எவிலின் வாங் ஒரு சீன பெண்மணி. அவளும் அவர் கணவன் வேமாண்டும் தங்கள் குடும்பத்தின் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். அமெரிக்காவில் ஒரு லாண்ட்ரி நிறுவனம் நடத்தி வருகிறார்கள். பல ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்ததற்கு பிறகு திருமண வாழ்க்கை கசக்கத் தொடங்குகிறது. வியாபாரத்தில் வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறையிடமிருந்து நோட்டீஸ் வருகிறது. தகுந்த ஆவணங்களை சமர்பிக்காவிட்டால் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் சூழல். மறுபுறம் பல ஆண்டுகள் கழித்து எவிலின் வாங்கின் தந்தை அவளை பார்க்க வருவதாக சொல்கிறார். தந்தைக்கு பயந்த குழந்தையாக வளர்ந்த எவிலின் வாங் தந்தையின் வரவை பயபக்தியுடன் எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் அதே வேளையில் தான் வாங்கின் மகள் தன்னுடைய தோழியை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து அவளை வீட்டிற்கு அழைத்து வருகிறாள். கசக்கும் குடும்ப வாழ்க்கை, நெருக்கும் வருமான வரித்துறை அதிகாரி, பழைய சிந்தனை கொண்ட தந்தை, நவீன சிந்தனையில் வளர்ந்த ஓர்பால் ஈர்ப்பு கொண்ட மகள் என இவை அனைத்தையும் எவிலின் வாங் எப்படி சமாளிக்கப்போகிறாள் என்பதே கதைச் சுருக்கம்.

மத்தியதர அமெரிக்க வாழ்க்கை, இருத்தலியல் போராட்டம், உறவு சிக்கல் இதெல்லாம் ரேமண்ட் கார்வரின் சிறுகதைகளை நினைவுப்படுத்தலாம். இது போன்ற கதை கருவை நல்லதொரு பேமிலி டிராமாவாக உருவாக்கிடவே எவரும் விரும்புவார்கள். ஆனால் இந்தப் படத்தின் திரைக்கதையாசிரியர்கள் மற்றும் இயக்குனர்களான ‘டானியல்ஸ்’ (Daniel Kwan and Daniel Scheinert), இத்தகைய எளிமையான குடும்பக்கதையை மையாமாகக் கொண்டு சுவாரஸ்யமானதொரு சயின்ஸ் பிக்சன்-மல்டிவேர்ஸ் (multiverse) படத்தை உருவாக்கி ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார்கள்.
ஏனெனில் மல்டிவெர்ஸ் என்றாலே பெரும்பாலும் ஆக்சன் க்ரைம் போன்ற கதைகளை தான் எளிதில் யோசிக்க முடியும். ஒரு யூனிவெர்சில் நடக்கும் சிக்கலுக்கான (குற்றம்) தீர்வு வேறொரு யூனிவெர்சில் இருப்பதாக நாம் நிறைய கதைகளை பார்த்திருப்போம். ஆனால் ஒரு குடும்ப கதையை மல்டிவெர்ஸ் கதையாக சொல்லியிருப்பது தான் இந்த படத்தின் தனித்துவம்.
அது என்ன மல்டிவெர்ஸ்?
வாழ்வில் நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளுக்கும் ஏராளாமான சாத்தியக்கூறுகள் உண்டு. ஒவ்வொரு சாத்தியக்கூறுகளும் ஒவ்வொரு உலகத்தை உருவாக்கிடும் எங்கிற அனுமானமே ‘மல்டிவெர்ஸ்’ எனப்படுகிறது. அதாவது ஒருவன் ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டால் , அவன் ஒரு உலகத்தை, வாழ்வை சாத்தியப்படுத்துகிறான். திருமணம் செய்யாவிட்டால் வேறொரு வாழ்க்கை அதாவது வேறொரு உலகம் உருவாகும். இப்படி ஒவ்வொரு முடிவும் ஒரு வாழ்வை உலகை உருவாக்கும் போதும் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஏராளமான மாற்று (alternate) வாழ்க்கை சாத்தியமாகிறது. அதாவது நாம் நம் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் அதே வேளையில், மாற்று உலகில் வேறொரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்னொரு உலகில் முற்றிலும் வேறொரு வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறோம். வெறும் இரண்டு உலகமாக இருக்கும் போது அது parallel universe எனப்படுகிறது. ஏராளமான உலகங்கள் இருக்கும் போது அது multiple universe அல்லது multiverse எனப்படுகிறது. (ப்ளேக் கோர்ச்சின் ‘டார்க் மேட்டர்’ நாவல் ஒரு விறுவிறுப்பான parallel universe கதை. ஒரு உலகத்தில் இருக்கும் விஞ்ஞானி தன்னுடைய மாற்று உலகத்தில் சிக்கிக்கொண்டால் என்னாகும் என்பதே அந்த நாவல்).
மல்டிவெர்ஸ் என்றதும் நிறைய லேயரில் கதைகள் சொல்ல வேண்டி இருக்கும். அப்போது திரைக்கதை சிக்கலானதாக உருவாக வாய்ப்பிருக்கிறது. அதையெல்லாம் மீறி எப்படி கதையை தெளிவாக சொல்லப்போகிறொம் என்பதிலேயே திரைக்கதையாசிரியாரின் திறமை இருக்கிறது. மேலும் ஒரு திரைக்கதை எத்தகைய சிக்கலானதாக இருந்தாலும், அதன் ஆதாரக் கதை என்பது மிக எளிமையானதாக இருந்தால் தான் அது நம் மனதிற்கு நெருங்கி வரும்.இந்த படத்தில் இதெல்லாம் சாத்தியமாகி இருப்பதை கவனிக்க முடியும்.
எவிலின் வாங் கதாப்பாத்திரம் நமக்கு அறிமுகம் ஆகும் போதே அவள் பரபரப்பாகவும் பதட்டமாகவும் இருக்கிறாள். அவளுடைய கணவன் சொல்ல வருவதை அவள் கவனிப்பதாக இல்லை. இதிலிருந்தே அவர்களுக்குள் சரியான உறவில்லை என்பது தெரிகிறது. தன் தந்தை வரப்போகிறார், அவருடைய அங்கீகாரத்தை எப்படி பெற போகிறோம் என்று அவள் குழம்பி இருக்கும்போது அவளுடைய மகள் தன் காதலியுடன் வந்து வீட்டுக் கதவை தட்டுகிறாள். இது எவிலின் வாங்கை பெரிதும் கோபப்படுத்துகிறது. தன் காதலையே ஏற்றுக்கொள்ளாத தந்தையிடம் தன் மகள் ஓர்பால் ஈர்ப்பு கொண்டவள் என்று சொல்ல அவள் தயாராக இல்லை. மகளை திரும்பி போய்விடும்படி சொல்கிறாள். இங்கே தாய் மகள் பிரச்சனை, மற்றும் கணவன் மனைவி பிரச்சனை ஆகியவை எமோஷனல் கான்ப்ளிக்ட்டாக இருக்கிறது. அடுத்து வருவாய் துறை அதிகாரியிடமிருந்து தப்பிக்க வேண்டும். இது external கான்ப்ளிக்ட். இப்படி படத்தில் கான்ப்ளிக்ட் அதாவது முரண் தெளிவாக அடிக்கோடிட்டு காட்டப்படுகிறது. கதாப்பாத்திரத்தின் உலகம் அதிலுள்ள பிரச்சனையை நம்மால் எளிதில் உள்வாங்கி கொள்ள முடிவதனால் நாமும் கதைக்குள் எளிதாக நுழைந்துவிடுகிறோம்.

படத்தின் எழுத்தாளர்கள், ஆரம்பத்திலேயே இது ஒரு சைன்ஸ் பிக்சன் படம், மல்டிவெர்ஸ் படம் என்பதாக காட்சிகளை அமைத்து நம்மை திசைத் திருப்ப விரும்பவில்லை. இது ஒரு பேமிலி டிராமா என்ற அளவிலேயே நம்மை தயார் செய்கிறார்கள். பின் வாங்கின் கணவன் வேமாண்ட் வழக்கத்திலிருந்து மாறுப்பட்டிருக்கிறான் என்று கொஞ்சம் கொஞ்சமாக அறிமுகம் செய்கிறார்கள். அதாவது வேறொரு (ஆல்பா) உலகத்திலிருந்து வரும் வேமாண்ட் சாதாரண உலகத்தின் வேமாண்ட்டை ஆட்கொள்கிறான் என்று காண்பிக்கிறார்கள். ஆல்பா உலகத்தை அழிவிலிருந்து காக்க வேண்டுமெனில், சாதாரண உலகத்தின் (அதாவது நாம் வாழும் உலகம்) எவிலின் வாங்கின் உதவி வேண்டும், அதனால் தான் அவளை தேடி வந்திருப்பதாக ‘ஆல்பா’ வேமாண்ட் சொல்கிறான்.
இப்போது தீய சக்தியை அழித்து ஆல்பா உலகை காப்பாற்றும் பொறுப்பு வாங்கிடம் வருகிறது. அவளுக்கொரு நோக்கம் (Goal) கிடைக்கிறது. அதுவரை சிறியதாக இருந்த முரண் இப்போது பெரிய முரணாக மாறுகிறது.
ஆல்பா உலகின் தீய சக்தியை வெல்ல நினைக்கும், சாதாரண உலகின் எவிலின் வாங் தன்னுடைய பல உலகங்களின் (சாத்தியங்களின்), எவிலின் வாங்குடன் தொடர்பு கொண்டு சக்தியை திரட்டுகிறாள். இங்கே தான் கதை அழகான அறிவியல் புனைவாக மாறுகிறது. இந்த கதை சொல்லலில் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது, படத்தின் தொடக்கத்திலேயே நம்முடைய திரைக்கதையை விறுவிறுப்பாக்க வேண்டிய அவசியமில்லை. நிதானமாக பார்வையாளர்களை நம் உலகிற்குள் கூட்டிவந்து அந்த உலகோடு
அவர்களுக்கு பந்தத்தை ஏற்படுத்தினாலே போதும். பின் அவர்களேயே கதையோடு பயணிக்கத் தொடங்கிவிடுவார்கள் என்பதே.
இந்த திரைக்கதையில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் ‘கேரக்டர் ஆர்க்’. ஒவ்வொரு பாத்திரத்தின் கேரக்டர் ஆர்க்கும் தெளிவாக கையாளப்பட்டிருக்கும். வாங்க் ஆரம்பத்தில் தன்னைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் சுயநலவாதியாக இருக்கிறாள். பின்னர் தன் மகளை காக்கும் பொருட்டு அவள் சுயநல குணம் மாறுகிறது. பின்னர் எதை பற்றியும் அலட்டிக் கொள்ளாத சித்த நிலைக்கு தள்ளப்படுகிறான். இறுதியாக தன் தவறை உணர்ந்து முழு மனுஷி ஆகிறாள். இப்படி அவளுடைய கேரக்டர் ஆர்க்கிலுள்ள முழுமையை போலவே அவளுடைய கணவன், மகள் மற்றும் தந்தையின் பாத்திரங்களும் வடிவமைக்கப்பட்டிருக்கும். வருவாய் துறை அதிகாரியாக வரும் துணை கதாப்பாத்திரத்திடம் கூட இத்தகைய முழுமையை கவனிக்க முடியும். இத்தகைய ஆழமான பாத்திர படைப்பே இந்த படத்தின் பெரிய பலம்.
பல விருதுகளை வென்ற, திரைக்கதையில் அடுக்குகளை கொண்ட இந்த படம் நமக்கு சொல்லும் செய்தி ஒன்று தான்.
‘சக மனிதனிடம் அன்பு செய்வோம்’