குறுங்கதை-3 -வீடு


வீடு

ராணியம்மாவிற்கு கால் தரையில் இல்லை. குடிகார கணவனை வைத்துக் கொண்டு மூன்று பிள்ளைகளை கரை சேர்த்தபோது கிடைக்காத  சந்தோசம், இப்போது ஐம்பது வயதில் எட்டிப்பார்க்கிறது. பாத்திரங்களை வேகவேகமாக கழுவினாள். பிரியாணி செய்த பாத்திரம். எப்போது பிரியாணி செய்தாலும் அவளுக்கு ஒரு டிபன் அந்த வீட்டு எஜமானி கொடுத்துவிடுவாள். அதுவும் அவளாகவே அல்ல. ராணியம்மாள் பாத்திரத்தை கழுவி முடித்துவிட்டு, “என்னமா இன்னைக்கு பிரியாணியா!” என்று கேட்பாள. அந்த கேள்விக்காகவே  காத்திருந்தவளாய் எஜமான பெண்மணி குஸ்காவை மட்டும் கொடுப்பாள். ராணியம்மாவிற்கு பிரியாணி மீது  தனி காதல் உண்டு. ஆனாலும் தான் ஒருத்திக்காக செலவு செய்வதில் அவளுக்கு விருப்பமில்லை. அதனால் எஜமானி கொடுக்கும் கறியில்லா  பிரியாணியே போதும் என்ற அளவில் வாழ்க்கையை ஓட்டினாள். 

பாத்திரங்களை கவிழ்த்து வெளியேற ஆயத்தமானவளை எஜமானி ஆச்சர்யமாக பார்த்தாள்.   “என்னமா இன்னைக்கு பிரியாணியா!”  என்கிற வழக்கமான கேள்வியை அவள் கேட்காமல் போனது தான் காரணம். 

எஜமானி அவளாகவே பிரியாணி டிபனை அவளிடம் நீட்டினாள். அவள் கேட்கவில்லை என்பதற்காகவே அவள் கண்முன்னே டிபனை திறந்து, இரண்டு துண்டு கறியை உள்ளே வைத்து மீண்டும் ராணியம்மாவிடம் கொடுத்தாள்.

“வேண்டாங்கமா. விரதத்துல இருக்கேன்” என்றாள் ராணியம்மா. எஜமானியின் முகத்தில் ஆச்சர்யம்.

“கவர்ன்மென்டல வீடு கொடுக்க போறங்கமா! வீடு கிடைக்குற வரைக்கும் கவுச்ச சாப்புட மாட்டேன்னு வக்ரகாளிக்கு வேண்டியிருக்கேன். நாளைக்கு கொடுக்குறாங்க. எல்லா வீட்லயும்  நாளைக்கு லீவ் சொல்லிட்டேன். உங்க வீடு தான லாஸ்ட்டு, முடிஞ்சா வரேன். இல்லனா பாத்திரத்தை போட்டு வைங்க. நாளான்னைக்கு வரேன்” 

அது என்ன இலவச வீடு என்று தெரிந்து கொள்வதில் தான் எஜமானுக்கு ஆர்வம். 

“யார்ட்டையும் சொல்லலமா. என் புள்ளைங்களுக்கு கூட இன்னும் தெரியாது. உங்களாண்ட தான் முதல சொல்றேன்! வீடு இல்லாதவங்களுக்கு ஹவுசிங் போர்டுல வீடு கொடுக்குறாங்க. ஒரு வருசமா ட்ரை பண்றேன். எனக்கு வீட்டுக்காரர் இல்லல! பாத்துக்க யாரும் இல்லனு வந்த சார் ரிப்போர்ட் எழுதிகிறேன்னு சொன்னாரு. அவருக்கு தனியா அஞ்சாயிரம் கொடுத்தேன்மா.  நாளைக்கு கலெக்டர் கைல லெட்டர் கொடுக்குறாங்க” 

“உங்களுக்கு அதிர்ஷ்டம் தான் போங்க” என்றாள் எஜமானி. அவள் சொன்னதற்கு பின்னே இருக்கும் வயித்தெரிச்சலை ராணியம்மா உணராமல் இல்லை.  இவ்வளவு பெரிய அடுக்குமாடியில் இருப்பவள் தனக்கு கிடைக்கப்போகும் ஒரு அறை வீட்டை எண்ணி காய்ந்து போகிறாள்.. ஆனால் ராணியம்மா அதை வெளிகாட்டிக் கொள்ளாமல் கேட்டாள். 

“அப்புறம் அம்மா ஒரு இருநூறு ரூபாய் அட்வான்சா கொடுங்களேன். கை செலவுக்கு வேணும்” 

இருநூறை நீட்டிய எஜமானி, “பாத்துக்கோங்க மா. அடிக்கடி அட்வான்ஸ் கேட்குறீங்க, லீவ் வேற நிறைய எடுக்குறீங்க. எனக்கும் கஷ்டமா இருக்கு” என்றாள். ராணியம்மா எதுவும் பேசவில்லை. அவளுக்கு வீடு கிடைக்க போகிற குதூகலம். 

மறுநாள் கூட்டத்தில் அவள் பெயரை அழைக்கவில்லை. அவளுக்கு கால் தரையில் பட்டது. வீடு கிடைக்கப்பெற்ற சந்தோஷமான முகங்கள் பல கடந்து போயின. தன் குரல் மேலெழும்பாது என்று அறிந்தவள் ஆடிட்டோரியத்தை விட்டு வெளியேறினாள்

கண்டும்காணாமல் போன பியூனை வழிமறித்து என்னவென்று கேட்டாள். 

“உன் அப்ளிகேசன் ரிஜக்ட் ஆச்சுமா. உன் ஆண்டு வருமானம் ஆறு லட்சத்துக்கு மேலனு ரிப்போர்ட்ல இருக்கு!” 

“ஐயோ இது அடுக்குமா! என் வாழ்க்கைல அவ்ளோ பணத்தை பார்த்ததே இல்ல.  எங்க வீட்டாண்ட வந்த சார் எங்க!”

“அவருலாம் மாறி போய்ட்டாரு”

“ஏதாவது பாத்து பண்ணுப்பா” என்று அவனிடம் இருநூறு நோட்டை நீட்டினாள்.

“ஐய! ஏன் வேலைக்கே உலை வச்சிருவ போல, கிளம்பு” என்று அவன் நகர்ந்தான். 

அந்த இருநூறு ரூபாயை உற்றுப் பார்த்தவள், 

“வயித்தெரிச்ச புடிச்ச முண்ட” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள். வயிறு காந்தத் தொங்கியது. சாலைக்கு வந்தவளின் கண்ணில் பட்டது பிரியாணி கடை.  சிக்கன் பிரியாணியை வாங்கி நிதானமாக தின்றாள்.  அவள் கணவன் பல வருடங்களுக்கு முன்பு முதன்முதலில் வாங்கித்தந்த பிரியாணி நினைவிற்கு வந்தது. ஒரு பீடாவையும் வாங்கி போட்டவள், கடை வாசலில் நின்றவாறே எஜமானிக்கு போன் செய்தாள். 

“அம்மா எனக்கு வீடு கிடைச்சிருச்சு. நீங்க சொன்னது கரெக்ட் தான். வீடு ரொம்ப தூரம். தினமும் வேலைக்கு வரமுடியாதுமா. நீங்க வேற ஆள பாத்துக்கோங்க” என்று போனை துண்டித்தாள். 

வயிறும் மனமும் நிறைந்திருந்தது. 

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.