தலை குனிந்து நடந்தாலும் கண் கூசச் செய்யும் வெயில். தெருவில் யாருமில்லை. ஞாயிறு மதியம் என்பதால் வீட்டிற்குள் முடங்கிய உலகம். எங்கிருந்தோ ஆங்கில இசைப் பாடல் காதில் கேட்கிறது.
Into this house, we’re born
Into this world, we’re thrown
வியர்வை வழிகிறது. வெயில் சோர்வை தருவதால் அடுத்த அடி எடுத்து வைக்க கடினமாக இருக்கிறது. இன்னும் கொஞ்ச தூரத்தில் என் வீடு. நடக்கிறேன்.
தொலைவில் நாய்கள் குரைத்துக் கொண்டே இருக்கின்றன. நிமிர்ந்து பார்க்கிறேன். டிரான்ஸபார்மர் தெரிகிறது. அங்கே நிறைய நாய்கள் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன. நெருங்கி வரும்போதே கவனிக்கிறேன். நாய்களுக்குள் சண்டையில்லை. அவை பயத்தில் யாரையோ பார்த்து குரைக்கின்றன. நானும் பார்க்கிறேன். டிரான்ஸபர்மர் கீழே யாரோ சம்மனமிட்டு அமர்ந்திருக்கிறார்கள். நாய்கள் என்னை நிமிர்ந்து பார்க்கின்றன. என்னை நோக்கி ஓடி வருகின்றன. எனக்கு ஒரு நொடி பயம். அத்தனை நாய்கள் கடித்தால் நான் பிழைக்க மாட்டேன். நான் கற்களை பார்வையால் தேடுகிறேன். தெரு துடைக்கப்பட்டு சுத்தமாக இருக்கிறது.
மீண்டும் நாயைப் பார்க்கிறேன். முன்னே வந்த அந்த கருப்பு நாயின் கண்களில் கோபமில்லை. அது என்னை பாசமாக பார்க்கிறது. நாய்களுக்கு என் உருவம் பரிச்சயமானதாக இருக்கிறது. ஏழெட்டு நாய்கள். அவைகளுக்கு அங்கே நான் தேவைப்படுகிறேன். என் அருகே வந்து என்னை சுற்றி நின்றுக் கொள்கின்றன.
கருப்பு நாய் என்னைப் பார்க்கிறது. மீண்டும் திரும்பி அவனைப் பார்க்கிறது. நானும் அவனைப் பார்க்கிறேன். பெரிய உருவம். உடலெல்லாம் இரும்பு கவசம். தலையிலும் கவசம். கையில் பெரிய வாள். தரையில் அந்த வாளை குத்தி குத்தி எடுக்கிறான். வாளின் கூர்மை தார் சாலைக்கு பொட்டு வைக்கிறது. அவன் முகத்தைப் பார்க்கிறேன். ஏராளமான தழும்புகள். பெரிய மீசை.
There’s a killer on the road
His brain is squirmin’ like a toad
சன்னமாக பாடல் இன்னுமே கேட்கிறது. அவன் தலை திருப்பி என்னைப்பார்க்கிறான். அவனுக்கு ஒரே ஒரு கண் மட்டும் இருக்கிறது. எனக்கு உடல் நடுங்குகிறது.
நான் அவனை எப்படி கடந்து போகப்போகிறேன்!

எனக்கு நடுக்கம் அதிகமாகிறது. அதை கண்டு கொண்ட அவன் என்னை பார்த்து புன்னகை செய்கிறான்.
அவன் புன்னகை நாய்களுக்கு தைரியத்தை தந்திருக்க வேண்டும். அவை குரைப்பதை நிறுத்திவிடுகின்றன. எனக்கும் தைரியம் வர நான் நடக்கத் தொடங்குகிறேன்.
என்னைப் பார்த்துக் கொண்டே இருக்கிறான். நானும் பார்க்கிறேன். அவன் இந்த ஊர் ஆள் இல்லை. இவ்வளவு வெயிலில் ஒரு போர் வீரன் போல் கவசம் அணிந்திருக்க வேண்டிய அவசியம் என்ன! யார் இவன்.
எனக்கு பயத்தைவிட ஆர்வம் அதிகமாகிறது,
அவன் அருகே சென்று “யார் நீ!” என்கிறேன்.
“சாமுராய்” என்கிறான்.
“எங்கிருந்து வருகிறாய்”
“வெகு தொலைவிலிருந்து?”
“உனக்கு எப்படி தமிழ் தெரியும்?”
“தமிழா! என்ன அது” என்று கேட்கிறான்.
“நீ பேசுகிறாயே! I mean the language!”
“I Don’t know” என்கிறான்.
“ஓ! இங்கிலிஷும் தெரியுமா?” என்கிறேன்.
“இங்கிலீஷா! அப்படி என்றால்?” என்கிறான்.
நான் மேற்கொண்டு என்ன பேசுவது என்று மனதில் யோசிக்கிறேன்.
“என்ன வேண்டுமென்றாலும் பேசு!” என்கிறான்.
‘ஐயோ இவனுக்கு மனதை படிக்கவும் தெரிகிறது’ நான் நினைத்துக் கொள்கிறேன்.
“காலங்களை கடந்து வந்தவனுக்கு எல்லாமும் தெரியும்” என்கிறான்
“எதற்கு இங்கு வந்திருக்கிறாய்?” நான் கேட்கிறேன்.
“வரம் தர!”
“யாருக்கு!”
“யார் என்னை முதலில் கண்டுகொள்கிறார்களோ! அவர்களுக்கு!” என்றவாறே என்னைப் பார்த்து புன்னகை செய்கிறான்.
“எனக்கு நிறைய பணம் வேண்டும்!” என்கிறேன். அவனை சோதித்துப் பார்க்கவே வரம் கேட்கிறேன்.
“எவ்வளவு பணம்!”
“என் வீடு முழுக்க”
அவன் சிரிக்கிறான். என் அலைப்பேசி ஒலிக்கிறது. என் மனைவியின் அழைப்பு.
எப்பொழுதும் போல அவள் ‘எங்க இருக்க…’ என்று கேட்கப்போகிறாள் என்று எண்ணியவாறே போனை காதில் வைக்கிறேன்.
“இங்க…” அவள் குரலில் பதட்டம் இருக்கிறது.
“இங்க திடீர்னு வீடு முழுக்க பணமா இருக்குடா. சீலிங்ல இருந்து கொட்டிக்கிட்டே இருக்கு…” என்கிறாள்.
நான் அவனை ஆச்சர்யமாகப் பார்க்கிறேன்.. அவன் மீண்டும் புன்னகை செய்கிறான்.
நான் என் மனைவியின் அழைப்பை துண்டிக்கிறேன்.
“இப்போது நம்புகிறாயா!” என்கிறான். நான் எதுவும் பேசாமல் அவன் அருகே செல்கிறேன். தன் பக்கத்தில் அமரும்படி செய்கை செய்கிறான். நான் அமர்கிறேன். அந்த நாய்கள் எங்களையே பார்த்துக் கொண்டிருக்கின்றன.
“வீடு முழுக்க பணம் போதுமா! இல்லை, இந்த வீதி முழுக்க வேண்டுமா!”
நான் அமைதியாகப் பார்க்கிறேன்.
“எனக்கு மன நிம்மதி வேண்டும்!” என்கிறேன்
“ஏன் நீ நிம்மதியாக இல்லையா?”
“தெரியவில்லை. எல்லாமும் இருக்கிறது. ஆனால் ஏதோ ஒன்று இல்லை” என்கிறேன்.
“என்ன இல்லை?”
“சொல்லத் தெரியவில்லை!”
அவன் அமைதியாக இருக்கிறான்.
“நீ எப்படி இங்கு வந்தாய்!” வினவுகிறேன்.
“மெய்ஜி படையிடம் தோற்றோம். தப்பித்தோம். அன்றிலிருந்து ஓடிக்கொண்டே இருக்கிறேன்” என்கிறான். எனக்கு அவன் சொல்வது புரியவில்லை. புரிந்து கொள்ள முயன்று தோற்கிறேன்.
அதை உணர்ந்தவனாய், “ஏன் எல்லாவற்றையும் புரிந்து கொள்ள, எல்லாவற்றிற்கும் அர்த்தம் கற்பிக்க முயல்கிறாய்! அவசியமில்லை. அப்படியே விட்டுவிடு. எல்லாம் அதன் போக்கில் போகட்டும்” என்கிறான்.
இப்போது ஏதோ புரியத் தொடங்குகிறது.
“அந்த கிழவன் செத்துக் கொண்டிருந்தான். மெய்ஜி தளபதியிடம் சண்டையிட்டு கிழவனைக் காப்பாற்றினேன். கிழவன் என்னை பார்த்து கைக்கூப்பினான். நான் தளபதியை துரத்திக் கொண்டு போனேன். அவனை கொன்றேன். அவன் மனைவிகளை கொன்றேன். குழந்தைகளை கொன்றேன். திரும்பி வரும் போது ‘என்னை காப்பாற்றியதற்கு நன்றி’ என்றான் கிழவன்”
இப்போது அவன் சொல்வது முழுவதுமாக புரிகிறது. மனம் லேசாகி வருவதை உனர்கிறேன்.
“வரம் தருவதாக சொன்னாயே!” நானே கேட்கிறேன்.
“கேள்”
“உன் வாளைக் கொடு! உன் நினைவாக வைத்துக் கொள்கிறேன்”
கொடுக்கிறான். அதை தூக்க முடியவில்லை. அவ்வளவு கனம். கீழே போட்டுவிடுகிறேன். சப்தமாக சிரிக்கிறான். திடிரென்று வானம் இருட்டத் தொடங்குகிறது. நாய்கள் வானத்தை பார்த்து ஊளையிடுகின்றன.
“கணம் என்பது மனம் சார்ந்தது. ம்ம்.. வாளை எடு” என்கிறான்.
வாளை எடுக்கிறேன். லகுவாக கைக்கு வருகிறது. எழுந்து நின்று வாளை தலைக்கு மேல் சுழற்றுகிறேன்.
“நான் சொன்னது சரிதானே!” என்கிறான்.
அதை ஆமோதிக்கும் வகையில் சிரிக்கிறேன். அவனும் என்னோடு சேர்ந்து சிரிக்கிறான். இருவரின் சிரிப்பொலி நாய்களின் சப்தத்தை மிஞ்சுகிறது.
Riders on the storm
Riders on the storm
Into this house, we’re born
Into this world, we’re thrown
“ஹ்ம்ம். ஆகட்டும்” என்கிறான்.
நான் ஒரு கனம் தயங்குகிறேன்.
“கிழவனை காப்பாற்றினேன். குழந்தையை கொன்றேன். எனக்கு இடப்பட்ட வேலையை நான் சரியாக செய்தேன். அவனவன் வேலையை அவன் தானே செய்யவேண்டும்!”
நான் “ஆம்” என்றவாறே வாளை சுழற்றுகிறேன். அவன் இரு கைகளையும் கூப்பி ‘அரிகாட்டோ’ என்கிறான்.
அவனுடைய பெரிய உடல் சரிகிறது. அவன் தலை கருப்பு நாயின் கால் அருகே சென்று விழுகிறது.
அந்த நாயின் கண்களில் இப்போது பாசம் இல்லை.
“யார் நீ?” என்கிறது நாய்.
“சாமுராய்” என்கிறேன் நான்.
எட்டு நாய்களும் ஒரே நேரத்தில் என் மீது பாய்கின்றன.
**