மாசற்ற காதல்

மனிதனை மிருகத்திடமிருந்து மாறுபடுத்திகாட்டுகிற ஒரே விடயம் காதல். மிருங்களுக்குள்ளும்  காதலுண்டு. ஆனால் அதன் மையப்புள்ளி வேறு. அதற்கு பகுத்து உணர்கிற  சக்தி கிடையாது. ஒரு நாய் ஒரே நேரத்துல நிறைய நாய்களோடு காதல் கொள்ளும். ஆனா மனிதன் அப்படி இல்லை. அப்படி இருந்தா அவன் மனிதனும் இல்லை, அது  காதலும் இல்லை

காதலுக்கு மனோதத்துவரீதியான விளக்கத்தை ஆராய வேண்டியதில்லை.அப்படி ஆராய முற்பட்டால் காதல் என்கிற கேள்விக்கு காமம் என்பதே பதிலா கிட்டும். ஆனால் அதை தவிர்த்து, சமுக ரீதியா மனிதனுக்கு ஏற்பட்ட பந்தம், பற்று போன்ற உணர்வுகள அடிப்படையாக கொள்ளும்போது காதல் புது வடிவம் பெறுது. தனி மனித உணர்வுகளுக்கேற்ப தனி வடிவம் பெறுது….

அன்று வழக்கம் போல நான் 70  அடி உயரத்துல வேலை செஞ்சிக்கிட்டு இருந்தேன். ரொம்ப தூரத்தில் அந்த பொண்ணு ஒரு சின்ன குப்பியில தண்ணி புடிச்சிகிட்டிருந்தா. அவளுக்கு 16 வயசு இருக்கும். உடம்பெல்லாம் புழுதி மண்டி அவ உண்மையான நிறம் மறைந்து கருப்பா இருந்தாள்.அதிக வேலை செஞ்ச களைப்பு முகத்தில் தெரிஞ்சாலும் அவ முகம் கலையா இருந்தது. அவள் அணிந்திருந்த ரொம்ப கசங்கி  போன அந்த உடை வெறும் உடலை மறைக்கிற தன் வேலைய கச்சிதமா செஞ்சுது. அதற்காக மட்டும்தான் உடை.

அவ உடையில எந்த அழங்கார  வேலைகளுமில்ல அதற்கான அவசியம் அவளுக்குயில்ல. ஏனா அவ ஒரு தினக் கூலி.

உடல் மெருக கூட்டவோ வடிவத்தை சரி செய்யவோ காச இறைக்கிற  பணக்கார கூட்டத்துக்கு மத்தியில உடல்ல இருக்குற அத்தனை வலிமையையும் வெறும்  ரெண்டு வேலை சோற்றிற்காக செலவளிக்கிற தினக்கூழி கூட்டத்த சார்ந்தவள் அவள்.

ஆனா எது எப்படி இருந்தாலும் பெண் பெண்தானே. அதனாலதான் என்னமோ எல்லாரும் அந்த பெண்ணையே உற்று பார்த்துக்கிட்டுருந்தாங்க.  நானும்தான். ஆனா நான் பார்க்குறதுக்கு அவ அழகு மட்டும் காரணமில்லை. தினமும் இதே நேரத்துக்கு அவ அங்க வந்து தண்ணி பிடிப்பாள்; அத சிந்தாம ரொம்ப தூரம் எடுத்திட்டுபோய் ஒரு பையனுக்கு குடிக்க கொடுப்பாள். அவனுக்கு அவ வயசுதான் இருக்கும். அவளோட காதலன் அவன்.

அந்த அழகான காதல்ல எனக்கு பிடிச்சது அந்த பெண் அவன் மேல  வெச்சுருக்க மாசற்ற பாசம். அங்க காசு தோற்று போகுது. அது ஆடம்பரமற்ற ஒரு காதல் .தண்ணிய வாங்கி அவன் குடிச்சதும் அவ முகத்துல ஒரு சந்தோசம் பொங்கி நிக்கும். யார இருந்தாலும் அந்த காட்சிய பார்க்கும்போது உருகிடுவாங்க..நான் கண்ட கொண்ட காதல்ல இருக்குற கலங்கமெல்லாம்  அந்த ஒரே ஒரு காட்சில துடைக்கப்பட்டுவிடும்.

எவ்வளவு களைத்திருந்தலும்  எவ்வளவு பளுவிருந்தாலும் அவ அந்த நேரத்துக்கு அவனுக்கு தண்ணி கொடுக்கிறதா நிறுத்தியதில்லை. உண்மைய சொல்லனும்னா தண்ணி கொடுக்குற சாக்குல ஐந்து நிமிடம் அவனோட அவ கண்களாலேயே அன்பை பரிமாரிகொள்வாள்.

இதெல்லாம் பார்த்து கேலி பண்ணுற கூட்டமுண்டு.அவங்கள சீண்டிப் பாக்குற கூட்டமும் உண்டு.அத அவங்க பெருசா எடுத்துக்க மாட்டாங்க. அவங்களுக்குள்ள இருக்குறது உண்மையான காதல். அந்த நேரம் பார்த்து யாரவது என்கிட்டே கடவுள் இருக்காரானு  கேட்டா, சத்தியமா இருக்காரென்று தான் சொல்ல தோனும். மாசற்ற அந்த காதல் தான் எனக்கு கடவுள் . அவன் பணக்காரன் இல்ல . படிச்சவன் இல்ல. பேரழகன் இல்ல. அந்த பெண்ணோட மாசற்ற அன்ப பெற்றதனாலோ என்னவோ அவன் உயர்ந்து நிற்கிறான்.

ஒரு வார்த்தைக் கூட ரெண்டு பேரும் பேசிக்காம இருக்குறத பார்த்து எனக்கு ஆச்சர்யமா இருந்துச்சு. ஒரு நாள் அந்த பெண்ணுடன் பேச முயற்சி பண்ணினேன். அவ பேசாம போயிட்டா. பின் ஒரு நாள் தான் கேள்விபட்டேன்,  அவங்க ரெண்டு பேராலயும் பேச முடியாதென்று. ஏனோ தெரியல அதுக்கப்புறம் அந்த பெண்ண பார்த்த ஏதோ சொல்ல முடியாத சோகம் எனக்குள்ள உருவாயிடுது. அவங்களோட இந்த நிலைமைக்கு யாரு காரணம்!

இப்பெல்லாம் யாரவது என்கிட்டே கடவுள் இருக்காரானு  கேட்டா, சத்தியமா இல்லைனுதான் சொல்லுவேன்….