
ஓஷோ சொல்லியிருப்பார், ‘The real fight is not between good and evil but between the good and the greater good’. தட்பம் தவிர் நாவலுக்கான ஐடியா இதுதான். இரண்டு நல்லவர்கள். ஒருவன் போலீஸ்காரன் இன்னொருவன் சீரியல் கில்லர்…
நான் David fincher யின் ரசிகன். Zodiac-யில் நாயகனால் கொலைகாரனை இறுதி வரை பிடிக்கவே முடியாது. அது போலவே இதன் முடிவும் இருக்க வேண்டும் என்பது முதல் அத்தியாயத்திலேயே முடிவு செய்துவிட்ட ஒன்று. தட்பம் தவிரில், கொலைக்காரன் எப்போதும் சுந்தரகாண்டம் வாசித்துக்கொண்டே இருப்பான்.
பள்ளியில் தலைமையாசிரியர் ‘சுந்தரகாண்டம்’ பரிசாக கொடுத்தார். அதன் முன்னுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும், நல்ல நோக்கை மனதில் கொண்டு அதை வாசித்தால் நோக்கம் நிறைவேறும் என்று.
‘தட்பம் தவிர்’ ‘ஊச்சு’ போன்ற தலைப்புகளுக்கு பின்னே நிறைய மெனக்கெடல்கள் உண்டு. ஆனால் யாரோ ஒருவர் என் அனுமதியின்றி அதை எடுத்து சினிமாவிற்கு பெயராக வைத்துக் கொண்டார். பெரிய வருத்தமொன்றும் இல்லை. அதன் பின் வந்த கதைகளுக்கு மிக எளிமையான வார்த்தைகளை தலைப்பாக வைக்கத் தொடங்கிவிட்டேன்.
தட்பம் தவிர் எப்போதோ சினிமாவாகி இருக்க வேண்டிய கதை. சினிமாவிற்காக வைத்திருந்த கதைகள் தான் என்னுடைய முதல் மூன்று நாவல்களும். அண்மையில் எழுதிய, இன்னும் வெளிவராத நான்காவது நாவல் தான், நான் நாவலாகவே திட்டமிட்டு எழுதிய முதல் நாவல்.
நெருங்கி வந்த முயற்சிகள் விலகி போனதில் கவலையில்லை. தட்பம் தவிர், எப்போதாவது படமாகலாம்.
உங்களோட அந்த கதை மாதிரியே அந்த படமிருக்கு, ட்ரைலர் இருக்கு, என்று நண்பர்கள் எப்போதாவதை சொல்வதுண்டு. அதெல்லாம் இல்லை என்று நான் அமைதியாக மறுத்துவிடுகிறேன்.
அண்மையில் கூட நண்பர் ஒருவர் சொன்னார், ஒரு தமிழ் வெப்சீரிஸ்சில் என்னுடைய கதை ஒன்றின் சாயல் ஆழமாக தெரிவதாக. நான் புன்னகையோடு கடந்துவிட்டேன். சொல்வதற்கு ஆயிரம்
கதைகள் இருக்கும் போது என்ன பயம்!
என்னிடம் சொல்லிவிட்டு படமாக்கினால் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ளலாம்
இன்றோடு என்னுடைய முதல் நாவலான #தட்பம்தவிர் வெளியாகி பதினொரு ஆண்டுகள் ஆகிறது என்பதில் மகிழ்ச்சி.
நாவல் எழுதும் எந்த தீவிர திட்டமும் ஆரம்பத்தில் இருக்கவில்லை. எப்போதோ எழுத முயன்று தோற்றிருக்கிறேன்..
2014 மே மாதம் என் இணையதளத்திற்காக ‘சுஜாதா விருது’ கிட்டிய போது தான் நாவல் எழுத வேண்டும் என்கிற உத்வேகம் வந்தது. அதன் பின்னர் ‘தட்பம் தவிர்’
இரண்டு மாதங்களில் எழுதப்பட்டது. பொறியியல் கல்லூரியை சுற்றி நடக்கும் கதை என்பதால் நான் பொறியியல் வகுப்பில் சேர்ந்த நாளான ஜூலை 31 அன்று நாவலை வெளியிட்டதில் ஒரு குட்டி சந்தோஷம்.
இத்தனை ஆண்டுகள் கழித்தும் தட்பம் தவிர் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது என்கிற சந்தோசத்தில், இந்த இரவில் என்னுடைய ஐந்தாவது நாவலை எழுதிக் கொண்டிருக்கிறேன்.
விரைவில் என்னுடைய அடுத்த க்ரைம் நாவல்…
இந்த முறை துப்பறிவது, ஒரு பெண்மணி .

ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் நன்றி
அன்புடன்
அரவிந்த் சச்சிதானந்தம்
Leave a comment