குறுங்கதை-10-  தாத்தாவும் பாட்டியும் காதலித்த கதை  

தாத்தாவும் பாட்டியும் காதலித்த கதை  

அநிருத்தனுக்கு சப்பாத்தி மீது பெருங்காதல். எல்லா நாளும் எல்லா வேலையும் சப்பாத்தி கொடுத்தால் கூட சாப்பிடும் அளவிற்கு சப்பாத்தி பித்து அவனுக்கு. குறைந்தபட்சம் இரவு உணவிற்காவது சப்பாத்தி இருக்க வேண்டும். அவன் மனைவி அனுராதாவிற்கு சப்பாத்தி மீது தனிக் காதலோ வெறுப்போ இல்லை. அவளுக்கு பிடித்த உணவு முட்டை தோசை. அவன் சப்பாத்தி உண்பதில் அவளுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை என்றாலும், அதை மெனக்கெட்டு செய்வதில் அவளுக்கு ஈடுபாடு இருந்ததில்லை.  அதனால் வீட்டில் சண்டைக்கு பஞ்சமில்லை. 

“இன்னைக்கும் சப்பாத்தி இல்லையா? மனுஷன் நாளெல்லாம் மாடுமாதிரி உழைச்சிட்டு, ஒரு வாய் ஆசையா சாப்பிட முடியாதா?” என்பான் அநிருத்தன். 

“ஏன் பொண்ணுங்க தான் சமைக்கணுமா! நீயே சமைச்சு சாப்ட்டுக்கோ!”என்பாள் அனுராதா. அவனும்  அவள் கேட்பது நியாயம் தான் என்று இரண்டு நாட்களுக்கு அமைதியாக இருப்பான். பின்பு மூன்றாம் நாள் மீண்டும் சப்பாத்தி மீது வெறி வந்துவிடும்.

“ஐயோ ஏண்டி இப்டி பண்ற! உனக்கு புடிச்சத மட்டும் செஞ்சிக்குற இல்ல! எனக்கு ஏன் சப்பாத்தி செஞ்சு தரமாட்ற?”

“என்னால இதான் முடியும். என்னைக்காவது நீ எனக்கு முட்ட தோசை சுட்டு கொடுத்துருக்கியா? உனக்கு சப்பாத்தி தான் வேணும்னா வெளில போய் வாங்கி சாப்பிடு” 

இப்படி தொடர்ந்து சண்டையிட்டு கொண்டிருந்த அவர்கள், இனிமேல் சேர்ந்து வாழ முடியாது என்று முடிவெடுத்து விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள்.  

சில ஆண்டுகாலம் கழித்து அநிருத்தன், சப்பாத்தி கடை வைத்திருந்த ஒரு ஹிந்திகார பெண்ணை திருமணம் செய்துகொண்டான். தினமும் உண்பதற்கு சப்பாத்தி பஞ்சமில்லாமல் கிடைத்தது. ஆனாலும் அவனுக்கு மனதில் ஏதோ ஒரு குறை இருந்துகொண்டே இருந்தது. வேலை தான் அழுத்தம் தருவதாக நினைத்த அவன் முதலில் தன் வேலையை ராஜினாமா செய்தான். பின்னர் தன் மனைவியோடு இணைந்து கடையை கவனிக்கத் தொடங்கினான்.  சமைக்கவும் கற்றுக் கொண்டான். தனக்கு வேண்டிய சப்பாத்தியை தானே சமைத்து சாப்பிட்டான். அப்போதும் அவனுக்கு மனதில் ஏதோ ஒரு நிறைவின்மை இருந்து வந்தது. எனினும்  தொடர்ந்து சப்பாத்தி சுட்டுக் கொண்டே இருந்தது அவனுக்கு ஒருவகையான ஆறுதலை தந்தது. கொஞ்சம்கொஞ்சமாக சப்பாத்தி சுடுவதில் நிபுணத்துவம் பெறத் தொடங்கினான்.  அவனுடைய கடை சப்பாத்திக்கு, சுற்றுவட்டாரத்தில் மவுசு கூடியது. 

காலங்கள் பல ஓடின. அவன் குடும்பம் பெரிதானது. ஹோட்டலும் பெரிதானது. பேரன் பேத்திகள் எல்லாம் வளர்ந்தார்கள். அவனுடைய கடைசி பேரன் அவனை பற்றி வீடியோ எடுத்து யூடியூபில் பதிவிட அது பெரும் வைரல் ஆனது. அநிருத்தன், ‘சப்பாத்தி தாத்தா’ என்று எல்லோராலும் அழைக்கப்பட்டான்.  அவன் வீடியோவை கண்ட பலரும் ஆச்சர்யப்பட்டு அவன் கடைக்கு வரத் தொடங்கினர். அநிருத்தன் தன்னுடைய என்பது வயதில் செலிபிரிட்டி ஆகிப் போனான். ஒரு லட்சமாவது சப்ஸ்க்ரைபருக்கும் அவர் குடுபத்திற்க்கும் தங்கள் ஹோட்டலில் சிறப்பு விருந்து அளிக்கப்படும், அவர்களுக்கு சப்பாத்தி தாத்தாவே தன் கையால் உணவு பரிமாறுவார் என்று   அநிருத்தனின் பேரன்கள் விளம்பரம் செய்தனர்.

ஒரு லட்சமாவது சப்ஸ்க்ரைபரான ஒரு இளைஞன், தன் குடும்பத்துடன் வந்தான். அநிருத்தனிடம்.”தாத்தா ஐம் யுவர் பிக் பேன், என் பேரும் அனிருத் தான்” என்றான். அநிருத்தன் புன்னகை செய்துவிட்டு தொடர்ந்து சப்பாத்தியை சுட்டான். அந்த இளைஞனின் தாய், தந்தை மற்றும் சகோதரி அனைவரும் அநிருத்தனுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். 

“பாட்டிய கூப்புடுலாமா!” என்றான் இளைஞன் தன் தாயிடம்.

“அவங்கதான் வேணாம்னு சொல்ட்டாங்க இல்ல, போர்ஸ் பண்ணாத!” என்றாள் அந்த தாய். சிறிதுநேரத்தில் அவர்கள் அனைவரும் சாப்பிட சென்றுவிட்டார்கள்.  தான் ஒரு செலிபிரிட்டி  என்கிற கர்வம் கொண்டிருந்த அநிருத்தனுக்கு அந்த பாட்டி தன்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளாமல் போனது அவமானமாக இருந்தது. யார் அந்த பாட்டி என்று பார்க்க வேண்டும் என்கிற ஆர்வம் அதிகமானது. உணவு பரிமாறும் சாக்கில் கிட்சனை விட்டு வெளியே வந்தான். அந்த குடும்பம் ஆர்வமாக பேசிக்கொண்டே உணவருந்திக் கொண்டிருந்தார்கள். சற்று தொலைவிலேயே நின்ற அநிருத்தன், தன் கண்ணாடியை சரி செய்து கொண்டு அந்த பாட்டியையே பார்த்தான். அந்த பாட்டி அவனை சட்டை செய்யவில்லை. அநிருத்தன் மீண்டும் கிட்சனுக்குள் திரும்பினான். 

“என்ன தாத்தா. நீ தான் அவங்களுக்கு பரிமாறனும்” என்றவாறே உள்ளே வந்தான் பேரன். 

அநிருத்தன் எதுவும் பேசவில்லை. தன் கண்ணாடியை கழட்டி எறிந்துவிட்டு அழத் தொடங்கினான். 

“தாத்தா கியா ஹுவா!” என்று பதறினான் பேரன்.

“உங்களுக்கு பரிமாறுறதுல விருப்பம் இல்லையா? நான் வேணா தாத்தாக்கு உடம்பு சரி இல்லனு சொல்லிடுறேன்”  

கண்களை துடைத்துக் கொண்ட அநிருத்தன், “இன்னைக்கு அந்த பாட்டிக்காக நாம மெனுவ மாத்துறோம்” என்றான்.  

“ஏன் அந்த பாட்டிய உனக்கு முன்னாடியே தெரியுமா?” என்றான் பேரன். 

“உன் பாட்டியா தெரிறதுக்கு முன்னாடியே தெரியும்” என்று சொல்லிவிட்டு புன்னகை செய்தான் அநிருத்தன். அவனுடைய பேரன் புரியாமல் பார்த்தான்.  

கிட்டத்தட்ட நாற்பத்தைந்து வருடங்களாக சப்பாத்தி மட்டுமே சுட்டுக்கொண்டிருந்த சப்பாத்தி தாத்தா எனப்பட்ட அநிருத்தன், தன் வாழ்விலேயே முதல் முறையாக ஒரு முட்டை தோசையை சுட்டு தன் பேரனிடம் நீட்டி, “இத அந்த பாட்டிக்கிட்ட போய் கொடு அவங்களுக்கு  முட்ட தோசைன்னா ரொம்ப புடிக்கும்” என்றான். 

அந்த மாலை வேளையில், அநிருத்தனுக்கு, பல லட்சம் சப்பாத்திகளை சுட்ட போது கிட்டாத நிறைவு, அந்த ஒரு முட்டைதோசையை தன்னுடைய முன்னாள் மனைவி, வாழ்நாள் காதலி அனுராதாவிற்காக சுட்டுக் கொடுத்த போது கிட்டியது. இனிமேல் அவன் நிம்மதியாக உறங்குவான். 

***

குறுங்கதைகள் முற்றும்.

குறுங்கதை-9- கோபம்கொண்டு நாவலிலிருந்து தொலைந்துபோன ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் கதாப்பாத்திரம் 

கோபம்கொண்டு நாவலிலிருந்து தொலைந்துபோன ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் கதாப்பாத்திரம் 

கோமதி சங்கர் பிரபலமாகாத ஒரு நல்ல எழுத்தாளன். பல வருடங்களுக்குமுன்பு  அவன் எழுதிய க்ரைம் கதையில் வரும்  வில்லன் கதாபாத்திரத்திற்கும் அவனுக்கும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அந்த பிரச்சனை வெடித்தது. ஆனந்த் என்கிற அந்த வில்லன் கதாபாத்திரம் ஒரு மிசோஜினிஸ்ட்  (misogynist). பெண்களை அறவே வெறுக்கும் அவன், ரயிலில் தனியாக பயணிக்கும் அழகான பெண்களை கடத்தி கொலை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தான்.  நாவலின் முதல் அத்தியாயத்திலேயே அந்த வில்லன் அறிமுகமாகிவிடுவான். அந்த முதல் அத்தியாத்தை வாசித்த கோமதி சங்கரின் மொத்த வாசகர்களான முப்பது பேரில், அதி தீவிர வாசக அந்தஸ்தைப் பெற்ற மூன்று வாசகர்கள், தமிழ் க்ரைம் புனைவின் ஆகச் சிறந்த வில்லன் பாத்திரமாக ஆனந்த் பாத்திரம் இருக்கும் என்று உறுதியாக சொல்லினர். வேறு எந்த எழுத்தாளராக இருந்திருந்தாலும், இப்படி ஒரு ஏகோபித்த வரவேற்பை பெற்ற முதல் அத்தியாயத்தை தொடர்ந்து எழுதி அந்த நாவலை முடித்து பதிப்பித்து, அதன் திரைக்கதை உரிமையையும் விற்றிருப்பார்கள். ஆனால் கோமதி சங்கர் ஒரு அடிப்படை சோம்பேறி என்பதால் அவன் அந்த நாவலை மேற்கொண்டு எழுதவில்லை. 

கிட்டத்த ஒன்பது வருடங்களாக முதல் அத்தியாயத்தை விட்டு வெளியே வர முடியாமல் தவித்த  வில்லன் பாத்திரமான ஆனந்த் இரு தினங்களுக்கு முன்பு நடுஜாமத்தில் கோமதி சங்கர் தூங்கிக் கொண்டிருந்தபோது கடும் கோபம் கொண்டு கத்தினான், 

“நீயெல்லாம் ஒரு எழுத்தாளராடா! எவ்ளோ பெரிய வில்லனா நான் வந்திருக்கணும்! இந்நேரம் வேறு யாராவதா இருந்திருந்தா என்ன வளர்த்து சீக்யூல்லாம் எழுதிருப்பாங்க. நான் எவ்ளோ நாள் இப்டி முதல் அத்தியத்துல மட்டும் கொலை பண்ணிட்டு, அடுத்த டார்கட்க்காக வெய்ட் பண்ணிக்கிட்டு இருக்கிறது?  அட்லீஸ்ட ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் கூடவா என்ன தேடி வர மாட்டாங்க?”

கோமதி சங்கர் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான். அவன் இலக்கிய எழுத்தாளராக வேண்டும் என்கிற முடிவை எடுத்ததன் விளைவாக க்ரைம் கதைகளை எழுதுவதை  நிறுத்திக் கொண்டான்.

“உன்கிட்ட தாண்டா பேசுறேன்! சொல்லு! மேற்கொண்டு எழுத முடிலனா எனக்கு ஏன் அவ்ளோ பெரிய இன்ட்ரோ! அடுத்த ஸ்டீபன் கிங் நீனு நினைச்சு உன் எண்ணத்துல தோன்றினேன் பார். என்ன அடிக்கணும்!” ஆனந்த் கதாப்பாததிரத்திற்கு கோபம் குறையவில்லை. 

கோமதி சங்கர் சொன்னான், “ஆனந்த் என்ன மன்னிச்சிரு! இனிமே உன் கதையை என்னால எழுத முடியாது! க்ரைம் ரைட்டர்ஸ்க்கு இங்க பெரிய மரியாதை இல்லை. நான் ஒரு பின்நவீனத்துவ நாவல் எழுதலாம்னு இருக்கேன்..நான் வேணா உன் கதைய இத்தாலோ கால்வினோ மாதிரி ஸ்டைலா எழுதுறேன். தயவு செஞ்சு நீ முதல் கொலை பண்ணிட்டு அந்த ரயில்ல இருந்து குதிச்சு செத்துரு!”

இதை கேட்ட ஆனந்த் அதிர்ந்து போனான். எந்த எழுத்தாளன் முதல் அத்தியாயத்திலேயே தன்  வில்லனை கொல்வான்! மேற்கொண்டு கோமதி சங்கரிடம் பேசி பிரயோஜனமில்லை என்று முடிவு செய்த வில்லன் ஆனந்த் ஒரு மழை இரவில் தன்னுடைய உடமைகளையும், கூரிய கொலை ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு கோமதி சங்கரின் புனைவுலகை விட்டு வெளியேறினான்.   

ஆனந்தின் பிரிவை தாள முடியாமல் கோமதி சங்கர் இரண்டு நாட்கள் சரியாக சாப்பிடவில்லை. அவன் சோகமாக இருப்பதை பார்க்க பிடிக்காமல் அவனுடைய காதல் நாவலொன்றின் நாயகி ஜானகி அவனுக்கு ஆறுதல் சொல்வதற்காக வந்தாள்.  ஆனால் அவன் அவளையும் பொருட்படுத்தாமல் எதையோ யோசித்துக் கொண்டே இருந்தான்.

“இப்டி நீ யாரையும்  கண்டுக்காம இருந்தா எல்லாரும் உன்னவிட்டு போய்டுவாங்க?” என்று ஜானகி கோபமாக சொன்னாள். அந்த ஜானகி அவனை ஒருகாலத்தில் காதலித்த, அவனும் பின்னாளில் காதலித்த பெண்ணின் பிரதி. இப்படிதான் கோமதி சங்கரை புரிந்துகொள்ளாமல் சண்டைபோடுவாள். இப்போது கதாப்பாத்திரமாகிவிட்ட பின்னும் அப்படியே இருக்கிறாள். 

“நான் இவ்ளோ பேசுறேன் எனக்கு அவ்ளோதான் மரியாதையா?” ஜானகி கேட்டாள்.

“கொஞ்சம் வெயிட் பண்ணு ஜானகி. உன் கேரக்டரை எப்படி டெவலப் பண்றதுனு தான் யோசிச்சிகிட்டு இருக்கேன்.. உன்ன நான் எந்த அளவுக்கு கற்பனை பன்னி வச்சிருக்கேன் தெரியுமா? அமலா மாதிரி சாரா மாதிரி. உனக்கு இவங்கல்லாம் யாருனு தெரியுமா! நாவல் பேரே ‘ஜானகி’ தான். நான் மட்டும் எழுதி முடிச்சேன் தமிழின் சமகால காதல் காவியமா இருக்கும்! ட்ரஸ்ட் மீ, இட்ஸ் கோயிங் டு பி எ க்ளாஸிக். அடுத்த யுவபுரஸ்கார் எனக்குதான்” கோமதி சங்கர் சொன்னதும் ஜானகி கதாப்பாத்திரம் சப்தமாக சிரித்தது. தான் எழுதிய கதாப்பாத்திரமே தன்னை பார்த்து சிரிப்பது அவனுக்கு அவமானமாக இருந்தது. 

“அஞ்சு வருசமா எழுதுற! இன்னும் நாவலை முடிக்கல. நீ இனிமேலும் முடிப்பனு எனக்கு நம்பிக்கை இல்லை. குட்பாய் கோமதி சங்கர்” சொல்லிவிட்டு அவள் தன் ஹாண்ட்பேகை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள். 

க்ரைம் எழுத்தாளனாகவும் ஆக முடியாத, இலக்கிய எழுத்தாளனாகவும் ஆக முடியாத  கோமதி சங்கர், இனிமேல் தான் எழுதவே போவதில்லை என்கிற முடிவை எடுத்துவிட்டு தன் பேனாவை உடைத்து தூக்கி எறிந்தான். 

கோமதி சங்கரின் ‘ஜானகி’ நாவலுக்குள்ளிருந்து வெளியேறிய நாயகி கதாப்பாத்திரமான ஜானகி, தாம்பரம் செங்கல்பட்டு ரயிலில்  ஏறினாள்.  வெளியே மழை. ரயில் ஊரப்பாக்கத்தில் நின்ற போது ரயிலிலிருந்த மற்ற அனைவரும் இறங்கிவிட்டனர். தனியாக அமர்ந்திருந்த அவள், முற்றுப்பெறாத தன் கதாப்பாத்திரத்தை எண்ணி ஆத்திரப்பட்டவளாய், “ஐ ஹேட் யூ கோமதி சங்கர்” என்று கத்தினாள். 

அதே நேரத்தில் வெளியே பிளாட்பாரத்தில், “துரோகி. டேய் கோமதி சங்கர்  நீ ஒரு துரோகி” என்று முணுமுணுத்தவாறே வந்த வில்லன் பாத்திரமான ஆனந்த், ஜானகி இருந்த பெட்டிக்குள் ஏறினான். அவன் கையில் கூரிய கத்தி ஒன்று இருந்தது. 

யாருமில்லாத தனி அறையில் அமர்ந்து கோமதிசங்கர் வாய் மூடி அழுதுக் கொண்டிருந்தான்.

***

குறுங்கதை-8 – ஒரு தற்கொலை செய்தி

ஒரு தற்கொலை செய்தி

விஷயம் கேள்வி பட்டதுமே நான்  ஜன்னல் அருகே ஓடினேன். என் அலுவலகம் இருந்தது மூன்றாவது மாடியில். கீழே நிறைய பேர் குழுமி இருந்தார்கள். 

“செவென்த் ஃபுளோர்ல இருந்து ஒருத்தன் குதிச்சிட்டானாம்” ஏ.ஜி எம்மின் கார் டிரைவர் குமார் தான் முதலில் செய்தியை சொன்னது. நான் என் பக்கத்தில் வந்து நின்ற கோபிகிருஷ்ணன் சாரை பார்த்தேன். ‘கீழே போகலாமா’  என்னுடைய பதிலுக்கு எதிர்பார்ப்பது போல் அவர் பார்வை இருந்தது. 

எப்போதுமே லிப்ட் வர தாமதமாகும். நான்காவது மாடியில் ஒரு ரியல் எஸ்டேட் அலுவலகம் இருந்தது. அங்கே நிறைய பேர் வந்து செல்வார்கள் என்பதால் லிப்ட் எங்கள் தளத்தில் நிற்பது அரிது. அப்படியே நின்றாலும் இடம் இருக்காது. நாங்கள் லிப்ட்டிற்காக காத்திராமல்  படியில் இறங்கி ஓடினோம்.கீழே நிறைய பேர் சூழ்ந்து நின்று கொண்டிருந்தார்கள்.  

“ஆபீஸ் ஸ்ட்ரெஸ்” யாரோ ஒருவன் சொன்னான்.ஏழாவது மாடியில் ஒரு ஐ.டி நிறுவனம் இருந்தது. அவன் அங்கு வேலைக்கு சேர்ந்து ஒருமாதம் தான் ஆகிறது என்று கூட்டத்தில் பேசிக் கொண்டார்கள்.   

“லவ் ஃபெய்லியராம் பா” இது வேறுயாரோ.  

நானும் கோபி சாரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். 

கூட்டம் தரையில் கிடந்தவனை மறைத்திருந்தது. முயன்று உள்ளே புகுந்தேன்.  என்னைவிட வயதில் சிறியவன் தான். “பாடி பக்கத்துல போகாதீங்க” என்று செக்யூரிட்டி கத்தினார். யாருக்கோ பிள்ளை. யாருக்கோ அவன் அண்ணன், தம்பி. யாருக்கோ அவன் காதலன், நண்பன். தன் எல்லா அடையாளங்களையும் அவனே தொலைத்து இன்று வெறும் ‘பாடி’ ஆகி போய்விட்டான் என்பதே எனக்கு பயமுறுத்துவதாக இருந்தது. 

போலீஸ் வண்டி வந்ததும் தங்களுக்கு எதுவும் தெரியாது என்பது போல் எல்லோரும் விலகிச் சென்றனர். ஆம்புலன்ஸும் பின்னாடியே வந்தது. அங்கே மேற்கொண்டு நிற்க விரும்பாதவராய் கோபி சார். கேட்டார், “ஒரு இஞ்சிடீ சாப்பிடலாமா?”

என்ன செய்தி என்று விசாரித்த டீக்கடைக்காரர், “அஞ்சாறு வருசத்துக்கு முன்னாடி இப்டி தான் ஒருத்தன் விழுந்தான்” என்று ஏதோ வரலாற்று நிகழ்வை பதிவு செய்தவராய் தன் அடுத்த வேலையை பார்க்கப்  போனார்.

“என்னயா பெரிய ஸ்ட்ரெஸ்! நமக்கு இல்லாத ஸ்ட்ரெஸ்ஸா. சூசைட் எதுக்குமே சொல்யூசன் இல்லயா! இது ஏன் இந்த மடையனுங்களுக்கு புரியல” கோபி சார் டீயை உறிஞ்சிக்கொண்டே சொன்னார். அவரோடு பழகிய இந்த இரண்டு  வருடங்களில் அவர் வார்த்தைகளில் இவ்வளவு கோபத்தை நான் கண்டதில்லை. 

“சார் அத ஹாண்டில் பண்ற விதம் இருக்குல்ல! எனக்கே சில நேரம் அந்த எண்ணம்லாம் வந்திருக்கு. நமக்கு பயமா, இல்ல நாம ரொம்ப மெட்சூர்டானு தெரில. நாம அந்த எண்ணத்த கடந்து போயிடுறோம், அவன் டிசைட் பண்ணிட்டான், அவ்ளோதான்”

ஏதோ சொல்ல வந்தவர், சொல்லாமல் நிறுத்தினார். 

“எல்லாரும் உங்களமாதிரி எதையும் தாங்கும் இதயமா இருப்பாங்களா?” நான் யதார்த்தமாக  சொன்னேன். என்னை நிமிர்ந்து ஒரு முறைப் பார்த்துவிட்டு மௌனமானார். அவரை காயப்படுத்திவிட்டோமோ என்று கூட தோன்றியது. சிறிது நேரம் கழித்து கோபி சார் கேட்டார், 

“என் வைப் இறந்துட்டாங்கனு உனக்கு தெரியும்ல!” 

நான் தலை அசைத்தேன்.

“எப்படி இறந்தாங்கனு தெரியாது இல்ல!” அவர் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. எனக்கும் அதற்கு மேல் அவரிடம் பேசுவதற்கு தைரியம் இல்லை. 

நாங்கள் திரும்பி வந்த போது  எங்கள் அலுவலக கட்டிதத்தின் நுழைவாயில் சகஜமாகி இருந்தது. சற்று முன்பு அங்கே ஒருவன் உயிரை மாய்த்துக்கொண்டான் என்பதற்கு எந்த அறிகுறியும் இல்லை.  ஆம்புலன்சும்  போலீஸ் வண்டியும் கிளம்பி விட்டிருந்தது. அவன் மரணம் காற்றில் கரைந்த செய்தி ஆகிப் போனது. அவனுக்கு நெருக்கமானவர் யாரவது ஒரிரு நாள் அழலாம். டீக்கடைக்காரரோ வாட்ச்மேனோ வருங்காலத்தில் அவன் இறந்ததை வெறும் செய்தியாக யாரிடமோ சொல்லலாம். லிப்ட்டில் கோபி சாரும் நானும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. எங்கள் அலுவலகத்திற்க்குள் நுழைந்ததும் கோபி சார் அவர் வேலையை பார்க்க போனார். நான் என் வேலையில் மூழ்கினேன்.

***

குறுங்கதை-7 -பால்கனியுடன் கூடிய வீட்டை விரும்பும் ஒரு பெண்

பால்கனியுடன் கூடிய வீட்டை விரும்பும் ஒரு பெண்

பிரியங்கா  யாதவ் டெல்லியின் புறநகரில் பிறந்து, வளர்ந்து அங்கேயே ஒரு வங்கி கிளையில் உதவி மேலாளராக பணியாற்றினாள். வாழ்க்கை நிம்மதியாக போய்க்கொண்டிருந்த இருபத்தியேழு வயதில்  மேலாளராக பதவி உயர்வு கிடைத்தது. ஒரே நாளில் அந்த சந்தோசத்தை பறிக்கும் விதமாக சென்னைக்கு மாற்றல் வந்தது. 

இரண்டு வருட காலம் சென்னையில் தாக்கு பிடித்து விட்டால், மீண்டும் ஊருக்கோ அல்லது ஊருக்கு பக்கத்தில் இருக்கும் மாநிலத்திற்கோ மாற்றல் வாங்கி போய்விடலாம் என்கிற நம்பிக்கையோடு அவள் சென்னை வந்திறங்கினாள். மயிலாப்பூரில் ஒரு கிளையில் வேலை. வேறு ஊர், அழுத்தம் நிறைந்த வேலை. தான் வசிக்கும் வீடையாவது தனக்கு பிடித்த மாதிரி அமைத்துக் கொண்டால், கொஞ்சம் ஆசுவாசமாக இருக்கும் என்று தோன்றியது. சிறுவயதிலிருந்து அவளுக்கிருந்த ஒரு எளிய ஆசை பால்கனி வைத்த வீட்டில் வசிக்க வேண்டும் என்பதே. அது இப்போதாவது நிறைவேறட்டும்.

பால்கனி தோட்டத்தை அமைத்துக் கொண்டு, ஓய்வு நேரங்களில்  ஆங்கில நாவலும் காபியுமாக இரண்டு வருடத்தை ஓட்டலாம் என்கிற எண்ணம்  ஆழ்மன சந்தோசத்தை கொடுத்தது. 

மந்தவெளி பக்கம் வீடு பார்த்துக் கொள்ளலாம் என்றான் அலுவலக பியூன் சுரேஷ். பால்கனி இல்லாத வீடுகள் நிறைய கிடைத்தன. பால்கனி இருந்தால் அது மூன்றாவது மாடியில் அமைந்திருந்தது. அத்தகைய வீடுகளில் லிப்ட் இல்லாமல் இருந்தது. முதல் மாடியில் பால்கனி வைத்த வீடுகளில், பால்கனி மிக சிரியதாக இருந்தது. அதில் புத்தகத்தை கூட வைக்கமுடியாது, எங்கிருந்து அமர்ந்து படிப்பது! எல்லாமே விரும்பும் படி இருந்தால், வாடகை எட்டாத தூரத்தில் இருந்தது. சற்றே பொருத்தமாக அமைந்த ஒரு வீட்டில், ஹவுஸ் ஓனர், 

“ஹிந்தி பொண்ணா, பாய் பிரெண்ட்ஸ்னு யாரும் வரக்கூடாது” என்றார். 

“மேடம் சார் டெல்லிங் நோ பாய் பிரெண்ட்”  

ப்ரியங்காவோ,  “பிரெண்ட்ஸ் வந்தா என்ன!” என்றாள். 

“வீடு இல்ல போமா” ஓனர் உள்ளே சென்று கதவை அடைத்துக் கொண்டார். 

“மேடம் இப் யூ வாண்ட் ஹவுஸ், தென் பாய்பிரெண்ட் நோ” என்றான் சுரேஷ். அவன் அவளைவிட நான்கு வயது இளையவன். அவளோடு வீடு தேடி அழைந்த இந்த இரண்டுவாரங்களில், அவன் மனதில் காதல் பூ மலர, தான் அவளின் பாய்பிரெண்ட் ஆகிவிடலாம் என்கிற நம்பிக்கையோடு அவளோடு பயணித்தான். 

“மேடம் நீங்க எங்க எரியா வந்துருங்க, பெரம்பூர் இங்க இருந்து ஜஸ்ட் பிப்டீன் கிலோமீட்டர்” என்பான். 

அவன் அசடு வழிவது பிரியங்காவிற்கு தெரியாமல் இல்லை. சின்னப்பையன் என்றளவில் அவன் பேசிய எதையும் அவள் பொருட்படுத்தவில்லை. பால்கனி வைத்த வீடு கிடைத்ததும் இவனை வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும் என்று முடிவோடு வீடு தேடினாள். பல நாட்கள் பல படிகள் ஏறி இறங்கிய பின், இறுதியாக ஒரு வீடு உறுதியானது. எதிர்பார்த்த வாடகையை விட மூவாயிரம் அதிகம் தான்.  நிர்ணயித்த வாடகையை நிர்வாகம் கொடுத்துவிடும், மிச்சம் மூவாயிரத்தை அவள் தான் தரவேண்டும். பரவாயில்லை சமாளிக்கலாம் என்று முடிவு செய்து, வாடகை ஒப்பந்தத்தை நிர்வாகத்திற்கு அனுப்பினாள். ஒருவாரத்தில் அப்ரூவல்  வந்தது. 

முதல் தளத்தில் அவள் விரும்பியது போல்  பெரிய பால்கனி வைத்த வீடு. பூத்தொட்டிகளை வாங்கி அடுக்கினாள். ஒரு ரிக்லைனர் சேரையும் வாங்கிப் போட்டாள்.  அந்த ஞாயிற்றுக்கிழமை  மாலையில் அங்கே அமர்ந்து ஓய்வு எடுப்பது பெரும் நிறைவை அளித்தது. அவ்வளவுதான், அடுத்த இரண்டு வருடங்களை மகிழ்ச்சியாக ஓட்டிவிடலாம். வீக்கெண்ட் இரவில் பால்கனியில் பார்ட்டி கூட வைக்கலாம். வெளியூரில் இருந்த வீட்டு ஓனர், ஐந்து தேதிக்குள் வாடகை வர வேண்டும் என்பதை தவிர எந்த நிபந்தனையையும் வைக்கவில்லை.  

மறுநாள் அலுவலகத்திற்கு சென்றதும், “வாட் மேடம்! ஹவுஸ் யூ லைக்” என்றான் சுரேஷ். 

உதவி மேலாளரை அழைத்து சுரேஷை காண்பித்து சொன்னாள், “அவனை இனிமே தேவையில்லாம என் கூட பேச வேணாம்னு சொல்லுங்க. அப்ப தான் அவன் இந்த பிராஞ்சுல இருக்க முடியும்” சுரேஷின் மனதில் பூத்திருந்த பூமரம் முறிந்துபோனது. பிரியங்கா மனதில் புன்னகை செய்து கொண்டாள்.

மாலை வீட்டிற்கு வந்து குளித்துவிட்டு, காபியை எடுத்துக் கொண்டு பால்கனி நோக்கி நடந்தாள். பால்கனியின் நிலையே அதிர்ச்சி தரும் வகையில் மாறி இருந்தது. பால்கனி முழுக்க புறா எச்சம். தலையில் அடித்துக் கொண்டு அதை சுத்தம் செய்தாள். ஆனால் ஒவ்வொரு நாளும் புறாக்களின் எண்ணிக்கை கூடுகிறது என்கிற அளவில் அங்கே எச்சங்களும் இறகுகளும் சிதறிக் கிடந்ததன.

“இதுக்கு முன்னாடி இருந்தவங்க புறா தொல்லை தாங்காம தான் காலி பண்ணாங்க. நீங்க வாறீங்கனு ஓனர் பால்கனிய தினைக்கும் ரெண்டு பேர அனுப்பி சுத்தம் பண்ணுனார்” என்றார் வாட்ச்மேன்.

பிரியங்காவால் நாளுக்கு நாள் சமாளிக்க முடியவில்லை. ஏராளமான புறாக்கள் பால்கனிக்கு வந்து போக தொடங்கின. காலையில் தூங்கி விழிக்கையிலேயே  புறாக்களின் சப்தம் நாராசமாக காதில் ஒலித்தது.  மாப் ஸ்டிக்கை கையில் வைத்து புறாக்களை துரத்தினாலும், சிறிது நேரத்தில் மீண்டும் வந்து அமர்ந்து கொண்டு புறாக்கள் ஆட்டம் காட்டின. 

“பால்கனிக்கு நெட் போட்டு கொடுங்க” என்றாள் ஓனரிடம். 

“அதெல்லாம் முடியாது. வேணாம்னா காலி பண்ணிக்கோங்க” என்றார் அவர். உடனடியாக இன்னொரு வீடு மாற முடியாது. மறுபடியும் நிர்வாகத்தில் ஆப்ரூவல் வராது. அந்த வீட்டில் தான் ஓட்ட வேண்டும் என்பதே சூழல். ஒரு ஞாயிற்று கிழமை, பால்கனிக்குள்ளிருந்த பூச்செடிகளை எடுத்து சென்று குப்பை தொட்டியில் வீசினாள். பின் பெரிய பூட்டொன்றை வாங்கி வந்து பால்கனி கதவை பூட்டினாள். இனிமேல் பால்கனிக்குள் போக மாட்டோம் என்கிற கசப்பான உண்மை பிரியங்காவிற்கு வலியை தந்தது. ஊரிலிருந்த அம்மாவிற்கு போன் செய்து, “மம்மி” என்றவள் மேற்கொண்டு எதுவும் பேசமுடியாமல் தேம்பித்தேம்பி அழுதாள். 

***

குறுங்கதை-6 – விட்னஸ்

சுப்பு என்றழைக்கப்பட்ட சுப்பிரமணி ஒரு பிரபலமான ‘விட்னஸ்’. கோர்ட் படி ஏறி, குற்றத்தை கண்ணால் கண்டேன் என்று சாட்சி சொல்லும் விட்னஸ் உங்கள் நினைவிற்கு வந்தால் அந்த எண்ணத்தை நீக்கி விடுங்கள். அவர் ஒரு சாதாரண ஆள். அவருக்கு போலீஸ், கோர்ட் போன்ற விசயங்கள் அலர்ஜி தரக் கூடியவை. என்ன ஆனாலும் வாழ்நாளில் போலீஸ் ஸ்டேஷன் படியை மிதித்துவிடவோ தாண்டிவிடவோ கூடாது என்கிற குறிக்கோளோடு அறுபது வயதை தொட்டுவிட்டார்.  மூன்று பெண்களில், கடைசி பெண்ணை இன்னும் கரை சேர்க்க வேண்டிய கட்டாயம் அவருக்கு இருந்தது.

அந்த காலத்திலேயே சி.ஏ தேர்வு எழுதி ஒரு பேப்பரில் தேர்வு பெற முடியாமல் போனதால், ஏதேதோ வேலைகள் செய்து, ஐம்பது வயதிற்கு பின்பு உடல்நலக் கோளாறுகள் வந்ததும் அவராகவே அமைத்துக் கொண்ட சுயதொழில் தான் ‘விட்னஸ்’ தொழில். ஒரு நாளைக்கு குறைந்தது ஐநூறு ரூபாய் உத்தரவாதமாக கிடைக்கும். சில நாட்களில் அதிர்ஷ்டம் இருந்தால் இரண்டாயிரம் மூணாயிரம் கூட கிடைக்கலாம்.  

ரிஜிஸ்ட்ரார் ஆபிஸ் பத்திர பதிவின் போது பத்திரத்தின் தன்மைக்கேற்ப ஒருவரோ இருவரோ சாட்சி கையெழுத்து போட வேண்டியது சட்டத்தின் அவசியம். இன்னாரை எனக்கு தெரியும், அவர் பத்திரத்தில் கையெழுத்து இட்டதை நான் பார்த்தேன் என்று சொல்வதே சாட்சியின் நோக்கம். எனினும் இப்போதெல்லாம் யாரும் அந்த நோக்கத்தை பற்றி கவலைப்படுவதில்லை. சம்பிரதாயமாக இரண்டு சாட்சிகள் வேண்டும் என்பதால் யாரோ யாருக்கோ பணத்திற்காக சாட்சி கையெழுத்து போட்டு வந்தார்கள். அப்படி சாட்சி கையெழுத்து போட்டு வந்த ஒரு ‘விட்னஸ்’ தான் ‘சுப்பு’ என்கிற சுப்ரமணி. 

இரண்டு சாட்சிகள் வேண்டுமெனில், பத்திர எழுத்தர் அலுவலகத்தில் வேலை செய்பவர்களே ஒரு சாட்சியாக கையெழுத்து போடுவார்கள். இன்னொரு சாட்சியை தேட நினைத்த நொடியில் கண்முன் வந்து நிற்பார் சுப்பிரமணி. 

“விட்னஸ் இன்னும் வரலையா! சுப்புவ கூப்டு” என்று பத்திர எழுத்தர்கள் சொல்லும் அளவிற்கு அவர் அந்த அலுவலகத்தில் ஆஸ்தான விட்னஸ் ஆகி இருந்தார். காலையிலேயே தயிர்சாதம் பூண்டு ஊறுகாயை கட்டிக் கொண்டு கிளம்பிவிடுவார். மாலை வரை பத்திரப்பதிவு அலுவலகமே அவர் உலகம். 

ஒரு பத்திரத்தில் கையெழுத்திடுவதற்கு இருநூற்றைம்பது அவரது ஸ்டாண்டார்ட் ரேட். கூட கேட்க மாட்டார். சிலர் ஐநூறு ரூபாய்கூட கொடுப்பார்கள். வேண்டாம் என்று சொல்ல மாட்டார். எனினும் அந்த தொழிலுக்கும் போட்டி இருந்ததால் எல்லா பத்திரத்திற்கும் அவரே போய் நிற்க முடியாது. வந்ததை வைத்து நிறைவாக வாழ்க்கையை ஓட்டினார், புதிதாக ஸ்கேனிங்  கிளார்க் மணி வரும்வரைக்கும். 

வந்த ஒருவாரத்திலேயே மணிக்கு கையும் வாயும் நீளம் என்று எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. சுப்புவை அழைத்து “என்ன பெருசு! எல்லாத்துக்கும் நீயே வர! நிறைய காசு பாப்ப போல இருக்கே!” என்றான். 

“அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க” 

“எல்லாம் தெரியும்யா! அந்த என்.ஆர். ஐ பார்ட்டி ஆயிரம் கொடுத்தானாம்! எனக்கு இனிமே ஒரு நாளைக்கு முன்னூறு கொடுத்துரு அவ்ளோதான்” 

“அவ்ளோ கட்டுப்படி ஆவாதுங்க. சிலநாள்  வரதே அவ்ளோதாங்க!” இதோடு சுப்பு நிறுத்தி இருக்கலாம். அன்று அவருக்கு சந்திராஷ்டமம். சற்றே வாய் துடுக்காக சொல்லிவிட்டார். 

“நீங்க தான் ஒவ்வொரு டாக்குமெண்ட்க்கும் தனியா வாங்குறீங்களே. என்கிட்ட போய் கேட்குறீங்க! நீங்க வாங்குறத நீங்க வச்சிக்கோங்க. நான் வாங்குற சொற்பத்த நான் வச்சுக்கிறேன்”

அவ்வளவுதான். மணி ரிஜிஸ்ட்ராரிடம் என்ன சொன்னான் என்று தெரியாது. மறுநாள் ரிஜிஸ்ட்ரார் அங்கே இருந்த ஆவண எழுத்தர்களை அழைத்து இனிமேல் யாரும் சுப்புவிற்கு வேலை கொடுக்கக் கூடாது என்று சொல்லிவிட்டார்.  

“நாங்க என்னையா பண்றது. ரிஜிஸ்ட்ராரே சொல்றார். பேசமா நீ வேற SRO போய்டு! இந்த ஆள் மாறுனதும் வா” என்றனர் ஆவண எழுத்தர்கள். 

சுப்ரமணியால் இந்த வயதிற்கு மேல் வேறொரு ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்திற்கு சென்று நட்பு வளர்க்க முடியாது. அதுவும் இல்லாமல் இந்த அலுவலகம் வீட்டிற்கு அருகிலேயே இருந்தது. இந்த வேலையும் எளிமையான வேலையாக இருந்தது. இனிமேல் எங்கு போய் உடலை வளைத்து வேலை செய்வது! 

காலத்தின் கட்டாயத்தில் ஒரு ஹோட்டலில் வாட்ச்மேனாக வேலை சேர்ந்துவிட்டார். நான்கைந்து ஆண்டுகள் ஒடின. விட்னஸ் பணியில் வந்த பணம் வரவில்லை என்றாலும் சம்பளம் வாழ்க்கைக்கு போதுமானதாக இருந்தது. மகளுக்கும் வேலைகிடைத்திருந்ததால் வாழ்க்கையை ஓட்டுவதில் சிக்கல் இல்லை. 

ஒரு நாள் வழக்கம் போல், விசில் ஊதி ஓட்டலுக்கு வந்த வண்டியை பார்க்கிங் செய்ய உதவிக்கொண்டிருந்த போது யாரோ ஒருவன் தடுமாறி ஓடுவதை கவனித்தார். அவனை நான்கு பேர் கைகளில் அரிவாளோடு துரத்தி சென்றனர். அவர்கள் முகத்தை அவர் நன்றாகவே பார்த்தார். சில நொடிகள் தான். ஓடியவனை கீழே தள்ளி அரிவாளுக்கு வேலைக் கொடுத்தனர் அந்த நான்கு பேரும். 

சுப்ரமணியின் கண்களும் கீழே துடித்தவனின் கண்களும் சந்தித்துக் கொண்டது. அவன் அவரை பார்த்தவாறே உயிரை விட்டான். 

சிசிடிவி காட்சிகள் போலீசிற்கு எந்த துப்பையும் கொடுக்கவில்லை. “யாரவது கொலையை நேரில் பார்த்தீர்களா?” என்று பலரை விசாரித்தும் யாரும் சாட்சி சொல்ல முன்வரவில்லை. சுப்பிரமணி தன் குடும்பத்தின் எதிர்ப்பை மீறி நேரடியாக காவல்நிலையத்திற்கே போய் நடந்ததை சொன்னார். போலீசார் அவரை வழக்கில் ‘விட்னஸாக’ இணைத்தனர். 

சுப்பிரமணி இறுதிவரை வழக்கிலிருந்து பின்வாங்கவில்லை. கொலைகாரர்கள் தண்டிக்கப்பட்டனர். இறந்துபோனவனின் குடும்பத்தினர் சுப்ரமணியை கையெடுத்து கும்பிட்டனர்.  

கொலையுண்டு இறந்து போய் தன்னை போலீஸ் ‘விட்னஸ்’ ஆக்கிய மணிகண்டன் தான் தன் ‘ரிஜிஸ்ட்ரார் ஆபிஸ் ‘விட்னஸ்’ ‘வேலை பறிபோக காரணமான ஸ்கானிங் கிளார்க் மணி என்கிற உண்மையை ‘சுப்பு’ என்கிற சுப்பிரமணி சாகும்வரை யாரிடமும் சொல்லவில்லை. 

***

குறுங்கதை-5 – அவள், அவன் மற்றும் கடல் 

அவள், அவன் மற்றும் கடல் 

இரவு. மெரினா கொஞ்சம்கொஞ்சமாக  அடங்கிக் கொண்டிருந்த வேலை. பெரும்பாலான வியாபாரிகள் கடையை அடைத்திருந்தார்கள். மிச்சமிருந்த ஓரிரு உணவகங்கள் விளக்கை அணைத்துவிட்டு  கடைசி வாடிக்கையாளர்களுக்கு  உணவு பரிமாறிக் கொண்டிருந்தன. கடற்கரையை ஒட்டியிருந்த சாலையில் போலீஸ் வாகனம் சைரனை இயக்கி வியாபார நேரம் முடிந்துவிட்டதை தெரியப்படுத்திக் கொண்டிருந்தது. 

அவள்  ஹெல்மெட்டை மணலில் போட்டுவிட்டு கடலை நோக்கி நடந்தாள். கடல், எப்போது சென்றாலும்  யாரையும் வஞ்சனையின்றி வரவேற்கும். நீரில் கால் பட்டதும் காரணமேயின்றி கண்களில் நீர் சுரக்கத் தொடங்கியது. தன் கையிலிருந்த பெரிய பையினுள் கைவிட்டதும் வெளியே எட்டிப்பார்த்தார் பளிங்கு புத்தர். அவன் கொடுத்த முதல் பரிசு.  இனிமேல் அவர் இருக்க வேண்டிய இடம் கடல். புத்தர் அலையினுள் மிதந்து மறைந்தார். 

அடுத்து பைக்குள்ளிருந்து வந்தது சில கடிதங்கள். சொற்கள் அர்த்தமற்று போகும்போது கடிதங்கள் வெற்றுக் காகிதங்கள் ஆகின்றன. கண்களை துடைத்துக் கொண்டே அவற்றைக் கடலில் எறிந்தாள்.பேன்சி வளையல்கள், லினன் ஸ்டோல்கள், அலங்கார உடைகள் என வரிசையாக ஒவ்வொன்றாய் கடல் சேர்ந்தது. பையின் கணம் குறைய குறைய மனதின் கணமும் குறைந்துகொண்டே வந்தது. இறுதியாக அந்த பையையும் தூக்கி வீசியவள்,

“கெட் அவுட் ஆஃப் மை லைஃப்  யூ பாஸ்டர்ட்” என்று கத்தினாள். 

இதழோரம் புன்னகை பிறந்தது. கண்களை மூடி கடலை உள்வாங்கினாள். காதில் ஒலித்தது அலை ஓசை மட்டுமே. கொஞ்ச நேரத்தில் அதுவும் இல்லை. எங்கும் சூனியம். இனிமேல் தன் வாழ்வில் அவன் இல்லை.அவன் கொடுத்த பொருட்களோடு அவன் நினைவுகளும் கடலில் கறையட்டும். துரோகியை நினைத்து வாழ்க்கையை தொலைக்க முடியாது. இந்த நொடியிலிருந்து புது வாழ்க்கை தொடங்குகிறது. இன்னும் ஒருவாரத்தில் விசா நேர்காணல் இருக்கிறது. வேறு ஊர் புதிய அத்தியாயத்தை தரக்கூடும். காலம் எல்லாவற்றையும் மாற்றி அமைக்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. அப்பா விரும்புவதும் அதைதான். அவன் தந்த எதுவும் இப்பொது தன்னிடம் இல்லை என்ற எண்ணம் தோன்றி ஆசுவாசத்தை தந்தபோது, அனிச்சையாக வயிற்றை ஒரு முறை தடவி பார்த்துக் கொண்டாள்.   

“தி நகர்ல ஒரு ஹாஸ்ப்பிட்டல் இருக்குடி” அவள் தோழி ரம்யா சொன்னது நினைவிற்கு வந்தது. 

அவன் தான் துரோகி, தான் அல்ல என்று அவளுக்கு நன்றாக தெரியும். அதுவும் ஒரு பிஞ்சு என்ன பாவம் செய்தது? 

கண் திறக்காமல் கடல் உள்ளே நடந்தாள். அப்பா ஆசையாக வாங்கிக் கொடுத்த வண்டியை வீட்டிலேயே விட்டுவிட்டு வந்திருக்கலாம் என்று மனம் சொன்னது. 

“ஐ லவ் யூ டாட்” என்றாள்.

கடல் அன்னை அவளை வாரி அணைத்துக்  கொண்டாள்.  

***

குறுங்கதை-4 – பழைய நண்பன்

பழைய நண்பன்

சந்தோசும் ரகுவும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். இறுதி ஆண்டிலேயே கேம்பஸில் ரகுவிற்கு வேலை கிடைத்தது. சந்தோஷிற்கு கிடைக்கவில்லை. அவன் அதே கல்லூரியில் முதுகலை பொறியியல் படித்தான்.  அப்போதும் வேலை கிடைக்கவில்லை மீண்டும் அதே கல்லூரி ஹாஸ்டலில் பகுதி நேர வார்டானாக கொஞ்சகாலம் வேலை செய்தான். ரகு ஈ.எம். ஐயில் வீடு வாங்கினான. கார் வாங்கினான். திருமணம் செய்து இரண்டு பிள்ளைகளை பெற்றான். சந்தோஷ் நல்ல வேலையை  தேடிக் கொண்டிருந்தான். 

ரகுவிற்கு ஒரு பிரச்சனை இருந்தது. அவனிடம் யார் கடன் கேட்டாலும் இல்லை என்று சொல்ல மாட்டான். கர்ணபரம்பரை என்று எண்ண வேண்டாம். ‘இல்லை’ என்று சொன்னால் தன்னுடைய கெத்து குறைந்துவிடுமோ என்கிற அச்சத்தில் ஏதாவது ஒரு தொகையை கொடுத்துவிடுவான். ஆனாலும் கடனை திருப்பி கேட்க தைரியம் வராது. அப்படியே கேட்டாலும், வாங்கியவர்கள் உடனே கொடுத்துவிடுவார்களா என்ன! இப்படி தான் ரகு தன் பள்ளி நண்பன் பிரவீனுக்கு பல ஆயிரங்கள் பல சந்தர்ப்பங்களில் கொடுத்தான். பிள்ளைக்கு பள்ளிக்கூட பீஸ் கட்டவேண்டும், அப்பாவிற்கு மருத்துவம் பார்க்க வேண்டும் என்று பிரவீன் ஒவ்வொரு முறையும் ஒரு காரணம் சொல்வான். பின்னர் பணத்தை திருப்பி கேட்டபோது பிரவீன் அதற்கும் ஏதேதோ காரணம் சொல்லி நாட்களை கடத்தினான். அப்படியே தன் அலைபேசி எண்ணையும் மாற்றிவிட்டான். ரகுவிற்கு ஏமாற்றமாக இருந்தது.  

ஒருநாள் தெரியாத ஒரு எண்ணிலிருந்து  அழைப்பு வந்தது. பிரவீன் தான் பேசினான். மீண்டும் அவசர தேவை என்று பணம் கேட்க, ரகு உறுதியாக மறுத்தான். காலம் அவனையும் மாற்றி இருந்தது.  அதன் பின்பு பிரவீன் பல முறை அழைத்தும் ரகு அழைப்பை ஏற்கவில்லை. பழைய நண்பர்கள் யாரவது அழைத்தால் கடன் கேட்டுவிடுவார்களோ என்கிற அச்சத்தோடே  ரகுவின் நாட்கள் கழிந்தன. இதனாலேயே தேவை இல்லாமல் நண்பர்களிடம் பேசுவதை தவிர்த்தான். 

ஒரு நன்னாளில் சந்தோஷிடமிருந்து ரகுவிற்கு வாட்ஸ்  அப்பில் மெசேஜ் வந்தது. 

“ஹாய் மச்சி”

ரகுவிற்கு  பயம் அதிகமானது. நான்கைந்து வருடங்களுக்கு முன்பு நண்பன் சதீஷின் குழந்தையுடைய பிறந்தநாள் விழாவில் பார்த்தபோது கூட  சந்தோஷ் தான் வேலை தேடிக் கொண்டிருப்பதாக சொன்னான். இவ்வளவு வருடங்களுக்கு பிறகு ஏன் தொடர்பில் வருகிறான்? ஒருவேளை கடன் கேட்பானோ! அதற்கு முன்பு சந்தோஷ் ரகுவிடம் கடன் கேட்டதில்லை தான். ஆனாலும் எல்லாவற்றிற்கும் முதல் முறை என்று ஒன்று இருக்கிறதே?

ரகு பதில் அளிக்கவில்லை. சிறிது நேரத்தில் சந்தோஷிடமிருந்து அழைப்பு வந்தது. ரகு பயந்துக் கொண்டு போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டான். அடுத்து சந்தோஷை பிளாக்கும்  செய்துவிட்டான்.

அடுத்த வருடம்  கல்லூரியில் அலுமினி மீட்டிங் வந்தது. பயத்திலிருந்து மீண்டிருந்த  ரகு பழைய நண்பர்களை காணும் பொருட்டு சென்றிருந்தான். பலரும் வந்திருந்தனர். சந்தோஷ் வரவில்லை. 

“பார்த்து எவ்ளோ நாள் மாப்ள ஆச்சு” என்று சதீஷ் ரகுவை தழுவிக் கொண்டான். ஏதேதோ பேசினார்கள். இறுதியாக பேச்சு சந்தோஷ் பக்கம் திரும்பியது.. 

“அவன் பெரிய நகைக் கடை அதிபர் ஆகிட்டான் மாப்ள. அவங்க மாமனார் பெரிய கோடீஸ்வரர் தெரியும்ல!” சதீஷ் சொல்ல ரகு அதிர்ந்தான். 

“அவன் கல்யாணத்துக்கு போன பிரெண்ட்ஸ் எல்லாருக்கும் ஒரு கிராம் கோல்ட் காயின் கொடுத்தாண்டா! அப்ப பாத்துக்கோ எப்பேர்ப்பட்ட வெய்ட் கைனு” சதீஷ் சொன்னதை கேட்டதும் ரகுவிற்கு தலை சுற்றியது. போனை அணைக்காமல் இருந்திருந்தால் தனக்கும் ஒரு தங்க காயின் கிடைத்திருக்கும் என்று எண்ணும்  போதும் அழுகையாக வந்தது.

“ஏன் மாப்ள அவன் கல்யாணத்துக்கு உன்ன கூப்புடலையா? எனக்குலாம் கால் பண்ணான்னே!” 

சுதாரித்துக் கொண்ட ரகு சுற்றுமுற்றும் ஒருமுறை பார்த்துவிட்டு சொன்னான், “எப்பிடிடா பண்ணுவான். அவன் வேலை தேடிகிட்டு இருந்தப்ப மாச செலவுக்கு நான் தான் பணம் கொடுத்தேன்.எவ்ளோ செஞ்சிருக்கேன் தெரியுமா! நன்றி கெட்டவன்”

 ***

குறுங்கதை-3 -வீடு

வீடு

ராணியம்மாவிற்கு கால் தரையில் இல்லை. குடிகார கணவனை வைத்துக் கொண்டு மூன்று பிள்ளைகளை கரை சேர்த்தபோது கிடைக்காத  சந்தோசம், இப்போது ஐம்பது வயதில் எட்டிப்பார்க்கிறது. பாத்திரங்களை வேகவேகமாக கழுவினாள். பிரியாணி செய்த பாத்திரம். எப்போது பிரியாணி செய்தாலும் அவளுக்கு ஒரு டிபன் அந்த வீட்டு எஜமானி கொடுத்துவிடுவாள். அதுவும் அவளாகவே அல்ல. ராணியம்மாள் பாத்திரத்தை கழுவி முடித்துவிட்டு, “என்னமா இன்னைக்கு பிரியாணியா!” என்று கேட்பாள. அந்த கேள்விக்காகவே  காத்திருந்தவளாய் எஜமான பெண்மணி குஸ்காவை மட்டும் கொடுப்பாள். ராணியம்மாவிற்கு பிரியாணி மீது  தனி காதல் உண்டு. ஆனாலும் தான் ஒருத்திக்காக செலவு செய்வதில் அவளுக்கு விருப்பமில்லை. அதனால் எஜமானி கொடுக்கும் கறியில்லா  பிரியாணியே போதும் என்ற அளவில் வாழ்க்கையை ஓட்டினாள். 

பாத்திரங்களை கவிழ்த்து வெளியேற ஆயத்தமானவளை எஜமானி ஆச்சர்யமாக பார்த்தாள்.   “என்னமா இன்னைக்கு பிரியாணியா!”  என்கிற வழக்கமான கேள்வியை அவள் கேட்காமல் போனது தான் காரணம். 

எஜமானி அவளாகவே பிரியாணி டிபனை அவளிடம் நீட்டினாள். அவள் கேட்கவில்லை என்பதற்காகவே அவள் கண்முன்னே டிபனை திறந்து, இரண்டு துண்டு கறியை உள்ளே வைத்து மீண்டும் ராணியம்மாவிடம் கொடுத்தாள்.

“வேண்டாங்கமா. விரதத்துல இருக்கேன்” என்றாள் ராணியம்மா. எஜமானியின் முகத்தில் ஆச்சர்யம்.

“கவர்ன்மென்டல வீடு கொடுக்க போறங்கமா! வீடு கிடைக்குற வரைக்கும் கவுச்ச சாப்புட மாட்டேன்னு வக்ரகாளிக்கு வேண்டியிருக்கேன். நாளைக்கு கொடுக்குறாங்க. எல்லா வீட்லயும்  நாளைக்கு லீவ் சொல்லிட்டேன். உங்க வீடு தான லாஸ்ட்டு, முடிஞ்சா வரேன். இல்லனா பாத்திரத்தை போட்டு வைங்க. நாளான்னைக்கு வரேன்” 

அது என்ன இலவச வீடு என்று தெரிந்து கொள்வதில் தான் எஜமானுக்கு ஆர்வம். 

“யார்ட்டையும் சொல்லலமா. என் புள்ளைங்களுக்கு கூட இன்னும் தெரியாது. உங்களாண்ட தான் முதல சொல்றேன்! வீடு இல்லாதவங்களுக்கு ஹவுசிங் போர்டுல வீடு கொடுக்குறாங்க. ஒரு வருசமா ட்ரை பண்றேன். எனக்கு வீட்டுக்காரர் இல்லல! பாத்துக்க யாரும் இல்லனு வந்த சார் ரிப்போர்ட் எழுதிகிறேன்னு சொன்னாரு. அவருக்கு தனியா அஞ்சாயிரம் கொடுத்தேன்மா.  நாளைக்கு கலெக்டர் கைல லெட்டர் கொடுக்குறாங்க” 

“உங்களுக்கு அதிர்ஷ்டம் தான் போங்க” என்றாள் எஜமானி. அவள் சொன்னதற்கு பின்னே இருக்கும் வயித்தெரிச்சலை ராணியம்மா உணராமல் இல்லை.  இவ்வளவு பெரிய அடுக்குமாடியில் இருப்பவள் தனக்கு கிடைக்கப்போகும் ஒரு அறை வீட்டை எண்ணி காய்ந்து போகிறாள்.. ஆனால் ராணியம்மா அதை வெளிகாட்டிக் கொள்ளாமல் கேட்டாள். 

“அப்புறம் அம்மா ஒரு இருநூறு ரூபாய் அட்வான்சா கொடுங்களேன். கை செலவுக்கு வேணும்” 

இருநூறை நீட்டிய எஜமானி, “பாத்துக்கோங்க மா. அடிக்கடி அட்வான்ஸ் கேட்குறீங்க, லீவ் வேற நிறைய எடுக்குறீங்க. எனக்கும் கஷ்டமா இருக்கு” என்றாள். ராணியம்மா எதுவும் பேசவில்லை. அவளுக்கு வீடு கிடைக்க போகிற குதூகலம். 

மறுநாள் கூட்டத்தில் அவள் பெயரை அழைக்கவில்லை. அவளுக்கு கால் தரையில் பட்டது. வீடு கிடைக்கப்பெற்ற சந்தோஷமான முகங்கள் பல கடந்து போயின. தன் குரல் மேலெழும்பாது என்று அறிந்தவள் ஆடிட்டோரியத்தை விட்டு வெளியேறினாள்

கண்டும்காணாமல் போன பியூனை வழிமறித்து என்னவென்று கேட்டாள். 

“உன் அப்ளிகேசன் ரிஜக்ட் ஆச்சுமா. உன் ஆண்டு வருமானம் ஆறு லட்சத்துக்கு மேலனு ரிப்போர்ட்ல இருக்கு!” 

“ஐயோ இது அடுக்குமா! என் வாழ்க்கைல அவ்ளோ பணத்தை பார்த்ததே இல்ல.  எங்க வீட்டாண்ட வந்த சார் எங்க!”

“அவருலாம் மாறி போய்ட்டாரு”

“ஏதாவது பாத்து பண்ணுப்பா” என்று அவனிடம் இருநூறு நோட்டை நீட்டினாள்.

“ஐய! ஏன் வேலைக்கே உலை வச்சிருவ போல, கிளம்பு” என்று அவன் நகர்ந்தான். 

அந்த இருநூறு ரூபாயை உற்றுப் பார்த்தவள், 

“வயித்தெரிச்ச புடிச்ச முண்ட” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள். வயிறு காந்தத் தொங்கியது. சாலைக்கு வந்தவளின் கண்ணில் பட்டது பிரியாணி கடை.  சிக்கன் பிரியாணியை வாங்கி நிதானமாக தின்றாள்.  அவள் கணவன் பல வருடங்களுக்கு முன்பு முதன்முதலில் வாங்கித்தந்த பிரியாணி நினைவிற்கு வந்தது. ஒரு பீடாவையும் வாங்கி போட்டவள், கடை வாசலில் நின்றவாறே எஜமானிக்கு போன் செய்தாள். 

“அம்மா எனக்கு வீடு கிடைச்சிருச்சு. நீங்க சொன்னது கரெக்ட் தான். வீடு ரொம்ப தூரம். தினமும் வேலைக்கு வரமுடியாதுமா. நீங்க வேற ஆள பாத்துக்கோங்க” என்று போனை துண்டித்தாள். 

வயிறும் மனமும் நிறைந்திருந்தது. 

குறுங்கதை-2 – வனவாசம் 

வனவாசம் 

அவன் சானடோரியம் சுரங்கப்பாதைக்குள் நடந்து வந்த போதே ரயில் கிளம்புவதற்கான  ஒலியை எழுப்பியது. செயலியில் பயணசீட்டு வாங்கி இருந்ததால் இந்த வண்டியிலேயே ஏறிவிடலாம் என்று தோன்றியது. ஏனெனில் இன்னும் அரைமணி நேரத்தில் கிண்டியில் இருக்க வேண்டும். இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் உள்ளே ஒரு கம்பெனியில் நேர்காணல் இருந்தது. 

காலையில் திருச்சியில் இருந்து வந்த பேருந்து தாமதாகிப்போக, பெரியம்மா வீட்டிலிருந்து அவசரஅவசரமாக குளித்துவிட்டு கிளம்ப வேண்டி இருந்தது. சாப்பிட அவகாசமோ பொறுமையோ இல்லை. இந்த ட்ரைனை தவறவிட்டால் வாழ்க்கையும் தவறிப்போகும்.

ஓடினான். ரயில் கொஞ்சமாக நகரத் தொடங்கியது. கூட்டமாக இருந்த பெட்டிகளை விட்டுவிட்டு கூட்டமில்லாத ஒரு பெட்டியில் ஏறினான். ரயில் வேகமெடுத்தது. அமர்ந்து கொள்ள இருக்கையை தேடியபோது தான் கவனித்தான் அந்த பெட்டியில் இருந்த பல கண்கள் அவனையே நோக்குகிறது என்று. 

எதற்காக எல்லோரும் அப்படி பார்க்கிறார்கள்? சிலரின் பார்வையில் கோபம், சிலரின் பார்வையில் பரிதாபம். 

“தம்பி இது லேடிஸ் கோச்பா” ஒரு பெண்மணி கோபமோ பாசமோ இல்லாத குரலில் சொன்னாள்.

“சாரிங்க. டைம் ஆகிடுச்சுனு மாத்தி ஏறிட்டேன்” அவன் பதிலை யாரும் காதில் வாங்கி கொண்டதாக தெரியவில்லை.  

 அவமானமாக இருந்தது. தலையை குனிந்து கொண்டு ஓரமாக வாசல் அருகேயே நின்று கொண்டான்.  

“படிச்சிருக்கான் இது கூட தெரியாதா!” யாரோ பெண்மணி சொல்வது கேட்டது. 

என்ன படித்தோம் என்றே தெரியாமல் போனதால் தான் ஐந்து வருடமாகியும் இன்னும் வேலை கிடைக்கவில்லை என்று அவர்களிடம் யார் சொல்வது! 

“வேணும்னே ஏறிருப்பான்” இன்னும் யாரோ சொன்னார்கள். 

“அழையுறானுங்க” இதுவும் யாரோ தான். 

சிலநொடிகளில் அவன் கற்பு, வளர்ப்பு, நடத்தை எல்லாமே கேள்விக்குள்ளாக்கப்பட்டது. காலம் நீண்டு கொண்டே போனது போல் இருந்தது. எப்போது அடுத்த ஸ்டேஷன் வரும்? ரயிலிலிருந்து குதித்துவிடலாமா என்று கூட தோன்றியது. சுமார் பதினான்கு ஆண்டுகளுக்கு  பின்னர் குரோம்பேட்டை ரயில் நிலையம் வந்தது. ரயில் நிற்பதற்கு முன்பே இறங்கி, தடுமாறி, ஊன்றி நின்றான். 

அவன் இறங்கிய நொடியில், வேகமாக அந்த பெட்டியில் ஏற வந்த திருநங்கை, “அய்யோ! லேடிஸ் பொட்டி” என்று பதறியவாறே அடுத்து இருந்த பெட்டியை நோக்கி ஓடினாள். அவளின் பதற்றத்தை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.

குறுங்கதை-1 – சைக்கிள் சித்தப்பா 

சைக்கிள் சித்தப்பா

சைக்கிள் மிதிக்கும் அளவிற்கு உடலில் தெம்பில்லை. சைக்கிளை போட்டுவிடவும் மனமில்லை. அப்பாவின் நியாபகமாக அவனிடம் இருந்த  ஒரே பொருள் அது தான். அதனாலேயே சைக்கிளை தள்ளிக் கொண்டே நடந்தான். 

உச்சி வெயிலில் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைப்பது கடினமாக தான் இருந்தது. ஒரு வாய் சோறு கிடைத்தால் தேவலை.பணமில்லை. மார்க்கெட்டில் நுழைவாயில் ஒரமாக இருந்த அடிபம்ப்பில் தண்ணீரை குடித்துவிட்டு காந்தி மார்க்கெட்டினுள் நுழைந்தான். காரணமேயின்றி மார்க்கெட்டில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. எதிரே வந்த வெள்ளை வேட்டிக்காரரை கவனித்தான். அவர் அருகில் வரும்போது தான் முகம் புரிந்தது. “சித்தப்பா” தனக்குள் சொல்லிக் கொண்டான். 

சிறு வயதில் அவனை சைக்கிளின் பின்னமர வைத்து அவர் மார்க்கெட் முழுக்க சுற்றி காட்டிய காட்சி ஒரு கணம்  கண்முன் தோன்றி மறைந்தது. அப்பாயியின் சொத்தை பங்கு போடுவதில் ஏற்பட்ட தகராரு குடும்பத்தை பிரித்து பதினைந்து வருடங்கள் இருக்கும். அதன் பின் சித்தப்பாவை இன்று தான் பார்க்கிறான். தனக்கு மட்டும் வயசாகிறது, அவர் இன்னும் அப்படியே இருக்கிறார்.  

அவர் இவனை கண்டுகொள்ளாமல் கடந்து சென்றார். “சித்தப்பா” என்று குரலெழுப்பினான்.  திரும்பினார். “என்னப்பா” என்றார். சித்தப்பா இல்லை. பரிச்சயமற்ற வேறொரு முகம். இவன் எதுவுமே பேசாததால் அவர் நகர்ந்தார். இவன் மேற்கொண்டு நடந்தான். வேட்டி நழுவுவது போல் இருந்தது. சைக்கிளை நிறுத்திவிட்டு அழுக்கு படிந்த தன் வேட்டியை இறுக்கிக் கட்டினான். ஒரு நொடி தான். சைக்கிள் அங்கு இல்லை. “அப்பா என்ன விட்டுட்டு போய்ட்டியே” என்று அழுதவாறே சுற்றும்முற்றும் பார்த்தான்.   

வெகு தொலைவில் அந்த வெள்ளை வேட்டிக்காரர் இவனுடைய சைக்கிளில் போய் கொண்டிருந்தார். அவரது முதுகுபுறம் சித்தப்பாவை போலவே இருந்தது. ஓடிச்சென்று சைக்கிளின் பின் ஏறிக்கொண்டால் அவர் மார்க்கெட் முழுக்க சுற்றிக்காட்டக்கூடும். சாப்பிட நெய் சோறும் வாங்கித்தருவார். அழுகையை  நிறுத்திவிட்டு, “சித்தப்பா” என்று கத்தினான். சைக்கிள் புள்ளியாக மறைந்தது.  

***