஓரமாக வைத்துவிட்டு, வாஷிங் மெஷினில் துணியை போடத் தொடங்கினாள். இவன் கோபத்தில் “கஷ்டப்படுறவனுக்கு தான் காசோட அருமை தெரியும்!” என்று முனகியவாறே இங்குமங்கும் நடந்தான். அழுக்கு கூடையிலிருந்து இவனுடைய பேண்டை கையில் எடுத்தவள், அதன் பாக்கெட்டுக்குள் எதுவோ இருப்பதை கவனித்தாள். உள்ளிருந்து, ஒரு சிறு சாய்பாபா சிலை வந்தது. என்ன இது என்பது போல் இவனை நிமிர்ந்து பார்த்தாள். விருட்டென்று அவள் கையிலிருந்து அதை பிடிங்கியவன்,
“ஒரு கஸ்டமர் கொடுத்தார். சாமிகிட்ட வச்சு பூஜை பண்ண சொல்லி… ” என்றான்.
“நல்ல பூஜை பண்ணுப்பா! அப்பயாவது எனக்கு உன்ன மாதிரி அறிவு வரட்டும். இனிமேலாவது ஏமாறாம இருப்பேன்ல” என்று அவள் கண்கலங்க சொன்னாள்.
“சரி சரி விடு, மத்தவங்க ஏமாத்துனா நீ தான் என்ன பண்ண முடியும்! இனிமே கவனமா இரு” என்றவாறே அந்த சாய் பாபா சிலையை எடுத்துக் கொண்டு பூஜை அறை நோக்கி நடந்தான்.
***
Leave a comment