ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-4


எந்தக் காலகட்டத்திலும் திறமை என்பது அரிதான விஷயமாகவே இருந்து வருகிறது. அதைக் கருத்தில் கொள்வோமேயானால், நல்ல படங்களைவிட மோசமான படங்கள் அதிகம் எடுக்கப்படுவதைக் கண்டு ஆச்சர்யமோ அதிர்ச்சியோ கொள்ளமாட்டோம். உண்மையில் நம்மை ஆச்சர்யம் கொள்ளச் செய்வது என்னவெனில், சினிமாவை உருவாக்கும் முறை நீண்ட சிக்கலான ஒன்றாக இருந்தாலும், அதை உருவாக்கும் படைப்பாளியின் பாதை படுகுழிகள் நிறைந்ததாக இருந்தாலும் நல்ல படங்கள் எடுக்கப் படுகின்றன என்பது தான்” – சத்யஜித்ரே

***

முந்தைய பகுதிகள்

ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-1

ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-2

ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-3

***

பேசிங்கை எப்படி சாத்தியப்படுத்துவது?

ஒன்லைன் எழுதும் போதே ‘பேசிங்’ நம் காட்சிகளில் இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ளலாம். அல்லது முழு திரைக்கதையை எழுதி முடித்தப்பின் பேசிங்கிற்கு ஏற்றார்போல் கதையை மாற்றி எழுதலாம் என்கிறார் மார்ட்டல்.

ஆனால் ஒன்லைன் எழுதிடும் போது பேசிங்கில் கவனம் செலுத்துவதே சிறந்த உத்தி என்றும் அறிவுறுத்துகிறார். கதையை மீண்டும் மீண்டும் மாற்றி எழுதுவது அதிக அவகாசத்தை எடுத்துக் கொள்ள கூடிய செயல் என்பதால் அப்படி சொல்கிறார். மேலும் கதையை முழுவதுமாக எழுதி முடித்தப்பின், திரைக்கதை சுவாரஸ்யமாக இருக்கவேண்டும் என்பதற்காக இடைச்செருகலாக காட்சிகளை திணிக்கும் நிலையை இந்த இரண்டாவது உத்தி ஏற்படுத்தலாம். அத்தகைய காட்சிகள் படத்தோடு பொருந்தாமல் தோன்றும். அதனாலேயே இந்த முறையை தவிர்க்க சொல்கிறார் மார்ட்டல்.

நாம் மிக வித்தியாசமான ஒரு கதைக் கருவை யோசித்துவிட்டோம். சிறப்பானதொரு கதாபாத்திரத்தையும் வடிவமைத்துவிட்டோம். ஆனால் ‘பேசிங்’கை நம்மால் சாத்தியப்படுத்த முடியவில்லை என்றால், அது சுவாரஸ்யமற்ற கதையாகவே இருக்கும் என்கிறார் மார்ட்டல்.

Action Screenplay

நாயகனின் ஓட்டினை வேறொருவன் மாற்றி போட்டுவிடுகிறான். பின் நடந்தது என்ன? வித்தியாசமான கருதான். நாயகனோ பெரும் நாடுகளையே அச்சுறுத்தும் கார்பரேட் மூளை. நாம் பார்த்திராத கதாபாத்திரம்தான். ஆனால் படம் எங்கே சறுக்குகிறது! நாம் எதிர்ப்பார்க்கும் முன்னோக்கிய நகர்வு படத்தில் இருக்கிறதா? இல்லை அல்லவா?

ஏனெனில் நாயகனின் ஒட்டு கள்ள ஓட்டாக போடப்பட்ட பின்பு, அவன் எலெக்சன் கமிசனை அசைத்துப்பார்க்கிறான். பின் இது ஒரு Legal Thriller-ஆக மாறியிருந்தால் அதில் ஒரு விறுவிறுப்பு இருந்திருக்கலாம். படம் அரசியல் Thriller-ஆக மாறுகிறது. அதுவும் நல்ல ஒன்லைன் தான். அப்போது நாயகனுக்கும் எதிரிகளுக்கும் பெரும் பிரச்சனை வெடித்திருக்க வேண்டும். அந்த பிரச்சனை நாம் முந்தைய அத்தியாயங்களில் பார்த்ததைப் போல, ‘டென்னிஸ் பிளாடிங்’ வடிவில் இருந்தால் படத்தின் சுவாரஸ்யம் கூடிடும். (அதாவது ஹீரோ வில்லனை முட்டுகிறான். பின் வில்லன் ஹீரோவை முட்டுகிறான். இப்போது மீண்டும் ஹீரோ இன்னும் அதிக கோபத்துடன் மோதுகிறான். இப்படி மாறிமாறி மோதிக்கொள்கிறார்கள் என்று கதை அமைக்கலாம்.) ஆனால் இங்கே எதிர்வினை ஒருபக்கத்தில் மட்டுமே இருக்கிறது. அதாவது நாயகன் மட்டுமே, திரைக்கதையின் பெரும்பகுதியில், வில்லனுக்கு எதிராக தன் சாம்ராஜ்யத்தை கட்டமைத்துக் கொண்டே போகிறான். மேலும் தவிர்க்கமுடியாத காதல் காட்சிகள் வேறு. இவையெல்லாம் சேர்ந்து படத்தின் பேசிங்கை குறைத்துவிடுகிறது. அதனால் ஹீரோ மட்டுமே வளர்ந்துகொண்டே போகிறான் என்று கதையை அமைப்பதை தவிர்ப்போம்.

ஹீரோ அரசியல் வேண்டாமென்றாலும், அவன் வீட்டை வில்லன் இடிக்க வேண்டும். அப்போதுதான் திரைக்கதையில் அடுத்தகட்ட நகர்வு ஏற்படுகிறது. எனவே, ஆக்சன் கதைகளில், ஹீரோவும் வில்லனும் மாறிமாறி சீறிக்கொண்டால்தான் கதை சுவாரஸ்யமாக நகரும் என்பதை நாம்  நினைவில் கொள்ள வேண்டும்.

சரி, பேசிங் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒரு கதையை எழுதிவிட்டோம். அது சரிதானா என்று எப்படி உறுதி செய்வது? அதாவது நம் கதையில் பேசிங் இருக்கிறதா என்று நாம் எப்படி சரிபார்த்துக் கொள்வது?

நாம் எழுதும் ஒவ்வொரு காட்சியும் அடுத்த காட்சிக்கான ஆரம்பபுள்ளியாக இருக்கிறதா என்று பார்த்தால் மட்டும் போதும். அப்படி இல்லாத காட்சிகளை இரக்கமின்றி திரைக்கதையிலிருந்து நீக்கிவிட வேண்டும். திரைக்கதையில், முந்தைய காட்சிக்கும் அடுத்த காட்சிக்கும், அல்லது பின்வரப் போகும் காட்சிக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்த தொடர்பும் இல்லாத காட்சியாக ஒரு காட்சி இருக்குமாயின், அதுவே நம் படத்தின் விறுவிறுப்பை குறைக்கும் காட்சி என்று உறுதியாக சொல்லலாம்.

***

எந்தவகை திரைக்கதையாக இருந்தாலும், ஹீரோவிற்கு வரும் ‘பிரச்சனை’ (Conflict) தான் கதையை நகர்த்தப்போகிறது என்பதை நாம் இந்நேரம் அறிந்திருப்போம். ஆனால் அது வெறும் External Conflict-ஆக மட்டுமே இருந்துவிட வேண்டுமென்று அவசியமில்லை! Internal Conflict-ஆகவும் இருக்கலாம். அதாவது ஹீரோவிற்கு புற உலகிலிருந்து பிரச்சனை வருகிறது என்றால் அது External Conflict. உதாரணம், ஹீரோவிற்கு வில்லனால் பிரச்சனை வருவது.

அதுவே அவனுக்கு அகம் சார்ந்த போராட்டங்கள் இருக்கிறது என்றால் அது Internal Conflict. அது உணர்வு ரீதியான போராட்டமாகவும் இருப்பதால் இதை Emotional conflict என்றும் சொல்லலாம். உதாரணமாக, சிறுவயதில் ஹீரோவின் கண்முன்னாலே அவன் தம்பி நீரில் மூழ்கி இறந்துவிடுகிறான். தம்பியை ஹீரோவால் காப்பாற்றமுடியவில்லை. அல்லது தம்பியின் மரணத்திற்கு ஹீரோவின் அலட்சியம் தான் காரணமாகிறது. அதனால் ஹீரோ வாழ்நாள் முழுக்க அந்த குற்ற உணர்ச்சியிலே வாழ்ந்து கொண்டிருப்பான். அது அவனுடைய மற்ற செயல்களை பாதிக்கும். இங்கே இந்த குற்ற உணர்ச்சிதான் அவனுடைய Emotional Conflict. திரைக்கதையில் Internal மற்றும் external ஆகிய இரண்டு பிரச்சனைகளும் இருக்கும்போது அந்த கதை அதிக பலம் பெறும்.

ஆக்சன் கதைதான் என்றாலும், வெறும் External Conflict-ஐ மட்டுமே வைத்துக் கொண்டு கதையை நகர்த்தினால், படம் மேம்போக்காக இருக்கும் என்கிறார் மார்டடல். அவரை பொருத்தவரை ஆக்சன் படத்தில்  Emotional Conflict  நிச்சயம் இருக்க வேண்டும். அதே சமயத்தில் வெறும் Emotional பிரச்சனை மட்டும் கதையை நகர்த்திவிடாது. புறப் பிரச்சனை, அகப் பிரச்சனை ஆகிய இரண்டுமே ஒன்றை ஒன்றை பாதிப்பதாக இருத்தல் வேண்டும்.

வெறும் அகப் பிரச்சனையை மட்டுமே வைத்து ஒரு நாவல் எழுதிவிட முடியும்.  ஒருவனின் சிந்தனைகள், எண்ண ஓட்டங்கள், மனமாற்றம் போன்றவற்றை அந்த நாவல் பேசக்கூடும். ஆனால் இதை திரையில் காட்சி படுத்த முடியாது அல்லவா? அதனால் தான் அங்கே ஒரு புறப்பிரச்சனை முக்கியமாகிறது. எனினும் வெறும் புறப்பிரச்சனையை மட்டும் திரைக்கதையாக்காமல், ஹீரோவின் அகப்பிரச்சனையும் புறப்பிரச்சனையும் சந்தித்துக்கொள்கிறது, புறப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதன் மூலம் அந்த நாயகன் அகப் போராட்டத்தில் வெற்றிக் கொள்கிறான் என்று கதையை அமைக்கும் போது திரைக்கதை மேலும் சுவாரஸ்யமாகிறது.

உதாரணமாக, ஒரு போலீஸ் நாயகன் இருக்கிறான். அவன் மிக அடாவடியான போலிசாக இருந்த காலத்தில் அவனுடைய குடும்பத்தை சிலர் கொன்றுவிடுகிறார்கள். இந்த இழப்பு அவனை குடிகாரனாக மாற்றுகிறது. தன் அடாவடித் தனமே எல்லாவற்றிற்கும் காரணம் என்று என்னும் அவன் ஒரு நடைப்பிணம் போல் தன் வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கிறான். அவனுடைய இறந்த காலமே அவன் மனதில் பெரும் போராட்டத்தை நிகழ்த்துகிறது. அதனால் அவனுக்கு எதிலும் ஈடுபாடில்லை.

இப்போது அவனிடம் ஒரு கொலை வழக்கு வருகிறது. அதை கையிலெடுப்பதில் அவனுக்கு விருப்பம் இல்லை. சந்தர்ப்ப சூழல் அந்த வழக்கை கையிலெடுக்க வைக்கிறது. அவன் குற்றவாளிகளை தண்டிப்பதன் மூலம் வேறு சில நல்லவர்களை காப்பாற்ற முடிகிறது. இது அவனுக்கு தன் குடும்பத்தை காப்பாற்றிய உணர்வை ஏற்படுத்துகிறது. அவன் குடிப்பழக்கத்தை விடுகிறான். புதுமனிதனாகிறான். இங்கே புற உலகில் நிகழும் பிரச்சனையை தீர்ப்பதன் மூலம், அவனுடைய எமோஷனல் பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கிறது.

மேற்கூறிய உதாரணத்தில் நாம் கவனிக்க வேண்டிய விசயங்கள் சில உண்டு. வெறும் எமோஷனல் பிரச்சனை மட்டும் இருந்தால் இங்கே கதையில் எந்த நகர்வும் ஏற்படவில்லை. வெளியுலகில் பிரச்சனை வரும் போதுதான் கதை நகர்கிறது. அடுத்து, அந்த எமோஷனல் பிரச்சனையை நாம் ஒரு கட்டத்தில் புறப்பிரச்சனையோடு இணைத்துவிட்டோம். அதனால் தான் அங்கே ஒரு முழுமை இருக்கிறது. அப்படி செய்யாமல், ஹீரோவிற்கு ஒருபுறத்தில் அகப் பிரச்சனை இருக்கிறது. இன்னொரு புறத்தில் ஒரு புற பிரச்சனை இருக்கிறது, இரண்டிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று கதை அமைத்தால் கதை வெவ்வேறு கோணத்தில் சுவாரஸ்யமற்று வளர்ந்து கொண்டே போகும்.

அதனால் எவ்வளவு பெரிய ஆக்சன் படமென்றாலும், Die hard படத்தில் வருவது போல் ஹீரோவிற்கு அகம் புறம் இரண்டிலும் பிரச்சனை இருக்கட்டும் என்று வலியுறுத்துகிறார் மார்ட்டல். இதே உத்தியை திரைக்கதையாசிரியர் கிறிஸ்டோபர் வாக்லரும் தன் The Writer’s Journey புத்தகத்தில் அடிக்கோடிட்டு காட்டுகிறார்.

திரைக்கதையில், ஹீரோவிற்கு Internal (Emotional) மற்றும் External conflict ஏன் இருக்கவேண்டும் என்பதை புரிந்துகொண்டோம். ஆனால் நம் படங்களில் Internal conflict இருக்கிறதா?

தொடரும்…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.