மேடம்- சிறுகதை


நான் மேடமை முதல் முதலில் சந்தித்தது சிசிடிவி திரையில் தான். சந்தித்தது என்று சொல்வதை விட பார்த்தது அல்லது எனக்கு மேடமின் அறிமுகம் கிட்டியது என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும். 

அது ஒரு வியாழக்கிழமை. ஒவ்வொரு வியாழக்கிழமையும் குறைந்தது ஒரு வாகனக் கடனாவது கொடுக்க வேண்டும் என்று எங்களுடைய பிராந்திய மேலாளர் உத்தரவிட்டிருந்தார். அனுதினமும் ஏதாவது ஒரு இலக்கு இருந்தது. திங்கட்கிழமை என்றால் வாராக்கடனை வசூலிக்க வேண்டும். செவ்வாய் கிழமை புதிய காப்பீடுகளை இணைக்க வேண்டும். புதன் என்றால் மியூசுவல் ஃபண்ட். இப்படி நீண்டுகொண்டே போன பட்டியலுக்கிடையே தான் என் வாழ்க்கை ஓடியது. 

மணி மாலை ஐந்தாகிவிட்டிருந்தது. என்னிடம் ஒரு வாகனக் கடன் விண்ணப்பம் கூட இல்லை. மறுநாள் காலை பத்துமணிக்கு பிராந்திய மேலாளருடன் காணொளி சந்திப்பு இருந்தது. அவர் பேசுவதை வேறு சகித்துக் கொள்ள வேண்டும். 

“இந்த பேங்க் உனக்கு சமூகத்துல கவுரவத்தை கொடுத்திருக்கு, நல்ல சம்பளத்தை கொடுத்திருக்கு! நீ இந்த பேங்க்க்கு என்ன பண்ணுன! ஒட்டுண்ணி மாதிரி உறிஞ்சிகிட்டு இருக்க!”

இப்படி தான் அவர் எப்போதுமே ஹிந்தியில் திட்டுவார்.  அவர் சொல்வது போல் இந்த வங்கி வேலை பெரிய கவுரவத்தை கொடுத்திருப்பதாக ஒன்றும் தெரியவில்லை. வங்கி ஊழியர் என்றாலே வேலை செய்யாமல், வரும் வாடிக்கையாளர்களை ஏய்த்து கொண்டிருப்பார்கள் என்ற அளவிலேயே சமூகத்தின் பெரும்பாலானோரின் புரிதல் இருக்கிறது. ஆனால் உள்ளே நிலைமை அப்படி இல்லை. பந்தைய குதிரை போல ஓடிக்கேண்டே இருக்க வேண்டும்.  நிர்வாகம் மேலே அமர்ந்து கொண்டு, ‘ஓடு ஓடு’ என்று அடித்துக் கொண்டே இருக்கும்.  இதையெல்லாம் சகித்துக் கொள்ள பழகுபவன் வாழப் பழகுகிறான். நான் கொஞ்சம் கொஞ்சமாக வாழ கற்றுக் கொண்டிருந்தேன். 

இருந்தாலும் மறுநாள் பிராந்திய மேலாளரிடம் என்ன சொல்லப் போகிறோம் என்று பயந்துக்  கொண்டிருந்தேன். 

ஒவ்வொரு முறையும் டார்கட் தவறிப் போகும்போது கிளை மேலாளர்கள் சொல்லும் காரணங்களை தொகுத்தாலே நல்லதொரு கதை புத்தகம் உருவாகிட  வாய்ப்பிருக்கிறது என்று எண்ணியவாறே யதேச்சையாக என் வலது புரத்தில் இருந்த சி.சி.டிவி திரையை கவனித்தேன். ஒரு பெண்மணி ஏ.டி.எம்மோடு சண்டை செய்வது போல் இருந்தது. அதன் திரையை வேகமாக தட்டுவது போல தெரிந்தது. விட்டால் அதை அடித்து உடைத்து விடுவாளோ என்று கூட எண்ணினேன். பெண்களின் உடல்மொழியில் அவர்களின் கோபம் வெளிப்பட்டு போகிறது. 

நான் பியூனை அழைத்தேன். 

“ஈ.பி பில் கட்டப் போயிருக்காரு சார்” என்றார் என்னுடைய உதவி மேலாளர் பெண்மணி.

“ஏ.டி.எம்ல ஒரு மேடம் இருக்காங்க. எதோ இஸ்யூ போல. என்னணு பாருங்களேன்” என்று சொல்ல நினைத்தேன். ஆனால் என் உதவி மேலாளர் பெண்மணியை அனுப்பினால் இல்லாத சண்டையெல்லாம் உருவாகிவிட வாய்ப்பிருக்கிறது. அவர் ஓய்வு பெரும் வயதில் இருந்தார். மனதளவில் முன்கூட்டியே ஓய்வுப் பெற்றிருந்தார். அதனால் பாரபட்சமில்லாமல் எல்லோரிடமும் கூடுதலாக எரிந்து விழுந்தார். 

“என்னங்க என் அக்கவுண்ட்ல ரூபாய் புடிச்சிருக்கீங்க!” என்று யாராவது வயதான வாடிக்கையாளர் கொஞ்சம் கோபமாக கேட்டால், “மினிமம் பேலன்ஸ் இல்லனா அப்டித்தான் சார். ஏன் மினிமம் பேலன்ஸ் வைக்கணும்னு உங்களுக்கு தெரியாதா! இப்ப மினிமம் பேலன்ஸ் ரெண்டாயிரம் வைக்கணும், நீங்க எல்லா பணத்தையும் எடுத்துட்டு ஆயிரத்து ஐநூரு தான் வச்சிருக்கீங்க” என்று அதிக கோபமாக நீளமான பதிலொன்றை அளிப்பார்.

“எனக்கு தெரியவே தெரியாதே! ஆயிரம் தான இருந்துச்சு மினிமம் பேலன்ஸ்”

“சார் ரெண்டாயிரமாக்கி ரெண்டு வருஷம் ஆகுது.  வாட்ஸ்அப்ல இன்டிமேசன் வந்துச்சு பாக்கலையா!”

“என்கிட்ட வாட்ஸ்அப்லாம் இல்லைங்களே!”

“அதுக்கு நான் என்ன பண்றது!  மெசேஜ் கூட தான் அனுப்பி இருப்பாங்க”

இப்படியான நெடிய உரையாடல்கள் கொஞ்சம் கொஞ்சமாக எதை நோக்கி செல்லும் என்பதை நான் அறிவேன். மிகப் பாந்துவமாக பேசி சூழ்நிலையை அழகாக சமாளித்து விட முடியும். ஆனால் ஏனோ என் உதவி மேலாளர் பெண்மணி அதை செய்துவிடவே கூடாது என்பதை தன் வாழ்நாள் கொள்கையாகக் கொண்டிருக்கிறார்.  அவரால் காயப்படுத்தப்பட்ட பெரியவர்கள் நேராக வருவது என் கேபினுக்கு தான். 

“மேனஜர் சார்…”

“வாங்க சார்”

“சார் என் அக்கவுண்ட்ல எப்படி!”

“முதல உட்காருங்க சார்…”

“இருக்கட்டும். எப்டி சார் சொல்லாம சார்ஜ் பிடிப்பீங்க! கேட்டா அந்த அம்மா அப்டி பேசுறாங்க. ஐ வில் கோ டூ பேங்கிங் ஒம்புட்ஸ்மேன்”

“உட்காருங்க பிளீஸ்”

இரண்டுமுறை சொன்னால் தான் அமர்வார்கள். 

“வாட்டர்!” என்றவாறே ஒரு சிறு தண்ணீர் பாட்டிலை அவர்கள் முன்னர் வைப்பேன். அதை குடித்ததும் கொஞ்சம் ஆசுவாசமாகிவிடுவார்கள். அப்படியும் கோபம் குறையாத பெரியவர்களாக இருந்தால், “சார் ஒரு காபி டீ ஏதாவது  சாப்பிடுறீங்களா” என்பேன். சிலர் வேண்டாம் என்று உடனடியாக மறுப்பார்கள். ஆனாலும் காபி டீ பருகுகிறீர்களா என்று கேட்டதே அவர்களின் கோபத்தை தணித்திருக்கும். 

சிலர் சரி என்பார்கள். சிலர் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருப்பார்கள். நான் உடனே பியூனை அழைத்து காபி வாங்கி வர சொல்வேன். 

“ரொம்ப சாப்பிட மாட்டேன். சக்கரை கம்மியா” என்பார்கள். 

“என் வைப்க்கு தெரிஞ்சா அவ்ளோதான்” என்று கூடுதல் தகவல்களும் வெளிவரும். 

கிளையின் பக்கத்திலேயே ஒரு சிறு காபி கடை இருந்தது. சொல்லிக் கொள்ளும் அளவிற்கு காபி நன்றாகவே இருக்கும். ஒரு காபி எத்தகைய சூழலையும் இலகுவாக்கிவிடுகிறது.  காபியுடன் கூடிய உரையாடல் எல்லாவற்றையும் சுபமாக முடித்து வைத்துவிடுகிறது. என் உதவி மேலாளர் சொன்ன அதே விசயத்தை கொஞ்சம் புன்னகையை தூவி சொல்லிவிட்டபின், வந்தவர்கள் புன்னகையோடு திரும்பி போய்விடுவார்கள். 

புதிய பிசினஸ் கொண்டுவருவதை விட எனக்கு இருந்த மிகப்பெரிய பிரச்சனை வாடிக்கையாளர்களிடம் இருந்து புதிய புகார்கள் வராமல் தடுப்பதே.  அதனால் என் உதவி மேலாளரை ஏ.டி.எம்மிற்கு அனுப்புவது என்பது அந்த கோபக்கார மேடம் மூலமாக அடுத்த பிரச்சனையை கொண்டுவந்துவிடுவதற்கான சாத்தியங்களை கொண்டிருந்தது என்பதை அறிந்தேன்.  இரண்டு பெண்கள் ஏ.டி.எம்மின் முன்பு நின்று சண்டை செய்வது போல் ஒரு கணம் கற்பனை செய்து பார்த்தேன். நானே எழுந்து ஏ.டி.எம் நோக்கி நடந்தேன். 

ஏ.டி.எம் வெளியே அலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்த பையனை, கடந்து  ஏ.டி.எம் கதவை நெருங்கிய போது அந்த பெண்மணி வெளியே வந்தாள். நான் யூகித்தது சரிதான்.  அகத்தின் கோபம் முகத்தில் தெரிந்தது.

“மேடம், ஏதாவது இஸ்யூவா!” என்று வினவினேன்.  நிமிர்ந்து பார்த்தாள். நீ யார் என்கிற கேள்வி அந்த பார்வையில் இருந்தது. 

“நான் பேங்க் ஸ்டாப் தான்!”

“நியூ டெபிட் கார்டு. பின் (PIN) செட் பண்ண முடியலை! ஓ.டி.பி. என்டர் பண்ற ஆப்சனே இல்ல!” கோபம் குறையாமல் சொன்னாள். 

அது சற்றே பழைய இயந்திரம். அதனால் அவளின் தடுமாற்றத்தை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. 

“ஷால் வி ட்ரை ஒன்ஸ்?”

அவள் அந்த கார்டை என்னிடம் நீட்டினாள். நாங்கள் ஏ.டி.மினுள் நுழைந்தோம். 

“இது பழைய அக்கவுண்ட். காலேஜ்ல இருக்கும்போது மைலாப்பூர் பிராஞ்சுல ஓபன் பண்ணி கொடுத்தாங்க! சரி மறுபடியும் யூஸ் பன்னலாம்னு போனவாரம் தான் நேர்ல போய் ஆக்டிவேட் பண்ணி கார்ட்லாம் அப்ளை பண்ணினேன்” 

நான் கேட்கமாலேயே இந்த விவரத்தை அவள் சொன்னாள். அந்த சூழல் அவளுக்கு தந்த சங்கடத்தை சமாளிக்க அவள் அதை சொல்லியிருக்கலாம். ‘பழைய கணக்கு இருந்திருக்கவில்லை என்றால், நானெல்லாம் உன் வங்கி பக்கமே வந்திருக்க மாட்டேன்’ என்கிற கூடுதல் தகவலும் அதில் பொதிந்திருந்தது என்பதை உணர்ந்து கொண்டேன்.  ஒருமுறை நிமிர்ந்து பார்த்தேன். என் வயது இருக்கலாம். அல்லது என்னைவிட சிரியவளாகவும் இருக்கலாம்.  நீல நிற சுடிதாரில் அழகாக இருந்தாள். 

“கயல் எழுதி, வில் எழுதி, கார் எழுதி… தீர்த்த முகம் திங்களோ, காணீர்!” பள்ளியில் என் தமிழ் ஐயா அடிக்கடி சொல்லும் வரிகள் நினைவிற்கு வந்து போயின. 

அவளின் அலைப்பேசி ஒலித்துக் கொண்டே இருந்தது. எடுத்தவள், “தேங்க்ஸ். ஏ.டி.எம்ல இருக்கேன். கூப்பிடுறேன்” என்றவாறே அழைப்பை துண்டித்தாள். தேங்க்ஸ் என்று சொன்ன போது அவள் முகத்தில் தோன்றிய புன்னகையை நான் கவனிக்காமல் இல்லை. 

டெபிட் அட்டையை இயந்திரத்தில் வைத்து திரையைத் தொட்டேன். 

‘டிங்’ என்று அவள் அலைபேசி சப்தம் எழுப்பியது.

“ஓ.டி.பி வந்திருக்கும் மேடம்”

சொன்னாள். 

மங்கலான திரையில் வலது ஓரத்தில் ‘என்டர் ஓ.டி.பி’ என்று இருந்த இடத்தை தொட்டேன். அதை கவனித்தவள் “ஓ! முன்ன இந்த ஆப்ஷன் வரலையே”  என்றாள். 

வந்திருக்கும். கவனித்திருக்கமாட்டாள். அதனால் தான் திரையோடு சண்டை செய்திருக்கிறாள். நான் பதில் எதுவும் பேசவில்லை. இது இயல்பாக நிகழ்வது. வங்கி உள்ளே வேலை செய்பவர்களுக்கு மிகச் சாதாரணமாக தோன்றும் வங்கி சார்ந்த விஷயங்கள் வெளியாட்களுக்கு குழப்பத்தை தரலாம் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். நான் வங்கி வேலைக்கு வருவதற்கு முன்புவரை வங்கி செல்லான் பூர்த்தி செய்வது எப்படி என்று தெரியாது. கல்லூரி காலத்தில், ஓரிரு முறை வங்கிக்கு சென்ற போது கூட, தயங்கி தயங்கி எதையோ பூர்த்தி செய்து வங்கி காசாளரிடம் திட்டு வாங்கி மீண்டும் அடித்து திருத்தி சமாளித்து வந்திருக்கிறேன். அதனால் அவளின் நிலையை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. 

துரிதமாக, ஒ.டி.பி.யை பதிவிட்டுவிட்டு, “மேடம் இப்ப நீங்க பின் செட் பண்ணிக்கலாம்” என்றவாறே இயந்திரத்திடமிருந்து விலகினேன். 

“தாங்க்ஸ்” என்றாள் சற்றுமுன் அலைபேசியில் யாருக்கோ உதிர்த்த புன்னகையை என்னை நோக்கி உதிர்த்தவாறு. 

கோபம் நீங்கிய அந்த முகம் மீண்டும் என் தமிழ் ஐயா சொன்னதை எனக்கு நினைவுபடுத்தியது. 

“கண்டார்க்கு, அலவ நோய் செய்யும் அணங்கு இதுவோ, காணீர்!

அணங்கு இதுவோ, காணீர்” 

நான் ஏ.டி.எம் அறையை விட்டு மனதினுள் புன்னகைத்தவாறே வெளியே வந்தேன். 

“அப்பறம் என்னணா ஆச்சு!”  தங்கை ஆர்வத்தை அடக்கமுடியாமல் கேட்டாள். நான் அம்மா தங்கை மூவரும் பால்கனியில் அமர்ந்திருந்தோம். நான் அமைதியாக எதையோ யோசித்தேன்.  

“ஐயோ சாமி, கல்யாணம் ஆவாத பொண்ணா இருந்தா பேசி முடிச்சிடலாம்”

“ஏன்மா ஒருத்தங்கள பார்த்ததுமே கல்யாணம் ஆச்சா! என்ன மாதிரி உங்களுக்கும்  செவ்வாய் தோஷம் இருக்கானா கேட்க முடியும்!”

“நீ சும்மா இருடி!” என்று தங்கையை அடக்கினாள் அம்மா, “நீ சொல்லு சாமி. நெத்தில பொட்டு வச்சிருந்தாளா, கழுத்துல தாலி இருந்துச்சா” 

நான் எதிர்கொண்ட எந்த பெண்ணை பற்றி பேசினாலும் அம்மா இதையே சொல்லுவாள். அவளை பொறுத்த வரையில் நான் வாழ்வில் சந்திக்கும் பெண்கள் எல்லாமே வரன்கள் தான். 

“அம்மா அது ஸ்டாக்கிங். அப்டிலாம் யாரையும் உத்து பார்த்தா உன் புள்ளைய தூக்கி உள்ள வச்சிருவாங்க ” மீண்டும் தங்கை தான். 

“நீங்க ரெண்டு பேரும் பேசி ஒரு முடிவுக்கு வாங்க. அப்பறம் நான் பேசுறேன்” என்று பொய் கோபத்தை வெளிப்படுத்தினேன்.

“சரி சரி. நீ சொல்லு” என்று அம்மாவும் தங்கையும் ஒருசேர சொன்னார்கள். 

“மனசு சந்தோசமா இருந்துச்சு.  ஒரு காபி குடிச்சா நல்லா இருக்கும்னு தோணுச்சு! பக்கத்துல இருக்க கடைக்கு போனேன்”

“காபி ரொம்ப குடிக்காத. பித்தம்னு சொல்லிருக்கேன்ல!” அம்மா இடைமறித்தாள்.

“அம்மா, இப்ப அவன் சொல்லனுமா வேணாமா!” 

அம்மா வாயை மூடிக் கொண்டாள்.

“காபி கடைல,  ரெண்டு ரவுண்ட் டேபிள் இருக்கும்.  நின்னுக்கிட்டே தான் குடிக்கணும்.  பக்கத்து டேபிள்ல ரெண்டு பேரு இருந்தாங்க. சாயங்காலம் மீட்டிங்ல என்ன சொல்றதுன்னு யோசிக்கிட்டே காபிய குடிக்க ஆரமிச்சேன்” 

ஒரு குரல் கேட்டது. “காத்துதான்கா போயிருக்கும்! நான் செக் பண்ணிட்டு வரேன்”

திரும்பிய திசையில் அவள் வந்துகொண்டிருந்தாள். 

கயல் எழுதி, வில் எழுதி, கார் எழுதி… 

ஏ.டி.எம் வாசலில் நின்று போன் பேசிக்கொண்டிருந்தவன் அவளுடைய தம்பி என்பதை புரிந்துக் கொண்டேன். அவன் வண்டியை நகர்த்திக் கொண்டே சென்றதை கவனித்தேன். காபியை வேகமாக குடித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட சொல்லி மூளை சொன்னது. மனது கேட்கவில்லை. காபியை நிதானமாக குடித்தேன். ஒரு காபியை வாங்கியவள், நேரடியாக என் மேஜை நோக்கி வந்தாள். என்னை அடையாளம் கண்டுகொண்டு, சிக்கனமாக புன்னகை செய்தவள்,  

“தாங்க்ஸ் பார் யுவர் ஹெல்ப்” என்றாள்.

“பரவாலைங்க. இட்ஸ் மை ஜாப்” என்றேன்.

“என்னவா இருக்கீங்க!” அவள் பேச வேண்டுமே என்பதற்காக கேட்பது புரிந்தது. 

“மேனஜர்” என்றேன் 

“ஓ! மேனஜர்லாம் வயசானவங்க தான இருப்பாங்க?”

“அப்டிலாம் இல்லைங்க. இப்பலாம் மூணு வருஷம் வேலை பார்த்தாலே பிரான்ச் மேனஜர் ஆகிடலாம்”

“எங்க அப்பாவும் சொல்லிட்டே இருப்பாரு. ஏதாவது பேங்க் எக்ஸாம் எழுத சொல்லி!” அவள் பேசிக்கொண்டிருக்கும் போதே அவளின் அலைப்பேசி மீண்டும் அடிக்கத்தொடங்கியது. 

“ஒன் மினிட்” 

அவளின் தம்பி தாமதாமாக வரவேண்டும் என்று மனம் ஏனோ ஏங்கியது. 

“தாங்க்ஸ்டி. அப்பறம் கூப்புடுறேன்” என்றாள். அடுத்தது அவளுக்கு அழைப்பு  வந்துக்கொண்டே இருந்தது. அவள் அப்பறம் பேசிக்கொள்ளலாம் என்பவள் போல் தன் போனை ஹாண்ட்பேகினுள் வைத்தாள்.  

நான் அவளைப்  பார்ததுக் கேட்டேன், 

“மேடம்! உங்களுக்கு இன்னைக்கு பர்த்டேவா!” 

அது ஒரு யூகம் தான். ஆனால் அந்த யூகம் சரி என்பது அவளுடைய தாராளமான புன்னகையில் தெரிந்தது. கொஞ்சம் வெட்கம் கூட கடந்து போனது.  

“ஹாப்பி பர்த்டே மேடம்” என்றேன் 

சற்றே ஒரு நொடி அமைதியானவள், “தாங்க் யூ மேனஜர் சார்” என்றாள்.

எப்போதும் குடிக்கும் அந்த காபியின் சுவை வழக்கத்தை விட நன்றாக இருந்தது. அதற்கு உடன் நின்ற அவள் தான் காரணம் என்றது மனது. இனி எப்போதுமே அந்த காபி அதிக சுவையாக இருந்துவிடாதா என்கிற ஆசை எழுந்த போது அவள் தம்பி திரும்பி வந்திருந்தான்.  புன்னகையோடு அவள் அவனோடு வண்டியில் ஏறிச் சென்றாள். 

“அவ பேரயாவது கேட்டியா!” தங்கை கேட்டபோது தான் நான் அவள் பெயரை கேட்கவில்லை, அவளும் என் பெயரை கேட்கவில்லை என்பதை உணர்ந்தேன். அவளுடைய டெபிட் அட்டையில் அவள் பெயர் பொறிக்கப் பட்டிருக்கும். அல்லது ஏ.டி.எம் திரையில் அவள் பெயர் வந்திருக்கும். ஆனால் நான் ஏதோ ஒரு சங்கோஜத்தில் அது எதையுமே கவனிக்கவில்லை. 

“அம்மா இவன் இப்டி இருந்தா இந்த ஜென்மம் புல்லா பொண்ணு தேடிட்டு தான் இருக்கணும்” என்றவாறே தங்கை உறங்கச் சென்றாள். கொஞ்சநேரத்தில் அம்மாவும் உள்ளே சென்றிருந்தாள். நான் மட்டும் பால்கனியில் அமர்ந்தவாறே முழு நிலாவை பார்த்து யோசித்துக் கொண்டிருந்தேன். 

அவளை மீண்டும் சந்திக்க முடியுமா! இந்த இரவில் அவளும் என்னைப் பற்றி யோசித்துக் கொண்டிருப்பாளா! பிறந்த நாளில் அவள் ஏன் என்னைப் பற்றி யோசிக்க வேண்டும்! வேறு எந்த நாளிலும் தான் அவள் ஏன் என்னைப் பற்றி யோசிக்க வேண்டும்! நான் வெறும் வழிப்போக்கன் தான்… 

சரி, அவள் பெயர் என்னவாகதான் இருக்கும்! மனதில் ஏதேதோ பெயர்களை யோசித்துப் பார்த்தேன். பிடிபடவில்லை. எல்லா பெயர்களும் பொருந்திப் போயின. பொருந்தாமலும் தோன்றின. 

கண்களை மூடி யோசித்தேன். 

‘மேடம்’ என்று என் வாய் என்னை அறியாமலேயே சொல்லிற்று. செம்மை சேர் நாமம் தன்னை மனதினுள் தெரியக் கண்டான்…  

மேடம், மேடம், மேடம்….

“மேடம்ங்கிற பேறே நல்லாதானே இருக்கு!” என்று என்னை நானே மனதிற்குள் கேட்டுக் கொண்டேன். “எஸ்! மேனேஜர் சார்!” என்று அவள் சொல்வது போல் இருந்தது. 

விடிந்தால் பிராந்திய மேலாளரை எளிதாக எதிர்கொள்ள முடியும் என்கிற தைரியத்தோடு நான் உறங்கச் சென்றேன். 



Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.