மீண்டும் மேடம்- சிறுகதை
நான் மேடமை மீண்டும் சந்திப்பேன் என்று நினைக்கவில்லை. சந்திக்க முடியவில்லை என்பது தான் உண்மை. மேடமை பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. பெயர் கூட தெரியாது. அவளை எங்கே எப்படி தேடுவது. ஒரே ஒரு முறை வாங்கிக்கிளையில் சந்தித்த பெண்ணை தேடுவது என்பது சாத்தியமில்லை. அவளின் நினைவு அவ்வப்போது வந்து போனது. என்னையும் தாம்பரம் கிளையிலிருந்து மைலாப்பூரில் இருந்த பிராந்திய அலுவலகத்திற்கு மாற்றிவிட்டார்கள். திடிரென்று என்னை தேடி மேடம் அந்த கிளைக்கு வந்தால் என்ன ஆவது என்று கூட யோசித்தேன். என்னை யாரவது தேடி வந்தால் என் அலைப்பேசி எண்ணை கொடுங்கள் என்று பியூனிடம் சொல்லிவிட்டு தான் கிளம்பினேன். ஆனால் நாட்கள் உருண்டோடியும் எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை. மேடம் என்னை ஏன் பொருட்படுத்த வேண்டும்! அவரை பொறுத்த வரை நான் ஒரு வழிப்போக்கன் மட்டுமே என்று எண்ணி என்னை நானே ஆசுவாசப் படுத்திக் கொண்டேன்.
கிட்டத்தட்ட ஓராண்டுகள் கடந்திருக்கும். நான் அன்று சானடோரியத்தை அடைந்த போது காலை 8.20 ரயில் வந்து நின்றது. தண்டவாள பராமரிப்பு வேலை நடந்துகொண்டிருந்ததால், பத்து மணிக்கு பிறகு ரயில் இல்லை என்று சொல்லியிருந்தார்கள். அதனால் ரயிலில் வழக்த்தை விட அதிக கூட்டம். ரயில் நிலையத்தில் எனக்கு முன்பே காத்திருந்த கூட்டமும் முந்திக்கொண்டதால் என்னால் முதல் வகுப்பிற்குள் நுழைய முடியவில்லை. அடுத்த ரயிலில் செல்லலாம் என்று முடிவெடுத்து காத்திருந்தேன். எதிரிப்பார்த்ததை போல் அந்த ரயிலிலும் கூட்டம் தான். ஆனால் நான் தயாராக இருந்ததால் ரயிலினுள் வேகமாக ஏற முடிந்தது. கூட்டத்தை தவிர்க்க வெண்டார்ஸ் பெட்டியில் ஏறிக் கொண்டேன். உள்ளே சென்று ஓரமாக நின்று கொள்ளலாம் என்று கூட்டத்தினுள் உட்புகுந்தேன். கடைசியாக இருந்த இருக்கையின் பக்கவாட்டில் நின்றுகொண்டு என் பையிலிருந்த புத்தகத்தை எடுத்தேன். புத்தகத்தில் மூழ்கிவிட்டால் சுற்றி ஆயிரம் பேர் இருந்தாலும் அவர்களை கடந்து நம்மால் நமக்கான உலகத்திற்குள் நுழைந்து விட முடிகிறது. நிகழ்காலத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான வழி தான் புத்தகம் போல. நான் அந்த சிறிய கவிதை புத்தகத்திற்குள் புகுந்துவிட்டேன்.
ரயிலில் திடீர் சலசலப்பு வரும்போது தான் பல்லாவரம் வந்துவிட்டதை கவனித்தேன். யதேச்சையாக வலது புறம் திரும்பியபோது இருக்கையில் அந்த பெண்மணியை கவனித்தேன். கண்களில் கூலிங் க்ளாஸ். காதில் இயர்போன். அவள் என்னை கவனித்ததாக தெரியவில்லை. கண்கள் உறுதி செய்வதற்கு முன்பு மனம் உறுதி செய்துவிட்டது. அவள் தான்.
‘கயல் எழுதி, வில் எழுதி, கார் எழுதி… தீர்த்த முகம் திங்களோ, காணீர்!’
“மேடம்” என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். இவ்வளவு நேரம் எப்படி கவனிக்காமல் விட்டோம்! நாம் தேடும் ஒரு விஷயம் நாம் தேடுவதை நிறுத்திக் கொண்டுவிட்ட பின்பு நம்மை வந்து அடைவது எப்படி! இல்லை, ஒரு வகையில் மனதிற்குள் நான் அவளை தேடிக் கொண்டே தான் இருந்திருக்கிறேன். நான் வெகு நேரம் கவனித்தது அவள் உணர்ந்திருக்கக் கூடும். என்னை நிமிர்ந்து பார்த்தாள்.
நான் புன்னகை செய்ய யோசித்து முடிப்பதற்குள், அவளே புன்னகை செய்தாள். நான் பதிலுக்கு அளவிற்கு அதிகமாகவே புன்னகையை உதிர்த்தேன். அசடு வழிவதாக அவள் நினைத்திருக்கக் கூடும்.
“மேடம்” என்றேன்.
“மேனேஜர் சார்” என்றாள். அவளும் என்னை நினைவு வைத்துக் கொண்டிருக்கிறாள்.
“எப்படி இருக்கீங்க!”
“நலம் மேடம் நீங்க!”
“குட். உங்கள தான் பாக்கவே முடியலயே! நான் அதுக்கப்பறம் ரெண்டு முறை அந்த பிரான்ச்க்கு போனேன்!”
அவள் சென்றிருக்கிறாள். ஏன் என்னை பற்றி விசாரிக்கவில்லை என்று யோசித்தேன். நான் கேட்க எண்ணிய கேள்வியை புரிந்துகொண்டவளாய் அவளே பதில் சொல்லத் தொடங்கினாள்.
“பர்ஸ்ட் டைம் ஏ.டி.எம் போயிட்டு திரும்பிட்டேன். நீங்க உள்ள இருப்பீங்களானு தெரில. வந்தாலும் நீங்க பேசுவீங்களானு டவுட். நெக்ஸ்ட் டைம் ஒரு நாள் போனேன். சரி உள்ள போய் பாத்துரலாம் என்ன தான் ஆகிடும்னு போனேன். பியூன் கிட்ட மேனஜர்னு கேட்டதும், உள்ள போய் பாருங்கன்னு சொன்னார். உங்க கேபின் பக்கத்துல போனதும்தான் தெரிஞ்சது, நீங்க இல்லனு. உள்ள ஒரு லேடி மேனஜர் இருந்தாங்க. மறுபடியும் பியூன் கிட்ட கேட்டேன்,
“வேற ஒரு மேனேஜர் இருந்தாரே!”
“அவரு மாறி ஆறுமாசம் ஆச்சுங்க”
“எங்க போயிருக்காரு!”
“அந்த பியூன் சொன்னாரா! நீங்க வந்தா என் நமபர் கொடுக்க சொல்லி சொல்லியிருந்தேன்” அவள் புன்னகை செய்தாள்.
மீனம்பாக்கத்தில் அவள் பக்கத்தில் இருந்தவர் எழுந்தார். போய் அமரலாமா கூடாதா என்கிற குழப்பத்தையும் கூச்சத்தையும் புரிந்துகொண்டவளாய், அமரும்படி வலக்கையால் செய்கை செய்தாள். கூச்சத்தோடு அமர்ந்துகொண்டேன்.
“என்ன கேட்டீங்க!”
“அந்த பியூன் சொன்னாரானு!”
“இப்பதான் புரியுது! அவருக்கு உங்க மேல ஏதோ கோவம் போல! அந்த மேனஜர் டெல்லிக்கு போய்ட்டார். பெர்சனல் நம்பர்லாம் யார்கேட்டாலும் கொடுக்க கூடாதுனு சொன்னீங்கன்னு சொன்னார்!”
அந்த பியூன் அவ்வப்போது என்னிடம் கடன் வாங்குவார். ஆனால் சில நாட்களில் கொடுத்துவிடுவார். நான் பலருக்கும் கொடுத்த பணம் வராமல் போனதால், யாருக்கும் கடன் கொடுக்கக் கூடாது என்று முடிவு செய்திருந்தேன். கடன் கேட்பதை விட தர்ம சங்கடம் கொடுத்த கடனை திருப்பி கேட்பது. ஏதோ நாம் புதிதாக கடன் கேட்பது போல் தயங்கி தயங்கி கொடுத்த பணத்தை கேட்க வேண்டியதாக இருக்கிறது. அதனால் அவர் கடைசியாக பணம் கேட்டபோது நான் இல்லை என்று சொல்லிவிட்டேன். அந்த கோபத்தை அவர் மறக்கவில்லை போல.
“நீங்க டெல்லி போகலையா சார்!”
“போறதா இருந்துச்சு அப்பறம் இங்கேயே போட்டுட்டாங்க” சமாளிப்பதற்காக அப்படி சொன்னேன்.
சிறிது நேர மௌனம். கிண்டியில் பெருங்கூட்டம் இறங்கியது.
“உங்களுக்கு தோனலயா!?”
“என்ன மேடம்!”
“இல்ல என்ன பாக்கணும்னு உங்களுக்கு தோனலயா!”
“தோணுச்சு. தினைக்கும் எதிர்ப்பார்த்துட்டே இருப்பேன். நீங்க வாரீங்களானு! சிசிடிவிய வேற பாத்துகிட்டே இருப்பேன்”
“நாம எதுவுமே பண்ணாம எல்லாமே கிடைச்சிடாது மேனேஜர் சார். நாம கொஞ்சமாவது எபோர்ட் போடணும்! இப்ப கூட நான் தான் நிறைய பேசுறேன்”
நான் புன்னகைத்தேன்.
“சிரிச்சே சமாளிக்குறீங்க!”
“நீங்க வர்க் போறீங்களா!”
“இப்பதான் த்ரீ மந்த்ஸா போயிட்டு இருக்கேன். பிரீலான்ஸ் ப்ராஜக்ட். வாரத்துல மூணு நாள் தான். இதுவே வீட்ல அம்மா போக கூடாதுனு சொல்லிட்டு இருந்தாங்க, நான் கேட்கல!”
“ஏன்! அம்மாக்கு இந்த வேலை புடிக்கலயா!”
“அவங்களுக்கு எந்த வேலையும் புடிக்கல. எனக்கு உடனே மேரேஜ் பண்ணி வச்சிடனும். அதான் அவங்களுக்கு ஒரே ஆசை. ஒரு பொண்ணு பொறந்ததும் உடனே வளர்ந்து கல்யாணம் பண்ணிக்கணும் நினைக்கிறாங்க! ஜென்ட்ஸ்குலாம் அந்த பிரச்சனை இல்ல”
நான் என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாக இருந்தேன்.
“நானே லொடலாடனு பேசிட்டு இருக்கேன்ல! ஏதோ ரொம்பநாள் பழகுனா பந்தம் மாதிரி!”
“அப்டிலாம் இல்ல மேடம்”
“என்ன பந்தம் இல்லனு சொல்றீங்களா!”
அவளை போல எனக்கு பேசத் தெரியவில்லையே!
“இல்ல நீங்க லொடலொடனு பேசலனு சொன்னேன்!”
“தாங்க்ஸ்” என்றாள்.
அவளோடு பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றியது. அந்த ரயில் அப்படியே போய் கொண்டே இருக்காதா என்று ஆசை உண்டானது.
“மேனஜர் சார் நானும் நீங்க கேட்பீங்கனு பார்த்துட்டே இருக்கேன். இப்பவரை நீங்க என் பேர கேட்கல! உங்க பேரு என்னவா இருக்கும்னு நானும் ரொம்ப நாள் யோசிச்சிட்டே இருந்தேன்”
“கண்டுபுடிச்சீங்களா!”
அவள் அதிகம் அலட்டிக் கொள்ளாமல் என் பெயரை சொன்னாள்.
“எப்படி கரெக்ட்டா கெஸ் பண்ணுனீங்க!”
“அதான் திறமை!”
நான் யோசிப்பதை அவள் கண்டுகொண்டாள்.
“ரொம்ப கஷ்டப்படாதீங்க. உங்க பியூன் உங்க பேர சொல்லிட்டாரு”
சொன்னவர், நம்பரை மட்டும் ஏன் கொடுக்கவில்லை என்று மனதினுள் கடிந்துகொண்டேன்.
“என் நேம கெஸ் பண்ணுங்க!”
“ஏதாவது க்ளூ கொடுங்க”
“ஜே ல ஆரம்பிக்கும்”
“ஜாஸ்மின்?” எனக்கு உடனடியாக அந்த பெயர் தான் நினைவிற்கு வந்தது.
“இல்ல”
“ஜெனிபர்?”
“இல்ல!”
ரயில் கோடம்பாக்கத்தை நெருங்கியது. ரயில் மிக துரிதமாக அங்கே வந்துவிட்டதாக உணர்ந்தேன். வழக்கமான அந்த ரயில் பயணம் அன்று மட்டும் வழக்கத்திற்கு மாறாக களிப்பை தந்தது.
“நான் இறங்கணும்”
“நானும் இங்க தான் இறங்கணும் மேடம்!”
இருவரும் கதவருகே வந்து நின்றோம்.
“ரொம்ப சிம்பிளான பெயர் மேனஜர் சார்”
“ஜெஸ்ஸி!”
“நிறைய படம் பார்ப்பீங்க போலயே. அதுவும் இல்ல.”
சில நேரங்களில் மிக எளிமையான விஷயங்கள் தான் மூளைக்கு எட்டாமல் போய்விடுகிறது.
“சரி. இப்போதைக்கு ஜாஸ்மின் ஜெனிபர், ஏன் ஜெஸ்ஸி உங்களுக்கு என்ன புடிக்குதோ வச்சுக்கோங்க”
ரயில் நின்றது. நாங்கள் இருவருமே லேக் வ்யூ சாலை பக்கம் இறங்கினோம். “நான் இப்டியே ஆட்டோல போய்டுவேன்.டேக் கேர்” என்று கிளம்ப யத்தனித்தாள். அடுத்தமுறை அவளை சந்திப்போமா, இல்லை அதற்கும் ஒருவருடம் காத்திருக்க போகிறோமோ!
“அட்வான்ஸ் பர்த்டே விஷேஸ் மேடம்”
“ஏன்!”
“இல்ல அடுத்து உங்கள எப்ப பாப்பேன்னு தெரில! அதான் இப்பவே சொல்லிடுறேன்”
“சுத்தி வளைச்சு நம்பர் கேட்குறீங்க. நம்பர்லாம் தரமுடியாது!”
எனக்கு என்னவோ போல் இருந்தது.
“சரி. நான் கிளம்புறேன். Bye” கத்தரிப்பது போல் சொன்னாள்.
“Bye மேடம்” என்னை அறியாமலேயே என் குரலில் சோகம் தொற்றிக் கொண்டது.

“சாய்ங்காலம் ஆறரை மணிக்கு, நான் கேன்டீன் பக்கத்துல ட்ரெயின் ஏறுவேன்!” சொல்லிவிட்டு அவள் காற்றாய் கடந்து சென்றாள். அவள் சொன்னது எனக்கு புரிய கொஞ்சம் அவகாசம் எடுத்தது. நான் புன்னகை செய்தவாறே தொலைவில் சென்றுகொண்டிருந்த அவளைக் கண்டேன். அவள் கூந்தல் மட்டுமே தெரிந்தது. ஆனாலும் அவளும் புன்னகைக்கிறாள் என்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது.
Leave a comment