புத்தகப் பரிந்துரை எனும் மாயை


புத்தகக் காட்சியின் போது புத்தக பட்டியல்களும் பரிந்துரைகளும் தவறாமல் வெளியாவது தவிர்க்க முடியாத சம்ரதாயமாகிவிட்டது. சமூக வலைத்தளங்களின் ஆதிக்கத்திற்கு பிறகு வருடாவருடம் பட்டியல்களின் எண்ணிக்கையும் ‘நான் வாங்க விரும்பும் புத்தகங்கள்’ அல்லது ‘கவனிக்க வேண்டிய புத்தகங்கள்’ போன்ற பட்டியல்களை வெளியிடும் எழுத்தாளர்கள்-விமர்சகர்கள்-அதிதீவிர வாசகர்களின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே போகிறது. அவர்கள் அந்த புத்தகங்களை வாங்குகிறீர்களா அல்லது வாசித்துவிட்டுதான் அடிக்கோடிட்டு காண்பிக்கிறார்களா என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

பலதரப்பட்ட புத்தகங்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவது தான் பட்டியல்களின் நோக்கம் என்றால் பிரச்சனை இல்லை. ஆனால் அதுமட்டும் தான் நோக்கமா என்றால் ‘இல்லை’ என்று உறுதியாக சொல்ல முடியும்.

இங்கே வெளியிடப்படும் எல்லாப் பட்டியல்களிலும் சிலபல பொதுத்தன்மைகள் இருப்பதை கவனிக்க முடியும். பலர் வெளியிடும் பட்டியல்களையும் ஒப்பிட்டு பார்த்தால் அதில் பெரும்பாலான புத்தகங்கள் ஒன்றாகவே இருக்கும். இது எப்படி சாத்தியமாகிறது! உதாரணமாக பத்து புத்தகங்கள் கொண்ட பரிந்துரையில் ஆறிலிருந்து ஏழு புத்தகங்கள் எல்லா பட்டியல்களிலும் இடம்பெறும். அப்படியெனில் அவை மட்டும் தான் நல்ல புத்தகங்களா? கடந்த ஆண்டு வெளியான சிறந்த புத்தகங்கள் என்றெல்லாம் பட்டியலிடுபவர்கள் உண்மையில் எத்தனை புத்தகத்தை வாசித்துவிட்டு அந்த பட்டியலை தயார் செய்கிறார்கள்? கவனிக்க வேண்டிய புத்தகங்கள் எனில் எப்படி குறிப்பிட்ட புத்தகங்கள் மட்டுமே அவர்களின் கவனத்திற்கு வருகிறது?

இதுபோன்ற பட்டியல்களை வெளியிடும் எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள்/ விமர்சகர்கள் அனைவரும் ஏதாவது ஒரு குறிப்பிட்ட பள்ளியை (School of thought) பின்பற்றுபவர்களாக இருப்பார்கள். அல்லது என் நண்பன், நண்பனின் நண்பன் எனக்கு நண்பன் என்ற அளவில் ஒரு mutual favour ஆக மாறிமாறி பட்டியல்களை நிறைத்துக் கொள்கிறார்கள். இங்கே படைப்பை விட படைப்பாளி முக்கியமாகிவிடுகிறான். அவன் என்ன எழுதினாலும், எப்படி எழுதினாலும் பிரச்சனை இல்லை, எனக்கு தெரிந்தவன் என்ற முறையில் அவன் பெயரை என் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்கிற கட்டாயம் உருவாகிறது.

இன்றைய இணைய சூழலில் எழுத்து என்பது ‘கம்பல்சன்’ ஆகிக் கொண்டே வருகிறது. நான் கவனிக்கப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்கிற கம்பல்சனுக்கு எழுத்தாளன் அடிமையாகிவிடும் போது, அவனுக்கு இது போன்ற mutual favour-கள் தேவைப்படுகிறது.

அடுத்து, பொதுவாகவே நம் சமூகத்தில் இருக்கும் ‘Collective Unconscious’ மனநிலை. ஏதோ ஒரு விஷயம் காரணமே இன்றி கொண்டாடப்படுவதற்கு காரணம் இதுதான். பிள்ளையார் சிலை பால் குடித்தது நான் பார்த்தேன் என்பது போல நான் படித்தேன் அது நல்ல புத்தகம் என்று பல பட்டியல்கள் இங்கே உண்டு. கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் இது போல பெரும் சப்தத்தை ஏற்படுத்தி காணாமல் போன பல படைப்புகளை தனியாகவே பட்டியலிட முடியும் என்பதே முரண்.

இதை எல்லாம் பற்றி அலட்டிக் கொள்ள வேண்டுமா என்றால், ஒரு வாசகனாக ‘ஆம்’ என்று மீண்டும் மீண்டும் சொல்வேன். படைப்பு, வாசிப்பு இரண்டுமே சுதந்திரமான அனுபவம். ஒரு எழுத்தாளனை அல்லது ஒரு பள்ளியை பின்பற்றி அவர்கள் சொல்வதையே வாசித்து அவர்களைப் போலவே எழுதி தன்னையும் ஒரு தீவிர இலக்கியவாதியாக, பார்போற்றும் படைப்பாளியாக நிலை நிறுத்திக் கொள்ள போராடும் ‘கம்பல்சன்’ எழுத்தாளனுக்கு இருக்கலாம். வாசகனுக்கு ஏன் இருக்க வேண்டும்?

அப்படியெனில் பட்டியல்களே தவறா என்றால் ‘இல்லை’. பட்டியல்களை ஒரேடியாக ஒதுக்கிவிட வேண்டிய அவசியமில்லை. ஆனால் அவற்றை முற்றிலுமாக மனப்பாடம் செய்து வாசிக்க அது பள்ளிக்கூட சிலபசும் அல்ல. ஒரு ஆரம்ப கால வாசகனுக்கு பட்டியல் என்பது நல்லதொரு தொடக்கப்புள்ளியாக இருக்கும். அங்கிருந்து நாம் எதை கண்டடைகிறோம் என்பதே முக்கியம்.

பட்டியல்களை கடந்து நல்ல புத்தகங்களை ஒரு வாசகன் எப்படி தேடி கண்டடைவது என்று கேட்டால் சக வாசகனாக நான் இரண்டு உத்திகளை சொல்கிறேன்.

ஒன்று ‘genre’ ரீடிங். ஒரு குறிப்பிட்ட வகை புத்தகத்தை படிக்க தொடங்கியபின் அதே வகைமையை தேடிச் செல்வது. காதல் என்றால், புத்தம் வீடும் காதல் தான், கடல் புறத்திலும் காதல் உண்டு, கன்னியிலும் உண்டு, கறிச்சோரிலும் உண்டு. மாய யதார்த்தம், War Novel என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதோ ஒரு குறிப்பிட்ட வகையை தேர்ந்தெடுத்து அவற்றை தேடி வாசிப்பது.

இன்னொன்று ஒரு புத்தக கடைக்கோ, அல்லது புத்தக காட்சியின் அரங்கிற்கோ, இணைய தளத்திற்கோ சென்று எந்த முன்முடிவுகளுமின்றி புத்தகங்களை வாங்கி படிப்பது. நல்ல புத்தகமெனில் அது நம் நினைவில் தங்கும். நல்ல படைப்பாளியை நமக்கு அறிமுகம் செய்யும். இல்லையேல் அது ஒரு கெட்ட கனவு, அவ்வளவே.

சுதந்திரமான வாசிப்பனுபவம் என்பது நாம் வாசிக்கும் புத்தகத்திற்கு நம்மை நாமே ஒப்புக் கொடுப்பது. அப்படி செய்யும் போது அந்த புத்தகமே நம்மை வேறொரு புத்தகத்தை நோக்கி இட்டுச் செல்லும். அத்தகைய வாசிப்பு நம்முள் நிகழ்த்தும் மாற்றங்கள் ஏராளம்.

ஒரு படைப்பாளி தன்னை எவ்வளவு ப்ரொமோட் செய்து கொண்டாலும், எவ்வளவு விருதுகளையும் அங்கீகாரங்களையும் தன் வசப்படுத்திக் கொண்டாலும், அவன் மனதிலிருந்து எழுதாதவரை  அவன் அடையப் போவது ஒன்றுமே இல்லை.  அதே போல் தான் வாசகனும். பரிந்துரைகளில் புத்தகங்களை தேடுவதை விடுத்து, திறந்த மனதோடு புத்தகங்களை தேடிச் செல்லுங்கள். பொக்கிஷங்கள் கைவந்து சேரும்.

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.