திரைக்கதையின் முக்கிய தருணங்கள்- Todd Klick-சினிமா புத்தகங்கள்- 6


Beat By Beat- Todd Klick-சினிமா புத்தகங்கள்- 6

திரைக்கதையில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை சாத்தியப்படுத்தும் தருணங்களை (Moments) ‘பீட்(கள்)’ (Beat)’ என்பார்கள். திரைக்கதையை பீட்களாக அணுகியதில் முக்கியமானவர் ப்ளேக் ஸ்னைடர். அவர் தன்னுடைய ‘Save the cat’ புத்தகத்தில், ஒரு திரைக்கதையில் பதினைந்து முக்கியமான ‘பீட்’கள் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு, அதற்காக Beat Sheet என்கிற டெம்பிளேட்டையும் உருவாக்கி இருப்பார்.  

பீட் பை பீட் புத்தகத்தில், இதன் ஆசிரியர் டாட் க்ளிக்  இன்னும் ஒரு படி மேலே சென்று திரைக்கதையின் ஒவ்வொரு நிமிடத்தையும் ஒரு பீட்டாக பிரிக்கிறார். அதாவது 120 நிமிடங்கள் இருக்கக்கூடிய ஒரு திரைக்கதையில் 120 முக்கிய பீட்கள் இருக்க வேண்டும் என்கிறார்.  அந்த ஒவ்வொரு நிமிடமும் என்ன நிகழ வேண்டும் என்பதையும் விலாவாரியாக சொல்கிறார்.

இது எல்லா நேரங்களிலும் சாத்தியப்படுமா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். அவ்வளவு கவனமாக திரைக்கதையை அடியடியாக பிரிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. நாம் பலமுறை உரையாடியது போல் திரைக்கதை உள்ளுணர்வால் எழுதப்படுவது. அதை  செப்பனிட  நமக்கு சில வழிகாட்டுதல்கள் தேவைப்படுகின்றன.  அந்த வகையில் ஒட்டுமொத்த திரைக்கதையின் ஒவ்வொரு தருணமும் இப்படி இருக்க வேண்டும் என்று குழப்பிக் கொள்ளாமல் சில முக்கிய தருணங்கள் மட்டும் எப்படி இருக்கலாம் என்கிற புரிதலை ஏற்படுத்திக் கொண்டால் போதுமானது. 

அதாவது திரைக்கதையின் தொடக்கத்தில் கதை உலகை அறிமுகம் செய்ய வேண்டும், பின்னர் திருப்புமுனையாக பிரதான பாத்திரத்தின் வாழ்க்கையில் ஏதாவது பிரச்சனை நிகழ வேண்டும் என்றெல்லாம் பேசுகிறோம் அல்லவா! அத்தகைய முக்கிய தருணங்களை கண்டுகொண்டால் போதும் என்கிற  புரிதலோடு நாம் இந்த புத்தகத்தை அணுகலாம். 

பல முக்கிய திரைக்கதை  உத்திகளை மிக எளிமையான மொழியில் இதன் முதல் அத்தியாத்தில் ஆசிரியர் விளக்கி இருப்பார். முதலில் அவர் அடிகோடிட்டு காட்டுவது Character Archetypes பற்றிதான். நம் திரைக்கதையில் பத்து வகையான கதாபாத்திரங்கள், அதாவது பத்து குறிப்பிடத்தகுந்த குணநலன்களை கொண்ட பாத்திரங்கள் வரும் என்கிறார் அவர். அவை பின்வருவன.  

 Main Hero (நாயகன் அல்லது நாயகி), Sidekick (தோழன் தோழி), Maiden  (காதலி அல்லது காதலன்), Wise Old Man (நாயகனை விட வயதில் மூத்த பாத்திரம். பெரும்பாலும் அவனுக்கு நல் வழி காட்ட, ஊக்கப்பபடுத்த பயன்படும் பாத்திரம்), Villain (தீயவன்), Henchman (வில்லனின் உதவியாளன் அல்லது அடியாள்), Shape-shifter (வேடதாரி, ஆரம்பத்தில் ஒன்றாக தோன்றி இறுதியில் வேறொருவனாக மாறுபவன். உதாரணம் நல்லவன் கெட்டவனாகலாம். அல்லது கெட்டவன் நல்லவனாகலாம்), Trickster (நகைச்சுவைக்காக பயன்படும் பாத்திரம்), Eternal Child (குழந்தை பாத்திரம் அல்லது குழந்தைத்தனம் கொண்ட பாதத்திரம்) மற்றும் Mother Figure (தாய் அல்லது தாயுள்ளம் கொண்ட பாத்திரம்)

ஒரு நல்ல திரைக்கதையில் மேற்சொன்ன ஆர்கிடைப்பில் குறைந்தது எட்டு வகையான பாத்திரங்களாவது இருக்கவேண்டும், நிச்சயம் இருக்கும் என்கிறார் டாட் க்ளிக். சில நேரங்களில் ஒரு பாத்திரத்திடம் பல குணநலன்கள் வெளிப்படலாம். உதாரணமாக நாயகியே தாயுள்ளம் கொண்டவளாக இருக்கலாம். நாயகனின் நண்பனே இறுதியில் அவனுக்கு துரோகம் செய்யக்கூடியவனாக (Shapeshifter) இருக்கலாம். ஒரு திரைக்கதையை  நம்முடைய முக்கிய பாத்திரங்கள் இந்த பத்து குணநலன்களில் எத்தகைய குணத்தை கொண்டிருக்கிறார்கள் என்கிற தெளிவு நமக்கு இருத்தல் வேண்டும் என்கிறார் டாட் க்ளிக்.

அடுத்து அவர் சொல்வது, Character Flaw பற்றி.  நம் பிரதான கதாப்பாத்திரத்திடம் ஒரு குறை எப்போதுமே மறைந்திருக்கும். அதை கண்டுகொண்டு, கதையின் பயணத்தின் இறுதியில் அந்த குறையை எப்படி நிறையாக மாற்றுகிறான் என்று காண்பிக்க வேண்டும் என்கிறார் டாட் க்ளிக். இதை கேரக்டர் டிரான்ஸபர்மேசன் அல்லது கேரக்டர் ஆர்க் என்கிறோம்.  உதாரணமாக  கதையின் ஆரம்பத்தில் நாயகன் தன்னை பற்றி, தன் குடும்பத்தை பற்றி மட்டுமே சிந்திக்கக் கூடியவனாக இருக்கிறான். அவனுக்கோ அவன் சுற்றத்திற்கோ ஏதோ பிரச்சனை வருகிறது. தன்னை காப்பாற்றிக் கொள்ள களத்தில் இறங்கியவன், ஒரு கட்டத்தில் சமூகத்தை காக்க தன் உயிரையே தியாகம் செய்ய துணிகிறான். இங்கே ஆரம்பத்தில் அவனிடம் சுயநலம் என்கிற ஒவ்வாத குணம் இருக்கிறது. இறுதியில் அந்த குணத்தை விட்டொழித்து எல்லோருக்குமானவனாக மாறுகிறான். இப்படி செய்யும் போது கதையில் சுவாரஸ்யமமும் நம்பகத்தன்மையும் கூடுகிறது.

அடுத்து டாட் க்ளிக் திரைக்கதை பீட்ஸ் பற்றி என்ன சொல்கிறார் என்று  சுருக்கமாக பார்ப்போம்.நாம் முன் சொன்னது போல நாம் 120 பீட்கள் பற்றி அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை. முக்கியமாக என்னென்ன பீட்களை நாம் கவனிக்க வேண்டும்?

ஒரு கதையின் முதல் நிமிடம் டென்ஷன் நிறைந்ததாக இருத்தல் வேண்டும் என்கிறார் டாட் க்ளிக். நாம் இந்த நிமிட கணக்கை ஒதுக்கிவிட்டு, இதை கதையின் தொடக்கம் என்று புரிந்து கொள்ளலாம். ஏனெனில்  ஒரு புனைவில் இந்த நிமிடத்தில் இது நிகழ வேண்டும் என்றெல்லாம் நாம் சொல்ல முடியாது. எனவே கதையின் முதல் நிமிடம் என்று குழப்பிக் கொள்ளாமல், கதையின் ஆரமபக் காட்சிகள் என்று புரிந்து கொள்ளலாம்.

இந்த முதல் பீட்டை (Beat) டாட் க்ளிக் Attension என்கிறார்.  பார்வையாளர்களின் கவனத்தை கட்டிப்போடும் ஒரு தருணத்தை தொடக்கமாக வையுங்கள் என்கிறார் அவர்.  இதையே தான் ப்ளேக் ஸ்னைடர் தன் புத்தகத்தில் ‘ஓப்பனிங் இமேஜ்’ என்று குறிப்பிடுகிறார். ஒரு கதை எதை பற்றியது என்பதை இந்த ஓப்பனிங் இமேஜ் சொல்லிவிட வேண்டும். 

அடுத்து வரும் முக்கிய தருணத்தை டாட் க்ளிக் ‘The Build’ என்கிறார். கதையில் நாம் உருவாக்கிய டென்ஷன் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும். துப்பறியும் கதையில் முதல் கொலை நடந்ததும், அடுத்து கொலைகாரன் நடமாடும் இடத்தில் யாரோ ஒரு  அப்பாவி தனியாக சென்றால் எப்படி இருக்கும்! அது போன்ற ஒரு தருணம் தான் இது.   

டாட் க்ளிக் நான்கு அங்க கட்டமைப்பை பின்பற்றுப்பவர். (Four act structure). நாம் இதற்கு முன்பு பல கட்டுரைகளில் விவாதித்தது போல structure என்பதை பகுதி என்ற அளவில் மட்டும் புரிந்து கொள்வோம். அதாவது முதல் பாதியில் இரண்டு பகுதிகள், இரண்டாவது பாதியில் இரண்டு பகுதிகள் என ஒரு திரைக்கதையை  நான்கு பகுதிகளாக அணுகுவதே இந்த கட்டமைப்பு.  

முதல் பகுதியில் டாட் க்ளிக் குறிப்பிடும்  இன்னொரு முக்கிய தருணம் ‘World Upside Down’ . நாயகனின் உலகம் தலைகீழாக மாற வேண்டும். நாயகனுக்கு வரும் பிரச்சனை அவன் வாழ்க்கையையே திருப்பி போட்டு விடுகிறது. குழந்தை தொலைந்து போகிறது,  பணம் கொள்ளை போகிறது, விபத்து நடக்கிறது…

இங்கே பிரச்சனை எல்லா நேரங்களிலும் நெகட்டிவ் விஷயமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதுவரை தோல்வியையே சந்தித்துக் கொண்டிருந்த நாயகனின் வாழ்க்கையில் முதல் வெற்றி கிடைக்கும் இடமாகவும் இது இருக்கலாம்.  

திரைக்கதையின் முதல் பகுதியில் நாயகனை அறிமுகம் செய்து அவன் பிரச்சனையும் அறிமுகம் செய்கிறோம். அவன் பிரச்சனை வளரும் இடம் இரண்டாம் பகுதி. இங்கே ஆசிரியர் குறிப்பிடும் முக்கிய தருணம் ‘Anxiety Amp’. அதாவது நாயகன் கண்டுகொள்ளும் உண்மை அவனின் மனஉளைச்சலை இன்னும் அதிகரிக்கும் தருணம். 

உதாரணமாக ஒரு துப்பறியும் கதையில், தான் தேடிக் கொண்டிருக்கும் கொலைகாரன் தான் நினைத்ததைவிட மோசமானவன் என்று நாயகன் கண்டுகொள்ளும் தருணத்தை சொல்லலாம். அல்லது வீட்டில் எல்லோரும் சொல்வது போல் பேயெல்லாம் ஒன்றும் இல்லை என்று நம்பும் நாயகன், முதன்முதலில் ஒரு திகில் உருவத்தை பார்த்தால் எப்படி இருக்கும்? அது போன்ற ஒரு தருணம் இது. 

அடுத்து கதை இடைவேளையை நோக்கி நகரும் போது (அதாவது இராண்டாவது பகுதி முடியும் தருவாயில்) வரும் தருணம், ‘Vital event’. மிகமிக முக்கியமான ஒரு நிகழ்வை இது குறிக்கிறது. சைக்கோ கொலைக்காரனை போலீஸ் நாயகன் நெருங்கும் போது, நாயகனின் வீட்டிலிருக்கும் பெண்ணையே கொலைகாரன் கடத்திவிடுவது போன்ற தருணம் இது. அடுத்து இன்டெர்வல் பிளாக்கை (Midpoint)  ‘The Shocker’ என்கிறார் டாட் க்ளிக். பெரும் அதிர்ச்சி கொடுக்கும் தருணமாக இது இருக்க வேண்டும் என்கிறார் அவர்.  

கதையின் midpoint முடிந்ததும் மூன்றாவது பகுதி தொடங்குகிறது. இதை டாட் க்ளிக் ‘Death Valley’ என்கிறார். அதாவது ஹீரோவின் பிரச்சனை ஒரு கட்டத்தில் அவனை பாதாளத்தில் தள்ள வேண்டும். அவன் இறுதி பகுதியில் அதிலிருந்து மீண்டு வரவேண்டும். இந்த மூன்றாவது பகுதியில் நாயகனை தேற்ற அல்லது அவனுக்கு உதவ அவன் நன்பண், Mentor என யாராவது வருவார்கள். இந்த தருணத்தை ‘Ally Aid ‘ என்கிறார் க்ளிக். 

மூன்றாவது பகுதியின் இறுதியில் வரும் முக்கிய தருணம் ‘Tick Tick Boom’ . அதாவது வெடிகுண்டு வெடிப்பது போன்ற தருணம். ஆக்சன் படத்தில் உண்மையாகவே வெடிகுண்டு வெடிக்கலாம். போலீஸ் என்கவுண்டர் நிகழலாம். ஹீரோ மனதளவில் உடைந்து போகும் காட்சியாக இருக்கலாம். அதுவரை அடக்கி வைத்த கோபமெல்லாம் வெளிப்படும் தருணமாக இருக்கலாம்.. 

திரைக்கதையின் இறுதி பகுதியில் வரும் தருணம் ‘Double Damage Done’. நாயகனுக்கு எந்த அளவிற்கு பாதிப்பு ஏற்பட முடியுமோ அந்த அளவிற்கு பாதிப்பு ஏற்பபட்டுவிட்டது. மிகப் பிரயத்தனப்பட்டு போலீஸ் நாயகன் கைது செய்த குற்றவாளி அவனிடமிருந்து தப்பித்துவிட்டால் எப்படி இருக்கும்! காதலி வேறொருவனை திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துவிட்டதாக நாயகனிடம் சொன்னால்? அது போன்றதொரு தருணம். 

திரைக்கதை முடிவை எட்டும் போது வரும் தருணம் ‘Hope might be lost’ . ஒருவேளை தான் தோற்றுவிட்டோமா என்று நாயகன் நினைக்கலாம். Save the cat புத்தகத்தில் அதன் ஆசிரியர் இதை ‘All is lost’ தருணம் என்கிறார். இறுதியாக இதிலிருந்து நாயகன் தன்னை மீட்டெடுத்துக் கொண்டால் அது பாசிட்டிவ் கதை. இல்லை எனில் அது tragedy வகை கதை. பெரும்பாலான கதைகளில் நாயகன் இந்த தருணத்தில் தான் இழந்த நம்பிக்கையை, தெம்பை, அடுத்து வரும் தருணங்களில் மீட்டெடுத்து வெற்றிக் கொள்வான். 

இப்படி திரைக்கதையின் பல முக்கிய தருணங்களை விளக்கும் இந்த புத்தகத்தை படித்தால் சுவாரஸ்யமான திரைக்கதையை எழுதலாம் என்று சொல்வதை விட, ஒரு திரைக்கதையை எழுதி முடித்தபின்பு அதில் உள்ள முக்கிய தருணங்களை இந்த புத்தகத்தின் உதவியோடு சரிபார்த்துக் கொள்ளலாம் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.   



3 responses to “திரைக்கதையின் முக்கிய தருணங்கள்- Todd Klick-சினிமா புத்தகங்கள்- 6”

  1. திரைக்கதைக்கு நல்ல description எழுத ஒரு கட்டுரை எழுதுங்கள் சகோ!! உதவியாக இருக்கும்.மிகுந்த குழப்பத்தை தருகிறது.

    Like

    1. நிச்சயம் சகோ. நன்றி

      Like

  2. கதைக்கு synopsis எழுதுவது எப்படி என்று ஒரு கட்டுரை எழுதுங்கள் சகோ

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.