“எதையும் எழுதாமல் இருப்பதைவிட ஒரு மோசமான
First draft எழுதிவிடுவது உத்தமம்”- Will Shetterly
***
முந்தைய பகுதிகள்
ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-1
ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-2
ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-3
ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-4
ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-5
***
எது நம்முடைய பிளாட்டின் விதையாக (Plot seed) இருக்கலாம்?
நம்மை சுற்றி நடப்பதை கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்கிறார் மார்ட்டல். எது பெருவாரியான மக்களின் கோபமாக, பயமாக, தேவையாக இருக்கிறதோ அது ஆக்சன் கதைக்கான நல்ல விதையாக இருக்கும் என்கிறார். பொறுப்பற்ற அரசாங்கத் துறை, லஞ்சம் வாங்கும் அதிகாரிகள், ஏமாற்றும் அரசியல்வாதிகள்- போன்ற விஷயங்களை மையப்படுத்தி வந்த படங்கள் பெரும் வரவேற்பு பெற்றதை நாம் அறிவோம்.
இந்த சிறுவிதையை பெரும்வெற்றிப்படமாக மாற்றுவதற்க்கு மார்ட்டல் தன் அனுபவத்தில் இருந்து ஒரு உத்தியை சொல்கிறார். அது ‘Magnification’.
ஒரு சிறுவிசயத்தை பெரிதாக்கிக் காட்டுதல். நம் சமூகத்தின் பொதுவான கோபத்தை, ஏக்கத்தை, எமோஷனை எதையும் நம்மால் பெரிதாக்கிக் காட்ட முடியும். அதுவும், குறிப்பாக பார்வையாளர்களின் மனதில் இருக்கும் பயத்தை, திரையில் பன்மடங்கு பெரிதாக்கி காட்டும்போது அந்த படம் நிச்சயம் பெரும்வெற்றி பெரும் என்கிறார் மார்ட்டல்.
இயக்குனர் ஷங்கர் படங்களில் இந்த Magnification உத்தி இருப்பதை கவனிக்க முடியும். அங்கே கூடுதலாக எமோஷனும் சேர்ந்துகொள்ளும்போது அந்த படங்கள் நம்மை அதிகம் பாதிக்கின்றன.
லஞ்சத்தினால் பாதிக்கப்பட்ட நாயகன் லஞ்சம் வாங்குபவர்களை தண்டிக்கிறான் என்பதுதான் ஒன்லைன் என்று சொல்லிவிடலாம். ஆனால் லஞ்சத்தினால் நாயகனுடைய பெண் சாகிறாள். அவள் பிணத்தை கொட்டும் மழையில் போட்டுக் கொண்டு அவன் அழுகிறான். லஞ்சத்தில் ஊறிய நிர்வாகம் அவனை அழ வைக்கிறது. உதாசீனப்படுத்துகிறது. நமக்கு கோபம், இறக்கம் எல்லாம் சேர்ந்து வருகிறது அல்லவா? அந்த கதை மாந்தர்களை வெறும் கற்பனைகளாக உணராமல், அது நாம்தான் என்று உணர்கிறோம் அல்லவா? இந்த உணர்வு எந்த படத்தையும் வெற்றிப் பெற வைக்கும்.
நம்முடைய பயம் திரையில் வெளிப்படுவதற்கு இன்னொரு உதாரணமாக இரும்புத்திரையை சொல்லலாம். நம் மொபைல் போனில் இருக்கும் தனிப்பட்ட விசயங்களும் திருடப்பட்டு விடுமோ என்று பயத்தை அந்த படம் ஒரு நொடி நமக்கு ஏற்ப்படுத்துகிறது இல்லையா?
ஒரு வகையில் ‘இரும்புத்திரை’ க்ரைம் த்ரில்லர் படம் தான். White collar Crime. ஆனால் அந்த க்ரைமின் நோக்கம் நம்மை பாதிப்பதாக இருக்கிறது. ஏனெனில் நாம் அன்றாட வாழ்வில் கடந்து வரும் பிரச்சனையை மைய்யபடுத்தி கதையை பின்னியிருக்கிறார்கள். நாம் கண்காணிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறோம். நம் விபரங்கள் திருடப்படுகின்றன. அதற்கு காரணமும் நாமாகவே இருக்கிறோம். ஆனால் வில்லன் நம் எல்லோருடைய அந்தரங்கத்தையும் திருடப்பார்க்கிறான் என்றதும் படம் நம்மிடம் நெருங்கி வருகிறது. இதை விடுத்து, அர்ஜுன் கதாப்பாத்திரம், விசாலிடமிருக்கும் ராணுவ ரகசியத்தை திருடிகிறார் என்று வைத்திருந்தால் படம் நமக்கு அந்நியமாக தான் இருந்திருக்கும்.
தசாவதாரத்தை எடுத்துகொள்வோம். ஹீரோ கமலுக்கும் வில்லன் கமலுக்கும் பிரச்சனை இருக்கிறது. ஏதோ பொருள் ஈட்டும் கண்டுபிடிபுக்காக அடித்துக்கொள்கிறார்கள் என்று மட்டும் வைத்தால், பார்ப்பவர்களுக்கு பெரிய ஈடுபாடு வந்திருக்காது. ஆனால் அந்த பிரச்சனையில் வில்லன் ஜெயித்து விட்டால், அந்த வைரஸ் வெளியே வந்துவிட்டால் என்ன ஆகும்! நம் ஊரே அழிந்து போகும் என்று பயமுறுத்துகிறார்கள் அல்லவா? இதுவே Magnification.
அதனால், எல்லோரையும் தொடர்புபடுத்துவது போல் ஒரு பிரச்சனையை சுற்றி கதைப் பின்னுவது சிறந்ததொரு உத்தி. அதாவது ஏதோவொரு யுனிவர்சல் பிரச்சனையை கையில் எடுக்கலாம். அதே சமயத்தில் இங்கே நாம் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். ஹீரோவின் பிரச்சனை பெரிதாக, யுனிவர்சலான ஒன்றாக இருக்கும் அதே வேலையில் அதை ஒருகட்டத்தில் பெர்சனலாகவும் (Personal Conflict) மாற்றும்போது படம் மேலும் நெருங்கிவருகிறது. இரும்புத்திரையில், பிறருக்கு வில்லன் தரும் பிரச்சனை நாயகனின் பெர்சனல் பிரச்சனையாகவும் உருவெடுக்கிறது. நாயகனின் தங்கையின் போன் காலையும் வில்லன் ஒட்டிக்கேட்கிறான் எனும்போது, ஹீரோவாக மட்டுமல்லாமல், ஒரு சரசாரி மனிதனாகவும், ஒரு அண்ணனாகவும், வில்லனை அழிக்க வேண்டிய கட்டாயம் ஹீரோவிற்கு உருவாகிறது.
வேறொரு உதாரணம். ஷெர்லாக் ஹோம்ஸ் துப்பறிகிறார். வழக்குகளை தீர்த்துவைக்கிறார் என்று மட்டும் காண்பித்தால் நாம் வெறும் பார்வையாளர்களாக மட்டுமே படத்தோடு தொடர்புபடுவோம். அதே நேரத்தில், ஒரு கட்டத்தில் வில்லன் ஷெர்லாக் ஹோம்ஸின் நண்பனான டாக்டர் வாட்சனுக்கு குறி வைக்கிறான் எனும் போது நம் எமோஷனும் கதையோடு தொடர்பாடுகிறது.
ஹீரோ வில்லன் பிரச்சனையை மட்டுமல்ல, கிளைக் கதையிலும் நம்மை பாதிக்கும் பிரச்சனையை வைக்கலாம். இதற்கு நல்ல உதாரணம் ராட்சஷன். படத்தில் ராட்ஷசன் அளவிற்கு நம்மை நெருட வைக்கும் பாத்திரம், பள்ளிக்கூட வாத்தியார் பாத்திரம். நம் வீட்டு பிள்ளைகளுக்கும் அத்தகைய பிரச்சனைகள் வரலாம் என்பதை அவன் நமக்கு நினைவுபடுத்துகிறான். அதனாலேயே அவன் மீது நமக்கு கோபம் வருகிறது. மேலும் படத்தின் ஓட்டத்தில், நாயகனின் வீட்டு பெண்ணிற்கும் ராட்சஷன் மற்றும் வாத்தியார் ஆகிய இருவராலும் பிரச்சனை வருகிறது என்பதையும் இங்கே நினைவு படுத்தவிரும்புகிறேன் (Personal conflict).
எந்த திரைக்கதையும் ஒரு தனிமனிதனுக்கு இருக்கும் பிரச்சனையை பற்றியதுதான். இயன்றவரை கதையில் இயல்பாக எமோஷன் இருப்பது போல் பார்த்துக்கொள்ளுங்கள், ஆக்சன் கதையை எழுதிவிட்டு எமொஷனை திணிக்காதீர்கள் என்பதை வலியுறுத்தி சொல்கிறார் மார்ட்டால்.
“எவ்வளவு பிரம்மாண்டமாக படம் எடுத்தாலும், பல கார் சேஸ் காட்சிகள் வைத்தாலும், பார்வையாளர்களோடு தொடர்பாடக்கூடிய எமோஷன் இல்லையென்றால், அந்த படம் மக்களை கவராது”
***
Conflict பற்றி பேசும் போது, படத்தின் இறுதியில் கதாநாயகன் தன் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்கிறான் என்று சொன்னோம். அப்போது நாம் ஒரு விசயத்தை கவனித்திருப்போம். கதாநாயகன் கதையின் ஆரம்பத்தில் இருந்ததைப் போல் முடிவில் இல்லை. அவனிடம் ஒரு மாற்றம் நிகழ்கிறது. குற்ற உணர்ச்சி மறையலாம். அவன் நம்பிக்கைகள் மாறலாம். இதைதான் நாம் Character arc என்கிறோம். Character arc என்பது ஒருவகையான emotional conflict என்பதை மட்டும் சொல்லிவிட்டு மார்ட்டல் கடந்து சென்று விடுகிறார். ஆனால் இந்த ஆர்க் பற்றி நன்றாக புரிந்து வைத்துக் கொள்வது நமக்கு ஹீரோ மட்டுமின்றி மற்றப் பாத்திரங்களையும் உருவாக்க பெரிதும் உதவும்.
ஒரு கதாப்பாத்திரம் கதையின் ஆரம்பத்திலிருந்து இறுதி வரையிலான தன் பயணத்தில், ஏதோ ஒருவகையில் மாற்றம் அடைகிறது. அப்போது அதன் ஆர்க் முழுமை அடைகிறது என்று சொல்லலாம். (சில நேரங்களில் எந்த மாற்றமும் அடையாமல் அப்படியே இருக்கலாம்..)
பிரதானாமாக கேரக்டர் ஆர்க்கை மூன்று வகையாக பிரிக்கலாம். பாசிடிவ் ஆர்க் (Positive arc), நெகட்டிவ் ஆர்க் (Negative arc), மற்றும் பிளாட் ஆர்க். (Flat arc).
ஒரு கதாப்பாத்திரம் கதையின் ஆரம்பத்திலிருந்த நிலையிருந்து கதையின் இறுதியில் பாசிடிவாக மாறினால் அல்லது திருந்திய நிலைக்கு மாறினால் அது பாசிடிவ் ஆர்க். அதுவே நெகட்டிவாக மாறினால் அது நெகட்டிவ் ஆர்க். எந்த மாற்றமும் இல்லாமல் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை ஒரேமாதிரி இருக்குமாயின் அது பிளாட் ஆர்க்.
ஹீரோ என்று பேசாமால், பொதுவாக கதாப்பாத்திரங்களைப் பற்றி பேசுவது இந்த ஆர்க் கான்சப்ட்டை புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.
நண்பன் படத்தில் வரும் சத்தியராஜ் பாத்திரம், வசூல்ராஜா படத்தில் வரும் பிரகாஷ்ராஜ் பாத்திரம் எல்லாம் பாசிடிவ் ஆர்க் வகையை சார்ந்தவர்கள். அவர்கள் படத்தின் ஆரம்பத்தில் மூர்க்கத்தனமாக இருக்கிறார்கள். இறுதியில் மனம்மாறுகிறார்கள். வழக்கமாக தமிழ் படங்களில் வில்லன் இறுதியில் (திடிரென்று) திருந்துவான் என்ற அளவில் இதை அர்த்தம் கொள்ள வேண்டாம். கேரக்டர் ஆர்க் எனும்போது கதாப்பாத்திரத்திற்குள் ஏற்படும் மாற்றம், படிப்படியாக இருத்தல் வேண்டும். அவன் மாறுகிறான் என்பதற்கு நியாயமான காரணங்களை காட்சிகளில் சொல்ல வேண்டும்.
கதாப்பாத்திரத்தின் மனம் மாறுகிறது என்கிறோம். என்னவெல்லாம் மாறலாம்?
அவர்களின் நம்பிக்கைகள் மாறலாம். அவர்களின் அச்சங்கள் மறையலாம். அவர்களின் கோபங்கள் குறையலாம். அவர்கள் ஏதோ ஒரு பொய்யை விடாபிடியாக நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். ஏதோ ஒரு கொள்கையை இறுகப் பற்றிக் கொண்டு இருக்கிறார்கள். இறுதியில் தான் தங்களுடைய நம்பிக்கை பொய்யானவை என்று உணர்கிறார்கள்.
படித்து மதிப்பெண் வாங்கும் அறிவே சிறந்தது என்று பேராசிரியர் நம்பிக்கொண்டிருக்கிறார். ஆனால் காமன் சென்ஸ் தான் சிறந்தது, ஏட்டுக்கல்வி அல்ல என்று அவருடைய மாணவன் அவருக்கு படத்தின் இறுதியில் புரிய வைக்கிறான். அதற்கேற்றார் போல் நாம் காட்சிகளை அமைக்க வேண்டும். இங்கே இறுதியில் பேராசிரியரின் நம்பிக்கை மாறுகிறது. ஒரு வகையில் அவர் பொய்யை நம்பிக் கொண்டிருக்கிறார். அது இறுதியில் உடைகிறது.
இல்லை தன்னுடைய வாழ்க்கை மட்டுமே தனக்கு முக்கியம், காரணகாரியமின்றி பிறர் மீது அன்பு செலுத்த வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கும் இளைஞனொருவன் இருக்கிறான். ஒரு பயணத்தில் அவன் எதிர்ப்பாராமல் சந்திக்கும் இன்னொரு மனிதன், பிறருக்காக வாழ்வதே வாழ்க்கை, எதையும் எதிர்ப்பாராமல் பிறர் மீது செலுத்தும் அன்பே சிவம் என்று அவனுக்கு புரியவைக்கிறான். இங்கேயும் இளைஞனின் நம்பிக்கைகள் உடைகின்றன. ஆனால் இது அனைத்தும் நல்லதுக்கான மாற்றம். எனவே தான் இதை பாசிடிவ் ஆர்க் என்கிறோம்.
இதை எளிமையாக சாத்தியப்படுத்துவது எப்படி?
இதற்கு திரைக்கதையாசிரியர் லிண்டா ஆரோன்சன் ஒரு உத்தியை சொல்கிறார்.
தொடரும்…