திரைக்கதை எனும் நெடும்பயணம் -4


4

“Screenplay writing is not an art form. It’s a skill; it’s carpentry; it’s structure”
– WIlliam Goldman

கட்டமைப்பு (Structure)

கதை, கதாபாத்திரம் மற்றும் கான்ப்ளிக்ட் பற்றி அறிந்துகொண்டோம். இப்போது நம்மால் நேரடியாக திரைக்கதை எழுதிட முடியும் தான். ஆனால் அது மட்டும் போதுமா!  நாம் என்னென்ன எழுத வேண்டும், அவை எல்லாம் எப்படி கோர்வையாக தொகுக்க வேண்டும் என்கிற கேள்வி எழுகிறது அல்லவா? இதற்கு நாம் ‘Structure’ பற்றி புரிந்து கொள்ள வேண்டும். 

‘Structure’ எனும் போதே அதிகம் விவாதிக்கப்படுவது ‘three act structure’ எனும் மூன்று அங்க கட்டமைப்பு முறை தான். ஆனால் உண்மையிலேயே இதுபோன்ற முறைகளை பற்றி நாம் அலட்டிக் கொள்ள தேவையில்லை. முதல் ஆக்ட் இத்தனை பக்கங்கள், இரண்டாம் ஆக்ட் இத்தனை பக்கங்கள் என்கிற ஹாலிவுட் கோட்பாடுகளுக்குள்  நுழைய தேவையில்லை. அப்படியெனில் structure என்பதை எப்படி புரிந்து கொள்வது? சில அடிப்படைகளை புரிந்து கொள்வதன் மூலம் இந்த கேள்விக்கான விடையை கண்டுகொள்ளலாம். 

முதலில் ஒரு திரைக்கதையில் நாம் கதையை தொடங்கிய பின் என்ன நடக்கிறது? ஒரு கதாப்பாத்திரத்தை அறிமுகம் செய்கிறோம். அதன் உலகத்தை அறிமுகம் செய்கிறோம். ஒரு கட்டத்தில் அந்த பாத்திரத்தின் வாழ்க்கையில் ஏதோ ஒரு மாற்றம் நிகழ்ந்து அவனுடைய உலகின் சமநிலை குலைகிறது. இந்த இடத்தை திரைக்கதையின் மொழியில் ‘Inciting Incident’ என்கிறோம். ஏனெனில் இந்த தருணத்தில் கதை தூண்டப்படுகிறது. போலீஸ் நாயகனின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் முதல் கொலை நடக்கும் தருணம், நாயகன் நாயகியை பார்க்கும் தருணம், அழகான குடும்பத்தில் குழந்தை காணாமல் போகும் தருணம், எளிய மனிதர்களின் உலகில் அதிகாரம் புகும் தருணம் என்று சொல்லிக் கொண்டே போகலாம்,   

பெரும்பாலான படங்களில் இந்த ‘Inciting Incident’ கதை ஆரம்பித்து அரை மணி நேரத்த்தில் வரும். சில படங்களில் இடைவேளையின் போதும் வருவதுண்டு. இணையத்தொடர்களில் முதல் எபிசோடின் இறுதியில் வரலாம். அதாவது முதலில் கதை உலகை புரிந்து கொண்டு, அதன் உள் நுழைய பார்வையாளர்களுக்கு கொஞ்சம் அவகாசத்தை கொடுத்துவிட்டு (எவ்வளவு அவகாசம் என்பது கதை மற்றும் அதன் வடிவத்தை பொறுத்தது), பின் ஒரு கட்டத்தில் கதையின் போக்கையே அசைக்கும் வண்ணம் தருணத்தை உருவாக்கிட வேண்டும். இந்த தருணத்திற்கு பிறகு நம் பிரதான பாத்திரத்தின் வாழ்க்கை புதிய பாதையில் திரும்பிடும். போலீஸ் நாயகன் வழக்கை துப்பறிய தொடங்குவான். நாயகன் நாயகியிடம் பேசிட முயற்ச்சிகளை மேற்கொளவான்…

அடுத்து என்ன? எதிர்பாராத நேரத்தில் அடுத்த கொலை நடக்கலாம். அல்லது கொலைகாரன் என்று முடிவு செய்து ஒருவனை நெருங்கினால் அவன் தற்கொலை செய்து கொள்ளலாம். நாயகியிடம் காதலை சொல்ல சென்றால், அவள் தனக்கு ஏற்கனவே திருமண நிச்சயம் ஆகிவிட்டதாக சொல்கிறாள். இப்படி நாம் எதிர்பார்க்காத விசயங்கள் நடக்கும் போது கதை சுவாரஸ்யமாகிறது. இத்தகைய எதிர்பாரத விசயங்கள் கதையை வெவ்வேறு திசைகளில் திருப்பிவிடுகின்றன. இதை தான் ‘Turning Points’, திருப்புமுனை தருணங்கள் என்கிறோம். ஒருவகையில்  ‘Inciting Incident’ கூட திருப்புமுனை தருணம் தான் என்பதை நினைவில் கொள்வோம். 

சில திருப்புமுனை தருணங்களில் கதையில் சிறிய மாற்றங்கள் நிகழும். சில திருப்புமுனை தருணங்களில் கதையில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழும். உதாரணமாக எதிர்ப்பாரமல் நாயகனுக்கு நெருக்கமான யாரோ ஒருவர் இறந்து போவது. கதையின் தொடர்ந்து சிறிய, பெரிய திருப்புமுனைகள் நிகழும் போதும் கதை விறுவிறுப்பாகிடும். திருப்புமுனை என்பது நெகட்டிவாகவும் இருக்கலாம் பாசிட்டிவாகவும் இருக்கலாம். கடன் வாங்கியவன் ஏமாற்றிவிடுவது நெகட்டிவ் உதாரணம். வேலையே கிடைக்காது என்று நம்புவனுக்கு அவனே எதிர்ப்பார்க்காத பெரிய வேலை கிடைப்பது பாசிட்டிவ் திருப்புமுனை. 

இப்படி கதையை சுவாரஸ்யாமாக்க, அதில் ‘Inciting Incident’ எங்கு வர வேண்டும், திருப்பு முனை தருணங்கள் எங்கு வரவேண்டும் என்று நாம் முடிவு செய்வோம் அல்லவவா? அதுவே கட்டமைப்பு  (Structure). அதாவது திரைக்கதையின் முக்கிய நிகழ்வுகளை கட்டமைக்கும் விதம் தான் ‘Structure’. முக்கிய நிகழ்வுகள் என்று சொல்வதற்கு காரணம் உண்டு. கதையை முன்நகர்த்தாத எந்த நிகழ்வும் திரைக்கதைக்கு தேவையில்லை. நாம் எழுதும் ஒவ்வொரு தருணமும், காட்சியும் கதையை கொஞ்சமேனும் அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டும். 

இந்த ‘Structure’- ஐ பற்றி பேசும் போது, ஒவ்வொறு திரைக்கதையிலும் முதல் பகுதி, நடுப் பகுதி மற்றும் இறுதி பகுதி என மூன்று பகுதிகள் உண்டு என்ற அளவில் மட்டும் அதை புரிந்து கொண்டால் போதும். (இந்த பகுதிகளை ‘ஆக்ட்’களாக பிரித்து ஹாலிவுடில் த்ரீ ஆக்ட் (Three act), போர் ஆக்ட் (Four act) மற்றும் பைவ் ஆக்ட் (Five act) போன்ற கட்டமைப்பு முறைகளை பின்பற்றுவது உண்டு. முன் குறிப்பிட்டது போல அவற்றை பற்றி நாம் குழப்பிக்க வேண்டிய அவசியமில்லை).

கதை அல்லது கதாப்பத்திர உலகின் அறிமுகம் முதல் பகுதி ஆக இருக்கும் (Introduction of Story World/Character). கதையில் சிக்கலை, ஒரு பிரச்சனையை அறிமுகம் செய்வது அடுத்த பகுதி (Introduction of Conflict).  இந்த பகுதியில் சிக்கல் வளர்ந்து கொண்டே சென்று அதன் உச்சியை அடைந்திடும் (Crisis). முதல் மற்றும் இறுதி பகுதிகளுக்கு நடுவில் இருக்கும் இந்த பகுதி மற்ற இரண்டு பகுதிகளை விடவும் நீளமாக இருக்கும். காரணம் இங்குதான் அதிக நிகழ்வுகள் நடக்கிறது. மூன்றாவதாக வரும், இறுதிபகுதியில் பிரச்சனைக்கான தீர்வு (Resolution) சொல்லப்படும். 

திரைக்கதையின் நிகழ்வுகள் நூல் பிடித்தாற்போல் நகர்வதை லீனியர் ஸ்ட்ரக்ச்சர் (Linear Structure) என்கிறோம். நாயகன், அவனுக்கு வரும் பிரச்சனை, அதை அவன் எதிர்கொண்டு வெற்றி கொள்வது என கதை நேர்கோட்டில் நகர்வதை இதற்கு உதாரணமாக சொல்லலாம். பெரும்பான்மையான கதைகள் இத்தகைய வகை தான். நேர்கோட்டில் நகரும் கதையில், நம் கதாப்பாத்திரத்தின் கடந்த கால கதையை சொல்லலாம். (பிளாஷ்பேக்). கதைக்கு வழு சேர்க்கும் கிளைக்கதைகளை (Sub Plots) சொல்லலாம். ஆனாலும் ஒரு கதை, பிரதான கதாப்பாத்திரம், அவனுக்கு ஒரு பிரச்சனை என்ற அளவில் தான் இந்த கதைகள் இருக்கும்.  

அதுவே ஒரே திரைக்கதையில் பல கதைகள் நிகழ்வதாக சொல்வது Hyperlinked structure. அதாவது  ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாத  வெவ்வேறு கதைகள், கதாபாத்திரங்கள்  ஒரு கட்டத்தில் இணைவது. Babel, சூப்பர் டீலக்ஸ், Everything Everywhere all at once போன்ற படங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.  

என்னுடைய ஒரு வைரம் ஒரு காரிகை மற்றும் சில கயவர்கள் நாவல் இந்த கட்டமைப்பை சார்ந்தது தான். நான்கு வெவ்வேறு குழுக்கள், ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கம் இருக்கும். இரண்டு குழுக்கள் வைரத்தை கொள்ளை அடிக்க முடிவு செய்யும். இரண்டு குழுக்கள் நாயகியை கடத்த முடிவு செய்யும். ஒவ்வொருவருக்கும் தத்தம் செயல்களுக்கு ஒரு நோக்கம் இருக்கும். கதையின் நடுப்பகுதியில் இந்த நான்கு கதைகளும் ஒரு புள்ளியில் இணையும்.   

நம் திரைக்கதையில் பல கதைகளை சொன்னாலும், ஒவ்வொரு கதைக்கும் நாம் முன்புகுறிப்பிட்ட ஆரம்பம், நடுப்பகுதி மற்றும் இறுதிப்பகுதி ஆகிய மூன்று பகுதிகளும் இருக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு கதையிலும் அதற்கான திருப்புமுனைகளும் இருக்கும் போது திரைக்கதை கூடுதல் சுவாரஸ்யமாகிடும். எங்கெங்கே எத்தகைய திருப்புமுனைகளை சாத்தியப்படுத்த முடியும் என்று யோசிப்பதே திரைக்கதையாசிரியனின் முக்கிய பணி. 



Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.