
இது நெட்பிளிக்சில் வெளியாகியிருக்கும் இந்தோனேஷிய திரைப்படம். ஜாம்பி ஹாரர் வகையை சார்ந்தது. ஜாம்பி படங்கள் அனைத்திற்கும் பொதுவான கதையம்சம் ஒன்று உண்டு. அமைதியான ஊரில் முதலில் ஒரு ஜாம்பி உள்ளே நுழையும் அல்லது யாரோ ஒருவர் ஜாம்பியாகிடுவார். அதன் பின் அவர் தாக்க இன்னொருவர் ஜாம்பியாக, அந்த தொடர் சங்கிலி நீண்டு கொண்டே போகும். ஒரு கட்டத்தில் வெகு சிலரை தவிர்த்து மற்ற எல்லோருமே ஜாம்பியாக மாறிவிட, அந்த வெகு சிலர் எப்படி தப்பித்தார்கள் என்பதே மீதி கதையாக இருக்கும். இந்த படமும் அதே வடிவத்தையே கொண்டிருக்கிறது. ஆனாலும் படம் தொய்வின்றி மிக சிறப்பாக இருக்கிறது. அடுத்து நடக்கப்போகிற விஷயங்கள் தெரிந்தும் ஒரு படம் சுவாரஸ்யமாக இருக்க வேண்டுமெனில் திரைக்கதையில் நம்மை கவரும் சிறப்பான தருணங்கள் இருக்க வேண்டும். இந்த படத்தில் அத்தகைய தருணங்கள் நிறைய உண்டு.
மருந்து தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் வயோதிகர் சடிமின். உறவுச் சிக்கல் நிறைந்த ஒரு குடும்பத்தின் தலைவராக இருக்கிறார். மகளோடு சண்டை. மகனோடு சண்டை. மகளின் தோழியையே திருமணம் செய்து வாழ்கிறார். இப்படி குழப்பமான குடும்பத்தில் ஒவ்வொருவரின் நோக்கமும் எப்படியாவது குடும்பத்தை விட்டு விலகி சென்றுவிடுவது தான். சடிமினின் நிறுவனம் கண்டுபிடிவுக்கும் ‘தி எலிக்சிர்’ என்கிற மருந்து அவரை மீண்டும் இளமையாக்குகிறது. கூடவே இன்னும் பல சிக்கல்களை அவருக்கு கொடுக்கிறது. அங்கிருந்து அந்த குடும்பத்தினருக்கு வரும் சிக்கல்களில் இருந்து யார் தப்பினர், எப்படி தப்பினர் என்பதே கதை!
ஆனால் இந்த திரைக்கதையின் சிறப்பு, கதை மேற்சொன்ன புள்ளியில் தொடங்கவில்லை. அது சடிமினின் குடும்பத்திற்கு சம்மந்தமே இல்லாத ஒரு குடும்பத்தில் தொடங்குகிறது.

ஒரு விசேஷ வீடு. அங்கே எல்லாரும் கொண்டாட்டத்தில் லயித்திருக்கிறார்கள். வீட்டினுள், ஊடல் நிறைந்த காதலர்களுக்குள் நிகழும் உரையாடல் தான் படத்தின் முதல் காட்சி. சலனமற்ற அந்த காட்சிக்கு நேர்மாறாய் அடுத்த காட்சியிலேயே படம் ஜாம்பி படமாக மாறுகிறது. இரண்டு நேர்மாறான காட்சிகள் அடுத்தடுத்து வரும்போதே நாம் படத்தினுள் எளிதாக நுழைந்து விடுகிறோம். அங்கிருந்து பிளாஷ்பேக்கில் சடிமினின் கதை தொடங்குகிறது. அது படத்தின் ஆரம்ப காட்சியோடு எப்படி இணையப்போகிறது என்கிற கேள்வி விறுவிறுப்பை தருகிறது.
ஜாம்பிகளை அடக்க ஆங்காங்கே சில புத்திசாலித்தனங்களை கதாப்பாத்திரங்கள் செய்கிறார்கள். அதற்கான சாத்தியங்களை கதையின் தொடக்க காட்சிகளிலேயே foreshadowing உத்தி மூலம் திரைக்கதையாசிரியர்கள் உருவாக்கி வைத்திருப்பதால், பிந்தைய காட்சிகள் நம்பும்படியாக வந்திருக்கிறது.
இதுபோன்றதொரு படத்தில், திரைக்கதையின் ஓட்டத்தில் ஒவ்வொருவராக ஜாம்பியாக மாறிக் கொண்டுவரும்போது, நிகழ்ந்ததே திரும்ப நிகழும் போது, திரைக்கதையை எப்படி மேலும் சுவாரஸ்யமாக்குவது! அதற்கு திரையில் அழகாக பதில் தந்திருக்கிறார்கள் இந்த படத்தின் மூன்று திரைக்கதையாசிரியர்களும்.
கதாப்பாத்திரங்களுக்கிடையே இருக்கும் முரண்களையம், தனிப்பட்ட மனிதர்களின் போதாமைகளையும் ஆரம்பத்திலேயே அடிக்கோடிட்டு காட்டிவிடுகிறார்கள். ஜாம்பிகளால் பிரச்சனை வலுக்கும் போது முரண்களை களைந்து அந்த பாத்திரங்கள் நெருங்கி வருகிறார்கள். தங்களுடைய குறைகளையே பலமாக மாற்ற முயற்சி செய்கிறார்கள். இது காட்சிகளில் ஒரு எமோஷனை (மற்றும் எமோஷனல் கான்ப்ளிக்ட்டை) உருவாக்குகிறது. இந்த எமோஷன் தான் இந்த படத்தின் மிகப்பெரிய பலம். இன்னொரு ஜாம்பி படம் என்றளவில் இந்த படத்தை நம்மால் கடந்து போக முடியாததற்கும் கதையில் அழாகாக பொதிந்திருக்கும் ‘எமோஷன்’ தான் காரணம்.
எத்தகைய கதையையும், அன்பு, பாசம், காதல் மற்றும் நட்பு போன்ற மனித உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கும் போது அந்த படம் மொழிகள் கடந்து எல்லோருக்கும் பிடிக்கும் என்பதற்கு இந்த படம் சிறந்ததொரு உதாரணம்.
Leave a comment