பில்லா II-ஒரு பார்வையும், தமிழ் ரசிகர்களுக்கு சில வேண்டுகோள்களும்

ஒரு படத்தை பற்றிய விமர்சனம் அந்த படத்தை எந்த வகையிலும் பாதிக்கப் போவதில்லை. படம் பார்ப்பவர்கள் பார்த்துக் கொண்டுதான் இருப்பார்கள். பார்க்க விரும்பாதவர்கள் எந்த காலத்திலும் பார்க்கப் போவதில்லை. ஆனால் முத்தாய்ப்பாக வரும் நல்ல படங்களை கொண்டாடவேண்டிய கடமை நமக்கிருக்கிறது. அதை சமயத்தில் பில்ட்-அப்போடு வந்து ஊரை ஏமாற்ற முயற்சிக்கும் படங்களை அலச வேண்டிய பொறுப்பும் நமக்கிருக்கிறது.கால புத்தகத்தில் படங்களின் இருப்பை பற்றிய கருத்துக்களை பதிவு செய்யவேண்டியது ரசிகர்களின் கடமை…

இங்கு ரசிகர்கள் என்று குறிப்பிடப்படுபவர்கள், திரைப்படங்களின் ரசிகர்கள். நடிகர்களின் ரசிகர்கள் அன்று. உலக திரைப்படங்களை எந்தவொரு ‘ஓரவஞ்சனை’யும் இல்லாமல் பார்க்கும் ரசிகன்  என்ற முறையில் இங்கு இந்த விமர்சனங்களை பதிவு செய்கிறேன்.

எனக்கு எல்லா படங்களும் ஒன்றுதான். ‘வில்லு’ எனினும், ‘மங்காத்தா’ எனினும் ‘ராஜபாட்டை’ எனினும், வேறு எந்த படம் எனினும் எல்லாம் ஒன்றுதான். பெரும்பாலான படங்கள் முதல் நான் முதல் காட்சி பார்த்துவிடுவேன். உலக திரைப்படங்களை உன்னிப்பாக கவனிப்பது மட்டுமே என் வேலையாக இருப்பதால் ‘ஆயிரம் விளக்கு’ , ‘நாங்க’, ‘நான் சிவன் ஆகிறேன்’ , ‘கொண்டான் கொடுத்தான்’, ‘ஒத்தக் குதிரை’, ‘வெங்காயம்’, ‘ நில் கவனி செல்லாதே’ ‘நஞ்சுபுரம்’ என பலரால் கவனிக்கப் படாத பல தமிழ் படங்களை திரையரங்கிற்க்கு சென்று பார்த்தவன்-பார்பவன் என்ற முறையில் ஒரு திரைப்படத்தை பற்றி எழுதும் எல்லா உரிமைகளும் எனக்கிருக்கிறது….

“பணக்காரனா இருந்தாலும் பிச்சக்காரனா இருந்தாலும், கூலியா இருந்தாலும் உழைத்தால்தான் மேல வரமுடியும்” என்று ‘பில்லா II’ படத்தில் ஒரு வசனம் வரும்.அதே போல ஒவ்வொரு படமும் பல பேரின் உழைப்பினால்தான் வெளியே வருகிறது.அதற்காக எல்லாம் படத்தினையும் சிறந்த படமென்று கருத இயலாது. ‘ஆரண்ய காண்டம்’ போன்ற அருமையான படங்கள் மண்ணை கவ்வுவதும், ‘சகுனி’போன்ற மொக்கை படங்கள் கல்லாவை நிரப்பிக் கொள்வதும், தமிழ் சினிமாவின் சாபக் கேடு.

அதே போல், தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடும் அளவிற்க்கு,

‘பில்லா II’ ஒன்றும் தலை சிறந்த படமன்று. உலக சினிமாவின் ரசிகர்கள் யாராலும் அதை உரக்க சொல்லிட முடியும். சில நூறு ரூபாய்கள் இறைத்து, ‘இந்த படமாவது நல்லா இருக்காதா’ என்ற நப்பாசையில் ஒவ்வொரு தமிழ் படத்தினையும் பார்க்கும் போது, அந்த படமும் நன்றாக இல்லாத பட்சத்தில் அதை வெளிப்படையாக  விமர்சிப்பதை விட வேறு இல்லை.

“அமெரிக்கன் நியூ வேவ்” (american new wave) சினிமாவின் மிக முக்கியமானவர்களில் ஒருவராக கருதப்படும் Brian de palma-வால் 1983யில் இயக்கப்பட்ட ‘scarface’ படத்தின் அப்பட்டமான தழுவலே ‘பில்லா II’.

பில்லா II என்ற பெயரில் பில்லாவின் வாழ்கையின் முற்பகுதியை படமாக எடுக்கவேண்டும் என்ற கட்டாயத்தில் திரைக்கதை எழுதியுள்ளனர்.,‘Scarface’ திரைக்கதையை உருவி பின் அதை தமிழுக்கு ஏற்ற மாதிரி மாற்றுகிறேன் பேர்வழி என்று மூன்று பாடல்களை சொருகி, பின் இதனை பில்லா ஒன்றோடு இணைக்க வேண்டும்மென்பதால் மிகவும் கடினப்பட்டு ‘scarface-யின் கிளைமாக்ஸ் காட்சியை மாற்றி, அதே சமயத்தில் ‘scarface’-யின் முக்கிய காட்சிகளை தவிர்க்க முடியாமல் தவித்து இறுதியில் ஒரு ‘copy cat’ படத்தினை கொணர்ந்துள்ளனர். இது ‘prequel’ என்பதால், பில்லா இறுதி வரை உயிரோடு இருக்கவேண்டும் என்பதால்  ‘scarface’-யின் கெத்தான கிளைமாக்ஸ் காட்சியினை இப்படத்தில் வைக்க இயலவில்லை…

வசங்களை மையப் படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் scarface. அத்திரைப்படத்தின் சில முக்கிய வசங்களை இதற்கு முன்னே தமிழ் சினிமாவின் ‘செவ்வனசெம்மல்கள்’ உருவி விட்டதால், இந்த திரைப்படத்தில் வேறு வழி இன்றி அந்த முக்கிய வசனங்கள் வந்த காட்சிகளை தவிர்த்துள்ளனர்.அதனால்தான் படம் இரண்டு மணி நேரம் மட்டும் ஓடுகிறது. இல்லையேல் ஆங்கில மூலத்தை போன்று மூன்று மணி நேரம் ஓடியிருக்கும். scarface-யின் முக்கிய காட்சிகள் அனைத்தும் இந்தப் படத்தில் திணிக்கப் பட்டிருக்கிறது. தழுவல் திரைப்படங்கள் தமிழுக்கு புதிதன்று, ஆனால் ‘scarface’-யின் வெளிப்படையான தழுவலென்று சொல்லிவிட்டு இவர்கள் ஒரு ‘கேங்க்ஸ்டர்’ படம் எடுத்திருந்திருக்கலாம்.அதை விடுத்து பில்லா II எடுத்தே ஆக வேண்டுமென்ற கட்டாயத்தில்  ‘scarface’-யின் டோனி மொன்டானா (Tony montana) கதாப்பாத்திரத்தையும் ‘டேவிட் பில்லா’ கதாப்பாத்திரத்தையும் இணைக்க முயற்சித்து, தோற்றுள்ளனர்.

உலக திரைக்கதைகளில் மிக முக்கியமாக கருதப்படும் கதாப்பாத்திரங்கள் மூன்று,

1.Travis bickle (Taxi Driver-1976)

2. Tony montana (Scarface-1983)

3.Joker (Dark Knight-2008)

விசித்திரமான கதாப்பாத்திரங்கள் பல உண்டெனெனினும், மேற்கூறிய மூன்று கதாப்பாத்திரங்களும் மிக மிக விசித்திரமானவர்கள், எப்போது எதைச் செய்வார்கள், எந்த ‘modulation’-இல் பேசுவார்கள் என்று வரையறுத்துக் கூற இயலாது. அவ்வாறான ஒரு கதாபாத்திரத்தை மிகவும் பரிச்சயமான ‘பில்லா’ கதாப்பாத்திரத்தோடு இணைக்க முயற்ச்சித்ததை தவிர்திருக்கலாம்…

எந்த பாணியில் திரைக்கதை எழுதினாலும் அதில் continuity இருக்க வேண்டும். ஆனால் இந்த படத்தில் அது அணுவளவும் இல்லை. திடீரென பழைய கார்கள் வருகிறது, பழைய துப்பாக்கியை உபயோகப் படுத்துகிறார்கள்.அடுத்தக் காட்சியில் நவநாகரிக உடைகளும், பொருட்களும் காட்டப் படுகின்றன. திடீரென்று 5000 ரூபாய் வியாபாரம் பேசுகிறார்கள். அடுத்தக் காட்சியில் ஒரு கோடி ரூபாய் வியாபாரம் பேசுகிறார்கள். பின் 300 மில்லியன் டாலர்ஸ் என்கிறார்கள், 500 மில்லியன் டாலர்ஸ் என்கிறார்கள். உன்னிப்பாக கவனித்தால் கிட்டதட்ட 25 வருடங்களை  சில நிமிடங்களில் காட்சிப்படுத்தியிருப்பது போன்று தோன்றும்.( “அமெரிக்கன் நியூ வேவ்” சினிமாவின் தாக்கம்.) ஆனால் இது அத்தனை  வருடங்கள் நடக்க கூடிய கதையன்று.

ஒரு சாதாரணமானவன் எப்படி பெரிய கேங்க்ஸ்டராக மாறுகிறான் என்பன போன்ற ஒரு கதையை அழகாகவும் ஆழாமாகவும் எடுத்திருக்கலாம்.ஆனால் அதை ‘பில்லா II’ என்ற பெயரில் எடுக்கும் போது, கதை நடக்கும் காலத்தை தெரிவித்திருக்க வேண்டும். ஏதாவது ஒரு குறிப்பிட்ட காலத்தை எடுத்து (தொண்ணூறுகளின் இறுதியிலோ, அல்லது இரண்டாயிரத்தின் தொடக்கத்திலோ) அதில் பில்லா கேங்க்ஸ்டராக உருவாகிறார் என்று காட்டியிருக்கலாம்.ஆனால் ஒரு காட்சியில் கதாப்பாத்திரங்கள் , ஏதோ எம்பதுகளில் வருவதை போன்ற ஆடைகளை அணிந்திருக்கிறார்கள்.  அடுத்தக் காட்சியில் சமகாலதில் அணிந்துள்ள நவநாகரிக உடைகளை உடுத்தியுள்ளனர்.(குறிப்பாக கதாநாயகி முதல் காட்சியில் உடுத்தும் பழைய காலத்து உடையையும் அடுத்தக் காட்சியில் உடுத்தும் கவர்ச்சியான சமகால உடையையும் கவனிக்கவும்) திரைக்கதை ஆசிரியர்கள் மிகவும் குழம்பியுள்ளனர் என்பது திண்ணம்.தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பும் வேலையை செவ்வன செய்துள்ளனர் திரைக்கதையாசிரியர்கள்.

இங்கு இந்த திரைப்படத்தை விமர்சிக்கும் உரிமை நமக்கு இருக்கும் பட்சத்தில் , அதில் இருக்கும் சிறப்பம்சங்களை பாராட்ட வேண்டிய பொறுப்பும் இருக்கிறது. அவ்வாறான ஓர் சிறப்பம்சம் ‘அஜீத்’.

தொடக்கத்தில் இந்த கலைஞன் மீது பெரிதொரு பிரமிப்பு இருந்ததில்லை. பல வருடங்களுக்கு முன் இவர் நடித்த ‘ஜனா’ படத்தை 60 ரூபாய் கொடுத்து தாம்பரத்தில் ஒரு தியேட்டரில் பார்த்ததாக ஞாபகம். (பில்லா-2 குஜராத்தில் 300 ரூபாய் ) பால்கனி டிக்கெட்டே 15 ரூபாய் விற்ற அந்த தியேட்டரில் 60 ரூபாய் மிக மிக அதிகம். தியேட்டரை விட்டு வெளியில் வரும்போது எழும்பிய ஒரு எண்ணம் ‘அய்யோ! என் காசு போச்சே.’

பின் உலக சினிமாவப் பற்றிய பார்வை விஸ்தரிப்படைந்த
சமயத்தில்
இவரின் பில்லா வெளிவந்தது. பெரிதாக எந்தஒரு அலட்டல்
வேலைகளுமின்றி வெகு எதார்த்தமாக
இவர் அந்தப் படத்தில் நடந்ததற்கும்-நடித்ததற்கும் பறந்தன,கைதட்டல்கள்.

 தொடக்கம் முதலே இவர் ஆசை, வாலி, முகவரி என பல படங்களில் தன்
திறமையை நிருபித்திருந்தாலும்பெரும்பாலான திரைப்படங்களில்
இவர் ஒழுங்காக பயன்படுத்திக் கொள்ளப்படவில்லை,
பில்லா II உட்பட…

‘நான் கடவுள்’ படத்தில்இவர் நடிக்காமல் விலகியது, இவரின்
புத்திசாலிதனத்திற்கு அடையாளம். நிச்சயம் இவர் உழைப்பு அந்த
படத்தில்வீணடிக்கப்பட்டிருக்கும். ஆனால் அதன்பின் கதைகளை
தேர்ந்தெடுப்பதில் இவர் தடுமாறியதன் விளைவே திருப்பதி,
பரமசிவன், ஆழ்வார் போன்ற திரைப்படங்கள்…

எது எவ்வாறெனினும் இவரிடம் இயல்பாகவே அமைந்திருக்கிறது
மெத்தட் ஆக்டிங் (Method Acting).

கதாப்பாத்திரத்தை உள்வாங்கி வெறும் முகபாவங்களிலேயே
ரசிகர்களை கொள்ளைக்கொள்கிறது இவரின்
ஆர்ப்பாட்டமில்லா நடிப்பு.
உலக அளவில் தலை சிறந்த Al Pacino.Robert De NIro
போன்றோர்களின்
நடிப்பிற்க்கு இணையானது இவருடைய நடிப்பு திறன்….

தமிழ் சினிமாவை அடுத்த தளத்திற்கு எடுத்து செல்லும்
பொறுப்பு வெறும்
படைப்பாளிகளை மட்டும் சார்ந்ததன்று.அதில் ‘அஜித்’ போன்ற
மெத்தட் ஆக்டர்களின் பொறுப்பு மிக முக்கியமானது. அதற்க்கு
அவரை ஒழுங்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.நல்ல
திறமைகளை
வீணடித்ததற்கு,வீணடிப்பதற்கு தமிழ் சினிமாவிற்கு  நிகர்
தமிழ்சினிமாவே. உலக அளவில் மார்லன் ப்ரண்டோவாக
உருவெடுத்திருக்க வேண்டிய சிவாஜி கணேசன்
பின்னாளில் வீணடிக்கப்பட்டார்
என்பதே நிதர்சனமான உண்மை. நவரச நாயகன் கார்த்திக்,
இளைய திலகம் பிரபு போன்ற சிறந்த நடிகர்கள் தமிழ் சினிமாவின்
பாதையில் காணமல் போனார்கள்.

பக்கம் பக்கமாக பஞ்ச் வசனம் பேசும் நடிகர்களும், இறுதிக்
காட்சியில் கேமரா நோக்கி அழுவதும், உரக்க வசனம்பேசுவதுமே
நடிப்பு என நம்பும் நடிகர்களும் நிறைந்த தமிழ் சினிமாவில்,
அஜித் போன்ற உன்னத நடிகர்கள் பாதுகாக்கப் பட வேண்டியவர்கள்…

‘அஜித்’ என்ற இந்த கலைஞன் சரியாக பயன்படுத்திக் கொள்ளப்
பட்சத்தில் உலக சினிமாவில் இந்த தமிழ் நடிகன்
தலை நிமிர்ந்து நிற்பான்,
தமிழ்
சினிமாவை தான் தோளில் தாங்கியாவரே…

நல்ல படங்களை கொடுக்கும் பொறுப்பு படைபாளிகளுடையதெனில்,
அதை கேட்டு வாங்கி ஆதரிக்கும் பொறுப்பு ரசிகர்களுடையது …

கடந்த இருபது வருடத்தில்  தமிழ் சினிமா கண்ட முக்கிய நடிகன் அஜித் என்பது யார் ஏற்க்க மறுத்தாலும் நிலைக்கக் கூடிய உண்மை… ஆனால் அந்த நடிகன் மீண்டும் மீண்டும் ஏதோ ஒருவகையில் வீனடிக்கப்படுகிறான். திரைக்கதை சோடை போகுபோது அதில் நடித்த நடிகர்களின் நடிப்பு வீணாய் போவதை தவிர்க்கமுடிவதில்லை. ‘அஜீத்’ இத்திரைப்படத்தை  தன் தோளில் சுமந்திருந்தாலும், குழப்பமான ஒரு திரைக்கதையால் இதனை சிறந்த படமாக கருத முடியவில்லை…

படத்தின் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என பல பாராட்டக் கூடிய விடயங்கள் உண்டு. ஆனால் திரைக்கதை என்ற முதுகெலும்பு உடையும் போது, மற்ற நல்ல விடயங்களும் கட்டாயத்தால் சுக்குநூறாகி விடுகிறது.. இந்த படத்தின் ‘மேக்கிங்’ மிக மிக அருமை.கோடிகளை இறைத்து எடுக்கபடும் படங்களில் ‘மேக்கிங்’ நன்றாக அமையாமல் இருந்தால் தான் ஆச்சர்யம்…

பல கவர்ச்சி காட்சிகளையும், கொலை காட்சிகளையும் ‘க்ளோஸ்-அப்’ ஷாட்டில் எடுத்துள்ள இயக்குனரின் ‘தில்’லை பாராட்டிட வேண்டும். அதனால் தான் படத்திற்க்கு ‘A’ சான்றிதல் வழங்கியுள்ளனர். ஆனால் ‘ஏ’ சான்றிதல் படத்திற்க்கு வரும் எந்த ஒரு ரசிகனையும் தடுத்து நிறுத்தாது என்பதை இன்னும் தங்களை கலாச்சார காவலர்களாக கருதிக் கொள்ளும் ‘தமிழ்நாடு தணிக்கை குழுவினர்’ உணரமறுக்கின்றனர். (இவர்கள் பருத்திவீரன், ஆரண்ய காண்டம் போன்ற உன்னதமான பதங்களுக்கும் ‘ஏ’ சான்றிதல் வழங்கியவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.)

ஹிந்தி சினிமாவில் ‘Hate story’, ‘Gangs of wassaypur’ போன்ற படங்களை மிக தைரியமாக எடுக்கின்றனர். ‘Jalla Wallah’ ‘I am a Hunter’ போன்ற இரட்டை அர்த்த பாடல்களை ‘தில்’லாக எழுதுகின்றனர்.அவர்களின் அடாசிட்டி (audacity) பாராட்டுதலுக்குரியது. அதுபோன்ற அடாசிட்டியான கவர்ச்சி- கொலை காட்சிகளை ஹாலிவுட் பாணியில் இத்திரைப்படத்தில் வைத்து  அதை இறுதி வரை வெட்டி எறியாமல் தில்லாக படத்தை வெளியிட்ட இயக்குனரை நிச்சயம் பாராட்டிட வேண்டும்.

படம் முழுக்க நிரம்பிக்கிடக்கும் அருமையான வசனங்களுக்காக வசனகர்த்தா விற்க்கு பாராட்டுக்கள். படத்தொகுப்பு சில-பல இடங்களில் ‘Rock & Rolla’ , ‘Shoot’em up’ போன்ற படங்களை நினைவு படுத்தினாலும், பிசிர் இல்லாமல் மிகவும் அருமையாக படத்தை தொகுத்துள்ளதால் படத்தொகுப்பாளரையும் பாராட்டிடுவோம்.

படம் முழுக்க இருவர் மட்டுமே துப்பாக்கியை வைத்து சுட்டுக் கொண்டு திரிவது கொஞ்சம் ஓவர். ஒரு காட்சியில் ஸ்டைலாக பில்லா நடந்து வருவார். பின்னாடி குண்டு வெடிக்கும். கடைசியாக இந்த காட்சியை வல்லரசு படத்தில் பார்த்ததாக ஞாபகம். கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமா தவிர்த்திருந்த ‘funny Build up’
காட்சிகள் அவை.அந்த காட்சிகளை மீண்டும்  இந்த படத்தில் புகுத்தியுள்ளனர்.

எந்த திரைக்கதையானாலும் அதனுள் தேவையில்லாத
கதாப்பாத்திரங்களை நுழைத்திடக் கூடாது.ஒரு காட்சியில் கதைக்கு
சம்பந்தமில்லாமல் ரோட்டில் செல்லும் ஆயிரம் நபர்களை காட்டலாம்.
ஆனால் கதைக்கு தேவையேயொழிய அவர்கள் யாரும் வந்து கதை
மாந்தர்களுடன் உரையாடக் கூடாது.கதைக்கு தேவையில்ல
கதாப்பாத்திரங்கள் இப்படத்தில் நிரம்பிக் கிடக்கின்றன.

முதல் பாகத்தோடு படத்தினை இணைக்க வேண்டும் என்பதற்காக ‘ஜகதீஷ்’ கதாபாத்திரம் வந்துவிட்டு போகும்.அதேபோல் எதுவும் செய்யாமல் கவர்ச்சி காட்ட இரண்டு கதாநாயகிகள். (பெரும்பாலான  தமிழ் சினிமாவில் கதாநாயகிகள் இன்னும் பாடல் காட்சிகளுக்கு மட்டுமே பயன் படுகிறார்கள் ). Scarface  படத்தில் அம்மாவாக வரும் கதாபாத்திரம் இதில் அக்காவாகவும், தங்கச்சியாக வரும் கதாபாத்திரம் இதில் அக்கா பெண்ணாகவும் வருகின்றனர். இதில் ஒரு வசனம் பேசுவதற்காக மட்டும் வந்துவிட்டு செல்கிறது அக்கா கதாபாத்திரம்.

‘scarface ‘  திரைப்படத்தில் டோனி மோன்டனா எவ்வளவு ‘ஆட்டிட்யுட்’ நிறைந்தவர் எனக் காட்டி, இறுதில் அதே ஆட்டிட்யுடுடன் மாண்டு போவதை போல் கதையை அமைத்திருப்பார்கள். ‘scarface ‘ கதையை எவ்வளவு அரைவேக்காடாக எடுக்க இயலுமோ அவ்வளவு அரைவேக்காடாக எடுத்திருக்கிறார்கள் பில்லா II திரைக்கதையாசிரியர்கள்.

இங்கு ஒரு ஆங்கிலப் படத்தின் கதையை வீணடித்ததற்காக மட்டும் வருத்தப் படவில்லை. ‘அஜித்’ போன்ற ஒரு தலை சிறந்த நடிகனை மீண்டும் மீண்டும் வீணடிப்பது மேலும்  வருத்தமளிக்கிறது.  Al Pacino, Robert De Niro, Jack Nicholson போன்று ஒரு சிறந்த நடிகராக அஜித் உருவேடுக்கவேண்டுமென்றால் Scorcese, Coppala போன்ற இயக்குனர்கள் இங்கு நிச்சயம் தேவை. இல்லையேல் மென்மேலும் விக்ரம், அஜித், சிம்பு போன்ற சிறந்த நடிகர்களின் திறமை வீணடிக்கப் பட்டுக் கொண்டிருக்கும். (வருகால தமிழ் சினிமாவின் ‘ப்ராமிசிங் ஹீரோக்கள்’ இவர்கள் மூவரும் என்பதை யாராலும் மறுக்க இயலாது..)

நல்ல படங்களை கேட்டு வாங்க வேண்டிய பொறுப்பு ரசிகர்களுடையது. ‘வழக்கு  எண் ‘ போல முத்தாய்பாக வரும் தரமான படங்களை கொண்டாடிட வேண்டும். அதை இங்கு செய்ய மறுக்கிறார்கள். தான் இன்னாரின் ரசிகன் என மார்த்தட்டிக் கொண்டு பிற நடிகர்களின்  ரசிகர்களிடம்  சண்டை பிடிப்பதே அவர்களின் வேலையாகி விட்டது. ரசிகர்களால் தான் படம்  ஓடுகிறதென்றால் , ‘பாபா’ படம் சக்கை போடு போட்டிருக்க வேண்டும். திரு. ரஜினிகாந்திற்கு இருக்கும் அளவிற்கு ரசிகர்கள் வேறு எந்த நடிகர்களுக்கும் இல்லை. ‘Autobiography of Yogi’ என்ற புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்ட ஒரு நாகரிகமான படம் பாபா. அதில் திரு.ரஜினிகாந்த் சொல்ல வந்த நல்ல விடயங்கள் ஏராளம்.  ஒதுக்கி தள்ளும் அளவிற்கு அது மோசமான படம் இல்லை. எனினும் பெரும்பாலனோர் அந்த படத்தை ரசிக்கவில்லை (அன்பே சிவம் போன்ற  உன்னத  படங்களையே நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது நினைவில் இருக்கலாம்). அதனால் ரசிகர்களால் தான் படம் ஓடுகிறது என்பது மாயை. ஏனெனில், ரஜினிக்கு அடுத்து அதிக ரசிகர்கள் படைத்த அஜித் அவர்களின் எல்லா படங்களும் ஓடி இருக்க வேண்டும். அவ்வாறு நிகழவில்லை என்பதை நாம் அறிவோம். ரசிகர்களையும் மீறி ஜனரஞ்சக சினிமா ரசிகர்கள்தான் படத்தின் வெற்றி-தோழ்வியை நிர்ணயிக்கிறார்கள். (பல நேரங்களில் அவர்கள் ‘மொக்கை’ படங்களை வெற்றியடைய செய்கிறார்கள் என்பது வேறு விடயம் )

அதனால் வெறும் நடிகர்களின் ரசிகர்களாக மட்டுமில்லாமல் நல்ல சினிமாவின் ரசிகர்களாக படம் பார்க்கும் அனைவரும் இருக்கும் பட்சத்தில், தமிழில் நல்ல படங்கள் வந்து குவியும். நல்ல நடிகர்களின் திறமைகளும் வீணடிக்கப்படாது.  நல்ல படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நாம் ஆதரிக்கும் பட்சத்தில் அந்த படங்களின் புகழ் வளர்ந்து இந்திய அளவில் சென்றடையும். தமிழின் தலை சிறந்த படங்கள் அனைத்தும் இந்திய அளவில் எடுத்து செல்லப் பட வேண்டும். அதற்க்கு நாம் நல்லப் படங்களை மட்டும் கொண்டாடவேண்டும்

தென்னிந்தியாவிற்கு வெளியே இருப்பவர்கள் பெரும்பாலோனருக்கு தமிழ் படத்திற்கும், தெலுங்கு படத்திற்கும் வித்தியாசம் தெரியாது. அவர்கள் அனைவரும் வெறும் அதிரடி மசாலா தெலுங்கு படங்களை பார்த்து விட்டு, அதுதான் ‘South Movies’ என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இதில் பல மசாலா தெலுங்கு படங்கள் ஹிந்தியில் டப் செய்யப் படுகிறது. அதனோடு சேர்த்து ‘சுள்ளான்’ ‘கஜேந்திரா’ போன்ற படங்களை டப் செய்து அன்றாடம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள். (காலக் கொடுமை !)

‘Tere Naam’ என்ற ஒரு அருமையான ஹிந்தி படத்தை பாராட்டி பேசும் பலருக்கும், அது ‘சேது’ என்ற பெயரில் பாலாவால் தமிழில்தான் முதலில் செதுக்கப்பட்டது என்ற உண்மை தெரிந்திருக்கவில்லை. தலைசிறந்த இயக்குனர்கள் இங்கிருப்பதை அவர்கள் யாரும் அறியவில்லை. ‘சிங்கம்’ ‘சிறுத்தை’ போன்ற படங்களே இங்கு எடுக்கப் படுவதாக அவர்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனர். இந்தியாவின் ‘Finest actors’ தமிழில்தான் இருக்கிறார்கள் என்பதும் யாருக்கும் தெரியாது.

இதை மாற்றுவது ரசிகர்களின் கடமை. வெற்றி , தோல்வி, பாக்ஸ்-ஆபிஸ் என்பதை பற்றி யாரும் அலட்டிக் கொள்ளவேண்டியதில்லை. ஆனால் , ‘Fanaticism’ என்ற போர்வையில் நமக்குள்ளேயே அடித்துக் கொள்வதை நிறுத்திவிட்டு நல்ல படங்களை கொண்டாடிட வேண்டும். பிற மாநிலத்தாருக்கு அப்படங்களை அறிமுகப் படுத்திட வேண்டும். நல்ல படத்தினை ரசிகர்கள் கொண்டாடிடும் பட்சத்தில், அந்த படத்தை படைத்த படைப்பாளி மென்மேலும் நம்பிக்கைப் பெற்று அந்த படங்களை இந்திய அளவில் கொண்டு செல்ல  முயற்சிப்பான். அவ்வாறு எடுத்துச் செல்லும் பட்ச்சத்தில் தமிழ் படைப்பாளிகள், கலைஞர்களின் மதிப்பு மென்மேலும் உயரும். ஒரு சமுகத்தின் படைப்பாற்றல் அச்சமுகத்தின் மக்களின் வாழ்வு நிலையை பொருத்தது என்பதால், நல்ல தமிழ் படங்கள் இந்திய அளவில் அங்கிகாரம் பெறும்போது அந்த படத்தின் ரசிகர்களாகிய தமிழர்களின் பெருமையும் உயரும்.

தலை சிறந்த படங்களை தந்துக்கொண்டிருந்த வங்காள, மராத்திய திரைத்துறைகள் இப்போது தூங்கிவிட்டது. எதார்த்த படங்களை தந்துக் கொண்டிருந்த மலையாள சினிமாவும் இப்போது பெரிதாக பாரட்டிடும்படி செயல்ப்படவில்லை. ஹிந்தியில் எடுக்கப்படும்  பெரும்பாலான படங்கள் ‘மொக்கை’ படங்களே. அதனால் இந்திய அளவில் தலை சிறந்த படங்களை படைக்கும் திறமை இப்போது தமிழ் சினிமாவிற்கு மட்டுமே இருக்கிறது என்பதை நினைவில் கொள்வோம். நல்லப் படங்களை மட்டுமே ஆதரித்து கொண்டாடும் பொறுப்பு தமிழ் ரசிகர்களுடையது என்பதை கருத்தில் கொள்வோம்..

அதனால் ‘பில்லா-2’ போன்ற சராசரி படங்களை கொண்டாடிக் கொண்டும், நமக்குள்ளேயே அடித்துக்கொண்டும் இருக்காமல், அஜித் போன்ற உன்னத நடிகனை வைத்து நல்ல படங்களை இயக்கிட வேண்டும் என்று படைப்பாளிகளை வற்புறுத்துவோம். மாற்று சினிமாவினை வரவேற்றிடுவோம். அவ்வாறு நாம் நல்ல படங்களை கொண்டாடிடும் பட்சத்தில், ஒரு நல்ல நடிகனின் திறமை வீணடிக்கப் படாத பட்சத்தில் , தமிழ்நாட்டிலிருந்து ஒரு ‘Al Pacino’ உருவாவதை யாராலும் தடுக்க இயலாது…